என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ?
நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்–
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –11-
பதவுரை
எந்தாய்–எம்பெருமானே!,
தொண்டு எல்லாம்–எல்லாவகையான அடிமைகளையும்
பரவி–(செய்யவேணும் செய்ய வேணுமென்பதாக) வாயாரப் பேசி
நின்னை தொழுது–உன்னை வணங்கி
அடி பணியும் ஆறு கண்டு–திருவடிகளிலே பணிவிடை செய்யும் படிகளை மநோ ரதித்து
தான் கவலை தீர்ப்பான் ஆவதே–நான் மனக் கவலை தீர்த்துக் கொள்ள முடியுமோ?
பணியாய்–அருளிச் செய்ய வேணும்;
அண்டம் ஆய்–அண்டங்களிலுள்ளாரெல்லார்க்கும் தலைவனாய்
எண் திசைக்கும் ஆதி ஆய்–எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரண பூதனாய்
நீதி ஆன பண்டம் ஆம்–முறைமையான செல்வமாயிருப்பவனான
பரம சோதி–பரஞ்சோதியே!
நின்னையே–உன்னையே
பரவுவேன்–ஸ்தோத்ரம் பண்ணுவேன்.
(தொண்டெல்லாம் பரவி)
”ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும். நாம்“ என்று நம்மாழ்வாரும்,
பவாம்ஸ்மு ஸஹ வைதேஹயா கிரிஸாநஷுரம்ஸ்யதே,
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்சதே.“ என்று இளைய பெருமாளும்
பாரித்துப் பேசினாப் போலே அடியேனும் எல்லாத் தொண்டுகளையும் செய்திடுவோமென்று
பாரிப்புக் கொண்டு தேவரீரைத் திருவடி தொழ வேணு மென்றும் மநோ ரதங்கொண்டிருக்குமளவால்-
என்னுடைய மனத் துன்பங்களை நான் போக்கிக் கொண்டேனாக வழியுண்டோ?
தேவரீர் திறத்திலே கைங்கரியம் செய்வதோ, தேவரீர் திருவடிகளைத் தொழுது பணிந்து நிற்பதோ
எல்லாம் தேவரீருடைய திவ்ய ஸங்கல்பத்தினால் நடைபெற வேண்டியவையே யன்றி
எலி யெலும்பனான நீசனேன் நினைத்தபடி எது தான் ஆகும்? ஒன்றுமாகாது;
என் கவலையை நானே தீர்த்துக் கொள்ளவல்லனோ? அல்லேன்.
தொண்டு செய்தலும் நின்னைத் தொழுதபடி பணிதலும் தலைக் கட்டப் பெற்றால் கவலை தீரத் தட்டில்லை;
அவை தலைக் கட்டுவது தேவரீருடைய ஸங்கல்பத்தாலாகுமத்தனை யாதலால் அங்ஙனே
தேவரீர் ஸங்கல்பித் தருளவேணுமென்று தேவரீரையே துதித்துப் பிரார்த்திக்கின்றனென்கிறார்.
“பரந்த சிந்தையொன்றி நின்று நின்ன பாத பங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே“
என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தின் கருத்தை இங்குக் காண்க.
எண்டிசைக்கு மாதியாய் =
அஷ்டதிக் பாலகர்களுக்கும் பாலகன் என்றபடி.
நீதியான பண்டம் =
பண்டமாவது தனம்; நீதியான பண்டமானது, முறைமைப்படி ப்ராப்தமான தனம்,
“சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே“ என்கிறபடியே
எமக்கு ப்ராப்தமான செல்வம் தேவரீரே யென்றவாறு.
நின்னையே பரவுவேன் =
என்னுடைய கவலைகளை நானே தீர்த்துக் கொள்ள முடியாதாகையால்
நீயே தீர்க்க வேணுமென்று நின்னையே பரவுகின்றேனென்கை.
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply