Archive for February, 2021

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஆறாம் அம்சம்—-

February 28, 2021

1. கலியுக தர்மம்
2. கலியின் குணபாவம்
3. நைமித்திகப் பிரளயம்-
4. பிராகிருதப் பிரளயம்
5. ஆத்யந்திகப் பிரளயம்
6. கேசித்வஜ-காண்டிக்ய விவாதம்-
7. யோக வழி-
8. நூற் பயன்-

————

1. கலியுக தர்மம்

மைத்ரேய முனிவர், பராசர மகரிஷியை நோக்கி, குரு நாதரே! உலக சிருஷ்டியையும் வமிசங்களையும் மனுவந்திரங்களின் நிலைகளையும் எனக்கு விளக்கமாகக் கூறினீர்கள். இனி கற்பத்தின் முடிவில் மகாப் பிரளயம் என்ற பெயரைக் கொண்ட சங்காரத்தைப் பற்றியும் தாங்கள் கூறவேண்டும்! என்று கேட்டார். கற்பாந்தத்திலும் பிராகிருதத்திலும் பிரளயம் உண்டாகும் விதத்தைச் சொல்கிறேன்; கேளுங்கள். நம்முடைய மாதம் பிதுர்க்களுக்கு ஒரு நாளாகும். நமது வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் சதுர்முகப் பிரம்மனுக்கு ஒருநாள் சதுர்யுகம் என்பது கிருதயுகம். திரேதயுகம் துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களும் தேவமானத்தினால் பன்னீராயிரம் ஆண்டுகளாகும். மைத்ரேயரே! கற்பத்தின் ஆதியான கிருத யுகத்தையும் முடிவான கலியுகத்தையும் தவிர மற்றையச் சதுர் யுகங்கள் யாவும் சமானமானவையே ஆகும். ஆதி கிருத யுகத்திலே பிரம்மா எப்படிப் படைக்கிறாரோ அதுபோலவே கடைசியான கலியுகத்திலே சங்காரஞ் செய்கிறார் என்று பராசரர் சொல்லி வரும்போது மைத்ரேயர் மற்றொரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்பி, ஓ குருநாதா! நான்கு பாதங்களால் நடக்கும் தன்மையுடைய தருமம் அழிந்துவிடத் தக்கதான கலியுகத்தின் சொரூபத்தை நன்றாக விளக்கிக் கூறவேண்டும். என்று கேட்டார். பராசர மகரிஷி கூறலானார்.
மைத்ரேயரே! கலியினுடைய ஸ்வரூபத்தை விவரமாகச் சொல்கிறேன். கேளும் கலியுகத்தில் மனிதரிடத்தில் வர்ணாசிரம ஆசார நடவடிக்கைகள் இராது. அதில்லாததால், ரிக், யஜுர், சாமம் என்ற வேதங்களில் சொல்லப்பட்ட யாகாதி கிரியைகளும் இராது. கலி காலத்தில் தர்மமான திருமணங்கள் நடைபெறாது. குரு மாணவ முறையும் இராது தம்பதிகள் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் முறைமையும் தர்மமும் இராது. அக்கினியில் செய்யத்தக்க வேத வேள்வி முறைகளும் இல்லை. எந்தக் குலத்தவனாயினும் பலசாலி எவனோ, அவனே எல்லோருக்கும் அரசனாவான். எல்லா ஜாதிகளிலேயும் பொருள் உள்ளவனே கன்னிகாதானம் செய்யத் தகுதியுடைய வனாவானேயன்றி, கல்வி ஒழுக்கங்கள் உடையவன் அத்தகுதியுடையவனாக மாட்டான். பிராமணன் எந்த வழியினாலும் தீக்ஷிதனாவானே தவிர சாஸ்திர விதிப்படியாவதில்லை. கலியில் விதிக்கப்பட்டதே பிராயச்சித்தம் என்பதில்லை. எந்தக் கிரியையும் பிராயச்சித்தமாக ஏற்கப்பட்டு விடும் எவனுக்கு எந்த வாக்கியம் பிரியமோ, அதுவே சாஸ்திரமாகும். காளி முதலான எதுவுமே தெய்வமாகக் கொண்டாடப்படும். இன்னோருக்கு இன்ன ஆசிரமம் என்பதிராது. எவனும் எந்த ஆசிரமத்திலும் பிரவேசிப்பான் ஒருவன் தான் விரும்புவது போலப் பட்டினி கிடப்பதும், வருந்துவதும் தவஞ்செய்வதும் சாஸ்திர ரீதியான தருமமாகக் கருதப்படும். அந்தப் பொருள் இருந்தாலும், தான் தனவான், என்ற செல்வ செறுக்கு ஜனங்களுக்கு உண்டாகும். அதுபோலவே, பெண்களுக்குக் கூந்தல் செவ்வையாக இருந்தாலே அழகி என்ற கர்வம் உண்டாகிவிடும். கலியானது முற்ற முற்றப் பொன்னும் மணியும் நல்லவிதமான ஆடைகளும் அழிந்து போகும்போது, மங்கையர்கள் தங்கள் கூந்தலையே அலங்காரமாகப் பெற்றிருப்பார்கள். மேலும் மங்கையர்கள் பொருளில்லாத கணவனை விட்டு, எவனாயினும் பொருளுடையவனாக இருந்தால் அவனையே புருஷனாகத் தேடிக் கொள்வார்கள். எவன் அதிகமாகப்பொருள் கொடுப்பானோ, அவனையே ஜனங்கள் சுவாமி என்று கொள்வார்களே அன்றி, நற்குலம், நற்பிறவி முதலியவற்றைச் சுவாமி என்பதற்கு ஏதுவாகக் கொள்ள மாட்டார்கள். கலியுகத்திலே புத்திக்குப் பயன் பொருள் சம்பாதிப்பதேயன்றி, ஆன்ம ஞானம் பயனாகக் கொள்ளப்படமாட்டாது. அந்தப் பொருளும் வீடுகட்டப் பயன்படுமேயல்லாது. யாகாதி காரியங்களுக்குப் பயன்படாது. அந்த வீடும் தனது போகத்துக்கே பயன்படுமேயன்றி அதிதிகளுக்கு எவ்வளவும் பயன்படாது. மங்கையர் சளுக்கனாக இருப்பவனிடத்தில் காதல் கொண்டு உடலாலோ மனதாலோ விபசாரிகளாக இருப்பார்கள். ஆடவரோ அநியாயத்தாலாவது பணஞ் சம்பாதிப்பவரிடத்திலேயே மனம் வைத்திருப்பார்கள். எவர்களும் நண்பர்கள் வேண்டிக் கொண்டாலும் மனம் இரங்காமல், தங்கள் காரியத்தையே பெரிதாக நினைத்து அரைக்கால் பணத்திலும் ஆசை வைத்திருப்பார்கள். சூத்திராதிகள், பிராமணரைத் தம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக நினைப்பார்களேயல்லாமல், சிறப்புடையவராக நினைக்க மாட்டார்கள்.
பசு மாடுகளிலும் ஜனங்களுக்குப் பால் கொடுப்பது பற்றியே உயர்வானதாகக் கருதப்படுமேயன்றி அதன் ஜாதியைப் பற்றிப் பெருமை பெறாது. இக்கொடிய காலத்தில் ஜனங்கள் யாவரும் மழையில்லாமையைப் பற்றிய அச்சமுடையவர்களாய்ப் பசிக்குப் பயந்தும், சோர்ந்தும் வானத்திலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பார்கள். மனிதர்கள் தவமுனிவர்களைப்போலக் காய் கிழங்குகளைப் புசித்துக் கொண்டு மழையில்லாமை முதலியவற்றால் வருந்தித் தம்மைத் தாமே கொலை செய்து கொள்வார்கள். கலிகாலத்தார், சுகம், உல்லாசம் அற்றவராய், திரவியம் க்ஷீணித்தவராய், எப்போதும் பஞ்சத்திலும் துன்பத்திலுமே தவிப்பார்கள். கலி வளர வளர, எவரும் அக்கினி பூஜை, தேவபூஜை, அதிதிபூஜை, பிண்டோதக தானரூபமான பிருது பூஜை முதலியவற்றைச் செய்யாமல், குளிக்காமலுங்கூட உணவருந்திக் காலம் கழிப்பார்கள். ஸ்திரீகள் அதிக ஆசையும் குறுகிய உடலும் கொண்டு பேருண்டி அருந்தி பல பிள்ளைகளைப் பெற்று, செல்வமின்றி வருந்துவார்கள்; மேலும் இரண்டு கைகளாலும் தலையைச் சொறிந்து கொண்டே, கணவன்; மாமனார்; மாமியார் முதலியோரின் கட்டளையை மிகவும் அலட்சியமாய் அவமதித்து வருவார்கள். தேக சுத்தமில்லாமல், தங்களைப் போஷிப்பதிலேயே மனம் ஊன்றி, ஈனமான எண்ணத்துடன் கடினமாயும் பொய்யாயும் பேசுபவர்களாக இருப்பார்கள். குலமங்கையர் தாங்கள் தீய ஒழுக்கமுடையவராகையால், அத்தகையோரிடம் நட்புக் கொண்டு, தங்கள் புருஷனுக்குப் பலவகையான தீமைகளைச் செய்து வருவார்கள். பிரமசாரிகள், விரத அனுஷ்டானம் இன்றியே வேத அத்தியயனஞ் செய்வார்கள். இல்லறத்தானோ, சிறிதும் ஓமஞ் செய்யாதிருப்பதோடு தக்க பொருள்களையும் ஈயார்கள் வானப் பிரஸ்தர், ஊரில் உள்ளவற்றையே புசித்து வருவார்கள். ஆட்சியாளர்கள், மக்களைப் பரிபாலஞ் செய்வதை முக்கியமாக எண்ணாமல் அந்த வரி இந்த வரி என்று எதையாவது சாக்கிட்டு குடிமக்களின் பொருள்களைப் பறிப்போர்கள். எவன் யானை, குதிரை முதலிய சேனைகளை வைத்திருக்கிறானோ, அவனவனே அரசனாவான். பலமற்றவன் சேவகனாவான்.
வைசியர்கள், பயிர் செய்தல், வாணிபஞ் செய்தல் முதலிய தமது தொழிலைவிட்டு, சூத்திரரது தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள், சூத்திரரோ தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள். சூத்திரரோ சந்நியாசியின் சின்னங்களை அணிந்து, பிøக்ஷ வாங்கி உண்டு அநேகர் தங்களைப் பூசிக்கும் படியான போலிப் பிழைப்பில் ஜீவிப்பார்கள். மக்கள் பஞ்சத்திலும், வரி இறுத்தலாலும் துன்பமடைந்து கோதுமை, யவம் விளையும் நீசத்தேசங்களுக்குப் போய் விடுவார்கள். இவ்விதமாக வர்ணாசிரம தர்மங்கள் கெட்டுப்போய் வேத மார்க்கமே மறைந்து போவதால், மக்கள் பாஷாண்ட மதங்களைப் பின்பற்றி விடுவார்கள், இதனால் அதர்மம் விருத்தியாகும். அதனால் மக்கள் அதர்மமாக நடக்கத் துவங்கிவிடுவார்கள். அதனால் அதர்மம் வளர்ந்து, மக்களின் ஆயுள் அற்பமாய்விடும்; ஆட்சியாளரின் குற்றத்தால், மக்கள் சாஸ்திரங்களுக்கு விரோதமான வீணான தவங்களைச் செய்வார்கள். ஆகையால் இளமையிலேயே மரணமுண்டாகும். பெண்கள் ஆறு ஏழு வயதுக்குள்ளாகவே பிள்ளைகளைப் பெறுவார்கள். ஆண்களோ ஒன்பது பத்து வயதிற்குள் பிள்ளையை உண்டாக்கும் திறமையுடைவர்களாக இருப்பார்கள். பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே நரை திரை முதலியன உண்டாகும். இந்தக் கலியின் முதிர்ச்சியில் மக்கள் இருபது வயதுக்குமேல் பிழைத்திருப்பதில்லை கலியுகத்தில் மக்கள் அற்ப ஞானமுடையவர்களாகவும் வீணான தவவேடங்களைப் பூண்டு கெட்ட நினைப்புக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் விரைவில் நசித்துப் போவார்கள்.
மைத்ரேயரே! தருமம் எத்தனைக்கெத்தனை இழிவானதாகிறதோ, அத்தனைக்கத்தனை கலி விருத்தியாயிற்று என்று புத்திசாலிகள் தெரிந்து கொள்வார்கள். மேலும் எப்போது பாஷாண்டர் அதிகமாகின்றனரோ, எப்போது வேதம் அறிந்த நல்ல மனிதனுக்குத் தீங்குகள் நேரிடுகின்றனவோ, அப்போது கலி முதிர்ந்துள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும். எப்போது யக்ஞங்களுக்கு ஈசுவரனான புரு÷ஷாத்தமனை மக்கள் யக்ஞங்களில் ஆராதிப்பதில்லையோ, எப்போது வேத வாக்கியங்களில் நாட்டமும் பிரீதியுமின்றி, பாஷாண்ட வாக்கியங்களில் இச்சை யுண்டாகுமோ அப்போது கலி மகாபலம் பொருந்தியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கலியுகத்தில் ஜனங்கள் பாஷாண்டரால் கெடுக்கப்பட்டு, படைப்புக் கர்த்தாவாகவும் சர்வேசுவரனாகவும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள் மேலும் மக்கள் பாஷாண்டபுத்தியால் தேவதைகள் எதற்கு? வேதங்கள் ஏன்? பிராமணரால் ஆவதென்னதண்ணீர் விட்டுக்கழுவுவதால் மட்டும் என்ன சுத்தம்? என்று ஏதேதோ பிதற்றுவார்கள். இத்தகைய அதர்மங்களாலேயே, மேகங்கள் அற்பமழையைப் பொழியும், பயிர்கள் அற்பமாகவே பலனளிக்கும். பொருள்கள் சாரங் குறைந்திருக்கும். ஆடைகள் சணற்கோணிகள் போலிருக்கும். மரங்கள், வன்னி மரங்களைப்போல அற்பமாகவே இருக்கும். ஜாதிகள் எல்லாமே சூத்திர ஜாதி போலிருக்கும். மேலும் தானியங்கள் அணுக்கள் போலவும் பால், நெய் போலவும் சந்தனப் பூச்செல்லாம் கோரைக் கிழங்குப் பூச்சைப் போலவும் ஆகிவிடும். முனிவரே! கலியுகத்தில் மக்களுக்கு மாமனார், மைத்துனர், மாமியார், ஆசாரியர், பெண்டாட்டிகள் வேண்டுமளவு தொகையுடையவராக இருப்பார்கள். மேலும் ஜனங்கள் தாய் தந்தையரிடத்தில் அன்பில்லாதவர்களாய் மாமியார் மாமனார்களையே முக்கியமான நினைத்து, தாய் யார்? தகப்பன் யார்? யாருக்கு யார்? அவனவன் தத்தனது கர்மத்தையல்லவோ செய்யவேண்டும்! என்று பேசி வருவார்கள். இந்தக் கலியுகத்தில், மக்கள் அற்பப் புத்தியுடனும் மனம், வாக்கு காயம் ஆகிய மூன்றும் சுத்தமில்லாமல் தினந்தோறும் பாவத்தையே செய்து வருவார்கள். உண்மையில்லாதவர்களாகவும் சவுசம் இல்லாதவர்களாகவும் வெட்கமில்லாதவர்களாகவும், துக்கப்பட்டுத் தவிப்பார்கள். இத்தகைய கலிபலத்தினால் உலகமானது, வேதாத்தியயனம் யாகம், பிதுர்பூஜை, தேவ பூஜை இவைகளினின்று, தருமத்தை ஒளியச் செய்யும் இத்தகைய கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு முயற்சி செய்வானாகில், அவன் கிருத யுகத்தில், பெருந்தவஞ் செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ, அவ்வளவு புண்ணியத்தை எளிதில் அடைவான்!

——————-

2. கலியின் குணபாவம்

மைத்ரேயரே! மாபெரும் அறிஞரான வேத வியாசரும் கலி விஷயத்தில் ஒரு விசேஷத்தைச் சொல்லியிருக்கிறார். அதையும் நான் உமக்குச் சொல்கிறேன்; கேளும்.
ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண்ணிய வாதம் உண்டாயிற்று. அதாவது எந்தக்காலத்தில், கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும்? எவர் எப்படிப்பட்ட தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்? என்பதே அவர்களது விவாதமாகிவிட்டது. எனவே இந்த விஷயத்தைப் பற்றி சந்தேகம் நீங்கி, உண்மையை அறிந்து கொள்வதற்காக, முனிவர்கள் அனைவரும் வேத வியாச மகரிஷியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்கள். அப்போது என் மகனான வேதவியாசர், கங்கை நதியிலே நீராடிக் கொண்டிருந்தார்; அதனால் அந்த முனிவர்கள் அவர் நீராடிவிட்டு வரும் வரையில் அவரை எதிர்பார்த்துக் கொண்டு கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர். அப்போது கங்கா தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த என் குமாரர் முழுக்கிலிருந்து எழுந்து சூத்திரன் ஸாது; கலி ஸாது என்று அந்தச் சந்தேகம் தெளிவு பெற அவரைத் தேடிவந்த முனிவர்களின் காதுகளில் கேட்கும்படிச் சொல்லிவிட்டு, மீண்டும் நீரில் மூழ்கினார். பிறகு அவர் எழுந்து, ஸாது ஸாது சூத்திரா! நீ மஹா புண்ணியவானாக இருக்கிறாய்? என்று சொன்னார். மறுபடியும் மூழ்கியெழுந்த அவ்வியாசமுனிவர் பெண்களே புண்ணியவதிகள்! அவர்களைவிடப் புண்ணியமுடையவர்கள் யார்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு அவர் நன்றாக மூழ்கிக் குளித்து நீராடிவிட்டு, ஆசமனாதி சகல அனுஷ்டானங்களையும் செய்துவிட்டு, வீற்றிருந்தார். சந்தேகம் தெளிவுபெற என் மகனைத் தேடி வந்த முனிவர்கள், வேத வியாசரை வணங்கி, நின்றனர். அவர்களை வேத வியாசர் உட்காரச் சொல்லி நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் சுவாமி! நாங்கள் ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவே, உங்களைத் தேடி வந்தோம். அது இருக்கட்டும் கலி ஸாது சூத்திரன் ஸாது; பெண்கள் புண்ணியவதிகள் என்று நீங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே நீரில் மூழ்கி எழுந்தீர்களே? அதைப்பற்றி நாங்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்! மறைக்க வேண்டாத பக்ஷத்தில், அதை எங்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். பிறகு நாங்கள் எண்ணி வந்ததைப் பற்றித் தங்களைக் கேட்டு தெரிந்து கொள்கிறோம் என்றார்கள்.
வேத வியாசர் புன்னகை செய்தவண்ணம் அவர்களுக்குக் கூறலானார்; ஓ தவ முனிவர்களே! ஸாது; ஸாது என்று எதனால் சொன்னானோ அதைச் சொல்கிறேன் கேளுங்கள். எந்தப் புண்ணியத்தைத் கிருத யுகத்திலே செய்தால் அது பத்து ஆண்டுகளில் சித்திக்குமோ அதுவே திரேதா யுகத்தில் ஒரே ஆண்டில் சித்திக்கும். அதுவே துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் சித்திக்கும். கலியுகத்திலோ ஒரே நாளில் பயன் வந்துவிடும். இது போலவே தவம், பிரமசரியம், ஜபம் முதலிய எதற்கும் உரிய பயனை மனிதன் மூன்று யுகங்களிலும் பெறுவதிலும் மிகவும் எளிதாகப் பெறுவதாலேயே, கலி ஸாது என்று சொன்னேன். இன்னும் கேளுங்கள். கிருத யுகத்தில் யோக நிஷ்டையிலிருந்து தியானஞ் செய்வதனாலும் திரேதா யுகத்தில் யாகஞ் செய்வதனாலும், துவாபர யுகத்தில் அர்ச்சிப்பதனாலும் எந்தப் பயன் உண்டாகுமோ, அது கலியுகத்தில் கேசவனுடைய நாம சங்கீர்த்தனஞ் செய்வதாலேயே கிடைத்துவிடும். தருமம் அறிந்த தவத்தோரே! மனிதன். இந்தக் கலியுகத்தில் சிறிதளவு சிரமத்தினாலேயே பெரும் அளவு தருமத்தை அடைவானாதலால், கலியை நான் கொண்டாடுகிறேன். இனி, சூத்திரன் ஸாது என்று நான் சொன்னதை விளக்கமாகச் சொல்கிறேன். பிராமணாதிகள் விரதம் அனுஷ்டானங்களில் தவறாமல் இருந்துகொண்டு முதலாவதாக வேதங்களை ஓதவேண்டும். பிறகு தரும வழியால் சம்பாதித்த பொருளைக் கொண்டு, யாகங்களை விதிப்படிச் செய்யவேண்டும். பிராமணாதியருக்குப் பகவானைப் பற்றிய பேச்சுக்களைத் தவிர வீண் பேச்சுக்கள் பேசுவதும், எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்காத அன்னாதிகளைப் புசிப்பதும் டம்பத்துக்கும் லாபத்துக்கும் யாகங்களைச் செய்வதும் பாதகமாகும். ஆகையால் அவர்கள் எப்போதும் மனம், வாக்கு, காயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இரு பிறப்பாளருக்கு எதையும் விதிப்படிச் செய்யாமற் போனால் அது குற்றமாகும்.
போஜனாதிகளைக்கூட இஷ்டப்படிச் செய்யவொண்ணாமல் விதிப்படிச் செய்ய வேண்டியவையாக இருப்பதால், யாவுமே அவர்களுக்கு பராதீனமானவை அதனால் அவர்கள் எதையும் மிகவும் வருந்தித் தாங்களடைய வேண்டிய உலகங்களை ஜெயிக்கவேண்டும். சூத்திரனோ வேத அத்தியயனம். அக்கினி, யக்ஞம் முதலியவைகளின்றி, பாக யக்ஞாதிகாரமுடையவனாய் முந்திய பிராணா நியருக்குப் பணிவிடை செய்வதனாலேயே அத்தகைய உத்தம உலகங்களை அடைந்துவிட முடிகிறது. ஆகையால் அவனைவிடப் புண்ணியவான் யார் உண்டு? ஓ முனிவர்களே, சூத்திரனுக்கு இன்னது உண்ணத் தக்கது. இன்னது தின்னத் தகாதது. இது குடிக்கத் தக்கது. இது குடிக்கத் தகாதது என்ற நியமம் இல்லாமையால், சூத்திரன் ஸாது என்று நான் சொன்னேன், ஆடவர்கள் தத்தமக்குரிய தருமத்தினால் பொருள் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பொருளை நல்லவைகளுக்குச் செலவு செய்யவேண்டும். நல்லவர்களுக்குச் செலவு செய்ய வேண்டும். இவ்விதமாகப் பொருளை ஈட்டுவதிலும் அதைச் சம்பாதிப்பதிலும், எத்தனைப் பிரயாசைகள் இருக்கின்றன பாருங்கள். இதை நல்ல வழியில் செலவழிப்பதிலோ, இரட்டிப்புச் சிரமம் இருக்கிறது. இவ்விதமான பலவகைக் கிலேசங்களினால் ஆடவர்கள் பிரஜாபத்தியம் முதலிய உலகங்களை வெல்கிறார்கள். பெண்களோ மனோவாக்குக் காயங்களினாலே தம் கணவர்களுக்கு அநுகூலமாக இருந்துகொண்டு சிசுருஷைகளைச் செய்து வந்தாலே கணவன் அடையும் உலகங்களை எளிதில் அடைந்து விடுகிறார்கள். இவ்விதம் அதிகச் சிரமம் இல்லாமல் வருந்திப் பெறும் உலகங்களைப் பெறுவதால், மூன்றாவதாக பெண்கள் ஸாதுக்கள் என்றேன். பிராமண உத்தமர்களே! நீங்கள் கேட்டபடி நான் சொன்னவற்றுக்குக் காரணங்களைச் சொன்னேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்ல வேண்டும். அதற்கும் நான் பதில் சொல்கிறேன் என்றார் வியாசர்.
முனி சிரேஷ்டரே! நாங்கள் கேட்க வந்த சந்தேகங்கள் இப்போது நீங்கள் கூறிய விளக்கவுரைகளிலேயே அடங்கியுள்ளன, இனி நாங்கள் கேட்க வேண்டியவை வேறில்லை என்றார்கள் முனிவர்கள். பிறகு, அந்தக் கிருஷ்ணதுவைபாயனர் சிரித்து, நான் திவ்விய ஞானத்தால் உங்கள் காரியத்தை அறிந்து அதைக் குறித்துத்தான் கலி ஸாது, சூத்திரன் ஸாது ஸ்திரீகள் ஸாதுக்கள் என்று சொன்னேன். அற்ப முயற்சியிலேயே கலியில் தருமம் பலிக்கிறது. தயை சாந்தி முதலிய ஆன்மீக குணங்களாகிய தண்ணீர்களினால் அவர்கள் பாவங்களாகிய மலங்களைக் கழுவிக் கொள்கிறார்கள். சூத்திரர் பிராமணாதியருக்குப் பணிவிடை செய்வதினாலேயே பேறுபெறுகின்றனர். பெண்டிரும் கணவருக்குப் பணிவிடை செய்து, ஆயாசம் இல்லாமலேயே நற்கதியை அடைகிறார்கள்; ஆகையால் இந்த மூவரும் புண்ணியசாலிகள் என்பது என் கருத்து. கிருத யுகாதி காலங்களிலும், அந்தணர் முதலியோருக்குத் தர்மம் சம்பாதிப்பதில் பெரிய ஆயாசமுள்ளது. இதைப்பற்றி நான் பேசியதில் உங்கள் சந்தேகம் தீர்ந்தது அல்லவா? இனி நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என்ன? என்று கேட்க, அவர்கள் சந்தேகம் நீங்கிய மகிழ்ச்சியோடு அவரை வணங்கி, விடைபெற்றுச் சென்றார்கள். மைத்ரேயரே! இந்த இரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். மிகவும் துஷ்டனான கலிபுருஷனுக்கு இத்தகைய பெருங்குணமும் இருக்கிறது. நீங்கள் முதலில் லோக சம்ஹாரத்தைப் பற்றி என்னைக் கேட்டீரல்லவா? பிராகிருதம், அவாந்தரம் என்று பிரிந்திருக்கிற அந்தப் பிரளயக் கிரமத்தை இனி உமக்குச் சொல்கிறேன் கேளும்.

———————

3. நைமித்திகப் பிரளயம்-

எல்லாப் பூதங்களுக்கும் பிரளயம் மூன்று விதம். அவையாவன; நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என்பனவாம். கல்பத்தின் முடிவில் பிரம்மனால் உண்டாகும் பிரளயம் நைமித்திகம். பரம் பொருள் பிரமாணமான விரிஞ்சனுடைய ஆயுளின் முடிவில் வரும் பிரளயம் பிராகிருதம் மோக்ஷமே ஆத்தியந்திகம் எனப்படும். என்று பராசர முனிவர் கூறியதும் மைத்ரேயர், சுவாமி! பிராகிருதப் பிரளயத்தை அறிந்துகொள்வதற்காக பரார்த்தத்தை இரட்டிக்கவேண்டும் ஒழிய, அந்தப் பரார்த்தம் என்ற கணக்கை அடியேனுக்குத் தெரிவிக்க வேண்டும், என்றார். பராசர மகரிஷி கூறலானார்.
கேளும் பிராமணரே! ஏகஸ்தானம் முதல் ஒன்றுக்கு ஒன்று பதின்மடங்கு அதிகமாய் மேலுக்கு மேல் ஸ்தானங்கள் உண்டன்றோ? அவற்றில் பதினெட்டாவது இடமே பரார்த்தம் என்று வழங்கப்படுகிறது. அந்த பரார்த்தம் இரட்டித்த காலத்தில் பிராகிருதப் பிரளயம் உண்டாகும். இப்பொழுது வியக்தம் யாவும் அவியக்தத்தில் லயப்பட்டு விடும். மனிதருக்கு நிமிஷம் என்று எதுவுண்டோ, ஒரு மாத்திரை அளவுள்ளதது. ஆகையால் அது மாத்திரை என்று சொல்லப்படும். அந்த மாத்திரைகள் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை. முப்பது காஷ்டைகள் ஒருகலை. பதினைந்து கலைகள் ஒரு நாழிகை. அது பன்னிரண்டரை பல நிரையுள்ள தண்ணீரால் குறிக்கப்படும். இது மகத தேசத்தில் ஒருபடி நீரளவாம். இதை அறியும் முறையைக் கேளும். இருபது குன்றி மணி எடையுள்ள பொன்னால் நான்கு அங்குல அளவாகச் செய்த ஊசிகளைக் கொண்டு துளையிடப்பட்ட மகத தேசத்துப் படியளவான ஒரு பாத்திரத்தைத் தண்ணீரில் மூழ்த்தினால், அந்தப்பாத்திரம் எவ்வளவு காலத்தில் தண்ணீர் நிறையுமோ அத்தனைக்காலம் ஒரு நாழிகை என்று எண்ணப்படும் அல்லது, அந்தப்பாத்திரத்தில் விட்ட தண்ணீர் அதிலிருந்து வெளிப்படும் காலம் ஒரு நாழிகையாகும். இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம். முப்பது முகூர்த்தம் ஒரு நாள் முப்பது நாள் ஒரு மாதம். பன்னிரண்டு மாதம் ஒரு வருடம் இந்த வருஷம் தேவர்களுக்கு ஒரு இராப்பகல் இத்தகைய இராப் பகல்கள் முந்நூற்றறுபது சேர, தேவமானத்தில் ஒரு வருஷமாம் அந்தவருஷம் பன்னீராயிரம் சேர்ந்தால் ஒரு சதுர்யுகமாகும். அந்தச் சதுர்யுகங்கள் ஆயிரம் ஆயின் சதுர்முகனுக்கு ஒரு தினம். அதற்குத்தான் கல்பம் என்றுபெயர். அதன் இறுதியில் வருவதுதான் பிரமசம்பந்தமான நைமித்திகப் பிரளயமாகும் மைத்ரேயரே! அதி உக்கிரமான அந்தப் பிரளயத்தின் சொரூபத்தை முன்னதாகச் சொல்லுகிறேன். பிறகு நைமித்திக பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
ஆயிரம் சதுர்யுகத்தின் முடிவில் பஞ்சம் முதலிய காரணங்களாய், பூலோகம் பெரும்பாலும் க்ஷீணித்திருக்கும்போது, மிகவும் கொடுமையாய் நூற்றாண்டு அளவு மழையே இல்லாமல் இருக்கும். அதனால் அற்ப சக்தியுள்ள ஜந்துக்கள் யாவும் மடிந்து போய்விடும். பிறகு ஸ்ரீவிஷ்ணு பகவான் சங்காரத்துக்காக உருத்திர ரூபம் தரித்தவராய் சகல பிராணிகளையும் தம்மில் லயிக்கும்படிச் செய்யும் திருவுளம் பற்றிச் சூரியனது ஏழு கிரணங்களிலிருந்து கொண்டு சகல ஜலங்களையும் பானஞ்செய்வார். இவ்விதமாகப் பிராணிகளாலும் பூமியிலும் உள்ள தண்ணீரை யெல்லாம் உறிஞ்சிப் பூமியையெல்லாம் வறளச் செய்வார். இவ்வாறு சமுத்திரங்கள், நதிகள் அருவிகள் முதலியவற்றின் தண்ணீரை யெல்லாம் அருந்தியதால் சூரிய கிரணங்கள் ஏழும் மிகவும் பெரிதாகி, ஏழு சூரியர்களாகிக் கீழும் மேலும் ஜொலித்துப் பாதாளங்கள் உட்பட மூன்று உலகங்களையும் எரித்துவிடும். இந்த ஏழு சூரியர்களாலும் எரிக்கப்படவே இந்த பூமியானது மலைகள் கடல்கள் முதலிய எவ்விடத்திலும் ஈரப் பசையென்பதேயில்லாமல் மரஞ்செடி புல் பூண்டு முதலிய யாவும் எரிந்துபோய் ஆமையோடு போலாகிவிடும். பிறகு ஆதிசேடனின் சுவாசத்திலிருந்து உண்டானகாலாக்கினியானது ருத்திரனாகிப் பாதளங்களையெல்லாம் தகித்துக் கொண்டே, பூமிக்கும் வந்து அதையும் கொளுத்திவிடும். இவ்விதமாக அந்தப் பிரளயகாலாக்கினி ஜ்வாலா சக்கரத்தோடு கூடியதாய் புவர்லோக, சுவர்லோகங்களையும் கொளுத்திக் கொண்டே, அங்கேயே சுழன்று கொண்டேயிருக்கும். அப்போது அதன் ஜ்வாலைகளால் சூழபட்ட மூவுலகமும் சராசரங்கள் நசித்ததாய் வறுக்கிற சட்டியைப்போல இருக்கும்.
பிறகு அதிகார புருஷர்களாய், புவர்லோக சுவர்லோகங்களிலிருக்கிற மனுவாதிகள் மகாதாபத்தோடு மகர்லோகஞ் செல்வார்கள். பிறகு அங்கும் பெருந்தாபமடைந்து அவ்வுலகத்தாருடன் கூட, அதற்கும் மேலான ஜனலோகத்தை அடைவார்கள். அவர்களுக்குள்ளே யார் பரப்பிரமத்தையடையநின்றவர்களோ, அத்தகையோர் மேலும் கீழும் பத்துத்தரம் சுற்றிச் சுழன்று தவலோக சத்தியலோகங்களிற் சென்று, கடைசியாகப் பரப்பிரமத்தை அடைவார்கள். பூவுலகம் முதலிய மூவுலகங்களிலுமுள்ள மற்றவர் யாரும் ஆன்மாவில் லயப்படுவார்கள். இவ்விதமாக ருத்திர ரூபியாக இருக்கிற ஸ்ரீஜனார்த்தனர்யாவற்றையும் தகித்து தம் சுவாசத்தினின்றும் அநேக மேகங்களை உண்டாக்குவார். அதனால் யானைகளின் கூட்டத்தைப் போன்று மகாபயங்கரமான இடி மின்னல்களுடன் கூடிய பிரளயகால மேகங்கள் கவியலாகும். அவற்றில் சில கருநெய்தல் மலர் போன்றும், சில ஆம்பல்களைப் போலும்; சில கருஞ்சிவப்பாகவும் சில பொன்னிறமாயு சில கழுதை நிறமாயும், சில அரக்கு வர்ணமாயும் சில வைடூரியம் போன்றும்; சில இந்திர நீலத்துக்கு ஒப்பாயும், சில சங்கு முல்லை போலவும் சில மை நிறமாயும், சில தம்பலப் பூச்சிகள் போன்றும் வேறு சில நெருப்புப் போன்றும், சில மனோசிலை போன்றும் சில கூந்தற்பனை போன்றும் விளங்கும். அத்தகைய மாபெரும் மேகங்களின் உருவங்களில் சில பெரிய நகரங்களைப் போலவும், சில மலைகளைப் போலவும் சில தரைக்குச் சமானமாயும் இருக்கும். இத்தகைய மகாமேகங்கள் பயங்கரமாக முழங்கிக் கொண்டு; வான முழுதும் பரவி; பெருந்தாரைகளைப் பொழிந்த வண்ணம் முன்பு சொன்னதுபோல், மூன்று உலகங்களிலும் பற்றிஎரிகின்ற பெருந்தீயை அவிக்கும் அந்தத்தீயானது அவிந்த பிறகும் அம்மேகங்கள் இராப் பகல்கள் ஓயாமல் மழையைப் பொழிந்து அந்தப் பெருந்தாரைகளினாலே பூமி முழுவதையும் ஜலமயமாக்கிப் பின்பு புவர்லோகத்தையும் அப்படியே ஜலமயமாக்கி விடும். இதுபோல் அப்பெரு மேகங்கள் ஸ்தாவர ஜங்கமங்கள்யாவும் அற்று அந்தகாரஞ் சூழ்ந்த உலகில் ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பெருமழையை ஓயாமல் பொழிந்து கொண்டேயிருக்கும். ஓ மைத்ரேயரே! நித்தியனாகவும் பரமாத்துமாவாகவும் இருக்கிற ஸ்ரீ வாசுதேவனுடைய மகிமையினால் கல்ப காலத்தின் முடிவில் இப்படியெல்லாம் நிகழ்கின்றன.

—————-

4. பிராகிருதப் பிரளயம்

மைத்ரேயரே! இவ்விதமாகப் பெருமழை பொழிந்து அந்தத் தண்ணீர்ப் பெருக்கானது சப்தரிஷி மண்டலத்தையும் கவர்ந்து நிற்பதால் மூன்று உலகங்களும் ஏகார்ணவமாகிவிடும். அப்போது ஸ்ரீமந் மகாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து ஒரு மூச்சுக் காற்று உண்டாகி, அந்தப் பெரிய மேகங்களையெல்லாம் நாசஞ்செய்து கொண்டு ஒரு நூற்றாண்டளவு வரை பெருங் காற்றாக வீசிக் கொண்டே இருக்கும். பின்னர் சர்வபூதமயனாகவும் நினைத்தற்கும் அரியனாயும் அனாதியாயும் பிரபஞ்சத்துக்கு ஆதியாயும் மகாப்பிரபுவாகவும் இருக்கும். ஸ்ரீஹரி பகவான் அந்தக் காற்றை அமுதுசெய்து பிரமரூபத்தோடு அந்த ஏகார்ணவத்தில், சேஷசயனத்தின்மீது ஜனலோகத்திலுள்ள சனக, சனந்தனர் முதலிய யோகிகளாலும், பிரம லோகத்திலுள்ள, முமூட்சுக்களாலும் தியானிக்கப்பட்டவராய் தமது மாயா ஸ்வரூபமான யோகநித்திரையைக் கைக்கொண்டு வாசுதேவன் என்ற திருநாமமுடன் தம்மையே சிந்தித்தவண்ணம் திருக்கண் வளர்ந்தருள்வார். ஸ்ரீஹரி பகவான் இவ்வாறு பிரம ரூபத்துடன் அந்தக் காலத்தில் துயில்கொள்ளும் காலம் நிமித்தமாக இருப்பதாலேயே, இவ்விதம் நடக்கும் பிரளயத்துக்கு நைமித்திகப் பிரளயம் என்று பெயர். சர்வாத்மாவான ஸ்ரீ அச்சுதன் எப்பொழுது திருக்கண் விழிப்பாரோ, அப்போது தான் இந்த உலகமும் அசைவுபெறும் யோகநித்திரை புரிவாராயின், உலகமும் கண்மூடிப்போம் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமுடைய பிரமதினம் எதுவோ; அவ்வளவு காலமே இரவுமாகும். இந்த இரவின் முடிவில் ஸ்ரீவிஷ்ணு துயில் நீங்கி விழித்துக்கொண்டு பிரமரூபத்தோடு மீண்டும் சிருஷ்டித்து அருளுகின்றான் என்று முன்பே நான் உமக்குச் சொன்னேன் அல்லவா? இந்தக் கல்பத்தின் முடிவில் செய்யும் சங்காரமே அவாந்தரப் பிரளயம் நைமித்திகப் பிரளயத்தைப் பற்றி சொன்னேன். இனிப் பிராகிருதப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.
முன்பு நான் சொன்னதுபோல அனாவிருஷ்டி முதலியவைகளால், சகல உலகங்களும் பாதாளங்களும் நாசமாகி மகத்தத்துவ முதல் விசேஷம் வரையில் உள்ள யாவும் நசிக்கும்படி எம்பெருமானின் சங்கல்பத்தால் பிரளயம் சம்பவிக்க முதலாவதாக நீரானது நிலத்தின் குணமான கந்தத்தைக் கிரகிக்கிறது. கந்தம் கிரகிக்கப்பட்டவுடன்; நிலமானது லயப்படத் தக்கதாகி கந்ததன் மாத்திரை நசித்து நீராகி விடுகிறது. அந்த நீர் பெருகி மகாவேகமும் மிக முழக்கமுங்கொண்டு, எல்லாவற்றையும் நிரப்பிக்கொண்டு அலைகளுடைய பிரவாகத்தோடு, உலகங்களின் முடிவு வரையில் ஓடி நிற்கும் அந்தத் தண்ணீரின் குணமான ரசத்தைச் சோதியானது கிரகிக்கும்போது அத்தண்ணீர் ரசதன்மாத்திரையற்று, சோதியாகின்றது, இவ்விதமாக நீரானது நெருப்பாகி மகாதேஜசு சூழ்ந்ததாக எங்கும் நிறைந்து வியாபகமாகின்றது. இவ்விதமாக எத்திசையும் ஜ்வாலமயமாய்ச் சூழ்ந்துள்ள அந்த அனலின் குணமாகிய ரூபத்தைக் காற்றானது கிரகித்துக் கொள்கின்றது. ரூபதன்மாத்திரை நசித்ததினால் அனல் அற்று, காற்று மிக அதிகமாக வீசத்துவங்கி ஒளி நீங்கி, காற்றுமட்டுப் பேரிரைச்சலுடன் வானத்தைபற்றி வீசிக்கொண்டிருக்க, அதன் குணமாகிய ஸ்பரிசத்தை வானமானது கிரகித்துக் கொள்கிறது. பிறகு வாயுவானது நாசமாகி ஆகாயம் ஒன்றே ஆவரணமின்றி இருக்கும் ரூப; ரச; கந்த ஸ்பரிசங்கள் அற்றதாய் ஒலியையே இலக்கணமாகக் கொண்டதாய், அவயவமில்லாததாய் மிகப்பெரிதான அந்த ஆகாயமானது யாவையும் நிரப்பிக்கொண்டு நிற்கும் இவ்விதமாக சுற்றிலும் வட்டமாய் யாவுங் கொள்ளும் இடமாய் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள அந்த ஆகாயத்தின் குணமாகிய சப்தத்தைப் பூதாதிகள் கிரகிக்கின்றன. பூதங்களும் இந்திரியங்களும் ஒருமிக்க அந்தப் பூதாதியில் லயமடையும் அபிமான ரூபமான இந்தத் பூதாதியானது தமஸ்ஸைப் பிரதானமாகக் கொண்டதனால் தாமசம் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பூதாதி என்று வழங்கப்பட்ட அகங்காரத்தைப் புத்தியையே லக்ஷணமாகக் கொண்ட மகத்தானது கிரஹிக்கின்றது. அந்த அண்டத்தினுள்ளே பூமியும் மகத்தும் முதல் எல்லையும் கடைசி எல்லையுமாக இருப்பது போலவே, வெளியிலும் முதலும் கடைசியும் எல்லையாகக் கொண்டுள்ளன.
புத்திமானே! இதுபோலவே அண்டத்துக்குப் புறத்தேயுள்ள பிருதிவி முதல் மகத் ஈறாகவுள்ள ஏழு பிரகிருதிகளும் சங்கார கிரமத்திலே முன்பு உரைத்ததுபோல், தத்தமது காரணங்களிலே லயப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை மூடிக்கொண்டுள்ள அண்ட ரூபமான பிருதிவியானது அதைச் சூழ்ந்த அப்புவிலும் அந்த அப்பு அதைச் சூழ்ந்த தேஜசிலும், அந்தத் தேஜசு, அதைச் சூழ்ந்த வாயுவிலும் அந்த வாயு அதனைச்சூழ்ந்த ஆகாயத்திலும் அந்த ஆகாயம் அஹங்காரத்திலும், அந்த அஹங்காரம் மகத்திலும் லயமடைகின்றன. இவற்றோடும் கூடிய அந்த மகத்தத்துவத்தைப் பிரகிருதி கிரகிக்கின்றது. குறையாமலும் மிகாமலும் முக்குணங்கள் சமமாக இருப்பதுதான் பிரகிருதியாகும். அதுதான் உலகங்களுக்குப் பிரதானமும் காரணமும் ஆகிறது. இப்படியாக, இந்தப் பிரகிருதி வியக்த ஸ்வரூபமாயும் அவ்யக்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஆகவே, வியக்தம் அவ்யக்தத்தில் லயப்படுகிறது என்றும் ஒருவகைப்பட்டவனாயும் இயல்பில் தீயோனாயும் அக்ஷரனாயும் நித்தியனாயும் சூஷ்ம ரூபியாகையால் பிரகிருதியையும் வியாபிக்கத்தக்க புருஷனும், பிரகிருதியைப் போல் பரமான்மாவின் அம்சமாக இருக்கிறான். பரமான்மாவோ பெயர், இனம் முதலிய கற்பனைகள் இல்லாமல் எப்பொழுதும் இருப்பதையே இயல்பாகக் கொண்டவனாய், அறிய வேண்டியவனாய், சர்வேசுவரனாய், ஞானஸ்வரூபியாய் ஜீவான்மாவுக்கு மேம்பட்டவனாக இருப்பவன் அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவே பரப்பிரமம்! எல்லாமாக இருப்பவன் அவனே! அவனே யோகியானவன் அவனைச் சேர்ந்தவை மீண்டும் திரும்புவதில்லை! வியக்தாவியக்த சொரூபமான பிரகிருதி யாதுண்டோ, அதுவும் புருஷன் என்று சொல்லப்படும். ஜீவனும் இவ்விரண்டும் அந்தப் பரமாத்மாவிலே லயப்படுகின்றன. அந்தப் பரமாத்மாவே யாவற்றுக்கும் ஆதாரமான பிரமேசுவரன் அவன் வேதத்திலும் வேதாந்தத்திலும் விஷ்ணு முதலிய பெயர்களில் துதிக்கப்பட்டிருக்கிறான்.
பிரவிர்த்தி நிவர்த்தி என்ற இருவகை வைதிக கர்மங்களினால் தேவதா ஸ்வரூபியான ஸ்ரீவிஷ்ணுவே, ரிக், யஜுர் சாமம் என்ற பிரவிர்த்தி மார்க்கங்களிலே யக்ஞேசுவரனாகவும் யக்ஞ புருஷனாயும் ஆராதிக்கப்படுகிறான் நிவர்த்தி மார்க்கத்தில் ஞானஸ்வரூபியாகவும் ஞானமயமான திருமேனியுடையவனாயுமுள்ள ஸ்ரீவிஷ்ணுவே மோக்ஷத்தைக் கொடுக்க வல்லவனாக ஞான யக்ஞத்தால் யோகியரால் போற்றப்படுகிறான். குறில், நெடில், அளபெடை ஆகியவற்றால் சொல்லப்படும் அசித்து யாதோ அதுவும், வாக்குக்கு விஷயமாகாத சித்தும் அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சொரூபங்களேயாகும்! வியக்தமும் அவ்யக்தமும் புருஷனும் முக்தனும் யாவும் அந்த ஸ்ரீஹரி பகவான்தான்! சகல பிரபஞ்சத்தையும் தமக்குச் சரீரமாகக் கொண்டு விளங்குவதனால் அவை அவனுடைய சொரூபங்களேயாம்! அந்த ஸ்ரீ ஹரியிடத்தில் பிரதானமும் புருஷனும் ஒடுங்குகிறார்களல்லவா? அப்படியாக ஒடுங்குமிடமான அந்தப் பரமாத்மாவுக்கு இரண்டு பரார்த்த காலம் என்று சொன்னது ஒரு பகல் வியக்தமெல்லாம் பிரகிருதியிலும் அந்தப் பிரகிருதி புருஷனிடத்திலும் அந்தப் புருஷன் பரமாத்மாவிலும் லயமாக இருக்க, அவ்வளவு காலம் இரவாம். பிராமண உத்தமரே! நித்தியனான அந்தப் பரமாத்மாவுக்கு பகல் என்பதுமில்லை. இரவு என்பதும் இல்லை. ஆயினும் சிருஷ்டி முதலிய காரியங்களைக் கொண்டு, உபசார வழக்கால் இரவு பகல்கள் சொல்லப்படுகின்றன. இவ்விதமாக பிராகிருதப் பிரளயத்தின் தர்மத்தைச் சொன்னேன். இனி, ஆத்யந்திகப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

——————-

5. ஆத்யந்திகப் பிரளயம்

மைத்ரேயரே! அறிவுடையவன் ஆத்தியாத்துமிகம் முதலிய தாபங்கள் மூன்றையும் அறிந்து ஞானமும் வைராக்கியமும் உண்டாகப்பெற்று மோக்ஷம் என்ற ஆத்யந்திக லயத்தை அடைகிறான், ஆத்தியாத்துமிக தாபமாவது தன் ஆன்மாவையும் தேகத்தையும் பற்றிய துக்கமாம். அது சரீரத்தைப் பற்றியதும் மனத்தைப் பற்றியதும் ஆகும். தலைவலி, பீனசம், ஜ்வரம், சூலை பகந்தரம், குலமம், ரத்தபேதி, சோகை, சுவாசம், வாந்தி, கண் நோய், அதிசாரம், குஷ்டம், வாயுரோகம் இவைபோன்ற ஏராளமான விஷயங்கள் சரீரத்தைப் பற்றியவை. காமம், குரோதம், பயம்; துவேஷம்; லோபம்; மோகம்; துக்கம்; சோகம், அசூயை, பொறாமை, அவமானம்; பகை பாராட்டுதல், முதலியவை மனது சம்பந்தப்பட்டவை பலவாகும், ஆதிபவுதிகமாவது ஜந்துக்களைப் பற்றியது. மிருக பக்ஷி, மனுஷ்ய பைசாச, சர்ப்ப, ராக்ஷஸாதிகளாலேயே உண்டாவதனால் அதுவும் பல வகைப்பட்டது. ஆதிதைவிதம் என்பது தெய்வத்தால் வருவது. அதுவும் குளிர், காற்று; வெய்யில், மழை, இடி முதலியவற்றால் உண்டாகும் பலவகையாம். இந்தத் தாபங்கள் மூன்றும் கருவினாலும் பிறப்பினாலும் இறப்பினாலும் மூப்பினாலும் நரகத்தாலும் உண்டாக்கப்பட்டு அநேக ஆயிரம் வகைகளாகின்றன அவற்றை விளக்குகிறேன்; கேளும்.
ஜந்துவானது மிகவும் மென்மையான உடலையுடையதாய், அநேக மலங்கள் நிறைந்த கர்ப்பத்திலே ஒருவகைத் தோலால் மூடப்பட்டு, மிக வளைந்த முதுகு, கழுத்துகளின் எலும்புகளையுடையதாக இருந்து கொண்டு, தாய் உண்ணும் புளிப்பு கசப்பு கரிப்பு, உப்பு முதலிய உறைகள் தன் மீது படும்போது அளவற்ற வேதனைகளையடைந்து தன்னுடம்பை நீட்டவும் மடக்கவும் வகையற்று மலமூத்திரங்களாகிய சேற்றிலே கிடந்து, எங்கும் துன்பமே பெற்று, மூச்சு விடமாட்டாமல் அறிவு மாத்திரமேயுள்ளதாய் கடந்த காலத்தில் அநேகப் பிறவிகளை நினைத்து, மகா விசனமடைந்ததாய், இப்படித் தன் கருமத்தால் தானே கட்டுண்டு கிடக்கின்றது. பிறகு பிறக்கும்போது பிரமதேவனால் ஏவப்பட்ட ஒருவகைக் காற்றினால் எலும்புகள் யாவும் நுறுங்கிப் போகும்படி பீடிக்கப்பட்டு, மலமூத்திரங்களாலும் சுக்கில சுரோணிதங்களாலும் பூசப்பட்ட முகத்துடன் மிகவும் பலமான பிரசவ வாயுக்களால் தலைகீழாகத் திருப்பப்பட்டு வெகு சிரமத்தோடு தாய் வயிற்றிலிருந்து வெளியே வருகிறது. பிறந்த பிறகு, வெளிப்புறக்காற்று ஸ்பரிசித்தவுடன் பெருமூர்ச்சையற்று முன்பு இருந்த ஞானத்தை இழக்கிறது, விழும்போது முட்களால் குத்தப்பட்டதைப் போன்றும் வாட்களால் அறுக்கப்படுவது போலவும் துர்க்கந்தமான இரணத்துக்கும் ஒப்பான யோனித்துவாரத்திலிருந்து புழுவைப் போலத் தரையில் விழுகின்றது. பின்னர் சொறிந்து கொள்வதற்கும் திரும்புவதற்கும் சக்தியற்றதாய், ஸ்நான பான ஆகாராதிகளைப் பிறரது இச்சைக்கேற்பவே பெறுகின்றது. மேலும் மூத்திராதிகளாலே அசுத்தமான படுக்கையில் படுத்துக்கிடந்து எறும்பு, கொசு முதலியவை கடித்தாலும் அவற்றைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றது. இவ்விதமாக பிறப்பின் துன்பங்களையும் அதன் பின்புண்டாகும் துக்கங்களையும் ஆதிபவுதிகம் முதலான துன்பங்களையும் மிகவும் இளமையிலேயே அடைகின்றது. பிறகு வளர்ந்து பருவம் அடையும்போது மனிதன் அஞ்ஞானமாகிய இருள் மூடியதாலே, முடனாகவே நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போவேன்? எனக்கென்ன பயன்? நான் எந்தப் பந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்? எதற்கு நான் கட்டுப்பட்டவன்? இதற்குக் காரணம் யாது? காரணமல்லாதது எது? செய்யத்தக்கது எது? செய்யத் தகாதது எது? சொல்லத் தக்கது எது? சொல்லத் தகாதது எது? எது தர்மம்? எது அதர்மம்? எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? இனி செய்ய வேண்டுவது எது? எது குற்றம்? எது குணமுடையது? என்று ஒன்றையும் அறியமாட்டாதவனாக இருக்கிறான். இவ்வாறு அவன் மிருகங்களைப் போல, உண்பதையும், புணர்வதையுமே முக்கியமாகக் கொண்டு, அஞ்ஞானத்தால் உண்டான அநேக துக்கங்களை அனுபவிக்கிறான். அஞ்ஞானம் என்பது தமோகுணத்தின் விகாரம். அதனாலேயே மனிதன் கெட்ட காரியங்களைச் செய்ய வேண்டி வருகிறது. ஆகவே, வைதீகக் கர்மங்கள் நடப்பதில்லை.
எனவே அஞ்ஞானிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் அதிகமாகிறது. பிறகு யவ்வனத்தைத் தாண்டி முதுமை வரும்போது உடல் மெலிந்து கட்டுத் தளர்ந்து, பற்கள் ஆடி, உதிர்ந்து திரையும் நரையும் அதிகமாகி, சற்று தூரத்தில் இருப்பதும் தெரியாதவாறு கண்ணின் கருவிழிகள் உள்ளே ஆழ்ந்து, மூக்குத் துவாரத்திலிருந்து மயிர்கள் உதர, உடல் ஒடுங்கி, எலும்புகள் எல்லாம் வெளிப்பட்டுத் தெரிய, முதுகெலும்பு வளைய தீபனம் மந்தமாவதால் உணவு நன்றாகச் செல்லாமலும் செறிக்காமலும் செயல்கள் குறுக, நடப்பதும் எழுவதும் படுப்பதும்கூட வருத்தமாக இருக்க காது கேளாமலும், கண்கள் தெரியாமலும் இருக்க வாயினின்று சாளை வாய்நீர் வடிந்து கொண்டிருக்க மனிதன் தவிக்கிறான். இவ்விதமாகச் சகல இந்திரியங்களும் அஸ்வாதீனப்பட்டு, மரணங்கிட்டும்போது முன்பு தான் அனுபவித்தவற்றை நினைத்து உருகிக் கொண்டு ஒரு வார்த்தை சொல்லக்கூட மிகவும் வருத்தங் கொண்டவனாய், சுவாசகாசம் உண்டாவதால் மிகுந்த ஆயாசமும் துக்கமின்மையும் உடையவனாய் எழுந்திருக்கவும் நடக்கவும் உட்காரவும் பிறருடைய உதவி அவசியப்படுவதாலேயே வேலைக்காரர்கள்; மனைவியர்; பிள்ளைகள் யாவரும் அவமதிக்க ஒரு சக்தியுமின்றி உண்ணவும் உலாவவும் ஆசையுள்ளவனாய்; ஊழியரும் பரிகசிக்க பந்துக்களும் வெறுப்படைய தன்னுடைய வாலிய அநுபவத்தைப் பூர்வ ஜன்மத்தின் அனுபவம்போல் நினைத்து, மனம் வெதும்பி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான், இதுபோல் மூப்பில் அவன் பற்பல துக்கங்களை அனுபவித்து மரணத்தை அடைகிறான்.
இனி அந்த மரணத்தின்போது நேரும் துன்பங்களையும் கேளும் கால், கைகள் கழுத்து இவை கட்டுவிட்டுப் பெற்று பெருநடுக்கமுள்ளவனாய் சிறிது நேரம் அறிவும் சிறிது நேரம் அறிவழிவுமுள்ளவனாய் மக்கள் மனை வீடு மாடு தனம் தானியம் ஆகிய இவையெல்லாம் இனி எப்படிப் போமோ என்று கலங்கியவனாய் இப்படிப்பட்ட நிலையில் இருக்க இரம்பங்கள் போன்ற மிகக் கொடிய இயமனின் அம்புகளான கொடிய பெரும் வியாதிகளால் உயிர் பெயர கண்கள் சுழல கைகால்களை உதறிக் கொண்டு நாக்கும் உதடும் உலர உதானவாயு எழும்பித் துன்புறுத்த கண்டம் அடைத்துக் குருகுருவென்ற சப்தம் செய்ய பெருந்தாபமும் பெரும் பசியும் பெருந்தாகமும் பொருந்திய நிலையில் யமகிங்கரர்களால் பீடிக்கப்பட்டு வெகு பிரயாசைப்பட்டுத் தன் தேகத்தை விட்டுக் கிளம்புகிறான். உடனே யாதனாதேகத்தை அடைகிறான்! இவையும் இவை போன்ற மேலும் பலவிதத் துன்பங்களும் மரணத்தில் உண்டாகின்றன.
இறந்த பின்னர், மனிதர்கள் நரகத்தில் படுகின்ற அவஸ்தைகளையும் சொல்கிறேன், கேளுங்கள். யமகிங்கரர்கள் முதலில் பாசத்தாற் கட்டிப் பிணைப்பதும் பிறகு தடியால் அடிப்பதும், உக்கிரமான யமனைக் காண்பதும் கொடிய வழியைக்காண்பதும் ஆகிய துன்பங்களை அனுபவித்துப் பிறகு காய்ந்த மணலிலும் அக்கினியந்திரம் கத்தி முதலியவற்றால் நரகத்திலே படும் பாடுகள் மிகவும் கொடியவையாகும். பிராமணோத்தமரே; கேளும்! மனிதன் மரணமடைந்த பிறகு யமகிங்கரர்களால் பல்வாளினால் அறுக்கப்பட்டும் மூசையிற் போட்டுக் காய்ச்சப்பட்டும், கோடாரிகளால் பிளக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், சூலங்களில் ஏற்றப்பட்டும், புலி வாயில் இடப்பட்டும், கழுகுகளால் குத்திப்பிய்க்கப்பட்டும், கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டும் காயும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டும் பொரிக்கப்பட்டும், உப்புச் சேற்றிலே புரட்டப்பட்டும், உயரத்திலிருந்து குப்புறத் தள்ளப்பட்டும் யந்திரங்களில் ஏற்றி வீசி எறியப்பட்டும், பாபத்தின் பயன்களாய் மனிதர்கள் நரகத்தில் படுகின்ற துன்பங்களை இவ்வளவு தான் என்று சொல்லிவிட முடியாது. இத்தகைய துக்கங்கள் நரகத்தில் மட்டுமல்ல; சுவர்க்கத்திலும் உண்டு சொர்க்கத்தில் சுகானுபவத்தை அனுபவிக்கும் போதே புண்ணியம் க்ஷயித்து, இனி நாம் வீழப்போகிறோம் என்ற நினைப்பினால் பயம் உண்டாகும்போது மனதிலே பெருந்துக்கம் உண்டாகும். இவ்விதமாக நரகத் துன்பங்களை அனுபவித்து, மீண்டும் கர்ப்பத்தில் பிரவேசித்து மனிதன் மீண்டும் பிறக்கிறான். இவ்வாறு பல முறைகள் பிறப்பதும் இறப்பதுமாய் அலைகிறான். மேலும் பிறந்தவுடனே, பால்யத்திலோ, வாலிபத்திலோ; நடுவயதிலோ; முதுமையிலோ எப்போதோ நிச்சயமாக இறக்கிறான். பிழைத்திருக்கும்போதே பலவிதமான துக்கங்களால் சூழப்படுகிறான். பஞ்சு மொய்த்திருக்கும் பருத்திக் கொட்டையைப்போல்! மேலும் பொருளைச் சம்பாதிப்பதிலும் அதைக் காப்பாற்றுவதிலும் அதன் அழிவிலும் இஷ்டமானவருக்குத் துன்பம் நேரும்போதும் அவனுக்குப் பலப்பலத் துன்பங்களே உண்டாகின்றன.
மைத்ரேயரே! எந்தெந்தப் பொருள் மனிதருக்கு இன்பமாக இருக்கிறதோ அதுவே துன்பம் என்னும் மரத்திற்கு விதையாகின்றது மனைவி, மக்கள்; நண்பர்; பொருள்; வீடு நிலம் முதலியவற்றால் எத்தனைக் துக்கம் உண்டாகிறதோ; அந்த அளவுக்கு அவற்றால் அடையும் சுகம் இருப்பதற்கில்லை. இவ்விதமாகச் சம்சாரத்தின் துக்கமாகிய வெய்யிலால் தகிக்கப்பட்டு அலையும் மனிதனுக்கு மோக்ஷம் என்ற மரத்தின் நிழலைத் தவிர, வேறு எங்கே சுகம் கிடைக்க முடியும்? ஆகவே, கர்ப்பம், பிறவி வார்த்திக்யம் முதலானவற்றால் மனிதருக்கு உண்டாகும் தாபங்கள் ஆகிய மூன்றுக்கும் மருந்து யாது என்றால், மற்றொரு சுகத்திலும் அதிசயந் தோன்றாது இருப்பதான மகாசுகரூபமாயும் துக்கத்தின் சம்பந்தமே இல்லாததாயும் நித்தியமாயும் உள்ள பகவத் பிராப்தியே என்பது எனது கருத்து ஆகையால் அறிவுடைய மனிதர் ஈனக் குணங்கள் நிறைந்தவனாகப் பகவானை அடைய முயற்சி செய்யவேண்டும்.
முனிவரே! எந்த எம்பெருமானை அடைவதற்கு ஞானமும் கர்வமும் உபாயங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றனவோ அந்த ஞானம், ஆகமஜம் என்றும் விவேகஜம் என்னும் இரு வகையாகும். சாஸ்திரங்களால் உண்டாவது ஆகமஜம், யோக சிந்தனையில் உண்டாவது விவேகஜம். முந்தியதற்குச் சப்தப் பிரமம் என்றும் பிந்தியதற்குப் பரப்பிரமம் என்றும் பெயர். இந்த இரண்டு ஞானங்களுக்கும் உள்ள பேதமாவது, அஞ்ஞானம் என்ற அந்தகாரமானது பொருள்களை மறைப்பது போல், ஜீவாத்மா, பரமாத்மா, ஸ்வரூபங்களை மறைப்பதால் அது அந்தகாரம் போன்றேயுள்ளது. ஆகமஜஞானம், விளக்கமானது இருளை நீக்கிப்பொருளை விளங்கச்செய்வதுபோல் தேக, ஆன்மாதி மயக்கங்களை நீக்கி ஜீவபரஸ்வரூபங்களை ஒருவாறு விளக்குவதால் இது விளக்குப் போன்றதாகும். பரப்பிரம்மம் என்ற விவேகஜ ஞானம் சூரியனானது இருள் முழுமையும் அழித்து பொருள்கள் யாவற்றையும் தெளிவாக விளக்குவதைப் போல், அஞ்ஞானத்தையும் முழுமையாகப் போக்கி ஸ்வரூபங்களை பிரத்யக்ஷமாய் விளங்கச் செய்வதால், அது சூரியனைப் போன்றதாகும்.
இவ்விஷயத்தில் மநுவும் வேதாந்தத்தை அறிந்து சொல்லியிருப்பதைக் கேட்பீராக, சப்தப்பிரமம் என்றும் பரப்பிரமம் என்றும் இரண்டு பிரமங்கள் உண்டு என்று அறியவேண்டும். மனிதன் சப்தப் பிரமத்தில் தேறினால் பரப் பிரம்மத்தை அடையலாம். அதர்வண வேதம் இப்படியே சொல்கிறது. அக்ஷரம் என்று சொல்லப்படும் பிரமத்தை எந்த வித்தையால் அடையலாமோ, அதற்கு பரவித்தை என்று பெயர். கர்மங்களை அறிவிக்கும் வேதாதிகள் அபரவித்தை எனப்படும், அந்தப் பரவித்தையின் விஷயமான பிரமஸ்வரூபமானது, வேதாந்தத் தாலான்றித் தோன்றாததும், தோன்றல், மறைதல், கெடுதல், வளர்தல், குறைதல் திரிதல்களாகிய விகாரமின்றியும், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாமலும் தேவ மனுஷ்யாதிரூபங்கள் இல்லாமலும் கைகால் முதலிய உறுப்புக்கள் இல்லாமலும் யாவற்றையும் நியமிப்பதாகவும் எங்குமுள்ளதாகவும் பூதங்களுக்குக் காரணமாகவும் எல்லாவற்றையும் வியாபித்து ஒன்றினாலும் வியாபிக்கப்படாமலும் இருக்கிறது. ஞானிகள் எதைக் காண்கிறார்களோ, அதுவே பிரமம்! அதுதான் மேலான ஞானஜோதி! அதையே விஷ்ணுவின் உத்தம ஸ்வரூபம் என்று சுருதிகளிற் சொல்லப்பட்டுள்ளது. சூக்ஷúமமான அந்தப் பிரமத்தையே மோக்ஷம் பெறவேண்டுவோர் தியானிக்க வேண்டும். பகவான் என்ற சொல், எம்பெருமானின் அளவற்ற ஸ்வரூப, ரூப குண விபவங்களைக் குறையச் சொல்லத் தக்கது. பரமாத்மாவின் தத்துவம் எதனால் விளங்குமோ அத்தகைய துவாதச அக்ஷரத்தை அங்கமாகக் கொண்டேதே பரவித்தையாகும் மற்ற வேதபாகம் யாவும் அபரவித்தையாம் சகலாதாரமாயும் சகலாதேயமாயும் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவையே வாசுதேவபதம் போதிக்கிறது. முன்பு கேசித்வஜன் என்பவரைக் காண்டிக்கிய ஜனகர் வினாவ. அநந்தனான ஸ்ரீவாசுதேவனுடைய திருநாமத்தை நாம் சொன்னது போலவே, அவரும் சொல்லியிருக்கிறார். அதை உமக்குச் சொல்கிறேன்.
ஸ்ரீவாசுதேவ பகவான், இயல்பினால் குற்றங்களோடு கலவாத சகல கலியாண குண பரிபூரணன்! சகல பூதங்களையும் தனது சக்தியின் ஒரு சிறிய பங்கினால் சூழ்ந்திருப்பவன் தனது திருவுளப்படி, அந்தந்த தருணத்திற்கு வேண்டிய திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுப்பவன். அதனால் சகல உலகங்களுக்கும் நலன்களைச் சாதிப்பவன். அளவற்ற தேவை பலம் ஐசுவரியம், ஞானம், வீரியம், சக்தி முதலிய குணங்களின் ராசி போன்றவன் உயர்ந்தோரிலும் உயர்ந்தவன் ஒரு துர்க்குணமும் இல்லாதவன் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் ஈச்சுரன். இத்தகைய எம்பெருமான் வியூக விபவாதி ரூபங்களினாலே வியஷ்டி ரூபனாகவும் இந்த ரூபங்களால் விளங்குவதால் வியக்தனாகவும் யாவற்றையும் எல்லாக் காலங்களிலும் எல்லா வகையிலும் ஆள்பவனாகவும், எல்லாவற்றையும் எப்போதும் தான் ஒருங்கே பிரத்யக்ஷமாய்க் காண்பவனாகவும் யாவும் பொருந்தியவனாகவும், சகல சக்திகளும் உள்ளவனாகையால் பரமேசுவரன் என்ற திருநாமத்தையுடையவனாகிறான், இவ்விதமாகச் சகல தோஷரகிதமாய், சுத்தமாய், உத்தமமாய், என்றுமே பிரகிருதிக்கு உட்படாததாய் என்றும் ஒரு படிபட்டதாயுள்ள பகவத் ஸ்வரூபமானது எதனால் அறியப்படுகிறதோ, அந்த ஆகம ஞானமும் எதனாலே காணப்படுகிறதோ அந்த விவேக ஞானமும் எதனால் அடையப்படுகிறதோ அந்தப் பக்தி ரூபமான ஞானமுமே உண்மையான ஞானம் என்று சொல்லப்படும். இதற்குப் புறம்பானதெல்லாம் அஞ்ஞானமேயாகும்!

——————–

6. கேசித்வஜ-காண்டிக்ய விவாதம்-

முன்பு சொன்னபடி, குணங்களும் விபூதிகளும் விக்கிரகமுமுள்ள பகவான், தத்துவம் உணர்த்தும் சாஸ்திரத்தினாலும் யோகத்தினாலும் காணப்படுவான். இந்த இரண்டு ஞானமும் தான் அவனை அடைவதற்குச் சாதனமாகும். ஆகையால் பிரமம் என்று சொல்லப்படும் சாஸ்திரங்களை நன்கு விசாரித்து, யோகத்தில் அமரவேண்டும். யோகத்தில் இறங்கிய பிறகு அந்தத் தத்துவ சாஸ்திரத்தை நன்றாகத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய ஸ்வாத்தியாய யோகங்கள் இரண்டும் நன்றாய்த் தேர்ந்தால் பரமாத்மா விளக்கமாகக் காணப்படும். அந்தப் பரமாத்மாவைக் காண்பதற்குச் சாஸ்திர ஞானம் ஒரு கண் யோகம் மற்றொரு மேலான கண் பரப்பிரமமான பகவான் இந்தக் கண்களால் காணக்கூடியவனே தவிர இந்த இறைச்சியாலான கண்களால் காணக்கூடியவனல்லன் என்று பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பராசர மகானே! சகல ஆதார பூதனான பரமேசுவரனை நான் எதனால் காண முடியுமோ அத்தகைய யோகத்தை நான் அறிய விரும்புகிறேன். ஆகையால் அதை அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும்! என்று கேட்டார். மைத்ரேயரே! பூர்வத்தில் மகாத்மாவான காண்டிக்ய ஜனகருக்கு கேசித்வஜன் சொன்ன வகையில், அந்த யோகத்தை நான் உமக்குச் சொல்கிறேன் என்றார் பராசர மகரிஷி.
பிரமமுனிவரே! காண்டிக்கியர் என்பவர் யார்? கேசித்துவஜர் யார்? யோகத்தைப் பற்றி அவர்களிடையே சம்வாதம் நேர்ந்தது எப்படி? அதைத் தாங்கள் கிருபை கூர்ந்து எனக்குச் சொல்லியருள வேண்டும் என்று கேட்க, பராசரர் சொல்லத் துவங்கினார். தருமத்வஜர் என்ற ஜனகமகா ராஜா இருந்தார். அவருக்கு மிதத்துவஜர் என்றும் கிருதத்துவஜர் என்றும் குமாரர்கள் இருவர் இருந்தார்கள். கிருதத்துவஜர் என்பவர் எப்பொழுதும் வேதாந்த விசாரணை செய்து கொண்டிருப்பார். அவருக்குச் கேசித்துவஜர் என்று புகழ்பெற்ற மைந்தர் உண்டானார். மிதத்துவஜருக்கும் காண்டிக்யஜனகர் என்ற புத்திரர் பிறந்தார். அந்தக் காண்டிக்கியர் கர்மமார்க்கத்தில் நின்று பூமியை ஆண்டு வந்தார். கேசித்துவஜரோ, ஆன்ம வித்தையில் ஊன்றியவராய் ராஜ்ய பரிபாலனஞ் செய்து வந்தார். இப்படியிருக்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஜெயிக்க முயன்றனர். கேசித்வஜர் காண்டிக்கியரை, இராஜ்ஜியத்திலிருந்து துரத்திவிட்டார். காண்டிக்கியர் அற்பமான சேனையுடையவராக இருந்ததால், ராஜ்யத்தை விட்டுத் தம்முடைய அமைச்சர், புரோகிதர் ஆகியோருடன் பிறர் வரக்கூடாத ஒரு காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். ராஜ்ஜியத்திலிருந்த கேசித்துவஜரோ ஞானத்தைப் பற்றியவராய் பிரம வித்தையில் இருந்து கொண்டே, உபாசனைக்கு இடையூறு செய்யும் பாவங்களைப் போக்குவதற்காகப் பல யாகங்களைச் செய்து வந்தார்.
அவ்வாறு அவர் யாகஞ் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு சமயம் பிரவர்க்கியம் என்ற சடங்கில், அவிசுக்கு அவசியமான பாலைக் கொடுத்து வந்த அவரது பசுவை, காட்டில் ஒருபுலி அடித்துக்கொன்றது. அதை அந்த அரசர் கேள்விப்பட்டு, இதற்குப்பிராயச்சத்தம் என்ன? என்று ரித்துவிக்குகளைக் கேட்டார். அவர்கள் எங்களுக்குத் தெரியாது! கசேருவைக்கேளுங்கள்! என்றார்கள். அரசன் அதனால் கசேருவைக் கேட்க, அவர்பார்க்கவரைக்கேளுங்கள் என்றார். அவர் எனக்குத் தெரியாது சுனகரைக் கேளுங்கள்! என்றார். சுனகரை அரசர் கேட்க அவர்; அரசே! இந்தக் காரியம் கசேருக்கோ; எனக்கோ இந்தப்பூமியிலுள்ள மற்றொருவருக்குமோ தெரியாது. ஆனால் உன்னால் ஜயிக்கப்பட்டு உனக்குப் பகைவராக இருக்கும் காண்டிக்கிய ஜனகருக்குத்தான் இந்த விஷயம் தெரியும்! என்றார். அதைக்கேட்ட அரசன் முனிவரே! நான் இதைத் தெரிந்துகொள்வதற்காகவே; என் பகைவனிடம் செல்கிறேன். அவர் என்னைக் கொல்வாராயின் யாகபலன் எனக்கு சித்திக்கும் இல்லையென்று நான் கேட்கும் பிராயச்சித்தத்தை சொன்னால் யாகம் குறைவில்லாமல் நிறைவேற்றப்படும் என்று சொல்லி; கிருஷ்ணாஜினம் தரித்தபடி; ரதத்தில் ஏறி; காண்டிக்கியர் இருக்கும் இடம் தேடிச் சென்றார். காண்டிக்கியரோ; தம் பகைவர் தம்மைத் தேடி வருவதைக் கண்டு; கோபத்தால் கண்கள் சிவக்க; தம் வில்லை வளைத்து நாணேற்றிக் கொண்டு; கேசித்வஜரை நோக்கி, அடா! நீ கிருஷ்ணாஜின கவசத்தை அணிந்துகொண்டு; யோக்கியனைப் போல் இங்கு வந்து என்னைக் கொல்லப் பார்க்கிறாய்! நாம் கிருஷ்ணாஜினம் தரித்திருப்பதால் நம்மை அவன் அடிக்கமாட்டான் என்று எண்ணிவிட்டாய். மூடா! மான்களின் உடலில் இந்தக் கிருஷ்ணாஜின கவசம் இல்லையோ? அத்தகைய மான்களை நீயும் நானும் எத்தனை அம்புகளை எய்து கொன்றிருக்கிறோம்? ஆகையால் உன்னைப் போன்றவனை அடிக்க இந்தக் கிருஷ்ணாஜினம் தடையாகாது. நீ என் அரசைக் கைப்பற்றிய பகைவன்! ஆகையால் நீ யாகத்தில் இருந்தாலும் உன்னைக் கொல்வேன். என்னிடமிருந்து நீ உயிரோடு மீள மாட்டாய்! என்றார் காண்டிக்கியர்.
அதைக் கேட்டதும் கேசித்துவஜர் அமைதியான குரலில் காண்டிக்கியரே! நான் இப்போது உம்மிடம் ஒரு தருமசந்தேகம் கேட்க வந்தேனேயன்றி உம்மைக் கொல்வதற்கு வரவில்லை. இதை நீர் யோசித்து உமது கோபத்தையாவது விட்டுவிடும்; அல்லது என்மீது உமது பாணத்தையாவது விட்டுவிடும்! என்றார். அதைக்கேட்டு காண்டிக்கியரின் அமைச்சர்; புரோகிதர் முதலியோர் இரகசியமாக; சத்துரு கைவசத்தில் வந்தவுடன் அவனைக் கொல்வது அவசியம் அந்தப் பகைவன் அழிந்தால், இந்தப் பூமி முழுவதும் நமது கைவசம் ஆகும் என்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்ட காண்டிக்கியர் அவர்களைப் பார்த்து, நீங்கள் சொல்வது சரிதான் பகைவனைக் கொன்றால் பூமி நமக்குச் சுவாதீனமாகும் அவனைக் கொல்லாவிட்டாலோ நமக்கு மேல் உலகம் சுவாதீனப்படும். அவனுக்கு பூமி கைவசத்தில் இருக்கும். இந்த உலக வெற்றியைவிட மேலும் வெற்றியே சிறப்புடையது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த உலக வாழ்க்கை சிறிது காலம்தான் மேல் உலக வாழ்வோ நீடித்திருப்பது ஆகையால் என் பகைவனை நான் கொல்லாமல், அவன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வதே நல்லதாகும்! என்று சொல்லிவிட்டு கேசித்துவஜரை வரவேற்று, நீர் கேட்க வேண்டிய கேள்வியைக் கேளும் எனக்குத் தெரிந்தவரை நான் உமக்குப் பதில் சொல்கிறேன் என்றார்.
கேசித்துவஜர், யாகத்திற்கு உபயோகமான பசு இறந்த செய்தியைச் சொல்லி, அதற்குரிய பிராயச்சித்தத்தைப் பற்றிக் கேட்டார். காண்டிக்கியரும், சாஸ்திர விதிப்படியான பிராயச்சித்தத்தைச் சொன்னார். தமது சந்தேகம் தீர்ந்தவுடன் கேசித்துவஜர்; காண்டிக்கியரிடம் விடைபெற்று; யாகசாலைக்குச் சென்றார். விதிப்படிக் கிரியைகளைச் செய்து யாகத்தை நிறைவேற்றி; அவபிரத ஸ்நானம் செய்து செய்ய வேண்டியவற்றை யெல்லாம் செய்தும் பின்வருமாறு யோசிக்கலானார். நாம் நமது யாகத்துக்கு வந்த பிராமணரையெல்லாம் பூஜித்தோம். இருத்துவிக்குகளுக்குச் சன்மானமளித்தோம். யாசகர்களுக்குத் தானம் செய்தோம். இப்படி உலகத்துக்கு ஒப்புரவான காரியத்தை நாம் தக்கபடி செய்திருந்தும் நம்முடைய மனம் ஏன் செய்ய வேண்டியதைச் செய்யாததைப் போல் குறைகொண்டிருக்கிறது? என்று சிந்தித்தார். பிறகு; ஓஹோ! தாம் எல்லாஞ் செய்தும்; நமக்குப் பிராயச்சித்தத்தை உபதேசித்த காண்டிக்கியருக்குக் குருதக்ஷிணையைக் கொடாமற் போனோம் அல்லவா? என்று நினைத்துக்கொண்டு; கேசித்துவஜர் மீண்டும் தமது தேரில் ஏறி; காண்டிக்கியர் வசிக்கும் காட்டிற்குச் சென்றார். மறுபடியும் தம்முடைய பகைவன் எதிரில் வருவதைக்கண்டதும் காண்டிக்கியர் தம்முடைய ஆயுதத்தைக் கையில் ஏந்தி நின்றார். அதைக்கண்டதும் கேசித்துவஜர்; காண்டிக்கியரை நோக்கி ஓ மகானுபவரே! நான் உமக்குத் தீங்கு செய்ய வரவில்லை. கோபிக்கவேண்டாம் உமக்குக் குருதக்ஷிணை கொடுக்கவே வந்தேன் என்றார். அதனால் காண்டிக்கிய ஜனகர் மறுபடியும் தமது அமைச்சரிடம் எதைக் கேட்கலாம்! என்று ஆலோசித்தார். அதற்கு அமைச்சர் அவனது ராஜ்யம் முழுவதையும் உமக்குக் குருதட்சணையாகக் கொடுத்துவிடும்படிக் கேளும் புத்திசாலிகள் சமயம் வாய்த்தபோது தம்முடைய சேனைகளுக்குத் துன்பமில்லாமல் ராஜ்யத்தைச் சம்பாதிப்பார்கள்! என்றார். ஆனால் காண்டிக்கியர் சிரித்துக்கொண்டே; அமைச்சரே! சிறிது காலமே நிற்கத்தக்க இராஜ்யத்தையா என்னைப் போன்றோர் விரும்புவார்கள்? நீங்கள் அனைவரும் பொருளைச் சம்பாதிக்கும் அமைச்சர்கள் அல்லவா? இந்தச் சம்சாரத்திலேபரமார்த்தம் ஏது? அது எப்படிக் கிடைக்கும் என்ற விஷயத்தில் நீங்கள் ஒன்றுமே அறியாதவர்கள்! ஆகையால் நீங்கள் சொன்னது சரி தான்! என்று அவர்களிடம் சொல்லிவிட்டுக் கேசித்துவஜரிடம் வந்து ஐயா! நீர் அவசியம் குரு தக்ஷிணை கொடுக்கத்தான் வேண்டும் என்று நினைக்கிறீரா? என்றார். அதற்கு அவர், ஆம் என்றவுடன், அவரைப் பார்த்து, அப்படியானால் நீர் ஆன்ம ஞானவித்தையில் தேறிய வராகையால் எனக்கு நீர் குருதக்ஷிணையாக சம்சாரக் கிலேசம் போகத்தக்கதான அந்த ஞானத்தைச் சொல்ல வேண்டும்! என்றார்.

———————-

7. யோக வழி-

கேசித்துவஜர், காண்டிக்கியரை நோக்கி, காண்டியக்கியரே நீங்கள் ஏன் பகைப் பூண்டற்றதான ராஜ்யத்தை விரும்பவில்லை? க்ஷத்திரியர்களுக்கு ராஜ்யத்தைக் காட்டிலும் பிரியமானது வேறொன்றும் இராதே! என்றார். அதற்குக் காண்டிக்கியர் கேசித்துவஜரே! நான் ஏன் உம்முடைய ராஜ்யத்தை வேண்டவில்லையோ அதற்கான காரணத்தைக் கூறுகிறேன். கேளும் இந்த ராஜ்ய விஷயத்தில் விஷயமறியாதவரே ஆசைப்படுகிறார்கள் நீர் சொன்னது போலவே பிரஜைகளைக் காப்பதும் விரோதிகளைத் தர்ம யுத்தஞ் செய்து வதைப்பதும் க்ஷத்திரியருக்குத் தருமம்தான். ஆயினும் ராஜ்யத்தைக் காப்பதில் வல்லமையில்லாதவனாயும் ஆசையற்றவனாயும் இருக்கும் எனக்கு நீர் அபகரித்துக் கொண்ட ராஜ்யத்தை விரும்பாதது குற்றமாகாது. இந்தக் கருமத்தை நடத்தச் சக்தியிருந்தும் நடத்தாமல் விடுவதே குற்றமாகும். இந்த ராஜ்யத்தில் எனக்கு ஜன்மாந்தர கர்மங்களின் பயனான போகங்களை அனுபவித்துக் கழிப்பதிலேயே ஆசையிருந்தது. இது போகத்திலுள்ள ஆசை! ஏனென்றால் இவ்வாசை பொருளை அனுசரித்திருக்கிறதே யல்லாமல் கர்மத்தை அனுசரித்திருக்கவில்லை. மேலும் க்ஷத்திரியர் யாசித்திருப்பதைத் தர்மம் என்று பெரியோர்கள் அங்கீகரிப்பதில்லை. இந்தக் காரணங்களாலேயே நான் கர்மங்களில் சேர்ந்த இந்த ராஜ்யத்தை யாசிக்கவில்லை. பொருள்களின் உண்மையை அறியாதவராய் எனது என்ற வீண் அபிமானத்தால் மனம் இழுக்கப்பெற்று நான் என்னும் அகங்காரமாகிய கொடிய கள்ளையுண்டு மனம் மயங்கியிருப்பவர்களேயல்லாமல் என் போன்றோர் ராஜ்யத்தை விரும்புவதில்லை! என்றார் காண்டிக்கியர். அதைக்கேட்டு மகிழ்ந்த கேசித்துவஜர் காண்டிக்கியரே நீர் சொன்னது எனக்கும் சரியானது! ஆனால் நான்கர்மத்தினால் யோக விரோதிகளான காமக் குரோதாதிகளைப் போக்குவதற்காக, அரசாட்சியையும் யாகங்களையும் செய்து வருகிறேன். போகங்களினால் புண்ணிய க்ஷயத்தையும் செய்து வருகிறேன். நமது குலத்தில் ஆனந்தமானவரே! உமக்கோ, அதிர்ஷ்டவசத்தால் மனம் விவேகம் என்ற ஐசுவரியத்தைப் பொருந்தியுள்ளது. ஆகையால் அவித்தையின் சொரூபத்தைச் சொல்கிறேன் கேளும்.
ஆன்மாவல்லாத தேகாதிகளில் ஆன்மா என்ற நினைப்பும், தனதல்லாத அந்தந்தப் பொருளிலே தனது என்ற நினைப்பும், இந்த இரண்டும் சம்சாரமாகிய மரத்திற்கு விதையாகின்றன. தேஹியானவன் அஞ்ஞானவிருளால் மூடப்பட்டு பஞ்சபூத மயதேகத்தில், நான் எனது என்ற புத்தியைக்கொள்கிறான். ஆகாயம், வாயு, அக்கினி, ஜலம் பிருதிவி என்பவைகளுக்கு வேறானதாக ஆன்மா இருக்க தேகத்தை ஆன்மா என்று எவன் நினைக்கக்கூடும்? அதுவுமின்றி நிலம், வீடு பிறந்த புத்திரர்கள் பேராதிகள் ஆகியவற்றை எப்படித் தன்னதாக நினைக்கலாம்; இப்படி நினைப்பது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தினால்தான், இந்த உடலின் போகத்துக்குரிய காரியங்களையே மனிதர்கள் செய்கிறார்களே தவிர ஆத்ம போகத்துக்காக ஒன்றும் செய்கிறார்களில்லை. ஆன்மாவுக்குத் தேகம் வேறானதால் இப்படிச் செய்ததெல்லாம் பந்தத்திற்கே காரணமாகின்றன. மண் வடிவான மாளிகை மண்ணினாலும் நீரினாலும் பூசப்படுவதைப்போலவே, பிருதிவி மயமான இந்த உடலும் அன்னபானங்களாகிய மண் நீர்களினாலே பூசப்படுகிறது. பஞ்சபூத ரூபங்களான போகப் பொருள்களினாலே பஞ்சபூத ரூபமான தேகம் திருப்தி செய்யப்படுமானால் தேகத்தின் வேறான ஆன்மாவுக்கு இந்தப் போகங்களினாலேயே உண்மையான போகம் எப்படியுண்டாகும்? மேலும் இந்த ஆன்மா அநேகவாயிரம் ஜனனங்களில் சம்சாரம் என்ற வழியில் நடந்து, வாசனை என்னும் புழுதி படிந்தவனாய் மயக்கம் என்னும் சிரமத்தை அடைகிறான். இப்படி வருந்திய ஆன்மாவுக்கு எப்பொழுது ஞானம் என்னும் வெந்நீரால் அந்தப் புழுதி கழுவப்படுமோ அப்போது அந்த மயக்க வருத்தம் தீர்ந்து போகும் அது தீர்ந்தால் புருஷனின் மனம் குணப்பட்டு, வேறு அதிசயமில்லாததும் துக்கம் இல்லாததுமான மோக்ஷத்தையடைவான். மோக்ஷபயன்காம பயனைப்போல் வேறாக வரவேண்டுவதென்று இந்த ஆன்மா நிர்மல ஞானரூபியாதலால் இயல்பிலேயே மோக்ஷசுகரூபமாகவே இருக்கிறது. துக்கமான அஞ்ஞான மயங்களான ராகாதிகள் பிரகிருதியின் தன்மைகளே அல்லாமல் கன்ம தர்மங்கள் அல்ல. அது எவ்விதமெனில் தண்ணீருக்கு இயற்கையில் வெப்பம் இல்லாதிருக்க, அக்கினியோடு சேர்ந்த பாத்திர சம்பந்தத்தினால் தண்ணீர் வெப்பம் பெற்று தொனி எழுச்சி முதலியவற்றைச் செய்வதுபோல, தாபத்திரயத்தோடு கூடிய பிரகிருதியின் சம்பந்தத்தினாலே தோஷமுள்ளவனாகி அந்தப் பிரகிருதியின் தர்மங்களான பசி தாகம் முதலியவற்றை அடைகிறான். இந்த ஆன்மாவோ, அந்தப் பிராகிருதங்களுக்கு வேறாய் விகாரமில்லாது இருப்பவன்! அவித்தையின் காரணத்தை நான் உமக்குச் சொன்னேன். இதனால் வரும் கிலேசங்களுக்கு க்ஷயமுண்டாக்குவது யோகமேயன்றி வேறில்லை! என்றார். மகா அறிஞரே! யோகம் அறிந்தவர்களில் சிறந்தவரே! அந்த மகாயோகத்தை நீர் எமக்குச் சொல்லவேண்டும். இந்த நிமி சந்ததியில் நீரே யோக சாஸ்திரப் பொருளறிந்தவராக இருக்கிறீர்! என்று காண்டிக்கியர் கேட்டார்.
கேசித்துவஜர், அவரை நோக்கி, காண்டிக்கியரே! யோக ஸ்வரூபத்தைச் சொல்கிறேன், கேட்பீராக இந்த யோகத்தில் இறங்கியவன், பிரமத்தில் லயத்தை அடைந்து மறுபடியும் திரும்பமாட்டான். மனிதர்களுக்கு மனம் விஷயங்களைப்பற்றி நின்றால், பந்தத்துக்குக் காரணமாகும். அவற்றைப் பற்றாமல் இருந்தால் அது மோக்ஷத்துக்குக் காரணமாகும், ஆகையால் பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் காரணம் மனம்தான். ஆகையால் பிரகிருதி புருஷேஸ்வர ஞானமுள்ளவன், மனதை விஷயங்களிலிருந்து திருப்பி அதைக்கொண்டு பரப்பிரமமான சர்வேசுவரனை மோட்சத்துக்காகத் தியானிக்க வேண்டும். அப்படித் தியானிக்கப்பட்ட அந்தப் பிரமம் மாற்றுதலான அந்த யோகியை அயஸ்காந்தம் தன் சக்தியாலே இரும்பைத் தன்னிலைக்குக் கொண்டு வருவதைப் போலவும் அக்கினியானது அழுக்குடைய பொன்னை தனது சக்தியால் சுத்தப்படுத்தித் தன்னைப்போல் விளங்கச் செய்வது போலவும், தனது தன்மையை அடைவிக்கும் தன் முயற்சியை வேண்டிய தாய் இடைவிடாமல் நிற்றலையுடைய யாதொரு மனநிலையுண்டோ அதைப் பிரமத்திற் கூட்டுவதே யோகமாகும். இத்தகைய முமுக்ஷúவே யோகியாவான். இவன் யோகத்திலிருக்கும்போது யுஞ்சானன் அல்லது யோகயுக் என்று வழங்கப்படுவான். பிறகு பரப்பிரம்ம சாக்ஷõத்காரம் பெற்றபோது யுக்தன் அல்லது விநிஷ்பந்நஸமாதி என்று வழங்கப்படுவான். பயிற்சியிலுள்ள முந்தியவனுக்கு அந்தராயங்கள் என்ற இடையூறுகளினால் மனமானது கெடுக்கப்படுமாயின் பின்னுண்டாகும் பல பிறவிகளில் யோகம் தலைக் காட்டியபோது முக்தியுண்டாகும். யோகி மற்றொன்றையும் விரும்பாதவனாகித் தனது மனதுக்கு யோக்கியதை வருவதற்காகப் பிரமசரியம், அஹிம்சை, சத்தியம் திருடாமை ஏற்காமை வேத அத்தியயனம் சுத்தமாக இருத்தல் மகிழ்ச்சியுடனிருத்தல் தவம் செய்தல் ஆகியவற்றைச் செய்து கொண்டு பரப்பிரமத்தினிடத்திலே மனதைப் பற்றச் செய்ய வேண்டும், இயம நியமங்களாகிய இவை ஏதேனுமோர் பயனைக் கருதியவர்களுக்கு அந்தப் பயனைத் தரும் ஒன்றையும் கருதாதோருக்கு மோக்ஷத்துக்கு ஏதுவாகும். இந்த நியம, நியமாதிகளுடன் கூடிய யோகியானவன் பத்திராசனம் முதலிய ஆசனங்களில் ஏதேனும் ஓராசனத்தைக் கைக்கொண்டு பயிலல் வேண்டும். பிராணன் என்ற காற்றை பயிற்சியினாலே வயப்படுத்தவதே பிராணாயாமம் எனப்படும். இது சபீசம் என்றும் நிர்பீசம் என்றும் இருவகையாம். மூர்த்தித் தியானமந்திர ஜபங்களோடு கூடியது சபீசம்! அதற்றது நிர்ப்பீசம்! இந்தப் பிராணாயாமம் பிராணத்தினால் அபானத்தைத் தடுத்தலும் அபானத்தினால் பிராணத்தைத் தடுத்தலும் இரண்டையும் ஒருங்கே தடுத்தலுமாகிய பேதங்களால் ரேசகம் பூரகம் கும்பகம் என்று மூன்று வகைப்படும். அப்யரசியான யோகி செய்யும் சபீசம் அல்லது சரலம்பனம் என்ற பிராணாயாமத்துக்கு ஆலம்பனம் ஸ்ரீ அனந்தனுடைய ஸ்தூலரூபம் என்று அறியும் சப்தாதி விஷயங்களில் நிற்கும் இந்திரியங்களைத் தடுத்துச் சித்தத்தை இசையச் செய்வது பிரத்தியாகாரமாகும். இதனால் சஞ்சலப்படும் இந்திரியங்கள் மிகவும் வயப்படுகின்றன. அவை வசப்படாதபோது யோகியானவன் யோகத்தைச் சாதிக்கமாட்டான். இவ்விதம் பிராணாயாமத்தினால் காற்றும் பிரத்தியாகாரத்தினால் இந்திரியங்களும் வசப்பட்டபிறகு சுப ஆசிரயத்திலே மனதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு கேசித்துவஜர் சொல்லி வரும்போது காண்டிக்கியர் குறுக்கிட்டு மகானே! மனதுக்கு எது சுபாசிரயமோ அதைச் சொல்ல வேண்டும்! எந்தச் சுபாசிரயத்தை பற்றிய மனமானது ராகாதி தோஷங்களால் உண்டாகும் குறைகளைப் போக்குமோ; அத்தகையதை அறிய விரும்புகிறேன் என்று கேட்டார். மனதுக்கு ஆசிரயம் பிரமம். அது மூர்த்தம், அமூர்த்தம் என்று இயல்பால் இருவகைப்படும்! மூர்த்தமாவது சரீரத்தோடு கூடியது; அது ஹிரண்ய கர்ப்பன் முதலான பந்தஸ்வரூபம் அமூர்த்தமாவது சரீரம் அற்றது. அது முக்க ஸ்வரூபம் இந்த ஸ்வரூபம் பரம் என்று சொல்லப்படும். இத்தகைய மூர்த்தா மூர்த்தமயமான பிரபஞ்சம் யாவும் பிரமபாவனை, கர்மபாவனை உபயபாவனை ஆகவுள்ளன பாவனையாவது, பொருள்களை இடைவிடாமல் நினைத்தல்! பிரமபாவனையாவது பிரமத்தைப் பாவித்தல்! கருமபாவனையாவது கர்மத்தைப் பாவித்தல் உபயபாவனையாவது இரண்டையும் பாவித்தலாகும்; சனந்தனர் முதலிய யோகிகள் பிரமபாவனையோடு கூடியவர்கள் தேவர்களாதி யோராகத் தாவரமந்தமாக உள்ளவரனைவரும் கர்மபாவனையோடு கூடியவர்கள் இரணிய கர்ப்பன் முதலியோர் போதமும் அதிகாரமும் உடையவர்களாகையால் உபயபாவனையுடையோராவர். விசேஷமான ஞானகர்மங்கள் யாவும் க்ஷயிக்காமல் இருக்கும் வரையில் முன்பு சொன்ன விஸ்வரூபமான பிரமம் இருக்கிறது. தேவ மனுஷ்யாதி பேத ஞானத்தால் ஞானம் வேறுபட்ட ஜீவர்களைக் காட்டிலும் பரம் என்ற ரூபம் வேறானதாகவுள்ளது. அது ஜாதி முதலிய சகல பேதங்களும் அற்றது. வாக்குக்கும் எட்டாததாய் குறைவு முதலிய விகாரங்களின்றி என்றுமே ஒன்றாக, சுயம் பிரகாசமாயுள்ள ஞானஸ்வ ரூபமான வஸ்து! அதுதான் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவின் அமூர்த்த ஸ்வரூபமாகும்! முன்னே சொன்ன விசுவரூபத்தைக் காட்டிலும் விலக்ஷணமாய் மிகவும் உத்தமமாயுள்ளது! அரசே! அது யுஞ்சானாலே சிந்திக்கக்கூடாதது. ஆகையால் அந்த ஸ்ரீஹரியின் ஸ்தூலமான விசுவரூபத்தையே சிந்திக்கவேண்டும். வாசு தேவ அமிசமாய் பிரஜாபதியாக இருக்கும் இரணிய கர்ப்பனும், மருத்துக்களும், வசுக்களும்; ருத்திரர், சூரியர், நக்ஷத்திரங்கள், கிரகங்கள், கந்தர்வர், யக்ஷர், தைத்தியர் முதலியோரும் சகலமான தேவயோனி விசேஷங்களும், மனுஷ்யரும் மிருகங்களும், மலைகளும், மரங்களும், கடல்களும் நதிகளும் மற்றும் உள்ள சகல பூதங்களும் பூதங்களின் காரணங்களும் சேதனாசேதன ரூபமாய் ஏகபாதம்; துவிபாதம் அநேக பாதம் உள்ளதும் பாதமில்லாததும் சகலமும் ஸ்ரீஹரிபகவானின் மூர்த்த ஸ்வரூபமேயாகும்! இது சிந்திக்கக் கூடியது. ஆயினும் மூன்று பாவனைகள் உள்ளத்தால் சுத்தமன்று இத்தகைய இந்த உலகம் எல்லாம் பரப்பிரம சொரூபியான ஸ்ரீவிஷ்ணுவின் சக்தியினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறது. முன்பு சுத்த ஞான பிரமஸ்வரூபம் என்று சொன்னதே பரமான விஷ்ணு சக்தி இந்த இரண்டும் அல்லாமல் அவித்தை என்றும் கர்மம் என்றும் சொல்லப்பட்ட மூன்றாவது சக்தியும் உண்டு. இதனால் சூழப்பட்டே ÷க்ஷத்திரஞ்ஞன் என்னும் சக்தி; பரவி நிற்கிற சகல சம்சார தாபங்களையும் பெறுகிறது.
இதனால் மறைக்கப்பட்டுத்தான் தாரதம்மியமுள்ளதாய் காணப்படுகின்றது. எப்படியெனில், அசேதனங்களிலே இந்தச் சக்தி மிகவும் அற்பமாகவுள்ளது. தாவரங்களில் இது கொஞ்சம் அதிகமாகவும், ஊர்கின்ற ஜந்துக்களில் அதற்கும் அதிகமாயும் மிருகங்கள்; பறவைகள், மனிதர் பக்ஷிகள் கந்தர்வர்கள் தேவதைகள் ஆகிய இடங்களில் இந்தச் சக்தி மிகவும் இருக்கிறது. தேவதைகளிடம் இருப்பதைக் காட்டிலும் தேவேந்திரனிடம் அதிகம். பிரஜாபதியிடமோ அவனைவிட அதிகம். இரணிய கர்ப்பனிடத்தில் அதிலும் மேற்பட்டுள்ளது. அரசே! இந்தச் சகல ரூபங்களும் எம்பெருமானுடைய சரீரங்களேயாம்! இவையெல்லாம் ஆகாயத்தினால் முழுவதும் வியாபிக்கப்பட்டது போல், எம்பெருமானின் சக்தி; சங்கல்பத்தினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறது! யோகிகளால் தியானிக்கத்தக்கப் பிரமமான அந்த விஷ்ணுவினுடைய ரூபம் வித்வான்களால் சத்து என்று சொல்லப்படும். அமூர்த்த ரூபமாகும். இந்தச் சகல சக்திகளும் நிலைப் பெற்றிருப்பதாயும், விசுவரூப விலக்ஷணமாயும்; குணாதிகளாலே பெருமை பெற்றிருப்பதான ஸ்ரீஹரியின் வேறு ரூபம் ஒன்று உண்டு. எல்லாச் சகதியுமுள்ள அந்த ஸ்வரூபம்தான், லீலா விசேஷத்தினால் தேவதைகள், திரியக்குகள், மனிதர் முதலானோருடைய செய்கைகளுள்ள அவதாரச் சிறப்புக்களைச் செய்கிறது. அப்பிரமேயனான அந்த எம்பெருமானாலே அவதார ரூப வியாபாரமானது, லோகோபகாரத்துக்காகத் திருவுள்ளம் பற்றப்பட்டதேயன்றி மற்றவர்களுக்குப் போலக் கர்மத்தைப் பற்றி அறியப்பட்டதன்று ஆகையால் இது சகல ஜாதிகளிலும் வியாபித்ததாயும் இருக்கிறது. விஸ்வரூபனாகிய அவனுடைய இந்த ரூபம் எல்லாப் பாதகங்களையும் போக்கும்படியானதினால், ஆன்மாவுக்குத் தூய்மையுண்டாகும் பொருட்டு யோகப் பயிற்சி செய்யப்புகுந்வன் இந்த ஸ்வரூபத்தையே தியானிக்க வேண்டும். அக்கினியானது எப்படிக் காற்றுடன் சேர்ந்து, மஹாச் சுவாலைகள் வளரப்பெற்று, ஒரு புதரைக் கொளுத்தி நாசஞ் செய்யவல்லதோ, அப்படியே யோகிகளின் இதயத்தில் இருந்து ஸ்ரீமகாவிஷ்ணு சமஸ்த பாதங்களையும் தகித்து அருள்வார். ஆகையால் சமஸ்த சக்திகளுக்கும் ஆதாரமான அந்தத் திவ்வியத்திருவடிவிலே மனதை நிறுத்தவேண்டும். அது தான் தூய்மையான தாரணை எனப்படும்! அரசே! எங்கும் திரிந்து அலைந்த பிறகு அந்த விஷயத்தைப்பற்றி அசையாமல் இருக்கும் மனதுக்கு மூவகைப்பட்ட பாவப் பாவனைகளைக் கடந்த அந்த ஸ்வரூபந்தான், யோகிகளுக்குரிய மோக்ஷ ஏதுவான சுபாசிரயம் என்று அறிவீராக. அரசே! மற்றும் இதயத்துக்கு ஆசிரயமான தேவாதி ஸ்வரூபம் யாவும் கருமவயப்பட்டவை. ஆகையால் அசுத்தங்களேயாம். ஆகையால் மற்றவற்றை விரும்பாமல், அந்த எம்பெருமானுடைய தூய்மையான மூர்த்தரூபத்தைத் தியானிப்பதே தாரணையாகும். சித்தத்தில் தரிப்பது ஆதாரமின்றித் தாரணை கூடாது. ஆகையால் ஸ்ரீ ஹரியினுடைய எந்தரூபம் சிந்திக்கப்பட வேண்டுமோ அந்தப் பகவத் ஸ்வரூபத்தைச் சொல்கிறேன். கேட்பீராக;
பிரசன்னமான திருமுகமும், அழகிய தாமரையிதழ் போன்ற திருவிழிகளும் சமமான திருச்செவிகளும் விசாலமான பலகை போன்ற திருநெற்றியும், அழகிய செவிகளில் தரித்த அழகிய குண்டலங்களும் வலம்புரிச் சங்கு போன்ற கண்டமும், பரந்ததும் ஸ்ரீயும் ஸ்ரீவச்சம் என்ற திருமறுவும் பொருந்தியதுமான திருமார்பும், மடிப்புகளால் மூன்று பிரிவுள்ளதும் ஆழ்ந்த கொப்பூழ் உள்ளதுமான திருவுதரமும், நீண்ட எண்புயங்களும் அல்லது நாற்புயங்களும், சமமான திருத்தொடைகளும், கணுக்கால்களும், தாமரை மலர் போன்ற திருத்தாள்களும், நிர்மலமான பீதாம்பரமும், கிரீடஹார கேயூர கடகாதி திவ்வியாபரணங்களும் விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுவாகிய பரப்பிரமத்தைத் தியானிக்க வேண்டும். மேலும் சார்ங்கம், சங்கம் கதை கட்கம் சக்கரம், அக்ஷமாலை ஆகியவற்றை திருக்கரங்களிலே தாங்கி மற்ற விகண்டில் வரஹஸ்தமும், அபய ஹஸ்தமும் விளங்கத் தியானிக்கவேண்டும். சதுர்ப் புஜமாகத் தியானிப்பதானால் சங்கு, சக்கர, கதைகளும், தாமரைமலரும் ஏந்தியுள்ளதாய்த் தியானிக்கவேண்டும். இத்தகைய திவ்விய ஸ்வரூபத்தை நிலை நின்ற மனத்தால் தாரணை உறுதிப்படும் வரையில் தியானிக்க வேண்டும். தாரணை உறுதிப்படுதலாவது நடக்கும்போதும், உட்காரும் போதும் வெறெந்தச் செய்கைசெய்யும் போதும் அந்த ஸ்வரூபம் மறையாமல் தோன்றிக் கொண்டேயிருப்பதேயாகும். அப்படியானால்தான் தாரணை சித்தியானது என்று அறியலாம். இவ்விதம் தியானம் உறுதியான பிறகு, சங்க சக்கராதி ஆயுதங்களில்லாமல் அக்ஷமாலை மட்டுமே உள்ளதாயும் மிகவும் சாந்தமாயும் அந்த ஸ்வரூபத்தைச் சிந்திக்கவேண்டும். இந்தத் தாரணையும் முந்திய தாரணையைப்போல் ஸ்திரப்பட்டவுடன், கிரீடம் முதலிய திவ்விய பூஷணங்களை ஒழித்து, அந்த ரூபத்தைத் தியானிக்க வேண்டும். இவ்விதமாக ஆயுதங்களும் ஆபரணங்களும் திருக்கை முதலிய உறுப்புக்களும் நன்றாகக் கிரகிக்கப்பட்ட பிறகு, அந்தந்த உறுப்புக்குப் பிரதானமான ஒரு திருமேனியோடு கூடியவனாக அந்த எம்பெருமானைச் சிந்திக்க வேண்டும். இவ்விதம் தாரணை செய்த பிறகு, முன்னே சொன்ன அவயவங்களையுடைய அவயவியினிடத்தே மனதைச் செலுத்த வேண்டும். அந்தத் தாரணையிலேயே சித்தம் நிலைப்பதே தியானமாகும்! இது முன்சொன்ன ஆறு அங்கங்களால் ஏற்படுத்தப்படும். அத்தகைய சொரூபத்துக்கே நாமரூபாதி கற்பனைகள் இல்லாத சொரூபத்தைத் தியானங்கொண்ட மனத்தாலே கிரகிப்பது சமாதி எனப்படும்.
காண்டிக்கியரே! அடையத் தக்கதான பரப்பிரமத்தை அடைவிப்பது இந்த விஞ்ஞானமேயாகும். இதைக்கொண்டு அடைவிக்க வேண்டியது மூன்று பாவனைகளையும் கடந்த ஆன்மா! மாயையால் மறைக்கப்பட்ட ஸ்வரூபனாக இருந்த ஆன்மா, இந்தச் சாதனத்தையுடையவன். இந்த ஞானமே சாதனம். இந்த ஞானமானது அவனுக்கு மோக்ஷம் என்ற காரியத்தை உண்டாக்கிப் பிறகு திரும்பிவிடும். அதனால் இந்த ஆன்மா பரமபிரமத்தினுடைய குற்றமின்மை முதலிய தன்மைகள் உண்டாகப் பெற்றவனாய் அந்தப் பரமாத்மாவோடு வாசியற நிற்கும். அவனுக்கு முன்பு இருந்த பேதமானது அஞ்ஞானத்தால் வந்ததேயாம். ஞான ஸ்வரூபமான ஆன்மாவிலே தேவ மனுஷ்யாதி பேதத்தை உண்டாக்கும்படியான அஞ்ஞானமானது வேரற்றுப் போகுமளவில், ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இல்லாத வித்தியாசத்தை எவன்தான் கற்பனை செய்ய இயலும்?
காண்டிக்கியரே! நீர் கேட்ட அஷ்டாங்க யோகத்தை நான் உமக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இன்னும் உமக்கு நான் சொல்ல வேண்டுவதும் செய்யவேண்டுவதும் யாது? என்று கேசித்துவஜர் கேட்டார். அதற்கு காண்டிக்கியர், ஓ கேசித்துவஜரே! யோக சொரூபம் அறியும்படி நீர் செய்த உபதேசத்தால் என் சித்தத்தின் மலம் முழுவதும் அழிந்தது. அதனால் யாவும் எனக்குச் செய்யப்பட்டவையாயின. இப்போது நானும் எனக்கு என்று சொன்னதும் சரியானதல்ல, ஆயினும் பரமாத்தும சாக்ஷõத்தன்மை பெற்றவர்களுக்கும் நான் எனது என்று சொல்லாமல் பேசவே முடிவதில்லையே? நான் எனது என்பது அந்யதா ஞானமாம். இதனால்தான் ஆடு, மாடு, ஆண், பெண் முதலிய வழக்கங்கள் உண்டாகின்றன. பரமார்த்தமான ஆன்ம ஸ்வரூபமோ சொல்லுக்கு எட்டாதது. ஆகையால் சொற்களாலே சொல்லப்படாதது. இனி தேவரீர் தம் இடத்திற்குப் போகலாம் என்று சொல்லி அவருக்குத் தக்கபடி உபசாரம் செய்தார். கேசித்துவஜரும் தம் பட்டணத்துக்குப் போய்விட்டார்.
பிறகு, காண்டிக்கியர் குமாரனை அரசனாக அமர்த்திவிட்டு, ஸ்ரீகோவிந்தனிடம் மனம், வைத்து யோக சிந்தனையின் பொருட்டு, அதற்குத் தகுதியான ஒரு வனத்துக்குச் சென்று, ஒரே பிடிப்புடைய புத்தியுடன் யமாதி குணங்களுடன் கூடி நின்று நிர்மலமான ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய பிரம்மனிடத்திலே நாம ரூபகர்மங்கள் வேரோடு அற்று நிற்பதாகிய லயத்தையடைந்தார். கேசித்துவஜரும் மோக்ஷத்துக்காகத் தரும கர்மங்களையெல்லாம் போக்கும்படியான முயற்சியுடன் ராஜ்ய சம்பந்தமான விஷயங்களை அனுபவித்துக் கொண்டும், பயனைக் கருதாமலேயே கர்மங்களைச் செய்து, கர்ம பயன்களைக் கழித்ததால், பிரார்த்தம் யாவும் நாசமாக, சகல தாபங்களும் க்ஷயிப்பதாகிய மோக்ஷ சித்தியை அடைந்தார்.

——————-

8. நூற் பயன்-

மைத்ரேயரே! சாசுவதமான பிரமத்தோடு சேர்வதாகிய மோக்ஷம் என்று சொல்லப்படும் மூன்றாவது பிரளயம் எதுவோ, அந்த ஆத்தியந்திகப் பிரளயத்தை நான் உமக்குச் சொல்லிவிட்டேன். இவ்விதமாக, சர்க்கம், பிரதிசர்க்கம், வம்சம், மனுவந்தரம், லம்சானு சரிதம் முதலியவற்றைத் தெள்ளத் தெளிவாக அறிவித்தேனல்லவா? இந்த ஸ்ரீவிஷ்ணு புராணம் எல்லாவிதமான பாதகங்களையும் நாசஞ்செய்யவல்லது. எல்லாச் சாஸ்திரங்களுக்கும் மேம்பட்டது. புருஷார்த்தங்களை நன்றாக விவரிக்கும் திறனையுடையது. நீங்கள் மிகவும் ஆதரவோடு கேட்டதால் இதை உமக்கு நன்றாகச் சொன்னேன். இன்னும் நீங்கள் கேட்க வேண்டுவது யாதாயினும் இருந்தால் கேளும். நான் அதையும் சொல்கிறேன் என்று பராசரமகரிஷி கூறியதும் மைத்திரேயர் விண்ணப்பஞ் செய்யலானார்.
சுவாமி! அடியேன் கேட்டவைகளையெல்லாம் தாங்கள் கூறியருளினீர்கள்! இனி நான் கேட்க வேண்டுவது ஒன்றுமில்லை எல்லாச் சந்தேகங்களும் நீங்கின மனம் நிர்மலமாயிற்று. தேவரீரது அனுக்கிரகத்தால் உற்பத்தி ஸ்திதி லயங்களை அறிந்தேன். இந்தப் படைப்புக்கு ஏதுவானஎம்பெருமானும் பிரம்மா தக்ஷன் விஷ்ணு மனுமுதலானவர்களும் ருத்திர காலாந்தகாதிகளான நான்கு ராசிகளையும் அறிந்தேன். மேலும் முக்யம் வியத்தம் காலம் என்ற மூன்று விஷ்ணு சத்திகளையும் பிரமபாவனை கர்மபாவனை உபயபாவனை என்ற மூன்று பாவனைகளையும் முழுமையாய் அறிந்தேன் குருநாதரே! தேவரீரது பிரசாதத்தால் முக்கியமாய் அறியவேண்டுவனவற்றை அறிந்தேன். அதாவது யாவும் ஸ்ரீவிஷ்ணுவுக்குத் திருமேனியாய் அவனியில் வேறாகாமல் இருக்கிறது என்பதேயாம். ஆகையால் அடியேன் சந்தேக விபரீதங்கள் இன்றிக் கிருதார்த்தனானேன். தேவரீரது கிருபையால் வர்ணாசிரமாதி சகல தர்மங்களையும் பிரவர்த்தி தர்மம் நிவர்த்தி தர்மம் ஆகியவற்றையும் அறிந்தேன். இனி கேட்க வேண்டியது ஒன்றுமில்லை. அடியேனிடத்தில் தாங்கள் என்றும் பிரசன்னராக எழுந்தருளியிருக்க வேண்டும். சகலார்த்தங்களையும் அருளிச் செய்யும் மகரப்பிரயாசையை அடியேனால் அனுபவித்தீர்களே! அடியேன் செய்த இந்த அபசாரத்தை மன்னித்தருள வேண்டும். பெரியோர் புத்திரனுக்கும் சிஷ்யனுக்கும் வேறுபாட்டை எண்ணமாட்டார்களல்லவா? என்று மிக்க வணக்கத்தோடு மைத்திரேயர் விண்ணப்பிக்க பராசரர் மேலும் கூறலானார்.
ஓ, பிராமண உத்தமரே! உமக்குச் சொன்ன இந்தப் புராணம் வேதத்துக்குச் சமமானது. இதைக் கேட்பதால், ராகாதிதோஷங்களால் உண்டான பாபவகைகள் நசித்துப் போகும். இதில் சொன்ன சிருஷ்டி முதலிய ஐந்து அங்கங்களில், தேவதைகள், தைத்தியர் கந்தருவர் உரகர் ராக்ஷசர் யக்ஷர் வித்தியாதரர் சித்தர் அட்சரசுகள் பிரமத் தியானிளான மாமுனிவர்கள் ஆகியவர்களைப் பற்றிச் சொன்னேன். மேலும் பிராமணாதி வர்ணங்கள் நான்கும், புருஷருடைய உயர்ந்த சரிதங்களும், பூமியிலுள்ள புண்ணியமான பிரதேசங்கள், புண்ணிய நதிகள், புண்ணிய சமுத்திரங்கள், புண்ணிய மலைகள். ஞானவான்களின் சரிதங்கள், வர்ண தர்மங்கள், வேத சாஸ்திரங்கள் ஆகிய இவையெல்லாம் ஸ்மரணத்தாலேயே பாவம் நீக்கத்தக்கவை. இதுமட்டுமல்ல. ஜகத்தின் உற்பத்தி ஸ்திதி, நாசங்களுக்கு ஏதுவாயும் அவியயனாயும் சர்வ சொரூபியாகவும் யாவற்றுக்கும் ஆத்மாவாயும் ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களும் நிறைந்தவனாகவுமுள்ள ஸ்ரீஹரியும் இந்தப் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறான். யாருடைய திருநாமத்தைத் தற்செயலாய் ஒருவன் உச்சரித்தாலும், அவனுடைய சர்வ பாதகங்களும் சிங்கத்தைக் கண்ட அற்ப மிருகங்களைப்போல் விரைந்து ஓடுமோ பக்தியுடன் செய்யப்படுகின்ற எவனுடைய நாம ஸங்கீர்த்தனங்களால் சகலபாவங்களும் பெருநெருப்பில் விழுந்த தாதுக்களைப் போல லயப்பட்டுப் போகுமோ, எவனை ஒருமுறை நினைத்தவுடனேயே, அது உக்கிரமாயும் நரகதுக்கத்தைக் கொடுக்கத் தக்கதாகவும் இருக்கின்ற கலிகல்மஷமானது உடனே அழியுமோ, எவனுக்கு பிருமா, ருத்திரன், ஆதித்தர், வசுக்கள், சாத்தியர், அவிசுகள் விசுவதேவர் முதலான தேவ யோனிகளோடும் அஸ்வினி முதலிய நட்சத்திரங்களோடும், சூரியாதி சகல கிரகங்களோடும் சப்தரிஷிகளோடும் மற்றுமுள்ள அந்தந்த லோகங்களோடும் அந்தந்தலோகாதிபதிகளோடும் பிராமணாதி மனுஷ்யர்களோடும் பறவைகள் சிங்கம் முதலிய கொடிய மிருகங்களோடும் பாம்பு முதலிய ஊர்வனவற்றோடும், பலாசு முதலிய மரங்களோடும் அவற்றிலுள்ள பெருங் கடல்கள் நதிகள் பாதாளங்களோடும் அவற்றிலுள்ள ஜந்துக்களோடும் சப்தாதி விஷயங்களோடும் ஆவரணங்களோடும் கூடிய இந்தப் பிரமாண்டம் மேருவுக்கு ஓரணுப்போல எவனுக்கு ஏகதேசமாக இருக்கிறதோ யாவும் அறிந்தவனாய் எல்லாமும் உள்ளவனாய் எல்லாச் சொரூபமும் உடையவனாய் யாதொரு சொரூபமும் இல்லாதவனாய் சகல பாபநாசனாயுள்ள அந்த ஸ்ரீவிஷ்ணு பகவான் இந்தப் புராணத்தில் முக்கியமாகத்துதிக்கப் பட்டிருக்கிறார். இத்தகைய இந்தப் புராணத்தைக் கேட்பவன் அஸ்வமேதயாகத்தின் அவபிரதத்தில் ஸ்நானம் செய்தபயனை அடைவான்.
பிரயாகையிலும் புஷ்கரத்திலும் குரு ÷க்ஷத்திரத்திலும் சேதுபந்தன மகா சமுத்திரத்திலும் உபவாச விரத அனுஷ்டானஞ்செய்தவன் எந்த பயனை யடைவானோ, அந்தப்பயனை இந்தப் புராணத்தைக் கேட்டவன் அடைகிறான். மைத்ரேயரே! ஒருவன் அக்கினியை ஓராண்டுக்காலம் நன்றாக ஓமத்தால் ஆராதனை செய்துவந்தால் எந்தப் பயனை அடைவானோ அந்த நற்பயனை இதனை ஒருக்கால் கேட்டால்பெறுவான். ஒருவன் ஜ்யேஷ்டமாதத்தில் சுக்கிலபட்ச துவாதசியில் யமுனா நதியில் குளித்து நீராடி ஸ்ரீமதுராபுரியில் ஸ்ரீகிருஷ்ணனை ஆராதித்தால் உண்டாகும் பயனை கேசவனிடத்திலே மனம்வைத்து இப்புராணத்தில் ஒரு அத்தியாயத்தைக் கேட்பதனால் பெறுவான். ஜ்யேஷ்டமாதத்துச் சுக்கிலபக்ஷத் துவாதசியில் முன்னதாக உபவாசம் இருந்து யமுனையில் நீராடி மதுரையில் ஸ்ரீ மாதவனை ஆராதிப்பவனுக்கு குறைவற்ற அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். இத்தகைய புண்ணியவான்களான தங்கள் குலத்தாராலே, மேன்மையடைவிக்கப்பட்ட சிலருடைய செல்வத்தைக் கண்டு, பிதுர்க்கள் சொல்லியதாவது, நமது குலத்தில் பிறந்த எவனாவது யமுனா நதியில் நீராடி, உபவாசம் இருந்து ஜ்யேஷ்ட சுக்கில துவாதசியிலே மதுரையில் ஸ்ரீஜனார்த்தனனை அர்ச்சிப்பானானால் நாமும் பிறரைப் போலவே கரையேறினவர்களாய், மோக்ஷம் என்ற மேலான செல்வத்தைப் பெறுவோம். அல்லவா? ஜ்யேஷ்ட சுக்கில துவாதசியில் சுவாமியை ஆராதனை செய்து, பிதுர்க்களுக்கு யமுனையில் பிண்டத்தை எவன் போடுவான் என்றால், புண்ணியஞ் செய்தவர்களின் குலத்தில் பிறந்தவன்தான் போடுவான் என்று பிதுர்க்கள் ஆசைப்படுகின்றனர். இவ்விதமாக அந்தப்புண்ணிய தினத்திலே, யமுனா ஸ்நானம் செய்து ஸ்ரீகிருஷ்ண பகவானை ஆராதித்து, பிதுர்க்களுக்குப் பிண்டம் இடுவதனால் எந்தப்பயன் உண்டோ, அந்தப் பயனை இந்தப் புராணத்தின் அத்தியாய சிரவணத்தால் பெற்றுப் பிதுர்க்களைக் கடைத்தேற்றுவான். இந்தப்புராணம் சம்சாரத்திற்கு அஞ்சியவருக்கு ரக்ஷகமாயும் கேட்கத் தக்கவைகளில் மேம்பட்டதாயும், தூய்மையானவற்றிலெல்லாம் பரிசுத்தமாயும், தீயகனவுகளை அழிக்கவல்லதாயும் சகல தோஷங்களையும் போக்க வல்லதாயும், மக்களுக்கெல்லாம் மேலான மங்களமாயும் புத்திர சம்பத்தைத் தரத்தக்கதாகவும் விளங்குகிறது.
ஆதியில் ஸ்ரீமந் நாராயண மகாமுனிவரால் செய்யப்பட்ட இந்தப் புராணத்தை கமலோற்பவர் ருபு என்பவருக்கு உபதேசித்தார். அந்த ருபு இந்தப் புராணத்தைப் பிரியவிரதருக்குச் சொன்னார். அவர் பாகுரிக்கும் அந்தப் பாகுரி ஸ்தம்பமித்திரருக்கும் சொன்னார். அவர் ததீசருக்கும்; அவர் சாரஸ்வதிக்கும் அந்தச் சாரஸ்வதர்பிருதுவுக்கும் அவர் புருகுச்சருக்கும் அவர் நர்மதைக்கும் அவள் திருதராஷ்டிரர் விபூரணன் என்ற நாகர்களுக்கும்; அந்த இருவரும் நாகராஜனான வாசுகிக்கும் அந்த வாசுகி வச்சருக்கும் அவர் அசுவத்தாமருக்கும் அவர் கம்பளருக்கும் அவர் ஏலா புத்திரருக்கும் சொன்னார்கள். இவ்விதமாகப் பாதாள லோகத்தில் பரவியிருந்த இந்தப் புராணத்தைப் பாதாள லோகத்துக்குப் போயிருந்த வேதசிரசு என்ற முனிவர் பெற்று வந்து பூலோகத்தில் பிரமதி என்பவருக்குக் கொடுத்தார். அவர் இதனை ஜாதுகர்ணருக்குக் கொடுத்தார். அவர் இதனை அநேகப் புண்ணியசாலிகளுக்குச் சொன்னார். புலஸ்திய மாமுனிவருடைய வரப்பிரசாதத்தால் இந்தப் புராணம் எனக்கும் ஞாபகத்துக்கு வந்தது மைத்திரேயரே நானும் உமக்கு உள்ளபடி இந்தப் புராணத்தை அறிவித்தேன். நீரும் இதை இந்தக் கலியுகத்தின் முடிவிலே சினீகர் என்பவருக்குச் சொல்லுவீர்.
இந்த மகாபுராணம் பரம இரகசியமாயும் கலிதோஷ நாசனமாயும் இருப்பதை எவன் பக்தியுடன் கேட்பானோ, அவனுக்குப் பாபங்கள் யாவும் தீரும் தினந்தோறும் இந்தப் புராணத்தைக் கேட்பவனுக்குச் சகல தீர்த்த ஸ்நான பலனும் சகல தேவதா ஸ்தோத்திரப் பலனும் கிடைக்கும். இந்தப் புராணத்தில் பத்து அத்தியாயத்தைக் கேட்டவுடன் காராம் பசுவைத் தானஞ் செய்வதால் உண்டாகும் அருமையான புண்ணியம் கிடைக்கும். இதில் ஐயமில்லை எவன், சகல சரீரகனாய், சர்வ வியாபியாய் சகல லோகத்துக்கும் ஆதாரமாய் தன்னிலேதான் இருப்பவனாய், ஞானத்தினாலேயே அறியத்தக்கவனாய், ஆதியந்தம் இல்லாதவனாய்ச் சகல தேவதைகளுக்கும் இதனாயுமுள்ள ஸ்ரீ அச்சுதனை நினைத்துக்கொண்டே இந்தப் புராணத்தை முழுமையாகக் கேட்பானோ அவன் பக்தியோடு அசுவமேத யாகம் செய்த பயனை அடைவான். எந்தப் புராணத்தின் ஆரம்பத்திலும் நடுவிலும் முடிவிலும் சராசர குருவாயும் பிரமஞான சொரூபியாயும் சகல ஜகத்துக்கும் சிருஷ்டி, ஸ்திதி, சங்கார கர்த்தாவாகவுமுள்ள அச்சுத பகவான் துதிக்கப்பட்டிருக்கிறானோ அத்தகைய புராணத்தை முழுதும் கேட்பவனும், படிப்பவனும், சொல்பவனாயும் இருப்பவனுக்கும் வருகிற பயனை இப்படிப்பட்டதென்று சொல்வதற்கு மூவுலகத்திலும் ஒப்பில்லை ஒப்பற்ற மோக்ஷ சாம்ராஜ்யத்தைத் தரவல்ல ஸ்ரீஹரி பகவானே; பயனாகிறானன்றோ? எவனிடத்தில் மனம் வைத்தவன் நரகத்தில் புகமாட்டானோ எவனைத் தியானிக்கச் சுவர்க்கமும் இடையூறாக இருக்குமோ; எவனிடத்தில் மனம் பற்றியவர்க்கு பிரம லோகமும் அற்பமாகத் தோன்றுமோ; எவன் நிர்மல ஞானியருக்கு இதயத்தில் இருந்து கொண்டு; முக்தியை அளிக்கிறானோ அத்தகைய அச்சுதனைத் துதிப்பதனால் பாவம் தீரும் என்பது ஒரு விந்தையா? யக்ஞேசுவரனான எவனை யக்ஞமறிந்தவர்களான கர்மிகள் யக்ஞங்களினால ஆராதிக்கிறார்களோ; ஞானியர் எவனைப் பரம சொரூபியாகவும் தியானிக்கிறார்களோ; எவனை நினைப்பவன் பிறப்பு இறப்புக்களையும்; அறிவு, தேய்வு; வளர்ச்சிகளையும், காரிய காரணங்களாக இருத்தலையும் அடைவதில்லையோ; அத்தகைய ஸ்ரீஹரியைக் காட்டிலும் கேட்கத்தக்க பொருள் வேறு எதுவுண்டு?
ஆதியந்தங்கள் இல்லாதவனாய்ப் பிரபுவான எவன் பிதுர்ரூபியாக இருந்து விதிப்படி இடப்பட்ட கவியத்தையும் தேவ ரூபியாக இருந்து ஓமஞ் செய்யப்பட்ட அவியத்தையும் புசிக்கிறானோ; பிராமணமுடையவருக்கு எந்தப் பிரமாணமும் சகல சக்தி ஸ்தானமாயும் பிரமமாயும் இருக்கிற எவன் விஷயத்தில் ஒரு பரிச்சேதம் செய்யவொண்ணாதோ அத்தகைய ஸ்ரீஹரி பகவான்; காதிற்பட்டவுடன் சகல பாவத்தையும் போக்கி விடுவான் எவனுக்கு முடிவும் உற்பத்தியும் இல்லையோ; பரிணாமம் இல்லாத எவனுக்கு விருத்தி யக்ஷங்களில்லையோ; எவன் விகாரமற்ற வஸ்துவாக இருக்கிறானோ; புரு÷ஷாத்தமனாயும் துதிக்கத் தக்கவனாயுமுள்ள அந்த சர்வேசுவரனின் திருவடியைத் தொழுகிறேன். எவன் அந்தப்பரமபுருஷனுக்கு அநுகுணமானதையே அனுபவிக்கும் படியான சேஷபூதனாக இருக்கிறானோ, எவன்தேவாதி பேதங்களின்றி ஞானமே வடிவாகக்கொண்டு, ஒருவனாக இருந்தும் தேவதை முதலான தேகங்களைக்கொண்டு, அவற்றில் தான் என்னும் மயக்கமுற்றதனாலே, அநேகனாய், அசுத்தனாய் தோன்றுகிறானோ, எவன் ஞானத்தோடுங் கூடியவனாய் மஹத் முதலிய சகல தத்துவங்களையும் பரவச் செய்வதற்குக் கர்ம மூலத்தால் கர்த்தாவாக இருக்கிறானோ எப்பொழுதும் அவியயனாயுள்ள எம்பெருமானுடைய ஸ்வரூபமான அந்தப் பரம புருஷனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கின்றேன்.
எது, அறிவு பரவுதலும் அசையாது நிற்றலும் சேர்ந்து லயப்பட்ட ஸ்தானமாக இருக்கின்றதோ, எது ஆன்மாவுக்குப் பாவ புண்ணிய அனுபவயோக்கியமான தேகாதிகளைத் தரவல்லதாய் முக்குண வடிவாக இருக்கின்றதே மகத்து முதலிய அவஸ்தைகளை அடையாததாயும் சம்சார உற்பத்திக்குக் காரணமாயும் தானே உண்டானதாயும் எப்போதும் அழியாததாயும் உள்ள பிரதானமானது எது உண்டோ, எம்பெருமானுடைய ஸ்வரூபமான அதனைத் தொழுகின்றேன். வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகியவற்றின் செயல் வடிவமாயும் சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்ற விஷயங்களாகிய போக்கிய பதார்த்தங்களைக் கொடுத்து வருவதாயும் ஆன்மாவுக்கு ஞானேந்திரிய கர்மேந்திரியங்களைக் கொண்டு உபகாரஞ் செய்வதாயும் சூக்ஷ்மமும் ஸ்தூலமுமான சொரூபமும் உடையதாயுமுள்ள வியக்தம் என்கின்ற பகவானுடைய சொரூபத்தைப் பணிகிறேன். இவ்விதம் பலவகைப்பட்ட வியக்தாவியக்த பிரகிருதிகளும் அப்பிராகிருத திவ்விய மங்கள விக்கிரமும் ஆத்துமாவும் அஜனாய் எப்போதும் உள்ளவனான எவனுக்கு ஸ்வரூபமோ அந்த ஞானாதி ஐசுவரியம் உள்ள ஸ்ரீஹரி பகவான் சகல ஆன்மாக்களுக்கும் பிறப்பு இறப்பு மூப்பு முதலிய குற்றங்கள் இல்லாத மோக்ஷ சம்பத்தைத் தந்தருள வேண்டும் என்று பராசர மகரிஷி மைத்திரேய முனிவருக்கு இந்த ஸ்ரீவிஷ்ணு புராணத்தையும் சொல்லி இந்த நூற்பயனையும் சொல்லி பகவானைப் பிரார்த்தித்து இதனை அருளிச் செய்தார்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் சம்பூரணம்
ஓம் நமோ ஸ்ரீவாசுதேவாய
ஆறாவது அம்சம் முடிந்தது. விஷ்ணு புராணம் முற்றிற்று.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஐந்தாவது அம்சம்——

February 28, 2021

1. திருமண ஊர்வலமும் தேவர்களின் பிரார்த்தனையும்
2. தேவகியைத் தேவர் போற்றுதல்
3. கிருஷ்ணாவதாரம்
4. கம்சனின் கட்டளை-
5. பூதகியின் வதம்
6. சகடயமளார்ச்சுன பங்கம்
7. காளிய மர்த்தனம்-
8. தேநுகாசுரன் வதம்-
9. பிரலம்பாசுரன் வதம்
10. கோவர்த்தன ஆராதனம்-
11. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பீடித்தல்
12. ஸ்ரீகோவிந்தப் பட்டாபிஷேகம்
13. ராஸக் கிரீடை
14. அரிஷ்டாசுர வதம்
15. அக்குரூரருக்குக் கம்சனின் கட்டளை!
16. கேசி வதம்
17. அக்குரூரர் கண்ணனைக் காணுதல்
18. கண்ணனைப் பிரியும் கோபியரின் கலக்கமும் அக்குரூரர் கண்ட தெய்வீகக் காட்சியும்!
19. மதுரையை அடைதல்
20. அழகான கூனியும் கம்சவதமும்
21. ராஜசபையும் குருதக்ஷணையும் கொடுத்தல்-
22. ஜராசந்தனை ஜெயித்தல்
23. யாதவரின் பரிகாசமும் துவாரகா நிர்மாணமும்!
24. முசுகுந்தனுக்கு கண்ணனின் அருளும் ஆயர்பாடிக்கு பலராமர் வருகையும்!
25. பலராமரின் மோகமும் கோபமும்
26. ருக்மணிப் பிராட்டியார் திருக்கலியாணம்
27. மாயாவதியின் காதலும் சம்பராசுர வதமும்
28. கல்யாணத்தில் சூதாட்டம்
29. நரகாசுர வதம்
30. பாரிஜாத அபஹரணம்
31. பதினாறாயிரத்து நூறு கன்னியர் விளக்கம்
32. உஷையின் கனவும் காதலும்
33. உஷையின் காதல் உறவும் பாணாசுரப் போராட்டமும்
34. காசி தகனம்
35. பலராமர் சாம்பனை மீட்ட கதை
36. குரங்கனைக் கொன்ற கதை
37. பகவான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளல்

———————-

1. திருமண ஊர்வலமும் தேவர்களின் பிரார்த்தனையும்

மைத்ரேயர்! பராசர முனிவரை நோக்கி, குருவே! அரசர்களின் வம்சங்களைப் பற்றி விளக்கமாகச் சொன்னீர்கள்! யது குலத்தில் சர்வ வியாபகனாகிய ஸ்ரீமந் நாராயணன், பரிச்சேதப்பட்டுக் காண்பதால் அமிசம் என்று சொல்லத்தக்கதாய் எந்த அவதாரத்தைச் செய்து அருள் புரிந்தானோ, அந்த கிருஷ்ண அவதாரத்தைப் பற்றி அடியேனுக்கு விவரமாகக் கூறவேண்டுகிறேன். புரு÷ஷாத்தமனான பகவான், இந்தப் பூவுலகில் அம்சத்திலும் அம்சம் என்று எண்ணும்படியாக அவதரித்து என்னென்னவெல்லாம் செய்தருளினானோ, அவற்றையெல்லாம் திருவாய் மலர்ந்து கூறியருள வேண்டும்! என்று பிரார்த்தித்தார். பராசர முனிவர் அருள் கூர்ந்து சொல்லலானார்.
மைத்ரேயரே! நீங்கள் கேட்டது போலவே, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணாவதாரத்தையும் சரிதத்தையும் சொல்கிறேன். முன்பு தேவகனின் குமாரியாகவும் தேவ கன்னியருக்கு ஒப்பானவளுமான தேவகி என்பவளை வசுதேவர் திருமணஞ்செய்து கொண்டபோது மணப்பெண்ணின் சகோதரனான கம்சன், மணமக்களைக் கல்யாண ரதத்தில் ஏற்றித் தானே அந்தத் தேரை ஓட்டி ஊர்வலமாகச் சென்றான். அப்போது, ஆகாயத்தில் ஓர் அசரீரி கம்சனைத் தான் சொல்வதைக் கேட்கும் படி விளித்து, அட மூடா! நீ எந்தத் தங்கையை அவளது புருஷனோடு தேரில் ஏற்றிச் சென்று மிகவும் பிரியமாய் நடத்துகின்றாயோ, அந்தத் தங்கையின் எட்டாவது பிள்ளையே உன் உயிரை போக்கும்! என்று கம்பீரத்தொனியில் கூறியது. அதைக் கேட்டதும் கம்சன், தன் உடைவாளை உருவித் தன் தங்கை தேவகியை கொல்லத் துணிந்தான். அப்போது தேவகியின் புத்திளம் கணவரான வசுதேவர் தம் மைத்துனனான கம்சனை நோக்கி, நீ இந்த அபலையைக் கொல்ல வேண்டாம். இவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் நான் உனக்குத் தந்துவிடுகிறேன், நீ அவர்களை உன் இஷ்டப்படிச் செய்து கொள்! என்றார். அதற்கு இளகிய கம்சன், அப்படியே ஆகட்டும்! என்று ஒப்புக்கொண்டு தேவகியைக் கொல்லவில்லை. அந்தக் காலத்திலே பூமிதேவியானவள் பூபாரம் தாங்கமாட்டாமல், துன்பமடைந்து மகாமேரு பருவதத்தில் கூடிய தேவசபைக்குச் சென்று, பிரமதேவன் முதலிய தேவர்களை வணங்கி முறையிடலானாள்.
தேவர்களே! பொன்னுக்குப் பிதா அக்கினி! பசுக்களுக்குச் சூரியன் தந்தை! எனக்கும் சர்வ உலகங்களுக்கும் ஸ்ரீமந் நாராயணனே பிதா! பிரஜாபதிகளுக்கெல்லாம் பதியாகவும் முந்தியோருக்கு முந்தியவராயுமுள்ள நான்முகரும், கலை, காஷ்டை, நிமிஷம் முதலிய ரூபமோடுதோன்றாததான காலமும், ஆதித்தர், சாத்தியர், மருத்துக்கள், உருத்திரர், வசுக்கள், அசுவினி, தேவதைகள், அக்கினிகள், இயக்கர், அரக்கர், தைத்தியர், பைசாசர், நாகர், தானவர், கந்தர்வர் என்ற யாவருக்கும் அவ்வெம் பெருமானாகிய ஸ்ரீ விஷ்ணுவின் ரூபங்களல்லவா? ஆகாயமும், தீயும், தண்ணீரும், காற்றும், நானும், சப்தம் ஸ்பரிசம், கந்தம், ரூபம், ரசம் என்ற விஷயங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருமேனியே! இவையெல்லாம் கடலில் உண்டாகும். அலைகளைப் போல் ஒன்றோடொன்று பாதிப்பனவாகவும் பாதிக்கப்படுவனவாகவும் உள்ளன. இப்போது காலநேமி முதலான அசுரர்கள் பூவுலகில் பிறந்து இரவும் பகலும் பிரஜைகளைத் துன்புறுத்துகிறார்கள். முன்பு விஷ்ணுவினால் சங்கரிக்கப்பட்ட காலநேமி என்பவன் இப்போது உக்கிரசேனன் மகனாக, கம்சன் என்ற பெயரோடு பிறந்து விட்டான். இதுபோலவே, அரிஷ்டன், தேனுகன், கேசி, பிரலம்பன்! நரகன்! சுந்தன், பாணன் முதலியவர்களும் அரச குலங்களில் பிறந்தும் கொடுமை செய்து திரிகிறார்கள். அவர்களை எண்ணக் கூட எனக்குச் சக்தியில்லை, தேவர்களே! முன்பு கொன்ற அரக்கப் பிறவியரின் சேனைகள் மிகவும் அதிகரித்திருப்பதால் என்னால் பூபாரச் சுமையையும் பாபிகளின் சுமையையும் சுமக்க முடியவில்லை. ஆகையால் நான் மிகவும் பலவீனமடைந்து பாதாளம் போய்ச் சேராதவாறு நீங்கள் தான் என்மீது அன்பு கூர்ந்து என் சுமையைக் குறைக்க வேண்டும்! என்று பூமிதேவி இறைஞ்சினாள். அப்போது பிருமதேவன் தேவர்களே: பூமிதேவி சொன்னவை உண்மை தான் நானும் உருத்திரனும் நீங்களும் ஸ்ரீமந் நாராயணனுடைய சரீரங்களாகவே இருக்கிறோம். பகவானின் விபூதிகள் எவையுண்டோ. அவற்றின் உயர்வும் தாழ்வும் ஒன்றையொன்று பாதிப்பதற்கும் பாதிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன. ஆகையால் நாம் திருப்பாற் கடற்கரைக்குச் சென்று, ஸ்ரீயப்பதிக்குத் தண்டம் சமர்ப்பித்து, இவற்றையெல்லாம் விண்ணப்பம் செய்வோம். அப்படிச் செய்தால் சர்வஸ்வரூபியான பகவான் பூமி நிமித்தம் சாத்வீக அவதாரஞ் செய்து தருமத்தை நிலைநாட்டி அருள்வார்! என்று சொல்லி தேவர்களை அழைத்துக் கொண்டு திருப்பாற் கடற்கரையை அடைந்தார். அங்கே யோக நிஷ்டையிலிருந்த கருடத் துவஜனான மகாவிஷ்ணுவைத் தோத்திரஞ் செய்யலானார்.
சுவாமி! வேதங்களுக்கும் எட்டாதவனே! பிரம்ம விஷயமான, விவேகத்தால் உண்டாகும் ஞானமும் நீயே! சப்தப் பிரம்ம விஷயமான ஆகமத்தில் உண்டான பரமென்று அபரம் என்றும் சொல்லப்பட்டுள்ள இரு வித்தைகளும் நீயே! உபநிஷத்துக்களில் கூறப்படுபவைகளாய், ரூபப்பட்டதும் படாததுமாக இருக்கின்ற இரண்டுபிரமம் என்று சொல்லப்பட்ட பிரகிருதி புருஷங்களும் உனது ரூபங்களேயாகும்! ஸ்தூல சூஷ்மங்களுக்கு ஆன்மாவாக இருப்பவனே! சர்வ சொரூபியே! யாவும் அறிந்தவனே! ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் சிøக்ஷ, கல்பம், நிருத்தம், சந்தம், ஜோதிடம், வியாகரணம் என்ற வேதாங்கங்களுக்கும், இதிகாச புராணங்களும், தர்க்கம், மீமாம்சை, தர்ம சாஸ்திரம் என்பவைகளும் நீயே! ஓ அதோஷஜனே! கண் முதலியவற்றால் உணரக்கூடாததும், ஒன்றிற்குச் சமமானதாகக் காட்டக்கூடாததும், இப்படிப்பட்டதென்று மனத்தால் நினைக்கக்கூடாததும், தேவாதி நாமங்களும் சுக்லாதி வர்ணங்களும், கை கால் முதலிய அவயவங்களில்லாததும் கிலேச, கர்மாதிகளற்றவையுமான முக்தஸ்வரூபம் யாதுண்டோ அது நீயே! பரம சொரூபம் என்பதும் நீயே! நீ காதின்றிக் கேட்கிறாய்! கண் இல்லாமலே பார்க்கிறாய் ரூபமில்லாமலேயே இஷ்டமான அநேக ரூபங்களையெடுத்துக் கொள்கின்றாய்! ஒருவராலும் அறியப்படாமல் யாவற்றையும் அறிந்து கொள்கிறாய்? பரமாத்மாவே அணுவுக்கு அணுவாய் காணக்கூடாத சொரூபமுள்ளவனான உன்னைக் காண்பவனுக்கு அஞ்ஞான நிவர்த்தி அதிகப்படுகின்றது. இவ்விதமான உபாசகனுடைய புத்தியானது உனது மேன்மையான ரூபத்தையன்றி மற்றொன்றையும் கிரஹிப்பதில்லை. நீயே யாவற்றுக்கும் ஆதார பூதன் நீயே உலகங்களைக் காப்பவன். சகல பூதங்களும் உனக்குள் அடங்கியுள்ளன. உண்டானதும் உண்டாவதும் எதுவோ, அணுவுக்கும் அணுவாக இருப்பது எதுவோ, பிரகிருதிக்கு மேற்பட்ட புருஷன் எவனோ, இவையாவும் நீ ஒருவனேயன்றி வேறல்ல. எவன் ஒருவனாக இருந்தும் நால்வகைபட்டவனாகி, உலகிற்குத் தேஜஸையும் செல்வத்தையும் அளிக்கின்றானோ, அந்த அக்கினியும் நீயே! எல்லாப் புறங்களிலும் பார்வையுடையவனும் அளவில்லாத சொரூபமுடையவனுமான பகவானே! நீ திரிவிக்கிரம அவதாரஞ்செய்து மூவுலகங்களிலும் உன் திருவடியை வைத்தாய் சுவாமி! அக்கினியானது ஒன்றாக இருந்தும் ரூபம் மாறாமலே, அநேக வஸ்துக்களில் பற்றி அநேக ரூபமாய் விளங்குவதைப்போல், நீயும் எங்கும் வியாபித்த ஒரே சொரூபியாக இருந்தும் சகல சொரூபங்களிலேயும் பற்றியவற்றைப் பெருமையாக வளர்க்கிறாய் பிரகிருதி சம்பந்தமில்லாததும் ஒப்பற்றதும் ஒன்றேயாயுமுள்ள உனது மேன்மையான சொரூபம் யாதுண்டோ, ஞானத்தினாலேயே அறியத்தக்க அந்தச் சொரூபத்தை ஞானியரே காண்கின்றனர்.
முக்காலப் பொருள்களிலும் உன்னைவிட வேறானது ஒன்றும் இல்லை, காரணகாரிய ரூபங்களாய், சமஷ்டி வியஷ்டி என்று சொல்லப்பட்ட அவியக்தமும் வியக்தமுமான சொரூபமுடையவன் நீயே! சகல வியூகாதிகளுக்கும் காரணமாய் சமஷ்டி என்று சொல்லப்பட்ட வாசுதேவ மூர்த்தியாகவும் காரியமாய் வியஷ்டி என்று சொல்லப்பட்ட சங்கர்ஷண, அதிருத்த பிரத்தியும்ன மூர்த்தியாகவும் நீயே இருக்கிறாய்! யாவையும் அறிந்தவன் நீ; எல்லாவற்றிலும் பொருந்தியவன் – நீ எல்லாஞ் செய்யவல்ல சக்தி நீ! ஞான, பலாதிசய மேன்மையுடையவன் – நீ! வளர்ச்சியும் தேய்வும் இல்லாதவன்-நீ! ஒருவர்க்கும் உள்ளடங்காமல் சுவாதீனமாக இருப்பவன் – நீ ஆதியந்த சூனியனாகவும் யாவற்றையும் தன் வசத்தில் கொண்டவனாகவும் நீயே இருக்கின்றாய்! வாட்டம், சோம்பல், அச்சம், குரோதம், காமம் முதலிய துர்க்குணங்களுடன் நீயே கூடாமல் இருக்கின்றாய்! எம்பெருமானே! நீ யாதொரு குற்றம் இல்லாதவனாகவும், உன் கிருபையின்றி அடையக் கூடாதவனாகவும், எந்தவோர் ஆதாரம் இல்லாதவனாகவும் நித்தியனாகவும் தடையற்ற உற்சாகமுடையவனாகவும் இருப்பவன் நீயே! யாவற்றுக்கும் ஈச்வரனாயும் முக்கிய ஆதாரமாயும் தேஜசுகளுக்குத் தேஜசாக இருப்பவன் நீ! பிரகிருதி முதலிய ஆவரணங்களாலும் கர்மங்களினாலும் மூடப்படாதவனே! வேறு உபாயம் இல்லாதவராலே பாவிக்கக் கூடியவனே! திரிபாத்விபூதியில் எழுந்தருளியிருப்பவனே! புரு÷ஷாத்தமா! உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன் ஓ… ஸ்ரீயப்பதியே! நீ பலவிதமாய் செய்தருளும் அவதாரங்கள் யாவும் தருமத்தை நிலைப்பிக்கும் பொருட்டு, சுயேச்சையாலே உண்டாகின்றவையே தவிர, நரகானுபவஞ் செய்பவனின் துக்கானுபவத்திற்கும் அல்ல; சொர்க்கானுபவஞ் செய்பவரின் சுகானுபவத்திற்காகவும் அல்ல! பூமியில் உள்ளவர்களின் சுகதுக்க அனுபவத்திற்காகவோ, அல்லது தர்மாதர்களால் உண்டானவைகளோ அல்ல! என்று பிரமதேவர் துதித்தார்.
பிரம்மாவின் ஸ்தோத்திரத்தை ஸ்ரீயப்பதியானவர் திருவுளம் பற்றி மகிழ்ந்து, விஸ்வரூபங்காட்டி, நான்முகனே! தேவர்களுடன் சேர்ந்து எதை என்னிடத்தில் பெறவேண்டும் என்று நீ கருதினாயோ அதைச் சொல்வாயாக அது கிடைத்ததாகவே நினைப்பாயாக! என்று கூறியருளினார், அப்போது, பிரம்மா முதலிய தேவர்கள் சுவாமியின் விசுவரூபத்தைச் சேவித்தார்கள். மீண்டும் பிரம்மதேவர் எம்பெருமானைத் துதித்தார். அசுரர்கள் மனிதப் பிறவிகள் எடுத்து, தேவர்களுக்கும் மூவுலகத்தாருக்கும் துன்பம் இழைக்கிறார்கள் அதற்குச் செய்ய வேண்டியதெதுவோ அதனை நியமித்து அருள் செய்யவேண்டும்! என்று பிரம்மா பிரார்த்தித்தார். அப்போது எம்பெருமான் தமது திருமேனியினின்றும் வெண்மையும் கருமையுமான ரோமங்கள் போலக்காணப்பட்ட தேஜசுகளை எடுத்து, வானவரே! இந்த எனது தேஜசுகள் பூமியில் அவதரித்துப் பூமிக்குப் பாரத்தால் உண்டான துன்பத்தை நீக்கும் இத்தேவர்களும் தங்கள் அம்சத்தாலே; பூமியிற் பிறந்து முன் பிறந்த துஷ்ட அசுரர்களோடு நமக்கு லீலாசாதனமாகப் போர் செய்யக் கடவார்கள்! இதனால் அசுர அமிசத்தோடு பிறந்தவர்கள் நாசமடைவார்கள். இப்போது தேவர்களுக்கும் அசாத்தியமான அசுரர்கள் யாவரும் பூமியில் அழியும் காலம் ஆகும். இப்போது வசுதேவருடைய பத்தினியான தேவகி என்பவளின் எட்டாவது கர்ப்பத்தில் அவதரிக்கும் என்னுடைய தேஜசின் கடைக்கண் பார்வையிலே அசுரர்கள் பலவீனப்பட்டு சூர்ணமாவார்கள். இதை அறிவீர்களாக என் தேஜசு அவ்வாறு அவதரித்து, கம்சனாகப் பிறந்திருக்கும் காலநேமியைச் சங்கரிக்கும்! என்று நியமித்து ஸ்ரீபகவான் மறைந்தார். மைத்ரேயரே! இவ்வாறு கூறி மறைந்துபோன எம்பெருமானுக்குத் தண்டம் சமர்ப்பித்து, அமரர்கள் அனைவரும் மேருபர் வதத்தில் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு, இப்படியிருக்கப் நியமனப்படி, பூமியில் அவதரித்தார்கள். இப்படியிருக்கப் பூமியைத் தாங்கிக் காப்பாற்றுகின்ற சுவாமியானவர் தேவகியின் எட்டாங்கர்ப்பத்தில் அவதரிக்கப்போகிறார் என்பதை நாரதமுனிவர் வந்து கம்சனுக்குத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடனேயே, கம்சன் மிகவும் சினங்கொண்டு தேவகியையும் வசுதேவரையும் சிறையில் தள்ளிப் பலமான காவலும் போட்டு விட்டான்.
எம்பெருமானோ சகல லோகங்களையும் மோகிக்கத்தக்க யோக நித்திரை என்ற தமது மாயையைப் பார்த்து ஓ, மாயா! பாதாளத்தில் இருக்கிற இரண்ய கசிபுவின் குமாரர்கள் அறுவரையும் முறையே தேவகியின் கர்ப்பத்தில் சேர்ப்பாயாக. அந்த அறுவரும் சங்கரிக்கப்பட்டவுடன் எனது அம்சமாக இருக்கும் ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் பிறப்பான். வசுதேவனின் பத்தினியான ரோகிணி என்பவள் ஒருத்தி நந்தகோபனுடைய கோகுலத்தில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் இருக்கும் வாயுரூபமான ஏழு மாதத்திய கர்ப்பத்தைக் கலைத்து விட்டு தேவகியின் வயிற்றில் இருக்கும் சேஷ அம்சமான ஏழு மாதத்துக் கர்ப்பத்தைக் கொண்டுபோய், ரோகிணியின் கர்ப்பத்திற் சேர்த்துவிடு! அப்போது சிறைக்காவலில் இருக்கும் பலத்தால், தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று உலகம் சொல்லிக் கொள்ளும். ரோகிணியின் கர்ப்பத்தில் அவதரிக்கும் அவர் வெள்ளிமலைச் சிகரம் போல விளங்கிய வண்ணம் கர்ப்பத்தினின்றும் இழுக்கப்பட்டதால் சங்கர்ஷணன் என்னும் பெயரைப் பெறுவார். உடனே நான் தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசிப்பேன் நீயும் உடனடியாக நந்தனுடைய பத்தினியையான யசோதையின் வயிற்றில் பிரவேசிக்கவேண்டும். கேள் பெண்ணே மழைக் காலத்தில் ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி யிரவில் தேவகியிடம் நான் அவதரிப்பேன். நீயும், அந்த இரவிலேயே நவமியில் யசோதையிடம் ஜனிப்பாயாக. அப்போது என் சக்தியால் தூண்டப்பட்ட புத்தியுடன் வசுதேவன் என்னை யசோதையின் படுக்கையிலும் உன்னை தேவகியின் படுக்கையிலும் கொண்டுபோய் மாற்றி வைத்து விடுவான். உடனே, தேவகியின் தமையன் கம்சன் தன்னைக் கொல்லப்போகும் குழந்தையைக் கொல்ல வருவான். வந்ததும் உன்னைப் பிடித்துத் தூக்கி, பாறாங்கல்லின்மேல் போட்டு உன்னை வெட்ட முயற்சிப்பான்.
நீயோ வானத்தில் எழும்பி நிலை பெறுவாய். அப்போது ஆயிரக் கண்ணுடைய இந்திரன் என் மீதுள்ள பெருமையால், உனக்குத் தலை வணங்கிப் பிரணாமம் செய்து உன்னைத் தன்னுடன் பிறந்தவளாக ஏற்றுக்கொள்வான். நீயும் சும்ப நிசும்பாதி அரக்கர்களை வென்று சங்கரித்து, பெருமை பெற்று, விந்தியம் ஜாலந்தரம் முதலான யோக பீடங்களின் ஆலயங்களிலே ஆவிர்ப்பவித்து அந்தந்த ஸ்தானங்களால் பூமியையெல்லாம் சிறப்புற்று விளங்கச் செய்வாய் பூதி, சன்னதி க்ஷõந்தி காந்தி (தியௌ) எனப்பட்ட வானம், பூமி, திருதி, இலச்சை, புஷ்டி, உøக்ஷ முதலிய ஸ்திரீயம்சமானவையெல்லாம் உன் ஐஸ்வரியமாக விளங்கும். எவர் உன்னை ஆரியை என்றும் துர்க்கை என்றும் வேத கர்ப்பை என்றும் அம்பிகை, பத்திரைபத்திரகாளி ÷க்ஷமதை பாக்கியதை என்றும் உன் திருப்பெயர்களைச் சொல்லி காலையிலும் பகற்குப் பிறகும் மிகவும் வணக்கத்தோடு துதிக்கிறார்களோ அவர்களுடைய பிரார்த்தனைகளையெல்லாம் என் அனுக்கிரகத்தால் தப்பாமல் கைக்கூடச் செய்வேன். மேலும் மது மாமிசாதிகளினாலும், இன்னும் பலவித உணவுகளினாலும் சூத்திராதிகள் உன்னை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இஷ்டமான வரங்களைக் கொடுத்து வருவாயாக. இப்பொழுது நான் சொன்ன காரியங்களெல்லாம் என் அருளால் அப்படியே முடியும்! ஆகையால் நீ சந்தேகப்படாமல் போய் நடத்துவாயாக! என்று நியமித்தருளினார்.

—————–

2. தேவகியைத் தேவர் போற்றுதல்

இவ்வாறு எம்பெருமானால் நியமிக்கப்பட்ட யோக நித்திரையான மாயையானது அசுர அம்சமுடைய ஆறு கர்ப்பங்களையும் தேவகியின் உதரத்திற் சேர்த்துவிட்டு, ஏழாங் கர்ப்பத்தையும் இழுத்துக் கொண்டுபோய் ரோகிணியின் உதரத்திற் சேர்த்துவிட்டாள். தந்தை வசுதேவரும் முன்பு தன் மைத்துனன் கம்சனுக்கு வாக்குத் தத்தம் செய்தபடியால் தம் மனைவி தேவகியிடம் ஜனித்த ஆறு குழந்தைகளையும் கம்சனிடம் கொடுத்தார். கம்சன் அவற்றை வாங்கி வெட்டிப்போட்டான் ரோகிணியின் வயிற்றில் ஏழாவது கர்ப்பஞ்சேர்ந்தவுடன் சகல லோக ரக்ஷணார்த்தமாக ஸ்ரீஹரிபகவான் தேவகியின் கர்ப்பத்தில் எழுந்தருளினார். சுவாமியின் நியமனப்படி யோகநித்திரையும் யசோதையின் கர்ப்பத்தில் பிரவேசித்து, அவர் அவதரித்தத் தினத்திலேயே பிறந்தான். மகா விஷ்ணுவின் அம்சம் பூவுலகத்தில் சேர்ந்தவுடனே சூரியாதி கிரகங்கள் ஆகாயத்தில் விளக்கமாய்ச் சஞ்சரித்தன. வசந்தாதி ருதுக்களும் நன்றாக விளங்கின. மிகுந்த தேஜசினால் சூழப்பட்ட தேவகியைக் கண்களால் காண யாவரும் சக்தியற்றிருந்தார்கள். ஸ்ரீபகவானைத் தரிசித்து மேலான தேஜஸோடு விளங்கிய தேவகியை தேவதைகள் அங்கிருந்த புருஷர்களும் ஸ்திரீகளும் காணாதவாறு துதித்தனர்.
எப்படியெனில் ஓ, தேவகித் தாயே! நீ பூர்வகத்தில் மகத்துவத்தைக் கருப்பத்திற்கொண்டிருந்த சூக்ஷ்மப் பிரகிருதியாக இருக்கிறாய்! பிறகு சகல வேதங்களையும் கர்ப்பத்தினுடைய பிரணவ ரூபமான லோகநாதனுடைய சூக்தியாக இருக்கிறாய். படைக்கப்படும் சொரூபங்களை கர்ப்பத்தினுடைய சிருஷ்டியாயும், யாவற்றுக்கும் காரணமாய் யக்ஞங்களை கர்ப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கும் வேதமாகவும், பயனைக் கருக்கொண்டுள்ள பூஜையாயும், அக்கினியைக் கருக்கொண்ட அரணியாயும் தேவதைகளைக் கருவில் தரித்த அதிதியாயும், அசுரரைக் கர்ப்பத்தில் தரித்த தீதீயாயும், பகலைக் கருப்பத்தில் உடைய பின் மாலையாயும் ஞானத்தையுள்ளே கொண்டுள்ள பெரியோர்களின் பணி விடையாயும், நியாயத்தை உட்கொண்ட நீதியாயும், வணக்கத்தையுடைய லஜ்ஜையாயும், ஆசைப்படத்தக்க, பொருளை உட்கொண்டுள்ள ஆசையாயும், சந்தோஷத்தை உள் வைத்திருக்கிற திருப்தியாயும், அறிவை உட்கொண்டுள்ள புத்தியாயும், சஞ்சலமின்மையை உள்ளே தரித்திருக்கும் புத்தி நிலையாயும், கிரக நட்சத்திராதிகளையுள்ளே பொதிந்து கொண்டுள்ள ஆகாசமாகவும் இருக்கிறாய்! சகலமும் உன்னுள்ளே இருக்கின்றன! நீயே சுவாகை; சுவதை! நீயே வித்தை, நீயே சுதை! நீ ஆகாயத்தில் இருக்கும் அதிதி என்ற ஜோதியல்லவா? சகல லோக ரக்ஷண்யத்துக்காகப் பூமியில் அவதரித்தாய். தாயே! நீ அடியேங்களிடத்தில் அனுக்கிரகமுடையவளாய் உலகுக்கு நன்மை செய்தருள வேண்டும். மேலும் சகலலோகங்களையும் தரித்திருக்கும் எம்பெருமானை நீ உவப்போடுதரிக்க வேண்டும்.

———————-
3. கிருஷ்ணாவதாரம்

தேவர்களால் பலவாறும் துதிக்கப்பட்ட தேவகியானவள்; தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானை உலக ரக்ஷணைக்காகத் தன் கர்ப்பத்தில் தரித்திருந்தாள். பிறகு முன்பே சங்கல்பித்த விதமாக ஆவணி மாதத்தில், அமர பக்ஷத்தில், அஷ்டமி கூடிய ரோகிணியில் இரவில் உலகங்களாகிய தாமரைகள் யாவும் மலரும் பொருட்டு, சிறையிலுள்ள தேவகியிடம் ஸ்ரீமந் நாராயணனாகிய- சூரியன் உதித்தருளினான். சுவாமி அவதரித்தருளிய நாளானது சகல திசைகளும் நிர்மலமாகப் பெற்றதாய் சந்திரனது நிலவைப்போல யாவர்க்கும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. சுவாமி அவதரித்தருளியதால் சத்புருஷர்கள் மகிழ்ந்தனர். உக்கிரமான காற்றுகள் தணிந்தன, நதிகள் தெளிந்தன, கந்தர்வர் பாடினர். அரம்பையர் ஆடினர். தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். இவ்விதமான லோகஹிதமாய் கருநெய்தல் பூப்போன்ற திருமேனியும் நான்கு திருத்தோளும் லச்சம் என்ற மறுப்பொருந்திய திருமார்புமாக அவதரித்த ஸ்ரீயப்பதியைவசுதேவர் சேவித்தார். பிறகு கம்சனைப்பற்றிய அச்சத்தால் சுவாமி! தேவதேவாதிபதியே! அடியேனது பாக்கியவசத்தால் இங்கு அவதரித்தருளினீர்கள் ஆயினும் திருவாழி, திருச்சங்கு முதலிய திவ்ய லட்சணங்களுடன் கூடிய இந்தத் திவ்ய ரூபத்தை அடியேனிடத்தில் அனுக்கிரகத்தினாலே, மறைத்தருள வேண்டும் ஏனெனில், இந்த மாளிகையில் தேவரீர் இப்படி அவதரித்ததை அறிந்தால் கம்சன் உடனே வந்து எங்களைக் கொல்வான். ஆகையால் இந்த ஸ்வரூபத்தை மறைத்துக்கொள்ளவேண்டும் என்று வசுதேவர் விண்ணப்பஞ் செய்தார். உடனே தேவகியும் பிரார்த்திக்கலானாள். சுவாமி! முடிவில்லாத சொரூபத்தை யுடையவராகவும், சகலலோகங்களையும் ரூபமாகக் கொண்டவராகவும், என் கர்ப்பத்தில் இருக்கும்போது சகலலோகங்களையும் திருமேனியாலே தாங்கிக் கொண்டிருப்பவராகவும் விளங்கும். நீங்கள் இம்மாயை என்கின்ற ஆச்சரியச்சக்தியினாலே பாலகனாய் அவதரித்தருளினீர்கள்! அடியாளுக்கு அனுக்கிரகஞ் செய்தருளவேண்டும்! என் தமையனான கம்சன் ஈவிரக்கமற்ற அசுரன், ஆதலால் அவனறியாதவண்ணம் நான்கு திருத்தோள் முதலிய லக்ஷணங்களுள்ள இந்தச் சொரூபத்தை மறைத்தருள வேண்டும், என்று தேவகியும் பிரார்த்தித்தாள். அவளை பகவான், பார்த்து, நீ பூர்வத்தில் புத்திரன் வேண்டும் என்று துதித்ததையே அதற்குப் பயனாக நான் உன் வயிற்றில் பிறந்து காட்டினேன், என்று கூறி அந்த ஸ்வரூபத்தை விட்டுச் சாதாரண பாலன் வடிவில் தோற்றமளித்தார்.
அதன் பிறகு வசுதேவர் தம்முடைய சிறைச்சாலையிலிருந்து அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். சிறைக் காவலாட்களெல்லாம் யோக நித்திரையால் மதிமயங்கிச் சும்மாயிருந்தார்கள். அப்படியே, அந்த மதுரா பட்டணத்து வாயிற்காப்போரும் மயங்கிக் கிடந்தார்கள். குழந்தையை எடுத்துக் கொண்டு வசுதேவர் போகும்பொழுது உண்டான மழையை திருவனந்தாழ்வான் தன் திருமுடிகளால் தடுத்துக் கொண்டே கூட எழுந்தருளினான். அப்பொழுது சுழிந்து ஓடுகின்ற ஆழமான தண்ணீருள்ள யமுனா நதியும் குழந்தையான பகவானைத் தூக்கிச்செல்லும் வசுதேவருக்கு முழங்காலளவாக இருந்தது. அந்த யமுனைக் கரையில் கம்சனுக்குக் கப்பங்கட்ட வந்திருந்த நந்தகோபர் முதலியோரை வசுதேவர் பார்த்தார். அந்தக் காலத்தில் நந்தருடைய பத்தினியாகிய யசோதையும் யோக நித்திரையின் அம்சமான ஒரு பெண்ணைப் பெற்றும், அந்த யோக நித்திரையால் மயக்கமுற்றுப் பிறந்த குழந்தை இன்ன குழந்தை என்று அறியாமல் இருந்தாள். அங்கிருந்த அனைவரும் அப்படியே மயங்கியிருந்தார்கள். ஆகையால், வசுதேவர் அங்கு தடையின்றிச் சென்று தமது பாலகனை யசோதையின் படுக்கையில் விட்டு, அவளது பெண்குழந்தையை எடுத்துக் கொண்டு தம்முடைய சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார்.
பிறகு யசோதையானவள், மயக்கந் தெளிந்து, தன் அருகில் இருக்கும் ஆண் குழந்தையைக் கண்டு, தனக்கு மகன் பிறந்தான் என்று மிகவும் மகிழ்ந்தாள். மதுரையில் சிறைச்சாலைக்குத் திரும்பிவந்த வசுதேவரோ தாம் தூக்கிவந்த யசோதையின் பெண்குழந்தையைத் தேவகியின் படுக்கையில் விட்டவுடன், அது அழத் துவங்கியது. அதன் குரல் ஓசையைக் கேட்ட சிறைக் காவலர்கள் எழுந்தோடி தேவகிக்குப் பிள்ளை பிறந்தது என்று கம்சனுக்கு அறிவித்தார்கள். உடனே, கம்சனும் குரோத வெறியோடும் கொலை வெறியோடும் பரபரப்பாக ஓடிவந்தான். தேவகி துடிதுடித்து கம்சனை நோக்கி, அண்ணா! இது பெண் குழந்தையாயிற்றே! இதனால் உனக்கென்ன தீமை வரும்? ஒன்றும் வராது! இதையாவது விட்டுவிடு! கொன்றுவிடாதே! என்று கதறியழுதாள். ஆனால் தங்கை எவ்வளவுதான் அழுது கெஞ்சியும் கம்சன் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் அந்தப் பெண் குழந்தையைத் தூக்கி ஒரு பாறாங்கல்லின்மேல் போட்டு, வெட்டமுயன்றான். ஆனால் கல்லின் மேல் போட்டவுடனேயே பெண் குழந்தை எழும்பி வானத்திற்குப் பறந்துசென்று, ஆயுதங்களுடன் கூடிய எட்டுக் கைகளோடு ஒரு ரூபமெடுத்து வான வெளியில் நின்று, உரத்த குரலில் கோபத்துடன் சிரித்து கம்சனை நோக்கி, அடா மூடா! என்னைக் கல்லின் மேல் எறிந்து கொல்வதால் உனக்குப் பயன் என்ன? உன்னைக் கொல்பவன் பிறந்துவிட்டான். அவன் யாரென்று கேட்கிறாயா? அவன் சகல தேவதைகளுக்கும் சகல பாக்கியம் போன்ற மேன்மையாளன். அவன் தான் உன் முற்பிறப்பிலும் உனக்குப் பகைவன், இதை நீ அறிந்து, உனக்கு நன்மை எதுவோ அதைச் செய்துகொள்! என்று சொல்லிவிட்டு, சித்தர் முதலான தேவகணங்களால் பூஜிக்கப்பட்டு, கம்சனது கண்ணெதிரிலேயே ஆகாயமார்க்கமாகப் போய் மறைந்துவிட்டாள்.

—————–

4. கம்சனின் கட்டளை-

தன்னைக் கொல்ல ஒருவன் பிறந்துவிட்டான் என்பதை அறிந்ததும் கம்சனுக்குத் திகில் பிடித்தது. அவன் உடனே பிரலம்பன், கேசி முதலிய மகா அசுரர்களை அழைத்து, பெரும் புஜங்களைக் கொண்ட பிரலம்பனே; கேசியே தேனுகனே; அரிஷ்டனே! நீங்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேளுங்கள். துராத்மாக்களான தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆயினும் என் பராக்கிரம அக்கினியில் வெந்திருக்கும் அவர்களை மகா வீரனாகிய நான் லக்ஷ்யம் செய்யவில்லை ஏனென்றால் தேவர்களில் தேவேந்திரனோ அற்ப வீரன்! சிவனோ தவசி! சோர்வுற்ற சமயந்தேடி அசுரரைக் கொல்லும் சூரனான விஷ்ணு தான் என்னை என்ன செய்யமுடியும்? இவர்களே இப்படியானால் இவர்களைவிடக் குறைந்த பலமுடைய ஆதித்தன், வசுக்கள் முதலியவர்களால் என்ன சாதிக்க முடியும்? அவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு வந்தாலும் என்ன செய்ய முடியும்? இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்; கேளுங்கள். முன்பு ஒரு சமயம் தேவர்களோடு நான் போர் செய்தபோது, அவர்களுடைய தலைவனாகிய இந்திரன், நான் எய்த அம்புகளில் ஒன்றையாகிலும் தனது மார்பினால் தாங்கமாட்டாமல், முதுகினால் தாங்கிக் கொண்டு ஓடி ஒளிந்தான்! அதை நீங்கள் அறிவீர்கள். இந்திரன் என் ராஜ்யத்தில் மழை பெய்யாமல் நிறுத்தியபோது, நான் என் பாணங்களால் மேகங்களைப் பிளந்து மழையைப் பெய்வித்தேன். இது உங்களுக்குத் தெரியாதா? என் மாமன் ஜராசந்த மகாராசனைத் தவிர, மற்றெந்த அரசர்கள் தான் எனது புஜ பலத்திற்குப் பயந்து வணங்காமல் இருக்கிறார்கள்? ஆகவே இந்தத் தேவர்கள் எனக்கு அலட்சியமாகத் தோன்றுகிறார்கள். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். அந்தப் பகைவர்களானத் தேவர்களுக்கு நாம் செய்யவேண்டிய அபகாரம் என்ன தெரியுமா? பூமியில் விசேஷதான சீலராகவும் யாக சீலராயும் இருப்பவர்கள் யாராயிருந்தாலும் சரி. அவர்களையெல்லாம் நாம் துன்புறுத்தி வதைக்கவேண்டும். அவ்வாறு நாம் செய்தால், விருத்தியில்லாமையால் தேவர்கள் தாமே அழிந்து போவார்கள். அசுரர்களே! இன்னும் ஒன்று சொல்கிறேன். தேவகியின் வயிற்றில் பிறந்த பெண், உனக்கு யமன், முன்னமே பிறந்துவிட்டான்? என்று சொல்லியிருக்கிறதல்லவா? ஆகையால் இந்தப் பூமியில் பிறந்திருக்கிற பாலகர் விஷயத்திலும் நாம் எத்தனஞ் செய்ய வேண்டும், அதாவது, எந்தப் பாலகனிடத்திலே விசேஷமான பலமும் சாமர்த்தியமும் காணப்படுகிறதோ; அந்தப் பாலனைத் கண்டுபிடித்து எப்படியாகிலும் அவனைக் கொன்றுவிட வேண்டும்! என்று கட்டளையிட்டுவிட்டுத் தன் அரண்மனை சென்றான்.
பிறகு அவன் தங்கை தேவகியையும் மைத்துனன் வசுதேவரையும் சிறைக் காவலிலிருந்து விடுதலை செய்து, அவர்களை நோக்கி, உங்களுடைய குழந்தைகளையெல்லாம் நான் வீணாகக் கொன்றேன். கடைசியில் எனக்கும் எமனாக எவனோ ஒருவன் எப்படியோ பிறந்து எங்கோ இருக்கிறான்! உங்களுக்குப் பிறந்த குழந்தைகள் போய்விட்டதே என்று நீங்கள் வருந்த வேண்டாம். குழந்தைகள் அப்படிச் சாகவேண்டும் என்று விதியிருந்து அதன்படியே நடந்தது! மேலும் உங்களுடைய பாப பயனாகவும் அக்குழந்தைகள் கொல்லப்பட்டன! என்று சமாதானம் கூறி, அவர்களுக்கு விடை கொடுத்து, அச்சத்துடன் தன் தனிமாளிகைக்குச் சென்றான்.

——————

5. பூதகியின் வதம்

இவ்வாறு, கம்சனால் விடுதலை செய்யப்பட்ட வசுதேவர் விரைந்து சென்று இடையர் குலத்தலைவரான நந்தகோபனுடைய வண்டி வீட்டை அடைந்தார். தனக்குப் புத்திரன் பிறந்தான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த நந்தகோபனை அவர் சந்தித்து, நந்தகோபா! பகவத் சங்கல்பத்தால் உமக்குப் புத்திர சந்தானம் உண்டாயிற்றே? அது பாக்கியம், மஹா பாக்கியம்! உமக்கு இந்த வார்த்திகத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இது பலரின் கண்ணேறு படத்தக்கது. நீங்கள் அரசனுக்குச் செலுத்த வேண்டிய கப்பம் எல்லாம் செலுத்திவிட்டீர்கள் அல்லவா? இனி மேல் நீங்கள் இங்கிருப்பது நல்லதல்ல. ஏனெனில் பொருள் உள்ளவர்கள் துஷ்டஅரசர்களின் அருகே இருப்பது எப்போதும் அபாயமேயாகும்! ஆகையால் நீங்கள் வந்த காரியம் முடிந்து விட்டது. ஆகவே இனிமேல் இங்கு தாமதிக்காமல் உடனடியாக உங்களுடைய கோகுலத்திற்குப் போய்ச் சேருங்கள். எனக்கு ரோகிணியின் வயிற்றில் பிறந்த குழந்தை ஒன்று அங்கே இருக்கிறது. அதை உங்கள் பிள்ளையைப் போலவே நீங்கள் பாதுகாத்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தம் இருப்பிடம் சென்றார். நந்தகோபர் தம் கூட்டத்துடன் வண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு கோகுலம் போய்ச் சேர்ந்தார்.
இதற்கிடையே அரக்கன் கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி ஒருத்தி நல்லதொரு பெண் உருவமெடுத்து, இரவிலே ஆங்காங்கே சிறு குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்துக் கொன்றுகொண்டே, கோகுலத்துக்கு வந்து நந்தகோபனின் மாளிகையில் தூங்கிக்கொண்டிருந்த யசோதையின் குழந்தையான பாலகிருஷ்ணனை எடுத்து முலைப்பாலூட்டினாள். அவள் எந்தெந்தக் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டுவாளோ அந்தக் குழந்தைகள் உடனே ரத்த மாமிசமெல்லாம் சுண்டிப்போய் மரணமடையும் ஆனால் கிருஷ்ண பகவானான இந்தக் குழந்தையோ அந்த அரக்கியின் முலைகளைத் தன் கைகளாலே இறுகப்பிடித்து, பாலை அவளோடு உயிரோடு சேர்த்து உறிஞ்சியது. அவ்வாறு உறிஞ்சியவுடன், பூதகி தன் சுபாவமான உரத்தக் குரலில் பேரிரைச்சலிட்டுக் கதறியழுது, சுய ரூபத்தோடு தரையில் விழுந்து இறந்தாள். அந்த இரைச்சலைக் கேட்டு இடையர்கள் அனைவரும் திகைத்து எழுந்து, அங்கு ஓடி வந்து பார்த்தார்கள். அங்கு அந்தப் பூத அரக்கியின் மடியில் குழந்தை இருப்பதையும் அரக்கி செத்துக் கிடப்பதையும் கண்டார்கள். யசோதையும் பரபரப்போடு ஓடிவந்து குழந்தையை எடுத்துப் பசுவின் வாலைச் சுற்றி, அந்தப் பூதகியால் உண்டான பாலதோஷத்தைப் போக்கினாள். நந்தகோபரும் அங்கு வந்து, குழந்தையை வாரியெடுத்து கோமய சூரணத்தை அதன் உச்சந்தலையில் காப்பாக வைத்தார். என் அருமைக் குழந்தையே! எவனுடைய நாபீ கமலத்தினின்றும் இந்த உலகங்கள் யாவும் உண்டாயிற்றோ, அத்தகைய சகல உற்பத்திக்கும் காரண பூதனான, ஸ்ரீ ஹரி பகவான் உன்னைக் காப்பானாக! எவனது வராகக் கொம்பின் நுனியில் இந்தப் பூமியானது தாங்கப்பட்டு, சகல பிரபஞ்சத்தையும் தரித்திருக்கின்றதோ, அந்த மகாவராக ரூபமுள்ள பகைவரின் மார்பைப் பிளந்த அந்த நரசிம்ம ரூபியான ஜனார்த்தனன் எங்கும் உன்னைக் காப்பானாக! முன்பு சின்னஞ்சிறு வாமன உருவமாக இருந்து, ஒரு கணத்திலே மூவடி மூன்று காலடிகளினால் முறையே மூன்று உலகங்களையும் அளந்து ஆக்கிரமித்து, திருக்கைகளிலே அநேக திவ்ய ஆயுதங்களுடன் பிரகாசிக்கும் பகவான் உன்னை எப்போதும் பாதுகாப்பானாக உன் சிரசைக் கோவிந்தன் காக்க உன் கண்டத்தைக் கேசவன் காக்க, உன் குறியுட்பட்ட வயிற்றின் இடத்தையெல்லாம் ஸ்ரீவிஷ்ணு காக்க முழந்தாள், பாதங்கள் இவற்றை ஜனார்த்தனான் காக்க; முகத்தையும் கரங்களையும் அவற்றின் கீழ்புறங்களையும் மனத்தையும் மற்றுமுள்ள புலன்களையும் ஸ்ரீமந்நாராயணன் காக்கட்டும்! உனக்குப் பகைவராயுள்ள பிரேத கூசுமாண்ட ராக்ஷசாதிகள் சங்கு சக்கரம் கதை முதலிய திவ்விய ஆயுதங்களைத் திருக்கைகளில் ஏந்திய எம்பெருமானின் திருச்சங்கின் ஓசையினால் அதஞ் செய்யப்பட்டு, நாசமாவார்களாக! வைகுண்டநாதன் திசைகளிலே உன்னைப் பாதுகாப்பானாக! மூலைகளில் மதுசூதனன் காப்பானாக வானத்தில் ரிஷிகேசன் ரட்சிப்பானாக பூமியிலே தரணிதரன் காப்பானாக! என்று கூறி நந்தகோபர் தம் குழந்தைகளுக்கு சாந்திக் கிரியைகளைச் செய்தார். பிறகு, குழந்தையைச் சகட்டின் கீழ்ப்புறத்தில் தொட்டிலில் வளர்த்தினார் அங்கு விழுந்து கிடக்கும் பூத அரக்கியின் பெருத்த பயங்கர உடலைக் கண்டு அங்கு வந்த இடையர் அனைவரும் பயந்து, திகைத்து வியந்தார்கள்.

——————-

6. சகடயமளார்ச்சுன பங்கம்-

சகட்டின் கீழ்ப்புறத்தில் குழந்தையான கிருஷ்ண பகவான் பள்ளிகொண்டிருந்தபோது ஒரு நாள் அச்சகட்டில் அசுரன் ஒருவன் வந்து அவேசித்தான். அதையறிந்த கண்ணன் முலைப் பாலுக்கு அழுகின்ற பாவனையால், சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்தான் அந்தத் திருவடிகளால் உதைபட்ட மாத்திரத்திலே சகடானது திருப்பப்பட்டு அதன் மேலிருந்த கும்பம் முதலானவைகள் உடையக் கீழே விழுந்தது. உடனே இடையர் இடைச்சியர் அங்கு ஓடி வந்து பார்த்தார்கள். அங்கே மல்லாந்து படுத்திருக்கும் குழந்தையையும் கீழே விழுந்து கிடந்த சகட்டையும் பார்த்து திடுக்கிட்டு யார் இந்தச் சகட்டை இப்படித் திருப்பியது? என்று கேட்டார்கள், அதற்கு அங்கிருந்த சிறுவர்கள் இந்தக் குழந்தைதான் அழுது கொண்டே காலைத் தூக்கியது. அதன் தாக்குதலில் இந்தச் சகடு திரும்பிக் கீழே விழுந்தது. நாங்கள் அதை எங்கள் கண்களாலேயே கண்டோம்! என்றார்கள்.
அதைக்கேட்ட யாதவர்கள் ஆச்சரியமடைந்தனர். நந்தகோபரும் வியப்போடு குழந்தையை எடுத்துக் கொண்டார். யசோதையும் சகட்டின் மேலேயிருந்து கீழே விழுந்து உடைந்த பாண்டங்களின் ஓடுகளையும் அந்தச் சகட்டையும் தயிர், மலர், அட்சதை முதலியவற்றால் பூஜித்தார்கள். வசுதேவர், கர்க்கர் என்ற தமது புரோகிதரை அழைத்து வரச் செய்தார். மகாஞானியான அம்மாமுனிவர் வந்ததும் கோகுலத்தில் யாருக்கும் தெரியாத ஏகாந்தமான ஓர் இடத்தில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதகருமம் முதலிய சடங்குகளைச் செய்து ரோகிணி வயிற்றில் பிறந்த மூத்த குழந்தைக்கு ராமன் (பலராமன்) என்றும் யசோதையின் குழந்தைக்குக் கிருஷ்ணன் என்றும் திருப்பெயர் சூட்டினார்கள். மைத்ரேயரே! பிறகு அந்த இரண்டு பாலகரும் முழங்கால்களையும் கைகளையும் ஊன்றித் தவழ்ந்து விளையாடிக் கொண்டே வரும்போது கோமயம், சாம்பல் இவற்றைத் தங்கள் திருமேனியில் பூசிக்கொண்டும், ஒரு கணமாவது ஓரிடத்திலும் நிற்காமல், மாட்டுத் தொழுவிலிருந்து கன்றுத் தொழுவிற்கும், கன்றுத் தொழுவிலிருந்து மாட்டுத் தொழுவிற்கும் ஓடுவதும்; பசுவின் வால், கன்றின் வால் இவற்றை இழுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பாலகரின் விளையாட்டுக் குறும்புத் தனங்களைத் தடைப்படுத்த ரோகிணியாலும் யசோதையாலும் முடியவில்லை. இப்படி யாராலும் தடுக்கக் கூடாமல் இருந்ததால் யசோதையானவள் பாலகிருஷ்ணனின் இடுப்பிலே ஒரு கயிற்றைக் கட்டி, ஓர் உரலிலே அக்கயிற்றைப் பிணைத்து வைத்துவிட்டு குழந்தையை நோக்கி குறும்புக்காரனே! மிகச் சஞ்சலமான சேஷ்டைகளையெல்லாம் செய்யும் விஷமக்காரனே! இனிமேல் ஓடு பார்ப்போம்! என்று சொல்லிவிட்டு தனது வேலைகளில் ஈடுபட்டிருந்தான்.
அவ்வாறு வேறு வேலைகளில் தாய் ஈடுபட்டிருக்கும்போது குழந்தை கண்ணன் அந்த உரலை இழுத்துக் கொண்டு, அங்கேயிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே புகுந்தான். அப்போது அந்த உரல் மரத்தின் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டதால், அநேக பெருங் கிளைகளோடு கூடிய அந்த, மருத மரம்முறிந்து விழுந்தது. அது விழும்போது உண்டாகிய கடகடா என்ற பெரும் சப்தத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தார்கள். பெரிய மரம் ஒன்று இரு பிளவாக முறிந்து விழுந்திருப்பதையும் அவற்றின் இடையே, குழந்தை கிருஷ்ணன் உரலோடு கட்டுண்ட நிலையில் தவழ்வதையும் புதிதாய் முளைத்த சிறு பற்களின் வெண்மையொளி வீசப் புன்னகை செய்வதையும் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டு நின்றார்கள். இதனால் சுவாமிக்குத் தாமோதரன் என்ற திருநாமம் உண்டாயிற்று. பிறகு, நந்தகோபர் முதலியவர்கள் இத்தகைய உற்பாதங்களைக் கண்டு பயந்து திகிலடைந்து ஆலோசிக்கத் துவங்கினார்கள். பூதகி வந்து பாலூட்டிச் செத்ததும், சகடு மாறி விழுந்ததும், புயற்காற்று முதலிய உபத்திரவங்கள் இல்லாதிருக்கும்போதே பெரிய மருத மரம் முறிந்து விழுந்ததும் போன்ற உற்பாதங்கள் அநேகம் காணப்படுகின்றன. ஆகையால் நாம் இந்த இடத்தை விட்டு வேற்றிடத்துக்கு உடனே சென்றாக வேண்டும். அப்படிச் செய்யாமற் போனால் இத்தகைய பூமி சம்பந்தப்பட்ட மகோத் பாதங்களில் நமது ஆயர்சேரிக்கே தீங்குகள் ஏற்படக்கூடும். ஆகையால் நாம்இதைவிட்டுப் போகவேண்டும் என்று ஆலோசித்து நந்தகோபர் தம் கூட்டத்தினருக்குக் கட்டளையிட்டார். அந்தந்தத் தலைவர்கள் அவரவரது கூட்டத்தினரை நோக்கி, சீக்கிரம் பிரயாணத்துக்குத் தயார் ஆகுங்கள் என்று கட்டளையிட்டார்கள். பிறகு அந்தந்தக் கூட்டத்தார், அவரவரது வண்டிகளின்மேல் சாமக் கிரியைகளைப் போட்டுக்கொண்டு புறப்பட்டார்கள். மாடு மேய்ப்போர் மாடுகளையும் கன்று மேய்ப்போர் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு பிருந்தாவனம் என்னும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் சென்ற பிறகு பிருகத்வனமானது நெல் சோறு தயிர் முதலியவை சிந்தப் பெற்று, காக்கை முதலிய குரூரப் பறவைகள் நிறைந்ததாய் விகாரமாகப் பட்டுப் போயிற்று அவர்கள் புதிதாய்ப் புகுந்த பிருந்தாவனமோ நற்செயல் புரியவல்ல கண்ணனால், புதுப் பொலிவு பெற்றது. பசுக்கள் விருத்தியடைந்து செழிக்கும் வண்ணம் கண்ணன் குளிர்ந்த திருவுள்ளத்தோடு அருள்புரிந்ததால் மிகவும் கொடிய கோடையிலும் மழைக் காலத்தில் உண்டாவது போன்ற இளம் புற்கள் செழிப்புற வளரப்பெற்றிருந்தது. ஆயர்கள் எல்லாம் அந்தப் பிருந்தாவனத்தில் அரைச்சந்திர வடிவில் குடியிருப்புகளை அமைத்து அதன் ஓரமெல்லாம் வண்டிகளை நிறுத்தும் இடம் உண்டாக்கிக் கொண்டு அங்கே குடியிருந்தார்கள்.
சிறிது காலம் சென்றது. பலராமன் பால கிருஷ்ணன் இருவரும் கன்று மேய்க்கும் பருவத்தை அடைந்து காக பக்ஷங்களைத் தரித்துக்கொண்டு அக்கினி குமாரர்களான சாகன் விசாகன் என்பவர்களைப் போல் விளக்கமுற்று மயிற் பீலியை முடியிலும் காட்டு மலர்களைக் காதிலும் அணிந்துகொண்டும் இடையருக்கு உரிய புல்லாங் குழல்களினாலும் இலைகளினாலும் பல வாத்திய ஓசைகளை எழுப்பிக் கொண்டும், கைகொட்டியும் சிரித்தும் ஓடியும் ஒருவரையொருவர் சுமந்தும் கன்றுகளைமேய்த்தும் ஒருவரோ டொருவர் இணைபிரியாமல் ஓரிடத்திலேயே விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். மைத்ரேயரே இந்த மாயா லீலையைப் பார்த்தீரா சகல லோகங்களையும் காப்பவர் கன்று காலிகளைக் காப்பவரானார். இவ்வாறு அவர்கள் விளையாடித் திரிந்து வரும்போது மேகக் கூட்டங்களினால் வானம் முழுதும் மறைத்துக் கொண்டு, நீர்த்தாரைகளினால் திசைகளையெல்லாம் ஒன்றாக்குவதைப் போல் மழைக்காலம் வந்தது. அந்த மழைக் காலத்தில் புதிய புற்கள் நிறைய முளைத்திருந்ததாலும், அதன் மேல் ஆங்காங்கே தம் பலப் பூச்சிகள் வியாபித்திருந்தாலும் பூமியானது பச்சைக்கல்லினால் செய்யப்பட்டு இடையிடையே பதுமராகம் இழைத்தது போல் இருந்தது. புதிதாய்ச் செல்வம் அடைந்த காலத்தில் அடக்கமும் ஒழுக்கமும் இல்லாதவர்களின் மனங்கள் எப்படி யாகுமோ அதுபோல் அந்தக் காலத்தில் தண்ணீரானது வழி முறைகளை நோக்காமல் இசைந்தவாறெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. விவேகமில்லாத அரசனின் ஆசிரிய பலத்தினால் குணஹீனனான ஒருவன் ஒரு பெரும் பதவியில் நிலைபெற்றது போல குணஹீனமான இந்திர வில் ஆகாயத்தில் நிலைபெற்று இருந்தது. வான மேகங்களுக்குக் கீழே நிர் மலமான நாரைகளின் வரிசையானது அபகாரம் செய்தல் முதலிய தீயஒழுக்க முடையவனிடத்திலும் நற்குலத்தான் செய்யும் நற்செய்கையைப் போல் மிகவும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. உத்தமனிடத்திலே கெட்டவன் நட்புக் கொள்வது போல் வானத்தில் மின்னலானது தோன்றி மறைந்து நிலையற்றிருந்தது மிகவும் மூடர்கள் தாம் நினைத்த கருத்து விளங்கும்படிப் பேசத் தெரியாமல் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசும் பேச்சுக்கள் வேறு பொருளைக் காட்டி விளங்காமற் போவது போல் அக்காலத்தில் புல் பூண்டுகள் முதலிய வற்றால் பாதைகள் மூடப்பட்டு விளங்காமலிருந்தன. அத்தகைய இடத்தில் மயில்களும் மான்களும் நிறைந்திருந்தன. அங்கு ராமன் கிருஷ்ணன் இருவரும் காட்டில் இடைப் பிள்ளைகளுடன் கூடி மிகவும் மகிழ்ச்சியாகச் சஞ்சரித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு அவர்கள் நடத்திய திருவிளையாடலைக் கேளும்.
அவர்கள் ஓரிடத்தில் பசுக்களுடன் கானம் பாடிக்கொண்டும் ஓரிடத்தில் மிகவும் குளிர்ச்சியான மரநிழல்களில் உலவிக் கொண்டு மிருந்தார்கள் ஓரிடத்தில் கடப்பம் பூமாலைகளையும் மயில் தோகை மாலைகளையும் சாத்திக்கொண்டு, பலநிற மலைத்துகள்களை திருமேனியிற் பூசிக்கொண்டு ஆடினார்கள். மற்றோர் இடத்தில் தழைகளினால் படுக்கை போட்டு, அதில் படுத்து கண் அயர்ந்திருந்தார்கள். இன்னுமோரிடத்தில் சிறுவர்களுடன் பாடிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் மயில்கள் கூவுவதைக் கேட்டு, அவை போலத்தங்கள் குழல்களையும் ஊதினார்கள். இவ்வளவு அநேகவிதமான பாவனைகளான திருவிளையாடல்களினால் ராமகிருஷ்ணர்களான அண்ணன் தம்பி இருவரும் மிகவும் நேசத்தோடும் மகிழ்ச்சியோடும் பிறரை மகிழ்வித்துத் தாமும்மகிழ்ந்து வந்தார்கள். இரவிலுங்கூடச்சிறிது நேரம்பசுக்களோடும் இடையச் சிறுவரோடும் விளையாடிவிட்டுத் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்வார்கள். மைத்ரேயரே! இவ்வாறு அக்குமாரர்கள் இருவரும், காந்தி, பலம் முதலியவற்றில் தேவாமிசம் தோன்றும்படி, நந்தகோபனது திருமாளிகையில் வளர்ந்து வந்தார்கள்.

————–

7. காளிய மர்த்தனம்-

ஒருநாள் கிருஷ்ணன் தன் அண்ணனான பலராமனை விட்டுத் தனியாகக் காட்டுக்குச் சென்று, அங்கிருந்த இடைப் பிள்ளைகளுடன் காட்டு மலர்களை அணிந்து உலாவிக்கொண்டிருந்தான். அப்போது பேரலைகளோடு பெருகிவரும், யமுனை நதியின் அருகே வந்தான். அந்நதியில் விஷாக்கினியினாய் கொதிப்படைந்த நீருடன் மிகவும் பயங்கரமாயிருந்த காளிய மடுவையும், அதன் விஷவேகத்தால் கரையிலுள்ள மரங்கள் எரிக்கப்பட்டிருப்பதையும், காற்றில் அகப்பட்ட நீர்த் துளிகளின் ஸ்பரிசத்தினாலே வானத்தில் பறக்கும் பறவைகளுங்கூட எரிந்து போவதையும் கண்டு, இந்த மடு கொடிய மிருத்யுவின் வாய்போல் இருக்கிறதே! பரம துஷ்டனாயும் விஷத்தையே ஆயுதமாகக் கொண்டவனுமான காளியநாதன் இந்த மடுவில் இருக்கிறான் அன்றோ? இவனை நாம் வென்றால், இந்த மடுவை விட்டு அவன் கடலுக்குப் போவான். இந்த மடுவில் காளிய சர்ப்பம் இருப்பதால், யமுனை நதியானது கடல் எட்டும்வரை கொடுக்கப்பட்டு, நீர் வேட்கையுள்ள மனிதருக்கும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பானயோக்கிய மின்றி இருக்கிறது. ஆகையால் இந்தக் கொடிய சர்ப்பத்தைத் தண்டித்தே ஆகவேண்டும். அதனால் இந்த ஆயர்பாடியில் இருப்பவரனைவரும் பயமின்றி இந்த நதியின் நன்னீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வழி தவறிய துஷ்டர்களை நிக்கிரகிக்கத்தானே நாம் அவதரித்தோம்? ஆகவே, நதிக்கரையில் உள்ள இந்தக் கடப்ப மரத்தின்மேல் ஏறி காளிய சர்ப்பம் இருக்கும் மடுவில் குதிப்போம் என்று பாலகிருஷ்ணன் எண்ணமிட்டுத் தன் திருப்பரிவட்டத்தை நன்றாக இழுத்துக் கட்டிக்கொண்டு மரத்தின்மேல் ஏறி, அதிலிருந்து வேகமாய் அந்த மடுவில் குதித்தான். அப்படி சுவாமி குதித்ததால், மடுநீர் அலைந்தது. நீர் பரவியதால் தூரத்திலிருந்த மரங்கள் நனைந்தன. அம்மரங்கள் சர்ப்ப விஷாக்கினிச் சுவாலையினால், கொதித்த நீர் பட்டதுமே தீ மூட்டியது போல நாற்புறங்களிலும் சுவாலைகள் பரவி எரிந்து போயின. பாலகிருஷ்ணனோ காளியமடுவிற் குதித்தவுடனேயே தன் தோள்களைப் பலமாகத் தட்டினான். கண்ணன் தோள் தட்டிய ஓசையைக் கேட்டவுடனே காளியன் என்னும் சர்ப்பராஜன் கோபத்தினால் கண்கள் எல்லாம் சிவக்க; முகங்களில் விஷச் சுவாலைகள் மிகுந்தவனாய், மகாவிஷமுள்ள பல்வேறு பாம்புக் கூட்டங்களுடன் மடுவை விட்டு வெளியே வந்தான். அவனுடைய அநேக நாக பத்தினிகளும் அழகிய முத்து மாலைகளை அணிந்து உடம்பையசைப்பதால் காதுகளிலே அசையும் குண்டலங்கள் காந்திவீச, வெளியே வந்தனர்.
உடனே, காளியனும் மற்றையச் சர்ப்பங்களும் தங்களது உடல்களினால் கண்ணனை இறுகப்பிணைத்துக்கொண்டு கடித்தன. இவ்விதமாக அந்த மடுவில், சர்ப்பங்களினாலே சுற்றப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணனை இடைப்பிள்ளைகள் பார்த்ததும் பயந்தார்கள். அவர்கள் ஆயர்பாடிக்கு ஓடிச்சென்று ஐயோ! நம்முடைய கிருஷ்ணன் மோகத்தால் காளியமடுவில் விழுந்து மூழ்கிப் போய் காளியனால் விழுங்கப்படுகிறான், ஓடி வாருங்கள், என்று கூவினார்கள். இடி விழுந்தது போன்ற அந்தப் பேச்சைக் கேட்டு, அங்கிருந்த தாய் யசோதையும் மற்றுமுள்ள கோபாலர்களும் ஐயோ! கிருஷ்ணன் எங்கே? எப்படியிருக்கிறான்! என்று கதறிக்கொண்டு ஒன்றுந் தோன்றாமல் பரவசராய்க் கால்திடற, அந்த மடுவின் அருகே ஓடி வந்தார்கள். அதுபோலவே தந்தை நந்தகோபரும் தமையன் பலராமனும் பரபரப்புடன் ஓடி வந்தார்கள். யமுனை நதியில் பாம்புகளால் பிணைக்கப்பட்டு அசைய மாட்டாமற் கிடக்கும் கண்ணபிரானைப் பார்த்ததும் தம் கண்களில் தாரை தாரையாய் நீர்வடிய எல்லோரும் கதறி யழுது கொண்டு நின்றார்கள். நந்தகோபரும் யசோதையும் கண்ணன் திருமுக மண்டலத்திலேயே கண்களை வைத்து லயித்தவர்களாய், ஒரு செயலும் இன்றி மரம்போல் அசைவற்று நின்றார்கள். கண்ணனுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்குவது அரிது என்ற அதைரியமும் பயமும் பற்றியவர்களாக அவர்கள் நாவுலர்ந்து வாய் குளற அழுதார்கள். அவர்கள் அழுதுகொண்டே, நாமெல்லாம் யசோதையுடன் இந்த காளியமடுவில் விழுந்து விடுவோம். இனி ஆயர்பாடிக்குப் போகக் கூடாது. ஏனெனில் சூரியனில்லாத பகல் எதற்கு? கிருஷ்ணன் இல்லாத திருவாய்ப்பாடி நமக்கு எதற்கு? ஆகையால் நாம் அங்கே மறுபடியும் போவது தகுதியன்று கண்ணனை விட்டுத் தண்ணீரில்லாத குளம் போல அழகற்றதும் சுக ஹேதுவாகாததுமான இடைச்சேரிக்குப் போக மாட்டோம். எங்கே கருநெய்தல் மலர்போன்ற கண்ணன் இல்லையோ, அது தாய்வீடானாலும் அந்த வாசத்தினால் மகிழ்ச்சி உண்டாக மாட்டாது! என்று இடையர்கள் பிரலாபித்தார்கள். தந்தை நந்தகோபரும் தாய் யசோதையும் மயங்கியிருந்தனர். அப்போது பலபத்திரனான பலராமன் தன் தம்பி கிருஷ்ணனோடு தங்களுக்குரிய சங்கேத வார்த்தகைளினால் இவ்வாறு கூறலானான்.
பிரும ருத்திராதியருக்கும் அதிபதியானவனே! சுவாமி! நீ ஏன் அனந்தனான உன் சொரூபத்தை மறந்து மனுஷியனாக இருக்குந் தன்மையைக் காட்டுகிறாய்? சக்கரத்தின் அரங்களுக்கு நடுமயம் போல் உங்களுக்கெல்லாம் நீயே ஆதாரமாக இருக்கிறாய். மேலும் படைப்பவனும் அழிப்பவனும் காப்பவனும் நீ! சிந்திக்கக் கூடாத சொரூபமுடையவனே! சகல வேத சொரூபியும் நீ! ஜகந்நாதா! நீ பூபாரத்தை நீக்குவதற்காக மனித அவதாரம் செய்தருளினாய். உனது விபூதியான நானும் உன் தமையனாகப் பிறந்தேன். பகவானே! நீ மனுஷ்ய லீலையை அனுசரித்து எழுந்தருளியிருப்பதனாலே, சகல தேவதைகளும் இங்கே அவதரித்துள்ளனர். எம்பெருமானே! உன் லீலைக்கு உபயோகமாக ஆயர்பாடியில் தெய்வப் பெண்களை முன்னதாக அவதரிக்கச் செய்து அதன் பிறகு நீ அவதரித்தாயல்லவா? இவ்விதம் அவதரித்த உமக்கும் எனக்கும் உன் சங்கல்பத்தினால் பிறந்த கோபாலரும் கோபியருமல்லவோ உறவினர் ஆகிறார்கள்? அப்படியிருக்க மிகவும் விசனமடைந்துள்ள இவர்களை ஏன் உபேக்ஷிக்கிறாய்? ஓ, கிருஷ்ணா! இதுவரை நீ மனுஷ்ய பாவனையைக் காட்டியதும் பாலகனாக இருப்பதின் லீலையைக் காட்டியதும் போதும் இனிவிரைவாக மகா துஷ்ட சொரூபமாகவுள்ள அந்தப் பாம்பை அடக்கி அருள்வாயாக! என்று பலபத்திரன் (பலராமன்) நினைப்பூட்டினான்.
பாலகிருஷ்ணன் புன்னகையுடன் காளியன் என்ற அந்தப் பாம்பை ஒரு அறை அறைந்து அதன் உடலின் பிணைப்பிலிருந்து தன்னை விடுத்துக் கொண்டான். பிறகு கண்ணன் தன் இரண்டு திருக்கைகளாலும் காளியனின் நடுத்தலையை அமுக்கி அதன்மேல் ஏறி நர்த்தனம் ஆடினான். இவ்வாறு தன் திருவடிகளால் துவைத்ததால், சர்ப்ப ராஜனின் பிராணங்கள் எல்லாம் படத்திலே வந்தன துவைக்கப்படாத மற்றொரு படத்தையும் சர்ப்பராஜன் தூக்கியெடுத்தான். அதையும் கண்ணன் தன் திருவடிகளால் வணங்கியருளினான். இதனால் நசுக்குண்ட பாம்பரசன் உதிரத்தையும் நஞ்சையும் கக்கினான் அவன் சோர்வடைந்ததைப் பார்த்ததும் அவனுடைய நாகபத்தினிகள் ஸ்ரீகிருஷ்ணனின் திருவடிகளில் சரண்புகுந்து, தேவதேவேசுவரனே! நாங்கள் உன்னை அறிந்தோம். நீ சர்வ யக்ஞனாகவும் உத்தமரில் உத்தமனாயும், மனம் வாக்குக்கு எட்டாத பரஞ்சோதியென்று சொல்லப்படும் பிரம்மத்தின் திருவவதாரமாக இருப்பவன் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதமயமான பிரபஞ்சங்கள் எல்லாம் எவனது சொரூபத்தின் அமிசத்தின் அமிசத்திலும் அமிசமோ, அப்படிப்பட்டவனை நாங்கள் எப்படித் துதிப்போம் அணுவுக்கு சூட்சும மாயும் ஸ்தூலங்களுக்கும் பெரியதாகவும் இருக்கிறஎவனுடைய பரமார்த்தமான சொரூபத்தை யோகியருங்கூட அறிய மாட்டார்களோ, அத்தகைய உன்னை நாங்கள் சரணடைகிறோம் சுவாமி! தேவரீருக்குக் கொஞ்சமேனும் கோபம் என்பதில்லை. ஆயினும் இந்தக் காளியனைத் தண்டித்தது ஏனென்றால் லோக மரியாதையை நிலை நிறுத்துவதற்குத்தான் என்பதை அறிந்தோம். இனி எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள்வீராக.
பெண்கள் திறத்திலும், பேதைகள் திறத்திலும் பெரியோர்கள் இரங்க வேண்டுமன்றோ? ஆகையால் மெலிந்து இளைத்த எங்கள் நாயகனான காளியன்மீது இரக்கம் காட்டவேண்டும். பொறுமையுடையவரில் நீர் சிறந்தவரல்லவா? சகல உலகங்களுக்கும் ஆதாரமாகிறவன் நீர்! இந்த நாகனோ அற்ப பயமுடையவன் இவன் உனது திருவடியினால் துவைக்கப்பட்டதால் அரைமுகூர்த்தத்தில் உயிரை இழப்பான் எம்பெருமானே! அற்ப வீரியனான இந்த சர்ப்பராஜன் எங்கே? உலகங்களுக்கெல்லாம் இருப்பிடமான நீர் எங்கே? எங்களுக்குப் பதிப்பிøக்ஷ தந்தருள வேண்டும். சகல லோகநாதனே! சகல ஆத்மநாதனே! இந்த நாகன் உயிரை இழக்க இருக்கிறான். எங்களுக்கு மாங்கல்யப் பிøக்ஷ தந்தருளவேண்டும் என்று நாக கன்னியர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதனால் திருவுள்ளம் பற்றிய ஸ்ரீகிருஷ்ணன் தன் திருவடிகளால் துவைப்பதை நிறுத்தியதால், காளிங்கன் மிகவும் மெலிந்து இருந்துங்கூட சிறிது தைரியமடைந்து இளைப்பு நீங்கி, தேவதேவர்களுக்கு அதிபதியே! அருள் செய்ய வேண்டும் என்று மெல்ல மெல்ல விண்ணப்பிக்கலானான்.
எம்பெருமானே! அணிமாவாதி! எண்குணங்களையுடைய ஐசுவரியமானது எப்படி இயல்பாயும் மேலானதாயும் ஒப்பில்லாததாயும் இருக்கின்றதோ அப்படிப்பட்ட உன்னை எப்படித் துதிப்பேன்? நீ பிரகிருதிக்கு மேற்பட்ட ஆன்ம சொரூபியாயும் அவனுக்கு மேற்பட்ட முக்த சொரூபியாயும் இருக்கிறாய் பக்தன் முக்தன் மேலானவன் என்று சொல்லப்பட்டவனும் நீயே! ஆதலின் உன்னை எப்படித் துதிப்பேன்? எவனிலிருந்து பிரமனும் உருத்திரனும், இந்திரன், சந்திரன், மருத்துக்கள், அவிசுகள், வசுக்கள், ஆதித்தர் முதலானவர்களும் உண்டானார்களோ, அப்பேர்ப்பட்ட உன்னை நானெப்படித் துதிப்பேன்? மூர்த்தமாயும் அமூர்த்தமாயுமுள்ள ரூபியான எவனுடைய பரமார்த்த சொரூபத்தைப் பிருமா முதலிய தேவர்களும் அறியமாட்டார்களோ, அவனை நான் எங்ஙனம் துதிப்பேன்? யோகியரெல்லாம் சகல இந்திரியங்களையும் விஷயங்களினின்றும் திருப்பிச் செய்யுந் தியான யோகத்தினாலே எவனை அர்ச்சிக்கின்றார்களோ, அவனை நான் எப்படி அர்ச்சிப்பேன்? சணகாதி மகாயோகியரெல்லாம் எவனுடைய சொரூபத்தைத் தியானத்தாலே தங்கள் இதயங்களிலே நிறுத்தி, அஹிம்சை முதலிய மலர்களினாலே அர்ச்சிக்கின்றார்களோ, அவனை நான் எப்படி அர்ச்சிப்பேன்; ஓ தேவ தேவேசனே! இவ்வளவு அற்பனாகிய நான் அவ்வளவு மேன்மையுள்ள உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் பணியவும் வல்லமையுடையவனல்லேன்! ஆயினும் உன் கிருபையினாலேயே அடியேனை அனுக்கிரகிக்க வேண்டும். ஸ்ரீகேசவா! அடியேன் பிறந்தது கொடி சர்ப்ப ஜாதியல்லவா? அதனால் என் இயல்பு இப்படி இருக்கிறதேயல்லாது அடியேனிடத்தில் அபராதம் ஒன்றுமில்லை அச்சுதா! நீயே சகல உலகங்களையும் படைத்து, அழிக்கிறாய் ஆகையால் அந்தந்தப் பொருள்களின் ஜாதிரூப சுபாவங்களும் உன்னாலேயே உண்டாக்கப்படுகின்றன. எந்த இயல்பினால் நான் படைக்கப்பட்டேனோ, அதன் நடத்தையே என்னிடம் உள்ளது இதுதான் உண்மை! நீ படைத்த ஜாதி முதலானவைகளுக்கு மாறாக நான் நடப்பேனாகில் உன் கட்டளைக்கு மாறாக நடத்த குற்றம் செய்தவனாவேன் அடியேனை நீ தண்டிப்பதும் நியாயம். உன் சூக்தியும் அப்படித் தானன்றோ இருக்கிறது? ஆயினும் மூடனான அடியேனை தண்டனை செய்தருளினாய். இது அடியேனுக்கு கொடுமை தீர்ப்பதாக இருந்ததால், கொண்டாடும் படியான வரமாகின்றது! இது மற்றொருவரால் கிடைக்குமானால் அது சிறப்புடையதாகாது. பகவானே, பிராணன் ஒன்றுதான். அதைப் போக்காமல் தந்தருள வேண்டுகிறேன். இனிமேல் அடியேன் செய்யத்தக்கது இன்னதென்று நியமித்து அருள் செய்யவேண்டும் என்று காளியங்கன் பிரார்த்தித்தான். அப்போது கிருஷ்ணபகவான் கருணை கூர்ந்து, ஓ சர்ப்பராஜனே! இனி நீ இந்த யமுனை நதியிலே ஒரு கணமும் இருக்கவேண்டாம்; உன் புத்திர களத்திராதி பரிவாரங்களோடு கூட சமுத்திரத்தில் சேர்வாயாக. நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம். உன் சிரசில் என் திருவடியின் அடையாளம் இருப்பதைக் கண்டு உன்னைக் கருடன் எதுவும் செய்யமாட்டான் என்று கூறியருளி காளிங்கனை விட்டு விட்டார்.
பிறகு காளிங்க நாகன், சுவாமியின் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கி, தன் புத்திரக் களத்திராதியுடன் கூடி யாவரும் பார்த்துக்கொண்டேயிருக்க அந்த மடுவை விட்டுக் கிளம்பிச் சென்ற பிறகு, கரையேறிவந்த கண்ணனை இறந்து மீண்டுவந்தவனைக் கண்டதைப் போலக் கண்டு, நந்தகோபர் முதலியோரெல்லாம் மிகவும் அன்போடு பாலகிருஷ்ணனை கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர்விட்டு நனைத்தார்கள். மற்றுமுள்ள யாதவர்கள் கண்ணனின் மேன்மையையும் அந்த யமுனையாற்று நீர் தூய்மைப்பட்டு விட்டதையும் கண்டு மகிழ்ந்தனர். அதன் பிறகு கண்ணன் யாதவக் கூட்டத்துடன் திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளினார்.

—————-

8. தேநுகாசுரன் வதம்-

பலராமன் கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து மாடு மேய்த்துக் கொண்டே, ரமணீயமான ஒரு பனங்காட்டிற்குச் சென்றார்கள். அந்தப் பனங்காட்டிலே தேநுகன் என்ற ஓர் அசுரன் கழுதை வடிவெடுத்து மிருகங்களின் இறைச்சியை ஆகாரமாகக் கொண்டு வசித்து வந்தான். அங்கு மனிதர்களின் நடமாட்டம் இல்லாததால் அநேகமாய் பனம்பழங்கள் நன்றாகப் பழுத்து குமுகுமுவென்று வாசனை வீசிக் கொண்டிருந்தன. இடையர் குலச் சிறுவர்கள் எல்லாம் அப்பனம் பழங்களை விரும்பி, ஓ, பலராமா ஓகிருஷ்ணா! இந்தக் காடு தேநுகன் என்ற அசுரனின் நடமாட்டத்தால் எப்போதுங் காக்கப்பட்டு வருகிறது. அதனால் இங்கு நன்றாகக் கனிந்த பழங்கள் குலைகுலையாகத் தொங்குகின்றன. அக்கனிகளை நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்குச் சம்மதமிருந்தால் இவற்றை உதிர்த்துத் தள்ளுங்கள். நீங்கள் பலசாலிகளாகையால் விண்ணப்பம் செய்தோம்! என்று கூறினார்கள்.
உடனே பலபத்திரனும் கிருஷ்ணனும் மரங்களில் ஏறிப் பழங்களை உதிர்த்துத் தள்ளினார்கள். இவ்விதம் அவர்கள் இருவரும் பழங்களை உதிர்க்க, அவை விழுகின்ற ஓசையைக் கேட்டு, துஷ்ட அசுரனான தேநுகன் கோபங்கொண்டு ஓடிவந்தான். கழுதை வடிவமாகவேவந்த அவ்வசுரன் தனது பின்னங் கால்கள் இரண்டினாலும் பலராமனது மார்பில் உதைத்தான். உடனே பலராமன் அதிலாவகமாய் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து அந்த அசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி ஒரு பனைமரத்தின்மீது ஓங்கி வீசினான். அதனால் பெருங்காற்றானது மேகங்களை வீழ்த்துவது போல், அசுரக் கழுதை பல பழங்களை உதிரும்படிச் செய்து, தானும் தரையில் வீழ்ந்து உயிர்விட்டது. பிறகு அந்த அசுரனைச் சேர்ந்த கழுதை வடிவு கொண்ட அசுரர்கள் பலர் ஓடிவந்து ராமகிருஷ்ணர்களுடன் போரிட்டனர். தம்பி கிருஷ்ணன் சிலரையும் மூத்தவன் சிலரையும் பிடித்துச் சுழற்றித் தேநுகனை எறிந்ததைப் போலவே சுழற்றி வேடிக்கையாகப் பனைமரங்களின் மீது எறிய, அவர்களும் பழங்களுடன் விழுந்து உயிரிழந்தனர். அப்போது அந்த நிலம் முழுவதும் பனம்பழங்களும் கழுதையுடல்களும் நிறைந்து விளங்கியது. பின்னர் யாதவர் அனைவரும் பழங்களை வேண்டுமளவு புசித்து மகிழ்ந்து ராமகிருஷ்ணர்களைத் துதித்தனர் பசுக்களும் இனிய பசும் புற்களை மேய்த்து மகிழ்ந்தன.

—————–

9. பிரலம்பாசுரன் வதம்

தேநுகாசுரன் மாண்ட பிறகு, அவன் வசித்த பனங்காடு இடையர் குலச் சிறுவர்கள் விளையாடும் இடமாக மாறிவிட்டது. பிறகு வசுதேவரின் குமாரர்கள் ராமகிருஷ்ணர் இருவரும் பாண்டீரம் என்ற ஆலமரத்தின் அருகே சென்று, தோளில் அணைக் கயிற்றையும் மார்பில் வனமாலையும் அணிந்து, இளங்கொம்புள்ள காளைகளைப் போல் மகிழ்ந்து தங்கள் தோழர்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சிங்கநாதம் செய்வதும், சிலர் பாடுவதும், மரங்களை ஏறத் தேடுவதும் பசுக்களை அவற்றின் பெயரைக் கூப்பிட்டு அழைப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். ராமகிருஷ்ணர்களில் மூத்தவனான பலராமன் மைப்பொடி யூட்டிய ஆடையையும் இளையவனான கிருஷ்ணன் பொற்பொடி யூட்டிய ஆடையையும் தரித்து வானவில்லோடு வெண்மையும் கருமையுமாகப் பிரகாசிக்கும் மேகங்களைப்போல் தோற்றமளித்தார்கள். இத்தகைய அலங்காரத்துடன் சகலலோக நாதருக்கும் நாதர்களாயிருக்கும் அவ்விரு பாலகரும் பூவுலகுக்கு ஏற்ப மனிதத் தன்மையோடு, மனித பாவனையோடு, லோகத்திலுண்டான பல விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர். இருவர் கைகளைத் தண்டிகை போல் வைக்க, அதில் ஒருவர் தொங்கலாடுவதாலும் மரத்தின் விழுதுகளை முடிந்து அதில் உட்கார்ந்து வீசி ஊஞ்சலாடுவதாலும், ஆந்தோளிகைகளினாலும், ஒருவரோடு ஒருவர் கைச்சண்டையிடுவதனாலும் கட்டைகளையும் கற்களையும் சுழற்றுவது போன்ற குறளிச் செய்கைகளினாலும் இன்னும் பல விளையாடல்களினாலும் மற்றைய இடையச் சிறுவர்களோடு அவ்விருவரும் மகிழ்ந்திருந்தனர்.
அவ்வாறு அவ்விருவரும் விளையாடி வரும் நாட்களில் இவ்விருவரையும் பிடித்துக் கொண்டுபோகவேண்டும் என்பதற்காக பிரலம்பன் என்ற அசுரன் ஒருவன் ஆயச் சிறுவனைப் போல் வேடமெடுத்து வந்து இடையர் குலப்பிள்ளைகளில் ஒருவனாக விளையாட்டில் கலந்துகொண்டான். அவன் ஸ்ரீ கிருஷ்ணனை வெல்லக்கூடாத வகையை நினைத்து, பலராமனைக் கொல்ல நினைத்தான். அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் ஹரீணாக் கிரீடனம் என்ற சிறுவர் விளையாட்டு ஒன்றை விளையாடத் துவங்கினார்கள். அதற்காக யாவரும் இரட்டை இரட்டையாக நின்றார்கள். அவர்களுக்குள்ளே தாமா என்பவனோடு கண்ணனும் பிரலம்பன் என்பவனோடு பலராமனும் கூடி நின்று குதித்து வரும்போது தாமாவைக் கண்ணனும் பிரலம்பனை பலராமனும் ஜயித்ததனால், தோல்வியுண்ட இருவரும் தங்களை ஜயித்த இருவரையும் தங்கள் தோள்மீது ஏற்றிச் சுமந்துகொண்டு பாண்டீரம் என்ற ஆலமரத்தடிக்கு வந்து மறுபடியும் அங்கிருந்து திரும்பினார்கள். அப்போது பிரலம் பாசுரன் பலராமனைத் தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டு, சந்திரனை ஏந்திய மேகம் போல் குபீரெனக் கிளம்பி ஆகாயத்தில் எழும்பினான். அதைக் கண்டு பலராமன் தன் உடலைப் பாரமாக்கினான். அந்தப் பாரத்தைச் சுமக்கமாட்டாமல் அசுரன் தன் உடலையும்பெரிதாக வளர்த்திக் கொண்டு; மழைக்கால மேகம்போல் வளர்ந்தான், எரிந்த மலை போன்ற உடம்பும் குறுகிய கீரீடமும் கவிழ்ந்த தலையும் தொங்குகின்ற மாலை ஆபரணங்களும், வண்டிச் சக்கரம் போன்ற கண்களும் பயங்கர வடிவும், பூமி நடுங்கத்தக்க நடையும் கொண்ட அந்த அசுரன் சிறிதும் அச்சமின்றித் தன்னைத் தூக்கிக்கொண்டு எழும்புவதை பார்த்து பலராமன் தன் தம்பியைக் கூவியழைத்து, ஓ கிருஷ்ணா! ஓ கிருஷ்ணா! மலை போன்ற தேகங்கொண்டு இடையப்பிள்ளை போன்ற ரூபங்தரித்த அசுரன் ஒருவனாலே நான் தூக்கிக்கொண்டு போகப்படுகிறேன்! மதுசூதனா! இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்! இந்த துராத்துமா வெகு வேகமாக ஓடுகிறான் என்று கூறினான்.
அதைக்கேட்டதும் பாலகிருஷ்ணன், புன்னகையினால் இதழ்கள் மலரக் கூறலானான். ஓ, சர்வாத்துமகனாயும், சகல சூஷ்மங்களுக்கும் காரணனாயும் இருப்பவனே! பிரளயத்திலும் மிகுந்திருக்கும் படியான நித்தியனான நீ ஏன் மானுடத் தன்மையை மெய்யாகவே பற்றுகின்றாய் நீயே சகலலோக காரணங்களுக்குக் காரணமாய், வியக்கப் பிரபஞ்சத்துக்கு முன்பே இருப்பவனும் சகலமும் கடலினாலே மூழ்கடிக்கப்பட்டு, ஏகார்ணவமாக இருக்கும்போது, மிகுந்திருக்கிறவனுமாக இருக்கிறாய். இத்தகைய உன் தன்மையை நினைத்துக்கொள் மேலும் நாம் இருவரும் இந்தப் பூமியின் பாரத்தைப் போக்குவதற்கே அவதரித்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயோ? ஓ! அனந்தனே! ஆகாயம் உன் திருமுடி! மேகங்கள் உன் கேசங்கள், பூமி, உன் திருவடி அக்கினி உன் திருமுகம்! சந்திரன் உன் மனம் வாயு உன் மூச்சு நான்கு திக்குகளும் உன் நான்கு திருத்தோள்கள்! நீ ஆயிரம் திருமுகங்களும் ஆயிரம் திருக்கைகளும் ஆயிரம் திருப்பாதங்களும் கொண்டவனாய், ஆயிரம் பிரம்மாக்களுக்கும் உற்பத்தி ஸ்தானமான முதல்வனாக இருக்கிறாய்! உன் திவ்ய ரூபத்தை ஒருவனும் அறியமாட்டான். தேவதைகளும் உன் திருவவதார ரூபத்தையே அர்ச்சிக்கின்றனர். இந்த உலகம் யாவும் முடிவில் உன்னிடத்திலேயே லயமடைகின்றன. இந்தப் பூமி உன்னால் தாங்கப்பட்டன்றோ சராசர மயமான பிரபஞ்சத்தைத்தாங்குகின்றது? ஓ, உற்பத்தி விநாசங்கள் இல்லாதவனே! நீயே காலரூபமாய் யாவற்றையும் விழுங்கி விடுகின்றாய். தண்ணீரானது வடவாக்கினியினால் உண்ணப்பட்டுக் காற்றால் எறியப்பட்டு இமயமலையிலே பனியாய் நின்று, சூரிய கிரணங்களின் சம்பந்தத்தால் உருகி, மறுபடியும் தண்ணீராவதுபோல் சங்கார காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட பிரபஞ்சமெல்லாம் உன் ஆதீனமாகவே இருந்து, மீண்டும் படைக்க எத்தனிக்கின்ற உனது சங்கற்பத்தினால் முன்போலவே அந்தந்த உருக்கொண்டு பிரபஞ்சமாகத் தோன்றுகின்றன. ஈசுவரனே! கல்பந்தோறும் இப்படியே சிருஷ்டிப் பிரளயங்கள் நிகழ்கின்றன; நீயும் நானும் சேர்ந்து, இந்த உலகங்களுக்கு ஏக காரணமாக இருந்து, இந்தப் பூமியின் சுமையைக் குறைக்கப் பேத ரூபமாக அவதரித்தோம் அன்றோ? இவற்றையெல்லாம் நீ நினைத்துக்கொண்டு, இந்த மனுஷ்ய பாவனையைவிடாமல், அந்த அசுரனை சம்ஹாரம் செய்து, பந்துக்களுக்கு நன்மை செய்வாயாக! என்றான் கண்ணன்.
அதைக்கேட்டதும் பலராமன் சிரித்தான். பிறகு அவன் கண்கள் சிவக்க, தன் கைப்பிடியால் அந்த அசுரனின் தலைமீது அடித்தான். அந்த இடிபட்டவுடனேயே பிரலம்பாசுரனின் கண்கள் பிதுங்கின. கபாலமுடைந்து உதிரங் கக்க அவன் தரையில் விழுந்துமடிந்தான். இவ்விதமாகப்பிரலம்பனைச் சங்கரித்ததனால் யாதவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஸ்ரீ சங்கர்ஷணரான பலராமன் மறுபடியும் கண்ணனுடன் சேர்ந்துகொண்டு ஆயர்பாடிக்குச் சென்றான்.

——————–

10. கோவர்த்தன ஆராதனம்-

ராமகிருஷ்ணர்கள் இருவரும் திருவாய்ப்பாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் காலத்தில், மழைக்காலம் நீங்கியது. தாமரைகள் மலர்ந்து விளங்கும் சரத்காலம் வந்தது. அப்போது சிறிய குளங்களிலிருந்த மீன்கள், புத்திர ÷க்ஷத்திராதிகளிலே பற்றிருத்தலினால் இல்லறத்தான் தாபமடைவது போல், அவை தாபமடைந்தன. சம்சாரம், அசாரம் என்பதை அறிந்த யோகியர் அதில் பற்றற்று மவுனமாக இருப்பதைப்போல் காட்டிலிருந்த மயிலினங்கள் மதம் நீங்கி, மவுனமாயிருந்தன. ஞானம் கைவந்தவர்கள் தங்கள் அகங்காரத்தோடு பொருள் முதலானவற்றை விட்டுச்சுத்த சத்வ குணமுடையவராய் சமுத்திரத்தைத் துறந்திருப்பதைப் போல் மேகங்கள் தம்மிடமிருந்த தண்ணீரையெல்லாம் விட்டுவிட்டு நிர்மலமாயும் வெண்மையான மேனியையுடையவனாகவும் வானத்தை விட்டு நீங்கியவை போலவும் விளங்கின. வறண்ட இருதயமுடையவரைப்போல குளங்களெல்லாம் சூரிய கிரணங்களால் வறண்டிருந்தன. நக்ஷத்திரங்களினாலே நிர்மலமாய் இருக்கும் வானவீதியில், பூரண மண்டலத்தோடு கூடிய சந்திரன் எழுந்து விளங்கினான். நல்ல குலத்திலே ஒரு யோகியானவன் பிறந்து முக்திபெறத் தக்க திருமேனியோடு விளங்குவது போலவே அச்சந்திரன் விளங்கினான். மந்திரம் முதலான யோக முறைகளினாலே மகாயோகத்தை அடைந்து ஒரு யதியானவன் எப்படி நிச்சலனாக இருப்பானோ அவ்வாறு சமுத்திரமானது தண்ணீர் நிறைந்து ததும்பலின்றி நிச்சலமாக இருந்தது. அகங்காரத்தினால் உண்டான துக்கத்தை மகத்தான விவேகம் போக்குவது போல், சூரிய கிரணங்களினால் உண்டான தாபத்தையெல்லாம் சந்திரன் போக்கடித்தான் ஆபரண, ரேசக, கும்பம் என்கின்ற வாயுவை நிறுத்துதல், நிலைப்பித்தல் விடல் முதலானவற்றால் பிராணாயாமம் பயில்வதுபோல் தடாகங்களின் தண்ணீர் வாய்க்கால் முதலானவைகளில் நிறைக்கப்படுதலும் பின்பு ஓரிடத்தில் நிறுத்தப்படுதலும், வேண்டுங் கழனிகளுக்கு விடப்படுதலாகிய செயல்களால் பிராணாயாமம் செய்வன போலிருந்தன! இத்தகைய சரத்காலம் வந்தபோது, இந்திரனைப் பூசிப்பதற்காக ஒரு உற்சவம் நிகழ்ந்தது. அதில் அதிக ஆசையுடைய ஆயர்கள் குதூகலமாக ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் மூப்பர்களாக இருந்தவர்களிடம் கிருஷ்ணன் பின் வருமாறு கேட்டான். பெரியோர்களே நீங்கள் அனைவரும் களிக்கும்படியான இந்திர விழா என்பது என்ன? அதன் சொரூப அனுஷ்டானப் பயன்களை எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டான். அதற்கு தந்தை நந்தகோபரே பதில் கூறலானார். குழந்தாய்! தேவேந்திரன் என்பவன் ஜனங்களுக்கும் மேகங்களுக்கும் அதிபதியாக இருக்கிறான். அவன் கட்டளையிட்டால் மேகங்கள் மழை பொழிகின்றன. அந்த மழையினால் விளையும் பயிர்களைத்தான் நாமும் மற்றவர்களும் பயன்படுத்திக்கொண்டு தேவதைகளை ஆராதிக்கிறோம். மேலும் மழையினால் வளரும் பசும் புற்களினால் நம்முடைய மாடுகள் யாவும் நன்றாக வளர்க்கப்பட்டு புஷ்டியாகி நல்ல கன்றுகளை ஈன்று பால் நிறைய கறந்துகொண்டு மகிழ்ந்து திரிகின்றன. எங்கு மழை உண்டோ அங்குள்ள பூமி பயிர் நிறைந்தும் புல் நிறைந்தும் இருக்கும். அங்குள்ள பிரஜைகள் பசி வருத்தமின்றி இருப்பார்கள். இந்தப் பூமியிலுள்ள நீரைச் சூரியன் தனது கிரணங்களினாலே கிரஹித்து மேகங்களில்விட, அவற்றை மேகாதிபதியான இந்திரன் உலக நன்மைக்காக மழையாகப் பெய்விக்கிறான். ஆகையால்தான் அரசர்கள், மழைக்காலம் முடிந்தவுடன் மகிழ்ச்சியோடு யாகங்களினால் இந்திரனைப் பூசித்து வருகிறார்கள். அதுபோலவே நாமும் செய்து வருகிறோம்! என்றார். அதைக்கேட்டதும் கண்ணன் இந்திரனின் செருக்கு அழியும் பொருட்டுப் பின்வருமாறு கூறலானான்.
ஐயா! நான் சொல்வதைச் சற்றுக் கேட்க வேண்டுகிறேன். ஆயர் குலத்தினரான நாம் பயிர் செய்பவர்களல்லர் வாணிபத்தாலும் நாம் ஜீவிப்பதில்லை. நாம் காட்டில் திரிந்து மாடு மேய்த்துப் பிழைப்பவர்கள். ஆகையால் நமக்குப் பசுக்களே தெய்வம்! உலகத்தில் முக்கியமான நான்கு வித்தைகள் உண்டு. அவை ஆன்வீக்ஷகி என்ற தர்க்க வித்தை, இருக்கு முதலிய பிரிவுகளைக் கொண்டதால் திரயீ என்ற வேதம், வார்த்தை எனப்படுகின்ற பயிரிடுதல் பற்றிய சாஸ்திரம், தண்டநிதி என்கின்ற ராஜநீதி நூல் இந்த நான்கிலும் இப்போது வார்த்தா சாஸ்திரத்தை விவரிக்கின்றேன், அதைக் கேட்பீராக கிருஷி, (பயிரிடுதல்) வணிஜயா (வாணிகம்) பசுபாலனம் (மாடு மேய்த்தல்) ஆகிய இந்த மூன்றும் பிழைப்பாக இருப்பது வார்த்தை என்ற வித்தையாகும். உழவர்களுக்குப் பயிரிடுதல் ஜீவனமாகும். கடைத்தெரு வியாபாரிகளுக்கு வணிஜயா ஜீவனமாகும். நமக்கோ பசு மாடுகளே முக்கிய ஜீவனமாக உள்ளது. ஆகையால் எவன் எந்த வித்தைக்கு உரியவனோ, அவனுக்கு அதுவே தெய்வமாதலின் அதையே நாம் கந்த புஷ்பாதிகளினாலே அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வித்தையின் மூலமாகவன்றோ சுவாமி நமக்கு உபகாரஞ் செய்தருளினார்? மேலும் எவன் எதன் பயனை அனுபவித்துக் கொண்டு மற்றொன்றை பூஜிக்கிறானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் சுகமடைவதில்லை. உலகத்தின் எல்லை, பயிரிடும் நிலம் வரைக்கும் உள்ளது. காடு என்பது அவ்வெல்லைக்குப் புறத்தேயுள்ளது. மலைகள் என்பவை காட்டின் புறத்தே இருப்பவை. அந்தக் காட்டில் வசிக்கும் நமக்கு மலைகளே முக்கியமானவை. வாயில்களும் கதவடைப்புகளும் இன்றி, நிலவுடைமைக்காரராக இல்லாத மக்களே, எவ்வுலகிலும் வண்டியில் ஏறி இஷ்டமான இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்கள் நம்மைப் போல சுகமுடையவர்களாக இருப்பார்கள். மேலும் இந்த வனத்தில் மலைகள் எல்லாம் தமக்கு விருப்பமான ரூபமெடுக்க வல்லவைகள் என்றும், அந்தந்த உருக்கொண்டு தத்தமது சாரல்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன என்றும் நாமும் கேள்விப்படுகிறோம். இதற்கு உதாரணம், காட்டில் வாசஞ்செய்கின்றவர்கள் அந்த மலைகளுக்கு அபராதப்பட்டுவிட்டால் அவர்களை அந்தப் பர்வதங்கள் சிங்கம் முதலிய ரூபங்களைக் கொண்டு கொல்கின்றன. ஆகையால் நமக்கு உபகாரியாக இருக்கும் மலைகளையும் பசுக்களையும் குறித்து யாகங்களைச் செய்யவேண்டும். நமக்கு இந்திரன் ஏன்? பிராமணர்களுக்கு மந்திர யக்ஞம் முக்கியமானது. உழவர்களுக்குக் கலப்பையைப் பற்றிய யக்ஞம் முக்கியம்!
ஆனால், மலைகளையும் காட்டையும் பற்றியிருக்கும் நமக்கோ கோபர்வத யக்ஞங்கள் முக்கியமானவை. ஆகவே இந்த கோவர்த்தன கிரியை நீங்கள் பலவகை உபசாரப்பொருள்களைக் கொண்டு, விதிப்படி பசுவாலம்பனஞ் செய்து பூஜிக்க வேண்டும் இதற்காக எதுவும் ஆலோசிக்காமல் இந்த இடைச் சேரியிலுள்ள தயிர், பால், வெண்ணெய் முதலிய யாவற்றையும் எடுத்துப் பிராமணர்களுக்கும் அன்னத்தை வேண்டியவரும் பிறருக்கும் வழங்கி திருப்திப்படுத்தவேண்டும். நாம் இவ்விதம் செய்தவுடன், சரத்காலத்து மலர்களினால் கொம்புகள் அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் எல்லாம் வலம் வரவேண்டும். கோபாலர்களே! இதுதான் என்னுடைய மதம். நீங்கள் இதை விருப்பத்தோடு ஏற்றுச் செய்வீர்களானால் பசுக்களுக்கும் மலைகளுக்கும் எனக்கும் பிரீதியாக இருக்கும்! என்று கண்ணன் கூறினான். அதனால் நந்தகோபர் முதலிய யாதவ மூப்பர்கள் மகிழ்ந்தனர். நந்தகோபர் தம் தனயனான கிருஷ்ணனை, நோக்கி, குழந்தாய்! நீ சொன்னவை மிகவும் நேர்த்தியானவை. எங்கள் மனதுக்கும் பிடித்திருக்கிறது. ஆகையால் அப்படியே கிரியக்ஞம் ஆரம்பிப்போம்! என்றார்.
பிறகு, யாதவர்கள் அனைவரும் பர்வத யாகத்தை ஆரம்பித்தனர். கந்த, புஷ்ப, தூப, தீப, ஆராதனைகளினாலே பூஜித்து, ஓமம் செய்து, தயிர், பாயசம், இறைச்சி முதலியவற்றால் அந்தப் பர்வதத்திற்குப் பலி பிண்டங்களைச் செய்து போட்டு, பிராமணர் பலருக்கும் போஜனம் செய்வித்து, பசுக்களையும் பூஜித்தனர். பிறகு நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன. அது போலவே ரிஷபங்களும் (காளைகளும்) நீர் நிறைந்த மேகங்களைப்போல் கர்ஜித்துக் கொண்டு வலம் வந்தன. இவ்விதமாக மலை ஆராதனை செய்யும் போது கண்ணன் ஒரு தேவ ரூபமாய் அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து நான்தான் இந்தப் பர்வத தேவதை! என்று கோபாலர்கள் போட்ட அன்ன பலிகளையெல்லாம் அமுது செய்தருளினான். கீழேயிருந்து தானே அதை யாவருக்கும் காட்டிப் புன்முறுவல் செய்து, அவர்களுடன் கூட தானும் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அந்தத் தன் சொரூபத்தையும் அர்ச்சித்துப் பணிந்தான்! இவ்வாறு, யாதவர் அனைவரும் பருவதயாகத்தை நிறைவேற்றி, பகவத் கடாக்ஷத்தால் விரும்பிய வரங்களைப் பெற்று மகிழ்ந்தனர். மலைச் சிகரத்தில் இருந்த அந்தச் சொரூபம் மறைந்தவுடன் அவர்கள் தங்கள் ஆயர்பாடிக்குச் சென்றார்கள்.

——————

11. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பீடித்தல்

மைத்ரேயரே! இவ்விதம் சுவாமீ இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்ததால், இந்திரன் மிகவும் கோபங்கொண்டான். உடனே அவன் சம்வர்த்தகம் என்ற மேகக் கூட்டத்தை அழைத்து, மேகங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். என் கட்டளையை உடன் ஏற்றுத் தடையின்றி நிறைவேற்றுங்கள் நந்தகோபன் என்ற இடையன் புத்தி கெட்டு கிருஷ்ணன் என்கின்ற ஒரு சின்னப் பையனின் பலத்தைப் பெரிதாக எண்ணிக் கர்வங்கொண்டு, மற்ற இடையர்களையும் சேர்த்துக்கொண்டு, எனக்கு வழக்கமாகச் செய்து வரும் யாகத்தை நிறுத்திவிட்டான். ஆகையால் அகோரமான, பெருமழையைப் பெய்வித்து அந்த இடையருக்குப் பிழைப்பாகவுள்ள மாடுகளையெல்லாம் அழித்து விடுங்கள். நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களுக்குச் சகாயமாக நான் மலைச் சிகரம் போன்றுள்ள பெரிய யானை மீது ஏறிக்கொண்டு, வாயுவையும் தண்ணீரையும் விடும் உதவியைச் செய்கிறேன்! என்று கட்டளையிட்டான்.
அதற்கிணங்கி வானத்து மேகங்கள் யாவும், ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படிப் பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும் மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன. மின்னல்களும் இடிகளும் கசையடிகளாகத் தாக்க, அந்த அடிக்கும் பயந்தவைபோல் மேகங்கள் திக்குகள் அதிரும்படிக் கர்ச்சித்து மிகவும் கனமான தாரைகளைப் பெய்தன இவ்விதம் ஒழிவில்லாமல் மழை பெய்து கொண்டிருந்ததால் உலகம் எல்லாம் இருள் மூடியது. உலகம் கீழும் மேலும் பக்கங்களிலும் ஜலமயமானது போலத் தோன்றியது. அப்பொழுது பசுக்கள் மகா வேகமாக வீசிய காற்று மழையிலே அலைக்கப்பட்டு இடுப்பும், தொடைகளும், கழுத்தும் சுருங்கி, மாண்டன போன்று மூர்ச்சித்து விழுந்தன. மாடுகளில் பல, தமது இளங்கன்றுகளை வயிற்றில் அணைத்துக்கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தன பலமாடுகள், கன்றுகள் விழுவதைக் கண்டு, கதறியழுதன. சில கன்றுகள் காற்றினாலும் குளிரினாலும் உடம்பெல்லாம் சோர்வடைந்து நடுங்கி அற்பத் தொனியுடன் கூவியதைக் கண்டால், அவை கண்ணனை நோக்கி, கண்ணா! நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தீனக் குரலில் வேண்டுவதுபோல் ஒலித்தன.
மைத்ரேயரே! இவ்விதம் கோபியரும், கோபாலரும் நிறைந்த அந்தக் கோகுலம் எல்லாம் இத்தகைய பெருமழையினால் மிகவும் துன்பப்பட்டு நடுங்குவதை கண்ணபிரான் கண்டதும் இந்திரன் தனக்குப் பூஜை நடக்கவில்லையே என்ற கோபத்தால் இப்படிச் செய்கிறான். ஆகையால் நாமே இந்தக் கோகுலத்தைப் பாதுகாப்பது அவசியம்! அதற்காகப் பெரிய கற்பாறைகள் நிறைந்த இந்தப் பர்வதத்தை அடியோடு பெயர்த்து இந்த இடைச் சேரிக்கே ஒரு பெருங்குடையாகப் பிடித்துக் காப்பேன்! என்று திருவுள்ளம் பற்றி, அந்தமலையைப் பெயர்த்து, ஒரே திருக்கையால் விளையாட்டுப் பொருளைத் தூக்குவது போல அதைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு கோபாலரையெல்லாம் கூவியழைத்து, சிரித்துக்கொண்டே, நீங்கள் யாவரும் உங்கள் குழந்தை குட்டிகளோடும், பசுக்களோடும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்சவேண்டாம். அதை நான் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள நல்ல இடங்களில் அவரவர் விருப்பம் போலச் சுகமாக இருக்கலாம். மலையானது மேலே விழுந்துவிடும் என்று பயப்படவேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைப் போல் எளிதாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்! என்று கூறிப் புன்முறுவல் பூத்தான்.
இவ்விதம் ஸ்ரீகிருஷ்ணபகவான் கூறியருளியதைக் கேட்டதும் இடையர் அனைவரும் தமது வண்டிகளில் தத்தமது பொருள்களை ஏற்றிக்கொண்டு, மாடுகளையும் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு, அந்த மலையின் அடியில் வந்து சேர்ந்தனர். இடையரும், இடைச்சியரும் மகிழ்ந்தனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணபகவானின் மகிமையைத் துதித்துப் பாடிக்கொண்டிருக்க, பகவானும் அந்த மலையை ஆடாமல் அசையாமல் ஒரே கையால் தாங்கிக் கொண்டிருந்தான். இதுபோல் ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய சுவாமியும் அந்தப் பருவதத்தை குடைபோல ஏந்தி ஆயர்களையெல்லாம் காத்தருளினான். அதைக் கண்ட தேவேந்திரன் தன் முயற்சி வீணாயிற்றே என்று நினைத்து மேகங்களின் செயல்களை நிறுத்தினான்; இவ்வாறு இந்திரன் நிறுத்தி விட்டதால், ஆகாயம் நிர்மலமாயிற்று திசைகள் தெளிவடைந்தன. ஆயர்கள் அனைவரும் மலையடியிலிருந்து புறப்பட்டு பழையபடி சந்தோஷத்தோடு பாடிக்கொண்டே, ஆயர்பாடியை அடைந்தார்கள். பிறகு கிருஷ்ணபகவான் அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்தக் கோவர்த்தன கிரியை அது இருந்த இடத்திலேயே மறுபடியும் வைத்தருளினான்!

———————–

12. ஸ்ரீகோவிந்தப் பட்டாபிஷேகம்

கேட்டீரோ, மைத்ரேயரே! இவ்விதமாக கிருஷ்ண பெருமான் கோவர்த்தனகிரியை எடுத்துக் கோகுலத்தைக் காத்ததைக் கண்டு, தேவேந்திரன் வெட்கமடைந்தான், அவன் தன் ஐராவதமென்னும் யானை மீது ஏறிக்கொண்டு, கோவர்த்தன கிரியின் அருகே வந்தான். அங்கே சகல லோகங்களையும் காக்கும் எம் பெருமான் கோபால வேடம் பூண்டு யாதவப் பிள்ளைகளோடு கோக்களைக் காத்து நிற்பதையும் அந்த ஸ்வாமியின் திருமுடிக்கு நேர் மேலாக கருடன் என்னும் பெரியத் திருவடி தன் சிறகுகளால் வெய்யிற்படா வண்ணம் நிழல் செய்துகொண்டு பிறர் கண்களுக்குப் புலனாகாமல் இருப்பதையும் இந்திரன் கண்டான். உடனே அவன் யானை மீதிருந்து கீழே இறங்கி, ஏகாந்தத்தில் பகவானை வணங்கி அந்த மகிழ்ச்சியில் விழிகள் மலர, புன்னகையுடன் விண்ணப்பஞ் செய்யலானான்.
சுவாமீ ! ஸ்ரீகிருஷ்ண பகவானே! அடியேனது விண்ணப்பத்தைக் கேட்டு அருள் செய்யவேண்டும். உன் சன்னதிக்கு அடியேன் வந்தது விரோத புத்தியால் என்று எண்ணவேண்டாம், கிருபா மயமான உன் சங்கல்பத்தினாலேயே துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனங்களைச் செய்து, இந்தப் பூமியின் பாரத்தை நீக்குவதற்காக இங்கு அவதரித்தாய் என்பதை நான் அறிவேன். ஆயினும் எனக்குச் செய்யும் யாகத்துக்கு பங்கம் நேரிட்டதே என்பதால், தெரியாத்தனமாகக் கோபங்கொண்டு மேகங்களை ஏவி, கோகுலத்தை நாசஞ் செய்யும்படிக் கட்டளையிட்டேன். மஹாசக்தியுடைய நீ, குன்றெடுத்து கோகுலத்தைக் காத்த இந்த அற்புதமான திருவிளையாடலைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். நான் உன் சன்னதிக்கு வந்த முக்கிய காரியத்தைக் கேட்டருள வேண்டும். கோலோகத்தில் இருக்கும் பசுக்கள் எல்லாம் தங்கள் சந்ததியை நீ நன்றாகக் காத்து ரட்சித்ததற்காக உனக்கு ஒரு சத்காரம் செய்யவேண்டும் என்று என்னிடம் கூறின அவற்றின் வாக்கியப்படி உன்னை கோக்களின் இந்திரனாகப் பட்டம் சூட்டி, பட்டாபிஷேகம் செய்கிறேன். அதைத் திருவுள்ளம் பற்றி ஏற்றருளவேண்டும். அதனால் நீ கோவிந்தன் என்ற திருப்பெயர் பெறுவாய்! என்று தேவேந்திரன் விண்ணப்பஞ் செய்து, தனது வாகனமான ஐராவதத்தின் மேலிருந்து தீர்த்த கலசத்தை எடுத்து வந்து, தனக்கும் மேலாய்ச் சத்திய லோகத்துக்கும் மேலேயிருக்கும் கோலோகத்துக் கோக்களுக்கு இந்திரனாகையால் உபேந்திரன் நீ என்று பட்டாபிஷேகம் செய்தான்.
இவ்விதமாக ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றபோது, பசுக்கள் எல்லாம் தங்கள் மடிகளில் அளவின்றிச் சுரந்து பெருகிய பாலினால் பூமியை நனைத்தன. உபேந்திரன் என்றும் ஸ்ரீகோவிந்தன் என்றத் திருப்பெயர்கள் வழங்கி கிருஷ்ணபெருமானுக்கு பட்டாபிஷேகம் செய்த தேவராஜன் தலை வணங்கி மற்றொரு விண்ணப்பஞ் செய்தான். ஸ்ரீகிருஷ்ண பகவானே! பசுக்களின் வேண்டுதலை ஏற்ற வேணுகோபாலா! மற்றுமொரு விண்ணப்பம் உள்ளது. அதையும் திருவுள்ளம்பற்ற வேண்டும். அதாவது உனக்குத் துணையாக இருக்கும் கைங்கரியத்தின் ஆசையினால் என்னுடைய அமிசத்தைக்கொண்டு, பூமியில் அர்ச்சுனன் என்பவனை உண்டாக்கியிருக்கிறேன். அவன்பூபாரம் நீக்குவதில் உனக்குச் சகாயமாக இருக்கும்படி திருவுள்ளம்பற்றி அவனை உன்னைப்போலவே காத்தருளவேண்டும். அவனை நீ எப்போதும் ரக்ஷிக்க வேண்டும்! என்றான். அதைக் கேட்டதும் கண்ணபிரான் புன்முறுவலுடன், இந்திரா! பாரத குலத்தில் உனது அம்சத்தினால் அர்ச்சுனன் பிறந்திருக்கிறான் என்பதை நான் அறிவேன்! நான் பூவுலகத்தில் இருக்கும் வரையில் அவனைக் காப்பாற்றுகிறேன்! இந்த உலகத்தில் நான் எவ்வளவு காலம் இருப்பேனோ அவ்வளவு காலம்வரை அவனை ஒருவனும் ஜயிக்கமாட்டான். இந்த உலகத்தில் மிகவும் பலசாலிகளான கம்சன், அரிஷ்டன், கேசி, குவாலயாபீடம், நாகன் ஆகிய அநேக அசுரர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஹதம் செய்யப்பட்ட பிறகு பாரதயுத்தம் என்ற ஒரு மகாயுத்தம் நடக்கும், அதனால் பூமியின் பாரம் தீரும். ஆகையால் உன் புத்திரனான அர்ச்சுனனுக்காக நீ கவலைப்படவேண்டாம். எனக்கு எதிரில் அர்ச்சுனனுக்குப் பகைவன் என்று ஒருவன் தலையெடுக்க மாட்டான் பாரத யுத்தம் நடந்தபிறகு அந்த அர்ச்சுனனுக்காகவே யுதிஷ்டிரன் முதலியோரையும் ஆயுதத் துன்பம் ஒன்றும் இல்லாமல் காத்து ரட்சிப்பேன்! என்று கூறியளினான். வானவர்க்கரசன் சுவாமியை ஆலிங்கனம் செய்து, பணிந்து ஐராவதத்தின்மேல் ஏறி இந்திரலோகம் சென்றான். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் ஆயர்களோடும் பசுக்களுடனும் கோகுலத்துக்கு எழுந்தருளினான்.

———————

13. ராஸக் கிரீடை

இந்திரன் வணங்கிச்சென்ற பிறகு கோபாலர்கள் வந்து கோவர்த்தன பர்வதத்தையெடுத்த ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, அப்பா கிருஷ்ணா! இப்போது நேரிட்ட பெருமழையிலிருந்து எங்களையும் பசுக்களையும் காத்தாய்! உன் செயல்கள் அற்புதமானவை! ஏனென்றால் கோவர்த்தன மலையை நீ குடையாகப் பிடித்திருக்கிறாய். உனது பிறப்போ தாழ்ந்த இடைக்குலம் தண்ணீரில் காளிங்க சர்ப்பராஜனை அடக்கியதும் பனங்காட்டில் தேநுகாசுரனை அழித்ததும் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததுமாகிய உனது பாலிய லீலைகள் எங்கள் இதயங்களில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளன மிகவும் பராக்கிரமமுள்ளவனே! சத்தியம், சத்தியம்! ஸ்ரீ ஹரியின் திருவடிகளின் மேல் ஆணை! நீ மனிதனல்ல? ஓ கிருஷ்ணா! பெண்டுகள் சிறுவர்கள் முதலிய இந்த ஆய்ப்பாடியில் இருப்பவர்கள் யாவருமே உன்மீது அன்பு கொண்டிருப்பதும், சகல தேவர்களும் ஒன்று கூடிச் செய்தாலும் செய்யமுடியாத உன் காரியங்களும் பாலியத்திலேயே இத்தகைய வீரம் இருப்பதும் இழிவான எங்கள் குலத்தில் உனது பிறப்பும் எங்களுக்குச் சந்தேகத்துக்கு ஏதுவாக இருக்கின்றன. நீ தேவனோ, தானவனோ, யக்ஷனோ, கந்தர்வனோ, யாரோ தெரியவில்லை யாராயிருந்தால் என்ன? நீ எங்களுக்கு உறவுமுறையானவன் உனக்குத் தண்டமிடுகிறோம் என்று வணங்கினார்கள்.
கிருஷ்ணன் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். பிறகு அவன் நட்புக்கோபத்துடன் ஓ, கோபாலரே! உங்களுக்கு ஏன் இந்த விசாரணை? என்னிடத்தில் அன்பிருந்தால், நான் உங்களுக்குக் கொண்டாடத் தக்கவனாக இருந்தால் நீங்கள் உறவினனாக நினையுங்கள்! நான் தேவனுமல்ல; கந்தர்வனுமல்ல நான் உங்கள் உறவினனாகப் பிறந்தவனேயன்றி வேறன்று ஆகையால் நீங்கள் வேறுவிதமாக சிந்திக்கவேண்டாம்! என்றான். அதன்பிறகு ஆயர்கள் மவுனமாகச் சென்றனர். பிறகு கண்ணன் அந்தக் கூதிர்ப் பருவத்தில் வானம் நிர்மலமாக இருப்பதையும், பாலைப் பொழிவது போல நிலவு காய்வதையும், திசைகள் யாவும் மணம் கமழும் மலர்கள் மலர்ந்திருப்பதையும் கடாட்சித்து, முன்பு தான் வரமளித்தவாறு கோபியரோடு சேர்ந்து கிரீடிப்பதற்குத் திருவுள்ளம் கொண்டு, தமையனோடு செல்லாமல் தனியாகவே வனத்துக்குச் சென்றான். பெண்களின் மனதைக் கவரும் விதமாகவும் இன்னது என்று சொல்லவுங்கூடாத இனிய தொனியோடு தாரமும் மந்திரமுமான ஓசை வேற்றுமைகளின் முறைப்பாடுடைய புல்லாங்குழலை எடுத்துக்கண்ணன் ஊதினான். அந்த வேணுகானத்தைக் கேட்டு ஆய்ச்சியர் அனைவரும் பரவசமடைந்து மாளிகைகளைத் துறந்து பரபரப்புடன் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடந்தேடி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி கண்ணனின் குழலிசையை உற்றுக்கேட்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி அருகில் சென்று கிருஷ்ணா கிருஷ்ணா! என்று ஆவலோடு அழைத்துக்கொண்டும் வேறொன்றும் பேசமுடியாமல் நாணத்தோடு நின்றாள். வேறு ஒருத்தி கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு மிகுதியினாலே, ஒன்றும் தெரியாதவளாய் பக்கம் நின்றாள்.
ஒரு பெண், தன் மாளிகையிலிருந்து வெளியே வரும்போது அங்கே தன் மாமனாரைப் பார்த்தாள். பயந்தாள். கண்ணனிடம் போகமுடியாததால் கண்களை மூடிக்கொண்டு, தன்மயமாய், அந்தக் கோவிந்தனைத் தியானஞ் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி கண்ணனிடத்திலேயே சித்தம் பற்றியிருப்பதாலுண்டான ஆனந்தத்தால், புண்ணியங்களும் அவளையடையாமற் போனது பற்றிய பெருந் துக்கத்தால் பாவங்களும் மாளப்பெற்றவளாய் பரப்பிரம்ம சொரூபியாய், ஜகத்காரணமான அவனையே சிந்தித்து, மூச்சடக்கி முக்தியை அடைந்தாள். இவ்விதமாகத் தன்னைச் சூழ்ந்த கோபியர்களுடன் ராஜ கோபாலன் ராஸக்கிரீடை என்ற உற்சவத்தில் குதூகலமாய் இருந்தான். அதற்கு ஏற்றாற்போல சரத்கால நிலவும் பொழிந்து கொண்டிருந்தது. இவ்விதமாக கண்ணன் ராஸக்கிரீடை செய்தருளி வேறொரு இடத்திற்கு எழுந்து சென்றபோது யாதவக் கன்னியரெல்லாம் கூட்டமாகக் கூடி, கண்ணனின் திருவிளையாடல்களிலேயே மனம் லயிக்க அந்தப் பிருந்தாவனத்தின் நடுவில் திரிந்து ஒருத்தியிடம் மற்றொருத்தி பிதற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி தோழியரே! கேளுங்கள்! நான்தான் ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் நான் லலிதமாய் நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து காட்டினாள். மற்றொருத்தி நீயல்லடி கண்ணன்! நானே கண்ணன். என்னுடைய பாடலைக்கேள்! என்றாள். வேறு ஒருத்தி ஏ துஷ்டனான காளியனே; ஓடாதே நான் கிருஷ்ணன். உன்னைப்பிடிக்கிறேன் என்று தன் தோள்களைத் தானே தட்டித் தன் கையையே சர்ப்பத்தைப் போல் பிடித்து நின்றாள் மற்றொருத்தி நீங்கள் மழைக்கு அஞ்சவேண்டாம். இதோ இந்தக் கோவர்த்தனகிரியை நான் குடையாகப் பிடிக்கிறேன் என்றாள்.
இவ்விதமாக இடைச்சியர் எல்லாம் கண்ணனின் திருவிளையாடல்களைச் செய்துகொண்டு மெய்மறந்த நிலையில் பிருந்தாவனத்தில் திரிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண் தரையைப் பார்த்து, அங்கத்தில் புளகாங்கிதம் உண்டான, அருகில் இருந்தவர்களை நோக்கி, தோழியரே பாருங்கள்! இங்கே துவஜம், வஜ்ரம், கமலம் அங்குசம் முதலிய இரேகைகளையுடைய கண்ணனது திருவடித் தாமரைகளின் சுவடுகள் இருக்கின்றன, இவற்றைப் பார்க்கும்போது, அவன் விளையாட்டோடு விநோதமாக நடந்திருக்கிறான் என்று தோன்றியது. இன்னும் பாருங்கள், மகாபுண்ணியம் செய்த எவளோ ஒருத்தி அவனுடன் கூடச் சேர்ந்து, மதத்தினால் மெல்லச்சென்றிருக்கிறாள். ஏனென்றால் இதோ பக்கத்தில் அவனுடைய அடிச்சுவடுகளும் நெருங்கிச் சிறியவைகளாகக் காணப்படுகின்றன; அடியே, இங்கே கண்ணன் உட்கார்ந்து பூப்பறித்திருக்கிறான். அதனால் தான் அவனுடைய திருவடிகளின் நுனிமட்டும் இங்குப் பதிந்துள்ளன. இதோ பாருங்களடி! இங்கே கண்ணன் உட்கார்ந்து அம்மலர்களால் ஒருத்தியை அலங்கரித்திருக்கிறான். அவளோ முற் பிறவியில் ஸ்ரீமந் நாராயணனை நன்றாக ஆராதித்திருக்கிறாள். இதோ பாருங்கள்! இங்கே அவன் பூப்புணர்ந்தவளை விட்டுவிட்டு, இந்த வழியாகப் போயிருக்கிறான். இங்கே ஒருத்தியின் அடிச்சுவடுகள் நுனியழுந்தியவையாகக் காணப்படுகின்றன. ஆகையால் அவள் முன்னே சென்ற கண்ணனைச் சேரும் பொருட்டு நிதம்பபாரத்தால் வருந்தி விரைவாக நடந்திருக்கிறாள். பாங்கியரே! இங்கே ஒருத்தி அவன் கைமேல் கை வைத்துக்கொண்டு அவன் கூடவே நடந்திருக்கிறாள். அதனால்தான் இங்கே அந்த மங்கையின் காலடி வைப்புகள் நீண்டிராமல் சிறிது நெருங்கி அசுவாதீனமாக இருக்கின்றன. அடியே இங்கே பாருங்களடி அந்த வஞ்சகக் கண்ணன் அந்த மங்கையின் கையை ஸ்பரிசித்தது மாத்திரமேயன்றி, வேறு ஸ்பரிசம் எதுவும் செய்யாததால், அந்த மங்கை அவமானப்பட்டு ஆசையற்றுத் திரும்பி விட்டதாகக் காலடிச் சுவடுகள் எடுத்துக்காட்டுகின்றன. அடியே, இங்கே பாருங்களடி இங்கே கண்ணனின் காலடிச் சுவடுகள் மிக விரைவாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவன் இங்கே யாரோ ஒருத்தியை, நீ இங்கேயே இரு! நான் சீக்கிரமாகப்போய் நாமிருவரும் கூடுவதற்கு ஏற்ற இடத்தைப் பார்த்துக்கொண்டு வந்து சேருகிறேன்! என்று சொல்லிவிட்டு நழுவிப் போயிருக்கிறான் என்று தோன்றுகிறது. பாங்கியரே ! இதற்குமேல் அவன் சுவடு காணப்படவில்லை. ஆகையால் அவன் மற்றையோர் புகமுடியாத இடத்துக்குப் போய் இருக்கிறான். ஆகையால் திரும்புங்களடி! என்று சொல்லி, கன்னியர் யாவரும் கண்ணனை இனிக் காண்பது அரிதென்று மனம் மயங்கி, யமுனையாற்றின் கரையில் உட்கார்ந்து அவனது சரிதங்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமயத்தில் கண்ணன் அங்கு வந்தான். அவன் வந்ததும் கன்னியரெல்லாம் களிப்படைந்தனர். அவர்களில் ஒருத்தி கிருஷ்ண கிருஷ்ண என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி புருவங்களை நெறித்து கண்களாகிய வண்டுகளால் கண்ணனது முகாரவிந்தத்தைப் பானஞ் செய்தாள். வேறு ஒருத்தி கண்ணனைக் கண்டதும் கண்களை மூடிக்கொண்டு, அவனது திவ்விய ரூபத்தையே தியானித்துக் கொண்டிருந்தாள். இப்படியாகத் தன்னைக் காதலித்துப் பல வகையான சேஷ்டைகள் செய்தவண்ணம் தன்னைச் சூழ்ந்து நிற்கும் அப்பெணகளில் சிலரிடம் கண்ணன் இனிமையாகப் பேசியும் சிலரைக் கை தீண்டுவதாலும் சமாதானம் செய்தான். பிறகு கலக்கமின்றித் தெளிவுடன் இருந்த அப்பெண்களோடு ராஸக்கிரீடை செய்யலானான். அம்மங்கையர் அனைவரும் கண்ணனைவிட்டு அகலாமல் அருகிலேயே ஒட்டியொட்டி இருந்ததால், வட்டமாக அமையவேண்டி ராசமண்டல கோஷ்டி அமையவில்லை. எனவே கண்ணன் அப்பெண்கள் ஒவ்வொருத்தியின் கையைப் பிடிக்க அந்தச் சுகத்தில் பரவசமாய் ஒவ்வொருத்தியும் கண்களை மூடிய நிலையில் மெய்மறந்து நிற்கும் போது கண்ணன் அவளவள் கையை மற்றொருத்தியின் கையோடு சேர்த்து, அவர்களை வட்டமாக நிறுத்தினான். அப்போது எல்லாப் பெண்களும் ஆனந்தப் பரவசத்தால் கண்ணனுடைய கையைத் தான் பிடித்திருப்பதாக நினைத்தார்களே தவிர மற்றொரு பெண்ணின் கையைப் பிடித்திருப்பதாக நினைக்கவில்லை. கண்ணனோ, விரைவாகப்பாயும் லாகவத்தால், யாவருக்கும் அருகிலிருப்பது போலவே காணப்பட்டான். பிறகு சரத்கால வர்ணனைப் பாட்டும், அதற்குத் தாளமாக கன்னியரின் கைவளையல்களின் குலுக்கலும் சேர்ந்து ராஸக்ரீடை விளங்கியது. ஆயினும் கண்ணன் மட்டுமே சரத் காலத்துச் சந்திரனையும் நிலவையும் ஆம்பல் மலர்ந்த தடாகங்களையும் பாட கோபியர்கள் கண்ணனது திருநாமம் ஒன்றையே பாடினார்கள். இப்படிப் பாடிச் சுற்றிவரும்போது, ஒருத்தி கங்கணங்கள் ஒலி செய்யும் தன்கையை கண்ணனின் தோள்மீது பதித்தாள். மற்றொருத்தி, யானைத் துதிக்கை போன்ற தோளுடைய கண்ணனை இறுகக்கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். இன்னும் ஒருத்தி கண்ணனின் தலையோடு தன் தலையைச் சேர்த்து அவன் தோள்களைக் கட்டிக்கொண்டாள். இவ்விதம் ஒவ்வொருத்தியும் ஆனந்தித்த வண்ணம் கண்ணனைப் பிரியாமல் இருந்தார்கள். தன்னைப் பிரிந்தால் ஒரு கணமும் ஒரு கோடி வருடமும் போலத் தோன்றும்படி அப்பெண்களுக்கு ஆனந்தத்தை வளர்த்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணன் ராசக்ரீடை செய்தான். கோபிகா ஸ்திரீகள் அனைவரும் தன் தன் தாய்தந்தையராலும் உடன்பிறந்தாராலும் தடுக்கப்பட்டாலும் அவர்களை லட்சியம் செய்யாமல் இரவு நேரங்களில் கண்ணனிடம் வந்து சேர்ந்து அவனிடம் மிகவும் அன்போடு ரமித்திருந்தார்கள். கண்ணனும் மனுஷ்ய அவதாரத்துக்கேற்ப, இளமைக்குரிய சாபல்யத்தைப் பெருமைப்படுத்திக் கொண்டு, இரவுகள் தோறும் அக்கோபியருடன் ரமித்து வந்தான்.
மைத்ரேயரே! தருமத்தை ஸ்தாபிக்க அவதாரஞ் செய்த எம்பெருமான் தரும விரோதமான இத்தகைய காரியஞ் செய்யலாமா? இதனால் கோபிகா மங்கையருக்குப் பாதகம் உண்டாகாதோ என்று நீங்கள் கேட்பீர் எம்பெருமான், தன்னைச் சேர்ந்தோரின் சகல பாவங்களையும் போக்கடிக்கும் படியான தூய்மையோன் அந்த மங்கையரும், வேதாந்த நிர்ணயப்படி அன்பு செலுத்த வேண்டிய இடத்திலேயே தங்கள் அன்பைச் செலுத்தினார்கள். ஆகையால் அவர்களுக்கு சகல பாவ நிவர்த்தியுண்டாயிற்றே தவிர பாபம் சம்பவிக்கவில்லை. எம்பெருமானுக்கோ தேவர்களுக்கு உண்டாவது போன்ற பாவபந்தம் உண்டாவதில்லை. ஏனென்றால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப் பிராணிகளிலும் வியாபித்துள்ளனவோ, அதுபோலவே அக்கோபிகா ஸ்திரீகளிடத்திலும் அவர்களின் கணவரிடத்திலும் ஏனைய ஆன்ம கோடிகளிடத்திலும் வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையால், கண்ணனுக்கும் புதியதொரு பந்தம் வந்ததில்லை என்பதை அறிவீராக!

——————

14. அரிஷ்டாசுர வதம்

மைத்ரேயரே! ஒருநாள் மாலையில் கண்ணன் ராஸக்ரீடைக்குத் தயாராக இருந்தான். அப்போது அரிஷ்டன் என்ற ஓர் அசுரன் எருது வேடம் பூண்டு, இடைச்சேரியில் அட்டகாசம் செய்து பயப்படுத்திவந்தான். நீருண்ட கருமேகம் போன்ற உடலும், கூர்மையான கொம்புகளும், சூரியன் போன்ற சிவந்து பளபளப்பாக ஜொலிக்கும் கண்களும் திண்மையான கழுத்து முசுப்பும் அண்ட முடியாத பராக்கிரமமும் வாய்ந்த அவன் தன் குளம் புகளால் பூமியைப் பிளப்பவனைப் போல் இடித்துக் கொண்டும் உதடுகளை நாக்கினால் அடிக்கடி துழாவிக் கொண்டும் பரபரப்பாய் வாலைச் சுழித்து உதறிக் கொண்டும், பசுக்கள் எல்லாம் நடுங்கப் பாய்ந்து வந்தான். மாடுகளை முட்டிக் கருக்களை விழச்செய்தான்.
அத்தகைய கொடிய காளையைக் கண்ட இடைச்சிகள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறிக் கொண்டு கிருஷ்ணனைச் சரணடைந்தார்கள். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் கையைத் தட்டிச் சிங்கநாதம் செய்தான். அதைக் கண்டதும் விருஷப அசுரன் தன் கொம்புகளை நீட்டிக்கொண்டு கண்ணன் மீது பாய்ந்தான். கண்ணன் அதைக் கண்டு விலகாமல், இருந்த இடத்திலேயே சத்துருவை மடக்கினான். பிறகு விருஷப அசுரனின் கொம்புகளைப் பிடித்து அசையவொட்டாமற் செய்து, தன் முழங்காலினால் அவனது அடிவயிற்றில் இடித்து அவனது கர்வத்தையும் கொழுப்பையும் அடக்கி, அழுக்கு ஆடையைக் கசக்குவதைப் போல் அவனது கழுத்தைப் பிடித்துக் கசக்கி, அவனது கொம்புகளில் ஒன்றை முறுக்கி உடைத்து, அவனை அடித்தான். இதனால் அந்த அசுரன் உதிரத்தைக் கக்கிக்கொண்டு கீழே விழுந்தான். அதைக் கண்டு தேவர்கள் கண்ணனைத் துதித்தார்கள்.

——————–

15. அக்குரூரருக்குக் கம்சனின் கட்டளை!

அரிஷ்டன், தேநுகன், பிரலம்பன், முதலிய அசுரர்களை கண்ணன் அழித்ததையும், கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்ததையும் பூதகி கொல்லப்பட்டதையும் கலகக்காரரான நாரதமுனிவர் வந்து கம்சனிடம் கூறினார். தேவகியின் ஆண் குழந்தையான கிருஷ்ணனைக் கொண்டுபோய் இடைச்சேரியிலுள்ள யசோதையின், குழந்தையாக வைத்து விட்டு, யசோதையின் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து தேவகியின் குழந்தையாக மாற்றிவிட்டதுவரை யாவற்றையும் நாரதர் கூறியதும், கம்சன் வெகுண்டெழுந்து தன் மைத்துனரான வசுதேவர் மீது பொல்லாத கோபம் கொண்டான்.
உடனே கம்சன் தன் அரச சபையில் வசுதேவரை நிந்தனை செய்துவிட்டு சபையில் இங்கும் அங்கும் நடந்து இப்போது இளமைப் பருவத்தினராக இருக்கும் ராமகிருஷ்ணர்கள் பலப்படுவதற்கு முன்பே, அவர்களை அழித்து விட வேண்டும். இதற்கு மேல் வளரவிட்டால் அவர்கள் வெல்வதற்கு அசாத்தியராகி விடுவார்கள். ஆகையால், நம்மிடமுள்ள முஷ்டிகன் சாணுரன் என்ற மல்லர்களைக் கொண்டு, மல்யுத்தம் செய்வித்து அவ்விளைஞர்களைக் கொல்வோம். அதற்காக நாம் நடத்தும்வில் எய்யும் திருவிழாவொன்றைச் சாக்கிட்டு, ராமகிருஷ்ணர்கள் இருவரையும் இடையர் சேரியிலிருந்து இங்கே வரவழைத்து விரைவில் அவர்களை அழிக்கும் உபாயத்தைச் செய்யவேண்டும். அதற்கு சுவபல்க குமாரராகிய அக்குரூரனையே கோகுலத்துக்கு அனுப்ப வேண்டும் இல்லையென்றால் பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கும் கேசி என்பவனுக்குக் கட்டளையிட்டால், அவன் அங்கேயே அவர்களை சங்கரித்துவிடுவான். இல்லையெனில் குவலயாபீடம் என்ற என்னுடைய பட்டத்து யானை அவ்விடைப் பிள்ளைகள் இருவரையும் நாசஞ் செய்ய வல்லதாகும் என்று சிந்தித்தான். பிறகு ராம கிருஷ்ணர்களைக் கொல்வதற்காக அழைத்து வரும்படி அக்குரூரருக்கு கம்சன் கட்டளையிடலானான்.
ஓ தானபதியே! என் மகிழ்ச்சிக்காக என் கட்டளையைத் தடையின்றி நீயே நிறைவேற்றவேண்டும். அதாவது நீர் தேரில் ஏறி, இடையர்குலத் தலைவனான நந்தகோபனின் கோகுலத்துக்குப் போகவேண்டும். அங்கு விஷ்ணு அம்சமாகப் பிறந்ததாகச் சொல்லப்படும் வசுதேவரின் பிள்ளைகள் இருவர் ராமகிருஷ்ணர்கள் என்ற பெயர்களில் வளர்கிறார்கள் அல்லவா? அவர்களை வருகின்ற சதுர்த்தசியன்று இங்கு நடக்கவிருக்கும் தனுர்யாக மகோத்சவத்தில் நடக்கும் மல் யுத்தத்திற்கு வரும்படி அழைத்து வரவேண்டும். மல் யுத்தத்தில் வல்லவர்களாக என்னிடமுள்ள சாணுர முஷ்டிகர்களுடன் கூட அவர்கள் சண்டையிடுவதை இங்குள்ள யாவரும் வேடிக்கை பார்க்கட்டும். என்னுடைய குவலயா பீடம் என்ற யானை, மாவுத்தனால் தூண்டப்பட்டு, வசுதேவ குமாரர்களான அந்த துஷ்டச் சிறுவர்களைக் கொன்று விடும்! இவ்விதமாக அவர்கள் இருவரையும் வதைத்த பிறகு வசுதேவனையும், நந்தகோபனையும் துர்புத்தியுள்ள என் தகப்பன் உக்கிரசேனனையும் நான் கொன்றுவிடுவேன். பிறகு என்னைக் கொல்ல நினைத்த இடையருடைய மாடுகளையும் பொருள்களையும் பறித்துக்கொண்டு பிறகு உம்மைத் தவிர இதர யாதவர்களையெல்லாம் கொல்லும்படிக் கட்டளையிடுவேன். இப்படியெல்லாம் செய்து, இந்த ராஜ்யத்தில் யாதவப் பூண்டே இல்லாமலும்; பகைவரேயில்லாமலும் ஆள்வேன்; இதற்காக; அக்குரூரரே; நீர் ஆய்ப்பாடிக்குப் போய் வரவேண்டும். மேலும் அங்குள்ள இடையரிடத்தில்; எருமை நெய், தயிர், பால் இவற்றை விசேஷமாக நம் அரண்மனைக்குக் கொண்டு வரும் படிக் கட்டளையிட்டு வாரும்! என்று கம்சன் கூறினான். அதைக் கேட்டதும் மகா பாகவதரான அக்குரூரர்.. நாளைக்குக் கண்ணனை நாம் சேவிப்போமல்லவா? என்று தம் மனதிற்குள் மிகவும் மகிழ்ந்து கம்சனுக்கு அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தமது தேரில் ஏறிக்கொண்டு; மதுராபுரியிலிருந்து புறப்பட்டார்.

——————-

16. கேசி வதம்

பிருந்தாவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கேசி என்ற அசுரன், கம்சனுடைய தூதனால் ஏவப்பட்டு; ஸ்ரீகிருஷ்ணனைச் சங்கரிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் குதிரை வடிவம் கொண்டான். அவன் கிருஷ்ணன் இருக்குமிடத்திற்கு வந்து, குளம்புகளால் பூமியை இடித்துக்கொண்டும்; பிடரி மயிர்களின் நெறிப்பினால் மேகங்களைக் குத்தியும் குதித்தோடும் திறமையினால் சந்திர சூரிய மார்க்கங்களைத் தாவிக்கொண்டும் பெருங்கனைப்புச் செய்து, அங்கிருந்த ஆயர்களைத் துரத்தினான். அந்த அசுரக் குதிரையின் கனைப்பைக் கேட்ட ஆயரும் ஆய்ச்சியரும் நடுங்கிப் பயந்து, ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைந்தார்கள். கண்ணா! காத்தருள்வாய்! கண்ணா காத்தருள வேண்டும் என்று கோபாலர்கள் கூவுவதைக்கேட்டதும் கண்ணபிரான் புன்முறுவலுடன் அவர்களை நோக்கி, கோபாலர்களே, நீங்கள் பயப்படவேண்டாம். அற்ப பலமுள்ள இந்தக் கேசிக்கு அஞ்சும் உங்களால், வீரருக்கு உண்டான சக்தியெல்லாம் போக்கடிக்கப்படுகின்றன. இந்த அற்பக் குதிரை சும்மா கனைத்து ஆரவாரம் செய்கிறதே தவிர வேறொன்றுமில்லை குதிரை வடிவமெடுத்து வந்து இங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இவன் ஒரு பலமற்ற அசுரன் சும்மா குதித்து ஆட்டம் காட்டுகிறான். என்று கூறிவிட்டு கேசியை, நோக்கி, டே துஷ்டா! வா! வா! நான் கிருஷ்ணன்! முன்பு தக்ஷயக்ஞத்திலே பூஷா என்பவனின் பற்களை உருத்திரன் உதிர்த்ததைப் போல், இப்போது உன் பற்களையெல்லாம் நான் உதிர்த்துவிடுகிறேன்! என்று வீரமுழக்கம் செய்து கேசியிடம் சென்றான். கேசியெனும் அசுரக் குதிரையோ வாயைத் திறந்துகொண்டு கண்ணன்மீது பாய்ந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் திருக்கையை நன்றாக நீட்டி அந்தக் குதிரையின் வாயினுள் கொடுக்க, அந்தக் கையைக் கடித்த அசுரக் குதிரையின் பற்கள் எல்லாம் தெறித்துக் கீழே விழுந்தன. உள்ளே நுழைந்த கை, வியாதியைப் போல வளர்ந்ததால், அசுரக் குதிரையின் வாய் கிழிந்தது கண்கள் பிதுங்கின. அது கால்களால் பூமியை உதைத்துக் கொண்டும் மல மூத்திரங்களை விட்டுக்கொண்டும் உடம்பு வியர்க்கப் பலமும் கர்வமும் ஒடுங்க நின்றது. கிருஷ்ணன் தன் கையைத் தளர்த்தி அந்தக்குதிரையை இரு பிளவுகளாகப் பிளந்தெறிந்தான். இவ்விதமாக கேசி என்ற அசுரனைக் கண்ணன் அழித்ததால் கோபாலர் துதித்து மகிழ்ந்தனர்.
அப்போது ஆகாய மார்க்கமாக வந்த நாரத முனிவர் கேசியசுரன் பட்ட பாடுகளைக் கண்டு மகிழ்ந்து சுவாமிக்கு விண்ணப்பஞ்செய்ததாவது. ஓ ஜகந்நாதா! சகல தேவர்களுக்கும் துன்பஞ் செய்த கேசியை, விளையாட்டாகவே நீ சங்கரித்தது மிகவும் நன்று இதுவரை நடந்திராத இந்த நராசுவ யுத்தத்தைக் காண்பதற்கே நான் சொர்க்கத்திலிருந்து இங்கு வந்தேன். மதுசூதனா! இந்த அவதாரத்தில் நீ செய்த திருவிளையாடல்கள் சிறப்புடையன. அந்தக் குதிரையரக்கன் கனைப்பைக் கேட்டாலே இந்திரன் முதலிய தேவர்கள் நடுங்குவார்கள். அந்தத் துஷ்டாத்மாவான கேசியை நீ சங்கரித்து அருள் செய்ததாலேயே உனக்குக் கேசவன் என்ற திருப்பெயர் வழங்கட்டும்! நாளைக்கு நடக்கவிருக்கும் கம்ச யுத்தத்திற்கு நான் மீண்டும் வருவேன். உக்கிரசேனன் மகனாகிய கம்சனும் அவனைச் சார்ந்த மற்றவர்களும் சங்கரிக்கப்பட்ட பிறகு தான் பூமி பாரத்தைக் குறைத்தவனாவாய்! கோவிந்தா! செய்வதெல்லாம் தேவ காரியங்கள் அதெல்லாம் உனக்கே தெரியும்! நீ பல்லாண்டு வாழ்வாயாக! நான் விடை பெறுகிறேன்! என்று சொல்லி விட்டு நாரதர் சென்றார். ஸ்ரீகிருஷ்ணன் கோபிய கோபாலரோடு, திருவாய்ப்பாடிக்குச் சென்றான்.

———————

17. அக்குரூரர் கண்ணனைக் காணுதல்

முன்பு கம்சன் இட்ட கட்டளைப்படி அக்குரூரர் மதுரையிலிருந்து ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தம் மனதில் சிந்தித்துக்கொண்டே வந்தார். இந்த உலகத்தில் என்னைவிடப் புண்ணியவான் வேறு யாருமில்லை. ஏனென்றால் அமிசத்தினாலே இங்கு அவதரித்துள்ள சக்கரபாணியின் திருமுகத்தைத் தரிசிக்கப் போகிறேன். செந்தாமரைக் கண்ணனின் திவ்வியத் திருமுக மண்டலத்தைக் காணப்போவதால், இப்போதே என் பிறவி சாபல்யமாயிற்று. நான் பாக்கியசாலி! எவனை இந்திரன் நூறு யாகங்களினால் ஆராதித்து சகல தேவதைகளுக்கும் அதிபதியாக இருக்கும் மேன்மையைப் பெற்றானோ, அந்த ஆதியத்யாந்த ரஹிதனான ஸ்ரீ கேசவனை நான் இந்தக் கண்களினாலேயே காண்பேனன்றோ! சர்வாத்மாவாய் எல்லாமறிந்தவனாய்; சகல சொரூபியாய், சர்வ பூதங்களிலுமுள்ளவனாய், இத்தகையவன் என்று நினைக்கக் கூடாதவனாய் எங்கும் வியாபித்தவனாய் விளங்கும் பகவான் என்னோடு பேசும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமல்லவா? எவன் அனந்த சொரூபியாக இருந்துகொண்டு தனது திருமுடியினினாலே இந்தப் பூமியை அசையாதிருக்கும்படித் தாங்குகிறானோ, பூமிக்காக இப்போது இங்கே அவதரித்தருளின அவன் என்னை அக்குரூரர் என்று அழைப்பானல்லவா? தந்தை என்றும் பிள்ளை என்றும் நண்பன் என்றும் சகோதரன் என்றும் தாய் என்றும் பந்துக்கள் என்றும் பலவகைப் பற்றாக நிற்கிற எவனுடைய இந்த மாயையைக் காப்பதற்கு உலகம் திறமுள்ளதன்றோ. அந்த எம்பெருமானுக்கு நமோ நம லோகாதாரனாக இருக்கும் அவனிடத்தில் சேதனாசேதன ஸ்வரூபமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சங்கள் யாவும் எல்லா விதத்தாலும் நிலைபெற்றிருக்கின்ற சத்தியத்தால், அந்த எம்பெருமான் என்னைக் கம்சனைச் சேர்ந்தவன் என்று திருவுள்ளஞ் சீறாமல் என்னிடம் சாந்தனாக இருக்கவேண்டும். எவனை நினைத்தவுடனேயே புருஷன் சகல நன்மைகளுக்கும் உரியவனாகி விடுவானோ அந்த அஜனாயும் நித்தியனாயும் இருக்கிற ஸ்ரீ ஹரியை நான் அடைக்கலமாக அடைகிறேன்! என்று அக்குரூரர் யோசித்துக்கொண்டே, தேரோட்டிச் சென்றார்.
சூரியன் அஸ்தமிக்கச் சிறிது நேரம் இருக்கும் நேரத்தில் இடையர் குலத்தினர் வசிக்கும் திருவாய்ப்பாடியை அக்குரூரர் அடைந்தார். அங்கே பசுக் கறக்குமிடத்தில் கன்றுகளின் நடுவில், அன்றலர்ந்த கரு நெய்தல் மலர் போன்ற காந்தியும் மலர்ந்த செந்தாமரை போன்ற திருவிழிகளும், ஸ்ரீவச்சம் என்னும் மறுப்பொருந்திய திருமார்பும், திரண்டு நீண்ட திருத்தோள்களும், பரந்தும் உயர்ந்தும் விளங்கும் திருமார்பும் நீண்டு உயர்ந்த கூர்மை நாசியும், வெகு விசாலமான மந்தஹாசமுள்ள திருமுகத்தாமரையும், உயர்ந்தும் சிவந்தும் உள்ள நகங்களுடன் கூடித் தரையில் பதிந்த திருவடித் தாமரைகளும், பொன் நிறமான திருப்பரிவட்டங்களும், வனமாலையும் சாற்றிக்கொண்டு, வெண்தாமரையை சேகரமாகத் திருமுடியில் அணிந்திருப்பதாலே சந்திரன் உதித்த நீலமலை போன்றவனான ஸ்ரீகிருஷ்ணனை முதலில் அக்குரூரர் கண்டார். பிறகு கண்ணனின் பக்கத்தில், அல்லி மலர் போன்ற திருமேனியுடன் நீலநிறத் திருப்பரிவட்டங்களையணிந்து கொண்டு உயரமாகவும்; தாமரை மலர் போன்ற முகமலருடையவருமான பலபத்திரரையும் கண்டார். ஞானியான அக்குரூரர், அம்மகா புருஷர்கள் இருவரையும் கண்ட உள்ளக் களிப்பின் மிகுதியினால், முகம் மலர்ந்து உடம்பெல்லாம் புளகாங்கிதம் அடையப்பெற்று, இதோ ஈருருவாய் பிரிந்துள்ள வாசுதேவ பகவானுடைய அம்சம் எதுவுண்டோ அதுதான் உத்தம தேஜசு அடையத்தக்க மேன்மையான பொருள் இதைக் கண்டதால் எனது கண்கள் இரண்டும், மிகவும் சாபல்யமாயின. இந்த உடலும் அந்த எம்பெருமானின் அனுக்கிரகத்தாலே தீண்டப்பெற்றுச் சாபல்யமாகுமோ? எந்தத் திருக்கையின் விரல்பட்டவுடனேயே புருஷர் சகல பாபங்களும் நசிக்கப்பெற்றுக் குற்றமற்ற சித்தியைப் பெறுவார்களோ அந்தத் திருக்கைத் தாமரையை ஸ்ரீமானான அவ்வனந்தன் என் முதுகின் மீது வைக்கப் பெறுவானோ? இந்தச் சுவாமி, சுபாவத்தில் குற்றமற்றவனாக இருக்கின்ற என்னைக் கம்சனது சார்பில் இருப்பதால் குற்றமுடையவனாக எண்ணுவாரோ தெரிவில்லையே! அப்படியானால் இந்தப் பிறவியைச் சுடவேண்டும். ஏனென்றால் யோக்கியரால் அங்கீகரிக்கப்படாமல் துறக்கப்படுகின்றவனுக்குப் பிறவி ஏன்? நாம் இப்படி எண்ணக் கூடாது. ஏனென்றால் ஞான சொரூபியாய், சுத்த சத்வமயனாய் ராகத்வேஷாதி தோஷங்களின்றி எப்பொழுதும் தன் சொரூபம் விளங்க சகல புருஷருடைய இதயத்திலும் எழுந்தருளுகின்ற எம்பெருமானுக்குத் தெரியாதது ஒன்று உண்டோ ஆகையால் எனது இதயத்தில் கவடிருப்பதும் இல்லாததும் அவன் அறிவான். ஆகையால் என்னைத் திரஸ்காரம் செய்யாமல் திருவுள்ளம் பற்றுவான் எனவே பிரம்ம ருத்திராதியருக்கும் ஈஸ்வரனாயும் புரு÷ஷாத்தமனாயும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரமாய் ஆதிமத்யாந்தமில்லாதிருக்கும் இந்த ஸ்ரீகிருஷ்ணனை நான் பக்தியால் மனவணக்கத்தோடு நெருங்கப் பெறுவேனாக என்று மனதால் சிந்தித்தார் மகாஞானி அக்குரூரர்.

————————-

18. கண்ணனைப் பிரியும் கோபியரின் கலக்கமும் அக்குரூரர் கண்ட தெய்வீகக் காட்சியும்!

மைத்ரேயரே! இவ்விதமாக அக்குரூரர் தம் மனதில் நினைத்து கொண்டு, கண்ணன் அருகே சென்று அடியேன் அக்குரூரன் தண்டம் சமர்ப்பிக்கிறேன் என்று சிரம் வணங்கித் தண்டமிட்டார் ஸ்ரீ கிருஷ்ணனும் புனித ரேகைகளுடன் விளங்கிய தன் திருகைகளால் அவரைத்தீண்டி எடுத்து, வெகு பிரீதியோடு நெருங்கித் தழுவியருளினான். பிறகு மூத்தவரான பலராமனையும் அக்குரூரர் வணங்கினார். அதன் பிறகு அம்மகா புருஷர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அக்குரூரரைத் தங்கள் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அக்குரூரர், அவர்களால் ÷க்ஷமாதிகள் விசாரிக்கப்பட்டார். பிறகு அவர்களுடன் உணவருந்திவிட்டு அக்குரூரர் உட்கார்ந்திருக்கும்போது அசுராம்சமான கம்சன் தன் தங்கை தேவகியையும் வசுதேவரையும் நிந்தித்துக் கொடுமைப்படுத்தியதையும், அவனது தந்தையான உக்கிர சேனனிடம் கம்சன் மனப்பகைமை கொண்டிருப்பதையும் எதன் நிமித்தமாகத் தம்மை கம்ஸன் அனுப்பி வைத்தானோ, அதையும் அவர்களிடம் விண்ணப்பம் செய்தார். அதைக்கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணன் புன்முறுவலுடன் தானபதியே! நான் இவற்றை அறிவேன் இதற்குத் தக்கது எதுவோ அதைச் செய்யவும் நான் சித்தமாக இருக்கிறேன். மகாஞானியே! நீர் வேறு எதையும் நினைக்கவேண்டாம் இத்தோடு கம்சன் மடிந்தான் என்று நினையும் நானும் பலராமனும் நாளை உம்முடன் மதுரைக்கு வருகிறோம் யாதவரும் வேண்டும் உலுப்பைகளைக் கொண்டு நாளையே வருவார்கள். இன்றிரவு இங்கேயே தங்கியிருங்கள். இவ்விரவு முதல் மூன்று இரவுகளுக்குள்ளாக கம்சனையும் அவனைச் சார்ந்தோரையும் நாசஞ் செய்கிறேன்! என்று கூறியருளினான். பிறகு கோபால மூப்பர்களுக்கு அக்குரூரரைக்கொண்டும் தானும் கட்டளையிட்டு தமையனோடும் அக்குரூரரோடும் நந்தகோபனின் மாளிகையில் திருக்கண் வளர்த்தியருளினான். பிறகு பொழுது விடிந்ததும் பலபத்திரரும் கண்ணனும் அக்குரூரருடன் மதுரைக்குப் புறப்படத் தயாரானார்கள். அதைக்கண்ட கோபியரெல்லாம் மிகவும் கலங்கிக் கண்களில் கண்ணீர் ததும்ப கைகளில் கை வளைகள் நெகிழ, பெருமூச் செறிந்த வண்ணம் ஒருத்தியோடு ஒருத்தியாகப் பலவாறும் பேசிக்கொள்ளலானார்கள்.
ஓ தோழியரே, ஸ்ரீகோவிந்தன் மதுரைக்குப் போனால் மீண்டும் எப்போது இங்கு வருவான்? அந்த நகரத்திலுள்ள மங்கையரின் மதுரமான பேச்சுக்களாகிய அமுதத்தைப் பானஞ் செய்வானல்லவா? நகரப் பெண்களின் பேச்சைக் கேட்கும் அவன் மனம் மீண்டும் நாட்டுப்புறத்து கோபியரிடம் பற்றுமா? இந்த ஆயர்பாடிக்கே ஒரு சார வஸ்துவான இந்தக் கண்ணனை இங்கிருந்து நீக்கு கொடிய தெய்வம் கோபியரையெல்லாம் ஒருமிக்க மறுபடியும் ஓரடி அடித்ததென்றே நினைக்கவேண்டும். நகரப் பெண்களின் பேச்சிலே கருத்துக்கள் உள்ளடங்கிப் புன்னகையுடன் பொலிவுறும் அந்நகரத்துப் பெண்களின் நடையோ வெகு சுந்தரமாக இருக்கும். கடைக்கண் பார்வையோ மனதைக் கவர்வதாக இருக்கும். ஆகையால் இதுவரை அவற்றையெல்லாம் அறியாமல் நாட்டுப்புறத்தில் வாசஞ் செய்து கொண்டிருந்த இந்தக் கண்ணன் அங்கேபோன பிறகு, அந்நகரத்து நங்கையரின் மயக்க விலங்கினால் கட்டப்படுவானாதலால், மறுபடி அவன் இங்கே திரும்பி வருவானென்று எப்படிச் சொல்ல முடியும்? இதோ பாருங்கள்! அக்குரூரன் என்ற பெயரைக் கொண்ட இந்தக் கொடூரனாலே என்னமோ வஞ்சிக்கப்பெற்று, கண்ணன் தேர் ஏறி மதுரைக்குச் சென்றான். கொஞ்சமும் தயையில்லாத இந்தக் காதகன் நாம் எல்லாம் கண்ணனிடத்தில் அன்பினால் உருகுகிறோம் என்பதை அறியானோ அறிந்தவன் என்றால் நமது கண்களின் களிப்பாகிய கண்ணனை மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்வானா? அடி இந்தக் கிருஷ்ணன் நமதன்பைச் சிறிதேனும் பாராமல் பலராமரோடு தேரில் ஏறிச் செல்கிறான். அவன் மிகவும் இரக்கமற்றவனாக இருக்கிறான். அவவைப் போகவிடாமல் தடுக்கச் சீக்கிரம் ஏதாவது முயற்சி செய்யுங்கள். ஓ பெண்களே! மாமன் முதலானவர்களுக்கு எதிரில் இதைப்பற்றிப் பேச முடியாதே என்பீரானால் விரகத்தீயில் நாம் வெந்து போகும்போது அவர்கள் என்ன செய்யமுடியும்? நந்தகோபன் முதலியோர்களும் கண்ணனுடன் கூடப்போக முயல்கிறார்களே தவிர ஒருவரும் அவனைத் தடுக்க முயலவில்லையே! தோழிகளே! மதுரைப் பெண்களுக்கு இப்பொழுது நற்பொழுது விடிந்துள்ளது. ஏனென்றால் அவர்களது கண்கள் எனும் வண்டுகள் இன்று கண்ணனின் முகாரவிந்தத்தைப் பானம் பண்ணுமல்லவா? கண்ணனுடன் செல்பவர்கள் மகா புண்ணியஞ் செய்தவர்கள்!
ஏனென்றால் அவனுடைய வடிவழகைப் பார்த்துக் கொண்டே போய் தங்கள் தேகம் புளகாங்கிதமடைய அவர்கள் மகிழ்வார்களல்லவா? மதுரை நகரப் பெண்கள் எந்த நற்கனவைக் கண்டார்களோ? ஐயோ இரக்கமற்ற தெய்வம் இந்தக்கோபியருக்கு ஒரு மகாநிதியைக் காட்டிய பிறகு கண்களைப் பறித்துக்கொண்டதே! நம்மிடம் கண்ணனுக்கு அன்பு தளரத் தளர அவன் அன்பைப் பெறாத நமது கைகளில் அணிந்த வளையல்களும் கூட நம்மோடு இருக்க விரும்பாமல் தளர்கின்றன. அந்த அக்குரூரன் குரூர ஹிருதயமுடையவன் அதனால் தான் தேரை மெதுவாகச் செலுத்தாமல் வெகு வேகமாகச் செலுத்தி நம் கண்ணனை வெகுவேகமாகக் கொண்டுபோகிறேன். பாருங்கள்! இப்படிப் புலம்பும் நம்மிடத்தில் யாருக்குத்தான் இரக்கம் ஏற்படாது! என்ன செய்வோம் தோழியரே! சிறிது நேரம் கண்ணன் நம் கண்களுக்குப் காணப்பட்டுக் கொண்டிருந்தான். பிறகு அவன் ஏறியிருந்ததிருத்தேர் மட்டுமே காணப்பட்டது. இப்போது அந்தத் தேரின் சக்கரங்களால் எழும்பிய துகள் மட்டுமே காணப்படுகிறது. ஒருகணத்தில் இதுவும் மறைந்து போகும். கண்ணனோ வெகு தூரம் சென்றுவிட்டான்! என்று கோபிகைகள் அன்போடு அவன் சென்ற திசையையே பார்த்து, புலம்பிக்கொண்டிருக்கும் போது கண்ணனோ ஆய்ப்பாடியின் எல்லையைத் தாண்டி யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான்.
அப்போது நண்பகல் அக்குரூரர், ராம கிருஷ்ணர்களை நோக்கி, அடியேன் இந்த நதிக்குச் சென்று மாத்தியான்னிக ஆராதனத்தைச் செய்து வருகிறேன். அதுவரையில் சுவாமிகள் இங்கேயே எழுந்தருளியிக்க வேண்டுகிறேன் என்று விண்ணப்பஞ்செய்தார். பிறகு அக்குரூரர் நதியில் நீராடி ஆசமனாதிகளைச் செய்து மந்திர ஜெபத்தோடு பரப்பிரம்மத்தைத் தியானஞ் செய்தார், அப்படித் தியானம் செய்யும்போது, பல பத்திரர் சஹஸ்ரபணா மண்டல மண்டிதராய் மல்லிகை மாலை போன்ற வெண்மையான திருமேனியோடும் மலர்ந்த தாமரை போன்ற திருவிழிகளோடும் பரிமள வனமாலையும் நீலப்பட்டாடைகளும் திவ்விய கிரீட குண்டலங்களும் தரித்துக்கொண்டு வாசுகி முதலிய சர்ப்பரசர்களால் சேவிக்கப்பட்டு, யமுனை ஜலத்தில் விளங்கினார். அவரது மடியிலே கண்ணன் நீலமேகசியாமளனாய், செந்தாமரை போன்ற சிவந்த திருவிழிகளும் நான்கு திருத்தோள்களும் கம்பீரமான திருமேனியும் பிரகாசிக்கும் வண்ணம் திருவாழி முதலிய திவ்விய ஆயுதங்களையும் திவ்விய பீதாம்பரங்களையும் வனமாலையையும் தரித்துக்கொண்டு வானவில்லினாலும் மின்னற் கொடிகளாலும் விசித்திரமாகப் பிரகாசிக்கும், கருமேகம் போலத் தோன்றினார். அவரது திருமார்பில் ஸ்ரீவச்சம் என்ற மறுப்பொருந்தியிருக்க திருக்காதுகளில் மணிமயமான மகர குண்டலங்கள் குலுங்க, திருமுடியில் வெள்ளைத் தாமரை போன்ற கிரீடமும் இலங்க, யோகசித்தி பெற்று சகல குறைகளுமற்ற சனக சனந்தனாதி முனிவர்களால் தியானஞ் செய்ய, அலங்காரமாக வீற்றிருந்தார். அந்தக் காட்சியை அக்குரூரர் கண்டதும் யமுனை நதியில் ஸ்ரீராம கிருஷ்ணர்களே இப்படி எழுந்தருளியிருக்கிறார்கள் என்று தெரிந்து இவ்வளவு சீக்கிரம் அவ்விருவரும் எப்படி இங்கே எழுந்தருளினார்கள் என்று வியந்து, அவர்களைக் கேட்க வாயெடுத்தார். அவ்வளவிலே அவருக்கு வாய் எழுப்பவொட்டாமல் சுவாமி ஸ்தம்பனம் செய்துவிட்டதால் ஒன்றும் சொல்ல முடியாமல், அக்குரூரர், நதியைவிட்டு கரைக்கு வந்தார். திருத்தேரைப் பார்த்தார். அங்கு ராமகிருஷ்ணர்கள் இருவரும் முன் போலவே மனித அவதாரமாகக் காத்திருப்பதைக் கண்டார். மீண்டும் அக்குரூரர் யமுனைக்கு ஓடினார். அங்கும் முன்பு கண்ட தெய்வீகக் காட்சியையே கண்டார். உடனே அக்குரூரர் பரமார்த்தத்தை அறிந்து, எல்லாம் அறிந்த எம்பெருமானான ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்கலானார். எப்பொழுதும் சத்தாக இருக்கும் ரூபமுள்ளவராயும் சிந்திப்பதற்கும் அரியதான மகிமையுள்ளவராயும் அநேக ரூபியாயும் ஒரே ரூபியாயும் இருக்கும் பரமாத்மாவுக்கு நமோ நம என்று தண்டம் சமர்ப்பிக்கிறேன்.
ஓ, மகாப் பிரபுவே! ஞானங்களுக்கு எல்லையாகவும் அறியப்படாத அளவுள்ளவனாகவும், பிரகிருதிக்கு மேம்பட்டவனாகவும் இருக்கும், உன்னை வணங்குகிறேன்! ஓ அளவில்லாமையினாலே சொல்லக்கூடாத குணமுள்ள ஆன்மாவே! சொல்லவொண்ணா உபய விபூதியாலுண்டான ஆனந்தமுள்ளவனே! அளவில்லாத திருநாமங்களுள்ள உன்னைப் பணிகிறேன். பிரம்மம் நீ! எந்தப் பொருளையும் நாமரூப கற்பனைகளில்லாமல் அறியக் கூடாமையால் நீ கிருஷ்ணன் அச்சுதன். அனந்தன், விஷ்ணு முதலிய திருநாமங்களால் துதிக்கப்படுகின்றாய்! ஓ அனந்தா! ஓ சர்வேசுவரா! சூரிய கிரண ரூபியாக இருந்து நீயே பிரபஞ்சத்தைப் படைக்கிறாய். ஆகையால் இந்தப் பிரபஞ்சமெல்லாம் உனக்குச் சேஷ பூதமாக இருக்கிறது. பிரணவபிரதிபாத்தியனான ஸ்ரீபரமாத்மா! உன்னைப் பணிகிறேன். சங்கர்ஷணனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். பிரத்யும்னனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். அநிருத்தனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன் இவ்விதம் சதுர் வியூக ரூபியான உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்று அக்குரூரர் எம்பெருமானைப்போற்றினார்.

—————-

19. மதுரையை அடைதல்

மைத்ரேயரே, மேலும் கேட்பீராக! இவ்வாறு யாதவ பாகவதரான அக்குரூரர் யமுனை நதி நீரில் எம்பெருமானைச் சேவித்துத் துதித்து பரப்பிரம்மரூபமான ஸ்ரீகிருஷ்ணனிடத்திலேயே தன் மனதைச் செலுத்தி நெடுநேரம் தியானித்து பிறகு அந்த நிஷ்டையைவிட்டு, கரையேறித் தம்மைக் கிருதகிருத்தியனாக நினைத்துக் கொண்டு தம்முடையதேரினருகே வந்தார். அங்கே மூத்த நம்பியும் இளைய நம்பியும் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அவரது கண்கள் மலர்ந்தன அப்போது கிருஷ்ணன் அவரை நோக்கி அக்குரூரரே ! நீர் யமுனை ஜலத்திலே ஏதோ ஒரு ஆச்சரியத்தைக் கண்டீர் போலத் தோன்றுகிறது. ஏனென்றால் உம்முடைய கண்கள் வியப்பினால் மலர்ந்துள்ளன என்று சிரித்தான். அதற்கு அவர் அச்சுதா! அடியேன் ஜலத்தின் நடுவேயாதொரு அதிசயத்தைக் கண்டேனோ அதுவே இவ்விடத்திலும் ரூபீகரித்து என் எதிரில் இருக்கக் காண்கிறேன் ஸ்ரீகிருஷ்ண பகவானே! அந்த உலகம் எல்லாம் எவனுடைய மகா ஆச்சரிய ஸ்வரூபமோ அத்தகைய திவ்யாச்சரிய சேஷ்டிதனான உன்னோடு நான் சேர்ந்திருக்கும்போது என்ன ஆச்சரியங் கண்டாய் என்று என்னை ஏன் கேட்டருள்கின்றீர்? இனி நாம் மதுரைக்குப் போவோம்!
மதுசூதனா! இப்போதும் அடியேன் கம்சனுக்கு அஞ்சுகிறேன் சீச்சீ! அன்னியனுடைய பிண்டத்தினால் பிழைப்பவனுடைய பிறவியைச் சுடவேண்டும்! என்று சொல்லி வாயுவேகமுடைய தமது குதிரைகளை வெகு வேகமாக ஓட்டிக்கொண்டு மதுரை மாநகரை வந்தடைந்தார். அங்கு வந்ததும் அவர் ஸ்ரீராம கிருஷ்ணர்களை நோக்கி, மகா வீரர்களே! இனி, நீங்கள் இறங்கித் திருவடிகளால் நடந்துசெல்லவேண்டும். அடியேன் ஒருவனே தேர்மேல் ஏறிச்செல்வேன். முதலில் உங்கள் தந்தையான வசுதேவருடைய திருமாளிகைக்கு நீங்கள் செல்லவேண்டாம். ஏனென்றால் உங்கள் நிமித்தமாகவே அவரைமகாப் பாதகனான கம்சன் துன்பப்படுத்துகிறான்! என்று விண்ணப்பித்துவிட்டு, மதுரைக்குள் பிரவேசித்தார். பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர்கள் இருவரும் இராஜ வீதி மார்க்கமாக நகரத்து மங்கையரும் ஆடவரும் ஆனந்தமாய் கண்களால் சேவித்து நிற்க இளமதயானைகள் போல் வீதியில் விளையாடிக் கொண்டே சென்றார்கள். அப்போது அந்த வழியிலே குசும்பாதி சாயம்போட்டு ஆடைகளைச் சீர்ப்படுத்தும் வண்ணான் ஒருவனை அக்குமாரர்கள் கண்டு அவனிடம் தங்களுக்கு ஏற்ற நல்ல அழகான ஆடைகளைத் தரவேண்டும் என்று யாசித்தார்கள். அந்த வண்ணானோ கம்சனிடம் பணியாற்றியதனால் மிகவும் செருக்குற்று அவர்களை இழிவாகப் பேசினான். அதைக்கேட்டதும் கண்ணன் கோபங்கொண்டு அந்தக்கொடியவனை கையினால் ஓர் அறை அறைந்து வீழ்த்தினார். பிறகு இருவரும் பீதாம்பர நீலாம்பரங்களுடன் வேண்டிய ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியோடு பூமாலைக்காரனின் மாளிகைக்குச் சென்றார்கள்.
மைத்ரேயரே ! பீதாம்பர நீலாம்பரங்களைத் தரித்து, அதிக அழகுடன் விளங்கும் ராமகிருஷ்ணர்கள் இருவரையும் அந்த பூமாலைக்காரன் கண்டு இவர்கள் யார்? இவர்கள் யாருடைய பிள்ளைகள்? என்று யோசித்தான். பிறகு, இவர்கள் மனிதரல்லர் தேவர்களே இங்கு எழுந்தருளினார்கள் என்று நினைத்தான். பின்னர் ஸ்ரீராம கிருஷ்ணர்கள் இருவரும் அவனை நோக்கி எங்களுக்கு நல்ல மலர் மாலைகளைக் கொடு என்று யாசித்தார்கள். உடனே அவன் அவர்களுக்குத் தண்டம் சமர்ப்பித்து தெய்வீகமானவர்களே! அடியேனுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டி, அடியேனது குடிசைக்கு எழுந்தருளினீர்களே! அடியேன் தன்யனானேன். நியமனப்படித் தங்களை அர்ச்சிக்கிறேன்! என்று சொல்லி மகிழ்ந்து அவர்கள் திருவுள்ளம் வியப்ப சில மலர்களைச் சமர்ப்பித்து சுவாமி இவை முன்னவையிற்சிறந்தவை; இவை மேலும் மிகச் சிறந்தவை! என்று மேலும் மேலும் மிகவும் மணமுள்ள அழகான மலர்களைக் கொடுத்தான். சுகந்தமும் சுத்தமுமான அம்மலர்களை ஸ்ரீராமகிருஷ்ணர்கள் மனமுவந்து தங்கள் திருமார்பில் அணிந்து கொண்டு அவனைப் பாராட்டினார்கள்.
ஸ்ரீகிருஷ்ணர், அவனுக்கு வரங்களைப் பிரசாதிக்க எண்ணி, ஓ யோக்கியனே! என்னைப் பற்றியிருக்கும் திருமகன் உன்னை ஒருபோதும் விடாமல் அனுக்கிரகம் செய்து கொண்டிருப்பாள். ஓ சவுமியனே! உனக்குப் பலஹானியோ, தனஹானியோ வரமாட்டாது காலமுள்ளளவும் உன் சந்ததி நசிக்காமல் இருக்கும். இப்படியாக நீ எனது அனுக்கிரகத்தால் பெரும் போகங்களையெல்லாம் அனுபவித்து இறுதியில் என் ஸ்மரணமும் அடைந்து திவ்வியலோகத்தை அடையக்கடவாய் உனக்கு ஆதி பவுதிகமான தோஷங்கள் வருவதில்லை. மகானுபாவனே! சூரியன் உள்ள வரைக்கும் எனக்கு இத்தகைய சுகங்கள் உண்டாகும் என்று அனுக்கிரகம் செய்து அவனால் விசேஷமாக ஆராதிக்கப்பட்டான். பின்னர் பலபத்திரரோடு, அம்மாலிகனுடைய மாளிகையிலிருந்து கிளம்பிச் சென்றான்.

——————

20. அழகான கூனியும் கம்சவதமும்

பூமாலைக்காரனின் மாளிகையிலிருந்து புறப்பட்ட ராமகிருஷ்ணர்கள் இருவரும், ராஜவீதி வழியாகச் செல்லும்போது, வழியிலே மங்கைப் பருவமுடைய கூனி ஒருத்தி கையிலே சந்தனக்கிண்ணம் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தாள். அவளைக் கண்டதும் கண்ணன் புன்முறுவலுடன், அடி நீலோத்பலம் போன்ற கண்களையுடையவளே! யாருக்கு இந்த வாசனைப் பூச்சைக் கொண்டு போகிறாய்? என்று கேட்டான். அதற்கு அவள் அழகனே! நான் நைகவக்கிரை என்றும் கம்ஸனால் சிந்தனாதிப் பூச்சுக்கள் செய்யும் வேலையில் வைக்கப்பட்டவள் என்றும் நீ ஏன் அறியவில்லை கம்சனுக்கு சந்தனம் யார் பூசினாலும் பிடிக்காது. நான் அரைத்துச் சேர்க்கும் பூச்சே அவனுக்குப் பிரியமானது ஆகையால் கம்சனின் அனுக்கிரகம் என்னும் தனத்துக்கு முக்கிய பாத்திரமாக இருக்கிறேன்! என்றாள். அதைக்கேட்டுக் கொண்டு கிருஷ்ணன் மேலும் புன்முறுவலுடன் அவளை நோக்கி, அடி இளம் பெண்ணே! இதோ நீவைத்திருக்கும் இந்தப் பூச்சு வாசனை கூட்டியதுதானே தவிர இயற்கையான மணமுடையதல்ல! மற்றொன்றோ ராஜசமுள்ள அரசர்களுக்குத் தகுமேயன்றி சாதாரணமானவருக்குத் தக்கதன்று இதுவோ மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. அழகிய முகமுடையவளே! ஆகையால் எங்களது திருமேனிக்கு ஏற்ற இதை எங்களுக்கே கொடுக்கவேண்டும்! என்று கேட்டான். அதற்கு அழகான கூனி ஒப்புக்கொண்டு அன்போடு அவர்களது திருமேனிக்கேற்ற திவ்வியமான பூச்சைச் சமர்ப்பித்தாள். ஸ்ரீராமகிருஷ்ணர் இருவரும் பத்திரபங்கரசனாவிதமாக அந்தப் பூச்சைத் தங்கள் திருமேனிகளில் தடவிக்கொண்டார்கள். பிறகு கிருஷ்ணன் அந்தக்கூனியின் கோணலை நிமிர்த்தும் வகையையும் அறிந்தவனாகையால் அவளிடம் அன்புகொண்டு தனது நடுவிரலும் அதன் முன் விரலும் கொண்ட நுனிக் கையினால் அவளது மோவாய்க்கட்டையைப் பிடித்துத் தன் திருவடிகளால் அவளது பாதங்களை அமுக்கி இழுத்துத் தூக்கி அவளை நிமிர்த்தியருளினான்.
உடனே அவளுடைய கோணல் நிமிர்ந்தது, அவள் பெண்களில் சிறந்தவளானாள்! அவள் கண்ணனின் பரிவட்டத்தைப் பிடித்துக்கொண்டு நீ என் மாளிகைக்கு வா! என்று அழைத்தாள். அதைக் கண்ட கண்ணன் பலராமரைப் பார்த்த வண்ணம் சிரித்துக்கொண்டே, குற்றமற்ற அந்த நைகவக்கிரையை நோக்கி, பெண்ணே! அப்படியே ஆகட்டும்! பிறகு ஒரு சமயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்து உரக்கச் சிரித்தான். இவ்வாறு நம்பிகள் இருவரும் பீதாம்பர நீலாம்பரங்களையணிந்து விசித்திரமான சந்தனப் பூச்சோடும் பலவிதமான திவ்விய மலர் மாலைகளையும் அணிந்துகொண்டு விற்கள் வைத்திருந்த ஆயுத சாலைக்குச் சென்றார்கள். அங்கிருந்த காவற்காரர்களை கண்ணன் ஏறிட்டு நோக்கி, காவல்காரர்களே! இந்தத் தனுர்யாகத்துக்கு உத்தேசித்து வைத்துள்ள வில் எங்கே இருக்கிறது? என்று கேட்டான். அவர்கள் அதைத் தெரிவித்தார்கள். உடனே, கண்ணன் அந்த வில்லை எடுத்து வளைத்து நாணேற்றினான். நாணேற்றியதும் அந்த வில் முறிந்து அந்த மதுரை நகரமெங்கும் செவிடுபடும்படி ஓசையிட்டது வில் ஒடிந்ததும் காவற்காரர்கள் ஸ்ரீராம கிருஷ்ணர்களை எதிர்க்க வந்தார்கள். அவர்களை அம்மகா புருஷர்கள் இருவரும் துவம்சம் செய்து, ஆயுதச் சாலையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். இந்நிலையில் கம்ஸனோ தன் மதுராபுரிக்கு அக்குரூரர் திரும்பி வந்ததையும் வில் முறிந்ததையும் அறிந்தான். அவன் சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களை வரவழைத்துச் சொல்லலானான்.
மல்லர்களே, கேளுங்கள்! நாம் எதிர்பார்த்திருந்த இடைப்பயல்கள் வந்துவிட்டார்கள் நீங்கள் என் எதிரில் அவர்களோடு மல்யுத்தம் செய்து அவர்களைக்கொன்று விடவேண்டும். அவர்கள் என் உயிரை வாங்கவே பிறந்தார்களாம். மகாபலசாலிகளே நீங்கள் அவர்களை மல்யுத்தத்தில் வென்று எனக்கு மகிழ்ச்சியளித்தால், நீங்கள் விரும்பும் பொருள்களையெல்லாம் தருவேன். என் எதிரிகளான அவ்விரு இடைச்சேரிப் பயல்களையும் நீங்கள் நியாயமாகவோ, அல்லது அநியாயமாகவோ கொன்றே தீர வேண்டும். அப்படிச் செய்தால் இந்த ராஜ்யத்தை நீங்கள் என்னுடன் சமானமாக அனுபவிக்கலாம் என்று கம்ஸன் தன் இரு மல்லர்களுக்கும் கட்டளையிட்டான். பிறகு அவன் தன் யானைப் பாகனையும் அழைத்து, யானைப்பாகனே! நீ நமது குவலயாபீடம் என்ற பெரிய யானையை இந்த சபா மண்டபத்தின் முன்னால் நிறுத்தி வைத்து, அந்த இடைப் பயல்கள் இங்கு போர் செய்ய வரும்போது, யானையைக் கொண்டே அவர்களைக் கொல்விக்க வேண்டும்! என்று கட்டளையிட்டு சதபயில் போடவேண்டிய மஞ்சங்கள் செவ்வனே போடப்பட்டிருப்பதைப் பார்வையிட்டான். பிறகு தனக்கு மரணம் கிட்டியிருப்பதை உணராமல் பொழுது விடிவதை எதிர்பார்த்திருந்தான்.
மறுநாள் பொழுது விடிந்ததும், மதுரை நகர மக்கள் சபைக்கு வந்து அவரவர் உட்காரத்தக்க மஞ்சங்களில் உட்கார்ந்தார்கள். அரசர்கள் ராஜ மஞ்சங்களில் உட்கார்ந்தனர். பின்னர் கம்சன் மல்யுத்த வீரர்களுடன் உயர்ந்ததொரு மஞ்சத்தில் அமர்ந்தான். அந்தப்புர மங்கையரும் பட்டணத்துப் பாவையரும் வேசியரும் அவரவருக்குரிய மஞ்சங்களில் உட்கார்ந்தனர். நந்தகோபர் முதலியோர் தமக்குரியவற்றில் அமர்ந்தனர். அக்குரூரரும் வசுதேவரும் தனித்துப் பேசிக்கொள்வதற்காக ஒரு ஓரத்தில் உட்கார்ந்தார்கள். மகனிடத்தில் பேரன்புடைய தேவகியானவன் முடிவு காலத்திலாவது தன் அன்பு மகனின் முகத்தைப் பார்க்கலாம் என்று பட்டணத்து மங்கையரின் நடுவே உட்கார்ந்திருந்தாள். இன்னிசைக் கருவிகள் முழங்கலாயின. மல்லன் சாணூரன் மிகவும் குதித்துக் கொண்டிருந்தான் மற்றொரு மல்லனான முஷ்டிகனும் தோள் தட்டிக் கொண்டிருந்தான் மக்கள் ஆரவாரஞ் செய்து கொண்டிருந்தனர். மாவீரராயும் பாலகராயும் விளங்கும் பலராம கிருஷ்ணர் இருவரும் புன்னகையோடு சபாமண்டப வாயிலை அடைந்தார்கள்.
அப்போது கம்சனின் கட்டளைப்படி யானைப்பாகனால் ஏவப்பட்ட குவலயாபீடம் என்ற யானை மிக்க கோபத்தோடு அவ்விரு இளைஞரையும் கொல்வதற்கு ஓடிவந்தது; அத்தருணத்தில் அந்தச் சபையின் நடுவே ஒரு ஹாஹாகாரம் உண்டாயிற்று. அப்போது பலராமர் கண்ணனை நோக்கி பகைவனால் ஏவப்பட்ட இந்த யானையைக் கொல்லாமல் இருப்பது நியாயமல்ல அதை அவசியம் கொன்றேயாக வேண்டும் என்றான். உடனே சத்துரு நாசஞ் செய்வதில் வல்லவனாகிய ஸ்ரீகிருஷ்ணன் சிம்ம நாதஞ் செய்து ஐராவதத்துக்கு ஈடான பலமுடைய அந்த யானையின் துதிக்கையைத் தன் திருக்கையினால் பிடித்து இழுத்துச் சுழற்றினான். சர்வேசுவரனாக இருந்தும் கண்ணன் திருவவதாரத்திற்கேற்ப, அந்த யானையுடன் நெடுநேரம் போரிட்டான். அதன் தந்தங்களின் நடுவே நின்று விளையாடி, பிறகு தன் வலது கையினால் அதன் இடதுபுறத் தந்தத்தைப் பிடுங்கி, அதன் மேலிருந்த யானைப் பாகனை அடித்தான். அந்த அடியினால் யானைப் பாகனின் தலை பல துண்டுகளாகச் சிதறியுடைந்தது. உடனே மூத்த நம்பியான பலராமன் அந்த யானையின் வலது தந்தத்தைப் பிடுங்கி பக்கத்திலிருந்த யானைக்காப்போரை அடித்துக் கொன்றுவிட்டு, வேகமாக எழும்பித்தாவி, தன் இடது திருவடியால் அந்த யானையின் மத்தகத்தின் மீது ஓங்கி உதைத்தான். இவ்விதம் பலராமன் விளையாட்டாக உதைத்தவுடனேயே அந்தக் குவலயாபீடம் என்ற யானையானது வஜ்ஜிராயுதத்தினால் அடிபட்ட பருவத்தைப் போலக் கீழே விழுந்து இறந்தது. இவ்வண்ணம் புருஷசிரேஷ்டர்கள் இருவரும் இந்த யானையைப் பாகனோடு சங்கரித்து விட்டு அதன் மதநீராலும் இரத்தத்தாலும் பூசப்பட்ட திருமேனியுடையவர்களாய் அதன் தந்தங்களாகிய திவ்விய ஆயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டு சிங்க ஏறுகளைப் போலச் சபாமண்டபத்துக்குள் நுழைந்தார்கள்.
உடனே, சபையில் ஹாஹாகாரம் எழும்பியது. அங்கிருந்த நகரத்தார்கள் யாவரும் வியப்புடன் பார்த்தார்கள். இவனன்றோ முன்பு குழந்தைகளைக் கொன்று கொண்டிருந்த பூதனை அரக்கியைக் கொன்றவன்! இவனன்றோ மருத மரங்களை முறித்தவன்! இவனல்லவா காளிங்கன் என்ற மகாசர்ப்பத்தின் மீதேறி நர்த்தனஞ் செய்த சிறுவன்! ஏழு நாட்கள்வரை கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்துக் கோகுலம் காத்தவனும் இவனேதான்! பாருங்கள்! பெண்களின் மனங்களையும் கண்களையும் மகிழ்வித்து விளையாடிக்கொண்டே போகிற இந்த கிருஷ்ணனுக்கு முன்னே போகிறவன் அவன் தமையன் பலபுத்திரனான பலராமன் புராணார்த்தம் தெரிந்த பண்டிதர்கள் அமுங்கியிருந்த யாதவவம்சத்தை ஒரு கோபாலன் தலையெடுக்கச் செய்வான் என்று சொல்வது இந்தக் கிருஷ்ணனையே போலும்! யாவற்றுக்கும் உற்பத்தி ஸ்தானமான ஸ்ரீவிஷ்ணு அம்சமாய் பூமி பாரம் தீர்க்க அவதாரஞ் செய்தவன் இவனே! என்றெல்லாம் ஸ்ரீகிருஷ்ணனையும் பலராமனையும் யாதவரும் நகர மக்களும், வர்ணித்துக்கொண்டே இருந்தனர். அப்பொழுது தேவகியின் ஸ்தனங்களின்றும் பால் பெருகி, மார்பு திடுக்திடுக் கென்று துடித்தன. வாசுதேவரோ, தன் பிள்ளைகளின் முகங்களைப் பார்த்ததால் இளமையாகக் காணப்பட்டார். அந்தப்புரத்து மங்கையர் கண்ணனைக் கண்டு மலர மலர விழித்து ஒருத்தியோடு ஒருத்தி பலவாறும் பேசிக் கொண்டார்கள். தோழியரே! அதோ கண்ணனின் திருமுகத்தைப் பாருங்களடி! மிகவுஞ் சிவந்த கண்கள் யானையோடு போரிட்டதால் உண்டான வியர்வைத் துளிகள்! சரத்காலத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் பனித்துளிகளோடு இருப்பது போலல்லவா தோன்றுகிறது. பெண்கள் நாயகமே! ஸ்ரீவச்சம் என்ற மருப்பொருந்தி, பகைவரின் பலத்தைப் போக்கும்படியான கற்பாறை போன்ற கண்ணனின் திருமுகத்தைப் பாரடி? திரண்ட திருத் தோள்களைப்பாரடி! அந்தக் கண்ணன் மட்டுமா? முன்னே போகிற பலராமரின் சிரிப்பிலே தான் எத்தனைக் கவர்ச்சியடி!
அதோ பாருங்களடி! கிருஷ்ணன் மல்யுத்தஞ் செய்ய சாணூரனோடு சேருகின்றான். இந்த அரசவையில் நியாயமறிந்துவர்கள் இல்லையா? யவுவனத்தை நெருங்கும் சுகுமார மேனியுடைய கண்ணன் எங்கே? வஜ்ராயுதம் போன்ற கடின தேகமுடைய மகாசூரன் எங்கே? இவ்விருவரையும் போரிடச்செய்து வேடிக்கை பார்ப்பது சபையோருக்கு நியாயமா? என்று இவ்விதமாக நகரத்துப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் வஸ்திரங்களை இறுக வரிந்து கட்டிக்கொண்டு பூமியதிர ஜனங்களின் நடுவே குதித்துக் கொண்டிருந்தான். பலராமனும் அப்படியே தோள் தட்டிக் கொண்டிருந்தான். அவர்கள் குதித்ததால் பூமியானது பிளந்து போகாமல் இருந்ததே விந்தையாகத் தோன்றியது! பிறகு ஸ்ரீகிருஷ்ணன் மல்லனான சாணூரனோடும், பலபத்திரன் மல்லனான முஷ்டிகாசுரனுடனும் போர் செய்யத்துவங்கினார்கள். அத்தனைப் பெரிய கூட்டத்திலே இவர்களிடம் யாதொரு ஆயுதமுமில்லாத நிலையில் சன்னிபாதம் என்கிற முதலில் கைகொடுத்துப் பஞ்சாப் போடுவதனாலும் அவதூதம் என்ற புறங்கையால் கீழே தள்ளுவதாலும், முஷ்டி என்ற கைப்பிடி இடித்தலினாலுங் கீலநிபாதம் என்ற முழங்கை கணைக்கைகளைக் கொண்டு இடித்தலினாலும் வச்ர நிபாதம் என்ற கையோரங்களால் இடிப்பதனாலும் மத்திமை, அனாமிகை என்ற விரல்களின் நடுவே கட்டை விரல் வைத்த முஷ்டியினால் இடித்தலினாலும், பரதோத்தூதம் என்ற காலால் தூக்கி எரிதலினாலும் பிரமிருஷ்டம் என்ற உடம்பையெல்லாம் இறுகப் பீடித்துத் தள்ளியுழக்குவதினாலும், மிக்க கொடிய பயங்கர மற்போர் நிகழ்ந்தது, அந்தப் போரில் சாணூரன் கண்ணனோடு எவ்வளவுகெவ்வளவு வேகமாகப் பொருந்தினானோ அவ்வளவுக்கவ்வளவு பலவீனமடைந்தான் கண்ணன் சர்வ சக்தனாக இருந்ததாலும் கோபத்தாலும் அந்தச் சாணூரனோடு விளையாட்டுப் போலவே போர் செய்து கொண்டிருந்தான்.
அப்போது சாணூரனுக்குப் பலம் குறைவதையும் கிருஷ்ணனுக்கு பலம் வளர்வதையும் கண்ட கம்சன் மிகவும் கோபங்கொண்டு வாத்திய முழக்கத்தை நிறுத்தம்படிக் கட்டளையிட்டான். வாத்தியங்கள் முழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால் வானில் தேவ வாத்தியங்கள் முழங்கலாயின. தேவர்கள் வானிலிருந்து ஸ்ரீகேசவா! ஸ்ரீகோவிந்தா! சாணூரனை வெல்வாயாக நீ வெற்றியடைவாயாக என்று வாழ்த்தினர். நெடு நேரம் போர் புரிந்து கொண்டிருந்த கண்ணன் அந்த அசுரனைச் சங்கரிக்க எண்ணி அவனைத் தூக்கிக் கிறுகிறுவென்று சுழற்றித் தரையில் ஓங்கி அறைந்தான். அவனுக்கு கண்ணன் பூற்றும் போதே உயிர் போய்விட்டது! தரையில் அறைந்ததும் அவனுடல் துண்டம் துண்டமாகப் பிய்ந்து பூமியில் இரத்தச் சேற்றை உண்டாக்கியது. அதுபோலவே பலராமனும் முஷ்டிகனை தன் முஷ்டியால் சிரத்திலிடித்தும் முழங்காலால் மார்பில் இடித்தும் தரையில் தள்ளி உயிரிழந்த அவனை உதைத்துத் தள்ளினான். அவ்விரு மல்லர்களும் மடிந்தவுடன் தோசலகன் என்பவன் போருக்கு வந்தான். அவனையும் ஸ்ரீகிருஷ்ணன் தனது இடது கை முஷ்டியினால் இடித்துத் தரையில் வீழ்த்தினான். இவ்வாறு சாணூரன், முஷ்டிகன், தோசலகன் ஆகிய மூவரும் வதைக்கப்பட்டதும் மற்ற மல்லர்கள் பறந்தோடிப் போனார்கள். பிறகு தங்களோடு போர் செய்ய ஆளில்லாததால் ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் தங்களுக்குச் சமவயதுள்ள இடைப் பிள்ளைகளை வலுவில் இழுத்து வந்து குதித்து விளையாடி ஆனந்தக் கூத்தாடினார்கள். இதையெல்லாம் கண்ட கம்சனின் கண்கள் சிவந்தன! அவன் அங்கு இருந்த போர் வீரரையழைத்து சேவகரே! இந்த இடைப் பிள்ளைகளைச் சபைக்கு வெளியே இழுத்துச் செல்லுங்கள். நந்தகோபனைப் பிடித்து விலங்கிடுங்கள். வசுதேவனை நல்ல வயதுடையவர்க்குச் செய்யத்தக்க தண்டனை செய்து வதையுங்கள். இதோ கிருஷ்ணனோடு சேர்ந்து துள்ளுகிறார்களே, அந்த இடையர் கூட்டத்தினரின் மாடுகளையும் மற்றுமுள்ள பொருள்களையும் பறிமுதல் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே வேகமாகக் கம்சனின் மஞ்சத்துக்குத் தாவி அவனது கிரீடஞ் சுழன்று கீழே விழ அவன் தலைமயிரைப் பிடித்து இழுத்துத் தரையில் தள்ளி அவன் மீது தாவி விழுந்தான்.
மைத்ரேயரே! சர்வ லோகங்களுக்கும் ஆதாரமான ஸ்ரீகிருஷ்ணன் அவன்மீது வீழ்ந்ததும் அந்தப் பாரம் தாங்கமாட்டாமலேயே கம்ஸ மகாராஜன் உயிர் இழந்தான்! அவன் உயிர் இழந்ததும் ஸ்ரீமதுசூதனன் அவனது தலைமயிரைப்பற்றி, அவனது உடலை அரங்கின் நடுவே இழுத்தான். பாரமுள்ள சரீரத்தை இழுத்ததால், தண்ணீர் வெள்ளம் ஓடி அறுத்தாற் போன்று அவ்விடத்தில் ஓர் அகழி உண்டாயிற்று. கம்ஸன் வதைக்கப் பட்டதைக் கண்ட அவன் தம்பி சுநாமா என்பவன் கோபத்தோடு கண்ணன் மீது பாய்ந்தான். அவனை மூத்த நம்பியான பலராமன் விளையாட்டாகவே சங்காரஞ் செய்தான். இவ்விதம் மதுராபுரி அரசனான கம்சன் கண்ணனால் சங்கரிக்கப்பட்டதைக் கண்டு மக்களும் தேவரும் மகிழ்ந்தனர். கிருஷ்ணன் பலராமனோடு சென்று தந்தை வசுதேவரையும் தாயான தேவகியையும் பணிந்தார்கள். அவர்களும் ஸ்ரீராமகிருஷ்ணர்களைப் பாராட்டித் துதித்தனர்.

——————

21. ராஜசபையும் குருதக்ஷணையும் கொடுத்தல்-

தேவகி வசுதேவர்கள் துதிப்பதைக் கண்ட கண்ணன் யாதவ சமூகத்தை மோகிப்பிக்கும் பொருட்டு தன் தாய் தந்தையரை நோக்கி அம்மா! உங்களைக் காண பலநாட்கள் ஆசைப்பட்டும் நானும் பலராமனும் கம்சனது பயத்தாலேயே காணாமலிருந்தோம். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் ஒழியும் காலம் பயனற்றது, குருவுக்கும் தேவருக்கும் பிராமணருக்கும் தாய் தந்தையருக்கும் பணிவிடை செய்பவரின் காலம்தான் பயனுள்ளது என்று சொல்லித்தன் தமையனோடு தாய் தந்தையரை வணங்கினான். இந்நிலையில் கம்சனது பத்தினிகளும் தாய்மாரும் கம்சனின் உடலைச் சூழ்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். கண்ணன் அவர்களிடம் இரக்கம் கொண்டு கண்களில் நீர் ததும்ப அவர்களைப் பலவகையாகத் தேற்றியருளினான் பிறகு புத்திரனையிழந்த உக்கிரசேனனை சிறையிலிருந்து விடுவித்து மதுரையில் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்தருளினான்.
உக்கிரசேனன் கம்சனுக்கும் மற்ற இறந்தோருக்கும் உரிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிறகு அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்து வந்தான். அப்போது கண்ணன் உக்கிரசேனனை நோக்கி, மகாப்பிரபுவே! செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்துச் சங்கையின்றி எனக்குக் கட்டளையிடுங்கள். இந்த யதுவம்சம் யயாதியின் சாபத்தால் ராஜ்ய பரரத்துக்கு யோக்கியம் இல்லாது இருப்பினும் இப்போது நான் உமக்குச் சேவகனாயும் நீர் சகல அரசர்களுக்கும் மேலானவனாகவும் இருப்பதால், எந்த அரசரையும் நீங்கள் கட்டளையிடலாம் ஆனால் அற்ப அரசர்களுக்கு கட்டளையிட்டு என்ன பயன்? தேவர்களுக்குக் கட்டளையிடுங்கள்! என்று சொல்லி வாயுவை நினைத்தான். வாயுவும் வந்தான். மனித அவதாரம் செய்திருந்த கண்ணன் வாயுவே! நீ இந்திரனிடம் சென்று, இந்திரா! நீ கர்வப்பட்டது போதும் இனி கர்வப்படாதே உக்கிரசேன மன்னனுக்கு சுதர்மை என்ற சபா மண்டபத்தைக் கொடுத்துவிடு! என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்வதாக அவனிடம் சொல்வாயாக. சுதர்மை என்ற சபாமண்டபம் நமது அரசருக்கு ஏற்றது அந்தச் சபாமண்டபத்தையே நீயே எடுத்து வா! என்று கட்டளையிட்டான். வாயுதேவன் தேவேந்திரனிடம் சென்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதைச் சொன்னான். இந்திரனும் உடனே அந்தச் சபாமண்டபத்தைச் சமீரணன் வசம் ஒப்படைத்தான். வாயுதேவன் அதைக்கொண்டு வந்து, சுவாமி சன்னதியில் சமர்ப்பித்தான். அதை ஸ்ரீகிருஷ்ணன் உக்கிரசேனனுக்கு வழங்கினான்.
பிறகு ராமகிருஷ்ணர்களான புருஷ சிங்கங்கள் இருவரும் விதிப்படி உபநயனம் செய்விக்கப்பெற்றனர். அவ்விருவரும் இயல்பாகவே முற்றும் அறிந்தவராக இருந்தும் மனித அவதார முறைக்குப் பொருந்தும்படியாகவும் சிஷ்ய ஆசார முறையை உலகுக்கு அறிவிப்பதற்காகவும் காசியிற் பிறந்த சாந்தீபினி என்ற பிராமணோத்தமரிடத்தில் கல்வி கற்கச் சென்றார்கள். குருவுக்குரிய பணிவிடைகளைச் செய்து கற்கவேண்டிய ஒழுக்கங்களைக் கற்று வேதவேதாந்த சாஸ்திரங்களையும் தனுர்வேதத்தையும் கற்றுத் தேர்ந்தார்கள். அவ்விருவரும் அறுபத்து நான்கு தினங்களில் சகல சாஸ்திரங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் அத்யயனம் செய்தார்கள். சாந்தீபினி என்ற அவர்களின் ஆசிரியரும் அவர்களை சூரியர் சந்திரர்களாக நினைத்தார். இப்படியிருக்கும்போது ஒருநாள் ராமகிருஷ்ணர்கள் இருவரும் தங்கள் ஆசிரியரை நோக்கி, குருவே! தங்களுக்கு நாங்கள் குரு தக்ஷணையாக என்ன சமர்ப்பிக்கவேண்டும்? என்று கேட்டார்கள், குருமகான் யோசித்துவிட்டு முன்னொரு சமயம் பிரபாச தீர்த்தக் கட்டத்தில் கடலில் மூழ்கி இறந்துபோன தமது புத்திரனையே கொண்டு வந்து குரு தக்ஷணையாகக் கொடுக்கும்படி வேண்டினார். ராமகிருஷ்ணர்கள் இருவரும் அப்படியே ஆகட்டும்! என்று சொல்லிவிட்டு வில்லம்புகளுடன் கடற்கரைக்குச் சென்றார்கள். உடனே சமுத்திரராஜன் அர்க்கியத்தைக் கையில் ஏந்தி அங்கு வந்து அவர்களை வணங்கி சுவாமி! அந்தச் சாந்தீபினியின் மகனை அடியேன் கொண்டு போகவில்லை சங்கின் ரூபந்தரித்து எனது ஜலத்தில் வாசஞ் செய்கின்ற பஞ்சஜனன் என்ற அசுரனே கொண்டு போனான் என்றான். அதைக் கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணன், சமுத்திர ஜலத்தினுள்ளே பிரவேசித்து, அந்த அசுரனைக் கொன்று, அவனது எலும்பினாலான உத்தம சங்கத்தை எடுத்துக்கொண்டார். பிறகு கண்ணன் எதன் ஒலியால் அசுரருக்குப் பலஹானியும் தேவதைகளுக்கு தேஜோவிருத்தியும் உண்டாகுமோ அத்தகைய பாஞ்சஜன்யத்தைப் பூரித்து யமபுரிக்குச் சென்றார். அங்கு அவர் யமனைச் சங்கரித்து, யாதனையிற் கிடந்த சாந்தீபினியின் குமாரனை, முன்பிருந்தது போன்ற தேகம் உடையவனாக ஆக்கிக்கொண்டு வந்து ஆசிரியரின் குருதக்ஷிணையாகக் கொடுத்தருளினான். பின்னர், ஸ்ரீராமகிருஷ்ணர்கள் மதுராபுரிக்குச் சென்றார்கள்.

——————-

22. ஜராசந்தனை ஜெயித்தல்

மகத மன்னனான ஜராசந்தனின் பெண்களாகிய அஸ்தி பிராஸ்தி என்பவர்களை கம்சன் மணந்து கொண்டிருந்தான். எனவே கம்சனைக் கிருஷ்ணன் கொன்றதனால், ஜராசந்தன் மிகவும் கோபங்கொண்டு கிருஷ்ணனை வமிசத்தோடு கொல்ல வேண்டும் என்று இருபத்து மூன்று அ÷க்ஷõஹிணி சேனையோடு மதுராபுரியை நோக்கிப்படையெடுத்து வந்தான். தலைநகரை முற்றுகையிட்டான். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர்கள் அற்பமான சேனைகளைக் கொண்டே அவனை எதிர்த்தனர், இப்படிப் போர் செய்யும்போது இராமகிருஷ்ணர்கள் தங்களது பூர்வீக ஆயுதங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமென திருவுள்ளம் கொண்டதால், ஆகாயத்திலிருந்து சார்ங்கம் என்ற வில்லும் அக்ஷய தூணீரங்களும் கவுமோதகி என்ற கதையும் கிருஷ்ணனிடம் வந்தன. பலராமருக்குக் கலப்பையும் பெரியதொரு உலக்கைத் தடியும் வந்தன. இப்படி வந்த திவ்ய ஆயுதங்களை இருவரும் தரித்துக்கொண்டு, பெருஞ் சேனைகொண்ட ஜராசந்தனை வென்று மதுரைக்குத் திரும்பினார்கள். ஜராசந்தனை ஜெயித்திருந்தும் அவன் உயிரோடு திரும்பியதால், தங்களையே அவன் ஜயித்ததாக நினைத்தார்கள். அவன் ஜயிக்கப்பட்டதாக நினைக்கவில்லை கண்ணன் நினைத்ததுபோலவே ஜராசந்தன் சிறிய காலங்கழித்து மீண்டும் பெருஞ்சேனையுடன் யுத்தஞ் செய்ய மதுரைக்கு வந்தான். அப்போதும் ஸ்ரீராமகிருஷ்ணர்களால் ஜெயிக்கப்பட்டு ஓடிவிட்டான். இவ்வாறு பதினெட்டு முறைகள் யாதவருடன் போர் செய்ய ஜராசந்தன் தொடர்ந்து வந்து, கிருஷ்ணனால் தோல்வியடைந்து ஓடிப்போனான். மகாபலசாலியும் ஏராளமான சேனைகளுடையவனுமான ஜராசந்தனே பதினெட்டு முறை படையெடுத்துத் தோற்றான் என்றால் அது ஸ்ரீமந்நாராயணனுடைய வல்லமையே தவிர யாதவருடையதன்று அவருடைய திருவாழி ஒன்றே சத்துரு நாசத்துக்குப் போதுமானதாக இருந்தும் ஸ்ரீகிருஷ்ணன் பற்பல ஆயுதங்களைப் பகைவர் மீது பிரயோகித்தானே என்றால், திருவவதாரத் திருவிளையாடலாக மனுஷ்ய அவதாரம் செய்தருளிய எம்பெருமான் மனிதத் தன்மையை அனுசரித்தே பகவான்களோடு சமாதானமும் ஈனர்களோடு யுத்தமும் செய்தருளுகிறான். இந்தக் காரணத்தாலே இடத்துக்கேற்ப சாம, தான பேத, தண்டம் என்ற சதுர்வித உபாயங்களையும் அனுசரிக்கிறான். சிலவிடத்தில் ஓடிப்போவதாகவும் நடிக்கிறான். இந்தத் திருவிளையாடல்களும் இன்னின்ன காலத்தில் இப்படியென்றில்லாமல் அவன் திருவுள்ளத்தின்படியே நடக்கின்றன.

——————-

23. யாதவரின் பரிகாசமும் துவாரகா நிர்மாணமும்!

ஒருநாள் யாதவர்களின் புரோகிதரான கார்க்கியர் என்ற பிராமணரை, அவருடைய மைத்துனன், அவருக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பதால், யாதவர்கள் கூட்டமாகக் கூடியிருந்த சபையில், இவர் நபும்சகர் என்று பரிகாசம் செய்தான். அதைக் கேட்ட யாதவரெல்லாம் உரக்கச் சிரித்தனர். ஆனால் கார்க்கியர் அவமானமும் கோபமுங் கொண்டு, விந்திய மலையின் தெற்கே வந்து யாதவர்களுக்குப் பகைவரான புத்திரன் ஒருவன் தமக்குப் பிறக்கவேண்டும் என்று எண்ணி இரும்புப் பொடியைத் தின்று, சிவனைக் குறித்து, தவஞ்செய்தார். சிவனார் அவர் முன்பு தோன்றி அவர் வேண்டிய வரத்தை வழங்கினார். அவர் புத்திரனுக்கான வரம் பெற்றதையறிந்த யவனதேசத்தரசன், அவரிடம் வந்து அவரை மிகவும் உபசரித்து பூசித்து, தனக்குப் பிள்ளையில்லாமையால், தன் மனைவியிடத்தில் பிள்ளையுண்டாக்கிக் கொடுக்கும்படி வேண்டினான். அவரும் அவனிடம் இரக்கம்கொண்டு, அவன் பத்தினியோடு கூடியதால், அந்த மங்கையின் வயிற்றில் வண்டு போன்ற நிறமுடைய புத்திரன் ஒருவன் உண்டானான்.
அவனுக்கு அந்த யவனதேசத்தரசன் காலயவனன் என்ற பெயரிட்டு வளர்த்துத் தக்க காலத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டுப் பிறகு தவஞ்செய்யக் காட்டுக்குப் போய் விட்டான். காலயவனன் மிகவும் பலசாலியாகவும் உறுதியான மார்புடையவனாகவும் விளங்கினான். அதனால் கர்வம் கொண்டிருந்த அவன், கலகக்காரரான நாரத முனிவரிடம், நாரதரே! இந்தப் பூமியில் பலவான்களான அரசர்கள் யார்? என்று கேட்டான். அதற்கு நாரதர் விஷமச் சிரிப்புடன், இதில் என்ன சந்தேகம்? யாதவர்களின் தலைவர்களான ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமருமே பலசாலிகள்: என்றார். அதைக் கேட்டதும் காலயவனன் அநேக கோடி மிலேச்சரோடும், ரத கஜ துரகங்களோடும், யாதவர் மீது படையெடுக்க வேண்டிய முயற்சிகளைச் செய்தான். நாள்தோறும் தன் பிரயாணத்துக்குத் தடைநேரிடாதவாறு, வழிகளில் அங்கங்கே வாகனங்களை வைத்து, ஒரு வாகனம் அலுத்துப் போனவுடனே அதைவிட்டு வேறு வாகனத்தின்மேல் ஏறி, இப்படியே நெடுந்தூரத்திலிருந்து வெகு சீக்கிரமாக மதுரையை வந்தடைந்தான்.
அப்போது கண்ணன், ஓஹோ! யாதவ சேனையெல்லாம் நாசமாகும்படி நேரிட்டதே! காலயவனன் போர் செய்வானாகில் அற்பமான யாதவர்களை நாசஞ் செய்வான். இதனால் பலவீனப்படும் யாதவரை மகதராஜன் நாசஞ் செய்யக்கூடும். அல்லது மகதராஜனின் சேனை பலவீனப்பட்டிருந்தாலும் காலயவனன் அவர்களோடு சேர்ந்து யாதவரை அழித்துவிடுவான்! ஆகையால் காலயவனனாலும் ஜராசந்தனாலும் யாதவருக்குத் துன்பந்தான் நேரிடும் எனவே, யாதவர்களைக் காப்பதற்குக் கோட்டை ஒன்றை அமைப்போம். அந்தக் கோட்டையிலிருந்து பெண்களும் யுத்தஞ் செய்யத் தக்கதாக அதை அமைக்கவேண்டும் என்று நினைத்து சமுத்திர ராஜனையழைத்துப் பன்னிரண்டு யோசனை தூரம் இடம்விடும்படிக் கேட்டான். அதன் பிரகாரம் சமுத்திர ராஜன் இடம்விட்ட அவ்வளவு பெரிய பூமியில் பெரிய மதில்கள், தடாகங்கள் உத்தியான வனங்கள் உப்பரிகைகளுமாக தேவேந்திரனின் அமராவதிப் பட்டணத்தைப்போல துவாரகை நகரை நிர்மாணித்தார். அதில் ஸ்ரீகிருஷ்ணன் தம் பிரஜைகளைச் சேர்த்து வைத்துவிட்டுப் பகைவன் காலயவனன் நெருங்கி வரும் சமயத்தில் தாம் மதுரைக்குச் சென்றார். பகைவன் மதுரையை முற்றுகையிட்டதும் கிருஷ்ணன் யாதொரு ஆயுதமுமில்லாமல் நகரிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும்போது, நாரதர் கூறிய அடையாளத்தால், இவன்தான் கிருஷ்ணன் என்று காலயவனன் நிச்சயித்துக்கொண்டு இவன் ஆயுதமில்லாமல் போவதால் இவனைப் பிடித்துச் சிறை செய்வது எளிது என்று நினைத்துப் பின் தொடர்ந்தான்.
மைத்ரேயரே, கவனமாகக் கேளும் யோகிகளின் இதயங்களும் பின்தொடர முடியாதவனை காலயவனன் பின்தொடர்ந்து பிடிக்க நினைத்தான். அவன் பின்தொடர்வதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன் ஒரு குகையினுள் புகுந்தார். காலயவனனும் அவரைப் பின்தொடர்ந்து, அந்தக் குகையில் ஒருபுறம் படுக்கையிற் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனைக் கண்டு அவனையே ஸ்ரீகிருஷ்ணன் என்று நினைத்துக் காலால் எட்டியுதைத்தான். உடனே, முசுகுந்தன் தூக்கம் தெளிந்து எழுந்து காலயவனனைப் பார்த்தான். பார்த்ததும் முசுகுந்தனின் கோபத்தால் காலயவனன் தன்னுடலின் அக்கினியாலேயே எரிக்கப்பட்டுச் சாம்பலானான் மைத்ரேயரே! அந்த முசுகுந்த மன்னன் முன்பு நடந்த தேவாசுரப் போரில், அசுரரைச் சங்கரித்துத் தேவர்களுக்கு உதவி செய்தவன் அதனால் தேவர்கள் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும்? என்று அவனைக் கேட்டனர். அப்போது அவன் தூக்கம் இன்றி வெகுநாட்களாக அலுத்துப்போயிருந்ததால், தூங்குவதற்கான வரத்தைக் கேட்டான். தேவர்களும் அந்த வரத்தைக் கொடுத்து, உன்னைத் தூக்கத்திலிருந்து எவன் எழுப்புவானோ, அவன் தனது உடலின் அக்கினியாலேயே எரிக்கப்பட்டுச் சாம்பல் ஆவான்! என்ற வரம் தந்தார்கள். அதனாலேயே முசுகுந்த மன்னனை எழுப்பிய காலயவனன் எரிந்து சாம்பலானான். அதன் பிறகு, முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, நீ யார்? என்று கேட்டான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன், அரசனே! நான் சந்திர சூலம் சார்ந்த யதுகுலத்தில் பிறந்தவன். வசுதேவரின் மகன்! என்று கூறினார். அதைக் கேட்டதும் முசுகுந்த மன்னன், முன்பு தனக்கு கார்க்கிய முனிவர் கூறியதை நினைத்து, தன் படுக்கையைவிட்டு எழுந்து, சர்வேசுவரனான ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி, ஓ சுவாமி! தேவரீர் ஸ்ரீமந் நாராயணருடைய அம்சாவதாரம் என்பது அடியேனுக்குத் தெரியும். முன்பு கார்க்கிய மகாமுனிவர், இருபத்தெட்டாவது யுகத்தில் துவாபரயுக முடிவில் யதுகுலத்தில் எம்பெருமான் அவதரித்தருள்வான் என்று என்னிடம் சொல்லியிருந்தார். தேவரீர்தாம் அந்த அவதார புருஷன்! மனுஷ்யரின் நலனுக்காக இவ்வாறு அவதரித்திருக்கிறீர்! அடியேன் இந்தச் சம்சாரச்சக்கரத்தில் ஓய்வில்லாமற் சுற்றிக்கொண்டு வருந்துகிறேனேயன்றி எங்கும் ஒரு சுகத்தையும் கண்டேனில்லை. கானல் நீர் என்று மூடர் அடைவதுபோல துக்கங்களையே சுகங்கள் என்று நினைத்து விட்டேன். ராஜ்யாதிகாரம். பூமி, சேனை, பொக்கிஷம், உறவினர் நண்பர், மக்கள், மனைவியர் ஏவலாட்கள் இவை யாவற்றையும் சுகமென்றே நினைத்த நான் முடிவில் அவையெல்லாம் எனக்குத்தாபத்தையே விளைவித்தன என்பதை உணர்ந்தேன். இனி தேவப்பிறவி கிடைத்தால்தான் என்ன! தேவகணங்களே அடியேனது துணையை விரும்புகின்றனர். சர்வதிபதியே! நித்யமான சுகமெங்கே இருக்கிறது? சகல உலகங்களுக்கும் காரணமான தேவரீரை ஆராதனை செய்யாமல், எவன் தான் நிரந்தரமான சுகத்தை அடையமுடியும்? அடியேன் சம்சார வழியில் திரிந்து, மிக்க தாபங்களை அடைந்து அவற்றால் மனந்தவிர்க்கப்பட்டு, ஒப்பற்ற ஒளியுடைய மோக்ஷசுகத்தில் அபிலாøக்ஷகொண்டு, எவனைக் காட்டிலும் வேறு பரமப்பிராப்பியம் இல்லையோ, அத்தகைய அபாரனாகவும் அப்ரமேயனாயுமுள்ள உன்னை அடைக்கலம் புகுந்தேன் என்று முசுகுந்த மன்னன் துதித்தான்.

—————-

24. முசுகுந்தனுக்கு கண்ணனின் அருளும் ஆயர்பாடிக்கு பலராமர் வருகையும்!

முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்து மோக்ஷத்தை வேண்டினான். ஸ்ரீகிருஷ்ணன் அவனை நோக்கி, அரசனே! நீ உத்தம உலகங்களை அடைந்து, என் அனுக்கிரகத்தினால் குறைவற்ற மஹா ஐசுவரியமுள்ளவனாய் திவ்விய போகங்களை அனுபவித்து மறுபடியும் உயர்ந்ததொரு குலத்தில் பூர்வ ஜன்ம ஸ்மரணையுள்ளவனாகப் பிறந்து எனது கடாக்ஷத்தால் மோக்ஷம் அடைவாயாக! என்று அருள் செய்தார். முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனது திருவடிகளை வணங்கி, குகையிலிருந்து புறப்பட்டு வெளியே வந்தான். அங்கே மிகவும் குள்ளமாய்த் திரியும் மனிதர்களைப் பார்த்துக் கலியுகம் வந்துவிட்டது என்பதை முசுகுந்தன் அறிந்து, தவஞ் செய்ய எண்ணம் கொண்டு ஸ்ரீநாராயண முனிவர்கள் வாசஞ் செய்யும் கந்தம தன பருவதத்துக்குப் போனான். கிருஷ்ணனே தன் பகைவனான காலயவனனைத் தந்திரத்தால் கொன்றுவிட்டு, மதுரை சென்று அதை முற்றுகை செய்திருந்த சதுரங்கச் சேனைகளைக் கைப்பற்றித் துவாரகை சென்று உக்கிரசேன மன்னனிடம் ஒப்படைத்தான். இதனால் யாதவர்கள் பகைவர் பயமின்றி வாழ்ந்தனர். போர்கள் ஓய்ந்ததால், பலராமர், தமது உறவினரைக் காண விரும்பி, கோகுலத்துக்குச் சென்றார். கோபியர்களும் கோபாலர்களும் அவரை வரவேற்றனர். கோபியர்களிற் சிலர் அன்பினால் கோபமாகவும் சிலர் பொறாமையுள்ளவர்களாகவும், பலராமரின் பேசினர். கண்ணனிடத்து அன்பு கொண்டிருந்த கோபியர்கள் நகரத்து நாகரிகப் பெண்களிடம் கண்ணன் கவர்ச்சி கொண்டதாக நினைத்து பலராமரிடம் கேள்விகள் கேட்கலானார்கள்.
ஸ்திரமற்ற அற்பப் பிரேமையுடைய அந்த கிருஷ்ணன் சுகமாக இருக்கிறானா? அந்த கிருஷ்ணன் இங்கே ஆடிப்பாடிய போது நாங்கள் அவன் பாட்டுக்கிசைய ஆடிப் பாடியதை நினைக்கிறானா? அவன் தன் தாயைப் பார்க்கவாவது இங்கு வருவானோ? இனி அவன் பேச்சு நமக்கு எதற்கு? எவனுக்கு நாம் இல்லாத பொழுது சுகமாய்க் கழிகிறதோ, அத்தகையவனின் பேச்சை விடுங்கள் நமக்கு யார் இல்லாமல் பொழுது கஷ்டமாகப்போகிறதோ, எவன் தன் தந்தை தாய், உடன் பிறந்தார் பந்துக்கள் ஆகியோரையெல்லாம் விட்டுப் போனானோ, அத்தகையவனுக்காக நாம் ஏன் தவிக்கவேண்டும்? அந்த மாயகண்ணன் நன்றியில்லாதவரில் சிறந்தவன், இருக்கட்டும் ஓ பலராமா! அந்த கிருஷ்ணன் இங்கு வருவதாக ஏதேனும் சொன்னானா? பட்டணத்துப் பாவையரிடம் மனம் பறிகொடுத்துவிட்ட அந்தமாய கண்ணன் எங்களிடம் சிறிதும் அன்பில்லாமல் இருப்பதால் அந்த வஞ்சகனைக் கண்ணால் காணவுங்கூடாதவன் என்று எங்களுக்குத் தோன்றுகிறது! என்று இவ்விதமாக ஆய்ச்சியர் அன்போடும் ஆசையோடும் வெறுப்போடும் பலராமரிடம் ஏதேதோ! பேசி, ஸ்ரீகிருஷ்ண ஸ்மரணையினாலேயே தாமோதரா! கோவிந்தா! என்று மூத்த நம்பியையே அழைத்துவிட்டு, உடனே தங்களுக்கு கண்ணன் மீதுள்ள மோக்ஷத்தால்தான் அப்படிப் பேசுவதாக நினைத்துக் கலகல வென்றுச் சிரித்தார்கள். அப்போது பலராமர் அன்போடும் கனிவோடும் கண்ணன் கூறியனுப்பிய வார்த்தைகளை அவர்களிடம் சொல்லி அவர்களைச் சமாதானஞ் செய்தார். பிறகு அவர் ஆயர்ப்பாடியடைந்து ஆயர் ஆய்ச்சியருடன் ஆனந்தமாக ரமித்துக் கொண்டிருந்தார்.

——————

25. பலராமரின் மோகமும் கோபமும்

மனுஷ்ய தேகத்தோடு, காரிய வசத்தால் பூமியில் எழுந்தருளிப் பெரிய காரியங்களை நிறைவேற்றி, இடையரோடு வனத்தில் விளையாடிக்கொண்டிருந்த பலராமனான ஆதிசேஷனுக்குத் திருவுள்ளம் மகிழ்வதற்காக வருணன் வாருணிதேவியை அழைத்து ஓ மதிராதேவி! நீ திருவனந்தாழ்வானுக்கு மிகவும் பிரியமானவள்! ஆகையால் அவருடைய போகத்துக்காக அவர் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு நீ சந்தோஷமாகப் போக வேண்டும்! என்றான். வாருணியும், பலராமர் விளையாடிக் கொண்டிருந்த பிருந்தாவனத்தில் ஒரு கடப்ப மரப்பொந்தில் தங்கியிருந்தாள். அப்போது பலராமர் அந்த வனத்தில் உலாவும் போது, அந்த மதிரையின் வாசனை வீசுவதையறிந்து, அதன் மீது விருப்பம் கொண்டு அந்தத் திசையை நோக்கிச் சென்று, அங்கே கடப்ப மரத்திலிருந்து தாரையாய் ஒழுகிக்கொண்டிருந்த மதிரையைக் கண்டு, மிகவும் மகிழ்ந்து, அதனை வேண்டுமளவும் பானஞ்செய்து, தம்முடனிருந்த கோப கோபிகையருக்கும் கொடுத்து, ஆடியும் பாடியும் மதம் பொருந்தி வீற்றிருந்தார்.
அப்போது தன் பக்கமாக ஓடிய யமுனை நதியை நோக்கி, யமுனா! நீ இங்கே வா, நான் நீராடவேண்டும் என்றார் பலராமர். யமுனையோ, அவர் மதத்தினால் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து அவர் வார்த்தையை மதித்துவரவில்லை. அதனால் கோபங்கொண்ட பலராமர், தமது ஹலாயுதத்தை எடுத்து, அதன் நுனியினால் அந்த நதியை இழுத்து, ஏ துஷ்ட நதியே! நான் அழைத்தும் நீ ஏன் வராமல் இருந்தாய்? உனக்குச் சக்தியிருந்தால் இப்போது உன் விருப்பப்படிப் போ! என்றார். அவரால் இழுக்கப்பட்ட அந்த நதி, தான் போகும் வழியை விட்டு, அந்த வனத்தில் பெருகியது. பிறகு அந்த நதி தன் கன்னியுருவோடு அவர் முன்பு வந்து வணங்கி, ஹலாயுதரே! என்மீது இரக்கங் கொண்டு என்னை விட்டுவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அதற்கு அவர் யமுனா! என் பலத்தை நீ அவமதித்தால் நான் உன்னை என் கலப்பையினால் ஆயிரந் துண்டமாக்கிடுவேன்! என்றார். அதைக் கேட்ட யமுனாநதி தேவி நடுநடுங்கி அந்த வனம் முழுவதும் நனைத்தது. அவரும் அந்த நதியை விட்டுவிட்டார். அந்த நதியில் நீராடிய பலராமரிடம் ஒரு புதிய காந்தி உண்டாயிற்று. பிறகு அவர் திருமுடியில் தரிக்கத்தக்கத் தாமரை மலரும், கர்ண குண்டலங்களும் தாமரை மாலையும் நீலமான இரண்டு திருப்பரிவட்டங்களும் வருணனால் அனுப்பப்பட்டுத் திருமகளால் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றையணிந்த பலராமர் மிகவும் பிரகாசமாய் இடைச்சேரியில் கிரீடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு அப்பால், பலராமர் துவாரகை சென்று ரைவத மன்னனுடைய மகளான ரேவதி என்பவளை மணந்து நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

——————-

26. ருக்மணிப் பிராட்டியார் திருக்கலியாணம்

விதர்ப்ப தேசத்தில் குண்டினபுரியில், பீஷ்மகன் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ருக்குமி என்ற மகன் ஒருவனும் ருக்குமணி என்ற மகளொருத்தியும் இருந்தார்கள். பேரழகியான அவளை கண்ணன் திருமணஞ் செய்துகொள்ளத் திருவுள்ளங்கொண்டிருந்தார். ருக்மணியும் கண்ணன் மீது காதல் கொண்டிருந்தாள். ஆனால் அந்தக் கன்னிகையைத் தனக்கு கொடுக்கவேண்டும் என்று கிருஷ்ணன் எவ்வளவோ வேண்டியும் ருக்மணியின் சகோதரனான ருக்குமி, துவேஷத்தினால் தன் தங்கையைக் கிருஷ்ணனுக்குக் கொடுக்காமல் ஜராசந்தனின் ஏவுதலால் சிசுபாலனுக்குக் கொடுப்பதாகத் தந்தையைக் கொண்டு வாக்குத் தத்தம் செய்வித்தான். இப்படி அவன் நிச்சயித்து விவாகம் செய்ய ஏற்பாடு செய்யும்போது, அந்தத் திருமணத்துக்கு சிசுபாலனுக்கு நண்பர்களான ஜராசந்தன் முதலான அரசர்கள் குண்டினபுரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனும் யாதவ சேனையோடு குண்டினபுரத்திற்குச் சென்றார். ருக்மணிக்கு நாளைக்குக் கலியாணம் என்றிருக்கும்போது கண்ணன் பகைவருடன் போர் செய்யும் பொறுப்பை பலராமர் முதலியோரிடம் ஒப்படைத்துவிட்டு மணப்பெண்ணான ருக்மணியைக் கடத்திப் பலாத்காரமாகத் தூக்கிக்கொண்டு போனார். அதனால் மணமகன் சிசுபாலனும் அவனது தோழர்களான பவுண்டரகன், விடூரதன், தந்தவக்ரன், ஜராசந்தன், சாள்வன், சிசுபாலன் முதலான அரசர்களும் மிகவும் கோபங்கொண்டு எதிர்த்து வந்து, கண்ணனைச் சங்கரிக்கப்பெரும் யுத்தம் புரிந்தார்கள். இறுதியில் பலராமரிடம் அவர்கள் தோல்வியடைந்து தன் தன் நாடுகளுக்குச் சென்றனர். ருக்குமி மட்டுமே நான் ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரத்துக்குத் திரும்பமாட்டேன் என்று சபதம் செய்து, கண்ணனைப் பின்தொடர்ந்தான். வழியில் அவன் கண்ணனை மடக்கிப் போர் செய்ய கண்ணன் அவனது சேனைகளை நாசஞ் செய்து, அவனையும் தலையெடுக்கவொட்டாமல் அடித்து உயிரோடு தரையில் வீழ்த்தினார். இவ்விதமாக கண்ணன் ருக்குமியை வென்று ருக்குமணியை ராக்ஷச விவாஹ முறையில் விவாகஞ் செய்துகொண்டார். அந்த ருக்மணியின் திருவுதிரத்தில் மன்மத அம்சமாய் மகாவீரியனான பிரத்தியும்னன் பிறந்தான். அவனைப் பூர்வஜன்ம விரோதத்தால் சம்பராசுரன் கொண்டு செல்ல, அவனை பிரத்தியும்னன் சங்காரஞ் செய்தான்.

——————

27. மாயாவதியின் காதலும் சம்பராசுர வதமும்

மைத்ரேய முனிவர் குறுக்கிட்டு பராசர மகரிஷியை நோக்கி குருவே, அந்தப் பிரத்தியும்னனைச் சம்பராசுரன் எப்படித் தூக்கிச் சென்றான்? அந்த சம்பராசுரனை பிரத்தியும்னன் எப்படிச் சம்ஹாரம் செய்தான்: இதை எனக்கத் தெளிவாகச் சொல்லவேண்டும்! என்று கேட்டார். அதனால் பராசர மகரிஷி அந்தக் கதையைக் கூறலானார். மைத்ரேயரே கேளும். பிரத்தியும்னன் பிறந்த ஆறாவது நாளில், சம்பராசுரன் என்ற அரக்கன் இவன் நம்மைக் கொன்று விடுவான் என்று நினைத்து அவனைக் கருவுயிர்த்த அறையிலிருந்தே கொண்டு போய்விட்டான். பிறகு திமிங்கலங்களும் முதலைகளும் நிறைந்த லவண சமுத்திரத்தில் அந்தக் குழந்தையை வீசி எறிந்துவிட்டான். அந்தக் குழந்தையை மீன் ஒன்று விழுங்கியது. அந்த மீனின் வயிற்று நெருப்பினால் எரிக்கப்பட்டாலும் அக்குழந்தை பகவானுடைய வீரியத்தால் உற்பத்தியானதால், மரணமடையாமல் இருந்தது. இது இப்படியிருக்க செம்படவர்கள் மீன் பிடிக்கும்போது அந்த மீனையும் பிடித்து அசுரர்களின் அரசனாகிய சம்பராசுரனிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். அந்த அசுரனுக்கு மாயாவதி என்பவள் பெயரால் மட்டுமே பத்தினியாக இருந்தாள். அவள் சமையற்காரருக்கெல்லாம் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தாள். அவள் சமையலுக்காக மீன்களைச் சேதிக்கும்பொழுது, ஒரு மீனினுள் அக்குழந்தை இருப்பதைக் கண்டாள். அதைக் கண்ட அவள், இந்தக் குழந்தை எரிந்துபோன மன்மதனாகிய மரத்தின் முதல் முளையைப்போல அழகாக இருக்கிறது. இது யார்? எப்படி மீன் வயிற்றில் வந்தது? என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு நாரதர் வந்தார், வந்தவர் மாயாவதியிடம் பெண்ணே இந்தக் குழந்தையைக் குறித்து யோசிக்க வேண்டாம். இவன் ஜகத் சிருஷ்டி ஸ்திதி, சம்ஹாரங்களை நடத்துகின்ற ஸ்ரீமஹாவிஷ்ணுவின் குமாரன்! இவனை உன் கணவனான சம்பராசுரன் கொல்லவேண்டுமென்று நினைத்து, பிள்ளை பெற்ற அறையிலிருந்தே இக்குழந்தையைத் திருடிவந்து, சமுத்திரத்தில் எறிந்தான். அங்கே இந்த மீன் விழுங்கியது. அதன் பிறகு அவன் உன்னிடம் வந்து சேர்ந்தான். ஆகையால் இந்தப் புருஷ ரத்தினத்தை நீயே பயமின்றி பரிபாலனஞ் செய்து வருவாயாக! என்றார். அதைக் கேட்ட மாயாவதி அவர் சொன்னதிலிருந்து, பிரத்தியும்னன் என்ற அக் குழந்தையை மிகவும் அன்போடு போஷித்து வந்தாள். அவன் அழகைக் கண்டு இளமையிலிருந்தே அவன் மீது மாயாவதி காதலும் கொண்டிருந்தாள். அவன் யவுவனப் பருவமடைந்ததும் மாயாவதி அவன் மீது ஆசையுற்று அவனுக்குப் பலவிதமான மாயா வித்தைகளை கற்றுத் தந்து மனமும் கண்ணும் அவனை விட்டுப் பிரியாமல் அவன்மீது வைத்திருந்தாள். இது போல மாயாவதி தன் மீது காமமுற்றிருப்பதை கிருஷ்ண குமாரனான பிரத்தியும்னன் அறிந்ததும் நீ எனக்குத் தாயாக இருக்க அதைவிட்டு வேறு விதமாக என்னிடம் நடப்பதென்ன? என்று கேட்டான் அதற்கு மாயாவதி புருஷ ரத்தினமே கேள்! நீ என் மகன் அல்ல; ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மகன் உன் தாயின் கருவறையில் நீ இருக்கும்போதே உன்னை சம்பராசுரன் திருடிக்கொண்டுபோய்க் கடலில் வீசியெறிந்தான். அங்கு ஒரு மீன் உன்னை விழுங்கிற்று. அந்த மீன் இங்கு வந்தபோது; அதன் வயிற்றிலிருந்து உன்னை எடுத்துக் காப்பாற்றி வந்தேன். உன்னைப் பெற்றவள் உனக்காக அழுது கொண்டிருக்கிறாள். இதுவே உன் வரலாறு என்றாள். அதைக் கேட்டதும் பிரத்தியும்னன் மிகவும் கோபங் கொண்டு, சம்பராசுரனைச் சண்டைக்கு அழைத்தான். அந்த அசுரனும் சகல சேனைகளோடு திரண்டுவந்து பிரத்தியும்னனோடு போரிட்டான். பிரத்தியும்னன் அவனது சேனைகளையெல்லாம் அழித்தான். பிறகு சம்பராசுரன் ஏழு மாயைகளைப் பிரயோகித்தான். பிரத்தியும்னன் அவற்றையெல்லாம் கடந்துவந்து, எட்டாவது மாயையை அவன்மீது பிரயோகித்து அந்த சம்பராசுரனை அழித்தான். பிறகு அவன் மாயாவதியுடன் அங்கிருந்து புறப்பட்டுத் தன் தந்தையின் அந்தப்புரத்திற்கு வந்து குதித்தான்.
இவ்விதம் மாயாவதியுடன் அந்தப்புரத்தில் குதித்த அவனைப் பார்த்து, அங்கிருந்த பெண்களனைவரும் வடிவத்தால் ஒத்திருந்ததால் ஸ்ரீகிருஷ்ணன் என்றே நினைத்தார்கள். அப்பொழுது ருக்குமணி அவனைப் பார்த்துவிட்டாள். அவள் கண்களில் கண்ணீர் ததும்ப எந்தப் புண்யவதியின் மகனோ-இவன்? நவமான யவுவனத்துடன் திகழ்கிறானோ; என் பிள்ளை பிரத்தியும்னன் பிழைத்திருந்தால் இந்த வயதுடையவனாக இருப்பானல்லவா? என்று நினைத்தாள். அவள் அவனைப் பார்த்து, மகனே! எனக்கு உன்மீது உண்டாகிற அன்பையும் உன் தேக எழிலையும் பார்த்தால் என் நாயகரான ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியின் குமாரனாகவே நீ இருக்கவேண்டுமென்று தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நாரதர் கண்ணனையும் அழைத்துக் கொண்டு அங்கேவந்து சேர்ந்துவிட்டார். அவர் ருக்குமணிப் பிராட்டியை நோக்கி பெண்ணரசே! இவன் உன் மகன் பிரத்தியும்னன் தான் உன் சூதிகா கிருகத்திலிருந்து இவனை சம்பராசுரன் கொண்டு போனான். இப்போது இவன் அந்தப் பகைவனை அழித்துவிட்டு இங்கு வந்திருக்கிறான். இவனோடு வந்திருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் மாயாவதி இவள் இவனுடைய பாரியை, சம்பராசுரனின் பாரியை அல்ல. இதற்கு ஒரு காரணம் உண்டு. அதைச் சொல்கிறேன் கேள். முன்பொரு சமயம் சிவபெருமானால் மன்மதன் அழித்தபோது, அவனது மனைவியான இந்த ரதி தேவி, மிகவும் பதிவிரதையாகையால் மறுபடியும் தன் நாயகனான மன்மதனின் ஜனனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரையில் காலந்தள்ளும் பொருட்டு பலவாறும் நடிக்கவேண்டியிருந்தது. இவளுடைய அழகான கண்களைக் கண்டு சம்பராசுரன் மயங்கி இவளைத் தன் பத்தினியாகத் தன் அந்தப்புரத்தில் வைத்துக்கொண்டான், அதனால் இவள் அந்த அசுரனைச் சமாளிப்பதற்காகப் பலவகையான போகங்களிலே மாயாமயமான ரூபங்களைக் காட்டித் தான் கிட்டப் போகாமலேயே, அவனது பத்தினியைப்போல், அவனை மோகங்கொள்ளச் செய்து வந்தாள். இவள் கனவிலும் நனவிலும் எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருந்த மன்மதன் உனக்குப் புத்திரனாக அவதரித்தான். அந்த மன்மதனின் பத்தினியான இரதி தேவியே இவள்! இதில் சந்தேகப்படவேண்டாம் இவன் உன் மகன்; இவள் உன் மருமகள்! என்றார், அதைக் கேட்டு யாவரும் அதிசயமும் ஆனந்தமும் அடைந்தனர். நாடே அதிசயித்தது!

——————

28. கல்யாணத்தில் சூதாட்டம்

பிரத்தியும்னனுக்குப் பின் சாருதேஷ்ணன்; சுதேஷ்ணன், சாருதேகன் கதேணன் சாருகுப்தன். பத்திரசாரு, சாருவிந்தன் சுசாரு. சாரு என்ற பிள்ளைகளும் சாருமதி என்ற ஒரு பெண்ணும் ருக்குமணிக்குப் பிறந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனுக்கு ருக்மணியைத் தவிர, மித்திரவிந்தை, சத்தியை, ஜாம்பவதி ரோகிணி, சுசீலை; சத்தியபாமை, லக்ஷ்மணை என்ற ஏழு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் மித்திரவிந்தை என்பவள் காளிந்தன் என்பவனின் மகளாகையால், அவளுக்குக் களிந்தி என்று ஒரு பெயருண்டு. சத்தியை, நக்நஜித் என்பவனுடைய மகள். ஜாம்பவதி, ஜாம்பவானின் மகள். சுசீலை மத்திர ராஜனின் மகள். சத்தியபாமை சத்திராஜித்தன் மகள். ரோகிணி என்பவள் விரும்பும் ரூபத்தை எடுக்கவல்லவள். சுசீலை என்பவள் தன் பெயருக்கேற்றச் சிறந்த சீலமுடையவள். லக்ஷ்மணை சிரித்தால் மிகவும் அழகாக விளங்குபவள். அதனால் அவளுக்கு சாருஹாஸினி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஏழு மனைவியரும் தவிர, ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பதினாறாயிரம் தேவிமார்களும் உண்டு. ருக்மணியின் குமாரனான பிரத்தியும்னன், சுயம்வரத்திலே தன் மீது காதல் கொண்டிருந்த மாமன் மகளான ருக்குமியின் மகளைத் திருமணஞ் செய்துகொண்டிருந்தான். அவளது கர்ப்பத்தில் மகா பராக்கிரமசாலியும் அளவற்ற வீரியமுடையவனுமான அநிருத்தன் என்பவன் அவதரித்தான். அவனுக்குத் திருமணஞ் செய்ய தம் மைத்துனனான ருக்குமி ராஜனின் பேத்தியையே கண்ணன் நிச்சயித்திருந்தார். ருக்குமிக்கு கண்ணன் பேரில் பகைமை இருந்தும், அவன் கண்ணன் விருப்பப்படி அவர் பேரனுக்குத் தன் பேத்தியைக் கன்னிகாதானம் செய்து கொடுத்திருந்தான்.
மைத்ரேயரே கேளும்! அந்தக் கலியாணத்திற்கு பலராமரும் மற்ற யாதவர்களும் போஜகடம் என்ற ருக்குமியின் தலைநகருக்குப் போயிருந்தார்கள். அங்கு அநிருத்தனுக்குத் திருமணம் நடந்தவுடன் கலிங்க ராஜன் முதலியோர் ருக்குமியை நோக்கி, ருக்குமி! பலராமனுக்குச் சொக்கட்டான் ஆடத்தெரியாது, ஆயினும் அவனுக்கு அந்த ஆட்டத்தில் பிரியம் அதிகமுண்டு. ஆகையால் மகா பலசாலியான பலபத்திரனை நாம் சூதிலே வெற்றி பெறுவோம்! என்றார்கள். அதைக் கேட்ட ருக்குமியும் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்தான். சபையிலே பலராமரோடு, ருக்குமியும் மற்ற அரசர்களும் சூதாட ஆரம்பித்தனர். முதல் ஆட்டத்தில் பலராமர் பந்தயம் வைத்த ஆயிரம் வராகனையும் ருக்குமி ஜெயித்தான். இரண்டாவது ஆட்டத்திலும் மேலும் ஆயிரம்வராகன் ருக்குமியே ஜெயித்தான். பிறகு பலராமர், பதினாயிரம் வராகனைப் பந்தயமாக வைத்தார். அதையும் சூதில் வல்ல ருக்குமியே ஜெயித்துவிட்டான். இது போலவே மூன்று ஆட்டங்களிலும் பலராமர் தோற்றார். இதைக்கண்ட கலிங்க ராஜன் சிரித்தான். ருக்குமியும் ஐயோ பாவம்! இந்த பலராமன் சூதாடத் தெரியாதவன். வீணாக என்னோடு ஆடவந்து திரவியமெல்லாம் தோற்று அவமானப்பட்டு விட்டான். ஆனால் இவன் ஓர் அக்கிரமம் செய்து விட்டான். சூது தெரியாதவன் அந்த வித்தையில் வல்லவர்களை அவமானமாகப் பேசலாமா? என்றான்.
அதைக் கேட்டதும் பலராமர் விதர்ப்பராஜனையும் கலிங்க ராஜனையும் பற்றி இழுத்து கோபத்துடன், நல்லது! இந்தத் தடவையும் ஆடுவோம்! என்று ஒருகோடி வராகனைப் பணயமாக வைத்தார். ருக்குமியும் ஒன்றும் பேசாமல் பாசிகைகளை உருட்டினான். அந்த ஆட்டத்தில் பலராமர் ஜெயித்தார். அதனால் நான் ஜெயித்தேன்! என்று அவர் உரக்கக் கூவினார். அதை ருக்குமி மறுக்கும் விதமாக, பலனே! இந்த மட்டும் நீ சொன்ன பொய் போதும்! ஜெயித்தவன் நானே! எப்படியென்றால் நீகோடி வராகன் பந்தயம் என்று சொன்னாய்! அதைநான் ஒப்புக் கொள்ளவில்லை, இப்படியிருக்க நீ ஜெயித்ததாகச் சொல்லுவாயானால் நான் ஏன் ஜயித்தவனாகமாட்டேன்! என்று கூவினான். அப்போது ஆகாயத்தில் ஒரு வானொலி எழுந்தது அது கம்பீர நாதத்துடன் பலராமருக்குக் கோபம் ஏற்படும்படியாக, பலராமர் தருமமாகச் செய்தார். ருக்குமியோ பொய் சொன்னான். ஒரு விஷயம் வாயினால் சொல்லாமற் போனாலும் காரியத்தை நடத்தினால் அது ஒப்புக்கொண்டதே ஆகும் என்றது. அதைக் கேட்ட பலராமரின் கண்கள் சிவந்தன. அவ சூதாடும் சதுரங்கப் பலகையை எடுத்து அதனாலேயே ருக்குமியை அடித்துத் தள்ளி, அதனாலே தந்தவக்கிரனுடைய சிரிப்புடன் வெளிப்பட்ட பற்களையெல்லாம் உதிர்த்துத் தள்ளினார். அங்கிருந்த ஒரு தூணை எடுத்து, மற்ற அரசர்களனைவரையும் அடித்து விரட்டினார். மைத்ரேயரே! இவ்வாறு பலராமர் கோபமாகச் சண்டையிடுவதைக் கண்டு ராஜமண்டபத்திலிருந்த அரசர்கள் ஓடிப்பறந்தனர். இப்படி நடப்பதைப் பார்த்திருந்த ஸ்ரீகிருஷ்ணன் ருக்குமாவதத்தைக் குறித்து மூத்தவரை வெறுத்தால் அவருக்குக் கோபம் வரும் அது நல்லதுதான் என்றாலோ தன் தேவியின் திருவுள்ளம் சீறும் என்றும் நினைத்தும் எதையும் பேசாமல் மவுனமாக இருந்தார். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் விவாகமானதன் பேரனையும் மனைவியையும் மற்ற யாதவரையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றார்.

——————-

29. நரகாசுர வதம்

மைத்ரேயரே! மேலும் கேளும் ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையை அடைந்தபோது மூவுலகங்களுக்கும் அதிபதியான தேவேந்திரன் தன் பட்டத்து யானையான ஐராவதத்தின்மீது ஏறிக்கொண்டு, துவாரகைக்கு வந்தான். அவன் ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி, நரகாசுரனைப் பற்றிச் சொல்லத் துவங்கினான். மதுசூதனா! நீ மானுஷ்ய அவதாரஞ் செய்திருந்தாலும், உன்னால் தேவர்களின் துன்பங்கள் போகின்றன. அரிஷ்டன், தேஜகன், கேசி முதலிய அரக்கர்களை, அழித்துத் தவமுனிவர்களைக் காத்தாய் இதனால் உன் திருத்தோள் வலிமையால் மூன்று லகங்களும் பாதுகாக்கப்படுகின்றன. தேவர்கள், யாகங்களில் தமக்குரியபங்குகளைப் பெறுகின்றனர். நான் எதற்காக உன்னை நாடி வந்தேனோ, அதைக் கேட்டு ஆவன செய்யவேண்டும். சத்துரு நாசகனே! பிராக்ஜோதிஷம் என்ற நகரில் பூமியின் புதல்வனான நரகாசுரன் என்று ஒருவன் சகல பிராணிகளுக்கும் கொடுமை செய்துவருகிறான் தேவர், சித்தர், கந்தர்வர் முதலியவர்களின் கன்னிகைகளையும் அரசர்களின் குமாரிகளையும் வலுவில் அபகரித்துச் சென்று தன்மாளிகையில் சிறை வைத்திருக்கிறான். எப்பொழுதும் மழை பொழிவதான வருணனின் குடையைக் கவர்ந்தான். மந்தர பர்வதத்தின் சிகரத்தைக் கொண்டு போனான். பகவானே! இன்னுங்கேள். என் தாயான அதிதியின் அமுதம் ததும்பும் குண்டலங்களைக் கவர்ந்து விட்டான். இத்துடன் நில்லாமல் எனது ஐராவதத்தையும் கவர்ந்து செல்லப் பார்க்கிறான். இத்தகைய நரகாசுரனின் அநியாயங்களை உன் சன்னதியில் விண்ணப்பித்துவிட்டேன். இனி ஆவன செய்வாயாக! என்றான். அதைக் கேட்ட கிருஷ்ணன், புன்னகை கொண்டு இந்திரனுக்கு விடை கொடுத்து அனுப்பினார். பிறகு கருடனை நினைத்தார். உடனே அந்தப் பெரிய திருவடியின்மேல் தம் தேவியான சத்தியபாமையை ஏற்றுவித்து, தாமும் அமர்ந்து கொண்டு பிராக்ஜோதிஷ புரத்திற்குப் பறந்து சென்றார்.
அங்கு நரகாசுரனின் மந்திரியான முரன் என்பவன், பிராக் ஜோதிஷபுரத்தைச் சுற்றி நூறு காதச் சுற்றளவுக்குச் சிறு கத்திகள் நுனியில் இருக்கப்பெற்ற பாசங்களைப் பரப்பி, யாருமே அதனுள் நுழையாதபடி அமைந்திருந்தான். அதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணன், தம் திருவாழியை பிரயோகித்து அந்தப் பாசங்களையெல்லாம் அறுத்தெறிந்தார். உடனே முரன் என்பவன் அவரை எதிர்த்துச் சேனைகளோடு போருக்கு வந்தான். கண்ணன், அவனையும் அவனுடைய மக்கள் ஏழாயிரம் பேரையும் விளக்கில்படும் பூச்சிகளைப்போல் தம் சுதரிசன சக்கரத்தால் எரித்துவிட்டார். இவ்விதமாக முரன், அயக்கிரீவன், பஞ்சசனன் என்ற மந்திரிகளை நாசஞ்செய்து தலைநகரினுள்ளே பிரவேசித்தார். அங்கே ஏராளமான சேனைகளுடன் எதிர்த்து வந்த நரகாசுரனுக்கும் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் கடுமையான பெரும் போர் நடந்தது. அந்தப் போரிலேதான், மிகவும் கொடிய ஏராளமான அசுரர்களை கண்ணன் சங்கரித்தார். தன்படைகள் ராசி ராசியாக மடிவதைக் கண்ட நரகாசுரன் கண்ணன்பேரில் பலவகை ஆயுதங்களைப் பிரயோகித்தான் கண்ணன், அவற்றையெல்லாம் அழித்து, இறுதியில் சக்கராயுதத்தைப் பிரயோகித்து நரகாசுரனை இரு பிளவாக்கி வீழ்த்தினார். அவன் வீழ்ந்ததும் பூமிதேவி அதிதியின் குண்டலங்களை எடுத்துக்கொண்டு கண்ணன் திருவடிகளை வணங்கி, விண்ணப்பம் செய்யத் துவங்கினாள்.
நாதனே! எப்போது நீ வராஹ அவதாரஞ் செய்து, என்னை உன் கோட்டின் மேல் கொண்டாயோ அப்போதே உன் ஸ்பரிசத்தால் இந்த நரகன் எனக்குப் பிறந்தான். ஆகையால் நீயே எனக்கு இந்த மகனைத் தந்தாய் நீயே அவனை நாசஞ் செய்தாய், இதோ குண்டலங்கள்! இவற்றை ஏற்றுக் கொள். நரகனுடைய சந்ததியை பரிபாலனஞ் செய்தருள்! என் பாரத்தைக் குறைக்கவே நீ இந்த உலகில் அவதரித்து அருள்கின்றாய்! நீயே உற்பத்தி ஸ்தானம். நீயே லய ஸ்தானம் நீ என் புதல்வன் நரகன் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும்! பாவங்களைப் போக்கவே உன் மகனான நரகனை நீயே சங்கரித்தாய். ஆகையால் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை! என்றாள். கண்ணபிரான் அவளைக் கடாட்சித்தார். பிறகு நரகனது மாளிகையின் அந்தப்புரத்திலிருந்த பதினாயிரத்து ஒரு நூறு கன்னியரையும் அவனது வாகன சாலையிலிருந்த ஆறு தந்தங்களைக் கொண்ட ஆறாயிரம் சிறந்த யானைகளையும் இருபத்தோருலக்ஷம் காம்போஜக் குதிரைகளையும், அவனது சேவகரைக் கொண்டே துவாரகையில் சேர்ப்பித்தார். அன்றியும் வருணனுடைய குடையையும் மணி பருவதத்தையும் கண்டு, அவற்றைப் பெரிய திருவடியின் மேல் ஏற்றிக் கொண்டு சத்தியபாமையுடன் தாமும் ஏறி, அதிதியிடம் அமுத குண்டலங்களை ஒப்படைப்பதற்காகவே தேவலோகத்துக்கு எழுந்தருளினார்.

——————

30. பாரிஜாத அபஹரணம்

ஸ்ரீகிருஷ்ணன் தேவலோகத்திற்குச் சென்று சுவர்க்கத்தையடைந்ததும் அதன் வாயிலில் நின்று, தமது திருச்சங்கை ஊதினார். அந்தச் சங்கநாதத்தைக் கேட்டதும் அமரர்கள் அனைவரும் அர்க்கியத்தைக் கையிலேந்தி அவரை வரவேற்று திருவடிதொழுது உபசரித்தனர். பிறகு கருடத்துவஜன் தேவ மாதாவின் திருமாளிகைக்கு விஜயம் செய்தார். இந்திரனுடன் அதிதியைத் தொழுது, நரகாசுரனை வதைத்த தகவலை ஸ்ரீகிருஷ்ணன் சொன்னார். லோக கர்த்தாவான அந்தப் பகவானை இந்திரனின் தாயான அதிதி மிகவும் பக்தியோடு துதித்தாள். தாமரைக்கண்ணா! அடியார்க்கு அபயமளிக்கும் அண்ணலே உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கின்றேன் மனம் புத்தி இந்திரியம் இவற்றுக்குக் கர்த்தாவே! ஞானியரின் இதயத்தில் இருப்பவனே! சீதோஷ்ணாதி உபாதையில்லாதவனே; சொப்பனம் முதலிய அவஸ்தைகளற்றவனே! பரமார்த்தம் தெரியாமல் மோகம் செய்யும் மாயை உன்னுடையது! அதனால்தான் மூடன் ஆன்மாவல்லாததை ஆன்மாவென்று நினைத்துப் பந்திக்கப்படுகிறான். உலகத்தார் உன்னை ஆராதித்து புத்திராதிகளான இஷ்டங்களை வேண்டுகிறார்களேயல்லாமல், தங்களுக்கு நேர்ந்துள்ள சம்சாரத்துக்கு நாசத்தை வேண்டாமல் இருக்கிறார்கள் என்றால் அது உன் மாயையேயாம்! இதற்கு ஓர் உதாரணம் பார் நான் உன்னை என் புத்திரனுக்காகவும் சத்துரு நாசத்துக்காகவுமே ஆராதித்தேனே தவிர மோட்சத்துக்காக அல்ல. இதுவும் உன் மாயைதான்! எதுவும் தரவல்ல கற்பக விருட்சத்திடம் ஒருவன் சென்று, தனக்குக் கோவணம் தரவேண்டுமென பிரார்த்தித்தான் என்றால் அது அவன் குற்றமேயாகும். கற்பக மரத்தின் குற்றமாகாது. நீயே, ஞானம் போன்றுள்ள அஞ்ஞானத்தை அழிக்கவேண்டும். ஓ பகவானே! நான் உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! ஸ்தூலமான உனது ரூபத்தைக்காண்கிறேனேயன்றிச் சூஷ்மமான ரூபத்தைக் காணவில்லையே! ஆகிலும் எனக்காக அனுக்கிரகித்து அருள்செய்ய வேண்டுகிறேன் என்றாள். அதிதியினால் துதிக்கப்பட்ட ஸ்ரீபகவான், அந்த தேவ மாதாவை நோக்கி, புன்னகையுடன் அம்மா! நீ எங்களுக்குத்தாய் ஆகையால் நீ தான் எங்களுக்கு அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்! என்றார். அதைக்கேட்ட அதிதி உன் திருவுள்ளம் அப்படியானால், அப்படியே ஆகட்டும் நானும் வரம் தருகிறேன். நீ பூவுலகிலும் சுரராலும் அசுரராலும் வெல்லக்கூடாதவன் ஆகக்கடவாய்! என்று மங்களாசாசனம் செய்தாள்.
பிறகு சத்தியபாமையும் தேவமாதாவான அதிதியை வணங்கி, அம்மா! நின்னை அனுக்கிரகித்து அருளவேண்டும் என்றாள். ஓ பெருமாட்டியே! உனக்கு மூப்பாகிலும் ரூபமாறுதலாகிலும் உண்டாகாதிருக்கக் கடவன! இந்த இளமையே உனக்கு நிலைத்து, எப்போதும் குற்றமற்றத் திருமேனியையுடையவளாய் இருப்பாயாக! என்று மங்களாசாசனம் செய்து இந்திரனுக்கும் கட்டளையிட அவனும் கண்ணனைப் பூசித்தான். இந்திரன் மனைவியான சசிதேவி சத்தியபாமைக்குப் பலவித உபசாரங்களைச் செய்தாள். ஆயினும் பாரிஜாத மலர்களைத் தான் சூடிக்கொண்டாளேயன்றி சத்தியபாமைக்கு வழங்கவில்லை. ஏனென்றால் அவள் சத்தியபாமையை மானிடப் பெண் என்றும் தேவருக்கே உரிய பாரிஜாதம் அவளுக்குத் தகாதது என்றும் நினைத்து விட்டாள்.
இவ்விதமாகப் பூஜிக்கப்பட்ட பிறகு ஸ்ரீகிருஷ்ணன் சத்தியபாமையுடன் தேவலோகத்து நந்தவனங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்தார். அங்கே பலவகையான மலர்ச் செடி கொடி வகைகள் அழகழகாக வளர்க்கப்பட்டிருந்தன. மேலும் மகா சுகந்தமுள்ள பூங்கொத்துகளாகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதாயும் மாணிக்கம் போல இளந்தளிர்களால் செழித்தும், பொன் போன்ற பட்டாடைகளால் மூடப்பட்டு எப்போதும் ஆனந்தமுண்டாக்குவதாயும், பாற்கடல் கடைந்தபோது அதிலே உண்டானதாயுமிருந்த பாரிஜாத மரத்தைக் கண்டார். அப்போது சத்தியபாமை ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, நாதா! நீங்கள் என்னிடம் அடிக்கடி ஒன்று சொல்வீர்களே அது ஞாபகமிருக்கிறதா? அதாவது நான் தான் உங்களுக்குப் பிரியையானவள், என்று நீங்கள் அடிக்கடிச் சொல்வது மெய்யானால் இந்தப் பாரிஜாதத்தருவைத் துவாரகைக்குக் கொண்டுபோக வேண்டும். ஜாம்பவதியானாலும் ருக்குமணியானாலும் உன்னைப்போல எனக்குப் பிரியமானவர்களல்ல என்று நீங்கள் என்னிடம் அடிக்கடிச் சொல்வதெல்லாம் வெறும் உபசார வார்த்தைகளாகச் சொல்லாமல் உண்மையாகச் சொன்னதாக இருந்தால் இந்தப் பாரிஜாத மரத்தை என் மாளிகையின் புழைக்கடைக்குப் கொண்டுபோய் வைக்க வேண்டும்! நான் இதன் மலர்களைக் கொண்டு, என் கூந்தலை அலங்கரித்து என் சக்களத்திமார் நடுவில் மிகவும் சிறந்திருக்க வேண்டும். இது என் விருப்பம்! என்றாள்.
உடனே ஸ்ரீ கிருஷ்ணன் அந்த மரத்தை அடியோடு பெயர்த்து பெரிய திருவடியான கருடனின் திருத்தோள் மீது வைத்தார். அப்போது அந்த வனத்துக் காவற்காரர்கள் ஓடி வந்து, கிருஷ்ணா! இந்திரனது பட்டத்து ராணியான சசிதேவியின் உரிமையான பாரிஜாதத்தை நீ கொண்டு போகாதது! இது உண்டான போதே யாவரும் இதை தேவராஜனுக்குக் கொடுத்துவிட்டார்கள். அவரோ, தமது காதலியான சசிக்குக் கொடுத்தார். அவளது அலங்காரத்துக்காகவே அமுதங் கடைந்தபோது தேவர்கள் இந்தப் பாரிஜாத மரத்தை உண்டாக்கினார்கள். அத்தகைய மரத்தை நீ கொண்டுபோனால் ÷க்ஷமமாய் உன் ஊர் போய்ச் சேரமாட்டாய். எந்தப் பிரிய நாயகியின் முகத்தைப் பார்த்து தேவராஜன் சகல காரியங்களையும் செய்கிறானோ, அத்தகைய தேவநாயகியான சசிதேவியின் பிரியத்துக்குப் பாத்திரமான இந்தப் பாரிஜாத மரத்தை நீ மூடத்தனமாக விரும்புகிறாய். இதை அறிந்தால் இந்திரன் வஜ்ராயுதத்தால் உன்னையே எதிர்த்துப்போர் செய்வான். அவனையே சகல தேவர்களும் பின்தொடர்வார்கள். நீ இதற்காக தேவர்களனைவரோடும் போரிட வேண்டியிருக்கும். ஆகையால் புத்திசாலிகள் கேட்டை விளைவிக்கும் காரியத்தில் பிரவேசிக்க மாட்டார்கள்! என்றார்கள்.
அதைக்கேட்டதும் சத்தியபாமைக்கு கோபம் பொங்கியது. அவள் அவர்களை நோக்கி, காவற்காரர்களே! இந்த மரத்துக்கு இந்திரன் யார்? சசி யார்? இது அமிர்தம் கடையும் போது கிடைத்தது என்றால், இது எல்லோருக்கும் பொதுவாக அல்லவோ இருக்கவேண்டும்? அப்படியிருக்க இந்திரன் ஒருவனே எப்படிக் கைகொள்ளலாம்? திருப்பாற் கடலில் பிறந்த அமுதம், சந்திரன், காமதேனு முதலியவை எப்படி யாவருக்கும் பொதுவோ அப்படியே இந்தப் பாரி நாதமும் எல்லோருக்கும் பொதுவாக வேண்டுமேயன்றி இந்திரனுக்கு மட்டுமே எப்படி உரிமையாகலாம்? ஆனால் இந்திராணி தன் கணவன் புஜபலத்தைப் பற்றிய கர்வத்தால் இதை எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்று தடுக்கிறாள். நல்லது. இப்போது இதை சத்தியபாமை தான் எடுப்பித்தாள் என்று அவளிடம் போய்ச் சொல்லுங்கள். நீங்கள் சிக்கிரம் சென்று இந்திராணியிடம் நீ உன் புருஷனுக்குப் பிரியமானவளாக இருந்து, அவன் உனக்கு வசப்பட்டவனாக இருந்தால், என்கணவன் இதை எடுத்துக்கொண்டு போவதை நிறுத்திவிடு பார்க்கலாம்! உன் கணவன் இந்திரன் தேவர்களுக்கு அரசன் என்பதை நான் அறிவேன். அறிந்துதான் மனித மங்கையாக இருக்கும் நான் உன்னுடையது என்று சொல்லப்படும். இந்த மரத்தை எடுப்பித்தேன், என்று கண்ணன் மனைவி சத்தியபாமை கர்வத்தோடு சொன்னாள் என்று நான் சொன்னவற்றை, அப்படியே தேவராணிக்குச் சொல்லுங்கள் என்றாள். காவலர்களும் ஓடிச் சென்று அப்படியே இந்திராணி சசிதேவியிடம் சொன்னார்கள். உடனே இந்திராணி தன் கணவனான இந்திரனைத் தூண்டிவிட்டாள்.
மைத்ரேயரே! இவ்விதமாக இந்திராணி இந்திரனைத் தூண்டிவிட்டதும், அவன் பாரிஜாதத்திற்காகச் சகல தேவ சைன்னியங்களுடன் சாக்ஷõத் பகவானோடு போர் செய்ய வந்தான். வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனின் தலைமையில், வானவர்கள் இரும்புத்தடி, கத்தி சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி வந்தனர். இந்திரன் ஐராவதத்தின் மேலேறி வந்தான். அதைக் கண்ட கண்ணன் திசைகள் யாவும் அதிரும்படி, சங்கத்வனி செய்து ஆயிரம் ஆயிரம் பாணங்களை வர்ஷித்தார். தேவேந்திரன் ஸ்ரீகிருஷ்ணன் இரு தரப்பினரிடையில் நெடுநேரம் போர் நிகழலாயிற்று. தேவேந்திரனின் தரப்பில் வருணதேவன் தன் பாசத்தை பிரயோகித்தான். கண்ணன் தரப்பில் கருடன் சிறிய பாம்பைத் துண்டிப்பது போல தனது மூக்கினாலே துண்டித்துவிட்டார். யமன் கால தண்டத்தை எறிந்தான். மதுசூதனன் அதைத் தமது கதாயுதத்தால் கீழே தள்ளினார். குபேரன் சிபிகை என்ற ஆயுதத்தை வீச அதைத் திருவாழியினாலே கண்ணன் பொடியாக்கினார். சூரியனைத் தனது திருக்கண் ஒளியாலே ஒளியற்றவனாக்கி, அக்கினியையும் குளிர்ந்துவிடச் செய்தார். வசுக்களைச் சிதற வடித்தார். உருத்திரர்களைச் சக்ராயுதத்தால் சூலங்களை முறித்துத் தரையில் படுக்கச் செய்தார். கந்தர்வர், வசுவர், முதலியோர் இலவம் பஞ்சு போலப் பறந்தனர். மதுசூதனனும் தேவேந்திரனும் அம்புகளை மழை பொழிவது போல் பொழிந்தனர். அப்போது ஐராவதத்தோடு கருத்துமான் போரிட்டார். போரில் யாவும் ஒழிந்தன. இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தான். கண்ணன் சுதர்சனத்தை கையில் எடுத்தார். இருவரையும் இந்நிலையில் எதிர் எதிராகக் கண்ட சர்வ லோகமும் நடுங்கின. இப்படியிருக்க, இந்திரன் வஜ்ராயுதத்தை எம்பெருமான் மீது பிரயோகித்தான். கண்ணனோ, அதைத் தம் கையால் பிடித்துக்கொண்டு, தம் சக்ராயுதத்தைப் பிரயோகிக்காமல், இந்திரா! நில் என்றார்.
வஜ்ராயுதத்தை இழந்த இந்திரன் ஓடிப்போக முயன்றான். கருடனால் சிதைக்கப்பட்ட ஐராவதம் சோர்வுற்றதால் ஓடவும் முடியாமல் அவன் மேலும் தவித்தான். அப்போது சத்தியபாமை அவனை நோக்கி, இந்திரா! நீ மூவுலகுக்கும் அதிபதி. சசியின் கணவன்! நீ ஓடுவது தகுதியற்ற செயல் உன் மனைவி பாரிஜாத மாலைகளை ஏராளமாக அணிந்து, உன்னைப் பணிவாளல்லவா? வாசவா! உன்னுடைய கர்வியான பத்தினி முன்போல் இனி பாரிஜாத மலரோடு உன்னிடம் அன்போடு பார்க்க முடியாதபோது உன்னுடைய தேவ ஆட்சி எதற்குப் பயன்படும், இந்திரா, நீ வருந்தியது போதும். வெட்கப்படாதே! பாரிஜாதத்தைக் கொண்டுபோ, இதற்காகத் தேவர்கள் வருந்த வேண்டாம். அந்த சசி, தன் கணவன் தேவர்களுக்கே அரசன் என்ற கர்வத்தால், தன் மாளிகைக்கு வந்த என்னை மதிக்கவில்லை. அது பற்றிப் பெண்மையால் ஆழ்ந்திராத சித்தமுடைய நான், என் கணவரின் மகிமையைக் கொண்டாடி, உன்னோடு போர் செய்யச் செய்தேன். பாரிஜாதத்திற்காக நான் என் கணவரைத் தூண்டவில்லை. அதற்காக போருக்குத் தூண்டவும் இல்லை. பிறர் பொருளை நான் அபகரித்தது போதும். பாரி ஜாதத்தை நீயே கொண்டுபோ! புருஷனது பெருமையைப் பற்றிக் கர்வப்படாத பெண்ணே உலகத்தில் இல்லை. ஆனால் சசியோ, அதற்காக மட்டும் கர்விக்கவில்லை. ரூபத்தாலும் மிகவும் கர்வமுடையவளாக இருக்கிறாள்! என்றாள். அதைக்கேட்டதும் இந்திரன் ஓடாமல் நின்று சத்திய பாமையை நோக்கி, கொடியவளே! இஷ்டனுக்குத் துக்கமுண்டாகும்படி ஏன் பேசுகிறாய்? எவன் எல்லாவற்றுக்கும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார கர்த்தாவாக இருக்கிறானோ, அத்தகைய பகவானால் ஜெயிக்கப்பட்ட எனக்கு ஏன் வெட்கம் உண்டாகிறது? சூட்சுமத்துக்கும் சூட்சுமமாய், சகலவற்றிற்கும் பிறப்பிடமாய் இருக்கும் எவனுடைய சொரூபம் சகல வேத சாஸ்திரங்களையும் அறிந்தோருக்கன்றி, மற்றவர்களால் அறியப்படாமல் இருக்கிறதோ, எவன் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே ஈஸ்வரனாய், அஜனாய், நித்தியனாய், தனது திருவுள்ளத்தால் உலக நன்மை கருதி மனுஷ்ய அவதாரஞ் செய்திருக்கிறானோ அந்தப் பகவானை வெல்லும் வல்லவன் யார்? ஆகையால் நான் தோல்வியடைந்தது நியாயம்தான்! என்றான்.

——————-

31. பதினாறாயிரத்து நூறு கன்னியர் விளக்கம்

மைத்திரேயரே! இந்திரன் தோற்றுத் துதித்ததும் கிருஷ்ணபகவான் கருத்து ஆழ்ந்திருக்கும்படிச் சிரித்து, ஓ, லோகேசுவரனே! நீயோ தேவர்களின் அரசன் நானோ மனிதன்! ஆகையால் எங்கள் அபராதத்தை நீயே பொறுக்க வேண்டும். அந்தப்பாரிஜாத விருட்சத்தைத் தகுந்த இடத்திற்குக் கொண்டு போகலாம். இதை நான் சத்தியபாமை வார்த்தையால் எடுத்தேனேயன்றி என் விருப்பத்தாலல்ல. நீ பிரயோகித்த உன் வஜ்ராயுதத்தை நீயே வைத்துக்கொள். இது உனக்குத்தான் சத்துரு சங்காரத்திற்காக ஏற்படுத்தப்பட்டது என்று கூறியருளினார். அதைக் கேட்டதும் இந்திரன், எம்பெருமானே! நான் மனிதன் என்று நீ சொல்லி, ஏன் என்னை மயக்குகிறாய்? உன்னை நான் அறிவேன். ஆயினும் சூஷ்மத்தை அறியேன், ஜகத் ரக்ஷிப்புக்குரியவன் எவனோ, அவனே நீ! ஓ அசுரசங்காரனே! இப்போது உலகத்துக்கு உபத்திரவம் செய்வோர்களைக் களைந்து வருகிறாய். இந்தப் பாரிஜாதத்தை துவாரகைக்கு நீயே கொண்டு போக வேண்டும். நீ பூமியை விட்டுப்போன பிறகு அது அங்கிராது. தேவ தேவா! ஜகந்நாதா! ஸ்ரீ கிருஷ்ணா! ஸ்ரீ விஷ்ணுவே! சங்கு சக்கர கதாபாணியே! அடியேனிடம் கிருபை கூர்ந்து அபராதத்தை மன்னித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். கண்ணனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்து, பூலோகத்திற்குச் சென்று துவாரகைக்கு மேலே நின்று, சங்கநாதம் செய்தார். துவாரகையில் இருக்கிறவர்கள் எல்லாம் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். நகரத்தாரெல்லாம் பார்த்திருக்க, கருடன் மீதிருந்து, சத்தியபாமையோடு ஸ்ரீகிருஷ்ணன் கீழே இறங்கி, அந்தப் பாரிஜாத மரத்தை சத்தியபாமாவின் மாளிகையிலுள்ள புழைக்கடையில் நாட்டியருளினார்.
அந்தப் பாரிஜாத விருட்சத்தின் மகிமையைச் சொல்கிறேன் கேளுங்கள். அதன் அருகே சென்ற மனிதனுக்குத் தன் பூர்வ ஜனன ஸ்மரணை உண்டாகும். அதன் மலர்களுடைய சுகந்தம் மூன்று காதமளவு வீசிக்கொண்டிருக்கும். அத்தகைய விருட்சத்தின் அருகே சென்று யாதவர்கள் அதைப் பார்த்துத் தங்களுடைய தேகங்களைத் தேவதேகங்களாகக் கண்டார்கள். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் பிராக்ஜோதிஷ நகரிலிருந்து கொண்டுவந்த யானை, குதிரை முதலான பொருட்களைச் சுற்றத்தாருக்குத் தக்கபடி பிரித்துக் கொடுத்தார். பிறகு நரகாசுரன் பல திசைகளிலிருந்தும் கொண்டு வந்து சிறைப்படுத்தியிருந்த கன்னியரையெல்லாம் நல்லதொரு நாளிலே நன் முகூர்த்தத்தில் திருமணம் புரிந்து கொள்ளத் திருவுள்ளம் கொண்டார். அந்தப் பதினாறாயிரத்து ஒரு நூறு மங்கையருக்கும் ஒரே நேரத்தில் தனித்தனியாய் ஒவ்வொருவராயிருக்கும்படி அத்தனை ஆயிரம் திருமேனி எடுத்து அங்கங்கே விதிப்படித் திருமணஞ் செய்து கொண்டார். அம்மங்கையரில் ஒவ்வொருத்தியும் தன் தன் கைகளைப் பிடித்திருப்பது கிருஷ்ணமூர்த்தியென்றே நினைத்திருந்தார்கள். இவ்வாறு திருக்கல்யாண மகோத்சவத்தில் மட்டுமின்றி, இதுபோல் பல ரூபங்கொண்டு, ஒவ்வொரு இரவிலும் அந்தந்த பாக்கியவதிகளின் மாளிகைகளில் தோன்றி, அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.

——————-

32. உஷையின் கனவும் காதலும்

மைத்ரேயரே! ருக்குமணிப் பிராட்டிக்கு பிரத்தியும்னன் முதலிய குமாரர்கள் பிறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா? மற்றவர்களுக்குச் சொல்கிறேன், கேட்பீராக, சத்தியபாமைக்குப் பானு, பவுமன், இரிகன் முதலிய குமாரர்கள் அவதரித்தார்கள்- தீப்திமான், தாம்பிரபக்ஷன் முதலியவர் ரோகிணியின் பிள்ளைகள். சாம்பன் முதலியோர் ஜாம்பவதியின் பிள்ளைகள். பத்திரவிந்தாதிகள் நாக்னஜிதியின் பிள்ளைகள். சயிப்பியை என்பவளுக்கு சங்கிராமஜித்து முதலியோர் பிறந்தார்கள். விருகன் முதலியவர்கள் மந்திரியிடம் உதித்தவர்கள். காத்திரவான் முதலியோர் லஷ்மணையின் புதல்வர்கள். சுரதன் முதலியோர் காளிந்தியின் மக்கள். மற்ற தேவிமாரிடத்தில் பலர் பிறந்தனர். இவ்வாறு பல தேவிமார் மூலம் ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறந்த குமாரர்கள் எண்பதினாயிரத்து நூற்றுவராகும். இவர்கள் யாவருக்கும் எல்லா வகையிலும் மூத்தவன் பிரத்தியும்னன்! அவன் குமாரன் அநிருத்தன். அவன் குமாரன் வஜ்ரன் அநிரு தன் என்பவன் பலிச்சக்கர வர்த்தியின் பேர்த்தியும் பாணனுடைய மகளுமான உஷை என்பவளைத் திருமணஞ் செய்து கொண்டான். அதன் காரணமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கும் சங்கரனுக்கும் கொடிய யுத்தம் உண்டாயிற்று. அதில் ஸ்ரீ கிருஷ்ணன் பாணாசுரனின் ஆயிரம் தோள்களையும் துண்டித்து விட்டார்! இவ்வாறு பராசர மகரிஷி கூறிவரும்போது மைத்ரேயர் குறுக்கிட்டு அவரை நோக்கி, மாமுனிவரே! உஷையின் காரணமாக ஹரிஹரர்களுக்கு எப்படிப்போர் உண்டாயிற்று? ஸ்ரீ ஹரி, எப்படிப் பாணனுடைய தோள்களைத் துண்டித்தார்? இவற்றை எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பராசர முனிவர் சொன்னதாவது :
கேளும் மைத்ரேயரே! பாணன் என்னும் அசுரனுக்கு உஷை என்னும் ஒரு புதல்வி இருந்தாள். ஒரு சமயம் சிவனோடு கூடி மகிழ்ந்து கொண்டிருந்த பார்வதியை உஷை பார்த்துவிட்டு, அதுபோலத் தானும் கூடிமகிழவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளது கருத்தை அறிந்த பார்வதி அவளைப் பார்த்து, பெண்ணே! நீ ஏன் இப்படித் தவிக்கிறாய்? உன் புருஷனுடன் கூடி நீயும் இப்படிக் கிரீடிப்பாய்! என்றாள். அதைக் கேட்ட உஷை, இந்தச்சுகம் எனக்கு எப்பொழுது கிட்டுமோ? என் புருஷன்தான் எவனோ? என்றாள். அதற்குப் பார்வதி, ஓ ராஜகுமாரி! வைகாசி மாதச் சுக்கில பக்ஷத் துவாதசியில், உன் கனவில் எவன் உன்னோடு ரமிப்பானோ, அவனே உனக்குக் கணவனாவான்! என்று கூறியருளினாள்.
பிறகு பார்வதி சொன்னதுபோல அந்த நாளில் ஒரு புருஷனோடு உடலுறவு கொண்டதாக உஷை கனவு கண்டு அவனிடத்திலேயே ஆசை மிகுந்தவளாய்க் கண்விழித்தாள். அந்த புருஷனைக் காணாமல் என் பிராண நாயகா! நீ எங்கே போனாய்? என்று நாணமின்றி விரகதாபத்தோடு புலம்பினாள். அதை அவளுடைய தோழியான சித்திரலேகை கேட்டு விட்டாள். உஷையின் தந்தையான பாணாசுரனுக்கு மந்திரியாக விளங்கும் பாண்டனின் மகள்தான் சித்திரலேகை. உஷையின் தோழியாக இருந்த அவள், உஷையிடம் நீ யாரைப்பற்றி இப்படிப் புலம்புகிறாய்? என்று கேட்டாள். உஷையோ வெட்கத்தால் அவளிடம் ஒன்றும் பேசாமல் இருந்தாள். சித்திரலேகை தன்மீது நம்பிக்கை ஏற்படும்படி உஷையை சமாதானம் செய்தாள். பிறகு உஷை, தான் கனவுகண்ட கனவு நிகழ்ச்சிகளையும் பூர்வத்தில் தன்னிடம் பார்வதி தேவி சொன்னதையும் சொல்லி, அடி தோழி! இவ்விதமான புருஷனை நான் அடைவதற்கு எது உபாயமோ, அதை நீயே செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு சித்திரலேகை, அடி என்னுயிரே! நீ சொன்ன சங்கதி அறிவதற்கே கஷ்டமானது. சொல்லவும் அடையவும் இயலாதது. ஆனாலும் நான் உனக்கு உபகாரம் செய்ய வேண்டும். ஆகவே நான் முயற்சி செய்கிறேன். நீ ஏழெட்டு நாட்கள் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லி, ஓர் உபாயம் செய்ய யோசித்தாள். அதன்படிச் செய்யலானாள்.
அதாவது தேவர்கள், கந்தர்வர், அசுரர், மனிதர் முதலியவர்களில் முக்கியமாயுள்ள வாலிபர்களின் உருவங்களையெல்லாம் ஓவியமாக சித்திரலேகை வரைந்து அந்த ஓவியங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக உஷையிடம் காண்பித்தாள். அவற்றை அவள் காண்பித்து இவர்களில் உன் காதலன் யார் என்று கேட்டாள். உஷையோ ஓவியத்தில் இருந்த தேவ, தானவ, கந்தர்வர்கள் அனைவரையும் விட்டுவிட்டு, மனிதர் வரிசையில் பார்த்தாள். அதில் யாதவர்களில் கண் வைத்தாள். கண் வைத்து ஸ்ரீராமகிருஷ்ணர்களைக் கண்டு வெட்கப்பட்டவளாகிப் பிரத்தியும்னனைக் கண்டு நாணிக் கண்ணை அப்புறம் போக்கி, கடைசியில் அநிருத்தனைக் கண்டு நாணந் துறந்து இவன்தான் என் கனவில் வந்தவன்! என்னைக் கனவிலே கலந்து மகிழ்ச்சி தந்தவன்! அந்தக் கனவு நாயகன் இவனேதான் என்றாள். அதைக்கேட்டதும் சித்திரலேகை மகிழ்ந்தாள். அவள் தனது யோகவித்யா பலத்தால் வானத்திற் செல்லக்கூடிய வல்லமையுடையவள். ஆகையால் அவள், உஷையை நோக்கி, ஸ்திரீ ரத்தினமே இவன் ஸ்ரீகிருஷ்ணனுடைய பேரன் இவன் பெயர் அநிருத்தன். அழகும் வீரமும் கொண்ட புகழ் பெற்றவன். இவனையல்லவா பராசக்தி உனக்குப் பர்த்தாவாக அணுகிரகித்தாள்? நீ இவனைப் பெறுவாயானால் எல்லாச் செல்வங்களையும் நீயே பெற்றதுபோல் வாழலாம். இவன் வாசஞ்செய்யும் துவாரகையோ யாரும் பிரவேசிக்க முடியாதது. ஆயினும் என்னால் இயன்றவரை முயன்று பார்க்கிறேன். உன் கனவு நாயகனை இங்கே கொண்டு வருகிறேன். இந்த ரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லிவிடாதே! நான் விரைவில் வந்துவிடுகிறேன் என்று உஷைக்குச் சமாதானம் சொல்லிவிட்டு சித்திரலேகை விண்வெளி வழியாகத் துவாரகைக்குச் சென்றாள்.

——————–

33. உஷையின் காதல் உறவும் பாணாசுரப் போராட்டமும்

உஷையின் தந்தையான பாணாசுரன் முன்பொரு சமயம் சிவபெருமானைத் தொழுது சுவாமி! எனக்கு ஆயிரங்கைகள் இருப்பதால் எனக்கு வெறுப்பே உண்டாகிறது. அவைகளுக்குத் தக்க யுத்தம் உண்டானால் அல்லவோ பயன்? இல்லாமற்போனால் வீண் சுமையான இந்தக் கைகளால் எனக்கு ஆகவேண்டுவது என்ன? ஆகையால் இக்கைகள் எனக்குப் பயன்படும்படியான ஏதாவது யுத்தம் வருமா? என்று கேட்டான். அதற்குச் சிவபெருமான், அட பாணா! மயில் அடையாளமுள்ள உன் வீரக் கொடியானது எப்போது முறிந்து விழுகிறதோ, அப்போது பேய்கள் முதலானவை மகிழும்படியான மாபெரும் யுத்தம் ஒன்று மூளும்! என்றார். அவரை பாணன் தொழுதுவிட்டு, தன் அரண்மனைக்குச் சென்றான். சிறிது காலம் கழித்து, ஒருநாள் அவனது கொடிமரம் முறிந்ததைக் கண்டு அவன் மிகவும் மகிழ்ந்திருந்தான்.
அந்தச் சமயத்தில் உஷையின் தோழியான சித்திரலேகை, தனது யோக வித்தைச் சிறப்பினால் துவாரகை சென்று, அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து, உஷையின் அந்தப்புரத்தில் சேர்த்தாள். அநிருத்தனான அந்தக் கனவு நாயகன் தன் கைக்குக் கிடைத்ததும் உஷை மிகவும் காதல் வேகங்கொண்டு அவனோடு தான் விரும்பிய போகங்களையெல்லாம் அனுபவித்து வந்தாள். இந்தச் செய்தியை அங்கிருந்த காவலாளர்கள் அறிந்து, பாணாசுரனிடம் சென்று, அரசே! கன்னிமாடத்திலே யாரோ ஓர் அரச குமாரன் எப்படியோ பிரவேசித்து, நம்முடைய கன்னியோடு சுகித்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள். அதைக் கேட்டதும் பாணாசுரன் மிகவும் கோபமடைந்து கிங்கர சைன்னியத்தைக் கொண்டு அநிருத்தனை எதிர்த்தான். அநிருத்தனோ அங்கிருந்த வாசலின் உழல் தடியைக்கொண்டு, பாணாசுரனின் சேனா வீரர்களை நாசஞ் செய்தான். அவர்கள் அனைவரும் அநிருத்தனோடு போரிட்டு யாதவ வீரனால் ஜயிக்கப்பட்டான். அதனால் ஏங்கிய பாணனிடம் அவன் அமைச்சன், மாயையைக் கொண்டு போர் செய்யும்படி ஆலோசனை வழங்கினான். பாணாசுரனும் அப்படியே மாயையினால் போர் செய்து அநிருத்தனை நாகாஸ்திரத்தால் கட்டிப் போட்டான்.
இந்நிலைமையில், துவாரகையில் அநிருத்தனைக் காணாமல் யாதவர்கள் யாவரும் அவன் எங்கே போயிருப்பான் என்று யோசித்தார்கள். பாரிஜாத மரம் காரணமாகப் பகைகொண்ட தேவர்களே அவனை அபகரித்துச் சென்றனரோ என்று எல்லோரும் எண்ணியிருந்தார்கள். அப்பொழுது நாரத முனிவர் துவாரகை சென்று, சித்திரலேகை என்பவள் தனது யோக சக்தியினால் அநிருத்தனை பாணாசுரனின் நகரத்துக்குக் கொண்டுபோய் உஷையிடம் சேர்த்தது முதல், அநிருத்தனை பாணாசுரன் நாகாஸ்திரத்தில் கட்டிப் போட்டிருப்பது வரையிலுள்ள செய்திகளையெல்லாம் யாதவர்களிடம் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்டதும் யாதவர்கள் தேவர்கள்மீது தாம் கொண்ட சந்தேகம் நீங்கினார்கள். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் தம் பெரிய திருவடியான கருடனை நினைத்தார். உடனே வந்து நின்ற கருடனின் தோள்மீது ஸ்ரீ கிருஷ்ணன் ஏறிக் கொண்டு, பலராமர் பிரத்தியும்னர் முதலானவர்களுடன் சோணிதபுரத்திற்குச் சென்றார். அங்கு காவல் புரிந்து வந்த சிவனுடைய பிரதம கணங்கள் சிவபக்தனான பாணாசுரனுக்காக ஸ்ரீகிருஷ்ணன் முதலானவர்களை எதிர்த்தன. அவர்களையெல்லாம் துவம்சம் செய்து ஸ்ரீகிருஷ்ண பகவான், பாணபுரத்திற்கு வந்தார். அங்கு சிவனால் ஏவப்பட்ட ஒரு ஜ்வரம் மூன்று பாதங்களும் மூன்று தலைகளும் கொண்டதாய் பாணனுக்காக சாரங்கபாணியுடன் போர் செய்தது. அந்த ஜ்வரம் மூன்று சாம்பலையே ஆயுதமாகப் பிரயோகிக்கவே, அதுபட்டு பலராமர் கண்களை மூடிக்கொண்டு, ஸ்ரீகிருஷ்ணனைக் கட்டிக் கொண்டு ஆறுதல் அடைந்தார். அப்போது ஸ்ரீமந் நாராயணனும் ஒரு புதிய ஜ்வரத்தை உண்டாக்கினார். அதன் சக்தியால் சிவனின் சைவ ஜ்வரமானது, உடனே ஸ்வாமியின் தேகத்திலிருந்து ஓடிப்போய் நடுங்கியது. அப்பொழுது பிருமதேவன் பொறுத்தருளவேண்டும் என்று பிரார்த்திக்க கண்ணனும் அப்படியே ஆகட்டும் என்று கூறித் தம்முடைய வைஷ்ணவ ஜ்வரத்தைத் தன்னுள்ளே லயப்படுத்திக் கொண்டார். பிறகு சைவஜ்வரம் எம்பெருமானே, அடியேனுக்கு தேவரீரோடு நேர்ந்த யுத்தத்தை நினைக்கும் மனிதருக்கு ஜ்வரத்தினாலுண்டான துன்பம் ஏற்படாமலிருக்கக் கடவது! என்று சொல்லிவிட்டுப் போயிற்று.
பிறகு ஸ்ரீகிருஷ்ணர் அக்கினித் தேவர் ஐவரையும் நாசஞ் செய்து, அவர்களுடன் வந்த அசுர சேனைகளையும் விளையாட்டாகவே சூரணமாக்கினார். இவ்விதமாகத் தன் படைகள் நாசமாவதைக் கண்ட பாணாசுரன் தன் சேனைகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு போர் செய்ய வந்தான். அவனுக்குப் பக்கபலமாகச் சிவனும் சுப்பிரமணியர் முதலானவர்களும் வந்தார்கள். இவ்வாறு ஹரிஹரர்களுக்குள் மிகக் கொடிய யுத்தம் உண்டாயிற்று. அஸ்திர சஸ்திர ஜ்வாலையினால் உலகம் கலங்கியது. பிரளயமே வந்ததாகத் தேவர்கள் கருதினர். இவ்விதமாகப் பெரும்போர் நடக்கும்போது, ஸ்ரீகிருஷ்ணன் சிரும் பணாஸ்திரத்தைச் சிவன்மீது பிரயோகம் செய்யவே, ஒன்றுமே செய்யாமல் சிவன் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்ந்து போகும்படிச் செய்தார். அதனால் தைத்தியரும் பிரதம கணங்களும் நாசமடைந்தனர். சிவன் சக்தியற்றதால் தேர்த் தட்டிலேயே சோம்பலாக இருந்தார். இதனால் சிவ குமாரனான முருகனுக்கும் ஸ்ரீகிருஷ்ணனான முகுந்தனுக்கும் போர் நிகழ்ந்தது. ஸ்ரீகிருஷ்ணன் ஓர் ஹுங்காரம் செய்தார். உடனே அது முருகனின் வேலாயுதம் அடித்துச் சென்றது. பக்ஷிராஜனான கருடன் முருகனின் வாகனமான மயிலையடித்து வீழ்த்தினார். அப்போது பிரத்தியும்னன் அம்புகளைப் பிரயோகித்ததால், முருகன் சமர்க்களத்திலிருந்து ஓடிப்போனான். பலராமர் வீசிய ஆயுதங்களால் பாணாசுரனின் படைகள் நிலைகுலைந்து ஓடின. பாணாசுரன், கிருஷ்ணனோடு கடும்போர் புரியலானான். கிருஷ்ணனது கவசத்தை பிளக்கத்தக்க கொடிய அம்புகளைப் பாணன் பிரயோகித்தான். அவன் செலுத்திய அம்புகளாலேயே தடுத்த ஸ்ரீகிருஷ்ணன், பாணனைச் சங்கரிக்க எண்ணி, அநேக ஆயிரம் சூரிய சக்திமிக்க தம் சுதரிசனச் சக்கரத்தை எடுத்துப் பிரயோகித்தார். அப்படி அவர் பிரயோகிக்கும்போது, கோடரீ என்ற அசுரவித்தியா ரூபமான தேவதை திகம்பரியாக ஸ்ரீகிருஷ்ணனின் எதிரில் வந்து நின்றாள். அவ்விதம் அவள் நிர்வாணமாக நின்றதால் கண்ணன் தம் கண்களை மூடிக்கொண்டு, பாணாசுரனின் கரங்களைச் சேதிக்கும்படித் திருவாழியைப் பிரயோகித்தார். அந்தச் சக்கரம், பாணாசுரனின் வலிமை மிகுந்த ஆயுதங்களைச் சேதப்படுத்திவிட்டு, வன்மையுள்ள அவனுடைய ஆயிரம் தோள்களையும் முறையே சிதைத்து விட்டுச் சுவாமியின் திருக்கைக்குத் திரும்பி வந்து சேர்ந்தது. ஸ்ரீகிருஷ்ணன் மீண்டும் தமது திருவாழியை பாணாசுரனைச் சங்கரிப்பதற்காகச் செலுத்த நினைப்பதையும் பாணாசுரன் கைகளற்று தாரை தாரையாக இரத்தம் ஒழுகத் துடித்து நிற்பதையுங் கண்ட பரமசிவனார் கண்ணனிடம் வந்து விண்ணப்பஞ் செய்யலானார்.
ஸ்ரீகிருஷ்ணா! நீயே பரமேசுவரனும் பரமாத்மாவும் ஆதியந்தமில்லாதவனும், புரு÷ஷாத்தமனுமான ஸ்ரீஹரி என்பதை அறிவேன். திரியக்குகளில் ஒரு திருமேனியை எடுத்து வருவதெல்லாம் உனக்கு ஓர் திருவிளையாடல். ஆகையால் நீ மனிதனல்ல. அண்டினவரை ஆதரிப்பவனே! இந்த பாணாசுரனுக்கு நான் அபயம் அளித்திருக்கிறேன். அதை நீ பொய்யாக்காமல் இருக்க வேண்டுகிறேன். நான் பக்கபலமாக இருக்கிறேன் என்ற கர்வத்தால் அவன் இப்படிச் செய்தானேயன்றி உன் திறத்தின் விரோதத்தால் அபராதஞ் செய்தவனல்ல ஆகையால், அவன் குறையை என் பொருட்டு மன்னிக்க வேண்டுகிறேன் என்றார். இவ்விதம் சூலபாணியாக நின்ற உமாபதியை நோக்கி, ஸ்ரீகிருஷ்ணன், ஓ சங்கரனே! நீ வரங் கொடுத்திருப்பதால் இந்த அரக்கன் பிழைத்திருக்கட்டும் உன் வார்த்தைக்கு மதிப்பளித்து நானும் என் சக்கரத்தைப் பிரயோகிக்காமல் இப்போதே நிறுத்திவிடுகிறேன். நீ அபயங்கொடுத்தது, நான் அபயம் கொடுத்தது போலேயாம். நீ உன்னை என்னோடு இணைந்தவனாக நினை. நீ என் ஸ்வரூபம் தேவாசுர மனுஷ்யாதி ரூபமான பிரபஞ்சம் என் ஸ்வரூபம். என்னையன்றி ஒன்றுமில்லை. இந்த உண்மையை நீ அறிந்து கொள். உலகத்தார் மாயையால் இந்தப் பிரபஞ்சத்தை என் ஸ்வரூபம் அல்லாததாக நினைத்து உன்னை என் ஸ்வரூபமின்றி வேறுபட்டவனாக நினைக்கிறார்கள். நந்திக் கொடியோனே! உன் விஷயத்தில் நான் அனுக்கிரகமுடையவனானேன். நான் துவாரகை செல்கிறேன். நீயும் உன்னிடம் செல்வாயாக! என்று சொல்லிவிட்டு ஸ்ரீகிருஷ்ணன் தம் பேரன் அநிருத்தன் கட்டப்பட்டுக் கிடக்கும் இடத்திற்கு விரைந்தார். அங்கு அநிருத்தனைக் கட்டியிருந்த சர்ப்ப பாசங்கள் எல்லாம் கருடனின் காற்றுப் பட்டதுமே நசித்தன. பிறகு ருக்குமணி வல்லபன், அநிருத்தனையும் அவன் பத்தினி உஷையையும் பெரிய திருவடியின் தோள் மேலேற்றி, பிரத்தியும்னனுடன் துவாரகைக்கு எழுந்தருளினார். மைத்ரேயரே! இவ்விதமாக எம்பெருமான் பூபாரம் தீர்க்கத் துவாரகையில் தம் தேவியரோடும் புத்திர பவுத்திரர்களுடனும் வாழ்ந்து கொண்டிருந்தார்.

————————

34. காசி தகனம்

பராசர மகரிஷியை நோக்கி, மைத்ரேய முனிவர், குருநாதா! ஸ்ரீவிஷ்ணு மனுஷ்ய அவதாரஞ்செய்து பெருமைக்குரிய செயல்களைச் செய்தருளினார். இந்திரனையும் ருத்திரனையும் வென்றார். இவ்விதமாகத் தேவர்களின் அக்கிரமச் செயல்களைத் தடுக்க கண்ணபிரான் செய்த இதர செயல்களையும் எனக்கு கூறவேண்டும் என்று கேட்டார். பராசரர் கூறலானார். பிரம்ம ரிஷியே ! பரமாத்மா இந்த மனுஷ்யாவதாரத்தில் காசி நகரத்தை எரித்த கதையைச் சொல்கிறேன், கேளும்.
புண்டரக தேசாதிபதியைச் சில அஞ்ஞானிகள், நீ சாக்ஷõத் ஸ்ரீவாசுதேவ அவதாரம் என்று சொன்னதைக் கேட்டு, அந்த மூட அரசன் இவர்கள் சொல்வது மெய்தான் நான் வாசுதேவன் தான்! என்று தன்னைப் பிரஜைகள் அப்படியே வழங்கச் செய்தான். அவன் மேலும் ஸ்ரீவிஷ்ணுவின் சின்னங்களான சங்கு சக்கராதி ஆயுதங்களையும் வனமாலை முதலியவற்றையும் அணிந்து கொண்டு, கண்ணபிரானிடம் ஒரு மூடனை அனுப்பி, அவன்மூலம், அட மூடக் கிருஷ்ணா! நீ வாசுதேவன் அல்ல; நானே வாசுதேவன். ஆகையால் இன்று முதல் என் அடையாளங்களான சங்கு சக்கரங்களை விட்டுவிட்டு, உன் பெயரையும் விட்டுவிடு. இத்தனை நாள் நீ இவ்விதமாக இருந்த அபாரத்திற்காக நான் உன்னைக் கொல்ல வேண்டும். அப்படிச் செய்யாமல் உன் உயிரை நீ காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் என்னைச் சரணடைவாயாக! என்று சொல்வித்தான். அதைக்கேட்ட கண்ணன் புன்சிரிப்பு பூத்து, தூதா! உன் அரசனான பவுண்டரகனிடம் சென்று அவனது அபிப்பிராயத்தை நான் அறிந்தேன் என்று சொல். அவன் செய்ய வேண்டுவது எதுவோ அதைச் செய்யலாம் என்றும், நான் அவன் சொன்னதைத் தடையின்றி செய்கிறேன் என்றும், எல்லாச் சின்னங்களையும் தரித்து, காசி நகரத்துக்கு வந்து இந்த சக்கிரத்தை அவனிடமே விட்டுவிடுகிறேன் என்றும், அவன் கட்டளைப்படி நாளையே அவன் சரணத்துக்கு வருகிறேன் என்றும், அவ்வாறு நான் வந்து எனக்கு இனிமேல் எப்படிப் பயமில்லாமல் இருக்குமோ அப்படியே செய்துகொள்கிறேன் என்றும் சந்தேகம் வேண்டாம் என்றும் சொல் என்று சிலேடையாகச் சொல்லியனுப்பினார். தூதன் சென்றான். பிறகு கண்ணபிரான் பெரிய திருவடியின் மேலேறி பவுண்டரக வாசுதேவனின் பட்டணத்திற்குச் சென்றார்.
இதையறிந்த காசி மன்னன் பெரும் படையோடு போருக்கு வந்தான். அவனது நகரை நெருங்குமுன்பே கருட த்வஜமுடைய பெரிய தேரில் இருந்த வண்ணம் கைகளில் சங்கம், சக்கரம், சாரங்கம், தண்டம் முதலிய ஆயுதங்களையும் பீதாம்பர வனமாலைகளையும், கிரீட குண்டலாதி ஆபரணங்களையும் அணிந்து, மார்பிலே ஸ்ரீ வச்சம் போன்றதொரு மறுவை ஏற்படுத்திக்கொண்டு யுத்த சன்னதமாக வரும் காசி மன்னனான பவுண்டரகனை ஸ்ரீ கிருஷ்ணன் கண்டு சிரித்தார். அவனோடு போர் புரிந்து, அவனையும் அவனது சேனைகளையும் நாசமாக்கினார். படைகளும் ஆயுதங்களும் பாழாகி நிற்கும் பவுண்டரகனை கண்ணன் நோக்கி, ஓ பவுண்டரக மன்னனே! நீ தூது மூலமாக உன் சின்னங்களை விட்டுவிடு என்று எனக்குக் கட்டளையிட்டது போலவே, சக்கரத்தையும் கதையையும் உன்னிடமே எறிந்தேன். அவைகளுக்கு நீ பாத்திரமாகலாம் இந்தக் கருடனையும் அனுப்பிவிடுகிறேன். இவனை உன் துவஜத்தில் ஏற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி சக்கரம் முதலியவற்றை ஏவினார். கண்ணனின் திருக்கையிலிருந்து புறப்பட்டுச் சக்கரம், அந்தப் பொய் வாசுதேவனை அறுத்தது. கதை முறிந்தது. காசி மன்னன் கீழே விழுந்தான். அவனுடைய கொடியும் பெரிய திருவடியினால் முறிக்கப்பட்டு, அவனுடனேயே விழுந்தது. அப்போது காசி ராஜனின் நண்பன், தன் சாரங்கத்தோடு போர் செய்தான். கண்ணன் தன் சாரங்கத்தை வளைத்து அம்பு மாரிப் பொழிந்து காசி ராஜனின் சிரசையறுத்து, அந்தத் தலையை காசி நகரின் நடுத்தெருவில் விழும்படி எறிந்தார்.
அரசனின் தலை விழுந்ததைக் கண்ட ஐனங்கள் கலங்கினர் அரசன் மகன், இது ஸ்ரீ வாசுதேவன் செய்த காரியம் என்று தெரிந்து, கோபமும் சோகமுமாக அந்த மகா ÷க்ஷத்திரத்தில் தன் புரோகிதனுடன் சேர்ந்து சிவனை யாகாதிகளாலே ஆராதித்தான். அவற்றால் மகிழ்ந்த சிவன் அவனை நோக்கி, இஷ்டமான வரத்தைக் கேள் என்று சொல்ல, அரச குமாரன் சுவாமி! என் தகப்பனைச் சங்கரித்த கிருஷ்ணனை வதை செய்ய ஒரு கிருத்தியை சிருஷ்டித்துத் தரவேண்டும் என்று வேண்டினான். உடனே தக்ஷிணாக்கினியிலிருந்து அவனுக்கே நாசஹேதுவான ஒரு கிருத்தியை உண்டாயிற்று. அக்னி ஜ்வாலைகளினால் சூழப்பட்ட பயங்கர முகத்துடன் அந்தக் கிருத்தியை, மிகவும் கோபமாகக் கிருஷ்ணா, கிருஷ்ணா! என்று கூவிக்கொண்டே துவாரகைக்கு ஓடியது. அதைக்கண்டு பயந்த ஜனங்கள் கண்ணனைச் சரண் புகுந்தனர். அப்போது கண்ணபிரான் தம் தேவியரோடு சூதாடிக் கொண்டிருந்தார். உடனே அவர் தம் கையில் இருந்த பாசிகையை உருட்டி, அக்கினிச் சுவாலைகளாகிய ஜடாபாரமுடைய சிரசுடன் மகா உக்கிரமாய் வரும் அந்தக் கிருத்தியையை அழித்துவிடு என்று திருவாழியாழ்வானுக்கு நியமித்தார். உடனே சக்கரத்தாழ்வான் அந்தக் கிருத்தியைப் பின் தொடர்ந்து ஓட்டினார். அது காசிக்கே சென்றது. மைத்ரேயரே, இவ்விதமாக அந்தக் கிருத்தியையானது திரும்ப ஓடி வந்ததைக் கண்ட காசிராஜ குமாரன், சிவனாரின் பிரதம கணப் படைகளுடன் சேர்ந்து, தன் சைன்யங்களுடன் சக்கரத்தாழ்வானை எதிர்த்தான். சக்கரம் எதிரிகளின் ஆயுதங்களையெல்லாம் அழித்து, அந்தக் கிருத்தியையும் அரசனையும் கொன்று யானை, குதிரை முதலியவை நிறைந்த காசி நகரத்தையே எரித்துவிட்டது. இப்படியாகக் காசி நகரத்தை தகனம் செய்து சாம்பலாக்கியும் சுதரிசனாழ்வாரின் சீற்றம் தணியாமல், மேலும் ஆசிருத விரோதி நிரசன ரூப கைங்கரியத்தில் விருப்பமுடையவராய், கண்ணனின் திருக்கையை வந்தடைந்தது.

——————

35. பலராமர் சாம்பனை மீட்ட கதை

குருநாதரே! மகானுபாவரான பலராமன் பராக்கிரமங்களை இன்னும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். என்றார் மைத்ரேயர். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! அனந்தனாயும் தரிணிதரனாயும் உள்ள ஆதிசேஷனின் அவதாரமான ஸ்ரீ பலராமர் செய்தருளிய காரியங்களைச் சொல்கிறேன்; கேளும். அஸ்தினாபுரியிலே துரியோதனனின் குமாரிக்கு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தச் சுயம்வரத்திலே நின்ற அந்தக் கன்னிகையை ஜாம்பவதியின் மகனும் கிருஷ்ண குமாரனுமான சாம்பன் என்பவன் பலாத்காரமாகத் தூக்கிச் சென்று விட்டான். உடனே மகா பராக்கிரமசாலிகளான கர்ணன், துரியோதனன், முதலியோர் சாம்பனுடன் போர் செய்தனர். முடிவில் சாம்பன் தோற்றுவிட்டான். உடனே, அந்த சாம்பனைத் துரியோதனனின் போர்வீரர்கள் பிடித்துக் கட்டி, சிறையிலடைத்துக் காவலில் வைத்தனர். இந்தச் செய்தி கிருஷ்ணனுக்கு எட்டியது. யாதவர்கள் யாவரும் ஸ்ரீ கிருஷ்ணருடன் சேர்ந்து துரியோதனனுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லத் தயாரானார்கள். அப்போது பலராமரான பலபத்திரர் அவர்களைத் தடுத்து, உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்! நான் போய்ச் சொன்னாலே, என் பேச்சைக் கவுரவர்கள் தட்டாமல், சாம்பனை விடுதலை செய்வார்கள். ஆகையால் நான் ஒருவனே போய் வருகிறேன் என்று சொல்லி; ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார். நேராகத் தலைநகரம் செல்லாமல் வழியிலிருந்த ஒரு தோட்டத்தில் தங்கியிருந்தார். அவர் வந்திருப்பதை யறிந்த துரியோதனாதியர், அந்தத் தோட்டத்துக்கு அர்க்கியம், பாத்தியம், மதுவர்க்கம் முதலியவற்றுடன் சென்று அவரைப் பூஜித்தார்கள்.
அவற்றைத் திருவுள்ளம் பற்றிய பலபத்திரர், கவுரவரைப் பார்த்து நமது உக்கிரசேன மன்னர் ஒரு கட்டளையிட்டிருக்கிறார் அதனால்தான் நான் இங்கு வந்தேன். அதாவது சாம்பனை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்றார். அதைக் கேட்டதும் பீஷ்மர் முதலானவர்களும், கர்ண துரி யோதனாதியரும் மனங் கலங்கி மிகவும் கோபங்கொண்டு பலராமரை நோக்கி ஓய்! உலக்கை வீரரே! ஆட்சிக்குத் தகாதது யது வமிசம் என்று தெரிந்தும் நீர் எப்படி இப்படிப் பேசினீர்? குருவமிசத்தாருக்கு எந்த யாதவன் கட்டளை இடுவான்? உக்கிரசேனன் கவுரவருக்குக் கட்டளையிடுகிறான் என்றால், எங்களுக்கு ராஜயோக்கியமான சத்திர சாமரங்கள் எதற்கு? அவையெல்லாம் எங்களுடைய சார்பினாலுண்டானவையல்லவா? அவைதானே இவ்வளவு பேச ஏதுவாயின? இனி நீ போனாலும் சரி; இருந்தாலும் சரி, துஷ்ட காரியஞ் செய்த சாம்பனை நாங்கள் விடுதலை செய்யமாட்டோம்! இதனால் வணங்குதற்குப் பாத்திரமான எங்களுக்கு யாதவர் வணக்கஞ் செய்யாமல் இருக்கட்டும்! வேலையாள் எஜமானனுக்கு கட்டளையிடுவதா? இது கர்வத்தின் செயல்! உங்களுக்கு அந்தக் கர்வம், உங்களை எங்களுடன் உட்கார வைத்துச் சாப்பிடுதல் முதலான காரியங்களால் வந்தது. ஆகையால் உங்கள் மேல் குற்றமில்லை. பலபத்திரா! உனக்கு நாங்கள் உபசாரஞ் செய்தது அன்பினாலேயன்றி மரியாதையால் அன்று! என்று கூறிவிட்டு துரியோதனாதி கவுரவர்கள் அனைவரும் சாம்பனை விடக்கூடாது என்ற ஒரே கட்டுப்பாடாகச் சரேலென்று அஸ்தினாபுரத்திற்குச் சென்று விட்டார்கள்.
இவ்விதமாகக் குருகுலத்தார் இழிவாகப் பேசியதாலும் மதுபான மதத்தாலும் கலங்கிக் கரையில்லாத கோபங்கொண்ட பலராமர் எழுந்து நின்று பக்கத்தில் இருந்த தரையை ஓரிடி இடித்தார். உடனே, அந்தத் தரை நான்கு, பக்கமும் அதிரும்படி பிளந்தது. அவர் கண் சிவக்க, புருவம் நெறிந்து நெற்றியிலேறக் கூவினார்: ஓஹோ! பலவீனராயும் துராத்மாக்களுமாகிய இந்தக் கவுரவருக்குத்தான் எவ்வளவு கர்வம்? யாதவர்களான எங்களுக்கு ஆட்சியுரிமை இயல்பாய் வராமல் காலபலத்தால் வந்தது என்றல்லவா அந்தக் கவுரவர் ஏளனம் சொல்கிறார்கள்? இதனால் அல்லவா உக்கிரசேனரின் கட்டளையை அவமதிக்கிறார்கள்? எப்படியிருந்தாலும் சுதர்மை என்ற சபா மண்டபத்தில் உட்கார்ந்திருப்பது யார்! நமது உக்கிரசேனர் தானே? ஆகையால் அவருக்குச் சமானமான அரசர்கள் யார் இருக்கிறார்கள்? பல மனிதர்கள் அனுபவித்துக் கழித்த ராஜ பதவியைத் தானே அக்கவுரவர்கள் பெரிதாய் மதிக்கிறார்கள்? அவர்களை ஒடுக்க எங்கள் மன்னன் உக்கிரசேனன் ஏன்? இப்போதே நான் இந்தக் கவுரவப் பூண்டேயில்லாமல் செய்கிறேன்! இப்போதே கர்ணன் துரியோதனன், துரோணன், பீஷ்மன், பாஹலிகன், பூரி, பூரிச்சிரவன், சோமதத்தன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரின் சதுரங்க சேனைகளையும் நாசஞ் செய்து, வீரனான சாம்பனை மீட்டு, அவன் விரும்பிய மனைவியோடு துவாரகை சென்று, உக்கிர சேனாதிகளைக் காண்பேன். இந்த வருத்தம் கூட நமக்கு ஏன்? இந்தக் கவுரவர் வாசஞ் செய்யும் இந்த நகரத்தையே கங்கையில் கவிழ்த்து விடுவோம்! என்று சினந்து குமுறினார். மதத்தால் கண் சிவக்கத் தமது உழுப்படைக் கீழே அமைந்திருக்கும் ஆயுதத்தை எடுத்து கவுரவர்களின் கோட்டை மதில் மேல் கட்டியிருக்கும் அவகங்கத்தில் மாட்டி இழுத்தார். அவர் அவ்வாறு இழுக்கவே, அந்தப் பட்டணம் முழுவதும் அசைந்து நடுங்கியது. அதைக்கண்டு துரியோதனன் முதலான கவுரவர்கள் அனைவரும் மனங்கலங்கிப் பலராமரிடம் ஓடி வந்து, ஸ்ரீபலராமரே! பலபராக்கிரமம் உடையவரே; பொறுத்தருள்க! கோபத்தையடக்கி எங்களுக்காக இரக்கம் காட்டும்! இதோ உங்கள் சாம்பனை, அவனது பத்தினியுடன் அழைத்து வந்து உம்மிடம் ஒப்படைத்துவிட்டோம். உமது பிரபாவம் அறியாமல் அபசாரஞ் செய்த எங்களைப் பொறுத்தருள்க என்று முறையிட்டார்கள் பலராமரும் பொறுத்தேன்; பயம் வேண்டாம்! என்று அபயம் தந்து, கலப்பையை அலகங்கத்திலிருந்து வாங்கியருளினார்.
மைத்ரேயரே! அதனால்தான் அஸ்தினாபுரம் இன்றும் கொஞ்சம் சாய்ந்து காணப்படுகிறது. இது ஸ்ரீ பலராமரின் பிரபாவம்! பிறகு கவுரவர்கள் சாம்பனை அலங்கரித்து மருமகனுக்குரிய மரியாதைகளையெல்லாம் செய்து சீதனங்களோடு, தங்கள் பெண்ணையும் அவனோடு கூட்டி பலராமர் பின்னே அனுப்பி வைத்தார்கள்.

————————-

36. குரங்கனைக் கொன்ற கதை

மித்திரா புத்திரரே! மேலும் கேளும். பலராமரின் மற்றொரு மகிமையைச் சொல்கிறேன். நரகாசுரன் என்று ஒரு தேவசத்துரு இருந்தானல்லவா? அவனுக்குத் துவிதன் என்று ஒரு நண்பன் இருந்தான். அவன் ஒரு வானர சிரேஷ்டன். பல பராக்கிரமங்களில் சிறந்தவன். அவன் இந்திரன் ஏவியதால் தனது சிநேகிதனைக் கிருஷ்ணன் கொன்றான் என்று கருதி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்யக்கடவேன் என்று நினைத்தான். அஞ்ஞான மோகத்தால் யக்ஞங்களை அழிப்பதும் பிராணிகளையழித்து, காடுகள், நகரங்கள், கிராமங்கள் முதலியவற்றைத் தீக்கிரையாக்குவதும், மலைகளைத் தூக்கிப்போட்டு ஊர்களை நொறுக்குவதுமாக அந்த துஷ்டன் துவிதன் திரிந்துகொண்டிருந்தான். அவன் சாமரூபியாகையால் பெரியதொரு ரூபமெடுத்து பயிர்களில் விழுந்து புரண்டு, பயிர்களைப் பாழாக்குவதும் அவன் வழக்கம்! இதனால் உலகம் வேதாத்தியயனம், யாகம் முதலிய வைதீகச் சடங்குகள் இல்லாமல் மிகவும் துயரமுற்று இருந்தது. அக்காலத்தில் ஒருநாள் பலராமர் தம் மனைவியான ரேவதியோடும் மற்றும் சில தேவிமாரோடும் ரைவதம் என்ற மலையிலுள்ள வனத்தில் சென்று மத்திய பானஞ் செய்து, மங்கையர் மத்தியில் ஆட்டமும் பாட்டுமாய் உல்லாசமாக இருந்தார்.
அப்போது வானர வீரனான துவிதன் வந்தான். அவன் பலராமரது கலப்பை உலக்கைகளை எடுத்துக்கொண்டு, அவர் எதிரில் நின்று பற்களை இளிப்பதும், புருவம் நெறிப்பதும் உர்உர் என்று பரிகாசஞ் செய்வதுமாக இருந்தான். மேலும் அவன் பலராமரின் தேவிமாருக்கு எதிரே நின்று நகைப்பதும் குதிப்பதும், மதுபானப் பாத்திரங்களைக் கவிழ்ப்பதும் எறிவதுமாகப் பல வானரச் சேஷ்டைகளைச் செய்துகொண்டிருந்தான். பலராமர், அவனை ஓட்டினார். வெருட்டினார். அவன் அதை மதியாமல் மறுபடியும் கிறீச் கிறீச் சென்று கூவிக்கொண்டு துஷ்டச் செயல்களையே செய்து கொண்டிருந்தான். அதனால் பலராமர் புன்னகை செய்தபடியே உலக்கையை எடுத்து, அந்த வானரத்தின் மேல் எறிந்தார். உடனே அவன் ஒரு மலைக்கல்லை எடுத்து அவர்மேல் எறிந்தான். அவர் அந்தப் பெரிய கல்லைத் தமது உலக்கையால் பல துண்டுகளாக்கினார். அதனால் கோபங்கொண்ட அந்த வானர முரடன் உலக்கையைத் தாண்டி எழும்பி, தன் கையால் அவர் மார்பில் அறைந்தான். உடனே பலராமர் மிகவும் கோபங்கொண்டு தம் முஷ்டியினால் குரங்கின் தலையில் இடித்தார். அந்த இடியால், துவிதன் உதிரங்கக்கிக் கொண்டு உயிர்துறந்து வீழ்ந்தான். மைத்ரேயரே! இன்னும் ஓர் ஆச்சரியத்தைக் கேளும். அந்தக் குரங்கன் வீழ்ந்த போது அவனுடைய உடல் பூமியில் பட்டவுடன் மலையின் கொடு முடியொன்று, இந்திரனது வஜ்ராயுதத்தால் பிளக்கப்பட்டது போல், பல பிளவுகளாய்ப் பிளந்து வீழ்ந்தது. தேவர்கள் பூ மழை பொழிந்தனர். பிறகு தேவர்கள் பல ராமரிடம் வந்து ஓ மகாவீரனே! நீர் ஒரு நற்காரியத்தைச் செய்தருளினீர்! அந்தத்தீய குரங்கன், அசுரர் சார்பில் உபகாரமும், தேவர்களுக்கு அபகாரமும் செய்து வந்ததால் உலகம் துன்புற்றது. இப்போது அவன் உம்மால் நாசமடைந்தான் என்று துதித்து, தங்கள் தேவலோகத்திற்கு மீண்டனர். இவ்விதமாக, ஞானவானாகவும் பூமியைத் தாங்கக்கூடிய ஆதிசேஷனுடைய திருவவதாரமாகவும் விளங்கும் ஸ்ரீ பலபத்திரரான பலராமரின் திவ்வியச் சரித்திரங்கள் பலவுள்ளன.

——————

37. பகவான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளல்

மைத்திரேயரே! இவ்விதமாகக் கண்ணபிரான், பலராமருடன், உலக ரக்ஷணார்த்தமாய், அசுரர்களையும் துஷ்ட அரசர்களையும் வதைத்தருளினான். மேலும் துஷ்ட துரியோதனாதிகளால் சூதாட்டத்தில் மோசஞ் செய்யப்பட்டு, இராஜ்யம் முதலானவற்றைப் பறிகொடுத்தப் பாண்டவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணனே தூதனாகி, கவுரவர்களின் சபைக்கு எழுந்தருளினார். அங்கு சமாதானத் தூது நிறைவேறாமல் சண்டை மூளவே, அந்த மகாபாரதப் போரில், அர்ச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணனே சாரதியாக இருந்து, அநேக அரசர்களையும் அவர்களது அநேக அ÷க்ஷõகினி சேனைகளையும் அழித்து, பூமி பாரத்தை இறக்கினார். இவ்விதமாகச் சர்வேஸ்வரன் யாதவக் குலத்தில் அவதரித்து, துஷ்ட நிக்ரக, சிஷ்ட பரிபாலனங்களிலே உலகத்தை ரட்சித்து அருளினார். முனிவர் சாபம் என்ற வியாஜத்தால் தாம் அவதாரம் செய்த குலத்தையும் அழித்தார். பிறகு அவர் துவாரகையையும் மனுஷ்ய பாவனையையும் விட்டுத் தம் அம்சமான சங்கர்ஷணாதிகளோடு, தமது ஸ்தானமான பரமபதத்துக்குச் சென்றார். இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் குறுக்கிட்டு அவரை நோக்கி, மாமுனிவரே! அந்த ஸ்ரீபகவான், முனிவர் சாப வியாஜத்தால் தமது குலத்தையே எப்படி அழித்தார்? எப்படித் தம்முடைய மனுஷ்யத் திருமேனியை விட்டுச் சென்றார். இவற்றை எனக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். பராசரர் கூறலானார்.
மைத்ரேயரே! ஒரு சமயம் யாதவ குமாரர்கள் பிண்டாரசம் என்னும் தீர்த்தத்தில் விசுவாமித்திரர் கண்வர் நாரதர் என்னும் மாமுனிவர்களைக் கண்டார்கள். தமது யவுவனாதிகளால் யாதவ குமாரர்கள் கர்வங் கொண்டிருந்ததாலும், பின்னால் அவர்கள் விதி நடக்க வேண்டியிருந்ததாலும், புத்தி கெட்டு, ஜாம்பவதியின் பிள்ளையான சாம்பனைப் பெண்போல அலங்காரம் செய்து, அம்மாமுனிவர்களிடம் அழைத்துச் சென்று, சுவாமிகளே! இந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள். இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா என்று சொல்லுங்கள் என்று பரிகாசமாகக் கேட்டார்கள். முக்காலமும் உணர்ந்த மாமுனிவர்கள், அவர்களின் வேடிக்கையைக் கண்டு கோபங்கொண்டு, இவள் ஆண் பிள்ளையும் பெறமாட்டாள், பெண் பிள்ளையையும் பெறமாட்டாள். உங்கள் யாதவ குலத்தையே நாசஞ் செய்யும் ஓர் இரும்பு உலக்கையைப் பெறுவாள் என்று கூறினார்கள். இந்தச் செய்தியை யாதவர்கள் உக்கிரசேனரிடம் அறிவித்தார்கள். உடனே, சாம்பனின் வயிற்றிலிருந்து ஓர் இரும்பு உலக்கை உண்டாயிற்று. அதைக் கண்ட உக்கிரசேன மன்னன், அதைப் பொடியாக்கி கடலிற் கொட்டிவிடும்படிக் கட்டளையிட்டான். அவர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால் அந்த உலக்கைப் பொடிகளோ, கடற்கரையில் கோரைகளாக முளைத்தன. அராவிய இரும்புலக்கையின் மிச்சத் துண்டு ஒன்று அம்பின் முள்ளைப்போல இருந்தது. அதையும் யாதவர்கள் கடலில் எறிந்தார்கள். அதை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீனை, மீனவர் பிடித்து அறுத்தனர். அதன்வயிற்றில் இருந்த அந்த இரும்பு முள்ளை ஒரு வேடன் எடுத்துத் தன் அம்பில் வைத்துக்கொண்டான். இவற்றை யெல்லாம் ஸ்ரீகிருஷ்ணபகவான் அறிந்திருந்தும், தமது சங்கற்பச் சித்தமான அதை மாற்றத் திருவுள்ளம் கொள்ளவில்லை. இப்படிப்பட்டச் சமயத்தில் தேவர்களால் அனுப்பப்பட்ட வாயுதேவன் ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டு, தண்டம் சமர்ப்பித்து, விண்ணப்பஞ் செய்யலானான்.
பகவானே! அடியேன் தேவர்களால் தூதுவனாக அனுப்பப் பட்டேன். வசுக்கள், மருத்துக்கள், அசுவிகள், ஆதித்தியர், ருத்திரர், சாத்தியர் முதலானவர்களுடன் தேவேந்திரன் தங்கள் சன்னதியில் விண்ணப்பஞ் செய்வதைத் திருச்செவிச் சாய்த்து கேட்க வேண்டும். அடியேங்களுடைய பிரார்த்தனையால், பூமிபாரம் தீர்ப்பதற்காகத் தேவரீர் பூமியில் அவதரித்து, தேவர்களுடன் நூறு திருநட்சத்திரங்களுக்குமேல் இங்கு எழுந்தருளியிருந்தீர்கள். மிகக் கொடிய அசுரர்களையெல்லாம் சங்கரித்து, பூபாரம் தீர்த்தீர். இனி தேவரீரை அடியேங்கள் சுவர்க்கத்திலே தினமும் சேவித்திருக்கக் கிருபை செய்யவேண்டும். தமது விருப்பம் போலவே செய்யலாம் ! என்றான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணபகவான், தேவ தூதனே! நீ சொன்னது யாவும் எனக்குத் தெரியும். என் குலத்தினரானயாதவர்களையும் நாசஞ்செய்ய ஆரம்பித்து விட்டேன். இந்த யாதவரும் மடியாமற் போனால் பூபாரம் நீங்காது. ஆகையால் ஏழு இரவுகளுக்குள் இதை முடித்துவிடுவேன். இந்தத் துவாரகைக்கான இடத்தை முன்பு சமுத்திர ராஜனிடம் அல்லவா பெற்றேன்? மீண்டும் இதைச் சமுத்திர ராஜனிடமே கொடுத்துவிட்டு யாதவர்களையும் முடித்துவிட்டு, உங்களிடம் வருவேன். இந்த மனித தேகத்தைவிட்டு, சங்கர்ஷணனோடுகூட யான் வந்துவிடுவேன் என்று இந்திரனிடம் சொல்! இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்த ஜராச்சந்தன் முதலாக யார் யார் மடிந்தார்களோ, அவர்களால் ஒரு யாதவச் சிசுக்கூட மடியவில்லை. அதுவே இந்த மண்ணுக்குப் பெரும் பாரமாகிவிட்டது. ஆகவே இவர்களையெல்லாம் மடித்துப் பிறகு உங்கள் உலகைக் காக்க நான் வருவேன் என்று இந்திராதியருக்கு அறிவிப்பாயாக! என்றார் அதனால் அவரை வாயுதேவன் வணங்கிவிட்டு, தேவர் செல்லும் வழியில் தேவருலகம் சென்றடைந்தான்.
பிறகு கண்ணபிரான் இரவும் பகலும் நாசக் குறிகளாகிய திவியம், பவுமம் அந்தரிக்ஷம் என்ற மூவகை உத்பாதங்கள் உண்டாவதைக் கண்டார். அவர் யாதவர்களை நோக்கி, பார்த்தீர்களா? இங்கே மிகவும் கொடிய உற்பாதங்கள் உண்டாகின்றன. இவற்றின் தோஷம் சாந்தமாகும் பொருட்டு, சீக்கிரமாகப் பிரபாச தீர்த்தத்துக்குப் போவோம் என்றார். அப்போது, யாதவர்களில் சிறந்த பரம பாகவதரான உத்கலர் சுவாமிக்குத் தண்டம் சமர்ப்பித்து, எம்பெருமானே! இந்த யாதவ குலத்தை முடிக்க நீங்கள் திருவுள்ளம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அடியேன் செய்ய வேண்டுவது என்னவோ, அதனை நியமிக்க வேண்டுகிறேன். இந்த உற்பாதக் குறிகள், யாதவ குலம் நாசமடையப் போவதையே குறிக்கின்றன என்று நினைக்கிறேன் என்றார். அவரை கண்ணபிரான் புன்சிரிப்புத்தவழ உற்று நோக்கி, உத்கலரே ! நீர் தேவாதமார்க்கத்தில் செல்லத் தக்கச் சக்தியை நாம் பிரசாதிக்கிறோம், அதனால் நீங்கள் கந்தமாதனப் பருவதத்திலுள்ள பதரிகாசிரமத்தை அடைவீராக. இந்தப் பூவுலகில் நரநாராயண ஸ்தானமான அதுதான் மிகவும் பரிசுத்த ÷க்ஷத்திரமாகும். அங்கே நீர் நம்மீது சித்தம் நிலைநாட்டிச் சிந்தித்து, நமது கிருபையினால் மோக்ஷப் பிராப்தியை அடைவீர். நாமோ நமது வமிசத்தை உபசங்கரித்து உத்தம ஸ்தானம் செல்ல நிச்சயித்திருக்கிறோம். நாம் நீங்கியவுடன் துவாரகையைச் சமுத்திரம் மூழ்கடித்துவிடும். ஆனால் நம்மிடமுள்ள பயத்தால், நம்முடையத் திருமாளிகை மட்டும் மூழ்த்தப்படமாட்டாது. நாமோ, அடியாருக்கு இதஞ்செய்ய வேண்டி, அந்த மாளிகையில் சான்னித்தியமாக இருப்போம்! என்று சொல்லி, அவருக்குத் தத்துவ ஞானத்தையும் ஆராதனாதி முறைகளையும் உபதேசித்தார். அவற்றைக் கேட்டுக்கொண்டு உத்கலர் பதரிகாசிரமம் சென்றார். யாதவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணருடன் தமது தேர்களில் ஏறிக்கொண்டு, பிரபாசத் தீர்த்தத்துக்குப் போனார்கள். அங்கு போனதும் யாதவர்கள் விசேஷமாக மதுபானஞ்செய்தார்கள். அதனால் வெளியேறியது. அந்த வெறியால் அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் எதிர்த்தனர் கலகம் விளைந்தது. இவ்வாறு பராசர மகரிஷி சொல்லி வரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு, முனிவரே! தத்தமக்குள்ள அன்னபானங்களை அருந்திய அவர்களுக்குள்ளே கலகம் எப்படி மூண்டது? என்று கேட்டார். பராசரர் கூறலானார்.
கேளும் சொல்கிறேன். என்னுடைய அன்னம் நன்றாக இருக்கிறது என்று ஒருவன் சொல்ல, அதை மறுத்து மற்றொருவன் சொல்ல இப்படியே யாவரும் சொல்ல, ஒருவரையொருவர் சாதிக்க வேண்டும் என்ற நினைப்புத் தோன்றிக் கலகமும் உண்டாயிற்று. அந்தக் கலகம் ஆயுதப் போராகவும் மாறியது. தெய்வச் சங்கற்பமும் சூழ்ந்தது. எனவே ஒருவர்மீது மற்றொருவர் ஆயுதப் பிரயோகம் செய்யலாயினர். அந்தப் பெருஞ் சண்டையில் ஆயுதங்கள் அனைத்தும் அழிந்ததால், அருகாமையில் கடற்கரையில் முளைத்திருந்த கோரைகளைப் பிடுங்கிக்கொண்டனர். அவை வஜ்ராயுதத்தைப் போல இருந்ததால், அவற்றைக்கொண்டு ஒருவரையொருவர் அடித்தனர். இவ்வாறு அடித்துக் கொண்டிருந்த பிரத்தியும்னன் சாம்பன் முதலியவர்களையும் கிருதவர்மா, சாத்தியகி அநிருத்தன் முதலியவர்களையும் கண்ணன் தடுக்கப்போக அவர்கள் கண்ணனையும் தங்கள் தங்கள் எதிரிகளுக்குச் சகாயம் செய்பவராக எண்ணிக் கொண்டு அவரையும் அடிக்க வந்தார்கள். எனவே, கண்ணனும் ஒருபிடிக் கோரையைப் பிடுங்கிக்கொண்டு, இரும்பு உலக்கை போன்ற அதனாலேயே யாதவரையெல்லாம் சங்கரித்தருளினார். மற்றுமுள்ளோரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மடிந்தார்கள். பிறகு வெற்றி பொருந்திய கண்ணனது திருத்தேரானது, சாரதியான தாருகன் என்பவன் பார்த்துக் கொண்டேயிருக்கத் தானாகவேச் சமுத்திரத்தின் நடுவே குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. அதுபோலவே, சங்கு, சக்கரம், கட்கம், கதை, சார்ங்கம் என்ற பஞ்சாயுதங்களும் கண்ணனை வலம் வந்துச் சூர்யமார்க்கமாகப் போய்விட்டன. அப்போது அந்த இடத்தில் கண்ணனும் தாருகனும் தவிர, யாதவர்களில் ஒருவன்கூட அடிபட்டு விழாமல் இருக்கவில்லை. இவ்விதம் யாதவர்கள் அனைவரும் மடிந்தவுடன், சுவாமி ஸ்ரீகிருஷ்ணனும் தாருகனும் அங்கே சிறிது உலாவிக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு மரத்தடியில் பலராமர் எழுந்தருளியிருந்தார். அப்பொழுது அவரதுத் திருமுகத்திலிருந்து ஒரு சர்ப்பம் ஜொலித்துக் கொண்டுப் புறப்படுவதைக் கண்டார்கள். அந்த மகா நாகம் சமுத்திரத்தில் எழுந்தருளி, அங்கே சித்தர்களும் நாகர்களும் துதிக்க, சமுத்திரராஜன் அர்க்கியம் எடுத்து வரவேற்று ஆராதிக்க சமுத்திர நீரினுள்ளே புகுந்துவிட்டது.
அப்போது ஸ்ரீகிருஷ்ணபகவான் தமது சாரதியான தாருகனைப் பார்த்து தாருகா! நீ நமது தலைநகரம் சென்று, யாதவர்கள் அனைவரும் மாண்டத்தையும் பலதேவர் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளியதையும் வசுதேவர் உக்கிரசேனர் முதலியவர்களிடத்தில் சொல்வாயாக, நானும் யோக நிஷ்டையில் இந்த உடலைவிடப் போகிறேன். துவாரகையைச் சமுத்திரம் மூழ்கடிக்கப் போகிறது. இதை ஆகுகனுக்கும் நகரத்திலுள்ளவருக்கும் அறிவித்து விடவேண்டும். நீங்கள் அனைவரும் அர்ச்சுனனுடைய வரவை எதிர்பார்த்து அவன் வந்ததும் அவனுடன் போகவேண்டும் யாரும் துவாரகையில் இருக்கவேண்டாம் என்று சொல்! துவாரகையில் இப்படிச் சொல்லி விட்டு நீ அஸ்தினாபுரம் செல் அங்கே அர்ச்சுனனைக் கண்டு நான் சொன்னதாக அவனை சீக்கிரம் துவாரகைக்கு வந்து எனது குடும்பத்தினரை கூடுமானவரை காப்பாற்ற வேண்டும் என்று, சொல்லி அர்ச்சுனனுடன் நீயும்கூட இருந்து துவாரகையில் இருப்பவர்களையெல்லாம் அப்புறம் அலட்சியம் செய்து போவதை நாம் சகித்திருப்பதா? பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்திரதன் முதலியவர்களைச் சங்கரித்திருக்கிறோம் என்ற கர்வத்தோடு இந்த அர்ச்சுனன் இருக்கிறான். இவன் இந்தக் கிராமத்திலிருக்கும் நம்முடைய பலத்தை அறியமாட்டான். தடியுங் கையுமாக இருப்பதைக் கண்டு நம்மால் என்ன செய்ய முடியும் என்று அவன் நினைத்துவிட்டான் போலும்! என்று திருடர்கள் யோசித்து தடிகளையும் ஓட்டாஞ் சில்லுகளையும் ஆயுதமாகக் கொண்டு, எல்லோருமாகச் சேர்ந்து அர்ச்சுனன் கொண்டு வந்த பெண்களைப் பிடிக்க வந்தார்கள். அதைக் கண்ட அர்ச்சுனன் அவர்களை அலட்சியமாய் நோக்கி, ஓ துஷ்டர்களே! நீங்கள் பிழைத்திருக்க நினைத்தால் உடனே ஓடிப்போய்விடுங்கள் என்று சொன்னான். ஆனால் அவர்கள் அவனை லக்ஷ்யம் செய்யாமல் அங்கிருந்த பொருள்களையும் பெண்களையும் கவர்ந்து சென்றார்கள். பிறகு, அர்ச்சுனன் அந்தப் போரிலே திவ்வியமாயும் அழியாததாயுமுள்ள காண்டீபம் என்ற தனது வில்லை வளைத்து நாண்பூட்ட முயன்றான். அந்த முயற்சி பயனளிக்கவில்லை. அம்பைப் பூட்டுவதற்கே அவனுக்குத் திறனில்லை வருந்திப் பூட்டியும் அந்த நாண் திடமாயிராமல் தளர்ந்து போயிற்று. அது மட்டுமல்ல. அர்ஜுனன் தன் அஸ்திரங்களைப் பிரயோகிக்க முயன்றபோது அவற்றில் ஒன்றும் அவன் நினைப்புக்கு வரவில்லை இதனால் அர்ச்சுனன் மிகவும் கோபங்கொண்டு, பகைவர்மேல் அம்புகளை எய்தான். அந்த அம்புகளோ பகைவர் உடலில் பட்டு, மேல் தோலைப் பெயர்த்தனவேயன்றி மற்றொன்றும் செய்யவில்லை இப்படிப்பட்ட சமயத்தில் முன்பு அக்னி பகவான் கொடுத்திருந்த அக்ஷய தூணிரங்களில் அம்புகளும் ஒழிந்து போயின. இவ்விதமாக சகலவித இடையூறுகளும் சம்பவித்தன. அப்போது அர்ச்சுனன், முன்பு என் அம்புகளால் அநேக அரக்கர்களைச் சங்கரித்தேனே! அது ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய பலமேயல்லாது என்று பலமன்று! என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திருடர்களெல்லாம் கண்ணபிரான் பரிக்கிரகித்திருந்த அநேகம் மங்கையரை இழுத்துக்கொண்டு சென்றார்கள். மற்றும் அநேக மங்கையர்கள் அர்ச்சுனனுக்கு திறமையில்லை என்பதை அறிந்து கொண்டு, தாங்களாகவே அங்கங்கே ஓடிப்போனார்கள்.
கேட்டீரோ, மைத்ரேயரே! பிறகு அர்ச்சுனன் அம்புகளும் இல்லாமற் போகவே, வேறு ஆயுதம் ஒன்றும் இல்லாததால் அந்த வில்லையே தடிபோலக் கொண்டு அதன் நுனியாலேயே திருடர்களை அடிக்க முயன்றான். ஆனால் அடிகள் லேசாக விழுந்ததால் பகைவர்கள் சிரித்துக் கேலி செய்தார்கள். எப்படி முயன்றும், தன்னால் காப்பாற்ற முடியாமற் போனதால், தன் கண் எதிரிலேயே உத்தமரான அந்த யாதவ மங்கையரைத் திருடர்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட பார்த்தன், அளவற்ற துக்கங்கொண்டு, ஓஹோ! இதென்ன கஷ்டம்! ஸ்ரீகிருஷ்ண பகவான் என் சக்தியையும் கொண்டு போய் விட்டாரே! இனி நான் என் செய்வேன்? மகத்தான வில்லும் ஆயுதங்களும் ரதமும் குதிரைகளும் வேதந் தெரியாதவனுக்குக் கொடுத்த தானத்தைப் போல வீணாயினவே! தெய்வமே வலியது! அந்த மகாத்மா இல்லாமையினாலே என்னுடைய எல்லாவகை ஆற்றலும் வீணானது மட்டுமன்றி சாமார்த்தியமற்றவர்கள்கூட என்னை வெற்றி பெறலாயிற்றே? முன்பு வெற்றிகள் பல கண்ட என் கைகளே இப்போதும் இருக்கின்றன! இடமும் அதுவே. நானும் அந்த அர்ச்சுனனே! புண்ணிய சொரூபியான கண்ணன் இல்லாமையினாலே எல்லாமே அசாரமாய்ப் போய் விட்டன. நான் அர்ச்சுனனாக இருந்ததும் பீமன் பீமனாக இருந்ததும் அந்த மகானுபாவனுடைய மகிமை! அவனில்லாததால்தானே மகாரத சிரேஷ்டனான நான் இவர்களிடம் தோற்றேன் என்று சொல்லி அழுதுகொண்டே இந்திரப்பிரஸ்தம் சென்று, அங்கே வஜ்ரனை யாதவரின் அரசனாக நியமித்தான். பிறகு அர்ச்சுனன் அங்கிருந்து அஸ்தினாபுரம் போகும் போது, வழியில் ஒரு காட்டில் ஸ்ரீவேத வியாச மகா முனிவரைக் கண்டான். அம்முனிவரின் திருவடிகளை அவன்தொழுது நின்றான். அப்போது வியாச முனிவர் அர்ச்சுனனை நோக்கிக் கூறலானார்.
அர்ச்சுனா நீ ஏன் இப்போது ஒளியற்றவனாக இருக்கிறாய்? ஆடு கழுதை முதலியவைகளின் கால் தூசிகளைப் பின்தொடர்ந்தனையோ? பிரம்மஹத்தி செய்தாயோ? உறுதியான ஓராசை கெடத் துன்பம் உற்றனையோ? ஓ பார்த்தனே! சந்தானத்துக்காக கல்யாணஞ் செய்து கொள்ள முயன்றவன் முதலானவர்கள் என்னை யாசிக்க நீ அவர்களை அலக்ஷ்யம் செய்தாயோ? புணரக்கூடாத மங்கையரோடு புணர்ந்தனையோ? நல்ல அன்னத்தைப் பிராமணனுக்குக் கொடாமல் நீ ஒருவனே புசித்து விட்டாயோ? வறுமையாளரின் பொருள்களை அபகரித்தாயோ? முறத்தின் காற்றுப்பட நின்றாயோ? கொள்ளிக் கண்ணரால் பார்க்கப்பட்டாயோ? நகம்பட்ட தண்ணீரை ஸ்பரிசித்தனையோ தண்ணீர் குடம் கொண்டு போகும்போது, அதிலிருந்த தண்ணீர் தெளித்து உன்மீது விழப்பெற்றனையோ? போரில் தாழ்ந்தவர்களால் வெல்லப்பட்டாயோ? நீ சாயை இழக்கக் காரணம் என்ன? என்று வியாசர் கேட்டார்.
அர்ச்சுனன் பெருமூச்செறிந்து, சுவாமி அடியேனது கதியைக் கேட்டருள வேண்டும். அடியேனுக்குப் பலம், தேஜஸ், வீரியம், பராக்கிரமம் சம்பத்து, காந்தி இவையெல்லாம் யாராக இருந்தாரோ அந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் அடியேங்களை விட்டு மறைந்துபோய் விட்டார்! எவர் ஒப்பற்ற மகானாக இருந்தும் சாதாரணரைப் போல நம்மைக் கண்டு சிரித்து பேசிக்கொண்டிருந்தாரோ, அந்தப் பகவான் எம்மைத் துறந்ததாலே நாங்கள் எல்லாம் வைக்கோலால் செய்யப்பட்ட மனிதப் பதுமைகளானோம், அம்புகளுக்கும் ஆயுதங்களுக்கும் காண்டீவம் என்ற தனுசுக்கும் அடியேனுக்கும் மேன்மை எவரால் உண்டாகியிருந்தது. அந்தப் புரு÷ஷாத்தமன் மறைந்துவிட்டான். எவருடைய கடாட்சத்தினாலே வெற்றியும் செல்வமும் மேன்மையும் எங்களை விடாமல் இருந்தனவோ, அந்த ஸ்ரீ கோவிந்த பகவான் எங்களைக் கைவிட்டுப் போய்விட்டார். பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் முதலியவர்கள் எவருடைய பிரபாவத்தால் எரிந்து போனார்களோ, அந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் இந்தப் பூவுலகத்தைவிட்டு மறைந்துவிட்டார். அடியேன் தனியனாய் ஒளியிழந்து காணப்படுகிறேன். அந்தக் கண்ணபிரான் இல்லாததாலே இந்தப் பூமி முழுவதும் யவ்வனம், செல்வம், ஒளி இவற்றை இழந்தது போலக் காணப்படுகிறது. மகிமை பொருந்திய காண்டீவம் எவனுடைய மகிமையினாலோ மூவுலகிலும் புகழ்பெற்று இருந்ததோ, அவனில்லாததால், அது இழிவான திருடர்களின் தடிக்குத் தோற்றுவிட்டது. என் காவலில் இருந்த அநேக ஸ்திரீகளைத் திருடர்கள் தடியுங்கையுமாக வந்து என் முயற்சியைத் தடுத்து அபகரித்துக்கொண்டு போய் விட்டார்கள். துவாரகையிலிருந்து நான் அழைத்துக் கொண்டு வந்த அந்த ஸ்ரீகிருஷ்ணருடைய தேவிமார்களைத் திருடர்கள் இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இப்படிப்பட்ட அடியேன் தேஜசை இழந்திருப்பது ஓர் விந்தையோ? நான் உயிரோடு இருக்கிறேனே. அதுவல்லவோ ஆச்சரியம்! பெரியோரே! நீசர்களால் நான் அவமானப்பட்ட அந்தக் களங்கத்தை ஏற்று, தங்கள் முன்பு வெட்கமின்றி நிற்கிறேனல்லவா? என்று இவ்விதம் பரிதாபப்படும்படியாகக் கூறினான். வியாசர் அவனுக்கு ஆறுதல் கூறலானார்:
அர்ச்சுனா! நீ வெட்கப்படாதே! விசனமும் பட வேண்டாம் சகல பூதங்களுக்கும் இப்படிப்பட்ட காலகதி உண்டாகும். காலமே, பூதங்களின் உற்பத்திக்கும் நாசத்துக்கும் ஏதுவாகும். இதுபோலவே உலகம் எல்லாம் காலத்தினால் நிகழ்வதென்று நினைத்து மனக் கலக்கமின்றி இருப்பாயாக. நதிகள், கடல்கள், மலைகள், பூமி, தேவதைகள், மனிதர்கள், மிருகங்கள், நகரும் பிராணிகள், மரங்கள் முதலிய யாவுமே காலத்தாலேயே படைக்கப்பட்டு, மீண்டும் அதே காலத்தாலேயே நாசப்படுகின்றன. இவ்விதமாக யாவும் காலத்தின் ஆதீனமாக இருப்பதையறிந்து சமாதானமடைவாயாக. கண்ணனே அந்தக் காலஸ்வரூபி. தனஞ்சயா! அந்தக் கண்ணபிரானுடைய மகிமை நீ என்னென்ன சொன்னாயோ, அத்தகையதேயாகும்! அதில் சந்தேகமில்லை. பூமிதேவியின் பிரார்த்தனைக்கேற்ப காலரூபியான அந்த ஜனார்த்தனன், அவளது பூ பாரத்தை இறக்கப் பூமியிலே அவதரித்தார். சகல அரசர்களும் சங்கரிக்கப்பட்டனர். யாதவ குலமும் அழிந்தது. அவர் அவதரித்த காரியம் பூமியில் எதுவுமில்லை. ஆகையால் அவர் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினார். அந்த தேவாதிதேவன் படைப்புக் காலத்தில் படைப்பையும் ஸ்திதி காலத்தில் ஸ்திதியையும் எப்படிச் செய்தானோ, அதுபோல சங்கார காலத்திலும் சங்காரத்தையும் செய்யும் வல்லவன் அர்ச்சுனா! நீ அவமானப்பட்டதாக வருந்துகின்றாயே! பீஷ்மர், துரோணர், கர்ணன், முதலிய மகாசூரர்கள் எல்லாம் உன் ஒருவனாலேயே சங்கரிக்கப்பட்டார்களே, அது அவர்களுக்குத் தாழ்ந்தோரிடம் தோற்ற அவமானமல்லவா? அவர்களுக்கு அந்தக் காலத்தில் உன்னால் ஏற்பட்ட பரிபவமும் இந்தக் காலத்தில் திருடர்களால் உனக்கு ஏற்பட்ட பரிபவமும் அந்த ஸ்ரீ விஷ்ணுவின் பிரபாவமேயாகும். பார்த்தா நீ கவுரவரை வென்றதும் திருடருக்குத் தோற்றதும் எல்லாம் அந்த ஸ்ரீகிருஷ்ணனின் திருவிளையாடலேயன்றி வேறல்ல, சாக்ஷõத் பகவான் திருவுள்ளம் பற்றிய அந்த மங்கையரை அற்பர்கள் இழுத்துச் சென்றார்களே என்றல்லவா நீ விசனப்படுத்துகிறாய்? அதற்கும் ஒரு காரணமுண்டு. அதையுஞ் சொல்கிறேன் கேள்.
முன்பு ஒரு காலத்தில் அஷ்டாவக்கிரர் என்ற முனிவர் கழுத்தளவு தண்ணீரில் அமிழ்ந்து பல ஆண்டுக்காலம் வரை பிரமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நேரிட்ட போது, அசுரர் கூட்டம் எல்லாம் மடிந்தனர். அதன் காரணமாக மேரு மலைச்சாரலில் திருவிழா ஒன்றை நடத்தினார்கள். அந்த திருவிழாவுக்குப் போய்க்கொண்டிருந்த ஊர்வசி, ரம்பை, திலோத்தமை முதலிய அநேக தேவமங்கையர், அந்த முனிவரைக் கண்டு, வணங்கிப் புகழ்ந்து துதித்தார்கள்! தண்ணீரில் கழுத்தளவு மூழ்கிச் சடாபாரத்துடன் விளங்கிய அஷ்டாவக்கிர முனிவர், அத்தேவமங்கையர் செய்த வணக்கத்திற்கும் தோத்திரத்துக்கும் மனம் உவந்தார். அந்த மங்கையர் மேலும் மேலும் அவரைத் துதித்தார்கள். அப்போது அந்த முனிவர், பெண்களே நீங்கள் வணங்கியது கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றார். அதற்கு அப் பெண்களில் ரம்பையும் திலோத்தமையும் சுவாமி, தேவரீர் திருவுள்ளம் உவந்ததே போதுமானது! என்றனர். மற்றத் தேவமங்கையரோ சுவாமி! தங்கள் திருவுள்ளம் உவந்ததானால் புருஷேத்தமனே எங்களுக்கு கணவனாகும்படி வரந்தர வேண்டும்! என்றார்கள். முனிவரும் அப்படியே ஆகுக! என்று வரம் தந்துவிட்டுத் தண்ணீரிலிருந்து வெளியே வந்தார். அவர், கரையேறியபோது, உடம்பு எட்டுக் கோணல்களாகவும் அகோரமாகவும் இருந்தது. அவரது கோணலுடலைக் கண்ட அத் தேவதாஸியருக்கு சிரிப்புண்டாயிற்று. அந்தச் சிரிப்பை அவர்களால் அடக்க முடியவில்லை. யாருக்கு சிரிப்பு வெளிப்பட்டதோ, அவர்களை அந்த முனிவர் கோபத்தோடு உற்று நோக்கி, பெண்களே! நான் விகாரரூபமுள்ளவன் என்றுதானே நீங்கள் என்னைப் பார்த்துச் சிரித்து, அவமானஞ் செய்கிறீர்கள். நான் முன்பு அனுக்கிரகித்ததுபோல் நீங்கள் ஸ்ரீ புரு÷ஷாத்தமனையே கணவனாக அடைந்து வாழ்ந்து, இறுதியில் திருடர் வசமாவீர்கள்! என்று சபித்தார். அதைக் கேட்ட தேவமங்கையர் பயந்து மீண்டும், அம்முனிவரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அவர் மனமிரங்கி, நீங்கள் திருடர்கைப் பட்டாலும் சொர்க்கமடையக் கடவீர்கள்! என்று அனுக்கிரகம் செய்தார்.
அர்ச்சுனா கேட்டாயா, இவ்விதமாக அஷ்டாவக்கிர முனிவரது அனுக்கிரகத்தினால் அந்தத் தெய்வ மங்கையர், கண்ணபிரானையே கணவனாக அடைந்தனர். அவருடன் வாழ்ந்த அவர்கள், முனிவரது சாபத்தாலேயே திருடர் கைவசப்பட்டார்கள். ஆகையால், இதற்காக நீ வருந்தவேண்டாம். எம்பெருமானாலேயே யாவும் நிச்சயிக்கப்பட்டு முடிவு பெற்றன. ஆகையால் இந்த விஷயத்தில் சிறிதும் சோகப்படவேண்டாம். உங்களுக்கும் சங்கார காலம் நெருங்கிவிட்டது. அதனால்தான் உங்களுடைய தேஜசு, பலம், வீரியம், மகிமை ஆகியவை இழுக்கப்பட்டுவிட்டன. பிறந்தவனுக்கு மரணமும், உயர்ந்தவனுக்கு தாழ்வும் வரவேண்டுவதேயாம் கூடுவது பிரிவதும் சேர்ந்ததற்குச் செலவும் நியதியாகும். இதையறிந்த அறிவாளி நன்மையில் மகிழ்ச்சியையும், தீமையில் கவலையையும் அடைவதில்லை. ஆகையால் உனது சகோதரர்களுடன் நீ வனத்திற்குச் செல்வாயாக அர்ச்சுனா! இப்போது நான் உனக்குச் சொன்னவற்றை உன்தமையனான யுதிஷ்டிரனுக்கு (தருமனுக்கு) சொல்லி நாளையே உடன் பிறந்தாருடன் வனம் போவதற்கான முயற்சியைக் கைக்கொள் என்று வியாசர் கூறியருளினார். அதன் பிறகு அர்ச்சுனன், அஸ்தினாபுரம் சென்றான், நடந்தவற்றை தன் உடன்பிறந்தாரிடம் சொன்னான். வியாசர் கூறியருளியதையும் சொன்னான். அதைக் கேட்டதும், வியாசர் வாக்குப்படி பாண்டவர்கள், பரீக்ஷித்துக்குக் குருராஜ்யப் பட்டாபிஷேகத்தைச் செய்வித்து, உடனே வனத்திற்குச் சென்றார்கள். மைத்ரேயரே! நீங்கள் கேட்டதற்கிணங்க யாதவ வமிசத்தில் அவதரித்த வாசுதேவனுடைய சரிதங்களையெல்லாம் உமக்குச் சொன்னேன். எவன் இந்த ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய சரிதங்களைக் கேட்பானோ, அவன் சகல விதமான பாவங்களும் தீர்ந்து, ஸ்ரீவைகுந்தப் பதவியை அடைவான்.

ஐந்தாவது அம்சம் முடிந்தது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் நான்காவது அம்சம்—-மூன்றாவது பாகம் —

February 28, 2021

15. பகவானின் திருவம்சம்
16. துர்வசு வம்சம்
17. துருகியு வம்ச வரலாறு
18. அனு வம்சம்
19. பூரு, பரத வம்சங்கள்
20. சந்தனு வம்ச வரலாறு
21. பின்னிட்ட பாண்டவ வம்ச சரிதம்
22. இஷ்வாகு வம்சம் (பிற்பகுதி)
23. மாகத வம்சம் (பிற்பகுதி)
24. கல்கி அவதாரம்

———–

15. பகவானின் திருவம்சம்

மைத்ரேய முனிவர் குறுக்கிட்டு பராசர மகரிஷியை நோக்கி, சுவாமி! இந்த சிசுபாலன் ஹிரண்யகசிபுவாக இருந்தபோதும் இராவணனாக இருந்தபோதும் ஸ்ரீவிஷ்ணுபகவானால் சங்கரிக்கப்பட்டான். அந்தப் புண்ணியத்தாலே மகா போக போக்கியங்களைப் பெற்றிருந்தானே தவிர, சாயுஜ்யப் பதவியை அடையவில்லையே? அப்படியிருக்க இப்பொழுது மட்டும் சாயுஜ்யப் பதவியை அடைந்தது எப்படி? இதை அடியேனுக்கு விளக்கமாக அறிவிக்க வேண்டும்? என்று கேட்டார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! சகல லோகங்களுக்கும் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹார கர்த்தாவாகிய விஷ்ணுபகவான், அகம்பாவியான ஹிரண்யகசிபுவைச் சங்காரம் செய்வதற்காக நரசிம்மாவதாரம் செய்தபோது, அவ்வசுரனுக்கு இவர் மகாவிஷ்ணு என்ற ஞானம் உண்டாகாமல், புண்ணியவசத்தால் மகிமை பெற்ற ஒரு ஜந்து என்ற நினைப்பே உண்டாயிற்று. ஆகையால் அந்த அசுரன் ரஜோகுணத்தின் மிகுதியால் அப்படிப்பட்ட விபரீத பாவனையைப் பெற்று, நரசிம்ம மூர்த்தியினால் சங்கரிக்கப்பட்டான். அந்தப் புண்ணியத்தால் மூன்று உலகங்களையும் ஆளத்தக்க மேன்மையான செல்வத்தைப் பெற்றான். ஆதிமத்யாந்த ரஹிதனாகவும் பரப்பிரம்மமாகவும் இருக்கும் பகவானிடத்தில் அவன் லயமடையவில்லை. அதுபோலவே, அவன் இராவணனாக இருக்கையிலும் காமப்பரவசனாகி, சீதாபிராட்டியிடம் மிகவும் அன்புள்ள ஸ்ரீராம ரூபியான எம்பெருமானால் கொல்லப்பட்ட போதும் அவனுக்கு அந்த சுவாமியைப் பகவான் என்று அறியும் ஞானம் உண்டாகாமல் மனுஷ்யன் என்கின்ற ஞானமே உண்டாயிருந்தது. மீண்டும் எம்பெருமானாலே வதை செய்யப்பட்ட மகிமையால் அவன் மறுபடியும் சேதி ராஜகுலத்தில் சிசுபாலனாகப் பிறந்து பூமண்டலத்தோர் கொண்டாடத்தக்க ஐசுவரியத்தைப் பெற்றான். ஆனால் அந்தப் பிறவியில் எம்பெருமானுடைய சகல திருநாமங்களையும் நிந்திப்பதற்கு அவன் காரணமானான். அப்படி சிசுபாலன் நிந்தித்தும் கண்ணபெருமானின் திருப்பெயர்களையே அவன் அடிக்கடி உச்சரித்து வந்தான். மேலும் செந்தாமரை போன்ற திருவிழிகளுடன் பிரகாசமான பீதாம்பரத்தைத் தரித்துக் கொண்டும் திவ்வியக் கிரீட, கேயூர, ஹார கடகங்கள் முதலிய திவ்வியாபரணங்களைத் தரித்துக் கொண்டும் திரண்டு பருத்த நீண்ட நான்கு திருக்கைகளோடு திருவாழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்கள் தரித்துக் கொண்டும் விளங்கும் கண்ணபிரானின் திவ்விய ரூபத்தையே சிசுபாலன் உண்ணும் போதும் உறங்கும் போதும், படுக்கும் போதும், உலாவும் போதும், குளிக்கும் போதும் ஒரே பிடிப்பாய் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் அவனுடைய கண்களுக்கு எங்கும் அந்த கண்ணபெருமானின் தோற்றமே விளங்கப்பெற்று கோபதாபத்திலும் கூட அவரது திருப்பெயரையே உச்சரித்து வந்தான். எம்பெருமானது திவ்விய சக்கரத்தினாலே அந்த சிசுபாலன் சங்கரிக்கப்பட்டான்; அவ்வெம்பெருமானுடைய ஸ்மரணைகளால் சகல பாபங்களும் நசிக்கப்பெற்று அவன் எம்பெருமானிடமே லயத்தை அடைந்தான்.

மைத்ரேயரே! சிசுபாலனின் மோட்சம் பற்றிய யாவையும் நான் உமக்குச் சொன்னேன். எம்பெருமானைப் பகைத்தாவது அவரது திருநாமங்களை சங்கீர்த்தனம் செய்வோருக்கும், நினைப்பவருக்கும், சுராசுரர்களும் அடையமுடியாத பெரும் பயனை எம்பெருமான் அளிப்பார். அப்படியிருக்க நன்றாகப் பக்தி செய்பவருக்குப் பயனளிப்பதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? இது இருக்கட்டும். ஆனக துந்துபி என்ற வசுதேவருக்குப் பவுரவி, ரோகிணி, பத்திரை, மதுரை, தேவகி முதலாக அநேக மனைவியர் இருந்தார்கள். அவர்களில் ரோகிணிக்கு பலபத்திரன், சடன்சாரணன், துர்மதன் முதலிய புத்திரர்கள் உண்டானார்கள். அவர்களில் பலபத்திரர் என்னும் பலராமர் தம் மனைவி ரேவதியின் மூலம் விசடன், உலமுகன் என்ற பிள்ளைகளைப் பெற்றார். அவருடைய சகோதரன் சாரணனுக்கு சாஷ்டி மாஷ்டி சிசு சத்தியன் சத்திய திருதி முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். பத்திராசுவன், பத்திரபாகு, துர்த்தமன், பூதன் முதலானவர்கள் ரோகிணியின் வம்சத்தில் பிறந்தவர்கள். மதிரை என்பவளுக்கு நந்தன், உபநந்தன், கிருதகன் முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். பத்திரைக்கு உபநிதுகதன் முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். வைசாலி என்பவளுக்கு கவுவிகன் என்ற பிள்ளை பிறந்தான். தேவகியிடம் கிர்த்திமான் சஷேணன் உதாயு பத்ரசேனன் குஜுதாசன் பத்திரதேவன் என்று ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் அனைவரையும் தேவகியின் தமையனான கம்சன் கொன்றான். மானின் நியமனப்படி நள்ளிரவில் தேவகியின் வயிற்றினின்றும் பெயர்த்து, ரோகிணியின் வயிற்றிலே சேர்ந்து விட்டது. அப்படியிழுக்கப்பட்டதால் அந்த ஏழாவது பிள்ளைக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு சகல லோகங்களாகிய மகாவிருட்சத்துக்கு வேராகவும் சகல சுராசுர முனிவர்களுடைய மனதுக்கும் எட்டாதவனாகவும், ஆதி மத்யாந்த ரஹிதனாகவும் சகலகுண ஐசுவரிய சம்பன்னனாகவும் உள்ள ஸ்ரீவாசுதேவன் தம்மை பிரம்மா முதலிய சகல தேவதைகளும் பூபாரத்தை நீக்கும் பொருட்டு பிரார்த்தித்ததால், தேவகியின் கர்ப்பத்தில் எழுந்தருளினார். எம்பெருமானின் அனுக்கிரகத்தால் வளரப்பெற்ற மகா மகிமையுடைய அந்த யோக நித்திரையும், நந்தகோபனின் மனைவியான யசோதையின் வயிற்றிலே பிறந்தது. தேவகியின் கர்ப்பத்தினின்று எம்பெருமான் கண்ண அவதாரமாகத் தோன்றிய போது, சகல லோகமும் தெளிந்த பிரகாசமுடைய சூரிய சந்திராதி கிரணங்களுள்ளதாகவும் சர்ப்பம் முதலிய பயமுற்றும் தெளிவான மனதுள்ளதாகவும் அதர்மம் நீங்கியதாகவும் ஆயிற்று. சுவாமி, அவதரித்ததால் யாவரையும் நன்மார்க்கத்தில் திருத்தியருளினார்.

இவ்விதமாகப் பூவுலகத்தில் கிருஷ்ணபிரானாக அவதரித்த எம்பெருமானுக்குப் பதினாயிரத்து நூற்றியொரு பத்தினிகள் இருந்தார்கள். அவர்களில் ருக்மிணி, சத்யபாமை; ஜாம்பவதி, சாருஹாசினி முதலிய எட்டு மங்கையர் முக்கியமானவர்கள். அப்பத்தினிகளிடம் சகல ரூபியான எம்பெருமான் லக்ஷத்து எண்பதினாயிரம் பிள்ளைகளை உண்டாக்கினார். அப்பிள்ளைகளில் பிரத்தியும்னன், சாருதேஷ்ணன் ஸாம்பன் முதலிய பதின்மூன்று குமாரர்கள் முக்கியமானவர்கள். பிரத்யும்னன் என்பவன் ருக்குமியின் மகளாகிய ருக்குமவதி என்பவளை மணந்து அனிருத்தன் என்பவளைப் பெற்றான். அந்த அனிருத்தன் ருக்மியின் பவுத்திரியான சுபத்தரை என்பவளை மணந்து, வஜ்ஜிரன் என்பவனைப் பெற்றான். அவன் மகன் பிரதிபாகு அவன் பிள்ளை ஸுசாரு. இவ்வாறு அனேக ஆயிரம் கிளைகளுள் யாதவ குலத்தின் புத்திர சங்கியையைச் சொல்ல அநேக ஆயிர ஆண்டுகள் போதாது. இதுபற்றி இரண்டு சுலோகங்கள் சொல்லப்படுகின்றன. யதுகுலப் பிள்ளைகளுக்கு வில்வித்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் எண்பத்தெட்டு லக்ஷம் பெயர்களாகும். அப்படியானால் மகாத்மாக்களாகிய யாதவரின் எண்ணிக்கையை அளவிட்டு அறிவதற்கு யாரே திறமுடையோர்? அந்தக் குலத்தின் தலைவனான ஆகுகன் ஒருவனே பதினாயிரம் பதினாயிரம் லக்ஷம் பேரோடு இருக்கிறான்! என்பது தான் அச்சுலோகங்களின் கருத்தாகும். மைத்ரேயரே; முன்பு நடந்த தேவாசுர யுத்தத்தில் இறந்த மகாபலசாலிகளான அசுரர்கள் யாவரும் லோக உபத்திரவம் பண்ணும்படியான மனிதர்களுக்குள்ளும் பிறந்தார்கள். அவர்களை அழிப்பதற்காகத் தேவர்கள் எல்லாம் யதுவம்சத்தில் பிறந்தார்கள். அவர்கள் நூற்றியோரு குலமுடையோர் இவர்கள் அனைவருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவானே அதிபதியாக ஆண்டு வந்ததினால் அவருக்கு அடங்கி நடந்து வந்த யாதவர்கள் நாளுக்கு நாள் விருத்தியடைந்து வரலாயினர். ஆகையால் அந்த வம்சம் மிகவும் பெருகியது. இவ்வாறு வளர்ந்த அந்த விருஷ்ணிவம்ச வரலாற்றை எவன் ஒருவன் அன்போடு கேட்கிறானோ அவன் சகல பாபங்களும் ஒழிந்தவனாகி ஸ்ரீவிஷ்ணுலோகத்தை அடைவான்!

————

16. துர்வசு வம்சம்

மைத்ரேயரே! யதுவம்ச வரலாற்றை விளக்கமாகச் சொன்னேன், இனி துர்வசு வம்சத்தைச் சொல்லுகிறேன். துர்வசுவுக்கு வன்னி என்ற மகன் ஒருவன் உண்டு. அவன் மகன் பார்க்கன், அவன் பிள்ளை பானு, அவன் மகன் திரயீசானு. அவன் பிள்ளை கரந்தமன், அவன் மகன் மருத்தன். அவன் சந்ததியற்றவனாய் புரு வமிசத்தைச் சேர்ந்த துஷ்யந்தனைப் புத்திரனாக ஏற்றுக்கொண்டான். இவ்வாறு அந்த வம்சம் யயாதியின் சாபத்தால் விருத்தியற்றுப் பவுரவ வமிசத்தையே சேர்ந்து விட்டது.

————

17. துருகியு வம்ச வரலாறு

துருகியுவின் மகன் பப்புரு. அவன் மகன் சேது, அவன் பிள்ளை ஆரப்தன். அவன் மகன் காந்தாரகன், அவன் பிள்ளை கர்மன். அவன் மகன் கிருதன், அவன் பிள்ளை துர்த்தமன், அவன் மகன் பிரசேதன், அவன் குமாரன் சத்தருமன், அவன் மேற்கு வடநாட்டிலுள்ள அநேக மிலேச்சருக்கு அதிபதியாக விளங்கி வந்தான்.

——

18. அனு வம்சம்

யயாதி மன்னனின் நான்காவது மகனாகிய அனு என்பவனுக்கு சபாநலன், சட்சு, பரமேஷு என்ற மூன்று குமாரர்கள் உதித்தார்கள். அவர்களில் சபாநலனுடைய மகன் காலாநலன். அவன் மகன் சிருஞ்சயன். அவன் பிள்ளை புரஞ்சயன். அவன் மகன் ஜனமேஜயன், அவன் பிள்ளை மகாஜாலன். அவன் மகன் மகாமனசு. அவனுக்கு உசீதரன். திதிட்சு என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். உசீதரனுக்குச் சிபி, நிருகன், நவன், கிருமிவர்மன் என்ற ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். சிபிக்குப் பிரஷதர்ப்பன் கவீரன், கேகயன், பத்ரகன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். திதிக்ஷúக்கு ருஷத்திரதன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்கு ஹேமன், அவன் மகன் சுதமசு. அவன் மகன் பலி. அவன் மனைவியிடம் தீர்க்கதமசு என்ற முனிவரால், அங்கன், வங்கன், களிங்கன், சிம்மன், பவுண்டரன் என்ற பிள்ளைகள் பிறந்து அவ்வப்பெயர் கொண்ட ராஜ்யங்களை ஆண்டு வந்தார்கள். அந்த சந்ததியாருக்கும் அப்பெயர்களே வழங்கின. அங்கசந்ததியில் அனபானன் பிறந்தான். அவன் மகன் திவிரதன், அவன் மகன் தர்மராதன். அவன் மகன் சித்திரரதன். அவனுக்கு ரோமபாதன் என்ற பெயருமுண்டு. அவனுடைய நண்பனான தசரத மாமன்னன், சந்ததியில்லாத அவனுக்குச் சாந்தை என்பவளை மகளாகக் கொடுத்தான். ரோமபாதனன் மகன் சதுரங்கள். அவன் மகன் பிருதுலாக்ஷன். அவன் மகன் சம்பன். அவன் சம்பை என்ற நகரை உண்டாக்கினான். அவன் மகன் அரியங்கன், அவன் மகன் பிருகத்திரதன், அவன் பிள்ளை பிரகத் கருமன். அவன் மகன் பிரகத்பா. அவன் மகன் பிரகன்மனன். அவன் மகன் ஜயத்ரதன். பிராமண க்ஷத்திரிய வம்சம் கலந்த மங்கையொருத்தியை மணந்து அவள் மூலம் விஜயன் என்பவனை பெற்றான். அவன் மகன் திருதி. அவன் பிள்ளை திருதவிரதன். அவன் மகன் சத்தியகர்மா. அவன் மகன் அதிரதன். அவன் தான் கங்கையிலே குந்தியினால் எறிந்து விடப்பட்ட கர்ணன் என்ற குமாரனைப் பெட்டியிலிருந்து எடுத்து தன் புத்திரனாக வைத்துக் கொண்டவன், அவ்வாறு வளர்ந்த கர்ணனுக்கு விருஷசேனன் என்னும் மகன் பிறந்தான். அவ்விருஷசேனன் வரையில் உள்ளவர் தாம் அங்கதேசத்தை ஆண்டுவந்த அங்க வமிசத்தாராவார்கள்.

———–

19. பூரு, பரத வம்சங்கள்

மைத்ரேயரே! இனி யயாதியின் கடைசி மகனான பூருவின் வம்சத்தைச் சொல்கிறேன். பூருவின் மகன் ஜனமேஜயன் அவன் மகன் பிரசின்வான். அவன் பிள்ளை பிரவீரன். அவன் புதல்வன் மனசியு, அவன் புத்திரன் அப்தன், அவன் மகன் சுத்தியு. அவன் மகன் பகுகதன், அவன் பிள்ளை சம்யாதி. அவன் மகன் அஹம்யாதி, அவன் மகன் ரவுத்திராசுவன். அவனுக்கு ருதேபு, க÷க்ஷபு, தண்டிலேபு, கிருதேபு, ஜலேபு, தர்மேபு, திருதேபு, தலேபு, சன்னதேபு வனேபு என்று பத்துப் பிள்ளைகள் உண்டு. ருதேபுவுக்கு ரந்திநாரன் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவன் சுமதி, அப்பிரதிரதன், துருவன் என்ற பிள்ளைகளைப் பெற்றான். அப்பிரதிரதனின் பிள்ளை கண்ணுவன் அவன் மகன் மேதாதிதி, அவன் முதலாகக் கண்ணுவ வம்சத்தில் வந்தவரெல்லாம் பிராமணர்களானார்கள். அந்த அப்பிரதிரதனுக்கு ஐலீனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துஷ்யந்தன் முதலிய நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். துஷ்யந்த மன்னனுக்குப் பிரதமா மன்னன் பிறந்தான். அவனைப் பற்றி தேவர்களால் ஒரு சுலோகம் பாடப்பட்டது. அதாவது தாயானவளின் கருப்பையில் எவனாலே புத்திரன் உண்டாக்கப்பட்டானோ அவனுக்கே அவன் புத்திரன். ஆகையால் துஷ்யந்த மாமன்னனே! பிள்ளையைப் பார்த்துக் கொள். சதுந்தலையை அவமானப்படுத்தாதே! அரசே! முன்பு யமனின் சபையிலிருந்து ஒரு புத்திரனை வீரியத்தை விட்டவனே கொண்டு போனான். இந்தக் கர்ப்பத்தை நீயே உண்டாக்கியவன் சகுந்தலை உண்மையை சொன்னாள்! என்பது தான் அந்த சுலோகத்தின் கருத்தாகும். அவ்வாறு துஷ்யந்த மன்னனால் உண்டான பரத மன்னனுக்குப் பத்தினிகளான மூவரிடத்திலும் ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளை நோக்கி, இவர்கள் எனக்குத் தக்கவர்களல்லர் என்று பிதாவே சொன்னதால், அப்பிள்ளைகளின் தாய்மார்கள் விபசார சந்தேகத்தால் தங்களை புருஷன் தள்ளி வைத்துவிடுவான்! என்று பயந்து தங்கள் பிள்ளைகளைச் சென்று விட்டார்கள். பிறகு, புத்திர உற்பத்தி வீணாகியதால் புத்திரன் வேண்டுமென்று பரதன் விரும்பி, மருத்துக்களைக் குறித்து சோமயாகம் செய்தான். அது பயனைத் தந்தது. தீர்க்க தமசு என்பவரால் பக்கத்தில் தள்ளப்பட்ட பிரகஸ்பதியின் வீரியத்தால், பத்தினியான மமதை என்பவளிடத்தில் பரத்வாஜன் என்னும் ஒருவன் பிறந்திருந்தான். அவனையே பரதனுக்குப் பிள்ளையாக மருத்துருக்கன் பிரசாதித்தார்கள். மூடையான பெண்ணே! நம் இருவராலும் பிறந்த இந்தப் பிள்ளையை நீயே காப்பாற்று என்று பிரகஸ்பதியும், அதுபோலவே பிரகஸ்பதியிடம் மமதையும் ஆகத் தந்தை தாய் இருவரும் சொல்லி விட்டதால் அந்தப் பிள்ளைக்கு பரத்வாஜன் என்ற பெயர் உண்டாயிற்று. பரதனுக்கு மக்கட்பேறு வீணானபோது, பிள்ளையாகக் கிடைத்ததால் பரத்வாஜனுக்கு விரதன் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அந்த விரதனுக்கு மன்யு என்பவன் பிறந்தான். அவனுக்கு பிரகத்க்ஷத்திரன் மகாவீரியன், நகரன், கர்க்கன் என்ற பிள்ளைகள் பிறந்தார்கள். நகரனுக்கு ஸங்கிருதி பிறந்தான், அவனுக்கு குருப்பிருதி ரந்திதேவன் என்று இருபிள்ளைகள் பிறந்தார்கள்.கர்க்கனுக்கு சினி பிறந்தான். அதனால் கார்க்கியர், சைனியர் என்று சொல்லப்பட்ட வம்சத்தார்களனைவரும் க்ஷத்திரியராக இருந்தும் பிராமணர்களானார்கள். மகாவீரியனுக்கு துரூக்ஷயன் என்ற மகன் பிறந்தான், அவனுக்கு திரையாருணி; புஷ்க்கரிணன், கபி என்ற மூன்று பிள்ளைகள் பிறந்து பின்னர் மகிமையால் பிராமணரானார்கள்.

பிரகத்க்ஷத்திரனின் மகன் சுஹோத்ரன். அவன் மகன் ஹஸ்தி, அவன் தான் ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கியவன். அவனுக்கு அஜமீடன், துவிஜம்மீடன், புருமீடன் என்ற மூன்று குமாரர்கள் ஜனித்தார்கள். பிறகு அஜமீடனின் மகன் கண்வன்; அவன் மகன் மேதாதிதி, அவ்வஜமீடனுக்கே பிரூகதிஷு என்ற வேறொரு மகன் இருந்தான். அவன் மகன் பிருகத்தனு; அவன் மகன் பிருகத்கர்மன்; அவன் மகன் ஜயத்திரதன், அவன் பிள்ளை விசுவஜித்து. அவன் குமாரன் சேனஜித்து, அவன் புதல்வர்கள் ருசிராசுவன், காசியன், திரிடஹனு வச்சஹனு என்பவராவர். ருசிராசுவனுக்கு பிருதுசேனன் பிறந்தான். அவன் மகன் பாரன். அவன் மகன் நீலன். அவனுக்கு நூறு பிள்ளைகள். அவர்களில் முக்கியமானவன் காம்பீலிய நகராதிபதியான சமரன். சமரனுக்கு பாரன், சுபாரன்; ஸதசுவன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். சுபாரனின் மகன் ஸுகிருதி அவன் மகன் விப்பிராசன், அவன் மகன் அனுஹன், அவன் சுகரின் மகளாகிய கீர்த்தியை மணந்தான். அவ்வனுஹனனுக்கு பிரமதத்தன் பிறந்தான். அவன் மகன் விஷ்வக்கேசனன், அவன் மகன் உதகஸேனன்; அவன் பிள்ளை பல்லாடன், முன்னே சொன்ன துவிஜமீடன் என்பவனின் பிள்ளை யவீநரன். அவன் திருதிமான், அவன் பிள்ளை சத்யதிருதி; அவன் மகன் திரிடநேமி; அவன் மகன் சுபாரிசுவன், அவன் பிள்ளை சுமதி, அவன் மகன் சன்னதிமான். அவன் மகன் கிருதன். அவன் இரணியநாபனால் யோகாப்பியாசம் செய்விக்கப்பெற்று பிராச்சிய சாமகருடைய இருபத்து நான்கு சங்கீதங்களைச் செய்தான். கிருதனின் மகன் உக்ராயுதன். அவனது தனயன் ÷க்ஷமியன், அவன் பிள்ளை சுதீரன், அவன் மகன் ரிபுஞ்சயன், அவன் புதல்வன் பஹீதரன். இவர்கள் தாம் புரு வம்சத்தார்கள். பவுரவர் என்றும் இவர்கள் வழங்கப்படுவார்கள். முன்னே சொன்ன அஜமீடனுக்கு நளினி என்று ஒரு மனைவி இருந்தாள். அவள் வயிற்றில் நீலன் என்பவன் பிறந்தான். அவன் மகன் சாந்தி; அவன் பிள்ளை சுசாந்தி. அவன் மகன் புரஞ்சயன். அவன் மகன் ரிக்ஷன், அவன் பிள்ளை அரியசுவன், அவன் மகன் திவோதாஸன்; அரியசுவனுக்கு அகலியை என்ற ஒரு பெண்ணும் உண்டு. அந்த அகலியை சரத்துவான் என்ற கவுதமருக்குப் பத்தினியாகி சதாநந்தர் என்பவரைப் பெற்றாள். சதாநந்தருக்கு சத்தியதிருதி என்பவர் பிறந்து தனுர் வேதத்தை முழுவதுமாகக் கற்றார். அவர் ஊர்வசி என்ற அப்சரசைக் கண்டபோது மோகவசத்தால் அவரது வீரியம் நழுவி நாணற்கட்டையிலே இருபிரிவாக விழுந்தது. அதிலிருந்து ஒருபுத்திரனும் ஒரு புத்திரியும் பிறந்தார்கள். அவர்களை வேட்டையாட வந்த சந்தனு மாமன்னன் கிருபையினால் பரிக்கிரகித்தான். அதனால் அந்தப் புத்திரனுக்கு கிருபன் என்றும், அந்தக் கன்னிகைக்கு கிருபி என்றும் பெயர்கள் உண்டாயிற்று. குமாரி கிருபியை, துரோணாச்சாரியாருக்கு மனைவியாகவும் அசுவத்தாமருக்குத் தாயாகவும் ஆனாள்.

திவோதாசன் என்பவன் மகன் மித்திராயு அவனுக்கு சியவனன் என்பவன் பிறந்தான், அவன் மகன் சுதாசன். அவன் மகன் சவுதாசன், அவன் மகன் சகதேவன், அவன் மகன் சோமகன், அவனுக்கு நூறு பிள்ளைகள், மூத்தவன் ஜந்து கடைசி மகன் பிருஷதன். பிருஷதன் மகன் துருபதன், அவன் மகன் திருஷ்டத்துயும்னன். அவன் மகன் திருஷ்டகேது, அஜமீடனுக்கு ரிஷன் என்று மற்றொரு மகன் உண்டு. அவன் மகன் சம்வரணன், அவன் மகன் குரு, அவன் தான் தரும÷க்ஷத்திரத்தைக் குரு÷க்ஷத்திரமாக்கினான். அவனுக்கு சுதனு, ஜன்னு, பரிக்ஷித்து முதலிய புத்திரர்கள் உண்டானார்கள். அவர்களில் சுதனுவின் மகன் சுகோத்திரன். அவன் மகன் சியவனன், அவன் மகன் உபரிசரவசு, அந்தவசுவுக்கு பிருகத்திரன், பிரத்தியகிரன், குசாம்பன், குசேலன், உபரிமாச்சியன் முதலிய ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். பிருகத்திரதன் மகன் குசாக்கிரன்; அவன் மகன் விருஷபன், அவன் பிள்ளை புஷ்பவான். அவன் மகன் சத்யஹிதன். அவன் மகன் சுதனுவா, அவன் மகன் சந்து, அந்த பிருகத்திரனுக்கு இருபாதியாய் மற்றொரு பிள்ளை உண்டானான். அவன் ஜரை என்ற அரக்கியால் கூட்டப்பட்டதால் ஜராசந்தன் என்ற பெயரைப் பெற்றான். அவன் மகன் சகதேவன். அவன் மகன் சோம்பன்; அவன் மகன் சுருதி; சிரவசு இவர்கள் தான் மகத தேசத்தை ஆண்டு வந்த மன்னர்கள். இவர்கள் மாகதர் என்று வழங்கப்பட்டனர்.

————

20. சந்தனு வம்ச வரலாறு

பரிக்ஷித்து மகாராஜனுக்கு, ஜனமேஜயன், சுருதசேனன், உக்கிரசேனன், பீமசேனன் என்று நான்கு குமாரர்கள் இருந்தார்கள். ஜன்னு என்பவனுக்கு சுரதன் என்பவன் பிறந்தான். அவன் மகன் விடூரதன், அவன் பிள்ளை சர்வபவுமன், அவன் மகன் ஜயத்சேனன். அவன் புதல்வன் ஆராதிதன், அவன் பிள்ளை அயுதாயு, அவன் மகன் அக்கிரோதனன், அவன் புதல்வன் தேவாதிதி, அவனுக்கு ருக்ஷன் என்பவன் பிறந்தான். அவன் மகன் பீமசேனன், அவன் மகன் திலீபன், அவன் மகன் பிரதீபன், அவனுக்கு தேவாபி, சந்தனு பாகிலிகன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். தேவாபி, சிறுவயதிலேயே காட்டிற்குச் சென்று, அங்கு வசித்துக் கொண்டிருந்தான். அதனால் அவன் தம்பியான சந்தனு அரசனனான். அவனைப் பற்றி ஒரு சுலோகம் வழங்குகிறது. அதாவது அவ்வரசன் வயோதிகமான எவனைத் தன் கைகளால் ஸ்பரிசிக்கிறானோ அவன் யவுவனத்தை அடைகிறான். மேலும் மிகுந்த அமைதியையும் அடைகிறான். ஆதலால் சந்தனு என்ற பெயரைப் பெற்றான்! என்பது அச்சுலோகத்தின் கருத்தாகும். சந்தனு மன்னனின் ஆட்சியில், பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே பெய்யவில்லை, அதனால் ராஜ்யத்துக்கு உண்டான தீங்கை சந்தனு மகாராஜன் உணர்ந்து பிராமணர்களை அழைத்து சுவாமிகளே! நம்முடைய ராஜ்யத்தில் ஏன் மழையே பெய்யாமலிருக்கிறது? நான் செய்த அபராதம் என்ன? என்று கேட்டான். அதற்கு அவர்கள், வேந்தனே! மூத்தவன் இருக்க இளையவனாகிய நீ இந்தப் பூமியை ஆண்டு அனுபவிக்கிறாய், ஆகையால் மூத்தவனுக்கு விவாகம் இல்லாதிருக்கம்போது அவனது தம்பியாகிய நீ விவாகம் செய்து கொண்டால் என்ன பாதகம் உண்டோ, அந்த பாதகம் உன்னைச் சேர்ந்துள்ளது? என்றார்கள். அதற்கு என்ன செய்யவேண்டும்? என்று சந்தனு கேட்டான். அதனால் பிராமணோத்தமர்கள், அரசே! உன் தமையனான தேவாபி என்பவன் எந்தவொரு குற்றமும் பாதகமும் செய்யாமல் பரிசுத்தமானவனாக இருப்பதால், அவனுக்கு உரியது இந்த அரசாட்சி! ஆகையால் இதுவரை நீ அனுபவித்தது போதும். இனி இந்த இராஜ்யத்தை அவனுக்குக் கொடுத்து விடுவாயாக! என்றார்கள். சந்தனு மன்னன் தான் செய்த தவறுக்கு வருந்தி, தன் தமையனிடம் அரசுரிமையை வழங்க விரும்பி, அவன் இருக்கும் காட்டுக்குப் புறப்பட்டான். இதனிடையில் சந்தனுவின் அமைச்சனாகிய அசுமராவி என்பவன் அந்தக் காட்டுக்கு, வேதவாத விரோதஞ் சொல்லும்படியாகச் சில முனிவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள், சரியான புத்தியுடைய தேவாபியைக் கண்டு, அவனுக்குத் துர்ப்புத்திகளைப் போதித்தார்கள். இதனிடையில் சந்தனுவும் அவனுடன் சென்ற அந்தணர்களும் தேவாபியைச் சந்தித்து, மூத்தவனே இராஜ்யத்தை ஆளவேண்டும்! என்று வேதபிராமணமுள்ள நியாயங்களை அவனுக்கு போதித்தார்கள். அதையெல்லாம் கேட்ட தேவாபி, வேத விரோதமான யுக்திகளால் தூஷித்தான். அதனால் சந்தனுவுடன் சென்ற அந்தணர்கள் வெறுப்புற்றனர்.

அவர்கள் சந்தனு மன்னனை நோக்கி, அரசனே! இந்த விஷயமாக உன் தமையனை நிர்ப்பந்தஞ் செய்தது போதும். வா! இனி உன் அரசில் மழையின்மையாகிய குற்றம் நீங்கிவிடும். ஏனெனில் அநாதியான வேத வாக்கியங்களைத் தூற்றிய உன் அண்ணன் பதிதன் ஆனான். தமையன் பதிதன் ஆகிவிட்டதால் பரிவேத்துருத்துவம் என்ற குற்றம் உனக்கு இல்லை! ஆகையால் நீயே அரசாட்சி செய்ய வேண்டும்! என்று சொன்னார்கள். பிறகு சந்தனு தன் தலைநகரம் சென்று அரசாளத் துவங்கினான். தேவ தூஷணை செய்ததால், மூத்தவன் பதிதனாகி விட்டபடியால், இளையவனான சந்தனுவின் ஆட்சியில் மேகம் பொழிய, பயிர்கள் செழித்து வளர்ந்தன. பாகிலீகனின் மகன் சோமதத்தன். சோமதத்தனுக்கு பூரி, பூரிசிரவன், சல்லியன் என்று மூன்று பிள்ளைகள் உண்டு. சந்தனு மகாராஜனுக்கு தேவநதியான கங்கையிடம் சகல, நூல் அறிவும் மகா பலபராக்கிர கீர்த்திகளும் வாய்ந்த பீஷ்மர் என்பவர் பிறந்தார். மேலும் சந்தனு மன்னனுக்கு சத்தியவதி என்பவளிடம் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அதில் சித்திராங்கதன் என்பவன் இளமையிலேயே ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டான். விசித்திர வீரியனோ காசிமன்னனின் பெண்களாகிய அம்பிகை, அம்பாலிகை என்பவர்களை மணந்து, காம போகத்தில் மிகவும் உழன்றதனால் தொழுநோயால் மடிந்தான். பிறகு, அவர்களின் தாயான சத்தியவதி ஒரு கட்டளையிட்டாள். கிருஷ்ணத்துவை பாயனன் என்பவன் தாயின் வாக்கைத் தட்டக்கூடாது என்பதால் விசித்திர வீரியனின் மனைவிகளின் மூலமாக திருதராஷ்டிரன், பாண்டு என்பவர்களையும், ராஜபத்தினிகளால் ஏவப்பட்ட ஒரு தாதியிடத்தில் விதுரனையும் உண்டாக்கினாள். திருதராஷ்டிரன் காந்தாரி என்ற பத்தினியிடம் துரியோதனன் முதலிய நூறு பிள்ளைகளைப் பெற்றான். அவனுடைய சகோதரனான பாண்டு மன்னனோ, காட்டில் மிருக ரூபமாக இருந்த ஒரு முனிவரின் சாபத்தினால் புத்திர உற்பத்தி செய்யும் சக்தியை இழந்திருந்தான். அதனால் அவனுடைய மனைவியான குந்தியிடம் தருமன், வாயு, இந்திரன் என்ற தேவர்களால் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்ற குமாரர்களும் மற்றொரு மனைவியான மாத்திரியிடம் அசுவினி தேவதைகளால் நகுலன் சகாதேவன் என்பவர்களுமாக ஐந்து பிள்ளைகள் உண்டாக்கப்பட்டனர். பஞ்சபாண்டவர்களான அந்த ஐவருக்கும் திரவுபதி என்ற மனைவியிடம் குழந்தைகள் பிறந்தன.

யுதிராஷ்டிரரான தருமருக்கு திரவுபதியிடம் பிரதிவிந்தியனும் பீமனுக்கு சுருதசேனனும், அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும், நகுலனுக்கு சதானீகனும், சகதேவனுக்கு சுருதகர்மாவும் ஆக ஐந்து பிள்ளைகள் உண்டானார்கள். இவர்களைத் தவிர பஞ்சபாண்டவருக்கு வேறு பிள்ளைகளும் உண்டு. யுதிஷ்டிரருக்கு யவுதேயீ என்பவளிடத்தில் தேவகன் என்பவன் பிறந்தான். பீமனுக்கு இடும்பை என்னும் அரக்கியிடம் கடோத்கஜனும், காசி என்னும் மங்கையிடம் சர்வகன் என்பவரும் பிறந்தார்கள். சகதேவனுக்கு விஜயை என்பவளிடம் சுகோத்திரனும், நகுலனுக்கு ரேணுமதி என்பவளிடம் நிசமித்திரனும் பிறந்தார்கள். அர்ச்சுனனுக்கு உலூபி என்ற நாக கன்னிகையின் மூலம் இராவான் என்பவனும், மணலூர் பட்டண அதிபதியான பாண்டியனது குமாரியிடம், புத்திரிகா புத்திரனாய்ப் பப்புருவாகனன் என்பவனும் பிறந்தார்கள். மேலும் அர்ச்சுனனுக்கு சுபத்திரை என்பவளிடத்தில் இளமையிலேயே மகாபல பராக்கிரமசாலியாய்ச் சத்துருக்களையெல்லாம் ஜெயிக்கும் வல்லமை பொருந்திய அபிமன்யு என்பவன் பிறந்தான். அந்த அபிமன்யுவுக்கு உத்தரை என்பவளிடம் பரீக்ஷித்து பிறந்தான். அவன் கர்ப்பத்தில் இருக்கும்பொழுது குருவம்சத்தார் அனைவரும் நாசமாய்ப் போன பிறகு அசுவத்தாமா எய்த பிரம்மாஸ்திரத்தால் எரிக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய பிரபாவத்தினால் மறுபடியும் பிராணனை அடைந்தான். அதனால் அவனுக்குப் பரீக்ஷித்து என்ற பெயர் வழங்கலாயிற்று. மைத்ரேயரே! அந்த பரீக்ஷித்து மன்னன் தான் இப்போது இந்தப் பூவுலகையெல்லாம் யாதொரு குறைவுமில்லாமல் தர்மம் தழைக்கப் பரிபாலனஞ் செய்து கொண்டிருக்கிறான்.

———–

21. பின்னிட்ட பாண்டவ வம்ச சரிதம்

மைத்ரேயரே! இனிவரும் அரசர்களைச் சொல்கிறேன் கேளும். இப்போது அரசனாக இருக்கும் பரிக்ஷித்து மன்னனுக்கு ஜனமேஜயன் சுருதசேனன் உக்ரசேனன் பீமசேனன் என்ற நான்கு பிள்ளைகள் பிறப்பார்கள். ஜனமேஜயனுக்கு சதானீகன் என்பவன் பிறப்பான். அவன் யாக்ஞவல்க்கியரிடம் வேதத்தையும், கிருபாசாரியரிடத்தில் வில் வித்தையும் கற்று கொடியவைகளான விஷயங்களில் வெறுப்புற்றுச் சவுகை முனிவரின் உபதேசத்தால் ஆன்மஞானத்தில் தேர்ந்து உத்தமமான மோட்சத்தை அடைவான். சதானீகனின் குமாரன் அசுவமேத தத்தன், அவன் மகன் அதிசீமகிருஷ்ணன், அவன் மகன் நிசக்குனு, அவன் காலத்தில் ஹஸ்தினாபுரம் கங்கையால் அழிக்கப்படும். பிறகு அவன் கவுசாம்பி என்ற நகரத்தில் வாசஞ்செய்வான். அவஷக்கு உஷ்ணன் என்ற ஒரு மகன் பிறப்பான். அவன் மகன் விசித்திரரதனன். அவன் மகன் விருஷ்ணிமான். அவன் மகன் சுஷேணன், அவன் மகன் சுனீதன், அவன் பிள்ளை நிருபசசக்ஷú, ஞூவன் மகன் சுகிபலன், அவன் மகன் பாரிபிலவன், அவன் மகன் சுநயநன். அவன் மகன் மேதாவி. அவன் பிள்ளை ரிபஞ்சயன். அவன் மகன் அருவன், அவன் குமாரன் திக்குமன், அவன் மகன் பிருகத்திரதன், அவன் மகன் வகதாசன், அவனுக்கு சதானீகன் என்றொரு மகனும் உண்டு. அவனுக்கு உதயன் என்பவன் பிறப்பான். அவனுக்கு விஹீநரன் பிறப்பான். அவனுக்கு தண்டபாணி என்ற புதல்வன் ஒருவன் உண்டாவான். இதற்கு ஒரு சுலோகமுண்டு. பிராமண க்ஷத்திரியர்களுக்கு ஆதாரமாய் தேவரிஷிகளினாலும் பூஜிக்கப்பட்ட பாண்டவ வம்சமானது, கலியுகத்தில் ÷க்ஷமகனோடு முற்றுப் பெறும்! என்பதுதான் அந்த சுலோகம்.

————-

22. இஷ்வாகு வம்சம் (பிற்பகுதி)

இனி இஷ்வாகு வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன். முன்பு, அந்த வமிசத்தில் பிருகத்பலன் என்பவன் உண்டானான் என்று சொல்லி முடித்தேன். அவன் மகன் பிருகத்க்ஷணன் அவனுக்கு உருஷயன், அவனுக்கு வச்சவியூகன் அவனுக்கு பிருத்வி யோமன், அவன் மகன் திவாகரன். அவன் மகன் சகதேவன். சகதேவனுடைய மகன் பிருகதசுவன். அவனுக்குக் குமாரன் பானுரதன், அவனுக்கு பிரதீதாசுவன். அவனுக்குச் சுப்பிரதீகன், அவனுக்கு மகன் மருதேவன். அவன் மகன் சுநக்ஷத்திரன், அவனுக்கு மகன் கின்னரன், அவன் மகன் அந்தரிக்ஷன். அவன் மகன் சுபர்ணன், அவனுக்கு அமித்திரஜித்து அவனுக்கு பிருகத்பாஜன். அவனுக்கு தருமி, தருமிக்கு கிருதஞ்சயன். அவன் மகன் ரணஞ்சயன். அவன் மகன் சஞ்சயன். அவன் மகன் சாக்கியன். சாக்கியன் மகன் சுத்தோதனன். அவன் மகன் ராகுளன். அவன் மகன் பிரசேனஜித்து. அவனுக்கு க்ஷúத்திரகன், அவனுக்கு குண்டகன், அவன் மகன் சுரதன், அவன் மகன் சுமித்திரன்; இவர்களே பிருகத்பல குலத்திற் பிறந்த இக்ஷúவாகு வமிசத்தாராவர். இதற்கும் ஒரு சுலோகம் உண்டு. இக்ஷúவாகுவின் குலம் கலியுகத்தில் சுமித்திரனோடு முடிவு பெறும் என்பதே அந்த சுலோகம்.

————

23. மாகத வம்சம் (பிற்பகுதி)

இனிமேல் பிரகத்திரதன் முதல் உண்டாகும் மாகதருடைய வம்சத்தைச் சொல்கிறேன். இந்த வம்சத்தில் ஜராசந்தன் முதலிய மகா பலபராக்கிரமசாலிகளான அரசர்கள் உண்டானார்கள். ஜராசந்தனுடைய மகன் சகதேவன், அவன் மகன் சோமாபி, அவன் மகன் அனுசுருதசிரவன். அவன் மகன் அயுதாயு, அவனுக்கு நிரமித்திரன், அவன் மகன் சுநேத்திரன்; அவன் மகன் சுதன் பிருகத்கருமா; அவன் மகன் சியேனஜித்து, அவன் மகன் சுருதஞ்சயன். அவன் மகன் விப்பிரன்; அவனுக்கு சுசி என்பவன் பிறப்பான். அவனுக்கு க்ஷமியன் உண்டாவான். அவனுக்குச் சுவிரதன், சுவிரதனுக்கு தருமன் பிறப்பான்; அவனுக்கு சுசிரவன் தோன்றுவான். அவனுடைய மகன் திருடசேனன். அவன் மகன் சுபலன்; அவன் மகன் சுநீதன். அவனுக்கு சத்யஜித் என்பவன் பிறப்பான். அவனுக்கு விஸ்வஜித்து, அவனுக்கு ரிபுஞ்சயன். இவர்களே பிருக்திரத வம்சத்தின் வேந்தர்கள், இனி இவர்கள் ஓராயிரம் ஆண்டளவு பெருகியிருப்பார்கள்.

———–

24. கல்கி அவதாரம்

பிருகத்திர வமிசத்தின் கடைசியில் ரிபுஞ்சயனின் மந்திரியாக சுனகன் என்பவன் விளங்குவான், அவன் தன் அரசனைக் கொன்று பிரத்தியோதனன் என்ற தன் மகனுக்கு அரசியல் பட்டாபிஷேகம் செய்வான். அந்த பிரத்தியோதனனுக்கு பாலகன் என்பவன் மகன்; அவன் மகன் விசாகயூபன்; அவன் மகன் ஜனகன். அவன் மகன் நந்திவர்த்தனன் ஆக இந்த ஐவரும் பிரத்யோதனர் என்றே வழங்கப்படுவார்கள்; அவர்கள் நூற்று முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிவார்கள்; பிறகு சிசுநாபன் என்பவன் உண்டாவான்; அவன் மகன் காகவர்ணன்; அவன் மகன் ஷேமதர்மன்; அவன் பிள்ளை க்ஷதளஜசு; அவன் மகன் விதிசாரன், அவன் புதல்வன் அஜாதசத்ரு, அவன் மகன் அர்ப்பகன், அவனுக்கு உதயணன், அவன் பிள்ளை நந்திவர்த்தனன்; அவனுக்கு மகாநந்தி, இவர்கள் அனைவரும் சைசுநாபர் என வழங்கப்பட்டு, முந்நூற்று அறுபத்திரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்வார்கள். அந்த மகாநந்திக்கு சூத்திர மங்கையின் வயிற்றில் பிறக்கும் பேரரசனும் மகாபலமுடைய மகாபதும நந்தன் என்பவன் பரசுராமனைப் போல் க்ஷத்திரியரையெல்லாம் நாசஞ்செய்வான். அதற்குப் பிறகு சூத்திரர்கள் ஆள்வார்கள். அந்த மகாபத்ம நந்தன் தன் ஆக்ஞைக்கு ஒருவராலும் தடை ஏற்படாதவாறு, பூவுலகை ஒரு குடைக்குக் கீழ் ஆண்டு வருவான். அவனுக்கு சுமாலி முதலிய எட்டுப் பிள்ளைகள் தோன்றி அவனுக்கு பிறகும் நூறாண்டுகள் ஆட்சிபுரிவார்கள். பிறகு இந்த ஒன்பது நந்தர்களையும் கவுடில்யன் என்றும் விஷ்ணு குப்தன் என்றும் வழங்கப்படும். பிராமணன் ஒருவன் நாசஞ்செய்வான். அதன் பிறகு அந்த மகாநந்தனின் காதற்கிழத்தியான முரை என்பவள் வயிற்றில் பிறந்த சந்ததியார்கள் பூமியை ஆண்டு வருவார்கள். அவர்களில் சந்திரகுப்தன் என்பவனை அந்த கவுடில்யப் பிராமணனே சிங்காதனம் ஏற்றிப் பட்டாபிஷேகம் செய்து வைப்பான். அந்த சந்திரகுப்தனுக்கு பிந்துசாரன் என்பவன் உண்டாவான். அவன் மகன் அசோகவர்த்தனன், அவன் மகன் சுயன். அவன் மகன் சம்யுதன், அவன் மகன் சாலிசூகன், அவன் மகன் சோமசர்மா, அவன் மகன் சததனுவா, அவனுக்குப் பிறகு பிருகத்திருதன் என்பவன் உண்டாவான். இந்த மவுரிய வம்சத்துப் பதின்மரும் நூற்று முப்பத்தேழு ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டு வருவார்கள். அவர்களுக்கு முடிவாக சுங்கர் என்ற பதின்மர் இந்தப் பூமியை ஆண்டு வருவார்கள். முன்னே சொன்ன மவுரியரின் கடைசியரசனை அவனது சேனாதிபதியான புஷ்யமித்திரன் கொன்று, தானே அரசனாவான். அவன் மகன் அக்னி மித்திரன், அவன் மகன் சுச்சியேஷ்டன், அவன் மகன் வசுமித்திரன், அவன் மகன் உதங்கன், அவன் மகன் புலிந்தகன், அவன் மகன் கோஷவசு, அவன் மைந்தன் வச்சிரமித்திரன், அவன் மகன் சூனுபாகவதன், அவன் தனயன் தேவபூதி. இந்த சுங்கர்கள் அனைவரும் நூற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் பூமியை ஆள்வார்கள்.

பிறகு தேவபூமி என்ற சுங்கனை அவனது மந்திரியான வசுதேவன் என்னும் கண்வ குலத்தினன் கொலை செய்து, அரசனாவான். அதனால் பூமி இந்தக் கண்வரை அடையும். அவன் மகன் பூமித்ரன், அவன் மகன் நாராயணன், அவன் மகன் சுசர்மா கண்வவமிசத்தாரான இந்த நால்வரும் நாற்பத்தைந்து ஆண்டுக்காலம் அரசாள்வார்கள். சுசர்மனை அவனது வேலைக்காரனான ஆந்திரதன் பலிபுச்சகன் என்பவன் கொன்று ராஜ்யத்தை ஆள்வான். பிறகு அவன் தம்பி கிருஷ்ணன் அரசனாவான். அவன் மகன் சாந்தகர்ணி, அவன் மகன் பூர்ணோச்சங்கன், அவன் மகன் சாதகர்ணி, அவன் மகன் லம்போதரன், அவன் மகன் பாலகன், அவன் பிள்ளை மேகசுவாதி, அவன் மகன் படுமான், அவன் மகன் அரிஷ்டகர்மன், அவன் பிள்ளை புலிந்தசேனன், அவன் புத்திரன் சந்திரன், அவன் மகன் சாதகர்ணி, அவன் பிள்ளை சிவசுவாதி, அவன் புத்திரன் கோமதி அவன் மகன் பூனிமான். அவன் மகன் சாந்தகர்ணி, அவன் பிள்ளை சிவஸ்ரீ, அவன் பிள்ளை சிவஸ்கந்தன், அவன் மகன் யக்ஞஸ்ரீ, அவன் மகன் துவியக்ஞன், அவன் பிள்ளை புலோமாபி ஆக இந்த முப்பதின்மரும் நானூற்று எண்பத்தாறு ஆண்டுகள் பூமியை ஆள்வார்கள். பிறகு இந்த ஆந்திரரின் சேவகரான ஆபீரன் முதலிய எழுவரும் கர்த்தபீரான் என்ற பதின்மரும் அரசராவார்கள். அதற்கு பிறகு ஒரு குலத்துப் பதினாறுபேர் அரசாள்வார்கள். பிறகு யவனர் எண்மரும் துருக்கர் பதினால்வரும், முருண்டர் பதின்மூவரும், மவுனர் பதினொருவரும் ஆயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது ஆண்டுக்காலம் அரசர்களாவார்கள். பிறகு மவுனரில், ஒரு குலத்தைச் சேர்ந்த பதினொருவர் முந்நூறு ஆண்டுகள் அரசாள்வர். இவர்கள் அனைவரும் நசித்த பிறகு கிங்கிலை என்ற நகரத்தைச் சேர்ந்தவரும், அரசகுல சம்பந்தமற்றவருமான யவனரே மீண்டும் ஆள்வார்கள். அவர்களாவன, விந்தியசத்தி, புரஞ்சயன், ராமசந்திரன், தருமவர்மன், வங்கன் நந்தனன், சுநந்தி, அவன் தம்பி நந்தியசன், சுக்கிரன், பிரவீரன் என்ற இந்தப் பதின்மரும் நூற்றியாறு ஆண்டுக்காலம் அரசாள்வார்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய ஜாதியில் பிறந்த பதின்மூவரும் பாகிலிக தேசத்தார் மூவரும் புஷ்யமித்திரர், படுமித்திரர் என்ற பதின்மூவரும் ஆந்திரர் எழுவரும் சிற்றரசராய் ஆட்சி செய்வார்கள். கோசல நாட்டை ஒன்பதின்மரும், நைஷத தேசத்தை ஒன்பதின்மரும் ஆள்வார்கள். மகதத்தில் விசுவஸ்படிகன் என்று ஒருவன் தோன்றி செம்படவர், வேடவர் முதலியவர்களுடன் கலந்த பார்ப்பாரை ஸ்தாபிப்பான். பத்மவதி என்ற பட்டணத்தில் நாகர் என்று வழங்கப்படும் ஒன்பது மாகதர்கள் சகல அரச பரம்பரைகளையும் அழித்து, கங்கையின் உற்பத்தி ஸ்நானம் முதல் பிரயாகை வரையிலுள்ள ராஜ்யத்தை ஆள்வார்கள். கோசலம், ஆந்திரம், புண்டரம், தாமிரலிப்தம், சமதபபுரி இவற்றை தேவரக்ஷிதன் என்பவன் அரசாள்வான்.

கலிங்கம், மாகிஷம், மாகேந்திரம் முதலியர் குகர் என்போர் ஆள்வார்கள். நிடதம், நைமிக்ஷகம், காலகோசகம் என்ற ராஜ்யங்களை மணி தானியகர் அரசு செய்வர். திரை ராஜ்யம், முஷிகம் என்பவற்றை கனகப் பேருடையான் புசிப்பான். சவுராஷ்டிரம், ஆவந்தி, சூத்திரம், ஆபிரம் என்ற நாடுகளையும், நர்மதையடுத்த பாலை நிலங்களையும் கெட்டுப் போன பார்ப்பாரும் இடையர் சூத்திரர் முதலியோரும் ஆள்வார்கள். சிந்து, தேவிகை, சந்திரிகை முதலான நதிக்கரை நாடுகளை கெட்டுப்போன சூத்திரர், மிலேச்சர் முதலியோர் கைப்பற்றுவார்கள். இவ்வரசர் யாவரும் ஒரே காலத்தில் ஆண்டு வருவார்கள். இவர்கள் அதிகக் கோபமும் அற்ப அனுக்கிரகமும் உடையவர்கள். பொய்யிலும் அதருமத்திலும் மனப்பற்றுடையவர்கள். மங்கையரையும் பாலகரையும், பசுக்களையும் வதைப்பார்கள். பிறர் பொருளைக் களவு செய்வார்கள். பேராசைக்காரர்கள் இவர்களால் தருமம் சிறிது சிறிதாகக் குறையும். அப்பொழுது பொருளே உயர்ந்த குலத்துக்குக் காரணமாகும், நற்குலப்பிறப்பு உயர்ந்ததாகக் கருதப்படமாட்டாது. வலிமையே சகல தரும காரணமாகும் நல்லொழுக்கமற்ற பெண் தன்மையே விவாகஞ்செய்யக் காரணமாகும். குலங்கோத்திரம் காரணமாகாது. பொய் சொல்லும் திறமையே விவகாரத்தில் வெற்றியடையக் காரணமாக இருக்குமே தவிர, நியாயமான தருமங்கள் வெற்றியை வழங்காது. முப்புரிநூலைத் தரித்திருப்பது ஒன்று மட்டுமே பிராமணத் தன்மைக்கு காரணமாக இருக்கும். வேத சாஸ்திர ஆசாரங்கள் பிரம்மத் தன்மைக்கு ஆதாரமாக இராது வலிமையில்லாமையால் பிழைப்பிராது. பயிர்கள் இல்லாமை பிழைப்பதற்குக் காரணமாகாது. பயமின்றி உரத்த குரலில் பேசுவதே பாண்டித்யமாக இருக்கும். பொருளின்மையே சாத்வீகத்துக்குக் காரணமாக இருக்கும். ஈகைதான் தருமமாகும். யாகங்கள் தருமமாகாது. வைதீக முறையை விட அங்கீகரிப்பு முறையே விவாகத்துக்குக் காரணமாக இருக்கும். நன்றாக வேடந்தரித்தவனே பாத்திரமாவதற்கு ஏதுவாகுமேயன்றி யோக்யதை அன்று தூரமான இடத்தில் இருந்து கொண்டு, வருந்தண்ணீரே தீர்த்த ஏதுவேயன்றி சுத்தியன்று, கபடவேடந்தரித்தலே பெருமைக்கு காரணமாகுமே அன்றி தவம் முதலியவை ஆகாது. இவ்வாறு அநேக தோஷங்கள் நிறைந்த பூமியில் எந்தச் சாதியானாலும் எவன் பலவானோ அவனே அரசனாவான். அப்படிப்பட்ட நிலையில் அவர்களது கையின் கீழ் இருக்கமுடியாமல் நன்மக்கள் மலைகளின் நடுச்சாரல்களில் தங்கி வசிப்பார்கள். காய், கிழங்கு, கீரை, இலை, தேன் முதலியவைகளை ஆகாரமாகவும், மரப்பட்டைகள், தழைகள் இவற்றை வஸ்திரமாகவும் கொண்டு காற்று, வெயில், மழை முதலியவற்றால் துன்பப்படுவார்கள். எவனும் இருபத்து மூன்று ஆண்டு வரையில் பிழைத்திருப்பதே அபூர்வமாக இருக்கும். இவ்விதம் கலியுகத்தில் ஜனங்கள் க்ஷயமடைந்து தர்மங்களெல்லாம் மிகவும் அழிந்து கலியுகமும் முடியலாகும்.

அப்போது சகல லோக சிருஷ்டி கர்த்தாவாயும், சராசரங்களுக்கு எல்லாம் குருவாகவும், ஆதிமத்யாந்த ரஹிதமாகவும், சாக்ஷõத் பிரம்மமாயும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவான், தம் அம்சத்தால் சம்பளம் என்னும் கிராமத்தில் முக்கியமானவராக விளங்கும் விஷ்ணு யாஸு என்ற பிராமணருடைய மாளிகையில் எண்குண ஐஸ்வரிய சம்பன்னராய், கல்கி ரூபியாய் அவதரிப்பார். அளவற்ற சிறப்புடையவராகவும், மிலேச்சராகவும் திருடராகவும், துஷ்டாசாரம் கொண்டவராகவும் இருக்கும். அனைவரையும் கல்கி புருஷர் நாசஞ் செய்து அருளி, உலகமெல்லாம் தமது தருமத்தில் நிலைபெறச் செய்வார். பிறகு கலியுகம் முழுவதும் முடிவாகும் போது, இரவின் முடிவில் எழுந்தவர்களுக்கு ஏற்படும் நிர்மல புத்தியைப் போல் சகலருக்கும் புத்தி தெளிவு உண்டாகும். இனியண்டாமவர்க்குக் காரணமாக இருக்கும் அந்தக் காலத்து மனிதர்கள், மிகவும் கிழவர்களாக இருந்தாலும், தற்காலத்தில் புத்திர உற்பத்தி உண்டாகும். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அனைவரும் கிருதயுகத்தை அனுசரித்தவராகவே இருப்பார்கள். இது சம்பந்தமாக ஒரு சுலோகம் உண்டு. சந்திரனும் சூரியனும் குருவும் எப்போது புஷ்ய நட்சத்திரத்தில், ஒரே காலத்தில் பிரவேசிப்பார்களோ அப்போதே கிருதயுகம் உண்டாகும்! என்பதே அந்தச் சுலோகம். மைத்ரேயரே! சென்ற வருடம் இருப்பவரும் வருபவர்களும் ஆகிய அந்தந்த வமிசத்து அரசர்களைப் பற்றி உமக்குச் சொல்லி விட்டேன். பரீக்ஷித்து மகாராஜனின் உற்பத்திக் காலத்திலிருந்து நந்தன மன்னனுக்கு இராஜ்யப் பட்டாபிஷேகமாகும் காலம் வரையில் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் ஆகும். ஆகாயத்தின் வடக்கில் கிழக்கு நுனியாய் பெட்டி உண்டி போல் விளங்கும் சப்தரிஷி மண்டலத்தில் கிழக்கு நுனியில் உள்ள நட்சத்திரத்தில் இருப்பவர் மரீசி. அவருக்கு மேற்குத் திசையில் சிறிது தாழ்ந்து காணப்படுவது அருந்ததியோடு கூடிய வசிஷ்டன். அவருக்கு மேற்கில் சிறிது உயர்ந்து காணப்படுகிறவர் அங்கிரசு, அவருக்கு அண்மை மேற்கில் சதுக்கமாயுள்ள நான்கு நட்சத்திரங்களில் ஈசானியத்தில் இருப்பவர் அத்திரி. அத்திரிக்கு தெற்கில் இருப்பவர் புலஸ்தியர். அவருக்கு மேற்கில் புலகர், அவருக்கு வடக்கில் மண்டலத்துக்கு வாயவியத்தில் இருப்பவர் கிரது. வசிஷ்டருக்குத் தென்கிழக்கில் மிகச் சூட்சுமமாகக் காணப்படுவதே அருந்ததி. இந்த சப்தரிஷிகளை முன்னிட்டு உதயமாகும் புலஸ்திய கிருதுகளுக்கு இணையான தக்ஷிணேத்திர ரேகையின் தெற்குப் பக்கத்தில் அசுவினியாதி நட்சத்திரங்களில் எது காணப்படுமோ, அந்த நட்சத்திரத்தோடு கூடியவர்களாகவே, அப்த சப்தரிஷிகள் நூறாண்டுக்காலம் இருப்பார்கள். இந்தப் பரீக்ஷித்து மன்னனின் காலத்தில் அவர்கள் மகா நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். இப்போதுதான் தேவமானத்தில் ஆயிரத்திருநூறு ஆண்டுக் காலமான கலியுகம் துவங்கியது. இது முன்னமே தோன்றினும், எப்போதும் ஸ்ரீ சாக்ஷõத் விஷ்ணுபகவான் வசுதேவ குலத்தில் கண்ணாக அவதரித்து மறுபடியும் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினாரோ, அப்போது தான் கலியுகம் வந்ததென்று சொல்லவேண்டும். ஏனெனில் பகவான் தமது திருவடித் தாமரைகளால் இந்த பூமியை ஸ்பரிசித்துக் கொண்டிருந்ததால் கலியானது பூமியில் வியாபிக்கும் சக்தியற்றதாக இருந்தது. எம்பெருமானின் அம்சமான கண்ணன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பிறகுதான் தருமபுத்திரர் விபரீதமான நிமித்தங்களைக் கண்டு, பரீக்ஷித்துக்குப் பட்டாபிஷேகம் செய்து தம்பியருடன் ராஜ்யத்தை விட்டு, மகாப் பிரஸ்தானம் போய்விட்டார். இனி சப்த ரிஷிகள் எப்போது பூர்வாஷாடா நட்சத்திரத்திற்குப் போவார்களோ அப்போது தான் நந்தர்களின் காலம்! அதிலிருந்து கலி விருத்தியடையும்!

எந்தத் தினத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தமது திவ்யலோகத்திற்கு எழுந்தருளினாரோ அன்றே கலியானது பூவுலகில் பிரவர்த்தித்தது. மைத்ரேயரே! அதன் தொகையைச் சொல்கிறேன் கேளும். சந்ததிகளையும் சந்தியம்சங்களையும் நீக்கி கலியுகத்தின் பிரமாணத்தைக் கணக்கிட்டால் மூன்று லக்ஷத்து அறுபதினாயிரம் ஆண்டுகளாகும். இதைத் தேவமானத்தால் கணக்கிட்டால், சந்தியாதிகளுடன் சேர்ந்து ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாகும். இந்தக் கலியுகம் கொஞ்சமும் மிச்சமில்லாமல் நீந்தியவுடன் மீண்டும் கிருதயுகம் உண்டாகும். யுகம்தோறும் மகாத்மாக்களான பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணத்தாரும் கடந்து போயினர். நான் அவர்கள் யாவரையும் குலமுறைப்படி உமக்குச் சொல்லவில்லை. ஏனெனில் அவர்கள் தொகை அனந்தம் பெயர்கள் அநேகருக்குச் சமமானவை. எனவே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல நேரிடும். ஆகவே முக்கியமான சிலரையே உமக்குச் சொன்னேன். புருவமிசத்தைச் சேர்ந்த தேவாபியும், இக்ஷ்வாகு வமிசத்தானாகிய புருவும் மகத்தான யோக பலத்தைக்கொண்டு, கலா பக்கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் இருந்துகொண்டு, வருங் கிருதயுகத்தில் இங்கு வந்து க்ஷத்திரிய வமிசத்தைத் தோன்றச் செய்வார்கள். இவர்களே மனுக்குலத்துக்கு விதையாக ஏற்படுத்தப்பட்டவர்கள்; இந்தக் கிராமத்திலேயே மனு வமிசத்தாரால் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் என்று மூன்று யுகங்களும் அனுபவிக்கப்படுகின்றன. கலியுகத்திலோ, இப்போது தேவாபியும் புருவும் இருப்பது போல் சிலர் மட்டுமே விதைபோல இருப்பார்கள் மைத்ரேயரே! இந்த மனு வமிசத்தைத் தூக்குத் தொகையாகவே உமக்குச் சொன்னேன்; இந்த அரசர்கள் இந்தப் பூமி எனக்கு எப்படி வசப்படும்? என் மகனுக்கு எப்படி வசமாகும்? என் குலத்தாருக்கெல்லாம் எப்படி வசப்பட்டிருக்கும்? அத்தகைய உபாயத்தை நாம் செய்யவேண்டும்! என்ற கவலையிலேயே ஒழிந்தார்கள், இப்போதுள்ள அரசர்களுக்கு முன்பு இருந்தவர்களும் அவர்களுக்கும் முந்தியவரும், இனி உண்டாகப் போகிறவர்களும் யாவரும் இப்படிப்பட்டவர்களே ஆவார்கள். சரத்காலத்தில் வெற்றியடையும் பொருட்டுப் படையெடுத்துச் செல்லும் பேரரசரை நோக்கி, மலர்ந்த மலர்களாகிய பற்களினால் பூமி சிரிக்கின்றது போலும்! இந்த விஷயமாக பூமிதேவியால் பாடப்பட்ட பாடல்களைச் சொல்கிறேன்; கேளும் இவற்றைப் பூர்வத்தில் தருமக்கொடி நாட்டியிருந்த ஜனக மன்னனுக்கு அசிதர் என்பவர் கூறியிருக்கிறார்.

பூமாதேவியின்பாடல் கருத்துமிகவும் சாதுரியமுள்ள அரசர்களுக்கு இப்படிப்பட்ட அஞ்ஞானம் ஏன் இருக்கிறதோ! தண்ணீரில் உண்டாகும் நுரைக்குச் சமமான தம்மைச் சதமாக இவர்கள் எண்ணுகிறார்களல்லவா? முன்பு தங்களை வென்று பிறகு முறையே மந்திரிகளையும் சேவகரையும் மக்களையும் வென்று பிறகு முறையே மந்திரிகளையும் சேவகரையும் மக்களையும் வென்று பிறகு எதிரிகளையும் ஜயிக்க நினைக்கிறார்கள். பகைவர்களை இப்படி ஜெயிப்பதால் கடல் சூழ்ந்த பூமியையெல்லாம் கைவசப்படுத்துவோம் என்ற பேராசையால் முயற்சிக்கிறார்களேயல்லாது, தம்மை நெருங்கி மிருத்யு வந்திருப்பதை அவர்கள் அறிவதில்லை! நல்லது; அவர்கள் நினைப்பதுபோல கடல் சூழ்ந்த பூமண்டலமானது அவர்களது கைவசப்பட்டபோதிலும் இதற்கு முதற்காரணமான ஆன்ம ஜயத்துக்கு இது ஒரு பயனாகுமோ? மோக்ஷமன்றோ ஆன்ம ஜயத்தின் பயனாகும்! இவ்வாறு நினைத்துப் பாடுபட்ட இவர்களது பாட்டன். பூட்டன் எல்லாம் தம்மோடு கூடக் கொண்டுபோகமாட்டாமல் விட்டுப்போன என்னை, அவர்களது மக்களாகிய இவர்கள் வசப்படுத்த நினைக்கிறார்களே, இதென்ன மடமை? அகங்காரங் கொண்ட இந்த அரசர்களுக்குள் பிதாவுக்கும் புத்திரனுக்கும் அண்ணன் தம்பிமாருக்கும் என் நிமித்தமாகப் போர் உண்டாகிறதல்லவா? இந்தப் பூமியெல்லாம் என்னுடையதே என்றும் என் வமிசத்தாருக்கே இது சாஸ்வதமாக இருக்கும் என்றும் கருதும் இந்த ஈன புத்தியான அரசர்கள் எல்லோருக்கும் முந்தியவர்களின் மரணத்திற்குப் பின்னும் உண்டாகியே இருந்தது. இதென்ன விந்தை! இவ்விதமாக மமதை கொண்டு, என்னைக் கொண்டு போகமாட்டாமல் விட்டுவிட்டு மரணமடைந்த ஒருவனைப் பார்த்தும் பின்னுண்டாகிறவனுடைய சித்தத்தில் இத்தகைய மமதையானது எப்படிக் குடிகொண்டிருக்கிறது? தன்னுடைய தூதரை, பிற அரசரிடம் அனுப்பி, இந்தப் பூமி என்னுடையது நீ இதை விட்டு ஓடிப்போ! என்று சொல்லியனுப்பும் அரசரைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! என்று பூமாதேவி பாடியுள்ளாள். இவற்றை நன்றாகக் கேட்பவருக்குச் சூரியனுக்கு முன்பு பனி அழிவதுபோல. மமதையானது அழிந்து போகும்!

உலகத்தைக் காக்கும் மகாவிஷ்ணுவின் அமிசாமிசங்களினால் அநேக மாமன்னர்கள் உண்டாகிய மனுவமிசத்தைப் பற்றி நான் உமக்குச் சொன்னேன். இதை முறையாகக் கேட்பவனது மனமானது தூய்மையாவதால் பாவமெல்லாம் போய்விடும். இந்தச் சூரிய சந்திர குலங்களைக் கேட்பதால் தனதானிய சம்பத்துகள் அதிகரிக்கும். இந்திரியங்களுக்கும் குறைவு ஏற்படாது. மகாபலசாலிகளாகவும் மகா வீரியமுள்ளவர்களாகவும் அளவற்ற பொருள் வளம் மிகுந்தவர்களாகவும் இருந்த இஷ்வாகு, ஜன்னு, மாந்தாதா, சகரன், ரகு, யயாதி முதலானவர்களெல்லாம் காலபலத்தால் ஒன்றுமின்றி மரணமடைந்து, கதையில் சொல்லத் தக்கவராய்ப் போனதைக் கண்டும் கேட்டும் விவேகமுடைய எவன்தான் பெண்டாட்டி, பிள்ளை, வீடு, நிலம் பொருள் முதலியவற்றின் காரணமாக மமதைகொண்டு திரிவான்? மகா வலிவுள்ள தோள்களுடன் கூடி பல்லாண்டுகள் தவஞ்செய்து, பலவிதமான பேறுகளைப் பெற்று, யாகாதிகளைச் செய்து மிகவும் புகழ் வாய்ந்தவர்களாக இருந்தவர்களும் கால பலத்தால் கதையிலே சொல்லப்படும்படி ஆனார்கள். பிருது என்பவன் சத்துருக்கள் அனைவரையும் வென்று சகல உலகங்களுக்கும் சென்றுகொண்டிருந்தான். அவனும் நெருப்பில் அகப்பட்ட இலவம் பஞ்சுப்போலக் காலச் சக்கரத்தில் பட்டு ஒரு நிமிஷத்தில் மாண்டுபோனான். பகைவர் அனைவரையும் வென்று, சகல தீவுகளையும் கைப்பற்றிய கார்த்த வீரியார்ச்சுனனும் கதைகளில் சொல்லப்படும் அப்படிப்பட்ட ஒருவன் இருந்தானாவென்று சந்தேகிக்கும்படி ஆகிவிட்டான்! எவரும் கொண்டாடும் படியான செல்வமும் கீர்த்தியும் பெற்றிருந்த இராவணன், அவிக்ஷதன், ரகுவமிசத்தார் முதலியவர்களுடைய சாம்பலும் இமயனுடைய புருவ நெறிப்புடன் கூடிய பார்வையினால் இந்த உலகத்தில் இல்லாமற் போயிற்றல்லவா? மாந்தாதா என்று பெயர் படைத்த மாமன்னனும் பழைய கதையானதைக் கண்டு எந்தப் புத்தியீனனும் மமதையை வகிக்கமாட்டான்! பகீரதன் முதலியோரும் சகரனும் காகுஸ்தனும் இராவணனும் ஸ்ரீராம லக்ஷ்மணரும் யுதிஷ்டிரர் முதலியோரும் முன்பு இருந்தார்கள் என்பது மெய்யோ, பொய்யோ என்னும்படி ஆகிவிட்டது. அவர்கள் இருந்தார்கள் என்பது மெய் என்றால் அவர்கள் இப்போது எங்கே போனார்கள் நமக்குத் தெரியவில்லை! பிராமண உத்தமரே! மாபெரும் மகிமையுடையவர்களாக நான் உமக்குச் சொன்ன பூர்வீகப் பேரரசர்கள் அடைந்த கதியை இப்போது இருக்கும் அரசர்களும் இனிமேல் வரப்போகிற அரசர்களும் அடைவார்கள். இந்தக் காரியத்தை அறிந்து, புத்திசாலியான மனிதன் அகந்தைக் கொள்ளக்கூடாது. இப்படியிருக்க புத்திரன், மனைவி முதலானவற்றில் மமதை கொள்ளக்கூடாது என்பதை நான் சொல்லவா வேண்டும்?இவ்வாறு பராசரர் கூறினார்.

நான்காவது அம்சம் முடிந்தது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் நான்காவது அம்சம்—-இரண்டாவது பாகம் —

February 28, 2021

6. சந்திரன்-தாரை, புரூரவன்-ஊர்வசி கதைகள்
7. கவுசிக வம்ச வரலாறு
8. காசி அரசர்கள் வரலாறு
9. ரஜி வரலாறு
10. யயாதி மாமன்னன் கதை
11. கார்த்த வீரியார்ஜுனன்
12. ஜயாமகனின் பிள்ளைப்பேறு
13. சியமந்தகமணியின் கதை
14. அனமித்திர வம்ச வரலாறு

———–

6. சந்திரன்-தாரை, புரூரவன்-ஊர்வசி கதைகள்

புராணம் கூறிவரும் பராசரரை நோக்கி, சுவாமி! சூரிய வமிசத்தில் பிறந்த அரசர்களைப் பற்றி எனக்குச் சொன்னீர்கள். இனி சந்திர வம்சத்திற் பிறந்த அரசர்களைப் பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். நிலையான கீர்த்தியைப் பெற்ற அந்தச் சந்திர குலத்து அரசர்களின் சந்ததியானது இன்றும் புகழுடன் இருக்கிறதல்லவா? ஆகையால், தயைகூர்ந்து சந்திர வமிசத்தில் உதித்த அரசர்களைப் பற்றியும் கூறியருள வேண்டும்! என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வமிசமும் அதிபல பராக்கிரமங்களும் தேஜஸும் நன்குணர்ந்த செயல்களுமுள்ள நகுஷன், யயாதி கார்த்தவீர்யார்ச்சுனன் முதலிய பேரரசர்களால் சிறப்புடையதாகும். இதை ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். சகல லோக கர்த்தராகிய ஸ்ரீமந் நாராயணனுடைய நாபி கமலத்தில் உதித்த பிருமாவின் குமாரர்-அத்திரி என்ற முனிவர். அவருடைய மகன் சந்திரன். அவனைச் சதுர்முகப் பிரமன் சகல அவுஷாதிகளுக்கும், பிராமணர்களுக்கும், நட்சத்திரங்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தார். அதன் மேன்மையாக சந்திரன் ஒரு ராஜசூய யாகம் செய்தான். பிறகு அதன் மகிமையினாலும் மேன்மையான அதிகாரத்தைப் பெற்றிருந்ததாலும் மதமும் கர்வமும் கொண்டு, சகல தேவர்களுக்கும் குருவாகிய பிரகஸ்பதியின் மனைவியான தாரை என்பவளை அபகரித்துக் கொண்டான். இந்தச் செய்தியை பிருமா, பிருகஸ்பதிக்கு அறிவித்தார். அதனால் சந்திரனுக்கு பிரகஸ்பதி எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் தேவரிஷிகள் எல்லோரும் வேண்டிக் கொண்டதையும் சந்திரன் கேட்காமல், தன் குருபத்தினியானத் தாரையை விடவில்லை. அதனால் போருக்கு இடமுண்டாயிற்று, அப்போது பிரகஸ்பதியிடம் பகைத்துக் கொண்டிருந்த அசுர குருவான சுக்கிரன் சந்திரனுக்குப் பக்கமாகச் சேர்ந்து கொண்டான். அதனால் அந்த அசுரகுரு சுக்கிரனின் சீடர்களான ஜம்பன் கும்மன் முதலான தானவர்களும் சந்திரன் பக்கம் சேர்ந்துக் கொண்டுப் போர் புரியத் தயாரானார்கள். ஸ்ரீருத்திர பகவான் அங்கிரசரிடம் கல்வி கற்றதால், குரு புத்திரராகிய பிரகஸ்பதிக்குத் துணைவரானார். அசுரர்களெல்லாம் சந்திரனின் சார்பில் சேர்ந்ததால் தேவேந்திரன் சகல தேவ சைன்னியர்களுடன் போர் புரிய முற்பட்டான். இவ்வாறு தேவர்களுக்கும் அசுரருக்கும் ஏற்பட்டப் போரானது தாரையின் காரணமாக நிகழ்ந்ததால் அந்தப் போருக்கு தாரகாமயம் என்று பெயர் ஏற்பட்டது. அந்தப் பெரும் போரில் இருதரப்பாரும் விதவிதமாய் ஆயுதங்களை உபயோகித்துத் தாக்கினார்கள்; இதனால் உலகம் யாவும் கலக்கமுற்றது, யாவரும் பிருமாவைச் சரணமடைந்தார்கள். அப்போது, பிருமாவானவர், சுக்கிரனையும் சிவனையும் அசுரனையும் தேவரையும் தடுத்து, சந்திரனுக்குப் புத்தி சொல்லி, தாரையைப் பிரகஸ்பதியிடம் திருப்பியனுப்பச் செய்தார். அத்துடன் சண்டையும் நின்றது.

பிறகு தம் மனைவி தாரை கருவுற்றிருந்ததை அறிந்த தேவகுருவான பிரகஸ்பதி அவளை நோக்கி, அடிபெண்ணே! எனது க்ஷேத்திரத்தில் நீ மற்றவனுடைய கருவை ஏற்றிருக்கக் கூடாது. இதுவரையில் நீ செய்த சாகசம் போதும். இனி அந்தக் கருவை விட்டுவிடு! என்றார். அதைக் கேட்ட தாரை மிகவும் பதிவிரதையாகையால், கணவனின் சொற்படி கருவை ஒருநாணற்செத்தையின் மீது விட்டுவிட்டாள். அந்தக் கருவினால் பிறந்த குழந்தை, பிறந்தவுடனேயே சகல தேவரையும் தோற்கடிக்கும்படியான திவ்யதேஜசோடு விளங்கியதைக் கண்டதும் பிரகஸ்பதி அந்தக் குழந்தை தனது பிந்துவுக்குப் பிறந்திருக்கலாம் என்று அந்தக் குழந்தையின் மீது விருப்பங் கொண்டிருந்தான். இருவருமே இவ்விதமாக அந்தக் குழந்தையின் மீது விருப்பம் கொண்டிருந்ததால் தேவர்கள் சந்தேகங்கொண்டு தாரையை நோக்கி பெண் அரசியே! இவன் சந்திரனுக்குப் பிறந்தவனா? உன் கணவரான தேவகுருவுக்கப் பிறந்தவனா? அதை எங்களுக்கு சொல்வாயாக! என்று பலமுறைகள் விடாமல் கேட்டார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்று கேட்டும் தாரை வெட்கத்தால் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். அப்போது அவளுடைய குமாரன் கோபங்கொண்டு, அவளைச் சபிக்க முயன்று, அவளைப் பார்த்து, ஓ துஷ்டையான தாயே! நீ ஏன் என் தந்தை யாரொன்பதைத் தெரிவிக்காமல் இருக்கிறாய்? இன்னும் நீ இதைத் தெரிவிக்கத் தயங்கினால் பொய் வெட்கமுள்ள உனக்குத் தகுந்த சிøக்ஷ செய்வேன்! என்று கடுகடுத்துச் சொன்னான். அப்பொழுது பிருமதேவர், அந்தக் குமாரனைத் தடுத்து, உண்மையைச் சொல்லும்படி தாரையிடம் கேட்டார். தாரை மிகவும் வெட்கத்தினால் தலைகுனிந்து கொண்டு, இவன் சந்திரனுடைய மகன்தான்! என்று சொல்லிவிட்டாள். பிறகு சந்திரன் மிகவும் மகிழ்ந்து, தன் புத்திரனைக் கட்டியணைத்து முத்தமிட்டு, குழந்தாய்! நீ மிகவும் அறிவுடையவனாகையால் உனக்கு புதன் என்று பெயர் சூட்டுகிறேன்! என்று அவனுக்குப் பெயரிட்டான்.

அந்தப் புதன் என்பவன் இளை என்பவளிடம் காமுற்று புரூரவனைப் பெற்றான். புரூரவன் தான தருமங்களைச் செய்வதில் வள்ளலாக விளங்கினான். அவன் யாகங்கள் பலவற்றைச் செய்தவன். மிகவும் ஆணழகன். ஒரு காலத்தில் ஒரு சமயம் தேவலோகத்து அப்சரஸான ஊர்வசியின் மீது சித்திரா வருணர்கள் காதல் கொண்டார்கள். அதற்கு ஊர்வசி இணங்காததினால் அவர்கள் கோபங்கொண்டு, நீ மனிதனின் மனைவியாகக் கடவாய்! என்று சபித்தார்கள். அதனால் ஊர்வசி சில காலம் பூவுலகத்தில் இருக்கும்படி வந்தாள். வந்தவிடத்தில் மகாரூபனாகவும் மிகவும் நல்ல மனதுள்ளவனாகவும் சத்திய சந்தனுமாக விளங்கும் புரூரவச் சக்கரவர்த்தியைக் கண்டாள். அவனைக் கண்டதும் பெண்மைக்கே உரிய பெருமையையும் சொர்க்க சவுக்கியத்தில் உண்டாகியிருந்த விருப்பத்தையும் ஊர்வசி விட்டு விட்டு, அளவற்ற காதலோடு அவனருகே சென்றாள். உலகத்திலுள்ள எல்லாப் பெண்களையும் விட மேலான காந்தி, சுகுமாரத்துவம், லாவண்யம், விலாசம் முதலியவற்றில் சிறந்து விளங்கும். அந்த தேவமங்கையைக் கண்டதும் புரூரவ மன்னனும் தனது மனதைப் பறிகொடுத்தான். இவ்வாறு அவர்கள் இருவரும் ஒரே மனதுடையவராய் வேறு நோக்கமின்றி எல்லா பயன்களையும் விட்டிருந்தார்கள். அப்போது புரூரவன் அவளை நோக்கி, பெண்ணே! நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என் மீது மனம் வைக்க வேண்டும்! என்றான். அதற்கு ஊர்வசி மன்னவரே நான் சொல்வதை ஏற்று நீங்கள் நடப்பதானால் உமது இஷ்டத்துக்கு இணங்குகிறேன்! என்றான். உடனே புரூரவன் உன் சங்கேதத்தைச் சொல்லடி, கண்ணே என்றான். அதனால் தேவகன்னிகை ஊர்வசி அவனைப் புன்முறுவலுடன் நோக்கி, அரசனே நான் இரண்டு ஆடுகளைக் குழந்தைகளைப் போல வளர்த்து வருகிறேன். அவை எப்போதும் என் படுக்கையின் அருகிலேயே இருக்க வேண்டும். அங்கிருந்து அவற்றை யாருமே அபகரிக்கக் கூடாது. இது ஒரு நிபந்தனை. நீங்கள் திகம்பரராக நிர்வாணத்தோடு இருக்கும்போது நான் உம்மைப் பார்க்கக் கூடாது. இது இரண்டாவது நிபந்தனை. எனக்கு நெய்யைத் தவிர, வேறு ஆகாரம் ஒன்றுங்கூடாது. இது மூன்றாவது நிபந்தனை! இந்த மூன்றில் எது தவறினாலும் நான் உம்முடன் இருக்கமாட்டேன் என்றாள். அவளது நிபந்தனைக்கு புரூரவன் ஒப்புக்கொண்டு அப்படியே ஆகட்டும், கண்ணே! என்று சொன்னான். அவளும் அவனிஷ்டத்துக்கு இணங்கி, அவனுடன் இருந்து வந்தாள்.

பிறகு புரூரவ மாமன்னன் அவளோடு, அளகாபுரியிலும் சயித்திரரத முதலிய திவ்விய வனங்களிலும் மானசத் தடாகங்களிலும் வேடிக்கையாக விளையாடிக் கொண்டு, காதல் கேளிக்கைகளில் களித்துத் திரிந்து நாளுக்கு நாள் மகிழ்ச்சி மீதூர வாழ்ந்து வந்தான். இப்படியே அறுபத்தோரு ஆண்டுகள் கழிந்தன. ஊர்வசியும் அவனைப் போலவே, சுவர்க்கலோகத்து இன்பத்தையும் பெரிதாக எண்ணாமல் யோகானந்தத்தையே பெரிதாக எண்ணி மகிழ்ந்திருந்தாள். இந்நிலையில் தேவலோகத்தில் ஊர்வசி இல்லாததால், மற்ற தேவதாசிகளுக்கும் சித்தர், வித்தியாதரர்களுக்கும் தேவலோகம் ரமணீயமாக இருக்கவில்லை. ஆகையால், கந்தருவர்களின் அரசனாகிய விசுவாவசு என்பவன் ஊர்வசியை மறுபடியும் தேவருலகுக்குக் கொண்டு செல்வதற்கு உபாயம் என்னவென்று யோசித்தான். புரூரவனோடு கூடி மகிழ்ந்து தேவலோகத்தை ஊர்வசி மறந்திருக்கிறாள் என்றாலும் புரூரவனுக்கு அவள் விதித்திருக்கும் நிபந்தனைகளை விசுவாவசு அறிந்து கொண்டு ஓரிரவில் கந்தர்வர்களோடு வந்து கூடி படுக்கையின் அருகேயிருந்த ஆடுகளில் ஒன்றை அபகரித்துக் கொண்டு சென்றான். அவன் ஆகாயமார்க்கமாக அதைக்கொண்டு போகும் போது அந்த ஆடு அபயக்குரல் எடுத்துக் கத்தியது. அதைக்கேட்ட ஊர்வசி, ஐயோ! என் குழந்தையை யாரோ அபகரித்துச் செல்கிறாரே! அநாதையான நான் இந்தத் தருணத்தில் யாரிடம் இதைப் புகல்வேன்? என்று கூறினாள். அந்த கூக்குரலைக் கேட்டதும் புரூரவ மன்னன் துள்ளியெழுந்தான் என்றாலும் தான் நிர்வாணமாக இருப்பதால், மற்றொரு நிபந்தனைப்படி தன்னை ஊர்வசி பாராமலிருக்க வேண்டுமே என்று நினைத்து, அங்கிருந்து அவன் அகலவில்லை, பிறகு கந்தருவா மற்றொரு ஆட்டையும் கவர்ந்து கொண்டு சென்றார்கள். அந்த ஆடும் கத்தியது. அதை ஊர்வசி கேட்டு ஐயையோ! எனது மற்றொரு குழந்தையும் கொண்டு போகிறார்களே! எனக்கு கணவனும் இல்லை! வீரமில்லாத அற்பமான ஒருவனைச் சேர்ந்து நான் இப்படியாகி விட்டேனே! என்று கதறியழுதாள். அதைக் கேட்டு சகியாத புரூரவன் ஆத்திரத்துடன் குமுறியெழுந்து அளவில்லாத கோபங்கொண்டு இருட்டுள்ள இரவாக இருப்பதால் நிர்வாணமான தன்னை ஊர்வசி பார்க்கமாட்டாள் என்று நினைத்துக்கொண்டு அப்படியே எழுந்து கையிலே வாளையுருவிக் கொண்டு, அடா யாரடா திருடன்? என்று ஆரவாரத்தோடு பாய்ந்து சென்றான். அந்த சமயத்தில் கந்தருவர் மிகவும் பிரகாசமான மின்னல் ஒன்றை உண்டாக்கினார்கள். அந்த மின்னல் வெளிச்சத்தில் ஆடையற்றிருந்த அரசனை ஊர்வசி கண்டாள். உடனே அவர் தனது நிபந்தனைக்கு பங்கம் வந்தது என்று சொல்லி அவனைவிட்டு சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தாள். கந்தருவரும் ஆடுகளை அங்கேயே விட்டு விட்டுத் தாங்களும் தேவலோகத்துக்குச் சென்றார்கள். புரூரவ மன்னன் வழியில் ஆடுகளைக் கண்டதும் மகிழ்ந்து படுக்கையில் வந்து படுத்தான். அங்கே ஊர்வசியைக் காணாமல் விசனமுற்றான். அதன் பிறகு அவன் திகம்பரனாகவே (நிர்வாணமாகவே) எங்கெங்கோ ஊர்வசியைத் தேடிப் பார்த்தும் அவள் அகப்படாததால் பைத்தியம் பிடித்து, அந்தக் கோலத்துடனேயே கண்ட இடங்களில் திரிந்து கொண்டிருந்தான். இது இப்படியிருக்க ஒரு தினம் குரு÷க்ஷத்திரத்திலுள்ள ஒரு தாமரைத் தடாகத்திலே வேறு நான்கு தேவமங்கையருடன் ஊர்வசியும் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட புரூரவன், பைத்தியத்தைப் போலவே அவள் அருகே சென்று அடி என் காதலி! சிறிது நேரம் நில், சிறிது நேரம் என்னோடு பேசு, இருவரும் சிறிதுநேரமாகிலும் கூடியிருப்போம்! என்று பலப்பல காதல் வார்த்தைகளைச் சொல்லி அவளிடம் கெஞ்சினான். அதற்கு ஊர்வசி, பூலோக வேந்தே! உமது விவேகமற்ற செய்கை போதும், நான் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன், இந்த வருஷத்தின் முடிவில் இங்கு வாரும்! உமக்கு ஒரு நல்ல மகன் பிறந்திருப்பான். பிறகு நான் உம்மோடு ஒரு நாள் கூடியிருப்பேன் இப்போது போய்விடும்! என்று சொன்னாள். புரூரவனும் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் நகருக்குப் போய்ச் சேர்ந்தான்.

அப்போது ஊர்வசி தன் தோழியரை நோக்கி தோழிகளே அவர்தான் புரூரவச் சக்கரவர்த்தி! அவருடன் கூடித்தான் நான் இத்தனை நாட்கள் விருப்பமும் மகிழ்ச்சியுமாகக் களித்திருந்தேன் என்று சொன்னாள். அதைக் கேட்ட தெய்வப் பெண்களும் அவன் மிகவும் அழகன், அரசர்க்கும் அரசன். ஆகையால் நாங்களுங்கூட அவனுடன் கூட சுகித்திருக்க விரும்புகிறோம், என்று சொன்னார்கள். பிறகு ஊர்வசியின் சொற்படி அந்த ஆண்டின் முடிவில் அவள் குறிப்பிட்ட அதே இடத்துக்கு புரூரவச் சக்கரவர்த்தி சென்றான். அங்கே ஊர்வசி, ஆயுசு என்ற ஒரு மகனைப் பெற்று, அரசனின் கைகளில் ஒப்படைத்து, ஓரிரவு அவனுடன் கூடியிருந்து ஐந்து பிள்ளைகளைப் பெறும்படியான கர்ப்பத்தையடைந்தாள். அன்றியும் அவள் அரசனை நோக்கி, அரசே! நம்மிடம் கொண்ட அன்பினால் கந்தர்வர்கள் உமக்கு வரங்கொடுக்க வந்திருக்கிறார்கள். ஆகையால் உமக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக் கொள்ளும் என்றாள். ஆனால் புரூரவனோ பெருமூச்சு விட்டு, நான் பகைவர்கள் அனைவரையும் வென்று, இந்தரிய சக்தி தப்பாதவனாய் பந்துக்களிலும், சேனைகளிலும், பொக்கிஷத்திலும் குறைவற்றவனாகவும் இருப்பதால் எனக்கு வேண்டுவது வேறொன்றும் இல்லை. ஆனால் எனக்கு வேண்டுவது ஊர்வசியின் அருகே எப்பொழுதும் இணைபிரியாமல் இருப்பதேயாகும். ஆகையால் என் காலத்தை ஊர்வசியுடனே கழிக்க விரும்புகிறேன், என்றான். உடனே, கந்தர்வர்கள் அவனிடம் ஒரு அக்கினிஸ்தாலி ஒன்றைக் கொடுத்து, அரசனே! நீர் வேதத்தை அனுசரித்து இந்த அக்கினியை மூன்றாக்கி ஊர்வசியின் அருகிலேயே இருக்கும் பயனைக் கருதியாகஞ் செய்து உன் இஷ்டத்தைப் பெறுவீராக! என்றார்கள். அதன் பிரகாரம் புரூரவன் அந்த அக்கினி ஸ்தாலியை கையில் எடுத்துக் கொண்டு வரும் போது நடுக்காட்டில் இது என்ன மடமை! ஊர்வசியை நம்முடன் அழைத்துக் கொண்டு வராமல் அக்கினி ஸ்தாலியையன்றோ கொண்டு செல்கிறாய். இதனால் என்ன பயன்? என்று நினைத்து பித்தனைப் போல அந்த ஸ்தாலியை அங்கேயே வைத்து விட்டு பட்டணம் போய்ச் சேர்ந்தான். அங்கே, நள்ளிரவில் விழித்துக் கொண்டு, ஓகோ! ஊர்வசி சாலோக்கியத்தைப் பெறுவதற்காக கந்தர்வர் நமக்குக் கொடுத்த அக்கினி ஸ்தாலியை காட்டிலே போட்டுவிட்டு வந்தோமே! அதை இப்போதே போய்க் கொண்டு வரவேண்டும் என்று எண்ணி ஓடிச்சென்று, ஸ்தாலியை வைத்த இடத்தில் தேடினான், அதைக் காணாமல் அங்கே வன்னிமரத்தை நடுவிற்கொண்ட அரசமரம் ஒன்று இருப்பதைக் கண்டு, நம்முடைய அக்கினி ஸ்தாலிதான் இந்த மரமாகி இருக்கவேண்டும். ஆகையால் அக்கினி ரூபமான இதனையே கொண்டுசென்று அரணியாகக் கடைந்து அக்கினியை உண்டாக்கி அதனை உபாசிப்போம்! என்று கருதி, அதை அப்படியே நகரத்துக்கு எடுத்துச்சென்று காயத்திரி மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே அரணியைக் கடைந்தான். அந்த அரணியும் காயத்திரி மந்திர எழுத்துக்களின் கணக்குப்படி இருபத்து நான்கு அங்குல அளவுள்ளதாக ஆயிற்று. பிறகு அரணியைக் கடைந்து அக்கினியை உண்டாக்கி, அதை மூன்றாக்கி வேதவிதிப்படி ஊர்வசி சாலோக்கியத்தைக் கருதிப் பல யாகங்களைச் செய்தான். அதனால் கந்தர்வ லோகத்திற்கு புரூரவன் சென்று ஊர்வசியோடு இணைபிரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆதியில் இருந்த அக்கினி ஒன்றே அந்த ஒன்றே இந்த மனுவந்தரத்தில் மூன்றாக்கப்பட்டது.

———-

7. கவுசிக வம்ச வரலாறு

மைத்ரேயரே, மேலும் கேளும். அந்தப் புரூரவ மாமன்னனுக்கு ஆயுசு, அமாவசு, விசுவாவசு, சுருதாயு, சதாயு, அயுதாயு என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அமாவசு என்பவனுக்கு பீமன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்குக் காஞ்சனன் பிறந்தான். காஞ்சனனுக்கு கதோத்திரன் அவனுக்கு ஜன்னு, அந்த ஜன்னு என்பவன் யாகஞ்செய்து கொண்டிருக்கும் போது கங்கை நதியானது அந்த யாகசாலைக்கு வந்து யாவற்றையும் முழுகடித்தது. அதைக்கண்டதும் ஜன்னு கோபத்தால் கண் சிவந்தான். ஸ்ரீயக்ஞ புருஷனைத் தியான பலத்தால் இதயத்தில் நிறுத்தி அந்த தேஜஸால் கங்கையைப் பானஞ்செய்துவிட்டான். பிறகு தேவ ரிஷிகள், அவனை வேண்டியபின் கங்கையை விடுவித்து, அந்த கங்கையை அவனுடைய மகளாக வைத்தார்கள். அதனால் கங்கைக்கு சான்னவி என்ற பெயர் உண்டாயிற்று. அந்த ஜன்னுவுக்கு சுமந்து என்பவன் பிறந்தான். அவனுக்கு அசகன், அவனுக்கு பலாகாசுவன், அவனுக்கு குசன், அவனுக்கு குசாம்பன், குசநாபன். அதூர்த்தரஜசுவசு என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் குசாம்பன் என்பவன் எனக்கு இந்திர சமானனான புத்திரன் உண்டாக வேண்டும் என்று தவஞ்செய்தான். அப்போது தேவேந்திரன், நமக்குச் சமானமாய் மற்றொருவன் உண்டாக வேண்டாம் என்று தானே அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அவன் பெயர் காதி, கவுசிகன் என்றும் அவன் வழங்கப்படுவான். அந்தக் காதிக்கு சத்தியவதி என்ற பெண் ஒருத்தி பிறந்தாள். அவளைப் பிருகு முனிவரின் மகனாகிய ரிசீக மாமுனிவர் தமக்குக் கொடுக்கும்படியாகக் கேட்டார். அதற்கு காதியானவன் இந்த முனிவரோ பிராமணர் மேலும் கிழவர், கோபக்காரர்! என்று நினைத்து அவளை அவனுக்குக் கொடுக்க மனமில்லாமல் அவரை நோக்கி ஒரு காது மட்டும் கறுப்பாகவும், மற்றைய அவயவங்கள் எல்லாம் சந்திரனைப் போலப் பிரகாசிக்கும் படியாகவும் காற்றைவிட வேகமாகச் செல்லக்கூடிய ஓராயிரம் குதிரைகளை கன்யாசுல்கமாகக் கொடுத்தால், என் புதல்வியை நான் உமக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன் என்றான். அதற்கு ரிசீக முனிவர் இணங்கி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு வருணனிடம் சென்று அஸ்வ தீர்த்தத்தில் பிறந்த ஆயிரம் குதிரைகளைக் கொண்டுவந்து அவனிடம் ஒப்படைத்து, அந்தக் கன்னியைக் கல்யாணம் செய்து கொண்டார். பிறகு ரிசீகமுனிவர் அவளுக்கும் புத்திரோற்பத்தி செய்வதற்கு ஒரு சருவைச் செய்து வைத்தார். சரு என்பது ஒருவகைச் சோறு ஆகும். அதைக் கண்ட அவருடைய மனைவியாகிய சத்தியவதி அவரைவேண்டித் தனது தாய்க்கு ஒரு புத்திரன் உண்டாவதற்காக ஒரு சருவைச் செய்விக்கும்படி செய்தாள். இவ்விதமாக ரிசீகமுனிவர் தமது பத்தினிக்குப் பிரம தேஜசுடன் கூடிய புத்திரன் உண்டாவதற்கான சருக்களைக் கொடுத்து, நீ இந்த சருவையும் உன் தாய் அந்த சருவையும் புசிப்பீர்களாக! என்று சொல்லி விட்டு வனத்துக்குச் சென்றார்.

பிறகு தாயும், மகளும் சருவைப் புசிக்கும்போது, சத்தியவதியின் தாய், மகளே! உலகத்தில் எவனுமே தன் புத்திரனுக்கே மேன்மையான குணங்கள் இருக்கவேண்டும் என்று விரும்புவான். அஃதன்றி தன் பத்தினியின் தம்பிக்கு அக்குணங்கள் இருக்கவேண்டும் என்று விரும்பமாட்டான். ஆகையால் உனக்கு உன் புருஷன் கொடுத்த சருவானது சிறப்பானதாக இருக்கவேண்டும். க்ஷத்திரிய ஜாதியான எனது மகன் பூவுலக ஆளவேண்டியவன். ஆகையால், இப்படிப்பட்டவனுக்கு மேலான குணங்கள் அமைந்தால் சிறப்பான பயன்கள் ஏற்படும். பிராமணனுக்குப் பல பராக்கிரம சம்பத்துகள் இருப்பதால் யாது பயன்? ஆகையால் உன்னுடைய சருவை எனக்குக் கொடுத்துவிட்டு, என் சருவை நீ வாங்கி சாப்பிடு! என்று சொன்னாள்; அதற்கு மகள் சத்தியவதியும் ஒப்புக்கொண்டாள். தன் சருவைத் தான் வாங்கிப் புசித்தாள். பிறகு ரிசீக முனிவர், காட்டிலிருந்து திரும்பி வந்து கருவுற்றிருக்கும் தமது பத்தினியின் தேகத்தை கண்டு அவளை நோக்கி, அடிபாதகீ! செய்யக்கூடாத காரியத்தை நீஏன் செய்தாய்? ஏனென்றால், உன் தேகமானது மிகவும் ரவுத்ர ரூபமாகக் காணப்படுகிறது. அதற்குக் காரணம் உன் தாய்க்குக் கொடுத்த சருவை நீ புசித்திருக்கிறாய் என்று தெரிகிறது. இது தகுதியற்றது. நான் அந்தச் சருவில் சகல ஐஸ்வரிய வீரிய பலங்களையும் ஏற்றியிருக்கிறேன். உன் சருவிலே ஞானம், சாந்தி, பொறுமை முதலிய பிராமண குணங்களை ஏற்றியிருக்கிறேன். இதை நீ மாற்றி விட்டாயாகையால் உனக்கு உக்கிரமான அம்புகளை எய்யக்கூடிய க்ஷத்திரிய ஆசாரமாய் நடக்கக்கூடிய புதல்வன் தான் பிறப்பான். உன் தாய்க்கோ பொறுமை முதலிய குணங்களையுடைய பிராமணச் சாரமுள்ள குமாரன் பிறப்பான் என்று கூறினார். தன் கணவன் இவ்வாறு கூறியதும் சத்தியவதி அவரது திருவடிகளில் வீழ்ந்து, பிராணநாதா! அடியாள் தெரியாத்தனத்தால் அப்படிச் செய்துவிட்டேன். அடியாள் மீது அருள்காட்ட வேண்டும். அத்தகைய புத்திரன் எனக்கு வேண்டாம் சருவின் பலம் தப்பாதாகையால் என் பேரன் அப்படியாகட்டும் என்று வேண்டினாள். அதனால் அவள் மீது ரிசீக முனிவர் கருணை கொண்டு நல்லது அப்படியே ஆகட்டும்? என்று அனுக்கிரகஞ் செய்தார். பிறகு, சத்தியவதி ஜமதக்னி என்ற மகனைப் பெற்றாள். அவளுடைய தாய் விசுவாமித்திரதைப் பெற்றாள். அந்த சத்தியவதி, சிலகாலம் சென்ற பிறகு கவுஷதி என்ற நதியானாள். அவளது பிள்ளையான ஜமதக்னி முனிவர், இஷ்வாகு வம்சத்து அரசனான ரேணு என்பவனின் புதல்வியான ரேணுகையைத் திருமணஞ்செய்து கொண்டார். அவளது வயிற்றில் ஸ்ரீமந்நாராயணனின் அம்சத்தால், சகல க்ஷத்திரிய வம்ச நாச காரணரான பரசுராமர் பிறந்தார். விசுவாமித்திரருக்கோ பிருகு வமிசத்தைச் சேர்ந்த சுனச்சேபனே, தேவதைகளால் மகனாகக் கொடுக்கப்பட்டான். தேவர்களால் கொடுக்கப்பட்டதால் அவன் தேவராதன் என்ற பெயரைப் பெற்றான். பிறகு விசுவாமித்திரருக்கு மதுச்சந்தன், தனஞ்சயன், கிருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிரன் என்ற வேறு பிள்ளைகளும் பிறந்தார்கள். அவர்களால் கவுசிக கோத்திரங்கள் உண்டாயின. அந்தக் கோத்திரத்தார் எல்லாம் வெவ்வேறு பிரவரம்(பிரவரம்-கோத்திரத் தலைவர் முறைமை) உள்ள குலங்களில் விவாகஞ் செய்து கொள்ள வேண்டியவராய் உள்ளனர்.

————-

8. காசி அரசர்கள் வரலாறு

மைத்ரேயரே, மேலும் கேட்பீராக! புரூரவசின் மூத்தகுமாரனான ஆயுசு என்பவன் ராகுவின் மகளைத் திருமணஞ்செய்து நகுக்ஷன் க்ஷத்திர விருத்தன், ரம்பன், ரஜீ, அனேனசு என்ற ஐந்து பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் க்ஷத்திர விருத்தனுக்கு சுஹோத்திரன் பிறந்தான். அவனுக்கு காசியன், காசன், கிருச்சமதன் என்ற மூவர் பிறந்தனர். கிருச்சமதனுக்கு சவுனகன் பிறந்தான். அவன் நான்கு வர்ணங்களை உண்டாக்கினான், காசியன் என்போனுக்குக் காசி மன்னனான காசேயன் உண்டானான். அவன் மகன் ராஷ்டிரன், அவன் மகன் தீர்க்கத பசு, அவனுக்கு தன்வந்திரி பிறந்தான். முன்பு திருப்பாற்கடலில் உதித்தபோது எல்லாப் பிறவிகளிலும் எல்லா ஞானங்களையும் அறிந்த ஸ்ரீமந்நாராயணன் அந்த தன்வந்திரிக்கு நீ காசி ராஜவமிசத்திற் பிறந்து எண்வகையான வைத்திய நூல்களையும் செய்யக் கடவாயாக! வேள்விகளில் அவிர்ப்பாகமும் புசிக்கக் கடவாய்! என்று வரமளித்தார். அந்த தன்வந்திரியின் மகன் கேதுமான். அவன் மகன் பீமரதன், அவன் மகன் பிரதர்த்தனன். அவன் பத்திரசிரேணிய வமிசத்தை நாசஞ் செய்தமையால் சகல சத்துருக்களையும் நாசஞ்செய்தானென்று கொண்டு சத்துருஜித்து என்ற பெயரை அடைந்தான். அவன் தந்தையான திவோதாசன் அதிக அன்பினால், அவனை வத்சரன்று அழைத்து வந்ததால், வத்சன் என்ற பெயரும் அவனுக்குண்டு. அவன் மிகவும் சத்தியவானாகையால் சத்தியத்துவசன் என்ற பெயரையும் பெற்றான். அன்றியும் அவன் குவலயம் என்னும் புகழ்பெற்ற குதிரையொன்றை வைத்திருந்தால் குவலயாசுவன் என்ற பெயரையும் பெற்றான். அவன் மகன் அளர்க்கன், அவனைப் பற்றியொரு சுலோகம் இந்தக் காலத்தும் வழங்குகிறது. அதாவது, அளர்க்கனை விட மற்ற எவன் தான் அறுபத்தாறாயிரம் ஆண்டுக்காலம் இந்த பூமியை ஆண்டான்? என்பதுதான் அந்த சுலோகம் அவ்வாறு புகழப்படும் அளர்க்கன் என்பவனுக்கு சன்னதி என்ற மகன் பிறந்தான். அவன் மகன் சுநீதன், அவன் மகன் சுகேது, அவன் மகன் தரும கேது, அவன் மகன் சத்தியகேது, அவன் புத்திரன் விபு, அவன் புதல்வன் ஸ்வவிபு, அவன் தயைன் சுகுமாரன், அவன் குமாரன் திருஷ்டகேது, அவன் மகன் வீதியோத்திரன், அவனுக்குப் பார்க்கன், அவனுக்கு பார்க்கபூமி இவனிடத்திலிருந்து நான்கு வர்ணங்கள் உண்டாயின. இவர்கள் தான் காசியரசர்களாவார்கள்.

————-

9. ரஜி வரலாறு

ரஜி என்பவனுடைய வம்சா வழியைக் கூறுகிறேன் கேளும். ரஜிக்கு ஒப்பற்ற பல பராக்கிரமம் பொருந்திய ஐந்நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இப்படியிருக்க ஒரு சமயம் தேவாசுரப்போர் ஒன்று நடந்த போது தேவரும், அசுரரும் பிரம்மனிடம் சென்று, இந்த யுத்தத்தில் யாருக்கு வெற்றியுண்டாகும்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ரஜி மன்னன் யார் சார்பில் சேர்ந்து போர் செய்வானோ அவர்கள் பக்கமே ஐயம் உண்டாகும் என்றார். அதைக் கேட்டதும் அசுரர்கள் ரஜியிடம் முன்னதாகச் சென்று, தமக்கு யுத்த சகாயம் செய்ய வேண்டும் என்று அவனை வேண்டினார்கள். அதற்கு ரஜி மன்னன், அசுரர்களே! நான் தேவர்களை வென்ற பிறகு உங்களுக்கு நான் தேவேந்திரனாக இருக்கச் சம்மதித்தால் உங்கள் சார்பில் போர் செய்கிறேன் என்றான். அதற்கு அசுரர்கள், அரசே! நாங்கள் காரியத்திற்காக ஒன்றை முன்னதாகச் சொல்லிப் பிறகு மற்றொன்றைச் செய்யமாட்டோம். எங்களுக்கு பிரகலாதரே இந்திரராக இருக்கவேணடும். அதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டோம் என்றார்கள். பிறகு அவர்கள் போய் விட்டார்கள். அதன் பிறகு ரஜி மன்னனிடம் தேவர்களும் வந்து தமக்குத் துணை செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களிடமும் ரஜி மன்னன் தன் விருப்பத்தைச் சொன்னான். தேவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதனால் அந்த மன்னன் தேவர்கள் சார்பில் போர் செய்து அசுர சேனைகளை அழித்தான். அப்போது தேவேந்திரன் ரஜி மன்னனின் கால்களில் விழுந்து, அரசனே! ஆபத்தில் காத்ததாலும் அன்னமிட்டதாலும் நீ எங்களுக்குத் தந்தையானாய் இதனால் சகல உலகங்களிலும் உயர்ந்தவன் ஆகிவிட்டாய். நானோ உன் மகன் திரிலோகாதிபதியாக இருப்பது தந்தைக்குப் பெருமையல்லவா? என்றான். அதைக்கேட்டதும் ரஜி மன்னன் சிரித்து, இந்திரா! அப்படியே ஆகட்டும் என்றான். பிறகு ரஜி மன்னன் தன் நகரம் போய்ச் சேர்ந்தான்.

சில காலத்துக்குப் பிறகு, ரஜி மன்னன் மாண்டு போனான். அவனது பிள்ளைகளை நாரதர் தூண்டிவிட, அவர்கள் இந்திரனிடம் சென்று, நீ எங்கள் பிதாவின் புத்திரனாகையால் எங்களுக்கு உன் ராஜ்ஜியத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். இந்திரன் மறுத்தான். அவர்கள் இந்திரனை வென்று, அவனதிகாரத்தை தாங்கள் செலுத்தி வந்தார்கள். பலகாலம் சென்ற பிறகு, தேவேந்திரன் தனது குலகுருவிடம் சென்று, ஸ்வாமி! அடியேன் ஆட்சியை இழந்து இப்படி அலையலாமோ? ஆகையால் அடியேன் திருப்தியடையும்படிச் செய்யவேண்டும் என்று வேண்டினான். அதற்கு அவர் நீ முன்பே என்னிடம் வந்திருந்தால் இந்த ஆபத்து உனக்கு வந்திருக்காது. இனி உனக்காக நான் செய்யக்கூடியது எதுவுமில்லை. இன்னுஞ் சிறிது காலத்தில் உன் ஐசுவரியம் உனக்கு வரும்படிச் செய்கிறேன் என்று சொல்லி இந்திரனுக்கு தேஜஸ் வளரவும், பகைவர்களுக்கு புத்திமயங்கவும் ஒரு அபிசார ஹோமம் செய்தார். அதனால் ரஜியின் பிள்ளைகள் புத்தி மயங்கி, பிராமணத் துவேஷியராகவும், வர்ணாசிரம தர்மங்களை இழந்தவர்களாகவும் வேதத்திற்குப் புறம்பானார்கள். இதனால் இந்திரன் அவர்களை ஜெயித்து புரோகிதரின் வேள்வி வலிமையால் மகா தேஜசுள்ளவனாய், சொர்க்கத்தை மீண்டும் ஆண்டுவந்தான். இந்தவிதமாக இந்திரன் தனது சொர்க்கப் பதவியை மீண்டும் பெற்ற இந்தச் சரிதத்தைக் கேட்பவனுக்கு ஸ்தானப் பிரம்சமும் துராத்மாவாக இருத்தலும் ஏற்படுவதில்லை. ஆயுசுவின் மகனுக்கு சந்ததியில்லை. இனி க்ஷத்திரவிருத்தனுடைய சந்ததியைக் கூறுகிறேன், கேளுங்கள். க்ஷத்திரவிருத்தனின் மகன் பிரதிக்ஷத்திரன். அவன் மகன் சஞ்சயன், அவன் மகன் ஜயன், அவன் மகன் விஜயன், அவன் பிள்ளை கிருதன். அவன் மகன் ஹரியதனன், அவன் மகன் சகதேவன். அவனுக்கு அதீனன், அவன் பிள்ளை ஜயத்சேனன். அவன் மகன் சங்கிருதி, அவன் புத்திரன் க்ஷத்திர தருகன் இவர்கள் தான் க்ஷத்திரவிருத்தனுடைய வழிவந்தவர்கள்.

———–

10. யயாதி மாமன்னன் கதை

மைத்ரேய நகுஷ வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். நகுஷ மன்னனுக்கு யதி; யயாதி, சம்யாதி, ஆயாதி, வியாதி, கிருதி என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களனைவரும் சிறந்தவீரர்கள். அவர்களில் யதி என்பவன் இராஜ்யத்தை விரும்பவில்லை. ஆகையால் யாயாதி என்பவன் அரசனானான். அவன் சுக்கிரன் மகளாகிய தேவயானியையும், விருஷபருவாவின் மகளாகிய சருமிஷ்டையையும் மணந்துகொண்டான். அவனது வம்சத்தைப் பற்றிய சுலோகம் ஒன்று உண்டு. தேவயானி என்பவள் யது, துர்வசு என்ற பிள்ளைகளையும் சருமிஷ்டை என்பவள் துருகிய, அனுபூரு என்ற பிள்ளைகளையும் பெற்றார்கள், என்று அந்த சுலோகம் கூறுகிறது. யயாதி மன்னன் தன் இரு பத்தினிகளில் சர்மிஷ்டை என்பவளிடம் அதிகப் பாசம் கொண்டிருந்ததால், தேவயானி பொறாமை கொண்டு தன் தந்தையான சுக்கிராச்சாரியாரிடம் தெரிவித்தாள். அதனால் சுக்கிராச்சாரி கோபங்கொண்டு, யயாதி மன்னனுக்கு கிழடு தட்டும் வண்ணம் அவன் ஜரையை அடைய வேண்டுமென ஒரு சாபமிட்டார். அதன் விளைவாக யயாதி மன்னன் தனக்கு அகாலத்தில் மூப்பு வரும்படிச் செய்ததால் மனவருத்தமுற்று, சுக்கிராச்சாரியாரின் பாதங்களில் வீழ்ந்து வேண்டிக்கொண்டான். அதனால் அவர் மனமிரங்கி மூப்பை ஒருவருக்குக் கொடுத்து அவருடைய வனத்தை ஏற்கலாம் என்றும் அனுக்கிரகஞ் செய்தார். பிறகு, யயாதி மன்னன் தனது முதல் மகனை நோக்கி, மகனே! உன் மாதாமஹருடைய சாபத்தால் எனக்கு நேர்ந்த இந்த மூப்பை அவரனுக்கிரகத்திற்கு ஏற்ப நான் உனக்குக் கொடுத்து உனது வாலிபப் பருவத்தை நான் ஏற்று இன்னும் ஓராயிரம் ஆண்டுக்காலம் உலக இன்பங்களை அனுபவிக்க விரும்புகிறேன். ஆகையால் இதற்கு நீ இணங்க வேண்டும் என்றான். அதற்கு மூத்த மகன் யது சம்மதிக்கவில்லை. அதனால் அவனது தந்தையும், உனது சந்ததி ராஜ்யத்தை இழக்கக் கடவது என்று சபித்தார். பிறகு துர்வசு, துருக்யு, அனு என்ற பிள்ளைகளையும் யயாதி மன்னன் வரவழைத்து தனது மூப்பை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய யவுவனத்தைத் தனக்கு வழங்கும்படி வேண்டினான். அவர்களும் அதை ஏற்கவில்லை. எனவே அவர்களையும் யயாதி மன்னன் சபித்தான். பிறகு சர்மிஷ்டையிடம் பிறந்த தனது கடைசிப் பிள்ளையான பூருவிடமும் அவன் அதுபோலவே வேண்டினான். பூரு தன் தந்தையை வணங்கி பிதாவே! தங்கள் விருப்பம்போல நான் இதற்கு இணங்குகிறேன் என்று சொல்லி தனது தந்தையின் மூப்புத்தன்மையைத் தான் ஏற்றுக்கொண்டு தன் யவுவனத்தை தந்தைக்கு கொடுத்தான். அதைப் பெற்ற யயாதி மன்னன் தர்ம விரோதமின்றி தக்க காலங்களில் தனக்கு இஷ்டமான சகல போகங்களையும் அனுபவித்து செங்கோலைச் செவ்வனே செலுத்தி வந்தான். அவன் விசுவாசி என்ற தேவமங்கையோடும் தேவயானியோடும் அனுபவித்து காமங்களின் முடிவை காண்பேன் என்று தினந்தோறும் அதே மனத்தினனாக இருந்தான். நாளுக்கு நாள் பெண் இன்பம் இனிமையானதாகவே அவனுக்கு தோன்றியது. எனவே அவன் இப்பாடல்களைப் பாடினான்.

காமமானது காம போகங்களால் ஒருபோதும் அடங்குவதில்லை. அவிகளைச் சொரியச் சொரிய அக்கினி வளர்வது போல் வளரத்தான் வளர்க்கிறது. இந்த பூவுலகிலுள்ள சகல தானியங்களும் பொன் முதலிய சிறந்த பொருள்களும் குதிரை, பசு முதலிய மிருகங்களும் அழகிய பெண்டிரும் ஒருவனுடைய ஆசைக்குப் போதாமலேயே இருக்கின்றன. ஆகையால் அந்த ஆசையை நிறைவேற்ற முயல்வது முடியாத காரியமாகும். ஆகையால் அதை ஒழித்தலே வேண்டும். சகல பூதங்களிடத்தும் விருப்பும் வெறுப்பும் வைக்காமல் சமமான எண்ணமுடையவனுக்கு எத்திசையிலும் சுகமே தோன்றும், புத்தியீனருகு விடக்கூடாததாயும், உடையவன் தளர்வுற்றலும் தளராததாயும் இருக்கக்கூடிய ஆசையை விட்டுவிட்டால், சுகத்தை அடையலாம். மனிதன் மூப்பினால் மெலிந்துபோக அவனுடைய ரோமங்களும், பற்களும் உதிர்ந்துபோகின்றன. உயிராசை பொருளாசை என்ற இரண்டும் ஒருபோதும் மெலிவதில்லை, இளைப்பதும் இல்லை. இதற்கு ஓர் உதாரணம் ஓராயிரம் ஆண்டுக்காலம் போகானுபவம் செய்துவந்த எனபகு ஆசையானது கொஞ்சமும் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆகையால் நான் இனி இந்த ஆசை என்னும் பைசாசத்தை விட்டு ஒழித்து மனதைப் பரம்பிரம்மனிடத்தில் செலுத்திக் தொந்தமும், மமதையும் நீங்கியவனாய்; மிருகங்களோடு மிருகம் போலத் திரிந்து கொண்டிருக்கக் கடவேன்! என்று இவ்விதம் சிந்தித்து யயாதி மாமன்னன் தன்னுடைய மகன் பூருவவின் யவுவனத்தை அவனுக்கே திருப்பி கொடுத்தவிட்டு தன்னுடைய மூப்பைத் தானே திருப்பிப் பெற்றுக்கொண்டு; தென்கிழக்கில் துர்வசுவையும் மேற்கில் துருகியுவையும் தெற்கில் துர்வசுவையும், மேற்கில் துருகியுவையும், தெற்கில் யதுவையும் சிற்றரசராக்கிச் சகல பூமண்டலத்துக்கும் பூருவை அதிபதியாகச் செய்து பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டு தவஞ்செய்ய வனஞ்சென்றான்.

————-

11. கார்த்த வீரியார்ஜுனன்

இனி யயாதி மகாராஜாவின் மூத்த மகனான யதுவின் குலமுறையைக் கூறுகிறேன்; கேளுங்கள். மனிதர், சித்தர், கந்தருவர், இயக்கர், இராக்கதர், குகியகர், கிம்புருடர், அப்சரசுகள், நாகர், விஹகர், தயித்தியர், தானவர், ஆதித்தியர், வுத்திரர், வசுக்கள், அசுவினிகள், மருத்துக்கள், தேவரிஷிகள் ஆகிய இவர்களாலும் மோக்ஷம் பெறமுயன்றவர்களாலும் தர்மார்த்த காமங்களை விரும்பியவர்களாலும் தங்கள் தங்கள் இஷ்ட சித்தியின் பொருட்டுத் துதிக்கத்தக்கவராய், ஆதி மத்யாந்தரகிதராய், சகல உலகங்களுக்கும் இருப்பிடமாய், அளவிடக்கூடாத மகத்துவமுள்ளவராய் விளங்கும் ஸ்ரீமகாவிஷ்ணு பகவான் உலகத்திற்கு அருள் செய்வதர்காக திருவிளையாடல் புரிய ஏற்ற ஒரு திவ்விய மங்கள விக்கிரகத்தோடு அந்த வமிசத்தில் அவதரித்து அருளினார். இது சம்பந்தமாக ஒரு சுலோகம் வழங்கப்படுகிறது. யதுவின் வமிசத்தைப் பற்றி ஒருவன் கேட்பதால் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவான். ஏனென்றால் அந்த வம்சத்தில் பரப்பிரமமானது ஸ்ரீகிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு மனித உருவமாக அவதரித்ததல்லவா? என்பதுதான் அந்த சுலோகமாகும். அந்த யதுவுக்கு சகஸ்ரஜித்து, குரோஷ்டு, நளன், நகுஷன் என்ற நான்கு பிள்ளைகள் உண்டு. அவர்களில் சகஸ்ரஜித்தின் மகன் சதஜித்து அவனுக்கு ஹைஹயன், ஹேஹயன், வேணுஹயன் என்ற மூன்று பிள்ளைகள் உண்டு. ஹைஹயனின் மகன் தருமன், அவன் மகன் தருமேந்திரன், அவன் மகன் குந்தி, அந்தக் குந்திக்குச் சஹஸ்ரஜித்து, அவன் மகன் மகிஷ்மான், அவன் மாகிஷ்மதி என்னும் நகரம் ஒன்றை உண்டாக்கினான். அவன் மகன் பத்திசிரேணியன், அவன் மகன் தனகன் அவனுக்கு கிருதவீரியன், கிருதாக்கினி கிருததருமன், கிருதவுஜசு என்னும் நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். கிருதவீரியனுடைய மகன் அர்ஜுனன் ஸ்ரீமந்நாராயணனின் அம்சமாகவும், அத்திரி குமாரராகவும் விளங்கிய தத்தாத்ரேய முனிவரை அவன் ஆராதித்து அவருடைய அனுக்கிரகத்தால் அதர்மத்திற் புகாமையும், ஸ்வதாமத்தில் பற்றும், ஆயிரங்கைகளும், யுத்தத்தில் வெற்றியும், பகைவரிடம் அவப்படாமையும் சகலலோகங்களும் கொண்டாடத்தக்க மகாபுருஷனால் மரணமும் ஆன இத்தகைய வரங்களைப் பெற்றான். அதனால் அந்த கார்த்தவீரியார்ச்சுனன் சகல தீவுகளுடன் கூடிய பூமண்டலமெல்லாம் பரிபாலனஞ் செய்து, பதினாயிரம் வேள்விகளைச் செய்தான். அவனைப் பற்றி ஒரு சுலோகம் வழங்குகிறது. எந்த மன்னரும், யாகங்கள் தவங்கள் தானங்கள் முதலியவற்றிலும் வணக்கம் முதலிய சற்குணங்களிலும் சாஸ்திரக்கல்வி கேள்விகளிலும் கார்த்தவீரியார்ச்சுனனை ஒவ்வார்கள். அவனுடைய ஆட்சியில் ஒருவனும் பொருள் இழந்தவனில்லை எந்தக் காலத்திலும் அவனது பெயரைச் சங்கீர்த்தனம் செய்தவனுக்கு இழந்த பொருள் கைகூடும்! என்று கூறப்பட்டுள்ளது.

இவ்விதம் எண்பத்தையாயிரம் ஆண்டுக்காலம் ஆரோக்கியம், செல்வம், பலம், பராக்கிரமம், ஆகியவற்றில் யாதொரு குறைவுமில்லாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தான். ஒருகாலத்தில் அந்த கார்த்தவீரியார்ச்சுனன் நர்மதை யாற்றில் மங்கையரோடு கூடி ஜலக்கிரீடை செய்து மதுபானத்தில் மயங்கியிருக்கும் போது, சகல தேவ தைத்திய, கந்தர்வர்களை வென்றதனால் செருக்கடைந்த இராவணன் திக்குவிஜய யாத்திரைக்காக அங்கு வந்தான். அதைக்கண்ட கார்த்தவீரியார்ச்சுனன் அவனைப் பசுவைப் போலக் கட்டிக்கொண்டு சென்று, மாகிஷ்மதி நகரத்தின் ஒரு மூலையில் போட்டிருந்தான். அத்தகைய மகாபலசாலியான கார்த்தவீரியார்ச்சுனனை அவன் விரும்பியவண்ணம் ஸ்ரீமந் நாராயணரது வம்சத்தில் அவதரித்த பரசுராமர் எண்பத்தையாயிரம் ஆண்டின் முடிவில் சங்கரித்து அருளினார். அவனுக்கு நூறுபிள்ளை பிறந்தார்கள். அவர்களில் சூரன், சூரசேனன், விருஷசேனன், மது, ஜயத்வஜன் என்ற ஐவர் முக்கியமானவர்கள். அவர்களில் ஜயத்வஜன் என்பவனுக்கு அவன் பெயரைக் கொண்ட நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் வீதி ஹோத்திரன், இரண்டாமவன் பரதன், அவனுக்கு விருஷன், அந்த விருஷனுக்கு மது என்ற மகன் பிறந்தான். அந்த மதுவுக்கு விருஷ்ணி முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அதனால் அந்தக் குலத்தாருக்கு விருஷ்ணிகள் என்றும் மதுக்கள் என்றும் பெயர் வழங்கலாயிற்று. யதுவைப் பற்றி, அவர்களுக்கு யாதவர்கள் என்ற பெயரும் பிரபலமாயிற்று.

—————–

12. ஜயாமகனின் பிள்ளைப்பேறு

யதுவின் மகனான குரோஷ்டு என்பவனுக்குத் துவஜினீவான் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவன் மகன் சுவாதி அவன் மகன் ருசங்கு, அவன் மகன் சித்திராதன். அவன் மகன் சசபிந்து, அவன் சக்கரம், ரசம், மணி, கட்கம், சருமம், கொடி, நிதி என்ற ஏழு பொருள்களுடன் மனைவி புரோகிதன் சேனாபதி பாக்கியங்களும் ஆகப் பதினான்கு ரத்தினங்களையுடைய சக்கரவர்த்தியாக விளங்கினான். அவனுக்கு லக்ஷம் மனைவியரும் பத்து லக்ஷம் பிள்ளைகளும் உண்டு. அவர்களில் பிருதுசிரவன், பிருதுகர்மா, பிருதுகீர்த்தி, பிருதுயசன், பிருதுஜயன், பிருதுதானன் என்ற அறுவர் முக்கியமானவர்கள். அவர்களில் பிருது கீர்த்தி என்பவனின் மகன் பிருதுதமன், அவனுக்கு உசனன், அவன் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தான். அவனுக்கு சிதபு என்ற பிள்ளையுண்டு, சிதபுடன் மகன் ருக்குமகவசன். அவன் மகன் பராவிருத்து, அவனுக்கு ருக்குமேஷு பிருது ருக்குமன், ஜ்யாமகன் பலிதன் ஹரிதன் என்ற பிள்ளைகள் ஐவர் இருந்தார்கள். அவர்களில் ஜ்யாமகனைப் பற்றி ஒரு சுலோகம் உண்டு. அதாவது பெண்டாட்டிக்கு வசப்பட்டவர்கள் யாருண்டோ, அல்லது யார் உண்டாவார்களோ, அவர்கள் யாவரிலும் சயிப்பியையின் கணவனான ஜ்யாமகனே மேலானவன்! என்பதாகும். அவன் மனைவியான சயிப்பி என்பவள் பிள்ளையே பெறாமல் இருந்ததால், ஜ்யாமக மன்னன் பிள்ளைப் பேற்றிற்காக வேறு ஒரு கலியாணஞ் செய்துகொள்ள விரும்பினான். ஆயினும் தன் மனைவிக்குப் பயந்து, அப்படிச் செய்யாமல் இருந்தான். ஒரு சமயம் அவன் தன் போர்ப்படைகளுடன் சென்று பெரியதொரு யுத்தம் செய்து பகைவர்களை வென்றான். அப்போது அவனது பகைவர்கள், தங்கள் உறவினர்களையும் பொருள்களையும் விட்டு விட்டு ஓடினார்கள். அந்த சமயம் அதி அழகான ஒரு பெண் பயத்தால் கண் கலங்கிய வண்ணம் என்னைக் காப்பாற்ற வேண்டும் தாயே! தந்தையே சகோதரனே! என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் மீது காதல் கொண்ட ஜ்யாமக மன்னன் சிந்திக்கலானான். மலடியின் புருஷனாய் பிள்ளைப் பேறற்று இருக்கும் எனக்குப் பெண்களின் திலகம் போன்ற இந்தப் பெண்ணைத் தெய்வம் தான் பிள்ளைப் பேற்றுக்காக அளித்திருக்கிறது. ஆகையால் இவளை நான் திருமணஞ்செய்து கொள்வேன் ஒருவேளை என் மனைவி சயிப்பியை கோபித்தால் என்னாவது? ஆகையால் இந்தக் கட்டழகியை அவளிடம் காண்பித்து அவளது உத்தரவைப் பெற்றாவது இவளை கல்யாண் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்தப் பெண்ணை தன் தேரில் ஏற்றிக்கொண்டு, தன் தலைநகரத்துக்கு அழைத்துச் சென்றான். அரசன் வெற்றி வீரனாய் வருவதைக் காண்பதற்காக, அவனது மனைவியான சயிப்பியையும் தன் பரிவாரங்களுடன் அரண்மனை வாசலில் வந்து வரவேற்கக் காத்திருந்தாள். அரசன் தன் தேரில் தனக்கு இடதுபுறத்தில் ஒரு கன்னிகையை உடன் அழைத்து வருவதைக் கண்டாள். சயிப்பியை உடனே அவள் கோபத்தால் உதடு துடிதுடிக்க ஜ்யாமக மன்னனை நோக்கி, ஓ சபலசித்தமுடையவனே? தேரின் மீது எவளை ஏற்றிக்கொண்டு வந்தாய்? என்று கேட்டாள். ஜ்யாமகன் பயந்து தன் மனைவிக்குப் பதில் சொல்ல எந்தவித யோசனையுமில்லாமல், இந்த கன்னிகை என் மருமகள்! என்றான்.

அதைக் கேட்டதும் சயிப்பியை மிகவும் வியப்படைந்து, மணாளனே! நானோ பிள்ளை பெறவில்லை. உனக்கு வேறொரு மனைவியும் இல்லை. இப்படி இருக்கும்போது எந்தப் பிள்ளைக்கு இவளைக் கல்யாணம் செய்யப் போகிறாய்? என்று கேட்டான். அவளுடைய கோபத்தைக் கண்ட மன்னன் தன்னுடைய விவேகத்தையும், தைரியத்தையும் இழந்து பிராண நாயகி! இனி உனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கு மனைவியாகவே இவளை நான் கொண்டு வந்தேன்! என்றான். அதைக் கேட்டதும் சயிப்பியை புன்முறுவலுடன், நல்லது. அப்படியே ஆகட்டும்! என்று ஒப்புக்கொண்டான். பிறகு சயிப்பியை தன் கணவனை அழைத்துக்கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றாள். இவ்வாறு சில காலங்கழித்த பிறகு, சயிப்பியை வயது முதிர்ந்தவளானாள். அப்படியிருந்தும் அதிசுத்தமான லக்கினம், ஓரை, திரேக்காணம், நவாம்சம் முதலிய அங்கங்களைக் கொண்ட காலத்தில் அரசனது வாக்கு வலிமையால் சயிப்பியை கருவுற்று ஒரு குமாரனைப் பெற்றாள். அந்தப் பிள்ளைக்கு விதர்ப்பன் என்று பெயர் சூட்டினார்கள். பிறகு ஜ்யாமக மன்னன் முன்புகொண்டு வந்த கன்னிகையை அந்தப் பிள்ளைக்கு விவாகஞ் செய்வித்தான். அப்பெண்ணிற்கு ஸ்நுஷை என்று பெயர். அவள், விதர்ப்பராஜனிடம் கிருதன், கைசிகன் என்ற இருபிள்ளைகளைப் பெற்றாள். பிறகு ரோமபாதன் என்பவனையும் பெற்றாள். அந்த ரோமபாத அரசன் நாரத முனிவரிடத்தில் ஞானம் பெற்றான். அவன் மகன் பப்புரு, அவன் மகன் திருகி, அவன் மகன் கைசிகன், அவன் மகன் சேதி, அவனது சந்ததியிற் பிறந்தவர்கள் சைத்தியர்கள் என்று வழங்கப்பட்டார்கள். முன்னே சொன்ன ஸ்நுஷையின் மகனான கிருதன் என்பவனின் மகன் குந்தி. அவன் மகன் திருஷ்டி, அவன் பிள்ளை விதிருதி, அவன் மகன் தசரர்கள், அவன் மகன் வியோமன், அவன் புதல்வன் நீமுதன், அவன் மகன் விகிருதி; அவன் பிள்ளை பீமரதன், அவன் புத்திரன் நவரதன், அவன் மகன் தசரதன். அவன் பிள்ளை சகுனி, அவன் மகன் காம்பி; காம்பி மகன் தேவராதன்; அவன் பிள்ளை தேவஷத்திரன்; அவன் மகன் மது. அவன் பிள்ளை குருவமிசன்; குருவமிசனின் பிள்ளை அனு, அவன் மகன் புரு; ஹோத்திரன். அவன் மகன் அம்சன்; அவன் மகன் சத்துவதன்; அந்த சத்துவதனாலேயே இனிச் சொல்லப்படவிருக்கும் அரசர்களுக்கு சாத்துவதர் என்ற பெயருண்டாயிற்று. இந்த ஜ்யா மகனுடைய வமிசத்தைப் பற்றி சிரத்தையோடு கேட்பவர்களின் பாவங்கள் அழியும்.

————-

13. சியமந்தகமணியின் கதை

மைத்ரேயரே! முன்னே சொன்ன சத்துவதனுக்கு பஜனன், பஜமானன், திவியன், அந்தகன், தேவாபிருகன், மகாபோஜனன், விருஷ்ணி என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் பஜமானனுக்கு நிமி கிருகணன், விருஷ்ணி என்னும் மூவர் ஒருத்தி வயிற்றிலும், சதஜித்து சகஸ்ரஜித்து அயுதஜித்த என்பவர்கள் மற்றொருத்தியின் வயிற்றிலும் பிறந்தார்கள். அந்த தேவபிருதனுக்கு பப்புரு என்பவன் பிறந்தான். அவனை மனிதர்களிற் சிறந்தவன் என்றும் தேவ பிருதனைத் தேவர்களுக்கு ஒப்பானவன் என்றும் சொல்வார்கள் அவர்கள். இருவராலும் உபதேசிக்கப்பட்ட வழியினால் எழுபத்து நாலாயிரம் மக்கள் மோட்சமைந்தனர். ஆகையால் இவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாகப் பாராட்டப் பெற்றார்கள். மகாபோஜன் என்பவன் அதிதர்மவான். அவன் வமிசத்தில் பிறந்தோர் வோஜர் எனப்படுவார்கள். அவர்கள் மிருத்திகாவாம் என்ற நகரில் வாசஞ்செய்ததால் மார்த்திகாவார் என்றும் வழங்கப்பட்டார்கள். விருஷ்ணிக்கு சுமித்திரன், யுதாஜித் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். சுமித்திரனுக்கு அனமித்திரன், அவனுக்கு நிக்கினன், அவனுக்கு பிரசேனனும் சத்திராஜித்தும் உண்டானார்கள். அவர்களில் சத்திராஜித்து என்பவனுக்கு சூரியன் நண்பன், அவன் ஒரு காலத்தில் கடற்கரையில் நின்று சூரியனை மிகவும் பக்தியோடு துதித்தான். சூரியபகவான் அவனுடைய வழிபாட்டை மெச்சி, அவன் எதிரில் தோன்றினார். அவன் சூரியனை நோக்கி, பகவானே! உம்மை வானத்தில் நெருப்புக்கட்டியைப் போலக் காண்கிறேன் அன்றோ? அப்படித்தான் இப்போதும் உம்மைப் பார்க்கிறேன். ஆகையால் நீர் எனக்கு அனுக்கிரகம் செய்து பயன் ஒன்றும் இல்லையே? என்றான். அதைக்கேட்ட சூரியபகவான் தமது கழுத்திலிருந்து ஸ்யமந்தகம் என்ற இரத்தினத்தை கழற்றி ஒரு மறைவிடத்தில் வைத்தார். பிறகு அவர் கொஞ்சமாகச் சிவந்து, பிரகாசிப்பதாயும் குறுகிய தேகமும் பூனைக்கண் போன்ற சிறிது பொன்னிறமாயுமுள்ள விழிகளும் உடையவராகவும் காணப்படுவதைக் கண்டதும் சத்திராஜித்து சாஷ்டாங்கமாக அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் துதித்தான். அப்போது சூரியன் அவனைப் பார்த்து சத்திராஜித் உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நான் தருவேன் என்றார். அதற்கு யாதவன் சத்திராஜித்து அந்த ஸ்யமந்தகமணியைத் தனக்குத் தரும்படி கேட்டான். சூரியபகவான், அதை எடுத்து அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தம்மிடம் சேர்ந்தார்.

பிறகு சத்திராஜித் அந்த ஸ்யமந்தக மணியைத் தரித்துக் கொண்டான். அதனால் அவன் சூரியனைப் போல நான்கு திசைகளையும் காந்தியுடன் விளக்கிக் கொண்டு துவாரகைக்கு வந்தான். அப்போது அவனைக் கண்ட துவாரகை மக்கள் கிருஷ்ண பரமாத்மாவின் சன்னதியில் சென்று சுவாமி, தங்களைச் சேவிக்கச் சூரியபகவான் வருகிறார் போலிருக்கிறதே! என்றார்கள். அதைக் கேட்டதும் கண்ணபிரான், புன்சிரிப்புடன் வருபவன் சூரியன் அன்று! நம்முடைய சத்திராஜித்தனே! சூரியனால் கொடுக்கப்பட் ஸ்யமந்தக மணியைத் தரித்துக்கொண்டு வருவதால் தான் அவன் அப்படித் தோற்றமளிக்கிறான். ஆகையால் அவனை அச்சமின்றிப் பாருங்கள்! என்றார். அவர் அருளிச்செய்தபடியே அவர்களெல்லாம் பார்த்தார்கள். சத்திராஜித்தனோ அதிகப் பிரகாசமான ரூபத்தடன் துவாரகைக்கு வந்து அந்த சிறப்பான இரத்தினத்தை தன் மாளிகையில் வைத்திருந்தான். அந்த ஸ்யமந்தகமணி நாள் ஒன்றுக்கு எட்டுப்பாரம் பொன்னை உண்டாக்கவல்லது. மேலும் அதன் மகிமையால் ராஜ்யத்தில் வியாதி, மழையின்மை, நெருப்பு பாம்பு முதலியவைகளின் பயம், பஞ்சம் முதலியன உண்டாவதில்லை. ஸ்ரீகிருஷ்ண பகவானோ, இந்த உத்தமமான பொருள் உக்கிரசேன மன்னனுக்கே தகுந்தது! என்று திருவுள்ளம் பற்றியிருந்தார். ஆயினும் குலத்தில் பேதமுண்டாகக்கூடாது என்பதனால் தாம் சக்திமானாக இருந்தும் அதைக் கவர்ந்து கொள்ளாமல் இருந்தார். சத்திராஜித்தும் தன் மனதிற்குள்; ஒருவேளை கண்ணன் இதைக்கொடுக்கும்படித் தன்னைக் கேட்டாலும் கேட்பார்! என்று நினைத்து அதைத் தன் சகோதரனான பிரசேனனுக்குக் கொடுத்து விட்டான். அந்த ஸ்யமந்தக மணியைப் பரிசுத்தமானவன் தரித்தால் பொன்னை உண்டாக்கிக் கொடுக்கும், அசுத்தன் தரித்தால் தரித்தவனுக்கு தீங்கையே வருவிக்கும். இதையறியாத பிரசேனன் அந்த ரத்தினத்தைத் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு குதிரை மீது ஏறி வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். அங்கு அவனையும், அவனது குதிரையையும் ஒரு சிங்கம் கொன்று விட்டது. அந்த சிங்கம் ரத்தினத்தை வாயில் கவ்விக்கொண்டு போகும்போது; கரடி அரசான ஜாம்பவான், அந்த சிங்கத்தைக் கொன்று ஸ்யமந்தக மணியை எடுத்துக் கொண்டு தன் குகைக்குச் சென்று சுகுமாரன் என்ற தனது மகனுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தான். இது இப்படியிருக்க, காட்டுக்குப் போன பிரசேனன் வராமல் இருந்ததால் யாதவரெல்லாம் குழம்பினார்கள். ஸ்ரீகிருஷ்ணன் அந்த இரத்தினத்தின் மேல் ஆசை கொண்டிருந்தாராகையால் அவர் தான் அதைத் தந்திரமாக அடைந்திருப்பார்! இது அவருடைய செயல்தான்! என்று யாதவர்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்ணன் தனக்கும் இப்படிப்பட்ட அபவாதம் உண்டாகியிருப்பதை அறிந்து, அந்தப் பழியைத் துடைப்பதற்காகச் சகல யாதவ சேனைகளுடன் புறப்பட்டு; பிரசேனனின் குதிரை சென்ற வழியைப் பின்தொடர்ந்து சென்றார். காட்டில் ஓரிடத்தில் ஏறியிருந்த குதிரையுடன் பிரசேனன் சிங்கத்தால் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார். யாவரும் அங்கே சிங்கத்தின் காலடிகளையும் பிரசேனன் மீது தாக்கியிருக்கும் சிங்கத்தின் காலடி நகக்குறிகளையும் கண்டார்கள். அதனால் கண்ணபிரான் தமக்கு உண்டாகியிருந்த அபவாதத்திலிருந்து நீங்கினார்.

பிறகு அந்த மிருகேந்திரனான சிங்கம் சென்ற வழியை அவர் பின்தொடர்ந்து செல்லும்போது சிறிது தூரத்திலேயே அந்த சிங்கத்தைக் கரடி ஒன்று கொன்றதாகத் தெரிந்துகொண்டு அந்த ரத்தினத்தின் மகிமையைக் கருதி, அந்த கரடிசென்ற வழியையும் பின்தொடர்ந்து சென்றார். அங்கிருந்த ஒரு மலைச்சாரலில் கண்ணபிரான் தம் சேனைகள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தாம் மட்டும் அந்தக் கரடியின் குகைக்குச் சென்றார். அங்கே சுகுமாரன் என்ற சிறுவனை லாலனை செய்து கொண்டிருந்த செவிலித்தாய், சிங்கம் பிரசேனனைக் கொன்றது சிங்கத்தை நம்முடைய ஜாம்பவன் கொன்றார். ஆகையால் ஸ்யமந்தகமணி உனதாயிற்று. குழந்தாய், அழாதே! என்று கொஞ்சுவதை கண்ணன் கேட்டார். அந்த செவிலித்தாயின் கையில் ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்யமந்தக மணியைக் கண்டார். அப்போது அந்த ஸ்யமந்தகமணியின் மேல் கண்ணோடி நிற்கும் ஒரு புதிய ஆடவனைக் கண்ட செவிலித்தாய் பயந்து என்னைக் காக்கவேண்டும்! என்று கூறினாள். அந்த அபயக்குரலைக் கேட்டதும் கரடி ராஜனான ஜாம்பவான் வெகுகோபத்தோடு அங்கே தாவி வந்தான். அவனுக்கும் கண்ணபிரானுக்கும் ஒரு கொடிய போர் மூண்டது. இருபத்தொரு நாள்வரை, அந்த யுத்தம் நீடித்தது. இது இப்படியிருக்க வெளியே இருந்த யாதவர் அனைவரும் ஏழெட்டு நாட்கள் வரையிலும் கிருஷ்ண பகவான் வராமையால் ஓஹோ! நமது கிருஷ்ணன் இந்தக் குகையில் நாசமுற்றிருப்பான். இல்லையென்றால் அவனுக்கு பகைவர்கள் ஜயிக்கத் தடையிருக்கமாட்டாது என்று கருதி கிருஷ்ணன் முடிந்தான் என்று சொல்லி விட்டார்கள். அதைக்கேட்ட அவருடைய உறவினர்கள், அவருக்குச் செய்ய வேண்டிய சாமக்கிரியைகளை யெல்லாம் செய்து விட்டார்கள். அவ்விதமாக வெகு சிரத்தையோடு சிரார்த்தம் செய்தால் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்குப் பலமும் புஷ்டியும் திருப்தியும் உண்டாயிற்று. ஜாம்பவானுக்கோ அங்கங்கள் தளர்ந்தன. ஆகாரமில்லாமøயால் உடல் மெலிந்தது. இந்நிலையில் சுவாமியால் மொத்துண்டு வெல்லப்பட்ட ஜாம்பவான் அவரது திருவடிகளில் வீழ்ந்து தண்டனிட்டு, சுவாமி சுராசுர யக்ஷராக்ஷச கந்தர்வாதிகளினாலும் தாங்கள் வெல்லக் கூடாதவராக இருக்கும்போது இந்த மண்ணுலகில் சஞ்சரிக்கும் மனிதர்களாலும் அவர்களுக்கு அடங்கும் விலங்குகளைச் சேர்ந்த எம்போன்றார் யாவராலும் வெல்லப்படுவீரோ, ஆகையால் எங்கள் சுவாமியான ஸ்ரீராமபிரானைப் போல் தாங்களும் சகல உலகங்களுக்கும் ஆதார பூதரான ஸ்ரீமந் நாராயணருடைய திருவவதாரமாகவே இருக்க வேண்டும்? என்று விண்ணப்பம் செய்து நின்றான். அவனை ஸ்ரீகிருஷ்ண பகவான் கடாட்சித்து, ஆம்! நீ நினைத்தபடி நாம் லோக ரக்ஷணார்த்தமாகவே இந்த அவதாரஞ் செய்தோம்! என்று அருளிச் செய்த அன்புடன் தமது திருக்கைகளால் ஜாம்பவானின் உடலைத் தடவிக் கொடுத்தார். அதனால் ஜாம்பவானுக்குப் போராட்டத்தால் நேர்ந்த நோயெல்லாம் நீங்கின. பிறகு கரடியரசனான ஜாம்பவான், ஸ்ரீகிருஷ்ணபகவானுக்குத் தண்டனிட்டு, மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்து, அவருக்குத் தமது வளர்ப்பு மகளான ஜாம்பவதி என்பவளைக் கன்னிகாதானஞ் செய்து, ஸ்யமந்தக மணியையும் கொடுத்து தண்டம் சமர்ப்பித்தான். கிருஷ்ண பகவானும் அவனுடைய பக்தியினால் மனமகிழ்ந்துவிட்டு ஜாம்பவதியோடும் ஸ்யமந்தக மணியோடும் துவாரகைக்குத் திரும்பி வந்தார். அவர் வருவதையறிந்த துவாரகை மக்கள் பெரிதும் மகிழ்ந்தனர். கண்ணபிரானும் நடந்தவற்றையெல்லாம் யாதவ சமூகத்தினருக்குச் சொல்லி, ஸ்யமந்தக மணியை சத்திராஜித்திடம் கொடுத்து, தமக்கு வந்த அபவாதத்தைப் போக்கிக் கொண்டு, ஜாம்பவதியை அந்தப்புரத்தில் சேர்ந்து சுகமாகத் தங்கியிருந்தார்.

சத்திராஜித்தோ, நம்மால் கண்ணன் பேரில் வீண் அபவாதம் ஏற்பட்டுவிட்டது. அதை எப்படியாவது நிவர்த்திக்க வேண்டும் என்று நினைத்துத் தன் மகளான சத்தியபாமையை கிருஷ்ணபகவானுக்குச் சமர்ப்பித்தான். அந்த சத்யபாமையை முன்பு அக்குரூரன், கிருதவர்மா, சத்தனுவா முதலிய யாதவர்கள் கேட்டிருந்தார்கள். அவளைத் தங்களுக்குக் கொடுக்காததால், அவர்கள் அனைவரும் சத்திராஜித்தின் மேல் பகைமை பாராட்டினார்கள். ஒரு சமயம் அக்குரூரன் கிருதவர்மன் முதலியோர் சததனுவாவிடம் சென்று, சததனுவாவே! வெகுநாளாய் சத்தியபாமையைக் கேட்டுக் கொண்டிருந்த உன்னையும், எங்களையும் அவமானப்படுத்தி அவளை கிருஷ்ணனுக்குக் கொடுத்தானே அந்த சத்திராஜித்து! இனி அந்த அயோக்கியன் இருந்தாவதென்ன? நீ மிகவும் சமர்த்தன். ஆகையால் நீ அவனைக் கொன்று விட்டு அவனிடமிருக்கும் அந்த அபூர்வமான ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொள்வாயாக. கிருஷ்ணன் அதற்காக உன்னை எதிர்க்க வந்தால் நாங்கள் உனக்குப் பக்கபலமாக இருந்து துணை செய்கிறோம்! என்றார்கள். அவர்களால் தூண்டப்பட்ட சததனுவா ஒருநாள் சத்திராஜித்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்று ஸ்யமந்தகமணியை அபகரித்துக் கொண்டான். அந்தக் காலத்தில் பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் வெந்து போய்விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு, கிருஷ்ண பகவான் அவர்கள் வாசஞ் செய்துகொண்டிருந்த வாரணாவத புரத்துக்குச் சென்றிருந்தார். கிருஷ்ண பகவானுக்கோ பாண்டவர்கள் வெந்து போகாமல் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள் என்பது தெரியும். அப்படித் தெரிந்திருந்தும் லோக மரியாதைக்காகவும் தாம் எழுந்தருளாவிட்டால் பாண்டவர்கள் பிழைத்திருக்கிறார்கள் என்று துரியோதனன் சந்தேகங்கொண்டு அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பான் என்பதாலும் அவனை அப்படிச் செய்யவொட்டாமல் தடுப்பதற்காகவும் கிருஷ்ணன் அங்கு விஜயம் செய்தார். ஆகையால் தான் சத்திராஜித்துக்கு அத்தகைய ஆபத்து நேரிட்டது. தகப்பனைக் கொலை செய்து விட்டார்களே என்ற துக்கம் தாங்காத சத்தியபாமை அதிக கோபங்கொண்டு தேரில் ஏறி வெகுவேகமாக வாரணாபுரத்துக்குச் சென்றாள். அங்கு கண்ணும் கண்ணீருமாய் கண்ணனைக் கண்டு, என் பிராணநாதா! என் தந்தை என்னைத் தங்களுக்குக் கொடுத்தார் என்ற பொறாமையால், சததனுவா என் தந்தையைக் கொன்று அவரிடமிருந்து ஸ்யமந்தகமணியை அபகரித்துக் கொண்டுவிட்டான். அது தங்களுக்கு இழைத்த அவமானமேயன்றி வேறல்ல, இதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை யோசித்துச் செய்யுங்கள்! என்று விண்ணப்பஞ் செய்தாள்.

அதைக்கேட்ட கண்ணன், பாமா! நீ சொன்னதுபோல் இது எனக்குச் செய்த அவமானம் தான். அந்த துராத்மா இப்படி செய்ததை நான் சகிக்கமாட்டேன். மரத்தை விட்டு அதில் கூடுகட்டும் பறவைகளைக் கொல்லக்கூடாது. நீ ஏன் இதற்காக கதற வேண்டும்! வேண்டாம் நில்! என்று சொல்லி, அவளைச் சமாதானப்படுத்திவிட்டு, துவாரகை சென்றார். அங்கு தம் தமையரான பலராமருடன் ஏகாந்தத்தில் தனித்துப் பேசி, வேட்டையாடச் சென்ற பிரசேனன் சிங்கத்தால் அறையப்பட்டு இறந்தான். அவ்விருவரும் இறந்ததால் ஸ்யமந்தகமணியெனும் இந்த இரத்தினம் நம் இருவருக்கும் பொதுவாக உள்ளது. மற்றொருவன் கொண்டு போவதற்கு நிமித்தம் இல்லை. ஆகையால் எழுந்திருந்து தேரில் ஏறி சததனுவைக் கொல்வதற்கு முயல்வீராக! என்று கிருஷ்ணபிரான் சொன்னார். அதனால் பலராமர் அப்படியே ஆகட்டும் என்று அங்கீகரித்தார். இவ்வாறு பலராமர் கிருஷ்ணர் இருவரும் பிரயத்தினம் செய்திருப்பதை அறிந்த சததனுவா திகைத்து கிருதவர்மனிடம் சென்று, தனக்குத் துணைசெய்யும்படி வேண்டினான். அதற்கு அவன் மறுத்தான். பிறகு அவன் அக்குரூரனிடம் சென்று அவனையும் தனக்குப் பக்கபலமாக இருக்கும்படிக் கேட்டான். அவனோ, கேளப்பா! ஸ்ரீகிருஷ்ணனோ தம் திருவடித் தாக்குதலினாலேயே பூமியையெல்லாம் நடுங்கச் செய்யும் திறமுடையவன்; தேவர்களது பகைவர்களின் மனைவியரையெல்லாம் கைம்பெண்களாக்க வல்லவன் எப்படிப்பட்டவர்களாலேயும் தடைசெய்யக்கூடாத சக்கராயுதமுடையவன். அவன் அண்ணன் பலராமனோ மதத்தோடு சுழலும் கண்களால் பார்த்தவுடனேயே பகைவரது சமூகத்தை எரிக்கவல்லவர். மிகவும் பிரபல பகைவரான மதயானைகளையும் வயப்படுத்தும் திறனுடைய மரவெட்டி போன்ற கலப்பை ஆயுதமுடையவர்! அவ்விருவரோடும் யுத்தம் செய்யத்தக்க வலிமையுள்ளவன் தேவர்களில் கூட ஒருவனில்லை. அத்தகையவர்களை நாங்கள் எதிர்ப்பது எப்படி? ஆகையால் வேறு யாரையாவது உனக்குத் துணைசெய்ய வேண்டிக்கொள்! என்றான். அதைக்கேட்ட சததனுவா, அக்குரூரனே! நீ என்னைக் காக்கும் திறனில்லாதவன் என்று நினைத்தால், இந்த ஸ்யமந்தக இரத்தினத்தையாவது என்னிடமிருந்து வாங்கி நீ காப்பாற்றி வைக்கவேண்டும் என்று கெஞ்சினான். அதற்கு அக்குரூரன், அப்படியே செய்கிறேன் நீ மிகவும் துன்பப்பட நேரிட்டாலும் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பதாக எனக்கு வாக்குறுதியளித்தால், நான் இதைப் பத்திரப்படுத்திக் கொடுக்கிறேன்! என்றான். அதை சததனுவா ஒப்புக்கொண்டான். அக்குரூரனும் இரத்தினத்தை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டான். பிறகு சததனுவா, ஒப்பற்ற வேகமும், நூறுகாதம் வரை இளையாமல் சுமக்குந்திறமுடைய ஒரு பெண் குதிரையின் மீது ஏறிக்கொண்டு அதிவேகமாகச் சென்று விட்டான்.

அவன் ஓடிப்போனான் என்ற செய்தியை அறிந்த பலதேவர் கிருஷ்ணபிரான் இருவரும் சைனிய, சுக்ரீவ, மேக, புஷ்பவலாகம் என்ற நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். சததனுவாவை ஏற்றிச் சென்ற பெண்குதிரை நூறுகாத தூரம் அவனைச் சுமந்து சென்ற பிறகும் அதை அவன் வற்புறுத்தி செலுத்தியதால், அது ஓடமாட்டாமல் மிதிலை நகருக்கு அருகிலிருந்த ஒரு வனத்தில் இறந்தது. ஆகையால் அவன் கால்நடையாக ஓடத் துவங்கினான். அப்போது கிருஷ்ணபிரான் தன் தமையனிடம், கால்நடையாக ஓடிச்செல்லும் அந்த அதமனை நானே பின்தொடர்ந்து ஓடிப்பிடித்துக் கொன்றுவிட்டு வருகிறேன். அதுவரையில் நீர் இந்தத் தேரில் இருப்பீராக. இங்கு சததனுவாவின் குதிரை செத்திருப்பதைக் கண்டதால் நமது குதிரைகள் பயமடைந்துள்ளன. ஆகையால் இவற்றை இங்கிருந்து அப்புறம் ஓட்டிச் செல்ல வேண்டாம் என்று சொன்னார். இவ்விதம் தம்பியான ஸ்ரீகிருஷ்ணன் கூறியதைக் கேட்ட பலராமர், அதன்படி ஒப்புக்கொண்டார். ஸ்ரீகிருஷ்ணனும் இரண்டு குரோசதூரம் ஓடிச்சென்று, தூரத்திற் காணப்பட்ட சததனுவாவை குறித்து அங்கேயே இருந்தவண்ணம் தமது சக்கரத்தைப் பிரயோகித்து அவன் சிரத்தைச் சேதித்துப் பின்பு கிட்டப்போய் அவனுடைய உடலையும் ஆடைகளையும் சோதித்துப் பார்த்தார்; அப்படிப் பார்த்ததும் ஸ்யமந்தக மணியைக் காணாததால் அவர் திரும்பி வந்து பலராமரிடம் அண்ணா! சததானுவாவை நாம் வீணாகக் கொன்றாய்? எவ்வளவு தேடியும் அந்த மகத்தான இரத்தினம் கிடைக்கவில்லை என்றார். அதனால் பலபத்திரர் மிகவும் கோபங்கொண்டு ஸ்ரீகிருஷ்ணனே நோக்கி, தம்பீ! நீ பொருள் நாட்டம் உடையவனாய் தீயவழியில் செல்கிறாய். சீச்சீ! இத்தகைய நீ இத்தகைய நீ நிந்திக்கத்தக்கவன்! இவற்றையெல்லாம் உன்னுடன் பிறந்த தோஷத்துக்காக நான் பொறுத்தேன். ஆகையால் இனிமேல் நீ உன் இஷ்டப்படி எங்கேயும் போகலாம். நான் உன்னுடன் வரமாட்டேன். எனக்குத் துவாரகையினாலாவது உன்னாலாவது மற்றுமுள்ள பந்துக்களினாலாவது ஆகவேண்டியது ஒன்றுமில்லை, நீ என் எதிரில் வந்து அநேகம் பொய்ச்சத்தியங்களைச் செய்கிறாய்! உன் சரித்திரம் கொஞ்சமும் நன்றாக இல்லை! என்று நிந்தித்தார். பிறகு அவர் தம்பியுடன் பேசாமல் மிதிலை நகருக்குச் சென்றார். அங்கே ஜனக மன்னன், அவரை வரவேற்று உபசரித்துத் தம் மாளிகை ஒன்றில் தங்க வைத்திருந்தான். அங்கு பலராமரும் மகிழ்ச்சியுடன் தங்கியிருந்தார். அத்தருணத்தில் துரியோதனன் அஸ்தினாபுரத்தினின்றும் அங்கு வந்து பலராமரிடம் கதாயுத்தாப்பியாசஞ் செய்து கொண்டிருந்தான். ஸ்ரீவாசுதேவரோ துவாரகைக்குப் போய்விட்டார். மூன்றாண்டு காலங் கடந்த பிறகு பப்புரு, உக்கிரசேனன் முதலிய யாதவர்களனைவரும் ஸ்யமந்தக மணியை கண்ணன் அபகரிக்கவில்லையென்று தெளிந்து, அந்தக் கருத்தைப் பற்றி தம்பியினிடம் மனம் முறிந்து மிதிலையில் தங்கியிருக்கும் பலராமரிடம் சென்று அவரைச் சமாதானப்படுத்தி துவாரகைக்கு அழைத்து வந்தார்கள்.

அக்குரூரனோ ஸ்யமந்தக மணியின் மகிமையால் உண்டான பொன்னைக் கொண்டு, எம்பெருமானிடத்தில் சித்தமுடையவனாய், எப்போதும் யாகங்கள் செய்து கொண்டிருந்தான். யாகஞ்செய்து கொண்டிருக்கும்போது, க்ஷத்திரியனையாவது வைசியவையாவது கொன்றவன் பிரமஹத்தி தோஷமடைவான் என்று சாஸ்திரம் கூறுவதால் தனக்கு ஸ்ரீகிருஷ்ணனால் யாதொரு துன்பமும் நேரிடமாட்டாது என்று எண்ணிய அக்குரூரன் யாக தீட்சையாகிய கவசத்தை அணிந்திருந்தான். ஸ்யமந்தக இரத்தினத்தின் மகிமையால் அங்கு அறுபத்திரண்டு ஆண்டுகள் வரை பஞ்சமும் கொள்ள நோயும் ஏற்படாமல் இருந்தது. இப்படியிருக்கும் போது சததுவதனுடைய பேரனுக்குக் குமாரனான சத்துருக்கினன் என்பவனை, அக்குரூரனைச் சேர்ந்த போஜர்கள் அழித்ததால் சாத்துவதருடைய பகைமையுடன் துவாரகையில் வாசஞ்செய்வது நியாயமல்ல என்று எண்ணி அக்குரூரன் துவாரகையிலிருந்து தன்னுடைய இனத்தாரோடு கூடப்போய் விட்டான். அவன் துவாரகையை விட்டுப்போனது முதல் அங்கு வியாதியும் பஞ்சமும் தோன்றின. இதைக் கண்டு யாதவர்கள் அனைவரும் பலராமர், உக்கிரசேனன் முதலியவர்களுடன் சென்று அதன் காரணத்தை ஆலோசிக்கத் துவங்கினார்கள். அந்த சங்கத்தில் கருடத்வஜனான கிருஷ்ணபரமாத்மா மற்றவர்களை நோக்கி, இதென்ன இங்கு அநேக துன்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கின்றன? இது ஏன் என்று ஆலோசியுங்கள்! என்று கூறினார். அப்போது அந்தகன் என்னும் பெயருள்ள யாதவ மூப்பன் ஒருவன், கேளுங்கள் யாதவர்களே! அக்குரூரனுடைய தந்தை சுவபல்க்கன் என்று ஒருவன் இருந்தானே, அவன் இருந்த இடங்களிலெல்லாம் துர்ப்பிஷங்கள் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் காசி ராஜ்யத்தில் மழையில்லாமல் துன்பம் நேரிட்டது. காசியரசன் சுவபல்க்கனைத் தன் நகரத்துக்கு அழைத்துச் சென்றான். அதனால் மழை பெய்து நாட்டில் ÷க்ஷமம் உண்டாயிற்று. அந்த அரசனுக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அரசன் தனது நாட்டுக்கு நன்மை செய்ததற்காக, தன் புதல்வியை சுவபல்க்கனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தான். அவள் கருப்பத்திலிருந்து பிரசவ காலம் நேர்ந்தும் வெளியே வராமல் தாய்க்கு அதிகத் துன்பம் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். இதுபோலப் பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன. இப்படியிருக்கக் கணவன் தன் மனைவியின் கருவிலிருந்த சிசுவை நோக்கி மகளே! நீ ஏன் இன்னும் பிறக்கவில்லை? சீக்கிரம் வெளியில் வருவாயாக! உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறேன். உன்னை வயிற்றில் தாங்கியிருக்கும் உன் தாயை நீ ஏன் நெடுநாளாக வருத்தி வருகிறாய்? என்று சொன்னான்; உடனே வயிற்றிலிருந்த அந்தக் கன்னி ஐயா இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு பசுவைப் பிராமணருக்குத் தானஞ்செய்து வருவீராயின் மூன்றாண்டுகள் கழித்து நான் வெளிவருவேன் என்று சொன்னான். அதன்படி அரசன் தினந்தோறும் கோதானம் செய்ததனால் அவள் பிறந்தாள். ஆகவே அரசன் அவளுக்குக் காந்தினி என்று பெயரிட்டான். அப்படிப்பட்டவள் வயிற்றில் அப்படிப்பட்ட சுவபல்க்கனுக்குப் பிறந்தவன் இந்த அக்குரூரன். இத்தகைய சுத்தமான பிறவியும் நல்ல ஒழுக்கமுடையவர் இங்கிருந்து நீக்கியதால் இந்த உபத்திரவங்கள் யாவுமே உண்டாயின. குணவானாக இருப்பவனிடத்தில் குற்றம் பாராட்டுதல் கூடாது. ஆகையால் அக்குரூரனை இங்கே வரவழைக்க வேண்டும் என்று அந்தக் கிழவன் கூறியதை கிருஷ்ணபிரானும் மற்றவரும் கேட்டார்கள். அவர்கள் அக்குரூரனைத் துவாரகைக்கு அழைத்து வந்தார்கள்; அவன் வந்தவுடன் அவனிடமிருந்த ஸ்யமந்தக மணியின் பிரபாவத்தால் மழையின்மை, கொள்ளை நோய் முதலிய தொல்லைகள் நீங்கின.

அப்போது கண்ணபிரான் இந்த அக்குரூரனுக்கு இவ்வளவு மகிமை இருப்பதற்கு இவன் சுவபல்க்கனுக்கும் காந்தினிக்கும் பிறந்தான் என்பது போதிய காரணமல்ல இது மிகவும் சாதாரண விஷயம்! மழையின்மை முதலிய துன்பங்களை நீக்குவது என்பது மகாயோகிக்கும் அரிய காரியமாகும்! ஆகையால் ஸ்யமந்தகமணியானது இந்த அக்குரூரனிடம் தான் இருக்க வேண்டும்! என்று உறுதியாக நம்பினார். எனவே அவர் யாதவர்களனைவரையும் தமது மாளிகைக்கு வரவழைத்தார். அவர்கள் அனைவரும் கூடிய பிறகு அவர் அக்குரூரனை நோக்கி, தானபதியான அக்குரூரரே! சததனுவா அந்த ஸ்யமந்தக மணியை உமக்குக் கொடுத்தது நமக்குத் தெரியும். அந்த மணி உம்மிடம் தான் இருக்கிறது. அதன் பயன் இந்த ராஜ்யம் முழுவதும் அனுபவித்து வருகிறது. நாமெல்லாம் அனுபவித்து வருகிறோம், ஆனால் நமது பலபத்திரருக்கு அதை நான் எடுத்துக் கொண்டதாக ஒரு நினைப்பு அதற்காக அந்த மணியை இங்கு காண்பிக்க வேண்டும்! என்று கூறிவிட்டு, மவுனமாக இருந்தார். அக்குரூரர், யோசிக்கலானார். இப்பொழுது நாம் என்ன செய்வது? இல்லையென்றால், இந்த சபையிலேயே நமது ஆடைகளைச் சோதித்து ரத்தினத்தை சுவாமி எடுத்து விடுவார். பிறகு நாம் அவருக்கு விரோதியாகி விடுவோம் அது நல்லதல்ல என்று ஆலோசித்து, சகல ஜகத்காரணரான கண்ணபிரானை நோக்கிக் கூறலானார். சுவாமி! ஸ்யமந்தகமணியை சததனுவா எனக்குக் கொடுத்தான். அவன் போன பிறகு இன்றையோ நாளையோ சுவாமி நம்மைக் கேட்பார் என்ற நினைப்பில் இத்தனை நாள் வரையில் அதை நான் வைத்திருந்தேன். அதை வைத்திருக்கும் வருத்தத்தினால், சகல போகங்களிலும் மனப்பற்றில்லாமல் சிறிதும் சுகமறியாமல் இருக்கிறேன். இந்த இரத்தினத்தை தரித்துக் கொண்டாகிலும் இந்த ராஜ்யத்துக்கு ÷க்ஷமத்தை உண்டாக்கும் உபகாரத்தைச் செய்யாமல் நம்முடைய கையில் கொண்டுவந்து கொடுக்கிறானே என்று தாங்கள் நினைப்பீர்களே என்ற பயத்தால் அதை நான் வலுவில் வந்து இத்தனை நாளும் சமர்ப்பிக்காமல் இருந்தேன். ஆகையால் நீங்களே அதை யாருக்காயினும் கொடுக்கலாம்! சொல்லி தம் மடியில் முடித்து வைத்திருந்த மிகச்சிறிய பொற்சிமிழை எடுத்துத் திறந்து வைத்தார். உடனே சபை முழுவதும் அந்த மணியின் ஒளி வெள்ளம் பளபளவென்று மின்னியது. அக்குரூரர், சபையோரை நோக்கி சபையோர்களே! இந்த ஸ்யமந்தக மணியை சததனுவா என்னிடம் கொடுத்து விட்டுப் போனான். இதோ இதை நான் இங்கு வைத்து விட்டேன் இது யாரைச் சேர வேண்டியதோ, அவர் இதை எடுத்துக்கொள்ளலாம்! என்றார். யாதவர்கள் அனைவரும் நன்றாய் இருக்கிறது? என்று மகிழ்ந்து புகழ்ந்தனர். பலபத்திரரான பலராமரோ, இது நமக்கும் தனக்கும் பொதுவில் இருக்கட்டும் என்று கண்ணபிரானே முன்பு கூறியிருக்கிறான்! என்று நினைத்து அதன் மீது ஆசை கொண்டிருந்தார். சத்தியபாமாவோ, இது என் தந்தை வீட்டுத் தனம் அல்லவா? ஆகையால் இது எனக்கே உரியது! என்று நினைத்திருந்தாள். கண்ணன் அவர்கள் இருவருடைய கருத்தையும் புரிந்து கொண்டு, எருதுக்கும் சக்கரத்துக்கும் இடைப்பட்ட ஜந்துவைப் போல சங்கடப்பட்டார்.

அவர் சபையில் அக்குரூரரை நோக்கி, அக்குரூரரே! நான் இப்போது இந்த மணியை இங்குள்ளோர் அனைவர்க்கும் எதிரில் வைக்கச் சொன்னது ஏன் தெரியுமா? இதை நான் அபகரித்தேன் என்று இங்குள்ள சிலர் எண்ணியிருப்பதை மாற்றுவதற்காகவே தான்! இதுவோ, என் தமையனுக்கும் எனக்கும் பொதுவானது. நன்றாய் யோசித்தால் இது சத்தியபாமையின் பிதுர்த்தனம் ஆகையால் அவளுக்கு உரியது. இதனால் நாட்டிற்கு நலனும் சுகமும் உண்டாகிறது. எனவே, இதனை மகாபரிசுத்தனாகவும் பிரம்மசரிய விரதத்தில் உயர்ந்தவனாகவும் இருப்பவனே வைத்திருக்க வேண்டும் அசுத்தனாக இருப்பவன் இதை வைத்திருந்தால் தீமைகளே உண்டாகும்! நானோ, பதினாயிரம் பெண்களை வைத்திருப்பவன்! ஆகையால் நான் இந்தப் புனிதமான மணியை வைத்திருக்கும் யோக்கியத்தை உடையனவல்லன். சத்தியபாமையும் இதை வைத்திருப்பதற்கு அருகதையுடையவளல்ல! பலபத்திரரோ இதைத் தரிப்பதற்காகச் சுராபானம் முதலிய போகங்களையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும். ஆகையால், யாதவ கூட்டமும் பலராமரும் நானும் சத்தியபாமையும் உம்மைப் பிரார்த்திப்பது என்னவெனில் இத்தனை நாட்களையும் போலவே இனிமேலும் இந்த நாட்டின் நலனுக்காக அக்குரூரரே இந்த மணியைத் தரித்திருக்க வேண்டும்! இதை அவர் மறுக்க வேண்டாமென்று சபை முன்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். புன்முறுவலோடு அதைக் கேட்டதும் அக்குரூரரோ, சுவாமியின் நியமனத்துக்கு மாறாக நான் நடப்பதற்குச் சக்தியற்றவன். ஆகவே கண்ணபிரான் திருவுரைப்படி நடக்கச் சித்தமாக இருக்கிறேன்! என்று சொல்லி அந்த இரத்தினத்தை தமது கழுத்தில் தரித்துக் கொண்டார். மைத்ரேயரே! இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணபகவானுக்கு நேர்ந்த வீண் அபவாத நீக்கத்தை நினைப்பவர்களுக்கு ஒருபோதும் அபவாதம் கிஞ்சித்தும் நேரிடுவதில்லை. கரணகளே பரங்கள் மெலிவுறாமல் வாழ்ந்து சகல பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள்!

————

14. அனமித்திர வம்ச வரலாறு

அனமித்திரனின் மகன் சினி என்று ஒருவன் இருந்தான். அவன் மகன் சத்தியகன், அவனது மகன் சாத்தியகி, அவனுக்கு யுயுதானன் என்ற பெயருமுண்டு. அவன் மகன் சஞ்சயன், அவன் மகன் குணி, அவன் பிள்ளை யுகந்தரன், இவர்கள் தான் சைனேயர் என்று வழங்கப்பட்டனர். அந்த அனமித்திரனின் வமிசத்தில் விருஷ்ணி என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மகன் தான் சுவபல்க்கன் அவனுக்குச் சிதிரகன் என்று ஒரு தம்பி உண்டு. சுவபல்க்கனுக்கு காந்தினியிடத்தில் அக்குரூரர் பிறந்தார். அந்த சுவபல்க்கனுக்கே மற்றொருத்தியின் வயிற்றில் உபமத்கு என்பவன் பிறந்தான். உபமத்குவுக்கு மிருதாமிருதன், விஸ்வன், அரிமேஜயன், கிரிக்ஷத்திரன், உபக்ஷத்திரன், சத்ருக்கினன், அரிமர்த்தனன், தருமதிருக்கு, திருஷ்ட தருமன் கந்தமன், ஓஜவாஹன் என்ற பிள்ளைகளும், சுதாரை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அக்குரூரருக்குத் தேவவான், உபதேவன் என்பவர்கள் பிறந்தார்கள். சித்திரகன் என்பவனுக்கு பிருது விபுருது முதலிய மக்கள் பலர் இருந்தார்கள். முன்பு சொன்ன சத்துவத குமாரனான அந்தகனுக்குக் குகுரன், பஜமானன், சுசி, கம்பலன், பராஹிதன் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் குகுரனுக்குத் திருஷ்டன் என்பவன் பிறந்தான். அவன் மகன் கபோதரோமா, அவன் மகன் விலோமா, அவனுக்கு தும்புரு என்ற கந்தர்வனுடைய நண்பனான அனு என்பவன் பிறந்தான். அந்த அனுவுக்கு ஆனகதுந்துபி, அவனுக்கு அபிஜித்து, அவனுக்கு புனர்வசு, அவனுக்கு ஆகுகன் என்ற மகனும் ஆகுகி என்ற மகள் ஒருத்தியும் உண்டானார்கள். ஆகுகனுக்குத் தேவகன், உக்ரசேனன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் தேவகனுக்கு தேவவான், உபதேவன், சகதேவன், தேவரக்ஷிதா என்ற நான்கு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு விருகதேவை, உபதேவை தேவரக்ஷிதை, ஸ்ரீதேவை, சாந்தி தேவை, சகதேவை, தேவகி என்று ஏழு சகோதரிகள் உண்டு. அந்த ஏழு பெண்களையும் வாசுதேவர் திருமணஞ் செய்து கொண்டார். உக்ரசேனனுக்கு கம்சன் நியக்ரோதன், சுநாமா, அனகா, ஹ்வன், சங்கு, சுபூமி ராஷ்டிரபாலன், யுத்ததுஷ்டி சுதுஷ்டிமான் என்ற பிள்ளைகளும், கம்சை கம்சவதி சுதனூராஷ்டிர பாலிகை என்ற பெண்கள் நால்வரும் பிறந்தார்கள். பசமானன் என்பவனுக்கு விடூரதன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சூரன் அவன் மகன் சமி, அவன் மகன் பிரதிக்ஷத்திரன், அவன் மகன் போஜன், அவன் மகன் இருதிகன், இருதிகனுக்கு கிருதவர்மா, சததனு; தேவார்ஹன் தேவகர்ப்பன் என்ற பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் தேவகர்ப்பனுக்கு சூரன் என்பவன் பிறந்தான். அவனுக்கு மாரிஷை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். சூரன், அவன் மூலம் வசுதேவன் முதலிய பத்துப் பிள்ளைகளைப் பெற்றான். அந்த வசுதேவன் பிறக்கும் போது அவரிடம் கண்ணபெருமான் திருவவதாரம் செய்யப் போகிறார் என்பதை அறிந்து தேவர்கள் ஆனகம், துந்துபி முதலிய வாத்தியங்களை முழக்கினர். அதனால் வசுதேவருக்கு ஆனக துந்துபி என்ற பெயர் உண்டாயிற்று. அவருக்கு தேவபாகன், தேவ சிரவன், அஷ்டகன், ககுச்சக்கிரன், வச்சதாரகன், சிருஞ்சயன், சியாமன், சமிகன், கண்டூஷன் என்ற ஒன்பது சகோதரர்களும் பிருதை, சுருததேவை, சுருதகீர்த்தி, சுருதசிரவை, ராஜாதிதேவி என்ற ஐந்து சகோதரிகளும் இருந்தார்கள். அந்த சூரமாமன்னனுக்கு குந்தி என்ற நண்பன் ஒருவன் இருந்தான்.

அவன் அபுத்திரனாக இருந்ததால், பிருதை என்னும் தனது தலைமகளை அவனுக்குத் தத்தஞ் செய்து கொடுத்தான். அந்த பிருதையை பாண்டு மகாராஜன் திருமணஞ் செய்துகொண்டான். பிருதைக்கு தருமன், வாயு, இந்திரன் இவர்களால் யுதிஷ்டிரன், பீமசேனன், அர்ச்சுனன் என்ற மூன்று குமாரர்கள் உண்டாக்கப்பட்டனர். மேலும் பிருதை எனும் குந்திதேவி கன்னியாக இருந்த காலத்தில் சூரியபகவானால் கர்ணன் என்பவன் உண்டாக்கப்பட்டிருந்தான். அந்த குந்திக்கு மாத்திரி என்று ஒரு சக்களத்தி இருந்தாள். அவளுக்கு நாசத்தியன்; தசிரன் என்ற தேவர்களால் நகுலன், சகாதேவன் என்ற பிள்ளைகள் உண்டாக்கப்பட்டனர். இந்தக் குந்திதேவியின் சகோதரியான சுருததேவை என்பவளைக் காருக தேசத்து அரசனான விருத்ததர்ம மன்னன் மணந்தான். அவள் வயிற்றில் தந்தவக்கிரன் என்ற அசுரன் ஒருவன் பிறந்தான். மற்றொரு சகோதரியான சுருத கீர்த்தியை கேகய மன்னன் மணந்தான். அவன் வயிற்றில் சந்தர்த்தனன் முதலிய ஐவர் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அடுத்த சகோதரி ராஜாதிதேவி, அவந்தி மன்னனுக்கு மனைவியாகி, விந்தன், அனுவிந்தன் என்பவர்களைப் பெற்றாள். மற்றொரு சகோதரியான சிருத சிரவசு என்பவள் சேதி தேசத்து மன்னனின் மனைவியாகிய சிசுபாலன் என்ற மகனைப் பெற்றாள். சிசுபாலன் முற்காலத்துப் பிறவியில் அசுரர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கி ஹிரண்யகசிபு என்பவனாகும். சகல லோக குருமூர்த்தியாகிய நரசிம்ம மூர்த்தியால் ஹிரண்யன் சங்காரம் செய்யப்பட்டு மீண்டும் அவன் அளவற்ற வீரிய, சவுகரிய பராக்கிரம சம்பத்துக்கள் வாய்ந்தவனாகவும், மூவுலகத்தாரையும் தன் வயப்படுத்தி அடக்கியாளும் திறமையடைந்தவனாகவும் உள்ள ராவணனாகப் பிறந்தான். அந்தப் பிறப்பில் ஸ்ரீராமாவதாரஞ் செய்த எம்பெருமானாலேயே சங்கரிக்கப்பட்டான். பிறகு இப்பிறவியில் அவன் சிசுபாலனாகப் பிறந்த போதும், பூபாரந் தீர்ப்பதற்காக கண்ணபெருமானாக அவதரித்த பகவானிடம் அவன் பகைமையை பாராட்டி வந்தான், அதனால் கண்ணபிரானாலேயே சங்கரிக்கப்பட்டு, எப்போதும் அவ்வெம்பெருமானையே நினைத்திருந்ததால் பரமாத்வாவிடத்திலே சாயுஜ்யம் பெற்றான். பக்தியோடு தன்னைத் தியானிப்பவர்களுக்குத் திருவுள்ளம் உவந்து மோட்சம் அளிப்பதைப் போலவே, பகைமை கொண்டாவது தன்னை இடைவிடாமல் நினைத்திருந்தவருக்கும் பகவான் திருவுள்ளம் உகக்காமலும் அந்த மோட்சத்தைத் தந்தருள்கிறான்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் நான்காவது அம்சம்—-முதல் பாகம் —

February 28, 2021

1. ககுத்துமியின் கதை
2. சசாத, ககுஸ்தா, மாந்தாதா வரலாறுகள்
3. புருகுச்ச, சகர மாமன்னர்களின் வரலாறுகள்
4. சகர புத்திரரின் வரலாறும், சக்கரவர்த்தித் திருமகனார் வைபவமும்
5. நிமி வம்ச வரலாறு

——————–

1. ககுத்துமியின் கதை

பராசர முனிவரை நோக்கி மைத்ரேயர், சுவாமி! சத்கருமம் செய்யப் புகுந்தவருக்குச் செய்யத்தக்க நித்திய நைமித்திக ரூபமான கர்மங்களின் சொரூபத்தையும் வருணாசிரம முறைகளையும் தாங்கள் எனக்குக் கூறினீர்கள். இனிமேல் அரசர்களின் வமிசங்களைத் தங்களிடமிருந்து நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் கிருபை செய்து அவற்றை எனக்கு விளங்கச் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். அவரது ஆசாரியரான பராசர முனிவர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வைவஸ்வத மனுவின் வமிசமானது; மகா யாக கர்த்தாக்களையும் மகாவீரர்களையும் மகாசூரரையும் கொண்ட பேரரசர்கள் வாழ்ந்த பெரியதொரு வமிசமாகும். இந்த வமிசத்தின் வரலாற்றை சகல பாபங்களும் நசிக்கும் பொருட்டு நான் உமக்குச் சொல்லுகிறேன்! ஜகங்களுக்கெல்லாம் ஆதிகாரணமானவரும் ரிக், யஜுர், ஸாமாதி மயருமான ஸ்ரீமந்நாராயண பகவானுடைய மூர்த்தி ஸ்வரூபமாய், இரணியகர்ப்பர் என்ற பெயரையுடையவராய் இந்தப் பிரமாண்டத்தின் அதிபதியான பிருமாவானவர், பூர்வத்தில் உண்டானார் அல்லவா? அந்தப் பிருமாவின் வலதுகட்டை விரலிலிருந்து தக்ஷப் பிரஜாபதி தோன்றினார். தக்ஷருடைய புத்திரி அதிதி. அந்த அதிதியின் மகன் விவசுவான் என்ற சூரியனாகும். அவனது மகன் மனு, மனுவுக்கு இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், பிருக்ஷத்திரன் என்று ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே, அந்த மனுபுத்திரனுக்காக மித்ரா வருணனைக் குறித்து ஒரு யாகம் செய்ய அதில் ஹோதாவின் அபசாரத்தால் இளை என்ற கன்னியொருத்தி பிறந்தாள். அவள் மித்திராவருணர்களுடைய அனுக்கிரகத்தால் மீண்டும் பெண்ணாகி, சந்திரனுடைய மகனான புதனுடைய ஆஸ்ரமத்தின் அருகே திரிந்து கொண்டிருந்தாள்.

புதன்-அவள் மீது காமங்கொண்டு அவளோடு கூடிமகிழ்ந்து புரூரவன் என்ற பிள்ளையைப் பெற்றான். அந்தப் புரூரவன் பிறந்த பிறகு, பெண்ணாக மாறி சுத்தியும்னன் மறுபடியும் ஆணாக மாற வேண்டும் என்று மகா தேஜோமயமான முனிவர்கள் விரும்பினார்கள். அதற்காக யாக மயனாகவும், ரிக், யஜுர், ஸாம, அதர்வண மயனாகவும், மனோ மயனாகவும் ஞான விஞ்ஞானமயனாகவும், அன்னமயனாகவும், அமிருத மயனாகவும் சர்வமயனாகவும், இவை ஒன்றுமாகாதவனாயும், ஆறு குணசம்பன்னனாயும் இருக்கும். யக்ஞ புருஷனைக் குறித்து அம்முனிவர்கள் யாகஞ்செய்து, அந்த யாகத்தில் தோன்றிய ஸ்ரீயப்பதியினுடைய அனுக்கிரகத்தினால் இளையானவள் மீண்டும் ஆண் பிள்ளையாகி சுத்தியும்னன் என்ற பெயரைப் பெற்றான். அவனுக்கு உத்கலன், கயன், விதானன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுத்தியும்னனோ, முன்பு பெண்ணாக இருந்ததனாலே ஆட்சியுரிமை பெறவில்லை. ஆயினும் வசிஷ்ட மாமுனிவரின் சொற்படி, அவனது தந்தை பிரதிஷ்டானம் என்ற நகரத்தைப் புரூரவனுக்குக் கொடுத்தான். பிருக்ஷத்திரன் என்பவன் ஒருநாள் வசிஷ்டருடைய பசுக்கூட்டத்தைக் காவல் புரிந்து கொண்டிருக்கும்போது, இரவில் அந்தப் பசுக்கூட்டத்தில் புகுந்த ஒரு புலியைக் கொல்லப்போய் குறி தவறி ஒரு பசுவைக் கொன்றுவிட்டான். அதனால் குருவின் சாபம் பெற்றுச் சூத்திரனானான், கரூசனிடத்திலிருந்து கரூர தேசத்தைக் காத்து வந்த மகா பராக்கிரமசாலிகளான க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள். திருஷ்டன் என்பவனுக்கு நரபாகன் என்பவன் பிறந்தான். அவனுக்குப் பலந்தனன் பிறந்தான். அந்தப் பலந்தனன் மகனான வச்சப்பிரீதி என்பவன், மிகவும் புகழ் பெற்றிருந்தான். அவனது மகன் பிராம்சு அந்தப் பிராம்சுவுக்கு பிரசாபதி என்பவன் பிறந்தான். அவனுக்குக் கனி மித்திரன் அவனுக்கு சக்ஷúஷன், சக்ஷúஷனுக்கு மிகவும் பராக்கிரசாலியான விமிசன். அவனுக்கு விம்சகன், அவனுக்குக் கனிநேத்திரன் அவனுக்கு அதிவிபூதி, அவனுக்கு மாவீரனான கரந்தமன், அவனுக்கு அவிக்ஷித்து, அந்த அவிக்ஷித்துக்கு நற்குணமுடைய மருத்தன் என்ற ரீதியில் புதல்வர்கள் பிறந்தார்கள். மருத்தனைப் பற்றி இரண்டு பாடல்கள் இப்போதும் வழங்குகின்றன. இந்தவுலகத்தில் மருத்தனுடைய யாகத்தைப் போல் யாருடைய வேள்வி தான் இருந்தது? அந்த யாகத்திற்கு வேண்டிய கருவிகள் யாவும் செம்பொன்னாற் செய்யப்பட்டு விளங்கின. அந்த வேள்வியிலே, சோமபானத்தால் இந்திரனும் தக்ஷிணையால் அந்தணரும், உடல் தெரியாதிருக்கும்படி மகிழ்ந்தார்கள். மேலும் அதில் வாயுக்களே உணவுகளைப் பரிமாறிய வேலையாட்கள் ஆனார்கள். தேவர்கள் சபையோராயினர்.

அத்தகைய மருத்தன் மாமன்னனாக இருந்து நரிஷ்யந்தனன் என்னும் மகனைப் பெற்றான். அந்த நரிஷ்யந்தனன் மகன் தமன். தமனின் மகன் ராஜவர்த்தனன். அவனுக்கு சுவிருத்தி, சுவிருத்திக்குக் கேவலன்; கேவலனுக்கு சுதிருதி, அவனுக்கு நரன், நரனுக்குச் சந்திரன், அவனுக்குக் கேவலன், அவனுக்குப் பந்துமான், அவனுக்கு வேகவான், அந்த வேகவானின் மகன் புதன்; அவனுடைய மகன் திருணபிந்து! திருணபிந்துவுக்கு இளிபிளை என்ற பெண் பிறந்தாள். அந்தத் திருணபிந்து மன்னனை அலம்புசை என்ற அப்சர மங்கை விரும்பிப் புணர்ந்து விசாலன் என்ற மகனை ஈன்றெடுத்தாள். அவன்தான் வைசாலி என்ற நகரத்தை உண்டாக்கினான். அவனுக்கு ஹேமசந்திரன் என்ற மகன் பிறந்தனன். அவன் மகன் சந்திரன்; அவனுடைய மகன் தூமிராஷன்; அவனுக்குச் சருஞ்யன்; அவன் மகன் சகதேவன், அவனுக்கு கிருசாசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சோமதத்தன் என்ற புதல்வன் பிறந்து, பத்து அஸ்வமேதயாகம் செய்தான். அவனது மகன் ஜனமேஜயன். ஜனமேஜயனின் மகன் சுமதி அவர்களனைவரும் வைசாலியை ஆண்டுவந்த அரசர்களாவார்கள், இவர்களைப் பற்றி ஒரு சுலோகம் வழங்கி வருகிறது. வைசாலி நகரை ஆண்ட அரசர்கள் யாவரும் மூலபுருஷனான திருணபிந்து மாமன்னனுடைய அனுக்கிரகத்தால் தீர்க்காயுளையுடையவர்களாயும், மகாத்மாக்களாகவும், வீரர்களாயும், தர்மசீலராயும் இருந்தார்கள் என்பதுதான் அந்தச் சுலோகமாகும். இனி சர்யாதி என்பவனுக்குச் சுகன்னியை என்ற மகள் ஒருத்தி பிறந்தாள். அவளைச் சியவனர் என்ற மிகவும் புகழ்பெற்ற முனிவர் ஒருவர் திருமணம் புரிந்து கொண்டார். அந்தச் சர்யாதிக்கு ஆனர்த்தனன் என்ற ஒரு மகன் உண்டு. மேலைக் கடற்கரையில் அவன் ஆண்ட தேசத்துக்கு ஆனர்த்தம் என்ற பெயர் வழங்கலாயிற்று. அவனுக்கு ரேவதன் என்ற மகன் பிறந்து அவன் குசஸ்தலி என்ற நகரத்திலிருந்து கொண்டு ஆனர்த்த நாட்டை ஆண்டுவந்தான். அந்த ரேவதனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மூத்தவன் தான் ககுத்துமி என்பவனாகும், அவனுக்கு ரைவதன் என்ற பெயரும் வழங்கி வரலாயிற்று. அவனுக்கு ரேவதி என்ற மகள் ஒருந்தி பிறந்தாள். அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இவளை யாருக்குக் கொடுக்கலாம் என்று கேட்கும் பொருட்டு பிரம்மலோகத்துக்குக் ககுத்துமி சென்றான். ஹாஹா ஹுஹு என்ற கந்தர்வர்கள் இருவர் அதிதானம் என்று வழங்கப்பட்ட இனிய சங்கீதத்தைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அது சித்திரை, தக்ஷிணை வார்த்திகை என்ற மூன்று வழிகளின் பரிவிர்த்தங்களினால் சுற்றிக்கொண்டு வருவதை அநேக யுககாலம் வரையில் அவ்வரசன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வளவு அதிக காலம் சென்றதைக் கூட ஒரு முகூர்த்த காலமாகவே நினைத்தான். அந்தச் சங்கீதம் முடிந்த பிறகு, சதுர்முகனை வணங்கிய ரைவத மன்னன் இந்தக் கன்னிகைக்கு தகுதியான கணவன் யார்? என்று பிரும்மாவைக் கேட்டான். அதற்கு அவர் மன்னனே! நீ நினைத்துக் கொண்டிருக்கும் வரன்களைச் சொல்வாயாக என்றார். அவரைக் ககுத்துமி மன்னன் வணங்கித் தான் நினைத்திருந்த சிலரது பெயர்களைச் சொல்லி, தேவா! இவர்களில் யாருக்கு நான் என் புதல்வியைக் கொடுக்கலாம்? அவனைத் தேர்ந்து சொல்லுங்கள் என்று கேட்டான்.

அரசனே! நீ யாரை எண்ணிக் கொண்டிருந்தாயோ அவர்களுடைய பிள்ளைகளும் அந்தப் பிள்ளைகளுடைய சந்ததியினரும் இப்போது பூவுலகில் இல்லை. நீ இங்கு நடந்த சங்கீத நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்திற்குள் எத்தனையோ யுகங்கள் கழிந்து விட்டன. இப்போது பூவுலகத்தில் வைவஸ்வத மனுவந்தரத்திலே இருபத்தெட்டாவது சதுர்யுகம் முடியப் போகிறது. கலியுகம் நெருங்குகிறது. இப்போது பூர்வகாலத்தைச் சேர்ந்த நீ ஒருவனே இருப்பதால், இக்காலத்தவரான யாருக்காவது இந்தப் பெண்ணை, நீ ஒருவனாகவேக் கொடுக்க வேண்டும். இப்போது உன்னுடைய புத்திரர், மித்திரர், மனைவியர், மந்திரிகள், உறவினர், ஏவலாட்கள், சேனைகள் முதலியன யாவுமே ஒழிந்து போய்விட்டன! என்றார் பிருமா. அதைக்கேட்ட ரைவத மன்னன் மிகவும் நடுங்கி, சுவாமி! இப்படியானால் என் மகளின் கதிதான் என்ன? இனி இந்தக் கன்னியை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கேட்டான். ரைவத மன்னனே; அஜனாயும் சர்வமயனாயும் இருக்கிற எவனுக்கு ஆதி மத்தியம், அந்தம் என்ற இந்த மூன்றையும் யானும் மற்றவரும் அறியோமோ பரமேசுவரனான எவனுடைய ஸ்வரூபத்தையும் மேலான பிரபாவத்தையும், பலத்தையும் அறியோமோ, கலா முகூர்த்தாதி மயமான காலமானது பரமபதம் என்று சொல்லப்பட்ட எவனுடைய திரிபாத விபூதியை மாற்றமாட்டாதோ, உற்பத்தி நாசங்கள் இல்லாதவனாயும் சர்வ சரீரகனாயும், கர்வமயமான பெயர்களும் ரூபங்களும் இல்லாதவனாயும் என்றும் ஒருபடியே இருப்பவனாயுமுள்ள எவனுடைய அருளால் நான் படைப்பவனாகினேனோ எவனுடைய குரோத அம்சத்தால் ருத்திரமூர்த்தி சங்காரகர்த்தன் ஆனானோ, எந்தப் பரமபுருஷன் எங்கள் இருவருக்குமிடையில் காத்தலுக்கு உரிய கர்த்தாவாக அவதரித்து எழுந்தருளியிருக்கிறானோ எவன் தனது அம்சத்தினால் என்னுள் ஆவிப்பவித்து படைக்கிறானோ தானே புருஷ ஸ்வரூபியாக இருந்து காக்கிறானோ ருத்திரனிடத்தில் அம்ச ஆவிர்ப்பாவத்தால் சர்வ சங்காரஞ் செய்கிறானோ; எவன் இந்திரன் முதலியோரின் வடிவிலே உலகத்தைக் காக்கிறானோ எவன் சூரிய சந்திர ரூபியாகி இருளைப் போக்குகிறானோ, பூமி ரூபியாகி எல்லாவற்றையும் எவன் சுமக்கிறானோ, வாயுரூபியாக யாவற்றையும் எவன் அசைக்கிறானோ, அக்னிரூபியாகி பாகத்திற்கு எவன் உபயோகமாகிறானோ ஆகாயரூபியாக இருந்து சகலத்துக்கும் எவன் இடங்கொடுக்கிறானோ, தண்ணீரும் சோறுமாகி உலகத்தின் திருப்திக்கு எவன் காரணமாகிறானோ, எவன் யாவற்றையும் தன்னையும் தனக்குத்தானே பரிபாலனம் செய்கிறானோ, எவன் இதரங்களையும் தன்னையும் தானே அழித்துக் கொள்கிறானோ இந்தச் சிருஷ்டி ஸ்திதி, சங்கார கர்த்தாக்களாகிய மூவருக்கும் சிருஷ்டிக்கப்படுவனவும், காக்கப்படுவனவும், சங்கரிக்கப்படுவனவுமாக மூன்றுக்கும் வேறாய் விகாராதிகள் இல்லாமல் எவன் விளங்குகிறானோ, எவனிடம் உலகம் யாவுமே இருக்கின்றனவோ எவன் சகலலோக சொரூபியாக இருக்கிறானோ எவன் எல்லாவற்றுக்கும் முதலாவதாக இருக்கிறானோ எவன் இவ்வுலகத்தில் எங்கும் இருக்கிறானோ அந்தச் சர்வேஸ்வரனான விஷ்ணுபகவான் இப்போது பூவுலகத்தில் தன் அமிசத்தால் ஒரு திருவவதாரஞ் செய்திருக்கிறான்.

முன்பு உம்முடைய தலைநகரான குசஸ்தலியானது இப்போது யாதவ மன்னர்களால் ஆளப்பட்டு வருகிறது. துவாரகை என்ற பெயரையுடைய அந்த நகரம் தேவேந்திரனின் தலைநகரைப் போல் இருக்கிறது. அதில் எம்பெருமானார் ஆதிசேஷனது அம்சத்தினால் அவதரித்து பலராமன் என்ற திருப்பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். அரசனே! அவனுக்கு உன் மகளைப் பத்னியாகச் சமர்ப்பிப்பாயாக. உன் மகள், பெண்களில் இரத்தினத்தைப் போன்றவள் ஆகையால் இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று பிருமதேவர் கூறினார். பிறகு ககுத்துமி மன்னன் பூவுலகம் வந்தான். அங்கேயிருந்தவர்கள் மிகக்குட்டையான வடிவமும், அற்ப தேஜஸும், அற்பமான ஞானசக்திகளும் கொண்டவர்களாக இருப்பதைக் கண்டு வியந்த வண்ணம் துவாரகைக்குச் சென்றான். அங்கு பலராமனுக்கு தன் செல்வியை மணஞ்செய்து கொடுத்தான். தாலத்துவசரான அந்தப் பலராமன் தன்னைவிடத் தான் மணந்தவள் அதிக உயரமாக இருந்ததால் தமது ஆயுதமான கலப்பையால் வணக்கியருளினான். அந்தப் பொற்கொடியும் அவரது உணர்ச்சிக்கு ஏற்றப் பிரமாணம் உடையவளாய், வேறு கன்னிகையைப் போலாகி விட்டாள். பிறகு ககுத்துமி மன்னன் தவஞ்செய்ய, இமயமலைச் சாரலுக்குச் சென்று விட்டான்.

—————-

2. சசாத, ககுஸ்தா, மாந்தாதா வரலாறுகள்

ககுத்துமி மன்னன், பிருமலோகத்திலிருந்து பூவுலகத்திற்கு வராமல் இருந்தபோது, புண்ணியஜனர் என்ற அரக்கர்கள் குசஸ்தலிப் பட்டணத்தை அழித்தார்கள். அதிலிருந்த அவனது தம்பியரெல்லாம் அவ்வரக்கர்களுக்குப் பயந்து நான்கு திசைகளிலும் ஓடியதால் அந்தக்குலத்து அரசர்கள் எங்கும் இருந்தார்கள். விருஷ்டன் என்பவன் மூலமாக, வார்ஷ்டகம் என்ற ராஜகுலம் உண்டாயிற்று. நரபாகன் என்பவனின் மகனும் நரபாகன் என்ற பெயரையே பெற்றிரு