ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –
————
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்ப வல்லீம்
ஸ்ரீரங்கராஜஹரிசந்தன யோகத்ருச்யாம்|
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே || (1)
ஸ்ரீவிஷ்ணுசித்தருடைய குலமென்னும் நந்தனத் தோட்டத்தில் (தோன்றிய) கற்பகக்கொடியும்,
ஸ்ரீரங்கராஜனென்னும் ஹரிசந்தன கற்பகவிருக்ஷத்தை அணைவதால் (மணம் புரிவதால்) பார்க்கத் தக்கவளாயும்,
க்ஷமையின் வடிவேயானவளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), கருணையினால் மற்றோர் லக்ஷ்மிதேவி
போன்றவளாயுமான கோதையை (வாக்கையளிக்கும் தேவியை) புகலொன்றில்லாவடியேன் சரணம் பணிகிறேன்.
தாத்பர்யம்
கோதையை அம்ருத வாக்கால் துதிக்க வேண்டியதற்கு ஸாமக்ரியான ஓர் அத்புத கவிதா சக்திக்காக
கவிப்பெண்ணான கோதையை இங்கே சரணம் புகுகிறார்.
“கோதா” என்கிற திருநாமத்தைச் சொல்லி சரணவரணம் செய்வதாலே இது ஸூசிதம்.
“கோ” என்பது “வாக்கை, ஸரஸ்வதியை”ச் சொல்லும். கோதா என்பதற்கு “வாக்கைக் கொடுப்பவள்” என்று அர்த்தம்.
வேதங்களால் கவி என்று புகழப்படுபவரும், கீதை பாடியவருமான பெருமாளுக்கு அத்புதமான பாமாலை கொடுப்பவள்.
என்ன கவி ஸிம்ஹமானாலும், ஸ்வயம் அத்புத கவியான கோதைக்கு ஸ்தோத்ர மாலை கொடுக்கத் தமக்குச் சக்தி
போதாதென்று பயந்து, அவளே அவளைப்பாட ப்ரஸூமதுரமான, பஹுகுணரமணீயமான, ஸரஸ்வத்யாதி புனிதமான
மஹாநதிகள் போன்ற கவிதா ப்ரவாஹத்தை அளிக்க வேண்டும் என்று இங்கே சரணமடைகின்றார்.
இதை மூன்றாவது ஸ்லோகத்தில்
“தாயே! நீயே உன்னைத் துதிக்க யோக்யமாக ப்ரஸந்நமதுரமான வாக்கு எனக்கமைய க்ருபை புரியவேணும்” என்று
ப்ரார்த்திப்பதாலும், கடைசி ஸ்லோகத்தில்,
“மலர்ந்த பக்தியால் பஹுகுண ரமணீயமான இந்த கோதா ஸ்துதி வெளிப்பட்டது” என்று தாம் கோரிய பலம்
ஸித்தித்ததைப் பணிப்பதாலும் விளக்குகிறார்.
ஸீதாதேவி தன் தாய் பூமிதேவியின் ஸ்ரோத்ரமென்னும் வல்மீகத்தில் தோன்றியவரும்,
தன்னுடன் பிறந்தவருமான வால்மீகி கவியைக் கொண்டு ராமாயணத்தைப் பாடுவித்தாளேயொழிய, தானே கவி பாடவில்லை.
ருக்மணீதேவி விவாஹத்திற்கு முன் ஸப்தபதியென்னும் விவாஹப்ரார்த்தனைக்காக ஏழே சுலோகம் பாடினாள்.
தேவிமாரில் ஒருவரும் ஆண்டாளைப் போலக் கவி பாடவில்லை.
ஆண்டாளுடைய ஸரஸ்வதி குளிர்ந்த ப்ரஹ்ம குண வெள்ளத்தில் நீராடி மகிழச் செய்யும் நீராட்ட ஸரஸ்வதி.
அது ஒரு அத்புதமான பக்தி வெள்ளம். பக்தி ப்ரவாஹத்தில் நீராட ஒரு அழகிய துறை.
“ஸம்ஸார மருகாந்தரத்தில் பரிச்ராந்தரான தேஹிகளுக்குப் பெருமாள் விஷயமான பக்தியென்னும்
அம்ருதவாஹினியில் அவகாஹநம் உபதேசிக்கப்படுகிறது” என்று ஸாதிக்கப் பட்டுள்ளது.
அப்படி அவகாஹிக்க ஆண்டாளுடைய நீராட்ட ஸரஸ்வதியாகிய ப்ரஹ்ம நதி சிறந்த ஸாதனம், மார்க்கதர்சி.
ஆண்டாளுடைய ஸரஸ்வதியை யமுனாமஹாநதியாக வர்ணிக்கப் போகிறார்.
ஸ்ரீ எனற பெரிய பிராட்டியார் திருநாமத்தோடு மங்களமாகத் துதியை ஆரம்பிக்கிறார்.
இங்கே கோதைக்கு ஸ்ரீரங்கராஜனுடைய யோகம் ஏற்படுவதை இரண்டாம் அடியில் ஸாதிக்கிறார்.
யோகம் என்பது முன்பு அடையப்படாத பொருள் புதிதாக அடையப்படுவதைச் சொல்லும்.
இங்கே இருவருக்கும் அலப்யலாபமான விவாஹமங்கள யோகத்தைச் சொல்லும்.
கற்பகக்கொடி புதிதாக ஹரிச்சந்தன வ்ருக்ஷத்தைச் சுற்றி அணைவதை இங்கே ஸாதிக்கிறார்.
விவாஹம் பெரியபிராட்டியாரால் கோடிக்கப்பட்டு நடப்பதாக இரண்டாமடியில் ரங்கராஜனுக்கு முன்
ஸ்ரீயை நிவேசிப்பதால் காட்டுகிறார். ஒருதரம் முதல் பாதத்தில் ஸ்ரீயைச் சொன்னதோடு த்ருப்தியில்லை.
திரும்பவும் திருவின் திருநாமத்தை நிர்தேசிப்பதால், இந்த விவாஹ மங்களத்தை நிறைவேற்றுவதில் ஸ்ரீக்கு
அத்தனை த்வரையும், பாரிப்புமிருக்கின்றதென்று அழகாக ஸூசிக்கிறார்.
பெரியபிராட்டியாரோடும் ரங்கராஜனோடும் சேர்த்தி. அதிலும் முன்பு திருவோடு சேர்ததி. பின்புதான் பெருமாளோடு.
கோதையைத் தன் ஸ்தனம் முதலிய போகஸாதனாவயமாகப் பாவிப்பதால், கோதையோடு யோகம்
தன் (ஸ்ரீயின்) ஸ்தனத்தோடு யோகமாகிறதெனறு ஸ்ரீபட்டருடைய அழகான ப்ரதர்சனம்.
தன்னோடு யோகத்திலும் தன் தனத்தோடு யோகம் ப்ரியதரமே. கோதை ஓர் கற்பகக் கொடி.
பூந்தோட்டத்தில் ஆவிர்பவித்த கோதை ஓர் தைவக்கொடியே.
இந்தக் கொடி அணைவதற்கு ஹரி என்னும் ஹரிசந்தனமான தேவ வ்ருக்ஷம் அநுரூபமாகும்.
இரண்டும் தேவஜாதி. இரண்டும் வேண்டிற்றெல்லாம் தரும்.
ஸ்ரீரங்கராஜனெனனும் ஹரி என்றும் பிரிக்கலாம். அப்பொழுது “சந்தன” என்று சந்தனமரத்தைச் சொல்லலாம்.
முன் பாதத்தில் ஸ்ரீவிஷ்ணு என்றது ஸ்ரீரங்கராஜன் என்று இரண்டாம் பாதத்தில் சொல்லப்படுவதோடொன்றாகும்
என்று அந்த யோஜனையில் பலம். ஸ்ரீயென்ன, விஷ்ணுவென்ன, இவர்களுடைய சித்தமான குலத்தில் (நந்தனத்தோட்டத்தில்)
அவர்கள் மகிழத் தோன்றிய கற்பகக்கொடியாவாள் கோதை.
மனத்தை ஆராமம், தோட்டம் என்று பேசுவர் வேதாந்திகள். திவ்ய தம்பதிகள் இருவரும் தம்முடைய சுபமான மனதில்
த்யானமும் மனோரதமும் செய்து அவர்களுடைய மனதான ஆராமத்தில் (நந்தவனத்தில்) தோன்றிய
கற்பகக்கொடியாவாள் கோதை.
9வது சுலோகத்தில், “விஷ்ணுவின் சித்தத்தில் சந்திரமண்டலம் உதித்ததுபோல் நீ உதித்தவள்.
நீயும் சந்திரனுடைய ஓர் மூர்த்தி விசேஷமாவாய். திருப்பாற்கடலில் சந்திரனோடுகூட உதித்த
பெரியபிராட்டியாருக்கு நீ உடன்பிறந்தவளுமாவாய்” என்று ஸாதிப்பதால்
இங்கே “ஸ்ரீவிஷ்ணு சித்தத்தில உதித்தவள்” என்றும் பொருள் கொள்ளுவது உசிதமே. கவியின் கருத்தே.
ஸ்ரீவிஷ்ணுசித்தருடைய குலமென்னும் நந்தனோத்யானத்தில் தோன்றிய கற்பகக்கொடி என்னும் பொருளுள்ளவே உள்ளது.
“விஷ்ணுவை நினையாதவர் பூமிபாரம் என்றும்,
அவர்கள் தின்னும் சோற்றைப் பிடுங்கி நாய்க்கிடுமின்” எனறும் பேசுபவர் விஷ்ணுசித்தர்.
திருவையும் பெருமாளையும் ஸர்வகாலமும் த்யானித்துக் கொண்டே இருக்கையில்
திருவின் அம்சமான கோதையெனும் தூய கற்பகக்கொடி அவர் தூய சித்தமாகிய பூந்தோட்டத்தில் அவதரித்தாள்.
க்ருத யுகத்தில் மனதாலே மாத்ரம் ச்ருஷ்டி, உடம்பாலல்ல.
கலியிலும் இந்த க்ருதயுகப் பெண் பெரியாழ்வார் சித்தத்தில் ஆவிர்பவித்தாள்.
சீதை கர்மடரும் ஜ்ஞானியுமாகிய ஜனகராஜனுடைய யாகபூமியில் அவதரித்தாள்.
ஜனகரைப்போல பெரியாழ்வாரும் சிறந்த கர்மடர். ச்ரௌதவிஷயமான கல்பஸூத்ர வ்யாக்யான மியற்றியவர்.
இரண்டாமடியில் ஆண்டாளோடு யோகத்தைச் சொல்லுகையில் சந்தன யோகத்தைப் பேசுவது விவாஹத்திற்கேற்றதாகும்.
ஆண்டாளை ஸ்மரிப்பதிலும் பேசுவதிலும் பரிமளத்தையும் புஷ்பத்தையும் பேசாமலிருக்கக் கூடுமோ?
தேவோத்யானமான பூந்தோட்டத்தையும், கற்பகக்கொடியையும், ஹரிச்சந்தன வ்ருக்ஷத்தையும், சந்தனத்தையும்,
“கந்தத்வாராம் துராதர்ஷம்” என்று வேதம் கொண்டாடிய கந்தங்கமழும் ஸ்ரீயை
இருதரமும் இங்கே குறிப்பது பரிமளங்களின் சேர்த்தியைக் காட்டுகிறது.
மற்ற தேவிமாரும் கோதையும் ஒரு மனதே என்பதைக் காட்ட பூதேவியே கோதை என்பதை
“இவள் ஸாக்ஷாத் க்ஷமாதேவியே” என்று மூன்றாமடியில் காட்டுகிறார்.
“இவள் பொறுமையின் அவதாரமே” என்பது அதற்குப் பொருள்.
“கருணாமிவ ரூபிணீம்” என்றபடி கருணைக் கடலாகிய லக்ஷ்மீதேவி தயையின் மூர்த்தியாவாள்.
கோதையும் கருணைக் கடலாகையால், தன்னுடைய எல்லையில்லாத கருணையால் அபரலக்ஷ்மீயாவாள் என்கிறார்.
இப்படி பொறுமைக்கும், கருணைக்கும் நிதியானவளைச் சரண் புகுந்தால் பலம் கிடைப்பது நிச்சயம் என்று விளக்குகிறார்.
இங்கே “நப்பின்னை” என்றும் நீளாதேவியைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
“நப்பின்னாய் கந்தம் கமழும் குழலீ”,
“மைத்தடங்கண்ணினாய்” என்றும் ஆண்டாளால் துதிக்கப்படுபவளும்,
“நப்பின்னை நங்காய்த் திருவே துயிலெழாய்” என்று திருவோடு பிரியாதவளென்று பேசப்படுபவளும்,
கூடாரை வெல்லுஞ்சீரில் பெருமாளோடுகூடச் சேர்ந்து ஆண்டாளுக்குப் “பல்கலனுமணிவது” முதலிய
சம்மானமளிப்பதாகப் பாடும் விஷயமுமான நப்பின்னையும் கூடித்தான் ஆண்டாள் திருக்கல்யாணம்
முதலிய மங்களங்கள் நடக்குமென்பது திண்ணமாகையால் இங்கே தனித்துப்பேச வேண்டிய அவச்யமில்லை.
முடிவில் 28வது சுலோகத்தில் “சதக மணி நீலா” என்று ஒருவாறாக நீளா நாமத்தையும் நிர்த்தேசிக்கிறார்.
“வலந்திகழும் திருமகளுமற்றிடத்தே மன்னிய மண்மகளோடு நீளையாரும் நலந்திகழ் வீற்றிருந்த
நாதன் பாதம் நமக்கிதுவே முடியென்றெண்ணினோமே” என்பதையும் நினைக்கவேணும்.
ஸ்ரீரங்கராஜனோடு சேர்த்தியில் ஸ்ரீபூதேவிகளான உபயநாய்ச்சிமாரே த்ருச்யராய் ஸேவை ஸாதிப்பதால்,
இரண்டு தேவிமாரை மட்டும் குறிப்பாக இங்கே நிர்த்தேசிக்கப் பட்டது.
இந்தத் துதியில் ச்லோகங்களின் எண்ணிக்கை 29. தத்துவங்கள், ஜடம் 24, ஜீவாத்மா 1, 26வது தத்துவமாகிய பெருமாள் 1,
அவருடைய தேவிமார் 3, ஆக தத்துவக் கணக்கு மொத்தம் 29ஐ அநுஸரித்ததாயிருக்கலாம்.
கோதை பாடின திருப்பாவையின் கணக்கு 30ல், “பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும்” என்று
திருப்பாவையின் வர்ணனம் மட்டுமான கடைசிப் பாட்டைச் சேர்க்காமல் “சிற்றஞ்சிறு காலை”யோடு பூர்த்தி
செய்து 29 கணக்காகத் திருவுள்ளமாயிருக்கலாம்.
இங்கே 29வது சுலோகத்தில் “சரண கமல ஸேவாம் ஶாஶ்வதீ மப்யுபைஷ்யந்” என்று இருப்பது
“உன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்”
“நீ குற்றேவல் எங்களைக்கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுற்றோமே யாவோமுனக்கே நாமாட்செய்வோம்”
என்று 29ம் பாட்டிலுள்ளதையே அநுஸரிப்பது ஸ்பஷ்டம்.
“இதி பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய” என்று 29ம் சுலோகத்திலுள்ளது.
30ம் பாட்டில் “கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே இங்கிப்பரிசுரைப்பார்” என்பதை
முழுவதும் அநுஸரிப்பதும் ஸ்பஷ்டம். “இதி வக்தி” என்பதற்கு “மலர்ந்த பக்தியோடு தேசிகன் (வேங்கடேசன்)
மனதிலிருந்து உருகி (வாக்காக) வெளிவரும் ப்ரகாரமாக இப்படியே யார் தப்பாமே உச்சரிக்கிறாரோ” என்பது பொருள்.
“இப்பரிசுரைப்பார்” என்பதற்கும்,
“கோதை எப்படி பக்திவெள்ளமாக மனமகிழ்ந்து உரைத்தாளோ அப்படியே ஓதுபவர்” என்பது பொருள்.
ரங்கராஜனிடம் கோதையின் பக்தியையொக்கும், கோதையிடம் ஸ்ரீதேசிகன் பக்தி.
“சங்கத்தமிழ்மாலை” என்பதற்குச் சிறந்த தமிழாகிய சங்கத் தமிழாலியற்றிய பாமாலை என்றும் சொல்லலாம்.
“பஹுகுணரமணீயாம்” என்பது சங்கத் தமிழ்போல உயர்ந்த ஸம்ஸ்க்ருதமான வைதர்ப்பீ பாஞ்சாலி ரீதிகளிலமைந்தது.
கோதையினின்னருளால் இத்துதி என்று பேசுவதாகச் சொல்லலாம்.
இத்துதியை ஓதுமவன் ஸ்ரீமானான ரங்கபர்த்தாவுக்கு பஹுமாந்யனாவான்.
திருப்பாவை முப்பதுந் தப்பாமே உரைப்பவர்
“ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கட்திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்குந் திருவருள் பெற்று இன்புறுவர்”
கோதைக்கு “செங்கட்திருமுகத்துச் செல்வத் திருமால்” ஸ்ரீரங்கராஜன்.
“ஆண்டாளரங்கர்க்குப் பன்னு திருப்பாவை” என்றபடி ஸ்ரீரங்கராஜனே திருப்பாவைக்கு விஷயம்.
இம்முப்பதுந்தப்பாமே உரைப்பதனால் திருமாலால் வையத்து வாழ்வோர்கள் அருள் பெற்றின்புறச் செய்வதே
“தனக்குப் பாவை, வ்ரதம்” என்பதை “என் பாவாய்” என்றடுத்த பேச்சால் காட்டப் படுகிறது.
“இதுவே எனக்கு வ்ரதம்” என்று இவள் பதி இராமன் சப்தம் செயததுபோல் கோதைக்கு இப்படி வ்ரதம்.
வாக்கைக் கொடுத்த கோதை விஷயமான இந்த ஸ்துதி 29ம் கோதை சொல்லுவித்ததாகையால்
இதற்கும் திருப்பாவையை ஓதுவதுபோல பலமுண்டு என்பது திருவுள்ளம்.
“திங்கட்திருமுகத்துச் சேயிழையார்” என்று கண்ணனைக் குறித்து விரதம் அநுஷ்டிக்கும் ஆய்ச்சியரைச்
சந்த்ர பிம்பம்போன்ற முகமுடையார் என்று புகழ்ந்தாள்.
ஒரு பெண்மணி மற்றப் பெண்களின் அழகை ஒப்புவளோ? புகழ்வளோ?
கோதையின் கோதிலாக் குணங்கள் இதனால் வெளியாகும்.
திருப்பாவை முடிவில் ஆண்டாள் பேசிய “திங்கட் திருமுகத்தை”,
முதல் பாட்டிலேயே “திங்கள், மதி, நிறைந்த மதி, மதியம்போல் முகத்தான்” என்று த்வநிப்பதை ரஸிகர் கவனிக்க வேண்டும்.
இப்படி முதலிலும் முடிவிலும் பேசுவதால் திங்கள் (மதி) மதி நிறைந்திருந்தது ஆண்டாள் நெஞ்சில் என்பதை
ஸ்ரீதேசிகன் அநுபவித்து இங்கே முதல் சுலோகத்தில் “சந்திரன் (புருஷனுடைய) மனதிலிருந்து ஜாதன்” எனற
புருஷஸூக்த ச்ருதியை அநுஸரித்து “விஷ்ணுசித்தத்தை நந்தனம் செய்து அதில் தோன்றியவள்” என்பதையும்,
இரண்டாமடியில் சந்த்ரபர்யாயமான ராஜசப்தத்தை ப்ரயோகிப்பதால்,
ஸ்ரீரங்கசந்த்ரன் என்றும் பேசுகிறார் என்பதையும் ரஸிகர் அறியவேணும்.
“ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்த்தும்” முதலிய ஸ்ரீபட்டர் அநுபவங்களையும் நினைக்கவேண்டும்.
இங்கே “கோதாம்” என்பது விசேஷ்யம். இது ஸாபிப்பிராயம்.
“வாக்கைக் கொடுப்பவளைச் சரணமடைகிறேன்” என்றதால் பரிகராங்குரம் என்னும் அணிமுறையாக
வாக்கின் அபேக்ஷையை ஸூசிக்கும் ஸ்வாரஸ்யமும் கவனிக்கத் தக்கது.
இங்கே ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கராஜனோடு யோகம், அவள் திருநாமமாகிய “கோதா” சப்தத்திற்கும் யோகம்
என்னும் அவயவப் பொருள். இங்கே “விஷ்ணுசித்தகுலநந்தன” என்பதால்
“ஜனக வம்சத்தரசர்கள் குலத்திற்கு என் பெண் கீர்த்தியைக் கொணர்வாள்” என்ற ஜனகர் வார்த்தையை நினைக்க வேண்டும்.
———
வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸிநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ்த்வதீயா|| .2.
“எண்ணிறந்த சுருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என் போன்றவருடைய
எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல்
சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள்
என் வாயைத் திறந்து வைத்துப் பேசச் செய்கின்றன.”
தாத்பர்யம்
கோதா என்கிற திருநாமத்தைச் சொல்லி அவளைச் சரணமடைகின்றேன் என்றார்.
தேவ ஜாதியர் பரோக்ஷணமான பேச்சில் ரஸிப்பர். தேவியான கோதையை ‘கோதையைச் சரணமடைகிறேன்’ என்று
முதலில் த்வய மந்த்ரத்தில் போல பரோக்ஷமாகப் பேசிச் சரணம் புகுந்தார்.
மஹா கவியான கோதை, கண்டையின் அவதாரமான உத்தம (த்வநி) கவி தேசிகன் ப்ரயோகித்த
‘கோதா’ சப்தத்தின் த்வயர்த்தத்தை உடனே அறிந்தாள்.
பரிகராங்குராலங்காரத்தால் ஆசைப்படுவது கவிதை என்பது வஸ்து த்வனி.
தன்னைத் துதிக்க அர்ஹமான உத்தம வாக்கைக் கேட்கிறார் இவர் என்று அறிந்து கொண்டாள்.
“ஸ்ரீரங்கராஜனுடைய திவ்யாஜ்ஞையால் வேதாந்த தேசிகன் என்றும், அவர் திருவோலக்கத்தில்
பெரியோரால் கவிதார்க்கிக ஸிம்ஹம் என்றும் பிருதளிக்கப்பட்ட நீர் என்னைத் துதிக்க கவிதா பிக்ஷை கேட்பீரேயானால்,
எம் நாயகன் கொடுத்த பிருதங்கள் பொய்யாகாவோ?
ரங்கபர்த்தா தானம் செய்த வேதாந்தாசார்ய ஸம்ஜ்ஞையை அந்வர்த்தமாகச் செய்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து,
ஸஹஜபஹுகுணமான ஸ்ரக்தரைப் பாற்கடலான ஸாராவளியைப் பாடினீரே?
எம் நாயகர் கொடுத்த கவிதைப் பிச்சையால் நீர் பூரணரல்லவா?
அரை வயிற்றுக்குத்தான் “கொள்ளக்குறைவிலனும் வேண்டிற்றெல்லாம் தருபவனுமான” ஸ்ரீரங்கராஜன் பிச்சை கொடுத்தாரோ?
நீர் வேதாந்த தேசிகராயிற்றே, நான் ஈச்வரியாயிருந்தாலும், ஈச்வர தத்வத்தின் நிலையை வேதாந்தங்கள் அறியாவோ?
வேதாந்த தேசிகருக்கு வேதாந்தங்களுக்கு நிலமான ஈச்வர மஹிமை நிலமாகாதோ? ஓய் தேசிகரே” என்று கோதை வினவ,
உன் மஹிமையிருக்குமூரிலேயே வேதாந்தங்கள் அணுகக் கூடவில்லை.
வேதாந்தங்களுக்கு உன்னுடைய மஹிமை வைதேசிகம் என்பதால் கைமுத்யத்தால்,
வேதாந்த தேசிகனுக்கும் அவன் பெருமை வைதேசிகமென்று ஸித்திக்கிறது.
ஒருவர் ப்ரபாவம் அவருக்கு ஸமீபத்திலிருந்தால் தெரியலாம். ஒரே ஊரிலிருந்தாலும் தெரியலாம்.
ஸாமீப்யம் அல்லது ஸாலோக்யமாவது இருக்க வேணும். ஸாலோக்யமேயில்லை. ஸாமீப்யத்திற்கு ஆசையேது?
வேதங்கள் அனந்தங்களென்பர். என் போன்றவர்களுக்கு சில எழுத்துக்கள் கூட்டத்தான் தெரியும்.
என் போன்றவர் எழுத்துகளுக்குள் உன் மஹிமை அளவடங்குமோ?
வர்ணம் என்பது எழுத்தையும் சொல்லும். ஸ்தோத்ரத்தையும் சொல்லும்.
(வர்ண்யதே அநேந — இதனால் வர்ணிக்கப் படுகிறது) எங்கள் எழுத்துக்களிலடங்காது.
நாங்கள் வெட்கத்தைவிட்டுக் கோணாமாணாவென்று ஸ்தோத்ரங்களை (வர்ணங்களால் வர்ணநங்களைச்) செய்தாலும்
உன் மஹிமை அதிலடங்குமோ? துதிப்பாடலுக்கும் வர்ணமென்று பெயர்.
இந்த ச்லோகத்தில் ‘கர்த்தும் ததீய மஹிமஸ்துதிம்’ என்ற ஆளவந்தார் ச்லோக வார்த்தை ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது.
துதியென்றால் மஹிமையின் துதியாகும். மஹிமையை அறியாமல் எப்படித் துதி செய்கிறது?
‘யதாவத் வர்ணநே தஸ்ய கிமுதாந்யே மிதம் பசா:’ என்று யாதவாப்யுதயத்தில்
‘வேதங்களே பாடிப்பாடி ஓரோர் குணத்தின் ஏகதேசத்திலே சோர்வடையும் விஷயத்தில் மிதக்ஞரானவர்
யதாவத்தாய் உள்ளபடி வர்ணிப்பதில் ஸமர்த்தராகாரென்பதற்குக் கேட்க வேணுமோ?’ என்று ஸாதித்ததை நினைக்க வேணும்.
உள்ளபடி வர்ணிப்பது வர்ணமென்னும் துதி. அங்கே கைமுத்யம் ஸ்பஷ்டமாக்கப்பட்டது.
இங்கே கைமுத்யம் வ்யஞ்ஜிதம். என் அறியாமையை நான் நன்கறிந்தும் திடீரென்று பலாத்காரமாய்,
உன் குணங்கள், உன் சிசுவாகிய நான் ஊமையாயிருப்பதை ஸஹிக்காமல், என் மௌனத்தின்மீது கோபித்து,
என் வாயைத் திறந்துவிட்டு என்னைப் பேச்சைக் கொடுக்கும் வ்யாபாரத்தில் தள்ளி விடுகின்றன.
‘ஸஹஸைவ’ அதிவேகமாகவே, பலாத்காரமாகவே. ஒன்றுமறியேனென்கிறீர்,
மௌனத்தைக் காணோமே, வாய் திறக்கிறீரே, இதென்ன ஸாஹஸம் என்பாயோ?
அம்மா இது உன் குணங்களின் ஸாஹஸம், அவற்றின் பலாத்காரம், என் ஸாஹஸமல்ல.
உன் குணங்கள் உன் குழந்தையாகிய என் மௌனத்தைக் கோபிக்கின்றன.
பெருமாள் குணங்கள் மௌனத்தை நிர்ப்பந்திக்கும். அவர் ஆனந்த குணத்தைப் பேசி ஓய்ந்து
வாயை மூடிக்கொண்டு சும்மாயிருப்பதே அழகு என்று வேதம் நிவ்ருத்தி அடைந்தது.
‘முகலாயம் நிலில்யே’ ‘ஊமையாக லயமடைந்தது’ என்று ஸ்ரீபட்டர் ஸாதித்தார்.
பெருமாள் குணங்கள் அவருடைய ஐச்வர்யப் பெருமையால் மௌனத்தையும், ஊமைத் தன்மையையும் ஸஹிக்கும்.
பேசாமலும் செய்யும். தாயாகிய உன்னுடைய குணங்களோ குழந்தை வாயை மூடி ஊமையாயிருப்பதை ஸஹிக்காது.
மௌனத்தைக் கோபித்து வாயை உடனே திறந்து விடும். வேறொன்றையும் உன் குணங்கள் கோபிக்கமாட்டா.
மௌனத்தை மட்டும் கோபிக்கும்.
பெருமாள் குணங்களுக்கும் உன் குணங்களுக்கும் இந்த வாசியுண்டு. என்ன குணங்கள்?
முன் ச்லோகத்தில் மூன்று சொன்னேன். அவையென்ன? க்ஷமை, கருணை, கோதை என்ற திருநாமத்திற்கேற்ற
“வாக்கைத் தானம் செய்வதென்னும் குணம்”. என்ன பிதற்றினாலென்ன?
சொற்குற்றம், பொருள் குற்றம் எத்தனையிருந்தாலுமென்ன? உன் பொறுமை அதையெல்லாம் பொறுக்காதோ?
ஏன் அஞ்ச வேணும்? உன்னைத் துதி செய்தாலல்லது நான் தரிக்க முடியாத என் ஆர்த்தியைக் கண்டும்
உன் கருணை என்னைக் கைவிடுமோ? “கோதா — வாக்கையளிப்பவள்” என்னும் உன் திருநாமம் கோபியாதோ?
இரண்டுக்கும் பரஸ்பரம் சத்ருத்வமில்லையோ? வாக்கைக் கொடுக்கும் குணம் கொள்வாரில்லாமற் போனால்
கானக நிலவு போல வீணாகாதோ?
“முகரயந்தி” என்பதிலும் மிக்க ரஸமுண்டு. ‘முகம்’ என்பது வாய்க்குப் பெயர்.
லக்ஷணையாக வாய்ப்பேச்சை, வாக்கைச் சொல்லும். முகத்தைக் கொடுப்பது முகரம்.
முகம்ராதி. ராதி என்பதற்கு, கொடுக்கிறது என்று பொருள். வாய்ப்பேச்சை, வாக்கை, துதியைக் கொடுப்பது முகரம் —
வாயைக் கொடுக்கச் செய்கிறது என்று மொத்தப் பொருள். என் வாயைக் கொடுக்கச் செய்தால்தானே,
உனக்கு கோதா என்னும் திருநாமம் நிலைக்கும். (2)
—————-
த்வத்ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீயமணிநூபுர சிஞ்ஜிதாநாம்|
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
வாசம் ப்ரஸந்நமதுராம் மம ஸம்விதேஹி || .3.
உன் காந்தனுடைய செவிகளுக்கு அம்ருதம் போன்றதாயிருப்பதும், உன்னுடைய மணிச் சிலம்பி னோசைக்குத்
துல்யமானதும், உன்னை நன்கு துதிக்க யோக்யமுமான ப்ரஸந்ந மதுர வாக்கைத்
தாயாகிய நீயே எனக்கு அமைத்தருள வேணும்.
தாத்பர்யம்
(1) நீர் சரணம் புகுகிறதாகவும், நீர் என் மஹிமையை அறியவும் பாடவும் அசக்தர் என்றும் பேசுகிறீர்.
ஆனால் கவி பாடிய இரண்டு சுலோகங்களும் அழகியதே. அப்படியே நீர் பாடலாம்.
(2) சரணம் புகுகிறேனென்கிறீர். வாய் திறக்கப்படுகிறது என்கிறீர்.
முழு வாயால் கவிதா சக்தி வேணும் என்று அர்த்திக்க மாட்டேனென்கிறீரே!
திறந்த வாயால் வேண்டியதை நன்றாய்ச் சொல்லிக் கேளும் ! வெட்கப்படாதேயும். இப்படிச் சொன்னதும்,
உன் மணிச் சிலம்பினோசையைப்போல் உன் நாயகன் செவிகளுக்கு அமிர்தத்தை வார்க்கும்
இனிய கவிகளையல்லவோ நான் ஆசைப்படுவது!
அப்படிக்கினிய கவிகள் எனக்கு நீ கொடாமல் போனால் ஸ்வயமாய் எனக்கு அவை சக்யமல்ல.
தாயாகிய உன்னிடமெனக்கு என்ன வெட்கம்? வாய்விட்டு நன்றாக யாசிக்கிறேன் என்றார்.
ச்ருதிகளுக்கெட்டாதது உன் மஹிமையென்றார் முன்பு. இங்கே உன் நாயகன் சுருதிகளுக்கு மதுரமாய் எட்டவேணும் என்கிறார்.
உன் நாயகன் எத்தகையவர் தெரியுமோ? எல்லாக் கவிகளும் அவரிடம் தங்கள் காவ்யங்களைப் பாடி அரங்கேற்றிப் பரிசு பெறவேணும்.
எல்லாக் கவிகளும் அவரிடம் பாடி இற்றைப் பறை பெற்றால்தான் உலகம் அவர்கள் கவிகளை பஹுமானிக்கும்.
தம் விஷயமான காவ்யமாயின், அதன் இனிப்புக் குறையலிருந்தாலும் குறை சொல்லமாட்டார்.
ப்ரிய காந்தையும், உத்தம கவியுமான உன் விஷயமான கவியாதலால், அமிர்தமாயிருந்தாலொழிய அபிநந்தனம் செய்யார்.
ப்ரதிதினமும் தன் முன்பு அரங்கேற்றப்படும் காவ்யங்களைக் கேட்டுக்கேட்டு காவ்ய குணதோஷங்களைப் பூர்ணமாய்
பரீக்ஷிக்கத் தெரிந்த செவிகளை உடையவர் அரங்கராஜர். அவருக்கு பஹுகுணரமணீயமென்று பஹுமானிக்கத் தக்கதாய் வேணும்.
அமிர்தம் போல் இனிப்பென்றதோடு திருப்தியில்லை. மற்றோருபமானமும் செய்கிறார்.
அந்த உவமையையும் கோதை ஸம்பந்தமாகவே எடுக்கிறார். உன்னுடையது உன்னுடையது என்று இங்கே பலதரம் பேசுகிறார்.
உனக்கு மிகப்ரியன், உன்னுடைய மணிச்சிலம்புகளினொலிகள் த்வமேவ (நீயே, நீயாகவே) உன்னை
நன்கு துதிக்க அர்ஹமாக என்றே திரும்பவும் திரும்பவும் பேசுகிறார். எல்லாம் உனதாகவே இருக்கவேணும்.
என்னதென்பதே கூடாது.
உன்னுடைய மணிச்சிலம்பின் ஓசை காதில் விழுவதை அவர் எல்லையில்லாத ஆவலுடன் ப்ரதீக்ஷித்துக் கொண்டிருப்பர்.
அதனிலும் இனியது அவர் செவிக்குக் கிடையாது. உன் வரவை அல்லவோ, அது முன்பே காட்டும்!
“மணியோசை வருமுன்னே, நீ கஜகாமினியாய் ஆடியாடி நடந்து வருவதையல்லவோ அவ்வோசை காட்டும்.
கோதையின் அடிச்சிலம்பின் ஓசையைப் போன்ற மதுரவாக்கை யாசிக்கிறார்.
சேஷனாகிய தம் வாக்குக்கு அவள் திருவடி ஸம்பந்தமான சிலம்போசையின் உவமையைச் சொல்லுவதுதான் அழகு.
அவள் “வந்த்ராரவிந்த மகரந்த துல்ய”மான வாக்கைக் கேட்கவில்லையென்பதைக் கவனிக்கவேணும்.
“கோதே த்வமேவ ஜநநி வாசம் ஸம்ஹிதேஹி” வாக்கைக் கொடுப்பதையே ஸ்வபாவமாக உடைய
நீ (கோதை) நீயாகவே ஸ்வயமாய்க் கொடுக்க வேணும். தாதாக்கள் நிர்ப்பந்தித்தால் கொடுப்பவரல்லரே.
தம்பேறாகத் தாமாகவேதான் கொடுப்பர்.
‘ஜநநி’
தாயே, என்னைப் பெற்றவளே, என்னைப் பெற்ற நீ என் துதியையும் நீயே பெறுவாயாக.
(பிறக்கச் செய்வாய்) பெற்ற ஜநநியைத்தானே “பவதி பிக்ஷாம் தேஹி” என்று என்று குழந்தைகள் யாசிப்பர்!
பிக்ஷாம் தேஹி என்பதுபோல் சப்தம் இருக்க, ‘ஸம்ஹிதேஹி’ என்று ஸாதித்தார்.
நான் உன்னை யாசிக்க வெட்கப்படவில்லை. பெற்றவள்தானே என்போன்ற ப்ரஹ்மசாரிகளுக்கு பிச்சை போடவேணும்
! உன் நாயகனுக்கு செவிக்குக் கொடுக்கவல்லவோ நான் உன்னை யாசிக்கிறேன்!
நீ எனக்குக் கொடுக்கும் வாக்குப் பிச்சை உன் நாதன் செவிகளுக்கு அமிர்தமாகும்.
க்ருஷ்ண கர்ணாம்ருதம், ராமகர்ணாம்ருதம் என்ற பகவத் ஸ்தோத்ரங்களைக் காட்டிலும் கோதை கர்ணாம்ருதமே
அவர் செவிக்கு அத்யந்தமின்பத்தைப் பயக்கும்.
“நானே வாக்கைக் கொடுத்து என்னைத் துதிக்கச் செய்து அதை நானே கேட்டு மகிழலாமோ?” என்று நீ கேட்பாயோ?
நீ எனக்கு வாக்கைக் கொடுத்து உன்னைப் பற்றிப் பாடச் செய்தால் போதும். அப்பாட்டை நீ காது கொடுத்துக் கேட்கவேண்டாம்.
உன் நாயகன் கேட்பதே போதும்.
த்வதபிஷ்டவார்ஹாம்.
கவிச் சக்ரவர்த்தினியான உன்னை நன்கு இனியப் பாட யோக்யமான வாக்கு உன் கவிதையே.
இங்கே ‘அபிஷ்டவம்’ என்னும் பதத்தைக் கவனிக்க வேணும்.
கோபால பாலனை ப்ரஹ்மதேவன் வத்ஸாபஹாரப்ரகரண முடிவில் ப்ரஹ்மஸ்துதி என்று பெயர் பெற்ற
அத்புத ஸ்தோத்ரத்தால் துதி செய்து முடிந்ததும்
“இத்யபிஷ்டூய பூமானம் த்ரி:பரிக்ரம்ய பாதயோ” (இப்படி எல்லையில்லாப் பெருமையும் ஸுகமுமான கண்ணனை
நன்கு துதித்து மூன்று ப்ரதக்ஷிணங்கள் செய்து திருவடிகளில் விழுந்தார்) என்று அவர் மகிழ்ந்து வர்ணிப்பதில்
நான்கு முகங்களாலும் ஸர்வகாலமும் நான்கு வேதங்களையும் அத்யயனாத்யாயனம் செய்யும்
ஸரஸ்வதீகாந்தரான ப்ரஹ்மதேவன் ஸ்துதியை “அபிஷ்டவம்” என்று பேசினார். அதுபோன்ற ஸ்தவத்தில் ஆசை.
திருவேங்கடமுடையான் தயாவிஷயத்திலும் “அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்” என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார்.
ஆளவந்தார் சதுச்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை “அபிஷ்டௌதிஸ்துத்யாம்” என்று
அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும்? ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ்,
அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா? மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா?
தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும்
(விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா? உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே
ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
“கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் ! யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:” என்று பாடியிருக்கிறீரே !
வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா! கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும்,
மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீதியையும் அளிக்க வேணும்.
விபஞ்சீ (வீணை) ஸ்வரம் போன்ற இனிப்புடையது வைதர்பீ என்பர். யாழிலுமினிதாகும் உன் சிலம்பின் ஓசை.
கோதை சிலம்பின் ஓசையைப் போன்ற என்றதால் உயர்ந்த வைதர்ப்பரீதியைக் கேட்டதாயிற்று.
ப்ரஸந்ந மதுரமான வாக்கை அளிக்க ப்ரார்த்திக்கிறார். மதுரம் என்பது பாஞ்சாலிரீதியை அஸாதாரணமாகக் காட்டும்.
ப்ரஸாதம் முதலிய சிறந்த எல்லாக் குணங்களையும் உடையது வைதர்ப்பீ ரீதி. ‘ப்ரஸந்ந’ என்பதால் அந்த ரீதியையும் கேட்கிறார்.
இந்த ரீதிகளால் கந்தங் கமழும் மாலை போன்ற ஸரஸ்வதியை யாசிக்கிறேன்.
உன் பாமாலை போன்ற இனிப்பும், ஸௌரப்யமுமிருக்க வேணும். வாக்கின் பரிமளத்தை உன்னிடம் யாசிக்கிறேன்.
புஷ்பம் போன்ற வாக்கு வேணும். பெருமாளுக்கு வாக்கு மாலை ஸமர்ப்பிக்க உன்னிடம்தானே யாசிக்க வேணும்!
நியே விதானம் செய்யவேணும். விதானம் மட்டும் போதாது. நன்றாய் விதனம் செய்யவேணும்.
(அமைக்கவேணும்) ஸம்விதானம் செய்விதர்ப்பாதிபதியின் புத்திரி ருக்மிணீ. கிருஷ்ணனுக்கு பரம மித்ரமானவள் பாஞ்சாலி, த்ரௌபதி.
அவள் ருக்மிணிக்கு ப்ராண ஸமமான ஸகியாவாள். வைதர்ப்பி, பாஞ்சாலி என்னும் திருநாமங்களே பெருமாளுக்கும் கோதைக்கும் அமிர்தமாகும்.
————-
க்ருஷ்ணாந்வயேந ததீம் யமுகாநுபாவம்
தீர்த்தைர் யதாவதகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வரதியாம் பவதீகடாக்ஷாத்
வாசஸ் ஸ்புரந்தி மகரந்தமுச: கவீயாம் || (4)
கோதே — கோதாய், க்ருஷ்ணாந்வயேந — கிருஷ்ண ஸம்பந்தத்தால்;
யமுனானுபாவம் — யமுனையின் பெருமையை; தததீம் — தரிப்பவளான; தே — உன்னுடைய;
ஸரஸ்வதி — ஸரஸ்வதியை (வாக்கை, நதியை); தீர்த்தை — குருக்களின் முகமாக; (இறங்கும் துறைகள் வழியாக);
ததாவத் — உள்ளபடி (சாஸ்திரமுறைப்படி); அவகாஹ்ய — இறங்கி ஸ்நானம் செய்து;
பவதீகடாக்ஷாத் — உன் கடாக்ஷத்தால்; விகஸ்வரதியாம் — மலர்ச்சி அடைந்த புத்திகளையுடைய;
கவீநாம் — கவிகளுடைய; வாச: — வாக்குகள்; மகரந்தமுச: — தேனைப் பொழிந்துகொண்டு; ஸ்புரந்தி — விளங்குகின்றன.
கோதாய்! க்ருஷ்ண ஸம்யோகத்தால் யமுனையின் பெருமையை உடையதான உன்னுடைய ஸரஸ்வதியை
(வாக்கை, நதியை), குருக்களின் முகமாக (இறங்கும் துறைகள் வழியாக) உள்ளபடி (சாஸ்த்ரமுறைப்படி)
இறங்கி ஸ்நானம் செய்து உன் கடாக்ஷத்தால் மலர்ச்சியடைந்த புத்திகளையுடைய கவிகளுடைய
வாக்குகள் தேனைப் பொழிந்துகொண்டு விளங்குகின்றன.
அவதாரிகைகள்
(1) என் நாயகனுடைய ஓர் அவதாரமான ஹயக்ரீவமூர்த்தியை நீர் துதிக்கையில்
மஞ்சுப்ரணாதம் மணிநூபுரம் தே மஞ்சூஷிகாம் வேதகிராம் ப்ரதீம: என்று பேசினீர்.
அவர் ரத்னச் சிலம்பின் இனிய ஓசையில் வேத ஸரஸ்வதிகள் பெட்டியில்போல் அடங்கியிருக்கின்றன என்று பாடினீர்.
இங்கே பெண்பிள்ளையாகிய என் சிலம்பின் ஓசையைப்போல் இனிய வாக்கென்கிறீர்.
இரண்டிடத்திலும் “மணிநூபுரம்” என்று ஒரேவிதப் பேச்சு.
அங்கே 27ம் சுலோகத்தில் கடாக்ஷா: ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ருதம் க்ஷரந்தீம் ஸரஸ்வதீம் திஸந்து என்று பாடினீர்.
உம்முடைய கடாக்ஷங்கள் மநுஷ்யர்கள் காதுகளில் அம்ருதத்தை வார்க்கும் ஸரஸ்வதியை எனக்கருள வேணும்
என்று ஹயக்ரீவதேவனைப் பிரார்த்தித்தீர். அம்ருத வாக்கை அவரிடமே ப்ரார்த்திக்கலாமே!
அவரிடம் ப்ரார்த்தித்ததை அவர் முன்பே உமக்கு அருளியிருக்கிறார்.
இப்பொழுது வெறும் பேச்சாக முகஸ்துதியாக நீர் அதே வார்த்தைகளைக்கொண்டு யாசிக்கிறீர்.
ஹயக்ரீவனிடமிருந்து அடையாமல் என்னிடமிருந்து பெறவேண்டியது மீதியுண்டோ?
இதற்கு பதில் கூறுகிறார்:–
அம்மா! நீ நன்றாய்க் கவனிக்கவேண்டும். பரமபுருஷனாகிய உன்னுடைய நாயகன் காதுகளில்
அம்ருதத்தை வார்ப்பதுபோல் இனிமையான வாக்கையல்லவா நான் முன் சுலோகத்தில் ப்ரார்த்தித்தது!
என் இஷ்ட தெய்வமான ஹயக்ரீவரை “பும்ஸாம்” என்று பொதுவாக மநுஷ்யர்கள் செவிகளுக்கு
இனிய ஸரஸ்வதியைத் தானே ப்ரார்த்தித்தேன்!
இங்கே உன்னை யாசிப்பது பரமபுமானுடைய செவிகளுக்கு அம்ருதமான சொற்கள். உன் நாயகன் ரங்கநடரல்லவோ?
சிலம்பில்லாமலும், சிலம்போசையில்லாமலும் நர்த்தனம் செய்வரோ! நான் மனப்பூர்வமாக உண்மையாகத்தான் துதிக்கிறேன்.
ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் “கடாக்ஷா: திஶந்து” என்று அனேக கடாக்ஷங்கள் நேர்ந்து
வாக்கை அனுக்ரஹிக்கட்டும் என்று ப்ரார்த்தித்தேன். உன்னுடைய ஒரு கடாக்ஷத்தைப் பெற்றுத் தேன் பொழியும்
பல வாக்குகள் ப்ரவஹிக்கும் என்று இந்த சுலோகத்தில் “பவதி கடாக்ஷாத் வாச: ஸ்புரந்தி” என்று பேசப் போகிறேன் அம்மா!
(2) என் கவிகளைக் கற்று யாரேனும் கவிஞர்களானார்களா? அம்ருதவாக்கைப் பெற்றிருக்கிறார்களா?
வாக்தேவியான ஸரஸ்வதியை உபாஸித்துக் கவிகள் அம்ருத வாக்கைப் பெறுவரென்பரே!
“தேவீம் வாசமுபாஸதே ஹி பஹவ: என்பர்.
இதன் பதில்:– உன்னுடைய வாக்குத்தான் பரிசுத்தமான ஸரஸ்வதி ரஸம் ஓர் அவிச்சிந்ந ப்ரவாஹமாகப்
புண்ய நதியைப்போல் பெருக்கு உடையது. உன் ஸரஸ்வதியை குருக்கள் முகமாகக் கற்றுத் தேன் மொழியைப் பெற்று
ப்ரகாசித்தவர் ஆளவந்தார், ஆழ்வான், பட்டர் முதலியவர். ஸரஸ்வதி தேவி கடாக்ஷம் பெற்ற கவிகளிலும்
நம் பூர்வாசார்யரான கவிகள் சிறந்தவர்கள். இவர்கள் கவிகள் இனிப்போடு நிகரற்ற பரிசுத்தியையுமுடையன.
உன் ப்ரபந்தங்கள் பரிசுத்தமான இனிய ஸரஸ்வதி, அவர்கள் வாக்ஸரஸ்வதியும் அப்படியே.
“தச்சாவ்யாஜவிதப்தமுப்தமதுராம் ஸாரஸ்வதம் ஶாஶ்வதம்” என்று அவர்கள் வாக்கை வர்ணித்துள்ளது.
அவர்கள் மதியும் வாக்கும் ஆஜாநசுத்தம். “செஞ்சொற்கவிகள்”
க்ருஷ்ணாந்வயேந —
க்ருஷ்ணன் ஸம்பந்தத்தால். க்ருஷ்ண த்ருஷ்ணாமயம் உன்னுடைய ஸரஸ்வதி.
க்ருஷ்ணனிடம் சுத்தமான பாவம் ஓர் ஸரஸ்வதிவெள்ளமாகப் பெருகியுளது. க்ருஷ்ணரஸ நதியாகுமுன்னுடைய ஸரஸ்வதீ.
க்ருஷ்ணனிடம் ஸமந்வயமுடையன உன் காவ்யங்கள். ப்ரஹ்மத்தினிடத்தில் வேதாந்த ஸரஸ்வதிகளுக்கு
ஸமந்வயத்தை நிரூபிக்கும் ப்ரஹ்மஸூத்ரங்கள் க்ருஷ்ணனென்னும் அம்ருத ஸமுத்ரத்தில்
த்ருஷ்ணையைப் பெருக்குகின்றன என்று ஸாராவளியில் பேசியுளது.
மஹர்ஷியின் ஸூத்ரங்களே அப்படி க்ருஷ்ண த்ருஷ்ணையைப் பெருக்கும் பொழுது,
ப்ரிய தமையான பெண்களின் ப்ரபந்தங்கள் க்ருஷ்ண த்ருஷ்ணையைச் சூழ்ந்ததனிற் பெரியதாகப் பெருக்குவதில் என்ன ஸந்தேகம்?
க்ருஷ்ணன் ஒருவனிடத்திலேயே உன் ஸரஸ்வதி அவ்விதம். பூமிப்பிராட்டி கோதை.
“யத் க்ருஷ்ணம் தத் வ்ருத்திவ்யா:” என்பது வேதம்.
பூமியின் வர்ணம் கருப்பு (க்ருஷ்ணம்) யமுனை நீரும் க்ருஷ்ண வர்ணம். க்ருஷ்ணவர்ண தத்வம் கோதைக்கே.
யமுனாநுபாவம்:–
க்ருஷ்ண ஸம்பந்தத்தால் “தூயபெருநீர் ” யமுனையின் பெருமையுளது உன்னுடைய ஸரஸ்வதீ.
க்ருஷ்ணனுடைய யௌவன லீலைகள் க்ருஷ்ணா நதியிலும், அந்நதிக்கரையிலும் நிகழ்ந்தன.
“யமுனாஸாக்ஷிகயௌவனம் யுவாநம்” யௌவன கேளிக்கைகளுக்கெல்லாம் யமுனை ஸாக்ஷி.
அநுபாவம் என்பது மனதிலழுந்தியிருக்கும் ச்ருங்காரபாவத்தை ஸூசிக்கும் விகாரசேஷ்டைகளையும் சொல்லும்.
முகுந்தன் வேணுகானத்தைக் கேட்ட நதிகள் மன்மதவிகாரம் நிரம்பி “நெஞ்சழியும், கண்கழலும்” என்பதுபோல்,
மனோவிகாரங்களைச் சுழல்களாலும், குமிழிகளாலும் காட்டிக்கொண்டு, கண்ணனை ஆலிங்கனம் செய்ய
ஆசையைக் காட்டுவதுபோல், அலைகளாகிய கைகளை உயர்த்திக்கொண்டு, ஆவலுடன் கரையிலிருக்கும்
க்ருஷ்ணனிடம் ஓடிவந்து தாமரை மலர்களை அவன் திருவடிகளில் ஸமர்ப்பித்துத் திருவடிகளைத் தழுவுகின்றன போலும்” என்று
சுகர் வர்ணித்தது யமுனா நதி விஷயம். பின்பு யமுனை (காளிந்தீ) கண்ணனுக்கு அஷ்டமஹிஷிகளில் ஓர் மஹிஷியானாள்.
அநு+அயம் அந்வயம் , அநு+பாவம் அநுபாவம் — காரண கார்யங்களுக்கு ஆநுரூப்யம்
தததீம் —
உன் ஸரஸ்வதிநதி யமுனையின் பெருமையை உடையது (வஹிக்கிறது).
தூயபெருநீர் யமுனை என்று யமுனைத்துறைவன் ஸம்பந்தமுடையதாக (அந்வயமுடையதாக) யமுனை நீரை வர்ணித்தாய்.
அப்படி வர்ணிக்கும் உன் ஸரஸ்வதிக்கும் அந்த வர்ணனம் தகும். இங்கே ததாநாம் என்று ஆத்மநேபதமாக
ப்ரயோகிக்காமல் தததீம் என்று பரஸ்மைபதமாக ப்ரயோகித்தது ரஸம்.
க்ருஷ்ண ரஸ வெள்ளத்தில் நீ நீராடி மகிழ்வதைப்போல், உன் ஸரஸ்வதியில் நீராடுகிறவர்களும் அதில் ஆழ்வதால்,
அந்த ரஸமுள்ள கவிதையை அவர்களும் பெற்று உத்தம கவிகளாகும்படிக்கும் செய்கிறாய்.
தே ஸரஸ்வதீம்:–
உன் ஸரஸ்வதியை. உன் க்ருஷ்ணபக்திரஸ கவிதா நதியில்.
ஸரஸ்வதீம் என்பதால் நுட்பமான பொருள் உள்ளே மறைந்திருப்பதனையும் கொள்ளவேணும். வ்யங்கியமே மிகுதி.
தீர்த்தை:–
வெள்ளமிட்டோடும் ரஸப்ரவாஹ நதியில் இறங்கும் துறைகளைக் காட்டும் பல ஆசிரியர்கள் முகமாக.
‘அனேக குருக்களிடம் அனேகம்தரம் கேட்கவேண்டும்’ என்பதைக் காட்டுகிறது பன்மை.
‘தீர்த்தம்’ என்பதற்குள்ள அனேகம் பொருள்களையும் கொள்ளவேணும்.
சாஸ்த்ரங்களை எல்லாம் கற்று உன் ஸரஸ்வதியில் நீராடவேணும். யஜ்ஞங்களை அநுஷ்டித்து
சித்த சுத்தியை ஸம்பாதித்துக் கொண்டு உன் பரிசுத்த ஸரஸ்வதியில் இறங்கவேணும். ‘விவிதிஷந்தி யஜ்ஞேந’
யதாவத்:–
உள்ளபடி உன் ஸரஸ்வதியின் ஹ்ருதயத்தை குருமுகமாக அறியவேணும். சாஸ்த்ரவிதிப்படி நீராடவேணும்.
சுத்த சுபஸங்கல்பம் செய்துகொண்டு மனச்சுத்தியோடு நீராட வேணும்.
அந்தர்வாஹினியானதால் (பொருள்கள் உள்ளே மறைந்து கிடப்பதால்) உள்ளபடி உன் கருத்தை அறிய
ஆசிரியர்கள் வழிகாட்ட வேணும். படிப்படியாய் உன் பா4வங்களிலாழ வேண்டும்.
அவகாஹ்ய:–
இறங்கி நீராடி. ராமாயணகவி “இதமேவா வகாஹிஷ்யே தமஸாதீர்த்தமுத்தமம்” என்று
புண்ய நதியிலே நீராடி அந்நதிக்கரையில் ராமாயணம் பாடினார்.
அதுபோல, உன் ஸரஸ்வதியில் எங்கள் பெரியோர் நீராடி மஹாகவிகளானார்கள்.
கோதே —
நீ இன்பத்துடன் கவி பாடினதால் உன் காவ்யத்தில் இனிய ரஸமுடையவருக்கு
உன் கடாக்ஷத்தால் உன் போன்ற வாக்கைக் கொடுக்கக் கவிதானம் செய்பவளே
பவதீகடாக்ஷாத்:–
உன் க்ருஷ்ணரஸ நதியான ப்ரபந்தங்களில் ரஸிப்பவரை நீ கடாக்ஷிக்கிறாய்.
உன் ஒரு கடாக்ஷம் போதும் அவர்களுக்கு அனேக உயர்ந்த புத்தி வ்ருத்திகள் கொழுந்துவிட்டு மலரும்படி செய்ய.
கடாக்ஷத்தில் ஒருமை, அதனால் மலர்ந்து வளரும் புத்திகளில் பன்மை. ‘விகஸ்வரதியாம்” என்பது பன்மை.
‘பவதீ கடாக்ஷாத்’ என்னுமிடத்தில் பவதீ என்பது ஸர்வநாம சப்தமன்று. அப்படியிருந்தால் ‘பும்வத்பாவம்’ வரும்.
கோதை கல்யாணம் வர்ணிக்கப்படுகிறது. அதற்கும் அது அநுசிதம். எல்லோரையும் சொல்லக்கூடிய ஓர்
ஸர்வநாமசப்தத்தால் ‘நாரீணாம் உத்தமவது’வான கோதையைச் சொல்லுவது அழகல்ல.
வேறு உணாதிவிகுதியை உடைய சப்தம் இது. இங்கே வர்ணிக்கப்படும் கவிகள் பட்டர் முதலியவர்.
“பவதீ ஸம்பந்தத்ருஷ்ட்யா ஹரிம்” என்று ப்ரயோகிப்பவர் அப்பெரியோர்.
அவர்கள் வாக்குகளை வர்ணிக்கையில் அவர்கள் ப்ரயோகத்தை அநுஸரிப்பது அழகு.
விகஸ்வரதியாம்:–
புத்தியும் புஷ்பமாயிற்று. அதற்கு மலர்ச்சியும், மலருகையில் வீசும் மணமுமுண்டு.
பூமாலை கோதை அனுக்ரஹிக்கும் வாக்கும் கவிபுத்தியும் புஷ்பமாக வர்ணிக்கப்படுவது உசிதமே.
கவீநாம்:–
ஆளவந்தார், ஆழ்வான், பட்டர், அம்மாள் முதலிய கவிகளுக்கு.
மகரந்தமுச:–
தேன் பொழிவதான
வாச: —
வாக்குகள்,
ஸ்புரந்தி —
ப்ரகாசிக்கின்றன. இத்தேனைக் காதாலும் பருகலாம்,
கண்ணாலும் காணலாம் போல் இருக்கிறது. “முடியானே”யிற்போல் அநுபவம். (4)
————-
அஸ்மாத்ருஶாம் அபக்ருதௌ சிரதீக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதெ யதஸௌ முகுந்த: |
தந் நிஶ்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரீநிநாதமதுரைஶ்ச கிராம் நிகும்பை:||
தேவி — தேவி கோதாய்! அபக்ருதௌ — அபராதம் செய்வதில்,
சிரதீக்ஷிதாநாம் — வெகுகாலமாய் தீக்ஷையாய்க் கொண்டிருக்கும், அஸ்மத்ருஶாம் — என் போன்றவரிடம்,
அஹ்நாய — உடனே, அஸௌ முகுந்த — இந்த முகுந்தன்,
தயதே இதியத் — தயவு பண்ணுகிறான் என்பது யாதொன்று உண்டோ, தத் — அதானது, தவ — உன்னுடைய,
மௌளிதாம்நாம் — சிரோமாலையின் நாரினாலும்,
தந்த்ரீநிநாதமதுரைஶ்ச — வீணைக்கம்பிகளின் நாதத்தைப்போல் மதுரமான, தவ — உன்னுடைய,
கிராம் நிகும்பை: — நூல்களாலும், நியமித: — நியமிக்கப்பட்டான், நிஶ்சிதம் — நிச்சயமாய்.
தேவி கோதாய்! அபராதங்களைச் செய்வதையே தீக்ஷையாக (வ்ரதமாக) வெகுகாலமாகக் கொண்டிருக்கும்
என் போன்றவரிடமும், உடனே (விரைவில், அன்றே) மோக்ஷம் கொடுப்பதாக முகுந்தன் தயவு பண்ணுகிறான்
என்பது நிச்சயமாய் உன்னுடைய சிரோமாலையின் நாரினாலும், வீணைக்கம்பிகளின் நாதத்தைப்போல்
மதுரமான உன்னுடைய நூல்களாலும் கட்டுப்பட்டுத்தான். அதனாலேதான் அப்படி அவன் உடனே தயவு செய்து முக்தி அளிப்பது.
அவதாரிகை
(1) என் வாக்கில் முறைப்படி ஈடுபட்டு ரஸிப்பவர் இனிய கவிகளாகித் தேன்மொழி செவிகளாரப் பொழிகிறாரென்றீர்.
என் ப்ரபந்தங்கள் எப்படி இனியதோ? கவிஸிம்ஹமே! உம் வாயால் கேட்கவேணும்.
அரங்கன் புகழ்வது போதாது. என்னது என்று பக்ஷபாதத்தால் புகழ்வர்.
(2) யஜ்ஞங்களால் (தீர்த்தங்களால்) சுத்தியடைந்து என் வாக்கை அறிய விரும்புகிறார்கள் என்று
யஜ்ஞாதி சுருதியைப் பேசினீர். உம்முடைய தகப்பனார் , பாட்டனார் யாகதீக்ஷிதர்கள். நீரும் தீக்ஷிதரோ?
(3) விபஞ்சீஸ்வரமதுரம் வைதர்ப்பரீதியென்பரே! என் வாக்கு அந்த லக்ஷணத்திற்கு ஏற்றதோ?
தேவி —
கோதா தேவியே! மோக் ஷப்ராப்தியையும், மோக் ஷப்ராபணத்தையும் பேசுகிறபடியால்
இங்கே தேவி என்று கூப்பிடுகிறார்.
அபக்ருதௌசிரதீக்ஷிதாநாம் —
ஒரு விதத்தில் நானும் தீக்ஷிதன்தான்.
யாகதீக்ஷிதர்கள் யாகமென்னும் “க்ருதி”யில் தீக்ஷிதர்.
நாங்கள் “அபக்ருதி”யில் தீக்ஷிதரென்று வேடிக்கையாகக் காட்டுகிறார்.
வெகுகாலமாய் நாங்கள் இப்படி அநாதி தீர்க்கஸத்ரத்தில் தீக்ஷிதர்கள்.
அஸ்மாத்ருஶாம் —
என் போன்றவர்களுக்கு, பகவத்த்ருஶேப்ய: என்பதுபோல,
அஸௌ —
உன் துதியைக் கேட்க இதோ நிற்கிறாரே, “அஸ்மாத்ருஶாம்” என்பது பரிஹாஸ வர்ணனம்.
முகுந்த: —
மோக்ஷத்தையளிக்கும் முகுந்தன். இதனால் செய்யும் தயவு மோக்ஷமளிப்பதென்பது ஸூசிக்கப் படுகிறது.
அஹ்நாய —
தாமதியாமல், உடனே, அன்று தினமே. நாங்கள் சிர காலம் அபராத தீக்ஷிதர்கள்.
“ஸுசிரேண” விளம்பமில்லாமல் உன் நாயகன் அன்றே மோக்ஷமளிக்கிறான். மோக்ஷமளிக்க அவர் வெகுகால தீக்ஷை!
தயதே யதஸௌ — அவன் தயவு செய்வது என்பது எதுவோ
தத் — அது,
நிஶ்சிதம் — கட்டாயமாக. தவ மௌளிதாம்நா — உன் கூந்தலில் சூடிக்கொடுத்த மாலைக் கயிற்றாலும்
தந்த்ரீநிநாதமதுரைஶ்ச —
வீணையின் நாதத்தைப் போல் இனிமையான.
(தவ) கிராம் நிகும்பை: — அழகாகக் கோர்த்துள்ள உன்னுடைய வாக்குகளால் (பாமாலைநார்களால்).
இரண்டுவித மாலைகளும் அவனைக் கட்டியிழுத்துச் சொன்னபடி கேட்கவைக்க உபயோகப்படுகிறது.
குடுமியைக் கொடுத்துவிடுகிறார். உன் பாமாலைக்கு த்ருஷ்டாந்தமான வீணையிலும்
தந்திக் கம்பிகளிருக்கின்றன என்று தந்த்ரீ என்னும் பதத்தால் வேடிக்கையாகக் காட்டுகிறார்.
நியமித —
கட்டுப்படுகிறதனால்தான். வீணைக்கம்பியின் நிநாதம் வாக்குகளின் நிகும்பங்கள்,
எல்லாம் நியமனத்திற்கு உபயோகப்படுகின்றன.
“அளகநிதமிதாபி:” என்று முடிவிலும் சாதிக்கப் போகிறார்.
“நிஶ்சிதம்”, “நியமிதம்” என்னும் பதங்களின் சேர்த்தியுமழகு.
முன் ச்லோகத்தில் “அநு”வைக் கார்யகாரணங்களில் கோர்த்தது.
இங்கே “நிதராம்” என்னும் பொருளுடைய “நி” என்பதைக்கொண்டு கோர்வை. பூமாலை கோர்ப்பது போல.
இத்தனை காலம் பலம் கைகூடாமல் தாமதித்தது -சிரம் – நிச்சயமாய் எங்களது.
இப்பொழுது தாமதமே யில்லாமல் வெகு சீக்கிரத்தில் பலம் ஸித்திப்பது (தவ) உன் பெருமை. (5)
———-
சோணாதரேZபி குசயோரபி துங்கபத்ரா
வாசாம் ப்ரவாஹவிபவேZபி ஸரஸ்வதி த்வம்|
அப்ராக்ருதைரபி ரஸைர் விரஜாஸ் ஸ்வபாவாத்
கோதாபி தேவி கமிதுர் நநு நர்மதாஸி|| .6.
த்வம் — நீ, அதரே — திருவதரத்தில்,
ஶோணா அபி — சோணாநதியாகவும், (சோணையாயிருந்தாலும்), (சோணாநதியோ),
குசயோ — ஸ்தனங்களில்,
துங்கபத்ரா அபி — துங்கபத்ரா நதியாகவும், (துங்கபத்ரையாயிருந்தாலும்),
(துங்கபத்ரா நதியோ) வாசாம் பிரவாஹவிபவே — வாக்குகள் ப்ரவஹித்து ஓடி வரும் பெருமையில்,
ஸரஸ்வதி அபி — ஸரஸ்வதியாகவும், (ஸரஸ்வதியாயிருந்தாலும்), (ஸரஸ்வதியோ),
அப்ராக்ருதை: ரஸை: — ப்ரக்ருதி ஸம்பந்தமே யில்லாத திவ்யரஸங்களால்,
விரஜா அபி — விரஜாநதியாகவும், (விரஜையாயிருந்தாலும்),(விரஜா நதியோ),
ஸ்வபவாத் — உன் தன்மையால், (உன் ஸ்வபாவத்தாலே),
கோதா அபி — கோதாவரியாகவும், (கோதாவரியாயிருந்தாலும்), (கோதாவரியோ),
தேவி — திவ்ய மஹிஷியே, (விளையாடும் தன்மை உடையவளே),
கமிது: — ஆசைப்படும் நாயகனுக்கு,
நநு நர்மதா அஸி — நீ நர்மதை தானம்மா. நீ நர்மதையோ, நர்ம பரிஹாஸப் பேச்சுக்களைப் பேசி ரமிப்பிக்கிறாய்.
(1) பாசுரங்களைப் பாடும் உன் திருப்பவழத்தைப் பார்க்கையில் (சிவப்பினால்) நீ சோணா நதியோ என்றும்,
பாடுங்கால் உயர்ந்ததும் ஜகன்மங்களமுமான ஸ்தனங்களைக் கொண்டு துங்கபத்ரா நதியோ என்றும்,
உன் வாக்குகளின் ப்ரவாஹப் பெருமையைப் பார்த்தால், நீ ஸரஸ்வதியோ என்றும்,
ப்ரக்ருதி ஸம்பந்தமேயில்லாத திவ்யரஸங்களால் நீ விரஜையோ என்றும்,
உன்னுடைய ஸ்வந்தத்தன்மையாலே கோதாவரியோ என்றும் உல்லேஹிக்கப்படுகிறாய்.
உன்னுடைய காந்தனுக்கோ என்றால் நிச்சயமாய் நீ (மனதை ஹரிக்கும் நர்மஹாவசனங்களைக் கொடுப்பதால்)
நர்மதா நதியாகவே இருக்கிறாய்.
(2) அல்லது, திருப்பவழத்தில் சோணையாயிருந்தாலும், தனங்களில் துங்கபத்ரையாயிருந்தாலும்,
வாக்ப்ரவாஹ மஹிமையில் ஸரஸ்வதியாக இருந்தாலும், அப்ராக்ரத ரஸங்களாலே விரஜையாயிருந்தாலும்,
ஸ்வயமாக நீ கோதை (கோதாவரியாக) இருந்தாலும், உன் காந்தனுக்கு நீ நர்மதைதான்.
(3) அல்லது, ஓரோர் காரணத்தால் சோணையாகவும், துங்கபத்ரையாயும், ஸரஸ்வதியாயும், விரஜையாயும்,
கோதாவரியாயும் இருக்கும் நீ உன் காந்தனுக்கு நர்மதையாகவே இருக்கிறாய்.
எல்லாப் புண்ய நதிகளின் சுத்தியும், மஹிமையும் உன் ஸரஸ்வதி வெள்ளத்தில் சேர்ந்துளது.
அவதாரிகை
(1) என் வாக்கை ஸரஸ்வதி என்றீர், நான் வாக்தேவியாகேனோ?
என்னை ஸரஸ்வதியாக வர்ணித்து என்னை உபாஸிக்கவேண்டாவோ?
அம்மா, நீ ஸரஸ்வதிதான். ‘ஸரஸ்வதீ த்வம்’
(2) நதிகள் ப்ராயேண ப்ராசீமுகமாகப் போகும். என் ஸரஸ்வதியும் அப்படித்தானோ?
ப்ரத்யக்முகமாக (ஆத்மா என்னும் ப்ரத்யக் வஸ்துவைக் குறித்ததாய் அத்யாத்மமாய்) இருக்குமோ?
அம்மா, உன் வாக்குகள் சோணாநதி, அது மேற்கு முகமாக ஓடும் நதி. உன் வாக்கும் ப்ரத்யங்முகம். அது சோணை போன்றது.
(3) அரங்கனுக்கு இனிப்பான வாக்கு வேணுமென்கிறீர். அரங்கத்தில் என்ன ரஸம்?
மிக்க விநோதம் விளைவிக்கும் ஹாஸ்யரஸம் வேண்டுமே? அம்மா, உன் வாக்கு நர்ம பரிஹாஸங்களமைந்துளது.
அது அரங்கனுக்கு மிக்க இனிப்பை உண்டாக்கும்.
அபி என்பதற்கு மூன்று விதப் பொருள்கள் கொள்ளலாம்.
(1) அந்த நதியோ, இந்த நதியோ என்று உல்லேஹிக்கும்படி யிருப்பது ஓர் பொருள்.
(2) ஓர் நதியாயிருந்தும் மற்றோர் நதியுமாவாய் என்று விரோதி ஸமுச்சயம். வேறுவேறான பல நதிகளாயிருந்தும்,
விரோதமில்லாமல் உன்னிடத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றன.
(3) இந்த நதியும் அந்த நதியுமாகப் பல புண்ய நதிகளும் உன்னிடமும் சேர்ந்துள என்பது கூட்டுப் பொருள்.
முதல் பொருளில் ரஸமதிகம்.
அதரே —
வாக்கை உச்சரிக்கும் திருப்பவழத்தில். உன் நாயகன் உன் வாக்குகளால் கட்டுப்படுவதற்கு
இதெல்லாம் ஓர் ஓர் விசித்ர நிமித்தம். பேசும் திருப்பவழத்தைப் பார்க்கையில் அவன் என் செய்வான், எப்படித் தப்பிப்பான்!
அபி ஶோணா —
(ஶோணாபி) சோணாநதியோ. சோணா என்பது சிவப்பு நிறத்தைச் சொல்லும்.
ஒருவளே எப்படிப் பல நதிகளாவது? ஓர் ஓர் அவயவத்தால் ஓரோர் குணத்தால், ஓர்ஓர் நதியாகிறாள்.
சோணை மேற்குமுகமாக (ப்ரத்யங்முகமாக) ஓடும் நதி.
உன் வாக்கு சோணாநதியைப்போல் ப்ரத்யங்முகம் (அத்யாத்மம்) ஸ்வாபதேசம் கனத்தது.
அத்யாத்மப் பொருளிலேயே முக்கிய நோக்கம் உள்ளதென்பதைக் காட்ட உபக்ரமத்திலேயே சோணையாக நிரூபித்தது.
இதனால் சொல்லப்படும் அத்யாத்ம நோக்குக்கு அநுகுணமாகவே மற்ற குணங்களும் உல்லேகங்களும் பொருந்தும்.
குசயோ: அபி துங்கபத்ரா —
இரு ஸ்தனங்களும் உந்நதம். பேசுகையில் இன்னும் உயரும்.
துங்கத்தின்பேரில் துங்கமாகும். சைதந்யஸ்தந்யத்தைக் கொடுக்கும். ஜகன்மங்களமான (பத்ரமான) ஸ்தனங்கள்.
ஸ்தனங்கள் ஓர் திருமேனியில் இரட்டையாக அமைந்திருப்பதைப்போல், இயற்கையாய் துங்கா பத்ரா என்று
இரண்டு சேர்ந்த துங்கபத்ரையை எடுத்தது அழகு. நீ பாடும்போது உயர்ந்து அமரும் உன் பத்ர ஸ்தனங்களைப் பார்த்து
அவன் எப்படி வ்யாமோஹ பரவசனாகாமல் தப்புவான்?
வாசாம் ப்ரவாஹவிபவே —
பாஹ்யமான திருப்பவழத்தின் அழகாலும், ஸ்தனங்களின் அழகினாலும் மட்டுமா
நீ பாடும் பாசுரங்களுக்குக் கௌரவம்? லாவண்யமுடைய யுவதி பாடுகிறாள் என்பதாலா உன் பாசுரங்களுக்குக் கௌரவம்?
உன் வாக்குகளின் ப்ரவாஹம் ஸ்வயம் ஸரஸ்வதீப்ரவாஹம். பாடும் உன்னுடைய அழகால் ஆரோபிதமான பெருமையன்று.
ஸ்வயம் அந்தர்வாஹினியான ஸரஸ்வதி யாகும். அரும்பெரும் கருத்துக்கள் உள்ளே ஆழ்ந்து கிடக்கும்.
உள்ளேயிருந்து கந்தம் வீசும். அந்த ஸ்திர பரிமளம் உன் ஸரஸ்வதி. மறையேயம்மா, மறையிலும் மறை.
பொருள்கள் உள்ளே மறைந்திருந்தாலும், உள்ளே அவிச்சின்ன ப்ரவாஹமாக ஓடிக்கொண்டேயிருக்கும்.
நீ பூமிதேவியானதால் உன் ஸரஸ்வதி பூமிக்குள் மறைந்து ஓடுகிறதோ?
உம்மை ஒரு க்ஷணமேனும் த்யானிப்பவர் அநிவாரிதமான வாக்குகளின் ப்ரவாஹங்களால்,
மந்தாகினியையும் மந்தமாகச் செய்கிற சக்தியை உடையவராவார் என்று உன் நாயகன் ஹயக்ரீவரைத் துதிக்கையில்
கங்கா ப்ரவாஹத்தை அதிசயிப்பதைப் பேசினேன். கங்கை அந்தர்வாஹினி யன்று.
இங்கே அந்தர்வாஹினியான ஸரஸ்வதி நீ என்று வ்யதிரேகம் (உயர்வு).
அப்ராக்ருதை: ரஸை: —
கவிஸிம்ஹமே, என் ப்ரபந்தங்களில் என்ன ரஸங்கள்? ப்ரக்ருதரஸங்களா?
அலௌகிக திவ்யரஸங்களா? அதிலுள்ள ச்ருங்கார ரஸத்திற்கு என்ன ஸ்தாயீபாவம்?
ப்ரக்ருதி மண்டலத்தில் பூமியிலோடும் (இந்த மானவாவர்த்தத்தில் ஓடும்) நதிகளாக என்னை வர்ணிப்பது உசிதமா?
அம்மா, கவிமுறையில் பலபலவிதமாய் உல்லேகாலங்காரமாகப் பேசினேன். தேவதைகளான புண்ய நதிகளாகப் பேசினேன்.
உன் ஸ்வபாவத்திற்குத் தக்கபடி உள்ளபடி பேசினால் உன் கவி ரஸங்களெல்லாம் திவ்யரஸமாயிருப்பதால்
நீ விரஜையம்மா. ‘ஸ்வபாவாத்’ என்பதை இங்கேயுமொட்டலாம். பின்பும் ஒட்டலாம். அது ‘மத்யமணி’.
வாக்ப்ரவாஹத்தை வர்ணித்தீரே! ப்ரவாஹமானால் ரஜஸ் இல்லாமல் இருக்குமோ?
இல்லையம்மா! உன் வாக்ப்ரவாஹம் ஸ்வத்ஸித்தம். நித்யமாயுளது. புதிதாக உற்பத்தியாகி ஓடிவருவதன்று.
ஸ்வபாவாத் — ஸ்வாபாவிகம் — நித்யம். ஆகையால் ரஜஸ்ஸுக்கிடமில்லை.
ச்ருங்கார ரஸத்திற்கு ரதிதான் ஸ்தாயீபாவம். ஆனால் இது ஆத்மாதி, ப்ராக்ருதியன்று.
அலௌகிகாதி,ப்ரத்யங்முகமான ரதி. ‘அத்யாத்ம ஜ்ஞானத்ருப்தத்வம்’
ஸ்வபாவாத் விரஜா அஸி —
எங்கள் ரஜஸ் தமஸ்ஸுகளை எல்லாம் போக்கி திவ்யவிபூதியை
உடனே அடையச் செய்யும் உன் வாக் ப்ரவாஹத்தில் ரஜஸ்ஸுக்கு ப்ரஸக்தியேது?
ஸ்வபாவாஅபி கோதா —
கோதா என்னும் சப்தம் கோதாவரி நதியையும்,
ஸ்ரீவிஷ்ணுசித்தர் பெண்ணையும் சொல்லும் என்று நிகண்டு. நீ ஸ்வயம் கோதாவரியாவாய்.
நீ கோதாவரி என்பதற்கு ஓர் குணவிசேஷத்தைக் கொண்டு ஆரோபிக்க வேண்டியதில்லை.
நீ கோதாவரி என்பதில் ஆரோபமுமில்லை. யமுனை கண்ணன் யௌவன விஹாரங்களுக்கு சாக்ஷி.
பஞ்சவடியில் சிரகாலம் ராமவைதேஹீ விஹாரங்களுக்கு கோதாவரி சாக்ஷியாவாள்.
ஜனகராஜன் புத்திரியாகிய ஜானகி நீராடினதால், புண்யமான நீர்களையுடையதாக,
கோதாவரி தீர்த்தத்தைக் காளிதாஸர் மேகஸந்தேச ஆரம்பத்தில் வர்ணித்தார்.
உத்தமராமசரிதத்தில் பவபூதியின் வர்ணனங்களையும் நினைக்கவேணும்.
கமிது: நநு நர்மதா அஸி —
இத்தனை நதிகளாக இருக்கையிலும், உன் நாயகனுக்கு நீ
நர்ம பரிஹாஸ வார்த்தைகளைப் பேசுவதில் உள்ள விநோதம் எல்லையற்றது.
ராமாயண ரஸங்களைப் பேசுகையில், ஆதிகவி “ஹாஸ்ய ச்ருங்கார பீபத்ஸ” என்று ஹாஸ்ய ரஸத்தை முதலில் பேசினார்.
எங்கள் அநாதிகாலமான கொடிய அந்த அபராதங்களினால் உள்ள சீற்றத்தை மாற்ற ஹாஸ்ய ரஸம்தான் சிறந்த உபாயம்.
அந்த நதியோ, இந்த நதியோ என்று ஓரோர் காரணத்தையிட்டு உல்லேகம்.
உன் காந்தனுக்கு நீ நர்மதை என்பதுதான் தத்துவம். நர்மதா த்வம் அஸி, ஸா த்வமஸி! (6)
———
வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7)
கோதே — கோதாய்!; வஸுதாத்மந: — பூமிப்பிராட்டி ரூபமான; தே — உனது;
ச்ரவணத: — செவியாகிற; வல்மீகத: — புத்திலிருந்து; ஜாத: — பிறந்த; ஸ – அந்த; முநி — மஹர்ஷி;
கவிஸார்வ பௌம: — கவிகளுக்குள் சக்கரவர்த்தியாக; பபூவ — ஆனார்; (ஆகையால்), தே — உனது;
வக்த்ராரவிந்த — முகமென்னும் கமலத்திலிருந்து (பெருகும்); மகரந்தநிபா: — தேன்போன்ற;
அமீ ப்ரபந்தா: — இந்த ப்ரபந்தங்கள்; ஸ்வதந்தே — ருசிக்கின்றன; இதியத் — என்னும் இது; கிமத்புதம் — என்ன ஆச்சரியம்?
கோதாய்! பூமிப்பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த
அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய
தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.
(1) வால்மீகியை யல்லவோ உத்தம கவி என்பர்! அவரை யல்லவோ கவிகள் நல் வாக்குகளுக்காகப் பிரார்த்திப்பர்!
“இதம் குருப்ய: பூர்வேப்யோ நமோவாகம் ப்ரஸாஸ்மஹே” என்று பவபூதி வால்மீகியை முதலிலேயே பணிந்தார்.
அவர் தானே கவிகளுக்கு மார்க்க தர்சீ! நீரும் உம்முடைய தேவநாயகன் ஸ்துதியில்
“ப்ராச; கவீந் நிகமஸம்மித ஸூந்ருதோக்தீந், ப்ராசேதஸ ப்ரப்ருதிகாந் ப்ரணமாமி நித்யம்” என்று அம்முனிவரைப் பணிந்தீர்.
பாதுகா ஸஹஸ்ரத்திலும், “யஸ்யாஸூதரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ ஸ்பர்த்தா துர்த்தர பாதபத்தபணிதி வல்மீகஜந்மா கவி:” என்று
அவர் ராமாயணத்தைப் புகழ்ந்தீர். பெரிய பிராட்டியாருடைய அவதாரமாகிய ஸீதாதேவியின் சரித்ரத்தைப் பாடிய கவியிலும் உயர்ந்த கவியுண்டோ?
“கவிப்ரதம பத்ததிம்” என்றல்லவோ காளிதாஸர் ராமாயணத்தைப் புகழ்ந்தார்.
“பரம் கவீநாம் ஆதாரம்” என்றபடி அக்காவ்யந்தானே எல்லாக் கவிகளுக்கும் மூலாதாரம்.!
(2) பெருமாள் கேட்டு மகிழும்படி பாட நான்தான் வாக்கு அளிக்கவேண்டும் என்று இச்சகம் பேசுகிறீர்.
ராமாயணம் 24000 சுலோகங்களையும் பெருமாள் “பபூஷயா ச்ரோத்ருமாநா பபூவ” என்றபடி தன் ஸத்தையும்
தாரணமும் அதனால்தானென்று “மஹாநுபாவம் சரிதம்” என்றும், “மமாபி பூதிகரம்” என்றும் புகழ்ந்து கொண்டு
கேட்கவில்லையே! என் விஷயமாக ஓர் சின்ன ஸ்துதி பண்ணுவதற்கு என்னையே வாக் பிக்ஷை கேட்கிறீரே?
(3) ஓரிரவில் பாதுகா ஸஹஸ்ரம் பாடி அதைப் பெரியபெருமாளே திருவோலக்கத்தில் தூக்கத்தைத் தள்ளி
லக்ஷ்மியோடு கூடத் திருச்செவி சாற்றவில்லையோ! அந்தப் பாதுகா ஸஹஸ்ரத்திற்கு திவ்ய வாக்கை
வால்மீகியைப் பிரார்த்தித்து அடையவில்லையோ? அதற்கு என்னைக் கூப்பிடவில்லையே?
ஸமயத்திற்குத் தகுந்தபடி பேசுவது அழகோ? நான் கவியா? அவர் கவியா? இதற்கெல்லாம் பதில் கூறுகிறார் இங்கே.
வால்மீகி ஆதிகவி என்பதும், அவரை மற்றக் கவிகள் பணிந்து வாக்கைப் பெற்றனர் என்பதும் உண்மையே.
அடியேனும் அவரைப் பணிந்து யாதவாப்யுதயம் பாடினேன். பாதுகா ஸஹஸ்ரமும் பாடினேன்.
பெருமாளும் அவர் ஸீதைப் பிராட்டி விஷயமாய்ப் பாடிய ஆதிகாவ்யத்தை இன்புறக் கேட்டருளினார்.
நான் இப்பொழுது உன்னைப் பிரார்த்திப்பதற்கும் நான் முன் வால்மீகியைப் பிரார்த்தித்தற்கும் ஓர் விரோதமுமில்லையே அம்மா!
வால்மீகியைப் பிரார்த்தித்துக் கவிதை பெற்றதைக் கொண்டு கைமுத்யத்தால் உன்னைப் பிரார்த்தித்து
வாக்குப் பெறவேண்டியதற்கு ஔசித்யம் ஸித்திக்கிறதே. வாதத்தில் இதுபோன்ற உன் கேள்வியை
‘சுங்கத்தில் போது விடிந்ததுபோலும்’ என்பாரம்மா! வால்மீகி யாரம்மா? வல்மீகத்தில் பிறந்தவர்தானே?
வல்மீகம் என்பது என்ன? “வஸுதாச்ரோத்ரம்”தானே? பூமிதேவியின் காது (ச்ரவணம், ச்ரோத்திரம்). நீதானே பூமிதேவி?
உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்!
அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்! ஆதாரம்! உன்னை த்யானித்துக் கொண்டே தான் யாதவாப்யுதயமும் பாதுகாஸஹஸ்ரமும் பாடினேன்.
“வஸுதா ச்ரோத்ரஜே தஸ்மிந்” என்று உன் ச்ரோத்ரத்தில் பிறந்தவரென்றுதானே அவரை ஆரம்பத்தில் இரண்டாவது ச்லோகத்தில் புகழ்ந்தேன்?
அப்படியே பாதுகா ஸஹஸ்ரத்திலும் “வஸுதா ச்ரோத்ர ஜந்மா முநிர்மே” என்று உன் மூலமான புத்ர ஸம்பந்தத்தைப்
பேசிக்கொண்டேதானே திவ்யவாக்கின் அநுக்ரஹத்தை யாசித்தேன்?
உன் ச்ரோத்ரத்திலிருந்து பிறந்த கவி பாடின க்ரந்தமானதால், ராமாயணம் முழுவதையும் பரிஷத்தில் பெருமாள் இன்புறக் கேட்டார்.
(4) இப்படிப் பதில் சொல்வது அழகாயிருந்தாலும், ஓர் கேள்வி கேட்கிறேன். அதில் நீர் அகப்பட்டுக்கொண்டே தீரவேணும்.
ஸீதைப் பிராட்டியார் தன்னுடன் பிறந்தவரான (ஸஹஜரான) கவீச்வரரைக் கொண்டு தன் சரித்ரமான ராமாயணத்தைப்
பாடிவைத்தாள் என்று பாதுகாஸஹஸ்ரம் முடிவில் பாடினீரே! இப்பொழுது ராமாயண காவ்யம் என் மூலம் என்கிறீரே?
இந்த விரோதத்தை எப்படிப் பரிஹரிப்பீர்? பெரியபிராட்டியார் எனக்கு அம்சி, நான் அம்சம். அம்சத்திற்குள் அம்சி அடங்குமோ?
அம்மா, இந்தக் கேள்வியும் ஸுபரிஹரம். நீ பெரிய பிராட்டியாருடைய அம்சமாயிருந்த போதிலும்,
பெரியபிராட்டியார் உன்னிடமுள்ள நிரதிசய ப்ரீதியால், உன் பெண்ணாகப் பிறந்து உன்னை பஹுமானித்து
உனக்கு சேஷமாயிருக்கும் ரஸத்தை அநுபவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு பூமிஸுதையாக
(உன் பெண்ணாய், ஸீதையாக) அவதரித்தாள். அந்த அவதாரத்தில் பெரியபிராட்டியார் இச்சாவசத்தால்
அம்சாம்சி பாவம் மாறிவிட்டது. நீ அம்சியும், ஸீதை உன் அம்சமான புத்திரியுமானாள். தாயும் அம்சியுமான நீ
பாடிவைத்ததைத் தானே அங்கே ஸீதை பாடி வைத்ததாக ஔபசாரிகமாகப் பேசினேன்.
“ஸஹஜோ கவீச்வரேண” என்றதால் இது வ்யஞ்ஜிதம். வால்மீகிக்கும் ஸீதைக்கும் ஸஹஜத்வம் எப்படி?
பூமிதேவியே நீ! உன்னிடமிருந்து இருவரும் பிறந்தாரென்பதுதானே! உன்னிடம் பிறந்தவர் ஸஹஜகவி.
கவீச்வரியான தாயாருடைய பிள்ளைதானே ஸஹஜகவீச்வரரானார்? “கரிணீ”தானே களபத்தைப் பெறும்?
தாய் வேறு ஜாதி குட்டி வேறு ஜாதியாமோ? நீ கவீச்வரி. உன்னிடம் ஜாதர் கவீச்வரர்.
“மாதரம் த்விபதா இதி”. ஆண் பிள்ளைகள் தாய் ஸ்வபாவத்தை அநுஸரித்திருப்பர். ஆகையால் விரோதம் இல்லை அம்மா!
வஸுதாத்மந: —
பூமிஸ்வரூபமான (பூமிதேவியான) பூமி வடிவுடைய உன்னுடைய.
“ஸாக்ஷாத் க்ஷமாம்” என்று முதல் ச்லோகத்திலேயே இதை ஸாதித்தார்.
“வல்மீகம்” – புற்று. அதற்கு “வஸுதாச்ரோத்ரம்” என்று பெயர். வல்மீகத்தில் பிறந்தவர். பூமியின் செவியில் பிறந்தவர்.
“வஸுதாச்ரோத்ர:” என்ற பர்யாய பதத்தைப் புத்திக்கும் கொண்டு வருவதற்காக “வஸுதா” சப்தத்தைப் பிரயோகித்தது.
தே — உன்னுடைய;
ச்ரவணத —
திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ச்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள்.
அதுபோல உன்னுடைய ச்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.
வல்மீகத: — கரையான் புற்றிலிருந்து;
ஜாத: — பிறந்த. (ஜாதோ பபூவ) பிறவியாலே ஆனார். பிறந்ததும் ஆனார்.
ஜாத: கவிஸார்வபௌம:
கவீச்வரராகவே பிறந்தார். “ரூபதாக்ஷிண்ய ஸம்பந்த: ப்ரஸூத:” என்ற இடத்தில்
போல பிறவிக் கவீச்வரர். உன்னிடத்திலிருந்து பிறந்ததே அவருடைய நிரதிசயமான கவிதைக்கு மூலம்.
ஸ முனி: —
அந்த முனி. முனீச்வரர் கவீச்வரரானார். ‘முனி’ என்பது வாய் திறவாத மௌனியைச் சொல்லும்.
வாய் திறவாதவரும் வாசஸ்பதியாகப் பேசுவர். “மூகையான் பேசலுற்றேன்”, “மூகம் கரோதி வாசாலம்”,
“ரகுவரசரிதம் முனிப்ரணீதம்”, “ஸ்ரீமத்பாகவதே மஹாமுனிக்ருதே பராசரம் முநிவரம்”.
கவிஸார்வபௌம: —
கவிச்சக்கரவர்த்தியாய், கவீச்வரராய். முனி என்பவர் யோகி.
யோகத்தில் 7 பூமிகள், மேல்மேல் உப்பரிகைகள், மேல்மேல் ஏறவேண்டும் (ஆரோஹம்).
7 பூமிகளையும் ஏறுவர். 7 பூமிகளேறின யோகத்தை ஸார்வபௌமமென்பர். யோகி ஸார்வபௌமர் கவி ஸார்வபௌமரானார்.
யோகத்தில் 7 பூமிகள்போல், ராமாயணம் ஸப்த காண்டம். ராமாயணத்தைப்போல்,
திவ்யதம்பதிகளிடம் மனம் லயிக்க வேறு ஸாதனமில்லை. ராவண ஜயம் மனோ ஜயமாகும்.
ராவண லயம் மனோ லயம். அது யோக காஷ்டை.
பபூவ– ஆனார்.
கோதே! —
வாக்கை யளிக்கும் தேவியே! உன் புத்திரரான வால்மீகிக்கு நீதான் வாக்கை யளித்தாய்.
ஆகையால் தான் அவருக்கும் கவிதா மூலமான உன்னை பிக்ஷை கேட்கிறேன்.
“பரம் கவீநாம் ஆதாரம்” என்பதற்கும் மூலாதாரம் நீ.
(தே) வக்த்ராரவிந்த மகரந்தநிபா: —
உன் திருமுகக் கமலத்திலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான (உன் ப்ரபந்தங்கள்).
ஸாமான்யமான தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பிடமுடியாது. உன் திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும்
தேனுக்குத்தான் ஒப்பிடலாம். உன் ப்ரபந்தங்களாகிய தேனுக்கு உனக்கு பாஹ்யமான உபமானமொன்றும் ஒப்பாது.
கண்ணன் பாடிய கீதையை “யா:ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநிஸ்ஸ்ருதா:” என்று வர்ணிப்பர்.
“வால்மீகேர் வதநாரவிந்த கபிதம் ராமாயணாக்யம் மது” என்று தித்திப்பதற்கும் நீதான் மூலமென்பதை ஸூசிப்பிக்கிறார்.
(தே) ப்ரபந்தா: —
உன்னுடைய தேன் ப்ரபந்தங்கள். ப்ரபந்தமென்பதற்குப் பரம்பரை விஸ்தாரம் என்றும் பொருள்.
த்வநி பரம்பரை போய்க் கொண்டிருக்கும். கட்டிலடங்காது. திருநாமம் மட்டும் கட்டுப்பட்டது என்ற பொருளைக் கொடுக்கும்.
பொருள் விஸ்தாரம் கட்டிலடங்காது. பொருள் பரம்பரை எல்லையில்லாமல் மேல்மேலே போய்க்கொண்டிருக்கும்.
“மங்களாநாம் ப்ரபந்தாந்”, “க்ரியாப்ரபந்தா தயமத்வராணா மஜஸ்ர மாஹூத ஸஹஸ்ரநேத்ர:”
அமீ ப்ரபந்தா: —
இப்பிரபந்தங்கள். இந்த என்று சொல்லலாமே யொழிய, இப்படிக்கொத்தது என்று
வரையறுத்துப் பேச முடியாது. இதோ என் மனதுக்கும், காதுக்கும், நாக்குக்கும் சுவைக்கிறதே அந்தப் பிரபந்தங்கள்.
“க்ருஷ்ணேத்யக்ஷரயோரயம் மதுரிமா” என்று ஜகந்நாத பண்டிதர். “க்ருஷ்ண” என்ற இரண்டு அக்ஷரங்கள்
தன் மனதிற்குச் சுவைத்த இனிப்பை “இவ்இனிப்பு” என்று பேசியதுபோல.
யத் ஸ்வதந்தே — தித்திப்பது என்னும் இதம் இது, தித்திப்பது.
கிமத்புதம் — என்ன ஆச்சரியம்? இது ஓர் ஆச்சரியமா? கைமுத்தியத்தால் கிடைப்பது ஆச்சர்யமாகுமோ?
‘அத்புதம்’ என்பதை அத்புதம் ஸ்வதந்தே என்று ஒட்டிக் கொள்ள வேண்டும். இங்கே இரண்டு கைமுத்தியங்கள்.
(1) உன்னிடம் பிறந்தவர் லோகோத்தர கவியாகையால் உன் காவ்யங்கள் லோகோத்தரமென்பதற்கு என்ன தடை?
(2) உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?
வால்மீகி விஷயமான இந்த சுலோகத்தை 7வது சுலோகமாக வைக்கப்பட்டது.
உன் “ச்ரவணத்திலிருந்து” என்பதற்கு எதிர்த்தட்டு உன் “வக்த்ராரவிந்தத்திலிருந்து” என்பது. (7)
—-
போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)
கோதே — கோதாய்; தவ — உன்னுடைய; ப்ரியதமம் — அத்யந்த ப்ரியனான பர்த்தாவை;
பவதீவ — உன்னைப் போலவே; போக்தும் — அநுபவிப்பதற்காக; நிஜாம் — தங்களுடைய (சொந்தமான);
பக்திம் — பக்தியை; ப்ரணயபாவநயா — ப்ரணய மார்க்கமாக; (நாயகீபாவமாக);
க்ருணந்த: — பேசிக்கொண்டு; த்வதீயா — உன்னுடைய; குரவ: — பெற்றோர்கள்;
உச்சாவசை: — மிகவும் அதிக்ரமித்த; விரஹஸங்கமஜை: — பிரிவு கூடல்களால் ஏற்படும்;
உதந்தை: — வ்ருத்தாத்தங்களால்; ஹ்ருதயம் — தங்கள் மனதை;
ச்ருங்காரயந்தி — ச்ருங்கார பாவமுடையதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
கோதா தேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணுசித்தர்) உன்னைப் போலவே
உன் பிரியதமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும்
காம பாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ச்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார
வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.
அவதாரிகை
(1) வால்மீகி புத்தேறின தபஸ்வி. காமங்களெல்லாம் வற்றி உலர்ந்துபோன நெஞ்சுடைய விரக்தமுனி.
அத்புதமான விப்ரலம்பக ச்ருங்கார, ஸம்ச்லேஷ ச்ருங்கார ரஸங்களை எப்படி நெஞ்சில் வாங்கி ப்ரத்யக்ஷம் போல் வர்ணித்தார்?
(2) நீர் சுஷ்கசுஷ்கமான விரக்தராயிற்றே, “தருணீகுணபம்” என்று பேசுகிறவராயிற்றே!
எனக்கும் என் நாயகனுக்கும் உள்ள ப்ரணய ரஸங்களை எப்படி வர்ணிப்பீர்?
(3) என் புத்திரரான ஆதிகவி வால்மீகியின் மதுரவாக்கைப் புகழ்ந்தீர். என் பெரியோரான அபிநவ தசாவதாரமான
ஆழ்வார்கள் வாக்கின் இனிப்பெப்படி? என்னைப்பெற்ற என் தகப்பனார் வாக்கு எப்படி?
என் நாயகனுக்கும் எனக்குமுள்ள ப்ரணய ரஸத்தையும், எங்கள் திருக்கல்யாணத்தையும் வர்ணிக்கப் போகிறீரே!
ஜாமாதாவான என் நாயகனுடைய மாதுர்யம் எப்படி?
இதற்கெல்லாம் பதில்:– வால்மீகி நெஞ்சம் அத்யந்த விரக்தமும், சுஷ்கமுமானதுதான். அவரென்ன பண்ணுவார்?
வர்ணிக்கப்படும் ரகுவரனிடத்தில் பக்தி அவரைத் தம்பதிகளுக்குள்ள ச்ருங்கார பாவத்தை வர்ணிக்கச் செய்கிறது.
“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்று தன்னைப் பெண்ணுடையுடுத்தச் செய்யும் ரூபாதிகளில்
ஸ்வாநுபவத்தாலே அவர் பேசுகிறார். நான் என்ன விரக்தனானாலென்ன? பரமாத்மாவான உன் நாயகனிடம் ரக்தி (ரதி)யுடையவனே.
சாஸ்த்ரீய சுத்த நிருபாதிக நிரதிசய ரஸமான உன் நாயகன் விஷயத்தில் விரக்தி கூடுமோ?
“அத்யர்த்தம் ப்ரிய”, ‘ப்ரியதம ஏவ வாணீயோ பவதி’ என்றபடி தனக்கு ப்ரியதமமாக அவனை பஜித்து,
அவனுக்குப் பிரியதமமானால்தானே ஆத்மா பிழைக்கலாம்! உன் பெரியோர்களான, மயர்வற மதிநலமருளப் பெற்றவரும்
பெண்ணுடையுடுத்திக் கொள்ளச்செய்யும் மாப்பிள்ளை யம்மா. மற்ற ஆழ்வார்கள் போகட்டும்.
உன்னைப் பெற்ற ஆழ்வார் பெரிய ஆழ்வாரானாரேயம்மா! ரூபவதியான பார்யை அநேக ஸபத்நர்கள் (விரோதிகள்)
ஏற்படுவதற்குக் காரணமாவாரென்பர். ‘கந்யா வரயதே ரூபம்’. ஸர்வாதிசாயியான லாவண்யத்தையுடைய அரங்கனைத்தான் நீ தேடினாய்.
நீ ஈடுபடும் உன் நாயகன் அழகே புமான்களுடைய த்ருஷ்டி சித்தங்களை அபஹரித்து உனக்கு ஸபத்னீக்களாக்குகிறது.
உன் தகப்பனார் கூடத் தன் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட ஆசைப்பட்டுப் பெண்ணுக்கே ஸபத்னீயானாரே.
அதோடு நிற்காமல் “வந்து மண்ணும் மணமும் கொண்மின்” என்று உலகத்தை முழுவதும் கூப்பிட்டு,
என் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்படுங்கள் என்று கூப்பிடுகிறாரே. ஆண் பெண் விபாகமற உலகத்தாரெல்லோரையும்
உனக்கு ஸபத்னீக்களாக வாருங்கள் என்று அழைக்கிறாரே! யாரென்ன செய்வதம்மா!
பெற்ற தகப்பனார் பெண்ணின் பதியிடம் ஆழ்வது ஓர் ஆச்சர்யமானதால் அவரைப் பெரிய ஆழ்வாரென்பது.
வெறும் ஆண்களாய் ஆழ்வார் ஆழ்வார். மாமனாராயிருந்தும் ஆழ்வார் பெரியாழ்வார். 13வது சுலோகம் வரையில்
கோதையின் பிறப்பு முதலிய ஸம்பந்தத்தால் அடையப்படும் பெருமைகளைப் பேசுகிறார்.
கோதையின் குடிப்பெருமை, அவளுக்கு ஜனகத்வாதி ஸம்பந்தங்களால் அடையப்படும் பெருமையைப் பேசுகிறார்.
கன்யையின் பிறப்பகத்தின் மஹிமைகள்.
போக்தும் —
பேரின்பத்துடன் அநுபவிக்க. பெண்ணுக்குப் பதிஸம்யோகஸுலபமான வயது வந்ததைப் பார்த்து,
இந்தக் கற்பகக் கொடியை ஓர் கற்பக வ்ருக்ஷத்திலணைத்து விட வேண்டுமே என்று சிந்தார்ணவ மக்னராய்,
அதன் கரை காண அநுரூப வரனைத் தேடுவர். வரனைப் பார்க்கவே இவர் ச்ருங்கார சபளிதஹ்ருதயராய்,
ஸ்வயம் போகத்தில் ஆசையாகிய சிந்தார்ணவத்தில் ஆழ்ந்து மூழ்குகிறார்.
அந்த ராகக் கடலிற்குக் கரையையே காண்கிறாரில்லை. ‘ந ஜாநே போக்தாரம் கமிஹ’ என்று
காந்தர், காந்தைகளது ரூபதாம்பத்யத்தைக் கோரி வரிக்கப்பட்ட ப்ரியவஸ்துவின் போகத்திலாழ்வார்.
உன் பெரியோரான ஆழ்வார்களும், உன் பிதாவும் ஜாமாதாவைக் கண்டதும் தாங்களே போகத்தில் ஆழ்ந்தார்கள்.
தவ ப்ரியதமம் —
பெண்ணாகிய உனக்கு வரன் தேடினாரோ? ஆணாகிய தமக்கு ஓர் பதி தேடினாரோ?
பெண்ணுக்கு ப்ரியதமராகப் போக்யராக ஆசைப்படவேண்டியிருக்க, தமக்கே ப்ரியதமராகவும் ஏகபோக்யமாயும் கொண்டார்.
நீ ச்ருங்கார பாவங்களையும், பக்தி பாவங்களையும், அத்புதமாய்ப் பாடினாய் என்றேன் முன் சுலோகத்தில்.
உன் தகப்பனாரே அப்படிப் பாடுகையில் நீ பாடுவது அத்புதமா? “கோதே கிமத்புதம் இதம்”
பவதீவ —
உன்னைப்போல. (அநுபவிக்க) இந்த ப்ரஹ்ம ஜாமாதா விஷயத்தில்
‘ஜாமாத்ருபோக்யதாம் புத்ரீ வேத்தி நோ பிதா” என்ற வைஷம்யமில்லை.
கோதே — நீ ப்ரணயரஸப் பாசுரம் கொடுப்பவள். உன்னைப் போலவே அவர்கள்
ச்ருங்கார ரஸப் பாமாலை தொடுத்து ஸமர்ப்பிக்கிறார்கள்.
பக்திம் நிஜாம் —
தங்கள் ஸ்வந்த பக்தியை. இதில் எல்லாவற்றிற்கும் பரிஹாரம் ஸூசிதம்.
வாஸ்தவத்தில் அவர்கள் பாவம் ஸ்வரூபத்திற்குப் பிராப்தமும், அத்யந்தோசிதமுமான விச்வபதி விஷயமான பக்தியம்மா!
அந்த பக்தியே நிரதிசய ப்ரீதி ரூபமாய் ஸ்நேஹ ரூபமாய் விட்டது.
அடைய வேண்டிய அநுபவமான நித்திய விபூதி போக விபூதி தானே! இங்கு போகம் நித்ய போகத்திற்கு ஸாதனம்.
வேறு கதியில்லையே, என்ன செய்வது? விச்வத்திற்கே ஒரு பதிதானேயுள்ளது.
‘ப்ரியதமம்’ என்பது பரஸ்பர ப்ரிய தமத்வத்தைப் பேசும் ஸ்ரீபாஷ்ய பாஷணத்தை ஸ்மரிப்பிக்கிறது. அங்கும் வரணப்பேச்சே.
ப்ரணயபாவநயா —
பக்தி என்பது மஹநீய விஷயத்தில் ப்ரீதி. அதுவே ஓர் சமயத்தில் ச்ருங்காரம் என்னும் வ்ருத்தியாகப் பரிணமிக்கிறது.
‘ஸ்நேஹோ மே பரம: பக்திஶஃச நியதா, பாவோ நாந்யத்ர பச்சதி’ என்று பேசுவது உசிதம்தானே.
ராகமும் முற்றிப் பிச்சேறக்கூடியதுதானே! க்ருணந்தே –பேசுவது பக்திதான்.
ஆயினும் அதில் ‘ஸதீவ ப்ரியபர்த்தாரம்’ என்னும் ராகமும் கலக்கிறதம்மா!
உச்சாவசை: — உதக்ச அவாக்ச வடக்கும் தெற்குமாய். மேலும் கீழுமாய்.
வில்லிப்புத்தூரிலிருந்து மனத்தால் வடக்கே கோயிலுக்கு ஓடுகிறார்.
மனது திரும்பவும் ஊருக்கு உன்னிடம் ஓடிவருகிறது. “யாந்தீமிவ மநோரதை:” என்று வடக்கே ஓடுகிறார்.
விரஹஸங்கமஜை: —
விரஹத்தில் தவிப்புகள். ஸம்ச்லேஷ மனோரதத்தோடு நிற்காமல் ஸம்ச்லேஷத்தையே அடைந்து
அதனால் சித்தித்த ஹர்ஷத்தைப் பாடுவது.
உதந்தை:–
வ்ருத்தாந்தங்களால். ஸுந்தரகாண்டத்திலுள்ள விரஹ வ்ருத்தாந்தத்திற்கு மேல் இவர் வ்ருத்தாந்தம்.
உதந்தை: — அந்தமில்லாத. உத்கதோ அந்தோ யேப்ய: — “உத்” என்பது ஸர்வ பாப்மோதிதரான
அப்ராக்ருத திவ்ய மங்கள வீக்நஹமுடைய ஸூர்யமண்டலாந்தர்வர்த்தியான பெருமாளுக்குத் திருநாமம்.
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹமென்று “உத்” என்னும் சப்தத்தாலும்,
அதில் ‘அந்தத்தை நிச்சயத்தை’ உடையவர் என்று ‘அந்த’ சப்தத்தாலும் காட்டி,
ப்ராக்ருத திருமேனியல்லாததால் அணைவதில் யாதொரு தோஷமுமில்லை என்று பரிஹாரத்தை ஸூசித்தார்.
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் —
தங்கள் ஹ்ருதயத்திலேயே ச்ருங்கார பாவமுள்ளது போல் செய்கிறார்கள்.
“பும்ஸ: ஸ்த்ரியாம் ஸ்த்ரியா: பும்ஸி ஸம்போகம் ப்ரதி யா ஸ்ப்ருஹா|
ஸ ச்ருங்கார இதி க்யாத:க்ரீதாரத்யாதிகாரக:” என்பது ச்ருங்காரத்திற்கு லக்ஷணம்.
ச்ருங்காரம் போன்ற பாவமுடைய பெரிய ஆழ்வாருக்கு அத்திருநாமம் ஏற்பட்டதற்குக் காரணமும் இங்கே ஸூசிதம்.
மற்ற ஆழ்வார்கள் பெண்ணைக் கொடுத்தவர்களல்ல. பெருமாளுக்குக் குரு முறைமையான தான்,
பெருமாளுக்கு ச்வசுரராயிருந்தும், தன் அருமைப் பெண்ணுக்குப் பிதாவாயிருந்தும்
அவரும் நாயகீபாவத்தில் ஆழ்ந்தாரே என்று ஆழ்வதில் அவருக்கு மஹத்தரத்வம்.
பெருமாளுக்கு ஸேவிக்கத்தக்க குருவாயிருந்த ஆழ்வார் என்பதாலும் அத்திருநாமம்.
இந்த ச்லோகத்தில் முதல் உபபத்தியையும், 10வது ச்லோகத்தில் இரண்டாமுபபத்தியையும் ஸாதிக்கிறார்.
‘ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்’ என்று ஸீதைப்பிராட்டியாரேசல்.
‘ரங்கஜாமாதரம் ப்ராப்ய’ அரங்கனென்னும் ஜாமாதாவை அடந்த ச்வசுரரே, புருஷவிக்ரஹமான
தன்னைப் பெண்ணாக நினைத்தாரே, அதனையே வலுவாக ஸமர்ப்பிக்க மனோரதம்.
‘ஆத்மாதி, ஆத்மக்ரீட, ஆத்மமிதுன’ இதுவிஷயத்தை தேவநாயக பஞ்சாசத் வ்யாக்யானத்தில் விஸ்தரித்துள்ளது.
‘ப்ரவ்ரஜ்யாதியுதா பரத்ர புருஷேபாதிர்வதீம் பிப்ருதீ பக்தி:ஸா’ என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
பக்தியை ஸந்யாஸம் முதலிய துறவி குணங்களோடு கூடியதாய பரபுருஷனிடத்தில்
பதிவ்ரதா நிஷ்டையை உடையதாயும் வர்ணித்தார். அதிலுள்ள வேடிக்கைகளும் கவனிக்கத்தக்கன.
———
மாதஸ் ஸமுத்திதவதீமதி விஷ்ணுசித்தம்
விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிமருசேரிவ மூர்த்திமந்யாம்
ஸந்த: பயோதிதுஹிதுஸ் ஸஹஜாம் விதுஸ்த்வாம் || (9)
மாத: — தாயே!; அதிவிஷ்ணுசித்தம் — (1) விஷ்ணுசித்தரிடம், (2) விஷ்ணுவின் மனதில்,
(3) விஷ்ணுவை நடுவில் கொண்ட (கடலில்); ஸமுத்திதவதீம் — அழகாய் அவதரித்தவளும்;
விச்வோபஜீவ்யம் –ஸகல ஜீவர்களும் பருகி உஜ்ஜீவிப்பதற்கு யோக்யமான; அம்ருதம் — அமுதினை;
வசஸா — வாக்கினாலே, (பாசுரங்களாலே); துஹாநாம் — சுரக்கிறவளாயும்;
தாபச்சிதம் — தாபத்திரயங்களையும் போக்கிக்கொண்டு, ஹிமருசே — குளிர்ந்த பனிக்கிரணமுடைய சந்த்ரனுடைய,
அந்யாம் மூர்த்திமிவ — மற்றோர் (விலக்ஷணமான) மூர்த்தி போன்றவளுமான,; த்வாம் — உன்னை;
ஸந்த: — பெரியோர் (ப்ரஹ்மவித்துக்கள்); பயோதிதுஹிது — பாற்கடலின் பெண்ணாகிய பெரியபிராட்டியாரின்,
ஸஹஜாம் — உடன்பிறந்தவளாக; விது — அறிகிறார்கள்.
அம்மா! விஷ்ணு சித்தரிடம் தோன்றியவளும், அநுபவித்து உய்யத் தக்க அமுதை வாக்கினால் சுரக்கிறவளாயும்,
ஸாம்ஸாரிக ஸகல தாபங்களையும் நீக்கத் தக்க குளிர்ச்சியை யுடைய ஓர் விலக்ஷணமான சந்திர மூர்த்தி யென்று
சொல்ல வேண்டியவளுமான உன்னைப் பாற்கடலிலவதரித்த பெரிய பிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று
ப்ரஹ்ம வித்துக்களான ஸத்துக்கள் அறிகிறார்கள்.
(அல்லது பெரியபிராட்டியார் கூடப்பிறந்த உன்னை ஓர் விலக்ஷண சந்திரமூர்த்தியென்று அறிகிறார்கள்)
அவதாரிகை
(1) “உன்னுடைய தகப்பன்மார்” என்று அநேக பிதாக்கள் சேர்ந்து என்னைப் பெற்றவரென்றீர் முன் சுலோகத்தில்.
‘ஸ்ரீவிஷ்ணுசித்தகுலக் கற்பகக்கொடி’ என்று முதல் சுலோகத்தில் என்னைப் பேசினீர்.
நிகண்டுகாரரும் என்னை விஷ்ணுசித்தர் பெண் (விஷ்ணுசித்தாத்மஜா) என்பர்.
“த்வதீயா: குரவ:” என்று பன்மை பேசுகிறீரே? ‘பட்டர்பிரான் கோதை’ அல்லவோ நான்!
மற்ற ஆழ்வார்களும் பட்டர்களோ? ‘அஞ்சுகுடிக்கு ஒரு ஸந்ததி’ என்ற முறையாக என்னைப் பேசுகிறீரே,
இது யுக்தமோ? இதற்கு பதில் கூறுகிறார்.
பதில்கூற ஆரம்பிக்கையிலேயே ‘மாத:’ “தாயே’ என்றழைக்கிறார். உண்மையில் நீ ஒருவரும் பெற்ற பெண்ணல்லள்.
நீ எல்லோருக்கும் தாய் அம்மா! அபிமானத்தால் தங்கள் குடிப்பெண், தங்கள் குல ஸந்ததி என்று நினைப்பும் பேச்சும்.
உன் அபிமானத்தாலும் அவர்கள் பிதாக்கள். பரஸ்பர அபிமானமே இப்பேச்சிற்குக் காரணம்.
அவ்வபிமானத்திலும் விஷ்ணு சித்தருக்கு ஸந்நிகர்ஷம் அதிகம். ‘பட்டர்பிரான் கோதை’ என்று சொல்லுவதும்,
விஷ்ணு சித்தாத்மஜை என்று சொல்லுவதும் அத்யந்தம் உசிதமே.
‘விஷ்ணுசித்தரிடம் தோன்றியவளே’ என்றே இங்கே பேசுகிறேன். ஆனால் அப்படிப் பேசுவதிலும் அவரோடு
இன்னமிரண்டு சேர்ந்து விடுகிறது.
‘பெருமாள் சித்தம்’ என்பதும், பெருமாள் தன் நடுவில் வசிக்கப்பெற்ற ஸமுத்திரம்’ என்பதும்
‘விஷ்ணுசித்த’ என்பதில் சிலேடையாகச் சேர்ந்து விடுகிறது.
அப்படிச் சிலேஷைப் பொருள்களுக்கும் ஔசித்யம் ரொம்பவும் ஏற்பட்டுவிடுகிறது.
விஷ்ணு சித்தரான பட்டர்பிரானொருவரை மட்டுமே நான் பேசப் பார்த்தாலும், பாஷை இன்னமிரண்டைச் சேர்க்கிறது.
அப்படிச் சேர்ப்பதும் உன்னுடைய ஏற்றத்திற்கே யாகிறது.
(2) திருமணப் பெண்ணான கோதையை வர்ணிக்குமிடத்தில் அவளை மதிமுக மடந்தை என்று பேசவேண்டாமோ?
அவளுடைய தேன்போன்ற பாட்டுக்களைப் புகழ வேண்டாமோ? ஓர் பிராட்டியைப் பெற, கடலைக் கடைவர் பெருமாளென்பரே,
அப்படிப் பேசவேண்டாமோ? பெரியபிராட்டியாரை மனைவியாயுடையவர் மணம் செய்யவேண்டுமானால்,
அவள் கூடப்பிறந்து அவளுக்கு அத்யந்த ப்ரியஸஹோதரியென்று பேசவேண்டாமோ?
இதையெல்லாம் இதோ பேசுகிறேனம்மா! வாக் கர்மிகமென்பர். ஒன்றொன்றாய்த்தானே பேசவேண்டும்!
(3) “ஸ்த்ரீ ரத்னமான ஊர்வசியைப் படைத்தவர் ப்ரஹ்மாவன்று; காந்தியைப் பரப்பும் சந்திரன் இவளைப் படைத்தானோ?
அல்லது, ச்ருங்கார நிதியான மன்மதன் படைத்தானோ? அல்லது, புஷ்பாகரமான வசந்த மாதம் படைத்ததோ?’ என்று விக்ரமர் பேசினார்.
“ப்ரஹ்மா எல்லா ச்ரேஷ்ட ரூபங்களையும் சேர்த்து ஒருமிக்கப் பார்க்கவேண்டுமென்று பொருள்களில்
பொறுக்கிச் சேர்த்து மனதினாலேயே ஸ்ருஷ்டித்தாரோ? கைபட்டால் கெட்டுப்போகுமென்று மனதாலேயே
அழகைக் கூட்டிக்கூட்டி ஸ்ருஷ்டித்தாரோ?” என்று துஷ்யந்தன் சகுந்தலையை வர்ணித்தான்.
“ஒரே வடிவில் விச்வத்திலுள்ள முழு அழகுக் கூட்டத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டுமென்ற ஆசையினால்
பார்வதியை ப்ரயத்தனப்பட்டு ஸ்ருஷ்டித்தார்” என்று காளிதாஸர் குமார ஸம்பவத்தில் வர்ணித்தார்.
இந்த அபூர்வமான கல்யாணப் பெண்ணைப் பற்றி அந்த வழிகளில் கவி ஸிம்ஹமாயிருப்பவர் பாடவேண்டாமோ?
அதற்கு மேலே பாடுகிறார். —
நான்முகன் மனதினால் நிர்மிதமானாள் பார்வதியென்றால், நான்முகனைப் படைத்த நாராயணன் மனம்
எப்படி எப்படி ஆசைப்பட்டதோ, அப்படியே அவன் திருவுள்ளத்திலிருந்தே தோன்றியவள் கோதை.
படைக்கப்பட்டவளல்ல, தானாக ஆவிர்பவித்தவள்.
‘பெருமாள் உகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானானவள்.’ பெருமாள் திருவுள்ளப்படி அங்கே உதித்தவளென்றதால்,
சந்த்ரன் அவ்விடமிருந்து உதித்ததுபோல் உதித்தவள். சந்திரனெப்படி இவளை ஸ்ருஷ்டிக்கும் ப்ரஜாபதியாகக்கூடும்?
கூடப்பிறப்பவன் ஸ்ருஷ்டித்தவனாவானோ? சந்திரன் பிறந்தவன். கோதை பிறவாதவள்.
நாயகன் மனதிற்கினிதாம்படி ஓர் விலக்ஷணச் சந்திரமூர்த்தியாகத் தோன்றியவள்.
அவளைப்போலவே அவளவதரித்த திவ்யதேசத்தில் அவள் அர்ச்சாமூர்த்தியும்.
பெருமாள் மனதிலிருந்தே கிளம்புவதால் அவர் பிள்ளைகளான ப்ரஹ்மாவிற்கும் ப்ரத்யும்னனுக்கும் ஸ்ருஷ்டிக்க அதிகாரம் எப்படிக்கூடும்?
அழகுக்கடலும், ரஸ்ஸ்வரூபருமான பெருமாள் ஆசைப்பட்டபடியெல்லாம் உருவம் அடைந்து தோன்றினாளென்றால்,
அதினிலும் அழகில் உயர்த்தியுண்டோ? பதனாயிரம் பூர்ண சந்திரர்கள் சேர்ந்த காந்தியையுடைய
பெருமாளிலும் அழகனோ சந்திரன்? ஸாக்ஷாத் மந்மத மன்மதனிலும் உயர்ந்தவனோ மன்மதன்?
‘மாஸானாம் குஸுமாகர’ என்றபடி வசந்தமாசம் பெருமாளுடைய ஓர் விபூத்யேகதேசந்தானே?
மாத: — தாயே! யாருக்குத் தாய்? விஶ்த்திற்குத் தாய். விச்வோபஜீவ்ய மாத்ருத்வம்.
முன் சொன்ன ஆழ்வார்களுக்கும் உண்மையில் நீ தாய். பெரியபிராட்டியாருக்கு மட்டும் நீ தங்கை.
மற்ற உலகுக்கெல்லாம் நீ தாய். ‘தாயே’ என்று முதலில் பொதுவில் கூப்பிட்டு,
முடிவில் ‘லக்ஷ்மிக்குத் தங்கை’ என்பதால் அங்கே மட்டும் ‘தாய்’ என்பதற்கு ஸங்கோசம்.
ஸமுத்தி தவதீம் —
“அம்ருதம் வெளிக்கிளம்பி மிதக்கும் ஸமயத்தில் கடைந்த பாற்கடலில் பெரியபிராட்டியார் உத்திதையானாள்” என்று
ஸ்ரீஸ்துதியில் வர்ணித்ததுபோல. நாயகன் மனதிலிருந்து அவரிச்சையை அநுஸரித்த உன் ஸ்வேச்சையினால் கிளம்பியவள்.
அவர் மனதிலிருந்து சந்திரபிம்பம்போல உதுத்தவள். ‘அழகாக மேலே கிளம்பினாள்’ என்பது இதற்குப் பொருள்.
குழந்தை பிறப்பதானால், பூமியில் கீழே விழுமா? பூமிக்கு மேலே கிளம்புமா?
பூமிப் பிராட்டியான நீ கர்ப்பத்திலிருந்து பூபதனமாய் விழுந்த குழந்தையல்லவே?
உலகத்தையெல்லாம் உன் கர்ப்பத்திற்கொண்ட விச்வம்பரையல்லவோ நீ!
அதிவிஷ்ணுசித்தம் —
பட்டர்பிரான் ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் நீயாகத் தோன்றினாய். பெருமாள் திருவுள்ளத்தில் அவர் உகந்த மூர்த்தியாய்த் தோன்றினாய்.
ஜகத்துக்கு ஆஹ்லாதத்தை உண்டு பண்ணும் சந்திரன் பிறந்தவிடத்திலிருந்து நீயும் உதித்தாய்.
இதனால் சந்திரஸஹஜை என்று சொல்லவேண்டும். சித்தமென்பது நடுவைச் சொல்லுமென்பர்.
விஷ்ணுவை நடுவில் வஸிக்கப் பெற்ற பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், சந்திரனோடும், அம்ருதத்தோடும்
கூடப்பிறந்தவளென்பர் பெரியோர். அதினிலும் உயர்த்தி பட்டர்பிரானாகிய விஷ்ணுசித்தரிடம் தோன்றியது.
‘விஷ்ணுசித்த’ என்பதற்கு அவர்தான் முக்கியமான (ரூடமான) முதற்பொருள்.
விச்வோபஜீவ்யம் அம்ருதம் —
தாரதம்மியமில்லாமல், அதிகாரி பேதமில்லாமல், எல்லோருக்கும் எளிதான அம்ருதத்தை.
தாய் கறக்கும் எந்தப் பாலில் குழந்தைக்குப் பங்கில்லை? பாற்கடலைக் கடைந்தெடுத்த அம்ருதம் தேவஜாதிக்கு மட்டுமேயுண்டு.
மானிடருக்குக் கிடையாது. இவ்வம்ருதம் எல்லோர்க்கும் கிடைப்பது. எல்லோரையும் போஷிப்பது, உஜ்ஜீவனம் செய்வது.
யஜ்ஞ்சிஷ்டமான அம்ருதமும் எல்லோருக்கும் கிடைக்காது. ஓர் விலக்ஷணமான சந்திர பிம்பமென்று அடுத்த பாதத்தில் ஸாதிக்கிறார்.
இங்கே ஓர் விலக்ஷணமான அம்ருதத்தைத் தன் பாசுரங்களால் வார்க்கிறாளென்கிறார்.
விக்ரமோர்வசீயத்தில் விக்ரமனுடைய அழகில் ஈடுபட்ட ஊர்வசீ ராஜாவைச் சந்திரனென்றும்,
அவருடைய மொழி (வசனம்) அம்ருதமென்றும் மனதிற்குள் புகழ்கிறாள்.
“அழகாயிருக்கிறதே இவருடைய வசனம்” அல்லது “சந்திரனிடமிருந்து அம்ருதம் பிறக்கிறது என்பது என்ன ஆச்சர்யம்” என்று
ஆக்ஷேபாலங்கார ரீதியாகத் தன் மனதிற்குள் பேசுகிறாள். அதை இங்கே ஸ்வாமி நினைத்து முதலில்
அம்ருத வசனங்களைப் பொழிவதைப் பேசி, அடுத்த பாதத்தில் சந்த்ரமூர்த்தி என்று வர்ணிக்கிறார்.
வசஸா துஹாநாம் —
வாக்கினால் அம்ருதத்தைச் சுரக்கிறாள். பாற்கடலை 33 கோடி தேவர்களும், கணக்கில்லாத அஸுரர்களும்
சேர்ந்து மந்தரமலையை மத்தாகக்கொண்டு கடைந்து அம்ருதத்தை எடுத்தார்கள்.
நீ அனாயாஸமாக உயர்ந்து தூயதான அம்ருதத்தைப் பால் கறப்பதுபோல் லகுவாகக் கறக்கிறாய்.
சந்த்ரன் தன் கரங்களினால் அம்ருதத்தைப் பொழிவான். நீ வாக்கினால் (மொழியினால்) பொழிகிறாய்.
சுகருடைய முகத்திலிருந்து (வாயிலிருந்து) ‘அம்ருதத்ரவஸம்யுத’மாய் வேதகல்ப வ்ருக்ஷத்திலிருந்து
பாகவதமென்னும் ரஸப்பழம் (பழரஸம்) விழுகிறதென்பர்.
உன் முகத்திலிருந்து அம்ருதத்ரவமாய்ப் பெருகுகிறது உன் ப்ரபந்த பாகவதம். எந்தப் பசுக்களைக் கறக்கிறாள்?
உபநிஷத்துக்களான பசுக்களை, கண்ணன் கறந்து கீதாம்ருதத்தைத் துக்தமாக்கினதுபோல (பால் ஆக்கினதுபோல).
ஆத்மநே பதத்தால் நாம் பருக, நமக்குக் கறந்து கொடுப்பதைத் தன் பேறாக நினைப்பதை வர்ணிக்கிறார்.
ஹிமருசே: —
குளிர்ந்த பனிக்கிரணமுடையவன் சந்த்ரனென்பர். இனிய காந்திக்காக சந்த்ரமூர்த்தியை ஓர் உவமையாக எடுத்தது.
பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், அம்ருதத்தோடும் பிறந்தவளென்று சந்த்ரனை எடுத்தது.
சந்த்ரன் தாபங்களையெல்லாம் தீர்க்கக் கூடியவன் அல்லன். “ஹிமத்தை (பனியை) கர்ப்பத்திற்கொண்ட
கிரணங்களால் அக்கினியைப் பொழிகிறான்.” என்றான் துஷ்யந்தன். ஹிமருசி என்று பெயர் மட்டுந்தான்.
அக்னி ருசியென்றால் தகும். “அடே பாபி ! துச்சரித சந்த்ரசாண்டாள” என்று காதம்பரியில் சந்த்ரனைப் பற்றி வாழ்த்து!
தாபச்சிதம் — ஸம்ஸார தாபத்திரயங்களையும் போக்குவதான. சந்த்ரமூர்த்தியைக் காட்டிலும்,
வைலக்ஷண்யம் (வ்யதிரேகம்) சொல்லப்படுகிறது. அம்ருதத்தைக் காட்டிலும் வைலக்ஷண்யம்
‘விச்வோபஜீவ்யம்’ என்று காட்டப்பட்டதுபோல. ‘அந்யாம்’ என்று சொல்லப்படும் வேற்றுமையையும்,
ஏற்றத்தையும் இந்த அடைமொழி விளக்குகிறது. நீ சுரக்கும் வாகம்ருதத்தைப் பருகினால்,
அம்ருதத்வமென்னும் மோக்ஷம் ஸித்திக்கும். தாபத்திரயங்களும் தொலையும்.
ஸ்வர்க்கிகளின் அம்ருதம் ம்ருதமென்னும் ஸம்ஸாரத்தைக் கறக்கும்.
அந்யாம் மூர்த்திமிவ — வேறு விலக்ஷணமான ஒரு மூர்த்தி
த்வாம் — உன்னை; ‘தாயே’ என்று தொடங்கி ‘உன்னை’ என்று முடிக்கிறார்.
பயோதிதுஹிது — பாற்கடலில் தோன்றிய பெரிய பிராட்டியாருடைய;
“யாருக்காக, யாரை அடைய, ‘அம்போதி’ என்னும் ஸமுதிதரம் கடையப்பட்டதோ, அணையால் கட்டப்பட்டதோ”
என்று ஆளவந்தார் பிராட்டி பெருமையை வர்ணித்தார்.
‘பயோதி’ என்றால் பாற்கடலுக்கும் சேரும், உப்பு நீருக்கும் சேரும்.
‘பய’ என்பதற்கு ஜலமென்றும் பொருள், பாலென்றும் பொருள். இங்கே ‘பயோதி’ என்று பிரயோகித்ததால்,
இரண்டுக்கும் பொதுவான சப்தமாகுமானாலும், முதலில் திருவணை கட்டத் தடங்கல் செய்த
ஸமுத்ரத்தைப் ‘பாற்கடல்’ என்னுமோர் பொருள்படக் கூடிய சப்தத்தால் பேச ஆளவந்தாருக்குத் திருவுள்ளமில்லை.
கல் நெஞ்சனைப் பாற்கடலென்பரோ? அதனால் ஆங்கே ‘பாற்கடலையும்’ ‘அம்போதி’ என்று ரூடிப்பெயரால் பேசுகிறார்.
இங்கே பாற்கடலை மட்டும் பேசுவதால் ‘பயோதி’ என்று பிரயோகிக்கிறார்.
‘பாற்கடலில் தோன்றிய பெண்’ என்பதால், அங்கே தோன்றியதால் மட்டும் எப்படி ‘புத்திரி’ என்ற அபிமானமோ,
அப்படித்தான் நீ புத்திரி என்ற அபிமானமும் என்பது கருத்து. ஸமஸ்த ஜநநியான லக்ஷ்மியும் துஹிதையென்பது
போலத்தான் உன்னையும் மகள் என்பது என்று காட்டப் பெரியபிராட்டியாரைத் துஹிதா என்று குறிக்கிறார்.
துஹாநா — துஹிதையின் ஸஹஜை.
ஸஹஜாம் — கூடப் பிறந்தவளென்று. ‘அம்ருத ஸஹஜை’ என்று ஸ்ரீஸ்துதியில் பெரியபிராட்டியாரை வர்ணித்தது
தேவஜாதியின் புத்தியைக் கொண்டு. தேவஜாதிக்கு அம்ருதமே ப்ரதானமாய்த் தோன்றியது.
‘அம்ருதத்துடன் பிறந்தாள் லக்ஷ்மி’ என்றார்கள். முதலில் அம்ருதத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.
பிறகு பிராட்டி அவதரித்து விஷ்ணு மார்பிலேறியதும், அவள் காலில் விழுந்தார்கள்.’ என்பது ஸ்ரீஸ்துதியின் வர்ணனம்.
காலில் விழுந்ததற்குக் காரணம் முன் சாபம் வந்ததனால் ஏற்பட்ட பயமென்றும் அங்கே காட்டினார்.
“ஆலோக்ய த்வாமம்ருதஸஹஜை விஷ்ணுவக்ஷ:ஸ்தலஸ்தாம் ஶாபாக்ராந்தாஶ்ஶரணமகமந்’ .
பெரியபிராட்டியாருடைய உடன் பிறந்தாள் என்று இங்கே வர்ணனம்.
அம்ருதத்தை இவள் கறக்கிறாளென்பதால் அம்ருதத்திற்குப் பின் பிறந்தவளன்று என்று ஸூசனம்.
ஸந்த: —
ப்ரஹ்மத்தை அறிந்த ஸத்துக்கள். ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் சேர்ந்த பெரிய பிராட்டியாருடைய
உடன் பிறந்தாளும் அம்சமுமான உன்னை ப்ரஹ்மவித்துக்கள்தானே அறியக்கூடும். விது: — அறிவர்.
ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் உதித்ததாலும், அம்ருதத்தைப் பொழிவதாலும், பெரிய பிராட்டியாரோடு உடன் பிறந்ததனாலும்,
தாபத்தைப் போக்குவதாலும், ஓர் விலக்ஷண சந்த்ர பிம்பம், ஓர் விலக்ஷண கௌமுதி, —
ஜ்யோத்ஸ்னை என்று இங்கே ஸாதிப்பதில் நோக்கு. மூன்றாம் பாதத்திலுள்ளதை விதேயமாக வைத்துக் கொள்ளலாம்.
ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே: – சந்த்ரனுடைய சந்த்ரிகை போன்றவள்.
ஆனால் பெருமாளென்னும் சந்த்ரனுடைய சந்த்ரிகை இவள்.
———-
தாதஸ்து தே மதுபித: ஸ்துதிலேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || (10)
தே — உன்னுடைய; தாதஸ்து — தகப்பனாரோ என்றால்;
ஸ்துதிலேஶ்வஶ்யாத் — கொஞ்சம் தோத்திரத்தாலேயேகூட வசப்படக்கூடிய; மதுபித: — பெருமாளிடமிருந்து;
கர்ணாம்ருதை: — செவிக்கு அமுதமான; ஸ்துதிஶதை: — பல நூறு துதிப் பாசுரங்களாலும்;
மஹத்தரபதாகுணம் — மஹத்தரர் (மிகப் பெரியவர்) என்னும் திருநாமம் பெறுவதற்கேற்ற; (பதவிக்கேற்ற);
ப்ரஸாதம் — அநுக்ரஹத்தை; த்வந்மௌளி கந்த ஸுபகாம் — உன்னுடைய கூந்தல் வாசனை ஏறியதால் ஸௌபாக்யம் பெற்ற;
மாலாம் — மாலையை; உபஹ்ருத்ய — உபஹாரமாக ஸமர்ப்பித்து; லேபே — பெற்றார்.
கொஞ்சம் ஸ்துதி செய்தாலேயே வசப்பட்டு விடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான
ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை
உன்னுடைய தகப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!
அவதாரிகை
(1) ஆழ்வார்களெல்லோரும் உன்னைப் புத்திரி என்று அபிமானிக்கிறார்கள். ஆனால் நீ விஷ்ணு சித்தரிடமிருந்து
தான் தோன்றியவளென்றீர். எல்லா ஆழ்வார்களும் அபிமானத் தாதைகளாய் இருந்தாலும் விஷ்ணுசித்தரை விசேஷித்துப்
பிதா என்று கொள்ளக் காரணம் என்ன? அம்மா! எல்லா ஆழ்வார்களும் பொதுவில் ஆழ்வார்களென்ற
மஹத்தான பதத்தைப் பெற்றவர்கள். ஆழ்வார் பதம் மஹத்தானது என்பதில் ஐயமில்லை.
பெருமாளுடைய தசாவதாரங்கள் போல், அவர்கள் அவருடைய அபிநவ தசாவதாரங்கள்.
தமிழ் வேத மந்த்ர த்ரஷ்டாக்களான தச ரிஷிகள். மஹத் பதம் மஹர்ஷி பதம்தான்.
ஆழ்வார் பதமே மஹாபதமாயிருக்கையில், ‘பெரியாழ்வார்’ என்று உன் தகப்பனாருக்குத் தானே ‘மஹத்தர’ பதம் கிடைத்தது!
மஹத்தான ஆழ்வார் பதத்திற்கும் மேற்பட்ட ‘பெரிய’ பதம் கிடைத்தது. அவர் வேதப் பாசுரங்களால் கிடைத்தது ஆழ்வார் பதம்.
உன் பிதாவால் நீ சூடிக்கொடுத்த மாலையை ஸமர்ப்பித்ததால் ஆழ்வார்களிலும் ‘பெரிய ஆழ்வார்’ என்னும்
பஹுமான பதம் கிடைத்தது. மற்ற ஆழ்வார்கள் குடிக்கும் நீ ஸந்ததி என்று அபிமானத்தில் பேசினாலும்
அவர்களுக்கு அது கிடைக்கவில்லையே!
(2) பெரிய பிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று முன் ச்லோகத்தின் முடிவில் ஸாதித்தார்.
பெரியபிராட்டியாரை ‘கந்தத்வாராம்’ என்று ஸர்வகந்தரான பெருமாளுடைய ஸௌகந்தயத்திலீடுபட்ட வேதம் புகழ்ந்தது.
அவளுக்கு உடன் பிறந்தாளும், அவளோடுகூட பெருமாளுக்குப் பத்தினியுமாவதற்கு ஆநுகுண்யத்தைக்
கோதையின் ஸர்வோத்தரமான ஸௌகந்த்யத்தைக் காட்டி ஸமர்த்திக்கிறார்.
தாதஸ்து தே — உன் தகப்பனாரான பெரியாழ்வாரோ என்றால்; விசேஷித்து உன் பிதாவானதால்
மற்ற ஆழ்வார்களிலும் மேலாக ‘பெரிய’ என்னும் உயர்த்தியான உபபதத்தைப் பெற்றார்.
‘து’ என்பதால் இந்த வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது. ‘உன் தகப்பனார்’ ஆனது பற்றித் தான் இந்த ஏற்றம்.
ஆழ்வாரானதால் மட்டுமல்ல. உன் விஷயமான இந்த கோதாஸ்துதியைப் படிப்பவன்கூட அவருக்கு (பெருமாளுக்கு)
பஹுமான்யராகும் போது உன் மாலையை ஸமர்ப்பித்த உன் தகப்பனாரை இப்படி அவர் பஹுமானியாது இருப்பாரோ?
மதுபித:– வேதங்களை அபஹரித்த மது என்னும் அஸுரனை ஸம்ஹரித்து வேதங்களை மீட்ட பெருமாளிடமிருந்து.
இதனால் வேதங்களின் அரும்பெருமையைப் பெருமாளே அறிந்தவர் என்பது ஸூசனம்.
வேதங்களை அப்படி அரும் பெரும் பாடுபட்டுப் பஹுமானிக்கும் பெருமாள் வேதங்களான ஆழ்வார்கள்
ப்ரபந்தங்களைப் பஹுமானித்து அவர்களுக்கு ‘ஆழ்வார்கள்’ என்று ‘மஹத்’ பதத்தை அளிப்பது உசிதமே.
வேதங்களை அஸுரர் அபஹரித்தாலும், தமிழ் வேதங்களிருந்தால் போதும்.
ஸம்ஸ்க்ருத வேதங்களை மீட்டுக்கொண்டு வந்தது போதுமோ? அதன் பொருளைத் தெளிய தமிழ் மறைகளும் வேணும்.
ஸுத்திலேஶவஶ்யாத் – ‘ஸ்தவப்ரிய:’ என்று திருநாமம். ஸ்வாராதரென்பர். ஓர் அஞ்ஜலிக்குக் கிங்கரரென்பர்.
கர்ணாம்ருதை: — “ப்ரதி ச்லோகமும் அபத்தமாயிருந்தாலும், அநந்தனுடைய யசோமுத்ரை உடைய திருநாமங்கள்
கலந்திருப்பதால், ஸாதுக்கள் கேட்டும், பாடியும் மகிழ்வர்” என்று பகவத் ஸ்தோத்ரங்களின் பெருமையை
சுகர் மகிழ்ந்து பாடினார். “கிருஷ்ணகர்ணாம்ருதம்”, “ராமகர்ணாம்ருதம்” என்று பகவத் ஸ்தவங்களுக்குத் திருநாமமிடுவர்.
ஸ்துதிஶதை: — யோகியான ஒரு ஆழ்வார் ‘பத்தே’ பாசுரங்கள் பாடினார். உன் தகப்பனார் கிட்டத்தட்ட ஐந்நூறுகள் பாடினார்.
அநவாப்தபூர்வம் — கர்ணாம்ருதமான வேதங்களான பல நூறுகள் பாடியதற்கு மற்ற ஆழ்வார்களைப் போல,
‘ஆழ்வார்’ என்று திருநாமம் மட்டும் கிடைத்தது. ‘பெரிய” என்று ஏற்றப் பதம் கிடைக்கவில்லை.
மற்ற ஆழ்வார்களுக்கும் அது கிடைக்கவில்லை.
த்வந் மௌளிகந்த ஸுபகாம் — தம்முடைய கர்ணாம்ருத வேதப் பாசுரங்களால் கிடைக்கவில்லை.
தம் மாலைகளால் கிடைக்கவில்லை. நீ அவதரிக்குமுன் எத்தனையோ பூமாலைகள் ஸமர்ப்பித்தவரே.
உன் பூமாலையால் கிடைத்தது. பாக்களால் கிடைக்கவில்லை. உன் ஒரு பூமாலையால் கிடைத்தது.
நீ சூடி வாசனையேற்றிக் கொடுத்த ஒரு பூமாலையை உபஹாரமாக ஸமர்ப்பிக்கும் பாக்யம் உன் பிதாவுக்குத்தானே கிடைத்தது!
உன் சிரஸான மூளையின் (புத்தி வ்ருத்திகளின்) வாசனை உன் பாமாலையிலேறியுளதுபோல், நீ சூடின பூமாலையிலும் ஏறியது.
“மௌளி” என்பது மூளையென்னும் புத்திஸ்தானமுமாகும்.
உன் கூந்தல் வாசனையால் மாலை ஸுபகமாயிற்று என்றால், உன் ஸௌபாக்யத்திற்குக் கேட்க வேணுமோ?
மாலாம் உபஹ்ருத்ய — மாலையை உபஹாரமாக ஸமர்ப்பித்து (உடனே)
லேபே — உபஹ்ருத்ய லேபே — இரண்டு பதங்களையும் சேர்த்தது ரஸம். ஸமர்ப்பித்த உடனே பெற்றார்.
நடுவில் ஒரு க்ஷணமேனும் தாமதமில்லை. “நாகாரணா தாநந்தர்யம்” என்று ந்யாயம்.
உன் மாலையை ஸமர்ப்பித்ததுதான் ‘பெரிய’ என்ற ‘மஹத்தர’ பதம் கிடைத்ததற்குக் காரணம்.
அந்வய வ்யதிரேகங்களால் கார்ய காரண பலம் ஸித்திக்கும். நூற்றுக்கணக்கான பாமாலைகளாலும்
பூமாலைகளாலும் முன்பு அடையப்படாதது என்று வ்யதிரேகம் காட்டப்பட்டது. இங்கே அந்வயம் காட்டப்பட்டது.
மஹத்தரபதாநுகுணம் ப்ரஸாதம் —
ஆழ்வார்களிலும் உயர்த்தியாய் ‘பெரிய ஆழ்வார்’ என்னும் ஏற்ற பதவி கிடைக்கும்படியான அநுக்ரஹத்தைப் பெற்றார்.
ஏனைய ஆழ்வார்கள் சிலர் நாயகீ பாவத்தில் ஆழ்ந்து மூழ்கினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பெண்ணுக்கே
ஸபத்நியாகவில்லை. உன் பிதா சில அவஸரங்களில் உனக்கே ஸபத்நீ பாவத்தை அடைந்தார்.
மூன்றாம் சதகத்தில் ‘ஐயபுழுதி’யில் “மாயன் மாமணிவண்ணன் மேலிவள் மாலுறுகின்றாளே” என்றும்,
“நல்லதோர் தாமரை”யில் “என் மகளை எங்கும் காணேன்”, “செங்கண்மால்தான் கொண்டுபோனான்” என்றும்,
இவ் வாழ்வாரைப் பெற்ற தாயலற்றியதைக் கவனிக்கவேண்டும்.
புருஷப் பிள்ளையாய்ப் பெற்று வளர்த்தது, ஏதோ பெண்ணாக மாறிவிட்டது. அது போகட்டும்.
பெண்ணாக மாறிவிட்ட என் புருஷக் குழந்தையை இந்தப் பாடா படுத்தவேண்டும் என்று அலற்றல்.
உன் மணாளனுக்கே பத்தினியாகி அவருடைய அந்த ரீதியான அநுபவ ஆழ்ச்சி மற்றவர் ஆழ்ச்சியிலும் பெரிதாயிற்று.
மிக வியக்கத் தக்கதாயிற்று.
இன்னுமொரு ரஸமும் உண்டு. ‘பெருமாள்’, ‘பெரிய புருஷர்’, ‘மஹாபுருஷர்’. ஆண் என்பது ‘ஓர் புருஷன்’.
ஜீவாத்மாக்கள் ‘புருஷர்கள்’. பெருமாள் மஹத்தான ‘மஹா புருஷர்’.
உன் பிதா அவருக்கும் மாமனாராகி அம்மஹா புருஷனுக்குக் குருவானார்.
ஹிமவானை “த்ரயம்பக ஈச்வரரான குரு” என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் வர்ணிக்கப்பட்டது.
‘பூர்வரான குருக்களுக்கும் குருதமர்’ என்று ஜனகர் வசிஷ்டரை வர்ணித்தார்.
மஹாபுருஷனுக்கு மஹனீயரான ச்வசுர குருவானதால் ‘மஹத்தரர்’ என்னும் பதம்.
‘மஹத்தரபதம்’ என்பது பரமபதத்தைச் சொல்லுவதாகவும் உரை கொள்ளுவர். ‘விஷ்ணுவின் பரமம் பதம்’ என்று ச்ருதி.
விஷ்ணுசித்தர் விஷ்ணுவின் பரமமான பதத்தைப் பெற்றார்.
இது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானதால், வைலக்ஷண்யம் ஏற்படாமற் போகும். ரஸிகர் மனமே ப்ரமாணம்.
“பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ”
என்பதைக் கவனிக்கவேண்டும். ச்வசுரராகிய பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தவர் இவர் மணாளனானதும்,
அந்த ச்வசுரராகிய வீட்டையும் படுக்கையையும் விட்டு இந்த ச்வசுரர் மனக்கடலில் பள்ளிகொண்டார்.
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” என்றபடி இவர் மணாளன் மாயன்.
“ஔதந்வதே மஹதி ஸத்மதி” என்ற பாற்கடலாகிய அந்த மஹாக்ருஹத்திலும் மஹத்தரமான க்ருஹமாயிற்று இவர் மனக்கடல்.
பெரிய பெருமாளான மஹாபுருஷருக்கும் பெரிய குருவானார், மஹத்தரானார். முத்ராராக்ஷஸாதி நாடகங்களில்
‘ஸ்வஜாதிமஹத்தர’ என்று கௌரவமாயழைப்பர்.
‘உம் ஜாதியில் (குலத்தில்) உயர்ந்தவரே’ என்று ‘மஹத்தர’ பதத்தாலழைப்பர்.
ஆழ்வார் ஜாதியில் (குலத்தில்) பெரியவரே, மஹத்தரரே என்று அழைப்பு. .10.
————
திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:|| (11)
தேவி — கோதாதேவியே! திக் தக்ஷிணாபி — தெற்குத் திக்குங்கூட;
பரிபக்த்ரிம் புண்ய லப்யாத் — பரிபக்குவமான புண்யத்தால் கிடைக்கத்தக்க;
தவ அவதாராத் — உன்னுடைய அவதாரத்தால்;
ஸர்வோத்தரா — எல்லா விதத்திலும் உத்தரமாய் (ச்ரேஷ்டமாய், வடக்காய்); பவதி — ஆகிறது;
யத்ரைவ — எந்தத் திக்கிலேயே; நித்ராளு நாபி — தூங்கிக் கொண்டிருந்தாலும்;
ரங்கபதிநா — ரங்கேச்வரரால்; பஹுமாந பூர்வம் — பஹுமானத்தோடு கூட;
நியதம் — இடைவிடாமல்; (நியமமாக); காடாக்ஷ: — கடாக்ஷங்கள்; நிஹித: — வைக்கப்பட்டுளவோ?
அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால்,
தென் திசை கூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று).
ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக் கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு
கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப் பட்டிருக்கின்றன!
அவதாரிகை
(1) நம்மாழ்வாரிலும் என் பிதா மஹத்தரரான பெயரை அடைந்தார் என்றீரே! என் பிதா வாங்கி என் மாலையை
ஸமர்ப்பித்ததால் அப்படி அரும் பெரும் ஏற்றம் கிடைக்குமோ? அம்மா! இது என்ன ஆச்சர்யம்!
நீ அவதரித்த மஹிமையால் தக்ஷிண திக்கும் ஸர்வோத்தரமாயிற்றே! ஓர் ஆழ்வார் உன்னை அவதரிப்பித்து
வளர்த்த பிதாவானதால், மஹத்தரராவது அரிதோ? ‘ஸர்வோத்தரம்’ என்பதால் உத்தமமாயிற்று.
ஓர் திக்கு நீ பிறந்த திக்கு என்கிற ஏத்தோ ஒரு ஸம்பந்தத்தாலே ஸர்வோத்தமாகையில்,
ஆழ்வாரான உன் பிதா நீ அவதரித்ததால், மஹத்தரராவது கொஞ்சமே என்று சொல்ல வேண்டும்.
(2) பெருமாளுடைய அபிநவ தசாவதாரங்களான ஆழ்வார்களைப் பேசினார். இங்கே கோதைப் பிராட்டியான
தேவி ஆழ்வார்களைப் போல பிரபந்தமியற்றிய கவியாக அவதாரம் செய்ததைப் பேசுகிறார்.
திக் தக்ஷிணா அபி —
தென்திசை கூட; தென் திக்கின் அதிபதி ‘பித்ரு பதி’ என்பர். அவர் பேரே நடுங்கச் செய்யும்.
பித்ரு நாமத்தை உடையவராய் அதிஷ்டிதமான ஓர் திக்கின் ஓர் மூலையில் பிறப்பென்னும் ஸம்பந்தம் கூட
பயத்தைக் கொடுக்கக் கூடிய திக்குக் கூட.
பரிபக்த்ரிம புண்யலஹ்யாத் —
எத்தனை புண்யங்கள் பரிபாக தசையை அடைந்து இப்படிக் கொத்த
பயனைக் கொடுக்கவேணும்! ‘தர்மராஜர்’ பயங்கரரென்று உலகம் பயந்தாலும், அவர் தர்மமூர்த்தி யல்லவோ?
தர்மம், புண்யம். அந்த திக்பதியின் மஹாபுண்யங்களெல்லாம் அந்தத் திக்கைச் சேர்ந்தது. பதியின் புண்யம் பத்நிக்குடையது.
தேவி தவ் அவதாராத் —
தேவி! என்னுடைய திவ்யமான அவதாரத்தால், விபீஷணாழ்வார் அவதரித்ததும்,
அரசு செலுத்துவதுமான திக்கென்று முன்பு ஏற்றமுண்டு. நம்மாழ்வார் அவதரித்ததால், அந்தத் திக்கு முன்பே ஓர் ஏற்றம் பெற்றது.
அந்த அவதாரமும் மஹா புண்ய பரிபாகத்தால் ஸப்யம். ஆனால், அது தேவன் அவதாரம்.
பெருமாளோ, விஷ்வக்ஸேன தேவரோ நம்மாழ்வாராய் அவதரித்தார். இங்கே தேவியான உன்னுடைய அவதாரம்.
‘உன்னுடைய அவதாரக்ஷணத்திலிருந்து’ என்றும் பொருள். விபீஷணர் தேவரல்ல.
ஸர்வோத்தரா பவதி —
எல்லாவற்றிலும் சிரேஷ்டமாயாகிறது. தெற்குத் திக்கு வடகோடியாகி விடுகிறது என்பது ஆச்சரியம்!
‘உத்தர’ என்பது ச்ரேஷ்டத்தையும் சொல்லும், வடக்கையும் சொல்லும்.
‘ரொம்ப தூரம் கிழக்கே போனால், அது மேற்காகி விடும்’ என்று ஓர் ஆங்கிலப் பழமொழி.
‘கிழக்கும் மேற்கும் ஓரிடத்தில் சேரும்’ என்பர். ‘தெற்கும் வடக்கும் ஒருகாலும் சேராது, நித்திய விரோதிகள்’ என்பர்.
உன் அவதார மஹிமையால் இளப்பமானது லோகோத்தரமாகும். சேராத விருத்தங்களும் விரோதத்தை விட்டுச் சேர்ந்து விடும்.
யத்ரைவ — எந்தத் திக்கை நோக்கியே
ரங்கபதிநா —
“தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்” என்பர்.
தென் நாட்டுக்கும் வடநாட்டுக்கும் மத்தியத்திலுள்ள ரங்கபதி. இரண்டு திக்குகளுக்கும் பொதுவாய்ப்
பக்ஷபாதமில்லாமல் மத்தியஸ்தமாயிருக்க வேண்டியவர். அப்படி மத்தியஸ்தராக இருக்கவேண்டியவரான “ரங்கபதியாலேகூட” .
திருவரங்கத் திருப்பதி மத்தியஸ்தமாய் இருப்பதுபோல அத்திருப்பதியின் பதியும் மத்தியஸ்தமாய் இருக்க வேண்டாவோ?
பஹுமான பூர்வம் —
பஹுமானத்தோடுகூட. அரங்கத்தில் தூக்கம் நடனமே யம்மா!
நீ பிறந்த திக்கென்று பஹுமதியாய் எண்ணிக் கொண்டேயிருக்கிறார். மனது லயமடைந்தால் அல்லவோ தூக்கம்!
தெற்குத் திக்கிலேயே உன் அவதார ஸம்பந்தத்தையிட்டும் இத்தனை பஹுமானமிருக்கும்போது,
அதை ‘உத்தம’மாக ‘ஸர்வோத்தர’மாகச் செய்யும்போது, உன் பிதாவை மஹத்தரராக்குவது அரிதாகுமோ?
திக்கை ‘தம’மாக்குபவர் உன் பிதாவை ‘தா’ரராக்காரோ?
நித்ராளுநா அபி —
தூக்கமாயிருந்தாலும், ரங்கத்தில் தூக்கத்தை நடிப்பது போலத் தான் ரங்கபதியின் தூக்கம்.
‘நித்ராதி ஜாகர்யயா’ ‘விழித்துக்கொண்டே தூங்குகிறார்’, ‘யோகநித்ரை’. என்ன யோகம்?
ஆண்டாள் யோகம். “அநித்ர:ஸததம் ராம” என்று சொல்லி நிறுத்திவிட வேணும்.
நியதம் — நிரந்தரமாய். யோகத்தில் எப்படி இடைவிடாமல் அவிச்சின்னமான நினைப்போ, அப்படியே.
கடாக்ஷ: நிஹித: —
கடாக்ஷங்கள் வைக்கப் பட்டிருக்கின்றனவோ. ‘உன்னுடைய அவதார காலத்திலிருந்து
இப்படி நியதமாக த்ருஷ்டி வைக்கப் பட்டுளது’
‘தவ அவதாராத்’ என்பதை இங்கும் அந்வயிக்க. ‘எப்போ வருவாளோ?’ என்று த்யானம்.
————
ப்ராயேண தேவி பவதீவ்யபதேசயோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.
தேவி — ஏ கோதாதேவியே! பவதீவ்யபதேஶயோகாத் — உன் பெயரைப் பெற்ற ஸம்பந்தத்தால் (பாக்யலாபத்தால்),
கோதாவரீ — கோதாவரி நதியானது; இதம் ஜகத் — இவ்வுலகை; பயஸா — தன் தீர்த்தத்தால்; ப்ராயேண — மிகவும்;
புநீதே — பரிசுத்தப்படுத்துகிறது. யஸ்யாம் — எந்த கோதாவரி நதியில்; ஸமயேஷு — புண்ய காலங்களில்;
பாகீரதி ப்ரப்ருதயோ அபி — கங்கை முதலிய புண்ய நதிகளும் ; ஸமேத்ய — சேர்ந்து;
சிரம் நிவாஸாத் — வெகு காலம் கூடி வஸிப்பதால்; புண்யா: — பரிசுத்தங்களாக; பவந்தி — ஆகிறார்களோ.
அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.
எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி
நீண்டகாலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.
அவ — தென் திக்கின் ஓர் கோணத்தில் நீ அவதரித்தாய் என்ற வஸ்து ஸம்பந்தமாவது அந்தத் திக்குக்கு உண்டு.
அந்த ஸம்பந்தம் லேசமுமில்லை கோதாவரீ நதிக்கு. உன் பெயரைத் தன் பேராகப் பெற்ற ஸம்பந்தந்தானுண்டு.
பேர் ஒற்றுமை என்ற சப்த ஸம்பந்தம் நாமமாத்ர ஸம்பந்தம் தானுண்டு. அந்த ஸம்பந்தத்தாலும்,
அந்நதி ஸர்வோத்தரமான (உத்தமமான) பரிசுத்தியை உடையது. உலகத்தையெல்லாம் பரிசுத்தமாக்குகிறாள்.
உலகத்தை எல்லாம் புனிதமாக்கும் புண்யநதிகளையும் தன் சேர்க்கையால் புண்யமாகச் செய்யும் சக்தியை அடைகிறாள்.
பெருமாள் ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையும் கோதாநதியில் தீர்த்த யாத்திரை செய்து அங்கே க்ஷேத்ரவாசம் செய்து
அசுத்தியை நீக்கிப் புண்யமாகிறாள். அதெல்லாம் உன் திருநாமத்தைப் பெற்ற பாக்கியத்தின் மஹிமை.
“நாமவஹனம்” ஓர்விதமான தாஸ்யமாகும். ‘த்வத்தாஸ தாஸீகண” என்பதுபோல.
கோதாநதீ என்னும் தேவீ தாஸீகணத்தில் சேர்வாள், உன் திருநாமத்தை வஹிப்பதால்.
தேவி —
கோதாதேவியே! கோதாவரீதேவி, பாகீரதீதேவீ முதலிய புண்யநதீதேவிகள் உன் விபூதிகள், உன் தாஸிகள்.
பவதீவ்யதேஶயோகாத் —
உன் திருநாமம் தனக்கும் பெயரான ஓர் ஸம்பந்தத்தால், பெயர் ஸம்பந்தத்தால் மாத்ரம்.
யோகம் என்பதற்கு ‘ஸம்பந்தம்’ என்று பொருள். அது கிடைக்காதது கிடைப்ப தென்னும் அலப்த லாபத்தையும் சொல்லும்..
அநவாப்த பூர்வமானதைப் புதிதாக அடைதலைச் சொல்லும். உன் திருநாமம் தனக்கும் அமையப் பெறும் பாக்கியம் அலப்ய லாபமே.
10இல் “உன் தாதைக்கு முன்பு கிடையாதது உன்னால் கிடைத்தது” என்றார்.
11இல் “மஹாபுண்ய பரிபாகத்தால் லப்யம் உன் அவதார ஸம்பந்தம்” என்றார்.
இங்கும் “யோகாத்” என்பதால் உன் பெயர் தனக்கும் அமையப் பெற்ற (கிடையாதது கிடைத்த)
பாக்கியத்தால் என்று விளக்குகிறார்.
எல்லாம் இங்கே பாக்யமும் புண்யமும், இலப்ய லாபமும், பரிசுத்தி லாபமுமாகவே இருக்கின்றன.
நிகண்டுவில் “கோதா” என்பது ‘கோதாவரீ நதிக்கும்’ ‘விஷ்ணுசித்தர்’ ஆத்ரஜைக்கும் பெயர் என்று
சேர்த்துப் படிக்கப்பட்ட சப்த ஸம்பந்தந்தான். வேறு வஸ்து ஸம்பந்தமில்லை. நிகண்டுவில் ஸஹயோகந்தான்.
சப்த மாத்ரமான ஸம்பந்தத்திற்குக்கூட இத்தனை மஹிமையுளது. உன் பிதாவான ஆழ்வார்
‘பெரிய ஆழ்வாராவது’ என்ன ஆச்சரியம்! இப்படி கைமுத்யங்களால் அதை ஸமர்த்திப்பதில் திருவுள்ளம்.
கோதாவரீ — ‘கோதாவரீ’ என்பது நதிக்கு மட்டும் பெயர். ‘கோதா’ என்பது உங்களிருவருக்கும் நிருநாமம்.
இதம் ஜகத் —
இவ்வுலகனைத்தையும். தீர்த்த ஸ்நானம் எல்லோருக்கும் பொது.
உன் ஸரஸ்வதீ நீராட்டமும் எல்லோர்க்கும் பொது.
பயஸா ப்ராயேண புநீதே — தீர்த்தத்தால் விசேஷமாய்ப் பரிசுத்தமாக்குகிறாள். தீர்த்தத்தால் சுத்தமாக்குகிறாள்.
நீ உன் நாம மாத்ரத்தாலும் கோதாவரீ நதிக்கு ஸர்வோத்தரமாகும் மஹிமையை அளிக்கிறாய்.
ப்ராயேண — அநேகமாய்ப் பரிசுத்தமாக்குகிறாள் கோதாவரீ.
பூர்ணமாக, ஏகாந்தமாக சுத்தமாவது உன் ஸரஸ்வதீ நீராட்டத்தினால்தான்.
யஸ்யாம் —
எந்த கோதாவரீ நதியில். ஸீதைப்பிராட்டி சிர காலம் பஞ்சவடியில் அந்நதியில் நீராடி
அதைப் புண்யமாக்கினாள். ‘ஹநகதநயா ஸ்நான புண்யோதகேஷு’ என்று காளிதாஸர் கோதாவரீ தீர்த்தங்களைப் புகழ்ந்தார்.
ஸமயேஷு — சில புண்யகால விசேஷங்களில்.
ஸமேத்ய —
சேர்ந்து. ‘நதிகளின் சங்கமம்’ உயர்த்தி என்பர். இங்கே மற்ற புண்ய நதிகள் தங்களுக்கு
நேர்ந்த பல பாபிகளின் ஸம்பந்தத்தால் வந்த அசுத்தியைப் போக்குவதற்காக கோதாவரீ நதிக்குத்
தீர்த்த யாத்திரையாக வந்து, அங்கே சேர்ந்து பஹுகாலம் வஸித்து அதனால் சக்தி பெறுகிறார்கள்.
தீர்த்தங்கள் செய்யும் தீர்த்த யாத்திரை, தீர்த்த வாஸம்.
சிரம் நிவாஸாத் —
சிர காலம் வஸிக்கிறார்கள். உன் பெயரைப் பெற்ற நதியென்னும் அந்த
உன் ஸம்பந்தத்தால் மஹா பரிசுத்தமான நதியென்னும் கௌரவம். ‘தே புந்யேந்துருகாலேந’
‘ஜலமயமான தீர்த்தங்கள் வெகுகாலத்தால் பரிசுத்தியைச் செய்கின்றன’ என்கிற வசனப்படி
நதீ ஸாமான்ய வாஸனையால் சிரகாலம் வஸிக்கிறார்கள்.
பாகீரதீ ப்ரப்ருதயோபி —
கங்கை முதலிய மஹாநதிகளும். பகீரத ப்ரயத்தினத்தின் பேரில் ஸ்வர்க்கத்திலிருந்து
இங்கே அவதீர்ணமான கங்கையும், உத்தம புண்ய நதிகளும். “கங்கை கங்கையென்ன வாசகத்தாலே
கடுவினை களைந்திடுகிற்கும் கங்கையின் கரைமேல்”, “எழுமையும் கூடி யீண்டிய பாவமிறைப் பொழுதளவினிலெல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்” என்றபடி பிறர் பாவங்களைக் கழுவினாலும்,
அந்தப் பாபங்கள் தங்களோடு சேர்ந்து தமக்கே செய்த அசுத்தியைத் தாமே கழுவச் சக்தியில்லை.
புண்யா: பவந்தி —
புண்யங்களாக (பரிசுத்தங்காள) ஆகின்றார்கள். இதனால் புண்ய நதிகளெல்லா வற்றிலும்,
கோதாவரீ, உன் திருநாம ஸம்பந்த மாத்ரத்தால், ஸர்வோத்தரமான புண்ணியநதி யாகிறாளென்று ஸூசனம்.
வடக்குத் திக்கிலுள்ள கங்கா யமுனா நதிகளிலும் கோதாவரீயென்னும் தென் நதி உத்தரமாகின்றாள்.
கோதாவரீ தீரத்தில் பிறந்த பவபூதி கவியும், உத்தரராம சரிதத்தின் இரண்டாமங்கம் முடிவில்
“தக்ஷிணதேச மலைகளின் குஹைகளில் கோதாவரீ தீர்த்தங்கள் புகுந்து சப்திக்கின்றன” என்று வர்ணித்திருக்கிறார்.
கோதாவரீ நதியை அவர் தக்ஷிணதேச நதியென்றார்.
முராரி நாடகத்தில் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் செல்லும் பெருமாள்
“கோதாவரீயை வந்தனம் செய்” என்று ஸீதைக்குச் சொன்னார். .12.
——–
நாகேஶயஸ் ஸுதநு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண: |
ஏவம்விதாஸ் ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
ஸந்தர்ஶயந்தி பரிஹாஸகிரஸ் ஸகீனாம் || .13.
ஸுதநு — அழகிய மேனியமைந்தவளே!; நாகேஶய: — பாம்பணையிற் பள்ளி கொண்டவனும்;
பக்ஷிரத: — பக்ஷியின் மேல் சவாரி செய்கிறவனுமான; புராண: புருஷ: — கிழவர்;
கதம் — எப்படி; தே — உனக்கு (உனக்கிஷ்டமான); ஸ்வயம்வரபதி — ஸ்வேச்சையால் வரிக்கப்பட்ட பதியாக;
ஜாத: — ஆனார். ஸகீநாம் — (உன்னுடைய தோழிமாருடைய;
ஏவம்விதா — இப்படிக்கொத்த; பரிஹாஸகிர: — பரிஹாஸப் பேச்சுக்கள்;
பவத்யா: — உன்னுடைய; ப்ரணயம் — நாயகன் விஷயமான ராகத்தை,(விருப்பத்தை);
ஸமுச்சித: — தகுதியுள்ளதாக; ஸந்தர்ஶயந்தி — நன்றாய் விளக்குகின்றன.
அழகிற் சிறந்தவளே! பாம்பின்மேல் படுப்பவரும், பக்ஷியின் மேலேறிப் பறப்பவரும், தனக்கு மேல்பட்ட
மூத்தோரில்லாத கிழவருமானவர் எப்படி நீ ஆசைப்பட்டு வரித்தவரானார்? என்றிம்மாதிரியான தோழிகளின்
பரிஹாஸ மொழிகள் (உண்மையில்) உன்னுடைய பதி விஷய ப்ரணயம் மிகவும் உசிதம் என்று நன்கு காட்டுகின்றன.
அவதாரிகை
(1) ஆண்டாள் பிறப்பையும், அவள் பிறப்பு முதலிய ஸம்பந்தலேசங்களாலும் வரும் லோகோத்தரமான
ஏற்றங்களையும் ஸாதித்தார். ஆண்டாள் கல்யாணம் ப்ரஸ்துதம். வதூவின் பிறப்பின் சிறப்பை ஸாதித்தார்.
வரனின் சிறப்பைப்பற்றி என்ன பேசுவது? பிறவாதவனுக்குப் பிறப்பேது?
இந்த வரனுக்கு ஜாதகமென்ன? ஜாதனானாலல்லவோ ஜாதகமிருக்கும்!
(2) கல்யாண விஷயத்தில் ‘சீலம், வயசு, வ்ருத்தம்’ முதலியதெல்லாம் துல்யமாக அநுரூபமாக இருக்கிறது.
ஆகையால் ராகவனும் ஸீதைக்குத் தக்கவர், ஸீதையும் ராகவனுக்கேற்றவள் என்பரே!
இங்கே சேர்க்கை ஔசித்யங்கள் எப்படி?
(3) கல்யாண ஸந்தர்ப்பத்தில் தோழிமார் மாப்பிள்ளையப் பற்றிப் பரிஹாஸங்கள் பேச வேண்டுமே!
கோதை நர்த பரிஹாஸோக்திகளில் மிகக் கெட்டிக்காரியான நர்மதையல்லவோ!
அவளுக்கு இன்பமான பரிஹாஸ வசனங்களைப் பேசவேண்டுமே! அந்தத் தாயார் கல்யாண விஷயத்தில்
மேல் பார்வைக்கேனும் பழிப்புகள் போன்ற நர்ம ஹாஸங்களை நாம் பேசக்கூடாது.
அடியோடு ஏசல் இல்லாமையும் கல்யாணத்திற்கு ஒவ்வாது. தோழிகள் மூலமாகத் துளியே பேசுவோம்.
பாதி ச்லோகத்தோடு பேசி நிறுத்துவோம். அரைகுறையாகவே பேசுவோம்.
(4) பரிஹாஸம் பேசிப் பழிப்பது துதியாகுமோ? துதியல்லவோ இங்கே ப்ரஸ்துதம்!
இந்த க்ரந்தம் கோதை நிந்தை க்ரந்தமல்லவே! அல்ல. துதிதான். நிந்நையே துதியாகும். இது வ்யாஜஸ்துதி அணி.
(5) ரங்கத்தில் ஹாஸ்யம் ப்ரதானமே. அரங்கர் கல்யாணத்தில் ஹாஸ்யம் வேணுமே!
நாகேஶய: —
பாம்பின் மேற்படுப்பவர். ஸஹ சயன மனோரதம் தானே முதன்மையானது?
‘பாம்போடு ஒரு கூரையில் வசிப்பதே துன்ப’மென்பர். படங்களை விரித்திருக்கும் ஆயிரம் தலை பாம்பின் மேல்
என்றும் சயனிப்பவராயிற்றே! நாகேசயன் என்று அலுக்ஸமாஸத்தினால் இப் படுக்கை தான் நித்யம்,
இதற்கு லோபமேயில்லை என்று வேடிக்கை. பத்னியோடு சேர்க்கை போல படுக்கைக்கும் நித்ய யோகம்.
பாம்பின் விரித்த படங்களே படுக்கைக்குமேல் அஸமானகிரி. இந்த விதானத்திற்கு ஸமானமில்லையாம்.
அஸமானமாம். பாம்பின் சிரோரத்னங்களே படுக்கையறை தீபங்கள். இது என்ன படுக்கை ஜோடிப்பு?
பெருமாள் நித்ராளுவானாலும், இப்பாம்புக்குத் தூக்கமேயில்லை. பாம்பு தூங்கினாலும், அக்காலத்திலாவது பயமற்றிருக்கலாம்.
நீர் ஜாக்ரதையாயிருந்தாலும், தூங்கினாலும், நான் தூங்காமல் கண்ணைக் கொட்டாமல் விழித்திருந்து
காவல் ஊழியம் செய்வேன் என்று வ்ரதம் அனுஷ்டிக்கும் படுக்கை.
கல்யாணத்தில் பரதேசம் போவதற்குக் குடை பிடித்துக் கொள்ள வேணுமே!
நான்தான் குடை என்று பாம்பே குடையாக முன்வருமே! வேறு குடைக்கு இடம்கொடாமல் சீறுமே!
பர தேசம் போம பாதுகை வேணுமே! அதற்கும் நானே என்று முன்வருமே! நிவாஸமும் தானாகுமே! ரஹஸ்யம் தெரியாதோ?
இப்பாம்பு தானே உன் வேங்கடவர் வசிக்கும் வேங்கடம்! மனைப் பலகையில் உட்கார வேண்டுமே மாப்பிள்ளை!
வேறு ஆசனத்திற்கு இடம் கொடாதே! பூம் பட்டு வேண்டுமே! அதுவும் தானே என்று முன்வருமே! அம்மா!
இந்த ரஹஸ்யமெல்லாம் உன் தாதைகளான ஆழ்வார்களுக்குத் தெரியுமே!
“சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணையாம்
மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கு மணையாம் திருமாற்கரவு” என்று அவர்கள் பாடுகிறார்களே!
அவர்கள் எப்படி இந்த வரனுக்கு வாழ்க்கைப்பட சம்மதித்தார்கள்?
“பையரவினணைப் பள்ளியானொடு கைவைத்தின் வருமே” என்றாரே விஷ்ணுசித்தரும்!
பக்ஷிரத: —
படுக்கை யிருக்கட்டும். ஊரெல்லாம் கூட வந்து வாத்ய கோஷங்களோடு ரதத்தில் ஊர்வலம் மெள்ள மெள்ள
விடியும் வரையில் வரவேண்டுமென்று ஒரு பெண் ஆசைப்பட மாட்டாளோ?
ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியல்லவோ இந்த மாப்பிள்ளைக்கு வாஹனம்! ரதம்! ஒருத்தர் கூடவர முடியுமோ?
நீதான் அந்தப் பக்ஷியின் முதுகிலேறிப் பறப்பாயோ! சிறு பெண்ணுக்கு ஆகாயத்தில் பறக்க பயமிராதோ?
பயமிருந்தால் ஸுகமிருக்குமோ? ஸந்தோஷமிருக்குமோ? ஊர்வலம் மெள்ள மெள்ள ஊர்ந்தல்லவோ வரவேண்டும்?
மெள்ள அடியடியாக ஊர்வது ஊர்வலத்திற்கு அழகு. பக்ஷி பூமியில் நடக்குமோ? வேறு வாஹனம் இவருக்கு ஆகாதே!
‘பெருமாளும் நல்ல பெருமாள், திருநாளும் நல்ல திருநாள், ஆயினும் இப்பெருமாளைப் பருந்து தூக்கிப் போவதே’
என்று காளமேகக் கவி பாடினார். ‘பறவையேறு பரம்புருடா’ என்றார் உன் தந்தை.
ஸுதநு —
அழகிற் சிறந்தவளே! இதைப் ‘பாம்பணையோன்’ என்பதற்கும் ‘பக்ஷிரதர்’ என்பதற்கும்
நடுவில் வைத்தது ரஸம். இரண்டும் உன் அழகிய மேனிக்கு மிகவும் அநுசிதம்.
உன் ஆத்மா ஒத்துக்கொண்டாலும், உன் காத்திரமொவ்வாதே! நாகமும் பக்ஷியும் ஸஹஜ சத்ருக்களல்லவோ!
நடுவே ஈச்வரதத்துவம் நின்று விரோதமே மனதிலுதிக்காமல் தடுக்கிறது என்று வேடிக்கை.
‘பையுடை நாகப்பகைக் கொடியோனுக்குப் பல்லாண்டு கூறுதுமே’ உன் பூந்தோட்ட புஷ்பமய சய்யை உனக்கேற்றது.
‘தஸ்யா:புஷ்பமயீ சய்யா’ என்றார் காளிதாஸர் சகுந்தலை விஷயத்தில்.
‘குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ன பஞ்சசயனத்தின் மேலேறி’
என்றல்லவோ படுக்கை மனோரதம் ஸஹஜம்!
கதம் ஜாத: ஸ்வயம்வரபதி: —
எப்படி அவர் உனக்கு வரனானார்? இவரையா நீ ஸ்வயம்வர பதியாக வரித்தாய்?
எப்படி இவரைப் பதியாக்க ஸ்வயம்வரம் கோடித்தாய்? உனக்குத் தெரியாமல் உன் தாதை இதை கடிப்பிக்க வில்லையே!
இவர் பிறப்பு எப்படி? யார் அறிவார்? கதம் ஜாத: — என்ன ஜாதி? என்ன குலம்? ஜனன காலம் எது? ஒன்றும் தெரியாதே!
இவர் ப்ரவரமென்ன? “நமேவது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:’ (என் பிறப்பை தேவருமறியார், மஹர்ஷிகளுமறியார்)
என்கிறார் கீதையில். எந்த ருஷி ப்ரவரம் இவருக்குச் சொல்லக் கூடும்? ப்ரவரம் சொல்லாமல் கல்யாணமுண்டோ?
புருஷ: புராண: — வயதுதான் ஏற்குமோ? இவரிலும் கிழவருண்டோ?
பவத்யா: ஸகீநாம் — உன் தோழிகளுடைய. அம்மா இந்த ஏசல் பேச்சு என்னதல்ல. உன் தோழிகளின் பேச்சின் அநுவாத மாத்திரம்.
ஏவம் விதா: — இப்படிக்கொத்த. இரண்டொன்றே மாதிரிக்காக எடுத்தேன். எத்தனையோ பேசினர்ரஃ.
பரிஹாஸ கிர: — பரிஹாஸப் பேச்சுகள். பவத்யா: — உன்னுடைய. ப்ரணயம் — பர்த்ரு விஷமான ராகம்.
ஸமுச்சிதம் — மிகவும் உசிதமானது. ஆநுரூப்யமுடையது என்று. இது ஸந்தர்ஶயந்தி என்னும் கிரியைக்கு விசேஷணம்.
‘அடியோடு அநுசிதம்’ என்று பரிஹாஸம் பண்ணினது ‘இதுதான் அத்யந்தம் உசிதம்’ என்று ஸமர்த்திப்பதாகிறது.
அவர்கள் பரிஹாஸப் பேச்சே அவர்கள் பரிஹாஸத்திற்கு விரோதம். அதுவே அத்யந்தம் ஔசித்யத்தை நிரூபிக்கிறது.
நீ இந்த வரனை வரித்தது மிகவும் உசிதமென்று முடிவான நோக்கு.
ஸந்தர்ஶயந்தி —
நன்றாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன. அவர்கள் பரிஹாஸமாக
எண்ணிப் பேசியதே உயர்ந்த ஸ்துதியாகி, இச்சேர்த்தியின் முழு ஆநுரூப்யத்தை மிகவும் அழகாக, தெளிவாகக் காட்டுகிறது.
உசிதத்திலும் ‘தர்ஶயந்தி’ என்பதிலும் ஸம் என்பதைச் சேர்த்தார். அநுசிதமா? இல்லவேயில்லை. அத்யந்தமுசிதம்.
அவர்கள் பரிஹாஸம்போல் பேசியது நிந்தையா? இல்லவேயில்லை. நீ இந்த வரனையே வரிப்பது மிக உசிதம்
என்று அழகாக, ஹேதுபூர்வமாய் நன்றாய் நிரூபிக்கிறேன். அவர்கள் ஏசலும் உண்மையில் துதியே. எப்படித் துதியாகும்?
பெருமாளுக்கும் தேவிமாருக்கும் எப்படி எப்படி ஸுதமோ, எப்படியெப்படி உசிதமோ, (யதோசிதம்)
அப்படிக்கெல்லாம் பணி செய்யும் சேஷனல்லவோ அநந்தனென்னும் நாகன்.
சேஷிகளுக்கு அமிர்தமயமானவன், பணிபதி உனக்கு சயனம் ஆசனம் என்று ஆளவந்தார் பெரியபிராட்டியார் துதியை ஆரம்பித்தார்.
நாகேசனாயிருப்பதிலும் ஆசைப்படும்படி ரஞ்ஜிப்பிக்கும் ஸுக ஸாமக்ரீ வேறுண்டோ?
ஸுகந்தம் கமழ்வதில் இந்நாகத்திற்கு நிகருண்டோ? மென்மையிலும் இதற்கு ஸமமுண்டோ? என்ன ஸுக சீதனம்?
பூமியைத் தாங்கும் அநந்தனைத் தவிர எந்தப் படுக்கை ப்ரஹ்மத்தையும் ஈச்வரிகளையும் தாங்கமுடியும்?
பாரம் தாங்க மாட்டாமல் மளமளவென்று முறியும் கட்டிலில் படுப்பரோ?
“ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலைகதாம” என்று ஆளவந்தார் இந்நாகப் படுக்கையின் மேன்மையைப் புகழ்ந்தார்.
அசேதனப் படுக்கை தம்பதிகள் ஸுகத்துக்குத் தக்கபடி அறிந்து தன்னை சரிப்படுத்திக் கொள்ள வல்லதோ?
ஆனால் ஆசேதனமான ஆசனம் அல்லது கட்டிலில் ஓர் குணமுண்டு.
மேல் பாரம் அதிகமாயிருந்தால் அதனால் வலியுண்டாகி வருந்தாது; பெருமூச்சு விடாது.; வலியினால் கத்தாது.
இரும்புக் கட்டிலானால், பாரத்தால் வருந்தாது. அது பலமாய் கெட்டியாய் இருக்கும்.
இந்த பலரென்னும் குணமும் இப்பாம்பினிடம் ப்ரக்ருஷ்டமாயுள்ளது. ஞானமும் ப்ரக்ருஷ்டமாயுள்ளது.
பலம் அநந்தமாயிருப்பதால் சைதன்யம் இருந்தாலும் நோவே உண்டாகாது. லகுவாய்த் தூக்கும்படி அநந்த பலமிருக்கிறது.
சேஷிகளுக்குற்ற சேஷர்களில் இவர் முதல்வர். பக்ஷிரதராயிருப்பவர் வேதாத்மா.
அண்டத்தைத் தூக்கிக் கொண்டு பறக்கக்கூடியவர். அநந்தநாகர் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் பறக்க மாட்டார்.
இவர் அநாயாஸமாக திவ்ய தம்பதிகளையும் தூக்கிக் கொண்டு பறப்பார். பெரிய ஆகாயக் கப்பல் போலிருப்பார்.
ஆகாய ரதத்திலும் ஆசைப்படக் கூடிய ரதமுண்டோ? வேதங்கள் அநந்தம். வேதாத்மாவான இவரும் அநந்தரே.
அவர் பெரிய புஷ்பக விமானம். பரம மங்களமானவர். பெருமாள் ‘புராணம்’ என்பதால் எத்தனை மூதோராயினும்
என்றைக்கும் நவமானவர். அப்பொழுதுக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பவர்.
புராபி நவ: — பிரதிக்ஷணமும் அபூர்வமாயிருப்பவர். பிறப்பருக்கு இறப்புமுண்டு. பிறவாத இவர் அமரர்களதிபதி.
பெரிய பெருமாளாக இவருக்கு ஸ்வேச்சையினால் ஆவிர்பாவமுண்டு. இவருடைய ஜந்மம் திவ்யம்.
தன்னிச்சையாலே ஜந்மம். திவ்ய ஜந்மங்கள் இவருக்குமுண்டு. ஜந்மம் பலபல.
‘ஸகிகள்’ என்பவர் ஸமானமான க்யா(ख्या)நமுடையவர். ஒரேவிதமான சித்த வ்ருத்தியுடையவர்.
ஸமான சித்த வ்ருத்தியை உடைமை தான் ஸகித்வத்திற்கு லக்ஷணமென்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸாதிக்கப் பட்டது.
வேத பாஷ்யங்களில் அப்படியே ‘ஸகி’ பதத்திற்குப் பொருளுரைக்கப் பட்டிருக்கிறது.
“என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே” என்று இந்த ஸகிகளைப் பற்றிப் பேசவேண்டியதில்லை.
மேலுக்கு ஏசல் போலிருந்தாலும் இந்த ஸகிகள் பேச்சு உண்மையில் துதியானது என்று அறிந்தே
பேசினார்களென்று ‘ஸகி’ பதத்தால் வ்யஞ்ஜநம். பார்வதீபதி அகேசயர். இவர் நாகேசயர்.
அவர் புங்கவரதர்;புங்கத்வஜர். இவர் விபுங்க வரதர், விபுங்கத்வஜர்.
ஓர் கவி கூறும் இந்த வேற்றுமைகளும் கவி திருவுள்ளத்திலுள்ளன. 13.
—————
த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாருமௌளே:
த்யக்த்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம்|
பத்யுஸ்தவேஶ்வரி மித:ப்ரதிகாதலோலா:
பர்ஹாத பத்ர ருசிமாரசயந்தி ப்ருங்கா:|| .14.
ஈஶ்வரி — ஈச்வரியே! ப்ருங்கா — வண்டுகள்;
புஜாந்தரகதாமபி வைஜயந்தீம் — திருமார்பில் இருக்கும் வஹஜயந்தி என்னும் வனமாலையை;
த்யக்த்வா — விட்டுவிட்டு;
மித:ப்ரதிகாதலோலா — ஒன்னுக்கொன்று மேல் விழுந்து பக்ஷங்களை யடித்துக் கொண்டு சஞ்சலமாய் சுற்றிக்கொண்டு;
தவ பத்யு: — உன் பதியினுடைய;
த்வத் புக்த மால்யஸுரபீக்ருத சாருமௌளே — உன்னால் சூடப்பட்ட மாலையின் வாசனை ஏறிய திருமுடிக்கு;
பர்ஹாதபத்ர ருசிம் — மயில் தோகையால் அமைந்த குடை போன்ற சோபையை; ஆரசயந்தி — உண்டு பண்ணுகின்றன.
அம்மா ஈச்வரியே! ஆண்டாளே! வண்டுகள் உன் நாயகன் திருமார்பிலுள்ள வைஜயந்தி வனமாலையை விட்டுவிட்டு,
நீ சூடிய மாலையால் பரிமளமாய்ச் செய்யப்பட்ட உன் நாயகன் திருமிடிக்கு மேல் தாங்கள் ஒன்றின் மேலொன்று
இறக்கைகளை அடித்துக்கொண்டு ஒன்றையொன்று மோதிக்கொண்டு சுற்றிச் சுழன்றுகொண்டு மயில்தோகை
போன்ற குடையின் ஆகாரமான சோபையைச் செய்கின்றன.
அவதாரிகை
அநந்தரென்னும் சேஷர் குடைக் கைங்கர்யம் என்னதே என்று முன் வருவார்.
மற்றொருவரும் அப்பணியைச் செய்ய இடம் கொடார். தம் திருமேனியைக் குடையாக ரசனை செய்து கொள்ளுவார்
என்று முன் சுலோகத்தில் ஸூசிப்பிக்கப் பட்டது. ஆண்டாள் திருக்கல்யாணத்தில் யார் குடை பிடிக்கிறார்?
அல்லது யார் குடையாகிறார்? நாகரா அல்லது வேறு யார்? அநந்தர் குடையாகவில்லை.
ஆண்டாள் பூந்தோட்டத்து ஸ்நேகமுள்ள வண்டுகளே ஆசைப்பட்டுக் குடையாகின்றன. குடையே சுற்றும் விசிறியுமாகிறது.
இந்த வண்டுக் கூட்டத்தாலமைந்த குடை, பாடும் குடையுமாயிற்று. சுற்றிச் சுழன்றுகொண்டு கல்யாணப் பாட்டுப் பாடுகின்றன.
தங்களுக்கும் பூந்தோட்ட ப்ரிய ஸகியும், ஈச்வரியுமான கோதையின் வதுவையில் மங்கள வாத்யகோஷம் செய்கின்றன.
பல்லாயிரம் சேஷர்களாக வண்டுகள் கூடி தங்களையே மயில் தோகைக் குடை போல மாப்பிள்ளை திருமுடிக்கு மேல்
சித்ர வர்ணக் குடையாக ரசனை செய்து கொண்டு சுற்றிச் சுழன்று பறந்து கொண்டு ஆனந்த பரவசமாய்
நர்த்தனமும் கானமும் செய்கின்றன. மங்களகான கைங்கர்யத்தை இந்த வண்டுகள் மகிழ்ந்து
தாமாகவே செய்வதை 16ம் சுலோகத்தில் ஸாதிக்கப் போகிறார்.
(2) ஸகிகள் பரிஹாஸப் பேச்சுகளை இந்த வண்டு ஸகிகள் பொய்யாக்குகின்றன.
பூந்தோட்டத்தில் கோதை ப்ரியமாய் வளர்த்த வண்டுகள்.
ராமாவதாரத்தில் பெருமாள் காடு போகையில் மரங்கள், புஷ்பங்கள், அங்குரங்களெல்லாம் வாடின.
பக்ஷிகளும் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று கதறி மறித்தன.
‘எந்த தண்டகாவனத்தில் வ்ருக்ஷங்களும் ம்ருகங்களும் எனக்கு பந்துக்களோ’ என்று உத்தரராம சரிதத்தில் ராமன் வார்த்தை.
பூந்தோட்டத்தில் மரங்களொடும் மான்களோடும் பந்துவாய்ப் பழகினாள் சகுந்தலை.
ஆனால் வண்டுகளோடு அப்படி ஸ்நேகமாய்ப் பழகத் தெரிய வில்லை. ஓர் வண்டு படுத்திய பாட்டை அவள்
பொறுக்க மாட்டாமல் ராஜா வந்து காக்க வேண்டியதாயிற்று.
கோதை ஈச்வரி, வண்டுகளுக்கும் அவள் ஈச்வரி, வண்டுகளுக்கும் அவளிடம் மிகுந்த ஸ்நேஹம்.
ஈஶ்வரி —
ஈச்வரியே! ஆண்டாள் ஈச்வரி என்பதில் என்ன தடை? பிறவியிலேயே ஆண்டாள் விஷ்ணு பத்நி யாகையால்
ஜகத்திற்கு ஈசானை யென்பதில் என்ன சந்தேகம்? ‘அஸ்யேசானா’ என்னும் ச்ருதி ஸாக்ஷாத்தாகப் பூமிப் பிராட்டியாகிய
உன்னைச் சொல்லும். இந்த ச்லோகத்தில் தான் முதலில் ஈச்வரி என்று அழைப்பது.
ப்ருங்கா: —
வண்டுகள். வண்டுகளுக்கும் நீயே ஈச்வரி. ப்ரியமான ஸகி. வண்டுகளுக்குள் தலைமையானது
‘ராணி வண்டு’ என்பர் ப்ராணி ஸ்வபாவ சாஸ்த்ரக்ஞர். வண்டுகளின் ஈச்வரியான ராணி வண்டு,
எல்லா வண்டுகளையும் கூட்டிக் கொண்டு ஈச்வரியான உனக்கு ஆசையுடன் பணிவிடை செய்கிறது.
‘குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி’ வால்மீகி கோகிலம் போன்ற நம் குருகூர்க் கோகிலம்
கூவின தாம்ரபர்ணீ நதிச் சோலையில் நாமும் கூவி மணம் பெறுவோம் என்று குருகூர்க் குயில்கள் கூவுவது போல்,
அக் குயில்களோடு குயிலாய் மதுரகவியும் மதுரமாய் மதுராக்ஷரமாய் மாறனைக் கூவினார்.
புஜாந்தரகதாம் அபி —
வைஜயந்தியைக்கூட; லோகோத்தரமான வனமாலையையும்
வைஜயந்தியின் ரஸ பரிமளத்தை ப்ருந்தாவன ப்ருங்கங்களறியும்.
தவ பத்யு: —
உன் பதியின். உன் பதியினுடைய ஈச்வரீ என்று இருக்கிறபடி சேர்த்து அந்வயிப்பதிலும் திருவுள்ளம்.
‘தவ பத்யு:ஈச்வரி’ உன் பதிக்கும் நீ ஈச்வரியானவளே. ‘பும் ப்ரதானேச்வரேச்வரீ’ என்பதைக் கவனிக்க.
சிதசித்துக்களுக்கும் ஈச்வரனுக்கும் ஈச்வரி, அல்லது சிதசித்பரரான தத்வத்ரயத்திற்கும் ஈச்வரீ.
விவாஹ அவஸரத்தில் “மூர்த்தாநம் பத்யுராரோஹ” என்று ஆசீர்வாதத்தைப் பணிப்பர்.
‘உன் பதியின் தலைமேல் ஏறுவாயாக’. கோதை தன் பாரதந்த்ரியத்தையே நினைந்து நாயகன் வற்புறுத்தியும்
அவர் அவளைத் தலையிலேற்றிக் கொள்ள இடம் கொடுக்கவில்லை.
அவள் சூடிய மாலை அவர் தலையில் ஆரோஹம் செய்தது. ஆசீர்வாதம் ஏதோ ஒரு ப்ரகாரமாய் ஸத்யமாயிற்று.
த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாரு மௌளே: —
நீ சூடிக் கொடுத்த உன்னால் புக்தமான மாலையால்
அதிக பரிமளமுடையதாகச் செய்யப்பட்ட மைவண்ண நறுங்குஞ்சிக் குழலோடுகூடிய அழகிய திருமுடிமேல் (திருமுடிக்கு).
உன்னால் புக்தமானாலும் அந்த மாலை நிர்மால்யமாகவில்லை. நீ சூடியும் பெருமாளுக்கு மால்யமாகவே ஆயிற்று.
‘புக்த’ என்பதற்கு ரக்ஷிக்கப்பட்ட என்றும் பொருள். அனுபவிக்க ஆசையால் நீ சூடவில்லை.
பெருமாளுக்கு ப்ரியமான பரிமளத்தை கந்தம் கமழும் உன் கூந்தலிலிருந்து ஏற்றி
அம் மாலையை பரிமளப் பெருக்கால் ரக்ஷிக்கவே சூடினாய்.
‘ஸுரபீக்ருத’ என்பதற்கு ‘முன்பு வாசனையற்றதாயிருந்து இப்பொழுதுதான் உயர்ந்த கந்தத்தால் வாஸிதமாயிற்று’ என்று பொருள்.
அனுபவிக்க ஆசையால் நீ சூடவில்லை. பெருமாளுக்கு ப்ரிநமான பரிமளத்தைக் கந்தம் கமழும் உன் கூந்தலிலிருந்து ஏற்றி
அம்மாலையை பரிமளப் பெருக்கால் ரக்ஷிக்கவே சூடினாய்.
‘ஸுரபீக்ருத’ என்பதற்கு ‘முன்பு வாசனையற்ற தாயிருந்து இப்பொழுதுதான் உயர்ந்த கந்தத்தால் வாஸிதமாயிற்று’ என்று பொருள்.
‘அபூததத்பாவே ச்வி:’ ஸர்வகந்தனுடைய குழல் முன்பு அற்புத கந்தமுடையது தான்.
ஆயினும் இப்பொழுது ஏறிய புது அதிக வாசனையைக் கவனித்தால், முன்னிருந்த அற்புத வாசனையும்
இல்லையென்று சொல்லவேண்டியதாயிற்று. வாசனை மட்டுமல்ல, இம்மாலையால் அழகும் அதிகமாயிற்று.
மித:ப்ரதிகாதலோலா: —
வண்டுகள் ஸ்வபாவத்தால் சஞ்சலம். இப்பொழுது ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு
நான் முன்னே நான் முன்னே என்று மேல்விழுந்து கொண்டு ஒன்றின் பக்ஷங்கள் மற்றொன்றின் பக்ஷங்களை
நெருக்கிக் கொண்டு ஒன்றோடொன்று அவிச்சின்னமான தொடர்ச்சியாக கனமான சங்கிலிக் கோர்வையாய்ச் சுற்றிச் சுழன்று
(ரீங்கார கானம் செய்துகொண்டு) பெருமாள் திருமுடிமேல் இவ் வண்டு மாலை யிருப்பதால் திருமுடிக்கு மேலே
அதைச் சுற்றிலும் விசித்ரமான மயில்கொடையாயின; மயில்வசிறியுமாயின.
‘மதுரமா வண்டு பாட மாமயிலாட ரங்கத்தம்மான்’ அல்லவோ மணாளர்.
அரங்கத்தில் பாடும் வண்டு வேறு, ஆடும் மயில் வேறு’.
புதுவை நந்தனத்தோட்ட ஆண்டாள் வதுவையில் வண்டுகள் கூடி மயிலுமாகின. வண்டுகளே ஆடிப்பாடின.
‘லோலா:’ என்பது சாஞ்சல்யமென்னும் சுழலாட்டத்தையும் சொல்லும், மிக்க ஆசையையும் சொல்லும்.
அநந்த நாகருக்கு மேல்பட்ட ஆசை. அநந்தர் குடையானார். கருடன் விசிறியுமாவார். வண்டுகள் இருவர் பணியையும் செய்தன.
அவர்கள் இருவரும் பாடார். சேஷத்வத்தில் இத்தனை ருசியைப் பார்த்ததும் அநந்தர் கிட்டவராமல் ஒதுங்கி
சாக்ஷியாகப் பார்த்து ஆனந்தபரிதராய் ஸ்தப்தராய் இருக்கிறார்.
இந்தச் சிறு பக்ஷிகளின் கைங்கர்ய ருசியைப் பார்த்து பக்ஷிராஜன் மகிழ்ந்து நிற்கிறார்.
ஒன்றுக்கொன்று நெருங்கிக் கொள்வதால் வண்டுக் கூட்டங்கள் குடையின் ஒற்றுமையை அடைந்தன.
நடுவில் இடைவெளியே இல்லாமல் நெருங்கிக் கோர்த்தன.
விஷ்ணுசித்தர் பல்லாண்டு கானத்தைக் கேட்டிருந்த வண்டுகள் பலகோடி நூறாயிரமாகச் சேர்ந்து
குடையும் விசிறியுமாகி மாப்பிள்ளையின் முடிக்குமேலே இன்புற்றுப் பல்லாண்டு பாடின.
‘பத்ரம் தே’ என்று பல்லாண்டு ஆசாஸனம் செய்தார்.
“பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா” என்று பேசும் பாணி க்ரஹண அவஸரத்தில் சீதைப் பிராட்டியின்
பாணி க்ரஹண ச்லோகத்தை நினைத்து ‘என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கை வைத்து ‘
என்று கனாக் கண்டாள். ஸ்வப்ன வதுவையில் மூன்று அவதாரங்களைச் சுட்டி அனுபவம்.
பர்ஹாத பத்ர ருவிம் ஆரசயந்தி —
மயில் தோகையாகும் சேஷத்வ ருசியைச் செய்கின்றன.
குடையின் சோபையை அடைகின்றன. குடைபோல சோபிக்கின்றன.
‘ருசி’ என்பதற்கு ஸாத்ருச்யம், சோபை, காந்தி, ஆசை முதலிய பொருள்கள் உண்டு.
எல்லாம் இங்கே கவியின் ருசியிலுள்ளன.
‘ஆ’ என்பதால் குடையின் நீட்டமும் அகலமும், நெடுமையும், ஆசையின் நீட்டமும் ஸூசிக்கப் படுகின்றன.
‘உஷ்ணம் தெரியாமல் காப்பத’ விசிறிக்கும் பொது. ஸ்வாரஸ்யாதிக்யத்திற்காக குடையென்னும் ரூடிப்பொருளை
ஒரு யோஜனையில் விட்டுவிட்டு யோகப்பொருளில் ருசியைக் கொண்டு வ்யஜனமென்றும் பொருள் கொள்ளலாம்.
சிரஸுக்கு மேலே விசிறி சுற்றவிட்டு சூட்டைப் போக்குவதைக் கண்டுளோம்.
ஆரண்யகரான ஈச்வரருக்கும் பூந்தோட்டக் கோதைக்கும் திருமண உத்சவத்தில்
தங்கள் ஈச்வரிக்கும் ப்ரிய ஸகிக்கும் மணாளனுக்கும் வண்டுகள் தாமே இப்பணிகளை ருசியுடன் செய்கின்றன.
எல்லா ப்ராணிகளுக்கும் ஈச்வரரும் ஈச்வரியும் பொதுதானே! தித்திரி பக்ஷிகள் ஆனந்தமாய்ப் பாடுகையில்
ஆனந்தமயப் பெருமாளையும் பக்ஷியாகவே பாடின. புச்சப்ரஹ்ம வாதத்தில் இந்த ரஸமில்லை.
பாடும் பக்ஷிகள் பெருமாளைப் பக்ஷியன்றென்று பாடுமோ?
‘ரஸோ வை ஸ:’ என்னும் ரஸ ப்ரகரணத்தில் ரஸத்தை விடுவரோ? (14)
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply