குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ னாகி, சுடர் விளங் ககலத்து
வரை புரை திரை பொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தட வரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க்கினி நாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோறூழி யோவாதே?
பதவுரை
மூன்று உலகம்–மூவுலகங்களும்
நெறிபட–நல்வழி படி தந்து உஜ்ஜிவிக்கும் படியாக
குறிப்பில் கொண்டு–திருவுள்ளம் பற்றி,
உடன் வணங்கு தோன்று புகழ்–அவ் வுலகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வணங்கப் பெற்றமையால் ப்ரஸித்தமான கீர்த்தியை யுடையனாய்
ஆணை மெய் பெற நடாய்–தனது ஆஜ்ஞையைத் தடையின்றிச் செலுத்துமவனாய்
தெய்வம் மூவில் முதல்வன் ஆகி–மூன்று மூர்த்திகளுக்குள்ளே ப்ரதானனாய்
சுடர் விளக்கு அகலத்து–திருவாபரணச் சோதி விளங்குகின்ற திரு மார்பை யுடையனாய்,
வரை புரை–மலை போன்ற
திரை-அலைகள்
பொரு–எறியப் பெற்றதும்,
பெரு வரை வெருவர–குலபர்வதங்களும் அஞ்சும்படியாக
உரம் முரல் ஒலி மலி–இடி போல் ஒலிக்கின்ற கோஷம் நிறைந்ததும்
நளிர்-குளிர்ச்சியை யுடையதுமான
கடல்-கடலில்
படம் அரவு அரசு உடல் தட வரை–படங்களை யுடைய ஸர்ப்பராஜனாகிய வாஸுகியின் உடலை (மந்தரமென்கிற) பெரிய மலையிலே
சுழற்றிய-கட்டிச் சூழற்றினவனாய்,
தனி–அத்விதீயனான
மர தெய்வம்–தேவாதி தேவனுடைய
அடியவர்க்கு–பக்தர்களுக்கு
நாம் இனி ஊழி தோறு ஊழி ஓவாது ஆள் ஆக இசையும் கொல்-நாம் இனி ஸர்வ காலமும் இடையறாது ஆட்ப் பட்டிருக்கப் பொருந்துமா.
(குறிப்பில் கொண்டு)
பகவத் பக்தியைப் பற்றிப் பேசினார் கீழ்ப் பாட்டில்
பகவானோடு நின்று விடாமல் பாகவதாளவுஞசென்று பக்தி பண்ணுகை ஸ்வரூபமாதலால்
அப்படிப்பட்ட பாகவதபக்தி நமக்கு இனி ஒருநாளும் வழுவாமல் சாச்வதமாக உண்டாகக் கூடுமோவென்று
அந்த நிஷ்டையில் தமக்குண்டான அவாவை வெளியிடுகிறார் இதில்.
குறிப்பில் கொண்டு என்று தொடங்கித் தனிமாத் தெய்வம் என்னுமளவும்
எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைச் சொல்லுகிறார்.
உலகம் மூன்ற நெறிப்படக் குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ் –
தன்னாலே படைக்கப்பட்ட மூவுலகங்களும் தீ வழியில் செல்லாமல் நல் வழியில் படிந்து
உஜ்ஜிவிக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி
அப்படியே அவை நல்வழி படிந்து தன்னை வணங்க
அதனால் எங்கும் பரந்த புகழை யுடையவன் என்கிறது.
ஆணை மெய் பெற நடாய –
ஆணையாவது ஆஜ்னஞ, எம்பெருமானுடைய ஆஜ்ஞையாவது சாஸ்த்ரம்,
ச்ருதி ஸ்மருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்கய் வர்த்தசே –
ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ * என்று எம்பெருமான் தானே அருளிச் செய்திருக்கிறபடி
ச்ருதி ஸ்ம்ருதிகள் முதலிய சாஸ்த்ரங்களாகிற திவ்யாஜ்ஞையைத் தடையின்றி எங்கும் நடத்துபவன் என்கை.
“கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும், மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து“ என்றபடி தன்னாலே அளிக்கப்பட்ட சாஸ்த்ரங்கள்
பழுது படாதபடி அவற்றை உலகில் நன்கு பிரசாரம் செய்விப்பவன் என்றாவறு.
தெய்வம் மூவரில் முதல்வனாகி –
அரி அயன் அரன் என்று சொல்லப்படுகிற மூன்று தெய்வங்களுள் முதல் தெய்வம் தானாயிருக்கை.
“ஆணை மெய்பெற நடாய தெய்வம் மூவரில்“ என்று சேர்த்து
நடாய என்பதை தெய்வம் மூவர்க்கும் விசேஷணமாக அந்வயிப்பதும் பொருந்தும்.
அப்போது, எம்பெருமானாகிய தன்னுடைய“ ஆஜ்ஞையை உள்ள படி பரிபாவிக்கின்ற
பிரமன் சிவன் இந்திரன் என்னும் மூவர்க்கும் நியாமகன் என்று பொருளாம்.
இப்போது, மூவரில் என்றது மூவர்க்கும் என்றபடி.
சுடர் விளக்கு அகலத்து –
சுடராவது தேஜஸ்ஸு, திருவாபரணங்களாலுண்டாகும் தேஜஸ்ஸைச் சொல்லுகிறது.
திருவாபரணச் சோதியாலே பளபள வென்று விளங்குகின்ற திருமர்பை யுடையவனாய் என்றபடி.
வரை புரை நிரை பொரு என்று தொடங்கித் –தட வரை சுழற்றிய என்னுமளவும் ஒரு வாக்கியம்.
துர்வாஸ முனியின் சாபத்தால் தேவர்களின் செல்வம் யாவும் கடலில் ஒளிந்து ஒழிந்து விடவே
அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர்,
பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப் பிரான் அபயமளித்துக் கட்டளை யிட்டபடி
அசுரர்களையும் துணைக் கொண்டு மந்தர மலையை மத்தாக நாட்டி வாஸுகி யென்னும் மஹா நாகத்தைக்
கடை கயிறாகப் பூட்டிப் பாற் கடலைக் கடையலாயினர்.
அப்போது மத்தாகிய மந்தரகிரி கடலிலுள்ளே அழுந்தி விட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர்
ஆமை வடிவமெடுத்து அம் மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளி யிருந்தனன்.
அப்போது வாஸுகி நாகத்தின் வாலைப் பிடித்துக் கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக் கொண்ட அசுரர்களும்
ஆகிய இரு திறந்தாரும் அதனை வலியப் பிடித்து இழுத்துக் கடைய வல்ல வலிமை யில்லாதவராய் நிற்க
அது நோக்கி அத் திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்து
தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து
அசுரர்கள் பக்கத்திலேயும் நின்று
வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தனன் என்ற வரலாறு அறியத் தக்கது.
கடைகிற அக்காலத்தில் கடலானது மிகவும் பயங்கரமாக இருந்த்தென்பதைக் கூறுகின்றார்
வரை புரை திரை பொரு என்று தொடங்கி.
அப்போது கடலில் ஸாதரணமான அலைகள் கிளம்பவில்லை,
ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு மலை பெயர்ந்தாற்போலே பெயர்ந்து ஏறிந்ததாம்.
புரை – உவமவுருபு, மலைபோன்ற (பெருப் பெருத்த) அலைகள்,
பொரு – மோதப் பெற்ற, இது கடலுக்கு விசேஷணம்.
உருமுரலொலிமலி என்பதும் கடலுக்கு விசேஷணம்
கடைகிற காலத்தில் கடலில் உண்டான த்வனி யானது இடி யிடித்தாற் போலிருந்ததாம்.
அந்த த்வனி குலபர்வதங்களையும் நடுக்கி அசைக்கவற்றா யிருந்தமை தோற்றப் பெரு வரை வெரு வர எனப்பட்டது.
உரும் என்றும் உருமு என்றும் இடிக்குப் பெயர்,
உரும்முரல் என்று பிரிக்க.
இடி போலே முரல்கின்ற (கோஷிக்கின்ற) யாதொரு ஒலியுண்டு
அது மலி – நிறைந்திருக்கிற என்றபடி.
“வரை புரை திரை பொரப் பெரு வரை வெருவுற“ என்ற பாடமும் ஒக்கும்.
நளிர் கடல் –
குளிர்ந்த கடலிலே, கடலுக்கு இயற்கையாகவுள்ள குளிர்த்தியைச் சொல்லுகிறதன்று இங்கு,
கீழ்ச் சொன்னபடி பயங்கரமாயிருக்கச் செய்தேயும்
எம்பெருமானுடைய கடாக்ஷம் பட்ட மாத்திரத்தில் குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது.
இப்படிப்பட்ட கடலிலே மத்தாக நாட்டின மந்தர மலையிலே வாஸுகி நாகத்தைக் கடை கயிறாகக் கட்டிச் சுழற்றிய
யாதொரு தனிமாத தெய்வமுண்டு – ஒப்புயர்வற்ற பர தேவதை,
அதற்கு நாம் ஆளாவதிலுங்காட்டில், அதற்கு ஆட்பட்டிருக்கும் அடியவர்களுண்டே,
அவர்கட்கு (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு) இனிமேலுள்ள காலமெல்லாம் நாம் ஆட்பட்டிருக்க வாய்க்குமா?
இப்படிப்பட்ட மஹா பாக்யமும் நமக்குக் கிடைக்குமோ? என்றாராயிற்று.
ஆளாகவே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து
“அடியவர்க்கே“ என்று கூட்டிக் கொள்ளலாம்.
பிரயோஜனாந்தரபாரான தேவைதைகளுக்காகத் தன் உடம்பு நோவக் கடலைக் கடைந்து அம்ருதத்தைக்
கொடுத்தானென்கிற மஹோபகாரத்தில் ஈடுபட்டிருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே ஆட் பட்டிருக்க விரும்பினாராயிற்று.
———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply