Archive for February, 2021

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—மூன்றாம் பாகம் –

February 28, 2021

15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும்
16. பிரகலாத சரித்திரப் பிரச்னை
17. பிரகலாதன் சரிதம்
18. அசுரப்புரோகிதர்களைக் காத்தல்!
19. பிரகலாதனின் பிரார்த்தனை
20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்-

————————

15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும்

பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்!
பிரசேதசர்கள் கடல் நீரில் மூழ்கிக் கடுந்தவஞ் செய்துவந்த காலத்தில் அவர்களது தந்தையான பிராசீனபரிஹி,
நாரத முனிவரின் உபதேசத்தைப் பெற்று அரசாட்சியைத் துறந்து, யோக நிஷ்டை புரியலானார்.
அதனால் அராஜகமாகி ஜனங்கள் பயிர்த்தொழிலைக் கைவிட்டனர். ஆகையால் பூமியில் உண்டான விருட்சங்களில்
கிளைகள் அதிகமாகி மிகவும் நெருங்கிப் பூமியையும் வானத்தையும் மூடிக்கொண்டன.
அதனால் காற்றுக்கூட வீச முடியாமற் போயிற்று. இவ்விதமாக மரங்கள் எல்லாம் வானளாவ இருந்ததால்,
பதினாயிரம் ஆண்டுகள் காற்றுஞ் சஞ்சரிக்க இடமில்லாமல் இருந்தது. சகல ஜனங்களும் அசையவும் முடியாமல் நாசமடைந்தனர்.
பிறகு பிரசேதசர்கள் ஜலத்திலிருந்து வெளிப்பட்டு வந்து, மரங்கள் வளர்ந்து உலகை மூடியிருப்பதால்
பிரஜாக்ஷயமுண்டானதைக் கண்டு மிகவும் கோபங்கொண்டார்கள்.

உடனே, தங்கள் முகங்களிலிருந்து வாயுவையும், அக்கினியையும் உண்டாக்கினார்கள்.
அந்தப் பெருங்காற்று, மரங்களை எல்லாம் வேரோடு வீழ்த்தியது. காலாக்கினிக்குச் சமமான அந்த அக்கினி அவற்றை எரித்தது.
இதனால் மரங்கள் யாவும் ஏககாலத்தில் நாசமாகத் துவங்கின. ஆங்காங்கே ஒன்றிரண்டு மரங்கள் நின்றன.
தவிர, மற்றவையெல்லாம் நாசமடைந்தன. அதைக்கண்டு ஓஷதிகளுக்கு அதிபதியான சந்திரன் கலங்கி,
பிரசேதசர்களிடம் வந்து கூறலானான். அரசகுமாரர்களே; நீங்கள் கோபத்தை விட்டு என் வார்த்தையைக் கேளுங்கள்.
மரங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து நட்பை ஏற்படுத்துகிறேன்.
மரங்களுக்கெல்லாம் மகளான மாரிஷை என்ற கன்னியை, நான் எதிர்காலத்தையுணர்ந்து எனது கிரணங்களால் வளர்த்து வந்திருக்கிறேன்.
ஜகன்மோகன ரூபலாவண்ய மிகுந்த அந்தப் பெண் மாரிஷையை உங்களுக்குப் பாரியையாகத் தருகிறேன்.
அவள் உங்கள் வமிசத்தை அபிவிருத்தி செய்யத்தக்கவள். அந்தப் பெண்ணிடம் உங்கள் தேஜஸின் பாதியினாலும்,
எனது தேஜஸின் பாதியினாலும், மகா பண்டிதனான தக்ஷன் என்ற பிரஜாபதி பிறப்பான்.
அவன் அக்கினிக்கு ஈடான தேஜஸையுடையவனாக, வெகுவான பிரஜாவிருத்தி செய்வான்.
அந்தக் கன்னிகையின் உற்பத்தி விவரத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்.

பூர்வத்தில் வேதசாஸ்திரங்களை நன்றாக அறிந்தவரான கண்டு என்ற மாமுனிவர்;
கோமதி என்ற அழகிய நதிகரையில் அருந்தவஞ்செய்து கொண்டிருந்தார். இந்திரன் அவருடைய தவத்தைக் கெடுக்க நினைத்து
பிரமிலோசை என்ற தேவலோக மங்கையை அனுப்பினான். அந்தப் பொற்கொடியாள் மாமுனிவரின் ஆசிரமத்துக்கு வந்து
மனோகரலாவண்ய ஆடல்களால் அவரை மோகிக்கச் செய்தாள். கண்டு மாமுனிவர், அவளுடைய அழகில் மனங்கலங்கியவராய்,
அவளுடன் கூடி மந்திர பருவதத்தில் நூறு ஆண்டுக்காலம் கிரீடித்துக் கொண்டிருந்தார்.
பிறகு அந்தப் பெண்ணரசி, முனிவரை நோக்கி பிராமண உத்தமரே! நான் இனி தேவலோகம் போகிறேன்.
எனக்கு விடைகொடுத்து அனுப்புங்கள் என்றாள். கண்டுமா முனிவரோ அவளைப் பிரிவதற்கு மனமில்லாமல்,
நல்லவளே! நீ இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கெஞ்சினார்.

அதனால் பிரமிலோசையாள்; மீண்டும் நூறு ஆண்டுகள் அம்முனிவரின் இஷ்டபோகங்களுக்கு இசைந்து
அவருக்குத் திருப்தியுண்டாக்கினாள். பிறகு, அவள் அவரை நோக்கி; மகாத்மாவே! நான் சுவர்க்கத்திற்குப் போகிறேன்.
உத்தரவு கொடுங்கள் என்றாள். அப்போதும் கண்டுமா முனிவர் அவளைப் பிரிய மனமில்லாமல் அடி; கட்டழகி போகலாம் இரு! என்றார்.
அதன்படியே தெய்வப்பெண் பிரமிலோசையும் மீண்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் அவருடன் இருந்து பிறகு
ஒருநாள் அவரை நோக்கிப் புன்னகையுடன் நான் இனியாகிலும் தேவலோகம் செல்ல அனுமதி கொடுங்கள் என்று கேட்டாள்.
அப்போது கண்டு முனிவர் காமப் பரவசத்தால், அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, அழகிய புருவமுடையவளே!
இன்னும் ஒரு கணம் இரு, நீ போய்விட்டாய் என்றால் நெடுங்காலம் வரமாட்டயல்லவா? என்றார்.
கட்டழகி பிரமிலோசை தன்னை முனிவர் சபித்து விடுவாரே என்று பயந்து, சிறிது நாள் குறைய
இருநூறு ஆண்டுகள் அவருடன் கூடியிருந்து, பிறகு மீண்டும் தேவருலகம் செல்ல வேண்டும் என்று முனிவரிடம் விடை கேட்டாள்.
அப்போதும் கண்டுமாமுனிவர் போகத்தில் திருப்தியடையாமல், மேலும் சிலகாலம் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார்.
இவ்விதம் பிரமிலோசை பிரிவுவிடை கேட்கக் கேட்க இன்னும் சில நாள் இரு! சிலநாள் இரு! என்று
கண்டுமாமுனிவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். பிரமிலோசையும் சாப பயத்தாலும் தாட்சண்யத்தாலும்
அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரங்கியும், தன்னைப் பிரிந்தால் அவர் மிகவும் வருந்தி வாடுவாரே என்ற பச்சாதாபத்தாலும்,
அவரைப் பிரிய மனமில்லாமலும், பிரிவதற்கு மார்க்கமில்லாமலும் தவித்தாள். எத்தனையோ வகையான
இன்பங்களை எத்தனையோ ஆண்டுகள் அனுபவித்த கண்டுமாமுனிவரின் காதல் நாளுக்கு நாள் வலிமை பெறலாயிற்று.

இப்படியிருக்கும் போது ஒரு சமயம் கண்டுமாமுனிவர், அவசர அவசரமாக எழுந்து, தமது ஆசிரமத்தை விட்டு
எங்கோ புறப்பட்டுச் சென்றார். அப்போது தெய்வ அழகி பிரமிலோசை அவரைத் தடுத்து, இப்போது நீங்கள்
இவ்வளவு அவசரமாக எங்கே போகிறீர்கள்! என்று கேட்டாள். அதற்கு முனிவர், பெண்ணே!
மாலைப்பொழுது முடிந்து சந்தியா காலம் நெருங்கி விட்டது. ஆகையால் நான் சந்தியாவந்தனம் செய்யப்போகிறேன்.
அப்படிச் செய்யவில்லையென்றால் என் கடமையில் ஒன்றை நிராகரித்ததாகி விடும் என்றார்.
அதைக் கேட்டதும் பிரமிலோசை புன்னகையுடன் அவரை நோக்கி, சர்வ தர்மக்ஞரே!
சந்திப்பொழுது விரைவது இப்பொழுது தானா உங்களுக்குத் தெரிந்தது. எத்தனையோ ஆண்டுகளெல்லாம்
உங்களுக்கு ஒரே நாளாக இருப்பது அனைவருக்குமே வியப்பைத் தருமே? இதை யாரிடத்திலாவது சொல்லிப்பாரும்! என்றாள்.

அவளை நோக்கி முனிவர், பெண்ணே! நீ அதிகாலையில் நதிக்கரையிலிருந்து வந்தாய்.
அப்போது உன்னைப்பார்த்த நான் என் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தேன். இப்போது இன்றைய நாள் முடிந்து,
சாயங்காலமானபடியால் சந்தியாவந்தனம் செய்யப் போகிறேன். இதற்கு நீ ஏன் என்னைப் பரிகாசம் செய்கிறாய்?
உண்மையைச் சொல் என்றார். அதற்குப் பிரமிலோசை, பிராமணோத்தமரே!
நான் அதிகாலையில் நதிக்கரைக்கு வந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் இன்று அதிகாலையில் அல்ல!
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒருநாளின் அதிகாலையில் நான் வந்தேன்.
நான் உம்மிடம் வந்து எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து விட்டன என்றாள்.

அதைக்கேட்டதும் கண்டுமா முனிவர் மிகவும் பயந்து நடுநடுங்கி பிரமிலோசையை நோக்கி, பெண்ணே!
நான் உன்னுடன் கூடி எத்தனை காலம் சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்? அதை நீயே சொல்வாயாக! என்று கேட்டார்.
அதற்கு அவள், முனிவரே! நான் வந்து தொள்ளாயிரத்து ஏழு ஆண்டுகளும் ஆறுமாதமும் மூன்று நாட்களும் ஆயின! என்றாள்.
அந்தத் தேவமங்கையைப் பார்த்து கண்டு மாமுனிவர் குழப்பத்துடன், பெண்ணே! நீ சொல்வது யதார்த்தமோ அல்லது பரிஹாசமோ?
உண்மையைச் சொல். நான் உன்னுடன் கூடியிருந்தது ஒரே நாள் தான் என்று நினைக்கிறேன் என்றார்.
பிரமிலோசை தலையாட்டி அந்தணரில் உயர்ந்தவரான உம்மிடம் நான் ஏன் உண்மையில்லாததை சொல்கிறேன்?
அதுவும் அறவழியை அனுசரித்து நீங்கள் கேட்கும் இந்த விஷயத்தில் நான் பொய் சொல்வேனா?
ஆகையால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்றாள்.

உடனே தவமுனிவர் தன்னைத்தானே கடிந்துகொண்டார். சை! என் தவம் எல்லாம் நஷ்டமாயிற்றே! நான் என்ன செய்வேன்?
பிரமவித்துக்களான பிராமணர்களுக்குக் குலதனமாகிய வேதத்தியனம் வீணாயிற்றே! என் விவேகம் எல்லாம் பறிபோய் விட்டதே!
என்னை வஞ்சிப்பதற்காக எவனோ ஒருவன் இந்த வனிதையை என்னிடம் அனுப்பிவிட்டானோ?
பசி, தாகம், சோகம், மோகம், வார்த்திக்யம், மரணம் ஆகிய ஷடூர்மி! என்று சொல்லப்படும்.
இந்த ஆறு விகாரங்களும் இல்லாமல் நிர்மலமாக இருக்கும் பரப்பிரமத்தை அறியும் பொருட்டு மனதையடக்கியாள வேண்டும்
என்று நிச்சயஞ் செய்த எனது விவேகத்தை அபகரித்து, என்னை யோகப் பிரஷ்டனாகச் செய்த காமம் என்னும்
மாபெரும் பூதத்தை தகிக்க வேண்டும். சாந்திராயாணதி விரதங்களும் வேதாப்பியாசமும் மற்றுமுண்டான
மோட்ச காரணங்களான புண்ணியங்களும் நரகத்திற்கு வழியான துஷ்ட சகவாசத்தால் பாழாக்கப்பட்டனவே?
என்று கண்டு மாமுனிவர் தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டே;

தேவமங்கையான பிரமிலோசையை நோக்கி, அடி பாதகீ! நீ இனிமேலாவது என்னை விட்டு உன்னிச்சையாகப் போய்விடு.
நீ வந்து உன்னுடைய நடையுடை பாவனைகளால் என் சித்தத்தை கலக்கி, என் தவத்தைக் குலைத்து
இந்திரனுக்கு சாதகமான காரியங்களைச் செய்து விட்டாய். இத்தகைய உன்னை என் கோபாக்கினி
சுவாலைகளினால் சாம்பலாக்கிவிட வேண்டும். ஆயினும் சத்புருஷடன் ஏழடி உடன் நடந்தவர்கள் கூட நண்பர்கள் ஆவார்கள்.
ஆகையால் இத்தனைக் காலமும் என்னுடன் நீ கூடியிருந்ததை எண்ணி உன்னை மன்னித்தேன்.
நியாயமாக விசாரித்தால் உன்னைக் குறைசொல்லி ஒரு பயனும் இல்லை.
நான் எனது ஐம்புலன்களையும் வெல்லமாட்டாமல் காமமோக பரவசமானதால், குற்றமே என்னுடையதாகின்றது.
தேவேந்திரனுக்குப் பிரீதியாக என்னுடைய தவத்துக்கு ஊறு விளைத்த உன்னுடைய மாமோகத்திற்கு இருப்பிடமான
மாயையைத் தகிக்க வேண்டும்! என்று கோபித்தார். உடனே தெய்வப்பெண் பிரமிலோசை பயத்தால் நடுநடுங்கி,
தன் உடல் வியர்க்க கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடல் வியர்க்க, மெய் சிலிர்த்துக் கொடிபோல நிற்கும்
அந்தப்பெண் கொடியை நோக்கி மாமுனிவர் கோபத்துடன் போ, போ! என்று உரக்கக் கூவினார்.
உடனே, அவரது கோபத்திற்குப் பயந்து பிரமிலோசை அந்த ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டு, வானத்து வழியே செல்லும்பொழுது,
அவள் தனது சரீரத்தில் உண்டான வியர்வையை மரங்களின் நுனியிலிருந்த துளிர்களினாலே துடைத்து,
விருட்சங்களில் போட்டு, மரத்தின் மேல் மரமாகத் தாண்டிச் சென்றாள்.

பிரமிலோசை என்னும் அந்தத் தெய்வ மங்கையிடம் கண்டு மாமுனிவரால் உண்டான கர்ப்பமானது
அவளுடைய ரோம கூபங்களிலிருந்து வியர்வையாகக் கசிந்து வந்ததால்; அந்தக் கர்ப்பத்தை விருட்சங்கள் தரித்தன.
பிறகு, அவ்வியர்வையெல்லாம் வாயுவினால் கூட்டப்பெற்று ஒன்றாய்த் திரண்டன. அவற்றை சந்திரனாகிய நான்
எனது கிரணங்களினால் வளர்த்து வந்தேன். இவ்விதமாக அந்த கர்ப்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வர,
அதிலிருந்து மிகவும் அழகிய கன்னி ஒருத்தி தோன்றினாள். அவள் தான் இப்பொழுது மாரிஷை என்ற பெயருடன் வளர்ந்து கொண்டிருக்கிறாள்.

இந்த மரங்களே இந்த மங்கையை உங்களுக்குத் தருவதால், உங்களுடைய கோபத்தை விட்டு விடுங்கள்.
இந்த மாரீஷையானவள் கண்டுமாமுனிவர் பிரமிலோசையிடம் விட்ட வீரியத்தாலே, தருக்களிலே தரித்து,
வாயுவும் நானும் வளர்த்ததால், கண்டு முனிவருக்கும் மரங்களுக்கும் எனக்கும் வாயுவுக்கும் பிரமிலோசைக்கும் மகளாகிறாள்.

இது நிற்க, கண்டு மகரிஷியானவர், பிரமிலோசை சென்ற பிறகு தமது தவம் க்ஷீணித்ததற்காக மிகவும் மனம் வருந்தி,
ஸ்ரீவிஷ்ணு தேவனின் நிவாஸ ஸ்தானமான ஸ்ரீபுருஷோத்தமம் என்று வழங்கப்படும் ஒரு மலைக்கு வந்து அங்கே
ஏகாக்கிர சித்தத்தோடு ஹரியை ஆராதித்தவண்ணம் மகாநிஷ்டையிலிருந்து வந்தார் இவ்வாறு சந்திரன் கூறி முடித்தான்.
அதைக்கேட்ட பிரசேதசர்கள் சந்திரனை நோக்கி, மகாத்மாவே ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் உவக்கும்படி கண்டு
மகரிஷி செய்த அந்தப் பிரமபார ஸ்துதியை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
அதை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். உடனே சந்திரன் கூறினான்.

முடிவற்றதும், தாண்டக் கூடாததும் காமக் குரோத மோகாதி திமிங்கலங்கள் நிறைந்ததும் பயங்கரமானதுமான
சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு ஒரு தெப்பத்தைப் போல இருப்பவனும், இதற்குப் பரமமான முடிவாக இருப்பவனும்,
உபதேச பரம்பரையினால் அறியப்பட்டவனும் அளவற்ற சக்தியுடையவனும், தேச, கால, பொருள்களாலே
பரிச்சேதிக்க ஒண்ணாதவனும் நிறைவு பெறாத கர்மாதிகளைத் தனது திருநாம சங்கீர்த்தனத்தினாலே நிறைவேற்றுகிறவனும்,
பிரம்மாதிகளான சகல ஆன்ம கோடிகளுக்கும் மேம்பட்டவனாய் காரணமாய் நிரதிசய ஆனந்தரூபனாய் இருக்கிறவனும்,
பிரம்மாதிகளைப் போல், காலவசத்தாலே அகப்படாமல் சகல சக்திகளோடுங்கூடி நித்தியமாய்த் தேஜோமயமாய் விளங்கும்
திவ்யமங்கள விக்கிரகமுடையவனாய் ஆனந்த ஸ்வரூபியாய் இருப்பவனும், முக்கியத்துக்கு முடிவிடமாயும்
வேத வைதீகங்களைப் பரிபாலிப்பவனாயும் பிரதானமும் சீவனும் பிரளய காலத்தில் லயமடைகிற ஸ்தானமாயும்,
யாவற்றுக்கும் கலப்புண்டாகாமல் இருக்கும்படி ஏற்பட்ட அணையாயும், முக்தியடைந்தவர்களுக்கும் மேம்பட்டவன்
என்று சொல்லும்படியான காரணத்துவ சேஷித்துவங்களையுடையவனாகவும், பிரபஞ்சத்துக்கு பரிய வசானமான
காலத்துக்கும் ஸ்தானமாயும் ஆகாயம் முதலான விபுத்திர வியங்களையும் நிறைப்பவனாயும்,
சகல ரக்ஷகர்களும் ரக்ஷகனாயும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுதேவா! ஜகத்துக்குக் காரணமான விராட் புருஷனும்
அவனுக்கு காரணமான அகங்காரமும் அதற்குக் காரணமான மகத்தத்துவமும் அதற்குக் காரணமான பிரகிருதியும்
இந்தத் தத்துவங்களின் முக்கிய காரியங்களும் ஆகி, காரிய காரண ரூபமாகக் காணப்பட்டுக் கொண்டு,
சுவாபாவிகங்களும் அனந்தங்களுமான ஞானம், பலம், ஐசுவரியம், வீரிய சக்தி தேஜசவுசீரிய, வாதசல்லய சௌரிய,
தைரியாதி சகல கலியாண குணங்களுக்கும் ஆசிரயனாகி கிரியா சொரூபங்களாலேயும் கர்த்துரு சொரூபங்களாலேயும்,
சேதனா சேதனங்களையெல்லாம் ரட்சித்து வருகின்றான். வேதங்களுக்கு அதிபதியும் வேத வேதாந்தங்களினால் அறியப்படுவோனும்,
வேத வேதாந்த சாஸ்திரங்களும், அந்த ஸ்ரீவிஷ்ணுவேயன்றி வேறல்ல. சாஸ்திர ஜன்யம், விவேக ஜன்யம் என்று வழங்கப்படும்
இரண்டுவித ஞானமும், முதல் வேத பிரவர்த்தனான பிரமாவும் ஸ்மிருதி பிரவர்த்தகரான மனு முதலானவரும்,
இந்த அச்சுதனேயாவன். அபக்ஷயாதி தோஷங்களை அடையாமல் ஜனன ரகிதமும் அட்சரமும் நித்தியமுமான
பரப்பிரமம் அந்த ஸ்ரீவிஷ்ணுவேயாகும்! அந்தப் பிரமமே, பக்த பரிபாலானார்த்தமாக இந்தப் புனிதப் புருஷோத்தம
க்ஷேக்ஷத்திரத்தில் சகல கல்யாண குணங்களும் பூரணமாக விளங்கும்படி புரு÷ஷாத்தமன் என்கின்ற
அரீச்சாரூபியாய்த் திருவவதாரஞ்செய்தருளி விளங்கா நின்றது. ஆகையால் அந்தக் கேசவனைச் சிந்தித்து சரணடைந்து
நிற்கிற அடியேனிடத்தில் சத்கிரியா யோகங்களுக்குப் பங்கம் ஏற்படும்படி உண்டாகும்.
ராகத்து வேஷலோப மோகாதி துர்க்குணங்கள் சாந்தமாகக் கடவன! என்று கண்டு முனிவர்
பரமமான பிரமபார ஸ்துதியை ஜபித்து கேசவனை ஆராதித்து சித்திபெற்றுப் பரமபதத்திற்குச் சென்றார்.

இனி மாரிஷை என்னும் கன்னிகையின் முந்திய பிறவியின் சரிதத்தைச் சொல்கிறேன், கேளுங்கள்,
இதைச் சொல்வதால் எனக்குப் பெரியதொரு காரிய சித்தியும் இதைக் கேட்பதால் உங்களுக்கு மேன்மையான
பல சித்தியும் உண்டாகும். உருவின் கர்ப்பத்தில் ஜனித்த இந்த மாரிஷை பூர்வஜன்மத்தில் ஓர் அரசனின் பத்தினியாக இருந்தாள்.
புத்திரப் பேறடையாமலேயே இளவயதில் விதவையானாள். பிறகு பக்தியுடன் ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்து வந்தாள்.
அதனால் அந்த எம்பெருமான் திருவுள்ளம் உவந்து, பிரத்யட்சமாகி அந்தப் பெண்ணைப் பார்த்து,
பெண்ணே! உனக்குப் பிரியமான வரத்தைக் கேள் என்றார். அதற்கு ராஜபத்தினியும் சுவாமியைப் பார்த்து,
சுவாமி! அடியேன் இளவயதிலேயே வைதவ்யத்தையடைந்து சந்தானமற்ற துர்த்தசையில் இருக்கிறேன்.
இதனால் எனது இந்தப் பிறவியே வீணாயிற்று! இனி உம்முடைய கருணையால் அடியேனுக்கு ஜன்ம ஜன்மங்களிலேயும்
சர்வ ஜகத் பூஜ்யர்களான புருஷர்களும் பிரமனுக்கு இணையான புத்திரனும் உண்டாக வேண்டும்.

நானும், சகலஜன இருதயானந்தகரமான அழகோடு, அயோநிஜையாய்ப் பிறக்க வேண்டும்.
தேவரீர், கிருபை கூர்ந்து இந்த வரங்களை எனக்கு வழங்கியருள வேண்டும் என்று வேண்டினாள். வணங்கி வழிபட்டாள்.
தன் முன்பு வழிபாடு செய்த அந்த வனிதையை விஷ்ணு பகவான் தமது தாமரை மலர்க்கரங்களால் எடுத்து;
பெண்ணே! உனக்கு வேறொரு பிறவியிலே பிரசித்தியும் புகழும் உடையவர்களாய் மகா உதாரகுணமுள்ள
கணவர்கள் பத்துப்பேர் உண்டாவார்கள். மகாத்மாவாகவும்; பலபராக்கிரமத்துடன் பிரமனுக்கு சமானமாகவும் உள்ள
மகன் ஒருவனும் பிறந்து, திரிலோகமும் நிறையும் படியான சந்தானத்தையுடையவனாய் அனேக வமிசங்களுக்குக் கர்த்தாவாக இருப்பான்.
நீயும் பேரழகும் நற்குணங்களும் கொண்ட பதிவிரதையாய் அயோநிஜையாய், சகல ஜனங்களுக்கும் இருதய
ஆனந்தமுண்டாகும்படி இருக்கக் கடவாய்! என்று அருளிச் செய்து அந்தர்த்தானமானார்.

இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணனுடைய கிருபையால் இச்சித்த வரங்களைப் பெற்ற அந்த ராஜபத்தினியே
இப்பொழுது மாரிஷையாக பிறந்திருக்கிறாள். ஆகையால் பிரசேதசர்களே; அந்தக் கன்னிகையை நீங்கள் ஏற்பீராக
என்று சந்திரன் சொன்னான். உடனே பிரசேதசரர்கள் தங்கள் கோபத்தை விட்டுச் சாந்தமடைந்தார்கள்.
மரங்களும் தங்கள் கன்னிகையான மாரிஷையை கொடுக்க, அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
பிறகு அந்த மங்கையிடம் பிரசேதசரர்கள் பதின்மராலும் மகானுபாவனான தக்ஷப் பிரஜாபதி பிறந்தான்.
இந்தப் பிரஜாபதியே பூர்வத்தில் பிரமாவினுடைய தக்ஷிண அங்குஷ்டத்திலிருந்து பிறந்திருந்தான்.
மகா தபசியாசியான அந்தத் தக்ஷன், பிரஜைகளைச் சிருஷ்டிக்க நினைத்து சரங்களும் அசரங்களும்
இருபாதங்களும், நான்கு பாதங்களுமான ஐந்து ஜாதங்களைப் படைத்து பிரமாவின் ஆக்ஞையைப் பரிபாலித்தான்.
அந்த விவரத்தைக் கேளுங்கள்.

தக்ஷன் ஐம்பது பெண்களைப் பெற்றான். அவர்களில் பத்துப்பெண்களைத் தருமனுக்கும் பதின்மூன்று பெண்களை காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் கொடுத்தான். அப்பெண்களிடம் தேவ; தைத்ய, தானவ புசங்க, கந்தர்வ, தேவர்கள் ஜனித்தார்கள். மைத்ரேயரே! அது முதலாகத்தான் பிரஜைகள் ஆண் பெண் உடலுறவினால் பிறந்து வருகின்றனர். அதற்கு முன் பூர்வ காலத்திலே தவம் மிகுந்த மகாத்மாக்கள் வெறும் தரிசன ஸ்பரிச சங்கல்பத்தினாலேயே சந்தானங்களை உண்டாக்கி வந்தனர். இவ்வாறு பராசரர் கூறி நிறுத்தினார். அப்போது மைத்ரேயர், அவரை நோக்கி, முனிவரே பூர்வத்தில் தக்ஷன் என்பவன் பிரும்மாவின் வலது பாதத்தின் கட்டை விரலில் பிறந்தான் என்று கேட்டிருக்கிறேன். இப்போது பிரசேதசர்களால் பிறந்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த விஷயம் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சந்திரனுக்குப் பாட்டனான தக்ஷன், திரும்பவும் அவனுக்கு எப்படி மாமனானான்? என்று கேட்க பராசரர் கூறலானார். சகல பூதங்களுக்கும் உற்பத்தியும் அழிவும் நித்தியம்! ஆகையால் திவ்ய ஞானமுடைய முனிவர்களுக்கு இதில் சந்தேகம் உண்டாவதில்லை. அவர்கள் மயங்குவதுமில்லை தக்ஷன் முதலான சகல தேவ முனிவர் கூட்டமும் யுகந்தோறும் பிறந்து லயத்தை அடைந்து வருகின்றனர். ஆகையால் இதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. பூர்வகாலத்தில் வயதும் இல்லை. பெரியவன் சிறியவன் என்று வேறுபாடும் இல்லை. தவத்தாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்களே மேலானவராகக் கருதப்பட்டார்கள்! என்றார் பராசரர். முனிவரே! தேவர்கள்; தானவர்கள், கந்தருவர்கள், ராக்ஷசர்கள் முதலானவர்களின் உற்பத்தியை எனக்குத் தெளிவாகக் கூறவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். கமலாசனான பிருமனின் நியோகத்தால் முன்பு தேவர்கள் ரிஷிகள்; கந்தர்வர்கள்; அசுரர்கள், பன்னகாதி பூதங்கள் முதலானவர்களைத் தக்ஷன் தனது சங்கற்பமாத்திரத்தாலேயே சிருஷ்டித்தான். அவை அபிவிருத்தியாகாமல் நசித்துப் போனதைக் கண்டு, அவன் மீண்டும் பிரஜாசிருஷ்டியில் முயன்றான். அதற்காக வீரணப் பிரஜாபதியின் மகளான அசிக்கினி என்பவளை மணந்து அவளிடம் ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் அரிய சுவர்கள் என்கிற பெயரால் புகழ்பெற்று, பிரஜாவிருத்தி செய்ய எத்தனித்தார்கள். அப்போது நாரத முனிவர் அவர்களிடம் வந்து, அரிய சுவர்களே! பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்த நீங்கள் ஒரு காரியத்தை முன்னதாகச் செய்ய வேண்டும். அதாவது பூமியின் நிலப்பரப்பையும் உயர்வையும் தாழ்வையும் அறிய வேண்டும். நீங்கள் பாலியர்கள் ஆகையால் அதனை அறியமாட்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் பிரஜைகளைச் சிருஷ்டிப்பது எப்படி? தடையில்லாமல் எங்குமே செல்லும் திறமையுடைய நீங்கள் பூமியின் அளவு பரிமாணங்களை ஏன் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் பூமி பரிமாணத்தை அறிந்து வருகிறோம் என்று கூறிவிட்டு நான்கு திக்கிலும் சென்று, சமுத்திரத்தில் சேரும் நதிகளைப் போல் திரும்பி வராமலேயே மறைந்து விட்டார்கள். அவ்வாறு அரியசுவர்கள் நாசமடைந்ததைப் பிரசேதசனான தக்ஷன் கேட்டுத் திரும்பவும் வீரண புத்திரியான அசிக்கினியிடத்தில் ஆயிரம் மக்களைப் பெற்றான். அவர்கள் சபளாசுவர்கள் என்ற பெயருடன் பிரஜா சிருஷ்டி செய்ய எத்தனித்தனர். அப்போது முன்போலவே நாரத முனிவர் வந்து முன் சொன்னது போல அவர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் சரிதான் என்று தங்கள் மூத்த சகோதரர்கள் சென்ற மார்க்கத்திலேயே பூமியின் பரிமாணத்தை அறிந்து வரச்சென்று திரும்பி வராமலே போய்விட்டார்கள். அதுமுதல், தூரதேசதனான சகோதரனைத் தேடிக்கொண்டு ஒருவன் சென்றால் நாசமடைவான்! என்பது சொல் வழக்காயிற்று.

பிறகு சபளா சுவர்களும் நாசம் அடைந்ததைத் தக்ஷன் கேள்விப்பட்டு மிகவும் கோபங்கொண்டு நாரதரை அழைத்து, நாரதா! எங்குமே நிலைபெறாமல் திரிந்து கொண்டேயிருப்பாயாக என்று சபித்தான். மீண்டும் தக்ஷன் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து, அசிக்கினியிடத்தில் அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களிலே பத்துப்பெண்களைத் தருமனுக்கும், பதின்மூன்று பெண்களைக் காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் திருமணம் செய்து கொடுத்தான். அரிஷ்டநேமிக்கு நால்வரையும், வெகு புத்திரனுக்கு இருவரையும், ஆங்கிரசுக்கு இரண்டு பெண்களையும், பிருசாசுவனுக்கு இரண்டு பெண்களையும் கொடுத்தான். முதல் பத்துப் பெண்களாகிய அருந்ததி, வசு, ஜாமி, லங்கை, பானு, மருத்வதி, சங்கல்பை, முகூர்த்தை, சாத்தியை, அசுவை என்று சொல்லப்பட்ட கன்னிகளைத் திருமணஞ்செய்து கொண்ட தருமன், விசுவையின் மூலம் விசுவ தேவதைகளையும், சாத்தியையிடம் சாத்தியர்களையும், மருத்துவதியிடம் மருத்தவத்தர்களையும், முகூர்த்தையிடம் முகூர்த்தர்களையும், பானுவிடம் பானுக்களையும், லங்கையிடம் சகோஷனையும், ஜாமியிடம் நாகவீதி என்ற திவ்யமார்க்க அபிமானியையும், அருந்ததியிடம் பூமியைச் சேர்ந்த பொருள்கள் அனைத்தையும் சங்கல்பையிடம் சங்கல்ப்பன் என்பவனையும் பெற்றான். அவர்களில் அபாரமான பலமும் தேஜஸும் உடையவர்களாய் விளங்கும் அக்கினி முதலான வசுக்களின் வமிசத்தை விவரமாகச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆபன், துருவன், சோமன், அனிலன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலான வசுக்கள் எண்மர் ஆவர். அவர்களில் ஆபனுக்கு வைஸ்தப்த்தன், சிரமன், சிராந்தன், துனி என்ற பிள்ளைகள் உண்டானார்கள். துருவனுக்கு சகல உலகங்களையும் நடத்தும் காலன் உற்பத்தியானான். சோமனுக்கு வர்ச்சன் என்ற மகன் பிறந்தான். அவனால்தான் ஜனங்களுக்கு வர்ச்சஸ் என்ற பிரகாசம் உண்டாகிறது. தருமனுக்கு மனோகரை என்பவளிடம் திரவிணன், உதவகன், சிசிரன், பிராணன், ரமணன் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அனலனுக்கு சிவை என்பவளிடத்தில் புரோசவன், அவிக்தி, யாதகதி என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். அனலன் என்றால் அக்கினியாகும். ருத்திர வீரியத்தை அக்கினியே ஏற்றுக்கொண்டு வழியில் நாணற் புதரில் விட்டதால், சுப்ரமணியரை அக்கினி புத்திரன் என்றும் இங்கு கூறப்படுகிறது. சாகன் முதலியோர், குமாரனின் தம்பியர் ஆவர். அனலனுக்கு நாணற்புதரிலே குமாரன் என்று சொல்லப்படும் சுப்பிரமணியன் உண்டானான். அவனுடைய முதுகிலிருந்து, சாகன், விசாகன், நைகமேஷன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுப்பிரமணியன் கிருத்தைகளின் ஸ்தன்ய பானஞ் செய்ததால் அவர்களுக்குப் பிள்ளையாகிக் கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றான். பிரத்யூஷனுக்கு தேவன் என்ற முனிவன் ஜனித்தான். அவனுக்க பொறுமையும் புத்தியும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவன் பிரகஸ்பதி, அந்தப் பிரகஸ்பதிக்குச் சகோதரியான ஒருத்தி யோக சித்தியுடையவளாய், விரக்தியடைந்து பிரமசரியத்தோடு உலகமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் வசுக்களில் எட்டாவதான பிரபாசனனுக்கு மனைவியாகி விசுவகர்மாவைப் பெற்றாள். அவன் விசித்திரங்களான அநேக சிற்பக்கலைகளை அறிந்தவனாய் தேவதச்சனாகி அநேக திவ்ய ஆபரணங்களையும் விமானாதிகளையும் நிர்மாணஞ் செய்தான்.

அவன் செய்த சிற்பங்களில் சிலவற்றை அறிந்துதான் பூவுலகிலுள்ள ஜனங்கள் வேலை செய்து பிழைக்கிறார்கள். மேலும் அந்தப் பெண்ணரசியிடம், அனஜகபாத், அகிர்ப்புத்தினியன், துவஷ்டா, ருத்திரன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் துவஷ்டாவுக்கு விசுவரூபன் என்னும் மகாதவசியான புத்திரன் ஒருவன் பிறந்தான். அறிஞனான ருத்திரனுடைய அமிசமாய் அரண்பகுரூபன், திரியம்பகன், விருஷாகபி சம்புகபர்த்தி, ரைவதன், மிருக வியாழன், சர்வன் கபாலி என்னும் பதினொருவர் பிறந்து, ருத்திரன் என்ற பெயரைப் பெற்று, திரிலோகாதிபதிகளாய் விளங்குகிறார்கள். இவர்களிடமிருந்து அளவற்ற தேஜஸ் வாய்ந்த நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இவ்விதமிருக்க காசிபருக்கு மனைவியாக இருந்த அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரசை, கஷை சுரபி, வினதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்ற பெயருடைய பதின்மூன்று பத்தினிகளில் அதிதி என்பவளுக்குப் பூர்வத்தில் சாட்சுஷ மன்வந்தரத்திலே துஷிதர் என்ற பன்னிரண்டு தேவதைகள். வைவஸ்வத மனுவந்தரம் வரும்போது நாம் யாவரும் அதிதியின் கர்ப்பத்திலே ஜனிக்க வேண்டும்! என்று நிச்சயித்து கொண்டே பிறந்தார்கள். அவர்கள் இந்திரன் விஷ்ணு அரியமன் தாதா; துவஷ்டா, பூஷா, விவசுவான், சவிதா, மித்திரன், வருணன், அமிசு, பகன் என்ற பெயர்களைப் பெற்று, துவாச ருத்திரர்கள் என்று வழங்கப்படுகின்றனர். இப்படியாக வைவஸ்வத மனுவந்தரத்திலே ஆதித்தியர் என்று சொல்லப்படுவோர், சாட்சுஷ மனுவந்தரத்தில் துஷிதர் என்று வழங்கப்பட்டனர். சந்திரனுக்கு மனைவியான அசுவினி முதலான இருபத்தேழு பெண்களுக்கும் காந்தியுள்ள மக்கள் உண்டானார்கள். அரிஷ்டநேமியின் பத்தினிகள் நால்வருக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். வெகுபுத்திரனுக்கு பத்தினிகளான இருவரிடத்திலும் காற்று, வெயில், மழை, துர்ப்பிஷம், இவற்றுக்கு ஏதுக்களாய் கபில வர்ணமும் இரத்த வர்ணமும் அரித்ராவர்ணமும், நீலவண்ணமும் கொண்ட நான்கு மின்னல்கள் உண்டாயின. ஆங்கிரசுக்கு பிரம ரிஷிகள் துதிக்கத்தக்க மேன்மை பெற்ற பிரதியங்கிரகங்கள் என்ற மந்திரங்கள் உதித்தன. பிருசாசுவனுக்கு, திவ்விய பாணங்கள் பிறந்தன. இவ்விதமாகக் கல்பாதி காலத்திலே உண்டான முப்பத்து முக்கோடி தேவதைகளும், தினந்தோறும் சூரியன் உதயமாகி மறைவதைப் போல ஒவ்வொரு மனுவந்தரத்திலும் பிறந்து கொண்டே வருவார்ரகள். இவர்கள் சுயஇச்சைப்படி பிறப்பார்கள். திதி என்பவளிடத்தில் காசிபருக்கு இரணியகசிபுவும், இரணியாக்ஷனும், விப்ரசித்தி என்ற ராக்ஷதனுக்குப் பாரியையான சிம்மிகை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அவர்களில் இரணியகசிபுக்கு அனகிலாதன், ஹிலாதன், பிரகலாதன், சம்கிலாதன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே பிரகலாதன் ஜீதேந்திரியனும், மகா பாகவதனுமாய் ஸ்ரீமந்நாராயணனிடத்தில் பக்தியுடையவனாய் விளங்கி வந்தான்.

தைத்திய ராஜனான இரணியகசிபுவின் கட்டளையினால், அசுரர் கொளுத்திய அக்கினியும் ஸ்ரீவாசுதேவனது இதயகமலத்தில் வசித்ததால் மகாத்மாவான பிரகலாதனைத் தகிக்கமாட்டாமற் போயிற்று. பிரகலாதன் என்னும் அந்த மகானுபாலன், பாசங்களினால் கட்டப்பட்ட கடலின் நடுவேயிருந்து அசைந்த போது அநேக மலைகளும் காடுகளும் நடுங்கின. பூமண்டலமே நடுங்கியது. எங்குமே எம்பெருமானைப் பாவித்ததால், அந்த மகானின் உடல் மலைபோலக் கடினமாயிற்று. அதனால் அசுரர்கள் பிரயோகித்த பாணங்கள் அவரைப் பாதிக்கவில்லை. இரணியகசிபு ஏவிய லிஷாக்கினிச் சுவாலை வீசும் சர்ப்பங்கள் அந்த மகாத்மாவை பீடிக்கவில்லை. பர்வதங்களால் அமுக்கப்பட்ட போதும், ஸ்ரீவிஷ்ணு ஸ்மரணை என்ற கவசத்தால் பிரகலாதன் காக்கப்பட்டு, மரணமடையாமற் போனான். சொர்க்கத்தின் உயரமான இடத்திலிருந்து, பிரகலாதனை இரணியகசிபு கீழே தள்ளியபோதும் அந்த மகாத்மாவை பூமாதேவி ஏந்திக் கொண்டாள். அதன்பிறகு இரணியகசிபு மிகவும் ஆத்திரமடைந்து சம்சோஷகன் என்ற வாயுவை ஏவினான். ஆனால் மதுசூதனான விஷ்ணுவின் இருதயத்திலே பிரகலாதன் இருந்ததால், அந்த வாயு பிரகலாதனிடம் புகுந்து நாசமடைந்து போயிற்று. திக்கு கஜங்கள் எல்லாம் இரணியகசிபுவின் உத்தரவினால் பிரகலாதன் மீது பாய்ந்து தந்தங்கள் ஒடிந்து, மதமழிந்தன. நைத்தியப் புரோகிதர்களால் நிருமிக்கப்பட்ட கிருத்தியைகள். கோவிந்த சரணாரவிந்தங்களில் மனதைச் செலுத்தியிருந்த அந்த மஹா யோகிந்தனைப் பாதிக்காமற் போயின. மகாமாயாவியான சம்பராசுரன் என்பவன், புண்ணிய புருஷனான பிரகலாதன் மீது ஏவிய அனந்த மாயைகளும் ஸ்ரீவிஷ்ணுவின் திருக்கையால் விடப்பட்ட சக்கராயுதத்தால் சாம்பலாயின. இரணியகசிபுவின் சமையற்காரர்கள் ஆலகாலம் என்ற கொடிய விஷத்துடன் கலந்து வைத்த அன்னமானது பிரகலாதனின் உதரத்தில் ஜீரணமாகி விட்டது. சர்வ பூதசமனும் சர்வ உயிர்களுக்கும் மித்திரனான அந்த மகாத்மா, தன் சரீரத்தைப் போலவும் தன் பிள்ளைகளைப் போலவும், சர்வ பூதங்களையும் லாலனை செய்து வருவான். அந்த ஞானி சத்புருஷர்களுக்கெல்லாம் உபமானமாகப் புகழ்பெற்று விளங்கினான்.

————–

16. பிரகலாத சரித்திரப் பிரச்னை

பராசரரே! மனு வமிசத்தில் பிறந்த உத்தானபாதன், துருவன் முதலிய மாமன்னர்களின் வரலாறுகளையும் அனாதி புருஷனான ஸ்ரீவிஷ்ணுவே ஜகத் காரணமான பிரமம் என்ற பொருளையும் தங்களிடம் விளக்கமாகக் கேட்டறிந்தேன். ஆனால் தைத்ய புங்கவனான பிரகலாதனே; அக்னியும் ஆயுதங்களும் அழிக்கமாட்டாமற் போயின என்றும் சமாகித சித்தனான அந்தத் தைத்திய உத்தமன் மலைகளினால் அமுக்கப்பட்ட போதிலும் மரணமடையாதிருந்தான் என்றும் அந்தப் பிரகலாதாழ்வானின் பெருமைகளையெல்லாம் நீங்களே புகழ்ந்து கூறினீர்கள்! ஆகையால் தத்துவஞானமும் பகவத் பக்தியுமுடைய பிரகலாத மகானுபாவனின் ஒப்பற்ற சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். அந்த மகதர்மிஷ்டனை; அசுரர்கள் ஏன் ஆயுதத்தால் புடைத்தார்கள்? பாரங்களால் கட்டிச் சமுத்திரத்தில் ஏன் போட்டார்கள்? திக்கஜங்களைக் கொண்டு அவனை ஏன் அவர்கள் துன்புறுத்த வேண்டும்? அவனை ஏன் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள்? அவனை ஏன் அக்கினியில் போட்டு எரித்தார்கள்? அவன் மீது ஏன் சர்ப்பங்களை கடிக்கவிட்டார்கள்? இரணியகசிபுவின் சமையற்காரர், அன்னத்தில் விஷத்தை ஏன் கலந்து வைத்தார்கள்? இவையெல்லாம் ஏன் நிகழ்ந்தன? அந்தப் பரமபாகவதரான பிரகலாத ஆழ்வான் சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். இந்தச் செய்கைகள் எதனாலும் பிரகலாதன் மரணமடையாமல் இருந்தது ஆச்சரியமல்ல! ஏனென்றால் ஸ்ரீவிஷ்ணுவின் சரணாவிந்தங்களிலே சித்தத்தை நிலைபெற வைத்தவனை நிக்கிரகிக்க வல்லவன் இந்த ஜகத்திலேயே இல்லையே? ஆனால் தங்கள் குலத்தில் பிறந்த பிரகலாதன், ஸ்ரீகேசவனை ஆராதனை செய்து அசுரரிடையே பகைமை ஏற்படுத்தியதா? அதுவும் விஷ்ணு பக்தரான பிரகலாதாழ்வானுக்கு அசுரர்கள் ஏன் அத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள்? இவற்றையும் பிரகலாதாழ்வானின் பிரபாவங்களையும் கேட்பதற்கு நான் மிகவும் ஆவல் கொண்டிருக்கிற÷ன். தாங்கள் கிருபை கூர்ந்து அதைக் கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார்.

———–

17. பிரகலாதன் சரிதம்

பரமஞானியும் உதார சரிதராயும் விளங்கும் பிரகலாதரின் பிரபாவத்தை பராசர முனிவர் சொல்லலானார். பூர்வத்திலே மிகவும் பராக்கிரமமுடையவனும் அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஓர் அரக்கன் இருந்தான். அந்த அரக்கன் கோரமான தவங்களினால் பிரம்மாவை மகிழச்செய்து, தனக்குத்தேவர்களாலோ, மிருகங்களாலோ மரணம் விளையக்கூடாது என்பது போன்ற அநேகவரங்களைப் பெற்றான். அதனால் அவன் கர்வம் மிகுந்து, மூன்று உலகங்களையும் தீனப்படுத்திக் கொண்டான். இந்திரன், வருணன், ஆதித்தன், வாயு, அக்கினி, சந்திரன், யமன் முதலியோரது அதிகாரங்களைத் தனது கைவசப்படுத்திக் கொண்டான். வேள்விகளில் அவர்களுக்குரிய அவிர்ப்பாகங்களையும் தானே கைக்கொண்டான் மூன்று உலகங்களையும் சாதிதேச்காரமாய் ஆண்டு வந்தான். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் அவனுக்குப் பயந்து சுவர்க்கலோகத்தை விட்டு, மானிட வேடம் பூண்டு பூவுலகில் சஞ்சரித்தார்கள். இந்தவிதமாக இரணியகசிபு மூன்று உலகங்களையும் ஏகச்சக்கிராதிபதியாக மிகவும் அகங்காரத்தோடு ஆண்டு வந்தான். கந்தர்வர்கள் கீதம் பாட, சித்தசாரணர் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை, வாசிக்க தேவலோகத்து அப்சர மங்கையர் நடனமாட, ஸ்படிக மயமும் அப்ரகசிலா மயமுமான அதிவுன்னதமான அழகிய உப்பரிகையில் இரணியகசிபு மிகவும் மகிழ்ச்சியோடு, மதுபானம் அருந்திய வண்ணம், மனதுக்கிச்சையான சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் அனைவருக்கும் தானே தலைவன் தானே எல்லாம் தானே சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் என்று அகப்பாவம் கொண்டு தன்னைத் தவிர வேறு எதையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனுக்குப் பிரகலாதன் என்று ஒரு குமாரன் இருந்தான். அவன் பாலியத்தில் உபாத்தியாயரின் வீட்டிலிருந்து, பாலர் படிக்கவேண்டிய படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் பிரகலாதன் தன் ஆசிரியரோடு, தன் தந்தையிடம் வந்து, வணங்கி நின்றான்; அப்போது மிகவும் தேஜஸோடு விளங்கும் தன் குமாரனை அசுர மன்னன் இரணியகசிபு வாரியணைத்துக் கொண்டு மனம் மகிழ்ந்து, குழந்தாய்! உன் குருநாதர் இத்தனை நாட்களாய் அதிக முயற்சியுடன் உனக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களின் சாராம்சத்தைச் சொல் பார்க்கலாம் என்றான். உடனே பிரகலாதன் பக்திச்சிரத்தையோடு, என் மனதில் இருக்கும் சாராம்சத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். ஆதிமத்தியாந்தரகிதனும் அஜனுமாகி விருத்தியும் க்ஷயமும் இல்லாமல், சர்வபூத அந்தராத்மாவாய் சிருஷ்டியாதிகளுக்கு காரணங்களான யாவற்றுக்குமே காரணமாய், எப்பொழுதுமே ஆனந்தசொரூபமாய் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவான அச்சுதனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்றான். குமாரனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் இரணியகசிபுவுக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் சிவந்தன, உதடுகள் துடிதுடித்தன. அவன் பயங்கரமான ரூபமடைந்து தன் புத்திரனின் குருவைப் பார்த்து, ஏ தர்ப்புத்தியுள்ளவனே! நிசாரமும் சத்துரு பட்ச துதியுமான இந்த சுலோகத்தை என் பாலகனுக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை அவமானஞ் செய்யலாமா? என்று கேட்டான். அதனால் ஆசிரியர் பயந்து நடுங்கி இரணியகசிபை நோக்கி, தைத்ய ஈசுவரா! கோபிக்க வேண்டாம். உமது குமாரன் நான் உபதேசித்த விதமாகப் படிக்கவில்லை! என்றார். உடனே இரணியகசிபு தன் பாலகனை நோக்கி, பிரகலாதா! உன் உபாத்தியாயர் இப்படி உனக்கு உபதேசிக்கவில்லை என்று சொல்கிறாரே, இப்படி யார் உனக்குப் போதித்தார்கள்? என்று சினத்துடன் கேட்டான். பிரகலாதனோ புன்முறுவலுடன் தன் தந்தையைப் பார்த்து ஐயா எவன் சர்வ பூதங்களின் இதயத்திலே இருக்கிறானோ, அந்த ஸ்ரீவிஷ்ணுவே சகல ஜனங்களுக்கும் புத்தியைக் கற்பிப்பவன் பரமாத்வான அந்தத் தேவனையன்றி வேறு யார் கற்பிப்பவன் இருக்கிறான்? என்றான்.

இரணியனுக்குக் கோபம் முற்றியது. அவன் தன் சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனைக் கடிந்து நோக்கி, துர்புத்தியுள்ளவனே! உலகத்திற்கே ஈசுவரனான என் கண் முன்னாலேயே பயமின்றி நின்று வேறு எவனையோ அடிக்கடி பயமில்லாமல் துதிக்கிறாயே, அந்த விஷ்ணு என்பவன் யார்? என்று கேட்டான். எவனுடைய பரமார்த்த ஸ்வரூபம் இன்னதன்மையதென்று சொல்லக்கூடாமல் யோகீந்திரர்களுக்கும் தியான கம்மியமாக இருக்குமோ, எவனால் உலகமெல்லாம் உண்டாயிற்றோ எவன் விஸ்வமயனாக இருக்கிறனோ அந்தப் பரமேஸ்வரனே ஸ்ரீவிஷ்ணு என்று அறிவீராக! என்றான் பிரகலாதன். அதை எதிர்க்கும் விதமாக இரணியகசிபு துள்ளிச் சினந்து, மூடனே! யோகீஸ்வரனாக நான் இருக்கப் பரமேசுவரன் என்ற பெயர் வேறு ஒருவனுக்கும் உண்டோ? நீ நாசமடையப் போவதால் தான் என் முன்னாலேயே துணிந்து நின்று பலவிதமாக அன்னியனைத் துதிக்கிறாய்? என்று குமுறினான். பிரகலாதனோ அமைதியாக, தைத்யேசுவரனே! பரப்ரம்ம பூதனான ஸ்ரீவிஷ்ணுவே எனக்கும் உமக்கும் சகல பிரஜைகளுக்கும் நிலைப்படுத்துவோனும் சிருஷ்டிப்பவனுமாக இருக்கிறான். ஆகையால் நீங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? கோபத்தை விட்டுச் சாந்தமாக இருங்கள் என்றான். அதை இரணியகசிபால் பொறுக்கமுடியவில்லை. துர்புத்தியுடைய இந்தச் சிறுவனின், இதயத்தில் எவனோ ஒரு பாபகர்மமுடையவன் பிரவேசித்து மோகத்தையுண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் இவன் இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பலவாறாகச் சொல்கிறான்! என்று உறுமினான். சர்வலோக வியாபகனான அந்த ஸ்ரீமகாவிஷ்ணு என் இதயத்தில் மட்டுமல்ல; சகல உலகங்களிலும் வியாபித்திருக்கிறார். அதனால் என்னையும், உம்மையும் மற்றுமுள்ள சகலரையும் அந்த விஷ்ணுவே அந்தந்தக் காரியங்களில் பிரவேசிக்கச் செய்கிறார் என்றான் பிரகலாதன். அவன் சின்னஞ்சிறு பையன் என்றே; தன் புத்திரன் என்றோ பாராமல் இரணியன் மிகவும் குரோதம் கொண்டு; தன் அருகில் இருந்த அசுரர்களை அழைத்து துராத்மாவான இந்த மூடனைக் குருவின் வீட்டிற்குக் கொண்டு போய் நன்றாகத் தண்டிக்கச் சொல்லுங்கள்! ஒரு துராத்மா இவனுக்குப் பகைவனை துதிக்கும்படிப் போதித்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் அசுரர்கள் பிரகலாதனைக் குருவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவனைத் தள்ளிவிட்டுப் போனார்கள். அங்கே பிரகலாதன் தன் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்து; கல்வி பயின்று வந்தான்.

சிறிது காலஞ்சென்ற பிறகு இரணியன் தனது மகனை அழைப்பித்து; மகனே பிரகலாதா! ஏதேனும் ஒரு சுலோகத்தைச் சொல்! என்றான். அதனால் பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, எவனிடத்திலிருந்து மூலப்பிரகிருதியும் சமஷ்டி ரூபமான ÷க்ஷத்ரக்ஞனும் உண்டானார்களோ; எவனிடத்திலிருந்து சராசரத்மகமான சகல பிரபஞ்சமும் ஜனித்தனவோ; அப்படிப்பட்ட சர்வதாரனப் பூதனான ஸ்ரீவிஷ்ணுதேவன் நமக்குப் பிரத்யட்சமாகக் கடவன்! என்றான். அதைக்கேட்டதும் இரணியன் அளவிலாத கோபங்கொண்டு அங்கிருந்த அசுரரை நோக்கி; இந்தத் துராத்மாவைச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்! இவன் பிழைத்திருப்பதால் யாதொரு பயனுமில்லை. இவன் தன் சார்புடைய இனத்தவருக்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டதால் இக்குலத்துக்கு நெருப்பு போல இருக்கிறான் என்று கட்டளை பிறப்பித்தான். உடனே அசுரர்கள் அநேகர் கூடி, பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பிரகலாதனைத் தாக்கி வதைக்க முயன்றார்கள். அப்பொழுது பிரகலாதன் புன்முறுவலுடன், அசுரர்களே உங்களிடமும் என்னிடமும் உங்களுடைய ஆயுதங்களிலுங்கூட ஸ்ரீமந்நாராயணனே பரிபூரணமாய் நிறைந்திருக்கிறான் என்பது சத்தியம்! இந்தச் சத்தியத்தினாலே உங்கள் ஆயுதங்கள் என்மீது பாயாதிருக்கட்டும்! என்று சொன்னான். அப்படி அவன் சொல்லியுங்கூட அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி, கத்தி, சூலசக்கரம் முதலிய ஆயுதங்களால் பிரகலாதனை வதைக்கலானார்கள். ஆயினும் பிரகலாதன் அவற்றால் சிறிதும் வேதனையடையாமல் விசேஷ காந்தியுடனே பிரகாசித்தான். அப்போது அவனது தந்தை இரணியன் அவனைப் பார்த்து, அடா துர்புத்தியுடையவனே! இனியேனும் எனது பகைவனைத் துதி செய்யாமல் இருந்தால் உனக்கு அபயங்கொடுக்கிறேன். அதிக மூடத்தன்மையை அடையாமல் சன்மார்க்கனாக இரு என்று புத்தி புகட்ட முயன்றான். அதை பிரகலாதன் ஏற்றுக்கொள்ளாமல், பிதாவே! எவனைச் சிந்திதகதவுடன் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலிய சமஸ்த பயங்களும் ஓடிப்போகுமோ, அத்தகைய பயங்களையெல்லாம் போக்கடிக்கும் அனந்தனான ஸ்ரீமகாவிஷ்ணு, எனது இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பயம் என்பது ஏது? என்று நிமிர்ந்து நின்றான்.

அதைப் பார்த்து இரணியன் அளவிலாத ஆங்காரம் கொண்டு மகா நாகங்களை அழைத்து, ஓ கொடிய பாம்புகளே! மிகவும் துர்புத்தியும் துர்நடத்தையுமுள்ள இந்தப் பையனை விஷச்சுவாலைகள் மிக்க உங்கள் பற்களால் கடித்து இப்போதே இவனை நாசமடையச் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான்; உடனே தக்ஷகன் முதலான கொடிய பாம்புகளெல்லாம் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டு பிரகலாதனின் சகல அவயவங்களிலும் கடித்தன. ஆனால் அந்தப் பாலகனோ ஸ்ரீவிஷ்ணுவிடம் தன் சிந்தை முழுவதையும் நிலைநிறுத்தியிருந்ததால் ஆனந்தப் பரவசமாகி அக்கொடிய பாம்புகள் தனது அறியாமல் இருந்தான். பிறகு விஷசர்ப்பங்களெல்லாம் தோல்வியடைந்து இரணியனிடம் சென்று அரசே எங்களுடைய பற்கள் ஒடிந்துவிட்டன. முடியிலிருக்கும் இரத்தினங்கள் வெடித்தன. படங்களிலே மகத்தான தூபம் ஒன்று உண்டாயிற்று. இதயம் நடுங்கியது. இவையெல்லாமல் அந்தப் பாலகனின் தேகத்தில் சிறிதும் சேதம் உண்டாகவில்லை. ஆகையால் எங்களிடத்தில் நீங்கள் கோபிக்காமல், இந்தக் காரியத்தை ஒழித்து வேறு ஒரு காரியத்தைக் கட்டளையிடுங்கள்! என்று கெஞ்சி விழுந்தன. இரணியன் அப்போதும் குரோதம் அடங்காமல் திக் கஜங்களைக் கூப்பிட்டு, ஓ! திசை யானைகளே! உங்களுடைய தந்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி மிகக் கெட்டியாகவும் உக்கிரமாயும் விளங்குகின்றன. அத்தந்தங்களினால்; அந்தத் துராத்மாவான பிரகலாதன் மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழியுங்கள். அரணியில் பிறந்த அக்கினியே அந்த அரணியை தகிப்பதுபோல தைத்திய குலத்தில் பிறந்த இந்த அதமன் தன் குலத்தையே நாசஞ்செய்பவனாக இருக்கிறான்! என்றான். உடனே திக்கஜங்கள் பிரகலாதனை பூமியிலே வீழ்த்தி பருவத சிகரங்களைப் போன்ற தங்களுடைய தந்தங்களை பிரகலாதன் மீது பாயவைத்து இடித்தன. அப்படி அவை பாயும் போது; கோவிந்த சரணாவிந்தங்களையே பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தானாகையால் அந்தப் பாலகனது மார்பிலே யானைகளின் தந்தங்கள் பட்டதும்; அவை முறிந்து பொடிப்பொடியாய்ப் போயின.

அப்போது பாலகன் பிரகலாதன் தன் தந்தை இரணியனைப் பார்த்து; தந்தையே! வைரத்தைவிட உறுதியான திசையானைகளின் தந்தங்கள் என் மீது பட்டுப் பொடிப்பொடியானது என்னுடைய பலத்தால் அல்ல. பாபங்களையெல்லாம் நாசஞ்செய்யவல்ல ஸ்ரீஜனார்த்தனருடைய ஸ்மரண மகிமையினால் தான் என்பதை நினைப்பீராக! என்று சொன்னான். அதைக்கேட்டதும் இரணியன் அதிக ஆத்திரமடைந்து திக்கஜங்களை அப்பால் விரட்டிவிட்டுத் தன் அசுரர்களை நோக்கி, தைத்தியர்களே! பாபகர்மனான இந்தப் பாலகனைக் கொன்றொழிக்காமல் விடக்கூடாது. காலாக்கினிக்கு ஈடான மஹா அக்கினியை வளர்த்து அதிலே இவனைப் போட்டு எரியுங்கள் என்று சொல்லிவிட்டு; வாயுதேவனான காற்றைக் கூப்பிட்டு மாருதனே! அந்தப் பெரு நெருப்பை உனது காற்றால் ஜ்வலிக்கச் செய்! என்று கட்டளையிட்டான். அசுரர்களோ மலைபோல் விறகுகளைக் குவித்து; அந்தக் குவியலுக்குள் பாலகனான பிரகலாதன் மறையும்படி அவற்றினுள்ளே அமுக்கி மூடிவைத்து, நெருப்பை மூட்டிக் கொளுத்தினார்கள். அப்போது பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, பிதாவே! பிராண்ட மாருதத்தால் ஜ்வலிக்கப்பட்டும்; இந்த அக்கினி சிறிதளவுகூட என்னைத் தகிக்கவில்லை. மேலும் நான் கிடக்கும் இந்த நெருப்பு மயமான விறகுக் குவியலோ, பத்துத் திசைகளிலும் நல்ல தாமரை மலர்களை நிறைவித்து அதிகக் குளிர்ச்சியாகச் செய்யப்பட்டவை போலிருப்பதையே நான் உணர்கிறேன்! என்று சிரித்தான்.

இது இப்படியிருக்கும்போது, இரணியனுக்குப் புரோகிதர்களும், சுக்கிரனுடைய குமாரர்களுமான சண்டாமர்க்கர் என்பவர்கள் இரண்யனை நல்வார்த்தைகளால் துதித்து; அசுர ஈஸ்வரனே உமக்கு விரோதிகளான தேவர்கள் மீது உமது கோபத்தைச் செலுத்த வேண்டுமே தவிர உமது சொந்த மகனான இந்தப் பாலகனிடம் உமது கோபத்தையெல்லாம் செலுத்துவது முறையல்ல! இவன் இனிமேலும் சத்துருபட்ச ஸ்துதி செய்யாமல் இருக்கும்படி நாங்கள் இவனுக்குக் கற்பிக்கிறோம்! பாலியப்பருவம் சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமானபடியால் பாலகனான இந்தக் குமாரனிடத்தில் கோபிக்க வேண்டாம். நாங்கள் போதிப்பதாலும் இவன் ஹரிபக்தியை விடாமல் இருப்பானாயின் இவனை வதைப்பதற்கான துர்ச்செயல்களை நாங்களே செய்கிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள். அதனால் இரணியன் சிறிது மனமிளகித் தன்னுடைய அசுரர்களை ஏவி மகாக்கினியின் மத்தியில் போட்டிருந்த பிரகலாதனை வெளியே இழுத்துவரச் செய்தான். மறுபடியும் குருகுலத்துக்கே போகும்படி பிரகலாதனுக்கு இரணியன் கட்டளையிட்டான். அதன்பிறகு, குருகுலத்தில் பிரகலாதன் வசித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய குருவானவர் பாடம் போதிக்காத சமயங்களில் பிரகலாதன் தன்னோடு படிக்கும் தைத்ரிய பாலர்களான அசுரச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்துக் கொண்டு அவர்களுக்கு விஷ்ணு பக்தியையும், உண்மையான ஞானமார்க்கத்தையும் உபதேசித்து வரலானான். ஓ தைத்திய பாலர்களே! பரமார்த்தமான விஷயத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன் கேளுங்கள். என் வசனங்களைப் பொய்யாக என்ன வேண்டாம். ஏனென்றால் நான் பொருள்மீது ஆசை வைத்து இதை உங்களுக்கு உபதேசிக்க வந்தவனல்ல. ஆகையால் நான் சொல்வதை நம்பிக் கேளுங்கள். மனிதன் பிறந்தவுடன் பாலியமும், யவனமும், அதற்குப் பிறகு தடுக்கமுடியாத கிழத்தன்மையும் வந்து, கடைசியில் மிருத்யுவான மரணத்திற்கே வசமாவான். தைத்ய பாலர்களே! மனிதர்களிடம் இவையெல்லாம் உண்டாவதை நீங்களும் நானும் கண்ணெதிரில் கண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல. மரணமடைந்தவனுக்கு மீண்டும் பிறவியுண்டாவதும் மெய்யேயாகும். இதற்கு சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களே பிரமாணங்களாம்! அவற்றை நீங்களும் கற்றறிந்திருக்கிறீர்கள். இந்தத் தேகம் பிறப்பதற்குக் காரணம், பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களோடு கூடிய ஸ்திரமான ஆன்மாவேயல்லாமல் வேறு காரணம் அகப்படாமையால் சுக்கில சுரோணிதங்களுக்கு ஆளாவதான ஆன்மாவே முக்கிய காரணம். ஆகையால் மனிதனுக்கு கர்ப்பவாசம் முதல் சரீரம் விழும் வரையிலும், சர்வ அவஸ்தையிலும் துக்கம் ஒன்று தான் நிச்சயம்! அன்னபானாதிகளாலே பசியும் தாகமும் தீருவதும், அந்தந்த உபாயங்களாலே சீத உஷ்ணாதி உபத்திரவங்கள் விலகுவதையுங் கொண்டு அதையே சுகம் என்று நினைப்பது உண்மையில் அவிவேகமே ஆகும்!

அது எப்படியெனில், அன்னபானாதிகளைச் சம்பாதிப்பதற்காகச் செய்யும் பிரயாசையினால் உண்டாகும் துக்கங்கள் சொல்லத்தரமல்ல. இந்த அன்னாதிகளால் அஜீர்ணமாகும்போது எத்தனை துக்க ஹேதுவாகின்றன? இதற்கு உதாரணம் கேளுங்கள், வாத தோஷங்களால் மரத்திருக்கிற அங்கங்களையுடைவர்களுக்கும், வதைப்பதாலேயே தேகசுகத்தை விரும்புகிறவர்களுக்கும், அவர்களுடைய உடம்பைக் குத்துவதும், கசக்குவதும், பிசைவதும், மிதிப்பதும், அடிப்பதுமே சுகமாகத் தோன்றுகின்றன; காமமோகிகளாக இருப்பவர்களுக்கோ ஊடலும் கூடலும் காமினீ சரண தாடனமுமே சுகமாகத் தோன்றும் இப்படியாகத் துக்க ஏதுக்களில் சுகப்பிராந்தி உண்டாயிருப்பதைக் காண்பீர்கள். இதுபோலவே, மாமிச சிலேஷ்ம, மலமூத்திராதி மயமான உடலில் சவுந்தர்ய, சவுகுமார்ய, சவுரப்பிய காந்தி முதலான குணங்கள் உண்டென்று நினைப்பதும் வெறும் மனப்பிராந்தியே தவிர வேறல்ல. ரத்தமாமிச, சிலேஷ்ம மலமூத்திர மச்சஸ்நாயு அஸ்திகளின் சமூகமாக இருக்கும் தேகத்தின் மீது பிரியம் வைப்பவன் நரகத்திலேயும் பிரியம் வைக்கலாம். குளிரினால் நெருப்பும், தாகத்தினால் தண்ணீரும், பசியினால் அன்னமும் சுகமாகத் தோன்றுகின்றன. குளிரும் தாகமும் பசியும் இல்லாதபோது அக்கினியும் தண்ணீரும் அன்னமும் துக்க ஏதுக்களாகவே இருக்கும். பிள்ளைகளே! மனிதன் எவ்வளவு தனதானிய ரத்னாதிகளைக் கிரகித்துக் கொள்கிறானோ அவ்வளவையும் துக்கம் என்று நினைக்க வேண்டும். மனிதனின் மனத்துக்குப் பிரியமான புத்திர, மித்திர களத்திராதி சம்பந்தங்கள் எத்தனை சம்பாதிக்கிறானோ அத்தனையும் இதயத்தில் தைத்த ஆணிகளைப் போலவே இருக்கும்! மனிதன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய இதயத்தில் இருக்கிற தனதானிய ரத்னாதிகளை நாசமும், அக்கினியுபாதையும் கோரபயமுமில்லாமல் ஸ்திரமாய்ப் பாதித்துக்கொண்டேயுள்ளன. வீட்டில் கள்வர் பயமில்லாமல் இருந்தாலும், இருதயத்தில் பொருள்களிடத்துள்ள ஆசையால், அவை உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பிறக்கும்போது அனுபவிக்கிற துக்கத்தைப் போலவே மரணத்திலும் துக்கம் உண்டாகிறது. பிறகு, யமவாதனையிலும் மகாதுக்கமே உண்டாகும். கர்ப்பவாசத்தில் கொஞ்சமேனும் சுகம் இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள். எனவே எங்குமே சுகமில்லை ஆகையால் ஜகம் எங்கும் துக்கமயமாகவே இருக்கிறது.

இப்படியாகச் சகல துக்கங்களுக்கும் இருப்பிடமான சம்சார சாகரத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே கடக்கச் செய்பவன் உங்களுக்கு நான் உண்மையையே சொல்கிறேன். நாம் பால்யரானதால் விரகதி மார்க்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கவேண்டாம். பால்ய, யௌவன ஜரா, மரணாதி அவஸ்தைகள் உடலுக்கேயன்றி ஆத்மாவுக்கு இல்லை. உடலில் ஆன்மாதான் ஜனன மரணாதி ரகிதனாய், சாஸ்வதனாக இருக்கிறான். உலகத்தில் மனிதன், தன்னுடைய பாலப்பருவம் கடந்த பிறகு யவ்வன வயதிலே ஆன்மாவுக்கு இதஞ்செய்து கொள்கிறேன் என்றும், யவ்வனத்தை அடைந்தபோது வயோதிகத்திலே உயர்ந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் நினைப்பான். பிறகு வயது முதிர்ந்து, மூப்புவந்து இந்திரியங்கள் பலவீனப்பட்டுப் போகும் போது, இனிமேல் என்ன செய்வேன்? திடமாக இருந்தபோதே ஆத்தும இதஞ்செய்துகொள்ளாமல் மூடனாகப் போனேனே! என்று கவலைப்படுவான். இதுவுமல்லாமல் துராசார மோகங்கொண்டு, ஒருநாளும் உயர்வான மார்க்கத்துக்கு உரியவனாக மாட்டான். எப்படியென்றால், பலவித கிரீடா விளையாடல் விசேஷங்களால் பாலியத்தையும், சந்தன குசுமவனிதையர்களின் பரவசத்தினாலே வாலிபத்தையும், அசக்தியினாலேயே வயோதிகத்தையும் போக்கிக் கொண்டு, அஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் கங்கை நதியின் அருகிலிருந்தும் வண்ணான் தனக்குத் தாகமெடுத்தவுடன் தண்ணீரைக் குடிக்காமல், இந்தத் துணியைத் துவைத்தாகட்டும் இந்த ஆடையைத் துவைத்தாகட்டும் என்ற காலத்தைப் போக்குவதைப் போலவும், செம்படவன் இந்த மீனைப் பிடித்தாகட்டும் என்று பொழுதைப் போக்குவதைப் போலவும், எதிர்காலத்தை நினைத்து தற்காலப் பருவத்தைப் போக்கக்கூடாது. பாலிய, யவ்வன, ஜரா மரணாதி அவஸ்தைகள் உடலுக்கு உண்டே தவிர ஆன்மாவுக்கு இல்லை என்று நினைத்து விவேகமுடையவர்களாய், நீங்கள் உஜ்ஜீவிக்கும்படியான முயற்சிகளைச் செய்யுங்கள். இதுவே விரக்திமார்க்கம்! இது அசத்தியம் என்று நினைக்காதீர்கள் எப்போதும் சம்சார பந்த நிவாரணியான ஸ்ரீமந்நாராயணனையே நினையுங்கள். அந்த எம்பெருமானை நினைப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அந்தத் திருப்பெயரை ஸ்மரித்தவுடனேயே சகல பாபங்களும் நாசமாய் சகல சுபங்களும் உண்டாகும். ஆகையால் அந்த மகாவிஷ்ணுவையே நினைத்து மகாத்துமாக்கள் உஜ்ஜீவிப்பார்கள். சர்வபூதந்தர் பாமியான நாராயணனிடத்தில் உங்களுக்கு நட்புணர்வு உண்டாகட்டும்! அவனது லீலா சாதனங்களான சேதனங்களிடத்தில் சினேகஞ்செய்யுங்கள். அதனால் மோகம் முதலிய சகல கிலேசங்களும் விலகும் ஆத்தியாத்து மாகாதி, தாபத்ரயத்தினால் ஜகம் யாவும் துன்பப்படுபவை. ஆகையால் மிகவும் பரிதாபப்பட வேண்டிய பிராணிகளிடத்தில் எவன்தான் துவேஷத்தை வைப்பான்? ஒருவேளை செல்வம், கல்வி, பலம் முதலியவற்றில் தன்னைவிட சகல ஜீவர்களும் சகல பிராணிகளும் செழிப்பாக இருப்பதாகவும், தான் ஒருவனே அப்படியில்லாமல் சக்தியீனனாக இருப்பதாகவும் மனிதன் நினைத்தானானால் அப்போதும் துவேஷம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துவேஷஞ் செய்வதால் ஹானியே ஏற்படும் ஆகையால்; மயித்திரி; கருணை; முதிதை; உபேஷை என்ற மனத்தெளிவின் காரணங்களை மந்திமாதிகாரிகளின் மதத்தை அனுசரித்து உங்களுக்குச் சொன்னேன். மந்திமாதிகாரிகள் என்போர் உலகத்தைப் பகவானின் சொரூபமாக நினைக்காமல் வேறாக நினைக்கிற சாங்கியராவர். இனி உத்தமாதிகாரிகளின் கருத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.

சகல பிரபஞ்சமும் சர்வாத்மாவான ஸ்ரீமந்நாராயணருடைய சொரூபம் என்று நினைத்து, ஞானமுள்ளவர்கள் சகல பூதங்களையும் உன்னைப்போலவே அபேதமாக நினைக்கவேண்டும். ஆகையால், நானும் நீங்களும் அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பெரும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக. சூரியன், சந்திரன், வருணன், இந்திரன், வாயு, அக்கினி முதலானவர்களாலே ஒருபேறுமில்லை. இதற்கு என்ன செய்வது என்றால், தேவ, அசுர; யக்ஷ;ராக்ஷச, கின்னர பன்னகாதிகளாலும் மனுஷ்ய; பசு; பக்ஷி; மிருகங்களாலும் அதிகாரம்; ஜ்வரம், குன்மம், முதலிய மகாரோகங்களாலும் ராக, துவேஷ, லோப, மோக மதமாச்சாரியங்களாலும் எது நாசஞ்செய்யப்படாததோ அப்படிப்பட்ட பரமானந்தத்தைப் பெறுவதற்கு ஸ்ரீகேசவனது திருவடிகளில் இதயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் சுகமடையலாம். ஆகையால் அசாரமான சம்சார மார்க்கத்தில் உண்டாகும் தேவ மனுஷ்யாதி சரீரங்களுக்கு உரிய ஸ்வர்க்க போகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் வலுவில் வந்து நன்மையானவற்றையே சொல்கிறேன். சர்வபூதங்களிடத்திலும் சமத்துவ புத்தியுடன் இருங்கள். சர்வபூத சமத்துவந்தான் அச்சுதனுக்குச் செய்யும் ஆராதனையாகும். சர்வ நாதனான விஷ்ணுபெருமான் பிரசன்னமானானேயாகில் துர்லபமான பொருள்கள் என்னதான் இருக்கமுடியும்? ஆனாலும் தர்மார்த்த கர்மங்களைப் பிரார்த்திப்பது நல்லதன்று. அவை அற்பங்கள்! அவைகளினால் பயன் என்ன? மோட்சத்தையும் விரும்பவேண்டாம். ஏனென்றால் நன்றாய்ப் பழுத்த மாமரத்தின் அருகே சென்றவனுக்கு தற்செயலாய்ப் பழங்கிடைப்பது போல பரப்பிரமமான அனந்தன் என்ற மகாகல்ப விருட்சத்தை அணுகியவனுக்கு மோக்ஷõனந்தம் என்கிற பலன் தற்செயலாகவே கிடைத்துவிடும், இதில் சந்தேகமில்லை என்று பாலகன் பிரகலாதன் கூறினான்.

————

18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!

பிரகலாதனின் உபதேசங்களைக் கேட்டதும் அசுரகுமாரர்கள் மிகவும் யோசித்துவிட்டு, இரணியனின் கட்டாயத்துக்குப் பயந்து, பிரகலாதன் சொன்னவற்றையெல்லாம் அந்த அசுரேஸ்வரனிடம் கூறிவிட்டார்கள். அதனால் இரணியன் அதிகக் கோபமும் அகங்காரமும் கொண்டு தன் சமையற்காரனைக் கூப்பிட்டு, பரிசாரகர்களே! மந்தபுத்தி படைத்தவன் தான் என் குமாரன் பிரகலாதன் அவன் கெட்டதுமல்லாமல், மற்றவருக்கும் துன்மார்க்கமான உபதேசங்களைச் சொல்லி, அவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் பிரகலாதனைத் தாமதமின்றி அழித்தொழிக்க வேண்டும். அவனறியாத வண்ணம் அவனுடைய ஆகாரங்களிலெல்லாம் ஆலகாலம் என்ற கொடிய விஷத்தைக் கலந்து அவனுக்குக் கொடுங்கள். இந்தக் காரியத்தில் சந்தேகம் வேண்டாம்! என்று கட்டளையிட்டான். பரிசாரகர்களும் அப்படியே விஷங்கலந்த அன்னத்தை பிரகலாதனுக்கு கொடுத்தார்கள். அதையறிந்த பிரகலாதன், தன் மனதில் யாதொரு மாறுபாடும் இல்லாமல், அனந்தன் என்ற திவ்யநாமதே யத்தினால் அந்த அன்னங்களையெல்லாம் வாங்கி மகிழ்ச்சியுடன் அமுது செய்தான். ஸ்ரீஅனந்தனின் நாமத்தை உச்சரணை செய்த பெருமையால் அன்னத்தில் கலந்துள்ள விஷமெல்லாம் தன் வீரியத்தை இழந்து பிரகலாதனின் ரத்தத்திலேயே ஜீரணமாகிவிட்டது. அந்த மகாவிஷம் பிரகலாதனுக்கு ஜீரணமானதைப் பார்த்ததும் சமையற்காரர்கள் மகாபயம் பிடித்தவர்களாய் இரணியனிடம் ஓடி நடந்தவற்றைக் கூறினார்கள். அதனால் இரணியன் இன்னும் கோபங்கொண்டு, புரோகிதர்களான சண்டாமர்க்கர்களைக் கூப்பிட்டு, புரோகிதர்களே, விரைவில் அந்த துன்மார்க்கப்பையலைக் கட்டியிழுத்துச் சென்று உங்கள் மந்திர பலத்தால் பயங்கரமான கிருத்தியை உண்டாக்கி, அவனை அழித்து விடுங்கள் என்று கட்டளையிட்டான். புரோகிதர்களான பிராமணர்கள் அசுரேஸ்வரனின் ஆக்ஞையை ஏற்று பிரகலாதனை அணுகினார்கள். வணக்கமாக நின்று கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து, சிறுவனே! திரிலோக விக்கியாததமான பிரமகுலத்தில் உதித்து, இரணியனின் மகனான உனக்கு எந்தத் தேவதைகளால் என்ன ஆகவேண்டும்? விஷ்ணுவான அந்த அனந்தனாலே தான் உனக்கு என்ன பயன்? உன் பிதாவான இரணியகசிபோ சகல உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் நீயும் அப்படியே அதிபதியாக இருக்கலாம். ஆகையால் சத்துருபட்ச ஸ்தோத்திரத்தை விட்டுவிடுவாயாக: சகல உலகங்களுக்கும் உன் தந்தையே பூஜிக்கத்தக்கவராகவும் பரமகுருவாகவும் இருக்கிறார். ஆகையால் இப்போது நீ அவரது கட்டளையை ஏற்று நடப்பதே நியாயம்! என்று புத்திமதி கூறினார்கள்.

மகாத்மாக்களே! நீங்கள் சொல்வது மெய்தான். மூன்று உலகங்களிலும் பிரமபுத்திரனான மரீசியின் வமிசம் மேலானது தான். என் தந்தை மேன்மையானவர், தேஜோ பல பராக்கிரமங்களையுடையவர் என்பதும் உண்மைதான். அவரே பரமகுரு என்பதும் நியாயமே! அத்தகைய என் தந்தைக்கு நான் சிறிதாவது அபராதம் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, அனந்தனாலே பயன் என்ன என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த வசனம் ஒன்றுதான் பொருள் அற்றது! என்றான் பிரகலாதன். பிறகு மரியாதைக்காக ஒன்றும் சொல்லாமல், புன்னகையுடன் பிரகலாதன் அவர்களைப் பார்த்து, புரோகிதர்களே! விஷ்ணுவான அந்த அனந்தனால் என்ன பயன் என்ற உங்களது வாக்கியம் நேர்த்தியாக இருக்கிறது. அனந்தனாலே காரியம் என்னவென்று நீங்கள் கேட்டது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் சொல்லுகிறேனே என்று மனதில் கிலேசங்கொள்ள வேண்டாம். அனந்தனாலே உண்டாகும் பயனை நான் சொல்கிறேன் கேளுங்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்று சொல்லப்படும் நால்வகை புருஷார்த்தங்களும் எவனால் உண்டாகுமோ, அந்த அனந்தனாலே பிரயோசனமென்ன என்று நீங்கள் சொல்வதை நான் எப்படி அங்கீகரிப்பேன்? மரீசி முதலியவர்கள் அனந்தனை ஆராதித்தே, அவனது கிருபையினாலே தாம் விரும்பியதையெல்லாம் பெற்றார்கள். தத்துவ ஞானிகளான பரமாத்மாக்கள் ஞானநிஷ்டையினாலே அந்த பரமாத்மாவை ஆராதித்து, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தார்கள். சம்பத்து ஐசுவரியம், பெருமை, சந்தானபலம் ஆகிய நல்ல காரியத்துக்கும் மோட்சத்துக்கும் ஒன்றாலேயே பெறத்தக்க காரணம் எதுவென்றால் அது ஸ்ரீஹரியினுடைய ஆராதனையேயாகும். இப்படித் தருமார்த்த காம மோட்சங்கள் எவனிடமிருந்து பெறப்படுமோ, அப்படிப்பட்ட அனந்தனாலே என்ன பயன் என்று நீங்கள் கேட்டீர்கள்? பிராமணர்களே! இதுவென்ன நியாயம்? மேலும் நான் பல வார்த்தைகளைச் சொல்லி பயன் என்ன? நீங்களோ எனது ஆசிரியர்கள். ஆகையால் சந்தேகமின்றி நல்லதாயினும் பொல்லாததாயினும் என்னிடம் சொல்லுங்கள். இதனால் சிறப்பிராது அற்ப விவேகம் தான் இருக்கும். இனி என்னுடைய முடிவான சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கர்த்தாவும், வளர்ப்பவனும், சங்கரிப்பவனும் உலகநாதனும் எல்லோருடைய இதயத்திலிருப்பவனும், யாவற்றையும் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படுபவனும் அந்த ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல் வேறு ஒருவனுமல்ல; பாலியனான நான் இப்படிச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரகலாதன் கூறினான்.

பாலகனே! இனிமேல் நீ இப்படிச் சத்துருபக்ஷ ஸ்தோத்திரமான வார்த்தைகளைச் சொல்லமாட்டாய் என்று எண்ணித்தான், நெருப்பின் மத்தியிலே தகிக்கப்பட்டிருந்த உன்னை வெளியே இழுக்கச் செய்தோம். மூடனாகையால் அதையே நீ மறுபடியும் பேசுகிறாய். இனியும் உன் பிடிவாத்தை விடாமல் இருப்பாயானால், கிருத்தியை உண்டாக்கி ஒரு கணத்தில் உன்னை நாசமாக்குவோம்! என்றார்கள் புரோகிதர்கள். பிராமணர்களே! ஒருவனால் ஒருவன் ரட்சிக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. அவனவன் தனது சதாகாரத்தினாலேயே தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். நற்செயல்களால், சகல பயன்களும் நற்கதியும் உண்டாகின்றன. ஆகையால் எப்போதும் நல்லவற்றையே செய்யவேண்டும்! என்றான் பிரகலாதன். அசுரப் புரோகிதர்கள் கோபம் அடைந்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மிகவும் பயங்கர முகத்துடன் தீச்சுவாலை வீசும்படியான ஒரு கிருத்தியை உண்டாக்கி அதைப் பிரகலாதன் மீது ஏவினார்கள். அது பூமிநடுங்க தன் பாதங்களை எடுத்து வைத்து மிகவும் கோபத்துடன் தனது சூலத்தினாலே, பிரகலாதனின் மார்பைத் தாக்கியது. அந்தச் சூலம் பிரகலாதனின் மார்பிலே பட்டவுடனேயே சடசடவென ஒடிந்து தரையில் விழுந்து பொடிப்பொடியாயிற்று! பகவானும் ஜகதீஸ்வரனுமான ஸ்ரீஹரி எங்கே பிரியாமல் இருப்பானோ, அங்கே வஜ்ராயுதமானாலும் பொடியாய்ப் போகும் என்றால் சூலத்தின் கதியை பற்றிச் சொல்லவா வேண்டும்? இவ்விதமாக அந்த கிருத்தியையினால் ஒன்றும் செய்யமுடியாமற் போகவே, அது தன்னைக் குற்றமில்லாத இடத்திற்கு ஏவிய புரோகிதர்கள் மீதே திரும்பி விழுந்து அவர்களைத் தகிக்கத் துவங்கியது. அதனால் தவிக்கிற ஆசிரியர்களைக் கண்டதும் பிரகலாதன் மிகவும் பரிவு கொண்டு அவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணா! ஸ்ரீஅனந்தா! இவர்களைக் காப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஓடிச்சென்று, சுவாமியைத் துதிக்கலானான்.

ஓ சர்வ வியாபகனே! ஜகத்ரூபனே! ஜகத்கர்த்தாவே! ஜனார்த்தனனே! கடினமான மந்திர அக்னியால் தகிக்கப்படும் இந்தப் பூசுரர்களைக் காப்பாயாக. சர்வ பூதங்களிடத்திலும் ஜகத் குருவான ஸ்ரீவிஷ்ணுவே வியாபித்திருக்கிறார் என்பது சத்தியமானால் இந்தப் புரோகிதர்கள் பிழைப்பார்களாக. ஸ்ரீவிஷ்ணு யாவரிடத்திலும் பிரியமாய் இருப்பவன் என்று நான் நினைத்து, சத்துரு பக்ஷத்திலும் துவேஷமில்லாமல் நான் இருப்பேனேயானால், இந்தப் பிராமணர்கள் பிழைக்கவேண்டும். என்னைச் சங்கரிக்க வந்த க்ஷத்திரிய அசுரர்களிடமும் எனக்கு விஷம் இட்ட சமையற்காரர்களிடமும், அக்கினியை மூட்டிய தானவர்களிடமும் தந்தங்களாலே என்னைப் பிடித்துப் பிடித்துக் குத்திய திக்கு கஜங்களிடத்திலும்; விஷங்கக்கி என்னைக் கடித்த பாம்புகளிடமும் என் சிநேகிதர்களிடமும் நான் சமமான புத்தியுடையவனாக இருந்து, எங்கும் ஒரு தீங்கும் நினைக்காமல் இருந்தேன் என்றால் அந்தச் சத்தியத்தினாலேயே இந்த அசுரப்புரோகிதர்கள் பிழைத்து சுகமாக இருக்கவேண்டும்! என்று பிரகலாதன் பிரார்த்தித்தான். அதனால் அப்புரோகிதர்களின் வேதனை ஒழிந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரகலாதாழ்வானைப் பார்த்து, குழந்தாய்! நீ தீர்க்காயுளுடன் எதிரற்ற வீரிய பலபராக்கிரமங்களும், புத்திர பவுத்திர தனாதி ஐசுவரியங்களும் பெற்றுச் சுகமாக இருப்பாயாக! என்று ஆசிர்வதித்துவிட்டு, இரணியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.

————

19. பிரகலாதனின் பிரார்த்தனை

இரணியன் தன் புரோகிதர்கள் உண்டாக்கிய கிருத்தியை வீணானதைக் கேட்டுத் திகைத்தான். பிறகு அவன் தன் புத்தரனை அழைத்து, பிரகலாதா! உன் பிரபாவம் அதியற்புதமாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? இது மந்திரத்தால் உண்டானதா! இயல்பாகவே உள்ளதா? தெரியச் சொல்! என்றான். பிரகலாதன் தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, ஐயனே! எனக்கு இந்தப் பிரபாவம் மந்திர தந்திரங்களால் உண்டானதல்ல! இயற்கையாகவே உள்ள சுபாவமுல்ல எவனெவன் இதயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு நிலையாகப் பிரகாசிப்பானோ, அவனவனுக்கெல்லாம் இத்தகைய பிரபாவம் உண்டு! யார் ஒருவன் தனக்குக் கேடு நினையாததைப் போலப் பிறருக்கும் கேடு நினைக்காமல் இருப்பானோ அப்படிப்பட்டவனுக்குப் பாவத்தின் காரியமாகிய பாவம் உண்டாவதில்லை. எவன் மனோவாக்குக் காயங்களினால் யாருக்கும் துரோகஞ்செய்யாமல் இருக்கிறேன். இப்படி நல்ல சிந்தையுள்ளவனான எனக்கு ஆத்தியாத் மிகம், ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம் என்ற மூலகைத் துக்கமும் எப்படி உண்டாகும்? ஆகையால், விவேகமுள்ளவர்கள் ஸ்ரீஹரியே சர்வாத்துமகனாக இருக்கிறான் என்று நினைத்து, சகல பூதங்களிடமும் சர்வதேச, சர்வ காலங்களிலும் இடைவிடாமல் அன்பு செலுத்த வேண்டும்! என்று பிரகலாதன் சொன்னான். இரணியன் இன்னும் குரோதத்தால் பொங்கி, அங்கிருந்த அசுரகிங்கரர்களைக் கூவியழைத்து இந்த துஷ்டப்பையனான பிரகலாதனை இழுத்துகக் கொண்டு போய் நூறு யோசனை உயரமுள்ள உப்பரிகையின் மேலே இருந்து, கீழே தள்ளுங்கள். அந்த மலையின் மேல் விழுந்து இவனது உடம்பெல்லாம் சின்னாபின்னமடைந்து சிதையட்டும்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் கிங்கரர்களும் பிரகலாதனை இழுத்துப்போய் மிகவும் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள். ஆனால் பிரகலாதன் தனது இதயகமலத்தில் புண்டரிதாஷனான ஸ்ரீமந்நாராயணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் பூமிதேவி வெளிப்பட்டு சர்வபூத ரட்சகனின் பக்தனான பிரகலாதனை தன் கைகளால் ஏந்திக் கொண்டாள்.

அப்படிக் கீழே விழுந்தும் தனது அங்கத்தில் கிஞ்சித்தும் சேதமில்லாமல் சுகமாய் எழுந்துவந்த தன் மகனைப் பார்த்து, இரணியன் மனம் பொறாமல் மகாமாயவியான சம்பராசுரனைக் கூவி அழைத்து, அசுர உத்தமனே! துன்மார்க்கனான இந்தப் பையனைச் சாகடிக்க நான் எத்தனை உபாயம் செய்தும் இவன் சாகாமலே தப்பிவிடுகிறான்! ஆகையால் உமது மாயா சக்தியினால் இந்தத் துராத்மாவைச் சங்கரிக்க வேண்டும்! என்றான்.

அதற்கு சம்பராசுரன் இணங்கி, அசுரேஸ்வரா! எனது மாயாபலத்தைப் பாரும்! சஹஸ்ரகோடி மாயைகளைச் செய்து இந்த பிரகலாதனை நானே சாகடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு பிரகலாதன் மீது பலவகையான மாயைகளைப் பிரயோகித்தான். ஆனால் பிரகலாதனோ அந்த அசுரன் மீதும் வெறுப்படையாமல் ஸ்ரீமதுசூதனான விஷ்ணுவையே நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீமந்நாராயணனின் நியமனத்தால் அநேகமாயிரம் ஜ்வாலைகளோடு கூடிய திருவாழி புறப்பட்டு, பிரகலாதனை ரட்சிப்பதற்காக அதிவேகமாக வந்து, சம்பராசுரனின் மாயைகளையெல்லாம் தகித்துச் சாம்பலாக்கியது. பிறகு, இரணியன் இன்னும் பிடிவாதமான குரோதம் கொண்டு சம்சோஷகன் என்ற வாயுவைப் பார்த்து, சீக்கிரமாக இந்தத் துஷ்டனை நாசஞ்செய்வாயாக! என்று கட்டளையிட்டான். அந்த வாயு அசுரனும் அதிகுளிர்ச்சியும் அதிஉஷ்ணமும் கொண்டு, பிரகலாதனின் திருமேனியினுள்ளே பிரவேசித்தான். ஆனால் பிரகலாதன் தன் இருதயத்திலே ஸ்ரீமந்நாராயணனைத் தரித்திருந்தபடியால், அங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதுசூதனன் ரட்சகமூர்த்தியாய் எழும்பி, அந்தச் சம்சோஷகனை விழுங்கி ஒரே கணத்தில் நாசஞ்செய்தருளினார். அதைக்கண்ட இரணியன் பிரமித்தான். இதுபோல சம்பரனால் ஏவப்பட்ட மாயைகளும் சம்சோஷக வாயுவும் நாசமடைந்ததையறிந்த பிரகலாதன் மீண்டும், குருகுலத்துக்குச் சென்று அங்கே படித்துக் கொண்டிருந்தான். குருகுலத்தில் அவனுடைய ஆசாரியர், அவனுக்குத் தினந்தினம் சுக்கிர நீதியை உபதேசித்து வந்தார். சிலகாலம் சென்ற பிறகு அவர் தம்மிடம் பிரகலாதன் நீதி சாஸ்திரத்தை கற்றறிந்து விட்டதாக நினைத்து, அவனையும் அழைத்துக் கொண்டு, இரணியனிடம் சென்றார். அவர் இரணியனை நோக்கி, அசுரேந்திரனே! உனது புத்திரன் சுக்கிர நீதியை நன்றாகப் பயின்று சகல விஷயங்களிலும் சமர்த்தனாகி விட்டான்! என்றார். இரணியன் சிறிது மனச்சமாதானமடைந்து பிரகலாதனைப் பார்த்து, மகனே! அரசனானவன், நண்பர்களிடமும் பகைவரிடமும், நடுவரிடத்திலும், விருத்தி, சாமியம், க்ஷயம் என்பவை நேரிடும் சமயங்களிலும் எப்படியிருக்க வேண்டும்? புத்திசொல்லும் மந்திரிகளிடமும் காரியசகாயரான அமாத்தியரிடமும் பாகியர் என்னும் வரிவாங்கிச் சேர்க்கும் அதிகாரிகளிடமும், ஆப்பியந்தார் என்று சொல்லப்படும் அந்தப்புர அதிகாரிகளிடமும், தன்னுடைய குடிமக்களிடமும், தன்னால் ஜெயிக்கப்பட்டுத் தன்னிடம் சேவகம் செய்யும் பகைவரிடமும் மன்னன் என்போன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சந்தி, விக்கிரகம் முதலியவற்றில் எங்கே எதையெதைச் செய்ய வேண்டும்? தனக்குள்ளே இருந்து மர்மங்களை அறிந்து, பிறகு பிறராலே பேதப்படுத்திக் கொண்டு போக உடன்பட்டிருக்கும். தன் ஜனங்கள் விரோதமாகாமல் இருக்க அரசன் என்ன செய்ய வேண்டும்? சைலதுர்க்கம், வனதுர்க்கம், ஜலதுர்க்கம் முதலிய துர்க்கங்களை எப்படி அமைப்பது? அசாத்தியர்களால் வனத்தில் வாசஞ்செய்யும் மிலேச்சர்களை வசப்படுத்தும் உபாயம் யாது? திருடர் முதலிய துஷ்டர்களை நிக்ரஹிக்கும் விதம் என்ன? இவற்றையும் சாமதான பேதாதி உபாயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நீதி சாஸ்திரத்திலே நீ கற்றிருப்பவைகளையும் சொல்வாயாக உன் மனதில் இருக்கும் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என்றான்.

தந்தையே! ஆசாரியர் எனக்குச் சகல சாஸ்திரங்களையும் உபதேசித்தார்; நானும் படித்தேன். ஆயினும் இவையெல்லாம் எனக்கு அர்த்தமற்றதாகவும், அசாரமாகவுமே தோன்றுகின்றன. மித்திராதிகளை வசப்படுத்த, சாம தான பேத தண்டங்களைச் செய்யும்படி நீதி சாஸ்திரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனே கோபிக்க வேண்டாம்! ஜகத்திலே சத்துரு மித்திரர்களை நான் காணவில்லை. ஆகையால் சாமதானாதி உபாயங்கள் வீணானவையே! சாத்தியம் இல்லாதபோது வெறும் சாதனத்தால் பயன் என்ன? சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, ஜகத் ஸ்வரூபமாகவும் ஜகந்நாதனாகவும் கோவிந்தனே எழுந்தருளியிருக்கும்போது, இந்த ஜகத்தில் சத்துரு மித்துரு என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஸ்ரீவிஷ்ணுபகவான் உம்மிடமும் என்னிடமும் மற்றுமுள்ள சகல ஜகத்திலேயும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறாராகையால் சத்துரு மித்திரன் என்ற பேதம் எப்படி உண்டாகும்? இகலோக போகசாதனங்களாய் வீணான சொற்கள் விரிந்து, அவித்தைக்கு உட்பட்டிருக்கும் நீதி சாஸ்திரங்களால் என்ன பயன்? ஐயனே! பந்தங்கள் நீங்கும்படியான பிரமவித்தைப் பயிற்சிக்கே முயற்சி செய்ய வேண்டும். மின்மினிப் பூச்சியைப் பார்த்து அக்கினி என்று பாலகன் பிரமிப்பது போல் சிலர் அஞ்ஞானத்தால் அவித்தையை வித்தையென்று நினைக்கிறார்கள். எது சம்சார பந்தத்துக்குக் காரணமாகாதோ அப்படிப்பட்ட கருமமே கருமமாகும்! எது மோக்ஷத்துக் காரணமாகுமோ அப்படிப்பட்ட வித்தையே வித்தையாகும். மற்ற கருமங்கள் யாவுமே வீணான ஆயாசத்தை யுண்டாக்குமேயொழிய வேறாகாது. ஆகையால், நீதி சாஸ்திரத்தால் வரும் ராஜ்யாதி பயன்களைத் துச்சமாக நினைத்து, உத்தமமான விஷயத்தைச் சொல்கிறேன். பூமியில் ராஜ்ய அபேட்சையில்லாதவனும் தன அபேட்சையில்லாதவனும் உண்டோம். ஆயினும் பூர்வ புண்யவசத்தால் கிடைக்கத் தக்கதே கிடைக்குமேயல்லாது. நினைத்தது கிடைக்காது. கோபாக்கியமுடைய என் தந்தையே! ஜகத்தில் யாவரும் தமக்கு ஐசுவரியம் உண்டாக வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். ஆயினும் அது ஜன்மாந்திர பாக்கிய வசத்தாலன்றி முயற்சியால் உண்டாகாது.

விவேகமில்லாதவர்களக்கும் முயற்சி செய்யாதவருக்கும் நீதி சாஸ்திர மறியாதவருக்கும் அதிர்ஷ்டவசத்தால் ராஜ்யாதிகள் உண்டாகின்றன. ஆகையால் ஐசுவரியத்தை விரும்புவோரும் புண்ணியத்தையே செய்ய முயலவேண்டும். தேவ மனுஷ்ய, மிருக பட்சி விருட்ச ரூபமுடைய பிரபஞ்சம் யாவும் ஸ்ரீஅனந்தனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானிகளுக்கு அவை வேறு போலத் தோன்றுகின்றன. ஸ்ரீவிஷ்ணு பகவான் விசுவதா ரூபதரன். ஆகையால் தாவர சங்கமாதமகமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று நினைத்து விவேதியாக இருப்பவன் சகல பூதங்களையும் ஆத்மசமானமாகப் பாவித்திருக்க வேண்டும். இந்த ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவனிடத்திலே அனாதியாயும் ஷட்குண ஐசுவரிய சம்பன்னான அந்தப் புருஷோத்தமன் பிரசன்னமாவான். அவன் பிரசன்னனானால், சகல விதமான கிலேசங்களும் விலகிப் போய்விடும்! என்றான். பிரகலாதன் அதைக்கேட்ட இரணியன், சகிக்கமாட்டாமல் கோபத்துடன் தன் சிங்காதனத்திலிருந்து எழுந்து, தன் குமாரனின் மார்பிலே உதைத்து கையோடு கையை அறைந்து, அருகிலிருந்த அசுரர்களைப் பார்த்து, ஓ விப்ரசித்து! ராகுவே! ஓ பலனே! இந்தப் பயலை நாகபாசங்களினால் கட்டியிழுத்து, சமுத்திரத்திலே தூக்கிப் போடுங்கள் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தைத்தியதானவ சமூகங்கள், மூடனான இந்தப் பாவியின் வழியில் சென்று கெட்டுப் போய்விடும். என்ன சொல்லியும் இவன் மாறவில்லை. இவனை நான் சொன்னபடிச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். தைத்யர்கள் அவனது கட்டளையை ஏற்று, பிரகலாதனை நாகபாசங்களாற் கட்டிக்கடலில் போட்டார்கள்.

பிரகலாதன் அதில் விழுந்து அசைந்ததும் கடல்நீர் எல்லை கடந்து, ஜகமெங்கும் வியாபித்தது. இவ்விதம் கடல்நீர் பொங்கிப்பூமியில் வியாபிப்பதைக் கண்ட இரணியன் தைத்யர்களை அழைத்து சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் அந்தத் துஷ்டன் மீது மலைகளை நெருக்கமாக அடுக்குங்கள்! அந்தப் பையன் பிழைப்பதால் யாதொரு பயனும் இல்லை. ஆகையால் ஜலராசியின் நடுவில், மலைகளால் நாலாபுறமும் அமுக்கப்பட்டுக் கொண்டே பல ஆண்டுகள் இருந்தானாகில் அவன் உயிரை விட்டுவிடுவான்! என்றான். பிறகு தைத்ய தானவர்கள் உயர்ந்த மலைகளைப் பறித்துக் கொண்டுவந்து பிரகலாதன் மீது போட்டு, அவனைச் சுற்றிலும் ஆயிரம் யோசனைக்கு மலைகளை அடுக்கினார்கள். இவ்விதம் பிரகலாதாழ்வான் சமுத்திர மத்தியில், அத்தனைத் தொல்லைகளிலும் ஏகாக்கிர சித்தனாய் அச்சுதனையே துதிக்கலானான்! புண்டரிகாக்ஷனே! உனக்கு எனது வணக்கம், புருஷோத்தமனே உனக்குத் தெண்டனிடுகிறேன். சர்வலோக ஸ்வரூபனே! உனக்கு நமஸ்காரம்! உக்கிரமான சக்கர ஆயுதமுடையவனே உனக்குத் தெண்டனிடுகிறேன். பிரமண்ணியம் என்று சொல்லப்பட்ட தவம் வேதம் முதலியவைகளுக்குத் தேவனாகவும், கோக்களுக்கும், பிராமணருக்கும் இதனாகவும், ஜகத்துக்கெல்லாம் ரக்ஷகனாயும், ஸ்ரீகிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்னும் திருநாமமுடைய உனக்கு மேலும் மேலும் தண்டனிடுகிறேன். பிரமரூபமாகி உலகங்களைப் படைத்துக் கொண்டும், தனது சொரூபமாகி ரட்சித்துக் கொண்டும், கல்பாந்தத்திலே ருத்திர ரூபமாகிச் சங்கரித்துக் கொண்டும், திரமூர்த்தியாக விளங்கும் உனக்குத் தெண்டனிடுகிறேன்! ஓ அச்சுதனே! தேவ அசுர கந்த வசித்த கின்னர சாத்திய பன்னக யக்ஷ ராக்ஷச பைசாச மனுஷிய பட்க்ஷ ஸ்தாவர பிபீவிகாதிகளும், பிரித்வி அப்பு, தேயு வாயு ஆகாயங்களுக்கும் சப்த ஸ்பரிச ரச கந்தங்களும், மனோ புத்தி சித்த அகங்காரங்களும், காலமும் அதன் குணங்களும் இவற்றின் பரமார்த்தமான ஆன்மாவும் இவையெல்லாம் நீயே! வித்தை அவித்தை சத்தியம், அசத்தியம் பிரவிர்த்தி, நிவர்த்தி ரோதோக்த்த சர்வகர்மங்களும் நீயே! விஷ்ணுபகவானே! சமஸ்த கர்மபோகத்தை அனுபவிப்பவனும் சர்வகர்ம பயன்களும் நீயே! ஓ மகாப்பிரபுவே! உன்னிடமும் இதரரிடமும் சேஷ பூதங்களான சகல உலகங்களிலே நீ வியாபித்திருப்பதும், உபதான நிமித்தகாரண ரூபமான ஐசுவரியும் அனந்த ஞானசக்தியும் உனது கல்யாண குணங்களைக் குறிக்கின்றன. பரமயோகிகள் உன்னைத் தியானிக்கின்றனர். யாகசீலர் உன்னைக் குறித்து யாகஞ்செய்கின்றனர். நீயே பிதுர் ரூபமும் தேவ ரூபமும் கொண்டு, ஹவ்ய கவ்யங்களைப் புசிக்கிறாய்! ஓ அச்சுதா! மகத்தகங்காரம் முதலான சூட்கமங்களும் பிரித்வி முதலிய பூதங்களும் அவற்றினுள்ளே அதிசூட்சுமமான ஆத்ம தத்துவமாகிய இந்தச் சூட்சும பிரபஞ்சமெல்லாம் எங்கேயிருக்கிறதோ, எங்கே உண்டாகிறதோ, அது சொரூப குணங்களிலே பெருத்த உனது மகாரூபமாக இருக்கிறது! சூக்ஷ்மம் முதலான யாதொரு சிறப்புமில்லாமல், சிந்திப்பதற்கும் அரியதாய் யாதொரு ரூபம் உண்டோ அதுவே உன்னுடைய பரமாத்ம சொரூபம்! இத்தகைய புருஷோத்தமனான உனக்குத் தெண்டமிடுகிறேன். சர்வாத்மகனே! சகல பூதங்களிலும் சத்வாதி குணங்களைப் பற்றியதாய் யாதொரு பிரகிருத சக்தி இருக்கிறதோ, ஜீவ ஸ்வரூபமான அந்தச் சக்தியை நான் வணங்குகிறேன்; வாக்குக்கும் மனதுக்கும் எது எட்டாததோ, யாதொரு விசேஷத்தினாலும் எது விசேஷப்படுத்தக் கூடாததோ, ஞானிகளுடைய ஞானத்தால் எது நிரூபிக்கப்படக்கூடியதோ அத்தகைய முந்தாத்தும ஸ்வரூபமாக இருக்கிற உனது மேன்மையான சக்திக்குத் தெண்டனிடுகிறேன்!

எவனுக்கு வேறானது ஒன்று இல்லையோ, எவன் எல்லாவற்றுக்கும் வேறாக இருக்கிறானோ, அத்தகைய பகவானான ஸ்ரீவாசுதேவனுக்குத் தெண்டனிடுகிறேன்! கர்மாதீனமான நாம ரூபங்கள் இல்லாமல் விலக்ஷணனாய் இருப்பதாக மட்டும் எவன் காரணப்படுவானோ அத்தகைய மகாத்மாவுக்கு எனது நமஸ்காரம்! சங்கர்ஷணாதி வியூகரூபியானவனுக்கு நமஸ்காரம்! தேவதைகளும் எவனுடைய பராத்பரமான ரூபத்தைக் காணமுடியாமல், மச்சகூர்மாதி அவதார ரூபங்களையே அர்ச்சனை செய்வார்களோ, அந்தப் பரமாத்மாவுக்கு வந்தனம்! எவன் ருத்திராதி சகல பூதங்களுக்கும் அந்தர்மியாகி சுபாசுபங்களை கண்டு கொண்டிருப்பானோ, அந்தச் சர்வசாட்சியும் பரமேஸ்வரனுமான ஸ்ரீவிஷ்ணுதேவருக்குத் தெண்டனிடுகிறேன்! காணப்படும் இந்தச் சகமெல்லாம் எவனோடு பேதமின்றி இருக்கிறதோ அந்த விஷ்ணுவுக்கு வந்தனஞ் செய்கிறேன்! யாவற்றுக்கும் ஆதியான அந்த ஸ்ரீஹரி எனக்குப் பிரசன்னனாகக் கடவன் அட்சரம் என்ற பெயருடையவனாக இருக்கும். எவனிடம் பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் சேர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் இருக்கிறதோ, அந்தத் தியானசம்யனான அச்சுதன் என்னிடம் தோன்றக்கடவன்! சர்வ ஸ்வாமியாய் சர்வ சேஷயாய் இருக்கிற அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! எவனிடம் சகலமும் படைப்புக் காலத்தில் உண்டாகுமோ, எவன் சகல சரீரனாகவும், சகல ஆதாரமாகவும் இருக்கிறானோ, அந்த சுவாமிக்குப் பலமுறைகள் தெண்டனிடுகிறேன். யாவுமே எம்பெருமானது விபூதியாய், அவனைப் பற்றியே நிற்பதும் இயல்வதுமாய் சற்றேனும் சுதந்திரமில்லாமல் இருப்பதைப் பற்றியே எம்பெருமானை யாவும் என்றும் அவனன்றி வேறொன்றுமில்லை என்றும் அவனுள்ளேயே சொருகித் தன்னையும் அனுசந்தித்தபடியாகும். இதுவே விசிஷ்õத்துவைதம். ஸ்ரீஅனந்தன் எங்கும் ஆன்மாவாய், அகமும், புறமும் வியாபித்து ஞானானந்தமயனாய் நிறைந்திருப்பதால், நானும் அவனாகவே இருக்கிறேன். ஆகையால் என்னிடத்திலிருந்தே யாவும் உண்டாயிற்று. நானே யாவுமாக இருக்கிறேன். எப்போதும் இருக்கிற என்னிடத்திலே எல்லாம் இருக்கின்றன. நானே அவ்யயனாயும், நித்தியனாயும் வேறொரு ஆதாரமின்றி தன்னிலேயே தானாக இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறேன். நான் படைக்கும் முன்பு பிரமம் என்ற பெயரையுடையவனாக இருந்தேன். அப்படியே பிரளய காலத்திலும் எல்லாம் உள்ளே ஒடுங்கும்படியான பரமபுருஷனாக இருப்பேன்! என்று பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தான்.

—————

20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்

சர்வ காரணனும் சர்வாத்மகனுமான ஸ்ரீவிஷ்ணுதேவன் தன்னையே சரீரமாகக் கொண்டு
உள்ளும்புறமும் வியாபித்துப் பூரணமயமாக இருப்பதால் விஷ்ணுமயமாகத் தன்னையே பிரகலாதன் நினைத்து,
விஷ்ணுவல்லாத பொருள் எதையுமே காணாமையால், திரிகுணாத்மகமாய் அனாதிப் பிரகிருதி வாசனாமலினமாய்,
மற்றக் காலத்திலே தோன்றுகின்ற ஆன்ம ஸ்வரூபத்தை மறந்தான்.
தான் அவ்யயனும் நித்தியனுமான பரமாத்மாவுக்குச் சரீர பூதராய், தன்மயர்ணனை நினைத்தான்.
இவ்விதமான யோகாப்பியாசப் பிரபாவத்தால் கிரமக் கிரமமாகச் சகல சருமங்களிலிருந்தும் விடுபட்டவனாய்
அந்தியந்த பரிசுத்தனான பிரகலாதனின் அந்தக்கரணத்திலே ஞானமயனும் அச்சுதனுமான பகவான் ஸ்ரீவிஷ்ணுவே பிரகாசித்தருளினான்.

யோகப் பிரபாவத்தினாலேயே பிரகலாதன் விஷ்ணு மயமானதால், அந்தப் பாலகனின் உடல் கட்டியிருந்த
நாகபாச பந்தங்கள் அனைத்துமே கணத்தில் சின்னாபின்னமாகச் சிதறுண்டு விழுந்தன.
பிறகு சமுத்திரமானது கரைகளை மூழ்த்தியது. அப்போது, பிரகலாதன் தன்மீது போடப்பட்டிருந்த மலைகளையெல்லாம்
விலக்கித் தள்ளிக்கொண்டு, சமுத்திரத்தை விட்டு வெளியில் வந்து, ஆகாயங்கவிந்த உலகத்தைப் பார்த்தும் லவுகித் திருஷ்டியினால்,
தான் பிரகலாதன் என்றும் இரணியனின் மகன் என்றும் நாமசாதிபாதி விசேஷண சமேதனாக மறுபடியும் தன்னை நினைத்தான்.
புத்திசாலியான அந்த அசுர சிகரமணி ஏகாக்கிர சித்தமுடன், மனோவாக்குக் காயங்களைச் சுவாதீனமாக்கிக் கொண்டு,
வியாகுலத்தை விட்டு, அநாதிப் புரு÷ஷாத்தமனான அச்சுதனை மீண்டும் துதித்தருளினான்.

பரமார்த்த பிரயோஜனமானவனே! ஸ்தூல சூட்சுமரூபனே வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருப்பவனே!
பஞ்சேந்திரியாதிக் கலைகளையெல்லாம் கடந்தவனே! சகலேசுவரனே! நிரஞ்சனனே குணங்களைத் தோற்றுவித்தவனே!
குணங்களுக்கு ஆதாரமானவனே! பிராகிருத குணம் இல்லாதவனே! சகல சற்குணங்களையும் கொண்டவனே!
மூர்த்தமும் அமூர்த்தமும் ஆனவனே! மஹாமூர்த்தியான விசுவரூபமும், சூத்ம மூர்த்தியான வியூக ரூபமும்,
வெளிப்படையாகத் தோன்றும் விபவ ரூபமும் அப்படி தோன்றாத, பரஸ்வரூபம் உடையவனே!
சத்துரு சங்கார காலங்களில் குரூரமாகவும் சுபாவத்தில் சாந்தமாகவும் விளங்கும் உருவமுடையவனே!
ஞான மயனாயும் அஞ்ஞான மயனாயும் இருப்பவனே! நன்மையாய் இருப்பவனே! உண்மையும் இன்மையும் கற்பிப்பவனே!
நித்திய அநித்திய பிரபஞ்ச ஆத்மகனே! பிரபஞ்சங்களுக்கம் மேற்பட்டவனே! நிருமலர் ஆஸ்ரயிக்கப்பெற்றவனே!
அச்சுதனே! உனக்குத் தண்டனிடுகிறேன். ஏகா! அநேகா வாசுதேவா! ஆதிகாரண! உனக்கு வணக்கம்!
எவன் ஸ்தூல ரூபத்தால் தோன்றுபவனும், எவன் சூட்சும ரூபத்தால் தோன்றாதவனுமாக இருக்கிறானோ,
எவன் சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, யாவற்றிலும் தானே விலக்ஷணமாக இருக்கிறானோ,
இந்த உலகம் யாவும் விஷம சிருஷ்டி காரணமாகாத எவனிடமிருந்து உண்டாயிற்றே அந்தப் புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்
என்று பலவாய்த் தோத்திரஞ்செய்த பிரகலாதனிடம்

ஸ்ரீஹரி பகவான் பிரசன்னனாய்ப் பீதாம்பராதி திவ்ய லக்ஷணங்களோடு அவனுக்குப் பிரத்யட்சமாய் சேவை சாதித்தான்.
அப்போது அந்தப் பரம பாகவதனான பிரகலாதன் பயபக்தியுடன் எம்பெருமானைத் சேவித்து மகிழ்ச்சியினால்
நாத்தடுமாற ஸ்ரீவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! என்று பலமுறைகள் சொல்லிப் பிரார்த்தித்தான்.

சுவாமீ! சரணாகதி செய்தோரின் துக்கத்தைப் போக்கடிப்பவரே! ஸ்ரீகேசவா! அடியேனிடத்தில் பிரசன்னமாகி
இந்தப் படியே எக்காலமும் பிரத்யக்ஷமாய்ச் சேவை தந்து ரட்சித்து அருள்செய்ய வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டினான்.

அப்போது விஷ்ணுபகவான் அப்பாலகனைப் பார்த்து பிரகலாதா!
நீ இதர பயன்களை இச்சிக்காமல் என்னிடத்திலேயே பரமமான ஏகாந்த பக்தியைச் செய்தபடியால், உனக்குப் பிரசன்னமானேன்.
உனக்கு இஷ்டமான வரங்களை வேண்டிக்கொள் என்று அருளிச்செய்தார்.

சுவாமி! அடியேன் தேவ, திரியக், மனுஷ்யாதி ஜன்மங்களிலே எந்த ஜன்மத்தை எடுத்தாலும்
அந்த ஜன்மங்களில் எல்லாம் உன்னிடம் இடையறாத பக்தியுடையவனாக இருக்க வேண்டும்.
மேலும் விவேகமில்லாத ஜனங்களுக்கு நல்ல சந்தன வனிதாதி போக்கிய வஸ்துக்களில் எத்தகைய ஆசையுண்டாகுமோ
அத்தகைய பிரீதிச் சிறப்பானது, உன்னை ஸ்மரிக்கின்ற அடியேனுடைய மனத்தினின்றும் நீங்காமல் இருக்க வேண்டும்!
என்று பிரகலாதன் வேண்டிக் கொள்ளவே

எம்பெருமான் அந்தப் பக்த சிகாமணியைக் கடாட்சித்து, பிரகலாதா! முன்னமே என்னிடம் பிரியாத பக்தி உனக்கு உண்டாயிருக்கிறது.
இன்னமும் அப்படியே அது அபிவிருத்தியாகும். அதிருக்கட்டும் இப்பொழுது உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்று
அனுக்கிரகம் செய்ய, பிரகலாதாழ்வான் பிரார்த்திக்கலானான்.

எம்பெருமானே! உன்னைத் துதிக்கும் அடியேனிடத்தில் மாச்சரியம் பாராட்டியதால், அசஹ்யமான அபசாரம் பண்ணினவரானாலும்
இரணியன் என்னுடைய தகப்பனார் என்பதால் அவரைப் பாவமில்லாதவராகும்படி அனுக்கிரகஞ்செய்ய வேண்டும்!
மேலும் ஆயுதங்களால் அடிக்க வைத்தும், நெருப்பிலே போட்டும், சர்ப்பங்களைக் கொண்டு கடிக்கச் செய்தும்
போஜனத்திலே விஷத்தைக் கலந்தும், நாக சர்ப்பங்களைக் கட்டி சமுத்திரத்திலே போடுவித்தும்,
பர்வதங்களால் துவைத்தும் இவ்வாறு மற்றும் பலவிதங்களான தொல்லைகளைச் செய்து உன் பக்தனான அடியேனை
அழிக்கப் பார்த்த என் தகப்பனுக்குச் சம்பவித்திருக்கின்ற அளவற்ற மகாபாவங்கள் உனது கடாட்சத்தினாலேயே நாசமாக வேண்டும்.
இதுதான் அடியேன் வேண்டும் வரமாகும்! என்றான் பிரகலாதன்.

உடனே மதுசூதனன் புன்முறுவலுடன் பிரகலாதா! என் அனுக்கிரகத்தால் நீ கேட்டவாறே ஆகும்.
சந்தேகமில்லை இன்னமும் உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்றான்.

புரு÷ஷாத்தமனே, உனது திருவடித் தாமரைகளிலே பிரியாத பக்தி உண்டாகும்படி அனுக்கிரகித்தால், அடியேன் கிருதார்த்தனானேன்.
சகல ஜகத்காரண பூதனான உன்னிடத்தில் எவனுக்கு அசஞ்சலமான பக்திச் சிறப்புண்டாகுமோ அவனுக்கு
சர்வ உத்தமமான மோட்சமும் உண்டல்லவா? அப்படியிருக்க, அவனுக்குத் தர்மார்த்த காமங்களால் ஆகவேண்டுவது என்ன? என்றான் பிரகலாதன்.

குழந்தாய்! உன் இதயம் என்னிடம் பக்தியுடன் எப்படிச் சஞ்சலமற்று இருக்கிறதோ, அப்படியே எனது அனுக்கிரகத்தால்
பரமமான மோக்ஷõனந்தத்தையும் பெறுவாயாக! என்று ஸ்ரீபகவான் அருளிச் செய்து
பிரகலாதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, அந்தர்த்தானமானார்.

பிரகலாதன் மீண்டும் நகரத்துக்கு வந்து தன் தந்தையை வணங்கி நின்றான்.
இரணியன் தன் பாலகனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் ததும்ப,
அடா குழந்தாய்! நீ பிழைத்து வந்தாயா? என்று அன்போடும் ஆசையோடும் கொஞ்சினான்.

பரமதார்மீகனான பிரகலாதனும், தன் தகப்பனுக்கும் ஆசாரியாருக்கும் பணிவிடை செய்துகொண்டு சுகமாக இருந்தான்.
சிறிது காலத்திற்குப் பிறகு, இரணியன் முன்பு நேர்ந்த பிரம்மசாபவசத்தால் பகவானிடம் துவேஷம் முற்றி,
மறுபடியும் தன் மகனான பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, ஸ்ரீஹரிபகவான், அந்த அசுரனைச் சங்கரிக்க தீர்மானித்தார்.

தேவராலோ, மனிதராலோ, மிருகங்களாலோ தனக்கு மரணம் விளையக்கூடாது என்று இரண்யன் முன்பு
வரம் பெற்றிருந்தானாகையால், மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் நரசிம்ம உருவமெடுத்த
இரண்யனைக் கொல்ல வேண்டுமென்று விஷ்ணு கருதினார். இரண்யன் கோபத்துடன் தன் மகன் பிரகலாதனை நோக்கி,
உன் ஆண்டவன் இந்தத் தூணிலும் இருப்பானோ! என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாகச் சிரித்து
அந்தத் தூணை எட்டி உதைத்தான். உடனே ஹரிபகவான் நரசிம்மரூபியாக அவ்வரக்கன் சுட்டிக் காட்டிய தூணிலிருந்து தோன்றி
அவ்வசுர வேந்தனைச் சங்கரித்து அருளினார். பிறகு பரம பாகவதனான பிரகலாதன், தைத்ய ராஜ்யத்தில் முடிசூட்டிக்கொண்டு,
அந்த ராஜ்ய போகத்தினால் பிராரப்த கர்மங்களைக் கழித்து புத்திர பவுத்திராதிகளைப் பெற்று
பிராரப்த கர்ம அனுபவமாகிற அதிகாரங்கழிந்தவுடன், இரண்டையும் விட்டு மோக்ஷத்தையடைந்தான்.

மைத்ரேயரே! பரமபக்தனான பிரகலாதனின் மகிமையை வணக்கமாகச் சொன்னேன்.
எவன் மகாத்மாவான பிரகலாதனின் சரிதத்தை ஒருமித்த மனத்துடன் கேட்பானோ, அவனுக்கு அப்போதே
சகல பாவங்களும் தீர்ந்து போகும். பிரகலாதனின் சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும்,
அகோராத்திர கிருதங்களான பாவங்கள் நீங்கப்பெறுவர். இதில் ஐயமில்லை. எவன் இந்தச் சரிதத்தைப் படிக்கிறானோ,
அவன் பவுர்ணமியிலும், துவாதசியிலும், அஷ்டமியிலும் புனிதமான தோத்திரத்திலே சூரிய கிரகண புண்ணிய காலத்தில்
சுவர்ண சிருங்கம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட உபயதோமுகியான பசுக்களை சற்பாத்திரத்திலே
பூரண மயமான தக்ஷணைகளோடு தானஞ்செய்த பயனையடைவான். உபயதோமுகி என்பது இருபுறத்தும் முகத்தையுடையது.
கன்றையீன்று கொண்டிருக்கும்போதே, பசுவைத் தானம் செய்வது. எவன் ஒருவன் பக்தியுடன்
இந்தப் பிரகலாதாழ்வானின் திருக்கதையைக் கேட்கிறானோ, அவனை ஸ்ரீமந்நாராயணன் பிரகலாதனைக் காத்தது போலவே,
சகல ஆபத்தையும் விலக்கிச் சர்வகாலமும் ரட்சித்து அருள்வான்.

—————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—இரண்டாம் பாகம் —

February 28, 2021

9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்
10. பிருகு, மரீசி முதலானோர் வமிசம்
11. துருவன் கதை
12. சிறுவன் துருவனின் பெருந்தவம்!
13. பிருது சக்கரவர்த்தியின் சரிதம்
14. பிரசேதசர்களின் இலட்சியம்

————-

9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்
பராசரர் மேலும் தொடர்ந்து கூறலானார்;
மைத்திரேயரே!
நீர் அறிந்து கொள்ள விரும்பிய பிராட்டியாரின் திருவவதார சரித்திரத்தை,
நான் முன்பு மரீசி மாமுனிவரிடம் கேட்டறிந்தபடிக் கூறுகிறேன், கேளும்.
ருத்திரருடைய அம்சமான மிகவுங்கோபமுள்ள துர்வாச மஹாமுனிவர், பூமண்டலமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு சமயம், மனிதர்கள் எளிதில் அடைய முடியாத வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது,
அங்கே ஒரு வித்தியாதர மங்கை தென்பட்டாள்.
அவளது கையில் பரிமள மிகுந்த ஒரு மலர் மாலை இருப்பதைத் துர்வாச முனிவர் கண்டார்.
அவர் அந்த மங்கையை நோக்கி, பெண்ணே! இந்தப் பரிமளம் மிகுந்த மலர் மாலையை என்னிடம் கொடுப்பாயாக என்று யாசித்தார்.
அந்த மாலையை வித்தியாதர மங்கை அவரிடம் பக்தியோடு கொடுத்தாள்.

அந்த மலர் மாலையை துர்வாசர் தமது தலையிலே சுற்றிக்கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வழியிலே தேவேந்திரன் தன் வாகனமான ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்தான்,
அவனை துர்வாசர் கண்டதும் தமது சிரசில் சுற்றியிருந்த மலர் மாலையை அவிழ்த்து
யானையின் மீது அமர்ந்திருக்கும் இந்திரன் மீது விட்டெறிந்தார்.
இந்திரன் அந்த மலர் மாலையை பிடித்து, ஐராவத யானையின் மத்தகங்கள் மீது போட்டான்.
அதனால் அந்த யானை மதங்கொண்டு, அந்தப் பூமாலையை தன் துதிக்கையால் எடுத்து, முகந்து பார்த்துத் தரையில் எறிந்தது.

அதைக் கண்டதும் துர்வாசருக்கு மிகவும் கோபம் பொங்கியது. அவர் இந்திரனை நோக்கி,
அடா, வாசவா! ஸ்ரீ ஐசுவரிய கர்வத்தால் ஸ்ரீமகாலக்ஷ்மியின் வாசஸ்தலமான மலர்மாலையை அங்கீகரிக்காமற் போனாய்.
சிரசில் நான் சூடிய மாலையை நீ மதிக்காமல் தரையில் எறிந்துவிட்டாய்.
ஆகையால் உன்னுடைய ஐசுவரியங்கள் சீக்கிரம் நாசம் அடையக்கடவது!
என்னை அவமதித்த காரணத்தால் உன் உலகம் மகாலட்சுமியின் வாசம் ஒழிந்து துர்த்தசை அடையக் கடவது என்று சபித்தார்.

பிறகு இந்திரன் வெகு பரபரப்புடன் தன் யானையிலிருந்து இறங்கி, துர்வாச முனிவரின் பாதங்களில் வீழ்ந்து,
தன்னை மன்னிக்கும்படி கெஞ்சினான். அப்படியவன் வேண்டிக்கொண்டும், துர்வாசரின் கோபம் அடங்கவில்லை.

தேவேந்திரா! தயையுடைய இதயமற்றவன் நான்! என்னிடம் மன்னிக்கும் சுபாவம் இல்லை.
உனக்கு உட்பட்டுப் பின் பாட்டு பாடும் முனிவர்கள் வேறே இருக்கிறார்கள்! நான் துர்வாசன்! மற்ற முனிவர்களைவிட மாறுபட்டவன்!
கவுதமர் முதலியவர்கள், நீ முன்பு செய்த துரோகத்திற்காக உன்னைச் சபித்துப் பிறகு
உன்னுடைய விநயத்தின் காரணமாக உனக்கு தயவுசெய்தார்கள். அதுபோலவே என்னையும் நினைத்து விட்டாய்!
நான் அப்படிப்பட்டவனல்ல வசிஷ்டர் முதலிய முனிவர்கள் உன்னைச் சிறப்பாகத் துதிப்பதாலேயே உனக்கு இவ்வளவு இறுமாப்பு!
அதனால் தான் என்னை நீ அவமதித்தாய். குற்றஞ்செய்தால் தண்டிப்பது தான், நீதியே ஒழிய மன்னிப்பது என் வழக்கமல்ல!
நீ ஏன் பயந்தவனை போலக் கபட நாடகம் ஆடுகிறாய்? வந்த வழியே செல்! என்று சொல்லி விட்டுத் துர்வாச முனிவர் சென்று விட்டார்.

இந்திரனும் தன் யானையின் மீது ஏறித் தேவலோகம் சென்று விட்டான்.
கேளும் மைத்ரேயரே! அன்று முதல் மூன்று உலகங்களும் லட்சுமி கடாக்ஷமற்று, தாவரங்களுங்கூட க்ஷீணித்தன.
அன்று முதல் யாகாதி கர்மங்களும் நன்றாக நடைபெறவில்லை. தவமுனிவர்கள் நன்றாகத் தவஞ்செய்யவில்லை.
தான தருமங்களில் மக்கள் கவனஞ் செலுத்தவில்லை. மக்களிடையே சத்துவகுணம் நலிந்து லோபம் மிகுந்தது.
அற்ப விஷயத்திலும் பேராசை மிகுந்தது. அது ஏனென்றால், சத்துவகுணம் எங்கே இருக்குமோ,
அங்கே தான் திருமகள் வாசம் செய்வாள்.
சத்வகுணமும் லட்சுமி கடாட்சத்தையே அனுசரித்திருக்கும் லட்சுமி கடாட்ச மற்றவர்களிடம் சத்துவ குணமும் இராது
இந்தப்படியே திரிலோகங்களும் லட்சுமி கடாட்சம் குறைந்தவனாய் மிகவும் துர்தசையடைந்ததால்,
அரக்கர் கூட்டத்தினர் தேவர்களுக்கு தீங்கிழைக்கலானார்கள்.

அதனால் லோபாதி துர்க்குணங்களுடையவர்களாகவும், லட்சுமி கடாட்சமில்லாதவர்களாகவும்
பலமும் சத்துவமும் இல்லாமலும் இருந்த அசுரர்கள் துள்ளியெழுந்து தேவர்களுடன் போர் செய்யத் துவங்கினர்.
தேவர்கள் தோற்று, பிருமதேவனைச் சரணடைந்தார்கள்.
தேவேந்திரன் தனக்கு அசுரர்களால் ஏற்பட்டுள்ள துர்த்தசையைக் கூறினான். அதைக்கேட்டதும் பிருமதேவன்,
தேவர்களே! பராபரங்கள் என்று சொல்லப்படும் உயர்ந்தவைகளுக்கும், தாழ்ந்தனவற்றிற்கும் ஈசுவரனும்
அசுரரையெல்லாம் நாசஞ்செய்ய வல்லவனும் உற்பத்தி, ஸ்திதி, லயங்களுக்குக் காரணமானவனும்
தனக்கு ஒரு காரணமின்றிதானே சுதந்தரமாக இருப்பவனும், பிரஜாபதிகளுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவனும்
ஒருவராலும் வெல்ல முடியாதவனும், முடிவற்றவனும் பிரகிருதி புருஷாக்களிடம் உட்புகுந்து காரியங்களைச் செய்பவனும்,
தனது திருவடிகளையடைந்தவரின் துன்பங்களை நீக்க வல்லவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவை சரணமடையுங்கள்.
அவர் உங்களுக்கு ஷேமத்தைச் செய்தருளுவார்! என்று சொல்லி,

அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு திருப்பாற்கடலின் வடகரையிற்சென்று ஸ்ரீயப்பதியை உத்தேசித்துத்
தேவர்களுடன் துதி செய்யலானார். சர்வமயனும், சர்வ ஈசனும், முடிவற்றவனும் பிறப்பில்லாதவனும்;
சுருங்கல் முதலியவையற்றவனும் உலக ஆதாரனும் தனக்கு வேறு ஆதாரமற்றவனும்; அப்பிரமேயனும்;
பேதிக்க முடியாதவனும் சூட்சுமத்திலும் அதிசூட்சுமமானவனும் ஸ்தூலங்களில் அதிஸ்தூலமானவனும் ஆகிய
ஸ்ரீமந் நாராயணனுக்குத் தண்டனிடுகிறேன்!
அடியேன் முதலான சகல பிரபஞ்சமும் எவனிடமிருந்து தோன்றியதோ; எவனிடம் இருக்கின்றதோ;
எவனிடம் லயமாகுமோ; சர்வ பூதங்களும் எவனுடைய சரீரமோ எந்தத் தேவன் மேலானவர்களுக்கும் மேலானவனோ;
எவன் இருபத்து நான்கு தத்துவங்களுக்கும் பரனான புருஷனுக்கும் மேற்பட்டவன் என்று பரமான்மா என்னும்
மோட்சத்தை அபேட்சிக்கிற யோகிகளால் மோட்சத்துக்காக நினைக்கப்படுகிறானோ எவனிடத்தில்
பிராகிருதமான சத்துவாதி குணங்களில்லையோ, தூய்மையான சகல வஸ்துக்களுக்கும் மிகவும் தூயவனான
அந்த ஆதிபுருஷன் அடியவரான எங்களுக்குப் பிரத்தியட்சமாக வேண்டும்.
கலை; காஷ்டை; நிமிஷம் முதலிய கால சூத்திரத்திற்குக் கோசரமான இடத்தில் பிராட்டி,
திவ்விய மங்கள விக்கிர சமபரி ஜனம் முதலான விபூதிகள் இல்லையோ அப்படிப்பட்ட ஸ்ரீஹரி, எங்களுக்குப் பிரசன்னமாவானாக!

எவன் பரமேசுவரனாயும் அஜனுமாக இருந்தும் எல்லோருக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் முக்தியடைந்த ஆன்மாவாக
உபசார வழக்காகச் சொல்லப்படுகிறானோ, அந்த ஸ்ரீமந்நாராயணனானவன் எங்களுக்குப் பிரசன்னமாவானாக!
எவன் காரணமாகவும், காரியமாகவும், காரணத்திற்குக் காரியமாகவும், காரியத்திற்குக் காரியமாகவும் இருக்கிறானோ,
அவன் பிரசன்னமாவானாக! பிரகிருதியின் காரியமான மகத்தின் காரியமான அகங்காரம் எது உண்டோ,
அதன் காரியமான தன் மாத்திரைகளும் உண்டல்லாவா? அவற்றின் காரியமான பஞ்ச மகாபூதங்கள் உண்டல்லவா?
அவற்றின் காரியமான பிரம்மாண்டத்தின் காரியமாக இருக்கிற பிரம்மனும், அவனிடத்தில் உண்டான தட்சாதிகளும் ஆகிய
இந்த லோகப் பிரவாகம் எல்லாம் எவன் தானேயாக இருக்கிறானோ, அத்தகைய எம்பெருமானை நாங்கள் சரணடைகிறோம்!

எவன் சப்தம் முதலிய சகல போக்கியங்களையும் அனுபவிப்பவனாகவும், சப்தம் முதலிய அனுபவப் பொருளாகவும்,
சகலப் பிரபஞ்சங்களுக்கும் சிருஷ்டி கர்த்தாவாகவும், சிருஷ்டி காரியமாகவும், சர்வ சரீரகனாவும் இருக்கிறானோ
அப்படிப்பட்ட கர்த்தனை நாங்கள் வணங்குகிறோம்! விசுத்த ஞானமயமும் அஜமும் அட்சரமும் அவ்யயமும் அவ்யக்தமுமாய்த்
தூலமும் சூட்சுமமுமல்லாமல், சகல விசேஷண வர்ச்சினமாக இருக்கிற அந்த பரமாத்மாவான விஷ்ணு சொரூபத்தை வணங்குகிறோம்!
பரப்பிரும்ம சொரூபனான அந்தப் புருஷோத்தமனுடைய பதினாயிரத்தில் பதினாயிரம் அம்சமான ஏகதேசமான அம்சத்தில்,
சகல பிரபஞ்ச சக்தியும் இருக்கிறதோ, அந்த அவ்யனுக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்?

எப்போதும் தியானத்தில் இருக்கிற யோகிகள் தங்களுடைய பாவ புண்ணிய ரூபமான கர்மங்கள் நசித்தவுடன்
எந்தச் சொரூபத்தைப் பிரணவப் பொருளாகக் காண்கின்றனரோ,
எந்த சொரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் நானும் சங்கரனும் அறியமாட்டாமோ,
தனக்கு முன்பு யாரும் இன்றி தானே யாவற்றுக்கும் முன்னாக இருக்கிற எந்தத் தேவனுடைய சக்திகள்
பிரம்ம விஷ்ணு சிவாத்துமகங்களாகி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்யுமோ அந்த
ஸ்ரீமகாவிஷ்ணுவினுடைய சொரூபத்திற்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்.

சர்வேசுவரா! சர்வபூத சொரூபா! அச்சுதா! ஸ்ரீவிஷ்ணுபகவானே! உனது திருவடித்தாமரையை நம்பியிருக்கும்
அடியோர்களுடைய கண்களுக்கு எதிரே பிரசன்னமாவீராக! என்று சதுர்முகப் பிருமதேவன் துதித்தார்
மற்ற தேவர்களும் எம்பெருமானைத் தெண்டனிட்டு, தேவதேவ! எங்கள் முன் பிரசன்னமாகிச் சேவை சாதித்தருள வேண்டும்!
எம்பெருமானே ! இரண்யகர்ப்பனும் ருத்திரனும் உன்னுடைய பரமசொரூபத்தை மெய்யாக அறியமாட்டார்கள்.
ஜகத்நிவாசனாய் எங்கும் நிறைந்தவனான உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! என்று துதி செய்தார்கள்.
அதைக்கண்ட பிருகஸ்பதி முதலான தேவரிஷிகளும் துதி செய்வாராயினர்.

ஆதியாயும், யக்ஞ புருஷனாயும், சகல யக்கியங்களால் ஆராதிக்கத் தக்கவனாயும், பூர்விகர்களுக்குப் பூர்விகனாவும்,
ஜகத்தை சிருஷ்டிக்கிற பரமேஷ்டிக்குத் தந்தையாயும், இன்னபடி என்று
சிறப்பிக்கப்படக்கூடாதவனாயும் இருக்கிற ஸ்ரீயப்பதிக்குத் தெண்டன் இடுகிறோம்.
ஆறுகுண சம்பன்னனே! முற்பட்டவைகளுக்கும் பிற்பட்டவைகளுக்கும் அதிபதியானவனே! பாக்கிய சொரூபியே!
அழிவற்றவனே! உன்னுடைய திருவடித் தாமரைகளைச் சரணமாகப் பற்றிய அடியேங்கள்மீது கிருபை கொண்டு சேவை சாதிப்பாயாக!
எம்முன் இந்தப் பிரமதேவனும், ஏகாதச ருத்திரர்களுடன் இந்த மகாதேவனும், துவாதச ஆதித்தர்களுடன்
இந்தப் பூஷாவும், திரேதாக்கினிகளோடு இந்த அக்கினியும் அசுவினி தேவதைகளும் வசுக்களும் மருத்துகளும்,
விசுவ தேவதைகளும், சாத்தியரும்; மற்றுமுள்ள தேவகணங்களுடன் இந்தத் தேவேந்திரனும்
அசுர சேனைகளால் ஜெயிக்கப்பட்டு உன் திருவடித் தாமரைகளையே தஞ்சமாகப் பற்றித் தெண்டன் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைக் கண்ணோக்கம் காட்டி அருள்செய்ய வேண்டும் பரமாத்மா! என்று தேவரிஷிகள் துதித்தார்கள்.

அப்போது எம்பெருமானான ஸ்ரீமகாவிஷ்ணு சக்கராதி லட்சணங்களுடன் அத்தேவ கணங்களுக்குப்
பிரத்தியட்சமாகி சேவை தந்து அருளினார். இவ்விதம் திருவாழித் திருச்சங்குடன் திவ்விய மங்கள விக்கிரகாதிகளையுடையவராய்,
தேஜோராவியாய்ச் சேவை சாதித்த எம்பெருமானைச் சதுர்முகப் பிருமாவும் மற்ற தேவர்களும் சேவித்து
ஆனந்தத்தால் கண்கள் மலர்ந்து, அதிசயத்தால் அடிக்கடி கீழே விழுந்து வணங்கி எம்பிரானைத் துதிக்கலானார்கள்.

சுவாமி! அநந்தமான தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமின்றி சமமான அனுக்கிரகம் செய்பவன் நீ!
பிரமனும் ருத்திரமூர்த்தியும் இந்திரனும் அக்கினியும் வாயுவும் வருணனும் ஆதித்தனும் யமனும் வசுக்களும் மருத்துக்களும்
விசுவதேவர்களும் மற்றும் இங்கு வந்திருக்கிற சகல தேவர்களும் நீயே! ஏனெனில் நீயே அனைவரிடமும் இருந்து நடத்துகிறாய்,
ஆத்மாவுக்குக் கரணங்கள் போல எல்லோரும் உனக்குச் சேஷபூதராக இருக்கிறார்கள்.
அன்றியும் உன்னுடைய ஆராதனையான யாகங்களும் சகலவேத மூலமான பிரணவமும் நீ!
இவ்விதமான சகல ஆராதனைகளையும் ஏற்று மனமிரங்கிக் காப்பவனும் நீ! எல்லாவற்றையும் அறிபவனும் நீயே!
எல்லாவற்றாலும் அறியப்படுவதும் நீயே! உன்னிடமே அகிலப்பிரபஞ்சமும் நிற்கின்றது.
அடியேங்கள் அசுரர்களால் ஜயிக்கப்பட்டு மிகவும் விசனமடைந்து, சர்வலோக கரணியனான உன்னைச் சரணமடைந்தோம்.
சகல பாபநாசகரனான உன்னைச் சரணமடையுமளவு தான் புருஷனுக்கு உபத்திரவமும் விஷயா பிலாஷையும்
மோகமும் துக்கமும் உண்டாகியிருக்கும். தயா சமுத்திரனே! சரணாககரான எங்கள் முன் பிரசன்னமாக வேண்டும்,
என்று கைகூப்பித் தொழுதார்கள். அப்போது சர்வக்ஞனான எம்பெருமான் முகம் மலர்ந்து அனுக்கிரகம் புரிந்து அருள்புரியலானார்.

தேவதைகளே! எனது தேஜஸ் சிறப்பினால் உங்களுடைய பல, சத்துவ, தேஜோ தைரியங்களை
அபிவிருத்தியடையச் செய்கிறேன். அசுர தைத்தியர்களோடு நீங்கள் ஓர் உடன்பாடு செய்து கொண்டு
திருப்பாற்கடலில் சகல அவுஷதிகளையும் போட்டு, மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கடையும் கயிறாகவும் செய்து கொண்டு
அமிர்தத்தை அடையவேண்டிக் கடையுங்கள்.
அதனால் உண்டாகும் பயனை நாம் இரு தரத்தாரும் சரியாகப் பங்கிட்டுக் கொள்வோமென்று அந்த தைத்திரியர்களிடம் பேசி,
அவர்களை உங்கள் வசம் செய்து கொள்ளுங்கள். இவ்விதமாக, நீங்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும்போது
உண்டாகும் அமிர்தத்தை நீங்கள் பானஞ்செய்து நீங்களே மகா பலசாலிகளாகி அமரர்களாவீர்கள்!
நான் அந்த அமிர்தம் அசுரர்களுக்குக் கிடைக்காதவாறு செய்கிறேன்.
இந்தச் செயலில் உங்களுக்கு வேண்டிய சகாயங்களைச் செய்கிறேன் என்று மகாவிஷ்ணு கூறினார்.

அதைக் கேட்டு தேவர்கள் மகிழ்ந்து, சுவாமியின் சன்னதியிலிருந்து விடைபெற்றுச் சென்று,
தங்களுடைய விரோதிகளான அசுரர்களோடு சாம உபாயத்தினால் சமாதானம் செய்து கொண்டு,
அமிர்தம் கடைவதில் ஒன்றுபட்டார்கள். இருதரப்பினரும் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைவதில் முனைந்தார்கள்.
சகல மூலிகைகளையும் கொண்டு வந்து, சரத்கால மேகத்தைப் போல மிகவும் வெண்மையாக இருக்கும்.
திருப்பாற்கடலில் போட்டு, மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு,
அதிக உற்சாகத்தோடு கடையத் துவங்கினார்கள். அப்பொழுது எம்பெருமானான விஷ்ணு ஒரு தந்திரம் செய்து,
வாசுகி சர்ப்பத்தின் வாலைத் தேவர்கள் பிடிக்கும்படியும் அசுரர்கள் அதன் தலையைப் பிடிக்கும்படியும் செய்தார்.
அதன் விளைவாக வலுவும் பராக்கிரமங்களும் மிக்க அசுரர்கள் விஷாக்கினிச் சுவாலையுடன் கூடிய
வாசுகி என்ற பாம்பின் பெருமூச்சுக் காற்றினால் தேஜசு குறைந்து, பலவீனர்களானார்கள்.
அந்தக் கொடிய பாம்பின் சுவாச வேகத்தினால் மேகங்கள் அடித்துத் தள்ளப்பட்டு அதன் வால் பக்கமாகச் சேர்ந்த
அம்மேகங்கள் பெருமழை பொழியவே, தேவர்கள் அம்மழைத் திவலைகளால் களைப்பு நீங்கிச் சுகமடைந்தார்கள்.

அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலின் மையத்தில் மகா கூர்மரூபந்தரித்து, (ஆமை உருவம் தரித்து)
மந்திர மலைக்கு ஆதாரமாக இருந்து அதைச் சுழலச் செய்யச் சாதகமாக இருந்தார்.
மேலும் வேறொரு திருமேனியுடன் அசுரர்களின் பக்கத்திலே நின்று சங்கு, சக்கராதி திவ்விய ஆயுதங்களைத் தரித்து
வாசுகியின் வாலையும், தலையையும் பிடித்து இடமும் வலமுமாக இழுத்துக் கடைந்தார்.
அதுமட்டுமல்ல, அவர் மிகவும் பெரியதான ஒரு திவ்விய உருவமெடுத்து, அந்த மந்த மலையின், மேற்புறத்தை ஆக்கிரமித்து,
அதைப் பலப்படுத்தியருளினார். பின்னர் விஷ்ணுபகவான், தேவரும், அசுரரும் அறியமாட்டாத அதிரகசியமான
வேறொரு சொரூபத்தால் தேவர்களுக்கும் தைரியவுற்சாகங்களை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார்.
இவ்விதமாக ஸ்ரீயப்பதியின் சகாயத்தைக் கொண்டு, தேவர்களும் அசுரர்களும் கடைந்த திருப்பாற்கடலிலிருந்து
சகல தேவர்களாலும் பூஜிக்கத்தக்க காமதேனு உற்பத்தியாயிற்று. அதை கண்ட அசுரரும் தேவரும் மகிழ்ந்தனர்.

பின்னர் சித்தர்களும் மோகத்தால் கலக்கமுற்று அதிசயிக்க சகலலோக மோகினியான வாருணிதேவி,
மோனமயக்கத்தால் சுழலும் கண்களுடன் தோன்றினாள். மீண்டும் மந்திரமலையால் கடையப்பட்ட
திருப்பாற்கடலிலிருந்து அபூர்வமான திவ்வியப் பரிமள சுகந்தத்துடன் பாரிஜாத விருட்சம் தோன்றியது.
அதன்பிறகு ஜகன்மோகன ரூபலாவண்யமுள்ள அற்புதமான அப்சரஸ்திரீகளும்,
குளிர்ச்சியடைய கிரணங்களைக் கொண்ட சந்திரனும் தோன்றினர். அந்தச் சந்திரனை ருத்திரமூர்த்தி எடுத்துக்கொண்டார்.
பிறகு பாற்கடலில் உற்பவமான ஆலகால விஷத்தைச் சிவபெருமானும் நாகேந்திரர்களும் கிரகித்துக் கொண்டார்கள்.
அதன் பிறகு, பகவதம்சமான தன்வந்திரி என்ற தேவன் வெண்மையான ஆடைகளையும், மலர் மாலைகளையும் அணிந்து,
அமிர்தம் நிறைந்த கமண்டலத்தைக் கையிலே ஏந்திய வண்ணம், அந்தத் திருப்பாற்கடலிலிருந்து உதயமானான்.
அமிர்த கலசத்தோடு தோன்றிய அந்தத் தேவனைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் மனக்களைப்பு நீங்கி மகிழ்ந்தார்கள்.

பிறகு அதியற்புதமாகவும், அபூர்வமாகவும், திவ்வியப் பிரகாசச் சிறப்போடும் மலர்ந்த செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்டும்,
தாமரை மலர்களைத் திருக்கரங்களில் தரித்து கொண்டும், மகாலட்சுமி வடிவமான ஜகன்மாதாவான பெரிய பிராட்டியார்
திருவவதாரஞ் செய்வதைக் கண்டு, முனிவர்களெல்லாம் மகிழ்ந்து ஸ்ரீசூக்தங்களைக் கொண்டு துதித்தார்கள்.
அப்போது பிராட்டியின் சன்னதியில் விசுவாவசு முதலிய கந்தருவர்கள் கீதங்களைப் பாடினார்கள்.
கிருதாகி முதலிய அப்சரசுகள் நடனமாடினார்கள். கங்கை முதலிய மகாநதிகள் தங்கள் தூய நன்னீரைக் கொண்டு,
பிராட்டியின் திருமஞ்சனத்திற்குச் சேவை செய்தன. திக்கு கஜங்கள் நவரத்தின கசிதமான பொற்கலசங்களில்
அந்த நத நீரை எடுத்து, பிராட்டிக்குத் திருமாலையொன்றைத் தாயாருக்குச் சமர்ப்பித்து விசுவகர்மன் ர
த்தினாபரணங்களைத் தாயாரின் திருமேனியிலே சாற்றினான். இவ்விதமாக அவரவர் செய்த கைங்கரியங்களைத்
திருவுள்ளம் பற்றிப் பிராட்டியார் திருமஞ்சனம் செய்தருளி, திருவாபரணம் திருமாலை முதலியவற்றைச் சாற்றிக்கொண்டு,
மூவரும் தேவரும் பார்த்திருக்க விஷ்ணுபெருமானின் திருமார்பில் எழுந்தருளினாள்.

பிறகு பெரிய பிராட்டியார் அகங்குளிர்ந்து கடாட்சித்ததால் தேவர்கள் மகிழ்ந்தார்கள்.
அசுரர்களோ பெருமானிடத்தில் பக்தியற்றவர்களாக இருந்ததால் பிராட்டியாரின் கடாட்சத்தை இழந்து தீன ஸ்திதியை அடைந்தார்கள்.
இப்படியிருக்கும்போது அசுரர்களான தைத்திரியர்கள், தன்வந்திரியின் கரத்திலிருந்த அமிர்த கலசத்தைப்
பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டார்கள். அப்போது ஸ்ரீமந்நாராயணன் ஜகன்மோகனகரமான மங்கையுருவமெடுத்து,
அசுரர்களை மயக்கியிழுத்து, வஞ்சித்து அமிர்தம் அவ்வசுரர்களுக்கு எட்டாதபடி செய்து அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தார்.
இவ்விதம் பகவத்கிருபையினால் கிடைத்த அந்த அமிருதத்தைத் தேவர்கள் அருந்தியதால் பலம் பெற்று விளங்கினார்கள்.
அதைக்கண்டு கோபங்கொண்ட அசுரர் தைத்ய தானவர்கள் பலவித ஆயுதங்களை ஏந்தித் தேவர்களுடன் போர் புரிந்தார்கள்.
அமிர்தபானஞ்செய்த அமரர்களோ, அசுரர்களுடன் தைரியமாகப் போரிட்டு, அவர்களைப் பாதாளத்திற்குத் துரத்தினார்கள்.
பிறகு தேவேந்திரனும் தேவர்களும் ஸ்ரீயப்பதியை வணங்கி விடைபெற்று தேவலோகம் சென்று
சுகபோகங்களை இடையூறின் அனுபவித்து வரலானார்கள்.

முனிவரே! அப்போது சூரியன் பிரகாசமான கிரணங்களுடன் தன் வழியில் மாறாமல் சஞ்சரித்து வந்தான்.
மற்றுமுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் தம் வழியில் மாறாமல் சஞ்சரித்தன. அக்கினியும் வலஞ்சுழித்தது.
சகல ஜனங்களும் தரும சிந்தையுடையவராய்ச் சுகமாக வாழ்ந்தார்கள். இவ்விதம் மூன்று உலகங்களும் லக்ஷ்மிகடாட்சம் பெற்றன.
இப்படியிருக்குங் காலத்தில் தேவேந்திரன் தன் பதவியை அடைந்து மகாலட்சுமியான பிராட்டியைத் துதித்துத் தோத்திரம் செய்யலானான்.
சகல உலகத்திற்கும் தாயாராய், திருப்பாற்கடலில் திருவவதாரம் செய்தவளாய், மலர்ந்த தாமரையைப் போன்ற திருக்கண்களுடையவளாய்,
திருமாலின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்.
தாமரை மலரில் வீற்றிருந்து, தாமரை மலரைத் திருக்கையில் தரித்து, தாமரை மலர் போன்ற திருவிழிகளுடன்
தாமரை மலரையொத்த திருமுக மண்டலமுள்ளவளும், உந்தித் தாமரை பூத்தவனின் திருவுள்ளத்திற்கு
உகந்தவளுமான ஸ்ரீதேவியைச் சேவிக்கிறேன்! உலகங்களைத் தூய்மை செய்து அருள்கின்ற தாயே,
சித்தியும் சுவாகையும் சுதையும் சொதையும் சந்தியும் ராத்திரியும் பிரபையும் மேதையும் சிரத்தையும் சரஸ்வதியும் எல்லாம் நீயே!
சகலமங்கள சொரூபிணியான தாயே! யக்ஞவித்தை என்கின்ற கர்ம மீமாம்சையும், மகாவித்தையென்கின்ற
இந்திர ஜாலவித்தையும் குஹ்ய வித்தை என்கின்ற வேதாந்த வித்தையும் நீயே!
தர்க்க வித்தையும், வேத வித்தையும் கிருஷிகோரக்ஷண வாணிப வித்தையும், தண்டநீதி வித்தையும் நீயே!
இவ்விதம் சாந்தங்களாகவும் அசாந்தங்களாகவும் இருக்கிற உருவங்களைக் கொண்டு மூன்று உலகங்களையும் நீயே நிறைந்திருக்கிறாய்.
தாயே! சகல யக்ஞ சொரூபனாகவும், மகா யோகிகளுக்கும் தியானித்து அறியத்தக்க தேவதேவனுமான கதாதரனின்
திருமேனியில் உன்னைத் தவிர வேறு யார்தான் வீற்றிருக்க முடியும்? உலகமாதாவே!
உன் கடாட்சத்தை இழந்த போது மூன்று உலகங்களும் நாசமடைந்தவை போலாகித் திரும்பவும்
உனது கடாட்சத்தைப் பெற்றதால் சவுபாக்கியங்களைப் பெற்றன. தாயே! கருணை நிறைந்த
உனது கடாட்ச வீட்சண்யத்தாலே பிராணிகளுக்கு
பாரியா, புத்திர, பந்து, மித்திர, கிருக, ÷க்ஷத்திர, தன வாகனாதிகள் எப்பொழுதுமே உண்டாகின்றன.

எம்பெருமாட்டியே! உன் கடாட்சம் பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் அதிகாரமும் சத்துரு வெற்றியும் சுகமும் கிடைப்பது அரிதல்ல.
பிராட்டியே! சகல பிரபஞ்சத்துக்கும் நீயே அன்னை! தேவதேவனான நாராயணனே தந்தை! தாயே!
நீங்கள் இருவரும் சேர்ந்தே சராசர ஸ்வரூபமான இந்த பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கிறீர்கள்.
ஸ்ரீவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் தாயே! அடியேங்களது புத்திர, மித்திர வர்க்கங்களையும் பசுக்களையும்,
பூஷணங்களையும் ஒருநாளும் பிரியாது இருந்தருள வேண்டும். யாவற்றையும் தூய்மையாக்கவல்ல தாயே;
எங்களுடைய தனகோசத்தையும் தொழுவத்தையும், இல்லங்களையும், உடலையும், களத்திரத்தையும்,
ஒருநாளும் பிரியாமல் இருந்தருள வேண்டும். நிர்மலையான தாயே! உன் கடாட்சம் தூரமானால்
மக்கள் சவுசீல மகாகுணங்களும் தன தானியமும் இல்லாமற் போவார்கள்.
குணக்குறையுடையோராலும் உன் கடாட்சம் பெற்றவர்கள். எல்லா சவுபாக்கியங்களையும் பெற்றுப் பிரபுக்களாக வாழ்வார்கள்.

ஸ்ரீவிஷ்ணு வல்லபையான தாயே! உன் கருணைக்குப் பாத்திரமானவனே குணவான்; புண்ணியவான்; புத்திமான். சூரன்,
பராக்கிரமசாலியாவான்! ஜகத்தையெல்லாம் வளர்க்கும் தாயே! நீ வெறுத்தால், ஒருவனுடைய வாய்மை, சமதர்மம்
முதலிய சற்குணங்களும் துர்க்குணங்களாகி விடும். உனது திருக்கல்யாண குணங்களை
நான்முகப் பிரமனாலும் துதிக்க இயலாதே அப்படியிருக்க அடியேன் எப்படிப் புகழ்வேன்?
ஆயினும் தாயே கருணை கூர்ந்து எம்மை விட்டுவிடாமல் காத்தருள வேண்டும் என்று தேவேந்திரன் துதித்தான்.
அப்பொழுது, எங்கும் நிறைந்தவளான ஸ்ரீதேவிப்பிராட்டியார் திருவுள்ளம் உவந்து புரந்தரன் முன்பு தோன்றி,
தேவேந்திரா! நீ செய்த வழிபாட்டில் நான் மகிழ்ந்து உனக்கு வரமளிக்க வந்தேன்.
உனக்கு வேண்டிய வரங்களைக் கேள் என்று அருளிச்செய்தாள். தேவேந்திரன் உடனே ஸ்ரீதேவியை வணங்கித் தாயே,
நீ திரிலோகத்திலும் இடைவிடாமல் எழுந்தருளியிருக்க வேண்டும். எவனருகிலும் இந்தத் தோத்திரத்தினால் உன்னைத் துதித்தால்
அவனை நீ ஒருநாளும் கைவிடாமல் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று இரண்டு வரங்களைக் கொடுத்தருளும்படி வேண்டினான்.
அவன் வேண்டிய பிரார்த்தனையை ஸ்ரீதேவிப்பிராட்டியார் ஏற்றுக்கொண்டு, அமரேந்திரா!
நீ விரும்பிய வண்ணம் ஆட்சிபுரியும் உனது உலகத்தை விட்டு நான் நீங்குவதில்லை.
எவன் தினந்தோறும் காலை மாலைகளில் இந்த ஸ்ரீ தோத்திரத்தால் என்னைத் துதிக்கிறானோ,
அவனுக்கு நான் அருள்புரிகிறேன்! என்று இரண்டு வரங்களைத் தந்தருளினாள்.

மைத்ரேயரே!
பூர்வத்தில் ஸ்ரீதேவி, பிருகு முனிவருக்கு கியாதி என்ற மங்கையினிடத்தில் அவதரித்தாள் என்று சொன்னேனல்லவா?
பிறகு அமிர்தங்கடைந்த காலத்தில், திருப்பாற்கடலிலும் அவதரித்தாள். இதுமட்டுமல்ல,
உலகநாதரான ஜனார்த்தனன் எப்போதெப்போது உலகங்களில் அவதரிப்பானோ, அப்போதைக்கப்போது ஸ்ரீதேவியும் அவனுடன்கூட,
அந்த அவதாரப் பயன்பெற, அவதாரம் செய்து அருள்வாள்.
முன்பு ஸ்ரீமந்நாராயணன் அதிதியின் குமாரனாக அவதரித்தபோது ஸ்ரீதேவிப்பிராட்டியார் பதுமை என்ற திருப்பெயரோடு அவதரித்தாள்.
விஷ்ணு, பரசுராமனாக அவதரித்தபோது இவள் தரணியாக அவதரித்தாள்,
அவன் சக்கரவர்த்தித் திருமகன் ராமனாக அவதரித்தபோது இவள் சீதா பிராட்டியாக அவதரித்தாள்.
அந்த எம்பெருமான் கண்ணனாக அவதாரம் செய்த போது இவள் ருக்மணியாக அவதரித்தாள்.
இதுபோலவே மற்றைய அவதாரங்களிலேயும் இப்பிராட்டி, பெருமாளை விட்டு பிரியாமல் கூடவே அவதரித்துக் கொண்டிருப்பாள்.
எம்பெருமான் தேவதா சொரூபத்தோடு அவதரித்தால் ஸ்ரீதேவியும் அதற்கேற்ற தெய்வத் திருமேனியுடன் அவதரிப்பாள்.
மனுஷ்ய சொரூபத்தோடு பெருமாள் அவதரித்தால் தேவியும் மனுஷ்ய ரூபத்தோடு அவதரிப்பாள்.

மைத்திரேயரே!
ஸ்ரீமகாலக்ஷ்மியின் இந்த திருவவதாரத்தை எந்த மனிதன் பக்தியுடன் பாராயணம் செய்கிறானோ,
எவன் பக்தியோடு கேட்கிறானோ, அவனுடைய இல்லத்தில் பெரிய பிராட்டியாரான ஸ்ரீதேவி என்றும் பிரியாமல் எழுந்தருளியிருப்பாள்.
எந்தக் கிருஹங்களிலே இந்த ஸ்ரீதேவியின் சரித்திரம் தினந்தோறும் படிக்கப்படுகிறதோ,
அந்தக் கிருகங்களில் கலகத்திற்கு ஆதாரமான வறுமை இராது. ஸ்ரீதேவி, முன்பு பிருகு முனிவரின் புத்திரியாகிப்
பின்னர் மீண்டும் திருப்பாற்கடலில் அவதாரஞ்செய்த விதத்தை உமக்கு அறிவித்தேன். சகல ஐசுவரிய காரணமாக,
இந்திரனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை யாராகிலும் தினந்தோறும் பக்தியுடன் படிப்பார்களானால்
அவர்கள் ஒருக்காலும் அசுபத்தை அடையமாட்டார்கள். சர்வாபீஷ்டங்களும் நிறைவேறி அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள்.

————-

10. பிருகு, மரீசி முதலானோர் வமிசம்

பராசர மகரிஷியே! உங்கள் தயவால் ஸ்ரீதேவியின் திருவவதார வைபவத்தை அறிந்து கொண்டேன்.
இனிமேல் பிருகு முதலானோருடைய வமிச வரலாற்றைக் கூறியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார்.

பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார். மைத்ரேயரே!
பிருகு முனிவருக்குக் கியாதி என்ற பத்தினியிடம் ஸ்ரீவிஷ்ணு பத்தினியான லட்சுமியும்
தாதா விதாதா என்ற பிள்ளைகள் இருவரும் உண்டானார்கள் அல்லவா?
அந்தத் தாதாவும் விதாதாவும் மேரு புத்திரிகளான ஆயதி, நியதி என்னும் கன்னியரை முறைப்படியே விவாகஞ் செய்து கொண்டார்கள்.
அவர்களில் தாதாவுக்குப் பிராணன் என்கிற மகன் பிறந்தான். அவனுக்கு துதிமான் என்னும் மகன் பிறந்தான்.
அவனுக்கு அசாவான் என்ற குமரன் பிறந்தான். விதாதாவுக்கு மிருகண்டு என்று புத்திரன் உற்பத்தியானான்.
அந்த மிருகண்டுக்கு மார்க்கண்டேயன் பிறந்தான். அந்த மார்க்கண்டேயனுக்கு வேதசிரன் என்ற மகன் பிறந்தான்.
அவர்களாலே பிருகு வமிசம் உலகத்தில் பரவி வந்தது.

இந்நிலையில் மரீசி மாமுனிவருக்குச் சம்பூதி என்ற மனைவியிடம் பவுர்ணமாசன் என்ற புத்திரன் பிறந்தான்.
அவனுக்கு விரசன், பர்வதன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள்.
அவர்களுடைய சந்ததிக் கிரமத்தைப் பின்னால் சொல்லுவேன்.
ஆங்கிரசமுனிக்கு பத்தினியான ஸ்மாருதி என்பவள் சீனிவாலி, குரு, ராகை அனுமதி என்று சொல்லப்பட்ட
நான்கு பெண்களைப் பெற்றாள்.
அத்திரி மாமுனிவருக்கு மனைவியான அனுசூயை என்பவள் சந்திரனையும், துர்வாசரையும் தத்தாத்திரேயர் என்ற மகாயோகியையும் பெற்றாள்.
அவன் பூர்வ ஜன்மத்தில் சுவாயம்புவ மநுவந்திரத்திலே அகஸ்தியனாக இருந்தான்.
புலஹன் என்ற முனிவருக்குக்ஷமை என்பவளிடத்தில் கர்த்தமன் அர்வரீவான் சகிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் தோன்றினார்கள்.
கிரது என்னும் மாமுனிவருக்கு சன்னதி என்பவளிடத்தில், ஊர்த்துவரேதஸரும் கட்டை விரற் பரிமாணமுள்ளவரும்
சூரியப்பிரகாசிகளுமான வாலக்கில்யர் என்ற அறுபதினாயிரம் முனிவர்கள் உண்டானார்கள்.
வசிஷ்டருக்கு ஊர்ச்சை என்ற பெண்ணிடம் ரசனும், காத்திரனும்; ஊர்த்தபாகுவும் சவனனும், அனகனும் சுதபனும் சுக்கிரனும்,
ஆகிய சப்த மாமுனிவர்கள் பிறந்தார்கள்.

பிரமதேவனுக்கு மூத்த மகனான அக்கினி என்பவனுக்கு சுவாஹா என்ற பத்தினியிடம் பாகவன், பவமானன், சுசி
என்னும் பிள்ளைகள் மூவர் பிறந்தார்கள். அவர்களது சந்ததியில் நாற்பத்தைந்து பிள்ளைகள் பிறந்தார்கள்.
இவர்களும் இவர்களுடைய தகப்பன்மார்கள் மூன்று பேரும் கூடஸ்தனான அக்கினியபிமானி தேவதையும்
ஆக நாற்பத்தொன்பது பேர்களும் அக்கினிகள் என்று வழங்கப்படுகிறார்கள்.

மைத்ரேயரே!
சதுர்முகப் பிரமன் சிருஷ்டித்த அக்கினிஷ்வாத்தர் என்றும் பர்ஹீஷதர் என்றும் சொல்லப்பட்டு யாகம் செய்தவர்களும்
யாகம் செய்பவர்களுமான பிதுர்க்கணங்களைச் சேர்ந்து ஸ்வதை என்னும் பெண்மணியானவள் மேனை, வைதரணி
என்கிற இரு பெண்களைப் பெற்றாள். அவ்விருவரும் யோகப் பயிற்சியில் சிறந்து பிரமவாதிகளாய்த் திகழ்ந்தார்கள்.
இவ்விதமாக விருத்தியான தக்ஷ புத்திரிகளுடைய சந்தானக்கிரமம் சொன்னேன்.
இதை விசுவாசத்தோடு ஸ்மரணஞ் செய்த மனிதன் சந்தானமில்லதாவனாக மாட்டான்.

————-

11. துருவன் கதை

பராசரர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேய முனிவரே!
சுவாயம்புவ மநுவுக்குப் பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்.
அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள்.
அப்பத்தினிகளில் சுருசி என்பவள் தான் உத்தனபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள்.
அவளுக்கு உத்தமன் என்று வழங்கப்பட்ட மகன் ஒருவன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் பிரிய மகனாக இருந்தான்.
சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. அந்தப் பெண்ணுக்குத் துருவன் என்ற மகன் பிறந்தான்.
அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்டவன். ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தன் தந்தையான
உத்தானபாத மன்னனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே தனது தகப்பனது மடியில் தன் சகோதரன் உத்தமன்
உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

தானும் அவனைப் போல, தன் தகப்பன் மடியில் உட்கார வேண்டும் என்று துருவன் ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான்.
அப்போது சுருதி தன்னருகில் இருந்ததால், துருவனின் விருப்பத்தை அரசன் ஏற்கவில்லை.
இவ்விதமாகத் தகப்பன் மடியின் மீது உட்கார வந்த சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து,
பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய்! என் வயிற்றில் பிறக்காமல் வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ,
இத்தகைய உயர்ந்த சிம்மாசனத்தில் இருக்க நினைப்பதா? விவேகமல்லாத நீ இந்த அரசனின் மகன் தான் என்றாலும்,
ராஜ்யலட்சுமி வாசம் புரியும் இந்தச் சிங்காசனத்துக்கு நீ தகுந்தவனல்ல. என் மகனே அதற்குத் தகுதியுடையவன்,
வீணாக ஏன் வருந்த வேண்டும். பாக்கியமில்லாத சுநீதி வயிற்றில் நீ பிறந்ததை நினைக்க வேண்டாமா? இங்கிருந்து போ!
என்று இழிவாகக் கூறினாள். அவள் பேசியதைக் கேட்ட துருவன் கோபங்கொண்டு, மனக்கலக்கமடைந்து, சரேலென்று தன் தாய் வீட்டுக்குச் சென்றான்.

கோபமாகக் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க வந்த துருவனை அவனுடைய அன்னை சுநீதி
தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு, மகனே! உன் கோபத்துக்குக் காரணம் என்ன?
உன்னை யார் சமாதானஞ் செய்வார்கள்? உன் தந்தையை யாராவது அவமதித்தார்களா? என்று கேட்டாள்.
அதற்குத் துருவன், தன் மாற்றாந்தாயான சுருசி கூறியவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னான்.
அதைக்கேட்ட சுநீதி, மகனே! சுருசி சொன்னவைகள் யாவும் உண்மைதான். நீ சொற்ப பாக்கியமுடையவன்.
ஏனென்றால் மிகவும் புண்ணியமுள்ள குழந்தை சத்துருக்களால் இப்படி தூற்றப்படுமோ?
இத்தனையும் உன்னுடைய பூர்வ ஜன்ம நற்பலனை யாராவது அபகரிக்க முடியுமா?
செய்யாத கர்ம பலனைக் கொடுக்கத்தான் யாரால் முடியும்? பாக்கியவான்களுக்கே, மகாராஜயோக்கியமான சிம்மாசனமும்,
ரதகஜதுரகபதாதிகள் போன்ற நால்வகை சேனைகளும் சுகபோகங்களும் கிடைக்கும்.
சுருசியானவள் பாக்கியசாலி! புருஷன் தன்னிடத்திலேயே பிரியமாக இருப்பதற்குப் பாக்கியஞ் செய்திருக்கிறாள்.
நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டுமே உடையவளாய் துக்கப்படுகிறேன். உத்தமன் புண்ணியம் செய்தவன்.
அதனால் தான் அவன் சுருசியின் மகனாகப் பிறந்தான். சொற்ப பாக்கியமுடைய நீ என் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தாய் மகனே!
இதற்கு நாம் என்ன செய்யலாம்? எவனுக்கு எந்த மட்டும் அதிர்ஷ்டமோ அந்த மட்டிலே அவன் மகிழ்ந்திருக்க வேண்டும்.
இதுதான் புத்திமான்களின் செயல். ஆகையால் ஐசுவரியத்தை நினைத்துத் துக்கப்படாமல் இரு!

சுருசி சொன்னவைகளைக் கேட்டு உன் மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மையுண்டாவதற்குச்
சகல முயற்சிகளையும் புண்ணியத்தையும் செய்ய எத்தனஞ்செய். தர்மாத்மாவாய், நல்ல நடத்தையுடையவனாய்,
சர்வபூத தயாபரனாகவும், சர்வஜனமித்திரனாகவும் இருந்து கொண்டு நல்லவற்றைச் செய்து வந்தால்,
தண்ணீர் பள்ளத்தை நாடிச்செல்வது போல், சம்பத்துக்களும் குணவானான மனிதனிடத்தில் தானாகவே வந்து சேர்கின்றன என்று சொன்னாள்.

அதைக்கேட்ட துருவன், தாயே! நீ சொன்ன வார்த்தைகள் சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த
என் இதயத்தில் பதியவில்லை. ஐசுவரிய கர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான்,
மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய எத்தனஞ் செய்கிறேன். பார்! புண்ணியசாலி என்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல்,
உன்னுடைய ரத்தத்திலே நான் பிறந்தவனானலும், என்னுடைய ஆற்றலைப் பார் என் அண்ணன் உத்தமனே
என் தந்தையின் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். நான் என்னுடைய சுயசக்தியினாலே அதைவிட உயர்ந்த பதவியை அடைவேன்.
ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் அசாத்தியமான மிகவும் உயர்ந்த பதவியை
எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்! என்று சொல்லி தாயாரின் அனுமதியைப் பெற்று அங்கிருந்து
அதிவிரைவாகப் புறப்பட்டு தலைநகரைக் கடந்து, அருகிலிருந்த ஒரு காட்டுக்குள் சென்றான்.

அங்கே, கறுப்பு மான் தோல்களைத் தரித்து குசப்புல்லை ஆசனமாகக் கொண்டு ஏழு முனிவர்களான
சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, முனிவர்களே!
நான் மன்னன் உத்தானபாதனுக்குச் சுநீதி வயிற்றில் பிறந்த மகன். துருவன் என்பது என் பெயர்.
நான் மிகவும் மனக்கவலையோடு தங்களது திவ்யசன்னதிக்கு வந்தேன் என்றான்.

ராஜகுமாரனே! நீயோ நாலைந்து வயதுள்ளவனாகவே இருக்கிறாய். இவ்வளவு சிறியவனான உனக்கும்
மனக்கிலேசம் உண்டாகக் காரணம் என்ன? உன் தந்தை வாழ்ந்து கொண்டிருப்பதால் உன் குடும்பத்தைக்
காப்பாற்ற வேண்டும் என்ற பாரமில்லையே! உன் ஆசைக்கு உரியபொருள் அகப்படவில்லையே என்று
மன்னன் மகனான நீ வருந்த வேண்டியுமிராது! உன் உடம்பில் எந்தவிதமான நோயும் இருப்பதாக
உன் தோற்றத்திலேயே தெரியவில்லை! அப்படியிருக்க உன் மன வெறுப்புக்குக் காரணம் என்ன? என்று சப்தரிஷிகள் கேட்டார்கள்.

என் தாய்க்குச் சக்களத்தியாகிய சுருதி சொன்ன வார்த்தைகளால் எனக்கு வெறுப்புண்டாயிற்று.
அந்த அவமானத்தாங்காமல் இங்கு வந்தேன் என்றான். துருவன் அதைக் கேட்டதும் ஏழு முனிவர்களும் ஒருவருடன் ஒருவர்
கலந்து இந்த சிறுவன் மாற்றாந்தாயின் பேச்சைப் பொறுக்கமாட்டாமல் இங்குவந்து விட்டான்.
இவனது ராஜகளையைப் பார்த்தீர்களா? இவ்வளவு சிறிய பையனுக்கும் அவமானம் பொறுக்க முடியவில்லையே, என்று பேசிக்கொண்டு,
துருவனை நோக்கி, ராஜகுமாரனே, நீ மனஸ்தாபங்கொண்டு மனம் நொந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாய்!
உனக்கு எங்களால் ஆகவேண்டிய உதவி என்ன? என்று கேட்டார்கள்.

துருவன் அவர்களை நோக்கி, முனிவர்களே! அடியேன் ராஜ்யத்தையோ அல்லது மற்ற பொருள்களையோ விரும்புகிறவன் அல்ல.
ஆனால் பூர்வத்தில் ஒருவனாலேயும் அனுபவிக்கப்படாததாய், அபூர்வமானதாய், சகல ஸ்தானங்களுக்கும் உன்னதமானயிருக்கிற
ஸ்தானத்தை நான் அடைய விரும்புகிறேன். இந்த மனோரதம் நிறைவேறுவதற்காக உபாயத்தை எனக்கு கூறியருள வேண்டும் என்றான்.
அதற்குச் சப்தரிஷிகள் ஒவ்வொருவராகப் பின்வருமாறு கூறினார்கள்.

அரசகுமாரனே! ஸ்ரீகோவிந்தனுடைய சரணாரவிந்தங்களையடைந்து ஆராதனை செய்யாதவர்களுக்கு,
சர்வ உத்தமமான பதவி கிடைக்காது. ஆகையால் நீ பக்தியுடன், அச்சுதனை ஆராதிப்பாயாக! என்றார் மரீசி முனிவர்.
ராஜகுமாரனே! உலகநாயகனாக ஜனார்த்தனன் யாரைக் கடாட்சிக்கிறானோ அவனே, அக்ஷயமான
திவ்விய ஸ்தானத்தை உடையவனாவான். என் வாக்கு சத்திய வாக்கென்று நினை! என்றார் அத்திரி முனிவர்
ஆங்கிரசர், சராசராத்மகமான சகல பிரபஞ்சமும் எவனுடைய குட்சியில் இருக்கிறதோ,
அந்தக் கோவிந்தனுடைய சரண கமலங்களை அர்ச்சனை செய்! சர்வ உன்னதப் பதவியை அடைவாய்! என்றார்.
பிறகு, புலஹ முனிவர், எவன் பரப்பிரமமும், பரமப்பிராப்பியமாகவும் சர்வ வியாபகனுமாக இருக்கிறானோ
அந்த ஸ்ரீஹரியை ஆராதனம் செய்வதால், அத்தியந்தம் அசாத்தியமான மோட்சத்தையும் அடையலாம் என்றால்
இதர ஸ்தானங்களை அடைவதற்கு என்ன சந்தேகம்? என்றார்.
அப்புறம் கிருதுமாமுனிவர் எவன் யக்ஞங்களாலே ஆராதிக்கப்படும் புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும்,
யக்ஞங்களுக்கு அதிபதியாகவும் இருக்கும் மகா புருஷனே, அந்த ஜனார்த்தனன் திருவுள்ளங்கொண்டானானால்
அடையத் தகாத ஸ்தானமும் உண்டோ? என்றார்.
அதன் பிறகு, புலஸ்திய முனிவர், பூர்வத்திலே இந்திரன் ஜகத்பதியான எவனை ஆராதித்து சர்வ உன்னதமான
இந்திரப்பதவியை அடைந்தானோ. அப்படிப்பட்ட யக்ஞேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவை ஆராதனை செய்! என்றார்.
பிறகு வசிஷ்ட முனிவர், குழந்தாய், ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதனை செய்வாயாகில் இதுவரையில் இல்லாத
நூதனமான ஸ்தானம் ஒன்றை நீ மனத்தால் நினைத்தாலும், அதையும் சித்தமாக அடைவாய்,
அப்படியிருக்க முன்பே படைக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் உட்பட்ட மேலான ஸ்தானத்தை
அடைவதற்குச் சந்தேகம் என்ன? என்று கூறினார்.

மாதவர்களே! தாங்கள் ஆராதக்க வேண்டிய அச்சுதனை
அடியேனுக்குத் தெரியும்படி செய்தீர்கள், அவ்வெம்பெருமான் கிருபை செய்யும்படி ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும்
ஆராதனை செய்யும் முறைகளையும் அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று துருவன் கேட்டான்.

ஓ ராஜபுத்திரனே!
ஸ்ரீவிஷ்ணுவிடம் பக்தி செய்ய விரும்பும் மனிதன் முதலாவதாக விஷய அபிலாøக்ஷகளை நீத்து விட்டு
மனதை நிர்மலமாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மனதை முகுந்தனுடைய சரணாரவிந்தங்களிலே
தன்னுள்ளே நிச்சலமாகச் சேர்ந்து, வேறு நினைவில்லாமல் அந்தத் திருவடிகளையே பாவித்துக்கொண்டு,
தூயவனாய், வியஷ்டி சமஷ்டி ரூபமாய் பிரகிருதியும் புருஷனும் சரீரமாகவுமுள்ள சுத்த ஞானமயனான
வாசுதேவனுக்கு தெண்டன் சமர்ப்பிக்கிறேன் என்ற பொருளையுடைய மகாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
உனது பிதாமகனான சுயாம்புவமநுவானவர் இந்த மகாமந்திரத்தினாலே ஜனார்த்தனனை உபாசித்தார்.
அதனால் பகவான் திருவுள்ளம் உகந்து, அந்த மநுவுக்கு அவர் விரும்பியபடியே
திரிலோக துர்லபமான ஐசுவரியத்தைப் பிரசாதித்து அருளினார். நீயும் அப்படியே அந்த மகாமந்திரத்தை ஜெபித்து
ஸ்ரீயப்பதியை ஆராதனை செய் என்று மகரிஷிகள் கூறினார்கள்.

——————-

12. சிறுவன் துருவனின் பெருந்தவம்!

சப்தரிஷிகளிடமும் உபதேசம் பெற்ற துருவன் மனமகிழ்ந்து அவர்களை வணங்கி விட்டு,
யமுனை நதி தீரத்திலிருந்த மதுவனத்துக்குச் சென்றான். அங்கு மாமுனிவர்கள் உபதேசித்த வண்ணம்
ஸ்ரீவிஷ்ணுவைத் தனது இதய கமலத்தில் தியானித்துக் கொண்டிருந்தான். இப்படியே ஒரே நினைவாகத் தியானம்
செய்து கொண்டிருந்த துருவனின் சித்தத்தில் சர்வ பூதங்களிலும் உள்ளவனான
ஸ்ரீஹரிபகவான் அதிகப் பிரகாசமாய்த் தோன்றியருளினார்.

மைத்திரேயரே! இவ்விதம் அந்தப் பரமயோகியான துருவனுடைய இதயத்தில் எம்பெருமான்
எழுந்தருளியிருந்ததால் சகலத்தையும் தரிக்கிற பூதேவி, அந்தப் பரமயோகியைத் தாங்கமாட்டாமல் இருந்தாள்.
பூமியில் துருவன் தன் இடக்காலை ஊன்றி, வலக்காலை மடித்துத் தவம் செய்தபோது,
பூமியானது இடதுபக்கத்தில் தாழ்ந்தும், வலக்காலை ஊன்றிய போது வலப்பக்கம் தாழ்ந்தும் நின்றது.
பிறகு துருவ யோகி ஒரே பாதத்தில் எட்டை விரலால் பூமியில் நின்றபோது, பூமண்டலமே மலைகளுடன் நடுங்கியது.
மகா நதிகளும் சப்த சாகரங்களும் கலங்கிப்போயின. இவ்விதமாக மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும்
கலக்கம் உண்டானதைக் கண்டு, அந்த மநுவந்திரத்திலே இருந்த யாமர் என்னும் தேவதைகள் சித்தங்கலங்கினர்.

அவர்கள் இந்திரனுடன் ஆலோசித்துத் துருவனுடைய தியானத்திற்கு விக்கினம் செய்ய முயன்றார்கள்.
இந்திரனின் கட்டளையை ஏற்ற கூசுமாண்டங்கள் என்னும் பயங்கர பூதகணங்கள் அந்த மகாயோகியான
துருவனின் தவத்தைக் கலைக்கப் பல மாயங்கள் செய்தன. எப்படியெனில், துருவனுக்குத் தாயான சுநீதியின்
சொரூபத்தைத் தரித்த மாயை ஒன்று துருவனிடம் வந்து, மகனே! உன் உடல் அபாயமடைய்கூடிய
கொடிய தவத்தை உடனே நிறுத்து! ஐயோ மகனே! அநேக காலம் தவமிருந்து உன்னைப் பெற்றேனடா?
அனாதையும் பேதையுமான என்னைத் தனியே அலைய விட்டு மாற்றாந்தாயின் பேச்சிற்காக,
நீ இப்படி வருவது நியாயமோ? கதியற்ற எனக்கு நீ அல்லவா கதி! ஐந்து வயதுப் பாலகனான நீ எங்கே?
மிகவும் கடுமையான இந்தத் தவம் எங்கே? பயனற்ற இந்த முயற்சியிலிருந்து உன் மனதைத் திருப்பிக்கொள்.
அப்பனே! நீ விளையாடுகிற பருவமடா இது! இதற்குப் பிறகு வேதங்களை அத்தியனஞ்செய்யும் காலம்!
அதன்பிறகு மோகானுபவங்களுக்குரிய காலம். அதன் பிறகே தவஞ்செய்வதற்குரிய காலமாகும்!
விளையாடும் காலத்தில் ஆன்மக்கிலேசமான தவஞ் செய்வது நல்லதல்ல. தாயான என் வார்த்தையைக் கேட்டு;
இந்தப் பிராயத்துக்குத் தக்கபடி, என்னுடன் வரவேண்டியது தான் உனக்கு நியாயம்.
இந்த தவத்தை விடாமற் போனால் நான் இப்போது உன் எதிரில் என் பிராணனை விட்டு விடுகிறேன் என்று
இப்படியாகத் தன் கண்களிலே கண்ணீர் தாதை தாரையாகப் பெருகக் கதறியழுது கொண்டு நின்றாள்.

மாயையான சுநீதியை தன் முன்னால் கண்டும், துருவன் ஸ்ரீமந்நாராயணனின் திவ்விய திருவடிகளிலேயே
சித்தத்தை வைத்திருந்ததால், கண் திறந்து பார்க்கவில்லை.
பிறகு அந்த மாயா சுநீதி துருவனை நோக்கி, குழந்தாய்! கோர அரக்கர்கள் உன்னைச் சம்கரிப்பதற்காகக்
கதை கட்கம் முதலான ஆயுதங்களோடு வருகிறார்கள். இப்பொழுதே உன் தவத்தை விட்டுவிட்டு ஓடிவா!
என்று சொல்லி விட்டு மறைந்து போனாள். பிறகு பலவித ஆயுதங்களுடன் அக்கினிச்சுவாலை வீசும்
முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றினார்கள். அவர்கள் போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள்.
குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக்கொண்டு அகோரமாக ஊளையிட்டன.

சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்!
தின்னுங்கள் என்று பெருங்கூச்சலிட்டுப் பயமுறுத்தினார்கள்.
துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதை லயப்படுத்தியதால்,
அப்பூதகணங்களின் சப்தங்களும் பயமுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற் போயின.
அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திர சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்து கொண்டு,
மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன.

அதைக்கண்ட தேவதைகள் அந்த மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ
என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து,
ஜகத்தாரகண பூதனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து,
தேவதேவனே! துருவனின் தவ வலிமையினால் நாங்கள் தகிக்கப்படுகிறோம்.
அதனால் உம்மைச் சரணடைந்தோம் சந்திரன் தினந்தோறும் தனது கலைகளினால் அபிவிருத்தியடைவதைப் போல,
உத்தானபாதனின் மகன் துருவனும் தவச்சிறப்பால் வளர்ந்து வருகிறான். ஆகையால் நாங்கள் பயப்படுகிறோம்.
அந்தப்பாலகன், இந்திர, வருண, குபேர, சூரிய சந்திராதிகளுடைய பதவிகளிலே எதைக்கேட்பானோ தெரியவில்லை.
ஆகையால் அவனுடைய தவத்தை நிறுத்தி; எங்களுடைய கவலையைத் தீர்க்க வேண்டும்! என்றார்கள்.

அவர்களை மகாவிஷ்ணு கடாட்சித்து, சிறுவன் துருவன் பெருந்தவம் புரிகிறான் என்றாலும்
இந்திரன், சூரியன், சந்திரன் ஆகியோரது அதிகாரங்களில் எதையும் அவன் விரும்பவில்லை.
அவனது மனோரதத்தை நான் அறிவேன். ஆகையால் நீங்கள் கவலைப்படாமல், உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள்.
நான் துருவனுக்கு இஷ்டமான வரத்தைக் கொடுத்து அவனது தவத்தை நிறுத்துகிறேன் என்று அருளிச்செய்தார்.
பிறகு, தேவர்கள் திருமாலிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

அதன் பின்னர் சர்வாத்மகனான எம்பெருமான் துருவனுடைய ஒன்றித்த தியானத்துத் திருவுள்ளம் உவந்து
நான்கு திருத்தோளுடைய திருமேனியோடு துருவன் முன்பு காட்சி கொடுத்து உத்தானபாதனின் மகனே!
உனக்குச் சுபமுண்டாகக் கடவது. உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்து, உனக்கு விருப்பமான வரத்தைத் தருவதற்கே நான் வந்தேன்.
நீ உனது சித்தத்தை என் மீது நிலையாக நிறுத்தியதால் நான் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேட்பாயாக! என்றார்.

துருவன் கண்களைத் திறந்து தான் தியானித்த விதத்திலேயே சங்கு சக்கரம் கதை கட்கம் சாரங்கம் முதலிய
பஞ்சாயுதங்களோடும், கிரீட வனமாலிகா கௌஸ்துப பீதாம்பர அலங்காரத்தோடும் எழுந்தருளிய ஸ்ரீயப்பதியைக் கண்டு
பூமியில் விழுந்து தெண்டனிட்டு; மெய்சிலிர்க்க பயபக்தியுடன் தேவதேவனான ஸ்ரீமந்நாராயணனைத் துதி செய்யலானான்.

இந்த மகாபுருஷனைக் குறிப்பிட என்ன வாக்கியத்தை சொல்வேன்? யார் சொன்னது போலத் துதிப்பேன்?
என்று துருவன் மனங்கலங்கி, ஒன்றுமே தோன்றாமல் விஷ்ணு பகவானைச் சரணடைந்து
ஸ்வாமி ஷட்குண ஐசுவரிய சம்பன்னனே! அடியேனது தவத்துக்குத் திருவுள்ளம் உகந்தீரானால்
உம்மையே ஸ்தோத்திரம் செய்ய நினைக்கும் எனக்கு அதற்கேற்ற ஞானத்தை வழங்கியருள வேண்டும்.
வேதாந்த வேதிகளான பிரமாதிகளும் உமது மகிமையைச் சொல்ல வல்லவர்களல்லர்.
அப்படிப்பட்ட உம்மைப் பாலகனான நான் எப்படித் துதிப்பேன்? அடியேன் மனது மது சரண கமலங்களிலே பதிந்து,
பக்தியுடன் உம்மைத் துதிக்கவே விரும்புகிறது.
ஆகையால் அடியேனுக்கு அதற்கேற்ற ஞானோதயத்தை தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க,

ஸ்ரீகோவிந்தன், சகல வித்யாமயமான தமது பாஞ்சசன்யத்தினாலே, அப்பாலகனின் முகத்தில் ஸ்பரிசித்து அருளினான்.
துருவனுக்கு ஞானோதயமானதால் அவன் பிரசன்ன முகத்துடன் தெண்டனிட்டு
பிரிதிவி அப்பு தேஜசு, வாயு, ஆகாயங்களும் தன்மாத்திரைகளும் மனசும், மற்றுமுள்ள இந்திரியங்களும்
மகத்தகங்காரங்களும் மூலப்பிரகிருதியும் எவனுடைய ரூபங்களோ, அந்தச் சர்வேஸ்வரனான
விஷ்ணு பகவானுக்குத் தெண்டனிடுகிறேன்! இயல்பிலேயே தூய்மையானவனாய், சூட்சும ரூபியாய், ஞானத்தால்
எங்கும் வியாபித்திருப்பவனாய், பிரகிருதிக்கும் பரனாக இருக்கும் புருஷனும் எவனுடைய ரூபமாக இருக்குமோ,
அந்தக் குணாகரனான புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்! பிருதிவி முதலான பூதங்களும், சந்தாதி குணங்களும்,
புத்தி முதலியவைகளும், சம்சாரியான ஜீவனும் ஆகியவர்களைக் காட்டிலும் பரனான மூத்த புருஷன்
எவனுடைய ரூபமாக இருக்குமோ அத்தகைய ஜகத்பதிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்!
பிரம லக்ஷ்ணமுள்ளதாய் சகல உலகத்திற்கும் அதிபதியாய் தூய்மையானதாயுள்ள உமது சொரூபத்துக்கு வணக்கம்.

சர்வாத்மகனே! சமஸ்த சக்திகளும் அமைந்துள்ள பிரகத்துவத்தினாலும் ஜகதாகாரத்தினாலும் மகாப்பிரமாணமாக இருப்பதாலும்,
பிரமம் என்ற நாமதேயமுடையதாய், விகாரமில்லாதாய், யோகி சிந்தியமாய் விளங்கும் உமது திவ்விய சொரூபத்துக்கு வணக்கம்.
நீரே சகஸ்ர சிரசுகளும், ஆயிரம் பாதங்களும், ஆயிரம் கண்களும் உடையவராய், புருஷராய், சர்வத்தையும் வியாபித்து,
பூமியென வழங்கும் சராசரமயமான பிரபஞ்சத்தைவிடப் பதின்மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளீர்! புரு÷ஷாத்தமனே!
விராட்டு என்று வழங்கப்பட்ட அவ்யக்த சரீரகனான அநிருத்தனும் ஸ்வராட்டு என்று சொல்லப்பட்ட
கேவல ஆத்ம பிராப்தியுள்ளவனும், சம்ராட்டு என்று சொல்லப்பட்ட பிரமதேவனும், உம்மிடமிருந்தே உண்டானார்கள்.
சமஷ்டி தேகனான ஹிரணியகர்ப்பன் என்ற அந்தப் புருஷன் பிரிதிவிக்கு அதோ பாகத்திலும் பாரிச தேகத்திலும்,
ஊர்த்துவ தேகத்திலும் வியாபித்துள்ளான். உம்மிடத்திலேயே பிரபஞ்சங்களெல்லாம் உண்டாயின.
இவ்விதம் உம்மால் படைக்கப்பட்டு உம்முடைய ரூபமாயிருக்கிற இரணியகர்ப்பனு தரத்திலே
அகில பிரபஞ்சங்களும் அடங்கியிருப்பதால் எல்லாமே உமக்குள்ளே என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமோ?
யாவும் ஓமஞ்செய்யப் பெற்ற யாகமும், பிரஷதாச்சியம் என்ற அவிசும் கிராமியங்கள் ஆரணியங்கள் என்ற
இருவிதமான பசுக்களும், ரிக்கு, யஜுர், சாம வேதங்களும் சந்தங்களும் அசுவங்களும், அஜாதிகங்களும்,
ஒற்றைப்பல் வரிசையுள்ள ஜந்து சாதங்களும் மிருகங்களும் உம்மிடத்தலேயே உண்டாயின.

இன்னும் உம்மிடத்திலேயே உண்டாகவும் போகின்றன.
உமது வானத்திலே பிராமணர்களும் உமது புயங்களில் க்ஷத்திரியர்களும், கண்களிலே சூரியனும்,
மனதிலே சந்திரனும், பிராணத்திலே வாயுவும், முகத்திலே அக்கினியும், நாபியில் அந்தரிட்சமும் சரீரத்திலே சொர்க்கமும்,
கர்ணங்களிலே திசைகளும் பாதங்களிலே பூமியும் உண்டாயின. அது விஸ்தீரணமுள்ள ஆலமரம்,
அதிக நுண்ணிய பீஜத்திலே அடங்கியிருந்தாற்போல, மகத்தான இந்தப் பிரபஞ்சம் எல்லாம்
பிரளய காலத்திலே ஆதிகாரண பூதனான உம்மிடத்திலேயே அடங்கியிருந்தன.
வடவிருட்சம் மறுபடியும் விதையிலிருந்து தோன்றிச் சாகோபசாகமாக விஸ்தாரமாவது போல்,
படைப்புக் காலத்திலேயே பிரபஞ்சம் எல்லாம் உம்மிடத்திலிருந்தே உண்டாகிப் பரவின.

ஜகந்நாயகனே! பட்டைகள் ஒன்றின்மேல் ஒன்றாய் மூடப்பெற்று, ஏகாதாரமாகத் தோன்றும் இளவாழைக் கன்றே
பெரிதானதும் வேறாகாமல் இருப்பதுபோல, சூக்ஷ்ம சிதசித்தர்களோடு கூடிக் காரணரூபமான உம்மைக் காட்டிலும்
ஸ்தூல சிதசித்துக்களின் ரூபமாய்க்காரியமான இந்தப் பிரபஞ்சம் வேறாகாமல் இருக்கிறத.
சுத்த ஆனந்தம் இடைவிடாமல் நிகழ்வதும் எப்பொழுதும் ஒரே விதமாயிருக்கிற ஞானமும் உம்மிடத்தில் உண்டு
இப்படியல்லாமல் மகிழ்ச்சியும் துக்கமும் உண்டாக்குவதும் சுத்த துக்கத்தை உண்டாக்குவதுமான ஞானங்கள் உம்மிடம் இல்லை.
ஏனெனில் பிராகிருதங்களான சத்துவாதி குணங்களோடு நீங்கள் கலப்பில்லாமல் அப்பிராகிருத சுத்தசத்துவ மயனாக இருக்கிறவரல்லவா?
பிரபஞ்சத்துக்கு வேறாய் நிற்கின்ற ஒரே ஆத்மாவாய், சர்வபூத சரீரகனாய் விளங்கும் உமக்கு வந்தனஞ் செய்கிறேன்.
சூட்சும பிரகருதியும் ஸ்தூலப் பிரகிருதியும் புருஷனும் விராட்டு; ஸ்வராட், சம்ராட்டு என்பவர்களும் எல்லாம் நீரே அல்லவா?
எல்லோருடைய அந்தக் கரணங்களிலேயும் அக்ஷயமான ஞானமயனாகப் பிரகாசிப்பவரும் நீரே அன்றே
நீரே அதனதன் சாரமாக எல்லாவற்றிலும் இருக்கிறீர்? உம்மிடத்திலேயே சர்வமும் இருக்கின்றன.
ஆகையால் சர்வாத்மகனான உனக்குத் தெண்டனிடுகிறேன்!

எல்லாவற்றுக்கும் காரணமாய் எல்லாவற்றிலும் வியாபித்து எல்லாவற்றினுள்ளேயும் இருக்கின்றவர் நீரே!
ஆகையால் நீரே என் மனோரதத்தை அறிந்திருப்பீர். ஆகையால், அடியேன் விண்ணப்பம் செய்ய வேண்டுவது என்ன?
சுவாமி, உம்மைப் பிரத்யட்சமாகக் கண்டு தெண்டன் சமர்ப்பித்தேனாகையினால் அடியேனது மனோரதங்கள் நிறைவேறின
அடியேனது தவமும் பலித்தது. நான் கிருதார்த்தனானேன்! என்று துதி செய்து நின்றான்.

அவனை நோக்கி விஷ்ணு புன்முறுவலுடன், அரசகுமாரனே! என்னைக் கண்டு வணங்கியதால் உன் தவம்
பலித்தது சரிதான், ஆயினும் நான் உனக்கு சேவை கொடுத்தது வீணாகக் கூடாது.
ஆகையால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக. நான் பிரத்யட்சமானோனானால்
எவருக்குமே சகல மனோரதங்களும் கைகூடும்! என்றார்.

தேவதேவனே! சர்வபூத அந்தர்யாமியான உமக்கு அடியேனது விருப்பம் தெரிந்தேயிருக்கும் இருப்பினும்
நீரே நியமித்ததால் விண்ணப்பிக்கிறேன். இந்திரன் உமது அனுக்கிரகத்தினால் அல்லவோ,
திரிலோக ராஜ்யத்தை அனுபவிக்கிறேன்? ஜனார்த்தனனே! சுருசியானவள் தனது கர்ப்பத்தில் நான் பிறவாததால்
ராஜருக்குத் தகுதியான சிங்காதனத்துக்குநான் அருகனல்ல என்று என்னைப் பார்த்து இறுமாப்புடன் ஏளனம் செய்தாள்.
ஆகையால் ஜகத்துக்கு ஆதாரமும் சர்வ உத்தமும் அவ்யயமுமான உன்னத ஸ்தானத்தை அடையவே நான் விரும்புகிறேன்.
இதற்கு தேவரீர் திருவருள் புரிய வேண்டும்! என்றான் துருவன்.

ஸ்ரீபகவான், துருவனைக் கடாட்சித்து, பாலனே! நீ விரும்பிய பதவியை அடையக் கடவாய்,
இதற்குக் காரணம் வேறொன்றுண்டு சொல்கிறேன் கேள். பூர்வ ஜன்மத்திலே நீ ஒரு பிராமணனாகப் பிறந்து,
தாய் தந்தையருக்குப் பணிவிடைகள் செய்தும், ஏகாக்கிர சித்தத்துடன், என்னையும் ஆராதித்து வந்தாய்.
சிலகாலம் சென்ற பிறகு, உனக்கு யௌவன வயது வந்தபோது, சர்வாபரண பூஷிதனும் சகல போக சம்பன்னனும்
மகா சுந்தர தேகமுடையவனுமான ஒரு ராஜகுமாரன் உனக்கு நண்பனானான்.
அப்போது நீ அவனுடைய ஐசுவரிய போகங்களைக் கண்டு ஆசைப்பட்டு, ராஜபுத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று இச்சித்தாய்.
ஆகையால் உன் மனோரதத்துக்கு ஏற்றதாக உனக்குத் துர்லபமான உத்தானபாதனது மாளிகையில் பிறந்தாய்.
என்னைத் துதியாத மற்றவர்களுக்கு ஜகத் பூசிதமான சுவாயம்புவமநுவின் வமிசத்தில் பிறவியுண்டானது கிட்டாததாகும்.
இப்பொழுதும் நீ அத்யந்த பக்தியால் என்னை மகிழ்வித்தாய்.

என்னிடத்தில் சித்தத்தை நிறுத்தி என்னைத் தியானித்த மனிதன் அதிசீக்கிரத்தில் சர்வோத்தமனான மோட்சத்தை அடைவானானால்,
அற்பமான சொர்க்காதி பயன்களை அடைவதில் விந்தையில்லை. நீயும் எனது அனுக்கிரகத்தினால் மூன்று உலகங்களுக்கும்
மேன்மையானதாய் சந்திர, அங்காரக, புத, பிரகஸ்பதி ஸ்தானங்களுக்கும், நட்சத்திர மண்டலத்துக்கும்,
சப்த ரிஷிகளின் மண்டலத்திற்கும் விமானரூடராய்ச் சித்தர்கள், சஞ்சரிக்கிற ஸ்தானங்களுக்கும் அதியுன்னதமாய்
திகழும் ஸ்தானத்தை அடைந்து, சுகமாய் இருப்பாயாக. தேவதைகளில் சிலர் நான்கு யுகங்கள் வரையிலும்
சில மநுவந்தரப் பரியந்தமுமல்லாமல் அதிக காலம் இருக்கமாட்டார்கள். நீயோ எனது கிருபையால்,
கல்ப காலம்வரை அந்தச் சர்வ உன்னத ஸ்தானத்தில் சுகமாக இருக்கக் கடவாய்.
உன்னுடைய தாயான சுநீதியும் திவ்ய விமானத்தில் ஏறிக்கொண்டு, நட்சத்திர ரூபமாய் பிரகாசித்துக் கொண்டு
கல்பாந்த பரியந்தமும் உன் அருகிலேயே இருக்கக் கடவள். வானத்திலே துருவ நட்சத்திரமாய்த் திகழும்
உன்னை எவனாகிலும் அதிகாலையிலும் மாலையிலும் மனவுறுதியுடன் கீர்த்தனம் செய்வானாகில்
அவன் மகாபுண்யத்தைப் பெறுவான் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இவ்விதமாக திருமாலிடம் வரம் பெற்ற துருவன், சர்வலோகன்னத ஸ்தானத்தை அடைந்தான்.
தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்ததனாலும் தவச்சிறப்பாலும், ஸ்ரீமத்துவாத சாக்ஷர மகாமந்திர மகிமையினாலும்
மகான்மாவான துருவனுக்கு உண்டான அபிமானத்தையும், ஐஸ்வரியத்தையும் பார்த்த அசுரகுருவான
சுக்கிராச்சாரியார் மகிழ்ந்து, சப்த ரிஷிகளும் எந்த மகாத்மாவை குறித்துக்கொண்டு சஞ்சரிக்கின்றனரோ,
அந்தத் துருவனது மேன்மையான தவத்தின் சிறப்பை என்னவென்று சொல்வேன்?
இது வெகுவிந்தையானது இந்தப் பிரபாவத்தைக் கொண்டாட யாராலே ஆகும்?
இதமும் சத்தியமுமான வாக்குள்ள துருவனின் தாயான சுநீதியின் மகிமையை வர்ணிக்கத்தக்க கவிகளும் உலகில் உண்டோ?
அந்தப் பெண்ணரசி துருவனைக் கர்ப்பத்தில் தரித்ததால்; சர்வ உத்தமும் நிலையான தன்மையும் உடைய
அந்தத் திவ்விய ஸ்தானத்தையடைந்தாள் என்ன அதிர்ஷ்டம்! என்ன விந்தை! என்று சில கவிகளால் துதித்தார்.

மைத்ரேயரே! துருவன் சர்வோன்னதமான பதவியைப் பெற்றதைக் கண்டு
எந்த மனிதன் கீர்த்தனம் செய்வானோ, அவனது சகல பாவங்களும் நிவர்த்தியாகும்.
சொர்க்க லோகத்தில் வாசஞ்செய்வான். அன்றியும் அவன் வானத்திலும் பூமியிலும்
ஸ்தானப் பிரஷ்டமாகாமல் சகல சவுபாக்கியமும் கொண்டவனாய்த் தீர்க்காயுளுடன் வாழ்வான்!

———–

13. பிருது சக்கரவர்த்தியின் சரிதம்

துருவ சரித்திரத்தை பராசரர் கூறிவிட்டு அந்த வமிசத்தின் வரிசையையும் கூறலானார்.
அருந்தவஞ் செய்து ஸ்ரீமந் நாராயணனுடைய கிருபையினால் சர்வ உத்தமமான பதவியை அடைந்த துருவன்,
சம்பு என்பவளை திருமணம் செய்து கொண்டான்.
அவனுக்கு சிஷ்டி, பவியன் என்ற பிள்ளைகள் இருவர் பிறந்தார்கள்.
அவர்களில் சிஷ்டி என்பவன், சுச்சாயை என்பவளைத் திருமணம் செய்து கொண்டு
ரிபு, ரிபுஞ்சயன், ரிப்பிரன்; விருகலன், விருக தேஜசன் என்னும் பிள்ளைகள் ஐவரைப் பெற்றான்.
அவர்களில் ரிபு என்பவன் பிரகதீ என்ற மனைவியிடத்தில் சாட்சுஷன், சர்வதேஜசன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றான்.
அவர்களில் சாட்சுஷன் வருண சந்ததியில் பிறந்தவரும் வீரணாப் பிரஜாபதிக்கு மகளுமான புஷ்கரணியிடத்தில்
ஆறாவது மநுவந்தரத்துக்கு அதிபதியான மநுவைப் பெற்றான்.
அந்த மநுவுக்கு வயிராசன் என்ற பிரஜாபதியின் மகளான நட்வளை என்பவளிடத்தில்
ஊரு பூரு, சதத்தியும்னன், தபஸ்வி, சத்தியவான், சுசி, அக்கினிஷ்டோமன், அதிராத்திரன், சுத்தியும்னன், அபிமன்யு
என்னும் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள்.
ஊரு என்பவன், அக்கினியின் குமாரியை மணந்து மகா தேஜசுடைய அங்கன் சுமனசு, சுவாதி, கிரதி அங்கிரசு, சிபி
என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான்.
அங்கனுக்கு மிருத்து புத்திரியான சுநீதை என்பவளிடத்தில் வேனன் என்பவன் பிறந்தான்.
மகா முனிவர்கள் புத்திரார்த்தமாக அந்த வேனன் என்பவனது வலது கையைக் கடைந்தனர்.
அப்போது அதனிடமிருந்து பிருது என்பவன் பிறந்தான். அவன் பிரஜைகளின் நன்மைக்காக தேனு ரூபம் தரித்த
பூமியிலிருந்து வேண்டிய பொருள்களைக் கறந்து கொடுத்தான்! இவ்வாறு பராசரர் கூறிவரும்போது,
மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! வேனனுடைய வலது கரத்தை மகரிஷிகள் கடைந்தார்களே.
அதிலிருந்து பிருது என்பவன் எப்படித் தோன்றினான்? அதை விவரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டார்.

பராசரர் கூறலானார்: மைத்ரேயரே!
மிருத்துவுக்கு முதல் மகளான சுருதை என்பவள், அங்கன் என்னும் அரசனுக்கு மனைவியாகி
வேனன் என்ற புதல்வனைப் பெற்றாள். அந்த வேனன் மிருத்துவின் தோஷத்தினால் குணவீனனாய்ப்
பால்யம் முதல் துஷ்ட சுபாவமுடையவனாகவே இருந்தான்.
அவன் பட்டாபிஷேகம் செய்து கொண்டது முதல் யாரும் இன்று முதல் யக்ஞங்களைச் செய்ய வேண்டாம்.
தானங்கள் கொடுக்க வேண்டாம் ஓமங்கள் செய்யவேண்டாம். நானே யக்ஞங்களுக்கு அதீஸ்வரன்!
என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்று பறையறைவித்தான்.

அதைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் அந்த அரசனிடம் சென்று, அரசே!
நாங்கள் தேசத்துக்கும் மக்களுக்கும் இதமான தீர்க்க சத்திர யாகம் செய்து, யக்கிய ஈசுவரனான ஸ்ரீஹரியை ஆராதிக்கிறோம்.
அதனால் உனக்கும் யக்ஞ பாகத்தில் பங்கு கிடைக்கும். யக்ஞ புருஷனான ஸ்ரீமந்நாராயணன்,
நாங்கள் செய்யும் வேள்வியினால் திருவுள்ளம் உவந்து, உனக்குச் சகல பீஷ்டங்களையும் வழங்கியருள்வான்.
எவனது ஆட்சியில் யாகாதி சத்கருமங்களாலே யக்ஞேசுவரனான புரு÷ஷாத்தமன் பூஜிக்கப்படுவானோ
அந்த அரசனுக்கு அவ்வெம்பிரான் சகல மனோரதங்களையும் அருள்வான்! என்று நயமாகக் கூறினார்கள்.

அதற்கு மன்னன் வேனன், என்னைவிட அர்ச்சிக்கத் தகுந்தவன் வேறு யார் உண்டு?
யக்ஞேசுவரன் என்று நீங்கள் கூறும் அந்த ஹரி என்பவன் யார்?
பிரேமா, விஷ்ணு, சிவன், இந்திரன், யமன்! வருணன், குபேரன், வாயு, அக்கினி, சந்திரன்! சூரியன், பூமி
என்ற தேவர்களும், மற்ற சுபானுக்கிரக ஆற்றலுடைய யாவரும் அரசனுடைய சரீரத்திலேயே இருக்கின்றனர்.
ஆகையால் மன்னவனே சர்வதேவ சொரூபி என்று சாஸ்திரங்கள் கூறுவதை அறிந்தே நான் கட்டளையிட்டான்.
ஆகவே, கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். மங்கையர் தங்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதே
முக்கிய தருமம் என்பது போல், அரசனாகிய என்னுடைய ஆக்ஞையை ஏற்று நடப்பதே உங்களுக்குத் தர்மமாகும் என்றான்.

அரசே! யக்ஞங்கள் செய்ய எங்களுக்கு அனுமதியுங்கள். தர்மத்தை நாசஞ்செய்ய வேண்டாம்.
சராசராத்மகமான பிரபஞ்சங்கள் எல்லாம் வேள்விகளிலே ஓமஞ்செய்யும் அவிசினாலேயே செழிப்படைகின்றன! என்றார்கள் ரிஷிகள்.
அவர்கள் கூறியதற்கு வேனன் இணங்காமல் பிடிவாதமாகவே இருந்தான். அதனால் முனிவர்களுக்கு கோபம் பொங்கியது.
அவர்கள், இவன் ஆதியந்தமில்லாதவனும் ஜகத்பிரபுவும் யக்ஞ புருஷனுமான ஸ்ரீயப்பதியை இகழ்கிறான் அல்லவா?
இவன் ராஜ்ய பரிபாலனத்துக்குத் தகுந்தவனல்ல; இந்தத் துராத்மாவைக் கொன்றாலும் நமக்குப் பாவம் வராது!
என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு, மந்திரங்களால் சுத்தி செய்யப்பட்டிருந்த குச தர்ப்பைகளாலே அந்த அரசனை அடித்தார்கள்.
அவன் பூர்வத்திலேயே; சர்வேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவையும் அவனது மகிமையை விளக்கும் வேதத்தையும்
அவனது ஆராதனையான யாகத்தையும் நிந்திப்பதாகிய அக்கினியால் தகிக்கப்பட்டிருந்ததால்
முனிவர்களின் தருப்பைப் புல்லின் அடிபட்டவுடனே உயிர் இழுந்து கீழே விழுந்தான்.

அந்த சமயத்தில் நான்கு திசைகளிலும் ஏராளமான துன்பும் தூசியும் பறந்து ஆகாயம் எங்கும் வியாபித்தது.
அதைக் கண்ட மகரிஷிகள் அங்கிருந்த மக்களைப் பார்த்து; இந்தத் தூசி என்ன காரணத்தால் உண்டாயிற்று? என்று கேட்டார்கள்.
அதற்கு ஜனங்கள், உங்களால் பூமண்டலம் அராஜகமானதினால் அனேக ஜனங்கள் ஆங்காங்கே பிரவேசித்துப்
பிறருடைய திரவியங்களை அபகரிப்பதற்காக வேகமாய் வருகிறார்கள்.
அத்தகைய கள்ளர்களின் கால்பட்ட வேகத்தினால் தூளிப்படலமாகிய இந்தத் தூசியும் தும்பும் தோன்றியது? என்றார்கள்.
அதைக்கேட்ட முனிவர்கள் ஆலோசித்து, ஒரு புத்திரனை உண்டாக்க வேண்டுமென்று தீர்மானித்து
அபுத்திரனான வேனனது தொடையைக் கடைந்தார்கள்.

அப்போது அதிலிருந்து எரிந்த கட்டையைப் போன்ற கறுப்பு நிறமும் விகாரமான முகமும்,
குட்டையான உடலும் கொண்ட ஒரு மனிதன் தோன்றி, முனிவர்களை நோக்கி, நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் நிஷீத (உட்கார்) என்று சொன்னார்கள். அதன் காரணமாக அவன் நிஷாதன் என்ற பெயரைப் பெற்றான்.
விந்தியமலை வாசியரான வேடர்கள் அவனது பரம்பரையில் உண்டானார்கள்.
ஆகையால் அவர்கள் நிஷாதர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாக மன்னன் வேனனின் பாபங்களெல்லாம்
ஒருங்கே திரண்டு புருஷாகாரமாகப் பிறந்தன. அன்று முதல் நிஷாத ஜாதி உலகத்தில் உண்டாயிற்று.
அதன் பிறகு முனிவர்கள் வேனனுடைய வலதுகையைக் கடைந்தார்கள்.
அந்தக் கையிலிருந்து அக்கினியைப் போல் ஜொலிக்கும் திவ்ய தேஜோவிராஜிதனும் மகாப் பிரதாபம் கொண்டவனுமான
ஒரு குமாரன் தோன்றினான். பிருது மாமன்னன் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்பட்டது,
அவன் பிறந்ததுமே ஆகாயத்திலிருந்து அசகவம் என்ற ஒரு வில்லும் திவ்வியமான பாணங்களும் விழுந்தன.
அவற்றை பிருது கைக்கொண்டான். அவன் தோன்றியதுமே சகல பூதங்களும் பெருமகிழ்ச்சியடைந்தன.

வேனனும் சற்புத்திரன் உண்டானதால் புத்து என்ற நரகத்திலிருந்து நீங்கிச் சொர்க்கத்தையடைந்தான்.
அப்போது சமுத்திரங்களும் நதிகளும் பிருதுவுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனித நன்னீரையும்
திவ்விய ரத்தினங்களையும் கொண்டு வந்து வணங்கி நின்றன. பிரமனும் ஆங்கிரசர் என்னும் தேவதைகளோடும்
சகல பூதங்களோடும், வந்து வேனனுடைய மகனான பிருது சக்கரவர்த்தியைச் சகல பூமண்டலங்களுக்கும்
அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தான். அப்போது பிருது சக்கரவர்த்தியின் வலது கையில், சக்கரம்
இருப்பதை பிருமா பார்த்து, இவன் நாராயண அம்சமுடையவன் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.

மைத்ரேயரே!
எவருடைய வலது ஹஸ்தத்தில்; விஷ்ணு சின்னமான சக்கரரேகை காணப்படுமோ அவர்கள்
தேவர்களாலும் வெற்றி பெறக்கூடாத பராக்கிரமமுடையவர்களாய்; மாமன்னர்களிலே உயர்ந்தவராய் விளங்குவார்கள்.
இவ்விதம்; பிருது சக்கரவர்த்தி முடிசூட்டிக்கொண்டு, முறைப்படி ஆட்சி செலுத்தி வரும்போது,
அவனது தகப்பனான வேனனுடைய உபத்திரவத்தினால் வருந்திய மக்கள், இவனது நற்குணங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
பிரஜைகளைக் காத்து, அவர்களுடைய அன்பைப் பெற்றதால்; அவன் அவனிராஜன் என்று வழங்கப்பட்டான்.
அவன் தேரில் ஏறிப் புறப்படும்போது சமுத்திரங்கள் இரையாமல் ஸ்தம்பித்தன.
பர்வதங்கள் எல்லாம் அவனுக்கு வழிவிட்டு நின்றன. அவனது விருதுக்கொடிகள் கிளைகளிலே படுமே என்ற
பயத்தினால் உயர்ந்த மரங்கள் தணிந்து நின்றன. பூமி உழாமலே விளைந்தது. நினைத்த மாத்திரத்திலேயே பயன்கள் சித்தித்தன.
பசுக்கள் வேண்டும் அளவு பாலைச் சுரந்தன. இலை மடிப்புக்களில் எல்லாம் தேன் நிறைந்திருந்து
பிரும்மாவைக் குறித்துச் செய்த வேள்வியிலே, இந்தப் பிருது மாமன்னன் தோன்றியவுடனே,
அந்த யக்கியத்தின் சுத்தியா காலத்தில் சூதனும் மாகதனும் தோன்றினர்.

இப்படிப் பிறந்த சூதமாகதர்களைப் பார்த்து மகாமுனிவர்கள், பிரதாப சாலியான பிருது மன்னனை
அவனது குணகர்ம வரலாறுகளைச் சொல்லித் துதியுங்கள்! இவன் துதிப்பதற்குத் தகுந்தவன் என்று கட்டளையிட்டார்கள்.
சூதமாகதர் தயங்கி, முனிவர்களே! இவர் இப்போது தானே பிறந்தவர்?
ஆகையால் இவரது குணங்களையும் புகழையும் நாங்கள் அறியோமே!
எதைச் சொல்லி, நாங்கள் இவரைப் புகழ்வோம்? என்று கேட்டார்கள்.

அதற்கு முனிவர்கள், இவன் சக்கரவர்த்தியும் மிக வலிவுடையவனுமாகி, உலகத்துக்கு இதமான பல செயல்களைச் செய்வான்!
ஆகையால் இவனுக்கு இனிமேல் விளங்கத்தக்க குணங்களைப் பற்றித் துதி செய்யுங்கள்! என்றார்கள்.
அதைக்கேட்டு, பிருது சக்கரவர்த்தியும் தன்னுள்ளே தனக்குத்தானே நினைக்கிறான்.
உலகத்திலே சற்குணங்களினால் மன்னனுக்குப் புகழும் பெருமையும் உண்டாகும்.
இம்முனிவர்கள் என்னைத் துதிக்கச் சொன்னதே நான் சற்குணங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்
என்பதற்கான ஓர் உபதேசமாகும். ஆகையால் நான் குணவான் ஆவேன்.
இம்மாகதர்கள் கீர்த்தனஞ்செய்யும் குணங்களை ஏற்று, இவர்கள் காட்டும் துர்க்குணங்களை விட்டு விடுகிறேன் என்று சித்தமாக இருந்தான்.

அப்போது சூதமாகதர்கள் அந்த அரசகுமாரனான பிருதுவை இந்த மகாராஜகுமாரன் சத்தியசீலன்; தானசீலன்;
பிரதிக்ஞையை நிறைவேற்ற வல்லவன்; செய்யத்தகாத காரியத்தைச் செய்யக் கூசுபவன்.
ஜெயசாலி பொறுமையுள்ளவன் நட்புக்குணமுடையான், மகாப் பிரதாபவான், துஷ்டர்களைத் தண்டிக்கும் குணமுடையவன்,
இனிய பேச்சுத் திறனுடையான்; பூஜிக்க தகுந்தவரைப் பூஜிப்பவன்; யாகசீலன்; பிராமண பக்தன்;
யோக்கியரிடத்தில் அன்புடையவன். சத்துரு மித்துருக்களிடம் சமபுத்தியோ பட்சபாதமற்று சகல விவகாரங்களையும் தீர்ப்பவன்!
என்று நல்ல குரலோடு நன்றாகத் துதி செய்தார்கள்.

சூதனும் மாகதனும் இவ்வாறு எடுத்துக் கூறிய சற்குணங்களையெல்லாம் பிருது மன்னன் தன் உள்ளத்தில்
பதிய வைத்துக்கொண்டு; அக்குணங்களுடன் ஆட்சி செய்து; பலவிதமான யாகங்களை நடத்தி
அதிக தட்சணை கொடுத்து வந்தான். அவனது தந்தை வேனன் மடிந்ததால்; பூமி அராஜகமாயிற்று.
அதனால் பிருது மன்னனது ஆட்சியின் ஆரம்பத்திலே; பிரஜைகள் அனைவரும் பசியால் வருந்தியவர்களாய்
அரசனிடம் சென்று அரசே! நீர் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பே; பூமண்டலம் அராஜகமாகி சகலவோஷதி
வர்க்கங்களையும் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விட்டது. ஆகையால் இப்போது ஆகார வசதியில்லாமல்
பிரஜைகள் பசி வாதையால் அழிந்து வருகின்றனர். அன்ன பானங்களைக் கொடுத்து எங்களை ரட்சிப்பதற்காகவே
பிரம்மா உங்களைப் படைத்து எங்களுக்கு வழங்கினார்.
ஆகையால் பசியால் பீடிக்கப்பட்ட எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று முறையிட்டார்கள்.

அதைக் கேட்ட பிருது மன்னன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, அசகவம் என்ற வில்லையும் அம்புகளையும்
எடுத்துக் கொண்டு பூமியை எதிர்க்கச் சென்றான், அப்போது பூமாதேவியானவள்;
பசுவின் ரூபத்தைத் தரித்து பயந்து ஓடினாள். மன்னனும் அவளை விடாமல் பின் தொடர்ந்து சென்றான்.
அதனால் பூதேவி பிரம்மலோகம் முதலிய உலகங்களுக்கும் ஓடிச்சென்று எங்கும் அடைக்கலம் அடைய முடியாமல்
வில்லும் கையுமாய்த் தன்னைத் துரத்திவரும் வேந்தனை நோக்கி; பிருது மன்னனே!
பெண் வதையினால் பாதகம் சம்பவிக்கும் அல்லவா, அதையறிந்தும் ஏனிப்படிச் செய்கிறாய்? என்று கேட்டாள்.
வசுந்தரையே! துஷ்டகாரியஞ் செய்பவரை வதைப்பதால் பலருக்கு நன்மையுண்டாகுமானால்
அப்படிப்பட்ட வதையைச் செய்வதால் புண்ணியம்தான் உண்டாகும்! என்றான் பிருது.

அரசே! பிரஜைகளுக்கு இதமுண்டாவதற்காக என்னை அழித்தால்,
சதுர்வித பூதசாதங்களுக்கும் ஆதாரம் என்ன? என்றாள் பூமிதேவி.
உற்று அவளை பிருது நோக்கி வசுந்தரா என்னுடைய ஆக்ஞையை மீறி துர்விநீதையாய் நடக்கிற உன்னை
என்னுடைய அம்புகளால் சங்கரித்து எது யோக சக்தியினால் சகல பிரஜைகளையும் தரிக்கிறேன்! என்றான்.

அதைக்கேட்ட பூதேவி பயத்தால் நடுங்கி, பிருதுவை வணங்கி அரசே!
உபாயத்தினால் சகல காரியங்களும் சிந்திக்குமேயல்லாமல் வேறு வகையால் சித்திக்காது.
ஆகையால் நான் ஓர் உபாயம் சொல்கிறேன். கேட்பாயாக உலகத்தில் உண்டான ஓஷதி நிகரங்களையெல்லாம்
நான் என்னுள்ளேயே அடங்கும்படி கிரகித்திருக்கிறேன். ஆகையால் அவை என்னிடம் க்ஷீரரூபமாக இருக்கின்றன.
வேண்டுமானால் பால்ரூபமாக இருக்கும் அந்த ஓஷதிகளை உலக நன்மைக்காக நான் வழங்குகிறேன்.
தகுந்தவொரு கன்றையுண்டாக்கிக் கொடுப்பாயாக. அந்தக் கன்றினிடமுள்ள அன்பினால் பால் ரூபமாகவுள்ள
ஓஷதிகளைக் கறக்கச் செய்வேன். நான் கொடுக்கும் க்ஷீரங்கள் ஜகமெல்லாம் வியாபிக்கும் பொருட்டு
தடையாகவுள்ள மலைகளையெல்லாம் விலக்கி; என்னை மேடுபள்ளமில்லாமல் நிரவவும் என்றாள்.

பிருதுவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லித் தன்னுடைய வில்லின் நுனியால் அவற்றைப் புறத்தே தள்ளி
பூமண்டலத்தைச் சமமாகச் செய்தான். மைத்ரேயரே! பூர்வ காலத்தில் மலைகள் எல்லாம் மிகவும் நெருங்கி
முழுவதும் பரவியிருந்ததாலே பூமண்டலத்தில் நகரப்புரங்களும் கிராமங்களுமாகிய குடியிருப்புகள் பிரிவு படாமல் இருந்தன.
பயிர்த்தொழிலும் பசு வளர்ப்பும் வாணிபமும் இல்லை. பிருது மன்னன் முடிசூட்டிக் கொண்டது முதல் இவ்வேறுபாடுகள் உண்டாயின.
எங்கெங்கே பூமியானது மேடு பள்ளங்கள் இல்லாமல் சமமாக இருக்குமோ அங்கங்கே, புரங்களையும் கிராமங்களையும்
அந்த அரசன் ஏற்படுத்தி, அவற்றில் பிரஜைகளை வசிக்கச் செய்தான். பூர்வத்தில் கந்த, மூல பலாதிகளே
பிரஜைகளுக்கு ஆதாரமாக இருந்தன. ஜகம் அராஜகமானபோது அவைகளும் கிடைப்பது கஷ்டமாயிற்று.

ஆகையால் பிருது மன்னன் சுவாயம்புவமனுவைக் கன்றாக்கி தனது ஹஸ்தத்தை பாத்திரமாகச் செய்து,
தேனுரூபிணியான பூமியினிடத்தில் சகல ஸஸ்யங்களையும் கறந்தான். அதனால் பிரஜைகள் மகிழ்ச்சியடைந்து,
அவன் உண்டாக்கிய ஆகாரத்தினால் பலத்தையும் சக்தியையும் பெற்று சுகமாக இருந்தார்கள்.
அவன் கொடுத்த அன்னத்தால் தான் இன்றளவும் பிரஜைகள் ஜீவித்திருக்கின்றனர்.
பிருது மன்னன் பூமிக்குப் பிராணனைக் கொடுத்ததால் தந்தையானான் அந்தக் காரணத்தாலேயே
பூமிக்கு பிருத்வி என்ற பெயர் உண்டாயிற்று.

பிறகு தேவதைகளும், முனிவர்களும், தைத்தியர்களும், ராக்ஷசர்களும், கந்தருவர்களும், நாகர்களும்,
பிதுர்க்களும், விருட்சங்களும், பிருது மன்னனின் கருணையால் தத்தமது சாதிக்கான பாத்திரத்தையும்
கன்றையும் கறப்பவனையும் உண்டாக்கி, தங்களுக்குரிய மகிழ்ச்சியை அடைந்தார்கள்.
சகல பூததாரணியாயும், எல்லாவற்றையும் உண்டாக்குபவளாயும், காப்பவளாயும்,
ஸ்ரீமகாவிஷ்ணுவின் பாதாம்புயத்தில் பிறந்தவளுமான பூமாதேவி என்னும் பிருதிவி முன்புபோல்
சகல பூதங்களுக்கும் இஷ்டங்களைக் கொடுக்கத் துவங்கினாள்.

மைத்ரேயரே!
இவ்விதமான வேனன் மன்னனின் குமாரனான பிருது சக்கரவர்த்தி புகழுடையவனாய் விளங்கினான்.
எவன் இத்தகைய பிருது மாமன்னனுடைய சரித்திரத்தைப் படிக்கிறானோ, படிக்கக் கேட்கிறானோ,
அவன் பாவந்தீர்ந்து, துர்ச்சொப்பன பயமில்லாமல் சுகமாக இருப்பான்!

——————

14. பிரசேதசர்களின் இலட்சியம்

பராசர முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே!
பிருது மன்னனுக்கு அந்தர்த்தானன்; வாதி என்றும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள்.
அந்தர்த்தானன் திருமணம் புரிந்து கொண்டு சிகண்டி நீ என்னும் மனைவியிடம் ஹவிர்த்தானன் என்ற மகனைப் பெற்றான்.
அவனுக்கு அக்கினியின் மகளான தீக்ஷிணையிடத்தில் பிராசீனபர்ஹி, சுக்கிரன், கயன், கிருஷ்ணன், விரசன், அசினன்
என்று ஆறு குமாரர்கள் உண்டாயினர். அவர்களில் ஹிவர்த்தானனின் மூத்த மகனான பிராசீனபர்ஹி என்பவன்,
பிராசீனக்கிரகங்களான தருப்பைகளை பூமியில் பரப்பி யக்ஞங்கள் செய்ததால் அவனுக்கு பிராசீனபர்ஹி என்ற பெயர் உண்டாயிற்று.

அவன் சமுத்திரனின் புதல்வியான சுவர்ணை என்பவளைக் கல்யாணம் செய்து கொண்டு
பிரசேதர்கள் என்னும் பத்துப்பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் தனுர் வேதத்தில் கரை கண்டவர்கள்.
அவர்கள் அனைவரும் ஒரே பயனை அபேட்சித்து, ஒரே தர்மத்தைச் செய்து, சமுத்திர நீரில் பதினாயிரம் ஆண்டுகள்
மூழ்கியிருந்து தவஞ்செய்தார்கள். ஏனெனில், பிரும்மாவின் கட்டளைப்படி பிராசீனபரிஹியானவன்
பிரஜைகளை அபிவிருத்தி செய்ய நினைத்தான். தன் புத்திரரான பிரசேதசர்களை நோக்கி,
பிள்ளைகளே! வேததேவனான பிதாமகர், பிரஜாவிருத்தி செய்யும்படி என்னை நியமித்தார்.
நான் அப்படியே ஆகட்டும் என்று அவரது கட்டளைக்கு இசைந்தேன்.
ஆகையால், நீங்கள் எனக்குப் பிரியமாகும்படிப் பிரஜாவிருத்தி செய்யுங்கள் என்றார்.
பிரசேதசரும் தந்தையின் வாக்கை ஏற்று, ஐயா! நாங்கள் பிரஜாபிவிருத்தி செய்யத்தக்க ஆற்றலையுடையவராக,
எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அதை விளங்கச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள்.

பிராசீனபரிஹி தன் புத்திரர்களைப் பார்த்து, ஸ்ரீவிஷ்ணுவை ஆதரித்து
ஒருவன் தன் இஷ்டத்தைப் பெறுவானே அல்லாமல், வேறு ஓர் உபாயத்தினாலும் இஷ்ட சித்தியைப் பெறமுடியாது.
இனி நான் சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. ஆகையால் உங்கள் இஷ்டம் சித்தியாக வேண்டும் என்று
விரும்பினால் ஸ்ரீகோவிந்தனை ஆராதனை செய்யுங்கள். பிரஜாவிருத்தி செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள்,
புருஷனுக்குத் தர்மார்த்த காம மோக்ஷம் என்கின்ற நான்குவித புருஷார்த்தங்களிலே அபிலாஷையுண்டானால்,
ஆதியந்தரகிதனும் பகவானுமான புரு÷ஷாத்தமனை அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆதிகாலத்தில் பிரும்மா ஜனார்த்தனனை ஆராதித்துத் தான் சிருஷ்டிக்கும் ஆற்றலைப் பெற்றான்.
அதுபோல், உங்களுக்கும் அச்சுதனை ஆராதிப்பதால் பிரஜா விருத்திக்குரிய சாமார்த்தியமும் உண்டாகும்! என்று சொன்னான்.

அதைக்கேட்ட பிரசேதசர்கள் பத்துப் பேரும் தந்தையின் வாக்குப்படி தவஞ்செய்ய நிச்சயித்தார்கள்.
அதனால் சமுத்திரத்திலே மூழ்கி ஏக சிந்தனையுடன் சர்வலோக சரண்யனும் ஜகத்பதியுமான
ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடித்தாமரைகளில் மனதை நிறுத்தி, பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்த வண்ணம்
சகல அபீஷ்டங்களையும் வழங்கவல்ல லக்ஷ்மி நாராயணனை மனமாரத் துதித்தார்கள்.

இவ்வாறு பராசரர் கூறிவரும்போது மைத்ரேயர் அவரை நோக்கி முனிவரே!
பிரசேதசர்கள் சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டு ஸ்ரீவிஷ்ணுபகவானைத் துதித்தார்கள் என்றீர்கள்.
அந்தத்தோத்திரத்தை அடியேனுக்குச் சொல்ல வேண்டும் என்றார்.

அதற்குப் பராசரர் பிராமண உத்தமரே! பக்திப் பரவசத்தினால் தன்மயமாய் சாகா ஜலத்தில் நின்று கொண்டு,
பிரசேதசர்கள் செய்த ஸ்ரீவிஷ்ணு ஸ்துதியைச் சொல்கிறேன். அமைதியாகக் கேளுங்கள்! என்று கூறலானார்.

சகலமான சப்தஜாதங்களும் எங்கே சென்று நிலைபெறுமோ அத்தகைய சகல உலகங்களுக்கும்,
சிருஷ்டி சங்காரகர்த்தாவான பரமபுருஷனை நாங்கள் வணங்குகிறோம்!
சூரிய சந்திராதி சோதிக் கணங்களையும் பிரகாசிக்கச் செய்யும் அந்தப் பிராகிருத ஜோதிமயனும்
உபமானரகிதனும் நுண்ணிய ரூபனும், கால பரிச்சேதமில்லாதவனும் சராசரத்மகமான ஜகத்துக்குக் காரண பூதனுமான
ஸ்ரீவிஷ்ணு மூர்த்திக்குத் தெண்டஞ் சமர்ப்பிக்கிறோம்!
எவனுக்குப் பகலானது முதல் ரூபமாகவும் இரவு இரண்டாவது ரூபமாகவும், சக்தி மூன்றாவது ரூபமாகவும் இருக்குமோ
காலவடிவான அந்தப்பரந்தாமனுக்குத் தண்டனிடுகிறோம்.

எவன் அமிர்தமாகித் தினந்தோறும் தேவதைகளாலும் பிதுர்க்களாலும் உண்ணப்படுகிறானோ
எவன் ஓஷதிகளைக் கொண்டு எல்லாவற்றிற்கும் ஜீவனாக விளங்குகிறானோ,
அந்தச் சந்திரரூபியான பகவானுக்குத் தண்டனிடுகிறோம். எவன் உஷ்ணமயமாகித் தனது கிரணங்களால்
இருளைப் போக்கி ஆகாயத்தை ஒளிரச் செய்து கொண்டு, தாபத்திற்கும் சயத்திற்கும் ஜலத்திற்கும் காரணமாக இருக்கிறானோ
சூரியாத் மகனான அந்தப் பகவானுக்குத் தண்டனிடுகிறோம்!
எவன் கடினமான ரூபமுள்ளவனாய் இந்தவுலகத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு,
சப்த, ஸ்பரிச, ரூப, ரச கந்தங்களுக்கு ஆசிரயமாய் விளங்கிறானோ அந்தப் பூமிஸ்வரூபியான எம்பெருமானை வணங்குகிறோம்!

சுக்கிலமும் சுரோணிதமுமாய், உலகங்களுக்குக் காரணமாக இருக்கிற ஜலம் என்பது யாதோ,
பக்தாக்ஷகனுடைய அந்த ஸ்வரூபத்துக்கு வந்தனஞ் செய்கிறோம். எவன் சகல தேவதைகளுக்கும் மூலமாக இருந்து
கவ்யத்தைப் புசிக்கிறானோ, அந்த அக்னி ஸ்வரூபியான பரமாத்மாவுக்குத் தெண்டனிடுகிறோம்!
பிராண அபானதி ரூபமாகச் சரீரங்களிலே இருந்து கொண்டு, எப்பொழுதும் சுவாசிப்பது போன்ற செயல்களைச் செய்பவனாகவும்,
ஆகாயத்தினின்று முற்பன்னனாயும் இருக்கிற வாயுதேவதா ஸ்வரூபியான ஜெகதீஸ்வரனுக்குத் தெண்டனிடுகிறோம்!
எவன் சர்வபூதங்களுக்கும் அவகாசம் கொடுத்து, அனந்தமூர்த்தியாயும் சுத்தமாயும் இருக்கிறானோ
அத்தகைய ஜகத்துக்கு கர்த்தாவாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிரணாமஞ் செய்கிறோம்!
எவன், க்ஷரமும் அக்ஷரமும் ஆன இந்திரிய ஸ்வரூபியாய், சப்தாதி விஷயங்களைக் கிரகித்துக் கொண்டு,
ஞானத்துக்கு ஆதாரமாக இருக்கிறானோ, அந்தப் பிரணதார்த்திஹரனான் பெருமானுக்குத் தெண்டம் சமர்ப்பிக்கிறோம்!
இந்திரியங்களாலே கிரகிக்கப்பட்ட சப்தாதி விஷயங்களை ஆன்மா அறிவதற்குக் கருவியாய் நிற்கும்
மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்று சொல்லப்பட்ட அந்தக்கரண சொரூபியான சர்வேசுவரனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்!

அளவில்லாதவனான எவனிடத்திலிருந்து சகல பிரபஞ்சமும் இருக்கிறதோ, எவனிடத்திலிருந்து அவை உண்டாயிற்றோ,
எங்கே லயிக்கிறதோ, அந்தப் பிரகிருதி ரூபமுடையவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம்!
எவன் பிராகிருதமான சத்வாதி குணங்களல்லாமல் சுத்தனாக இருந்து பிரகிருதி சம்பந்தமுடைய
சத்துவாதி குணங்களைக் கொண்டவனைப் போலப் பிராந்தியினால் தோற்றமளிக்கிறானோ
அந்த ஜீவாத்மா ரூபியான புரு÷ஷாத்தமனுக்கு தண்டம் சமர்ப்பிக்கிறோம்.
அறிவு குறுகுவதும் விரிவதுமான விகாரமில்லாதவனும், பிறப்பற்றவனும், சுத்தனும் பிரகிருதி சம்பந்தமில்லாதவனும்,
பிரகிருதி புருஷர்களைவிட உயர்வுள்ளவனுமாக இருக்கிற மூத்த ஜீவன் உண்டோ அந்த ஸ்வரூபத்தில் விளங்குகின்ற
ஸ்ரீவிஷ்ணுபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்!

தீர்க்கமும் ஸ்தூலமும் சூட்சுமமும் ரத்தமும் நீலமுமல்லாமல் இருப்பதாய், ஒட்டுதலும் சாயையும் தேகமும் அவயவங்களும்
இல்லாததாய், இடைவெளி இல்லாததாய் இன்ப துன்பமுற்றதாய் சப்த ஸ்பரிச ரூபரச கந்தங்கள் இல்லாததாய்,
கண் மூக்கு காது முதலியவையும், வாக்கு பாணி பாதாதிகளும், அந்தக்கரணமும் இல்லாததாய்
நாமே தோத்திரங்களும் அன்னபானாதிகளில் உண்டாகும் சுகமும்;
தன்னைவிட வேறொரு தேஜஸும் தனக்கு ஒரு காரணமும் இல்லாததாய்;
பயம் பிரமம் நித்திரை ஜனன மரணம் முதலிய குற்றங்கள் இல்லாததாய்,
சலனமில்லாததாய், பரமேசுரத்துவாதி சகல கல்யாண குணங்களுடையதாய் யாவற்றுக்கும் இருப்பிடமாய்,
தனக்கு ஓர் ஆதாரமற்றதாய், வாக்கு மனம் இரண்டுக்கும் எட்டாததாய், கண்ணால் காணக்கூடாததாய்,
இவ்விதமாக எல்லாவிதத்திலும் உயர்ந்ததாய், பரமபிராப்பியமுமாய் விளங்கும் அந்த ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய
ஸ்வரூபத்தை நாங்கள் வணங்குகிறோம்! என்று பிரசேதசர்கள் எம்பெருமானைத் துதித்த வண்ணம்
சமுத்திர ஜலத்தில் இருந்தவாறு பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்தார்கள்.

பிறகு ஷட்குண சம்பன்னனான ஹரி அவர்களிடம் கிருபை கூர்ந்து, அந்த சமுத்திர ஜலத்திலேயே பிரத்யட்சமானார்.
அப்பொழுது மலர்ந்த நீலோத்பல மலரிதழைப் போன்ற நீலச்சாயையுடன் பிரகாசிக்கும் திவ்வியத் திருமேனியோடும்
கிரீட மகாகுண்டலங்களாகிய திவ்விய ஆபரணங்களோடும், சங்கு சக்கராதி திவ்ய ஆயுதங்களோடும்,

ஸ்ரீமந்நாராயணன் தோன்றி, பட்சியரசான பெரிய திருவடியின் (கருடனின்) திருத்தோளில் அமர்ந்து வந்து சேவை சாதித்தார்.
அவரைப் பிரசேதசர்கள் தங்கள் கண்குளிரக் கண்டு பக்திப் பரவசத்தால் தலைவணங்கித் தண்டப் பிரணமங்கள் செய்து,
கைகூப்பி வணங்கி நின்றார்கள். பகவான் அவர்களை நோக்கி பிரசேதசரே உங்கள் தவத்தைக் கண்டு மகிழ்ந்த நான்
உங்களுக்குப் பிரசன்னமானேன். உங்களுக்கு வேண்டும் வரங்களை கேட்பீராக என்று அருளிச் செய்தார்.

அவர்கள் மீண்டும்; ஸ்ரீயப்பதியை வணங்கி எமது தந்தையின் வாக்குப்படி நாங்கள் பிரஜாவிருத்தி செய்வதற்கு
எங்களுக்குச் சாமர்த்தியம் ஏற்படும்படி கிருபை செய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தார்கள்.
பகவான் அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
பிரசேதசர்களும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தினால் இச்சித்த வரத்தைப் பெற்று,
கடலிலிருந்து எழுந்து தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—முதல் பாகம் —

February 28, 2021

ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 அம்சங்கள் -அத்தியாயங்கள் -ஸ்லோகங்கள் –
1-20–அஸ்திர பூஷண அத்யாயம் உச்சம் முடியும்
2-பூகோளம் காலம் இதன் கடைசியில் -ஆத்மா பரமாத்மா சம்பந்தம் -ரிபு கதை
3-வேதங்கள் -வியாசர் பிரிப்பது
4- அவதாரங்களின் விவரணம்
5- கிருஷ்ண அவதார விவரணம்
6- கலி

——

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம் –கிட்டத்தட்ட 6000 ஸ்லோகங்கள் இதில்

1. புராணம் கேட்ட வரலாறு–
2. பிரபஞ்ச உற்பத்தி–
3. காலப் பிரமாணம்–
4. ஸ்ரீவராஹ அவதார வைபவம்–
5. தேவ மனிதப் படைப்புகள்–
6. வருணாசிரமங்கள்-
7. பிருகு முதலியவர்களின் படைப்பு
8. ருத்திர சிருஷ்டியும் ஸ்ரீதேவி வைபவமும்

—————–

1. புராணம் கேட்ட வரலாறு

18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது ஸ்ரீ விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது.
ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார்.
அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார்.
என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்?
சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே
சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள்.
தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே!
உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன்.
தாங்கள் அருள்புரிய வேண்டும்! மேலும், இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது?
எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்?
நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் -பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும்
பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்?
இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும்
பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும்
தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மகாகல்பங்களையும்,
நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும்,
சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும்
வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும்,
பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன்.
வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள
தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார்.

அதற்குப் பராசர முனிவர், அவரை நோக்கிக் கூறலானார்.
தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலக உற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான
ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச் செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர்.
அதாவது, முன்பு ஒரு சமயம், விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன்.
உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும்படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன்.
அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர்,
பிள்ளாய் உன் கோபத்தை விட்டுவிடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது.
இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்!
யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை.
அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும்
அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய
கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள்.

ஆகையால், பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்தவிதமான அபராதமும் செய்வதறியாத
பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்துபோனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்திவிடு.
பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் –
நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து, என் யாகத்தை நிறுத்தி விட்டேன் -அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார்.
அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும்
(இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார்.

மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி,
பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக, பொறுமையடைந்தாய்.
ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய்.
கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி, உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம்.
அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்!
தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இதுதான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக
பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இரு வகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும்,
சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார்.
அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை, உனக்குச் சித்தியாகட்டும்! என்றார்.

இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம்
இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன.
மைத்ரேயரே! பெரியோரின் அருள்பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான், யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன்.
நன்றாகக் கேளும். புராணக்கருத்தின்படி பார்த்தால், உலகமானது ஸ்ரீவிஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு,
அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும்.
இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன.
அவரேதான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.

—————–

2. பிரபஞ்ச உற்பத்தி

மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி, அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார்.
விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய
திவ்விய மங்கள விக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான
ஸ்ரீமகா விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும் போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும்,
காக்கும் போது ஹரிரூபியாகவும், சங்கரிக்கிறபோது சங்கர ரூபியாகவும் இருந்து
வழிபடுவோருக்கு விடுதலை யளிப்பவருமான ஸ்ரீவாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக!
ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும், காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும்
காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி, அனாதியான பிரகிருதி வாசனையாலே,
கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக!
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய், நிமேஷான் மேஷ சூரிய கமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான
காலத்தையே தனது சரீரமாக உடையவராயும், அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும்,
சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக!
பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதிசூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய், எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய்
பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய்,
கல்யாண குணங்களால் புருஷோத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன்.
தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்த ஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய்,
அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு
தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து,
தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு,
தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை
தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள்.

பிறகு அவர்கள், உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும், எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும்,
யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க
அவர் அருளியதைச் சொல்கிறேன்.

பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள், உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில்
ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு, தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள்.
அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான்.
அந்த மாமுனிவரின் திருவருளால், நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக, ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து
இந்த மகா புராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும்,
தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய், சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய்,
தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய்,
தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும்
சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால்,
சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர்
என்று சொல்லக்கூடியவராய், சேதன அசேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும்
தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய, சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய்,
ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும்படிப் பிரகாசிப்பவராகையால்,
ஸ்ரீவாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார்.

சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும்
ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரேவிதமான சொரூபனுமாய், துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே,
நிர்மலராய் தோன்றுவதும், தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய்,
புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா?
அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான ஷேத்ரஞ்ஞன் முக்கிய சரீரம்.

அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர்.
இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன.
மூலப்பிரகிருதியும், சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின்
சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும்.
அது எப்படியெனில்
வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான ஷேத்ரஞ்ஞன் கலாகாஷ்டாதி ரூபமான காலமும்
ஸ்ரீவிஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும்.
சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின்,
அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல,
பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக.
இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள்: எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ,
அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது.
அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும்
மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று,
அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய்,
சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய்,
ஜகத்துக்குக் காரணமாய் காரணம், உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.

இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில், மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது.
மைத்ரேயரே!
வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள், பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில்,
அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும்,
சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல்
மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபத்தினின்று, பிரதானம் என்கிற பிரகிருதியும்
புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி, சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய்,
அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது
அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும்.

மைத்ரேயரே!
வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால்
மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது.
அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே, சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.

மைத்ரேயரே! பிரகிருதி சம குணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது
சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன் மயனும், சர்வக்தனும்
சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும், பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி, தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப்
பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற
சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து, பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார்.

எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது
யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ,
அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான்.
வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல
தானே சலனமுண்டாக்குகிறவனாய், சலிப்பிக்கப்படுவதுமான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான்.
ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும்,
வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும்
மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புரு÷ஷாத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே,
காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.

மைத்ரேயரே!
ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான
மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது.
தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய்,
விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது.
அப்பால், அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்றுவித அகங்காரம் பிறந்தது.
அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும்.
அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே, பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும்.
பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது
அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு, சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று.
அதிலிருந்து, சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது.
அந்த ஆகாசம் விகாரப்பட்டு, ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க, அதனால் காற்று தோன்றியது.
அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது.
அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.

ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது.
தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது, ரச தன்மாத்திரையான அப்புவும்,
ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு, கந்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று.
அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால்
பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள்
என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும்.
தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும், அற்புதப் பிரகாசமும், பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற
சாந்தமான சாத்வீக குணமும், வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும்,
நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும்.
இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும், தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன
தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள்.
வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள்.
இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம்.
ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.

இனி, இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்!
மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்!
இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள்,
வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள்,
வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள்,
ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள்,
(பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன்மேலும் அதிகமாகப் பெற்று,
அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால்,
சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும்
நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின.
அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும்,
தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன.
இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும்
நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய், ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும்
பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.

இப்படி, பஞ்ச பூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே
அபிவிருத்தியாயிற்றே யல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை, இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான
அதி விசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது.
இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகாபூத சரீரகனும்
ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார்.

அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும்.
உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன்மீது சுற்றியிருக்கிற கருப்பை,
கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள்,
மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து,
ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய
சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அதுபோலவே,
பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது.

அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர், பிரமரூபியாகி,
ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு,
அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய்,
லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும்
ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும், பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான்.

அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி, மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து,
ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில், சயனித்துக் கொண்டு பிறகு
பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி, முன்போலவே, பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.

ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன், அந்தந்தச் சொரூபங்களில் நின்று, சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால்,
பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து
சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுகமுடிவில் தானே சங்கரிக்கின்றான்.

ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும்
சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை.
ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் ஷேத்ரஞ்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும்
அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு
சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல,
பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும்.

இனிமேல், நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது,
சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில்,
படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன்-அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன்;
சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும்போது, பிரம்மாதிகளை இடையில் வைப்பது
ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும்படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன்.
ஆகையால் தான், மைத்ரேயரே! அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்!

———–

3. காலப் பிரமாணம்

பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச்
சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்? என்று மைத்ரேயர் கேட்டார்.

பராசர மகரிஷி கூறலானார் : மைத்ரேயரே!
அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு.
அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு.
அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான்.
ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன்.

நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று
உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து
மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு.
அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி பரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா!
அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய
சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.

இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன். மைத்ரேயரே!
நிமிஷகள் பதினைந்து கூடியது ஒரு காஷ்டை; அந்தக் காஷ்டை முப்பதானால் அது ஒரு கலை,
அந்தக் கலைகள் முப்பதானால் ஒரு முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு ஒரு அகோராத்திரம்;
அதாவது ஒருநாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் இரண்டு பக்ஷங்களோடு கூடிய ஒரு மாதம்
அந்த மாதம் பன்னிரண்டானால் தட்சணாயனம் உத்திராயணம் என்ற இரண்டு அயனங்கள் சேர்ந்து ஒரு வருஷமாகும்.
தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும்.
தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம்.
அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும்.
திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்தறு நூறு ஆண்டுகள்,
துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள்.
கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும்
சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம்
சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது,
கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது.
இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால்
சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும்.
அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக;

மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள்
ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள்.
தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும்.
இந்திராதி நூறு தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும்.
ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும்.
அது மனுஷிய மானத்தினாலே, முப்பது கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.
இப்படிப் பதினாலு மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும்.

அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும்
அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல்
தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள். அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித்
திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும்
அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய
அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால்,
ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய்,
முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன்.
இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான்.
இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும்
அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று.
அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது.
இது வராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!

————–

4. ஸ்ரீவராஹ அவதார வைபவம்

குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தைக் கொண்ட அந்தப் பிரம ஸ்வரூபியான பகவான்.
இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார் என்பதையும்
முந்திய பாத்தும கல்பத்தைப் பற்றிய பிரளயத்துக்குப் பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பைப் பற்றியும்
எனக்கு விளக்க வேண்டுகிறேன் என்று மைத்ரேயர் கேட்டார்.

பராசர மகரிஷி கூறலானார்.
மைத்ரேயரே! பிரஜாபதிகளுக்கு அதிபதியாய், நாராயணத்துமகனாய், தேவ தேவனுமான அந்தப் பிரமரூபியான பகவான்,
பிரஜைகளைப் படைத்த விதத்தைக் கூறுகிறேன். முன்பு சொன்னது போல சதுர்யுக சஹஸ்ர சங்கையான இரவெல்லாம்
யோக நித்திரை செய்து, விடியற்காலத்தில் நித்திரை தெளிந்து பிரபோதம் அடைந்து,
சத்வகுணம் மேலிட்டவனாகிய சதுர்முகப் பிரமன், சூனியமான மூன்று உலகங்களையும் படைக்கத் திருவுள்ளம் கொண்டான் –
பராத்பரனும் ஷட்குண சம்பன்னனும் அனாதியும் சர்வ ஜகத்காரண பூதனும் சதுர்முக ஸ்வரூபனுமான
அந்த ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே சகல லோகங்களுக்கும் பிரபு ஆவார்.
படைப்புக் காலத்தில் அவரே பிரமாவினிடத்தில் அனுப் பிரவேசித்துப் படைப்பைப் படைக்கின்றார்.

அவர், மகாஜலத்திலே சயனித்திருந்தார் அல்லவா? அதனால் மநுவாதி ரிஷிகள், நாராயண சப்த நிர்வசனத்தை
தெரிவிக்கிற சுலோகத்தை அருளிச் செய்தார்கள். நரசப்த வாச்சியனனான பரமாத்மாவினிடத்தில் ஜனித்த
உதகங்கள் நாரங்கள் என்று சொல்லப்படும். ஏனென்றால் அவை நாராயணருக்குப் பிறப்பிடமான படியினாலும்
அவரிடமிருந்து அவை தோன்றியதாலும், அவை பிரம்மனின் முதலாவது சயனத்தில் நிகழ்ந்ததாலும்
அவர் நாராயணன் என்று வழக்கப்பட்டார்.
இத்தகைய திவ்வியத் திருநாமமுடைய எம்பெருமான் நீர் மீது தாமரை இலை ஒன்று மிதக்க கண்டு,
ஏகார்ணவமான பிரளய யோகத்தில் பூமியானது மூழ்கி யுள்ளதாக முடிவு செய்து, அதனை மேலேயெடுக்க
முந்தைய கல்பங்களின் மஸ்ய, கூர்மாதி திவ்விய அவதாரங்களைச் செய்தருளியது போல
இந்தக் கல்பத்தில் ஸ்ரீவராகவதாரம் எடுக்க விழைந்தார். அத்தகைய திருவவதாரத்தை, வேதங்களால் சொல்லப்பட்ட
யாகாதிகர்மங்களால் நிரூபிக்கத் தக்கதாகவும், சர்வ லோக ரக்ஷணர்த்தமாகவும் தாம் மேற்கொண்டு,
ஜனக ஸனந்தனாதி யோகிகளால் வேதவசனங்களால் துதிக்கப் பெற்று, தமக்குத் தாமே ஆதாரமாகி,
ஏகார்ணவ பிரளயோதகத்தில் பிரவேசித்தருளினார்.
இவ்விதமாகப் பூமியாகிய தன்னை உத்தரிப்பதற்காகப் பாதாளத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானை.
பூதேவி யானவள் வணங்கி பக்தி பூர்வமாகத் துதிப்பாளாயினள்.

பூதேவியின் துதி:
தாமரை போன்ற திருவிழிகளையுடையவனே! சங்குசக்கரகதாதி திவ்விய ஆயுதமுள்ளவனே!
உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். பூர்வத்தில் மகார்ணவத்தில் மூழ்கிக் கிடந்த என்னை நீயே உத்தரித்தாய்;
இப்போதும் அது போன்றே என்னை உத்தரித்தருள வேண்டும். ஜனார்த்தனா! உன் மகத்தகங்கார தன்மாத்திரைகளும் பிரகிருதியும்,
சீவனும் யாவுமே உனது திருச்சரீரமல்லவோ! க்ஷத்திரக்கிய சொரூபனும் பரமாத்மாவும் சமஸ்த ஜகத் வியாபகனுமான உனக்கு நமஸ்காரம்!
அவ்வியக்தமான பிரபஞ்சமும் காலமும் சொரூபமாகவுடைய உனக்கு நமஸ்காரம்!
பிரம ரூப, ஸ்வயரூப, ருத்திர ரூபமும் தரித்து சர்வ பூதங்களுக்கும் சிருஷ்டி கர்ததாவாகவும் ரக்ஷகனாகாவும்
சங்காரகனாகவும் இருந்து கல்பாந்த காலத்தில் சகல பூதங்களையும் கிரகித்து மூன்று லோகங்களையும்
தண்ணீரானது பொங்கி அமிழ்த்தும் படிச்செய்து, பின்னர் அந்த மகா பிரளயத்திலேயே சயனம் செய்து,
பரம யோகிகளாலே கோவிந்தா என்று தியானிக்கப்படுபவனும், நீயே அன்றே!
பரமாத்பனும் திவ்வியனுமான உனது நிஜஸ்வரூபத்தை எவரே அறிவர்? நீ ஜகத்தை ரக்ஷிப்பதற்காக, லீலார்த்தமாகத் தரித்த
உனது அவதாரங்களை யன்றே தேவர்களும் ஆராதிக்கிறார்கள்? மோட்சத்தை விரும்பும் மாமுனிவர்களும் பர பிரமமான
உன்னையே ஆராதித்து முத்தராய் பரமானந்தத்தை அடைகின்றனர். யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதேயமும், தாரகனும்
பிரகாசகனுமாகையால் ஸ்ரீவாசுதேவன் என்கின்ற திருநாமம் கொண்ட உன்னை ஆராதிக்காமல் எவன் தான் முக்தியடைவான்?
மனத்தால் கிரகிக்கப்பகிற சுகம் முதலானதும், கண் முதலிய இந்திரியங்களாலே கிரகிக்கத்தக்க ரூபாதிகளும்
புத்தியினாலே பரிசோதிக்கும்படியான பிரமாணந்தரங்களும் உனது சொரூபங்களன்றே?

தேவதேவா! உன்னிடத்திலே பிறந்து, உன்னையே ஆஸ்ரயித்து, உனது சரீர பூதையாய் உன்னிடத்திலேயே
நிலைத்திருப்பவளாகையால் உலகங்கள் யாவும் என்னை மாதவி என்று சொல்லும்;
சகல ஞான சொரூபனே! நீ ஜெயசாலியாகக் கடவை! ஸ்தூலப் பிரபஞ்ச ஸ்வரூபனே! நீ வாழ்க! அவ்யயனே!
அளவில்லாதவனாகையனாலே அனந்தன் என்ற திருநாமமுடையவனே! வியக்த பூதாதி சொரூபனே; அவ்வியக்த ரூபனே!
உத்கிருஷ்டங்களுக்கும் நிசருஷ்டங்களுக்கும் ஆன்மாவானவனே! விசுவாத்மகனே! யக்கியங்களுக்கு அதிபதியே! நீ வாழ்க!
யக்யங்களும் வஷட்காரமும் நீயே! பிரணவமும் திரேதாக்கினிகளும் நீயே! சதுர்வேதங்களும் நீ!
யக்ஞத்திற்கு உரிய புருஷனும் நீ! ஓ! புருஷோத்தமா; சூரிய சந்திராதி கிரகங்களும், அசுவினியாதி நட்சத்திரங்களும்
மூர்த்தமான திரவியங்களும், மூர்த்தமல்லாதவைகளும் காணப்படுபவைகளும், காணப்படாதவைகளும்
நான் சொன்னவைகளும், சொல்லாதவைகளும் சமஸ்தமும் நீயே! சகலமான தேவதைகளுக்கும் மேலான ஸ்வாமி!
இப்படி யாவற்றுக்கும் ஆத்மபூதனான உனக்குத் தெண்டன் இடுகிறேன்.

இவ்விதமாகப் பூமிபிராட்டியானவள் வெகுவாய் ஸ்துதி செய்தாள். அந்தப் பூமியைத் தரிப்பவனான ஸ்ரீயப்பதியானவன்
வராக ரூபத்திற்கு அநுகுணமான சாம வேதமயமான இர்குர் என்ற சப்தத்தினாலே பூமிப்பிராட்டியார் செய்த தோத்திரத்திற்குத்
திருவுள்ளம் உகந்ததைக் காட்டியருளினான். பிறகு மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையுடையவனும்
கருநெய்தற் பூவையொத்து விளங்கும் திருமேனியுடையவனுமான மகா வராக ரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன்,
தனது கொம்பு நுனியினாலே பூமியை உயர எடுத்து மகா நீலமலைபோல பாதாளத்திலிருந்து எழுந்தருளினான்.
இவ்விதம் தோன்றிய ஸ்ரீயக்கிய வராக மூர்த்தியின் மூச்சுக்காற்று வேகத்தால் எழும்பிய வியர்வை ஜலமானது
ஜனலோகம் வரைப் பாய்ந்து, அங்கு பகவத் தியானஞ்செய்து கொண்டு மிகவும் தூயவராயிருக்கும்
ஜனக சனந்தருடைய தேகங்களிற்பட்டு, அவர்களை மேலும் தூயவராக்கியது.

அதே சமயத்தில், வராக மூர்த்தியாரின் குளம்புகளால் தாக்கப்பட்ட அந்த ஜலமானமானது அண்ட கடாகத்தினுள்ளே
பாதாளத்துக்கு வெகு இரைச்சலுடன் இறங்கிற்று. அந்த மஹா வராஹமூர்த்தியினுடைய சுவாச நிசுவாச வேகத்தால்
பூலோகவாசிகளான ஜனங்கள் தள்ளப்பட்டு, ஒதுங்கலாயினார்கள்.
இவ்வாறு பிரளயார்ணவோதகத்தினால் நனைந்த திருவுதரத்தோடு, தனது கோட்டுமுனையில் பூமியை எடுத்துக் கொண்டு,
ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார். அவர் தமது திவ்வியத் திருமேனியை உதறியருளுமளவில்,
அந்த வராக மூர்த்தியினுடைய ரோம கூபங்களின் நடுவே நின்று காணப்பட்ட ஜனக ஸனந்தன ஸ்னந்குமாராதியான
யோகிகள் ஆனந்தம் மிகுந்து பக்தியுடன் வணங்கித் துதி செய்தருளினார்கள்.

பிரமன் முதலான லோக ஈஸ்வரருக்கெல்லாம் மேலான ஈசுவரனே! சங்கு சக்கரம், கதை வாள் வில் என்ற
பஞ்சாயுதங்களைத் தரித்தவனே! முத்தொழில்களுக்கும் கர்த்தாவும் ஆள்பவனும் நீயே ஸ்வாமி!
வேதங்கள் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றன. யூபஸ்தம்பங்கள் உன்னுடைய கோரைப்பற்கள்
யக்கியங்களெல்லாம் உன்னுடைய தந்தங்கள் நானாவிதமான வேதிகைஸ்தான சயனம் எல்லாம் உனது திருமுகத்திலிருக்கின்றன.
அக்கினியே உனது நாக்கு! உன்னுடைய ரோமங்கள் தருப்பைப் புற்கள்; ஆகையால் யக்கிய ரூபமாய்
யக்கியத்தினால் ஆராதிக்கப்படும் புருஷன் நீயே இரவும் பகலும் உனது திருக்கண்கள் சகல வேதங்களுக்கும்
ஆதியான பிரணவமே உனது சிரசு புருஷ சூக்தம் முதலான சூக்தங்கள். எல்லாம் உன்னுடைய பிடரியின்
ரோமங்கள் சாமவேதமே உன்னுடைய கம்பீரமான நாதம் பிராக் வம்சமென்கிற அக்கினி சாலையின் முன்புறமானது உன்னுடைய திருமேனி!

இப்படியாக மூர்த்தியாய், அனாதியாயுள்ள ஷட்குண ஐசுவரியை சம்பன்னனான எம்பெருமானே!
உன் திருவடிவைப்பினாலே பூமியை ஆக்கிரமித்து பதம் கிரமம் என்ற ஏற்பாடுகளுடன்கூடிய அளவற்றதாய்,
ஆதியில் நின்ற சப்த பிரமமும் நீயே! அக்ஷர சொரூபியாயும் அழியும் தன்மையற்றவனாயும் சகல சொரூபியாயுமிருக்கிற ஸ்வாமி!
சராசர மயமான உலகங்களுக்கு எல்லாம் நீயே ஒப்பில்லாத ஈஸ்வரன்! தம்தம் விருப்பங்களைப் பிரார்த்திக்கத்
தக்கவனாக நீயே இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆகையால் உன்னையே பிரார்த்திக்கின்றோம்.
கிருபை செய்ய வேண்டும். திவ்வியமான உனது கோரைப் பல்லின் நுனியிலே காணப்படுகின்ற
இந்த சமஸ்த பூமண்டலமானது தாமரைத் தடாகத்திலே பிரவேசித்து விளையாடிய மதயானையானது
தனது கொம்பிலே, சேறுடன் கூடிய தாமரையைத் தூக்கிவந்தால் எப்படிக் காணப்படுமோ, அப்படித் தோற்றமளிக்கிறது.

ஒப்பற்ற மகிமையுடையவனே, ஓ ஜகந்நாதா! உண்மையான பொருள் நீ ஒருவனேயன்றி வேறொன்றுமில்லை.
எப்படியெனில், சராசர மயமான சகலமும் உன்னால் வியாபிக்கப்பட்டு உனது திருமேனியாக இருப்பதனால்,
இவையாவுமே உனது மகிமையாகும். நீயே பரமார்த்தமாகிறாய். உலகத்துக்குக் காரண பூதனாய்,
உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உன் மகிமை சொல்லாத முடியாததன்றே!
சத்து, அசத்து என்னும் விவேகம் இல்லாத அஞ்ஞானிகள், உன்னுடைய சரீரமான பிரபஞ்சத்தைப்
பிராந்தி ஞானத்தால் வேறான தேவமனுஷ்யாதி ரூபமாக நினைக்கிறார்கள்.
புத்தியீனர்களான ஜனங்கள் ஞானமயமான தமது நிஜ சொரூபங்களை அறியாமல்,
தான் அமரன் என்றும் தான் மனுஷியன் என்றும் இது மிருகம், இது தாவரம் என்றும் பிராந்தி வசத்தினாலே
நினைத்து மோகார்வணத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

ஆத்ம சொரூபத்தை எவர் ஞானசாரமாக அறிந்து பகவானை அனுபவிக்கத்தக்க யோக நிலைக்குத் தக்கதான
பரிசுத்த மனமுடையவர்களோ, அவர்கள் பிரகிருதிவிகாரமான தேவ மனுஷ்யாகி ரூபமாகக் காணப்படுகிற
இந்தப் பிரபஞ்சத்தையே ஞான குணமுள்ள ஆன்ம சொரூபமாகவும் உனது திருமேனியாகவும் காண்கிறீர்கள்;
யாவற்றிலும் அந்தர்மியாக இருக்கும் ஸ்வாமி! சகல உலகங்களுக்கு இருப்பிடமாக இருப்பவனே!
அறியக்கூடாத மகிமையை உடையவனே! சேவிப்பவர்களின் இதயம் குளிரத் தகுந்ததான செந்தாமரைமலர்
போன்ற திருக்கண்களையுடையவனே! இந்தப் பூமியை உத்தரித்து அடியேங்களுக்கு
சுகத்தினைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும்.
கோவிந்தா! நீ உலக உபகாரத்திற்காகவன்றே சிருஷ்டியில் பிரவேசிக்கிறாய் உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்.
அடியேங்களுக்குச் சுகம் அருள்வாயாக! என்று ஜகன சனந்தனர் முதலிய யோகிகள் துதித்தார்கள்.
இப்போது ஸ்ரீவராக ரூபமுடைய பரமாத்மாவானவன் மகார்ணவத்திலிருந்து பூமியை எடுத்து
பழையபடியே ஜலத்தின் மீது நிறுத்தி அருள்புரிந்தான்.

இவ்விதம், அந்தப் பெருவெள்ளத்தின் மேல் நிருமிக்கப்பட்ட பூமியானது, கப்பல்போல உருக்குவிந்து பரந்ததாகையாலே
அது அந்த மகார்ணவ ஜலத்தில் மிதந்ததேயல்லாமல் மூழ்கவில்லை. பிறகு, சர்வகாரணனும் அனாதியுமான ஸ்ரீஹரிபகவான்,
பூதேவி பிரார்த்தித்தவண்ணம் அந்தப் பூமியில் தன்னுடைய சங்கல்பமாத்திரத்தாலே, முன்பு எரிந்து போன பர்வதம்
முதலியவற்றையெல்லாம், மீண்டும் முன்போலவே படைத்து அருளினான்.
இவ்விதமான ஸ்ரீமந் நாராயணன், ரஜோ குணப்பிரமமாய், ஏழு தீவுகளாக இருக்கிற பூமியின் பகுதிகளையும்
மற்றும் புவர்லோகம் முதலிய உலகங்களையும் மீண்டும் படைத்தருளினான்.

எம்பெருமான் சிருஷ்டிக்கு, நிமித்தம் மட்டுமேயாகிறான்.
அவனால் படைக்கப்படும் வஸ்துக்களுடைய சக்திகளே முக்கிய சக்திகளாகின்றன.
மைத்ரேயரே!
எம்பெருமான் நடுநிலைமையானவன், நிமித்த காரணன் ஆகையால் இப்படிஅவன் படைப்பதனால்,
அவனுக்கு வைஷம்மியமும் நிர்த்தயத்துவமும் இல்லை. உயிரினங்கள் அனாதி கர்மவசத்தினாலே
பூர்வ கர்மானுரூபமாக நானாவித கர்ம மார்க்கங்களிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன.
சர்வ சமநிலையாளனும் சாட்சிபூபதனுமான பரம புருஷனைத் தவிர பிரபஞ்சத்துக்கு வேறொரு காரணமுமில்லை.
சீவாத்துமாக்களுடைய அனாதி சர்மவாசனா சக்தியினாலே, நல்ல பிறவிகளும் கெட்ட பிறவிகளுமாய் அந்தந்த வஸ்துகள் மாறிவிடும்.
ஆகையால் தான் ஸ்ரீயப்பதி முக்கிய காரணமாக இருந்தாலும் சேதனர்களுடைய கர்மங்களைக் கொண்டே
சிருஷ்டி நானாவிதம் ஆகவேண்டியிருப்பதால், அவை பிரதானமாக உபசார வழக்கை முன்னிட்டு சொல்லப்பட்டன என்று அறிவீராக!

———————

5. தேவ மனிதப் படைப்புகள்

ஓ குருநாதரே! ஆதிகாலத்தில் தேவதைகள், ரிஷிகள், பிதுர்க்கள், அசுரர், மனிதர் முதலானவர்களையும்
மிருகங்களையும், பறவைகளையும், மற்றுள்ள தாவரங்களையும் பூசரங்களையும் கேசரங்களையும்
நீர்வாழும் உயிரினங்களையும் பிரம்மதேவர் எப்படிப் படைத்தார்?
அவைகளுக்குக் குணங்களும் சுபாவங்களும் ரூபங்களும் யாவை?
இந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாக அடியேனுக்கு கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார்.

பராசரர் கூறலானார். மைத்ரேயரே;
அந்தப் பிரமதேவன் பிரபஞ்ச சிருஷ்டி செய்ய நினைத்துக் கொண்டிருக்கும்போது சர்வ நியாமகனான
நாராயணனால் ஏவப்பட்ட நினையாத நினைவினாலே தாமச குணப் பிரதானமான சிருஷ்டியொன்று உண்டாயிற்று.
அது தமஸ் மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் என்று சொல்லப்பட்ட பேதங்களினாலே ஐந்துவிதமாக,
விருட்சங்களும், புதர்களும், கொடிகளும், பூண்டுகளும் புல்லுகளுமென ஐவகையான தாவரப்படைப்பாக இருந்தது.

அது சுத்த தாமச படைப்பாகையால்; தண்ணீர் முதலானவைகளைக் கிரகிப்பது முளைப்பது, செழிப்பது முதலிய
காரியங்களுக்கு ஏற்ற அற்ப அறிவுள்ளவனேயன்றி தன்னை இப்படிப்பட்டதென்று அறிவதும்
சப்தாதி விஷயங்களையும், சுகதுக்கங்களையும் அறிவதுமாகிய அறிவற்றதாக இருக்கும்.

பிரமன்; அவற்றைப் பார்த்து, தமோகுணப் பிரசுரமான இந்தத் தாவரங்கள் முன்னே பிறந்தன என்றனன்,
ஆகையால் தாவரங்களே முக்கிய படைப்பாயின சதுர்முகப் பிரமனே, இந்தத் தாவரங்கள் லோக வியாபாரத்திற்குரிய ஆற்றல் அற்றவை;
ஆகையால், இவற்றில் பயன் இல்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அப்போது பிரமனின் பாரிசபாகங்களிலிருந்து மிருகங்கள் முதலிய திரியக்குசாதிகள் பிறந்தன.
அவை பக்கங்களின் குறுக்காகப் பிறந்தனவாகையால் திரியக்குகள் என்று சொல்லப்பட்டன.
அவையும் விவேமில்லாதவைகளாய், ஞான சூன்யமாகவும், ஒழுக்கமற்ற நடத்தையுடனும் தாயைச் சேர்தல்
முதலிய அக்கிரமச் செயல்களுடனும் தமது ஞானம் என்ற நினைப்புடனும் தேகத்தையே ஆன்மாவாக எண்ணிக்கொண்டும்
அகங்கார மயமாய், இருபத்தெட்டு வகையினவாய் சுகதுக்கங்களை மட்டுமே தெரிந்தவைகளாய்,
தகப்பன், தாய், அண்ணன், தம்பி என்ற சம்பந்தமெதையும் அறியாதனவாய் இருந்தன.

அதைக்கண்ட சிருஷ்டி கர்த்தாவான பிரமன்; ஆகா! ஈனமான இந்தத் திரியக்கு சாதிகளாலும் பயன் எதுவுமில்லை.
ஆகையால் சிறப்புடைய சிருஷ்டியைச் செய்யவேண்டும் என்று சிந்தனை செய்யலானான்;
அப்பொழுது மூன்றாவது படைப்பு தோன்றலாயிற்று.

பிரமனின் சரீரத்தின் ஊர்த்துவ பாகத்திலிருந்து சத்வகுணப் பிரதானராயும் சுகானுபவமும் ஆனந்தமும் மிகுந்தவராயும்
ஆன்ம ஞானமும் விவேகமும் உள்ளவராயும்; நித்திய சந்தோஷமுடையவர்களான தேவதைகள் உதித்தார்கள்.
அவர்கள் ஊர்த்துவஸ்தானத்திலிருந்து பிறந்ததால், ஊர்த்துவ சுரோதசுகள் என்ற பெயரைப் பெற்று;
பூமியைத் தீண்டாதவர்களாக இருந்தனர். பிரமன்! இந்த வகையாகத் தமது மூன்றாவது படைப்பில்;
சத்துவகுணப் பிரதானராகப் பிறந்த தேவர்களைக் கண்டு மகிழ்ந்தார்.

ஆயினும் கர்மசாதகம் ஏற்படாததால், தேவர்களின் படைப்பினாலேயும் பயனில்லை என்று பிரமன் நினைத்து
லோகசாதகமான வேறொரு சிருஷ்டியை உண்டாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, சத்திய சங்கல்பனான அவருடைய மத்யப் பகுதியிலிருந்து, பூமியை நோக்கிய சிருஷ்டி ஒன்று உண்டாயிற்று.
அதில் தான் மனிதர்கள் பிறந்தார்கள். அவர்கள் பிரமனின் மத்திய தேகத்திலிருந்து தோன்றியதால்
மத்திய லோகத்தில் வாசஞ்செய்யத் தக்கவர்களானார்கள் அவர்கள் ஒரு காலத்தில் சாக்துவிக குணாதிக்கமும்,
ஒரு காலத்தில் ராஜசகுணோ திரேகமும் ஒரு காலத்தில் தாமச குணம் கொண்டவர்களாய் துக்கத்துக்கு உட்பட்டவர்களாய்
உணவு உட்கொள்ளல் முதலிய காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு,
ஆத்தும, மன, புத்தி; இந்திரியாதி விவேகங்களும் புறத்துள்ள வஸ்துக்களின் ஞானங்களையும் கொண்டவர்களாய்,
உலகியல் செயல்களைச் செய்யாதவராய் இருந்தார்கள். இவர்கள் அர்வாக் சுரோதஸுகள் என்று வழங்கப்படுகிறார்கள்.

அதன் பிறகு; அம்புஜாசனனான பிரமன், தாவர ஜாதிகளுக்கும் மிருக ஜாதிகளுக்கும் தேவதைகளுக்கும் மனிதர்களுக்கும்
அவித்தை, அசக்தி, சந்துஷ்டி, சித்தி என்ற நான்கு வகை குணச்சிறப்புகளை உண்டாக்கினான்.
இது தாமசமாயும் சாத்வீகமாயும் இருந்ததால் அனுக்கிரக சிஷ்டியென்று சொல்லப்படும்.
அப்பால் சனக, சனந்தன, சனத்குமார ருத்திராதிகளையும் பிரமன் படைத்தார். இது கவுமார சிருஷ்டி என்று சொல்லப்படும்.

மைத்ரேயரே!
இவ்விதம் தாவரப்படைப்பு, திரியக்குப் படைப்பு, தேவப் படைப்பு, மனிதப் படைப்பு அனுக்கிரகப் படைப்பு, கவுமாரப் படைப்பு
என்ற ஆறுவிதமான படைப்பு சிறப்புகளைக் கூறினேன். இந்தப் படைப்புகள் ஒன்பது வகை என்றும் சொல்லப்படும்.
அதாவது முன்பே கூறிய மகத்தத்துவப் படைப்பும், ஏகாதச இந்திரியங்களுக்குக் காரணமான
சத்துவ, ராஜச தமோ குணத்துமகமான அகங்காரப் படைப்பும், அதற்கப்பால் ஆகாசாதி பஞ்ச மகாபூத காரணங்களான
தன்மாத்திரைகளின் படைப்பும் ஆகிய அந்த மூன்றும் சமஷ்டி சிவ ஸ்வரூபனான இரண்யகர்ப்பனுடைய
சங்கல்பமில்லாமல் தோன்றியிருந்ததனால் அது பிராகிருதப் படைப்பு என்று சொல்லப்படும்.
ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்று சொல்லப்படும்.

ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்றே சொல்லலாம். எப்படியென்றால்,
நித்திரையிலிருக்கும் என்னுடைய இச்சையில்லாமலேயே சுவாச நிவாசங்களும் நித்திரையும் பிறந்திருக்க,
அவற்றுக்கு அவனையே கர்த்தாவாக வழங்குவதைப் போல், மகத்தகங்கார தன்மாத்திரைகள் சதுர்முகனுக்கும்
முன்னமே சம்பவித்தவைகளாகையினால், இரண்யகர்ப்பனுடைய கர்ம விசேஷத்தினால் உண்டானதாக,
அதுவும் அவனுடைய செயலாகவே சொல்லப்படும். முன்னே சொன்ன பிராகிருத சிருஷ்டி மூன்று ஒழிய;
நான்காவதான தாவர சிருஷ்டியும் ஐந்தாவதான திரியக்கு சிருஷ்டியும், ஆறாவதான தேவசிருஷ்டியும்
ஏழாவதான மனிதப்படைப்பும்; எட்டாவதான அவித்தை முதலான அனுக்கிரகப்படைப்பும் ஆகிய படைப்புகள் ஐந்தும்
பிரம்மாவின் விகிருதியினால் உண்டானதால் வைகிருதங்கள் என்று சொல்லப்படும் ஒன்பதாவது படைப்பாகிய கவுமாரம்;
பிராகிருதம் வைகிருதாத்துமகமாக இருக்கும். இப்படி இரணியகர்ப்பனாலே உண்டாக்கப்பட்ட ஜகத்துக்கு மூலங்களான
ஒன்பதுவித படைப்பையும் சொன்னேன்

இனி இந்தப் படைப்புகளின் விஷயமாக நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?
இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி,
முனிவரே! படைப்பு வகைகளைத் தாங்கள் சுருக்கமாகத்தான் சொன்னீர்கள்.
இதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றார். பராசரர் சொல்லத் துவங்கினார்.

மைத்ரேயரே!
அனாதி கர்ம வாசனையினால் கட்டுண்டவர்களும் நானாவித கர்ம பயன்களை அனுபவிப்பவர்களான சேதனர்கள்
பூர்வ வாசன வசத்தினால்; சங்காரகாலத்தில்; சங்கரிக்கப்பட்டு படைப்புக் காலங்களில்
தேவ மனிஷ்யத் திரியிக்கு தாவர ஜன்மங்களாகப் பிறப்பார்கள்.
சிருஷ்டித் தொழிலிலுள்ள பிதாமகனுடைய இச்சையினால்; அம்பஸ் என்ற பெயரால் வழங்கப்படும்
தேவாசுர பிதுர் மனுஷ்ய ஜாதிகள் நான்கும் உண்டாயின அதன் விவரங்களையும் கூறுகிறேன்.

கமலாசனன் : படைப்புத்தொழில் விஷயமாக ஒரு தேகத்தோடு சிந்தித்திருக்கும்போது; தமோகுண உத்திரேகத்தினால்;
அவருடைய இடையின் கீழ்ப்புறத்திலிருந்து அரசர்கள் தோன்றினார்கள் பிறகு அந்த விரிஞ்சன்;
தமோகுணத்துமகமான அந்தத்தேகத்தை ஒழித்துவிட; அது இருள் மிகுந்த இரவாயிற்று.
பிறகு; அவர் திரும்புவம் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து வேறொரு தேகந்தரித்து; சந்துஷ்ட சிந்தனாக இருக்க;
அந்தத்தேவனின் முகத்திலிருந்து சத்துவகுணாதிக்கமுள்ள தேவர் தேவதைகள் ஜனித்தார்கள்.
பிறகு, அந்தப்பிதாமகன்; அந்த உடலையும் விட்டுவிட்டார். அது சத்துவ குணமயமான பகலாயிற்று.
பிறகு அவன் ரஜோகுணாதிசகமான மனிதர்களை படைத்து அந்தத் தேகத்தையும் விட்டுவிட;
அது பிரகாசமான பிராதக்கால சந்ததியாயிற்று. அதனால் மனிதர்கள் பிராதச்சந்தியிலேயும் பிதுர்க்கள்
சாயஞ்சந்திலேயும் பலவான்களாக இருப்பார்கள்.

மைத்ரேயரே!
பகல், இரவு, சாயங்காலம், விடியற்காலம் ஆகிய இந்த நான்கும் பிரமதேவனுக்கு முக்குணங்களோடு கூடிய சரீரங்கள்.
பிறகு அந்தப் பிரமதேவன் மேலும் சிருஷ்டி செய்வதற்கு தமோகுணாதிக்கமுள்ள மற்றொரு சரீரத்தைத் தரித்தார்.
உடனே அவருக்குப் பொறுக்கமுடியாத பசியுண்டாயிற்று. அதனால் தீவிரக்கோபம் உண்டாயிற்று.
அந்தக் கோபத்தினால் இருட்டிலிருந்து விகாரரூபம் பயங்கரமுமான தாடி மீசைகளுமுள்ள ஒருவிதமான புருஷர்களை பிருமன் படைத்தார்.
அவர்களில் பசியுற்ற சிலர் ஜக்ஷõம (உண்ணக் கடவேம்) என்றனர். பசியுறாத சிலர் ரக்ஷõம (காக்கக்கடவேம்) என்றனர்.
இப்படிக் கூறிய அவர்களைப் பார்த்துப் பிரமன் புன்னகை செய்து, பசியைப் பொறுக்கமுடியாமல் ஜக்ஷõம என்று கூறியவரை,
யக்ஷராகக் கடவர் என்றும், ரக்ஷõம என்றவர்கள் ராக்ஷசராகக் கடவர் என்றும் அருளிச்செய்தார்.
இரணியகர்ப்பன் இவ்வாறாகப் பிறந்த யக்ஷரையும் ராக்ஷஸரையும் பார்த்து, மனதில் பிரியமற்று மீண்டும் சிந்திக்கலானார்.
அப்போது அவரது சிரத்திலிருந்த கேசங்கள் ஈனமாய்க் கழன்று விழுந்து, மறுபடியும் சிரத்தின் மீது ஏறின.
இப்படி நகர்ந்து ஏறியதாலே அவை சர்ப்பங்கள் என்றும் அவை ஈனமானதினாலே அகிகள் என்றும் சொல்லப்பட்டன.
மீண்டும் பிரமன் கோபாவேசத்தினாலே சிருஷ்டிக்க நினைக்க, கபில நிறத்தோடு கூடி, ரத்தமாமிச
ஆகாரங்களுள்ளவைகளான பூதங்கள் அநேகம் உண்டாயின.

பிறகு, தியான பாராயணனாய், விரிஞ்சன் தனது அங்கங்களினின்றும் அந்தக் கணத்திலேயே கந்தருவர்களை உற்பத்தி செய்தார்.
அவர்கள் சமத்காரமாய்ப் பாடிக்கொண்டிருந்ததால் கந்தர்வர்கள் என்று வழங்கப்பட்டனர்.
இவ்விதமாகச் சதுர்முகனால் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள் சக்திகளினால் ஏவப்பட்டு,
அதனதன் கர்மானுகுணமாய் வெகுவிதமான பூதங்களைப் படைத்து மீண்டும் சுயேச்சையான வயதைக் கண்டு,
பாரிசங்களினால் பறவைகளையும், மார்பினால் ஆடுகளையும், முகத்தினால் வெள்ளாடுகளையும், உதரத்தினால் பசுக்களையும்,
பாதத்தினால் குதிரைகளையும், யானைகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும்,
கடம்பு மான்களையும் மற்றுமுள்ள மிருகஜாதிகளையும் படைத்தார்.
மீண்டும் ரோம தபங்களினாலே பலவித உபயோகமுள்ள ஒளஷதாதிகளையும் தானியங்களையும் உண்டாக்கினார்.

இவ்விதமாய்ப் பிதாமகன் கல்பாதியான கிருதயுகத்தில் ஓஷதிகளையும், பசுக்களையும், பறவைகளையும்,
மாடுகளும், ஆடுகளும், குதிரைகளும், ஒட்டகங்களும், வெள்ளாõடுகளும், கோவேறு கழுதைகளும்
கிராமியங்களால் பசுஜாதிகள் என்று அறிவீராக. சிங்கம், புலி முதலிய துஷ்ட மிருகங்களும்,
இரு குளம்புள்ள மிருக வகைகளும், யானைகளும், குரங்குகளும், பறவைகளும், சலசரங்களான மச்ச கூர்மாதிகளும்
சர்ப்பங்களும் ஆகிய ஏழு ஜாதிகளும் ஆரணிய பசு விசேஷங்கள் என்று அறிவீராக.

அதன் பிறகு பிதாமகன் காயத்திரி சந்தமும் இருக்கு வேதமும் திரிவிருத் என்ற ஸ்தோமமும் ரதந்தர சாமமும்
அக்கினிஷ்டோமமும் தனது கிழக்கு முகத்தினால் உண்டாக்கினர். யஜுர்வேதமும் திருஷ்டுபு, சந்தமும், பஞ்சதஸ்தோமமும்
பிருதச்சாமமும், உத்தியம் என்கிற யாக விசேஷமும், தக்ஷிண முகத்தினால் உண்டாகச் செய்தார்.
சாம வேதமும் செகதீச்சந்தமும், வைரூப்பியம் என்கின்ற சாம விசேஷமும் அதிராத்திரியாகமும் பச்சிம முகத்தினால் உண்டாக்கினார்.
அதர்வண வேதமும், ஏகவிம்சஸ்தோமமும், அனுஷடுப் சந்தமும் வைராசம் என்கின்ற சாம விசேஷமும் அப்தோர்யாமம் என்கின்ற
யக்கியமும் உத்தரமுகத்தினாலே உண்டாக்கினார்.
நானாவிதமான உயிரினங்களைப் பலவித அவயங்களினாலே நான்முகப் பிரமன் உண்டாக்கினார்.
இவ்விதமாகப் பிதாமகன், தேவ அசுர, பிதுர் மனுஷியாதி பூதசாதிகளைச் சிருஷ்டித்துத் திரும்பியும்
பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்று உற்சாகத்தோடு சங்கல்பித்து,
கின்னரர் கந்தர்வர் அப்சரஸுகள், யக்ஷர்கள், ராக்ஷதர், பைசாசர் முதலியவர்களையும்
பசு, பட்சி, சர்ப்ப மிருகங்களையும் தாவர சங்கமங்களையும் உண்டாக்கினார்.

இப்படி ஆதிகர்த்தாவும் லோகேசுவரனுமான சதுர்முகப்பிரமன் பலவித பூதஜாதிகளை உண்டாக்கினார்.
அவை சில குரூர சுபாவங்களும் சில மென்மையான சுபாவங்களும் சில இம்சை செய்பவைகளும்,
சில இம்சை செய்யாதவைகளும், சில தர்ம சொரூபங்களும், சில அதர்ம சொரூபங்களும்,
சில சத்திய மயங்களும் சில அசத்திய மயங்களுமாகப் பூர்வப் படைப்பில் எப்படிப்பட்ட கர்மங்களை அடைந்தனவோ
அப்படிப்பட்ட கர்மங்களையே இந்தப் படைப்பிலும் அடைந்தன. பிறகு தேக, இந்திரிய மனபுத்திச் சிறப்புகளுக்கும்
சப்த ஸ்பரிசாதி, யோக்கிய வஸ்துக்களுக்கும் வேத வசனங்களைக் கொண்டே தேவ, ரிஷி, பிதுர், மனுஷ்ய பட்சி,
மிருகாதிகளுக்கு பெயர்களையும், ரூபங்களையும் அறிந்து பெயர்களையும் உருவங்களையும் பிருமன் உண்டாக்கினார்.

மைத்ரேயரே!
இவ்விதமாகவே முனிவர்களுக்கும் வசிஷ்டாதி நாமங்களை நித்தியமான வேத சப்தங்களைக் கொண்டே உண்டாக்கினார்.
ஏனெனில், வசந்தம் முதலிய ருதுக்காலங்கள் தோறும் அந்தந்தக் காலத்துக்குரிய வாசனை முதலியவை
இயல்பாகவே உண்டாவதைப் போல் கிருத திரேதா யுகங்களிலே, அந்தந்த யுகத்திற்கான சிறப்புக்கள் தாமாகவே உற்பவிக்கும்.
இந்த விதமாகப் பிரம்மா கல்பாதி காலத்தில் எம்பெருமானுடைய சக்தியினாலே;
அனுப்பிரவேசித்து தூண்டப்பட்டு பிரபஞ்சங்களை அதனதன் கர்மங்களின்படியே படைத்தான்;
இதில் சகல படைப்புகளும் கல்பாதி கிருதயுகத்திலும் யாகாதிகளும் அவற்றின் உபகரணங்களும் திரேதாயுகாதியிலும் படைத்தான்.
இப்படியே ஒவ்வொரு கல்பத்திலும் படைப்புகள் படைக்கப்பட்டு; சிருஷ்டிகள் நடைபெற்றுவரும்.

——————–

6. வருணாசிரமங்கள்

தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் முதலியவற்றின் படைப்புக் கிரமங்களைப் பற்றிப்
பராசர முனிவர் கூறியதும் மைத்ரேய முனிவர் அவரை நோக்கி, மகரிஷியே!
மனிதர்கள் படைக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் சுருக்கமாகச் சொன்னீர்கள்.
இனி அவர்களுடைய குணங்களைப் பற்றியும், வருணாசிரம விவரங்களை பற்றியும்,
ஆசார வேறுபாடுகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்! என்றார்.

அதற்குப் பராசரர் பின்வருமாறு கூறலானார்:
பூர்வத்தில் பிரமன் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தபோது,
அவரது முகத்திலிருந்து சத்வகுணமுடையவர்களான பிராமணர்கள் தோன்றினார்கள்.
அவரது மார்பிலிருந்து ராஜசகுணமுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினார்கள்.
தொடைகளிலிருந்து ராஜசகுணமும் தாமஸகுணமும் கலந்தவைசியர்கள் தோன்றினார்கள்.
பாதங்களிலிருந்து தமோ குணமுடைய சூத்திரர்கள் தோன்றினார்கள்.

இவ்விதம் பிரமதேவனின் முகம், மார்பு, தொடைகள், பாதங்கள் என்னும் அவயங்களிலிருந்து பிறந்த
பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களை யாகங்களுக்குரிய செயல்களை செய்யும்படி அவர் நியமித்தார்.
மைத்ரேயரே!
இந்த நால்வகையான மக்களும் யாகங்களுக்கு முக்கியமானவர்கள். யாகங்களால் தேவதைகள் திருப்தியடைந்து,
காலாகாலத்தில் மழைபொழிந்து மனிதரைத் திருப்தியுறச் செய்வார்கள்.
ஆகவே உயர்வுக்கு ஏதுக்களான யாகங்கள் மக்களால் முக்கியமாகச் செய்யத் தக்கவையாகும்.
வேத சாஸ்திரத்திற்கு விரோதமான ஒழுங்கீனங்களை விட்டு சன்மார்க்கத்தில் நடக்கிற சத்புருஷர்கள்
சொர்க்கசுகத்தையும் மோக்ஷõனந்தத்தையும் தம் மனிதப்பிறவியிலேயே அடைவார்கள்.
இவ்விதமாக இரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட நான்கு வர்ண மக்களும், சாஸ்திர விசுவாசத்தினால்
சதா சாரமும் விநயமும் அடைந்து, நிர்மலமான இருதயமுடையவராய் சகலவிதமான சத்கருமங்களையும் செய்துகொண்டு
காமக்குரோத லோபம் இல்லாமல், நினைத்த இடத்தில் நினைத்தபடி வசித்து,
நிர்மலமான இதயத்தில் இறைவனைத் தியானித்துத் தத்துவ ஞானம் பெற்று தெளிந்தவர்களாய் சற்கதியடைந்தார்கள்.

இதுபோல் கிருதயுகத்திலிருந்து திரேதாயுகத்தின் இடைக்காலம் வரை நடந்தது.
பிறகு, நாராயணாம்சம் என்று சொல்லப்பட்ட காலவசத்தினாலே,
மனிதருடைய சத்துவ புத்தியும் தைரியமும் ஆயுளும் குறையும்படி நேரிட்டது. அதனால் மோகமும் லோபமும் மேலிட்டன.
அதருமம் மிகுதியாயிற்று அதனால் மோட்சமார்க்கத்திற்கு விரோதமான ராகத்துவேஷங்கள் பிரபலமாயின.
ஆகையால் இயல்பாகவே உண்டாகத்தக்க ஞானமும், தொந்தங்களை வெல்லத்தக்க சக்தியும் மக்களிடம் குறைந்தன
முன்பெல்லாம் பெண்கள் முதலியவை இல்லாமலேயே ஆனந்தம் உண்டாவதுண்டு.
யோகப் பயிற்சியினால் சிரசிலுள்ள சந்திர மண்டலத்தினின்றும் ஒழுகும் அமிருதத்தினாலே பசியுங்கூட இல்லாமல் இருந்தது.
ஒருமுறை மழை பெய்தாலே பயிர்கள் செழுமையாக வளர்ந்தன. நினைத்தபோதே மரங்கள் பலிதமாயின.
நினைத்தவை நினைத்தவாறே கைகூடின பரத்வாச முனிவருக்கு நடந்தது. போலவே, கற்பக விருட்சங்கள் வந்து வேண்டியதைக் கொடுத்தன.
வேண்டும்போதெல்லாம் மழை பெய்தது. உழுது வருந்தாமல் பூமி விளைந்தது இவ்விதமான
எட்டுச் சித்திகளும் நாளடைவில் க்ஷீணித்து பாதகச் செயல்கள் அதிகமாயின.

அதனால் பூமியில் வாழும் மக்கள், ராகத்துவேஷ. லோப, மோகாதி தொந்த துக்கங்களினால் பீடிக்கப்பட்டு,
ஒருவரையொருவர் விசுவாசியாமல் மலைப் பிரதேசங்களிலும், தண்ணீர் சூழ்ந்த நிலப்பகுதியிலும் வசித்தார்கள்.
அங்கு கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள் முதலியவற்றை அமைத்தார்கள். நகரங்களையும் வீதிகளையும்
வீடுகளையும் கட்டிக்கொண்டார்கள். மழை, காற்று, வெய்யில் இவற்றின் உபத்திரவங்களை நீக்கிக் கொள்வதற்கான
உபாயங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பிழைப்பிற்காகப் பயிர்த்தொழில்கள், ஆடு மாடுகள் வளர்த்தல் வாணிபம்
முதலியவற்றைச் செய்தார்கள்.
பயிர்த்தொழிலால் விளைந்த சம்பா முதலிய நெல், யவம், கோதுமை, சோளம், கேழ்வரகு, தினை, உளுந்து,
பயிறு சிறு கடலை, துவரை, மொச்சை, கொள்ளு, கடலை, சணல் ஆகிய தற்காலிக பயன்களை அனுபவித்தார்கள்.
இந்தப் பதினேழு வகையான தானியங்களும் கிராமியங்கள் என்று வழங்கப்படும்.
நெல், யவம், உளுந்து, கோதுமை, சிறுதானியம் என்ற பிரியங்கு, கொள்ளு, சாமை; செந்நெல்,
காட்டு எள், கெவீது, மூங்கிலரிசி, மற்கடகம் என்ற பதினான்கு விதமான தானியங்களும் கிராமிய ஆரணியங்கள்
என்று பெயர் பெற்று யாகங்களுக்குப் பயன்பட்டன. இவை யக்கியங்களுக்கும் பிரஜா அபிவிருத்திக்கும் காரணமாயின.

எனவே, அவற்றைக் கொண்டு, பராபரவிவேகமுள்ள ஞானிகள் நாள்தோறும் பாவங்களைப் போக்கதக்க
பஞ்ச மகா யாக்கியங்களைச் செய்வார்கள். முனிவரே! தினமும் யாகாதி கர்மங்களைச் செய்வதால்,
புருஷர்கள் சகலபாவ விமுக்தராய்ப் பரம சுகத்தை அடைவார்கள்.
ஆதிகாலத்தில் எவருடைய மனமானது கால வசத்தால் பாபதூஷிதமாயிற்றே, அவர்கள் யக்கியாதி நற்கருமங்களில்
விசுவாசமில்லாமல் பாதங்களை அபிவிருத்தி செய்து; வேதங்களையும் நற்கருமங்களையும் நிந்திக்கலானார்கள்.
யாகங்களுக்கு இடையூறுகளைச் செய்தார்கள். தேகத்தைப் போஷிப்பதற்கான செயல்களை மட்டுமே செய்தார்கள்.
லோக விருத்திக்கு விரோதிகளாய், துராத்மாக்களுமாய்; துராசாரமுடையவர்களுமாய்;
குடில் புத்தியை உடையவர்களானார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

பிரம; க்ஷத்திரிய: வைசிய; சூத்திராதி (நான்கு) வருணங்களையும் நான்கு ஆசிரமங்களையும் இரண்யகர்ப்பன் நிர்மித்து,
வர்ணாசிரமத்திற்கு உரிய மரியாதைகளையும் ஏற்படுத்தி; அவரவரது தாரதம்மானு குணமாகப் புண்ணிய லோகங்களையும் ஏற்படுத்தினார்.
ஸ்வதர்ம அனுஷ்டான பராயணரான பிராமணர்களுக்குப் பிரஜாபத்திய லோகத்தையும், போரில் புறங்கொடாத க்ஷத்திரியர்களுக்கு;
இந்திரலோகத்தையும், ஸ்வதர்ம நிரதரான வைசியருக்கு மருத்துக்களின் லோகத்தையும்;
பணிவிடைக்காரரான சூத்திரர்களுக்கு கந்தர்வலோகத்தையும், குரு பணிவிடை செய்வதில் ஊக்கமுடைய
பிரம்மச்சாரிகளுக்கு ஊர்த்தரே தஸரான எண்பத் தெண்ணாயிரம் யதீச்சுவர்கள் வாசம் செய்யும் திவ்விய லோகத்தையும்?
வானப்பிரஸ்தருக்கு சப்தரிஷி லோகத்தையும், கிரகஸ்தருக்குப் பிரஜாபத்திய லோகத்தையும்;
சந்நியாசிகளுக்குப் பிரமலோகத்தையும் தோற்றுவிக்க சங்கல்பம் செய்தார்.

இவையாவும் கர்ம மார்க்கத்தினால் உண்டான புண்ணிய லோகங்களாகும்.
இனி ஞானியருக்குக் கிடைக்கும் உலகங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள்.
ஆத்மத் தியானிகளான யோகீசுரர்களுக்கு அமிர்தஸ்நானம் உண்டாம்.
(அமிர்த ஸ்நானம் என்பது துருவலோகத்துக்கு மேலே; கங்கை தோன்றும் இடம்.)
தினமும் யோகப்பயிற்சிகளைச் செய்தும்; பிரமத் தியானத்தை செய்து கொண்டும் இருக்கிற மகாத்மாக்களுக்கெல்லாம்;
நித்திய சூரிகளாலே காணப்பட்ட பரமபதம் உண்டாகும்.
சந்திர சூரியாதி கிரகங்களும் காலக் கிரமத்தில் அதனதன் இடம் விட்டு; பலமுறைகள் நீங்குகின்றன.
துவாதசாக்ஷர மந்திரத்தை ஜெபிக்கிற மகான்மாக்கள் என்றைக்கும் திரும்பி வராமல்; பரமனாந்தத்தை அனுபவிக்கிறார்கள்.
இனிப் பாபஞ்செய்கிற கெட்டவர்கள் அடையத்தக்க லோகத்தை அறிவிக்கிறேன்.
தாமிஸ்வரம்; அந்தாமிஸ்ரம்; ரௌரவம்; மகா ரௌரவம், அசிபத்ரவனம்; காலசூத்திரம்; அவீசிமத்து என்ற
மகா கொடிய நரகங்கள் எல்லாம்; வேதங்களை நிந்தித்து; யக்கிய விக்னஞ்செய்கிற பாபாத்துமாக்களுக்கு உண்டாகும்.

————————

7. பிருகு முதலியவர்களின் படைப்பு

சதுர்முகனாகிய பிரமதேவன்; பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும்போது
அவனுடைய சங்கல்பத்தினால் அவனது அங்கத்திலிருந்து தர்மத்தை அனுபவிக்கும்படியான
தேக; இந்திரியங்களுடன் கூடிப்பிறந்த தேவமனுஷிய திரியத் தாவரங்களான சதுர்வித சங்கங்களும் அபிவிருத்தியடையாமற் போயின.
அதைக்கண்ட பதுமகர்ப்பன் மீண்டும் பிரஜா சிருஷ்டி செய்ய எண்ணி
பிருகு புலஸ்தியர்: கிரது; அங்கிரசு; மரீசி; அத்திரி; தக்ஷர்; வசிஷ்டர்; நாரதர் என்ற ஒன்பது புத்திரர்களைத்
தனது மனத்தாலே படைத்தான். அவர்கள் பிரம்மாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர்.
இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான்.
அவர்கள் பிரமாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர்.
இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான்.
அவர்கள் வைராக்கியத்துடன் மோட்சமார்க்க நிரதர்களாய்; பிரஜா சிருஷ்டியில் ஈடுபடாமல் சர்வ சங்கப் பரித்யாகிகளாய்
யோக நிஷ்டை பெற்று, காமக்ரோத மதாச்சரியங்கள் இல்லாதவர்களாய் கிருதார்த்தர்களாக இருந்தார்கள்.
அவர்கள் பிரஜா சிருஷ்டியைச் செய்யாமல் இருந்ததால் பதும கர்ப்பனுக்கு பொறுக்கமுடியாத குரோதம் உண்டாயிற்று.
அப்போது மூன்று உலகங்களையும் எரித்துவிடும்படியான கோபாக்கினி ஜ்வாலைகள் பொருந்தியும்
பயங்கரமாகப் புருவங்களை நெறித்துக் கொண்டும், குரோதத்தினால் ஜ்வலித்துக் கொண்டும் இருக்கிற
பிரம்மாவின் லலாடத்திலிருந்து நடுப்பகல் சூரியனைப் போன்ற பிரகாசமுடையவரும்,
அர்த்தநாரி ரூபத்தைத் தரித்தவரான ருத்திரமூர்த்தி தோன்றினார்.

அந்த ருத்திரமூர்த்தி அதியுன்னத சரீரமுடையவராகவும், உக்கிர குணமுள்ளவராகவும்
பாதியுடம்பு ஆணும் பாதியுடம்பு பெண்ணுமாகவும் விளங்கினார். அம்மூர்த்தியை பிரம்மா நோக்கி;
இரண்டு விதமாக இருக்கிற நீயே உன்னைத் தனித்தனியாக பிரிப்பாயாக! என்ற சொல்லி அந்தர்த்தானமானார்,
அதன் பிறகு அந்த ருத்திரமூர்த்தியும், ஆண் பெண் உருவமாக இருந்த தன் உடம்பை பெண் உருவாகவும், ஆண் உருவாகவும்
தனியே பிரித்து, வேறாகிப் பின்பு அந்தப் புருஷரூபத்தையும் பதினோறு விதமாகப் பிரித்து,
பெண் ரூபத்தையும் பலவிதங்களாகப் பிரித்தார்.
அவை சவுமியங்களாகவும், பயங்கரங்களாகவும், காந்தங்களாகவும், கோரங்களாகவும், கறுத்தனவாகவும்,
வெளுத்தனவாகவும் பலவகைப்பட்டிருந்தன. பிறகு இரணியகர்ப்பன், பிரஜைகளை காக்கும் பொருட்டுத் தன்னுடைய
அம்சத்தினாலே புத்திரன் ஒருவனைச் சிருஷ்டித்தார். அவன் சுவாயம்புவமநு என்ற பெயரைப் பெற்று,
பிரஜா பரிபாலனஞ் செய்து கொண்டிருந்தான். பிரம்மா, தம் அம்சத்தினால் தாமாகவே மநு என்ற புருஷன் ஆனதைப்போலவே,
தமது பத்தினியின் அம்சத்தினாலே ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார்.
அந்த மங்கை சதரூபை என்ற பெயர் கொண்டு தனக்குச் சரியான புருஷன் வேண்டும் என்று தவஞ்செய்து, தூய்மையாக இருந்தாள்.
அப்போது பிரமனின் கட்டளைப்படி சதரூபையை மநுமணந்து அவளிடத்தில் பிரியவிரதன், உத்தானபாதன் என்னும்
இரு பிள்ளைகளையும் பிரசூதி, ஆகுதி என்ற இரண்டு பெண்களையும் பெற்றான்.
பிறகு அழகும் குணமும் பொருந்திய இரண்டு பெண்களில், பிரசூதி என்பவனைத் தக்ஷனுக்கும்,
ஆகுதியை ருசி என்பவனுக்கும் மறுமணஞ்செய்து கொடுத்தான். ருசி என்பவன் ஆகுதி என்பவளைச் சேர்ந்து,
யக்கியன் என்ற பிள்ளையையும் தக்ஷிணை என்ற பெண்ணையும் பெற்றான்.
பிறகு அந்த யக்கியன் தனக்குப் பத்தினியாகத் தன்னுடன் படைக்கப்பட்ட தக்ஷிணை என்பவனிடத்திலே
பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் முதல் மநுவந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாயினர்.

அதுபோலவே தக்ஷன் என்பவன் பிரசூதியின் மூலம் இருபத்து நான்கு பெண்களைப் பெற்றான்.
அவர்களிலே, சிரத்தை, லட்சுமி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, கிரியை; புத்தி, லஜ்ஜை வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி
என்ற பதின்மூன்று கன்னிகைகளைத் தர்மனுக்குத் திருமணஞ்செய்து கொடுத்தான்.
அந்த தர்மன் தன்பத்தினிகளில் ஒருத்தியான சிரத்தையிடத்தில் காமனையும், லக்ஷ்மியிடத்திலே தர்ப்பனையும்,
துஷ்டியிடம் சந்தோஷனையும், புஷ்டியிடம் லோபனையும், மேதையிடத்தில் சுருதனையும்,
கிரியையிடத்தில் தண்டன், நயன், விநயன் என்னும் மூவரையும், புத்தியிடம் போதனையும், லஜ்ஜையிடத்தில் விநயனையும்,
வபுவினிடத்தில் விவசாயனையும், சாந்தியினிடத்திலே ஷேமனையும், சித்தியிடம் சுகனையும், கீர்த்தியினிடத்திலே யசனையும் பெற்றான்.

அவர்களில் சிரத்தையின் புத்திரனான காமன் என்பவன் ரதி என்பவளிடத்தில் ஹர்ஷன் என்ற பிள்ளையைப் பெற்றான்.
பிறகு தக்ஷன் தன் பெண்களான கியாதி (மகிமை) சதி, (உண்மை) சமபூதி (தகுதி) ஸ்மிருதி (நினைவு), பிரீதி (அன்பு),
க்ஷமை (பொறுமை) சன்னதி (எளிமை), அநுசூயை (தயை), ஊர்ச்சை (சக்தி), சுவாகை (சமர்ப்பணம்), சுவதை (துதி)
என்ற பெயரையுடைய பதினோரு பெண்களையும் முறையே
பிருகு மகரிஷிக்கும், ருத்திரனுக்கும், மரீசிக்கும், அங்கிரசுக்கும், புலஸ்தியனுக்கும், புலகனுக்கும், கிரதுவுக்கும்,
அத்திரிக்கும், வசிஷ்டனுக்கும், அக்கினிக்கும், பிதுர்த்தேவதைகளும் மணஞ்செய்து கொடுத்தான்.

இது இப்படியிருக்க அதர்மன் என்பவன் ஹிம்சை என்ற பெண்ணைச் சேர்ந்து, அநிருதன் (பொய்யை) என்கிற புதல்வனையும்
நிகிருதி (வேசித்தன்மை) என்ற புத்திரியையும் பெற்றான்.
அவ்விருவரும் சேர்ந்து பயன், நரகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றனர்.
அப்பிள்ளைகள் தங்களுடன் பிறந்த மாயை வேதனா என்பவர்களையே மணந்தார்கள்.
அவர்களில் மாயை என்னும் மங்கை சர்வப் பிராணிகளையும் அபகரித்துக் கொள்ளும் மிருத்யுவைப் பெற்றாள்.
வேதனை என்பவள் ரவுரவனைச் சேர்ந்து துக்கன் என்பவனைப் பெற்றாள்.
அந்த மிருத்யுவுக்கு வியாதி, சூரை, சோகன், திருஷ்னை, குரோதன் என்ற பிள்ளைகள் பிறந்தனர்.
அவர்கள் அனைவரும் துக்கமயமான இயல்புடையவர்களாய், அதர்ம சொரூபிகளாய் ஊத்தரே தசுக்களாய்,
மனைவி மக்களற்றவர்களாய், ஜகத்தின் அழிவுக்கு ஏதுக்களாக இருந்தார்கள்.

முனிவரே! அதர்மாதி சொரூபங்கள் யாவும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய ரவுத்திரமான சரீரங்கள்!
அவை நித்தியப் பிரளயத்துக்கு ஏதுக்கள், தக்ஷன், மரீசி, அத்திரி, பிருகு முதலிய பிரஜாபதிகள் நித்திய சிருஷ்டிக்கு காரணமாவர்.
மநுவும் மநுவின் புத்திரர்களும் சன்மார்க்கராயும் வீரியமே முக்கியமாக நினைத்தவராயுமுள்ள நித்திய சூரஸ்திதிக்கு காரணமாவார்கள்.
இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பிராணிகள் யாவும் அநித்தியங்களாக இருக்க,
நித்திய ஸ்திதியும் நித்திய பிரளயமும் உண்டாவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார்.

அதற்குப் பராசரர் பதில் கூறலானார். மைத்ரேயரே!
பூதபாவனனும் அறியக்கூடாத சொரூபமுடையவனும் தடையற்றவனுமான ஸ்ரீமதுசூதனன் என்ற பெயரையுடைய பகவானே,
தன் சக்தியினாலேயே சிறப்புடைய மநு முதலான அந்தந்த ரூபங்களைக் கொண்டு, சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களை நடத்துகிறான்.
அவற்றை நித்தியங்கள் என்றேன். இனி பிரளய பேதங்களைப் பற்றிச் சொல்கிறேன்.
பிரளயமானது, நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம், நித்தியம் என்று நான்கு விதமாகும்.
அவற்றுள், எதனிடத்தில் ஜகத்பதியானவர் சயனிக்கிறாரோ அதுவே, பிரமனுடைய தனி அந்தியத்தில் உண்டாகும் நைமித்திகப் பிரளயமாகும்.
நான்முகப் பிரமனின் ஆயுள் முடிவில் பிரமாண்டம் உடைந்து சகல பூதங்களும் பிரகிருதியினிடத்தில் வயப்படுவது பிராகிருதப் பிரளயமாகும்.
யோகியானவன் ஞானதிசயத்தினால், அநாதி காம வாசனைகளால் செய்யப்பட்ட சங்கங்களையும் துறந்து,
பரமாத்துமாவிடம் சாயுஜ்யத்தை அடைவது ஆத்தியந்திகப் பிரளயம் என்று வழங்கப்படும்.
சதுர்வித பூதங்களும் தத்தமது ஆயுள் முடிவில் மரணமடைவது நித்தியப் பிரளயம் என்று சொல்லப்படும்.

இனி, சிருஷ்டி பேதங்களைக் கேளும், பிரமன் பிறப்பதற்கு முன்பே, பிரகிருதியினால் மகத்தகங்கார தன்மாத்திரைகளை
உண்டாக்குவது பிராகிருத சிருஷ்டி என்றும் தினப் பிரளயத்தின் முடிவிலே பிரஜைகளை உண்டாக்குவது
நைமித்திக சிருஷ்டி என்றும் சொர்க்க நரகாதி போக அனுபவமான பிறகு
ஜீவாத்துமாக்களே மனிதர், மிருகம், பறவை முதலான உருவங்களாகப் பிறப்பது நித்திய சிருஷ்டி என்றும் பவுராணிகர்கள் சொல்வார்கள்.
மைத்ரேயரே! ஜகத் காரண பூதரான ஸ்ரீவிஷ்ணு பகவான்,
சர்வபூத சரீரங்களிலேயும் இருந்து கொண்டே சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்கிறார்.

ஆனால் எம்பெருமான் எல்லாச் சரீரங்களிலேயும் எப்போதுமே இருக்கும்போது, சிருஷ்டியாதிகள் காலபேதத்தினால்
உண்டாக வேண்டுவது ஏன் என்று கேட்பீர்கள்.
சகல பூதங்களிலும் சிருஷ்டி ஸ்திதி, சங்கார சக்திகள் எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனுடைய சங்கல்பத்திற்குத் தக்கவாறே
உண்டாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தப்படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய சக்திகள் மூன்றும்
சத்வகுணம், ராஜஸகுணம், தாமச குணம் ஆகிய முக்குணங்களால் உண்டானவை.
எவன் இவைகளுக்கு உட்படாமல் சர்வ சங்கவிமுக்தனாய், பிரம சாயுஜ்யத்தை அடைவானோ,
அவன் அப்படியே இருப்பதன்றி மீண்டும் திரும்பமாட்டான்!

—————-

8. ருத்திர சிருஷ்டியும் ஸ்ரீதேவி வைபவமும்

பராசரர் தொடர்ந்து மைத்ரேயரை நோக்கிக் கூறலானார். மைத்ரேயரே!
நான்முகனான பிரம்மதேவன் தாமச சிருஷ்டியைச் செய்தான் என்று முன் சொன்னேன் அல்லவா?
அதைச் சொல்கிறேன்; கேளுங்கள்.
கல்பாதி காலத்திலே இரணியகர்ப்பன் தனக்குச் சமமான ஒரு குமாரனைப் பெற வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது,
அவனுடைய மடியில், கறுப்புஞ்சிவப்பும் கலந்த நீலலோகிதனான குமாரன் ஒருவன் தோன்றினான்.
அவன் இனிய குரலுடன் அழுதுகொண்டு ஓடினான். பிதாமகன் அவனை நோக்கி, மகனே! ஏன் ரோதனம் செய்கிறாய்? என்று கேட்க,
அவன் எனக்கு நாமதேயம் கொடும் என்று கூறினான்.
அதைக் கேட்ட பிரும்மா, தேவனே நீ ருத்திரன் என்ற பெயர் பெற்று புகழ் அடையக் கடவாய்! ரோதனம் செய்யாமல்
தைரியமாய் இரு என்று சொன்னார். அப்படிச் சொல்லியும் ருத்திரன் மீண்டும் ஒருதரம் ரோதனஞ் செய்ததால்,
பிரமன் அவனுக்குப் பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்கிரன், மகாதேவன் என்ற ஏழு பெயர்களைச் சூட்டி,
அப்பெயர்களையுடைய ருத்திர மூர்த்திகளுக்கு வெவ்வேறு ஸ்தானங்களையும், பத்தினிகளையும், புத்திரர்களையும் கொடுத்தார்.

அந்த எழுவரின் ஸ்தானங்களாவன?
சூரியன், ஜலம், பூமி, அக்கினி, வாயு, ஆகாயம், தீட்சிதனான பிராமணன் சந்திரன் என்பனவாகும்
அவன் அங்கு இருப்பதால் அதுவே சரீரமாயின. ருத்திராதி நாமமுடைய அந்த எட்டு மூர்த்திகளுக்கும் முறையே
சுவர்ச்சலை, உஷை சுகேசி, சிவை சுவாகை. திசை, தீட்சை, ரோகிணி என்ற எட்டு பெண்களும் பத்தினிகளாவார்கள்.
இவர்களுக்கு சனி, சுக்கிரன், அங்காரகன், மனோஜவன், கந்தன், சொர்க்கன் சந்தானன், புதன் ஆகிய எண்மரும் பிள்ளைகள்
இவர்களுடைய புத்திர பவுத்திராதி பரம்பரையினரால் கலகம் நிறைந்தது. இவ்விதம் அஷ்டமூர்த்தியாகிய ருத்திரன்
தக்ஷப் பிரஜாபதியின் புத்திரியான சசிதேவியைக் கல்யாணம் செய்துகொண்டான்.
அந்தச் சசிதேவியும் தன் தந்தையின் கோபத்தால் தானும் கோபித்துத் தன் சரீரத்தை விட்டுவிட்டாள்.
பிறகு அவள் இமவானுக்கு மேனை என்ற மனைவியிடம் உமை என்ற பெயரோடு மறுபடியும் பிறந்தாள்.
சிவபெருமான் தன்னையே நினைத்துக் கொண்டிருந்த அந்தக் கன்னியை மீண்டும் திருமணஞ்செய்து கொண்டார்.
இது இப்படியிருக்க, முன்பு சொன்னபடி, பிருகு முனிவர் தம் மனைவியான கியாதியிடம் தாதா விதாதா என்ற பிள்ளைகளையும்,
ஸ்ரீமந்நாராயணனுக்குப் பிரிய பத்தினியான ஸ்ரீதேவி என்பவளையும் பெற்றார்.

இதைக் கேட்டதும் மைத்ரேயர், முனிவரே! அமிருதமதன காலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியானவள் திருப்பாற்கடலில்
அவதரித்தாள் என்பது உலகம் அறிந்ததாயிற்றே!
அப்படியிருக்க பிருகு முனிவரின் மகளாக ஸ்ரீதேவி பிறந்தாள் என்பது எவ்விதம் பொருந்தும்? என்று கேட்டார்.
அதற்குப் பராசரர் கூறலானார்; மைத்ரேயரே!
உலக மாதாவான பிராட்டியானவள் என்றைக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானை விட்டுப் பிரியாதவளாய், நித்யையாக இருப்பவள்
அவளுக்கு பிறவிகள் இல்லை. ஆயினும் எம்பெருமானைப் போலவே, அவளும் அவதரிப்பதும் மறைவதுமாக இருப்பாள்.
எம்பெருமானைப் போலவே, ஸ்ரீதேவிப் பிராட்டியும், சகல கலியாண குணங்களோடு விளங்குவாள்.
சகல பூதங்களுக்கும் தாயும் தந்தையுமான அந்தத் திவ்வியத் தம்பதிகளுடைய விபூதி வைபவத்தைக் கூறுகிறேன், கேளும்.

சொல்லுக்குப் பொருள் அந்தப் பெருமாள். அந்தப் பொருளைத் தெரிவிக்கும் சொல் இந்தப் பிராட்டி;
நீதி இவள்; அந்த நீதியின் உபாயமான நயம் அவன் இவள் புத்தி; அந்தப் புத்தியாலாகும் போதம் அவன்.
தருமம் அந்த ஸ்ரீமந்நாராயணன்; அந்தத் தருமத்திற்குச் சாதகமான சத்கிரியை ஸ்ரீதேவி;
படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப்படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப் படைப்புச் சக்தி ஸ்ரீதேவி;
இவன் பூமி; இந்தப் பூமியை தரிப்பவன் விஷ்ணு; அந்தப் பகவான் சந்தோஷம்; அதை உண்டாக்கும் சந்துஷ்டி ஸ்ரீதேவி;
இச்சை என்பது ஸ்ரீதேவி; காமம் என்பது பகவான்; யக்ஞம் ஜகந்நாதன். தக்ஷிணை ஜகன்மாதா! புரோடாசம் சனார்த்தனன்;
ஆச்சியாகுதியானது கமலை. பிராக்கு வம்சம் என்பது மதுசூதனன்; பத்தினிச் சாலை என்பது ஸ்ரீதேவி யூபஸ் தம்பம் ஸ்ரீஹரி;
யாகவயனம் ஸ்ரீலக்ஷ்மி! எம்பெருமான்-தர்ப்பை: பிராட்டியே சமித்து! சாமவேதம்-பகவான்; அதில் சேர்ந்த உத்கீதி என்பது லக்ஷ்மி!
வாசுதேவன் அக்னி; இந்திரையானவள் சுவாகா தேவி.

ஸ்ரீவிஷ்ணு பகவானே சங்கரன்; ஸ்ரீ மகாலக்ஷ்மியே கவுரி. கேசவனே சூரியன்; அவனது பிரபையே கமலை!
விஷ்ணுதேவன் பிதுர்தேவதா சொரூபி; ஜகன் மாதாவோ ஆகாயம் அதி விஸ்தாரமான அதன் பரப்பே விஷ்ணு
அந்த ஸ்ரீயப்பதியே சந்திரன். அந்தச் சந்திரனின் காந்தியாகிய நிலவே ஸ்ரீதேவி! சர்வாக்தனான ஸ்ரீஹரியே வாயு;
அந்தச் சந்திரனின் காந்தியாகியே நிலவே ஸ்ரீதேவி! சர்வக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தக் காற்றின் செய்கையே திருமகள்!
சமுத்திரம் கோவிந்தன்; அந்தச் சமுத்திரத்தின் அலை முதலான விகிருதியெல்லாம் ஸ்ரீதேவி! மதுசூதனனே தேவேந்திரன்;
இந்திரையே இந்திராணி சக்கரதரனான பகவானே யமன்; கமலாயையே யமபத்தினியான தூமார்னே!
ஸ்ரீதரனே குபேரன்; ஸ்ரீதேவியே அந்தக் குபேரனின் பெருஞ்செல்வம்! விஷ்ணுவே வருணன் லக்ஷ்மியே வருணனின் பத்தினியான கவுரி!
கோவிந்தனே தேவ சேனாதிபதியான கந்தன்; இந்திரையே தேவசேனை! கதாதரனே பிடிப்பு; அதற்கு காரணமான சக்தியே ஸ்ரீதேவி!
நிமிஷம் நாராயணன் காஷ்டை லக்ஷ்மி! முகூர்த்தம்-வாசுதேவன் அந்த முகூர்த்தத்தின் அவயவமான கலை ஸ்ரீ லோகமாதா!
திருவிளக்கு-சர்வேசுவரன்; அதன் காந்தி-லோகநாயகி! ஸ்ரீ மகாவிஷ்ணு விருட்சம்; ஸ்ரீதேவி கொடி!
சக்கரதரன் பகல் ஸ்ரீகாந்தை இரவு! விஷ்ணுவே மணமகன்; ஸ்ரீதேவியே மணமகள்! பகவான் நதி! சொரூபன்;
ஸ்ரீதேவி நதி சொரூபை நாராயணன் லோபம்; லக்ஷ்மியே ஆசை! கோவிந்தன் ராகம்; ஸ்ரீதேவியே அதன் காரணமாகிய காதல்!
மைத்ரேயரே! இப்படி அநேக வாக்கியங்களைச் சொல்லிப் பயன் என்ன?
அந்தத் திவ்விய தம்பதிகளின் விபூதியைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள்.
தேவதைகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் திரியக்குகளிலும், மற்றுமுண்டான பொருட்களிலும் உள்ள
ஆண் தன்மையான பெயரையுடையனவெல்லாம் ஸ்ரீஹரியே;
பெண் லிங்கமான பெயருடையனவெல்லாம் ஸ்ரீதேவியே; என்று நினைப்பீராக!
இவ்விருவரினும் வேறான வஸ்து ஒன்றும் இல்லை. எல்லாம் அவர்களில் வியாபிக்கப்பட்டு அவர்களது விபூதியாகவே இருக்கின்றன!

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவம் —

February 26, 2021

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகங்கள்.
அனைத்து உலகுக்கும் தாயாரான ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்கநாயகி தாயாரின்
பெருமைகளை சொல்லும் 11 ஸ்லோகங்கள்.

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |
யதுக்தய ஸ்த்ரயீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||–தனியன் (ஸ்ரீ பராசர பட்டர் அருளியது)

“ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டியருளிய ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.”

——–

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1 ️
“ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜகதாம் ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |
“யஸ்யா வீக்ஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா” ||

பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது,
பிராட்டியின் அழகான முக குறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான்.
இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரிய பதி’ பகவானுடன்
எப்போதும் சேர்ந்தே இருக்கிற விஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!

———–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 2

ஹே ஸ்ரீர் தேவி சமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதுமீஹா மஹே
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தீயம் |
பக்திம் பந்தய நந்தயாஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லக்ஷ்யம் லக்ஷ்மி கடாக்ஷ வீசிவிஸ்ருதே: தே ஸ்யாம சாமீ வயம் ||

“ஹே ஸ்ரீரங்கநாயகி தாயாரே! அனைத்து உலகுக்கும் தாயானவளே! உனது பெருமைகளை புகழ்ந்து பாடுவதற்கு
வாக்கு, அன்பு கலந்த ஞானம் அருள வேணும். என்னுடைய பக்தியானது பரம பக்தியாக வளர அருள வேணும்.
உன் திருவடி தாமரையில் சரணடைந்து உனக்கு கைங்கர்யம் செய்பவனாக ஏற்றுக்கொண்டால்
நான் மிகுந்த ஆனந்தம் கொள்வேன்! உன்னுடைய கருணை மிக்க பார்வையை எங்கள் மேல் கடாக்ஷித்து அருள வேணும்”
என்று கூரத்தாழ்வான் பிரார்த்திக்கிறார்.

————-

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் – 3

ஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ யத் யந்யதீயான் குணாந்
அந்யத்ர த்வஸதோ சதிரோப்ய பணிதி: ஸா தர்ஹி வந்த்யா த்வயி |
ஸம்யக் ஸத்ய குணாபி வர்ணாநம் அதோ ப்ரூயு: கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரசநா த்வத் ஸத் குணார்ணோநிதௌ ||

“இருக்கிறதை இருக்கு என்று பாடுவது ஒரு வகை ஸ்தோத்ரம்..இல்லாததை இருக்கு எனபது ஏற்றி சொல்வது அடுத்த வகை.
தேவி! உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள்
இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும்? ஹயக்ரீவர் ஆக இருந்தாலும் முடியாது. ” என்கிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

பராசர பட்டர் ஆயிரம் நாக்கு கேட்டு பின்பு பாட சக்தி இல்லை என்றார்.
முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு வேணும் என்பது போல. பெரிய பிராட்டியாரின் கல்யாண குணங்களை
பாடிக்கொண்டே இருக்கலாம், இதற்கு எல்லையே இல்லை.

————–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 4 –

யே வாசாம் மநஸாம் ச துர் க்ரஹதயா க்யாதா குணாஸ் தாவகா :
தாநேவ ப்ரதி ஸாம்பு ஜிஹ்வ முதிதா ஹை மாமிகா பாரதீ |
ஹாஸ்யம் தத்துந மன்மஹே ந ஹி சகோர் யேகா கிலம் சந்ரித்காம்
நாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரசநாம் ஆஸீத ஸத்யாம் த்ருஷி ||

“ஹே மஹாலக்ஷ்மி! உன்னுடைய கல்யாண குணங்களை என்னுடைய நாக்காலோ அல்லது மனதாலோ பாடி முடிக்க முடியாது!
பாடிக்கொண்டே இருக்கலாம், பாடுவதில் வாக்கு ஓடுகிறது. தண்ணீர் உடன் கூடிய ரசத்துடன் கூடிய நாக்கு துடிக்கிறது.

‘சகோரி’ என்னும் பறவை சந்திர கலை உருகுமா என்று கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும்.
சந்திரனின் குளிர் கதிர்களை உணவு என்று எண்ணி குடிக்கும்,
தன்னால் முடியாது என்று தெரிந்தும் தன்னை முழுவதுமாக இதில் ஈடுபடுத்திக் கொள்கிறது.
இதேபோல், நானும் என் முயற்சியை விடாது, உன்னுடைய கல்யாண குணங்கள் அனைத்தையும் பாடி
போற்றிக்கொண்டே இருப்பேன்” என்று இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

———–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 –

க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப்ய நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம் ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸாதுந தாவதா ந ஹிஸுனா லீடாபி பாகீரதீ
துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||

“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை.
இந்த வரம்புகள் இருந்த போதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால்
உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.

நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..
அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே!
அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே
அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.

————-

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 6 –

முதல் ஐந்து ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரேஸர், தாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை புகழ்ந்து பாடுவதற்கு
தகுதி யற்ற தன்மையை சொல்லுகிறார்.
ஆறாவது ஸ்லோகத்திலிருந்துதான் ‘ஸ்தோத்ர ஆரம்பம்’.

ஐஸ்வர்யம் மஹதேவவா அல்பமதவா த்ருஶ்யேத பும்ஸாம் ஹி யத்
தல்லக்ஷ்ம்யா: ஸமுதீக்ஷணாத் தவ யதஸ் ஸார்வத்ரிகம் வர்ததே |
தேநைதேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோபி நாராயண:
தந்யம் மந்யத ஈக்ஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மாந மாத்மேஶ்வர: ||

ஹே ரங்கநாயகி! செல்வம் இரண்டு வகையானது என்று கூறப்படுகிறது. ஒன்று, பூமியில் அனுபவிப்பது.
மற்றொன்று ஸ்ரீ வைகுந்தத்தில் முக்தியடைந்தவர்கள் மற்றும் நித்திய சூரிகள் ஆகியோர் அனுபவிப்பது.
இந்த இரு வகையான செல்வங்களும் அவர்கள் மீது விழுந்த உம்முடைய கடாக்ஷத்தின் விளைவாக அன்றோ கிடைக்கப் பெற்றன!

‘பெரியதோ, சிறியதோ, லக்ஷ்மி கடாக்ஷத்தால் கிடைக்கப் பெற்றது’ என்கிற கூற்று கேட்டு எனக்கு ஆச்சர்யம் இல்லை.
ஆத்மேச்வரனாக, அதாவது தனக்கு ஈச்வரன் அற்றவனான, அந்த ஜகந் நாதன் உம்முடைய கடாக்ஷம் கிட்டி
தன்யனாக எண்ணுகிறான்” என இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

வாமன அவதாரத்தில் எம்பெருமான், பக்த ப்ரகலாதனின் பேரன் மகாபலியிடம் மூன்றடி மண் தானமாக கேட்கும்போது
தன்னுடைய மார்பை வஸ்திரத்தால் மூடிக்கொண்டு தானம் வாங்கினானாம்.
‘சிறிது நேரமும் விட்டுப் பிரியேன்’ என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவன் அன்றோ!
பிராட்டி கடாக்ஷம் பட்டால் மகாபலியிடம் சொத்தை வாங்க முடியாது.

‘திருவுக்கும் திரு வாகிய செல்வா’ என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடுகிறார். (பெரிய திருமொழி ஏழாம் பத்து)
அதாவது ‘ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!’ என்று.
எம்பெருமான் ஸ்ரீக்கும் ஸ்ரீயாயிருப்பனென்றால் என்ன கருத்தென்னில்;
ஸ்ரீ என்றாலும் திரு என்றாலும் ‘அதிசயத்தை விளைவிப்பவள்’ என்று பொருள் கொள்ளத்தக்கது;
எல்லார்க்கும் அதிசயத்தை விளைப்பவளான அவள் தனக்கும் அதிசயத்தை விளைப்பவன் எம்பெருமான் என்றவாறு.
பிராட்டிக்கு எம்பெருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம்; எம்பெருமானுக்குப் பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம்.

—————–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 7-

ஐஸ்வர்யம் யத ஶேஷ பும்ஸி யதிதம் ஸௌந்தர்ய லாவண்ய யோ:
ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல் லோகே ஸதித் யுச்யதே |
தத் ஸர்வம் த்வததீந மேவ யதத: ஸ்ரீரித்ய பேதேந வா
யத்வா ஸ்ரீமதி தீத்ருஶேந வசஸா தேவி ப்ரதாமஷ்நுதே ||

“ஸ்ரீ ரங்கநாச்சியாரே! இவ்வுலகில் செல்வம், அழகு, நற்குணம் போன்ற ஐஸ்வர்யங்கள் உன்னுடைய ஸம்பந்தத்தில்,
உனக்கு அடங்கியதாக உள்ளது. அவை அனைத்தும் “ஸ்ரீ” என்ற உன்னை விட வேறானது இல்லை –
என்பதன் மூலமாகவோ அல்லது ‘ஸ்ரீயை உடையது’ என்ற சொல் மூலமாகவோ அல்லவா பெருமை அடைகிறது!?”
என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

இங்கு ஸ்ரீ கூரேசர் இரண்டு வகையான ‘ஸ்ரீ’ சப்தத்தை குறிப்பிடுகிறார்.
“திருப்பதி”, “திருமங்கை”, “திரு விளக்கு” – இவை ஒருவகை.
“ஸ்ரீமத் பாகவதம்”, “ஸ்ரீமத் ராமாயணம்” – இவை இரண்டாவது வகை.

திருப்பதி மலையில் ஏறாமலே ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார்,
திரு மேனி ஒளியை வீசி சேர்த்து ‘திரு’ மலை என்று சொல்ல வைத்தாள்

————

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 8 –

தேவி தவந் மஹிமாதிர்ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோ: ஸர்வஜ்ஞதா ஹீயதே |
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞதாம் அநு குணாம் ஸர்வஜ்ஞதாயா விது:
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித் யுச்யதே ||

“ஹே ஸ்ரீரங்க நாச்சியாரே! உம்முடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீ ரங்கநாதனாலும் அறியப்படுவதில்லை.
உன்னாலும் உன்னுடைய மேன்மை என்பது எத்தன்மையது என்று அறியப்படுவதில்லை.
இப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள்.
இதன் காரணம் – எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து
கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாக சான்றோர்கள் அறிகிறார்கள்.
‘ஆகாயத் தாமரை’, ‘முயல்கொம்பு’ ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் ‘பைத்தியக்காரன்’ என்றே
உலகத்தினரால் கூறப்படுகிறான்” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்!

———————-

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 9 –

லோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம்
யஸ்யா: ப்ரஸாத பரிணாமம் உதாஹரந்தி
ஸா பாரதீ பகவதீ து யதீய தாஸி
தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:

“இந்த உலகில் ஒருவன் ‘மரம்’ போன்ற ஜடப்பொருளாகப் பிறப்பதும் தேவகுருவான ‘ப்ருஹஸ்பதி’
போன்ற அறிவாளியாகப் பிறப்பதும் ஆகிய ஏற்றதாழ்வுகளை ஸரஸ்வதியினுடைய கடாக்ஷத்தின் பலனாகவே கூறுகின்றனர்.
பூஜிக்கத்தகுந்த அந்த ஸரஸ்வதி எந்த ஸ்ரீரங்க நாச்சியாரின் அடியாராக இருக்கிறாளோ,
அனைத்து தேவர்களின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் அந்த ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைவோமாக”
என்று பாடுகிறார் ஸ்வாமி கூரத்தாழ்வான்

————-

ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 10 –

யஸ்யா: கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந
ஸத்ய: ஸமுல்ல சித பல்லவம் உல்ல லாஸ
விஸ்வம் விபர்யய ஸமுத்த விபர்யயம் ப்ராக்
தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:

“பிரளய காலத்தில் ஸ்ரீரங்க நாச்சியாரின் கடாக்ஷம் கிட்டாத காரணத்தினால் இந்த உலகம் துவண்டு கிடந்தது.
அப்போது இவளது கடைக்கண் பார்வை என்னும் ஸங்கல்பம் காரணமாக, அந்த ஸங்கல்பம் உண்டான
க்ஷண நேரத்திலேயே பூமியானது தழைத்து விளங்கியது.
மாதவன் வங்க கடல் கடைய அமுதினில் பிறந்தவள்.
தேவர்களின் தலைவனான ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைகிறோம்”

————-

ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 11 –

யஸ்யா: கடாக்ஷ வீக்ஷா க்ஷண லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி வீக்ஷதாம் லக்ஷ்மீ:

“எந்த ஒரு பிராட்டியின் கடைக் கண் பார்வைக்கு ஒரு நொடிப்பொழுது இலக்கானாலும் மிகுந்த
கைங்கர்யச் செல்வம் பெற்றவர்கள் ஆவார்களோ அப்படிப்பட்ட,
ஸ்ரீரங்கராஜனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் என்னையும் தனது கடைக் கண் கொண்டு பார்க்கவேண்டும்”
என்று மற்ற செல்வங்களை வேண்டாது கைங்கர்ய செல்வத்தையே ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் வேண்டுகிறார்.

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ நீரகத்தாய்-உலகமேத்தும் ஸ்ரீ காரகத்தாய்-பொன்னானாய்!–நீருக்கும் மேகத்துக்கும் பொன்னுக்கும் ஸ்ரீ எம்பெருமான் சாம்யா வகைகள் –

February 25, 2021

ஸ்ரீ நீரகத்தாய்
ஸ்ரீ திருக் கச்சியில் திரு ஊரகம் -ஸ்ரீ உலகந்த பெருமாள் சந்நிதியில்
உள்ள திரு நீரகம் திவ்ய தேசம்
நீரின் ஸ்வ பாவங்கள் அவனுக்கும் உண்டே
1-பள்ளத்தில் பாயும் -மேட்டில் ஏறுவது அருமை
ஜாதி இத்யாதிகளால் குறைந்தோர் பக்கம்
பாண்டவதூதன் பீஷ்மர் துரோணர் துரியோதனன் விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகை அமுது செய்து அருளினான்
பள்ளத்தே ஓடி பெரும் குழியே தங்கும் இயல்வு உண்டே
2-நீர் இல்லாமல் கார்யம் இல்லை
லோகோ பின்ன ருசி யாக இருந்தாலும் எல்லாரும் நீரை விரும்புவது போலே எம்பெருமானும்
3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை– சூடு வந்தேறி
இவனுக்கும் தண்ணளி இயற்கை -சீற்றம் வந்தேறி
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் -முமுஷூப்படி திவ்ய ஸ்ரீ ஸூக்தி
4- நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேணும்
எம்பெருமான் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –
5-நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரியதாய் இருக்கும்
ஆண்டாள் சூடிக் களைந்த மாலையாலே விலங்கிட்டு வைத்து புஜிக்க- நின்றான்
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது நடந்தான்
6-நீர் மற்ற பண்டங்கள் சமைக்க வேணும் –
தனிப்பட தானே குடிக்கவும் தக்கதாய் இருக்கும்
அவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் இரண்டு ஆகாரங்களும் உண்டே
அவனும் ஸ்வயம் புருஷார்த்தம்
7-அன்னம் போன்றதுக்கு பிரதி நிதி உண்டு
நீருக்கு பிரதிநிதி இல்லையே
குண அனுசந்தானத்தாலும் போது போக்க அரிது
ஒரு நாள் காண வாராயே -அடியேன் தொழ வந்து அருளாயே -என்று பிரார்தித்து பெற்றே தீர வேணும்
8-சோறு உண்ணும் போது நீர் வேணும்
நீர் வேறு ஒன்றை அபேஷிக்காது
உபாயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேணும்
எம்பெருமான் இதர நிரபேஷன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
9-கொள்ளும் பாத்ரங்கள் தார தம்யம் அன்றி நீர் தானே குறைய நில்லாது
எங்கும் நிரம்பவற்று
எம்பெருமானும் கொள்ளக் குறைவிலேன்
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்ளக் குறையே அத்தனை
ஐஸ்வர்யம் போதுமே கைவல்யம் போதுமே
10- நீர் ஐந்து வகைப் பட்டு இருக்கும்
பூமிக்கு உள்ள பதுங்கிக் கிடக்கும் நீர் /ஆவரண ஜலம் /பாற் கடல் நீர் /பெருக் காற்று நீர் /தடாகங்களில் தேங்கும் நீர்
அவனும் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
விடாய்த்தவனுக்கு வேறு இடம் தேடித் போக வேண்டாத படி நிற்கிற இடத்திலே உண்டாய் இருக்கச் செய்தேயும்
கொட்டும் குத்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக் கிடையாத பூமிக்குள் பதிந்த நீர் போலே அந்தர்யாமித்வம்
கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு ஹிருதயத்தில் இருக்கச் செய்தேயும்
கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அஷ்டாங்க யோகம் யத்னத்தால் காண வேணுமே
விடாய்தவனுக்கு அண்டத்துக்கு வெளியே பெருகிக் கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆயிற்று
கண்டு பற்ற வேண்டும் என்று இருக்குமவனுக்கு லீலா விபூதிக்கு அப்பால் உள்ள பரத்வம்
அப்படி அதி தூரஸ்தம் அன்றியே அண்டத்துக்கு உட்பட்டு இருக்கச் செய்தேயும்
விடாய்தவனுக்கு கிட்ட அரிதான பாற் கடல் போலே வ்யூஹம்
சமீஸ்தமாய் இருந்தும் தத் காலத்தில் இருந்தவர்களுக்கு மாத்ரம் உபயோகமாய் யோக்யமாய்
பிற்பட்டார்க்கு அரிதான பெருக்காறு போலே ஆயிற்று விபவம் -ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்
விடாய்தவனுக்கு விடாய் தீரலாம்படி பெருக்காரிலே தேங்கின மடுக்கல் போலே யாயிற்று
கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லார் கண்ணுக்கும் இலக்காம்படி அர்ச்சாவதாரம்
11- நீரானது ஸ்வத பரிசுத்தமாயினும் ஆஸ்ரய வசத்தாலே த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும்
அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் த்யாஜ்யனாயும்
கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள எம்பெருமான் உபாதேயம்
12-தோண்ட தோண்ட சுரக்கும் நீர்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும்
13-நீர் தனக்கு ஒரு பிரயோஜனமும் இன்றியே பரார்த்தமாகவே இருக்கும்
எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும்
14-நீர் தானே பெய்ய வேணும் அன்றி ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது
எம்பெருமான் படியும் அப்படியே
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேஷை கஞ்சித் கதாசன
15 நீர் கடலில் இருந்து காள மேகம் வழியாக வந்தால் அன்று உபஜீவிக்க உரியது ஆகாது
எம்பெருமானும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆசார்யர் முகமாகவே வந்தே உபஜீவ்யன் ஆகிறான்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூல் கடல் சொல் இவர் வாயனவாயத் திருந்தினவாறே
சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆமே
16-வசிஷ்ட சண்டாள விபாகம் அற ஒரே துறையிலே படிந்து குடைந்தாடலாம் நீரில்
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
பெரியார் சிறியார் வாசி அற ஆஸ்ரயிக்கலாம்
17-நீர் சிறிது த்வாரம் கிடைத்தாலும் உட் புகுந்து விடும்
எம்பெருமானுக்கு சிறிது வ்யாஜ்யமே போதும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறைய வந்து புகுந்தான்
18-தீர்த்த விசேஷங்களிலே நீருக்கு மகாத்மயம் அதிகம்
எம்பெருமானுக்கு கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திருப்பதிகள் விசேஷம்
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் ஏறட்டு கொள்வது
முதுகில் கொட்டுவது உள்ளில் இழிச்சுவது குடைந்து நீராடுவது
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் ஸ்ரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி -எம்பெருமானை விழுங்குவார்கள்
20-நீர் வேண்டியவன் துளி நுனி நாக்கு நனைத்தால் போதும் என்பான்
கூராழி வெண் சங்கு ஏந்தி –ஒரு நாள் காண வாராயே
21-நீரில் சிறிய கல்லும் அமிழும் பெரிய தெப்ப மரமும் மிதக்கும்
ப்ரஹ்மாவாய் இழந்து போதல் இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யக் காண்போம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
சிறு மா மனிசர் அமிழ்தலும்
ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்றலும் காண்போம்
இங்கனே பலவும் உண்டே

———–

ஸ்ரீ உலகமேத்தும் காரகத்தாய்
மேகம் போன்ற ஸ்வ பாவம் உடையவனே
1-பெய்ய வேண்டிய இடம் அளவும் சென்று பெய்யும்
வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
2- மின்னல் உள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும்
பிராட்டி உடன் இருந்தால் கிருபா ரசம் விஞ்சி இருக்கும்
இவள் சந்நிதியால் காகம் தலைப் பெற்றது அது இல்லாமையால் ராவணன் முடிந்தான்
3- மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்
தனக்கு உபதேசித்தார்க்கும் உபதேசிப்பான்
சித்ர கூடத்தில் வசிஷ்டன் பெருமாள் இடத்திலே சில சூஷ்ம தர்மங்கள் கேட்கப் பெறலாயிற்று
4-பெய்யப் பெறாத காலத்திலே வரைக்கும் மேகம்
நெஞ்சு உலர்ந்து பேசினான் இறே திரௌபதிக்கு ஆபத்திலே நேரிலே வந்து உதவப் பெறாமையாலே
5-இன்ன காலத்தில் மேகம் பெய்யும் என்று அறுதியிட வல்லார் யாரும் இல்லை
வந்தாய் போலே வாராதே வாராதே போலே வருவானே
திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான்
அபேஷியாது இருக்கவே தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்டான்
6- வனத்திடை ஏரியாக வெட்டி யாயிற்று நீ மழை பெய்தாக வேணும் என்று வளைப்பிட ஒண்ணாது
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்தனன்
7- ஜல ஸ்தல விபாகம் இன்றியே பெய்யும் மழை
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம்
இடையர் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -பகவத் விஷயீ காரம் பெற்றவர்கள்
8-மேகம் சரத் காலத்திலே கர்ஜித்து போய் விடும் மழை பெய்யாது பெய்யும் காலத்தில் ஆடம்பரம் அறப் பெய்யும்
எம்பெருமான் குசேலருக்கு அருள் செய்தபடி
9- விராட பர்வ கால ஷேபத்துக்கு வரும் மேகம்
பகவத் விஷய கால ஷேபத்துக்கு வந்து நிற்கும் எம்பெருமான்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் என்று வந்தான் இறே ஸ்ரீ ரெங்க நாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே
10- சுக்திகளில் பெய்து முத்தாக்கும் மேகம்
அடியாருக்கு இன்ப மாரியாகிய எம்பெருமான் கடாஷ தாரையும்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் இடத்தே பிரவஹித்து மிக்க பயன் தரும்
11-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் -இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்
இவனும் இன்னார் தூதன் என நின்றான்
கோதை வேலை ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் இறே
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்
எருக்கலை போல்வன வீழ்ந்து ஒழியும்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய்
தாயார் மகிழ ஒன்னார் தளர
13- எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் பைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் -வேறு புகல் அற்று
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -அநந்ய கதிகளால்
14-துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை -என்கிறபடி
அன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேது வாகையாலே போக ஸ்தானமாயும்
விடாய் தீர பருகுகையாலே ஸ்வயம் போக்யமாயும் இருக்கும்
பிராப்யனும் பிரபகனுமாய் இறே இவனும் இருப்பது
15-எத்தனை கண்ணீர் விட்டாலும் விருப்பம் இல்லாத அன்று வாளா இருக்கும் மேகம்
பரதாழ்வான் பலருடன் சித்ர கூட பரிசரத்திலே போந்து கண்ணநீரை விழ விட்டு வேண்டினவிடத்தும்
ஸ காம மன வாப்யைவ -என்று மநோ ரதம் பெறாமல் வீண்டான் இறே

——————

பொன்னானாய்! =
பொன் போன்றவனே! எம்பெருமானைப் பொன்னாகக் கூறுவதற்குப் பல பொருத்தஞ் சொல்லலாம்;
அதாவது-
பொன்னானது தன்னைப் பெற்றவர்களையும் பெற விருப்பமுடையாரையும் இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது;
எம்பெருமான் படியும் அப்படியே;
“கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பு முமுக்ஷுக்களை உறங்கவெட்டான்;
கண்ட பின்பும் * ஸதாபச்யந்தி யாகையாலே நித்ய முக்தர்களை உறங்கவொட்டான்.
பொன்னானது தன்னையிழந்தவனைக் கதறிக் கதறி யழப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே: ஸ்ரீராமபிரானை யிழந்த பரதாழ்வான் ஸபையிற் புரண்டு கதறிழுதமை ஸ்ரீராமாயணாதிப்ரஸித்தம்.
“பழுதே பலபகலும் போயின” வென்று கதறியழுவர் விவேகமுடையார்.
“இன்பத்தை யிழந்த பாவியேனெனதாவி நில்லாதே”
“எழில்கொள் நின் திருக்கண்ணினை நோக்கந் தன்னையுமிழந்தேனிழந்தேனே”
“உன்னைக் காண்பான் நானலப்பாய் ஆகாசத்தை நோக்கியழுவன் தொழுவனே” என்றிப்படியெல்லாங் கதறுவர்கள்.
பொன்னானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்; தன்னை யுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே; “எனக்காரும் நிகரில்லையே”
“மாறுளதோவிம்மண்ணின் மிசையே”
“எனக்கென்னினி வேண்டுவதே”
“இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்களிறே எம்பெருமானையுடையார் –
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -7–

February 25, 2021

நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒரு பொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த வெம்
பெருமா மாயனை யல்லது,ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே.

பதவுரை

நளிர்மதி சடையனும்–குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும்
நான்முகன் கடவுளும்-பிரமதேவனும்
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா-தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக
யாவரும்-எல்லாப் பிராணிகளும்
யாவகை உலகமும்-எல்லா வுலகமும்
அகப்பட-உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்-பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும்
மலர் சுடர் பிறவும்-சந்திரன் ஸூர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும்
சிறிது-சிறியதான திருவயிற்றின் ஒரு பக்கத்தில்
மயங்க-கலசும்படியாக
ஒரு பொருள் புறப்பாடு இன்றி-ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி
முழுவதும்-எல்லாப் பொருள்களையும்
அகப்பட சுரந்து-உள்ளேயிட்டு மறைத்து
ஓர் ஆல் இலை சேர்ந்த-அத்விதீயமான வொரு ஆலந்தளிரிலே பள்ளி கொண்ட
எம்-எமக்கு ஸ்வாமியாய்
பெரு மா மாயனை அல்லது-மிகப்பெரிய ஆச்சரியங்களை யுடையனான ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து
மற்று ஒரு மா தெய்வம்–வேறொரு க்ஷுத்ர தேவதையை
யாம் உடையமோ–நாம் சேஷியாகக் கொள்ளுவோமோ? (கொள்ள மாட்டோம்)

ஸகல சேதநர்களும் ஸ்வரூப ப்ராப்த சேஷியான எம்பெருமானை அடி பணிந்து
அவனுக்கே வழுவிலா வடிமைகள் செய்ய ப்ராப்தமாயிருக்க அப்படி செய்யாதே
தேவதாந்தரங்களை ஆச்ரயித்து ஸம்ஸாரத்தையே பூண் கட்டிக் கொள்ளுகிறார்களே!
அந்தோ! இஃது என்ன அனர்த்தம்!
என்று கீழ்ப்பாட்டில் கவலைப்பட்டார்.

ஒரு ஸம்ஸாரியாவது இவருடைய துயரத்தைப் பரிஹரிக்க முன்வராமற் போகவே,
‘இப்பாழும் ஸம்ஸாரிகள் எக் கேடாவது கெடட்டும்
நாமும் அவர்களைப் போலே அனர்த்தப்பட்டுப் போகாமல் எம்பெருமானுக்கே அடிமைப் பட்டிருக்கப் பெற்றோமே!
என்று தம்முடைய மன வுறுதிக்கு உகந்து பேசுகிறார் இதில்.

ஸம்ஸாரிகள் பற்றுகிற தேவதாந்தரங்கள் யாவும் நம்மைப் போலவே பலவகை ஆபத்துக்களுக்கு உள்ளாகி
எம்பெருமானுடைய திருவருளால் தப்பிப் பிழைப்பவர்களே யொழிய
பிறருடைய ஆபத்துக்களைத் தாம் பரிஹரிக்கவல்ல ஸர்வ சக்தர்களல்லர் என்பதை விளக்க வேண்டி
‘இந்தத் தெய்வங்களெல்லாம் பிரளய காலத்தில் எம்பெருமானது திருவயிற்றிலே பதுங்கிக் கிடந்தனை காண்மின்‘ என்கிறார்.

எல்லாத் தெய்வங்களையும் உய்யக் கொண்ட பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனுக்கன்றி
மற்று யார்க்கும் நாம் அடிமைப்பட்டவர்களல்லோம் என்பது நிகமனம்.

நளிர்மதிச் சடையனும் என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயல் –
“ஸாதக வேஷம் தோற்ற ஜடையைத் தரித்துக் கொண்டிருக்கச் செய்தேயும் துர்மானத்தாலே ஸுக ப்ரதாநன்
என்று தோற்றுபடி தாழை மடலைக் கீறித் தலையிலே வைப்பாரைப் போலே
குளிர்ந்த சந்திரனை ஜடையிலே தரித்த ருத்ரனும்“ என்று.

இதில்“ தாழை மடலைக் கீறி“ இத்யாதி த்ருஷ்டாந்த வாக்யத்திற்குப் பொருள் யாதெனில்
உலகில் மூட்டை சுமந்து வருந்திக் கூலி ஜீவனம் பண்ணுகிறவர்கள் தாங்கள் கஷ்டப்படுகிறவர்களென்பது
பிறர்க்குத் தெரியாமைக்காகவும் தாழம்பூ முதலிய பூக்களை யெடுத்துச் சூட்டிக்கொண்டு திரிவர்களாம்,
அப்படியே சிவ பிரானும் தான ஸம்ஹாரக் கடவுளென்பதையும்
ஸாதனாதுஷ்டாநம் பண்ணி ச்ரமப்படுகிறவன் என்பதையும் பிறரறிந்து அருவருக்காமைக்காவும்
‘இவன் உல்லாஸமாக இருக்கக் கூடிய ரஸிகன்‘ என்று பலரும் நினைத்துக் கொள்வதற்காகவும்
அழகிய சந்திர கலையைச் சிரமீது அணிந்தான் போலும் என்று ஒரு விநோதமாக அருளிச் செய்தபடி.

இந்திரன், அரம்பை ஊர்வசி முதலிய அப்ஸரஸ் ஸ்திரீகள் தன்னை நன்கு காதலிக்கும்படி
அலங்காரங்கள் செய்து கொண்டு அதனால் மேனி நிறம் விறு பெற்றிருப்பனாதலால்
தளிரொளி என்று விசேஷிக்கப்பட்டான்.

ஆக முக்யமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே
மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி
முதலா யாவகையலகமும் யாவருமகபட என்றார்.

எம்பெருமானது திருவயிற்றிலுள்ளே அடங்கிக் கிடந்து ஸத்தை பெற்ற பதார்த்தங்களை
தாம் வாய் கொண்டு சொல்லுவதும்
நமக்குப் பெரும் பாக்கியமென்றோ என்றெண்ணி
நில நீர் தீ கால் சுடரிருவிசும்பும் மலர்சுடர் என்று மீண்டு விவரித்துச் சொல்லத் தொடங்கினர் போலும்.

சிறிது டன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம்.
(கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம்)
சிறிது – மிகச்சிறிய வடிவத்தை உடையனவாய்க் கொண்டு,
உடன் – ஏக காலத்திலே,
மயங்க – உள்ளே யடங்கும்படியாக என்பது ஒரு வகை.

உடன் மயங்க என்றவிடத்து உடல்மயங்க என்று பதம் பிரித்து,
சிறிதாகிய உடலிலே –
பேதைக் குழவியான எம்பெருமானது மிகச் சிறிய வுடலிலே மயங்க என்றல் மற்றொருவகை.
மற்றுங் கண்டு கொள்க.

ஆக எல்லாப் பதார்த்தங்களையும் ஒன்று தப்பாமல் திரு வயிற்றினுள்ளே அடங்கிக்கொண்டு
“பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின், மேலன்று நீவளர்த்த மெய்யென்பர்“ என்றபடி
சிறு குழந்தை வடிவமாகி முகிழ் விரியாத சிற்றாலந்தளிரிலே கண்வளர்ந்த அற்புத சக்தி வாய்ந்த
ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை தவிர்த்து வேறொரு தெய்வத்தை நாம் தெய்வமாகக் கொள்வோம்.

“நெற்றி மேற்கண்ணானும் நிறைமொழிலாய் நான்முகனும் நீண்டநால்வாய்,
ஒற்றைக்கை வெண்பகட்டிலொருவனையு முள்ளிட்டவமர்ரோடும்,
வெற்றிப்போர்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,
கொற்றப்போராழியான் குணம் பரவாச்சிறுடிதாண்டர் கொடியவாறே“ என்றும்,
“அன்றெல்லாருமறியாரோ எம்பெருமானுண்டு மிழந்த எச்சில் தேவர், அல்லாதார் தாமுளரே“ என்றும்
(பெரிய திருமொழியில்) திருமங்கை யாழ்வார்ருளிச்செய்த பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத்தக்கவை.

“மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார்பதத்து நீர்?—
அங்கண்ஞாலமுண்ட போது வெள்ளிவெற்பு அகன்றதோ?
ஆதலாலரங்கனன்றி வேறு தெய்வமில்லையே“ என்ற பிள்ளைப் பெருமாளையங்கார்
விடுதிப் பாசுரமும் குறிக்கொள்ளத்தக்கது.

இத் திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வ ஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.

திருவிருத்தத்திலும் திருவாய்மொழியிலும் ஆழ்வார் தம்முடைய திருநாமத்தை அருளிச்செய்துளர்,
இப் பிரபந்தத்தில் அப்படி அருளிச் செய்யவில்லை என்பதைக் காரணமாகக் கொண்டு சிலர் சொல்லுவதாவது –
இத் திருவாசிரியம் இன்னும் பல பாசுரங்களை யுடைய பிரபந்தமாயிருந்த்தென்றும்,
காலக் கிரமத்தில் சில பாசுரங்கள் லோபித்து விட்டன வென்றும் சொல்லுகிறார்கள்.

நம்மாழ்வாருளிச்செய்த நான்கு பிரபந்தங்களும் இதற்கு அடுதத்தான பெரிய திருவந்தாதியிலும்
ஆழ்வாருடைய திருநாமம் அருளிச் செய்யப்பட்டிருக்க வில்லை யாகையால் இது சேராது

அந்தாதித் தொடையாக அமைந்த பிரபந்தங்கள் எல்லாவற்றிலும்
முடிவு பாசுரத்தின் அந்தமும் முதற்பாசுரத்தின் ஆதியும் ஒன்றாக அமையும்படி அருளிச் செய்யப்பட்டிருப்பது போல்
இப்பிரபந்தத்தில் அமையாமையால் இதைக் கொண்டு இதில் சில பாசுரங்க் லோபித்து விட்டவென்று சொல்லுவர் சிலர்,
அதுவும் சேராது

ஈற்றுத் தமிழர் சொல்லி வைத்திருக்கையால்
இப் பிரபந்தம் மண்டலித்தலாகாது என்று
சொல்லாமத்தனை யொழிய பாசுரங்கள் லோபித்தன என்றால் பொருந்த மாட்டாது.

ஆகவே இப்பிரபந்தம் பூர்ணமென்றே கொள்ளத்தக்கது.

———————————————–————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -6–

February 25, 2021

ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி,படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து,தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.

பதவுரை

உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்தும்
இடந்து-ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும்
உண்டு-(மற்றொரு கால் பிரளயம் வந்த போது) வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து-பிறகு வெளிப் படுத்தியும்
அளந்து-(பின்னுமொரு கால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
புடை-ஏதோவொரு மூலையில் சொல்லப்பட்டும்
தான் அறி-தான் தோன்றித் தனமாக அறிந்து கொள்ளக் கூடியவும்
பல-வலகைப்பட்டு மிருக்கிற
தெய்வம்-தேவதைகளை
பேணுதல்-ஆராதிப்பது
தனது-தன்னுடைய
புல் அறிவாண்மை–நீச புத்தியை-பொருந்த காட்டி
விளங்கக் காட்டிக்கொண்டு–
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே வீட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போல,
கொல்வன முதலா-ஆடு பலி கொடுத்தல் கோழி பலி கொடுத்தலாகிற ஜீவஹிம்ஸை முதலான
அல்லன முயலும்–தப்புக் காரியங்களைச் செய்ய நினைக்கையாகிற
தேர்ந்து–இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டும்
அளிக்கும்–(முக்காலங்களிலும்) ரக்ஷித்துக் கொண்டேயிருக்கிற
முதல் பெரு கடவுள் நிற்ப–ஸர்வ காரணனும் பராத்பானுமான ஸ்ரீமந்நாராயணன் (அவனை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்)
இனைய செய்கை–இப்படிப்பட்ட காரியங்களாயிரா நின்றன
அளி-(அந்த க்ஷுத்ர தெய்வங்களின்) ப்ரஸாதமோ
இன்பு துன்பு-ஸுகமென்று பேர் மாத்திரமான துக்கம் (அதாவது என்னெனில்)
தொல்-அநாதியாய்
மா-மஹத்தாய்
மாயம்-ஆச்சரியமான
பிறவியுள்-ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கா-ஒரு நாளும் நீங்குதலின்றிக்கே
பல் மா மாயத்து-பலவகைப் பட்ட வ்யாமோஹ ஜநகங்களான சப்தாதி விஷயங்களிலே
நளிர்ந்து அழுந்தும் ஆ ஓஓ உலகினது இயல்வு-இப்படிப்பட்ட லோகஸ்வபநவம் என்ன பரிதாபம் ஐயோ! (என்கிறார்)

“முடிதோளாயிரந்தழைத்த நெடியோய்க் கல்லது மடியதோவுலகே“ என்று கீழ்ப் பாட்டிலருளிச் செய்த ஆழ்வார்
தம்முடைய கொள்கைப் படியே உலகமனைத்தும் எம்பெருமானை வணங்கி வழிபட்டு
உஜ்ஜீவிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தார்.
க்ஷுத்ர பலன்களை விரும்பி க்ஷுத்ர தேவதைகளை ஆராதிக்கின்ற க்ஷுத்ர ஜனங்களே மிகுதியாகக் காணப் பட்டன.
பரிதாபம் பொறுக்க மாட்டாமல் ஐயோ! ஐயோ! இப்படியும் உலகம் பாழாய்ப்போவதே! என்று
வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொள்ளுகிறார் – ஓ ஓ என்று கதறுகிறார்.

இப்படி இவர் ஓ ஓ என்று கதறுகிற கதறல் எவ்வளவு தூரம் கேட்குமென்னில்,
இவர் தாம் கீழ்ப் பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவு தூரம் சென்றதோ,
அவ்வளவிலும் மேலாகவே சென்று ஒலிக்குமென்று கொள்ளீர்.

இவ்வுலகின் ஸ்வபாவத்தை நாம் என்ன சொல்லுவோம்!
இவ்வுலகம் செய்கிற காரியம் என்னவென்றால், நன்றிகெட்ட காரியஞ்செய்யா நின்றது.
பிள்ளையைப் பெறுவதற்கு முன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்ற பின்பும்
குறையற ஸம் ரக்ஷிப்பதற்காக எத்தனையோ வருத்தங்கள் கஷ்டங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற
மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்ய வேண்டியது ப்ராப்தமாயிருக்க,

அவளைத் திரஸ்கரித்து விட்டு
உபயோகமற்றவொரு மணைக் கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வரைப் போலே
இவ் வுலகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்து விட்டு
ஒரு நன்றியும் செய்ய மாட்டாத அசேதந ப்ராயங்களான புதுத் தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே!
இது விவேகமிருந்து செய்கிற காரியமோ? அறிவு உள்ளவர்கள் இப்படியுஞ் செய்வார்களோ?

எம்பெருமான் இவ்வுலகுக்குச் செய்த உபகாரங்களை இன்று நான் புதிதாகச் சொல்ல வேண்டுமோ?
இறகு ஒடிந்த பக்ஷிகளைப் போலே கூட்டினதும், இந்திரியங்களை யிழந்து கிடந்த இவ் வாத்துமாக்களைக்
கரண களேபரங்களோடே கூட்டினதும், ஹிரண்யாக்ஷன் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன இந் நிலவுலகத்தை
மஹர வாரஹமாகி மீட்டுக் கொணர்ந்ததும், இவ்வுலகமெல்லாம் பிரளயப் பெருங்கடலில் நசித்துப் போக
நேர்ந்த காலத்துத் திரு வயிற்றிலே வைத்து ஸம் ரக்ஷித்தும், பிரளயங்கழிந்தவாறே பழையபடி வெளியிட்டதும்,
மாவலி யிடத்து நீரேற்றுப் பெற்றுத் தாளின் கீழ் ஆட்படுத்திக் கொண்டதும் முதலான உபகாரங்கள் சொல்லி முடியுமோ?

இப்படிப்பட்ட உபகரங்கள் இன்னும் எத்தனையோ செய்வதாகத் திருவுள்ளம் பற்றி யிருப்பவனன்றோ திருமால்.
அவனைத் தவிர வேறொரு முழுமுதற் கடவுள் இவ்வுலகுக்கு உண்டோ?
நன்றி யறிவுள்ளவர்கள் அப்பெருமாலுக் கன்றோ பணிவிடைகள் செய்ய ப்ராப்தம்,
அவனுக்குச் செய்யாத்தோடு ஒரு நன்றியுஞ் செய்ய மாட்டாத தேவதாந்தரங்களுக்குப் போய்ப் பணிவிடை செய்கிற
இவ்வுலகின் அவிவேகத்தை என்ன சொல்லுவோம்?
அந்த தேவதாந்தரங்கக்கு இவர்கள் செய்கிற ஆராதனம் என்ன வென்றால்
ஆட்டைவெட்டிப் பலியிடுவதும் கோழியைக் கொண்டு நைவேத்யஞ் செய்வதும்
இவை போல்வன ஜீவ ஹிம்ஸைச் செயல்களேயாகும்.

இதற்குப் பலனாக அந்த தேவதைகள் கொடுப்பது என்னவென்றால்,
இந்த ஸம்ஸாரத்திலேயே தரைப் பட்டு அழுந்தி உழல்வதற்கு உறுப்பான ஆபாஸ ஸுகங்களேயாம்.
உண்மையில் இவை ஸுகங்களல்ல; துக்கங்களேயாம்.

இப்படிப்பட்ட துக்கங்களைப்பெற விரும்பி
இவ்வுலகம் ப்ராப்த தேவதையைவிட்டு தேவதாந்தர பஜநம் பண்ணித் திரிகின்றதே!
அநியாமாய் அநர்த்தப் பட்டுப் போகின்றதே!
இதனில் மிக்க பரிதாபமுண்டோ! என்றாராயிற்று.

ஈன்றோளிருக்க மணை நீராட்டி பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம்,
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்,
போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வங் கொண்டாடுந் தொண்டீர்
பெற்றதாயிருக்க மணையடியொற்றியதே. மணை நீராட்டி –
மணை என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி.
நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி.

‘மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி
மணை நீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு
மணை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை,
இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.

மாதர்கள் ப்ரஸவித்தவுடனே பெற்ற அத்தாயையும் பிறந்த சிசுவையும் ஸ்நாநஞ்செய்வித்தல்
மலை காட்டு வழக்கமாக வெகு முற்காலத்தில் இருந்ததாம்.
ப்ரஸவித்தவுடனே தாயை நீராட்டுவது பலவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாவதால்
அத் தாய்க்குப் பதிலாக ஒரு மணைக் கட்டையை ஸ்நானஞ்செய்விப்பது
இடைக் காலத்து வழக்கமாக இன்றைக்கும் நடந்து வருகின்றதாம்.
அதனைத் திருவுள்ளம் பற்றி இங்கு ஆழ்வார் இப்படி அருளிச்செய்தார் என்று சிலர் சொல்லுவர்.

புடைப்பலதானறி தெய்வம் பேணுதல் –
புடை என்றது ஏதோவொரு பக்கம் என்றபடி,
வேதத்தில் ஏதோ ஒரு மூலையில் சிவன் என்றும் ருத்ரன் என்றும் ஹிரண்ய கர்ப்பன் என்றும்
சில பதங்கள் கிடந்தால் அவற்றின் பிரகரணத்தையும் பொருளையும் தெரிந்து கொள்ளாது
அந்த தேவதைக்குப் பரத்துவஞ் சொல்லியிருப்பதாகக் கொள்வார்களே சிலர் அதைச் சொல்லுகிறது.
ஆனது பற்றியே தானறிதெய்வம் என்றுஞ் சொல்லப்பட்டது. புதரகாமவம் என்றபடி
அவரவர்கள் பற்றும் தெய்வங்கள் பலபலவாயிருப்பது பற்றிப் பலதெய்வம் பேணுதல் என்றார்.

தனது என்பது ‘தானது‘ என்று நீட்டல் விகாரம் பெற்றுக் கிடக்கிறது.
‘புல்லறிவாளன்‘ என்று விவேகமற்றவனைச் சொல்லுகிறது
புல்லறிவாண்மையாவது அவிவேகம் கொல்வன முதலா அல்லன –
இவ்வாழ்வார் தாமே திருவாய்மொழியில் “தீர்ப்பாரையாமினி“ என்ற திருவாய்மொழியில்
“நீர் எதுவானுஞ் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியுந் தூ வேல்மின்“ என்றும்,
“நீர்கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் ளனிழைத்தென்பயன்“ என்றும்,
“அணங்குக் கருமருந்தென்றங்கோர் ஆடுங் கள்ளும்பராய்“ என்றும்,
“ஏதம் பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாய்த்தூய் கீதமுழவிட்டு நீரணங்காடுதல் கீழ்மையே“ என்றும்
அருளிச்செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தகும்.

இன்புதுன்புஅளி – அளிப்பது அளி, அதாவது கொடுக்கும் வஸ்து,
தேவதாந்தரங்கள் தரும்பொருள் யாதெனில், இன்பு துன்பு – இன்பாவது ஸுகம், துன்பாவது துக்கம்,
ஸுகமென்று பரமிக்கக்கூடிய துக்கமென்றவாறு ஸம்ஸாரத்தில் கிடைக்கும் ஸுகங்களெல்லாம் இப்படிப்பட்டவையேயாம்.
பிள்ளை பெறுவது செல்வம் பெறுவது என்னுமிவை மேலெழப்பர்க்கையில் ஸுகமாகத் தோன்றி,
வரவரத் துன்பமாகவே முடிகின்றமையைப் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.

தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷி பண்ணுவதே யன்றி
வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார்
தொன் மா மாயப் பிறவியுள் நீங்காப் பன்மா மாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -5–

February 24, 2021

மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப,வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?

பதவுரை

மா முதல் அடி போது ஒன்று-(உலகத்துக்கெல்லாம்) மூலாதாரமாகிய திருவடிகளில் ஒன்றை
கவிழ்ந்து அலர்த்தி–நில மட்டமாகப் பரப்பி
மண் முழுவதும்–பூமியை யெல்லாம்
அகப் படுத்து–திருவடிக்குள்ளடக்கி ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
ஒண் சுடர் அடி போது ஒன்று–அழகிய தேஜஸ்ஸு நிறைந்த மற்றொரு திருவடித் தாமரையை
நான் முகன் புத்தேள் நாடு-பிரம தேவனுடைய உலகமானது
வியந்து உவப்ப–ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடையும் படியாகவும்
வானவர்–மற்றுமுள்ள தேவர்கள்
முறை முறை–சாஸ்திர விதிப்படி
வழி பட–ஆராதிக்கும்படி யாகவும்
விண்செலீஇ நிறீஇ–ஆகாசத்திலே செலுத்தி நிறுத்தி
தாமரைக் காடு மலர் கண்ணொடு–தாமரைக் காடு மலர்ந்தாற் போலிருக்கிற திருக் கண்களையும்
கனி வாய் உடையதும் ஆய்-கொவ்வைக் கனி போன்ற திரு அதரத்தையும் உடையவனாயும்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன–பெரிய ஆயிரம் ஸூர்யர்கள் சேர்ந்து உதித்தாற் போன்ற
முடி–திரு வபிஷேகத்தை யுடையனாயும்
பல பல கற்பகம் காவு அன்ன–பல வகைப் பட்ட கற்பகர் சோலைகள் போலே
தோற் ஆயிரம் தழைத்த–ஆயிரம் திருத் தோள்களை பணைத்திருக்கப் பெற்றவனாயுமுள்ள
நெடி யோய்க்கு அல்லதும்–பரம புருஷனான உனக்குத் தவிர (வேறு யார்க்கேனும்)
உலகு அடியதோ–இவ் வுலகம் அடிமைப் படக் கூடியதோ?

(மாமுதல்)
எம்பெருமான் உலகமளந்த சரிதையை அநுஸந்தித்து,
‘இப்படியும் ஒரு ஸெளலப்யமும் ளௌசீல்யமும் உண்டாவதே!‘ என்றீடுபட்டு
ஆச்ரிதர்க்காகத் தன்னை அழிய மாறிக் காரியஞசெய்கிற மஹோபகாரகனாகிய பரமபுருஷனுக் கன்றி
வேறு யாருக்கு இவ் வுலகம் அடிமைப்பட முடியும்?

எல்லார் தலையிலும் திருவடிகளைப் பரப்பின தெய்வத்தை நோக்கி
“அன்றிவ்வுலகமளந்தாய் அடிபோற்று“ என்று மங்களாசாஸநம் பண்ணுகை ஏற்குமே யன்றி
அவன் திருவடிகளின் கீழ் துகையுண்ட சிலரை நோக்கி
‘ஜய விஜயீபவ‘ என்னக் கூடுமோ வென்கிறார்.

மா முதல் –
என்பதைத் திருவடிக்கு விசேஷணமாக்கி உரைப்பதன்றி அண்மை விளியாகக் கொண்டு
உலகங்கட்கெல்லாம் ஆதி காரணனான எம்பெருமானே! என்று
ஸம்போதநமாக உரைத்தலும் ஒக்கும்.

போது –புஷ்பம், அதாவது
தாமரைப்பூ
அடிப்போது
பாதாரவிந்தம்.
இதைக் கவிழ்த்துப் பரப்பிப் பூமண்டலம் முழுவதையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்டானாயிற்று.

செலீஇ- செலுத்தி சொல்லிசையளபெடை.
“வானவர் முறை வழிபடநெறீஇ“ என்றே பெரும்பாலும் ஓதுகின்றனர்.
நிறீஇ என்ற பாடமும், நிறுத்தி என்று அதற்குப்பொருளும் அஸ்மதாசார்யர் அருளிச் செய்த்து.
நெறீஇ என்ற பாடமும் பொருந்தும், வியாக்கியானத்திற்கும் இணங்கும்.
வானவர் – தேவர்கள்,
நெறீஇ – நல்வழிப்பட்டு,
முறை முறை – சாஸ்த்ர விதிப்படி,
வழிபட – ஆராதிக்கும்படியாக என்று பொருளாகக் கடவது.
நெறீஇ – இறந்தகால வினையெச்சம். நெறி – பகுதி,
இ-இறந்த கால வினையெச்ச விகுதி,
இகரம் ஈகாரமானதும் அளபெடுதத்தும் விகாரம்.
நான்முகப் புத்தேள் –புத்தேள் என்று தெய்வத்திற்குப் பெயர் நான் முகன் – புத்தேள், நான்முகப்புத்தேள் பிரமதேவன் என்றபடி.
அவனுடைய நாடு வியந்து உவப்ப என்றது – அவனுடைய நாட்டிலே உள்வர்கள்
‘தாமரை போல் பரம போக்யமான ஒரு திருவடி இங்கே வந்து ஸேவை ஸாதிப்பதே!‘ என்று
ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடைய என்றபடி.

தாமரைக்காடு என்று தொடங்கி உலகளந்த பெருமானுடைய சில அவயவங்களையும்
திருவபிஷேகத்தையும் வருணிக்கிறது.
இப்படி விலக்ஷணனான பரமபுருஷனுக்குத் தவிர மற்று யார்க்கேனும் அடிமைப்பட உரியதோ இவ்வுலகம்?

நெடியோன் என்பதன் முன்னிலை நெடியோய் என்பது.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -4–

February 24, 2021

ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,
யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே.

பதவுரை

யாவகை உலகமும்–எவ்வகைப்பட்ட லோகங்களும்
யாவரும்–எவ்வகைப்பட்ட பிராணிகளும்
இல்லா–இல்லாமலிருந்த
மேல் வரும் பெரு பாழ் காலத்து-கீழ்க் கழிந்த மஹா ப்ரளய காலத்தில்
இரு பொருட்கு எல்லாம்–எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம்
பெறல் அரு தனி ஒரு வித்து தான் ஆகி-பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க் கொண்டு
தெய்வம் நான் முகன் கொழு முளை ஈன்று-நான்முகக் கடவுளாகிற சிறந்த ஒரு முளையைப் படைத்து
முக்கண் ஈசனோடு பல தேவு நுதலி-முக் கண்ணனான சிவன் முதலி பல தேவங்களை உண்டாக்கி (ஆக இவ் வகையாலே)
மூ உலகம் வளைத்த உந்தி-மூன்று லோகங்களையும் உண்டாக்கின திரு நாபியை யுடையவனாய்
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
கடவுள்–ஸர்வோத்தமனான ஸ்ரீமந் நாராயணனுடைய
மா முதல் அடியே–(உஜ்ஜீவனத்திற்கு) மூல காரணமான திருவடிகளையே
ஊழி ஊழி தோறு ஸர்வ காலமும்
ஓவாது–இடைவிடாமல்
வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்-‘வாழ்ந்திடுக‘ என்று நாம் சொல்லி வணங்கும்படியாக (பாக்கியம்) வாய்க்குமோ.

(ஊழிதோறூழி)
கீழ்ப் பாட்டில் தனிமாத் தெய்வத் தடியவர்க்கிணை நாமாளாகவே இசையுங்கொல்“ என்று
பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோ ரதித்தார்,
பாகவதர்களை அநுவர்த்தித்துப் பார்த்தார்,
அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு… உன சேவடி செவ்வி திருக்காப்பு“ என்று
எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்,

அதைப் பார்த்து ‘இவர்களுடைய காலக்ஷேபமேயன்றோ நமக்கு உத்தேச்யம்,
இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநமே பண்ணிக் கொண்டிரா நின்றார்கள்.
இது மிக அழகாயிரா நின்றது
இப்படிப்பட்ட போது போக்கு நமக்கும் கிடைக்குமாகில் நலமாயிருக்குமே!‘ என்று கொண்டு,
அப்படிப்பட்ட பாக்கியம் வாய்க்குமா என்கிறார் இதில்.

யாவகையுலகமும் என்று தொடங்கி மாயக்கடவுள் என்னுமளவும்
எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகிறார்.

“பன்மைப் படர் பொருளாதுமில் பாழ் நெடுங்காலத்து நன்மைப் புனல் பண்ணி
நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே, தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே“ என்ற பாசுரம்
இங்கு ‘அநுஸந்திக்கத்தகும்.

சேதந வர்க்கங்களிலும் அசேதந வர்க்கங்களிலும் ஒன்றுமில்லாதபடி மஹா ப்ரளயங் கோத்த காலத்தில்,
தேவ மநுஷ்யாதி ரூபத்தாலே எண்ணிறந்தவைகளாய் அசித்தோடே கலசிக் கிடப்பவையான
ஜீவ வஸ்துக்களுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவன் எம்பெருமான்.

தனி வித்து ஒரு தானாகி –
தான் ஒரு தனி வித்தாகி என்று அந்வயிப்பது.
வித்தாகி என்னாமல் ஒரு வித்தாகி என்னாமல் ஒரு தனி வித்தாகி என்றதனால் –
நிமித்த காரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும்
எம்பெருமான் தானே யாகிறான் என்று தெரிவிக்கப் பட்டதாயிற்று.

உலகில் குடம் துணி முதலிய வஸ்துக்கள் ஜனிக்க வேணுமானால் மேற் சொன்ன முக்காரணங்களும் அமைய வேண்டும்,
பானைக்கு மண் உபாதான காரணமென்றும்,
சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரி காரணமென்றும்,
குயவன், காலம், அத்ருஷ்டம் முதலியன் நிமித்த காரணமென்றும் சொல்லப் படும்.

கார்ய வஸ்துக்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாக வேண்டுமாகில்
பிரபஞ்சமாகிற காரியத்திற்கு எது உபாதான காரணம்? எது ஸஹகாரி காரணம்? எது நிமித்தகாரணம்?
என்று கேள்வி பிறக்குமே,
எம்பெருமான்றானே மூவகைக் காரணமுமாகிறானென்பது வேதாந்திகளின் கொள்கை.
இஃது இங்கு விரிப்பிற் பெருகும்.

மேல் வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீத லக்ஷணை யினாலென்க.
இங்கு வியாக்யான ஸ்ரீஸூக்கி –
“மேலென்றது பண்டென்றபடி,
வருமெறது போனவென்றபடி.

அரும் பெறல் என்றது நிர்ஹேகத்வத்தைக் காட்டும்.
இப்படிப்பட்ட விலக்ஷணமான தொரு காரண வஸ்துவானது ஸம்ஸாரிகளிடத்திலுள்ள கிருபையினால்
தானாகவே வந்து முகங்காட்டிக் காரியம் செய்த்தென்கை. அன்றி, ஒருவகை முயற்சியால் பெற முடியாதது.

அத்வாரக ஸ்ருஷ்டியென்றும் ஸத்வராக ஸ்ருஷ்டியென்றும் ஸ்ருஷ்டி இரு வகைப் படும்.
எம்பெருமான் தானே ஸ்ருஷ்டிப்பது அத்வாரக ஸ்ருஷ்டியாம்,
ஒருவன் மூலமாக ஸ்ருஷ்டிப்பது ஸத்வராக ஸ்ருஷ்டியாம்.
அண்ட ஸ்ருஷ்டி வரையில் தானே ஸ்ருஷ்டிப்பதலால் அது அத்வாரக ஸ்ருஷ்டி இவ் வருகுள்ள வற்றை
நான்முகன் மூலமாக ஸ்ருஷ்டிக்கிறானாகையாலே இவற்றின் ஸ்ருஷ்டி ஸத்வாரக ஸ்ருஷ்டி.

இதைச் சொல்லுகிறார் மேல்
தெய்வ நான்முகக் கொழு முளையீன்று என்று.
கப்பும் கிளையுமு காயும் கனியும் முளையினின்று உண்கிறபடியால் நான்முகன் இங்கு ஒரு முளையாகக் கூறப்பட்டான்
கொழு முளை என்றது சிறந்த அங்குரம் என்றபடி.
இப்பாலுள்ள கார்யவர்க்கங்களை யெல்லாம் உண்டாக்குகைக்குப் பாங்கான யோக்யதையை யுடையவன் பிரமன் என்றவாறு.

“நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனுந் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் என்றபடி
பிறகு அடைவே பல தேவதைகளையும் ஸ்ருஷ்டித்தானனாதலால்
தேவ பல நுகலி என்றும் அருளிச் செய்தார்.

ஆக, ஸத்வாரக ஸ்ருஷ்டியாலே உண்டாக்கின ஸகல வஸ்துக்களுக்கும் மூல கந்தம் திருநாபி யாகையாலே
மூவுலகம் விளைத்த வுந்தி என்றார்.
இப்படிப்பட்ட திருவுந்தியை யுடைய மாயக் கடவுளுண்டு –
ஆச்சரியமான ஞான சக்திகளுடையனான ஸர்வேஸ்வரன்
அவனுடைய திருவடிகளை, ஊழி தோன்றி யோவாது வாழிய வென்று யாக தொழ விசையுங்கொல்.

அந்தத் திருவடிகளை ஸ்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப் போலே நாமும் ஆகாமல்
அவற்றுக்குப் பல்லாண்டு பாடப் பெற வேணும்.

வாழிய – வியங்கோள்வினை முற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -3–

February 24, 2021

குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ னாகி, சுடர் விளங் ககலத்து
வரை புரை திரை பொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தட வரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க்கினி நாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோறூழி யோவாதே?

பதவுரை

மூன்று உலகம்–மூவுலகங்களும்
நெறிபட–நல்வழி படி தந்து உஜ்ஜிவிக்கும் படியாக
குறிப்பில் கொண்டு–திருவுள்ளம் பற்றி,
உடன் வணங்கு தோன்று புகழ்–அவ் வுலகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வணங்கப் பெற்றமையால் ப்ரஸித்தமான கீர்த்தியை யுடையனாய்
ஆணை மெய் பெற நடாய்–தனது ஆஜ்ஞையைத் தடையின்றிச் செலுத்துமவனாய்
தெய்வம் மூவில் முதல்வன் ஆகி–மூன்று மூர்த்திகளுக்குள்ளே ப்ரதானனாய்
சுடர் விளக்கு அகலத்து–திருவாபரணச் சோதி விளங்குகின்ற திரு மார்பை யுடையனாய்,
வரை புரை–மலை போன்ற
திரை-அலைகள்
பொரு–எறியப் பெற்றதும்,
பெரு வரை வெருவர–குல பர்வதங்களும் அஞ்சும்படியாக
உரம் முரல் ஒலி மலி–இடி போல் ஒலிக்கின்ற கோஷம் நிறைந்ததும்
நளிர்-குளிர்ச்சியை யுடையதுமான
கடல்-கடலில்
படம் அரவு அரசு உடல் தட வரை–படங்களை யுடைய ஸர்ப்ப ராஜனாகிய வாஸுகியின் உடலை (மந்தரமென்கிற) பெரிய மலையிலே
சுழற்றிய-கட்டிச் சூழற்றினவனாய்,
தனி–அத்விதீயனான
மர தெய்வம்–தேவாதி தேவனுடைய
அடியவர்க்கு–பக்தர்களுக்கு
நாம் இனி ஊழி தோறு ஊழி ஓவாது ஆள் ஆக இசையும் கொல்-நாம் இனி ஸர்வ காலமும் இடையறாது ஆட்ப் பட்டிருக்கப் பொருந்துமா.

(குறிப்பில் கொண்டு)
பகவத் பக்தியைப் பற்றிப் பேசினார் கீழ்ப் பாட்டில்
பகவானோடு நின்று விடாமல் பாகவதாளவுஞசென்று பக்தி பண்ணுகை ஸ்வரூபமாதலால்
அப்படிப்பட்ட பாகவத பக்தி நமக்கு இனி ஒருநாளும் வழுவாமல் சாச்வதமாக உண்டாகக் கூடுமோவென்று
அந்த நிஷ்டையில் தமக்குண்டான அவாவை வெளியிடுகிறார் இதில்.

குறிப்பில் கொண்டு என்று தொடங்கித் தனிமாத் தெய்வம் என்னுமளவும்
எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைச் சொல்லுகிறார்.

உலகம் மூன்ற நெறிப்படக் குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ் –
தன்னாலே படைக்கப்பட்ட மூவுலகங்களும் தீ வழியில் செல்லாமல் நல் வழியில் படிந்து
உஜ்ஜிவிக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி
அப்படியே அவை நல்வழி படிந்து தன்னை வணங்க
அதனால் எங்கும் பரந்த புகழை யுடையவன் என்கிறது.

ஆணை மெய் பெற நடாய –
ஆணையாவது ஆஜ்னஞ, எம்பெருமானுடைய ஆஜ்ஞையாவது சாஸ்த்ரம்,
ச்ருதி ஸ்மருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்கய் வர்த்தசே –
ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ * என்று எம்பெருமான் தானே அருளிச் செய்திருக்கிறபடி
ச்ருதி ஸ்ம்ருதிகள் முதலிய சாஸ்த்ரங்களாகிற திவ்யாஜ்ஞையைத் தடையின்றி எங்கும் நடத்துபவன் என்கை.

“கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும், மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து“ என்றபடி தன்னாலே அளிக்கப்பட்ட சாஸ்த்ரங்கள்
பழுது படாதபடி அவற்றை உலகில் நன்கு பிரசாரம் செய்விப்பவன் என்றாவறு.

தெய்வம் மூவரில் முதல்வனாகி –
அரி அயன் அரன் என்று சொல்லப்படுகிற மூன்று தெய்வங்களுள் முதல் தெய்வம் தானாயிருக்கை.
“ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில்“ என்று சேர்த்து
நடாய என்பதை தெய்வம் மூவர்க்கும் விசேஷணமாக அந்வயிப்பதும் பொருந்தும்.
அப்போது,
எம்பெருமானாகிய தன்னுடைய“ ஆஜ்ஞையை உள்ள படி பரிபாவிக்கின்ற
பிரமன் சிவன் இந்திரன் என்னும் மூவர்க்கும் நியாமகன் என்று பொருளாம்.
இப்போது, மூவரில் என்றது மூவர்க்கும் என்றபடி.

சுடர் விளக்கு அகலத்து –
சுடராவது தேஜஸ்ஸு,
திருவாபரணங்களாலுண்டாகும் தேஜஸ்ஸைச் சொல்லுகிறது.
திருவாபரணச் சோதியாலே பளபள வென்று விளங்குகின்ற திருமர்பை யுடையவனாய் என்றபடி.

வரை புரை நிரை பொரு என்று தொடங்கித் —
தட வரை சுழற்றிய என்னுமளவும் ஒரு வாக்கியம்.

துர்வாஸ முனியின் சாபத்தால் தேவர்களின் செல்வம் யாவும் கடலில் ஒளிந்து ஒழிந்து விடவே
அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர்,
பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப் பிரான் அபயமளித்துக் கட்டளை யிட்டபடி
அசுரர்களையும் துணைக் கொண்டு மந்தர மலையை மத்தாக நாட்டி வாஸுகி யென்னும் மஹா நாகத்தைக்
கடை கயிறாகப் பூட்டிப் பாற் கடலைக் கடையலாயினர்.

அப்போது மத்தாகிய மந்தரகிரி கடலிலுள்ளே அழுந்தி விட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர்
ஆமை வடிவமெடுத்து அம் மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளி யிருந்தனன்.
அப்போது வாஸுகி நாகத்தின் வாலைப் பிடித்துக் கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக் கொண்ட அசுரர்களும்
ஆகிய இரு திறந்தாரும் அதனை வலியப் பிடித்து இழுத்துக் கடைய வல்ல வலிமை யில்லாதவராய் நிற்க
அது நோக்கி அத் திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்து
தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து
அசுரர்கள் பக்கத்திலேயும் நின்று
வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தனன் என்ற வரலாறு அறியத் தக்கது.

கடைகிற அக் காலத்தில் கடலானது மிகவும் பயங்கரமாக இருந்த்தென்பதைக் கூறுகின்றார்
வரை புரை திரை பொரு என்று தொடங்கி.
அப்போது கடலில் ஸாதரணமான அலைகள் கிளம்பவில்லை,
ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு மலை பெயர்ந்தாற்போலே பெயர்ந்து ஏறிந்ததாம்.

புரை – உவமவுருபு, மலை போன்ற (பெருப் பெருத்த) அலைகள்,
பொரு – மோதப் பெற்ற, இது கடலுக்கு விசேஷணம்.
உருமுரலொலிமலி என்பதும் கடலுக்கு விசேஷணம்
கடைகிற காலத்தில் கடலில் உண்டான த்வனி யானது இடி யிடித்தாற் போலிருந்ததாம்.
அந்த த்வனி குல பர்வதங்களையும் நடுக்கி அசைக்கவற்றா யிருந்தமை தோற்றப் பெரு வரை வெரு வர எனப்பட்டது.

உரும் என்றும் உருமு என்றும் இடிக்குப் பெயர்,
உரும்முரல் என்று பிரிக்க.
இடி போலே முரல்கின்ற (கோஷிக்கின்ற) யாதொரு ஒலியுண்டு
அது மலி – நிறைந்திருக்கிற என்றபடி.
“வரை புரை திரை பொரப் பெரு வரை வெருவுற“ என்ற பாடமும் ஒக்கும்.

நளிர் கடல் –
குளிர்ந்த கடலிலே, கடலுக்கு இயற்கையாகவுள்ள குளிர்த்தியைச் சொல்லுகிறதன்று இங்கு,
கீழ்ச் சொன்னபடி பயங்கரமாயிருக்கச் செய்தேயும்
எம்பெருமானுடைய கடாக்ஷம் பட்ட மாத்திரத்தில் குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது.

இப்படிப்பட்ட கடலிலே மத்தாக நாட்டின மந்தர மலையிலே வாஸுகி நாகத்தைக் கடை கயிறாகக் கட்டிச் சுழற்றிய
யாதொரு தனிமாத தெய்வமுண்டு – ஒப்புயர்வற்ற பர தேவதை,

அதற்கு நாம் ஆளாவதிலுங்காட்டில்,
அதற்கு ஆட்பட்டிருக்கும் அடியவர்களுண்டே,
அவர்கட்கு (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு) இனிமேலுள்ள காலமெல்லாம் நாம் ஆட்பட்டிருக்க வாய்க்குமா?
இப்படிப்பட்ட மஹா பாக்யமும் நமக்குக் கிடைக்குமோ? என்றாராயிற்று.

ஆளாகவே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து
“அடியவர்க்கே“ என்று கூட்டிக் கொள்ளலாம்.

பிரயோஜனாந்தர பாரான தேவைதைகளுக்காகத் தன் உடம்பு நோவக் கடலைக் கடைந்து
அம்ருதத்தைக் கொடுத்தானென்கிற மஹோபகாரத்தில் ஈடுபட்டிருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே ஆட் பட்டிருக்க விரும்பினாராயிற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .