எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக
உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி;
அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்;
இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்.
முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –15-
பதவுரை
முன்-முன் பொருகால்
பொலா–பொல்லாதவனான
இராவணன் தன்–இராவணனுடைய
முது மதிள் இலங்கை–வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து–சுடுவித்து
அனுமன்–சிறிய திருவடி
அன்பினால் வந்து–மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு–கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய–உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு–நின்ற பெருமானுக்கு
அடியனேன்–அடியேன்
என்பு எலாம்–எலும்பெல்லாம்
உருகி–உருகி
உக்கிட்டு–இற்றுப் போய்
என்னுடை–என்னுடைய
நெஞ்சம் என்னும்–நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால்–ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன்–ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.
எம்பெருமான் பரம ஸந்தோஷமாக எழுந்தருளியிருந்த ஒரு ஸமய விசேஷத்தை யெடுத்துரைத்து
அந்த நிலைமையிலேயே நீராட்டங் கொண்டருளச் செய்கிற னென்கிறார்.
பிராட்டியிருக்கும் இடத்தைத் தேடித் தெரிந்து வருமாறு ஸ்ரீராமபிரானால் நியமித்து விடுக்கப்பட்ட
வாநர முதலிகளிலே தலைவரான சிறிய திருவடி இலங்கையிலே வந்து கண்டு
அப்பிராட்டி கையிலே “இத்தகையாலடையாளமீதவன் கை மோதிரமே“ என்று
ஸ்ரீராம நாமாங்கிதமான மோதிரத்தைக் கொடுத்து, சூடாமணியையும் பெற்று,
‘எதிரிகளி்ன் வலிமை எப்படிப்பட்டது? என்று பெருமாள் கேட்டால் அது தெரியாதென்று சொல்ல
வொண்ணாதாகையால் அதையும் தெரிந்து கொண்டு செல்வோமென்று கருதி அதற்காகச்
சில சேஷ்டிதங்களைச் செய்து தன் வாலில் நெருப்பாலே இலங்கையைச் சுடுவித்து
“கண்டேன் சீதையை“ என்று மீண்டு வந்து விண்ணப்பஞ்செய்த ஸமயத்திலே
ஆனந்தக் கடலிலே ஆழ்ந்துகிடந்த பெருமாளுக்கு, அந்நிலையை நினைத்து ஈடுபட்டவனாகி,
அப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமான ப்ரேமமே எனது நெஞ்சாக வடிவெடுத்திருப்பதனால்
என்னுடைய நெஞ்ச மென்னு மன்பினால் ஞானமாகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் என்கிறார்.
தீர்த்தத்திற்குப் பரிமள த்ரவ்யம் ஸம்ஸ்காரமாவது போல் இங்கு ஞான நீருக்கு அன்பு ஸம்ஸ்காரமாகக் கொள்ளப்பட்டது.
இதனால் மாநஸிகமான திருமஞ்சனத்தைனச் சொன்னவாறு.
“முன் = அதுவுமொரு காலமே! என்று வயிறு பிடிக்கிறார்“
என்ற வியாக்யமான ஸ்ரீஸூக்தி உணரத்தக்கது.
பொலா – பொல்லா என்றபடி தொகுத்தல்
* சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யாக்கனாகையாலே பொல்லாதவன்
என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே
சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply