ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -2–

உலகு படைத் துண்ட எந்தை, அறை கழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு,
அவாவா ருயிருகி யுக்க,நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல்,
அமுத வெள்ளத் தானாம் சிறப்பு விட்டு, ஒரு பொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

பதவுரை

உலகு–உலகங்களை
படைத்து–ஸ்ருஷ்டித்து
உண்ட–(பிரளய காலத்தில்)விழுங்கிய
எந்தை–ஸர்வேச்வரனுடைய
அறை கழல் சுடர் பூ தாமரை–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளாகிற அழகிய தாமரை மலர்களை
சூடுதற்கு–சிரோ பூஷணமாக அணிவதற்கு
அவாவு–ஆசைப் படுகின்ற
ஆர் உயிர்–அருமையான ஆத்மாவானது
உருகி உக்க–நைந்து சிதிலமாக
நேரிய–(அந் தத்யானத்தால்) ஸம்பவித்த பக்தியாகிய
அன்பில்–ஆசைப் பெருக்கத்தில் உற்பவித்து
இன்பு ஈன் –இன்பத்தைக் கொடுக்கிற
தேறல்-தேன் போலிருக்கிற (அல்லது, தேனாகிய)
அமுதம் வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு–அமிருத ப்ரவாஹத்தில் மூழ்கி யிருக்கையாகிற பெருமையை விட்டிட்டு
ஒரு பொருட்டு அசைவோர்–க்ஷூத்ரமான வொரு பலனுக்காக அலைகின்றவர்கள்
அசைக–அப்படியே அலையட்டும்; (அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?)
திருவோடு மருவிய இயற்கை–செல்வத்தோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கையாகிற நித்ய ஐச்வர்ய நிலைமை யென்ன.
மாயா பெரு விறல்–அழியாத பெரு மிடுக்கென்ன
உலகம் மூன்றினொடு–மூவுலகுக்கும் நாயகனாயிருக்கை யென்ன
நல்வீடு–உத்தமமான மோக்ஷ பதவி யென்ன (ஆகிய இவற்றை)
பெறினும்–பெறுவதாயிருந்தாலும்
தெள்ளியதோர்–விவேகிகளுடைய
குறிப்பு-அந்தரங்கமானது
கொள்வது எண்ணுமோ–பெற்றுக்கொள்ள நினைக்குமோ?

[உலகு படைத்து.]
கீழ்ப் பாட்டில் எம்பெருமானுடைய விலக்ஷணமான திருமேனி யழகை அநுஸந்தித்த ஆழ்வார்,
இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூட வேணும் என்று
ஆவல் கொண்டிருப்பதே யன்றோ புருஷார்த்தம்;

இவ் வுலகிலுள்ள பாவிகள் இதனை யறியாதே
‘பிள்ளை வேணும் குட்டி வேணும் சேலை வேணும் செல்வம் வேணும்’ என்ரு க்ஷுத்ர பலன்களை யெல்லாம் விரும்பி
இவை கொடுப்பாரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிகிறார்களே! அந்தோ! இஃது என்ன கொடுமை!
என்று முதலிலே திருவுள்ளம் நொந்து அப்படிப்பட்ட க்ஷுத்ரர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேணும்!
அவர்கள் இஷ்டப்படி அலைந்துழலட்டும்,
*உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரைப் பற்றி நாம் சிந்திக்கவே வேண்டா,

பகவத் பக்தி தலை யெடுத்த மஹான்களும் இப் பூமியின் கண் இருக்கிறார்களன்றோ
அவர்களுடைய அத்யவஸாயத்தைக் கண்டு நாம் உகப்போம் – என்று பரம பக்தர்களுடைய
அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப் பாட்டில்.

திருச் சந்த விருத்தத்தில் –
“கேடில் சீர் வரத்தனாங் கெடும் வரத்தயனரன், நாடினோடு நாட்ட மாயிரத்தனோடு நண்ணினும்,
வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும் கூடுமாசை யல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்று
திருமழிசைப் பிரான் அருளிச் செய்த பாசுரத்தைப் பெரும்பாலூந் திருவுள்ளத்திற் கொண்டு
இப் பாசுரமருளிச் செய்கிறாரென்பது உய்த்துணரத் தக்கது.

எம்பெருமானைக் கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில்
அவ்வநுபவத்தைப் பற்றின மனோ ரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்
அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தி யுடையவர்களுடைய ஸித்தாந்தம்,
அதைத்தானருளிச் செய்தார் திருமழிசைப் பிரான்.

ப்ரஹ்ம லோக ஸாம்ராஜ்யம் கிடைத்தாலும் ருத்ர லோக ஆதி பத்யம் கிடைத்தாலும்
இந்திர லோகமாளும் பாக்கியம் வாய்ந்தாலும், பரம புருஷார்த்தமாகிய ஒன்றான பரமபதாநுபவமே கிடைப்பதானாலும்
இவற்றையெல்லாம் ஒரு புருஷார்த்தமாகவே மதிக்க மாட்டேன்.

பின்னே எனக்கு எதிலே ஊற்றமென்றால்
‘எம்பெருமானோடு கூட வேணும் எம்பெருமானோடு சேர வேணும் என்று மனோ ரதங்கொண்டிருப்பதுண்டே
அதுதான் எனக்குப் பரம போக்யம் என்றார்.

இஷ்டமான விஷயத்தை அநுபவிப்பதிற்காட்டிலும் அநுபவிப்போம் என்னும் மனோ ரதமே சிறந்ததாமென்பதை
அனுபவ ரஸிகர்கள் எளிதில் உணர்வர். தேனூறி எப்பொழுதுந் தித்திக்கும்படியானது மனோரதமேயாம்.
திருவரங்கஞ்சென்று நம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று ஒருவனுக்கு ஆவல் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்,
ஒருநாள் போய் ஸேவித்து வந்து விட்டால் அவ்வளவிலே ஆசை தீர்ந்து விட்டதாகும்.
அங்ஙனல்லாமல் மனோரதமேயாய்ச் செல்லுமாகில் அது நெடு நாளைக்கு ரஸவத்தரமாயிருக்கும்.
சந்தனம் பூசிக் கொள்ளுதல், புஷ்பஞ் சூட்டிக்கொள்ளுதல், பஞ்சகச்ச வேஷ்டி உடுத்துக் கொள்ளுதல் முதலிய
அலங்கார கார்யங்களில் பிரமசாரிகளுக்கு உள்ள ஆவல் க்ருஹஸ்தர்களுக்கு இல்லாமையும் இங்கு ஒரு உதாஹரணமாகக் காட்டத் தகும்.
ஆகவே அனுபவ நிலைமையிற் காட்டிலும் அநுபவப் பாரிப்பு நிலைமையே சிறந்ததென்பது விளங்கும்.

ஆதியில் உலகங்களைப் படைத்தும்
பிரளயம் வந்தவாறே அவற்றைத் திருவயிற்றிலே வைத்தருளி ரக்ஷித்தும் வருகிற
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளை நாம் சிரமேல் அணிந்து கொள்ள வேணுமென்று ஆவல் கொண்டு,
அந்த ஆவலினால் நெஞ்சு நீர்ப் பண்டமாக உருகி, மேன் மேலும் பரபக்தி பரம பக்திகள் தலையெடுத்து,
அப்படிப்பட்ட பரம பக்தி நிலைமையிலே அமர்ந்திருக்கை தானே பரம போக்யமானது,
எம்பெருமானது திருவடிகள் தலைமேல் வந்து சேர வேண்டா, திருநாடும் எய்த வேண்டா,
வழுவிலாவடிவமை செய்யப் பெறவேண்டா, இவை நமக்கு வாய்க்க வேணும்” என்கிற ஆவல் ஒன்று மாத்திரம்
அநவரதம் நெஞ்சில் நடையாடுமேல் போதுமானது, இந்த ஆவல் தான் அமுத வெள்ளம்.

இப்படிப்பட்ட ஆவல் பூண்டு
“என் கண்ணனைக் ளென்று கொலோ களிக்கும் நாளே“
“மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே”
“அங்கடியவரோடு என்று கொலோ அணுகுநாளே“
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே“
“அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு
யானுமிசைந்துடனே என்று கொலோ இருக்குநாளே“ என்றிவை போல்வன பல பாசுரங்களை
வாய் வெருவிக் கொண்டு இதுவே ஒரு ஆனந்தமாகப் போது போக்க ப்ராப்தமாயிருக்க,
இந்தப் போது போக்கை விட்டிட்டுக் கூறை சோறு முதலிய அற்ப்ப் பலன்களை அபேக்ஷித்து
அங்குமிங்கும் அலைந்துழல்கின்ற பாமரர்கள் அப்படியே அலையட்டும்,
அவர்கள் எக் கேடு கெட்டால் நமக்கென்ன! என்கிறார் ஒருபொருட்கசைவோர் அசைக என்னுமளவால்.

தெளிந்த ஞானமுடைய மஹான்கள் இப்படிப்பட்ட க்ஷுத்ர பலன்கள் கையிலே ஸித்தமாக வந்து சேர்ந்தாலும்
உதறித் தள்ளி விடுவர்கள், கீழ்ச்சொன்ன அமுத வெள்ளத்திலேயே அவர்கள் ஊன்றியிருப்பார்கள் என்கிறார் மேல்.

திருவொடு மருவிய இயற்கை பெறிலும், மாயாப் பெரு விரல் பெறினும், உலகம் மூன்று பெறினும்,
நல்வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு (இவற்றைக்) கொள்வதெண்ணாது.
“கூடுமாசை யல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்ற படி எம்பெருமானோடு கூட வேணுமென்கிற
ஆசை யொன்றையே தெள்ளியோர் குறிக் கொண்டிருப்பர் என்றவாறு.
இங்குத் தெள்ளியோர் என்றது திருமழிசைப் பிரானையும் அவர் போல்வாரையும்.

“அவாவாருயிருருகியுக்க“ என்று தொடங்கி “சிறப்பு விட்டு“ என்ற வரையில்
அவர் காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் என்று ஒரு பொருட் பன்மொழிகளை இனைத்துத் தொடுத்திருப்பதனால்
பகவானுடைய திருவடிகளை முடிமேலணிந்து கொள்வதை ஆசைப் படும் விஷயத்தில் ஆழ்வார்க்குண்டான
ஆதரம் அளவற்ற தென்பது நன்கு வெளிப்படும்.
அவாவாருயிர் என்றவிடத்து “அவா ஆர்“ என்றும் பிரிக்கலாம், ஆசை நிரம்பிய என்று பொருளாம்.

ஒரு பொருட்கு அசைவோர் அசைக –
ஸம்ஸாரிகள் விரும்பும் பொருள்களை ஆழ்வார் தமது திரு வாக்காலே சொல்லவும் கூசி ஒரு பொருட்டு என்கிறார்.

திருவொடு மருவிய இயற்கை –
நாலு நாளில் அழிந்து போகக் கூடிய ஐச்வரியமல்லாமல் எப்போதும் ஸ்திரமாயிருக்கக் கூடிய
ஐச்வரியத்தைப் பெற்றாலும் என்றபடி.
மருவுதல் – எப்போதும் கூடியிருத்தல்.
இயற்கை – கன்மை,
ஐச்வரியத்தோடு எப்போதுங் கூடியிருக்குந் தன்மையாவது நித்ய ஸ்ரீமனாக இருக்கை.
அப்படிப்பட்ட நிலைமையையும் தெள்ளியோர் குறிப்பு வேண்ட மாட்டாதாம்.

மாயா பெரு விறல் –
ஐச்வரியம் அளவற்றிருந்தாலும் அவற்றை அநுபவிப்பதற்கு உறுப்பான சக்தி
பூர்ணமாக இல்லாவிடில் பயனில்லையே
அந்த சக்தியும் கூடவே கிடைக்கப் பெற்றாலும் அப்போதும் வேண்டார்கள் என்றபடி.

மாயா –மாய்தலாவது அழிதல், அழியாத என்கை.
உலகம் முன்றினொடு கீழே சொன்ன நித்யமான ஐச்வரியம் என்ற மாத்திரமே யல்ல,
மூவுலகத்தையும் ஆளும்படியான பெருஞ்செல்வம் கை புகுந்தாலும் வேண்டார்களென்கை.

பலசொல்லி என்! ஸகல ஐச்வர்யங்களுக்கும் மேற்பட்டதான மோக்ஷ ஸரமராஸ்யந்தானும்
பெறுவதாயிருந்தாலும் “எம்மா வீட்டுத் திறமும் செப்பம்“ என்றும்.
“இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்“ என்றும்
(பாவோ நாத்யத்ர கச்சதி) (வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ) என்றும்
சொல்லுகிறபடி அந்த மோக்ஷந்தன்னையும் ஒரு பொருளாக மதியார்களென்கை.

ஆக இப் பாட்டால் –
ஸம்ஸாரி களைப் போலே க்ஷுத்ர பலன்களை விரும்பி அலையாமல்
விவேகங்களைப் போலே பகவத் விஷயத்தில் அநு ராகம் மிக்கியிருப்பதே நமக்கு ப்ராப்தம் என்றாராயிற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: