ஸ்ரீ ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி
இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை அருளியுள்ளார்.
தனியன்கள்:-
ஸ்ரீமத் காஞ்சீ முனிம் வந்தே கமலாபதி நந்தனம் |
வரதாங்க்ரி ஸதா ஸங்க ரஸாயன பராயணம் ||
ஸ்ரீ கமலாபதி என்பவரின் புதல்வரும் ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளில் இடைவிடாத பற்று என்னும்
ரசாயநத்தையே கதியாகக் கொண்டவருமான ஸ்ரீமத் திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.
தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||
ஸ்ரீ தேவப் பெருமாள் க்ருபைக்குப் பாத்ரமானவரும் ஸ்ரீ ராமாநுஜ முநி என்னும் எம்பெருமானாருடைய
மதிப்பைப் பெற்றவருமான நல்லவர்கள் ஆச்ரயிக்கத் தகுந்த ஸ்ரீ திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.
சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீ கமலாயர்
தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்தவர் ஸ்ரீ கஜேந்திர தாசர்
ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அருளிச் செய்த ஒரே கிரந்தம் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்;
8 ஸ்லோகங்களைக் கொண்டது.தம் ஆசார்யரும், ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜரின் பரமாசார்யருமான ஸ்ரீஆளவந்தார்
அருளிய “ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்” என்னும் கிரந்தத்தின் ஸாரத்தைக் கொண்டு
நித்யாநுஸந்தேமாயும்,ஸுலபமாயும்,ஸுக்ரமாயும்,சர்வ வர்ணார்ஹமாயும் ஆன ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும்
ஸ்தோத்ர மாலையை அருளிச்செய்தார்.
ஸ்லோகம்-1:
“நமஸ்தே! ஹஸ்திசைலேச!
ஸ்ரீமந் அம்புஜலோசன;
சரணம் த்வாம் ப்ரபன்னோஸ்மி
ப்ரணதார்த்திஹரா அச்யுத!!”
ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு நாதனே! ஸ்ரீபதியே! தாமரைக் கண்ணனே! உனக்கு வணக்கம்.
தன்னை வணங்கினவர்களின் துக்கத்தைப் போக்குபவனே! நழுவ விடாதவனே! உன்னைச் சரணமாக அடைந்திருக்கிறேன்.
ஸ்ரீபெருந்தேவித் தாயாருக்கு, வல்லபன் ஆனவனே,ஸ்ரீ அத்திகிரி என்னும் குன்றின் அதிபதியே!
அரவிந்தநிவாஸிநியான ஸ்ரீ பெருந்தேவித் தாயாரையும், அவருடைய ஆசனமான தாமரையையும்
பார்த்துப் பார்த்து,அவர் உருவத்தைத் தம் கண்மலர்களில் கொண்டவனே!
உன் திருவடிகளில் சரணமடைந்தோர் அனைவருடைய வருத்தங்களையும் நாசம் செய்பவனே!
உன்னை அண்டியவர்களை விடாதவனே! அச்சுதனாய், ப்ராப்யனாய்,
என் எதிரே அர்ச்சாவதரமாய், ஸுலபனாய் நிற்கிற உன்னையே-
சரணமாக-உபாயமாகப் பற்றுகிறேன்.நின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.
இந்த முதல் ஸலோகத்தில் அர்த்த பஞ்சகமும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
i)ஹஸ்திசைலேச–சர்வேஸ்வரத்வத்தைக் கொண்ட சர்வ காரணத்வம்-ப்ராப்யம்.
ii)ஸ்ரீமந் அம்புஜலோசன- ப்ராப்ய அநுரூபமான ஸ்வரூபம்-அபாத்யத்வம்.
iii)சரணம்- ஸ்வரூப அநுரூபமான உபாயத்வம்.
iv)அச்சுதா-உபாய பலமான ப்ராப்ய ப்ராப்தி
v)ப்ரணதார்த்தி ஹர-விரோதி ஸ்வருப நிரஸநம்.
1)ஸ்ரீமந்-பரத்வம்
2)ஸ்ரீ ஹஸ்திசைலேச–அர்ச்சாவதாரம் .
3 )ஸ்ரீ அம்புஜலோசன- தாமரைக்கண்ணன்-ராமம் கமலலோசனன் -விபவ அவதாரம்
4)ஸ்ரீ அச்சுதா-அந்தர்யாமித்வம்
5)ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹர-கூப்பீடு கேட்க்கும் வ்யூஹம்
———-
ஸ்லோகம் 2-8:
கீழே பர ஸ்வரூபத்தை பஞ்ச பிரகாரமாக அனுபவித்து
இந்த 7 ஸ்லோகங்களால் ப்ராப்ய, உபாய விரோதி நிராகரணத்தைப் பிரார்த்தித்து,
ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டுகிறார்.
ஸ்லோகம் 2:
“சமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண கருணோல்பன;
விலசந்து கடாக்ஷாஸ் தே, மய் யஸ்மின் ஜகதாம்பதே!!”
எல்லா ப்ராணிகளையும் காப்பதில் திறமை உள்ளவனே! நிறைந்த கருணை உள்ளவனே!
உலகத்திற்கு ஸ்வாமியே! உனது பார்வை இந்த என்னிடம் மலரட்டும்.
உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியானவனே!எல்லா ஜீவராசிகளுக்கும் ரக்ஷ்ணம்/ஸமுஜ்ஜீவனம் அளிக்கும்
அளவற்ற சக்தியும்,கருணையும் உடையவனே!
பலத்தை/வரத்தைக் கொடுக்கத் தன்னையும்,பெருக்கி விஞ்சி கடாக்ஷங்களாய் நிற்பவனே!
உன்னுடைய கடாக்ஷமான பார்வை,நின் எதிரே சேவித்து நிற்கும் அடியேன் மீது முழுதும்
நன்றாக இருக்க வேண்டுகிறேன்.
இங்கு ஸமஸ்த ப்ராணி என்றது
அனைத்து ஜீவன்களுக்கும்-தேவதைகள்,மனிதர்கள்,பசுக்கள்,பட்சிகள்,செடி/கொடி மரங்கள்-என்று அனைத்தும்;
“லோகாஸ்ஸமஸ்தா:ஸுகிநோ பவந்து”என்கிறபடியே,
வரதரின் வரமும்,கடாஷமும் நம்பிகளிடம் வந்தால்,அதனால் உலகம் எல்லாம் வாழும்.
அப்படியே வரதர் அருளிய அந்த ‘ஆறு வார்த்தைகளை’ நம்பிகள் எம்பெருமானாருக்கு அளிக்க,
அவர் உலகோர் எல்லோருக்கும் அளித்து தர்சன ஸித்தியாலே வாழும்படி செய்தார்.
நம்பிகளின் ஆல வட்டக் கைங்கர்யமும், உடையவரின் தீர்த்தக் கைங்கர்யமும்,(சாலைக் கிணற்றிலிருந்து)
ஊருக்காகவும்,உலகத்துக்காகவும் பலன் தரவே யாகும்.
————
ஸ்லோகம் 3:
“நிந்தித ஆசார கரணம் நிர்வ்ருத்தம் க்ருத்யகர்மண:
பாபீயாம்ஸம் அமர்யாதம் பாஹி மாம் வரத ப்ரபோ!”
நல்லவர்களால் வெறுக்கப்பட்ட செயல் புரிபவனும், செய்ய வேண்டியதைச் செய்யாதவனும்,
பாபிஷ்டனும், மரியாதை இல்லாதவனுமான என்னை ஹே வரதராஜ! ரக்ஷிப்பாயாக.
நல்ல வரங்களைக் கொடுக்க வேண்டுமென்று, இங்கே எழுந்தருளியுள்ள ஸ்வாமி யானவனே!
நல்லவர்கள் விலக்கச் சொல்லும்,ஆசார நடைமுறைகளையே செய்யுமவனான,
செய்ய வேண்டும் என்பவற்றை செய்யாதவனான,
அவர்களை/அவைகளைப் பார்க்காமல் பின் காடடிப் போகிறவனான என்னை,
பாபங்களையே எல்லா வடிவிலும் நெஞ்சிலும்/வாயிலும் கொண்ட என்னை,
(லோகத்திலும் சாஸ்த்ரத்திலும் சொல்லுகிற) எந்தவொரு நியமத்துக்கும் கட்டுப்படாத என்னை
(‘என்னை’ என்று அஹங்காரத்தோடு சொல்லுமவனை)
இனி தேவரீர் ஸ்வாமிகளே காப்பாற்ற வேண்டும்.
———–
ஸ்லோகம் 4-8: இந்த 5 ஸ்லோகங்களால் ஆகிஞ்சந்யாதிகளை,முன்னிட்டு,
அபராத ஸஹஸ்ர பாஜநத்தை விளக்கி,சரணாகதத்தையும் விரிவாக்கிக் கொண்டு சொல்கிறார்.
இந்த ஸ்லோக வரிசையை குளகம் என்று கூறுவார்கள்.
ஸ்லோகம் 4:
“ஸம்ஸார மருகாந்தாரே துர் வியாதி ஆக்ரபீஷணே;
விஷய க்ஷத்ரகுல்மாட்யே த்ருஷ்ணாபாதபசாலினி !! ”
ஸம்ஸாரம் என்னும், நிதமும் நாம் வாழும் வாழ்க்கை, கொடிய பாலை வனங்களில் அங்கங்கே இடைப்படும்
காட்டினைப் போன்றது. தினமும் நமக்கு ஏற்படும் வித விதமான மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட
நோய்களின் தீவிரம் காட்டுப் புலிகளினுடைய தாக்குதலுக்கு ஒப்பானது.
காட்டிலே மேலாக புற்களால் நிரப்பப்பட்ட புதர்களான ஆழப் பள்ளங்கள் அவற்றின் மேல் நடப்பவரை
உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் வண்ணம், நம்முடைய பல வித ஆசைகளும் அங்கங்களின் உணர்வுகளும்
கொடிய புதர்களாக நாம் வெளியே வர முடியாத வண்ணம் உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மை யானவை. .
‘ஸம்ஸார மருகாந்தாரே’ என்னும் பதத்திற்கு ஸம்ஸார பாலை வனம் என்று பொருள்.
‘த்ருஷாபாதபசாலினி’ என்பது மரம் செடி கொடிகளைக் (பனை/ஈச்ச மரம்,முட்புதர்கள்) குறிப்பது.
நம்பிகள் இந்த வேறுபட்ட இரண்டு பதங்களைப் பிரயோகிக்கக் காரணம்,
பாலை வனத்து வெறுமையும் காட்டுப் பகுதியின் அந்தகாரமும், அடர்த்தியும் ஒன்று சேர்ந்தால்
எவ்வளவு கொடுமையாக இருக்குமோ,
அத்தகையது இந்த இருள் தரு மா ஞாலம் என்பதைக் குறிப்பிடத்தான்.
————
ஸ்லோகம் 5:
“புத்ர தார க்ருஹ க்ஷேத்ர, ம்ருகத் த்ருணாம்பு புஷ்கலே!
க்ருத்ய ஆக்ருத்ய விவேகாந்தம் பரிப்ராந்தம் இதஸ் தத:”
இப்பிறப்பில் நமக்கு ஏற்படும் புத்ர/புத்ரிகள் இல்லாள்(ன்), வீடு, நிலம் முதலிய சொந்த பந்தங்கள்,
காடுகளில் காணப்படும் கானல் நீரைப் போன்று தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கிடக்கும்.
இந்த சொந்தங்களின் நலத்திற்கான ஒரே நோக்கில் எதைச் செய்தல்,எதை விலக்குதல் என்ற
ஞான விவேகங்கள் அற்று, இங்கும் அங்கும் சுழன்று கொண்டே இருப்போம்.
அருளிச் செயல் சொன்ன வண்ணம் ‘தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்களென்றும்’ என்னும்
வகையில் வாழ்ந்து என்ன பயன்?
பந்துக்களைக் கண்டால் பாம்பைக் கண்டாற் போலவும்,
பாகவதர்களைக் கண்டால் பந்துக்கள் போலவும் இருக்க வேண்டும் என்பது பூர்வர்கள் உபதேசம்.
நம் ஆத்மாவின் உற்ற நிரந்தர உறவினன், எம்பெருமான் ஒருவனே என்று உணர்ந்திடும் சமயத்தில் தான்,
நாம் துக்கங்களிலிருந்து கரையேற முடியும், என்று நம்பிகள் விளிக்கிறார்.
————
ஸ்லோகம் 6:
“அஜஸ்ரம் ஜாத த்ருஷ்ணார்த்தம் அவஸந்நாங்கமக்ஷமம்;
க்ஷீணசக்த்தி,பலாரோக்யம் கேவலம் க்லேச சம்ச்ரயம்!”
எப்போதும் இடைவிடாத படி விஷ்யாந்தரங்களை விரும்பி அநுபவித்துக் கொண்டும்,
அவற்றை விட முடியாமல் வருந்திக் கொண்டும்,வேறு நல்ல காரியம் எதுவும் செய்யாமலும்,
வெறும் அங்கங்களை உடையவனாயும்,
ஆத்மஞானம்/பகவத்த்யானம் பெறாதவனாயும், குறைந்த சக்தி/பலம் உடையவனாய்,
ஆரோக்கியம் இருந்தும் எதற்கும் உதவாமல்,அடியேன், கேவலம் கஷ்டங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.
————-
ஸ்லோகம் 7:
“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”
இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை,
தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.
———–
ஸ்லோகம் 8:
“த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”
காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம்,
குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்/நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.
இப்படி’நமஸ்தே’ என்று முதலில்,
ஜீவாத்ம ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தையே,அநந்ய ப்ரயோஜன மாகக் காட்டி,
அந்த கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவிலே பிரார்த்திக்கிறார்;
மண்ணுலகிலும்,விண்ணுலகிலும் எங்கும் ஜீவாத்மாவுக்குக் கைங்கர்யமே தஞ்சமான புருஷார்த்தம் என்று
பரம காருணிகரான திருக்கச்சி நம்பி,நமக்கெல்லாம் தெரிவித்து
“ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்” என்னும் இந்தத் திவ்ய ப்ரபந்தத்தைக் தலைக் கட்டுகிறார்
தம் ஆசார்யர் ஸ்ரீ ஆளவந்தாருக்கு உத்தம சிஷ்யராய் இருந்து,
(ஸ்ரீ எம்பெருமானாருக்கு) அவரின் பிரதிநிதியாய் இருந்து,
ஸ்ரீ தேவப் பெருமாளுக்கு அந்தரங்கக் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு,
ஆழ்வார்கள் போலவே பகவானுடன் வார்த்தையாடிக் கொண்டிருந்து,
பரி பூர்ணராய் தம் ஸ்வரூபத்தையும், ஆர்த்தியையும்,உள்ளே அடக்கி வைக்க முடியாதே,
இந்த ஸ்தோத்ரத்தில் வெளிப்படுத்தினார்.
4-8 – இந்த ஐந்து ச்லோகங்களால் தமது நிலையை ஓர் உருவகத்தின் மூலம் விளக்கி,
தமது ரக்ஷணத்தை தேவப்பெருமாளிடத்தில் இரக்கிறார்.
ஸம்ஸாரம் என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள்.
பாலைவனத்தில் முட்புதர்கள் போல் அற்ப சுகங்கள் நிறைந்திருக்கின்றன.
ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவைகள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும்
இங்காங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனும்,
திறமையற்றவனும், தேஹ திடம், மநோ திடம், தேஹ ஆரோக்யம் இவைகளும், இவைகளால் குறைந்தவனும்
க்லேசத்துக்கே இருப்பிடம் ஆனவனும் இப்படி சொல்லத் தகாத பல வகை துக்கங்களால் தாபத்தை அடைந்தவனுமான
என்னை ஸ்ரீ தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கும் தேவனே! உலகத்துக்கு ஸ்வாமியே!
உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால்
கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து கடாக்ஷிப்பாயாக.
குளிர்ந்த கருணை என்னும் காற்று கொண்டு வந்து உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலை ஏறிப்பதால்
ஏற்பட்ட துளிகளால் நனைப்பாயாக –
குளிரக் கடாக்ஷிக்க வேணும் என்பது பொருள்.
இந்த ஸ்ரீ தேவராஜாஷ்டகம் தன் 16 பகுதிகளில், ஒரு புருஷ ஸுக்தத்துக்கு சமமாய்
ஸம்ப்ரோஷணாதிகளில் சுத்தி மந்திரமாய் ஸம்பரதாயத்திலே விளங்குவதால்,
ஸகல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் உபாதேயம்!!
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply