மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப,வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?
பதவுரை
மா முதல் அடி போது ஒன்று-(உலகத்துக்கெல்லாம்) மூலாதாரமாகிய திருவடிகளில் ஒன்றை
கவிழ்ந்து அலர்த்தி–நில மட்டமாகப் பரப்பி
மண் முழுவதும்–பூமியை யெல்லாம்
அகப் படுத்து–திருவடிக்குள்ளடக்கி ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
ஒண் சுடர் அடி போது ஒன்று–அழகிய தேஜஸ்ஸு நிறைந்த மற்றொரு திருவடித் தாமரையை
நான் முகன் புத்தேள் நாடு-பிரம தேவனுடைய உலகமானது
வியந்து உவப்ப–ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடையும் படியாகவும்
வானவர்–மற்றுமுள்ள தேவர்கள்
முறை முறை–சாஸ்திர விதிப்படி
வழி பட–ஆராதிக்கும்படி யாகவும்
விண்செலீஇ நிறீஇ–ஆகாசத்திலே செலுத்தி நிறுத்தி
தாமரைக் காடு மலர் கண்ணொடு–தாமரைக் காடு மலர்ந்தாற் போலிருக்கிற திருக் கண்களையும்
கனி வாய் உடையதும் ஆய்-கொவ்வைக் கனி போன்ற திரு அதரத்தையும் உடையவனாயும்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன–பெரிய ஆயிரம் ஸூர்யர்கள் சேர்ந்து உதித்தாற் போன்ற
முடி–திரு வபிஷேகத்தை யுடையனாயும்
பல பல கற்பகம் காவு அன்ன–பல வகைப் பட்ட கற்பகர் சோலைகள் போலே
தோற் ஆயிரம் தழைத்த–ஆயிரம் திருத் தோள்களை பணைத்திருக்கப் பெற்றவனாயுமுள்ள
நெடி யோய்க்கு அல்லதும்–பரம புருஷனான உனக்குத் தவிர (வேறு யார்க்கேனும்)
உலகு அடியதோ–இவ் வுலகம் அடிமைப் படக் கூடியதோ?
(மாமுதல்)
எம்பெருமான் உலகமளந்த சரிதையை அநுஸந்தித்து,
‘இப்படியும் ஒரு ஸெளலப்யமும் ளௌசீல்யமும் உண்டாவதே!‘ என்றீடுபட்டு ஆச்ரிதர்க்காகத் தன்னை அழிய
மாறிக் காரியஞசெய்கிற மஹோபகாரகனாகிய பரமபுருஷனுக் கன்றி வேறு யாருக்கு இவ் வுலகம் அடிமைப்பட முடியும்?
எல்லார் தலையிலும் திருவடிகளைப் பரப்பின தெய்வத்தை நோக்கி
“அன்றிவ்வுலகமளந்தாய் அடிபோற்று“ என்று மங்களாசாஸநம் பண்ணுகை ஏற்குமே யன்றி
அவன் திருவடிகளின் கீழ் துகையுண்ட சிலரை நோக்கி ‘ஜய விஜயீபவ‘ என்னக் கூடுமோ வென்கிறார்.
மாமுதல் –
என்பதைத் திருவடிக்கு விசேஷணமாக்கி உரைப்பதன்றி அண்மை விளியாகக் கொண்டு
உலகங்கட்கெல்லாம் ஆதி காரணனான எம்பெருமானே! என்று ஸம்போதநமாக உரைத்தலும் ஒக்கும்.
போது –புஷ்பம், அதாவது தாமரைப்பூ அடிப்போது பாதாரவிந்தம்.
இதைக் கவிழ்த்துப் பரப்பிப் பூமண்டலம் முழுவதையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்டானாயிற்று.
செலீஇ- செலுத்தி சொல்லிசையளபெடை.
“வானவர் முறை வழிபடநெறீஇ“ என்றே பெரும்பாலும் ஓதுகின்றனர்.
நிறீஇ என்ற பாடமும், நிறுத்தி என்று அதற்குப்பொருளும் அஸ்மதாசார்யர் அருளிச் செய்த்து.
நெறீஇ என்ற பாடமும் பொருந்தும், வியாக்கியானத்திற்கும் இணங்கும்.
வானவர் – தேவர்கள்,
நெறீஇ – நல்வழிப்பட்டு,
முறை முறை – சாஸ்த்ர விதிப்படி,
வழிபட – ஆராதிக்கும்படியாக என்று பொருளாகக் கடவது.
நெறீஇ – இறந்தகால வினையெச்சம். நெறி – பகுதி,
இ-இறந்த கால வினையெச்ச விகுதி,
இகரம் ஈகாரமானதும் அளபெடுதத்தும் விகாரம்.
நான்முகப் புத்தேள் –புத்தேள் என்று தெய்வத்திற்குப் பெயர் நான் முகன் – புத்தேள், நான்முகப்புத்தேள் பிரமதேவன் என்றபடி.
அவனுடைய நாடு வியந்து உவப்ப என்றது – அவனுடைய நாட்டிலே உள்வர்கள்
‘தாமரை போல் பரம போக்யமான ஒரு திருவடி இங்கே வந்து ஸேவை ஸாதிப்பதே!‘ என்று
ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடைய என்றபடி.
தாமரைக்காடு என்று தொடங்கி உலகளந்த பெருமானுடைய சில அவயவங்களையும்
திருவபிஷேகத்தையும் வருணிக்கிறது.
இப்படி விலக்ஷணனான பரமபுருஷனுக்குத் தவிர மற்று யார்க்கேனும் அடிமைப்பட உரியதோ இவ்வுலகம்?
நெடியோன் என்பதன் முன்னிலை நெடியோய் என்பது.
———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply