ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -10–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

ஸம்ஸாரத்தின் கொடுமைக்கு அஞ்சி தேவரிருடைய திருவடிகளைப் பற்றின வளவேயோ?
தாங்க வொண்ணாத பரமபக்தியும் உண்டாயிற்றே! என்கிறார்.

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

பதவுரை

சித்தமும்–நெஞ்சமும்
செவ்வை நில்லாது–தரித்து நிற்கிறதில்லை;
தீ வினையேன்–மஹா பாபியான நான்
என் செய்கேன்–என்ன பண்ணுவேன்?
எந்தாய்–எம்பெருமானே!
பத்திமைக்கு–அளவிறந்து பெருகிச் செல்லுகின்ற) பக்தியின் ஸ்தானத்திலே
அன்பு உடையேன் ஆவதே–(கீழ்ப்படியான) அன்பை உடையேனாம்படி
பணியாய்–செய்தருளவேணும்;
முத்து–முத்துப் போன்றவனே!
ஒளி மரகதமே–ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனே!
முழங்கு ஒளி முகில் வண்ணா–கர்ஜிப்பதும் ஒளிபொருந்தியது மான காளமுகம் போன்றவனே!
என் அத்த–என் நாயனே!
நின் அடிமை அல்லால்–உன் பக்கல் கைங்கரியம் தவிர
யாது ஒன்றும் அறிகிலேன்–வேறொன்றும் (புருஷார்த்த மாக) அறியமாட்டேன்.

(சித்தமும் செவ்வை நில்லாது)
கடலிலே நீந்த வேணுமென்று புகுந்து முதலடியில் தானே தெப்பத்தை இழக்குமா போலே,
அநுஸந்திக்கப் புகுந்து தரித்து நிற்க மாட்டாதே நெஞ்சு பறியுண்டதென்கிறார்.
“உருகுமால் நெஞ்சமுயிரின் பரமன்றிப், பெருகுமால் வேட்கையுமென்செய்கேன் தொண்டனேன்“ என்ற
நம்மாழ்வாரைப் போலே கதறுகிறார்.
பக்திப் பாரவச்யத்தாலே அநுபவிக்கப் போகாமால் நெஞ்சை யிழக்கும்படியான பாபத்தைப் பண்ணின
நான் என்ன செய்வேனென்கிறார்:

(பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய்)
ஜந்ம தரித்ரனுக்கு அளவு கடந்த பசியுண்டானால் பசிக்குத் தக்கபடி உணவு கிடைக்கப் பெறாதொழியில்
‘பசி மந்தித்துப் போவதற்கு மருந்து கொடுப்பாருண்டோ?‘ என்று விசாரிக்குமா போலே
ஆழ்வாரும் தம்முடைய பேராசைக்குத் தக்கபடி அநுபவிக்கப் பெறாமையாலே
ஆசையை அளவுபடுத்தினால் போது மென்கிறார்.

அளவுகடந்த ஆசை நிலைமைக்குப் பத்திமை யென்று பெயர்;
ஓரளவிலே நிற்கிற ஆசை நிலைமைக்கு அன்பு என்று பெயர் என்பதாகக் கொள்க.

இப்போது ஆழ்வாருடைய ஆசையின் நிலைமை எல்லை கடந்த அவஸ்தையிலே நிற்பதால்
‘இப்படிப்பட்ட பத்திமையைக் கொண்டு என்னால் பாடாற்றப் போகவில்லை,
இந்த நிலைமையை மாற்றி வெறும் அன்பு நிலைமையையே தந்திடாய்‘ என்று வேண்டிக் கொள்ளுகிறார்.

”என்றனளவன்றால் யானுடையவன்பு” என்னுமாபோலே அளவுகடந்து செல்லுகின்ற
ஆசைப் பெருக்கத்தைக் குறைத்து ஓரளவிலே அமைத்திடாய் என்கை.

பசிக்குத்தக்க சோற்றையாவது இடு; அல்லது,
பசியையாவது உள்ள சோற்றுக்குத் தகுதியாக அமைத்திடு என்பாரைப்போலே சொல்லுகிறார்.

“கண புரத்துப் பொன் மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்,
என்னிவை தான் வாளாவெனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்,
மன்னு மருந்தறிவீரில்லையே” என்ற பெரிய திருமடலும் இக் கருத்துப் பட நின்றமை உணர்க.

இங்ஙனே தமக்கு அளவுகடந்த பக்திப் பெருங்காதல் விளைவதற்கு அடி இன்னதென்கிறார்
முத்தொளி மரதகமே! முழங்கொளி முகில்வண்ணா! என்ற விளியினால்,
முத்துப் போலே குளிர்ந்ததாயும் மரதகம் போலே சாம நிறத்ததாயிருக்கின்ற திருமேனி யழகில் ஈடுபட்டதனால்
இப்படிப்பட்ட பக்தி யுண்டாயிற்றென்றவாறு.

வடிவழகிலே யீடுபடுமவர்கள்
”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே”
என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய,
தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே
அதிகமான ஆவல் இருப்பதனாலும்
”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை
ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: