ஸ்ரீ திருவரங்கம் திருக் கோயிலின் பெருமை மிகு வரலாறு–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள்–

திருவரங்கத்தை பெரிய கோயில் என்றே குறிப்பிடுவர் பெரியோர்கள்.
இங்கே பள்ளி கொண்டு அருள்பவன் “பெரிய பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார்.
அவர் பத்தினியும் “பெரிய பிராட்டியார்” என்று அழைக்கப்படுகிறார்.
மதியம் ஸமர்ப்பிக்கப்படும் தளிகைக்கு “பெரிய அவசரம்” என்று கூறுகின்றனர்
இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு “பெரிய திருநாள்” என்ற பெயர் வழங்குகிறது.
இராமானுசருக்கு பிறகு திருக்கோயில், நிர்வாகம் முறையை சீரமைத்த ஸ்ரீமணவாள மாமுனிகளை “பெரிய ஜீயர்” என்று கொண்டாடுகிறோம்.

ஏழு திருச்சுற்றுகளையும், அடைய வளஞ்சான் திருமதிலையும் உடைய ஒரே கோயில் திருவரங்கமே ஆகும்.
அடையவளந்தான் திருசுற்றின் நீளம் 10,710 அடிகள் ஆகும்.
அனைத்து மதிள்களின் மொத்த நீளம் 32592 அடிகள் அல்லது 6 மைல்களுக்கும் மேல் ஆகும்.
திருவரங்கம் பெரிய கோயில் மொத்தம் 156 சதுர ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
திருவரங்கநாதன் திருவடிகளில் காவிரி ஆறு திருவரங்கத்தின் இரு மருங்கிலும் பாய்ந்து சென்று திருவடியை வருடிச் செல்கின்றது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே 216 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் 13 நிலைகள் கொண்டது இந்த திருத்தலத்தில் தான் அமைந்துள்ளது.

18 தொகுப்புகள் கொண்டதும், 7200 பக்கங்கள் நிறைந்துள்ளதுமான கோயிலொழுகு
திருவரங்க கோயிலுக்கு ஓர் அரணாக அமைந்துள்ளது. திருவாய்மொழியும், ஸ்ரீராமாயணமும் ஆகிய இரு நூல்கள்
இருக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவத்தை யாரும் அழிக்க முடியாது,
‘என் அப்பன் அறிவிலி’ என்று 2-ம் குலோத்துங்கனின் (ஆட்சி ஆண்டு 1133-1150) மகனான 2-ஆம் ராஜராஜன் (ஆட்சி ஆண்டு 1146-1163) கூறினானாம்.
இவனுக்கு வீழ்ந்த அரிசமயத்தை மீண்டெடுத்தவன் என்ற விருது பெயர் அமைந்து உள்ளது.
அதுபோல 7200 பக்கங்கள் கொண்ட கோயிலொழுகு இருக்கும் வரை வரலாற்றிற்கு புறம்பாகவோ,
குருபரம்பரை செய்திகளை திரித்தோ, திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை அவரவர் மனம் போனபடி திரித்துக் கூறமுடியாது.

கி.பி. 1310-ல் மாலிக்காபூர் திருவரங்கத்தின் மீது படையெடுத்தான். அதற்குக் காரணம் 2-ஆம் சடையவர்மன்
சுந்தர பாண்டியன் (ஆட்சி ஆண்டு 1277-1294) தனது ஆட்சிக் காலத்தில் ப்ரணாவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்தான்.
பொன் வேய்ந்த பெருமாள் மற்றும் சேரகுல வல்லி ஆகியோருடைய பொன்னாலான விக்ரஹங்களை
சந்தன மண்டபத்தில் பிரதிஷ்டை செய்திருந்தான்.

இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பொன்னாலான கொடிமரம் மற்றும் கொடியேற்ற மண்டபத்தில்
அமைந்துள்ள மரத்தாலான தேருக்கு பொன் வேய்ந்தான். இவற்றைத் தவிர பெருமாளுக்கும், தாயாருக்கும்
துலாபாரம் (கஜதுலாபாரம்) சமர்ப்பித்து ஏராளமான தங்க நகைகளை அளித்து இருந்தான்.

வ்யாக்ரபுரி என்றழைக்கப்படும் சிதம்பரத்தை கொள்ளையடித்த மாலிக்காஃபூரிடம் சில ஒற்றர்கள் திருவரங்கத்தில்
ஏராளமான செல்வம் குவிந்து கிடப்பதாக கூறினர். நாகப்பட்டினம் வழியாக மேற்கு கடற்கரைக்கு செல்லவிருந்த
மாலிக்காஃபூர் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு யாரும் எதிர்பாராத வேளையில் கோயிலைத் தாக்கினான்.
அளவிட முடியாத அளவிற்கு செல்வத்தை சூறையாடினான். அப்போது வெள்ளையம்மாள் என்ற தாஸி மாலிக்காஃபூரின்
படைத்தலைவனை தன் அழகால் மயக்கி தற்போதைய வெள்ளைக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று
அந்த படைத்தலைவனை கீழே தள்ளிக் கொன்றாள். அவளும் கீழே விழுந்து உயிர் விட்டாள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளை வண்ணத்தில் கோபுரம் மாற்றம் பெற்று “வெள்ளைக் கோபுரமாயிற்று”.

புராதனமான யுகம் கண்ட பெருமாளான அழகிய மணவாளன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளியதால்
அவருக்குப் பதிலாக திருவாராதனம் கண்டருளிய புதிய அழகிய மணவாளன் திருவரங்க மாளிகையார்
என்ற பெயரில் யாக பேரராக இன்றும் அழகிய மணவாளனுக்கு இடது திருக்கரப் பக்கத்தில் இன்றும் எழுந்தருளி உள்ளார்.
யாக சாலையில் ஹோமங்கள் நடைபெறும் போது யாக பேரரான திருவரங்க மாளிகையார் எழுந்தருள்வதை இன்றும் காணலாம்.
அர்ச்சுன மண்டபத்திற்கு அழகிய மணவாளன் எழுந்தருளும் போதெல்லாம் துலுக்க நாச்சியாருக்கு
படியேற்ற ஸேவை அரையர் கொண்டாட்டத்துடன் நடைபெறும். இது துளுக்க நாச்சியாருக்காக நடைபெறும் ஓர் மங்கள நிகழ்ச்சியாகும்.

கி.பி. 1310 ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பிறகு கி.பி. 1323ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்று
அறியப்படும் உலூக்கானுடைய படையெடுப்பு நடைபெற்றது. கோயிலொழுகு தரும் செய்திகளின் அடிப்படையில்
அந்த நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்படுகின்றன. அழகிய மணவாளன் பங்குனி ஆதி ப்ருஹ்மோற்சவத்தில் 8ஆம் திருநாளன்று
கொள்ளிடக் கரையில் அமைந்திருந்த பன்றியாழ்வார் (வராகமூர்த்தி) ஸந்நிதியில் எழுந்தருளி இருந்தார்.
உலூக்கான் படைகளோடு திருவரங்கத்தை நோக்கி வருவதை ஒரு ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி)
பிள்ளைலோகாச்சாரியரிடம் தெரிவித்தான்.

உலூக்கானுடைய படைவீரர்கள், மருத்துவமணையாய் இயங்கி வந்த தன்வந்த்ரி ஸந்நிதியை தீக்கிரையாக்கினர்.
இதன் நோக்கமாவது மருத்துவர்கள் யாரும் காயம் அடைந்த திருமாலடியார்களுக்கு உரிய மருத்துவ பணியை
மேற்கொள்ளக் கூடாது என்பதாகும். தன்வந்த்ரி ஸந்நிதி தீக்கிரையாக்கப்பட்ட செய்தியும்,
தன்வந்த்ரி ஸந்நிதி புனர் நிர்மாணம் செய்யப்பட்டதையும், அங்கே ஆதூரசாலை (மருத்துவமணை) செயல்பட துவங்கியதையும்,
16ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இறந்த காலம் எடுத்த உத்தம நம்பி காலத்து கல்வெட்டு எண்
(வீரராமநாதன் காலத்திய கல்வெட்டு எண் – 226 (அ.கீ. Nணி: 80 ணிஞூ -1936-1937) தெரிவிக்கின்றது.

திருவாய்மொழிப்பிள்ளை தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரை திருப்பள்ளிப்படுத்தி,
‘திருவரசு’ என்ற நினைவு மண்டபமும் கட்டி வைத்தார்.
சிக்கில் கிடாரம் செல்பவர்கள் கூரக்குலோத்துமதாஸர் திருவரசை கண்டு ஸேவிக்கலாம்.
மேலும் திருவாய்மொழிப்பிள்ளை வாஸம் செய்த திருமாளிகையின் மிகப் பெரியதான அடித்தளத்தைக் காணலாம்.
இந்த சிக்கில் கிடாரத்தில் தான் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருத்தகப்பனாரான திருநாவீருடைய தாதர் அண்ணர் வாஸம் செய்து வந்தார்.

முந்திரிக்காடு என்னும் பள்ளத்தாக்கில் மிக ஆழமான பள்ளம் தோண்டி அந்த நிலவறைக்குள்
அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் எழுந்தருளப் பண்ணி அங்கேயே திருவாராதனம் கண்டருளினர்.
அந்தப் பள்ளத்தின் மேலே மரப்பலகைகளை வைத்து, செடி, கொடிகளை அதன்மேல் இட்டு, சில ஆண்டுகள்
அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் காப்பாற்றி வந்தனர்.
நம்மாழ்வாருடன் முந்திரிக் காட்டிற்கு வந்த தோழப்பர் என்பார் ஒருநாள் நிலவறைக்கு சென்று திருவாராதனம் ஸமர்ப்பித்த பிறகு
மேலிருந்து கீழே விடப்பட்ட கயிற்றினை பிடித்துக் கொண்டு மேலே வரும்போது கயிறு அறுந்து கீழே விழுந்த தோழப்பர் பரமபதித்தார் (இறந்தார்).
இந்த செயலின் அடிப்படையில் தோழப்பர் வம்சத்தவர்களுக்கு ஆழ்வார் திருநகரியில் “தீர்த்த மரியாதை” அளிக்கப்படுகிறது.
சில ஆண்டுகள் கழித்து அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் திருக்கணாம்பி என்ற மலைப்பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றன.
அங்கே இருந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலினுள் எழுந்தருளப் பண்ணினர்.
சுமார் 10 ஆண்டுகள் திருக்கணாம்பியில் அழகிய மணவாளனும், நம்மாழ்வாரும் எழுந்தருளி இருந்தனர்.
இந்தத் திருக்கணாம்பி எனும் ஊர் தற்போதைய மைசூர் சத்தியமங்கலம் மலைப்பாதையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
நம்மாழ்வார் எழுந்தருளிய இடத்தை வட்டமணை இட்டு, இன்றும் அடையாளம் காண்பிக்கிறார்கள்.

திருவாய்மொழிப்பிள்ளை ராமானுஜ சதுர்வேதி மங்கலத்தை நிர்மாணித்து அங்கே இராமானுசரை ப்ரதிஷ்டை செய்தார்.
வேதம் வல்ல திருமாலடியார்களை அந்த சதுர்வேதி மங்கலத்தில் குடியமர்த்தினார்.
எம்பெருமானார் ஸந்நிதியில் கைங்கர்யங்களை மேற்பார்வை செய்வதற்காக ஜீயர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இந்த எம்பெருமானார் ஜீயர்மடத்தின் 7வது பட்டத்தை அலங்கரித்த ஜீயர் ஸ்வாமியிடம் கி.பி. 1425ஆம் ஆண்டு
ஸ்ரீமணவாள மாமுனிகளின் சந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹோபில மடத்தை அலங்கரித்த முதல் ஜீயரிடம் ஸ்ரீமணவாள மாமுனிகள் துறவறத்தை ஏற்றுக் கொண்டார்
என்று கால ஆராய்ச்சியின் அடிச்சுவடு கூட தெரியாதவர்கள் கூறி வருகிறார்கள்.
அஹோபில மடம் விஜயநகர துளுவ வம்சத்து, கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் தோன்றியது.
கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம் 1509-1529 ஆகும். மணவாள மாமுனிகள் சந்நியாஸ ஆச்ரமம் ஏற்றுக்கொண்டது 1425.
ஆகவே அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளுக்கு சந்நியாஸ ஆச்ரமம் அளித்தார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

கி.பி. 1323ஆம் ஆண்டு நடந்த உலூக்கான் படையெடுப்பின் விளைவாக தமிழகம் முழுவதும்
காஞ்சிபுரத்தைத் தவிர முகமதியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
உலூக்கான் தனது அந்தரங்கத் தளபதியான ஷரீப் ஜலாலுதீன்அஸன்ஷாயிடம் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை
ஒப்படைத்து விட்டு டில்லிக்கு விரைந்து சென்றான்.
48 ஆண்டுகள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர் மதுரை சுல்தான்கள்.
அவர்களை எதிர்த்துப் போரிட்ட ஹொய்சாள மன்னனான வீர வல்லாளன் போரில் கொல்லப்பட்டான்.
அவனது இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தனது கோட்டை வாசலில் தொங்க விட்டான்.
சுல்தான்களை எதிர்ப்பவர்கள் இந்த கதியைத் தான் அடைவார்கள் என்று முரசு கொட்டி தெரிவித்தான்.
மதுரை செல்பவர்கள் கோரிப்பாளையம் என்ற பேருந்து நிறுத்தத்தை காண்பார்கள்.
அங்கே தான் சுல்தான்களின் அரண்மனை இருந்தது. வீரவல்லாளனின் உடல் தொங்க விடப்பட்டிருந்ததால்
அந்த இடம் கோரிப்பாளையம் என அழைக்கப்படலாயிற்று. (கோரி என்ற ஹிந்தி சொல்லுக்கு காணச் சகிக்க இயலாத என்பது பொருள்).

தமிழகம் முழுவதும் மதுரை சுல்தான்களுடைய கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்தது.
கி.பி. 1336ஆம் ஆண்டு துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம குலத்தைச் சார்ந்த ஹரிஹரர் அவருடைய தம்பி புக்கர்
ஆகிய இருவரும் சிருங்கேரி சாரதா பீடத்தைச் சார்ந்த வித்யாரண்யர் என்பாருடைய ஆசியுடன் விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தனர்.
அவர்களிடம் இருந்தது ஒரு சிறு படையே. இந்த படைபலத்தைக் கொண்டு மதுரை சுல்தான்களை எதிர்த்துப் போராடமுடியாது
என்ற எண்ணத்துடன் தமது படைபலத்தை பெருக்கலாயினர்.
விஜயநகர பேரரசின் தோற்றத்திற்குப் பிறகு சில ஆண்டுகளில் ஹரிஹரர் இறந்து விட்டார்.
அவருக்குப் பிறகு அவரது தம்பியான முதலாம் புக்கர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.
முதலாம் புக்கரின் மூத்த குமாரன் வீரக்கம்பண்ண உடையார் ஆவர். புக்கரின் ஆணைப்படி கி.பி. 1358ஆம் ஆண்டு 36 ஆயிரம்
படை வீரர்களோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டான் வீரக்கம்பண்ண உடையார்.
இதனிடையே திருப்பதிக் காடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகிய மணவாளனை செஞ்சி மன்னனான கோபணாரியன்
திருமலையில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஸந்நிதியில் முகப்பு ராஜகோபுரத்திற்கு உட்புறம் உள்ள மண்டபத்தில் கொண்டு சேர்த்தான்.
திருமலையிலிருந்து திருவரங்கம் நோக்கி புறப்பட்ட போது செஞ்சிக்கு அண்மையில் உள்ள
சிங்கபுரத்திற்கு (தற்போதைய பெயர் சிங்கவரம்) அழகிய மணவாளன் எழுந்தருளினார்.
அங்கே அழகிய மணவாளனுக்கு அத்யயன உத்வசத்தை கொண்டாடினர்
திருமலையில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த மண்டபமே தற்போது “ரெங்க மண்டபம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது.

செஞ்சி மன்னனான கோபணாரியரின் தலைமையில் ஒரு சிறு படையோடு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.
அப்போது, சுல்தான்களுடனான போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்ததால்
சில நாட்கள் கொள்ளிடம் வடகரைக்கு வடக்கே ஒரு கிராமத்தில் எழுந்தருளியிருந்தார்.
அந்த கிராமமே தற்போது அழகிய மணவாளன் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழுதுபட்ட நிலையில் சில நாட்கள் அழகிய மணவாளன் தங்கியிருந்த திருக்கோயில்
புனர் நிர்மாணம் செய்யப்பட்டு சம்ப்ரோஷணமும் (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது.
இந்த ஊரில் ஓடும் ராஜன் வாய்க்கால் கரையில் பல நூற்றாண்டுகளாக திருமாலடியார்கள் 1323ஆம் ஆண்டு
படையெடுப்பின் போது உயிர்நீத்த திருமாலடியார்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து பொதுமக்கள் “தர்ப்பணம்” செய்கிறார்கள்.
தர்ப்பணம் எனும் நீத்தார்கடனை செய்து வருகின்றனர் ஊர் பொதுமக்கள்.

கண்ணனூர் போரில் வீரக்கம்பண்ணர் வெற்றிக்கொண்ட பின் 48 ஆண்டுகள் கழிந்து அழகிய மணவாளன்
உபயநாச்சிமார்களோடும், ஸ்ரீரங்க நாச்சியாரோடும் திருவரங்கம் திருக்கோவிலை சென்று அடைந்தார்.
அந்த நாள் கி.பி. 1371ஆம் ஆண்டு பரீதாபி வருடம் வைகாசி மாதம் 17ஆம் நாள் ஆகும்.
(வைகாசி 17 என்பது ஜூன் மாதம் 2 அல்லது 3ஆம் தேதியைக் குறிக்கும்.)

அழகிய மணவாளனை தற்போது பவித்ரோற்சவம் கண்டருளும் சேரனை வென்றான் மணடபத்தில்
கோபணாரியன், சாளுவ மங்கு போன்ற படைத்தலைவர்கள் எழுந்தருளப் பண்ணினர்.
திருவரங்க மாநகரில் பலர் கொல்லப்பட்டதாலும் மற்றும் ஆசார்ய புருஷர்களும், முதியோர்களும் அச்சம் கொண்டு
திருவரங்க மாநகரைத் துறந்து, வெளி தேசங்களுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர்.
பராசர பட்டர் வம்சத்வர்களும், முதலியாண்டான் வம்சத்தவர்களும் வடதிசை நோக்கி அடைக்கலம் தேடிச்சென்றனர்.
பெரிய நம்பி வம்சத்தவர்கள் தெற்கு நோக்கி அடைக்கலம் தேடிச் சென்றனர்.
தற்போது திருவரங்க நகரை வந்தடைந்த அழகிய மணவாளன் உடன் 1323ஆம் வருடம் அழகிய மணவாளன்
உடன் சென்றவர்களில் மூவரே மிஞ்சியிருந்தனர். அவர்களாவர் திருமணத்தூண் நம்பி, திருத்தாழ்வரை தாஸன் மற்றும் ஆயனார்.

அழகிய மணவாளனுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பிக்கப்பட்டு அந்த ஈரங்கொல்லிக்கு ஈர ஆடை தீர்த்தம்
ஸாதிக்கப்பட்டது (கொடுக்கப்பட்டது). அதைப் பருகியவுடன் அந்த ஈரங்ககொல்லி
“இவரே நம்பெருமாள், இவரே நம்பெருமாள்” என்று கூவினான்.
அன்றிலிருந்து அழகிய மணவாளனுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் அமையப்பெற்றது.
ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று மகிழ்ச்சி பொங்க கூறிய இந்த பெயர் நிலைத்து விட்டது.

நம்பெருமாள் திருவரங்கத்திற்கு மீண்டும் வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை மீண்டு வந்து
ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் காணலாம்.
இந்தக் கல்வெட்டை தொல்லியல் துறை படியெடுத்து. ”South Indian Temple Inscription Volume 24″ – À R number 288 (A.R. No. 55 of 1892).

ஸ்வஸ்திஸ்ரீ: பந்துப்ரியே சகாப்தே (1293)
ஆநீயாநீல ச்ருங்கத் யுதி ரசித ஜகத் ரஞ்ஜநாதஞ்ஜநாத்ரே:
செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்சித் ஸமயமத நிஹத்யோத்தநுஷ்காந் துலுஷ்காந்
லக்ஷ்மீக்ஷ்மாப்யாம் உபாப்யாம் ஸஹநிஜநகரே ஸ்தாபயந் ரங்கநாதம்
ஸம்யக்வர்யாம் ஸபர்யாத் புநரக்ருத தர்ப்பணோ கோபணார்ய:

(புகழ் நிறைந்த கோபணார்யர் கறுத்த கொடுமுடிகளின் ஒளியாலே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து
ரங்க நாதனை எழுந்தருளப் பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிதுகாலம் ஆராதித்து
ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி பூதேவிகளாகிய உபயநாச்சிமார்களோடு கூட
திருவரங்கப் பெருநகரில் ப்ரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.)
இந்தக் கல்வெட்டை பிள்ளைலோகம் ஜீயர் தம்முடைய “யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவரங்கத்தின் மீதான மூன்றாம் படையெடுப்பு கி.பி. 1328ஆம் ஆண்டு குரூஸ்கான் என்பவனால் நிகழ்த்தப்பட்டது.
ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட திருவரங்க மாநகரில் உலூக்கானால் எடுத்துச் சொல்லப்படாத பொருட்கள்
இவனால் கொள்ளையடிக்கப்பட்டன. இவனுடைய படையெடுப்பைப் பற்றிய மேலும் விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

அழகிய மணவாளன் 1371ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் திருவரங்க நகருக்கு 48 ஆண்டுகள் கழித்து
திரும்ப எழுந்தருளியதை ஒரு பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும்

————

திருவரங்கம் திருமதில்கள்:

1.பெரிய கோயிலின் ஏழு திருச்சுற்றுகட்கு அமைந்த பெயர்களையும் அவற்றை நிர்மாணித்தோர்
அல்லது செப்பனிட்டோர் பற்றிய குறிப்பினை இந்தப் பாடல் கூறுகின்றது.

மாட மாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திரு விக்கிரமன் வீதியும்
ஆடல் மாறன் அகளங்கன் வீதியும் ஆலி நாடன் அமர்ந்துறை வீதியும்
கூடல்வாழ் குலசேகரன் வீதியும் குலவி ராசமகேந்திரன் வீதியும்
தேடரிய தர்ம வர்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவாவரணமே.

இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று அறிவதற்கில்லை.
கோயிலொழுகு “பூர்வர்கள் திருவரங்கம் திருப்பதியை இவ்வாறு அனுபவித்தார்கள்” என்று குறிப்பிடுகிறது.
திருக்கோயில் அமைப்பில் உத்தமோத்தம லக்ஷணமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட கோயிலைக் கொள்கிறார்கள்.
எந்த திருக்கோயிலுக்கும் அமைந்திராத பெருமை ஸ்வயம்வ்யக்த (தானாகத்தோன்றின) க்ஷேத்திரங்களுள்
தலைசிறந்ததான திருவரங்கம் ஸப்தபிரகாரங்களைக் கொண்டிருப்பது அதன் பெருமையைக் காட்டுகின்றது.

வரலாற்று அடிப்படை கொண்டு நோக்கின் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைந்து உள்ளது.
ஆனால், புராதனமாக அமைந்திருந்த திருவீதிகளைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டவர்கள் பெயரால்
வழங்கப்படுகிறது என்று கொள்ள வேண்டும். இந்தப் பாடல் ஏழாம் திருச்சுற்றுத் தொடங்கி,
முதலாம் திருச்சுற்று வரை அமைந்துள்ள திருச்சுற்றுக்களின் பெயர்களைக் கூறுகின்றது.

ஏழாம் திருச்சுற்று – மாடமாளிகை சூழ்த் திருவீதி:
இந்தத் வீதிக்கு தற்போதைய பெயர் சித்திரை வீதி.
இந்த வீதியினைக் கலியுகராமன் திருவீதி என்றும் அழைப்பர். கலியுகராமன் என்று பெயர்கொண்ட
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1297-1342) இந்த வீதியைச் செப்பனிட்டான் என்று அறியப்படுகிறது.

ஆறாம் திருச்சுற்று – திருவிக்கிரமன் திருச்சுற்று,
ஐந்தாம் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று – முதலாம் குலோதுங்கனுடைய மகன் விக்ரமசோழன் (கி.பி.1118-1135)
இவன் பெயரிலே இந்தத் திருவீதி அமைந்துள்ளது.
அடுத்த ஐந்தாம் திருச்சுற்றுக்கு அகளங்கன் திருவீதி என்று பெயரிடப்பட்டுள்ளது.
விக்கிரம சோழனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் அகளங்கன் என்பதுவும் ஒன்றாகும்.
இவனுக்கே உரியவையாய் வழங்கிய இரண்டு சிறப்புப் பெயர்கள் கல்வெட்டுகளிலும் விக்கிரம சோழன் உலாவிலும் காணப்படுகின்றன.
அவை, ‘தியாக சமுத்திரம்,’ ‘அகளங்கன்’ என்பனவாகும்.
இம்மன்னன் தன் ஏழாம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் சென்றிருந்த போது, அந்நகரைச் சார்ந்த
‘வண்ணக்குடி’ என்ற ஊரைத் தியாக சமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித்
திருவிடை மருதூர் கோயிலுக்கு இறையிலி நிலமாக அளித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது.
(ARE 272, 273 of 1907, 49 of 1931) (விக்கிரம சோழன் உலாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. Ula-II, 431, 632.)

‘அகளங்கன்’ என்னும் சிறப்புப்பெயர் ஜயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் காணப்படினும்
அதன் பாட்டுடைத் தலைவனான முதலாம் குலோத்துங்கனை குறிப்பதன்று.
(The Kalingattupparani calls Kulantaka Virudarajabhayankara, Akalanka, Abhaya and Jayadhara. Ref: The Colas – K.A.N.Sastri, p.330).
அது விக்கிரம சோழனுக்கே வழங்கிய சிறப்புப் பெயர் என்பது கல்வெட்டுகளால் நன்கு தெளிவாகிறது.
கல்வெட்டுகளில் குலோத்துங்கனுக்கு அப்பெயர் காணப்படவில்லை.
ஒட்டக் கூத்தர் தனது ‘விக்கிரமசோழன் உலாவில்,’ 152, 182, 209, 256, 284, முடிவு வெண்பா ஆகிய கண்ணிகளில்
விக்கிரமனை அகளங்கன் என்று கூறியிருப்பது கொண்டு, அப்பெயர் இவனுக்கே சிறப்புப் பெயராக வழங்கியது என்பதை அறியலாம்.
‘எங்கோன் அகளங்கன் ஏழுலகும் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள்’ என்று அவர் குறிப்பிடுவதால்
விக்கிரம சோழனே அகளங்கன் ஆவான். இவனது சிறப்புப் பெயரில் ஒரு திருச்சுற்றும்,
இயற்பெயரில் ஒரு திருச்சுற்றும் இவனே நிறுவினான் என்றும் கொள்வதே பொருத்தமுடையது.

திருவரங்கம் கோயிலில் விக்ரமசோழன் காலத்துக் கல்வெட்டுகள் பதினான்கு அமைந்துள்ளன.

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த திருந்நெடுந்தாண்டகம் வியாக்யானத்தில் விக்ரமசோழனைப் பற்றிய
குறிப்பொன்று அமைந்துள்ளது – திருநெடுந்தாண்டகம் 25-ஆம் பாட்டு ‘மின்னிலங்கு’.
“விக்கிரம சோழ தேவன் எனும் அரசன் தமிழிலக்கியங்களில் மிகவும் ஈடுபாடுடையவன்.
சைவ வைணவப் புலவர்கள் பலர் அவனது சபையில் இருந்தனர். அவ்வப்போது அவரவர்களுடைய சமய இலக்கியங்களைப்
பற்றிக் கூறச் சொல்லிக் கேட்பதுண்டு. ஒரு சமயம் அவன், ‘தலைமகனைப் பிரிந்த வருத்தத்தோடு இருக்கிற
தலைமகள் கூறும் பாசுரங்கள் சைவ வைணவ இலக்கியங்களில் எப்படி இருக்கிறது? என்று கூறுங்கள் கேட்போம்” என்றான்;
உடனே சைவப் புலவர், சிவனாகிய தலைமகனைப் பிரிந்த நாயகி “எலும்பும் சாம்பலும் உடையவன் இறைவன்” என்று வெறுப்புத் தோற்ற,
சிவனைப் பற்றிக் கூறும் நாயன்மார் பாடல் ஒன்றைக் கூறினார்.
வைணவப் புலவரோ, எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தில் பரகாலநாயகி கூறுகின்ற ‘மின்னிலங்கு திருவுரு’ என்ற
திருநெடுந்தாண்டகப் பாசுரத்தைக் கூறினார்.
இரண்டையும் கேட்ட விக்கிரமசோழ தேவன், ‘தலைமகனைப் பிரிந்து வருந்தியிருப்பவள், கூடியிருந்தபோது
தன் காலில் விழுந்த தலைமகனைப் பற்றிக் கூறும்போதும், ‘மின்னிலங்கு திருவுரு’ என்று
புகழ்ந்து கூறியவளே சிறந்த தலைமகள். ‘எலும்பும் சாம்பலும் உடையவன்’ என்று கூறிய
மற்றொரு தலைமகள் பிணந்தின்னி போன்றவள்” என்றானாம்.

இவனுடைய திருவரங்கக் கல்வெட்டுகளில் சிதம்பரத்தில் நடராஜருடைய விமானத்திற்குப்
பொன்வேய்ந்ததைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இராசேந்திரன் புதல்வி மதுராந்தகியே முதலாம் குலோத்துங்கனின் மனைவி.
முதலாம் குலோத்துங்கனுடைய ஏழு புதல்வர்களில் விக்கிரமசோழன் நான்காமவன். (Ref: The Colas by K.A.N.Sastri, p.332).

நான்காம் திருச்சுற்று – ஆலிநாடன் திருச்சுற்று:
திருமங்கையாழ்வார் ஆடல்மா என்ற குதிரையின் மீதேறிச் சென்று பகைவர்களை வென்றார்.
பல திவ்யதேசங்களை மங்களா சாஸனம் செய்தருளி திருவரங்கத்திலே பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்து
திருமதில் கைங்கர்யங்களைச் செய்து வந்தார். அவரால் ஏற்படுத்தப்பட்ட திருமதிலுக்கு உட்பட்ட திருச்சுற்றிற்கு
ஆலிநாடன் திருவீதி என்று பெயர். பாட்டின் இரண்டாம் அடியில் ஆடல்மாறன் அகளங்கன் என்னும் சொற்றொடரில்
உள்ள ஆடல்மா என்ற சொல் ஆலி நாடன் அமர்ந்துறையும் என்ற சொல்லோடு கூட்டிக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் திருச்சுற்று – குலசேகரன் திருச்சுற்று :
குலசேகராழ்வார் தமது பெருமாள் திருமொழியில் முதன் மூன்று பத்துக்களாலே (30 பாசுரங்கள்) கொண்டு
திருவரங்கனை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
அணியரங்கன் திருமுற்றத்தை குறிப்பிடும் குலசேகராழ்வார், மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றினை
அமைத்தார் என்று கொள்வது பொருத்தம்.
மூன்றாம் பிரகாரத்தில் சேனை வென்றான் மண்டபம் கட்டி அந்தப் பிரகாரத்தினை நிர்மாணம் செய்தார்.

இரண்டாம் திருச்சுற்று – இராசமகேந்திரன் திருச்சுற்று:
இவன் முதலாம் இராசேந்திரனுடைய மூன்றாவது மைந்தன். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி.1058-1062.
மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன்.
இராசமகேந்திரன், ஆகமவல்லனை (முதலாம் சோமேƒவரன்) முடக்காற்றில் புறமுதுகிட்டு ஓடும்படி
செய்த பெருவீரன் என்று, அவன் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் உணர்த்துகின்றன
பாடரவத் தென்னரங்கமே யாற்குப் பன்மணியால் ஆடவரப்பாயல் அமைத்தோனும்” என்னும்
விக்கிரம சோழன் உலா (கண்ணி – 21) அடிகளால் இவன் திருவரங்கநாதரிடம் அன்பு பூண்டு,
அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணை ஒன்று அமைத்தான் என்பதும் அறியப்படுகின்றது.

முதலாம் திருச்சுற்று – தர்மவர்மா திருச்சுற்று: தர்மவர்மா என்ற சோழமன்னன் இந்தத் திருச்சுற்றினை அமைத்தான்
என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை.

———-

ஸ்ரீரங்கராஜஸ்வதவம் பூர்வ சதகத்தில் (35) ஸ்ரீபராசர பட்டர் கோயிலைச் சுற்றி ஸப்த பிரகாரங்கள் இருப்பது
ஸப்த சாகரங்களை ஒக்கும் என்று அருளிச் செய்துள்ளார்.

ப்ராகாரமத்யாஜிரமண்டபோக்த்யா ஸத்வீபரத்நாகர ரத்நசைலா
ஸர்வம்ஸஹா ரங்கவிமாநஸேவாம் ப்ராப்தேவ தந்மந்திரமாவிரஸ்தி >

(யாதொரு ஸ்ரீரங்க மந்திரத்தில் திருமதிள்கள், இடைகழி, திருமண்டபங்க ளென்னும் வியாஜத்தினால்
ஸப்த த்வீபங்களோடும் ஸப்த ஸாகரங்களோடும் மஹாமேருவோடுங் கூடின பூமிப் பிராட்டியானவள்
ஸ்ரீரங்கவிமான ஸேவையை – அடைந்தனள் போலும்; – அந்த ஸ்ரீரங்க மந்திரம் கண்ணெதிரே காட்சி தருகின்றது.)
ஸ்ரீரங்கமந்திரம் பூமிப்பிராட்டி போன்றிருக்கிறதென்கிறார். ஸ்ரீரங்க விமானத்தை ஸேவிப்பதற்காகப்
பூமிப்பிராட்டி தன் பரிவாரங்களோடு இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள் போலும்.
கடல்களும் கடலிடைத்தீவுகளும் சிறந்த மலைகளும் பூமிப்பிராட்டியின் பரிவாரங்களாம்.
கோயிலைச்சுற்றி ஸப்தப்ராகாரங்கள் இருப்பது ஸப்த ஸாகரங்களை ஒக்கும்;
ஒவ்வொரு திருமதிலுக்கும் இடையிலுள்ள ப்ரதேசம் ஸப்த த்வீபங்கள்போலும். திருமண்டபங்கள் ரத்நபர்வதங்கள் போலும்.
ஆக இப்பரிவாரங்களுடனே பூமிப்பிராட்டி வந்து சேர்ந்து ஸ்ரீரங்க விமானஸேவையைப் பெற்றிருப்பதுபோல்
மந்திரம் தோன்றுகின்ற தென்றாராயிற்று.

————-

நிஹமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்துள்ள ‘ஹம்ஸஸந்தேஸம்’ என்னும் நூலில்
‘ஸ்ரீரங்கம் என்னும் பெயர் பெரிய பெருமாள் இங்கு எழுந்தளிய பிறகு ஏற்பட்டது.
அவர் இவ்விடத்திற்கு வருமுன் சேஷபீடம் என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கி வந்தது.
சந்திரபுஷ்கரணிக்கு அருகில் அச்சேஷபீடம் அமைந்திருந்தது. ஸ்ரீரங்க விமானம் அங்கு வந்ததற்குப் பின்
ஸ்ரீரங்கம் என்ற பெயர் ஏற்பட்டது” போன்ற செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

————-

ஸ்ரீ ராமாநுஜரைப் பற்றி தனிப்பாடல்கள் –

திக்கு நோக்கித் திரும்பித் திரும்பியே தேவராசர் தம் கோயிலை நோக்கியே
செக்கர் மேனி மிகப் பெருங் கைகளால் சோர்ந்த கண்கள் பனி நீர் தெளித்திட
மிக்க கோயில் பெருவழி தன்னிலே வேதம் வல்ல மறையோர்கள் தம்முடன்
புக்ககத்துக்குப் போகிற பெண்கள் போல் போயினார் பெரும் பூதூர் முனிவனார்

சந்ததியில்லா மனைமகள் போலே தடமுலையில்லா மடமகள் போலே
செந்தணலில்லா ஆகுதி போலே தேசிகனில்லா ஓதுகை போலே
சந்திரனில்லாத் தாரகை போலே இந்திரனில்லா உலகம் போலே
எங்கள் இராமானுசமுனி போனால் இப்புவி தான் இனி எப்படி யாமோ?

———–

1.மார்கழி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி – உத்பத்தி ஏகாதசி
2.மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
3.தை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ஸபலா ஏகாதசி
4.தை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – புத்ரதா ஏகாதசி
5.மாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ஷட்திலா ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
6.மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – ஜயா ஏகாதசி
7.பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – விஜயா ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
8.பங்குனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – ஆமலகி ஏகாதசி
9.சித்திரை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – பாபமோசனிகா ஏகாதசி
10.சித்திரை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – காமதா ஏகாதசி
11.வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – வரூதினி ஏகாதசி
12.வைகாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – மோஹினி ஏகாதசி
13.ஆனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – அபரா ஏகாதசி
14.ஆனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – நிர்ஜலா ஏகாதசி
15.ஆடி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – யோகினி ஏகாதசி
16.ஆடி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – சயன ஏகாதசி( ஸ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் நாள்)
17.ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி -காமிகா ஏகாதசி
18.ஆவணி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – புத்ரதா ஏகாதசி
19.புரட்டாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – அஜா ஏகாதசி
20.புரட்டாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பத்மநாப ஏகாதசி
21.ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – இந்த்ர ஏகாதசி
22.ஐப்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பாபாங்குசா ஏகாதசி
23.கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ரமா ஏகாதசி
24.கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பிரபோதினி ஏகாதசி
25.கமலா ஏகாதசி

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: