ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.126–ப்ரத்யாவ்ருத்தி– பத2 வர்ணனம்.(திரும்பி சென்ற வழியை விவரித்தல்)

அத்தியாயம் 126 (533) ப்ரத்யாவ்ருத்தி பத2 வர்ணனம்.(திரும்பி சென்ற வழியை விவரித்தல்)

ஸ்ரீ ராமரின் அனுமதியுடன் விமானம் ஆகாயத்தில் பறக்கலாயிற்று.
ஒரு பெரிய மேகத்தை மூச்சுக் காற்றால் தூக்கி நிறுத்தியதைப் போல அனாயாசமாக கிளம்பியது.
வியத்தகு வேகத்தில் செல்லலாயிற்று.. ரகு நந்தனன் கீழே பார்வையை செலுத்தி,
சந்திரன் போன்ற முகத்தினளான மைதிலியைப் பார்த்து சொன்னான்.

வைதேஹி, விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்ட லங்கா நகரைப் பார்.
கைலாச சிகரம் போன்ற த்ரிகூட சிகரத்தில் இருப்பதை நன்றாகப் பார். இதோ பார்,
மாமிசமும், நிணமும், சதையுமாக இரைந்து கிடக்கிறதே, இது தான் ரண பூமி.
இங்கு தான் வானர ராக்ஷஸர்கள் பெரும் போர் புரிந்தனர். ராக்ஷஸேஸ்வரன்,
வரங்கள் பெற்று உலகை ஆட்டி வைத்தவன், தூங்குகிறான். மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
உன் காரணமாக, விசாலா, ராவணனை நான் வதம் செய்தேன். இதோ பார்,

இங்கு தான் கும்பகர்ணன் கொல்லப் பட்டான். ப்ரஹஸ்தன் என்ற நிசாசரனும் மாண்டான்.
தூம்ராக்ஷனும், ஹனுமானால் கொல்லப் பட்டான். சுஷேணன் இங்கு வித்யுன்மாலியை கொன்றான்.
லக்ஷ்மணன் இந்திரஜித்தை மாய்த்தான். இந்திரஜித் ராவணனின் மகன்.
அங்கதன் இந்த இடத்தில் விகடன் என்ற ராக்ஷஸனை அடித்தான்.

மகா பார்ஸ்வ, மகோதரர்கள் நல்ல பலசாலிகள். விரூபாக்ஷன் மற்றும் பல பலசாலிகளான ராக்ஷஸர்கள் வதம் செய்யப் பட்டனர்.
இங்கு தான் மந்தோதரி என்ற ராக்ஷஸ பத்னி, மிகவும் வருந்தி அழுதாள். ஆயிரக் கணக்கான சபத்னிகள் அவளுக்கு.
எல்லோரும் கண்களில் நீர் பெருக அவனைச் சார்ந்து நின்றனர். சமுத்திர தீர்த்தம் தெரிகிறது பார்.

இந்த இடத்தில் தான் சமுத்திரத்தைக் கடந்து வந்த இரவு நாங்கள் தங்கினோம். இதோ, பார். நாங்கள் கட்டிய சேது.
உப்பு சமுத்திரத்தில் குறுக்கே பாலம் கட்டினோம்.
விசாலாக்ஷி, மிகவும் கஷ்டமான செயலான இந்த சேதுவை, நளன் கட்டி முடித்தான். இதோ பார்,
பொங்கி எழும் சமுத்திரத்தைப் பார். சங்கமும், சிப்பிகளும் நிறைந்து எல்லையில்லாமல் எப்பொழுதும்
கர்ஜித்துக் கொண்டிருக்கும் சமுத்திரத்தைப் பார். ஹிரண்ய நாபன் என்ற மலையரசன். காஞ்சனமயமாக தெரிகிறான் பார்.
மைதிலி, இது சாகரத்தின் அடியில் இருந்தது.

உன்னைத் தேடி வந்த ஹனுமானின் பலத்தை சோதித்து, நம்பிக்கை வரச் செய்ய ,
ஹனுமானை தடுக்கச் சொல்லி சமுத்ர ராஜனால் அனுப்பப்பட்டது. இதோ பார். சாகர தீர்த்தம்.
இது சேது பந்தம் என்றே புகழ் பெறப் போகிறது. மூவுலகத்திலும் பூஜிக்கப் போகிறார்கள்.
இது மிகவும் பவித்ரமானது. மகா பாதகத்தையும் நாசம் செய்யக் கூடியது.
இதில் முன்பு மகா தேவன் இருந்து அனுக்ரஹம் செய்தார். இங்கு தான் ராக்ஷஸ ராஜாவான விபீஷணன் வந்து சேர்ந்தான்.
இதோ பார், அழகிய காடுகளுடன் உள்ள இடம், இது தான் கிஷ்கிந்தா. இது சுக்ரீவனுடைய நகரம்.
இங்கு தான் நான் வாலியைக் கொன்றேன். கிஷ்கிந்தா நகரைப் பார்த்து சீதா, வாலி பாலித்து வந்த நகரம்,

இங்கு விமானத்தை நிறுத்தி, சுக்ரீவ பத்னிகள், தாரா முதலானோர், மற்றும் வானரங்களின் ஸ்திரீகளும் வரட்டும்.
எல்லோருமாக அயோத்தி செல்வோம், என்றாள். அப்படியே ஆகட்டும் என்று விமானத்தை நிறுத்தி
ராமர், வானர ராஜனே, உன் வானர வீரர்களுக்கு கட்டளையிடு. தங்கள் தங்கள் மனைவிமார்களுடன்,
எல்லோரும் சீதையுடன் அயோத்தி வரட்டும். நீயும் உன் ஸ்த்ரீ ஜனங்களை அழைத்துக் கொண்டு சீக்கிரம் வா, என்றார்.

இதைக் கேட்டு வானராதிபன், வானரங்களிடம் விவரமாக சொல்லியனுப்பினான். தானும் அந்த: புரம் வந்து
தாரையிடம் ப்ரியே, நீ மற்ற வானர ஸ்த்ரீகளுடன் சீக்கிரம் கிளம்பு. மைதிலி சொன்னாள் என்று,
அவள் இஷ்டத்தை பூர்த்தி செய்ய, ராமன் நம் அனைவரையும் வரச் சொல்லி அழைத்திருக்கிறான்.
அயோத்தி சென்று நாம் தசரத ராஜாவின் மனைவிகளையும் ராஜ ஸ்த்ரீகளையும் காண்போம்.
அயோத்தியை நம் பெண்களுக்கு சுற்றிக் காட்டுவோம்.
இதைக் கேட்டு தாரையும், எல்லா வானர ஸ்த்ரீகளையும் அழைத்து சுக்ரீவன் அனுமதி அளித்திருக்கிறான்.
நாம் எல்லோரும் உடன் செல்வோம். எனக்கும் அயோத்யா நகரை காண ஆவல் தான்.
ஊர் ஜனங்களுடன் நாமும் நகரத்துள் பிரவேசிப்போம்.

தசரத ராஜாவின் அரண்மனையையும், செல்வ செழிப்பையும் அந்த ஊர் ஸ்த்ரீகளையும் பார்த்து விட்டு வருவோம். கிளம்புங்கள் என்றான்.
துரிதப் படுத்தி அவர்களை முறையாக அலங்காரம் செய்து கொள்ளச் செய்து அழைத்து வந்தான்.
சீதையைக் காணும் ஆவலுடன் எல்லா வானர ஸ்த்ரீகளும் விமானத்தில் ஏறின.
எல்லோரும் ஏறிக் கொண்ட பின், விமானம் புறப்பட்டது. ருஸ்ய மூக சமீபம் வந்தது.

வைதேஹியிடம் ராமர், சீதே, இதோ பார். மின்னலுடன் கூடிய மேகம் போல தெரிகிறதே,
இது தான் ருஸ்ய மூகம் என்ற மலையரசன். பொன் மயமான தாதுக்கள் நிறைந்தது.
இங்கு தான் நான் வானர ராஜாவான சுக்ரீவனோடு சக்யம் செய்து கொண்டேன்.
வாலி வதம் செய்யவும் நேரம் குறித்துக் கொண்டேன்.
இதோ பார், பம்பா நதி. தாமரை மலர் பொய்கைகளும், அழகிய கானனமும் தெரிகிறது,
பார். இங்கு தான் நீ இல்லாமல் நான் தனியே வருந்தி புலம்பி அழுதேன்.
இந்த நதிக் கரையில் தான் சபரி என்ற தவச் செல்வியைக் கண்டேன்.

இங்கு தான் யோஜனை தூரம் நீண்ட கைகளுடன் கப3ந்த4னைக் கண்டேன்.
சீதே, இதோ பார். ஜனஸ்தானத்து மரங்கள் காண்கின்றன. இங்கும் உன் காரணமாக பெரும் யுத்தம் நடந்தது.
கொடியவனான ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரும் யுத்தம் நடந்தது. க2ரனை இங்கு தான் மாய்த்தேன்.
தூஷணனையும் வதம் செய்தேன். த்ரிசிரஸ் என்று ஒருவனும் வந்தான்.
என் பலம் மிக்க பாணங்களால் அடித்து அவர்களை வெற்றி கொண்டேன்.

வரவர்ணினீ, இதோ பார். இது தான் நாம் வசித்த ஆசிரமபதம். நம் பர்ண சாலா இதோ இருக்கிறது.
இன்னமும் அதே போல அழகாக விளங்குகிறது. சுபமான இடம்.
இதோ இந்த இடத்திலிருந்து தான் உன்னை ராக்ஷஸேந்திரன் பலாத்காரமாக கவர்ந்து சென்றான்.
இதோ பார், கோதாவரி நதி. ப்ரஸன்னமான ஜலம் பெருகி ஓட, ரம்யமாக, மங்களகரமாக ஓடிக் கொண்டிருக்கிறாள்.

இதோ, பார். மைதிலி, அகஸ்திய ஆஸ்ரமம். சுதீக்ஷ்ணருடைய ஆசிரமம். பிரகாசமாக தெரிகிறது, பார்.
இதோ பார். வைதேஹி, சரபங்காஸ்ரமம் தெரிகிறது, பார். இதோ, பார் வைதேஹி,
இங்கு தான் சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரன் , புரந்தரன் வந்தான்.
இந்த தேசத்தில் தான் பெருத்த உருவம் கொண்ட விராதனை நான் கொன்றேன்.

இங்கு பார், மற்ற தபஸ்விகளின் இருப்பிடங்களும் தெரிகின்றன.
சூரிய, வைஸ்வானரர்களுக்கு இணையான தவ வலிமை மிக்க அத்ரியையும் இங்கு தான் சந்தித்தோம்.
இங்கு தான் சீதே, நீ தபஸ்வினியான அத்ரி முனிவரின் பத்னியைக் கண்டாய்.
இதோ, பார். சித்ரகூட மலை. தெளிவாக தெரிகிறது பார். அதன் மலைச் சாரல்களே அழகு.
இங்கு தான் பரதன் என்னை திருப்பி அழைத்துச் செல்ல வந்தான்.

இதோ பார், யமுனை நதி. கரையில் அழகிய காடுகளுடன், பரத்வாஜாஸ்ரமமும் இங்கு தான் இருந்தது.
அவரும் இங்கு தான் இருப்பார். இதோ பார், யமுனை நதியும், அதன் கரையில் அடர்ந்த காடுகளும் தெரிகின்றன.
பரத்வாஜாஸ்ரமம் இங்கு இருப்பதால் எங்கும் வளமாகத் தெரிகின்றன.
த்ரிபத2கா3 எனும் கங்கை நதியைப் பார். பக்ஷிகள் பலவிதமாக வந்து விளையாட, புஷ்பங்களும் நிறைந்து
வனங்களுடன் தெரிகிறது. இது தான் ஸ்ருங்கிபேர புரம். குகன் வந்து நம்மைக் கண்டது இந்த இடத்தில் தான். சரயூ நதி செல்கிறது.

பார்த்தாயா. இங்கும் பல விதமாக மரங்கள், பூத்துக் குலுங்கும் மலர்களுடன் காணப்படுகின்றன.
இதோ என் தந்தையின் ராஜதானியான அயோத்தியை நெருங்கி விட்டோம். இதோ பார்,
இந்த அயோத்தியை வணங்கு. வைதேஹி, நல்லபடியாக திரும்பி வந்து இதைக் காண்கிறோமே,
இதன் பின் வானரங்களும், விபீஷண ராக்ஷஸனும் எட்டி எட்டி பார்த்து அயோத்தியை கண்டு மகிழ்ந்தனர்.

சுபமாக காட்சி தந்த அயோத்தி மா நகரம் வரிசையாக வெண் நிற மாளிகைகளைக் கொண்டதும்,
அதுவே மாலை போல விளங்க, விசாலமான அறைகளில் யானைகளும், குதிரைகளும் நிறைந்து சப்தமாக இருக்க,
மகேந்திரனுடைய அமராவதி போன்ற அயோத்யா நகரை வானரங்கள் கண்டனர்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: