ஸ்ரீ பூர்வாச்சார்யர் தனியன்கள் -/வாழி திருநாமங்கள் / மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி அருளிச்செய்த ஸ்லோக குருபரம்பரை (ஸ்லோகம் )

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாச்சார்யான் அஸேஷாந் குரூந்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ண யாமுநம் முநிம் ராமம்
பத்மவிலோசனம் நாதம் முநிவரம் ஸடத்வேஷிணம்
ஸேநேஸம் ஸ்ரியம் இந்திராஸஹசரம் நாராயணம் ஸம்ஸ்ரயே-

அஸ்மத் தேசிகம் : நம் ஆசார்யனையும்
அஸ்மதீய பரமாச்சார்யான் :ஆச்சார்யனுக்கும் ஆச்சார்யரான பரமாச்சார்யர்களையும்
அஸேஷாந் குரூந்: ஸ்வாமி மணவாளமாமுனிகள் வரை உள்ள மற்றுமுள்ள எல்லா ஆச்சார்யர்களையும்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:யதிராஜரான எம்பெருமானாரையும்
மஹாபூர்ண : பெரிய நம்பியையும்
யாமுநம் முநிம்: ஸ்ரீ ஆளவந்தாரையும்
ராமம் : மணக்கால்நம்பியையும்
பத்மவிலோசனம்: உய்யக்கொண்டாரையும்
நாதம் முநிவரம் : ஸ்ரீமந் நாதமுனிகளையும்
ஸடத்வேஷிணம்: நம்மாழ்வாரையும்
ஸேநேஸம்: சேனைமுதலியாரையும்
ஸ்ரியம் இந்திராஸஹசரம்: பெரிய பிராட்டியையும், திருமகள் கேள்வனான
நாராயணம்: நாராயணனையும்
ஸம்ஸ்ரயே: ஆஸ்ரயிக்கிறேன்(தஞ்சமாகப் பற்றுகிறேன்)

————-

வாக்ய குருபரம்பரை.
அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம்
அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

————-

ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)
ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன
அனைத்தையும் நடத்தும் விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த
பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய
வைராக்யம் ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த
நம் குல நாதரான புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

மணக்கால் நம்பி (மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப்
பணிகொண்ட ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும்
த்வம்சம் செய்து என்னை ஒரு பொருளாக உளவாக்கிய யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

பெரிய நம்பி (மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாணகுணக் கடலில்
ஆழ்ந்துள்ள நிறைவுள்ள மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)
யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலேபோல் வடிவெடுத்தவரும் ஆகிய பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

எம்பார் (தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

பட்டர் (வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்யஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் கூரத்தாழ்வானின்
திருக்குமாரர் ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

நஞ்சீயர் (பங்குமி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப்
பொழியும் வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன்.

நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீக்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

க்ருஷ்ணபாதர் ஆகிய வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்யஸ்ரீயை
அடைந்தவரான திருமலை ஆழ்வார் என்கிற திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல்போல்
நிரம்பியவரும் யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

ஆழ்வார்களும் ஆசார்யர்கள் பிறர் பலரும் நம் குரு பரம்பரையில் உள்ளனர்.

வரிசைக் கிராமத்தில் ஆழ்வார்கள்:

பொய்கை ஆழ்வார் (ஐப்பசி திருவோணம்)
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம் |
கலயே ய: ச்ரிய:பத்யே ரவிம் தீபம் அகல்பயத் ||

காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத் தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால்
ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட பொய்கை ஆழ்வாரைத் துதிக்கிறேன்.

பூதத்தாழ்வார் (ஐப்பசி அவிட்டம்)
மல்லாபுர வராதீசம் மாதவீ குஸுமோத்பவம் |
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத ||

திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால்
நாராயணனைக் கண்டுகளிக்க ஞான தீபம் ஏற்றியவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

பேயாழ்வார் (ஐப்பசி சதயம்)
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம் |
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே ||

திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக்
கண்ட திவ்ய சக்ஷுஸ் பெற்ற பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

திருமழிசை ஆழ்வார் (தை மகம்)
சக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே |
முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம: ||

எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும், பஞ்சோபநிஷத்மய
திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச பூதங்களால் ஆனது.
எம்பெருமான் திருமேனியோ விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச உபநிஷத்துகளால் ஆனது)
எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள்.
ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.

மதுரகவி ஆழ்வார் (சித்திரை சித்திரை)
அவிதித விஷயாந்தரஸ் சடாரேர் உபநிஷதாம் உபகான மாத்ர போக: |
அபி ச குண வசாத் ததேக சேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து ||

நம்மாழ்வாரைப் பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், நம்மாழ்வார் பாசுரம் தவிர
வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான மதுரகவி ஆழ்வார்
அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும்.

நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

குலசேகர ஆழ்வார் (மாசி புனர்வஸு)
குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே |
தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர்
குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகி கிறேன்.

பெரியாழ்வார் (ஆனி ஸ்வாதி)
குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அஸேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம: |
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் விஷ்ணுசித்தம் நமாமி ||

ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து
வேத சாரங்களை சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஆண்டாளின் தமப்பனார்,
திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

ஆண்டாள் (ஆடி பூரம்)
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்நம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||

நீளா தேவியின் திருமார்பில் தலைவைத்துறங்கும் கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில்
துயிலுணர்த்துபவள் , எம்பெருமானுக்கே தான் சூடிக்களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள்
திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி கேட்டை)
தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணியம் |
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||

ஸ்ரீ ரங்கநாதனைப் பரவாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனைபோல் மிகவும்
நளினமாகத் துயிலெழுப்பிய தொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன்.

திருப்பாணாழ்வார் (கார்த்திகை ரோஹிணி )
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||

இரண்டு ஆறுகளின் நடுவே அறிதுயில் கொண்ட அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய,
லோகஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த கண்களால்
இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்.

திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை கார்த்திகை)
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம:

கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர்,
அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான
திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்.

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

குருகைக் காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், மணக்கால்நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீபராஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

பெரியதிருமலைநம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

திருமலையப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு
உபதேசித்தவரான மஹாமேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் மாலாதரரைப் பூசிக்கிறேன்.

திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர், ஸ்ரீ ராமானுசரால்
மிகவும் போற்றப் பட்டவர், ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி, ஞான பக்திக் கடல்
ஆகிய மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம்
ஸ்தோத்ரங்களால் காட்டியருளிய கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை
அடியேன் சரண் புகுகிறேன்.

கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ப்ரணதார்த்திஹர குரு கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய சாலக்ராமாசார்யர் வடுகநம்பியைத் தொழுகிறேன்.

வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

பாரத்வாஜ குலத்திலகர், எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
வங்கிபுரத் தலைவர் க்ருபாநிதியாகிய வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
நம்பெருமாளைக் காப்பவர், ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில் வெளிப்படுத்தியவர்,
இரு மருமகன்களை உடையவர், எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாகப் பெரிய பெருமாளை
மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர
வேறு எது பயனுள்ளது? அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு எம்பெருமானார்
அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட திருவரங்கத்து அமுத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
நடாதூர் அம்மாள் எனும் வரதாசார்யரை வணங்குகிறேன்.

வேதவ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஆழ்வானின் திருக்குமாரரும், பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
வேதவ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்தக் கூர குலத்தோன்றல், மஹா ஞானி சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும்
ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய) வேதாந்தங்களில் கரை கண்டவருமான
ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், எம்பெருமானார் சிஷ்யரான எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

நாலூர்ப் பிள்ளை எனும் ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
தேவராஜகுரு ஆகிய மஹா குணசாலி நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும் கதிரவன்போல்
விளங்கச் செய்பவர், எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாSஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர்,
ஆசார்ய ஹ்ருதய பொருளை விரித்துரைத்தவர் ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

மாமுனிகளின் காலத்திலும் அதற்குப் பிற்பட்டும், பல சிறந்த ஆசார்யர்கள் வாழ்ந்தனர் (மேலும் பலர் உள்ளனர்):

பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர்,
சகல குணங்களும் நிறைந்தவர், வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர்,
மணவாள மாமுனிகளின் திருவடிகளில் சரண் புக்கவரான வரத நாராயண குரு எனும்
கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், மணவாள மாமுனிகள்
கருணைக்குப் பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான தேவராஜ குரு என்கிற எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மணவாள மாமுனிகள் திருவடித்த தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ப்ரணதார்த்திஹர குரு என்கிற அப்பிள்ளையை வணங்குகிறேன்.

அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ராமானுஜ குரு என்கிற அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

வானமாமலை பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
வாதூல வரதாசார்யர் என்கிற அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், மாமுனிகளிடம் பரம பக்தர், யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்
திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர், லோகார்ய முனி என்கிற பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், வாதூல வீரராகவர் என்றும்
அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன். .

அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், சேனை முதலியார் அம்சர், அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர்,
திருவாதிரை உத்சவம் போன்றவற்றில் கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர்,
ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

—————–

ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாள் -ஸ்ரீ சிறியாழ்வான் அப்பிள்ளை –

கார்த்திகே பரணி ஜாதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே

கார்த்திகையில் பரணியில் அவதரித்தவராய் ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளை அடைந்தவராய்
உபய வேதாந்தச் செல்வரான ஸ்ரீ மாதவப் பெருமாளை வணங்குகிறேன்.

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸ்ரயம் கருணாம்புதிம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே

உலகாரியரான ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித்தாமரையைப் பற்றியவராய் கருணைக்கடலாய்
உபய வேதாந்தச் செல்வமுடையவரான ஸ்ரீ மாதவாச்சார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.

சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை* எழு
தேரார் தமிழ் வேதத்து ஈடுதனைத் – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தான் கொடுத்தார் பின் அதனைத்தான்

ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில்-பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு.

ஸ்வாமி ஸ்ரீ நம்பிள்ளையினுடைய பிரதான சிஷ்யர் ஸ்வாமி ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை.
(சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை – ஆசார்ய ப்ரஸாதத்தாலே அவர் அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை யெல்லாம் தெரிந்தெழுதி எல்லார்க்கும் உபகரிக்கும்படியான
ஜ்ஞானாதி குண பூர்த்தியை உடையவராயிருக்கை)
ஸ்ரீ ஸ்வாமி வடக்குதிருவீதிப் பிள்ளை, ஸ்வாமி நம்பிள்ளையிடம் காலக்ஷேபத்திலே கேட்டு அறிந்து கொண்ட
திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை இரவு நேரத்திலே பட்டோலை கொண்டு
ஸ்ரீ ஈடு முப்பத்து ஆறாயிரப்படியாக்கி வைத்தாராம்.
ஆகிலும் ஸ்வாமி ஸ்ரீ நம்பிள்ளையினுடைய அனுமதி பெறாமலே இவர் எழுதிவைத்த படியால்
அந்த ஸ்ரீகோசத்தை கொடும் என்று கேட்டு தாம் வைத்துக்கொண்டாராம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் நியமனமின்றி ஸ்ரீ நம்பிள்ளை இந்த ஸ்ரீ கோசத்தை தந்தருளமாட்டார் என்பதை
நன்கறிந்த ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்ற ஸ்வாமி, ஸ்ரீ பெரிய பெருமாளிடம் ப்ரார்திக்க,
ஸ்ரீ பெரிய பெருமாளும் திருவுள்ளம் உவந்து இரங்கி ஸ்ரீ நம்பிள்ளைக்கு நியமித்தருள, பின்பு அந்த
ஸ்ரீகோசத்தை நம்பிள்ளை ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு தந்தருளினாராம்.

அப்படியாக ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீகோசத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீ சிறியாழ்வான் அப்பிள்ளை
தம்முடைய திருக்குமாரரான ஸ்ரீ பத்மநாபப் பெருமாளிடம் அந்த ஸ்ரீ ஈட்டை ப்ரசாதித்து அருளினார்.
ஸ்ரீ பத்மநாபப் பெருமாள் தம் சிஷ்யரான ஸ்ரீ நாலூர்ப் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார்.
அந்த ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை தம்முடைய திருக்குமாரரான ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார்.
அந்த ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளையே மேலுள்ளவர்களுக்கு கொடுத்து உபகரித்து அருளினாராம்.
ஸ்ரீ நாலூராச்சான் ஸ்வாமியின் சிஷ்யர்கள் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி, ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய
ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் ஸ்ரீ ஈயுண்ணி தேவப்பெருமாள் ஆகியோர் ஆவர்.

—————-

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை –

திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்

தனியன்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே

ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும்
ஸ்ரீ ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “ஸ்ரீ நலந்திகழ் நாராயண தாஸர் என்ற
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.

மற்றொரு தனியன்

ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா

ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதாரவிந்தங்களில் மறைப்பொருள் அனைத்தையும் பெற்றவரும்
அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவரும்,
ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸ்ரீ ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும்
ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்ததுபோல்,
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து
ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.
இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும்
அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.

ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல,
ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது.
ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச்செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி
ஒரு பிரபந்தம் அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே
ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.

ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).

—————–

ஸ்ரீ மாறனேரி நம்பி

யாமுநாசார்ய ஸச் சிஷ்யம் ரங்கஸ்தல நிவாஸிநம்
ஜ்ஞாந பக்த்யாதி ஜலதிம் மாறனேரி குரும் பஜே

ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பாண்டிய நாட்டிலுள்ள புராந்தகம் என்னும் சிற்றூரில்
நான்காம் வருணம் எனப்படும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தார்.
மாறனாகிய நம்மாழ்வாருக்கு ஒப்பாக கருதும் வகையில் திருவரங்கத்தில் உறையும் அரங்கன் மீது
அளவற்ற பக்தி கொண்டமையால் இவரை மாறனுக்கு நேரான நம்பி எனும் பொருளில்
மாறனேர் நம்பி (மாறன்+நேர்+நம்பி) அல்லது மாறனேரி நம்பி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

தன் குருவாகிய ஆளவந்தார் இராஜ பிளவை எனப்படும் கொடு நோயால் படும் வேதனை பொருக்க ஒண்ணாது,
தன் குருவை அணுகி, குருப்பிரசாதமாக அக்கொடிய நோயை தனக்கு அளிக்குமாறு வேண்டி நின்றார்.
ஆளவந்தார் மறுதளித்தும் பிடியாய் இருந்த நம்பிக்கு வேறுவழியின்றி தன் நோயை மாற்றியருளினார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக அக்கொடிய நோயால் பாதிப்படைந்தவர், குருபக்தியால் அனைவரும்
வியக்கும் வண்ணம் விரைவில் குணமடைந்தார். ஆயினும் இச்செய்கையால் தன் குடும்ப அங்கத்தினாராலேயே ஒதுக்கப்பட்டார்.

ஆளவந்தாரின் முதன்மை சீடரும், பிள்ளை பிராயம் தொட்டு தனக்கு உற்ற தோழனுமான பெரிய நம்பிகளிடம்
தான் ஆச்சாரியன் திருவடி அடைந்தப்பின் தன் பூத உடலை தன் உறவினர்களிடம் சேர்க்காது பெரியநம்பிகளே
ஈமக்கிரியையகள் யாவும் செய்ய வேண்டும் என்ற தன் இறுதி விருப்பத்தை தெரிவித்தார்.
ஏனெனில் ஆளவந்தாரின் இராஜபிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப்படியால்
தன் உடலும் குருப்பிரசாதம் என்றும் அதனை வைணவர்கள் அல்லாத தன் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது
உயர்ந்த யாக நெய்யை தெருநாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும் என்றும் கருதினார்.
அதன்படி இவரின் இறுதிக் கடன் யாவும் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய நம்பிகளால் குறைவற நடத்திவைக்கப்பட்டது.

————-

ஸ்ரீ எறும்பியப்பா

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் சரம ஆசார்யராய், ப்ரதமாசார்யரான ஸ்ரீ நம்பெருமாளுக்கும் ஆசார்யராய்,
ஸ்ரீ யதிராசருடைய புநர் அவதார பூதரான ஸ்ரீ மணவாளமாமுனிகளுக்கு ஞான பக்தி வைராக்கியங்களில் சிறந்து விளங்கிய
தலை சிறந்த சிஷ்யர்கள் பலர் உண்டு. அவர்களில் எண்மர் அஷ்ட திக்கஜங்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
அஷ்டதிக்கஜங்களாக நியமிக்கப்பட்ட எண்மருள் ஸ்ரீ எறும்பியப்பாவும் ஒருவர்.
இவர் சோளஸிம்ஹபுரத்துக்கு அருகிலுள்ள எறும்பி என்னும் ஊரில் முடும்பைக்குடியில்
ஸ்ரீ பெரியசரண்யாச்சார்யார் என்பவருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இயற்பெயர் ஸ்ரீ தேவராஜன்.

திருநக்ஷத்ரம் – ஐப்பசி ரேவதி
ஸ்வாமி ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ வடுகநம்பியைப் போலே ஸ்ரீ மணவாளமாமுநிகளையொழிய
தேவுமற்றறியாதே ஸ்ரீ மாமுநிகளுக்கு அத்யந்த அபிமதராய் இருப்பார் என்று
ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன் அருளிச்செய்த பெரிய திருமுடி அடைவு கூறும்.

ஸ்ரீ மணவாள மா முனிகள் விஷயமாக இவரருளிச் செய்துள்ள க்ரந்தங்கள்:
வரவரமுநி சதகம், வரவரமுநி காவ்யம், வரவரமுநி சம்பூ, வரவரமுநி நாடகம், பூர்வ தினசர்யா,
உத்திர தினசர்யா ஆகியவை ஆகும்.
மேலும் விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்கிற நூலையும் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய சிஷ்யர் ஸ்ரீ போரேற்று நாயனார்.
நவரத்னங்கள் என்று கொண்டாடப்படுபவர்களான ஸ்ரீ மணவாளமாமுனிகள் சிஷ்யர்கள் ஒன்பதின்மரில் இவரும் ஒருவர்.
ஸ்ரீ போரேற்று நாயனாருடைய சிஷ்யர் ஸ்ரீ சேனாபதியாழ்வான்.
ஸ்ரீ சேனாபதியாழ்வானுக்கும் ஸ்வாமி எறும்பியப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த ஸம்ப்ரதாய தொடர்புடையதான
வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்ற நூல்.

தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே

ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்
எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

தனியன்
சௌம்யஜா மாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜம் குரும் வந்தே திவ்யஜ்ஞாந ப்ரதம் ஸுபம்

அழகிய மண்வளமாமுனிகளின் திருவடித்தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,
தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டாணத்தாலும்
சோபிப்பவருமான தேவராஜகுரு என்னும் எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

—————

ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்

ஸ்ரீ திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மேலக்கோட்டையில் ஸ்ரீ ஸேனை முதலியார்
அவதரித்த நன்னாளில் திருவவதரித்தார். திருநக்ஷத்ரம் – ஐப்பசி பூராடம்.

மற்ற திருநாமங்கள் – தேவராஜர், தேவப்பெருமாள், ஆஸூரிதேவராயர், திருத்தாழ்வரை தாஸர்,
ஸ்ரீஸாநுதாசர், மாத்ரு குரு, ஜநந்யாச்சார்யர், ஆயி, தேவராஜ முநீந்த்ரர் ஆகியவை ஆகும்.

ஜநந்யாசார்யருக்கு வேதம், திவ்ய ப்ரபந்தம் கற்பித்து, பஞ்சஸம்ஸ்காரம் செய்தது
அவருடைய திருதகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் ஆவார்

திருநாடு அலங்கரித்தது திருநாராயணபுரத்திலே.

ஈடு பரம்பரையின் ஆசார்யர் ஸ்வாமி நம்பிள்ளை.
அவர் சிஷ்யர் ஈயுண்ணி மாதவர்.
அவர் குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்.
இவர் சிஷ்யர் நாலூர்ப்பிள்ளை.
இவர் சிஷ்யர் நாலூராச்சான்பிள்ளை.
இவருடைய சிஷ்யர்கள் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி, இளம்பிளிசைப் பிள்ளையான ஸ்ரீ திருவாய்மொழி ஆச்சான்,
ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை ஆகியோர் ஆவர்.

ஸ்ரீ எம்பெருமானார் தம் திருக்கைகளாலே திருவாராதநம் ஸமர்ப்பித்த ஸ்ரீ திருநாராயணப் பெருமாளுக்கும்,
ஸ்ரீ ராமப்ரியனும் ஸ்ரீ யதிராஜ சம்பத்குமாரனுமான செல்வப்பிள்ளைக்கும் பாலமுதும்,
ஸ்ரீ மாலாகாரர், ஸ்ரீ விஷ்ணுசித்தர் மற்றும் ஸ்ரீ ஆண்டாளைப் போல புஷ்பமும் ஸமர்ப்பித்துக்கொண்டு
கைங்கர்ய நிரதராய் ப்ரசித்தி பெற்றவர் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி ஸ்வாமி.

ஆய் என்ற சொல்லுக்கு தாய் என்று பொருள். இந்த ஸ்வாமி ஸ்ரீ திருநாரணனுக்கு பாலமுது சமர்ப்பிக்கும்
கைங்கர்யத்தை தாயன்போடு செய்து வந்தாராம். ஒரு நாள் பாலமுது சமர்பிப்பதற்கு கொஞ்சம் காலம் தாழ்ந்துபோக,
ஸ்ரீ திருநாரணன் அது பொறாமல் நம் ஆய் எங்கே (தாய்) இன்னம் காணோமே? என்று அர்ச்சகர் மூலம்
வினவினபடியாலே அன்று முதல் இவருக்கு ஆய் என்று திருநாமம் உண்டாயிற்று.

மாமுனிகளுக்கும் இவருக்கும் உள்ள சம்பந்தம்:
மணவாளமாமுனிகள் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் அருளிச் செய்தபோது
“ஜ்ஞான சதுர்த்திகளின் மேலேயிறே ஆநந்தஷஷ்டிகளுக்கு உதயம்” என்கிற வாக்கியத்திற்கு
அர்த்தம் அருளிச்செய்யும் போது சில விளக்கங்கள் தேவைப்பட தமது ஆசார்யரான
ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் ஸஹ அத்யாயியாய்(கூடப் படித்தவர்) எழுந்தருளியிருந்த
ஸ்ரீ ஆய் ஸ்வாமியினிடத்திலே கேட்கவேணும் என்று திருவுள்ளம்கொண்டு ஸ்ரீ திருநாராயணபுரம் நோக்கி
புறப்பட்டாராம் ஸ்ரீ மாமுனிகள். அதே ஸமயம் ஸ்ரீ திருநாரணன் ஆயி ஸ்வாமியின் ஸ்வப்னத்திலே
ஸ்ரீ மாமுனிகள் அவதாரரஹஸ்யத்தை காட்டியருள ஸ்ரீ ஆய் ஸ்வாமி மாமுனிகளை சேவிப்பதற்காக
ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டார். இருவரும் ஸ்ரீ ஆழ்வார் திருநகரி எல்லையில் சந்தித்துக்கொள்ள
ஸ்ரீ ஆயியும் தாளும் தடக்கையும் கூப்பி சேவிக்க, இதனைக் கண்ட ஸ்ரீ பெரிய ஜீயர் ஸ்வாமியின் சிஷ்யர்கள்
ஸ்ரீ பெரிய நம்பியும் ஸ்ரீ எம்பெருமானாரும் எதிர்பட்டாப் போலாயிற்று என்று உகந்தனராம்.
ஸ்ரீ மாமுனிகளும் ஆசார்ய ஹ்ருதய காலக்ஷேபம் கேட்டு முடித்த பின்பு ஸ்ரீ ஆய் ஸ்வாமிக்கு ஒரு தனியன் சமர்ப்பிக்க

“ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்ஸிதா:
ஸ்ரீ ஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாஸ்ரயே”

ஸ்ரீ ஆயி ஸ்வாமியும் மாமுனிகள் விஷயமாக ஒரு பாசுரம் அருளிச்செய்தாராம்

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாரு மகிழ்மார்பன் தானிவனோ,
தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

பிறகு ஸ்ரீ ஆய் ஸ்வாமி சிலகாலம் அங்கேயே எழுந்தருளியிருந்தபின்னர் திருநாராயணபுரம் எழுந்தருளினார்.

இவர் அருளிச்செய்தவை
திருப்பாவைக்கு ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி வ்யாக்யானம்,
ஸ்ரீ வசனபூஷண வ்யாக்யானம்,
ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் ஆகியவை ஆகும்

————-

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வைபவம்

அவதார ஸ்தலம் – திருவெள்ளியங்குடிக்கு அருகிலே உள்ள சங்கநல்லூர் என்னும் சிற்றூர்
திருவவதாரம் – சர்வஜித் வருஷம், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம்
(கண்ணன் எம்பெருமான் திருவவதரித்த நன்னாளிலே அவதரித்தவர் – ஸ்ரீஜயந்தி)
திருதகப்பனார் திருநாமம் – ஸ்ரீ யாமுனதேசிகர்
திருத்தாயார் – நாச்சியாரம்மாள்
பெற்றோர் இட்ட திருநாமம் – க்ருஷ்ணர்
திருவாராதனப் பெருமாள் – க்ருஷ்ண விக்ரஹம்
திருக்குமாரர் – ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை
மற்ற திருநாமங்கள் – அபயப்ரதராஜர், வ்யாக்யான சக்ரவர்த்தி, க்ருஷ்ணஸூரி, பரம காருணிகர்,
அபார கருணாம்ருத சாகரர் ஆகியவை ஆகும்.
ஆசார்யன் – ஸ்ரீ நம்பிள்ளை

பெரியவாச்சான்பிள்ளை அவதாரச் சிறப்பு :
திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியுள்ள கண்ணன் எம்பெருமான் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
திவ்ய ப்ரபந்தங்களில் இருக்கக்கூடிய அர்த்தவிசேஷங்களை அறிய திருவுள்ளம் கொண்டதை அறிந்த
ஆழ்வாரும் எம்பெருமானே வாரும் கற்றுத்தருகிறேன் என்று விண்ணப்பித்தாராம்.

மெய்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ணா !
நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே !பெரிய திருமொழி 7-10-10

இதனைத் செவிமடுத்த எம்பெருமான் ஆழ்வாரே நாம் அவஸ்யம் தேவரீரிடம் இருந்து அர்த்த விசேஷங்களை
அறிந்து கொள்வோம்! ஆனால் இப்போது அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளியுள்ளபடியால் சாத்தியமில்லை.

பின்னொரு சமயம் தேவரீர் திருக்கலிகன்றி தாசர் என்னும் திருநாமம் கொண்டவராய் இதே
கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ர நன்னாளிலே இந்தச் சோழ நாட்டிலே அவதரிப்பீர்.
தேவரீர் அவதரித்து சில ஆண்டுகள் கழித்து அதே சோழ நாட்டில் யாம் ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்திலே
கிருஷ்ணன் என்ற திருநாமம் கொண்டவராய் அவதரிப்போம்.

அந்த சமயம் தேவரீரை ஆசார்யராகக் கொண்டு ஆழ்வார்கள் அனைவருடைய அருளிச்செயல்களின் பொருளையும்
ஸ்ரீ இராமாயண அர்த்தங்களையும் மற்றும் ரஹஸ்யார்த்தங்களையும் தேவரீரிடம் இருந்து கற்றறிந்து
உலகோர்கள் எல்லோரும் உய்ய வேண்டி உபதேசிப்போம் என்று தெரிவித்தானாம் எம்பெருமான்.

அதன்படிக்கு அருளிச்செயலின் அர்த்தவிசேஷங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு கலிகன்றியாகிய
திருமங்கை ஆழ்வார் திருக்கலிகன்றி தாசராகவும்(ஸ்வாமி நம்பிள்ளை),
கண்ணன் எம்பெருமானே ஆவணி ரோஹிணியிலே க்ருஷ்ணஸூரி என்னும் திருநாமம் கொண்டு
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையாகவும் திருவவதாரம் செய்தனர் என்பது ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்களின் நிர்வாஹம்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் ஆசார்யன் – ஸ்வாமி நம்பிள்ளை

ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்த விசிஷ்டாத்வைத வேதாந்தப் ப்ரவசனம் செய்த மஹாநுபாவர்களில் தலைவர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை.
நம்பெருமாள் கோஷ்டியோ அல்லது நம்பிள்ளை கோஷ்டியோ என்று வியந்து போகும் அளவிற்கு எண்ணிலடங்கா
சத் சிஷ்யர்களை பெற்றிருந்த பெருமை, லோகாச்சார்யார் என்று ஸ்ரீ கந்தாடை தோழப்பரால் கொண்டாடப்பட்ட
நம்பிள்ளை ஸ்வாமிக்கு உண்டு. அதே போன்று நம் பெரியபெருமாளுக்கு இருக்கக்கூடிய ப்ரபாவத்தை
நம்மால் பேசி முடித்தாலும், நம் பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமியின் பெருமைகளைப் பேசி முடிக்க நம்மால் முடியாது.
லோகத்தை ஆளும் சக்ரவர்திகளுக்கு ஸிம்ஹாஸனம் உண்டு என்பதை கேள்விபட்டு இருக்கிறோம் அல்லவா.
அது போல வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளைக்கு நான்கு திக்குகளிலும்
நான்கு ஸிம்ஹாஸனங்கள் உண்டு என்பது ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருவாக்கு.

முதல் ஸிம்ஹாஸனம் –
நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஸ்வாமி அருளிச்செய்த திவ்ய வ்யாக்யானங்களே முதலாவதும்
முக்கியமானதுமான ஸிம்ஹாஸனம் ஆகும். அவைகள் இல்லாவிடில் ஸ்ரீவைஷ்ணவ உலகமே ஞான சூன்யமாய்
இருளடைந்து பாழாகியிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருப்பல்லாண்டு முதலான நாலாயிர திவ்யப்ரபந்தங்களையொழிய
பகவானை அறிவதற்கு வேறு வழியில்லை. திவ்யப்ரபந்தங்களிலே இருக்கக்கூடிய ஆழ்ந்த அர்த்தங்களை
அறிவதற்கு பூர்வாசார்ய பரம்பரையாகவும், ஆசார்ய நியமனப்படியும்,
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையால் அருளிச்செய்யப்பட்ட வ்யாக்யானங்களைத் தவிர வேறு புகல் இல்லை.

இரண்டாவது ஸிம்ஹாஸனம் –
இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த ஸ்லோகங்கள் பலவற்றில் இருக்கக்கூடிய
ரஹஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளிச்செய்த ஸ்ரீராமாயண தனிஸ்லோகம்,
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் இரண்டாவது ஸிம்ஹாஸனமாகும்.

மூன்றாவது ஸிம்ஹாஸனம் –
ரஹஸ்யத்ரயங்களையும் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற
ரஹஸ்யார்த்தங்களையும் விவரித்து ஸ்வாமி அருளிச்செய்த பரந்த ரஹஸ்யம், மாணிக்கமாலை,
ஸகலப்ராமண தாத்பர்யம், ரஹஸ்யத்ரய தீபிகை, ரஹஸ்யத்ரய விவரணம் மற்றும் நிகமனப்படி
முதலானவை மூன்றாவது ஸிம்ஹாஸனம்.

நான்காவது ஸிம்ஹாஸனம் –
பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஜகதாசார்யரான ஸ்வாமி எம்பெருமானாரும் அருளிச்செய்த
ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, கத்யத்ரயம் முதலான ஸ்தோத்ரங்களுக்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
திவ்ய வ்யாக்யானங்களும் மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானமும்,
வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் நான்காவது ஸிம்ஹாஸனம் ஆகும்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளிலே ஸகல சாஸ்த்ரார்த்தங்களையும் கேட்டு
உணர்ந்துகொண்டு ஆழ்வார்கள் அருளிச்செயல் எல்லாவற்றிற்கும் வ்யாக்யானம் அருளிச்செய்தவர்.

பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகள் காலம் தொடங்கி நம் ஸம்ப்ரதாய அர்த்தங்கள் அனைத்தும்
காலக்ஷேப முறையில் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு உபதேசித்து வந்தார்கள். ஏடுபடுத்தவில்லை.
பரம காருணிகரும், அபாரகருணாசாகரருமான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை தான்,
முதன் முதலில் நம்போல்வாருடைய உஜ்ஜீவனம் பொருட்டு திவ்யப்ரபந்த அர்த்தங்கள்,
ஸ்ரீ இராமாயண அர்த்தங்கள், ரஹஸ்ய அர்த்தங்கள், ஸ்தோத்ர அர்த்தங்கள் ஆகிய அனைத்தையும்
தன் பெருங்கருணையாலே பட்டோலை கொண்டு உபகரித்து அருளினார்.
இதனாலன்றோ க்ருபா மாத்ர ப்ரசன்னாசார்யர்களின் கோஷ்டிக்கு தலைவராக விளங்குகிறார் நம் ஸ்வாமி.
இப்படி உலகில் உள்ள அனைவரும் நம் ஸம்ப்ரதாய அர்த்தங்களை தெரிந்து கொள்வதற்கு
இவ்வாச்சார்யார் பண்ணிய உபகாரம் போன்று வேறு எந்த ஆசார்யரும் செய்ததில்லை.

ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளைக்கே உண்டான அசாதாரண பெருமையைப் பற்றி
பெரிய ஜீயர் ஸ்வாமி தாம் அருளிச் செய்த உபதேசரத்தினமாலையில் பின்வருமாறு தெரிவிக்கிறார்.

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வ்யாக்கியைகள் செய்வால் –
அரிய அருளிச்செயற்பொருளை
ஆரியர்கட்க்ப்போது அருளிச்செயலாய்த் தறிந்து*

அபயப்ரதராஜரான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை என்னும் மஹாசார்யர் திருவாய்மொழி தவிர
மற்றுமுள்ள திவ்யப்ரபந்தங்களுக்கும் பரமகருணையுடன் வ்யாக்யானங்கள் அருளிச்செய்த படியாலே,
பின்புள்ளார்கள் ஆசார்ய பீடத்தில் அமர்ந்து திவ்யப்ரபந்த பாசுர அர்த்தங்களை ப்ரவசனம் பண்ணுவதற்கு
பாங்காயிற்று என்று தெரிவிக்கிறார் நம் ஸ்வாமி.

திருவாய்மொழிக்கு பன்னீராயிரப்படி வ்யாக்யானம் அருளிச்செய்தவர்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் என்பது எல்லோரும் அறிந்ததே.
வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமியின் இயற்பெயர் வரதராஜர் என்பதாகும்.
இந்த ஸ்வாமி ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமியின் திருமாளிகை திருமடப்பள்ளி கைங்கர்யம் புரிந்து வந்தார்.
எழுத்து வாசனையே அல்லாதவராய் இருந்தவர். அந்த சமயம் கற்றறிந்த பெரியோர்கள் சிலர் சாஸ்த்ர விசாரம்
பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்த வரதராஜர் அவர்களை அணுகி அவர்களுடைய உரையாடல்களைப் பற்றி வினவினார்.
வரதராஜருக்கோ எழுதப்படிக்க தெரியாது என்பதை நன்கு தெரிந்திருந்த அந்த பண்டிதர்கள்
முஸலகிஸலயம் என்ற நூலைப் பற்றி உரையாடிக்கொண்டு இருக்கிறோம் என்று பதில் உரைத்தனராம் அந்த பண்டிதர்கள்.
அப்படி ஒரு நூலே கிடையாது. இவர்கள் சொல்வதை உண்மை என்றெண்ணி வரதராஜர்
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையிடம் சென்று இந்த நிகழ்வைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமி உண்மையை உணர்ந்துகொண்டு உமக்கு கல்வி அறிவு இல்லாதபடியாலே,
இல்லாத ஒரு நூலின் பெயரைச் சொல்லி கேலியாகப் பேசியனுப்பிவிட்டனர் என்று அவரிடம் தெரிவித்தவுடன்
வரதராஜர் மிகவும் வெட்கப்பட்டு ஸ்வாமியினுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அடியேனுக்கு
ஸாஸ்த்ரம் கற்றுத்தரும்படி வேண்டிக்கொள்ள, அபார கருணை உள்ளம் கொண்ட ஸ்வாமியும் அவருக்கு
ஸாஸ்த்ரம், காவியம், நாடகம், அலங்காரம், ஸப்தம், தர்க்கம், பூர்வ மீமாம்ஸா மற்றும் உத்தர மீமாம்ஸா
முதலான ஸகல ஸாஸ்த்ரங்களையும் மற்றும் ஸம்ப்ரதாய விஷயங்களையும் அவருக்கு உபதேசித்து
ஒரு சிறந்த வல்லுனராக்கி வைத்தார். ஆசார்ய அனுக்கிரஹம் பரிபூர்ணமாக அவருக்கு இருந்த படியாலே
அனைத்து விதமான ஸாஸ்த்ரங்களையும் கற்றுத் தேர்ந்து முஸலகிஸலயம் என்னும் க்ரந்தத்தையும் இயற்றி
இவரைக் கேலியாகப் பேசினவர்களிடத்தே கொண்டு சமர்பித்தாராம்,
பூர்வாஸ்ரமத்திலே வரதராஜர் என்ற திருநாமம் கொண்ட வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி.

ஆசார்ய அபிமானமே உத்தாரகம்!

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் கோஷ்டியிலே எழுந்தருளியிருந்த சிலர்
“எங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச்செய்யவேணும் என்று ப்ரார்திக்க”
அதற்கு ஸ்வாமி, கலங்குகிறவனும், கலக்குகிறதும், கலங்கிக் கிடக்கிறவர்களும்,
தெளிவிக்கிறவனும், தெளிகிறவனும், தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது என்று பதிலுரைத்தாராம்

கலங்குகிறவன் – ஜீவாத்மா
கலக்குகிறது – பகவானையும் ஆத்மாவையும் அறியவிடாமல் மறைத்துத் தன் விஷயத்திலே மூளும்படி பண்ணுகிற அசித்து.
கலங்கிக்கிடக்கிறவர்கள் – தேஹமே ஆத்மா என்று கிடக்கும் சம்சாரிகள்
தெளிவிக்கிறவன் – ஆசார்யன்
தெளிகிறவன் – சேதனன்(ஞானவானான ஜீவாத்மா)
தெளிந்திருக்கிறவன் – ஈஸ்வரன்

ஆகையாலே கலங்குகிற தன்னையும், கலக்குகிற ப்ரக்ருதியையும், கலங்கிக் கிடக்கிற சம்சாரிகளையும்
தஞ்சம் அன்று என்று கைவிட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும், தெளிந்திருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகையே,
ஆசார்யனாலே தெளிந்த இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் என்று அருளினார் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை.

————–

ஸ்வாமி எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்மாசனாதிபதியான
ஸ்ரீ குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்த
ஸ்ரீ எறும்பில் கந்தாடை அண்ணன் ஸ்வாமியினுடைய திருநக்ஷத்ரம் கார்த்திகை திருவாதிரை.

திருமாளிகையின் எட்டாவது ஸ்வாமியாக எழுந்தருளி இருந்தவர் ஸ்வாமி வரம் தரும் பெருமாள் அப்பை.
தேவுமற்றறியேன் குருகூர் நம்பி என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைப் போல,
எல்லாம் ஆசார்யனே என்று ஸ்வாமி மணவாளமாமுனிகளிடத்திலே
வரம் தரும் பெருமாள் அப்பை ஸ்வாமி எழுந்தருளியிருந்தபடியால்,
இவருடைய ஆசார்ய கைங்கர்ய நிஷ்டையைக் கண்ட ஸ்வாமி மணவாளமாமுனிகள், நம் ஸ்வாமியை
பஞ்சரத்ன ஆசார்ய பீடத்திலே ப்ரதானராய் அபிஷேகம் செய்வித்து
ஸ்ரீ ருக்மிணீ சத்யபாமா ஸமேத ஆஹூய ரக்ஷகரான ஸ்ரீ கிருஷ்ணனை நித்ய ஆராதனத்திற்காக அனுக்ரஹித்து அருளினார்.

வரம் தரும் பெருமாள் ஸ்வாமியின் இரண்டாம் குமாரர் சுத்த ஸத்வம் அண்ணன்.
இவரை பெரிய ஜீயர் ஸ்வாமி அழைத்தருளி ‘பாகவத சேஷத்வத்தை ஈடுமுப்பத்தாறாயிரப்படியாலே நிர்வஹிக்க”
நியமித்தருள ஸ்வாமியும் “பயிலும் சுடரொளி, நெடுமாற்கடிமை” ஆகிய திருவாய்மொழிப் பதிகங்களை
ஸ்வாமி நம்பிள்ளையைப் போல் உபந்யசித்தது கண்டு பெரிய ஜீயரும் “நம் சுத்த சத்வம் அண்ணனோ” என்று
போர உகந்தருளி “திருவாய்மொழி ஆசார்யர்” என்ற சிறப்பு திருநாமமும் சாற்றி
பகவத் விஷய ஸிம்ஹாஸனத்திலே பட்டாபிஷேகம் செய்தருளினாராம்.

வரம் தரும் பெருமாள் அப்பை ஸ்வாமியின் இரண்டாவது திருக்குமாரரான சுத்த ஸத்வம் அண்ணனுக்கு
திருக்குமாரராக அவதரித்தவர் எறும்பில் கந்தாடையண்ணன் ஸ்வாமி. இவருடைய மற்றொரு திருநாமம் வரதராஜ தேசிகர்.
இவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணியருளியவர் ஸ்வாமி வரம் தரும் பெருமாள் அப்பை,
உபய வேதாந்தங்களை கற்பித்தவர் திருதகப்பனாரான ஸ்வாமி சுத்த ஸத்வம் அண்ணன்.
எறும்பில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி சாதித்த க்ரந்தங்கள்.
1. ஸ்ரீ வசன பூஷண மீமாம்ஸா பாஷ்யம்
2. ஸ்ரீ வெங்கடேசஸ்தவம் மற்றும்
3. ஸ்ரீ பராங்குச ஸ்தவம்

எறும்பில் கந்தாடை ஸ்வாமிக்கு நான்கு திருக்குமாரர்கள் அவதரித்தார்கள்.

தனியன்

கௌசிக ஸ்ரீ நிவாஸார்ய தநயம் விநயோஜ்வலம்
வாத்ஸல்யாதி குணாவாஸம் வந்தே வரததேசிகம்

வாழி திருநாமம்

தக்கானையிருசரணம் தனித்தொழுவோன் வாழியே
சகலகலைப் பொருளனைத்தும் சாத்திடுவோன் வாழியே
மிக்கான கௌஸிகரில் மேவினோன் வாழியே
விருச்சிகத்தில் ஆதிரைநாள் விளங்கவந்தோன் வாழியே
எக்காலம் அண்ணனடி யேத்துமவன் வாழியே
யதிராசன் பாஷியம் இங்கு எடுத்துரைப்போன் வாழியே
இக்காலம் என்னை ஈடேத்த வந்தோன் வாழியே
எறும்பில் கந்தாடையண்ணன் இணையடிகள் வாழியே

ஏழ்பாரும் போற்ற வரும் எறும்பி நகர் வாழுமண்ணா
வாழ்வார் குமாண்டூரில் வந்தோனே – ஆழ்வார்கள்
பன்னுகலை யதிராசன் பாஷியம் பார்த்துரைத்தே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்

————-

கார்த்திகே பரணி ஜாதம் யதீந்த்ர ஆச்ரித மாச்ரயே
ஜ்ஞான ப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முநிம்
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்த ஆச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே

எம்பெருமானாருடைய நல்ல சீடராய் வேத சாஸ்த்ரார்த்தப் பொருளைச் செல்வமாக உடையவராய்
ஸந்யாஸ ஆஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கிறேன்.

ஸுவர்ணமுகி நதிக்கரையிலுள்ள விஞ்சை(விஞ்சிமூர்) என்னும் நகரத்தில்
கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் ஸ்வாமி அருளாளப் பெருமாள் எம்பெருமானார்.
இயற்பெயர் யஜ்ஞமூர்த்தி. ஏகதண்டி அத்வைத ஸந்யாசியாக வாழ்ந்தவர்.
எம்பெருமானாருடைய பெருமைகளை அறிந்து கொண்ட இவர், அத்வைதம் தழைக்கவும்,
எம்பெருமானாரை வாதத்திற்கு அழைத்து வெற்றிகொள்ளவும் தீர்மானித்து,
நிறைய க்ரந்தங்களை எழுதி எடுத்துக்கொண்டு வித்யாகர்வத்தோடு தம் சிஷ்யர்களுடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரை நோக்கி “நீர் என்னோடு சாஸ்த்ர தர்க்கம் பண்ண வேணும்” என்று அழைத்தார்.
யஜ்ஞமூர்த்தி வாதத்தில் தோற்றால் எம்பெருமானாருடைய மதத்தை ஏற்றுக்கொண்டு,
எம்பெருமானாருடைய பாதுகையை தன் ஸிரஸில் தாங்கி தன்னுடைய பெயரையும்
எம்பெருமானாருடைய திருநாமத்துடன் சேர்த்து வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
எம்பெருமானாரும் வாதத்தில் தாம் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் மேற்கொள்வதாக
(க்ரந்தங்களை எழுதாமலும் தொடாமலும் விட்டுவிடுவதாக) அறிவித்தாராம்.

16 நாட்கள் வாதம் நடைபெற்று வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்தது. வாதத்தின் 17 ஆம் நாள் முடிவில்
யஜ்ஞமூர்த்தி பக்கமே ஓங்கியிருந்த நிலை ஏற்பட்டது. அன்று இரவு ஸ்வாமி எம்பெருமானார்
தன் திருவாராதன பெருமாளான வரதராஜ பெருமாளிடம்
“பேரருளாளப் பெருமாளே! நாத யாமுன முனிவர்கள் வளர்த்து அடியேனிடம் வந்த இந்த தரிசனம்
அடியேனால் சிதைவு காண வேணுமென உமது திருவுள்ளமோ? இப்படி ஒரு திருவிளையாடலோ? என்று
நினைத்துக்கொண்டு சயனிக்க, அவருடைய ஸ்வப்னத்திலே (கனவிலே) பேரருளாளப் பெருமாள் தோன்றி,
எம்பெருமானாரே ஒரு பெரிய அறிவாளியை உமக்கு சீடனாக ஆக்குவதற்கே இதை செய்தோம் என்று சொல்லி
பரமாசார்யரான ஆளவந்தாருடைய மாயாவாத கண்டணத்தைக் கொண்டு யஜ்ஞமூர்த்தியை வாதத்தில் ஜயிப்பீராக என்று அருளினாராம்.

மறுநாள் காலை மிகுந்த சந்தோஷத்துடனும், மநோபலத்துடனும் மதம் கொண்ட யானையைப் போல
வாதத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானாரைக் கண்ட யஜ்ஞமூர்த்தி, ஸ்வாமியின் முகவொளி கண்டு
மேலே வாதிட விரும்பாமல் ஸ்வாமி திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து
“அடியேன் தோற்றேன், இரங்கி அருளவேணும்” என்று பிரார்த்தித்தார்.

ஸ்வாமி எம்பெருமானார் வாதம் தொடரட்டும் என்று சொல்லி வாதத்தைத் தொடங்கி
முறைப்படி வாதத்தில் வென்று வெற்றி கொண்டார். அவரும் தமது அத்வைத கொள்கையைத் த்யஜித்து
சிகையும் யக்ஞயோபவீதத்தையும் தரித்து த்ரிதண்டமேந்தி ஸ்ரீவைஷ்ணவ முக்கோல் பகவர் ஆனார்.
பேரருளாளப் பெருமாளின் அருளால் இவர் தமக்கு சிஷ்யரானபடியாலும், எம்பெருமானாரிடம் வாதத்தில்
தோற்ற படியாலும் வாத நிபந்தனைப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தோடு சேர்த்து
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமம் சூட்டப்பெற்றார்.

ஆசார்யனான ஸ்வாமி எம்பெருமானாரிடம் ஸகல அர்த்தங்களையும் கற்றறிந்து அதை பின்புள்ளாரும்
அறிய வேண்டி, ஸ்வாமியிடம் அனுமதி பெற்று ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் ஆகிய
இரண்டு தமிழ் ப்ரபந்தங்களை அருளிச்செய்தார்.

ஞானசாரம் 40 பாசுரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட அர்த்த விசேஷங்களை
சாரமாக எடுத்துரைக்கும் ப்ரபந்தம். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தம்முடைய பரம கருணையாலே
தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ஆகியவற்றின் கருத்தை அனைவரும் அறியலாம்படி தமிழில் அருளிச் செய்த ப்ரபந்தம் ஞானசாரம்.

ப்ரமேய ஸாரம் 10 பாசுரங்களைக் கொண்டது. முதல் மூன்று பாசுரங்களால் ப்ரணவத்தின் பொருளையும்,
அடுத்த நான்கு பாசுரங்களால் திருமந்திரத்தின் இரண்டாவது பதமான நம: என்ற சொல்லின் பொருளையும்,
எட்டாவது பாசுரத்தால் நாராயணாய என்ற சொல்லின் பொருளையும்,
ஒன்பதாவது பாசுரத்தில் ஆசார்ய வைபவத்தையும்,
சரமப் பாசுரமான 10 ஆம் பாசுரத்தில் ஆசார்யன் செய்யும் உபகாரத்தையும் அருளிச் செய்துள்ளார்.

———–

பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
வைணவ குருபரம்பரை வரலாற்றினைக் கூறுவது. கந்தாடையப்பன் தொகுத்தது.
பார்த்தசாரதி ஐயங்கார் பதிப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
அரிசமய தீபம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில் ‘பெரிய திருவடி அடைவு’ நூலைப் பற்றிக் கீழ்க்காணும் செய்திகள் உள்ளன.

கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூல் திவ்வியசூரி சரிதம்.
இதில் இராமானுசர் காலத்தில் அவரது காலம் வரையிலான குருபரம்பரை தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
‘பிரபன்னாமிர்தம்’ என்னும் நூல் பின்பழகிய பெருமாள் ஜீயர் இயற்றிய குருபரம்பராப் பிரபாவம் என்னும்
நூலை வடமொழியில் மொழிபெயர்த்தார்.
பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் அது தோன்றிய 15 ஆம் நூற்றாண்டு வரையிலான
வைணவ குருமார்களின் பரம்பரையைத் தொகுத்துக் கூறும் தமிழ்நூல்.

———–

விஷ்ணுவை ஒரு மனித உருவாக பாவித்தால் அந்த முழு அவயவமும் நம்மாழ்வார்.
பூதத்தாழ்வார் திருமுடி.
பொய்கை ஆழ்வார் கண்கள்.
பெரியாழ்வார் தான் முகம்.
திருமழிசையாழ்வார் கழுத்து.
குலசேகரரும் திருப்பாணாழ்வாரும் இரு கைகள்.
தொண்டரடிப் பொடியாழ்வார் மார்பு.
திருமங்கை ஆழ்வார் தொப்புள்.
மதுரகவி ஆழ்வார் திருவடி.
ஆண்டாள்?? — ஜீவனாகத்தான் இருக்கவேண்டும்.

———-

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமும் நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் கையிலடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப்பாரம்
அரமோ உமையின் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாடத்திற்கொடுக்கம்
இறைவனோ தொண்டருள்ளத்துளொடுக்கம்
தொண்டர்தம் பெருமையை சொல்லலும் பெரிதே–20 நூற்றாண்டு ஔவையார் பாடல்

——-

பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே உள்ள உறவு குரங்குக்கும் அதன் குட்டிக்கும் இடையேயுள்ள
உறவைப் போன்றது என்று வடகலையார் கூறுகின்றனர்.
இதனை மர்க்கட நியாயம் என்றழைக்கின்றனர் ( மர்க்கடம்– குரங்கு )
தென்கலையாரோ அவ்வுறவு பூனைக்கும் அதன் குட்டிக்கும் போன்றது என்று கூறுகின்றனர்.
இதனை “ மார்ஜாரம்– பூனை என்று அழைக்கின்றனர்.

————–

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

மாமுனிகள் அரங்கன் திருமுன்னிலையில் திருவாய்மொழிக்கு விரிவுரை செய்தருளிய ஆண்டு 1430 AD

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின்
வம்சத்தில் தோன்றிய கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன் அவரிடமே பயின்றவர்.
ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )
பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

—————

ஸ்ரீ பெரிய பெருமாள் -பங்குனி -ரேவதி
திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)
பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)
ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

நாதமுனிகள் (ஆனி – அனுஷம்)
ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)
வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

மணக்கால் நம்பி (மாசி – மகம்)
தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே

ஆளவந்தார் (ஆடி – உத்ராடம்)
மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

பெரிய நம்பி (மார்கழி – கேட்டை)
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே

திருக்கச்சி நம்பி (மாசி – ம்ருகசீர்ஷம்)
மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே

எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

மாமுனிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியன:

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே

கூரத்தாழ்வான் (தை – ஹஸ்தம்)
சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே

முதலியாண்டான் (சித்திரை – புனர்பூசம்)
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே.

திருவரங்கத்து அமுதனார் (பங்குனி – ஹஸ்தம்)
எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணி அரங்கத்தமுதனார் அடி இணைகள் வாழியே

எம்பார் (தை – புனர்பூசம்)
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

பட்டர் (வைகாசி – அனுஷம்)
தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே

நஞ்சீயர் (பங்குனி – உத்ரம்)
தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீமாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே
எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே

நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே

வடக்கு திருவீதிப் பிள்ளை (ஆனி – ஸ்வாதி)
ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி – ரோகிணி)

தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால்பதத்தைச் சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிஸ்லோகி அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஓது புகழ் சங்கநல்லூர் உகந்து பெற்றோன் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்தபிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான்பிள்ளை இணையடிகள் வாழியே

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்கவந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மைதவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர்தாள் புகழுமவன் வாழியே
மன்புகழ்சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள்தன்னைப் பகுத்துரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அநவரதம் வாழியே

பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி – திருவோணம்)
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே

கூர குலோத்தம தாஸர் (ஐப்பசி – திருவாதிரை)
சந்ததமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
இலகு துலா ஆதிரையில் இங்குதித்தோன் வாழியே
இந்த உலகோர்க்கு இதமுரைத்தோன் வாழியே
எழில் வசன பூடணத்துக்கு இனிமைசெய்தான் வாழியே
குந்தி நகர் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தமதாசர் குரைகழல்கள் வாழியே

திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி – விசாகம்)
வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்)
திருவிருந்த மலர்த்தாள்கள் வாழியே
சிறந்த செந்துவராடையும் வாழியே
தருவிருந்தகை முக்கோலும் வாழியே
தடம்புயத்தினில் சங்காழி வாழியே
மருவு கொண்டல் மணவாள யோகியை
வாழ்த்தி வாழ்ந்தருள் வாய்மலர் வாழியே
கருணை மேவும் இராமனுச முனி
கனக மௌலி கலந்தூழி வாழியே

ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார் (ஐப்பசி – திருவோணம்)
செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

பூதத்தாழ்வார் (ஐப்பசி – அவிட்டம்)
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே

பேயாழ்வார் (ஐப்பசி – ஸதயம்)
திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே

திருமழிசை ஆழ்வார் (தை – மகம்)
அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே

மதுரகவி ஆழ்வார் (சித்திரை – சித்திரை)
சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)
திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே
இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே

ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழி ஆயிரமுரைத்தான் வாழியே
வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

குலசேகராழ்வார் (மாசி – புனர்பூசம்)
அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.

பெரியாழ்வார் (ஆனி – ஸ்வாதி)
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

ஆண்டாள் (திருவாடிப் பூரம்)
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி – கேட்டை)
மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

திருப்பாணாழ்வார் (கார்த்திகை – ரோஹிணி)
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை – கார்த்திகை)
கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

——————

ஸ்ரீரங்க மங்கள மணிம் (நிதிம்) கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்திஸைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீஸம் நமாமி சிரஸா யதுஸைல தீபம்

லக்ஷ்மீசரண லாக்ஷாங்க ஸாக்ஷாத் ஸ்ரீவத்ஸ வக்ஷஸே
க்ஷேமங்கராய ஸர்வேஷாம் ஸ்ரீரங்கேசாய மங்களம்

ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தி நாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

அஸ்துஸ்ரீஸ்தந கஸ்தூரி வாஸனா வாஸிதோரஸே
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய தேவராஜாய மங்களம்

கமலாகுச கஸ்தூரீ கர்த்த மாங்கித வக்ஷஸே
யாதவாத்ரி நிவாஸாய ஸம்பத்புத்ராய மங்களம்

நீலாசல நிவாஸாய நித்யாய பரமாத்மநே
ஸுபத்ரா ப்ராண நாதாய ஜகந்நாதாய மங்களம்

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாத்மநே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

ப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமாநுஜாய ச
ருக்மிணி ப்ராண நாதாய பார்த்தஸூதாய மங்களம்

ஸ்ரீமத்யை விஷ்ணுசித்தார்ய மநோ நந்தந ஹேதவே
நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயா நித்யமங்களம்

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே சடகோபாய மங்களம்

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரீ நாதாய கலிவைரிணே
சதுஷ்கவி ப்ரதாநாய பரகாலாய மங்களம்

ஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேஸவ யஜ்வந:
காந்திமத்யாம் ப்ரஸூதாய யதிராஜாய மங்களம்

ஸ்ரீபராங்குச பாதாப்ஜ ஸுரபீக்ருத மௌலயே
ஸ்ரீவத்ஸ சிஹ்ந நாதாய யதிராஜாய மங்களம்

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்

துலா மூலாவதீர்ணாய தோஷிதாகில ஸூரயே
ஸௌம்யஜாமாத்ரு முநயே சேஷாம்ஸாயாஸ்து மங்களம்

மங்களாசாஸந பரை: மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைர் ஆசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: