ஸ்ரீ திருப்பாவை–ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

கீழ்ப்பாட்டில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பின பின்னர், அவள் உணர்ந்தெழுந்து வந்து
“தோழிகாள்! நான் உங்களில் ஒருத்தி யன்றோ? உங்கள் காரியத்தைக் குறையறத் தலைக் கட்டுவிக்கிறேன்’
நீங்கள் இறையும் வருந்த வேண்டா’ நாமெல்லாருங்கூடிக் கண்ணபிரானை வேண்டிக்கொள்வோம், வம்மின்” என்ன’
அங்ஙனமே நப்பின்னைப் பிராட்டியுமுட்பட அனைவருமாகக் கூடிக்
கண்ணபிரான் வீரத்தைச் சொல்லி ஏத்தி, அவனை உணர்த்தும் பாசுரம் இது–

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

ஏற்ற கலங்கள்-(கரந்த பாலை) ஏற்றுக் கொண்ட கலங்களானவை
எதிர் பொங்கி-எதிரே பொங்கி
மீது அளிப்ப-மேலே வழியும்படியாக
மாற்றாத-இடைவிடாமல்
பால் சொரியும்–பாலைச் சுரக்கின்ற
வள்ளல்-(பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி) நற்சீலத்தை யுடைய
பெரு பசுக்கள்-பெரிய பசுக்களை
ஆற்ற படைத்தான்–விசேஷமாகப் படைத்துள்ள நந்தகோபர்க்குப் பிள்ளை யானவனே!
அறிவுறாய்-திருப்பள்ளி யுணரவேணும்’
ஊற்றம் உடையாய்-(அடியாரைக் காப்பதில் ச்ரத்தை யுடையவனே!
பெரியாய்–பெருமை பொருந்தியவனே!
உலகினில்-(இவ்) வுலகத்திலே
தோற்றம் ஆய் நின்ற-ஆவிர்பவித்த
சுடரே-தேஜோ ரூபியானவனே!
துயில் எழாய்-’
மாற்றார்–சத்ருக்கள்
உனக்கு வலி தொலைந்து–உன் விஷயத்தில் (தங்களுடைய) வலி மாண்டு (உபயோகமற்ற வலிவை யுடையராய்.)
உன் வாசல் கண்-உன் மாளிகை வாசலில்
ஆற்றாது வந்து-கதி யற்று வந்து
உன் அடி பணியும் ஆ போலே–உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பது போல்
யாம்–நாங்கள்
புகழ்ந்து–(உன்னைத்) துதித்து
போற்றி-(உனக்கு) மங்களாசாஸநற் பண்ணிக் கொண்டு
வந்தோம்-(உன் திருமாளிகை வாசலில்) வந்து சேர்ந்தோம்’
ஏல் ஓர் எம் பாவாய்-.

முதலிரண்டரை அடிகளால் நந்தகோபருடைய செல்வத்தைப் புகழ்கின்றனர்.
கீழ் பதினேழாம் பாட்டிலும் பதினெட்டாம் பாட்டிலும் நந்தகோபருடைய அறநெறித் தலைமையும்
தோள்வலி வீரமும் புகழப்பட்டன’
இப்பாட்டில், அவருடைய கறவைச் செல்வத்தின் சீர்மை கூறப்படுகின்றதென்றுணர்க.
இவ்வாய்ச்சிகள் பலகாலும் கண்ணபிரானை விளிக்கும்போது “நந்தகோபன் மகனே” என்று விளித்தற்குக் கருத்து யாதெனில்’
பரமபதத்திலிருப்பைத் தவிர்ந்தும்
*பனிக்கடலிற் பள்ளிகோளைப் பழகவிட்டும் நீ இத்திருவாய்ப்பாடியில் நந்த கோபர்க்குப்
பிள்ளையாய் பிறந்தது இங்ஙன் கிடந்துறங்கவோ? எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ நீ
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்திற் பிறந்தது’ ஆன பின்பு, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ? என்றபடி.

“ஏற்றகலங்கள்” என்ற சொல்லாற்றலால்,
கலமிடுவாருடைய குறையேயன்றி, இட்டகலங்களைப் பசுக்கள் நிறைக்கத்தட்டில்லை என்பதும்,
சிறிய கலம் பெரிய கலம் என்னும் வாசியின்றிக் கடலை மடுத்தாலும் நிறைக்கத் தட்டில்லையென்பதும் பெறப்படும்.

எதிர்பொங்கி மீது அளிப்ப –
ஒருகால் முலையைத் தொட்டுவிட்டாலும் முலைக்கண்ணின் பெருமையாலே ஒரு பீறிலே கலங்கள் நிறைந்து
பால் வழிந்தோடா நின்றாலும், முலைக்கடுப்பாலே மேன்மேலும் சொரியுமாதலால் எதிர்பொங்கி மிதவிக்கும்.

“மாற்றாதே பால்சொரியும்” என்றசொல் நயத்தால்,
இட்ட கலங்கள் நிரம்பிய’ இனிக் கலமிடு வாரில்லை-என்று பால் சொரிவதைப் பசுக்கள் நிறுத்தாவா மென்றவாறாம்.

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் ஸ்ரீ பாராசர மஹர்ஷியை மைத்ரேய பகவான் தண்டனிட்டு
தத்துவங்களை அருளிச்செய்யவேணும்’ எனப் பிரார்த்திக்க,
அங்ஙனமே தத்வோமதேரம் பண்ணிப் போராநின்ற பராசரர்
“பூய ஏவ மஹா பாஹோ! ப்ரஹ்ருஷ்டோ வாக்ய மப்ரவீத், இதஞ்ச ச்ருணு மைத்ரேய” என்று
நல்ல அர்த்தங்களை இவன் இருக்கவொண்ணாதென்று, மைத்ரேயருடைய பிரார்த்தனையின்றியே
சில அர்த்தங்களை உபதேசித்தவாறு போல இப்பசுக்களும் தமது முலைக் கடுப்பினாலும்
மேலும் மேலும் பாலைச் சொரியு மென்க.

“மகனே! அறிவுறாய்” என்ற சொல்லாற்றலால்,
நீ உன் தந்தையாருடைய செல்வத்தை நினைத்தியேல் அச்செல்வச் செருக்காலே
உணர்ந்தெழுந்திருக்க ப்ராப்தியில்லையாம்’
அவனுக்கு மகனாகப் பிறந்தபடியை நினைத்தியேல் கடுக அறிவுற ப்ராப்தமா மென்றவாறாம்.
அறிவுறாய் என்று இவர்கள் எழுப்பவேண்டும்படி அவன் உள்ளே செய்கிறதென் எனில்’
தனக்கு இத்தனை பெண்கள் கைப்பட்டார்களென்றும், இனி இத்தனை பெண்களைக்
கைப்படுத்தவேணுமென்றும் ஆராய்ந்துகொண்டு கிடக்கிறானாம்.

இவர்கள் இங்ஙனம் புகழ்ந்து உணர்த்துவதைக் கேட்ட கண்ணபிரான்,
“இப்புகழ்ச்சி என்கொல்? இப்படிப்பட்ட கறவைச் செல்வம் இவ்வாய்ப்பாடியில் யார்க்கில்லை? இது நமக்கு ஓரேற்றமோ?”
என நினைத்து வாய்திறவாதிருக்க, இவர்கள் மீண்டுஞ் சில உத்கர்ஷங்களைக் கூறி உணர்த்துகின்றனர்.

ஊற்றமுடையாய்!- இதற்கு இருவகையாகப் பொருள் கூறலாம்:
ஊற்றமென்று திண்மையாய், அபௌருஷேய மான வேதந்திற்குப் பொருளா யிருக்கையாகிற திண்மையை உடையவனே! என்றும்,
அடியாரை நோக்குவதில் ஊக்கமுடையவனே! என்றும்.

பெரியாய்!-
அளவற்ற வேதங்களெல்லாங் கூடிக்கூறினவிடத்தும் எல்லை காண வொண்ணாத பெருமையை யுடையவனே! என்றபடி.
அப்படிப்பட்ட பெருமைகள் ஓலைப்புறத்தில் மாத்திரம் கேட்கலாம்படி இராமல், அவற்றை அனைவர்க்கும்
நன்கு வெளிப்படுத்தியவாறு கூறும் “உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!” என்னும் விளி.

துயிலெழாய்-
நீ இப்போது துயிலெழாதொழியில் நீ பிறந்து படைத்த செல்வமும் குணங்களுமெல்லாம் மழுங்கிப் போய் விடுங்காண்’
மிகவும் அருமைப்பட்டு அவற்றை ஸம்பாதித்த நீ ஒரு நொடிப்பொழுதில் எளிதாக அவற்றை இழுவாமல்
அவை நிறம்பெறும்படி திருப்பள்ளி யுணர்ந்தருளாய் என்பது உள்ளுறை.

இவர்கள் இங்ஙனம் வேண்டக் கேட்ட கண்ணபிரான், “ஆய்ச்சிகாள்! ஆகிறது’ நாம் எழுந்திருக்கிறோம்’
நீங்கள் வந்தபடியை ஒரு பாசுரமிட்டுச் சொல்லுங்கள்” என்று நியமிக்க,
இவர்கள் தாங்கள் வந்தபடிக்கு ஒரு த்ருஷ்டாந்த மீட்டுக் கூறுகின்றனர், மாற்றாருனக்கு என்று தொடங்கி மூன்றடிகளால்.

(வலிதொலைந்து) வலிதொலைகையாவது-
“ந நமேயமத் து கஸ்யசித்” என்றபடி வணங்கா முடிகளாயிருக்கைக்கு உறுப்பான முரட்டுத்தனத்தை முடித்துக் கொள்ளுகை.

ஆற்றாது வந்து-இராமபிரான் ப்ரஹமாஸ்த்ரம் தொடுத்துவிட வேண்டும்படி
பிராட்டி விஷயத்தில் மஹாபசாரப் பட்டு எத்திசையுமுழன்றோடி எங்கும் புகலற்று இளைத்து விழுந்த காகம்போல் வந்து என்க.

யாம் வந்தோம்-
சத்துருக்கள் உன்னுடைய அம்புக்குத் தோற்று. அவை பிடரியைப் பிடித்துத் தள்ளத்தள்ள வந்தாற்போலே,
நாங்கள் உன்னுடைய ஸௌந்தரிய ஸௌசீல்யாதி குணங்களை பிடித்திழுக்க வந்தோமென்கை.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: