ஸ்ரீ கோதா ஸ்துதி–15-29-

ஸ்ரீ கோதா ஸ்துதி

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி |
மௌளிஸ்ரஜா தவ முகுந்தா கிரீடபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ || (15)

கோதே — கோதாய்! வைஜயந்தீ — வனமாலை; ஸதா — எப்பொழுதும்;
ஆமோதவத்யபி — பரிமளம் நிறைந்து சிரிப்பு விகாஸத்தோடு கூடியிருந்தும்;
ஹ்ருதயங்கமாபி — திருமார்பில் இருந்துகொண்டு மனதை ஹரிப்பதாயிருந்தும்;
ராகந்விதாபி — செவ்வி மாறாமலும் பெருமாள் திருமார்பில் மிக்க ராகத்தோடும்;
லளிதாபி — மிகவும் ஸுகுமாரமாயும்; குணோத்தராபி — உயர்ந்த குணங்களை (நாறுகளை) உடையது;
முகுந்த கிரீட பாஜா — மோக் ஷஸுகத்தை அளிக்கும் பெருமாள் கிரீடத்தை அடைந்த;
தவ மௌளிஸ்ரஜ — உன்னுடைய கூந்தலை அலங்கரித்த மாலையால்;
அதரிதா பவ கலு — கீழே போனதாக ஆகிவிட்டதல்லவா?

அம்மா கோதாய்! பெருமாள் திருமார்பில் ஸர்வ காலத்திலுமுள்ள வைஜயந்தீ என்னும் வனமாலையானது,
எப்பொழுதும் பரிமளத்தோடும், ஸந்தோஷ மலர்ச்சியோடும், செவ்வியோடும் பெருமாள் திருமார்பை
அலங்கரிப்பதில் ராகத்தோடும், ச்ரேஷ்ட குணங்களோடும், ஸௌகுமார்யம் என்னும் மார்த்தவத்தோடும் கூடி
பெருமாள் திருமார்பிலேயே வசித்துக் கொண்டு மனத்துக்கினியதாயிருந்தாலும்,
அது அவர் திருமுடியிலுள்ள கிரீடத்தை அடைந்த உன் சிரோமாலையால் கீழாக்கப்பட்டதே!

கோதா பிராட்டியே ——நீ , மலர் மாலையை, உன் திருமார்பில் சூடிப் பிறகு அதைக் களைந்து,
எம்பெருமான் சூடிக் கொள்ளச் செய்தாய் .அவன் அதைத் திருமுடியில் கிரீடத்தில் அணிந்தான்.
இப்போது மணம் செய்துகொண்ட இளையாளைத் தலையாலே ஏற்று, மூத்தாளான வைஜயந்தியை மார்பிலேயே வைத்துவிட்டான்.
உன்னுடைய மாலை, வைஜயந்தி மாலை இரண்டுமே மணம் மிக்கவை; இரண்டிலுமே சிகப்பு உண்டு; இரண்டுமே அழகு;
இரண்டுமே ம்ருதுவானவை; இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும், உனது மாலை அவன் திருமுடியில் ஏறியுள்ளது ,
உன் பெருமையைச் சொல்கிறது.

அவதாரிகை

(1) என்னை ஈச்வரீயென்னலாமோ? எனது உயிரும் அம்சியுமான பெரிய பிராட்டியாரல்லவோ ஈச்வரீ?
அம்மா! உன்னை ஈச்வரீ என்று அழைக்க என்ன தடை? மோக்ஷத்தை அளிக்கும் முகுந்தனான ஸர்வேச்வரரின்
கிரீடத்தை உன் சிரோமாலை அடைந்ததே? உன் சிரஸுக்கு ஈச்வர கிரீடம் கிடைத்தாலென்ன?
உன் சிரோலங்காரமான மாலைக்கு அது கிடைத்தாலென்ன?

(2) ஆண்டாள் சரித்திரத்திலும் திருக்கல்யாணத்திலும் மாலைக்குத்தான் ப்ரதான்யம்.
அநேகம் ச்லோகங்களில் இங்கே கோதைமாலையின் ஸ்துதிமாலை. இது சூடிக்கொடுத்த மாலையின் துதியென்ன வேணும்.
அந்த மாலை தானே இம் மிதுனத்தைச் சேர்த்து வைத்த கடகவஸ்து! புருஷகாரத்திற்கும் புருஷகாரமாயிற்று.
கடகர் சிறப்பினும் மிக்கதுண்டோ? பரமான ப்ரஹ்மவித்யையை ப்ரதிஜ்ஞையுடன் பேச ஆரம்பித்த முண்டகோபநிஷத்து மேலே
“ஆகையால் க்ஷேமத்தை விரும்புகிறவன் ஆத்மக்ஞனான ஆசிரியனை யல்லவோ அர்ச்சிக்க வேண்டும்” என்றது.
‘தஸ்மாத்’ என்று ஹேதுபுரஸ்ஸரமாய்ப் பேசுவதோடு த்ருப்தியில்லாமல் ‘ஹி’ என்று ப்ரஸித்தியையும் ஹேதுவையும்
காட்டும் பதத்தையும் சேர்த்துக் கொண்டது.
“தஸ்மாத் ஆத்மக்ஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:”
மதுரகவி காட்டும் மதுரமார்க்கம் நல்வழியான தொல்வழி

(3) முன் ச்லோகத்தில் ‘நீ சூடிய மாலை வந்து திருமுடியில் ஏறி கிரீடம் பெற்றதும்,
வைஜயந்தியில் மொய்த்துக் கொண்டிருந்ததை விட்டு, உன் மாலையின் பரிமளாதிகளால் மேலே இழுக்கப்பட்டு
அங்கே சூழ்ந்து சுழன்று ஆடிப் பாடுகின்றன’ என்றார். புதிதாக கிரீட மாலைக்கு வந்தால் வரட்டும்;
கையில் கிடைத்து ஸித்தமான உத்தமமாலையாகிய வைஜயந்தியை அலக்ஷ்யம் செய்து தாழ்வாக்குமோ?
இது என்ன பக்ஷபாதப் பேச்சு? பொய்த்துதி? இதற்கும் பதில் கூறுகிறார்.

கோதே! —
நீ பாமாலை பாடிக்கொண்டே பூமாலை தொடுத்துக் கட்டிச் சூடிக்கொடுத்தாய்.
உன் தோழிகளும் ப்ரஜைகளுமான உன் தோட்ட வண்டுகள் உன் பூமாலையைச் சுற்றி ஆடிப்பாடி வந்தன;
உன்னை அநுகரித்தன.

வைஜயந்தீ —
வனமாலையானது பஞ்சபூதங்களையும் அபிமானிக்கும் நித்யஸூரியான சேதன தத்துவம்.
இப்படிக்கு உத்க்ருஷ்டமான சேதனமாலை உன் பூமாலையால் ஜயிக்கப் பட்டது.
ப்ருந்தாவனத்து கோபாலனுக்கு இதுவே திருமார்புக்கு அலங்காரம். ஒருகால் குந்துமணியும் சேரலாம்.

ஸதா — எப்பொழுதும்.

ஆமோதவத்யபி — பரிமளம்,

ஸந்தோஷவிகாஸம். சேதனமான அபிமானி தேவதையானதால் ஸந்தோஷமும் உண்மையாகும்.

ஹ்ருதயங்கமாபி — ஹ்ருதய தேசத்திலிருப்பது. ஹ்ருதயத்துக்கு இனிதே.

ராகாந்வி தாபி —
வாடாத மாலை புஷ்பராகம் . மாறுவதேயில்லை. திருமார்பில் ராகம் குறைவதே இல்லை
திருமார்பில் ராகமில்லாவிட்டால் இளப்பம் செய்யக் காரணமேற்படலாம்.

லளிதாபி — மார்த்தவ ஸௌகுமார்யங்கள் குறைவதேயில்லை.

குணோந்ததாபி —
புஷ்பங்களின் உயர்த்தி குறையாவிடினும் மாலையின் நார்கள் (குணங்கள்) கெடுகின்றனவோயென்றால்,
நார்கள் ஸர்வோத்தரமாகவேயுள.

மௌளிஸ்ரஜா —
ஓர் குறைவுமில்லையென்றால், கீழாவதற்குக் காரணம்தான் என்ன? வைஜயந்தீ பெருமாள் திருமுடியிலும் ஏறவில்லை,
உன் மௌளியிலும் ஏறப்பெறவில்லை. இந்த மாலை உன் மௌளியில் சூடப்பட்டுப் பெருமாள் முடியையும் சூடுகிறது.
இந்த மாலை ஈச்வரீ ஈச்வரர் இருவர் முடியிலும் சம்பந்தம் பெற்றது. ஸ்தானத்தால் உயர்த்தி பெற்றதல்லவோ!
மற்ற தாரதம்யத்தை நாம் நினைக்க வேண்டாம். பேசவேண்டாம். மௌளி உத்தம அங்கமல்லவோ, மார்புக்கு உயர்ந்ததன்றோ?

தவ — ஈச்வரீயான உன் மௌளி சூடியது, அங்கிருந்து.

முகுந்த கிரீட பாஜா —
பெருமாள் திருமேனியிலேயே யல்லவோ ஸ்தானங்களின் உத்தமத்வமும் அதரத்வமும் காட்டவேணும்!
முகுந்தன் மோக்ஷப்ரதன். ஸர்வேச்வரன்தான் மோக்ஷப்ரதன். அவன் கிரீடத்தில் சூடப்பட்டது இம்மாலை.
கிரீட ஸம்பந்தம் உத்தமமல்லவோ? மாலைகளுக்குள் ஆதிராஜ்ய ஸூசனம் அந்த ஸம்பந்தம்.

அதரிதா —
கீழாய்ச் செய்யப்பட்டது. திருமுடியில் கிரீடத்திலுள்ள மாலைக்குக் கீழேயுள்ளதுதானே திருமார்பு மாலை?

பவதி கலு —
ஆகிறது அல்லவா? இது எல்லோரும் அறியும்படி ஸ்பஷ்டம்தானே! இங்கே ஓர் ரஸமுண்டு.
பகவத் கைங்கர்ய ரஸிகர் மற்றெல்லோருக்கும் தாழ்மையையே ஆசைப்படுவர்.
தாழ்மை கிடைத்ததும் ‘இன்றுதான் பிறந்தோம்’ என்கிற நினைப்பு வருவதை ‘அதரிதா பவதி’ என்று
சேர்த்துப் பணிப்பால் விளக்குகிறார்.
கோதை சூடிய மாலை சேதனமல்லாததால் அதற்கு அந்தத் தாழ்மை ஆசையில்லை.
மேலும் பெருமாளாக அதைத் தலையில் சூடிவிட்டார்.
நித்யஸூரியான வைஜயந்தி தேவதை தாழ்மையையே ஸத்தையாக மதித்தார். (15)

———-

த்வந்மௌளிதாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்தகல்பித ஸபீதிரஸ ப்ரமோதா|
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்களதூர்யகோஷம் || .16.

விபோ — விச்வப்ரபுவினுடைய; ஶிரஸா — சிரஸினால்; த்வந்மௌளிதாமநி — உன் சிரஸை அலங்கரித்த மாலை;
க்ருஹீதே — க்ரஹிக்கப்பட்டபோது; ஸ்வச்சந்த — தங்கள் ஸ்வேச்சையாக (இஷ்டப்படிக்கெல்லாம்);
கல்பித — செய்த; ஸபீதரஸ — ஸஹபான ரஸத்தால்; (எல்லாம் கூடித் தேனைப் பானம் செய்து);
ப்ரமோதா: — அதிக சந்தோஷத்தோடு கூடியனவாக; மஞ்ஜுஸ்வநா: — இனிய சப்தத்தோடே;
மதுலிஹ: — தேனை ஆஸ்வாதிக்கும் வண்டுகள்; ஸ்வயம் — தாமாகவே (வேறு ஒருவரும் சொல்லாமல்);
ஸ்வாயம்வரம் — ஸ்வயம்வரமான விவாஹ ப்ரகரணத்திற்குத் தக்கபடி;
கமபி — வர்ணனத்திற்கு அடங்காத மாதுர்யத்தை உடைய ஓர் விசித்ரமான;
மங்களதூர்ய கோஷம் — மங்கள வாத்ய சேவையை; வித்து: — செய்தன (விதித்துக் கொண்டன)

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதி க்ரஹிக்கப் படபோது, தேன் வண்டுகள் தங்கள்
இஷ்டப்படிக் கெல்லாம் வேண்டிய மட்டும் ஸஹ பானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து
இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்கள வாத்ய கோஷம் செய்தன.

கோதா தேவியே—–உன் மாலையை, எம்பெருமான் சிரஸா ஏற்றுக்கொண்டான்.
தேனைத் தேடும் வண்டுகள், அந்த மாலையில் உள்ள ரஸங்களைத் தங்களுடைய ஆசைக்கு ஏற்பப் பருகி,
அதிக ஆனந்தத்துடன் ,ரீங்காரமிட்டு அழகாகப் பாடுகின்றன.
அந்த ரீங்கார ஓசையே ஸ்வயம் வரத்துக்கான வாத்திய கோஷம் போல் உள்ளது.
நீ சூடிக் கொடுத்த மாலையில் , மாலை மாற்றுதலும், அதற்கான வாத்திய கோஷமும் —ஆஹா

அவதாரிகை

(1) அனந்தநாதரைப்போல வண்டுக்கூட்டங்கள் தங்கள் சரீரத்தாலேயே குடையாயின.
கருடனைப் போலே விசிறியுமாயின என்றார் 14ல்.
வைஜயந்தியை வண்டுகள் விட்டதைப் பேசினதை உபபாதிக்க முன் சுலோகம் வந்தது.
அது முடிந்ததும், மறுபடியும் வண்டுகள் ஆனந்தப்பட்டு ஸ்வயம் செய்யும் வாத்யகோஷ கைங்கர்யத்தை ஸாதிக்கிறார்.

(2) ஸ்வயம்வரத்தில் மங்களவாத்ய கைங்கர்யமும் ஸ்வயமாக வண்டுகளால் வரிக்கப் படுகிறது.
எல்லாம் இங்கே ஸ்வயமாகும். வண்டுகள் ஸ்வச் சந்தமாகத் தேனை ஸஹபானம் செய்து களிக்கின்றன.
ஒருவரும் அவற்றிற்குத் தேனைப் பானம் செய் என்று தேனை எடுத்துக் கொடுக்கவில்லை, பரிமாறவில்லை.
தங்கள் இஷ்டமாகத் தாமே மாலையில் பெருகும் தேனைப் பானம் செய்கின்றன.
இந்த ஸ்வயம்வரத்தில் சேஷர்களான யாவரும் தங்கள் தங்கள் இஷ்டத்தை ஆஃவயமாகச் செய்யலாம், போகங்களையும் புஜிக்கலாம்.
ஸ்வக்ருஹே கோ விசாரோஸ்தி அஸ்யாஜ்ஞா ஸம்ப்ரதீக்ஷ்யதே என்றார் ஜனகர் ஸீதா விவாஹத்தில்.
“ஸ்வக்ருஹத்தில் யாருக்கு என்ன விசாரம் வேண்டும்? யாருடைய ஆஜ்ஞை எதிர்பார்க்கப் படுகிறது?
ஏன் ஸ்வயமாக உங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் இந்த உத்ஸவத்தில் ப்ரவ்ருத்திக்கலாகாது ” என்று ஜனகர் கேட்டார்.
இங்கே அப்படிப் பேசவே அவஸரம் நேரிடவில்லை.
எல்லாரும் ஸ்வயமாகவே விவாஹ மங்களத்திற்கு வேண்டிய கார்யங்களைச் செய்கின்றனர்.
விவாஹத்திற்கு மருஷ்டாந்ந பானாதிகள் அங்கமாகையால் விவாஹ பூர்த்திக்காக அதையும் செய்கின்றன.
‘விதது’ என்பதால் வாத்யகோஷம் செய்ய ஒன்றையொன்று விதித்தன, கட்டளையிட்டன என்றும் கொள்ளலாம்.
விதியின் பயன் பிறர்க்கு. பரஸ்மை பதப்ரயோகம்.

த்வந்மௌளிதாமநி —
நீ உன் கூந்தலில் சூடிய மாலையானது உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலை.

விபோ:ஶிரஸா —
ப்ரபுவின் சிரஸால். உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலையைத் தம் உத்தமாங்கத்தில் தரிப்பது தானே
இந்த உத்தம ப்ரபுவின் லக்ஷணம்!

ஶிரஸா க்ருஹீதே —
“ஶிரஸா ப்ரதிக்ருஹ்ணாதி வைஸ்வயம்” என்ற வசன க்ரமத்தை இவர் விடாத ப்ரபுவே.
எவர் செய்யும் பூஜையையும் இப்படி சிரஸால் க்ரஹிப்பவர். கோதை சூடிய மாலையை இப்படி க்ரஹிக்காமலிருப்பாரோ?
தம் ஸ்வச்சந்தமான ஸ்மிருதி வசனப்படி, ஸ்வயமே சிரஸா க்ரஹித்தார். தம்மையே விதித்துக் கொண்டார்.
இந்த ஸ்வயம்வரத்திலே பெருமாளுடைய சிரஸால் க்ரஹணமும் ஸ்வயம்.
பெருமாளை ஒருவரும் ப்ரார்த்திக்கவில்லை, விதிக்கவில்லை. அவர் ஸ்வச்சந்தமாக அப்படிச் செய்தார்.
ராகத்தால் செய்தார். ஸ்வச்சந்த விதானம். மாலையை சிரஸால் க்ரஹித்த பொழுதே “யஸ்யச பாவே பாவ லக்ஷணம்”
பாவத்தை இரட்டிக்கும் பாணினி ஸூத்ரமும் இந்த பாவப்ரகரணத்தில் பாவத்தோடு சேருகிறது.

ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸப்ரமோதா: —
பல்லாயிரம் வண்டுகளாக சிரோமாலையில் பெருகும் தேனை ரீங்காரம் பண்ணிக்கொண்டு ஸஹபானம்
செய்யும் போது தடுப்பாரில்லை, ஓட்டுவாரில்லை. கூட்டங்களான வ்யக்திகளுக்கு ஒரே காலத்தில்
அன்னம் இட்டு அவர்கள் புஜிப்பார்கள். பானகாதிகளைக் கூடிப் பானம் செய்வர்.
இவை ஸ்வச் சந்தமாய்த் தலை மேலேறி அங்கே ஒரே கூட்டமாய்ப் பானம் செய்கின்றன.
குமார ஸம்பவத்தில் தன் பேடையான பெண்வண்டை அநுவர்த்திக்கொண்டு ஆண்வண்டு ஒரே
குஸும பாத்ரத்தில் ஸஹபானம் செய்தது என்று காளிதாஸர் வர்ணித்தார்.
அங்கே பரச்சந்தானுவர்த்தன மென்னும் தாக்ஷிண்யம் காட்டப் பட்டது.
இங்கே எல்லா வண்டுகளும் ஏககாலத்தில் ஸஹபானம் செய்தன.
பானத்தில் ராகமுடையவர் பலபேர்கூடி ஸஹபானத்தை மிகவிரும்புவர்.
இங்கே இப்படிப் பல்லாயிரம் வண்டுகளும் வாத்தியம் ஸேவிக்கின்றன.
வாத்யக்காரர் எல்லோரும் கூடிச் சேர்ந்து விவாஹ ஸமயத்தில் அன்னபானங்களில் அந்வயிப்பர்.

மஞ்ஜுஸ்வநா: —
பானம் பண்ணின தேனிலும் இனிமையான சப்தத்தோடு தேன் சாப்பிட்ட வாயிலிருந்து
சப்தம் தேனாகவே வருகிறது. ராகத்திற்கு எல்லையில்லை, தித்திப்புக்கும் எல்லையில்லை.

விதது: ஸ்வயம் —
ஸ்வயமாகச் செய்தன. ஒருவர் ஆஜ்ஞையால் விதிக்கப்பட்டுச் செய்யவில்லை.
ஆஜ்ஞா கைங்கர்யமல்ல, விதிக்கப் பட்டதல்ல. அநுக்ஞா கைங்கர்யம். ராகத்தால் ஸ்வயம் செய்தன.
‘ஸ்வயம் விதானம் செய்தன’ என்பதில் ரஸமுண்டு. பிறர் விதித்துயவில்லை. தாங்களே ஸ்வயம்விதானம் செய்துகொண்டன.
எப்படித் தங்கள் ஸ்வச்சந்தத்தால் ஸ்வேச்சையால் தேனைப் பானம் செய்தனவோ, அப்படியே ஸ்வேச்சையால்
இக் கைங்கர்யத்தையும் மிக்க களிப்போடு செய்தன. “களம விரளம் ரஜ்யத் கண்டா: க்வணந்து சகுந்தய”
“அவ்யக்த மதுரமாக ஓயாமல ராகம் நிரம்பின கண்டத்தோடு பெண் பக்ஷிகள் சப்திக்கட்டுமே.
தேவன் ராமன் ஸ்வயமாக இந்தப் பஞ்சவடிக்கு மறுபடியும் எழுந்தருளியிருக்கிறார்” என்று கோதாவரீ தேவி விதித்தாள்.
அப்படி இங்கு விதிக்க அவஸரமில்லை, ஸ்வயம் ராகமிருப்பதால்.

தே —
உன் வண்டுகள்.
அந்த வண்டுகள். 14வது ச்லோகத்தில் குடையான வண்டுகள்.
உன் ஸ்வயம்வர ஸம்பந்தமாக

ஸ்வயம்வரம் —
நீ எப்படி நிரவதிகமான ராகத்தோடு உன் மணாளரை வரித்தாயோ, அப்படியே
வண்டுகளும் இந்த மங்களவாத்ய ஸேவையை வரித்தன.

மங்களதூர்ய கோஷம் —
மாலை சிரஸால் க்ரஹிக்கப்படும் க்ஷணத்தில் இப்படி வாத்ய கோஷம் செய்தன.

———–

விஶ்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ
வக்ஷஸ்த்தலே ச கமலாஸ்தநசந்தநேந |
ஆமோதிதோபி நிகமைர் விபுரங்க்ரியுக்மே
தத்தே நதேந ஶிரஸா தவ மௌளி மாலாம் || .17.

விபு: — ப்ரபுவானவர்; நாபௌ — உந்தியில்;
விஶ்வாயமாந ரஜஸா — ஓரோர் துளியும் ஒரண்டமாகும் பெருமையையுடைய;
கமலேந — தாமரைப்பூவினாலும்; கமலாஸ்த்தந சந்தநேந — தாமரையாளின் தனச்சந்தனத்தால்;
வக்ஷஸ்த்தலே ச — திருமார்பிலும்; நிகமை — வேதங்களால்;
அங்க்ரியுக்மே (ச) — இரண்டு திருவடிகளிலும்; ஆமோதிதோபி — வாஸனையேறப்பெற்றதும்;
தவ — உன்னுடைய; மௌளிமாலாம் — சிரோமாலையை; நதேந — வணங்கிய;
ஶிரஸா — தலையால்; தத்தே — தரிக்கிறார்.

ஓரோர் துளியும் ஓரோருலகமாக மாறும் பெருமையை உடைய தாமரையாலுந்தியிலும்,
தாமரையாளின் தனச் சந்தனத்தால் திருமார்பிலும், வேதங்களால் கழலிணையிலும்,
கந்தம் கமழப் பெற்றும், வணங்கிய தலையால் உன் சிரோ மாலையை ப்ரபு தரிக்கிறார்.

தாயே—-கோதா—-
பகவானிடம் மூன்று மணங்கள் உள்ளன ;
பகவானின் திருநாபியில், கமலப் பூவின் மணம் ;அதில் உள்ள ஒவ்வொரு மகரந்தப் பொடியும், ஒவ்வொரு உலகம்;
அனந்த ப்ரஹ் மாண்டங்களையும் நாபியில் வைத்துள்ளான் என்பது ப்ரமாணமல்லவா !
அவனது திரு மார்பில் ,வக்ஷஸ்தலத்தில், மஹா லக்ஷ்மி இருப்பதாலே அவளது திருவடியில் சாத்திய செம்பஞ்சுக் குழம்பின் ரஸம்,
அவளது திருமார்பில் சாத்திய திவ்ய சந்தனத்தின் மணம் —
மூன்றாவது, அவனின் திருவடியின் மணம் . வேதங்களின் மணம் , திருவடிகளில் மணக்கிறது;
இரண்டு திருவடிகள்—தமிழ், வடமொழி வேதங்களின் மணம் என்றும் புகழ்ந்து உரைப்பர்.
இப்படி,மும்மணம் பொருந்திய மணவாளன்—-அழகிய மணவாளன்—இம்மணங்களைஎல்லாம் விட்டு,
நீ சூடிக் கொடுத்த மாலைகளின் மணத்தைத் திருமுடியாலே ஏற்றான் இங்கிதம் தெரிந்தவன் என்கிறார் ,ஸேவா ஸ்வாமி ..
அவனோ நெடுமால்; நீயோ சிறு பெண்;உனக்குத் தலை குனிந்து, உன் மாலையை ஏற்றுக் கொண்டானே —
உனக்குத் தலை வணங்கிய பெருமை உனக்கா ? அவனுக்கா?

அவதாரிகை

(1) பெருமாளை விபு என்றார் முன் சுலோகத்தில். இங்கும் விபுவென்கிறார்.
எல்லா உலகங்களுக்கும் நாயகன், எங்கும் பரந்துளன். அவன் உந்திக் கமலத்தின்
ஓரோர் துளியும் ஓரோர் விச்வமாகும் என்று காட்டி அவன் விபு என்று விளக்குகிறார்.

(2) வைஜயந்தியைக் காட்டிலும் கோதை சூட்டிய மாலையின் ஏற்றத்தைக் காட்டினார்.
இங்கே உந்திக் கமலத்தினிலும் ஏற்றத்தையும், கந்தத்வாரமான தாமரையாள் தனச்சந்தனத்திலும்
வேத வாஸனை ஏறிய திருவடித் தாமரைகளிலும் அதிக வாஸனையைப் பேசுகிறார்.

(3) உலகநாயகன் உன் மாலைக்கு வணங்கி அதை சிரஸால் தரிக்கிறார்.

விஶ்வாயமாந ரஜஸா —
தாமரைப் பூவுக்கு தூளிகளால் வாசனை. ஓரோர் துளி ஓரோர் அண்டமாய் விரிவதால்,
வாசனை எல்லா அண்டங்களிலும் பரவுவதைக் காட்டுகிறது. வாசனை எத்தனை தூரம் வீசுகிறதோ,
அது அதற்கு ஏற்றம். அகிலமான அண்டங்களும் பரவும் உந்திக் கமல வாசனையிலும் மேன்மை (வ்யதிரேகம்)

கமலேந —
தாமரையால்.
ஓரோர் துளி வாசனை ஓரோரண்டம் பரவியது.
எத்தனையோ தூளிகளை உடைய கமலத்தின் வாசனைப் பலப்பை என் சொல்வது?

நாபௌ (ஆமோதிதோபி) — உந்தியில் வாஸிக்கப்பட்டும்

கமலாஸ்த்தந சந்தநேந —
முன்பு கமலத்தின் வாசனை. இங்கே கமலையின் (தாமரையாளின்) தன வாசனை கலந்த சந்தன வாசனை.
அச்சந்தன வாசனையால், பெரிய பிராட்டியாரைத் திருமார்பில் சுமந்துகொண்டு இருவர் திருமார்பிலும் பூசிய
சந்தனத்தோடே கோதையைப் பாணிக்கரஹணம் செய்து கொள்ள அவள் மாலையை வணங்கிய முடியால் சுமக்கிறார்.
ஆண்டாள் வாசனைக்கு ஒப்பாவதற்காக ஸர்வகந்தன் கமலையின் கந்தத்தையும் சேர்த்துக் கொண்டார்.
பெரிய பிராட்டியாரிலும் மணமேற்றமென்று நேராகப் பேசுவதில்லை. கோதையும் அவளுக்குத தனம் போன்ற
அவயமாதலால் அவள் தனத்திலும் கோதைக்கு அதிக வாசனையைப் பேசினாலும் அதுவும்
கமலையின் ஓர் ஸ்தன விசேஷத்தின் வாசனைப் பெருமையேயாகுமென்று காட்ட ஸ்தனசந்தனமென்கிறார்.

வக்ஷஸ்தலே ச —
திருமார்பிலும், தாமரையாளும் எங்கும் பரந்த விபுஸ்வரூபம்.
அவள் வாசனையும் எல்லையற்றுப் பரவியது. (ஆமோதிதோபி — வாஸிக்கப் பெற்றும்)

நிகமை —
வேதங்களுக்கு நித்யாபூர்வமான வேலாதீதமான திவ்ய வாசனை உண்டு. வேதங்கள் அனந்தங்கள்.
ஆழ்வார் தமிழ்வேதத்தின் மகிழம் பூ வாசனை திருவடிகளில் கங்குலும் பகலும் நித்யகாலமும் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அனந்த வேதங்களின் எல்லையற்ற அபூர்வ வாசனைகள் திருவடிகளில் சேர்ந்துள. நிகமமென்று கடைத்தெருவுக்கும் பெயர்.
விவாஹ காலங்களில் கடைத்தெருவிலிருந்து உயர்ந்த வாசனைகளை வாங்கித் தரிப்பர்.
இந்த வேத வேத்யனான திவ்ய புருஷனுக்குக் கடைத்தெருவென்ற நிகமங்களின் மணம் பொருந்தாது.
வேதமென்னும் நிகமங்களின் வாசனைப்பரப்பே சிறந்தது. கடைத்தெரு வாசனை த்ரவ்யங்களின் மணம் க்ருதரிமம் (செயற்கை),
வேத வாசனை அக்ருத்ரிமம் (இயற்கை). இங்கே நிகமங்கள் தங்கள் சிரஸுகளோடு (வேதாந்தங்களோடு)
திருவடிகளைத் தொழுகின்றன. பன்மையினால் அனந்தமான வேதங்களைக் காட்டி வாசனையின் எல்லையற்ற பரப்பைக் காட்டுகிறது.

அங்க்ரியுக்மே ச —
திருவடி ஜோடியிலும். உந்திக் கமலத்தில் உலகங்களையெல்லாம் படைக்கும் காரணத் தன்மையைக் கண்டதும்,
அக்காரணம் லக்ஷ்மீபதியானதால், திருமார்பில் கண் சென்று சேர்த்தியை ஸேவித்து, திருவடிகளில் கண் சென்றது.

விபு: —
ப்ரபு. எங்கும் ஸ்வரூபத்தால் பரந்துளன். எங்கும் வாசனையாலும் பரந்துளன்.
“ஸர்வகந்த:” என்று நிகமங்களால் புகழ்பவன். ஸ்வயமாகவே எங்கும் பரந்த வாசனையை உடையவர்.

ஆமோதிதோபி —
வாஸனையேறியும். தூரம் சென்று பரவும் வாஸனையை ஆமோதம் என்பர்.

நதேந சிரஸா —
வணங்கின சிரஸால். நெடியோன் வணங்கித்தான் ஆண்டாள் திருக்கையால் மாலையை க்ரஹிக்கவேணும்.

தவ மௌளிமாலாம் தத்தே —
உன் சிரோமாலையைத் தரிக்கிறார்.

———

சூடாபதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதௌகைரதிவாஸ்ய தத்தாம் |
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || (18)

கோதே — கோதாய்! ரங்கபதி: ஏஷ: — ரங்கபதியாகிய இவர்;
தவ உத்தரீயம் — உனது ஸ்தன உத்தரீயத்தையும்; த்வதௌகை: — உன்னுடைய குழற்கற்றைகளால்;
அதிவாஸ்ய — வாஸனையேற்றி; தத்தாம் — கொடுக்கப்பட்ட; மாலாமபி — மாலையையும்;
சூடாபதேந — கிரீடத்தின் ஸ்தானமான சிரஸால்; பரிக்ருஹ்ய — பெற்று (அணிந்து);
ஸௌபாக்யஸம்பதபிஷேக மஹாதிகாரம் — மங்களத்தன்மை, மங்களம் செய்யும் தன்மையாகிய
ஸௌபாக்ய ஸம்பத்தில் முடிசூடப் பெறும் அரிய யோக்யதையை;
ப்ராயேண — மிகவும்; பிபர்த்தி — தரிக்கிறார்.

கோதாய்! ரங்க ப்ரபுவாகிய இவர் உன் திருமார்ப்புக் கச்சையையும், நீ சூடி வாசனை ஏற்றிக் கொடுத்த
மாலையையும் சிரஸினால் க்ரஹித்து ஸௌபாக்ய ஸம்பத்தென்னும் ஐச்வர்யத்தில் முடிசூடப்பெறும்
அரும்பெரும் அதிகாரத்தை நன்றாய் தரிக்கிறார்.

கோதாப்பிராட்டியே….நீ சாத்திய பட்டு வஸ்த்ரத்தைத் தலையில் அணிந்து இருக்கிறான்;
உன் கூந்தலினால் வாசனை சேர்க்கப்பட்ட மாலையையும் மேலே திருமுடியில் அணிந்து இருக்கிறான்;
அதாவது உன் மேலாடையை ,அவன் திருமேனியின் முடியிலே கட்டி வைத்துக்கொண்டான்.
அவன் உடுத்துக் களைந்தது ,எங்களுக்குப் போக்யம்; நீ உடுத்திய மேலாடை அவனுக்குப் போக்யம்
ஆடையை அவனே எடுத்துக் கொண்டான்; மாலையை நீ அளித்தாய்; இரண்டும் அவன் திருமுடியிலே !
இத்தனை நாள் இல்லாத ஸௌபாக்யம் ,ரங்கபதிக்குக் கிடைத்தவுடன், புதியதோர் மிடுக்கும், செல்வமும், அதிகாரமும்
பெற்றுப் பிடிபடாத பெருமையில் இருக்கிறான்

அவதாரிகை

(1) கந்யை ரூபத்தை வரிப்பாளென்பர். திவ்ய தேசத்தெம்பெருமான்கள் அழகுக்கடல்கள்.
மற்ற எம்பெருமான்களிலும் அழகுமிக்கோன் என்று சொல்லக்கூடியதால் ஆண்டாளால் மணாளனாக வரிக்கப்பட்டதை
நேரில் தம் திருவாக்கால் பேசாமல் அதை வ்யஞ்ஜனம் செய்கிறார்.
ஆண்டாள் திருவாக்கினால், காளிதாஸர் அற்புதமாக ஈடுபட்டு வர்ணித்திருக்கும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட
அழகுக்கடலைக் காட்டிலும், அழகரென்று அஸாதாரணமாகத் திருநாமம் பெற்ற திருமாலிருஞ்சோலை மாமாயனிலும்,
திருவேங்கடத்துக் கார்முகிலிலும், ‘அரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே’ என்று வரிக்கப்படும் மஹா பாக்யத்தை வர்ணிக்கிறார்.

(2) பெருமாள் ஸந்நிதியில் சிரஸில் பரிவட்டம் கட்டி மாலை சேர்த்து சிரஸில் ஸ்ரீசடாரியாகிய கிரீடத்தை நமக்குச் சாற்றுவர்.
இங்கே ஆண்டாள் கோயிலில் பெருமாள் சிரஸில் ஆண்டாள் திருமார்ப்க்கச்சைப் பரிவட்டமும், மாலையும் சாற்றப்படுகிறது.
சிரஸிலிருந்து ஸர்வேச்வரத்தின் சிந்ஹமான கிரீடத்தைக் கழட்டிவிட்டு சிரஸில் இவ்விரண்டையும் பரிக்ரஹித்தார்.
இவை ஸௌபாக்ய ஸம்பதபிஷேகத்திற்குக் கிரீடமாயிற்று. ஸர்வேச்வரத் தன்மையைக் காட்டிலும் இது பெரிய அதிகாரம்.

தவ உத்தரீயம் —
உன் மேலாடையை; கோபிகள் கண்ணன் எழுந்தருளியதும் தங்கள் ஸ்தன குங்குமங்களால் முத்திரை போட்ட
உத்திரீயங்களால் ஆத்ம்பந்துவான காந்தனுக்கு ஆஸனம் ஸம்ர்ப்பிவித்தார்கள் என்றார் சுகர்.
கோதையின் ஸ்தன சந்தனம் கலந்த ஆடையை.

த்வதௌகை:அதிவாஸ்ய —
உன்னுடைய குழற்கற்றைகளால் மணமூட்டி; கூந்தல் முழுவதின் முழுவாஸனையையும் மாலையிலேற்றி.
பன்மையால் குழலில் ஓரிடமும் பாக்கியில்லாமல் சூடி என்று காட்டுகிறார்.

தத்தாம் — கொடுக்கப்பட்ட; மாலாமபி — மாலையையும்; சூடாபதேந — சிகைஸ்தானத்தால்;

பரிக்ருஹ்ய —
ஆதரத்துடன் க்ரஹித்து; “பரிக்ருஹ்ய” என்பது மணம்புரிதலையும் சொல்லும். விவாஹ ஸந்தர்ப்பத்தையும் விளக்குகிறது.

கோதே — கோதாய்! ரங்கபதியையும் கோதையையும் “ரங்கபதிரேஷ கோதே” என்று ஓரடியில் ஜோடி சேர்த்தார்.

ஏஷ ரங்கபதி —
இந்த ரங்கபதி; விவஸைப்ரகரணம் ஸ்வாமிக்கு எதிரில் ஸாக்ஷாத்காரமாகிறது.
‘பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே’ என்று வரிக்கப்பட்ட இவர்.

ஸௌபாக்ய ஸம்பதபிஷேகமஹாதிகாரம் —
ஸர்வேச்வரத்வாதிகாரத்திலும் பெரியதோர் ஸௌபாக்யச்வைர்யாதிகாரம். ஸமரான பெருமாள்களிலும் மஹத்தான ஓரதிகாரம்.
தமயந்தி ஸ்வயம்வரத்தில் பல தேவர்கள் கூடினார்கள். இங்கே ஒரே தேவர் பல ரூபங்களோடு பலராகக் கூடினர்.
எம்பெருமான்கள் கூட்டத்திலும் ‘எங்கள் மாலே’ என்று மஹாவ்யாமோஹத்துடன் வரிக்கப்படும் ரஹாஸௌபாக்யம்.

ப்ராயேண —
அதிகமாக; பெருமாள்களுக்குள் தாரதம்யத்தை நான் அறுதியிடேன்.
உத்ப்ரேக்ஷையாகக் கவிபாடுவது மட்டுமே தேவிமார் பேசலாம்.

—————

துங்கைரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதரமுத்வஹந்தி |
ஆமோதமந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸோபி த்வதீயகுடிலாளகவாஸிதாபி: || .19.

அக்ருத்ரிமகிர: — ஒருவராலும் செய்யப்படாத ச்ருதிகள்; துங்கை: — உயர்ந்த;
உத்தமாங்கை: — சிரஸுகளால் (உபநிஷத்துகளால்); யம் — எவனை;
ஸர்வகந்த இதி — எல்லா நற்கந்தங்களையுமுடையவனென்று; ஸாதரம் — ப்ரியத்தோடு;
உத்வஹந்தி — தாங்குகின்றனவோ; (விவாஹம் செய்துகொள்ளுகிறார்களோ, மாலையிடுகிறார்களோ,);
ஸோபி — அவனும்; த்வதீயகுடிலாள கவாஸிதாபி: — உன் சுருட்டைக் குழல்களால் மணமேற்றிய;
மாலிகாபி: — மாலைகளால்; ஆமோதம் அந்யம் — ஓர் புதிய விலக்ஷண வாஸனையை; அபிகச்சதி — பெறுகிறார் (அனுபவிக்கிறார்)

அபௌருஷேயமான ச்ருதிகள் தங்கள் உன்னதமான சிரஸுகளால் எவனை ‘ஸர்வகந்தன்’ என்று
தாங்குகின்றனவோ (மாலையிடுகின்றனவோ), அவனும் உன்னுடைய வக்ரமான குந்தளங்களால் மணமூட்டப்பட்ட
மாலைகளால் ஓர் ‘புதிய மணத்தை’ப் பெறுகிறான்.
(உன் மாலை மணத்தைப் பெற்று உன்னை மணம் புரிந்து திருமால் ஓர் புதுமணம் பெறுகிறார்.)

கோதா மாதா! அநாதியான வேதங்களின் சிரஸ் என்று சொல்லப்படும் உபநிஷத்துக்கள், பகவானை
“ஸர்வ கந்தமயன்” , “ஸர்வகந்தன் ‘ என்று கொண்டாடி தங்கள் சிரஸ்ஸில் தரிக்கின்றன.
அத்தகைய முழுதும் மணம் கமழும் எம்பெருமான், நீ, உனது சுருண்ட கூந்தலில் சாத்திக் கொண்டுப் பிறகு
சமர்ப்பிக்கப்பட்ட மாலைகளைத் தன சிரஸ்ஸில் வகித்து விலக்ஷ்ணமான , பரம போக்யமான , வாசனையை அடைகிறான்.

அவ: —
எல்லா ஸுகந்தங்களையுடையவனென்று ச்ருதிகள் உன் நாயகன் உத்தம கந்தத்தைப் புகழ்ந்து தங்கள் தலைகளால்
அந்த வாசனையோடு கூடினவனைச் சூடி வாஸனை பெறுகின்றன. ச்ருதிசூடைகள் ஸர்வகந்தனைச் சூடுகின்றன.
எவனை அனந்த ச்ருதிதேவிகள் சிரஸால் ஆதரத்தோடு சூடுகின்றனவோ! ஸர்வகந்தத்திற்குள்ளகப்படாத கந்தமுண்டோ? உண்டு.

துங்கை —
ச்ருதிதேவிகளின் சிரஸுகள் உபநிஷத்துக்கள். உபநிஷத்துக்களிலும் உன்னதமானதுமுண்டோ?
ஸர்வோத்தங்களை எட்டி அவனருகிலுள்ள உபநிஷத்துக்களும் ஸர்வோத்தங்கள்.

அக்ருர்த்திமகிர: —
ஒருவராலும் செய்யப்படாமல் தாமாக நித்யமாயுள்ள ச்ருதிகளான வாக்குதேவிகள்.
கோதை ஸ்துதியில், கோதை கல்யாணத்தில், எல்லாம் இயற்கையானதேயல்லாது, செயற்கைப் பொருளே இல்லை.

ஸ்வயம் —
ச்ருதிதேவிகள் ஸ்வயமாக பூர்ணபாவத்தோடு உன் மணாளனிடம் நாயகப்ரீதி செய்கிறார்கள்.

உத்தமாங்கை: —
ச்ருதிதேவிமாரான அபூர்வ பரிமளமுடைய ச்ருதிதேவிகளான பெண்கள் தங்கள் சிரஸில் ஸர்வகந்தனென்று
உன் மணாளனைச் சுமந்து அவன் பரிமளத்தைத் தங்கள் சிரஸில் ஏற்றுகிறார்கள்.

உத்தமாங்கை: — சிரஸுகளால், சுடர்மிகு சிரஸுகளால். யம் — யவனை

ஸர்வகந்த: இதி –
எல்லா ஸுகந்தங்களையுமுடையவனென்று. ‘ஸர்வகந்த:ஸர்வரஸ’ என்று சாண்டில்யோபநிஷத்து.
சாண்டில்யர் பக்திஸூத்ரங்களியற்றியவர். பஞ்சராத்ரத்தில் அர்ச்சைப் பெருமாள்களின் மஹிமையை விஸ்தரித்திருக்கிறார்.
ச்ருதியின் பதத்தையே இங்கே அமைக்கிறார்.

ஸாதரம் —
‘ஸர்வகந்த:’ என்பதை அந்த உபநிஷத்து வாக்கியம் திருப்பித் திருப்பிப் பேசுகிறது. அதனால் அந்த கந்தத்தில்
ச்ருதியின் ஆதரம் தோற்றுகிறது. ‘ஆதராதலோப:’ என்கிற ஸூத்ரத்தின் பாஷ்யத்தை இங்கே நினைக்கிறார்.
அப்யாஸத்தால் தாத்பர்யமதிகம்.

உத்வஹந்தி —
உத்வாஹமென்பது விவாஹத்தையும் சொல்லும். ச்ருதிதேவிகள் உன் மணாளனை மணம் புரிகிறார்கள்.
எனவே வாஸனை மாலையாகத் தலையில் சூடுகிறார்களோ

ஸோபி — அந்த ஸுகந்தக் களஞ்சியமான பெருமாளும்

அதீயகுடிலாளக வாஸிதாபி: —
உன்னுடைய சுருட்டைக் குழல்களால் மணமேற்றப்பட்ட. ஆர்ஜவமே வடிவுகொண்ட உனக்குக் குழல்களொன்று
தான் வக்ரகுணமுடையது. அதுவும் அழகு ஸ்வபாவத்தால். ‘ஸ்வபாவ வக்ராண்யௌகாநி தாஸாம்’ என்பர்.
மயிர்கள் சுருண்டிருப்பது போல வாசனையும் சுருண்டு சுருண்டு வீசுகிறது. (அகிற்புகை சுருள்வதுபோல)

மாலிகாபி — மாலைகளால். ‘மாலைகளே மாலிகைகள்’

ஸ்வார்தம் — நீ சூடினாலும், மாலைகள் தேவார்ஹமாக தேவபோக்யமான மாலைகளாகவே இருக்கின்றன.

அந்யம் — எல்லாமென்பதிலும் அகப்படாத ஓர் புதிய

ஆமோதம் — வாஸனையை

அதிகச்சதி — அடைகிறார், அநுபவிக்கிறார். பரிமளரங்கனிலும் வாசனா ரஸிகனுண்டோ? (19)

——————

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந்மௌளிமால்ய பரஸம்பரணேன பூய:|
இந்தீவரஸ்ரஜமிவாதததி த்வதீயாந்யா
கேகராணி பஹுமாந விலோகிதாநி || .20.

த்வந்மௌளிமால்ய ஸம்பரணேந — உன் சிரோமாலைகளைத் தரிப்பதால்;
பூயோ தந்யே — மிகவும் (முன்னிலும்) தந்யமான (க்ருதார்த்தமான);
ஸமஸ்த ஜகதாம் பிது: — எல்லாவுலகுக்கும் தகப்பனான (பகவானுடைய);
உத்தமாங்கை: — சிரஸில்; த்வதீயாநி — உன்னுடையதான;
பஹுமான விலோகிதாநி — கௌரவத்தைக் காட்டும் த்ருஷ்டிகளான;
ஆகேகராணி — அழகிய அரைக்கண் பார்வைகள்; இந்தீவரஸ்ரஜம் — கருநெய்தல் மாலையை;
ஆதததீவ — செய்கின்றனபோலும்

உலகுக்கெல்லாம் தகப்பன் பகவான். அவனுடைய சிரஸு உலகுக்கெல்லாம் தந்யம்.
உன் மாலைகளைத் தரிப்பதால் அச் சிரஸு இன்னும் மிக்க தந்யமாயிற்று.
அதில் உன்னுடைய பஹுமானத்தோடு கூடிய ஆசை நிறைந்த அரைக்கண் பார்வைகள் கரு நெய்தல் மாலை போல சேர்ப்பிக்கின்றன.

ஸமஸ்த லோக நாயகனான —எல்லா உலகங்களுக்கும் பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது,
நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,தந்யமாயிற்று மேலும்,
நீ, அடங்காத காதலுடன் அரைக்கண்களால் , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து,
அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்) மாலைபோல் அமைந்துள்ளது. தலை குனிந்து நீ நாணி நிற்கிறாய்;
ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், நீ ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

அவதாரிகை

(1) ரகுபதியின் திருவடிகள் எல்லோருக்கும் தந்யம் என்றார் காளிதாஸர். “தன்யை: பும்ஸரம் ரகுபதி பதை:”
ஸர்வலோக பிதாவான பெருமாள் சிரஸு எல்லா உலகங்களுக்கும் ஸ்வயம் தந்யமே.
உன் மாலைகளை யணிந்து அது இன்னும் அதிநயமாக தந்யமாகிறது.
வாஸனையின் அதிசயம் கிடைத்தது மட்டுமல்ல, தந்யையுமதிகமாயிற்று.
(2) ஆசையோடு தொடுத்த பூமாலைகள் ஸமர்ப்பிப்பது மட்டுமல்ல, பாமாலைகள் ஸமர்ப்பிப்பது மட்டுமல்ல,
ஓர் நாயனார் தன் கண்ணையே பிடுங்கித் தன் தேவனுக்கு அப்பினாரென்பர்.
அது பக்தியைக் காட்டினாலும் ஜுகுப்ஸா ரஸத்தையும் தரும்.
‘அஸிதேக்ஷணா’ என்று ஸீதைப் பிராட்டிக்கு ராகவனிலும் ஏற்றத்தைப் பணித்தார்,
இருவரையும் தராஸில் நிறுத்து அனுபவித்த ருஷி. “மையார் கருங்கண்ணிக் கமலமலர்மேற் செய்யாள்”.
தன் கருவிழியின் அரைக்கண் திருஷ்டிகளின் நீலகாந்திகளால் ஸ்நேஹமயமான கருநெய்தல் புஷ்பமாலையை
சிரஸில் ஸமர்ப்பிக்கின்றாள் போலும். ‘யாரிடம் மனத்திற்கும் கண்ணுக்கும் நிர்ப்பந்தமுளதோ, அவரை வரிப்பது ச்ரேயஸ்ஸு’ என்பர்.
மனமும் கண்ணும் இந்த வார் முடியில் மாலையாக பத்தமாயின. பெருமாள் தாமரைக் கண்கள் தாமரைப் பூமாலையை ஸமர்ப்பிக்கும்,
இவள் கண்கள் கருநெய்தல் மாலையை ஸமர்ப்பிக்கின்றன.
‘மீனப்பெருமானின் கண்கள் தாமரைக் காடுகளைச் சொரிந்தன’ என்ற அனுபவத்தை நினைக்கவும்.

தந்யே —
இதை முதலிலேயே பேசுவது அழகு. பெருமாள் தந்யர், பூயோதந்யர் (இன்னும் மேலும் மேலும் தந்யர்) என்கிறார்.
தந்யரென்று எத்தனை தரம் பேசினாலும் தகும். நம் பெருமாள் திருமுடிக்கு என்ன பாக்யம் கிடைத்தது!

ஸமஸ்தே ஜகதாம் —
உலகுக்கெல்லாம். இதை நடுவில் வைத்தது மிக அழகு. உலகுக்கெல்லாம் தந்யம், உலகுக்கெல்லாம் தகப்பன்.
கோதை விவாஹ விஷயத்தில் நம் ஸ்வாமியிடம் இத்துதியான பாமாலை கிடைத்ததும் பெருமாள் பாக்யம்.
அவரிடம் பிருதம் பெற்ற கவி ஸிம்ஹம்.

பிது: —
உலகுக்கெல்லாம் தகப்பனுடைய. ‘உலகுக்கோர் தனியப்பன் தன்னை’. இவரை மாலையிடுவதால் நீ
உலகுக்கெல்லாம் ஓர் தாயாகிறாய். விவாஹ க்ஷணத்திலேயே ஸர்வ லோகத்துக்கும் நீ தாயாகிறாய்.
“பத்துப்பிள்ளைகள் பெறுவாயாக” என்று பெரியோர் அதிசயமாக விவாஹத்தில் ஆசீர்வதிப்பர்.

உத்தமாங்கை: —
அவர் திருவடி உலகுக்கெல்லாம் தந்யம். அவர் திருமுடி ஸர்வேச்வர கிரீடம் தரிப்பது.
மௌளிபர்யாதம். அவரை ஸேவிப்பது மஹாபாக்யம்.

த்வ மௌளி மால்ய ஸம்பரணேன —
உன்னுடைய மாலைச்சுமையை வஹிப்பதால். மாலைச்சுமை, வாசனைச்சுமை, கோதையின் ஸ்நேகச்சுமை.
சுமை சுமப்பதால் தந்யமாவரோவென்று கேட்கலாம். இச்சுமை இன்பச்சுமை . இன்பமான வாசனைச்சுமை என்று பதில்.
‘பாரத்தைப் பரிப்பதால்’ என்னுமிடத்தில், ‘பாரத்தை அழகாக, இன்பமாக, புருஷார்த்தமாகச் சுமக்கிறார்’ என்பதைக் காட்ட
“ஸம்” என்று சேர்த்து “ஸம்பரணத்தால்” என்று பேசுவது மிகவழகு. ஸமன்வயஸூத்ரத்தில் “ஸம்” போல.

இந்தீவரஸ்ஜ —
கரு நெய்தல் பூ மாலையை. “இந்தீவரரக்ஷி” என்பர். கண்ணை இந்தீவரமாக (கருநெய்தல் புஷ்பமாக) ரூபணம் செய்வர்.
கண்களில் கருங்காந்திகள் நெய்தல் புஷ்பங்களாகின்றன. புஷ்பங்களுக்கு அன்பு ஸூத்ரமாகும்.
கண்கள் ஜ்யோதிஸ். ஸூர்யகிரணங்கள் கண்களுக்குள் புகுந்துள்ளனவென்பர்.
ஜ்யோதிர்மயமான கண்களிலிருந்து வரும் காந்திமாலை.

த்வதீயாநி — உன்னுடையவைகளான.

ஆகேகராணி — பாதி மூடிய கண்களால். அரைக்கண் திருஷ்டிகளான.

பஹுமானவிலோகிதாநி — பஹுமானத்தோடு கூடிய பார்வைகள்.

ஆதததீவ —
(நெய்தல் மாலையாக) ஆகின்றனபோல (மாலை ஸமர்ப்பிக்கின்றனபோல).
“பூய:” என்பதை இங்கேயும் சேர்த்து அந்வயிக்கலாம். பூமாலைகள் சிலவே. கடாக்ஷமாலைகள் ஏராளமானவை.
இப்படியும் அந்வயத்தைத் திருவுள்ளம் பற்றி 2 பாதிகளுக்கும் நடுவில் இம்மாலையை நடுநாயகமாக வைத்தது.

———–

ரங்கேச்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்திமபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதிகத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

வஸுதே — பூமிப்பிராட்டியே (விஷ்ணுபத்நியே); ரங்கேச்வரஸ்ய — ரங்கேச்வரனுக்கும்; தவ ச — உனக்கும்;
ப்ரணயாநுபந்தாத் — பரஸ்பர ஸ்நேஹ வெள்ளத்தால்;
அந்யோந்யமால்யபரிவ்ருத்திம் — ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொள்வதை;
அபிஷ்டுவந்த: — நன்றாய்த் துதிப்பவரான; ரஸிகா — ரஸிகர்கள்;
ந்யூநாதிகத்வஸமதா விஷயை: – தாழ்ச்சி உயர்த்தி ஸமத்வமென்ற கக்ஷிகளைப் பேசும்;
விவாதை: — விவாதங்களால்; த்ரிலோகம் — மூவுலகையும்; வாசாலயந்தி — ஒரே சப்தமாகச் செய்கிறார்கள்.

அம்மா பூதேவியே! ரங்கேச்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் போது
அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய
விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக் காரர்களாக்குகிறார்கள்.)

பூமியில் அவதரித்த கோதா தேவியே…..நீயும் ரங்கநாதனும், மாலைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி,
மாலை மாற்றிக்கொள்ளும்போது, சூழ இருக்கும் ரஸிகர்கள் /பக்தர்கள்,
உங்களில் ஒருவரைத் தாழப் பேசியும், ஒருவரை உயர்த்திப் பேசியும், இருவரையும் சமமாகப் பேசியும்,
இந்த ஆரவாரம் , உலகம் முழுவதும் பரவி, எதிரொலிக்கச் செய்கிறார்கள்.

அவதாரிகை

(1) 14 முதல் 7 சுலோகங்களால் கோதை மாலையைப் புகழ்ந்தார். இந்த விவாஹத்தில் ‘மாலை’ கடகராகும்.
உலகத்திற்குப் புருஷகாரமாகும் ஆண்டாளுக்கும் புருஷகாரமாகிற பெருமையையுடையது.
மாலையை எத்தனை புகழ்ந்தாலும் தகும். விவாஹம் சப்த பதங்களால் ஏற்படும். 7 சுலோகங்களால் மாலா வர்ணனம்.
ஆண்டாள் மாலையை மட்டும் புகழ்ந்ததை 7 சுலோகங்களோடு நிறுத்தி, விவாஹத்திற்கு முக்யமான அங்கமான
மாலை மாற்றுதலை வர்ணித்து விவாஹத்தைப் பூர்த்தியானதாகக் காட்டுகிறார்.

(2) இதுவரையிலும் கோதை கன்யாப்பெண்ணாயிருந்தாள். இப்போது பத்நியாகிறாள்.
“அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ” என்ற ச்ருதிக்கு விஷயமான பூமிப்பிராட்டியாகிறாள்.
இதைப்பற்றி இங்கே ‘வஸுதே’ என்று கூப்பிடுகிறாரென்ற ரஸத்தை அனுபவிக்கவேண்டும்.
‘ஈசானா’ என்ற பதத்திற்கு ஆண்டாள் என்று பொருள். இவரை, இந்த ரங்கேச்வரரை ஆண்டாள் — ஜகத: உலகத்தை ஆண்டாள்.

(3) விவாஹத்தில் கன்யையைச் சேர்ந்தவர் கன்யையை உயர்த்திப் பேசுவர். வரனைச் சேர்ந்தவர் வரனை உயர்த்திப் பேசுவர்.
உண்மையில் இருவரும் மஹிமையில் ஸமமென்று சொல்லக்கூடுமானாலும், அந்தந்த பக்ஷத்தார் அந்யோந்யம்
ஏற்றத் தாழ்ச்சியைப் பேசுவதும், இரைச்சல் போடுவதும், ரஸப் பேச்சுக்கள். அதெல்லாம் தத்துவமல்ல.;

ப்ரணயாநுபந்தாத்’, தங்கள் பரிவின் மிகுதியால், ரஸத்தின் மிகுதியால், ரஸிகர்களாகப் பேசுகிறார்கள்.

ரங்கேண்வரஸ்ய –அண்டர்கோன் அணியரங்கம் — புருஷஸூக்தத்தால் புகழப்படும் ஸர்வேச்வரனுக்கும்.

தவ ச — உனக்கும்

ப்ரணயாநுபந்தாத் —
ஸ்நேஹப் பெருக்கால். முன்பே பந்தம் (பதிபத்நீ ஸம்பந்தம்) உளதே.
இப்பொழுது கோதை என்ற கந்யையாக அவதரித்ததில் ஆசையோடு கோடித்த இந்த வதுவையில் ஸ்நேஹம் மிகப் பெருகியது.
இப்படி ஸ்நேஹப் பெருக்குக்காகவே அவதரித்து வதுவை கோடிப்பது.
அரங்கனும் இவரவதரிக்கப்போகும் திக்கை நோக்கிக்கொண்டே யிருந்தார்.
‘ப்ரணயாநுபந்தாத்’ என்பதை வாசாலந்தி’ என்பதற்குக் காரணமாகவும் அந்வயிக்கலாம்.
அப்படி உச்சாவசமாகத் தாழ்த்திப் பேசுவதும் ஸ்நேஹப்பெருக்கால்தான். நிந்திப்பதில் தாத்பர்யமேயில்லை.
ஸ்நேஹத்தால் மற்றொன்றைப் புகழ்வதில் மட்டும் தாத்பர்யம். நஹிநிந்தாந்யாயம்.

அந்யோந்யமால்யபரிவ்ருத்திம் —
ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்வதை. பெரிய பிராட்டியார் ஸ்தனசந்தனமாலையான
வைஜயந்தீ ஆண்டாளுக்கும், ஆண்டாள் மாலை திருவுடன் கூடிய பெருமாள் மார்புக்கும் சேருகிறது.
கழுத்திலுள்ள மாலைகளின் மாற்றம். பெருமாள் சிரஸிலேறிய மாலை இந்த மாற்றத்தில் வாராது.
அதன் ஏற்றத்தை மறுப்பாரொருவருமில்லை.

அபிஷ்டுவந்த: —
நன்றாய்த் துதிக்க ஆசைப்படுபவர். துதிக்கும் ஆசையால் அதிகமாகப் பேசுவது ஸஹஜமே.
ஒருவரைத் துதிக்கையில் அத்துதிக்காகவே மற்றொருவரைக் கொஞ்சம் தாழப்பேசுவதும் ஸஹஜமே.
இங்கே சத்ருப்ரத்யம் அழகு. ஹேதுப்பொருள். அதற்காகவே அடுத்தாற்போல் கிரியையும் வைக்கிறார்.

வாசாலயந்தி —
ஒரே சப்தகோஷமாக்குகிறார்கள். அதிகப் பேச்சுக்காரர்களாகிறார்கள்.
ஸத்யாய மிதபாஷிணம் என்றிருப்பவரையும் பஹுபாஷிகளாக அதிகப்ரஸங்கம் செய்யும்படி செய்துவிடுகிறார்கள்.
ஒரு கக்ஷியைக் குறைத்துப் பேசவே பேச்சு தடித்துவிடுகிறது.

வஸுதே —
அம்மா பூமிதேவியே! பூமி முழுவதையும் (மூவுலகையும்) இக்கலஹசப்தத்தால் உத்கோஷிக்கச் செய்கிறார்கள்.
அம்மா! நீ பூமிப்பிராட்டியானதால் பூமியிலுள்ளாரெல்லாரும் பெண்கக்ஷி. ஏகக் கூக்குரலாய் விடுகிறது.

ரஸிகா: — ரஸப்பேச்சுக்களம்மா, நிந்தைபோன்றதும் துதிகளேயம்மா. உன் நாயகனை இளப்பமாக்காது.
ஆகையால் நீ தாபப்படவிடமில்லை. உன்னையும் இளப்பம் செய்யாது.
ஆகையால் உன் நாயகனுக்கும் தாபத்திற்கு இடமில்லை. எல்லாம் ஒரே ஸ்நேஹரஸம்.
ஸ்நேஹப்பெருக்கு. உண்மையில் விரஸமான எண்ணமே ஒருவருக்குமில்லை.

த்ரிலோகீம் —
த்ரிபுவனகமனமான, த்ரிலோகேச்வரரான. தம்பதிகளின் விவாஹத்தில் மூவுலக ஜனங்களும் பேசுகிறார்கள்.
பெண்கக்ஷியோர், பிள்ளை கக்ஷியோர், மத்யஸ்தர் ஆகிய மூவரையும் முறையே
தாழ்ச்சி, உயர்த்தி, ஸமம் என்ற மூன்று கக்ஷிகளையும் பேசச் செய்கிறார்கள். மூவுலகையும் சப்தமயமாக்குகிறார்கள்..

ந்யூநாதிகத்வஸமதாவிஷயை —
ஒருவர் தாழ்த்தி, ஒருவர் உயர்த்தி. இருவரும் ஸமம் என்ற மூன்று கக்ஷிகளான.

விவாதை: —
விவாதங்களாலே. விவாஹமும், விவாதமும் ஸமர்களுக்குத்தான் சோபிக்குமென்பர்.
இந்த விவாஹத்தில் வதூவரர்கள் ஸமராயிருந்துதீர வேண்டுமாகையால் விவாதப்படுபவர்களும் ஸமர்களாகி
ஸமத்வக் கக்ஷியையே ஸித்தாந்தப் படுத்துகிறார்கள். .
முன் கக்ஷிகள் இரண்டும் பூர்வபக்ஷம். ஸமத்வம் ஸித்தாந்தம்.
துல்யகுணமான வதூவரர்களை ஒன்று சேர்த்து (ஸமமாகச் சேர்த்து) ப்ரஜாபதி நீண்டகாலமான
அபவாதத்தை நீக்கிக்கொண்டார் என்று சாகுந்தலம்.
‘துல்ய’ என்ற அடைமொழியோடு த்ருப்தியில்லாமல் ‘ஸமமாகச்சேர்த்து’ என்ற க்ரியாபதத்தையும் கவி வைத்தார்.
“மைச்சேர்த்தி அரிது அரிது.” (21)

———–

துர்வாதளப்ரதிமயா தவ தேஹகாந்த்யா:
கோரோசனாருசிரயா ச ருசேந்திராயா: |
ஆஸீதநுஜ்ஜித சிகாவனகண்டசோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் || .22.

மதுவைரிகாத்ரம் — வேதத்தைத் திருடிய மதுவென்னும் அஸுரனுக்குச் சத்ருவான மதுஸூதனனுடைய திருமேனியானது;
துர்வாதளப்ரதிமயா — அருகம்புல்லைப்போல் பசுமையான;
தவ தேஹகாந்த்யா — உன் திருமேனியொளியாலும்;
கோரோசனாருசிரயா — கோரோசனையைப்போல் பொன்னிறமான; இந்த்ராயா — லக்ஷ்மியின்;
ருவா ச — காந்தியாலும்; அநுஜ்ஜிதசிகாவள கண்டசோபம் –மயில் கழுத்தின் சோபையை விடாததாகி;
ப்ரணமதாம் — அடிபணிபவர்க்கு; மாங்கள்யதம் ஆஸீத் — மங்களத்தை அளிப்பதாயிற்று.

மதுஸூதனனுடைய திருமேனியானது அருகம்புல்லைப் போலப் பசுமையான உன் திருமேனியின் பச்சைக் காந்தியாலும்,
கோரோசனையைப் போன்ற லக்ஷ்மீ தேவியின் பொன்னிறத்தாலும், மயிலின் கழுத்தின் சோபையை விடாமல்
வஹித்துக் கொண்டு அடிபணிபவருக்கெல்லாம் மங்களத்தை அளிக்கிறது.

ஹே…கோதாப் பிராட்டியே–
பெரிய பிராட்டியின் நிறம் பொன் நிறம்; உன்னுடைய நிறம் அருகம்புல் பச்சை; பகவானின் நிறம் நீலம் ;
பகவானை சேவிப்பவர்கள், திருமேனியில் ,மயில் கழுத்து நிறம் —-அதாவது, பொன் நிறம், அருகம்புல் நிறம் மற்றும் நீல நிறம் சேர்ந்து—
மயில் கழுத்துச் சாயல் —திருமேனியில் விளங்கிட, மங்கலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
திருக்கல்யாணோத்ஸவம் முடிந்து ,நீங்கள் ஏக ஆஸனத்தில் எழுந்தருளி இருக்கும் பாங்கை வெளிப்படுத்துகிறது.

அவதாரிகை

மாலைமாற்றி விவாஹம் நடந்து, கோதையும் பெரியபிராட்டியாரோடு விஷ்ணுபத்நியானாள்.
பிராட்டிமாரிருவரும் உபய நாச்சிமாராய் இருபக்கமுமிருக்கிறார்கள்.
அவர்கள் காந்திகள் பெருமாள் கரிய திருமேனியில் பரவுகின்றன. கோதையின் நிறம் அருகம்புல்லைப் போன்றது.
பெரியபிராட்டியார் நிறம் பொன்நிறம், கோரோசனையைப் போன்றது.
இருபக்கமும் இருவித காந்திகளும் பெருமாள் நீலத்திருமேனியில் இடைவிடாமல் பரவுகின்றன.
நீலகண்டமென்னும் மயிலின் கழுத்தைப்போல பெருமாள் திருமேனி முழுவதும் ஆகின்றது.
விவாஹத்தில் தம்பதிகளைப் பார்வதீபரமேச்வர மிதுனத்திற்கு ஒப்பிடுவார். அவர்களுடம்புமொன்றாயுளது.
காடோவகூடமாகில் பிரிவுக்கே ப்ரஸக்தியில்லாமல் இருக்கும்.
உபய நாச்சிமார் திருமேனிக் காந்திகளும் பெருமாள் திருமேனியும் ஒன்றாகச் சேர்ந்து பிரியாச் சேர்த்தியாகின்றன.
நீலகண்டரை மூன்றாவது அடியிலும், கௌரியை இரண்டாமடியிலும் ஒருவாறு ஸூசிக்கிறார்.
‘மஹேச்வரம் பர்வதராஜ புத்ரீ’ என்று பாஞ்சாலீஸ்வயம்வரத்தில் த்ரௌபதீ அர்ஜுனனை மாலையிட்டதை வ்யாஸர் வர்ணித்தார்.
‘அநுஜ்ஜித’ என்று நீங்காச் சேர்த்தியை ஸூசிக்கிறார்.
நீலகண்டருக்குக் கழுத்து மட்டும் நீலம்; மயிலுக்குக் கழுத்து இப்படி விசித்ர வர்ணமாயிருக்கும்.
பெருமாள் திருமேனி முழுதும் தேவிமார் காந்திகளால் மயில் கழுத்துக்கொப்பாகிறது.
சிவசப்தம் மங்களத்தைச் சொல்லும். நீலகண்டசோபையை உடைய திருமேனி மங்களமாகிறது என்று ஓர்வித வேடிக்கை.
ஈச்வரர் இத்தம்பதிகளுக்குப் பௌத்திரர். அவர் புத்ரர்களான அருகம்புல்லை விரும்பும் பிள்ளையாரும்,
மயில்வாஹனரான கார்த்திகேயரும் ப்ரபௌத்திரர்கள்.
‘சதுர்முகர் ஈச்வரர் முதலியவராகிய புத்திர பௌத்திரர்களோடு கூடிய ஸீதா ஸமேதரான ராமனென்னும்
க்ருஹமேதிக்கு நமஸ்காரம்’ என்று ரகுவீரமங்கள கத்யம் ஸாதித்ததை இங்கும் நினைக்கவேணும்.
‘சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக மெவ்வாவியீரும்’

தூர்வாதளப்ரதிமயா —
அருகம்புல்லைப் போலொத்த பசுமையான. இது மங்களத்ரவ்யம். விக்நேச்வரப்ரியம், விஷ்வக்ஸேநாராதன ஸூசகம்.

தவ தேஹகாந்த்யா — உன் திருமேனி காந்தியால்;

கோரோசனாருசிரயா — கோரோசனை வர்ணமான

இந்திராயா:ருசாச —
லக்ஷ்மீதேவியின் காந்தியாலும்; கோதையும் ஓர் பக்கத்தில் பத்நியாகக்கூட நிற்பதில் லக்ஷ்மீதேவியின் ருசியையும் ஸூசிக்கிறார்.
இந்த ஸந்தோஷத்திற்கு இத்தனை காலமாய்க் கோடித்துக் கொண்டிருந்ததால் விவாஹ க்ஷணத்திலேயே
தன்னோடு ஜோடியாக மற்றோர் பக்கத்தில் நிறுத்தி வைத்து சந்தோஷித்தான்.
ரோசனா, ருசோரா, ருசா என்று மூன்றுதரம் ருசியைக் காட்டும் சப்தங்கள். ருசிம் — ராதி, ருசியைக் கொடுக்கிறது, ருசிரம்.

ஆஸீத் — ஆயிற்று.

அநுஜ்ஜித சிகாவளகண்டசோபம் — ‘சிகாவள’ என்பது மயில், நீலகண்டம். அதன் கழுத்தின் சோபையை விடாமல்.

மாங்கள்யதம் —
திருமேனியே மங்களத்தையளிக்கிறது. பெருமாள் திருமேனியே ஆச்ரிதருக்கு மாங்கல்யத்தைக் கொடுக்கும்.
பார்வதீச்வரர்கள் மாங்கல்யத்தை, தாம்பத்யத்தை, மங்களத்தைக் கொடுப்பதென்பதும்
பெருமாள் அவர்களுக்குள்ளிருந்து கொடுப்பதால்தான்.
பெருமாள் திருமேனியுடன் உபயநாச்சிமார் திருமேனிக்காந்திகள் பிரியாமல் சேர்ந்ததும்,
அவர்கள் திருமேனிகள் கூடிய சுபாச்ரயம் ஸகல மங்களங்களையும் அளிக்க யோக்யமாயிற்று.
இத்தம்பதிகள் பிரியாமல் சேர்ந்தே ஸகல ச்ரேயஸ்ஸுகளையும் அளிப்பவர்.
‘மாங்கல்யம் தந்துநாநேந’ என்ற ச்லோகத்தையும் ஸூசிக்கிறார். மாங்கல்யத்தைக் கொடுக்கும் நூலென்று பொருளையும் ஸூசிக்கிறார்.

மதுவைரிகாத்ரம் —
இதனால் சில அழகிய பொருள்களின் வ்யஞ்ஜனம்.
(1) வேதங்களாகிய கண்களையிழந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைத் திருப்பிக் கொணர்ந்து
அவருக்கு ஞானப்ரதானம் பண்ணி மயர்வை நீக்கிய அவதாரம். புத்ரனுக்கும் லோகத்திற்கும் வேதமளித்த அவதாரம்.
இதனால் ப்ரஹ்மாவின் நினைப்பையும் இங்கே சேர்த்து பௌத்திர ப்ரபௌத்திரர்களோடு (பேரர், கொள்ளுப்பேரரோடு)
புத்திரரையும் சேர்த்துத் தம்பதிகளை க்ருஹமேதிகளாக அநுஸந்திப்பது.
‘புத்திரரைப் பெற்று’ என்று ஆஸீர்வதிப்பர். ப்ரபௌத்திரர் பர்யந்தம் இங்கே காட்சி.

(2) சரணாகதி ச்லோகமடங்கிய கீதை பாடினதும் மதுசூதனன் திருவாக்கு.
கண்ணில்லாத புத்திரர்களான நமக்கு கீதோபநிஷத்தை அருளிய திருமேனி.
வெகுகாலமாக நஷ்டமான யோகத்தைத் திருப்பிக்கொண்டுவந்து உபதேசித்தது.
கீதாசார்யன் திருமேனி சரணாகதியை உபதேசித்தது போதுமோ? அநுஷ்டானமில்லையாயின் அப்ரமாணமென்பரே!
பிராட்டிமார் சேர்த்தியில் காடோபகூடமான தசையில் விசிஷ்டத்திலன்றோ பரத்தை சமர்ப்பிக்கவேணும்!
கோதையாகிய பக்கபலமும் சேரவே பெருமாள் தப்பியோட வழியில்லை.
பெரிய பிராட்டியாருக்கு ப்ரஜா ரக்ஷணத்தில் பார்ச்வபலம் (பக்கபலம்) சேர்ந்துவிட்டதும்
அவனுடைய ருசிக்கு ஸந்தோஷத்திற்கு அளவில்லை.

(3) நாம் ஜ்ஞானவிரோதிகள், அஜ்ஞானக் களஞ்சியங்கள். மதுவென்னும் அஸுரனைச் சீறியதுபோல,
நம்மையும் சீறுவது உசிதம். இது ‘வைரி’ என்பதால் ஸூசிக்கப் படுகிறது.
பிராட்டிமார் இருபக்கமும் இருக்கவே அவர்கள் காருண்யப்ரபை படியவே அச்சீற்றம் பரந்துபோகிறது.

(4) இம் மூவர் சேர்த்தியில் வணங்கி ஆதி ராஜ்யத்தை அநுபவித்தார்களென்று அடுத்த 23ம் சுலோகத்திலும்,
ஆத்மபரம் ஸமர்ப்பிப்பதற்காகப் புருஷகாரத்தை 24லிலும்,
பெருமாள் ஸ்வாதந்த்ரியத்தைக் குறைத்து அநந்தாபராதங்களைப் போக்குவதை 25லிலும்,
‘ப்ரபத்ய’ என்று ப்ரபத்தியை 26லிலும் பேசிப் போவதையும் கவனிக்க.

(5) ப்ரஹ்மருத்திராதிகளைத் தம் புத்திர பௌத்திரர்களாகத் தம் திருமேனியிலே சேர்த்துக் கொண்டிருப்பதாக,
விசிஷ்டமாகப் பெருமாளை அனுபவிப்பார் மயர்வற மதிநலமருளப் பெற்றவர்.
‘புரமொரு மூன்றெறித்தமரர்க்கு மறிவியந்தரனயனென வுலகழித்தமைத்தனனே’ என்று துடக்கத்திலும்,
கடைப்பத்தில் ‘சடையானைப்பாகத்து வைத்தான் தன்பாதம் பணிந்தேனே’ என்றும் பாடி,
கடைத்திருவாய்மொழியிலும் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்று பாடியுள்ளது.
‘உலகுக்கோர் தனியப்பனை’ என்பதை ‘ஸமஸ்த ஜகதாம் பிது:’ என்று பாடி அதே பாசுரத்தில்
‘பிரமனப்பனை யுருத்திரனப்பனை முனிவர்க்குரியவப்பனை யமரரப்பனை’ என்று முன்னுள்ளதை இங்கே அனுஸரிக்கிறார்.
எல்லோர்க்கும் அப்பன் என்றதால் ‘தமியனேன் பெரியவப்பனே’ என்றபடி எனக்கும் பிதாவென்று கருத்து..
என் தகப்பன் விவாஹம், என் தாய் விவாஹம். என் தந்தை விவாஹத்தில் நான் மங்களம் பாடுகிறேன்.
இதென்ன பாக்யம்! என்ன ஆச்சர்யம்! ‘ஸர்வான் தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்விந:’ என்றபடி
இந்தத் தம்பதிகளின் சேர்த்தியின் மங்களத்திற்காக எல்லாத் தேவரையும் நினைக்கலாம். கால் கட்டலாம்,
பிராட்டி அலங்கரிக்கும் திருமேனியில் புத்ரபௌத்ராதிகளான அவர்கட்கும் பாகமுண்டு.

(6) ‘மதுவைரி’ என்றதால் மறையை அனுக்ரஹித்த உபகாரத்தைக் காட்டுகிறது.
விஷ்வக்ஸேநரான ஆழ்வார் மூலமாகவும் இப்பொழுது பத்நியாகச் சேர்ந்த கோதை மூலமாகவும்
தமிழ்மறைகளை அநுக்ரஹிக்கும் உபகாரமும் இங்கே ஸூசிக்கப்படுகிறது.
ஸம்ஸ்க்ருத வேதங்களைக் கொணர்ந்தது, வேதம் தமிழ் செய்த,
தெளியாத மறைநிலங்கள் தெளியச்செய்த இத்தமிழ்மறைகளால் ஸபலமாயிற்று.

————-

அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகமப்ரஸூனை:
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதச்சிரம் நிரவிசந் நிஜமாதிராஜ்யம்
மாந்யா மநுப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே || .23.

மாத: — தாயே!; மாந்யா — பூஜ்யர்களான; தே — அந்த; மஹீக்ஷித: — அரசர்களான;
மநுப்ரப்ருதயோபி — மநு முதலியவரும்; த்வயா — உன்னோடும்; கமலயாச — தாமரையாளோடும்;
ஸமேயிவாம்ஸம் — (ஸமேதரான) கூடிய; தாநம் — நாதனை; அர்ச்யம் — அர்ச்சிக்க யோக்யரை;
நியமை: — நியம நிஷ்டைகளோடு; நிகமப்ரஸூனை: — மறைகளான புஷ்பங்களைக் கொண்டு;
ஸமர்ச்ய — நன்றாக அர்ச்சித்து; சேர்த்தியில் சேர்த்து அர்ச்சித்து; நிஜம் — தங்கள் ஸ்வந்தமான;
ஆதிராஜ்யம் — உலகுக்கு ஆதிபத்யத்தை; சிரம் — நீடூழி காலம்; நிரசிஶந் — அநுபவித்தார்கள்.

அம்மா! பூஜ்யர்களான அந்த மஹா மஹிமையையுடைய மநுமாந்தாதா முதலியவர்களும் உன்னோடும்
தாமரையாளோடும் கூடிய அர்ச்சிக்க யோக்யமான நாதனை நியமங்களில் நிஷ்டராய்,
வேதமந்த்ர புஷ்பங்களால் நன்றாகச் சேர்த்து அர்ச்சித்துத் தங்கள் ஆதிராஜ்யத்தை நீடூழிகாலம் அநுபவித்தார்கள்.

கோதாப் பிராட்டியே….நீ, ரங்கநாதனை அடைந்த பிறகு, அவன் உன்னோடும், எப்போதும் பிரியேன் என்று சொன்ன
பெரிய பிராட்டியோடும் கூடி நின்று, அனைவர்க்கும் நாதன் ஆனான்.
எல்லாரும் ஆராதிக்கும்படி, அர்ச்சாவிபவத்தில் , எழுந்தருளி இருக்கிறான். இக்ஷ்வாகு வம்ஸத்தைச் சேர்ந்த,
மனு, மாந்தாதா முதலிய ராஜாக்கள்–மகான்கள், நியமத்தொடு வேதங்களாகிய மந்திர புஷ்பங்களினால், உன்னை அர்ச்சித்து,
பெரியதான ராஜ்யத்தை அடைந்தார்கள். காலத்தினால், ரங்கநாதன் முன்னும், நீ பின்னும் எண்ண வேண்டாம்.
பூமியின் உருவில் நீ என்றும் ரங்கநாதனுடன் இருப்பவளே!

அவதாரிகை

தமிழ்மறை பாடிய கோதையோடும் லக்ஷ்மீதந்த்ரம் பாடிய லக்ஷ்மீயோடும் கூடிய (வேதங்களை மீட்டு உபதேசித்து கீதை பாடிய)
மதுஸூதனன் திருமேனியைப் பாதம் பணிபவருக்கு மங்களங்கள் கிடைக்குமென்றார்.
இச்சேர்த்தியைப் பூஜித்து மநு முதலிய ரவிகுலத்தரசர் தங்கள் ராஜ்யத்தை இவர்களுக்கு சேஷமாக அநுபவித்தார்கள்.
மதுஸூதனன் அக்குல கூடஸ்தரான விஸ்வானென்னும் ஸூர்யனுக்கு மோக்ஷோபாயத்தை உபதேசித்து,
இப்படி உபதேச பரம்பரை வந்ததையும் ‘மநு முதலியவர்கள் அர்ச்சித்தார்கள்’ என்பதால் காட்டுகிறார்.
ஸூர்யகுல பரம்பரை, நம் குரு பரம்பரை, இச்சேர்த்தியின் சிஷ்ய பரம்பரை.
திவ்ய மிதுனச் சேர்த்தியை மங்களகாமர்கள் ஆத்மஜ்ஞானரான ஆசார்யராக அர்ச்சிப்பது உசிதம்.
மநு முதலியவரும் அப்பரம்பரையில் சேர்ந்தவர்கள். மநுகுலமஹீபாலர் உபயநாச்சிமாரோடு கூடிய இப்பெருமாளை அர்ச்சித்தவர்.
மைதிலீரமண காத்ரத்தால் பெருமாளும் பிராட்டியும் தாமாகிய இச்சேர்த்தியை அர்ச்சித்து ராஜ்யமாண்டார்கள்.
ஈச்வரமிதுனத்திற்கும் அர்ச்யமும் மங்களமளிப்பதுமான சேர்த்தி இது. ‘அங்கம்சேரும் பூமகள் மண்மகளாய்மகள்.’

அர்ச்யம் —
முன் ச்லோகத்தில் சொன்ன விசிஷ்டம் அர்ச்சிக்கத் தக்கது. அச்சேர்த்தியில் செய்யும் அர்ச்சனை பலத்தையளிக்கும்.
சேர்த்தியை முன் ச்லோகத்தில் ஸேவித்ததும் உடனே அர்ச்சனை செய்வது உசிதம்.
அர்ச்சனை செய்வதை உடனே பேசுகிறார். முதலில் பேசுகிறார்.

ஸமர்ச்யம் —
நன்றாயர்ச்சித்து. ‘ஸம்’ என்பதற்கு ‘ஒன்று சேர்த்து’ என்றும் பொருள்.
ஒன்று சேர்த்து அர்ச்சிப்பதே சீர். தம்பதி பூஜை.

நியமை: —
பக்தியோகத்திற்குச் சக்தர்களாதலால் ஸகல வைதிக நியமங்களோடு கூட பக்தியை அனுஷ்டிக்கிறார்கள்.,
தயை, க்ஷமை, சாந்தி முதலிய ஆத்மகுண நியமங்களான புஷ்பங்களாலும்.

நிகமப்ரஸூனை: —
வேதமந்த்ர புஷ்பங்களால். நிகம கல்ப வ்ருக்ஷத்தின் மந்த்ரங்களான புஷ்பங்களால்.
வேதங்களிலிருந்து பிறந்த (வேதங்கள் சொல்லும்)எல்லா நியமங்களோடும் என்றும் கொள்ளலாம்.
லகுவான சரணாகதியைக் காட்டிலும் வேற்றுமை. ‘நிகமம்’ என்னும் கடைவீதி புஷ்பங்களிலும் வைஜாத்யம்.
நிகமமென்னும் வேத புஷ்பங்களோடு மற்ற உயர்ந்த புஷ்பங்களும் சேரட்டும்.

நாதம் —
திருநாமத்தில் ஏக தேசத்தைச் சொன்னாலும் முழுப் பெயராகும். ‘ரங்கநாதன்’ என்பதை ‘நாதன்’ என்கிறார்.
தேவிமாருக்கு நாதனென்பதையும் காட்டவேணும்.
‘யாரை அர்ச்சித்து சுபத்தை, மங்களத்தை மானவர்கள் அடையக்கூடும்’ என்று தர்ம்புத்திரர் பீஷ்மரைக் கேட்டதற்கு
‘புண்டரீகாக்ஷனை ஸ்தவங்களால் பக்தியோடு ஸதா காலமும் அர்ச்சிப்பதிலும் மிக்க தர்மமில்லை.
மங்களங்களுக்கெல்லாம் மங்களமும், தைவதங்களுக்கெல்லாம் தைவதமுமான எல்லா உலகத் தாதையான
ஜகந்நாதனை ஸஹஸ்ரநாமார்ச்சனை செய்வது நலம்’ என்று உபதேசித்தார்.
அந்த ஜகந்நாதனை ‘நாதன்’ என்கிறார். அவர் மங்களமங்களர், தேவதேவனென்றார் முன் ச்லோகத்தில்.
அர்ச்யம்’ என்று பீஷ்மர் உபதேசித்த ஸஹஸ்ரநாமார்ச்சனையை இங்கே முதலிலேயே பேசுகிறார். ‘

ஸ்ரீச: ஸ்ரீத: ஸ்ரீநிவாஸ:’ என்று அக்கிழவரும்,
‘தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குமுணர்வு’ என்ற உறுதியையே கொண்டவர்.
‘ஸ்ரீசன் — ஸ்ரீயை அளிப்பவன்’, ஸ்ரீத: என்பதற்கு ‘மாங்கள்யத:’ என்பது பொருள்.
இத்தனையும் ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது. ரஸிகர் மனதின் ஸம்வாதமே ப்ரமாணம்.
‘மானவர்கள்’ என்றார் தர்மர். மானவர்க்கும் தாதையான மநு முதலியவர் இப்படி அர்ச்சித்து
மங்களமடைந்ததை இங்கே பேசுகிறார். ‘மனோர்ஜாதா: மானவா’ நாதம் — ரங்கநாதனை ,
ஜகந்நாதனை, உங்கள் ப்ராணநாதனை.

த்வயா கமலயா ச —
உங்களிருவரோடு. ‘உங்களிருவராலும் நாதன் ஜகந்நாதனாகிறான்’ என்னும் ஓர் அந்வயம் சேர்க்க வேணும்.
‘ச்ரத்தயா தேவோ தேவத்வமச்னுதே’, ‘ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ’.
வேதம் ஓதிய க்ரமத்தை அனுஸரித்து பூமியாகிய கோதையை முன்னே வைத்தார்.
‘கமலயா’ என்று ‘தாமரையாள் கேள்வன் ஒருவனையே’ என்னும் ஆழ்வார் ஸம்ப்ரதாயத்தைக் காட்டுகிறார்.

ஸமேதிவாம்ஸம் —
‘ஸம்’ என்பது ஏகீகாரம் செய்யும் (ஒன்றாக்கும்) பொருளுடையது. தேவிமாரோடு கூடி ஒன்றேயாகி. விசிஷ்டம் ஒன்றே.
இந்த ப்ரயோகம் வைதிகமானது. மந்த்ர புஷ்பங்களைக்கொண்டு அர்ச்சிக்கும் சேர்த்தியைச்
சாந்தஸ ப்ரயோகத்தாலேயே பேசுவதும் அழகு. ப்ரகரணத்திற்கேற்றது.
பாலகாண்டம் முடிவில் விவாஹமானதும், ஸீதை கூடிய ராமனை ‘தயா ஸமேயிவாந்’ என்று ருஷி வர்ணித்ததை
இங்கே ‘த்வயா ஸமேயிவாந்’ என்று பேசுகிறார். இன்னுமொரு ரஸம் உண்டு.
‘கதா ஸீமேஷ்யாமி பரதேந த்வயா ச’ என்று லக்ஷ்மணனைப் பார்த்துப் பேசினவிடத்திற்போல
பிரியாமல் கூடவே யிருக்கும் லக்ஷ்மியும் கோதையோடு கூடச் சேருங்கால் ஓர் புதுச் சேர்த்தி போலாகின்றாள் என்பது ரஸம்.
கோதை கல்யாணம் லக்ஷ்மீ கல்யாணமுமாகின்றது.

மாத: —
எல்லா ப்ராணிகளுக்கும் அவ்ய்யமான பிதா. ;
நாம் மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்தாலும் அவன் மாறாத பிதா’.
அப்பிதாவுக்குப் பத்நியான நீ எல்லோருக்கும் தாய் என்பதில் என்ன தடை?

சிரம் —
தீர்க்க காலம். உங்கள் சேர்த்தியை அர்ச்சித்துக் கொண்டேயிருந்தால்
இம்மண்ணுலகும் பொன்னுலகே. அயோத்திமாநகரும் திருவிண்ணகரான அயோத்தியே.

நிரசிஶந் — ஸம்பூர்ணமாய் அநுபவித்தார்கள்.

நிஜம் ஆதிராஜ்யம் —
அவர்கள் ராஜ்யம் ஸர்வாதிகமான அகண்ட பூமண்டலாதி ராஜ்யம். அது அவர்களுக்கு ஸொந்தமாயினும்,
“ஸகலம் தத்தி தவைவ மாதவ”,
‘உன் சேஷித்வ விபவத்திற்கு வெளிப்பட்டதைக் கண்ணெடுத்தும் பாரேன்’ என்றபடி
உங்களுக்கு சேஷமாக அனுபவித்து இன்புற்றார்கள்.

மாந்யா மநு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே —
பூஜ்யர்களான மனு, இக்ஷ்வாகு முதலியவர்கள் பூஜித்தார்கள்.
மநு ப்ரப்ருதிபிரமாந்யை:’ வைவஸ்வதோ மநுர்நாம மாநநீயோ மநீஷிணாம்!
ஆஸீத் மஹீக்ஷிதாமாத்ய:’ ப்ரணவஶ்சந்தஸாமிவ’ என்ற காளிதாஸ ச்லோகங்கள் இங்கே ஸ்வாமி நெஞ்சிலோடுவது திண்ணம்.
அதே பதங்களை அமைத்துள்ளது.
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் என்னுமதும் காளிதாஸர் த்ருஷ்டாந்தப் பணிப்புக்குச் சேரும்.
ரங்கம் ப்ரணவம். ‘மனு சொன்னதெல்லாம் ஔஷதம்’ என்றது வேதம்.
மனு ஆசிரியர் இச்சேர்த்தியைத் தாம் அர்ச்சித்து அவ்வாசாரத்தில் நம்மை நிலைநாட்டுகிறார்.
‘ஆசாரே ஸ்தாபயதி ஸ்வயம் ஆசரதே’ .23.

——–

ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமானே |
பார்ச்வே பரத்ர பவதீ யதி தஸ்ய நஸ்யாத்
ப்ராயேண தேவி வதனம் பரிவர்த்திதம் ஸ்யாத் ||–24-

தேவி — கோதாதேவியே!; ஆர்த்ராபராதிநி — பச்சையான அபராதத்தைச் செய்து ஈரங்காயாத;
ஜநே — ஜனத்தை; அபிரக்ஷணார்த்தம் — நன்றாய் உஜ்ஜீவிப்பதற்காக; ரமயா — லக்ஷ்மீதேவியால்;
ரங்கேச்வரஸ்ய – ரங்கநாதனுக்கு; விநிவேத்யமாந்யே — சிபாரிசு செய்யும்போது; தஸ்ய – அவருடைய;
பரத்ர பார்ச்வ – மற்றோர் பக்கத்தில்; பவதீ — நீர்; யதி ந ஸ்யாத் — இல்லாமற்போனால்;
வதனம் — அவருடைய திருமுகம்; ப்ராயேண – அனேகமாக (மிகவும்); பரிவர்த்திதம் ஸ்யாத் — திரும்பியேயிருக்கும்.

பிழைப்பதையே ஸ்வபாவமாகவுடைய நாங்கள் குற்றங்கள் இன்னமுலராமல் ஈரமாய்ப் புதியதாயிருக்கையிலேயே,
உன்னைப் புருஷகாரமாகப் பணிந்ததும், எங்களை ரங்கேச்வரனுக்குச் சிபாரிசு செய்யும் போது,
அவருக்கு மற்றொரு பக்கத்தில் நீ இல்லாமல் போனால், அவர் முகம் (அந்தப் பக்கத்தில்) திரும்பியே இருக்கும்.

ஹே…தேவி.. நீ எங்களைக் காப்பாற்றுகிறாய் …ஜீவன், கணக்கிலாப் பாவங்களைச் செய்து, பெரிய பாவியாகி கஷ்டப்படுகிறான்.
அவன் செய்த பாவங்கள் , அவனைத் துன்புறுத்தும்போதே, அவனைக் காப்பாற்றுங்கள் என்று பெரிய பிராட்டி
எம்பெருமானின் வலதுபுறம் நின்று விண்ணப்பிக்கிறாள் . அது தகாத வேண்டுகோளாகப் படுகிறது;
எதிரே திருமுக மண்டலத்தைத் திருப்புகிறான்; பகவானுக்கு எதிரே அபராதிகள்; அவர்களைப் பார்க்க மனம் இசையவில்லை ;
இடது பக்கமாக முகத்தைத் திருப்புகிறான்; ஹே…கோதா.. நீ அங்கே நின்று , நீயும் அவனை வேண்டுகிறாய்;நீ,
அங்கு , நித்ய வாஸம் செய்வதால்தான் —பகவானுக்கு இடப்புறம் நின்று பகவானை வேண்டுவதால் தான்,
அந்தக் கார்யம் அனுகூலமாகிறது; நாங்கள் ,பகவானின் க்ருபையைப் பெற்றோம்.

அவதாரிகை

(1) மனு முதலியவர்கள் சக்தர்கள். பக்தியோக நிஷ்டர்கள். வேதநியமங்களையெல்லாம் அனுஷ்டித்து
உபாஸனத்தை சமதமதிருணபூர்வணராய் அனுஷ்டித்தார்கள். மாந்யரான அவர்களுக்கு இச்சேர்த்தி உபாஸ்யம்.
அசக்தர்களான பேதை ஜனங்களுக்கு இச்சேர்த்தி ப்ரபத்தவ்யம். பெரியபிராட்டியாரே புருஷகாரமாவதற்காக
அத்தாயைச் சரணம் புகுந்ததும், அன்று செய்த புதுக்குற்றங்களையும் கவனியாது பெருமாளுக்குச் சிபாரிசு செய்கிறாள்.
‘மாதர் மைதிலி’ என்ற ச்லோகத்தில் ‘ஆர்த்ராபாரதா:’ என்று ராக்ஷஸிகளைப் பட்டர் வர்ணித்தது நெஞ்சிலோடுகிறது.

(2) தேவிமாரிருவரோடும் ஒன்றாகக் கூடினார் என்றார் முன் ச்லோகத்தில்.
ஒருவனுமொருத்தியும் ஒன்றுகூடி ஒற்றிருக்கலாம்.. பார்யாத்வயமெப்படி ஸர்வகாலமும் ஒன்றுகூடி ஒன்றாயிருப்பது.
அனேக ஸபத்நிகள் வெவ்வேறு திக்குகளில் க்ருஹபதியை இழுத்து ஹிம்ஸிப்பதுபோல’ என்றாரே சுகர்.
பெருமாள் இரண்டு பத்நிகளிடமும் ப்ரியமாக இருக்கட்டும். பத்நிகளொருவருக்கு ஒருவர் கலஹப்படாரோ?
பத்நியால் பெரியபிராட்டியாருக்குச் சிறந்த பக்கபல மேற்படுகிறதென்று அழகாக வர்ணிக்கிறார்.
அற்புதமான ரஸங்களுள்ளதைக் காட்டுவோம்.

ஆர்த்ராபராதிநி அபி —
நெஞ்சில் ஈரமில்லை. ஈரச்சொற்களான ஆழ்வார்கள் தேன்மொழிகளை ரஸிப்பதில்லை.
நெஞ்சு சுஷ்கசுஷ்கம். மனோவாக் காயங்களால் புதிதுபுதிதாய்க் குற்றங்களைச் செய்த வண்ணமாயுள்ளோம்.
அபராதம் செய்த கை ஈரமுலறுவதன் முன்னமே அம்மா காப்பாற்றென்கிறோம். அப்படிக்கொத்த நம்மையும்.

ஜநே — அசோகவனத்து ராக்ஷஸிகளைப்போன்ற ஜனமாயினும்

அபிரக்ஷணாரத்த்ம் —
நன்றாக அபிமுகமாக்கி ஸர்வோத்கிருஷ்டமான ரக்ஷணத்தைச் செய்யவேண்டுமென்று.
ஆபிமுக்யத்தை அளித்து ஸ்வஜனமாக்கிக் கொள்ளவேண்டும் என்று.
‘ஸ்வஜநயஸி’ (ஸ்வஜனமாக்குகிறாய்) என்ற பட்டரது அனுபவத்தை நினைக்கிறார்.
அபராதி ஜனத்தை விரோதி ஜனத்தை ஸ்வஜனமாக்க என்பது கருத்து.
இப்படி விரோதி ஜனத்தினிடமும் அபிமுகமாகி ரக்ஷிக்க ப்ரார்த்திப்பதில், தனக்கே பதியின் ஆபிமுக்யத்தை
இழக்கக்கூடிய அபாயம் வருவதாயிருக்கிறதென்று இந்த ச்லோகத்தில் அழகாகக் காட்டப்படுகிறது.
என் பக்கத்திலிருந்து திருமுகத்தைத் திருப்பி மறுபுறத்தில் அபிமுகமானாலும் ஆகட்டும்.
எப்படியாவது குழந்தை விஷயத்தில் அபிமுகரானால் போதும். ஸபத்நியிடம் அபிமுகமாகத் திரும்பினாலும் திரும்பட்டும்.
நான் குழந்தையைக் காப்பாற்றச் சிபாரிசு செய்தே தீருவேன்.

ரங்கேச்வரஸ்ய –
ப்ரணவ ப்ரதிபாத்யமான ஸர்வேச்வரன். ஈச்வரனென்றால் ஸம்ஸார தந்த்ரத்தை வஹிப்பதில்
தண்ட தத்வ நியமத்தைக் காட்டுகிறது. பத்நீ வல்லபைதான். ஆயினும் ஸாம்யநிலையை விடலாமோ?
வைஷம்யத்தையும் பக்ஷபாதத்தையும் ஈச்வரன் பெண்டாட்டி பேச்சிற்காகக் கைப்பற்றலாமோ?
இந்த க்ஷணத்திலேயே செய்த ஈரமான (புது) அபராதத்தோடே என்னெதிரிலிருக்கிற
விரோதி ஜனத்தை ஈச்வரனான நான் தண்டிக்கவேண்டாவோ?

ரமயா —
ஈச்வரனாலென்ன? பத்நியின் போகமயக்குகளில் மயங்குபவன்தான். ரமையின் வால்லப்யத்தை மறுக்க முடியுமோ?
இவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு அங்குள்ள இங்கிதபராதீனனாய் ஜகத் ஸ்ருஷ்டி, மோக்ஷம் முதலியதைச் செய்பவனாயிற்றே!

விநிவேத்யமாநே —
பலமாகச் சிபாரிசு செய்யப்படும் பொழுது. ‘வி’ என்பது விசேஷமாக, அனேகமாக, வற்புறுத்தி என்பதைச் சொல்லுகிறது.
அபராதம் பச்சை, கொடிய விரோதிஜனம், இவனை அங்கீகரிப்பது கஷ்டமென்று சிபாரிசு மிக்க பலமாகச் செய்யப் படுகிறது.
‘நிவேதயத மாம்’ என்று விபீஷணாழ்வார் போலன்று. ‘விநிவேதனம்’ வேணும்.

பார்ச்வே பரத்ர –
மற்றோர் பக்கத்தில். எதிர்ப்பக்கத்தில். கோதைப்பிராட்டி பெரியபிராட்டியாருக்கு பலமான
பக்க பலமாகிறாளென்பதைக் காட்டவேண்டும். தன் பக்கத்தில் இல்லாமல் எதிர்ப்பக்கத்தில், அப்பக்கத்தில்.
அப்பாலிருந்தும், உயர்ந்த பக்கபலமாகிறாளென்பது அழகு. ‘பார்ச்வ பலம் — பக்கபலம் ‘ என்பர்.
எதிர்ப்பக்கம் தன் பக்கமாயிற்று. ஸபத்நிகள் ஒரு பக்கமாயிருப்பரோ? கிழக்கும் மேற்குமாயிருப்பர், இருக்கிறார்கள்.
எழுந்தருளியிருக்கிற பக்கம் வேறாயினும், இருவருக்கும் ஒரே பக்ஷமென்பது அழகு.
இரண்டு தாய்களுக்கும் இந்த துஷ்டப்பையல் பெற்ற பிள்ளையாகிறான்.
அவனை மன்னித்து அவனைச் சேர்த்துக்கொள்ளுவது இருவருக்கும் ஒரே பக்ஷமே.
கோதை எதிர்ப்பக்கத்தில் இருப்பதும், பெரியபிராட்டியாரிடம் பெருமாள் ஆபிமுக்யம் தவறக்கூடாதென்பதற்கும்,
தானிருக்கும் பக்கம் திரும்பாமல், லக்ஷ்மீதேவியையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றே எதிர்ப்பக்கத்திலிருப்பது.
லக்ஷ்மியோடு ஒரே பார்ச்வத்திலிருந்தால் லக்ஷ்மிக்கு பக்கபலமேற்படாது.

பவதீ — இப்படி அற்புதமான ஸபத்நீஸ்நேஹத்தையுடைய நீ பூஜ்யை என்பதில் என்ன தடை?

யதி தத்ர நஸ்யாத் —
அந்த இடத்தில், அந்த சந்தர்ப்பத்தில். ‘தத்ர’ அவ்விடத்தில் என்றும், ‘பரத்ர’ மற்றோர் இடத்தில் என்றும்,
இருக்குமிடத்தில் சப்தமாத்ரத்தால் விரோதம் காட்டுவது ஓரழகு. இருப்பது அப்புறம், கருத்து இப்புறம்.

ப்ராயேண – அனேகமாய்.

தேவி —
விளையாடும் சீலமுடையவளே! ரங்கமெனும் நாடகசாலையில் ஈச்வரன் முன் அவன்
ஸ்வாதந்த்ரியத்தைக் குலைத்து, தேவிமாரிருவரும் என்னமாய் நடிக்கிறீர்களம்மா!

வதனம் —
‘மோக்ஷநிஸ்யாமி’ ‘உன் பரத்தை ஏற்போம்’ என்று பேசவேண்டிய முகமாயிற்றே!
முகத்தைத் திருப்பிக்கொண்டால் அனுக்ரஹப் பேச்சுக்கிடமேது? ப்ரணவரங்கத்தில் ‘ஓம்’ என்று பேசவேண்டுமே!

பரிவர்த்திதம் ஸ்யாத் —
அப்புறத்தில், பரத்ர, பார்ச்வத்தில் திரும்பியிருக்கும். அப்புறம் காலியாயிருந்தால், ஸபத்நியாகிய நீ இல்லாவிடில்,
அப்புறமே திரும்பியிருக்கும். குழந்தைக்கு சிபாரிசு செய்து அவனைக் காப்பாற்ற நீ எதிர்ப்பக்கத்தில் இருந்து
இப்படி லக்ஷ்மீதேவிக்குப் பக்கபலமாகிறாய். உன் பக்கம் திரும்பினால் லக்ஷ்மியின் கருணைக்குக்
குறையாமலோ மேற்பட்டோ உன் கருணை இருக்கிறது. அங்கீகரிக்க ஏன் இத்தனை தாமதமென்று உன் முகஜாடை.
பெருமாள் உன் பக்கம் திரும்பினால், லக்ஷ்மி சொன்னதைக் கேட்காவிடில் உன் முகத்தை அப்புறம் திருப்ப நேரும்.
நீ லக்ஷ்மீதேவியையே பார்த்துக்கொண்டு அவள் கக்ஷியிலிருக்கிறாய். … 24…

—————

சுலோகம் 25

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போகரஸாநுகூல:|
கர்மாநுபத்தபலதா நரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்த்ரிய துர்விஷஹமர்மபிதாநிதாநம் || .25.

கோதே — கோதாய்! போகரஸாநுகூல: — இன்பரஸத்திற்கு அனுகூலமான;
தவ – உன்னுடைய” ப்ருக்ஷேப ஏவ – புருவத்தின் அசைப்பே;
குணை: — மனோஹரமான உன் விலாஸகுணங்களாலே;
ப்ரணதாபராதாந் — வணங்கினவர்களின் அபராதங்களை; அபநயந் — போக்கிக்கொண்டு;
கர்மாநுபத்த பலதாநரதஸ்ய – செய்த கர்மங்களுக்குத் தக்க பலன்களை அளிப்பதிலே ஆஸக்தியுடைய;
பர்த்து: — நாயகனுடைய; ஸ்வாதந்த்ரியதுர்விஷஹமர்மபிதாநிதாநம் —
ஈச்வரஸ்வாதந்த்ரியமென்னும் பொறுக்கக் கூடாத மர்மஸ்தானப் பிளப்பிற்கு முதற்காரணமாகும்.

கோதாய் இன்பரஸத்திற்கு அனுகூலமான உன் புருவ அசைப்பே அதன் குணங்களால் ஆச்ரிதரின்
குற்றங்களைப் போக்கி, செய்த வினைகளுக்குத் தக்க பலனைக் கொடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும்
ஈச்வரனுடைய ஸ்வாதந்த்ரியத்தின் மர்மச் சேதத்திற்கு முதற்காரணமாகும்.

கோதே….. தாயே….நீ புருவத்தை நெறிக்கும்போது ,அது உனக்கும் உன் நாதனுக்கும் ,பெரியதொரு போகத்தைக் கொடுக்கிறது.
அவன் புருவ நெறிப்பு , உலகங்களை நடுங்கச் செய்கிறது; எங்களின் பாபங்களைப் பொறுக்கமாட்டேன் என்கிறான்;
அந்த சமயத்தில், உனது புருவ நெறிப்பு ,அவனுடைய புருவ நெறிப்பை அடக்கி விடுகிறது.
அவன் உனக்கு நாதன்; உலகங்களுக்கு எல்லாம் நாதன்; தன்னைக் குறை சொல்லா வண்ணம் காத்துக் கொள்கிறான்;
அதற்காக அவன் ஏற்படுத்திக்கொண்ட சங்கல்பம், அவரவர் கர்மாக்களுக்கான பலனை அளிப்பது;
இதில் அவன் ஸ்வதந்த்ரனாக இருந்தாலும்,உன் புருவ நெறிப்பு , அவனை அடக்கி விடுகிறது. என்ன பாக்யம், எங்களுக்கு!

அவதாரிகை

‘இடது பக்கத்திலேயே அவன் முகம் திரும்பி இருந்துவிடும்’ என்று முன் ச்லோகத்தில் சாதித்தார்.
அதனால் கோதை அங்கேயிருப்பதால், அங்கே திரும்புவதில்லையோ? கோதையை அபிமுகமாகப் பார்த்து
அவள் அழகிலும் முகவிலாஸங்களிலும் ரஸிப்பதில்லையோ என்கிற சங்கை வரக்கூடும். அந்த சங்கையைப் போக்குகிறார்.
உங்கள் சேர்த்தியில் வந்து ப்ரணாமம் பண்ணுகிறவர்களுக்கு தம்பதிச்சேர்த்தி அவஸரத்திற்குத் தக்கபடி
தம்பதிகள் பலதானம் செய்யவேண்டும். பலதானம் செய்யும்பொழுது தானம் வாங்குகிறவர்களின்
குற்றங்களைப் பரிசீலனம் செய்யமாட்டார். சேர்த்தி சந்தோஷத்திற்கேற்றபடி அர்த்திகளுக்கெல்லாம் பலதானம் செய்வர்.
வதுவைச் சேர்ந்த அவள் அநுபந்திகள் குற்றமுடையாராயினும், வதுவின் குணங்களையும்
அவள் அநுபந்திகளென்பதையும் நோக்கி அவர்களுக்கு உயர்ந்த பலன்களைத் தானம் செய்வர்.

கோதே — கோதாய்! குணை:

(தவ) –உன்னுடைய குணங்களால்;
‘செய்த பாபங்களைத் தர்மத்தால் (ஸுக்ருதங்களால், குணங்களால்) போக்கலாம்’ என்று வேதமோதுகிறது.
உன்னை ஆச்ரயித்தவர்களின் பாபங்களை அவர்கள் தங்கள் குணங்களால் போக்காவிடினும்
உன்னுடைய குணங்களால் நீ போக்குகிறாய். பெருமாள் உபேக்ஷிக்கும்படி செய்கிறாய்.
உன் ஆச்ரிதர் குணங்களானாலென்ன, உன் குணங்களானாலென்ன !

ப்ரணாதாபராதாந் — வணங்கி ஆச்ரயித்தவர்களின் அபராதங்களை.

அபநயந் — போக்கிக்கொண்டு; ‘அபநுததி’ என்ற ச்ருதிபதத்தில் உபஸர்க்கத்தை அனுஸரிக்கிறார்.

தவ ப்ரூக்ஷேப ஏவ –
உன் புருவத்தின் அழகிய அசைப்பே. பெருமாளுடைய துர்விஷஹமான நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரணதனுடைய
அஞ்ஜலி ஓர் ப்ரத்யஸ்த்ரமாகுமென்பர். அது ப்ரத்யஸ்த்ரமாவதற்கு நிதானம் (மூல காரணம்) மன்மதனுடைய
தனுஸின் வடிவான உன்னுடைய புருவத்தின் வளைத்தலே. அந்த வளைத்தல் அஸ்த்ரக்ஷேபம் போன்றது.
பெருமாள் நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரமாக காமன் வில்போன்ற புருவத்திலிருந்து எய்தப்படுவது
ஆச்ரிதரின் அஞ்ஜலியென்னும் ப்ரத்யஸ்த்ரம், உன்னுடைய இந்த ப்ரத்யஸ்த்ரம் வலிமை பெற்றது.

போகரஸாநுகூல: —
உன்னுடைய புருவத்தின் அழகிய அசைப்புகளின் விநோதம். போகரஸத்திற்கு அநுகூலம்.
லீலாரஸம், போகரஸம் என்று இரண்டுவித ரஸங்கள். பரமபதமென்னும் போகவிபூதிக்குப் புதிய ப்ரணதர்கள் சேர்ந்தால்,
அந்த ரஸம் இன்னும் வ்ருத்தியாகும். புதிதுபுதிதாகக் குழந்தைகள் வீடுவந்து சேரச்சேர அதிசயம் அதிகம். இன்பமதிகம்.
கர்மத்திற்குத் தக்கபடி தண்டனையளிப்பது லீலாரஸத்திற்கு அநுகூலம். ஒரு வணக்கை வ்யாஜமாகக்கொண்டு
முன் செய்த கொடுவினைகளை மன்னித்து வீடு சேர்த்துக்கொள்வது போகரஸத்திற்கு அநுகூலம் என்பதும் இங்கே ரஸம்.
லீலாரஸத்திற்கு எதிர்த்தட்டு போகரஸம். அவர் தண்டனை பலன்களைக்கொடுத்து லீலாரஸத்தைத் தேடுகிறார்.
‘அது வேண்டாம், என் மனதை அநுஸரிப்பது, என் ப்ரூக்ஷேபவிலாஸபோக ரஸத்தை மட்டுமன்று
போக விபூதிரஸத்தையும் பெருக்கும்’ என்று நீ ஸூசிப்பிக்கிறாய்.

கர்மாநுபத்தபலதாநரதஸ்ய –
எந்த ரதி வேணும். அபராதிகளின் கர்மங்களுக்குத் தக்கபடி தண்டனை பலத்தை அளிப்பதில் ரதி வேணுமா?
இந்த உத்தமவதுவின் விலாஸ போகரதி வேணுமா என்ற விகல்பத்தை ஸூசிக்கின்றது ‘ரத’ என்கிற சப்தம்.
தம்பதிகள் சேர்த்தியில் வதூவரர்கள் வதுவின் அநுபந்திகளுக்குப் பலதானம் செய்யாரோ?
பலதானம் செய்யும் தம்பதிகள் உயர்ந்த பலன்களைத் தானம் செய்வரோ?
அல்லது தண்டனைகளை (ப்ரஹாரங்களை)த் தானம் செய்வரோ? ததீயாராதனை தடியாராதனை ஆகலாமோ?
கர்மானுபத்தர்கள் எனபது பெருமாள் வாதம். ‘மதனுபத்தர்கள்’ என் திறத்தார் என்று கோதை எதிர்வாதம்.
எந்த அனபந்தம் உயர்த்தி? கர்மானுபந்தமா? உன் அனுபந்தமா? என்று விகல்பம்.
இங்கே ‘அனுபத்த’, ‘பலதானம்’, ‘ரத’ என்கிற பதங்களால் இந்த ரஸங்கள் ஸூசிதமென்பது ரஸிகமனோவேத்யம்.

பர்த்து: —
உன்னுடைய பர்த்தாவினுடைய. உலகத்தின் பர்த்தாவினுடைய உலகத்தை ரக்ஷணத்தால்
மரிக்க வேண்டியவனல்லவோ. ஈச்வரனாயினும் பர்த்தாவுமாவான், ரக்ஷகனுமாவான்.

ஸ்வாதந்த்ரிய துர்விஷஹமர்மபிதாநிதாநம் —
ஐச்வர்யம் என்பது ஸ்வாதந்த்ரியம். ஓரிடத்தி லிருந்தும் அதற்கு பங்கம் வ்யாஹதி வரக்கூடாது.
ஐச்வர்யம்தானே ஈச்வரனுக்கு உயிர்நிலையானது. அந்த உயிர்நிலையில் அம்பே க்ஷேபம் செய்து சேதித்தால்
ஈச்வர தத்வத்திற்கே அழிவு வருமே என்று சங்கை. ‘ஸ்வச்சந்தம் விததாம்யஹம்’ என் சந்தப்படிக்கு,
என் இஷ்டப்படிக்கு நான் பலன்களை விதிக்கிறேன் என்கிறார் பெருமாள். அது ஈச்வர லக்ஷணமான ஐச்வர்யம்.
இப்படி ‘ஸ்வச்சந்தப்படி’ ஸ்வதந்த்ரமாக பலமளிப்பது மேன்மையா?
அல்லது உன் சந்தப்படி (பரச்சந்தப்படி) அநுவர்த்திப்பதென்கிற தாக்ஷிண்யம் மேன்மையா? என்று விகல்பம்.
“நாயகர்களுக்குத் தாக்ஷிண்யம் குலவ்ரதம்” என்பது மாளவிகாக்நிமித்ரத்தில் அக்நிமித்ரர் பேச்சு.
கோதையின் சந்தத்தை அநுவர்த்திக்காமற்போனால் நாயகர்களென்னும் பர்த்தாக்களுக்கு உயிர்நிலையான தாக்ஷிண்யம் குலையும்.
ப்ரணதர்களான அடியாரை பரிக்கவேண்டியது பர்த்தாவென்னும் யஜமானனுடைய கடமை.
“சரணாகதரக்ஷணம்” ஓர் உயிர்நிலை. மன்னித்து ரக்ஷிப்பதில் இந்த உயிர்நிலைகள் ரக்ஷிக்கப்படுகின்றன.

—–

ரங்கே தடித்குணவதோ ரமையைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸுவ்ருஷ்ட்யா |
தௌர்கத்யதுர்விஷவிநாச ஸுதாஅந்தீம் த்வாம்
ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் || .26.

கோதே– கோதாய்! ரங்கே — ஸ்ரீரங்கத்திலுள்ள; ரமையைவ – பெரியபிராட்டியாராலே;
தடித்குணவத: — மின்னற்கொடியோடுகூடிய; க்ருஷ்ணாம்புதஸ்ய – கருமேகத்தினுடைய;
க்ருபயா — க்ருபையென்னும்; ஸுவ்ருஷ்ட்யா — நல்ல வர்ஷத்தால்; கடிதாம் — கடனை செய்யப்பட்ட;
தௌர்கத்யதுர்விஷவிநாசஸுதாநதீம் — ஸம்ஸாரமென்னும் துர்கதியாகிய கொடிய விஷத்தைப் போக்கும் அம்ருதநதியான;
த்வாம் — உன்னை (உன் திருமொழியை, உன் நீராட்ட ஸரஸ்வதியை; ப்ரபத்ய – அவகாஹித்து (சரணம் பற்றி) ;
ஸந்த: — ஸத்துக்கள்; அசிரேண – சீக்கிரத்தில்; தாபாந் — எல்லாத் தாபங்களையும்; சம்யந்தி — போக்கிக் கொள்கிறார்கள்.

கோதாதேவியே! பெரியோர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ளதும், லக்ஷ்மியாகிற மின்னற்கொடியோடு கூடினதுமான
கருத்த மேகத்தினுடைய க்ருபையாகிற நல்ல மழையாலே உண்டாக்கப்பட்டிருக்கிற கெட்ட விஷத்தைப்
போக்கடிப்பதில் அமுதநதியான உன்னைச் சரணம் அடைந்து உடனே (ஸம்ஸார) தாபங்களைப் போக்கடிக்கின்றனர்.

ஸ்ரீ ஆண்டாள் அமுத நதி; எப்படிஎன்றால், திருவரங்கச் செல்வன் ஒரு கார்முகில்; அதில் பெரியபிராட்டி மின்னல்கொடி;
இந்த இரண்டுமாக அருள் என்கிற மழை பொழிகிறது; இது வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது, மேடுபள்ளங்களில் நிறைந்து,
அங்கு சிக்கித் தவிக்கும் சேதனர்களின் சம்சார தாபத்தை——அந்தத் தீய விஷத்தை, அடித்துத் தூரத் தள்ளி ,
மிகவும் தெளிந்த அமுத நதியாக இருக்கிறது—
அது — ஹே கோதா—நீயே உன்னை அடைந்து சேதனர்கள், தங்கள் தாபங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

அவதாரிகை
தன் ப்ரியமான நாயகனான ஈச்வரனுடைய நிருபதமான ஈச்வரத்வம் ஸ்வாதந்த்ரியமென்னும்
உயிர்நிலையைச் சேதிப்பதாகப் பேசப்பட்டது. இது என்ன அழகு?
நாயகனுடைய உயிர் மர்ம ஸ்தானத்தை ஓர் சதியான நாயகி பிளப்பளோ? இப்படிப் பேசுவது கோதா ஸ்துதியாகுமோ?
இதற்கு பதில் கூறுகிறார். பெருமாள் ஈச்வர ஸ்வாதந்த்ரியத்தாலேயே புருஷகாரமான ஆசிரியர்களோடு
தம்முடைய க்ருபையால் சேர்த்து வைத்த ப்ரணதியென்னும் வ்யாஜமாத்ரத்தால் ரக்ஷிப்பதென்பதும்
ஈச்வரன் திருவுள்ளத்தாலே உள்ளதே. ஆசார்ய ப்ராப்திக்கும் அவள் க்ருபை வேண்டும்.
கோதை ஆசார்ய தத்துவம். புருஷகார தத்துவம். கடகரான ஆசாரியரை கடிப்பித்து வைப்பது ஈச்வர க்ருபை.
ஆகையால் தாமே கடிப்பித்து வைக்கும் புருஷகார சம்பந்தத்தைக் கொண்டு சேதனர் அபராதங்களை மன்னித்து
ரக்ஷிப்பதும் ஓர்விதமாக அவர் ஸ்வாதந்த்ரியத்தைச் சேர்ந்ததே.
ஈச்வர ஸ்வாதந்த்ரியமே தண்டனைகளைச் செய்யாமல் ரக்ஷிப்பதற்கும் நிதானமாகிறது.
பிராட்டியோடு கூடி அவனே தான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தால், தன் க்ருபையால், தன் சந்தத்தால்
கோதை என்னும் புருஷகாரத்தின் ப்ராப்தியை, ப்ரணதியை கடிப்பித்தான்.
விபுவின் ஸ்வாதந்த்ரிய விசிஷ்டமான கருணை ரக்ஷணத்திற்கு ஹேது.
இப்படிக்கு ஈச்வரன் சந்தமே நிறைவேறுவதால் அவன் ஸ்வச்சந்தத்திற்குக் குறைவில்லை என்கிறார்.
முன்பு கோதையைப் பல நதிகளாக வர்ணித்தார்.
இங்கே அவளும் அவள் திருமொழியும் அம்ருத நதீ என்கிறார். விரஜையிலுமுயர்ந்த நதி.

கோதே — திருமொழி, திருப்பாவை தரும் கோதாய்!
ரங்கே — அரங்கத்தில்;

ரமையைவ –
ரமணத்தைச் செய்விப்பதையே ஸ்வபாவமாகவுடைய லக்ஷ்மீயாலேயே.
கோதையை ஆசிரிய தத்துவமாகச் செய்தது லக்ஷ்மியே.
தடித்குணவத: —
மின்னலென்னும் கொடியோடு (குணத்தோடு) கூடியவரான.
மேகமும் மின்னலும் கூடினால் குளிர்ந்த வர்ஷமுண்டாகித் தாபங்கள் தீரும்.
பெருமாளும் பெரியபிராட்டியாரும் சேர்ந்துதான் க்ருபாவர்ஷத்திற்குக் காரணமாவாரென்பதை இது விளக்குகிறது.
பெருமாளும் லக்ஷ்மியுமாகச் சேர்ந்து தங்கள் க்ருபா வர்ஷத்தால் கோதை நாச்சியார்,
அவள் திருமொழி ஆகிய அம்ருத நதியை கடனை செய்வித்தார்கள்.

க்ருஷ்ணாம்புதஸ்ய – கிருஷ்ணமேகத்தினுடைய;
க்ருபயா — க்ருபையினாலே, க்ருபையென்னும்.
ஸுவ்ருஷ்ட்யா — நல்ல வர்ஷத்தாலே.

கடிதாம் — கடனை செய்விக்கப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட.
கடகையான உன்னை அடைவிப்பது ஸ்வதந்த்ரேச்வரனாகிய ச்ரிய:பதியின் க்ருபை.
கடக ப்ராப்தியையும் லக்ஷ்மீ விசிஷ்டமான ஈச்வரனுடைய க்ருபை கடிப்பிக்கும்.

தௌர்கத்ய துர்விஷ விநாச ஸுதாநதீம் —
ஸம்ஸாரம் என்பதற்கு ‘நற்கதி’ என்பது சொற்பொருள்.
அது உண்மையில் துர்கதியே என்பதைக் காட்ட ‘தௌர்கத்யம்’ என்கிறார். ஸம்ஸாரம் என்பது காலகோடிவிஷம்.
இந்தக் கொடிய விஷத்தால் குழந்தைகள் மூர்ச்சிதராயிருக்கிறார்கள். அவர்கள் ம்ருத ப்ராயராயிருக்கிறார்கள்.
குழந்தைகளைத் தீண்டிய கொடிய விஷத்தை நாசம் செய்வதிலும் பெருமாளுக்குப் பெரிய பேறுண்டோ?
அந்த விஷத்தை அமிர்த நதியாகிய உன்னைச் சரணம் பற்றி உன் அமுத ஸரஸ்வதீயில் நீராடிப் போக்கலாம்.
‘பராசர்யவசஸ்ஸுதையானது ப்ராணன் போய் மூர்ச்சிதரான குழந்தைகளை உயிர்ப்பிக்கும்’ என்று
ப்ரஹ்ம ஸூத்ரங்களை வர்ணித்ததை நினைக்க. அம்ருத ப்ரவாஹமான ஸுதாநதியாவாய்.

த்வாம் — உன்னை (உன் தேன்மொழியை)
ஸந்த: — ஸம்ஸார விஷ மூர்ச்சிதராய் அஸத் ப்ராயராயிருந்தவர் இப்பொழுது உன்னைச் சரணம் பற்றி ஸத்தானார்.
ப்ரபத்ய (ஸந்த:) — உன்னைச் சரணம் பற்றி உன் ஸரஸ்வதீயில் நீராடி (ஸத்தானார்)
அசிரேண – விரைவில். ‘தாபதேவ சிரம்’ என்றபடி ப்ராப்தகர்ம ப்ரயுக்தமான அனேக சரீரங்களின் தாமதமில்லை.
உடனே வேண்டுமென்ற ஆர்த்தியிருந்தால், உடனே.
தாபாந் — ஸகல ஸம்ஸார தாபங்களையும்;
சமயந்தி — போக்கிக் கொள்ளுகிறார்கள். (26)

——————

ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா: |
வாத்ஸல்ய நிர்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்டபயோதராபி || 27

கோதே — கோதையே! த்வம் — நீ;
ஜாதாபராதமபி — அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட குற்றங்களோடு கூடியிருந்தாலும்;
மாம் — என்னை; அநுகம்ப்ய – தயவு பண்ணி; கோப்த்ரீ அஸி யதி — ரக்ஷிப்பவளாக ஆகியிருந்தால்;
இதம் — இவ்விஷயம்; பவத்யா: — உனக்கு; யுக்தம் — தகுந்தது; ஜநநீ — தாயாரானவள்;
குமாரம் — குழந்தையை; தஷ்டபயோதரதராபி — கடித்த முலையை யுடையவளாயினும்;
வாத்ஸல்யநிர்பரதயா — குழந்தையினிடத்தில் உள்ள ஆசை மிகுதியால்;
ஸ்தந்யேந – முலைப்பாலினால்; வர்த்தயதி — காப்பாற்றுகிறாளன்றோ.

கோதே! (நான்) அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட அபராதங்களை உடையவனாயிருந்தாலும் நீ என்னை
தயவு பண்ணி ரக்ஷிப்பவளாக ஆவாயேயாகில், இவ்விஷயம் உனக்கு உசிதமே. எப்படித் தாயானவள் குழந்தை தன்
முலையைக் கடித்துவிட்டாலும் அதனிடத்திலுள்ள அன்பினால் அதைத் தன்பாலினால் காப்பாற்றுகின்றாளல்லவா? அதுபோல,

அடியேன் பலகாலும் குற்றம் செய்தவன்; குற்றமே செய்துகொண்டு இருப்பவன்; என்றாலும், நீ, என்னைப் புறக்கணிப்பதில்லை .
காக்கின்றாய். இது உனக்கு ஏற்ற செயல். தாயார், குழந்தையிடம், அளவில்லா அன்பு கொண்டவள்.
அதன் பசி அறிந்து, பாலூட்டுபவள். ஆனால், குழந்தைக்கு, தாயார் செய்யும் உபகாரமும், தாயாரின் அன்பும் பாசமும், எப்படித் தெரியும் ?
ஸ்தன்ய பானம் செய்யும்போது , குழந்தை கடித்தாலும், இதற்காக அந்தக் குழந்தையைத் தாயார், தூக்கி எறிந்து விடுவதில்லையே !
வேறு உபாயத்திலும் இறங்குவது இல்லையே !முன்போலவே அல்லவா, ஸ்தன்ய பானம் கொடுக்கிறாள் . ஆஹா , இது உனக்குத் தகுந்ததே !

அவதாரிகை
பெருமாள் குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்கிறதென்ற தர்மமுள்ளவரல்லவோ? ஸஹதர்மசரியான கோதையும்,
அந்த தர்மத்தை அவரோடுகூட அநுஷ்டிக்கவேண்டாவோ என்று சங்கை வரக் கூறுகிறார். அவர் பிதா, நீ மாதா.
மாதாவின் வாத்ஸல்ய குணம் உனக்கு ஸஹஜம். புதிதாகச் செய்து இன்னம் ஈரமுலராத அபராதங்களையும் பாராட்டாமல்
ஸ்நேஹத்தைப் பெருக்குவது வாத்ஸல்யமாகும். தாய்க்குத் தாய் தர்மம் ப்ரபலம், ஸ்வபாவத்தை ஒருவரும் மீறமுடியாது.
ஸ்வ தர்மம் ப்ரபலம். பர தர்மம் பயாவஹம். தாய் ஸ்வபாவத்தை, தாய் தர்மத்தைக் காட்டுகிறார்.
பர்த்தாவோடு ஸஹ தர்ம சரியானாலும் மாத்ருத்வத்தை விடுவளோ? ஸ்திரீத்வமே அழியுமே.

கோதே — கோதாய்!

ஜாதாபராதமபி மாம் —
(1) அபராதம் நேர்ந்தவனாகிய என்னையும். வேண்டுமென்றே குற்றத்தை நான் செய்தாலும், ஏதோ அறியாமல்
குற்றம் நேர்ந்துவிட்டதென்று உன் நினைப்பு என்பதை வ்யஞ்ஜிக்கிறார், ‘ஜாத’ என்று. ‘க்ருதாபராதஸ்ய ச தே ‘ என்று
திருவடி ஸுக்ரீவரிடம் பேசியதுபோல ‘க்ருத’ பதத்தை வைக்கவில்லை.
(2) ‘ஜாதன்’ என்பது ‘ப்ரியமான குழந்தை’யைச் சொல்லும். உன் அருமைக்குழந்தை அறியாமற் குற்றம் செய்துவிட்டதென்று
உன் நினைப்பும், பரிவும். ‘ஸத்யோ ஜாத:’ இன்று ஈன்ற கன்று வத்ஸம், அதனிடம்போல வாத்ஸல்யம்.
மூன்றாமடியில் சொல்லும் ‘பூர்ணவாத்ஸல்யத்திற்கு’ இந்த ‘இன்று பிறந்த கன்று’ என்பது ஸமர்த்தகம்.
ஸத்யோஜாத சிசுவின் அபராதம், கன்று உதைத்தது, கன்றின் பல் மடியில் பட்டது என்று உன் நினைப்பு.
(3) குற்றம் ஈரமாயிருந்தாலும், இப்பொழுதே செய்து இன்னம் உலராமலிருந்தாலும். ‘ஆர்த்ராபராதிநி ஜநே’ ‘ஆர்த்ராபராதா: ஸதீ’
அநுகம்ப்ய – என்னிடம் தயவு பண்ணி இரங்கி.
கோப்த்ரீ யதி த்வமஸி — நீ ரக்ஷகையாகிறாயென்பது.
யுக்தம் இதம் பவத்யா: — உனக்கு இது ஏற்றதே.
வாத்ஸல்யநிர்பரதயா — புத்ரஸ்நேஹம் சுமை தாங்காதபடி நிரம்பியிருப்பதால்.
ஸ்தந்யம் — ஸ்நேஹமென்னும் பால் நிரம்பிப் பெருகும் கடுப்பினால்.
ஜநநீ — பெற்ற தாய்

குமாரம் —
(1) இளங்குழந்தை, பச்சைக்குழந்தை என்று தாயின் நினைப்பு. என்ன முதிர்ந்த வயதாயினும் தாய்க்குச் சிசுவே.
(2) ராஜகுமாரன் ராஜ்யத்திற்குப் பட்டப்பிள்ளை என்று நினைப்பு.
(3) குமரன் போன்ற குமாரனென்று அருமை. “குமாரகல்பம் ஸுஷுவே குமாரம்”, ‘குமரனைப்போன்ற குமாரனைப் பெற்றாள்’.

ஸ்தந்யேந –
பாலால் குழந்தையை வளர்க்க, பெருக்க.. ஸ்தனத்தில்தானே பாலுண்டாகும்?
ஸ்தனத்தில் குழந்தை பல்லால் கடித்தது. கடித்த இடத்திலிருந்தே பால் சொரிகிறது என்று காட்ட ‘ஸ்தந்யம்’ என்கிறார்.

வர்த்தயதி —
குழந்தையைப் பருக்கச் செய்யவேண்டாவோ? பால் பெருக்கால் குழந்தை பருக்கிறது. பால் ஸ்தனத்தில்தானே பெருகும்?
கடித்த இடமென்று அதை விட்டால் பாலுக்கு வேறு இடமேதுளது? வர்த்தயதி என்பதில் மிக்க ரஸமுண்டு.
“ப்ருஹப்ருதௌ ப்ரும்ஹயதி” என்று பொருள் திருவுள்ளம். ப்ரும்ஹணம் செய்கிறாள், ப்ரஹ்மம் போலச் செய்கிறாள்.

தஷ்டபயோதராபி —
பல்லால் கடிக்கப்பட்ட ஸ்தனத்தை உடையவளானாலும். ‘பயோதர’ என்னும் பதத்தில் மிக்க ரஸம்.
‘நீரோ பாலோ நிரம்பிய’ தோல் பையைப் பொத்து விட்டால் ஜலமும் பாலும் ஒழுகி விழாமலிருக்குமோ? .

——————-

சதமகமணிநீலா சாருகல்ஹாரஹஸ்தா
ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: || .28.

ஶதமகமணி நீலா — இந்த்ரநீலக் கல்லு போல நீலமானவளும்;
சாருகல்ஹார ஹஸ்தா — அழகிய செங்கழனிப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்;
ஸ்தனபரமிதாங்கீ — ஸ்தனத்தின் பரத்தால் சிறிது வணக்கப்பட்ட திருமேனியை உடையவளாயும்;
ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: — கனத்த (நிரம்பிய) ஸ்நேஹக் கடலாயும்;
அளகவிநிஹிதாபி: — கூந்தலில் சூடிய; ஸ்ரக்பி — மாலைகளால்;
ஆக்ருஷ்டநாதா — இழுக்கப்பட்ட நாதனோடு கூடியவளாயுமான;
விஷ்ணுசித்தாத்மஸா கோதா — பட்டர்பிரான் புத்திரி கோதை; ந: — நமது;
ஹ்ருதி — ஹ்ருதயத்தில்: விலஸது — விளங்கட்டும்.

இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்,
தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய
மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.

த்யான ச்லோகம்
இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்;
ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;
அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்;
விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

அவதாரிகை
(1) முதல் ச்லோகத்தில் ‘கோதை’யைச் சரணம் புகுகிறேன் என்று அவளைப் பரோக்ஷமாகப் பேசினார்.
பிறகு 26 ச்லோகங்களில் கோதையை அழைத்து நேருக்கு நேராக ப்ரத்யக்ஷமாகப் பேசினார்.
தேவியான கோதையைப் பரோக்ஷமாக ‘அவள்’ ‘அவள்’ என்று பேசித் துதிப்பது உசிதம்.
‘பரோக்ஷப்ரியா தேவா:’ மனுஷ்யர்களில் அவதாரம் பண்ணினாலும், கோதை தேவியே.
ஆயினும் தாயானதால், தேவியாயிருந்தும் நீ என்றே கூப்பிட்டுப் பேசினார்.
தேவியாயுமிருப்பதால், உபஸம்ஹாரத்திலும் உபக்ரமத்திலும் (முதலிலும், முடிவிலும்) ‘அவள்’ ‘அவள்’ என்று பேசுகிறார்.
முதலிலும், முடிவிலும், ஒரே விதமாக ‘அவள்’ என்று பேசுவது தேவீ என்கிற தாத்பர்யத்தைக் காட்டும்.
(2) ஓர் ஆச்சர்ய மூர்த்தியாக ஹ்ருதயத்தில் எப்பொழுதும் த்யானம் செய்யும்படி க்ருபையால் விளங்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
‘நீளாதுங்க ஸ்தநகிரிதடீ’ என்னும் தனியன் த்யான ச்லோகத்தையும் அநுஸரிக்கிறார்.
நக்ஷத்ரக்கணக்கான 27 ச்லோகங்களால் துதித்து பாவனை செய்து,
இங்கே ஹ்ருதயத்தில் பரமப்ரஸக்யாய் வீற்றிருப்பதைப் பிரார்த்திக்கிறார்

ஶதமகமணிநீலா —
இந்த்ர நீலம் போல நீலவர்ணமானவள். ஸ்ரீ, பூமி, நீளை என்று மூன்று தேவிமாரில்
முதல் ச்லோகத்திலிருவரைப் பேசினார். இங்கே நீளையை சப்தமாத்ரத்தாலேயாயினும் ஒருவாறு குறிக்கிறார்.
‘நீளாதுங்கஸ்தன’ என்ற த்யான ச்லோகத்திலுள்ள முதற்பதத்தை இங்கும் முதல் பதமாக வைக்கிறார் என்றும் ரஸம்.

சாருகல்ஹாரஹஸ்தா —
அழகிய செங்கழுநீர்ப் பூவைக் கையில் உடையவளாய். “அவள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் வாய் செங்கழுநீர்”
ஆகியதால், அது சாரு (அழகியது). ஸ்வாராதானத்தில் தன்தோட்டத்தில் தான்வைத்து வளர்ந்த கொடிப் புஷ்பம்.

ஸ்தனபரநமிதாங்கீ — தனபரத்தால் கொஞ்சம் வணங்கிய காத்திரமுடையவளாய். தனங்களும் கிரிபோன்றன.
தனங்களின் வாத்ஸல்யப் பெருக்கால் ஸ்தந்யப் பெருக்கை முன் ச்லோகத்தில் பேசினார்.
தனத்தின் பாரத்துடன் ஸ்தந்யத்தின் பாரமும் சேர்ந்தது.

ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: — கனத்த புத்ரஸ்நேஹக் கடல். முன்பு அம்ருதநதீ என்றார். இங்கே ஸ்நேஹக்கடல் என்கிறார்.
அளகவிநிஹிதாபி: — கூந்தலில் அழகாகச் சூடிய. (யார் கூந்தலில் என்று குறிப்பிடவில்லை) முதலில் கோதைசூடிப் பிறகு பெருமாள் சூடிய.
ஸ்ரக்பி: — மாலைகளால். ‘ஸ்ரஜி’ என்று தனியனிலுள்ளது.

ஆக்ருஷ்டநாதா —
இழுக்கப்பட்ட நாதனையுடையவளாய். தன்னால் உச்சிஷ்டமான (சூடிய) மாலையால் விலங்கிடப்பட்ட என்று
பச்சையாக உன் மேன்மை பேசப்பட்டது. இங்கே கட்டுண்டு இழுக்க இடம் கொடுத்தது குடுமி.
விலங்கு போட்டாற்போல சலிக்காமலிருக்கும் பயன் கிடைப்பதைச் சொன்னது தனியன். சிரஸில் விலங்கு போடமாட்டார்கள்.
‘குடுமியைப் பிடித்துக் கயிறால் இழுக்கப் படுகிறான்’ என்பது இங்கே பேச்சு. சூடிக் கொடுத்த மாலையை முடி மேற் கொண்ட
நாதனோடுகூட ஹ்ருதயத்தில் ஸர்வதா ஸேவை ஸாதிக்கவேண்டும்..

விலஸது — நன்றாய்ப் பிரகாசிக்கட்டும்.
ஹ்ருதி — த்யாதம் ஹ்ருதம்புஜே, த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி.

கோதா — கோதாம் சரணம் ப்ரபத்யே என்பது முதல் ச்லோகத்தின் கடையடி.
இங்கேயும் முடிவில் கடைசிப் பதத்தில் கோதா என்று அமைக்கிறார்.
அங்கே இரண்டாம் வேற்றுமை. சரணமடைந்ததற்குப் பயனாக அவள் ஸேவை அளிப்பதால் இங்கே முதல் வேற்றுமை.

விஷ்ணுசித்தாத்மஜா —
ஸ்ரீவிஷ்ணுசித்த குலதந்தன என்று தொடக்கத்திற்குத் தக்கபடி முடிவு.
பட்டர்பிரான் கோதை சொன்ன என்ற திருப்பாவை முடிவையும் இது அநுஸரிக்கிறது.
இங்கே ‘கோதை பட்டர்பிரான் குமரீ’ என்ற க்ரமத்தை மாற்றியுளது. அதற்கடியென்?
இங்கே பல விசேஷணங்களிலும் ‘பட்டர்பிரான் புத்ரி’ என்பது உயர்த்தி என்று திருவுளம். ‘ஜநகாத்மஜா’ என்பது போல. (28)

——————-

இதி விகஸிதபக்தேருத்திதாம் வேங்கடேசாத்
பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய: |
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:
சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யன் || .29.

இதி — இந்தத் தோத்திரம் முழுவதிலும் காணும் ப்ரகாசமாக,
விகஸித பக்தே: — (கோதை திருவடியில்) மலர்ந்த பக்தியையுடைய;
வேங்கடேஶாத் — வேங்கடேசரிடமிருந்து ; உத்திதாம் — தோன்றி எழுந்த;
பஹுகுணரமணீயாம் — பற்பல காவ்யகுணங்களால் நிரம்பி மனோரஞ்ஜகமான;
கோதாஸ்துதிம் — கோதைவிஷயமான துதியை; ய: — எவர்; வக்தி — சொல்லுகிறாரோ;
ஸ: — அவர்; ஸ்ரீமத்: — லக்ஷ்மீயோடு கூடிய; ரங்கபர்த்து: — ரங்கநாதனுக்கு;
ஶாஶ்வதீம் — சாச்வத காலமும்; சரணகமலஸேவாம் — திருவடித்தாமரையின் ஸேவையை;
அப்யுவைஷ்யந் — அடைபவனாக (அவருக்கு) ; பஹுமாந்ய: — வெகுமதி பாத்ரமாக; பவதி — ஆகிறான்.

கோதை திருவடியில் விஸ்தாரமான பக்தியையுடைய வேங்கடேசரிடமிருந்து தோன்றியெழுந்த
அனேகவிதமான காவ்ய குணங்களால் அழகிய கோதாஸ்துதியை எவர் பாராயணம் செய்கிறாரோ அவர்
லக்ஷ்மீயோடு கூடிய ரங்கநாதனின் திருவடி ஸேவையை அடைபவனாய்க்கொண்டு அவருக்கு வெகுமதி பாத்ரனாக ஆகிறான்.

பக்தியின் பெருக்காக, வேங்கடேச கவியிடமிருந்து, பற்பல காவ்யங்களின் குணங்களை உடைய
இந்த கோதா ஸ்துதியைப் பாராயணம் செய்பவன், ஸ்ரீ ரங்கநாதனின் திருவடியில், அவ்வுலகில் நீண்ட காலம்
கைங்கர்யம் செய்வதோடு மட்டுமல்லாமல், இவ்வுலகிலும் அவனுடைய க்ருபைக்குப் பாத்ரமாவான்

அவதாரிகை
விஷ்ணுசித்தரிடமிருந்து கோதை தோன்றினாள் என்று 9ல் ஸாதித்தார்.
‘விஷ்ணுசித்தாத்மஜை’ என்று முன் ச்லோகம் முடிவில் பேசியது அதைக் காட்டுகிறது.
கோதை விஷ்ணுசித்தரிடம் தோன்றியதுபோல, கோதை துதி பக்தி நிரம்பிய என் சித்தத்திலிருந்து தோன்றியதென்கிறார்.
“ஸமுக்திதவதீம் அதிவிஷ்ணுசித்தம்” என்பதுபோல ‘விகஸிதபக்தே: வேங்கடேசாத் உத்திதாம்’ என்கிறார்.
முதல் ச்லோகத்தின் உரையில் இந்த ச்லோகத்தின் பொருள்களை விஸ்தரித்திருக்கிறோம்.
அதையெல்லாம் இந்த ச்லோக உரையில் சேர்த்துக் கவனிக்க.

இதி — இப்படி. முன் ச்லோகங்களில் அநுபவம் சென்றபடி. ;இங்கிப்பரிசுரைப்பார்’

விகஸிதபக்தே: —
புதுவைப் பூந்தோட்டத்தில் பெருமாளிடம் தன்மயத்வத்தோடு கோதை வளர்த்த பூஞ்செடிகள் புஷ்பித்து மலர்ந்ததுபோல,
கோதையின் பக்தியும் பெருமாளிடம் புஷ்பம் போல் மலர்ந்து வாஸித்துப் பாமாலையாயிற்று.
அதுபோல கோதையிடமும் அவள் பூமாலை பாமாலைகளிடமும் இந்த ஸ்தோத்ர பாவனையால் நம் ஸ்வாமியும்,
தன் மயத்வத்தை யடைந்து, கோதையிடம் பக்தி அத்புதமாக மலர்ந்தது.
‘இப்படி மலர்ந்து வாஸிக்கும் பக்தியையுடைய வேங்கடேசனிடமிருந்து இந்தத்துதி எழுந்தது’ என்றும் சொல்லலாம்.
வேங்கடேசனிடமிருந்து அவருடைய இப்படி மலர்ந்த பக்தியிலிருந்து இத்துதி எழுந்தது’ என்றும் பொருள் கொள்ளலாம்.

உத்திதாம் —
கோதை விஷ்ணுசித்தரிடமிருந்து தோன்றியதுபோல, இத்துதியும் ஸ்வாமி சித்தத்தில் தோன்றியது.
இருவருக்கும் கர்த்ருத்வமில்லை, ஆவிர்பாவாதிகரணத்வமேயுண்டு.

வேங்கடேசாத் —
இப்படி கோதையிடம் ஸ்வாமிக்கு பக்தியமைந்ததற்குக் காரணமுண்டு. வேங்கடவற்கென்றேயிருப்பாள் கோதை.
அவள் பெருமையை வேங்கடவர் கண்டை உலகமறிய இத்துதியால் சப்திக்கவேண்டியது உசிதம்.
இரண்டு சம்ப்ரதாயஸ்தரும் தேசிகன்காலம் முதல் சேர்ந்து ஏக கோஷ்டியாகப் பாடும் பாக்யம் பெற்ற ஸரஸ்வதி.

பஹுகுணரமணீயாம் —
கோதை சூடிய மாலை அநேக குணங்களாலும் நார்களாலும் அரங்கனுக்கு ஹ்ருத்யமானது போலே
அநேக குணங்களையுடைய இத்துதியும் அரங்கன்முன் அரங்கேற்றி அவனுக்கு ஹ்ருத்யமாயிற்று.

வக்தி — சொன்னால் போதும். தப்பிச் சொன்னாலும் போதும். பெருமாள் விஷயமான திருப்பாவையை
‘தப்பாமே’ சொல்லவேண்டுமென்ற நிர்ப்பந்தம் உண்டு. கோதை விஷயமான இப்பாமாலையை ப்ரஜல்பநம்
பண்ணாலும் போதும் அரங்கர்க்கு பஹுமான்யராவதற்கு. ஆனால் ஒரு நிர்ப்பந்தம் மட்டும் உண்டு. அதென்ன?
“இதி விகஸிதபக்தே: வக்தி” என்றும் அந்வயித்து ‘இப்படி மலர்ந்த பக்தியாலே சொல்லுவனேல்’ என்று பொருள் கொள்ளவேணும்.
ஸ்வாமி பக்தியைப்போல நமக்கும் பக்தி மலரவேணும். ஹ்ருதயபுண்டரீகம் விகஸிக்க வேணும்.

கோதாஸ்துதீம் —
வாக்கைக் கொடுத்தவள் விஷயமான ஸ்தோத்திரம். இந்த ஸ்துதி ரூபமான வாக்கு பிக்ஷையும் கோதைத் தாயார் கொடுத்தது.
ஆகையால் இத்துதியை ‘பஹுகுணரமணீய’ என்று கொண்டாடினது. ஆத்மச்லாகை அன்று.
“வாசா நிர்மலயா ஸுதாமதுரயா யாம் நாத பிக்ஷாம் அதா:” (க்ருஷ்ண! என் நாதனே! அமுதத்தைப்போல் இனிமையும்,
நிர்தோஷமுமான வாக்கை பிக்ஷையாக எனக்கு நீர் கொடுத்ததை நான் ஸ்வப்னத்திலும் நினைத்து
க்ருதஜ்ஞதையை அநுஸந்திக்காமல், என் வாக்கு என்று அஹங்காரமதம் பிடித்திருக்கிறேனே) என்றார் பண்டிதராஜ ஜகந்நாதர்.
முதல் சுலோகத்திலேயே ஸ்வாமி இத்தாயாரை வாக்பிக்ஷைக்காகச் சரணம் புகுந்ததைக் காட்டியுள்ளோம்.
‘வாக்கைத் தானம் செய்பவள்’ என்ற திருநாமமுடைய கோதை இந்தத் துதிவாக்கையும் கொடாமலிருந்தால்,
கோதையாகாளே! கோதை துதியென்னும் பெயரும் பொய்யாமே! அவள் பேரும் இத்துதி பேரும் நிலைப்பதற்கு
இத்துதியும் வாக்கும் அவளதேயாய்த் தீரவேணும்.

ய:ஸ: —
‘யவனவன்’. ஶ்ரிய:பதியைப் பற்றித் திருவாய்மொழி தொடங்கியதுபோலும்.
ப்ரஹ்ம ஸூத்ரமும் உபநிஷத்தும் ப்ரஹ்மலக்ஷணம் பேசுவதுபோலும்,
இத்துதியை இப்படி மலர்ந்த பக்தியோடு சொல்லுமவன் மஹிமையை ‘யவனவன்’ என்று வர்ணிக்கிறார்.

பவதி —
நித்யமும் ஆகிறான். முக்காலத்தையும் சொல்லுகிறது. ‘பவதி’, அம்மா என்று கூப்பிடுவதுமாகலாம்.
கடைசி ச்லோகத்திலும் ‘அம்மா’ என்று கூப்பிட்டு முடிப்பதழகு.
பவதிபஹுமாந்ய என்று சேர்த்து ஒரு பதமாகவும் ஓர் அந்வயம் கொள்ளலாம்.
ஸ்ரீக்கும் பஹுமாந்யன். ரங்கபர்த்தாவுக்கும் பஹுமாந்யன். உனக்கும் பஹுமாந்யன்.
உன் வாக்காயினும், எனக்குத் தானம் செய்துவிட்டதால், உன் குழந்தையாகிய நான் உச்சரித்த துதியென்று உனக்கும் அதில் பஹுமானம்.
என்முகமாக வெளிப்பட்ட துதியைப் படித்தானென்று என்னிடம் ஸ்நேஹத்தால் படிப்பவனிடம் பஹுமானம்.
பஹுமாந்ய: காரணமான துதியிலுள்ள குணத்தின் பஹுத்வம் கார்யமானமானத்திலும் வருகிறதென்பது ரஸம்.

ஸ்ரீமத: —
ஸ்ரீவிசிஷ்டனாகிய. கோதை பெருமையைக் கேட்பதில் ஸ்ரீக்கு மிக்க இன்பம்.
“ஸ்ரீரங்கராஜஹரிசந்தன” என்று முதல் ச்லோகத்தில் பேசினபடி உபஸம்ஹாரமும் அப்படியே.
முதலில் ஸமாஸம், இங்கே முடிவில் வ்யாஸம். “ஸமாஸவ்யாஸதாரணம்” வித்வான்களுக்கு அழகு.

ரங்கபர்த்து: — அரங்கத்தின் ப்ரபு. காவ்யங்களையெல்லாம் அரங்கேற்றும் ப்ரபு.

சரணகமலஸேவாம் —
பக்தியென்னும் புஷ்பம் மலர்ந்தது. ஹ்ருதயகமலம் மலர்ந்தது. இப்படி ஓர் புஷ்பம் மலர்ந்ததுக்கு அளிக்கும் பலன் என்ன?
திருவடிக் கமலமென்னும் ஓர் அபூர்வ புஷ்பத்தை சாச்வதமாய் அனுபவிக்கும்படி அளிப்பதே.
புஷ்பம் மலர்ந்ததற்குச் சாச்வதபலமான புஷ்பாநுபவமே பயன் என்று ஆநுரூப்யம். கமலத்திற்குப் பரிசு அபூர்வகமலம்.
ஹ்ருதயகமலம் மலர்ந்தபோது, இந்தத் திருக்கமலமும் அங்கே வீற்றிருந்து ஸமகத்தைக் கொடுக்கும்.
தாமரையோடு தாமரையின் யோகம் வரும். “கேசவநம்பி கால்பிடித்தல்”

சாச்வதீம் —
சாச்வதீ மம ஸம்ஸித்தி: என்றவிடத்தில்போல ஸேவையென்னும் வணக்கமே, ப்ரஹ்வீபாவமே, பரமமான ஸித்தியாகும்.
இதைப் படிப்பவருக்கும் சாச்வத ஸுகம் நியதம். ‘சாச்வதம், ஸுகம்’ என்று ச்ருதி பேசியதை
‘சாச்வதமான சரணகமல ஸேவாம்’ என்று ஸூசிக்கிறார். உன்னேச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்,
உனக்கே நாமாட் செய்வோம்’ என்று கோதை ஆசைப்பட்ட பயன்.
‘திருமாலால் இன்புறுவர்’ ஸேவையென்கிற நமஸு (ந மம) என்பது சாச்வதப் பயனையளிக்கிறது. “ந மமேதி ச சாச்வதம்”

அப்யுபைஷ்யந் —
அடையப்போகிறவனாய். பரமபதத்தில் சாச்வதமான திருவடிஸேவை பாக்யத்தை அடைவானாம்.
“மாமுபேத்ய து கௌந்தேய” என்கிற ச்லோகத்தில் ‘ஆசாச்வதமான துக்காலயத்தை அடையமாட்டார்,
பரமமான ஸம்ஸித்தியையடைவார்’ என்பதை “உபைஷ்யந்” என்பதால் ஸூசிக்கிறார்.
‘மாம்’ என்றவிடத்தில் அப்பதத்தைக் கொண்டே லக்ஷ்மியையும் கொள்ளலாம். ததந்தர்பாவ ந்யாயத்தாலும் கொள்ளலாம்.

———-

பூ ஸ்துதி “என்பதாக, பூமிப் பிராட்டியை ஸ்தோத்ரம் செய்தவர்,
பூமிப் பிராட்டியின் அவதாரமான கோதையை இங்கு 28 சுலோகங்களால் ஸ்தோத்ரம் செய்கிறார்.
இது கோதா பரிணயம் என்பர்,ஆன்றோர்

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே !
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம: ||

ஸ்ரீ கோதா ஸ்துதி முற்றிற்று.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: