பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-
பதவுரை
பிண்டி ஆர் மண்டை ஏந்தி–உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு
பிறர் மனை–அயலாருடைய வீடுகளிலே
திரி தந்து–திரிந்து (பிச்சை யெடுத்து)
உண்ணும்–ஜீவித்த
முண்டியான்–மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம்–ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை
தீர்த்த–போக்கின
ஒருவன்–அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும்–உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர்–திருக்கண்டியூரென்ன
அரங்கம்–திருவரங்கமென்ன
மெய்யம்–திருமெய்யமென்ன
கச்சி–திருக்கச்சியென்ன
பேர்–திருப்பேர்நகரென்ன
மல்லை–திருக் கடன்மல்லை யென்ன
என்று–ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு
மண்டினார்–அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால்–உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு–அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே–உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)
எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும்
“பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள்
உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார்.
வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது.
அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்ய வழி யில்லை யென்கிறாரிவ்வாழ்வார்.
“உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாட பேதங்கள்
உண்டி-உணவு; பிச்சை யெடுத்து உண்ணப் பட்ட உணவை யுடையவன் என்றபடி.
“இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே
வீணாக க்லேசப்படாதே
“காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை யிலிருந்து வாழுஞ் சோம்பரை யுகத்திபோலுஞ் சூழ் புனலரங்கத்தானே!“
என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போது போக்காக இருப்பவர்கட்கே
எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்கு மென்றதாயிற்று.
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply