ஸ்ரீ திருப்பாவை–அம்பரமே தண்ணீரே சோறே– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

திருவாசல் காக்கும் முதலிகளின் அநுமதிகொண்டு உள்ளே புகுந்த ஆய்ச்சிகள்
ஸ்ரீநந்தகோபரையும் யசோதைப் பிராட்டியையும் கண்ணபிரானையும் நம்பி மூத்தபிரானையும்
திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம், இது–

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

பதவுரை

அம்பரமே–வஸ்த்ரங்களையே
தண்ணீரே–தீர்த்தத்தையே
சோறே–சோற்றையே
அறம் செய்யும்–தருமமாக அளிக்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா–எமக்கு ஸ்வாமியான நந்தகோபரே!
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்.
கொம்பு அனார்க்கு எல்லாம்–வஞ்சிக்கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம்
கொழுந்தே–முதன்மையானவளே!
குலம் விளக்கே–(இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே
எம்பெருமாட்டி–எமக்குத் தலைவியானவளே!
அசோதாய்–யசோதைப் பிராட்டியே!
அறிவுறாய்–உணர்ந்தெழு’
அம்பாம் ஊடு அறுத்து–ஆகாசத்தை இடைவெளி யாக்கிக்கொண்டு
ஓங்கி–உயர வளர்ந்து
உலகு அளந்த–எல்லா) உலகங்களையும் அளந்தருளின
உம்பர்கோமானே–தேவாதிதேவனே!
உறங்காது–இனிக்) கண்வளர்ந்தருளாமல்
எழுந்திராய்–எழுந்திருக்கவேணும்
செம்பொன் கழல் அடி–சிவந்த பொன்னாற் செய்த வீரக்கழலை அணிந்துள்ள திருவடியை யடைய
செல்வா–சீமானே!
பலதேவா! –பலதேவனே!
உம்பியும் நீயும்–உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல்–உறங்காதொழியவேணும்’

“பர்த்தாவினுடைய படுக்கையும் ப்ரஜையினுடைய தொட்டிலையும் விடாத மாதாவைப் போலே” என்றும்,
“ஸ்ரீநந்தகோபரையும் க்ருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே” என்றும், (முமுக்ஷுப்படியில்)
அருளிச்செய்தபடி, முதற்கட்டில் கண்ணபிரானும், நான்காங்கட்டில் நம்பி மூத்தபிரானும் பள்ளி கொள்வது முறையாதலால்,
அம்முறையை அடியொற்றி உணர்த்தியவாறு.
கண்ணனை ஆய்ச்சிகள் களவுகாண்பார்கொள்! என்னுமச்சத்தினாலும் நந்தகோபர்முன்கட்டில் கிடப்பராம்.

இதில், முதலிரண்டடிகள் நந்தகோபரை உணர்த்தும்.
நந்தகோபருடைய கொடை மேன்மையைக் கூறும் முதலடி.
“வஸ்த்ரேண வபுஷா வாசா” என்றபடி மேனிக்கு நிறங்கொடுக்கும் பொருள்களில் முதன்மையான ஆடைகளையும்,
தாரகமான தண்ணீரையும், போஷகமான சோற்றையும் வேண்டுவார்க்கு வேண்டியபடி அறமாக அளிக்கவல்லவனே! என்றபடி.

“அறஞ் செய்யும்” என்றமையால், புகழைப் பயனாகக் கருதாமல் கொடையையே பயனாகப் பேணிக் கொடுக்கின்றமை விளங்கும்.
யாசகர்கள் கொண்டவல்லது தரிக்கமாட்டாதவாறுபோல,
இவர் கொடுத்தவல்லது தரிக்கமாட்டாரென்பது ஆழ்ந்தக் கருத்து.

“அம்பரமே தண்ணீரே சோறே” என்ற ஏகாரங்கள் பிரிநிலைப் பொருளனவாய்,
வஸ்த்ரங்களை மாத்திரம் தானஞ்செய்பவன், தண்ணீரை மாத்திரம் தானஞ்செய்பவன், சோற்றை மாத்திரம் தானஞ்செய்பவன்
என்னும் பொருளைத்தரும்.
அம்பரமும் தண்ணீரும் சோறும் நந்தகோபன் தானஞ் செய்ததாக எங்குங் கண்டதில்லை.
அப்படியிருக்க இங்கே இவர்கள் இப்படி கூறுவது எது கொண்டென்னில்,
இவையெல்லாம் தானஞ் செய்தமை கண்ணபிரானிடத்துந் கண்டதாதலால்
இவனுக்குக் காரண பூதனான நந்தகோபனிடத்திலே ஏறிட்டுச் சொல்லுகிறபடி போலும்.
“காரணகுணாஹீ கார்யே ஸங்க்ராமந்தி” என்கிற நியாயத்தைக் கருதிக் கூறலாமன்றோ.

எம்பெருமான் – “உண்ணுஞ்சோறு பருகுநீர்தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” என்றபடி,
எங்களுக்கு அம்பரமுந் தண்ணீருஞ் சோறுமாயுள்ள கண்ணபிரானை எமக்குத் தந்து
எங்கள் ஸத்தையை நோக்கும் ஸ்வாமி நீயன்றோ என்றபடி.

ஆக இவ்வளவால் நந்தகோபரை விளித்து, “எழுந்திராய்” என்று அவரைத் திருப்பள்ளி யுணர்த்தியவாறே,
இவர்கள் உள்ளே புகுவதை அவர் அநுமதித்தமை தோன்றவிருக்க,
பின்னர் இடைக்கட்டிற் புகுந்து யசோதைப் பிராட்டியை உணர்த்துகின்றனர் – மூன்று நான்காமடிகளால்.

எம்பெருமானைப் பற்றும்போது பிராட்டியை முன்னிட்டுப் பற்றுமாபோலே,
இங்குக் கீழ் நந்தகோபரைப் பற்றும்போதும் யசோதைப் பிராட்டியை முன்னிட ப்ராப்தமாயிருக்க,
முன்னர் நந்தகோபரைப் பற்றிப் பின்னர் யசோதையைப் பற்றுவது என்னெனில்’
பர்த்தாவை முலையாலணைக்கைக்காகவும் பிள்ளையை முலைப்பால் கொடுத்து வளர்க்கைக்காகவும்
யசோதைப் பிராட்டி இடைக்கட்டிற் கிடக்கிறபடியால், கண்ணாற் காண்கிறபடிக்கு மேற்பட ஒன்றுமறியப் பெறாத
இவ்வாய்ச்சிகள் கண்டபடியே பற்றுகிறார்களெனக் கொள்க.

கொம்பனார்க்கெல்லாங் கொழுந்தே! –
கொம்பு என்னும் பொதுப்பெயர், இங்கு வஞ்சிக் கொம்பு என்ற சிறப்புப் பெயரின் பொருள் பெற்றது.
சிறந்த மாதர்களின் இடைக்கு வஞ்சிக் கொம்பை உவமை கூறுதல் கவிமரபென்க’
அது துவட்சியிலும் நேர்மையிலும் இடைக்கு உவமையாம்.
அனார்-அன்னார்என்றபடி’ அப்படிப்பட்டவர் என்பது அதன் பொருள்’ எனவே, கொம்பு போன்றவர் என்றதாயிற்று.
செடிக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், கொழுந்தில் முதலில் வாட்டம் பிறப்பதுபோல
பெண்டிர்க்கு ஒரு கேடு வந்தால் முந்துற யசோதை பக்கலில் வாட்டங் காணப்படுவது பற்றிக் “கொழுந்தே!” எனப்பட்டாள். முற்றுவமை.

இங்ஙன் வேண்டப்பட்ட யசோதைப் பிராட்டியும் இவர்கள் உட்புகுவதற்கு இசைந்தமை தோற்ற இருக்க,
மூன்றாங்கட்டிற் புக்குக் கண்ணபிரானை உணர்த்துகின்றனர், ஐந்தாறமடிகளால்.
இப்போது உலகளந்தவபதாநத்தை எடுத்துக் கூறுவது –
வேண்டாதார்தலையிலும், வேண்டாவென மறுத்தவர் தலையிலும் திருவடியை வைத்தருளின நீ,
திருவடிகளில் விழுந்து யாசிக்கு மெங்களை அடிமை கொள்ளா தொழிவது எங்ஙனே? என்னுங் கருத்தினாலென்க.

உறங்காது எழுந்திராய்-“ஸதா பச்யந்தி ஸூரய:” என்றபடி ஒரு கணப்பொழுதுங் கண்ணுறங்காது
ஸேவித்துக் கொண்டிருந்த நித்யஸூரிகளைத் துடிக்க விட்டு எம்மை உகந்து இங்கு வந்த நீ
எங்களுக்கும் முகங்காட்டாமல் உறங்கி, எங்களையுந் துடிக்கவிடாதேகொள் என்றவாறு.

இவர்கள் இங்ஙன இரந்து எழுப்பந் செய்தேயும், அவன் ‘இவர்கள் நம்பி மூத்த பிரானை எழுப்பாமல்
நம்மை எழுப்புகின்றனராதலால் முறைகெடச் செய்தார்களாய்த்து’
ஆனபின்பு இவர்களுக்கு நாம் முகங் கொடுப்பது தகுதியன்று’ என்று பேசாதே கிடந்தான்’
இவ்வாய்ச்சிகள் இங்கித மறியவல்லவராதலால் அக்கருத்தினை உணர்ந்து ‘முறை கெட உணர்த்தினோமே! எனச்
சிறிது மனம் நொந்து, கடையிரண்டடிகளால் நம்பி மூத்தபிரானை உணர்த்துகின்றனர்.

செம்பொற் கழலடிச் செல்வா! –
தனக்குப் பின்பு ஸாக்ஷாத்ஸ்ரீக்ருஷ்ணன் பின்னே பிறக்க
முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே!” என்ற ஆறாயிரங்காண்க.
பலதேவற்குச் செல்வமாவது –
கண்ணபிரானுக்கு அடிமை செய்யப்பெறுகை.
லக்ஷ்மணோ லக்ஷ்மிசம்பந்த:” என்று இளையபெருமாள் இராமபிரானுக்குப் பின் பிறந்து படைத்த செல்வத்தைப்
பலதேவன் கண்ணபிரானுக்கு முன் பிறந்து படைத்தன னென்க.

உம்பியும் நீயுமுறங்கேல் –
உலகத்தில் படுக்கையில் பள்ளிக்கொள்வார்உறங்குவது கண்டோ மத்தனை யன்றிப் படுக்கையுங்கூட உறங்குவதைக் கண்டிலோம்’
ஆகையாலே அவனுக்குப் படுக்கையான நீயும், எங்களுக்குப் படுக்கையான அவனும் உறங்காது
உணரவேணுமென்கிறார்களென்பது ரஸோக்தி.
பலராமன் சேஷாவதாரமாகையாலே அனந்தன் மேற்கிடந்த வெம்புண்ணியனுக்குப் படுக்கையாகத் தட்டில்லையிறே.
கண்ணபிரான் இவர்களுக்குப் படுக்கையாவது ப்ரணயத்தாலே.

இப்பாட்டில், முதலடியிலும் ஐந்தாமடியிலுமுள்ள அம்பரம் என்னுஞ் சொல், தற்சம வடசொல்’
அச்சொல்லுக்கு வடமொழியில், ஆடையென்றும் ஆகாசமென்றும் பலபொருள்களுண்டு.
உம்பி – ‘உன்தம்பி’ என்பதன் மரூஉ.
உறங்கேல் – முன்னிலை எதிர்மறை வினைமுற்று.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: