ராமஸ்ய அயனம் எனப்பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து
இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து,
சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிறுதியாவார். (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும்,
நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
————
ஸ்ம்ருதி
தர்ம சாஸ்த்ர ரதாரூடா வேதகட்கதரா த்விஜா: |
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயு: ஸதர்ம: பரமஸ்ம்ருத:|| (போதாயனாச்சார்)
வேதத்தை நன்கு அப்யசித்தவர்கள் ஸத்புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச்
சொல்லப் பட்டனவை களே ஸ்ம்ருதிகளாம்.
ஸ்ரீராமாயணம் (2வது சருக்கம்)
மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||
(இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே
இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர்.
நீர் செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம்
வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டதினால், இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.
———–
மூன்றாவது :– ஸதாசாரம் = (ஸத்புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)
பாலகாண்டம் முதலாவது சருக்கத்தில் 2 முதல் 4 சுலோகங்களால் வான்மீக முனிவர் நாரத மகரிஷியை நோக்கி,
“சுவாமி! இவ்வுலகத்தில், இக்காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசீல்ய குணமும் மற்றும்
அனேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத்புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன்.
அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்யவேண்டும்” என்று வினாவினபோது நாரதமகரிஷி மிகுந்த களிப்புடன்
‘ஓய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்”
இக்ஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோநாம ஜநை:ச்ருத:|
இக்ஷ்வாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமபிரான் என்பவர்தான் என விடையளித்திருக்கிறார்.
இதனால் ஸ்ரீராமபிரான் ஸத்புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதாசாரம் என்றும்
ஏற்படுவதால் மூன்றாவது ப்ரமாணமும் பொருத்தமாகிறது.
———-
நான்காவது:—ஆத்ம ஸந்துஷ்டி
பாட்யே கேயேச மதுரம் ஹலாதயத் ஸர்வகாத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச | (ராமாயணம்)
இந்த இராமாயணம் மனதிற்கும் இருதயத்திற்கும் மிக்க களிப்பாக இருக்கின்றது என
இராமாயணம் 4-வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தியாகின்றது.
————————-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -முதல் ஸ்லோகார்த்தம்
தப:ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்|
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகி முநிபுங்கவம்||” (வா.ரா. பா.கா. சரு 1 சுலோ 1)
“தபசு, வேதவேதாந்தங்கள் இவைகளைப் பூரணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும்,
முனி ஶ்ரேஷ்டருமான நாரத மஹரிஷியை, தவத்தோடுகூடிய வான்மீகி முனிவர் தெண்டம் சமர்ப்பித்து வினாவினார்.”
இது இராமாயணத்தின் முதல் சுலோகம். இதனால் குரு சிஷ்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாகிறது.
1) தபோநிரதம் :– தவத்தைப் பூரணமாக அடைந்தவர் என்றதினால் அவர் சர்வசக்தி வாய்ந்தவர் என்பது ஸூசகம்.
“யத்துஸ்தரம் யத்துராபம் யத்துர்கம் யச்சதுஷ்கரம்|
தத் ஸர்வம் தபஸாஸாத்யம் தபோஹி துரதிக்ரமம் ||”
“எது கடக்கமுடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்யமுடியாததோ அதெல்லாம் தவத்தால் சாதிக்கமுடியும்.
ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
“வேண்டிய வேண்டியாங் கெய்தலாற்செய்தவ மீண்டு முயலப் படும்.
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு” (திருக்குறள்) என்ற ஆதாரங்கள் நோக்கத்தக்கன.
2) ஸ்வாத்யாய நிரதம்:– வேதவேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால்
நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய வசனம் என்பது ஸூசகம்.
3) வாக்விதாம்வரம் :– உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர், என்றதினால் சிறந்த போதனாசக்தி வாய்ந்தவரெனவும்,
வ்யாகரணம் முதலான சகலசாஸ்திரங்களையும் நன்றாக அறிந்தவரெனவும் பொருள்படும்.
4) முனிபுங்கவம்:– முனிஶ்ரேஷ்டர் என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும்,
பகவத்யானத்தோடு கூடியவரென்பதும், திரிகால வர்த்தமானங்களை அறியக்கூடியவரென்பதும் , ஸதா ஜபபரரென்பதும் ஸூசகம்.
5)நாரதம்:– நாரத மஹரிஷியை, என்றதினால், நாரம் – ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும்,
நாரம் – அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக்கூடியவ ரென்பதும், த்ரிலோக ஸஞ்சாரியானபடியால்,
மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை அறிபவரென்பதும், பிரம்ம புத்திரரானபடியால் உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.
ஆகவே, இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும்,
வேதவேதாந்தங்களையும் வ்யாகரணம் முதலான ஸகல ஶாஸ்திரங்களையும் உணர்ந்தவராகவும்,
பகவத் பக்தியுடன் அநவரத ஜபபரராகவும் சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி, ஜ்ஞானத்தைக் கொடுத்துப்
பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்கவல்லவராகவும், ஜிதேந்திரியராகவும், உத்தம குலத்தவராகவுமிருக்கவேணும்
எனறு ஆசார்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாயிற்று.
“குஶப்தஸ் த்வந்தகாரஸ்யாத் ருகாரஸ்தந் நிவர்தக:|
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே||”
“கு என்பது அஜ்ஞானத்தையும், ரு என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால்
மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற இருளை நீக்கி மெய்ஞ்ஞானமாகிற பிரகாசத்தைத் தருவதால் குரு வெனச் சாற்றப்படுகின்றனர்.
குலனருள் தெய்வங்கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வண்மை
நிலமலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியலறிவோ டுயர்குண மினையவும்
அமைபவன் நூலுரையாசிரியன்னே.” என்ற நன்னூல் இங்கு நோக்கத் தக்கது.
சிஷ்ய லக்ஷணம்
1) தபஸ்வீ: – என்றதினால் பகவத் ஸ்வரூபத்தை அறிய ஆவல்கொண்டவரென்பதும்,
பல விரதங்களை அனுஷ்டித்தவரென்பதும், ஶமதமாதி ஸம்பந்தங்களை அடைந்தவரென்பதும்,
ஜீவகாருண்யமுடையவரென்பதும், களங்கமற்ற இருதயமுடையவரென்பதும் ஸூசகம்.
“உற்றநோய் நோன்றலுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற்குரு” (திருக்குறள்)
2) பரிபப்ரச்ச – என்றதினால் விதிவதுபஸந்ந: என்பது பொருள். அதாவது,
உபதேசம் பெற்றுக் கொள்ள, குருவைத் தேடிப்போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதி ப்ரகாரம் கேட்கவேண்டுமென்பது
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்ஶிந: ||
“அந்த ஆத்ம ஜ்ஞானத்தை, குருவைத் தேடிப்போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப்ரகாரமான கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ளக் கடவாய். தத்வமறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாயிற்று.
ஸத்புத்திஸ் ஸாதுஸேவீ ஸமுசிதசரிதஸ் தத்வபோதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ்த்யக்தமாந: ப்ரணிபதநபர: ப்ரஶ்நகாலப்ரதீக்ஷ:||
ஶாந்தோதாந்தோ நஸூயுஸ்ஸரணமுபகதஸ் ஶாஸ்த்ர விஶ்வாஸஶாலி|
ஶிஷ்ய:ப்ராப்த: பரீக்ஷாங் க்ருதவிதபிமதம் தத்வதஸ் ஸிக்ஷணீய:
“நற்புத்தியுடன் ஸாதுஸேவை உடையவனாகி, நன்னடத்தை உடையவனும், உண்மை ஞானத்தை அறிவதில்
அபிலாஷை உடையவனும், பணிவிடைக்காரனும், மானாவமான மென்பதற்றவனும், ப்ரஶ்ந காலத்தை எதிர்பார்ப்பவனும்,
சாந்தனும், அஸூயை இல்லாதவனும், சரணாகதியடைந்தவனும், சாஸ்திர விஶ்வாசமுடையவனுமே
சிஷ்யனாக அங்கீகரிக்கத் தகுந்தவன்” என்பது நோக்கத்தக்கது.
வால்மீகி பகவான் ப்ருகு வம்சத்தில் அவதரித்தவர். இவர் (வல்மீகம் = புற்று) புற்றிலிருந்து வெளிவந்ததினால்
வால்மீகி என்று பெயர். இவர்க்கு “ப்ராசேதஸர்” (அதாவது வருணனுடைய புத்திரர்) என்னும் பெயருண்டு.
———
இராமாவதார காலம்.
(1) வால்மீகி இராமாயணம்-பாலகாண்டம் சரு. 15. சுலோ. 28, 29.
“பயம் த்யஜ் த பத்ரம் வோ ஹிதார்த்தம் யுதிராவணம் |
ஸுபுத்ர பௌத்ரம் ஸாமாத்யம் ஸமித்ரஜ்ஞாதிபாந்தவம் ||
” ஹத்வா க்ரூரம் துராத்மானம் தேவரிஷீணாம் பயாவஹம் |
தச வருஷ ஸஹஸ்ராணி தசவருஷ சதா நிச |
வத்ஸயாமி மா நுஷே லோகே பாலயன் ப்ருத்வீமிமாம் |.”
(இதன் பொருள்)(இனி இ-ள்) ”ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்;
உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய
பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்துகொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன் ” என்று
தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச்செய்தனர்.”
2. வால்மீ- இரா. உத்-கா. சரு. 37-க்குப்பின் ப்ரக்ஷிப்தசரு. சுலோ. 18,19.
ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி:’
‘க்ருதே யுகே வ்யதீதேவை முகே த்ரேதாயுகஸ்யது |
ஹிதார்த்தம் தேவமர்த்யானாம் பவிதாந்ருபவிக்ரஹ: ||
இக்ஷுவாகூணாம் ச யோராஜாபாவ்யோ தசரதோபுவி !
தஸ்ய ஸூநுர்மஹாதேஜா ராமோநாமபவிஷ்யதி. || ”
(இ-ள்) “க்ருதயுகம் கழிந்தபின்னர் த்ரேதாயுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷியர்களுக்கு
மிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசரதனென ஒரு ராஜன் ஜனிப்பான்;
அந்தத் தசரத மஹாராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒரு மஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் ” என உரைத்தனர்.
3. அத்யாத்ம ரா. பாலகாண்டம் சரு. 7. சுலோ. 25, 26.
” த்ரேதாமுகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய: |
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரஷ்யஸிமாம் தத: | ”
(இ-ள்) “‘ அழிவற்ற நான் த்ரேதாயுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப்போகிறேன்.
அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப் போகிறாய்” என்பதாக ஸ்ரீமஹாவிஷ்ணு தனக்கு வரமருளியிருப்பதாக
பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ் செய்தனர்.
4. அத்யாத்ம ரா. ஆரண்யகாண்டம் சரு. 9. சுலோ. 19. :
த்ரேதாயுகே தாசரதிர்பூத்வா நாராயண: ஸ்வயம் |
ஆகமிஷ்யதி தேபாஹுச் சித்யேதே யோஜனாய தெளதேனசாபாத் வினிர்முக்தோ பவிஷ்யஸி யதாபுரா! ‘
(இ -ள்) ” ஸ்ரீமந் நாராயணமூர்த்தி த்ரேதாயுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து,
ஸ்ரீ ராமனென்னும் திருநாமத்துடன் வரப்போகிறார். அவர் திருக்கரத்தால் உன் கரங்கள் சோதிக்கப்படுங்காலம்,
உன் சாபவிமோசன காலமாகும்.” என்பதாக அஷ்டவக்ரமுனிவர் தனக்கு உரைத்திருப்பதாய்
கபந்தாசுரன் ஸ்ரீ ராமபிரானை நோக்கிக் கூறினன்.
5. அத்யாத்ம ரா. சுந்தரகாண்டம் சரு. 1. சுலோ. 48.
‘புராஹம் ப்ரஹ்மணா ப்ரோக்தா ஹ்யஷ்டாவிம்சதிபர்யயே|
த்ரேதாயுகே தாசரதீராமோ நாராயணோ அவ்யய: || ”
(இ-ள்) “இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதாயுகத்தில் சாக்ஷாத் நாராயணன்
தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவதரிக்கப்போவதாய் ப்ரஹ்மதேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார்”
என்பதாக இலங்கணி என்பவள் திருவடி (ஆஞ்சநேயர் ) உரைத்தனள்.
6. விவஸ்வான் = சூரியன்
அவருடைய புத்ரர் = மனு (வைவஸ்வத மனு) அவருடைய புத்ரர் = இஷ்வாகு .
இஷ்வாகு பரம்பரையில் தசரத சக்ரவர்த்திக்கு ஸ்ரீராமபிரான் அவதாரம்.
7. வால்மீ – ரா. பால கா. சரு. 18 சுலோகம் 9, 10, 11.
”ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள !
நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு|
க்ரஹேஷ- கர்க்கடெலக்நே வாக்பதாவிந்து நாஸஹ
ப்ரோத்யமாநெ ஜகன்னாதம் ஸர்வலோக நமஸ்கிருதம்|
கௌஸல்யாஜநயத்ராமம் ஸர்வலக்ஷண ஸம்யுதம்
விஷ்ணொரர்த்தம் மஹாபாகம் புத்ரமைக்ஷவாக வர்த்தநம்|| ”
(இ-ள்) ” பின்பு பன்னிரண்டாவது மாஸமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர்வஸு நக்ஷத்திரம்
கூடின தினத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருந்தவளவில், கர்கட லக்நத்தில், குரு சந்திரனோடு கூடியிருந்தவளவில்,
கௌஸல்யாதேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய்,
ஸாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷலக்ஷணங்களோடு கூடினவராய்,
விஷ்ணுவினுடைய பேர்பாதி பாகத்தினா லுண்டான வராய், மஹாபாக்யவானாய்,
பித்ருக்களை நரகத்தில்நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹாராஜனுடைய மனோல்லாசத்தை
வ்ருத்தி பண்ணுபவரான ஸ்ரீ ராமபிரானைப் பெற்றனள்,
8. கம்ப-ரா. பால-கா. திரு அவதாரப்படலம் 104, 110.”
“ஒரு பகலுலகெலா முதரத்துட் பொதிந்
தரு மறைக் குணர்வரு மவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை.”
” மேடமாமதி திதி நவமி மீன் கழை
நீடுறு மாலை கற்கடக நீதிசேர்
ஓடைமா களிறனானுதயராசி கோள்
நாடினேகாதசர் நால் வருச்சரே.” –
இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28-வது சதுர்யுகமான த்ரேதாயுகத்தில்
சித்திரைமாஸத்தில் சுக்லபக்ஷ நவமி. திதி, புனர்வசு நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில்
ஸ்ரீமந்நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத் திருக்குமாரராக ஸ்ரீராமனென்னும்
திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.
————————
சர்வஜ்ஞரான ஸ்ரீராமபிரான் மகுடாபிஷேக மஹோத்ஸவம் கண்டருளிய பின்னர், கருமநெறி தவறாது
இராஜ்ய பரிபாலனம் செய்தும் ஒழிந்த வேளைகளில் வைதேஹியுடன் கூடி உத்தியான வனத்திற்குச்சென்று
நாடோறும் விநோதமாக பொழுதுபோக்கியும் வந்தனர். ஸ்ரீராமபிரான் பிரதிதினம் முற்பகலில்
ராஜாங்க சம்மந்தமான சகல காரியங்களையும் நீதிமுறை தவறாது நிறைவேற்றி
அதன் பின்னர் அந்தப்புரஞ் சென்று பிராட்டியுடன் அகமகிழ்ந்திருப்பார். ஜானகி ரகுநாயகர்களுக்கு, இவ்விதமாகவே
– ‘ தசவர்ஷஸஹஸ்ராணி கதாநி ஸுமஹாத்மனோ: |
(வா-ரா. உத்-கா, சரு. 42. சுலோ . 26.)
பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென் றன.
வா -ரா, உத்-கா. சரு. 42. சுலோ . 31, 32.
‘ அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸுரஸுதோபமாம் !
அபத்ய லாபோ வைதேஹி த்வய்யயம்.ஸமுபஸ்தித:
கிமிச்சஸி வராரோஹேகாம: கிம் க்ரியதாம் தவ /”
(இ-ள்) ஒருநாள் ஸ்ரீராமபிரான் ஜானகியை நோக்கி “ஹே! வைதேஹி! நீ கர்ப்பந்தரித்திருப்பது எனக்கு
மிகவும் களிப்பைத் கருகின்றது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை?
நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன்” எனக் கூறினார்.
அதற்குப் பிராட்டி , கங்கைக்கரையிலுள்ள மிகப்பரிசுத்தமான தபோவனங்களுக்குச் சென்று, அங்கு,
மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சில நாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற
ஆசையிருப்பதாகத் தெரிவித்தாள்.
அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப்பற்றி
சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதியிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு,
அவளையழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத்தருகே விட்டுவிடுமாறு ,
இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.
சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷிகுமாரர்களால் கேள்வியுற்ற வான்மீக முனிவர்
உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்துவந்து
அங்குள்ள ரிஷிபத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருத்துடனே காத்து வருமாறு கட்டளையிட்டனர்.
யமுனாதீரவாஸிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாசுரனது
வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராமபிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயேயிருந்து
ராஜ்ய பரிபாலனஞ் செய்துவருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர்.
லவணாசுரனுடன் போர்புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள்,
சத்ருக்னர், வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.
வா – ரா. உத் – கா. சரு. 66. சுலோ . 1.
”யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத்|
தாமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூதா தாரகத்வயம் ” :
(இ-ள்) சத்ருக்ன ஆழ்வார், என்றையத்தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ணசாலையில்
படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாபிராட்டியார் இரண்டு குமாரர்களைப் பெற்றனர்.
இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராமபிரானுடைய பட்டாபிஷேகானந்தரம்,
பதினாயிரம் வர்ஷங்கள் கழிந்த பின்னரே, குசலவர் ஜநநம் என ஏற்படுகிறது.
வா – ரா. பால- கா. சரு. 4. சுலோ . 1, 2. .
”பராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: |
சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான் |
சதுர்விம்சத்ஸஹஸ்ராணி ச்லோகாநாமுக்தவான்ரிஷி: |
ததாஸர்க்கசதான் பஞ்ச ஷட்காண்டானி ததோத்தரம் || ”
(இ-ள்) ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருக்கும் காலத்தில், வான்மீக முனிவர்
இருபத்திநாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ர காண்டமும் செய்தருளினார்.
‘மானிஷாத” என்று ஆரம்பிக்கும் சுலோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை,
(தமஸா நதிக்கரையில்) ப்ரஹ்மதேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர்த் தானமான பின்பு.
வா – ரா. பால-கா. சரு. 2. சுலோ . 39.
“ தத: ஸசிஷ்யோ வால்மீகிர்முநிர் விஸ்மய மாயயௌ
தஸ்ய சிஷ்யாஸ்தத: ஸர்வே ஜகு: ஸ்லோகமிம்ம்புன 😐
முஹர் முஹு: ப்ரீயமாணா: ப்ராஹூஸ்ச ப்ருசவிஸ்மிதா:
(இ-ள்) வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தையடைந்தார்.
அந்த சுலோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும், ஆச்சரியத்துட னும்,
அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக்கழித்தனர்.
மேலேகண்ட சுலோகத்தில் – சிஷ்யா:- என்று பகுவசனமாகக் கண்டிருப்பதற்கு,
கோவிந்த ராஜீய வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று
வ்யாக்யானம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்னரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.
சத்ருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுராபுரியை ஸ்தாபித்தபின்
”ததோ த்வாதசமே வர்ஷே சத்ருக்னோ ராமபாலிதாம் |
அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக: ”
(வா – ரா. உத் – கா. சரு. 7. சுலோ . 1)
(இ-ள்) பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக் காதல் கொண்டு
சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப்புறப்பட்டனர்.
வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிரமமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாத்தியாதி அதிதி
பூஜைகளைப் பெற்று, அன்றிராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.
வா-ரா. உத்- கா. சரு. 71. சுலோ . 14, 15, 16.
”ஸபுக்தவாந் நாஸ்ரேஷ்டோ கீதமாதுர்ய முத்தமம் |
சுச்ராவ ராமசரிதம் தஸ்மின்காலே யதாக்ருதம்
தம்த்ரீலய ஸமாயுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம் |
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸமதால ஸமந்விதம் |
சுச்ராவ ராமசரிதம் தஸ்மின்காலே புராக்ருதம் |”
(இ-ள்) சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில்,
ஸமீபத்தில் அதிமதுரமான ஸங்கீதமொன்று கேட்டது. ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில்
இசையொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு, சுலக்ஷணமாக மறைவிலே பாடப்பட்டது.
அதனைச் செவியுற்றவளவில், சத்ருக்னாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீராம சரித்திரம் மறுபடி
தமது கண்ணெதிரில் நடப்பதுபோலத் தோன்றியது.
வான்மீக முளிவர் தாமுண்டுபண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குசலவருக்கு உபதேசித்தருளினபோது,
அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது.
ஸ்ரீராமபிரான் அச்வமேத யாகஞ்செய்யத் தீர்மானித்து கோமதி நதி தீரத்தில் யாகசாலை நிருமித்து
வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப்படுத்தவும்,
வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ்வேள்விக்கு வரவழைக்கும் படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,
வா-ரா. உத் – கா. சரு. 91. சுலோ . 24, 25.
”மம மாத்ருஸ்ததாஸர்வா : குமாராம்த: புராணிச |
காம்சநீம் மம பத்நீம்ச தீக்ஷாயாம்ஜ்ஞாம்ஸ்ச கர்மணி ||
அக்ரதோ பரத: க்ருத்வாகச்சாத்வக்ரே மஹாயசா: ”
(இ-ள்) ‘நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும்,
ஸீதைக்குப் பிரதியாக நிருமித்துவைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ்செய்யும் முறைகளை
நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக்கொண்டு, பாதன் முன்னாலே செல்லக்கடவன் ” எனவும் நியமித்தருளினர்.
இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்திலிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.
வா – ரா. உத் – கா. சரு. 93. சுலோ . 1.
” வர்தமானே ததா பூதேயஜ்ஞேச பரமாத்புதே |
ஸசிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி: || ”
(இ-ள்)* இவ்வாறு மகாவைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு
வான்மீக முனிவரும் தமது சீஷர்களுடனே எழுந்தருளினர்.”
வான்மீகமுனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும்,
பிராம்மணர்கள் இறங்கியிருக்குமிடங்களிலும், ராஜமார்க்கங்களிலும், அச்வமேதயாகம் நடக்குமிடத்தில்
ஸ்ரீராமபிரான் சன்னதியிலும், பாடிக்கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளையிட்டனர்.
அவ்விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.
வா-ரா. உத்-கா. சரு. 94. சுலோ . 2. –
“தாம் ஸசுச்ராவகாகுத்ஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் |
அபூர்வாம் பாட்யஜாதிம்ச கேயேன ஸமலம்க்ருதாம் |
ப்ரமாணைர் பகுபிர்பத்தாம் தந்த்ரீலய ஸமந்விதாம்|
பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கௌதூஹலபரோபவத்.”
(இ-ள்) ” இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக்கொண்டு ஒத்த குரலினராய் சுலக்ஷணமாக தம்மாசிரியர் கற்பித்த
இராமாயணத்தை இன்பமாய்ப் பாடிக் கொண்டு வருவதை ஸ்ரீராகவன் திருச்செவி சார்த்தி இஃது
அபூர்வமாயும், அற்புதமாயுமிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.”
அனந்தரம் அந்தக் காவியத்தின் வரலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும்
அச்சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்து கொண்டனர்.
வா -ரா. உத்- கா. சரு. 95. சுலோ . 1.
“ராமோ பஹூன்யஹான்யேவ தத்கீதம் பரமம் சுபம் |
சுச்ராவமுனிபி: ஸார்த்தம் பார்த்திவை: ஸஹவானரை|”
(இ-ள்) ஸ்ரீராகவன் நாள்தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடைசூழச் சபையினடுவே
முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவிசார்த்திக் களி கூர்ந்தனர்.
இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யாபுரிக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,
பதினாயிரம் வருஷங்கள் தருமநெறி தவறாது அரசாட்சி செய்துவந்தபின் சீதாப்பிராட்டி கர்ப்பமடைந்து
வான்மீக முனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று,
அக்குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது, வான்மீக முனிவருக்கு நாரத மகரிஷியால்
ஸ்ரீராமசரிதம் சங்க்ரஹமாக உபதேசிக்கப்பட்டு ப்ரஹ்மதேவரின் ஆக்ஞாப்ரகாரம் அம்முனிபுங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய
ஸ்ரீ இராமாயணமென்னும் ஆதிகாவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குசலவர்களுக்கு உபதேசிக்க,
அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகாமண்டபத்தில் முனிவர், அரசர், வானரர்
முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சன்னதியில் தாளலயத்துக்கிணங்க கானம் செய்து
அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply