ஸ்ரீ திருப்பாவை–ஒருத்தி மகனாய்ப் பிறந்து– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

கீழ்ப்பாட்டில் மங்களாசாஸநம் பண்ணின பெண்களை நோக்கிக் கண்ணபிரான்,
‘பெண்காள்! நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடுகை உங்களுக்கு ஜந்மஸித்தம்;
இது கிடக்க, நீங்கள் இக்குளிரிலே உங்களுடலைப் பேணாமல் வருந்திவந்தீர்களே!
உங்களுடைய நெஞ்சிலோடுகிறது வெறும் பறையேயோ? மற்றேதேனுமுண்டோ?’ என வினவ;
அது கேட்ட பெண்கள், பிரானே! உன்னுடைய குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வருகையாலே
ஒரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம்; பறை என்று ஒரு வ்யாஜத்தை யிட்டு நாங்கள் உன்னையே காண்!
பேறாகவே நினையா நின்றோம்’ என்று விடை கூறுவதாய்ச் செல்லும் பாசுரம், இது–

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

ஒருத்தி–தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்–பிள்ளையாய்
பிறந்து–அவதரித்து
ஓர் இரவில்–(அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி–யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய்–பிள்ளையாக
ஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான்–தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்லவேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன்–கம்ஸனுடைய
கருத்தை–எண்ணத்தை
பிழைப்பித்து–வீணாக்கி
வயிற்றில்–(அக்கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே–ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை–உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்–எங்களுடைய மநோரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திரு தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத்தக்க ஸம்பத்தையும்
சேவகமும்–வீர்யத்தையும்
யாம் பாடி–நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து–மகிழ்ந்திடுவோம்;
ஏல் ஓர் எம் பாவாய்–.

அரிய தொழில்களையும் எளிதாகச் செய்து முடித்தவுனக்கு எங்கள் வேண்டுகோளைத் தலைக்கட்டித்
தருவதுமிகவுமெளியதே என்னுங் கருத்துப்படக் கண்ணபிரானை விளிக்கின்றனர், முன் ஐந்தடிகளால்.

“தேவகி மகனாய்ப் பிறந்து யசோதை மகனாய் ஒளித்துவளர” என்னாமல்,
ஒருத்தி மகனாய்ப் பிறந்து… ஒருத்தி மகனாய் ஒளித்துவளர” என்றது –
அத் தேவகி யசோதைகளின் ஒப்புயர்வற்ற வைலக்ஷண்யத்தை உளப்படுத்தியவாறு.
‘தேவகி கண்ணனைப் பெற்ற பாக்கியவதி. யசோதை கண்ணனை வளர்த்தெடுத்த பாக்கியவதி’ என்று
உலகமடங்கலும் புகழும்படியான அவர்களது வீறுபாட்டை,
‘ஒருத்தி’ என்ற சொல் நயத்தால் தோற்றுவிக்கிறபடி. ஒருத்தி – அத்விதீயை என்றபடி.

கண்ணபிரான் யசோதையினிடத்து வளர்ந்தவளவையே கொண்டு அவனை
அவளது மகனாகக் கூறுதல் பொருந்துமோ? எனின்;
அழுது முலைப்பால் குடித்த இடமே பிறந்தவிடமாதலாலும், கண்ணபிரான் அழுது முலைப்பால் குடித்ததெல்லாம்
யசோதையிடத்தே யாதலாலும், திரு ப்ரதிஷ்டை பண்ணினவர்களிற் காட்டிலும்
ஜீர்ணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியராதலாலும் கண்ணபிரான் யசோதைக்கே மகனாவனென்க.

ஒளித்துவளர –
பிறந்தவிடத்தில் ப்ரகாசமாக இருக்க வொண்ணாதாப் போலவே, வந்து சேர்ந்த விடத்திலும் விஷ த்ருஷ்டிகளான
பூதநாதிகளுக்கு அஞ்சி ஒளித்து வளர்ந்தபடி.
“வானிடைத் தெய்வங்கள் காண, அந்தியம்போது அங்கு நில்லைன்” என்று
அநுகூலர் கண்ணிலும் படவொண்ணாதபடி அடக்குமவர்கள் பரதிகூலர் கண்ணில் படவொட்டுவர்களோ?
“அசுரர்கள் தலைப்பெய்யில் யவங்கொலாங்கென்றாழு மென்னுருயிர் ஆன்பின் போகேல்”
“கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றினபின் போகேல் கோலஞ்செய் திங்கேயிரு” இத்யாதி.

தரிக்கிலானாகி –
நாரதாதிகள் கம்ஸனிடத்துச் சென்று, ‘உன்னுடைய சத்துரு திருவாய்ப்பாடியிலே வளராநின்றான்’ என்ன,
அவன் அதுகேட்ட மாத்திரத்திலே, ‘நம் கண் வட்டத்திலில்லையாகில் என்செய்தாலென்?’ என்றிராமல்,
‘சதுரங்க பலத்தோடே கூடி ஐச்வர்யத்திற்கு ஒரு குறையுமின்றியே இருந்தோமாகில் வந்தவன்று பொருகிறோம்’ என்று
ஆறியிராமல் அப்பொழுதே தொடங்கித் தீங்குசெய்கைக்கு உறுப்பான பொறாமையைச் சொல்லுகிறது.

தீங்கு நினைத்த –
சகடம், கொக்கு, கன்று, கழுதை, குதிரை, விளாமரம், குருநதமரம் முதலிய பல வஸ்துக்களில்
அசுரர்களை ஆவேசிக்கச்செய்தும், பூதனையை அனுப்பியும், வில்விழவுக்கொன்று வரவழைத்துக் குவலயாபீடத்தை ஏவியும்,
இப்படியாகக் கண்ணபிரானை நலிவதற்குக் கஞ்சன் செய்த தீங்குகட்கு ஓர் வரையறை யில்லாமை யுணர்க.

கருத்தைப் பிழைப்பித்து –
எவ்வகையிலாவது கண்ணனை முடித்துவிட்டு இறுதியில் மாதுல ஸம்பந்தத்தைப் பாராட்டி
‘ஐயோ! என் மருமகன் இறந்தொழிந்தானே!’ என்று கண்ணீர்விட்டு அழுது துக்கம்பாவிக்கக் கடவோம்
என்று நினைத்திருந்த கம்ஸனுடைய நினைவை அவனோடே முடியும்படி செய்தருளினனென்க.
பிழைப்பித்தல் – பிழையை உடையதாகச் செய்தல். பாழாக்கி என்பது தேர்ந்த பொருள்.

கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே –
“போய்ப்பாடுடைய நின்தந்தையுந் தாழ்த்தான் பொருதிறற் கஞ்சன் கடியன்,
காப்பாருமில்லைக் கடல்வண்ணா! உன்னைத் தனியே போயெங்குந்திரிதி”,
“என்செய்ய வென்னை வயிறுமறுக்கினாய் ஏது மோரச்சமில்லை,
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம் பூவண்ணங்கொண்டாய்!”,
“வாழகில்லேன் வாசுதேவா!” என்று கண்ணபிரானுடைய சேஷ்டைகளை நினைத்து வயிறெரிந்து கூறும்
பெண்டிருடைய வயிற்றிலிருந்த நெருப்பையெல்லாம்வாரிக் கண்ணபிரன் கஞ்சன் வயிற்றில் எறிந்தனன் போலும்.
ஸ்ரீகிருஷ்ணன் தேவகியின் வயிற்றிற்குப் பிள்ளையாகவும் கஞ்சன் வயிற்றிற்கு நெருப்பாகவு மிருப்பனென்ன.
நெடுமாலே! என்ற விளியினாற்றலால் – இப்படி நாட்டிற்பிறந்து படாதனபட்டுக் கஞ்சனைக் கொன்றது
அடியாரிடத்துள்ள மிக்க வியாமோஹத்தினால் என்பது போதரும்.

இங்ஙனங் கண்ணபிரானை ஆய்ச்சிகள் ஸம்போதிக்க, அதுகேட்ட கண்ணபிரான்!,
“பெண்காள்! நீங்கள் சொல்லியபடி நான் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்று நின்றது உண்டு;
அதுகிடக்க, இப்போது நான் உங்களுக்குச் செய்யவேண்டுவதென்?” என்று கேட்க, மறுமொழி கூறுகின்றனர்:-
பிரானே! எங்களுக்கு நீ பிறந்துகாட்டவும் வேண்டா; வளர்ந்து காட்டவும் வேண்டா; கொன்று காட்டவும் வேண்டா,
உன்னைக் காட்டினால் போதும்’ என்ற கருத்துப்படக் கூறுமாறுகாண்க.

(உன்னை அருத்தித்து வந்தோம்,) “என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என்றபடி
அடியார்க்கு நீ வேறொன்றைக் கொடாதே உன்னையே உன்னையே கொடுக்குமவனாதலால்,
நாங்கள் உன்னையே வேண்டி வந்தோம். இவர்கள் இங்ஙனஞ் சொல்லக்கேட்ட கண்ணபிரான்,
‘பெண்காள்! “பறைகொள்வான் இன்று யாம் வந்தோம்” என்று ஒருகால் சொல்லுகிறீர்கள்; இஃது என்னே!
பரஸ்பர விருத்தமாகப் பேசுகின்றீர்களே!’ என்று கேட்க;
இவர்கள், மீண்டும் “பறைதருதியாகில்” என்கிறார்கள்;

பறை என்னும் பதத்தின் பொருளைச் “சிற்றஞ் சிறுகாலை” என்ற பாட்டிலன்றோ இவர்கள் வெளியிடுகின்றனர் –
“இற்றைப் பறைகொள்வானன்றுகாண்” இத்யாதியால்.

“தருதியாகில்” என்ற சொல்லாற்றாலால், சேதநனுடைய க்ருத்யமொன்றும் பல ஸாதநமாகமாட்டாது;
பரம சேதநனுடைய நினைவே பலஸாதநமென்னும் ஸத்ஸம் பரதாயார்த்தம் வெளிப்படையாம்.

‘பெண்காள்! உங்களுடைய கருத்தை அறிந்துகொண்டேன்; நீங்கள் வந்தபடிதான் என்?
வருகிறபோது மிகவும் வருத்தமுற்றீர்களோ?’ என்று உபசரித்துக் கேட்க;
‘பிரானே! உன்னுடைய ஐச்வரியத்தையும் ஆண் பிள்ளைத் தனத்தையும் அடியோம் வாயாரப் பாடிக் கொண்டு
வந்தோமாகையால் எமக்கு ஒரு வருத்தமுமில்லை’ என்கிறார்கள்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: