விரதங்கள் மூன்று-ஸ்ரீ மதுரகவி தாசன்–ஸ்ரீ வெங்கடேச ஸ்வாமிகள்

விரதங்கள் மூன்று
விரதம் என்பது ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஒழுக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கும் மார்க்கமாகும்.

உலகில் எத்தனையோ விரதங்கள் உள்ளன. சிறுவர் முதல் பெரியவருக்கும், ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும்,
பல பருவங்களுக்குத் தகுந்தவையாகவும், இப்படிப் பல வகைகளான விரதங்கள் இருக்கின்றன.
சில சமயங்களில் விலங்குகள் கூட விரதங்கள் அநுஷ்டிக்கக் காண்கிறோம்.

ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாங்களாகவும் அநுகாரத்திலேயும் விரதங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டாள் பாவை நோன்பு மேற்கொண்டது அனைவரும் அறிந்ததே.
நாச்சியாரும் விபவத்தில் நோன்பு மேற்கொண்டாள் என்பதைப் புராண இதிஹாஸங்கள் மூலமாக அறிகிறோம்.

இப்படி எத்தனையோ விரதங்கள் இருக்க, இதென்ன மூன்று விரதங்கள்?

இவை மூன்றும், அநுஷ்டிப்பவர்களைக் கொண்டு காணும் விஷயமாகும்.

1-எம்பெருமானுடைய விரதம்
அவாப்த ஸமஸ்தகாமனான எம்பெருமானும் ஒரு விரதம் வைத்துக் கொண்டிருக்கிறான்.

அதாவது தன்னடியார்களை எப்பாடுபட்டேனும் ரக்ஷித்தே தீருவேன் என்பதாம்.

“விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றார் ஸ்ரீ பாஷ்யகாரரும்.
வணக்குடைத் தவ நெறி பூண்ட எல்லாவிதமான கடல் வண்ணன் பூதங்களையும் ரக்ஷிப்பதான
ஸர்வ ரகஷகத்வத்தை ஒரு வ்ரதமாக தீக்ஷை எடுத்துக் கொண்டிருக்கிறான் எம்பெருமான்.

சக்ரவர்த்தித் திருமகனும்
“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம” என்றானிறே.
தன்னிடம் ஒரு முறை சரண் புகுந்த ஒருவனை எல்லாவித பயத்திலிருந்தும் காப்பதே
தன்னுடைய விரதம் என்றுரைத்தான். இது ஸ்ரீராமாவதாரத்தில் அவனிட்ட சரம ஶ்லோகமாகும்.

ஸம்ஸாரக் கிழங்கெடுத்தல்லது பேரேன் என்றே கிடக்கிறார் பெரிய பெருமாளும்.

அதற்காகவிறே அவன் செய்யும் க்ருஷி அனைத்தும். தன் லாபத்திற்காக சேதனனை அடைய
அவன் செய்யும் முயற்சியினால் அவனை பத்தி உழவன் என்றே அழைக்கிறார் திருமழிசையாழ்வார்.
நம்மாழ்வாரும் அவனை ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்தவன் என்றார்.

அந்த விரதத்தை அவன் நினைவாக்கி, பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு என்றார் பிள்ளை லோகாசார்யர்.

என் ஊரைச் சொன்னாய், என் பேரைச் சொன்னாய், என்று ஏதேனும் ஒரு காரணத்தைப் பற்றி,
ஒன்று பத்தாக்கி, சேதனனுக்கு நல்வீடு அளிக்கவே அவன் முயற்சிப்பது.

உறங்குவான் போல் யோகு செய்து, பக்தாநாம் என்று சேதனனை எப்படி ரக்ஷிப்போம் என்ற
ஜகத் ரக்ஷண சிந்தனையே அவன் விரதமாம்.

———-

2-சேதனன் விரதம்
இதற்கு எதிர்தட்டாக ஒரு விரதம் கொண்டுள்ளான் சேதனனானவன்.

இவன் விரதமாவது இழந்தோம் என்ற இழவுமின்றி அவனிடம் இருந்து பிரிந்தே கிடப்பேன் என்பதாம்.

அதற்காக அவன் எதையும் பற்றுவான் என்பதை ஆழ்வாரும்
யாதானும் பற்றி நீங்கும் என்றும் அதுவே இவனுக்கு விரதம் என்றும் தம்முடைய திருவிருத்தத்தில் காட்டுகிறார்.

இப்படி எம்பெருமானுக்கும் சேதனனுக்கும் நடக்கும் நித்ய விரத போராட்டத்தை,
பராசர பட்டர் நம்பெருமாளின் திருமஞ்சன கோலத்தில் கண்டு அதை ஒரு கட்டியத்தில் வர்ணிக்கிறார்.

த்வம் மே அஹம் மே குதஸ்தத் ததபி குத இதம் வேதமூல ப்ரமாணாத்
யேதச்ச அநாதிஸித்தாத் அநுபவ விபவாத் தர்ஹி ஸாக்ரோஸ யேவ |
க்வாக்ரோஸ: கஸ்ய கீதாதீஷு மம விதித: கோ-அத்ர ஸாக்ஷீ ஸுதீ ஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸ இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்தவத் த்வம் ||

சேதனனைத் தன்னுடையவன் என்று எம்பெருமான் சொல்ல, அதை மறுத்து இவன் தனக்கே தான் உரியவன் என்கிறான்.
தான் ஸ்வாமி என்பதற்குப் ப்ரமாணம் வேதம் என்று அவன் சொல்ல,
தன் ஸ்வதந்த்ரத்துக்குத் தன் அநாதியான அநுபவம் ப்ரமாணம் என்கிறான் இவன்.
தான் இவ்வாறு கீதையில் சொன்னதை பெரியோர் ஆதரிப்பர் என்று அவன் சொல்ல,
அவர்கள் அவனிடம் பக்ஷபாதம் கொண்டவர் என மறுக்கிறான் இவன்.
முடிவில் நம்பெருமாள் ஈரவாடையுடனும் துளஸீ மாலையுடனும் தனக்கும் இவனுக்கும் உள்ள நவவித ஸம்பந்ததை
ஸத்ய ப்ரமாணம் செய்கிறான் என்று ஒரு சுவையான நாடகத்தை அரங்கேற்றுகிறார் பட்டர்.

அப்படி அவன் செய்தாலும், எல்லாவற்றையும் விட்டு தன்னைப் பற்ற வேணும் என்று
அவன் சரம ஶ்லோகத்தில் சொன்னாலும், அவனை மட்டும் விட்டு விட்டு, வேறேதேனும் ஒன்று என்றில்லாமல்,
அவனைத் தவிர்ந்த எல்லாவற்றையும் பற்றுவேன் என்பதே இவன் கொண்டிருக்கும் விரதமாம்.

————

3-பிராட்டி விரதம்
அதையும் மீறி ஒரு வேளை சேதனன் அவனை அணுகினாலும், அவனுக்குச் நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யம்
என்றொரு குணம் இருப்பதால், எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்று இவன் செய்த
அபராத கோடியைக் கணிசித்து இவனை அங்கீகரியாது,
க்ஷிபாமி என்றும் நக்ஷமாமி என்றும், பத்தும் பத்துமாகக் கணக்கிட்டு ஒழிக்கக் கூடும்.

இப்படி எதிரம்பு கோர்த்து நிற்கிற இவ்விருவரையும் ஒன்று சேர இணைத்து வைப்பேன் என்பதே பிராட்டியின் விரதமாகும்.

ஶ்ராவயதி என்று,
மணல் சோற்றில் கல்லாராய்வார் உண்டோ என்று அவனுக்கும்,
அவன் தண்டிப்பானோ என்று அஞ்ச வேண்டா என்று இவனுக்கும் உபதேசிப்பள்.
மீளாத போது, சேதனனை அருளாலேயும், ஈஶ்வரனை அழகாலேயும் திருத்துவாள் என்கிறார் உலகாரியன்.

அகலகில்லேன் இறையும் என்றிருப்பதே அவள் விரதம்.
எம்பெருமானை விட்டு ஒருகாலும் பிரிய மாட்டேன், அப்படிப் பிரிந்தால் அந்த சமயத்தில் ஏதோவொரு சேதனனை
அவன் அங்கீகரியாமல் போய் விடக் கூடும், அதனால் தன் புருஷகாரத் தன்மைக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்று
அவனுடன் நித்யவாசம் செய்வேன் என்று கொண்டு அவன் திருமார்பை விட்டுப் பிரியாமல் இருக்கும்
விரதம் அநுஷ்டிக்கிறாள் பெரிய பிராட்டியார்.

அதனால் ப்ரஹ்ம வாசகமான அகாரத்தையும் விட்டு அவள் பிரிவதில்லை என்கிறார் சேநாபதி ஜீயர்.

சேதனனுக்கு உபதேசித்தும் அருளாலே திருத்தியும், எம்பெருமானுக்கு உபதேசித்தும் அழகாலே திருத்தியும்
தன் விரதத்தைத் தலைக்கட்டுகிறாள் பிராட்டி.
இதனாலேயே இவளை முன்னிட்டே எம்பெருமானைப் பற்றுகின்றனர் ஆழ்வார்களும் ஆசார்யர்களும்.

இப்படி சேதனன் சொல்வதை மாதாவாகக் கேட்டும், எம்பெருமானுக்கு இனியளான மஹிஷியாய் எடுத்துச் சொல்லியும்,
எதிர்தலையிட்டிருக்கும் இருவரையும் இணைப்பதே இவள் கொண்டிருக்கும் விரதமாம்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: