எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம்
ஒரு நாளும் கை கூடா தென்கிறார்.
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-
பதவுரை
இளைப்பினை இயக்கம் நீக்கி–க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்)
இருந்து–அசைவின்றி யிருந்து
முன் இமையை கூட்டி–மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி–அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து
அவர் கண்–எம்பெருமான் விஷயத்திலே
துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து–இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி
ஆங்கு–அந்த நிலைமையிலே
சுடர் விட்டு தோன்றலும்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை–விளக்காகிய எம்பெருமானை
விதியில்–சாஸ்திர விதிப்படியே
காண்பார்–காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே–உள்ளபடியே
காண்கிற் பாரே–காண வல்லவராவரோ? (காணகி்ல்லார் என்றபடி)
இளைப்பினை இயக்கம் நீக்கி =
இளைப்பாவது க்லேசம்; க்லேசமாவது ஐவகைப்படும்.-
க்லேசமிதா ராகத்வேஷாபிநிவேசா‘ க்லேசா“ என்று பாதஞ்சல தர்சனத்தில் சொல்லப்பட்டது;
அவித்யை யாவது அஜ்ஞாநம்.
அஸ்மிதையாவது அஹங்காரம்.
ராகமாவது இச்சா விசேஷம்;
த்வேஷமாவது பகை;
அபிநிவேசமாவது மரண பயம். (என்று குஸுமாஞ்சலியில் விவரணம் செய்யப்பட்டுள்ளது.)
ஆக இப்படிப்பட்ட க்லேசங்களின் ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (இருந்து) காற்றாடி போலே
எப்போதும் பறந்து கொண்டே யிருக்குமியல்வினர்க்கு ஓரிடத்தே யிருப்பது அருமை யாகும்;
அப்படிப்பட்ட அருந்தொழிலாகிய இருப்பைச் செய்து
(முன்னிமையைக்கூட்டி)
ஒரு திக்கையும் நோக்காமல் தன் மூக்கின் நுனியையே நோக்கிக் கொண்டிருக்க வேணுமென்று
சொல்லி யிருக்கிறபடி செய்து என்றவாறு. மேலிமையைக் கீழிமையோடு சேர்த்தலே இந்த நிலைமையாகும்.
(அளப்பில் ஐம்புலனடக்கி)
அளவில்லாத விஷயாந்தரங்களிலே பட்டி மேயக் கூடிய பஞ்சேந்திரியங்களை உள் விஷயத்தோடே நிற்கும் படிசெய்து.
(அன்பு அவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து)
தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி என்றவாறு.
(ஆங்கே சுடர் விட்டுத் தோன்றலும் இத்யாதி)
ஆக விப்படிப் பட்ட முறையிலே ஜாஜ்வல்ய மாநமாய்க் கொண்டு தோன்றுகிற ஞானத்தாலே
வேத விளக்காகிய எம்பெருமானை சாஸ்திரங்களில் விதித்தபடியே உபாஸனை பண்ணி
ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று பெரு முயற்சி செய்பவர்கள் அவனை மெய்யாகக் காண முடியுமோ?
அப்பெருமான் தானே தனது நிர்ஹேதுக க்ருபையினால் தன்னைக் காட்டிக் கொடுத்தருளினால் காணலாமத்தனை யொழிய
ஊன் வாட வுண்ணாதுயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத்
தவஞ் செய்கையாகிற ஸ்வ ப்ரயத்நங்களாலே அவனை ஸாக்ஷத்கரிக்கை எளிதோ? என்றாராயிற்று.
“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழி தவஞ் செய்தார் வெள்கிநிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன்றருளை யீந்த“ என்கிறபடியே
பல்லூழி யூழிகாலமாகத் தவம் புரிந்து வருந்தி நின்றவர்களெல்லாம் வெட்கப்பட்டு நிற்கும்படியாக
ஸ்ரீ கஜேந்திராழ்வான் போல்வார் திறத்திலே பரம க்ருமை செய்தருள்பவனான எம்பெருமானுடைய
ஸ்வபாவத்திற்கு இணங்க இப் பாட்டுக்கு இங்ஙனே உரையிடுதல் மிகப் பொருந்தும்.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் இங்ஙனே விரிவாக உரையிட்டருளின பின்,
“அதவா,
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாஸித்துக் காண்பார்க்குக் காணலாமென்றுமாம்“ என்கிற
மற்றொரு நிர்வாஹமும் அருளிச் செய்யப்பட்டுள்ள காண்க.
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply