ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி,படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து,தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.
பதவுரை
உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்தும்
இடந்து-ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும்
உண்டு-(மற்றொரு கால் பிரளயம் வந்த போது) வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து-பிறகு வெளிப் படுத்தியும்
அளந்து-(பின்னுமொரு கால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
புடை-ஏதோவொரு மூலையில் சொல்லப்பட்டும்
தான் அறி-தான் தோன்றித் தனமாக அறிந்து கொள்ளக் கூடியவும்
பல-வலகைப்பட்டு மிருக்கிற
தெய்வம்-தேவதைகளை
பேணுதல்-ஆராதிப்பது
தனது-தன்னுடைய
புல் அறிவாண்மை–நீச புத்தியை-பொருந்த காட்டி
விளங்கக் காட்டிக்கொண்டு–
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே வீட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போல,
கொல்வன முதலா-ஆடு பலிகொடுத்தல் கோழி பலி கொடுத்தலாகிற ஜீவஹிம்ஸை முதலான
அல்லன முயலும்–தப்புக் காரியங்களைச் செய்ய நினைக்கையாகிற
தேர்ந்து–இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டும்
அளிக்கும்–(முக்காலங்களிலும்) ரக்ஷித்துக் கொண்டேயிருக்கிற
முதல் பெரு கடவுள் நிற்ப–ஸர்வ காரணனும் பராத்பானுமான ஸ்ரீமந்நாராயணன் (அவனை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்)
இனைய செய்கை–இப்படிப்பட்ட காரியங்களாயிரா நின்றன
அளி-(அந்த க்ஷுத்ர தெய்வங்களின்) ப்ரஸாதமோ
இன்பு துன்பு-ஸுகமென்று பேர் மாத்திரமான துக்கம் (அதாவது என்னெனில்)
தொல்-அநாதியாய்
மா-மஹத்தாய்
மாயம்-ஆச்சரியமான
பிறவியுள்-ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கா-ஒரு நாளும் நீங்குதலின்றிக்கே
பல் மா மாயத்து-பலவகைப் பட்ட வ்யாமோஹ ஜநகங்களான சப்தாதி விஷயங்களிலே
நளிர்ந்து அழுந்தும் ஆ ஓஓ உலகினது இயல்வு-இப்படிப்பட்ட லோகஸ்வபநவம் என்ன பரிதாபம் ஐயோ! (என்கிறார்)
“முடிதோளாயிரந்தழைத்த நெடியோய்க் கல்லது மடியதோவுலகே“ என்று கீழ்ப் பாட்டிலருளிச் செய்த ஆழ்வார்
தம்முடைய கொள்கைப் படியே உலகமனைத்தும் எம்பெருமானை வணங்கி வழிபட்டு
உஜ்ஜீவிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தார்.
க்ஷுத்ரபலன்களை விரும்பி க்ஷுத்ரதேவதைகளை ஆராதிக்கின்ற க்ஷுத்ர ஜனங்களே மிகுதியாகக் காணப்பட்டன.
பரிதாபம் பொறுக்க மாட்டாமல் ஐயோ! ஐயோ! இப்படியும் உலகம் பாழாய்ப்போவதே! என்று
வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொள்ளுகிறார் – ஓ ஓ என்று கதறுகிறார்.
இப்படி இவர் ஓ ஓ என்று கதறுகிற கதறல் எவ்வளவு தூரம் கேட்குமென்னில்,
இவர் தாம் கீழ்ப் பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவுதூரம் சென்றதோ,
அவ்வளவிலும் மேலாகவே சென்று ஒலிக்குமென்று கொள்ளீர்.
இவ்வுலகின் ஸ்வபாவத்தை நாம் என்ன சொல்லுவோம்!
இவ்வுலகம் செய்கிற காரியம் என்னவென்றால், நன்றிகெட்ட காரியஞ்செய்யா நின்றது.
பிள்ளையைப் பெறுவதற்கு முன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்ற பின்பும்
குறையற ஸம் ரக்ஷிப்பதற்காக எத்தனையோ வருத்தங்கள் கஷ்டங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற
மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்ய வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அவளைத் திரஸ்கரித்து விட்டு
உபயோகமற்றவொரு மணைக்கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வரைப் போலே
இவ் வுலகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்து விட்டு
ஒரு நன்றியும் செய்ய மாட்டாத அசேதந ப்ராயங்களான புதுத் தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே!
இது விவேகமிருந்து செய்கிற காரியமோ? அறிவு உள்ளவர்கள் இப்படியுஞ் செய்வார்களோ?
எம்பெருமான் இவ்வுலகுக்குச் செய்த உபகாரங்களை இன்று நான் புதிதாகச் சொல்ல வேண்டுமோ?
இறகு ஒடிந்த பக்ஷிகளைப் போலே கூட்டினதும், ஹிரண்களை யிழந்து கிடந்த இவ் வாத்துமாக்களைக்
கரண களேபரங்களோடே கூட்டினதும், ஹிரண்யாக்ஷன் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன இந்நிலவுலகத்தை
மஹர வாரஹமாகி மீட்டுக் கொணர்ந்ததும், இவ்வுலகமெல்லாம் பிரளயப் பெருங்கடலில் நசித்துப் போக
நேர்ந்த காலத்துத் திருவயிற்றிலே வைத்து ஸம் ரக்ஷித்தும், பிரளயங்கழிந்தவாறே பழையபடி வெளியிட்டதும்,
மாவலியிடத்து நீரேற்றுப் பெற்றுத் தாளின்கீழ் ஆட்படுத்திக்கொண்டதும் முதலான உபகாரங்கள் சொல்லிமுடியுமோ?
இப்படிப்பட்ட உபகரங்கள் இன்னும் எத்தனையோ செய்வதாகத் திருவுள்ளம் பற்றி யிருப்பவனன்றோ திருமால்.
அவனைத் தவிர வேறொரு முழுமுதற் கடவுள் இவ்வுலகுக்கு உண்டோ? நன்றி யறிவுள்ளவர்கள்
அப்பெருமாலுக் கன்றோ பணிவிடைகள் செய்ய ப்ராப்தம்,
அவனுக்குச் செய்யாத்தோடு ஒரு நன்றியுஞ் செய்ய மாட்டாத தேவதாந்தரங்களுக்குப் போய்ப் பணிவிடை செய்கிற
இவ்வுலகின் அவிவேகத்தை என்ன சொல்லுவோம்? அந்த தேவதாந்தரங்கக்கு இவர்கள் செய்கிற ஆராதனம்
என்ன வென்றால் ஆட்டைவெட்டிப் பலியிடுவதும் கோழியைக் கொண்டு நைவேத்யஞ் செய்வதும்
இவை போல்வன ஜீவ ஹிம்ஸைச் செயல்களேயாகும்.
இதற்குப்பலனாக அந்த தேவதைகள் கொடுப்பது என்னவென்றால்,
இந்த ஸம்ஸாரத்திலேயே தரைப்பட்டு அழுந்தி உழல்வதற்கு உறுப்பான ஆபாஸ ஸுகங்களேயாம்.
உண்மையில் இவை ஸுகங்களல்ல; துக்கங்களேயாம். இப்படிப்பட்ட துக்கங்களைப்பெற விரும்பி
இவ்வுலகம் ப்ராப்த தேவதையைவிட்டு தேவதாந்தர பஜநம் பண்ணித் திரிகின்றதே!
அநியாமாய் அநர்த்தப் பட்டுப் போகின்றதே! இதனில் மிக்க பரிதாபமுண்டோ! என்றாராயிற்று.
ஈன்றோளிருக்க மணை நீராட்டி பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம்,
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்,
போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வங் கொண்டாடுந் தொண்டீர்
பெற்றதாயிருக்க மணையடியொற்றியதே. மணை நீராட்டி –
மணை என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி.
நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி.
‘மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி
மணைநீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு
மணை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை,
இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.
மாதர்கள் ப்ரஸவித்தவுடனே பெற்ற அத்தாயையும் பிறந்த சிசுவையும் ஸ்நாநஞ்செய்வித்தல்
மலைகாட்டு வழக்கமாக வெகு முற்காலத்தில் இருந்ததாம்.
ப்ரஸவித்தவுடனே தாயை நீராட்டுவது பலவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாவதால்
அத் தாய்க்குப் பதிலாக ஒரு மணைக் கட்டையை ஸ்நானஞ்செய்விப்பது இடைக் காலத்து வழக்கமாக
இன்றைக்கும் நடந்து வருகின்றதாம். அதனைத் திருவுள்ளம் பற்றி இங்கு ஆழ்வார் இப்படி அருளிச்செய்தார் என்று சிலர் சொல்லுவர்.
புடைப்பலதானறி தெய்வம் பேணுதல் –
புடை என்றது ஏதோவொரு பக்கம் என்றபடி,
வேதத்தில் ஏதோ ஒரு மூலையில் சிவன் என்றும் ருத்ரன் என்றும் ஹிரண்ய கர்ப்பன் என்றும்
சில பதங்கள் கிடந்தால் அவற்றின் பிரகரணத்தையும் பொருளையும் தெரிந்து கொள்ளாது
அந்த தேவதைக்குப் பரத்துவஞ் சொல்லியிருப்பதாகக் கொள்வார்களே சிலர் அதைச் சொல்லுகிறது.
ஆனது பற்றியே தானறிதெய்வம் என்றுஞ் சொல்லப்பட்டது. புதரகாமவம் என்றபடி
அவரவர்கள் பற்றும் தெய்வங்கள் பலபலவாயிருப்பது பற்றிப் பலதெய்வம் பேணுதல் என்றார்.
தனது என்பது ‘தானது‘ என்று நீட்டல் விகாரம் பெற்றுக்கிடக்கிறது.
‘புல்லறிவாளன்‘ என்று விவேகமற்றவனைச் சொல்லுகிறது
புல்லறிவாண்மையாவது அவிவேகம் கொல்வன முதலா அல்லன –
இவ்வாழ்வார் தாமே திருவாய்மொழியில் “தீர்ப்பாரையாமினி“ என்ற திருவாய்மொழியில்
“நீர் எதுவானுஞ் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியுந் தூ வேல்மின்“ என்றும்,
“நீர்கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் ளனிழைத்தென்பயன்“ என்றும்,
“அணங்குக் கருமருந்தென்றங்கோர் ஆடுங் கள்ளும்பராய்“ என்றும்,
“ஏதம்பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாய்த்தூய் கீதமுழவிட்டு நீரணங்காடுதல் கீழ்மையே“ என்றும்
அருளிச்செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தகும்.
இன்புதுன்புஅளி – அளிப்பது அளி, அதாவது கொடுக்கும் வஸ்து,
தேவதாந்தரங்கள் தரும்பொருள் யாதெனில், இன்பு துன்பு – இன்பாவது ஸுகம், துன்பாவது துக்கம்,
ஸுகமென்று பரமிக்கக்கூடிய துக்கமென்றவாறு ஸம்ஸாரத்தில் கிடைக்கும் ஸுகங்களெல்லாம் இப்படிப்பட்டவையேயாம்.
பிள்ளை பெறுவது செல்வம் பெறுவது என்னுமிவை மேலெழப்பர்க்கையில் ஸுகமாகத் தோன்றி,
வரவரத் துன்பமாகவே முடிகின்றமையைப் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.
தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷி பண்ணுவதே யன்றி
வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார்
தொன் மா மாயப் பிறவியுள் நீங்காப் பன்மா மாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.
———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply