ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -17–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்;
அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது;
இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை;
எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ?
முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான்.

இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில்,
ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன்,
எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்;
சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா;

ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று;
ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது;
அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார்.

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-

பதவுரை

பேர் உளான்–திருப்பேர் நகரில் எழுந்தருளி
பெருமை–பெருமையை
பேசினார்–பேசினவர்கள்
உய்ந்து போனார்–உஜ்ஜீவித்தார்கள்.
என்பது–என்று சொல்வது
இ உலகின் வண்ணம்–சாஸ்த்ர மர்யாதையாகும்;
பேதையேன்–அறிவு கேடனான நானோவென்
பேசியேன்–(அவன் பெருமையைப் பேச வல்லவனொ!)
ஏச மாட்டேன்–(சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும் மாட்டேன்;
பிறவி நீத்தார்–ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்;
பேசி ஏசினார்–அப் பெருமையைப் பேசிப் பரிஹஸித்த சிசுபாலாதிகளும்
பிறவி நீத்தற்கு–இந்த ஸம்ஸாரத்தை விட்டு நீங்குதற்கு
அலை கடல் வண்ணர் பால்–அலை யெறிகின்ற கடல் போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே
ஆசையோ பெரிது–ஆதரமோ அதிகமாயிருக்கின்றது;
கொள்க–இதனை உணர்க.

(பேருளான் பெருமை பேசினார் பிறவி நீத்தார்)
‘அப்பக்குடத்தான் ஸந்நிதி என்று ப்ரஸித்த பெற்ற திருப்புர் நகர் ஒன்றைச் சொன்னது
மற்றெல்லாத் திருப்பதிகட்கும் உப லக்ஷணம்.
திருப்பேர் முதலான திவ்ய தேசங்களில் நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்குமவனான எம்பெருமானுடைய
பெருமையைப் பேசுமவர்கள் உஜ்ஜீவித்தமைக்கு உதாரணம் காட்ட வேணுமோ?

(ஏசினார் உய்ந்து போனார்)
‘ஏசினாரும்‘ என்று உம்மை தொக்கிற்றாகக் கொள்க.
“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக் கொலோ“ என்று ஆண்டாள் வயிறெரிந்து
பேசும்படியாக தூஷித்தவர்களில் தலைவனான சிசுபாலன் முதலானவர்கள் ‘ஏசினார்‘ என்பதாற் கொள்ளப்படுவர்;

வைகிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேண்டி யிருப்பதால் ஏதேனுமொரு படியாலே
நம்முடைய திரு நாமத்தைச் சொன்னானென்று கொண்டு எம்பெருமான் ஏசுகிறவர்களுக்கும் நற் கதி நல்குவதுண்டு.
சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைத்தென்பதைப் பராசர மஹர்ஷி பகர்ந்து வைத்தார், என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
‘கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்,
திருவடி தாட்பாலடைந்த“ என்றார் நம்மாழ்வாரும்.

என்பது இவ்வுலகின் வண்ணம் =
லோகமென்கிற சொல்லால் சாஸ்த்ரத்தைவ் சொல்லுகிற வழக்கமுண்டு.
“எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே“ என்ற திருவாய்மொழி வியாக்கியானங்களிலும்,
ஆளவந்தார், ஸ்தோத்ர வியாக்யானங்களிலுங் காணலாம்.
ஆகவே இங்கு உலகின் வண்ண மென்று சாஸ்த்ர மர்யாதையைச் சொன்னபடி.
(சாஸ்த்ரமறிந்த) உலகத்தவர்கள் சொல்லுவார்கள் என்று பொருள் கொண்டாலுங் கொள்ளலாம்.

பேசினேன் –
எம்பெருமானுடைய பெருமையை நான் பேசினேனென்பதாகப் பொருள்படுவதன்று;
‘ஆ! நாம் வெகு நன்றாகப் படித்து விட்டோம் என்றால், படிக்கவில்லை யென்று பொருளாவது போல
இங்கும் எதிர் மறையாகக் கொள்ளத்தக்கது.
எம்பெருமான் பெருமையைப் பேச வல்ல அதிகாரி நானோ என்று இழித்துச் சொல்லுகையில் திருவுள்ளம்.

இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்தி காண்மின்;-
‘உண்ணப் புக்கு மயிர்ப் பட்டு அழகிதாக உண்டெனென்னுமா போலே“ என்பதாம்.
ஏச மாட்டேன் – ஏசி்ப் பெறக்கூடிய மோக்ஷம் வேண்டா என்றபடி.

மோக்ஷம் பெறுவதற்கு இரண்டு வழிகளே சாஸ்த்ரங்களிற் காண்கின்றன;
எம்பெருமானது பெருமைகளைப் பேசியாவது மோக்ஷம் பெற வேணும்,
சிசுபாலதிகளைப் போலே ஏசியாவது மோக்ஷம் பெற வேணும்;
எனக்கோ பேசத் தெரியாது; ஏசவோ இஷ்டமில்லை; அந்தோ! இழந்தேபோமித்தனையோ.
மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அளவு கடந்திருக்கின்றது! நான் செய்வதேன்? என்றதாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: