ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -7–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

கீழ்ப்பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன;
என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே
என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும்.

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே

பதவுரை

எமக்கு–நமக்கு
இம்மையை–இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை–பரலோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை–பரந்த சோலைகளை யுடையதாய்
வியன்–ஆச்சரியமான
திரு அரங்கம்–ஸ்ரீரங்கத்திலே
மேய–நித்ய வாஸம் பண்ணுமவனும்
செம்மையை கருமை தன்னை திருமலை–(யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும்
திருமலை–திருவேங்கடமலையிலே நின்று கொண்டு
ஒருமையானை–(மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப்பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய
தன்மையை–சீலத்தை
நினைவார்–நினைக்க வல்லவர்கள்
என் தன்–என்னுடைய
தலை மிசை–தலையிலே
மன்னுவார்–பொருந்தத் தக்கவர்கள்

இம்மையை மறுமை தன்னை –
இஹ லோக ஸுகம், பர லோக ஸுகம் என்ற இருவகை யின்பத்தையும் அளிப்பவனென்றபடி.
எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பற்றின ஞான விகாஸம் பெற்றுக் களிப்பதே
ஆழ்வார் திருவுள்ளத்தினால் இம்மையின்பமாகும்;
திருவனந்தாழ்வானைப்போலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும் அந்தரங்க கைங்கரியம்
பண்ணப் பெற்றுக் களிப்பதே மறுமையின்பமாகும்;
ஆக, இஹ லோகத்திலே தன்னைப் பற்றின ஞான விகாஸத்தையுண்டாக்கி இன்பம் பயந்தும்,
பர லோகத்திலே நித்ய கைங்கரியத்திலே மூட்டி இன்பம் பயந்தும் அடியார்களை வாழ்விப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.

எமக்கு வீடாக நின்ற மெய்ம்மையை-
இங்கு வீடு என்றது இலக்கணையால் மோக்ஷாபாயத்தைச் சொன்னபடி.
கீழ்ச் சொன்ன பிராப்யங்களுக்கு ப்ராபகனாயிருப்பவனென்கை.
அவ் வுபாயம் ஸுலபமான விடத்தைப் பேசுகிறார் வியன் திருவரங்க மேய என்று.

செம்மையைக் கருமை தன்னை –
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன்;
கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வ குணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே
அவர்கட்காகப் பால் போன்ற நிறத்தைக் கொள்வன்;
த்ரேதா யுகத்திலே சிவந்த நிறத்தைக் கொள்வன்,
த்வாபர யுகத்திலே பசுமை நிறத்தைக் கொள்பவன்;
கலி யுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தோடிருப்பவன்.

(இது ”பாலினீர்மை செம்பொனீர்மை” என்ற திருச்சந்த விருத்தப் பாசுரத்திலும்
”நிகழ்ச்தாய் பால் பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும்” என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும்
திருமழிசைப் பிரானாலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.)

இங்கு ”செம்மையைக் கருமை தன்னை” என்று இரண்டு யுகங்களின் நிறத்தைச் சொன்னது
மற்றவர்க்கும் உபலக்ஷணமென்க.

திருமலை யொருமையானை =
”தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே”
என்றும் சொல்லுகிறபடியே திருமலையிலே நின்று நித்ய ஸூரிகளுக்கும் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க
முகங்கொடுக்கும் அவன் என்றவாறு.

ஒருமையான் –
ஒருமைப்பட்டிருப்பவன், பொதுவாயிருப்பவன்,
திருமலையானது நித்ய விபூதிக்கும் லீலா விபூதிக்கும் நடு நிலை என்பதாகத் திருவுள்ளம்.
இங்குள்ளார் சென்று பரத்வ குணத்தை அநுபவிப்பர்கள்;
அங்குள்ளார் வந்து சீல குணத்தை அநுபவிப்பர்கள்; ஆக இருபாடர்க்கும் வைப்பாயிருப்னென்க.

தன்மையை நினைவார் =
கீழும் இரண்டாம் வேற்றுமையாய் இங்கும் இரண்டாம் வேற்றுமையாயிருத்தால் எங்ஙனே அந்வயிக்குமென்னில்;
கீழிலவற்றை உருபு மயக்கமாகக் கொள்க;
திருமலை யொருமையானுடைய தன்மையை என்றவாறு.
எம்பெருமானடைய தன்மையாவது, அடியவர்களிட்ட வழக்காயிருக்குந் தன்மையென்க.
அதனை அநுஸந்தித்து ஈடுபடுமவர்கள் என் தலை மேலார் என்றாராயிற்று.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: