கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –
பதவுரை
காவியை–கரு நெய்தல் மலரை
வென்ற–தோற்பித்த
கண்ணார்–கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே–கலவியையே
கருதி–நினைத்துக் கொண்டு
நாளும்–அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி–மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே–அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன்–பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர்–(அழகிய) சிறகையுடைய
அன்னம் மன்னும்–அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல்–சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை–திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன்–பாவியான நான்
பாவியாது–சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன்–(மேலும்) மஹா பாபியானேன்.
“கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி, நீண்ட வப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே!“ என்று ஈடுபட வேண்டிய திருக் கண்களை விட்டொழிந்து,
பிளிச்சைக் கண்ணிகளையெல்லாம் காவியை வென்ற கண்ணாராக ப்ரமித்து
அவர்களோடு கூடி வாழ்வதே பரம புருஷார்த்தமென்று கருதி, ஸுக்ருத லேசமும் பண்ணாத
மஹா பாபி யாவதற்கே வழி தேடி,
(தசரத சக்ரவர்த்தி வெண் கொற்றக் குடை நிழலிலே பழுத்தாற் போலவும்,
நம்மாழ்வார் “உனது பாலேபோற் சீரில் பழுத்தொழி்ந்தேன்“ என்று பகவத் குணங்களிலேயே பழுத்தாற் போலவும்)
அந்தப் பாவங்களிலேயே பழுத்தொழிந்தேன்
நான் பரம போக்யமான திருக் குடந்தைமா நகரிலே திருக் கண் வளர்ந்தருள்கின்ற ஆராவமுதாழ்வாரைச்
சிறிதாகிலும் நெஞ்சில் நினைத்திருந்தேனாகில் பாவங்கள் தொலையப் பெற்றிருப்பேன்.
அது செய்யாமை யன்றோ படுபாவியானேனென்றாராயிற்று.
தூவிசேரன்ன மன்னுங் குடந்தை =
ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான
மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply