ஸ்ரீ ஹரிவம்ச பர்வம்–அத்யாயம் 51-(விஷ்ணு தேவ ஸம்வாதம்)-சுமையில் இருந்து பூமியை விடுவிக்கும் முன்மொழிவு |–

பூமியின் நிலையை நாராயணனிடம் விளக்கிச் சொன்ன பிரம்மன்; நாராயணனுடன் ஆலோசிப்பதற்காக மேரு மலையின் சிகரத்திற்குச் செல்ல வேண்டும் என்று கேட்ட பிரம்மன்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அனைவரின் பெரும்பாட்டனான பிரம்மன், விஷ்ணுவின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களுக்கான நன்மைகள் நிறைந்த சொற்களைச் சொன்னான்.(1)

{பிரம்மன்}, “பல்வேறு போர்களில் நீ தேவர்களின் தலைவனாக இருந்து பாதுகாப்பை அளிப்பதால், அவர்களுக்கு அசுரர்களிடம் இருந்து எந்த அச்சமும் ஏற்படவில்லை.(2)

பகைவரைக் கொல்பவனும், தேவர்களின் மன்னனுமான நீயே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக இருப்பதால், அற நோன்புகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு அச்சம் ஏது?(3)

வாய்மைநிறைந்த, பக்திமிக்க மனிதர்கள், தீமைகளில் இருந்து எப்போதும் விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். மரணத்தால் {மிருத்யுவால்}, பக்திமான்களை முன்முதிர்ந்து {அகாலத்தில்} சந்திக்க முடியாது.(4)

மனிதர்களில் முதன்மையான மன்னர்கள், ஒருவரையொருவர் அஞ்சாமல், தங்கள் ஆறாம் பங்கை[மக்களின் வருமானத்தில் ஆறில் ஒரு பங்காகப் பெறப்படும் வரி] அனுபவித்து வருகின்றனர்.(5)

அவர்கள், தங்கள் குடிமக்களுக்கு நன்மை செய்து, தங்கள் துணை மன்னர்களால் {தங்களின் கீழ் கப்பம் கட்டி ஆளும் சிற்றரசர்களால்} பழிக்கப்படாமல், அவர்களிடம் இருந்து முறையாகக் கப்பம் ஈட்டித் தங்கள் கருவூலங்களைச் செல்வத்தால் நிரப்புகின்றனர்.(6)

அவர்கள், மென்மையான தண்டனைகள் அளித்து, தங்கள் தங்களுக்குரிய செழிப்பான மாகாணங்களைச் சகிப்புத் தன்மையுடன் ஆட்சி செய்து, நான்கு வர்ணங்களையும் பாதுகாத்து வருகின்றனர்.(7)

அவர்கள், தங்கள் குடிமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமலும், தங்கள் அமைச்சர்களால் நன்கு போற்றப்பட்டும், படையின் நான்கு பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டும் ஆறு வழிமுறைகளில்[“படையின் குணங்களான அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்தம், பிளவுகளை விதைத்தல் மற்றும் பாதுகாப்பை நாடல் என்பவை ஒரு மன்னனுக்குரிய ஆறு வழிமுறைகள்”] திறம்படச் செயலாற்றுகின்றனர்.(8)

அவர்கள் அனைவரும், வில் அறிவியலை நன்கறிந்தவர்களாக, வேத சடங்குகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் அனைவரும் அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்து தேவர்களை வழிபட்டு வருகிறார்கள்.(9)

அவர்கள், தொடக்கச் சடங்குகளைச் செய்து {தீக்ஷை பெற்று}, வேதங்களைக் கற்று, எண்ணங்கள், சொற்கள், மற்றும் செயல்களில் தூய்மையின் மூலம் பெரும் முனிவர்களையும், புனிதமான சிராத்தங்களின் நூற்றுக்கணக்கில் செய்வதன் மூலம் பித்ருக்களையும் தணிவடையச் செய்கின்றனர்.(10)

உலகில் வேதம், வழக்கம், சாத்திரம் சார்ந்த பொருள் எதையும் அவர்கள் அறியாதவர்களாக இல்லை.(11)

பெரும்பிரம்மனை நம்புபவர்களும், பெரும் ரிஷிகளைப் போலப் பிரகாசிப்பவர்களுமான அந்த மன்னர்கள் அனைவரும் மீண்டும் பொற்காலத்தைத் திரும்பக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.(12)

அவர்களது {அந்த மன்னர்களின்} சக்தியின் மூலம் வாசவன் {இந்திரன்} நல்ல மழையைப் பொழிகிறான், காற்றானவன் {வாயு}, மாசுகள் நீங்கியவனாகப் பத்துத் திசைகளிலும் வீசிக் கொண்டிருக்கிறான்.(13)

பூமியானவள் தீய சகுனங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டிருக்கிறாள், கோள்கள் சுகமாக வானத்தில் உலவுகின்றன. விண்மீன்களுடன் கூடிய சந்திரன் வானத்தில் அழகாக நகர்ந்து வருகிறான்.(14)

சூரியன், வழக்கமாக அடுத்தடுத்து விளைபவற்றை உண்டாக்கி, தன்னிரு பாதைகளில் {உத்தராயண / தக்ஷிணாயனமாக} நகர்கிறான். பல்வேறு பலியுணுகளால் {ஆகுதிகளால்} தணிக்கப்படும் நெருப்பானவன் {அக்னி} இனிய நறுமணத்துடன் திகழ்கிறான்.(15)

இவ்வாறு முறையாகச் செய்யப்பட்டுப் பெருகும் வேள்விகளால் மொத்த உலகும் அமைதியடைந்து, மரணத்திடம் மனிதர்கள் அச்சமடையாமல் இருக்கின்றனர்.(16)

ஒருவரையொருவர் பின்தொடர்பவர்களும், புகழ்மிக்கவர்களும், பலமிக்கவர்களுமான மன்னர்களின் சக்தியால் பூமியானவள் ஒடுக்கப்படுகிறாள்.(17)

இந்தக் கனத்தால் களைத்தும், மன்னர்களால் தாக்கப்பட்டும் வரும் பூமியானவள், முழுகும் நிலையிலுள்ள ஒரு படகைப் போல எங்கள் முன் வந்திருக்கிறாள்.(18)

மன்னர்களால் ஒடுக்கப்படுகிறவளும், அழிவுக்கால நெருப்புக்கு ஒப்பானவளும், நடுங்கும் மலைகள், மற்றும் கலங்கும் கடல்களுடன் கூடியவளுமான பூமியானவள் மீண்டும் மீண்டும் வியர்த்தவளாகிறாள்.(19)

க்ஷத்திரியர்களின் உடல், சக்தி, பலம் மற்றும் பரந்த நிலங்களுடன் கூடிய பூமியானவள் எப்போதும் அமைதியாக இருக்கிறாள்.(20)

ஒவ்வொரு நகரத்தின் மன்னனும், ஒரு கோடி படைவீரர்களால் சூழப்பட்டிருக்கிறான்; ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிராமங்கள் செழிப்பில் வளர்ந்து வருகின்றன, மேலும் ஆயிரக்கணக்கான மன்னர்களின் பெரும்படை மற்றும் லட்சக்கணக்கான கிராமங்களால் பூமியானவள் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறாள்.(21,22)

காலத்தைத் தன் முன் கொண்டவளாகவும், அனைத்து நோய்களில் இருந்தும் விடுபட்டவளாகவும், சக்தியிழந்தவளாகவும் பூமியானவள் என் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஓ! விஷ்ணு, அவளது மிகச் சிறந்த புகலிடம் நீயே.(23)

ஓ! மதுசூதனா, மனிதச் செயல்பாடுகளுக்கான களமான இந்தப் பூமியானவள், பெரிதும் தாக்கப்படுகிறாள். நித்தியமானவளும், அண்டத்தின் வசிப்பிடமுமான பூமியானவள், சிதைவடையாமல் இருக்கச் செய்வதே உனக்குத் தகும்.(24)

ஓ! மதுசூதனா, அவளை ஒடுக்குவது பெருங்கொடுமையாகும், ஏனெனில், அவள் தாக்கப்படுவதால் மனித செயல்கள் அனைத்தும் முடிவை நெருங்கி, அண்டத்தின் நலம் சீர்குலையும்.(25)

மன்னர்களால் ஒடுக்கப்படும் பூமியானவள், முற்றிலும் சோர்வடைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அவள், தன் உறுதியையும், இயல்பான சகிப்புத் தன்மையையும் கைவிட்டு பொறுமையிழந்தவளாக இருக்கிறாள்.(26)

அவளது வரலாற்றை நாங்கள் கேட்டோம். நீயும் அதைக் கேட்டாய். எனவே, சுமையில் இருந்து அவளை விடுவிப்பதற்காக நாங்கள் உன்னுடன் ஆலோசிக்க வேண்டும்.(27)

இந்த மன்னர்களில் பலர், நீதிமிக்க வழிகளைப் பின்பற்றி, தங்கள் நிலப்பகுதிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். மனிதர்களுக்கு மத்தியில் பிற வர்ணங்கள் மூன்றும் பிராமணர்களைப் பின்பற்றுகின்றன.(28)

சொற்கள் அனைத்தும் வாய்மை நிறைந்தவையாகவும், வர்ணங்கள் அனைத்தும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்றுபவையாகவும், பிராமணர்கள் அனைவரும் வேதங்களைக் கற்பவர்களாகவும், பிற மனிதர்கள் அனைவரும் பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவர்களாகவும் இருக்கின்றனர்.(29)

இவ்வாறே மனிதர்கள், நீதியின் கருவிகளாக உலகில் இருக்கிறார்கள். அறத்திற்குக் கேடு நேராத நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.(30)

இவ்வுலகமானது, பக்திமான்களின்றி வேறு எவரின் இலக்குமல்ல. அவர்கள் {அந்த பக்திமான்கள்} அடைய முயலும் மிகச்சிறந்த பொருள் அறமாகும். எனவே, பூமியைச் சுமையில் இருந்து விடுவிக்க மன்னர்களின் அழிவு அவசியமாகிறது. எனவே, ஓ! பெருமைமிக்கவனே, எங்களுடன் ஆலோசிக்க வருவாயாக. நமக்கு முன் பூமியைக் கொண்டு மேரு மலையின் சிகரத்திற்கு நாம் செல்வோமாக” {என்றான் பிரம்மன்}.(31,32)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், பெரும்பிரகாசம் கொண்டவனும், அனைவரின் பெரும்பாட்டனுமான பிரம்மன், இதைச் சொல்லிவிட்டு, பூமியுடன் சேர்ந்து ஓய்ந்திருந்தான் {காத்திருந்தான்}” என்றார் {வைசம்பாயனர்}.(33)

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: