திருக்குறளில் எண் ஏழு!-திருப்பூர் கிருஷ்ணன்-

திருவள்ளுவர் எண்ணைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறார்.
எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.

`எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்ற குறளில்
எண்ணையும் எழுத்தையும் இரண்டு கண்களுக்கு நிகராகச் சொன்ன வள்ளுவர்,
அதிலும் எண்ணைத்தான் முதலில் வைத்துச் சொல்லி யிருக்கிறார்.

எண்களில் ஏழு என்ற எண்ணைப் பற்றித் திருக்குறள் எட்டு இடங்களில் பேசுகிறது.
`எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.’ (குறள் எண் 62)

பழியில்லாத நல்ல பண்புடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு அவனுடைய ஏழு
பிறவிகளிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேராது.

`எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.'(குறள் எண் 107)

தமக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கியவர்களது நட்பின் பெருமையை, ஏழேழு பிறவிகளிலும் நல்லவர் எண்ணுவர்.

`ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்
ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 126)

ஒரு பிறப்பில் ஓட்டுக்குள் பதுங்குகிற ஆமைபோல் தனது ஐம்பொறிகளையும் அடக்கியாளும் திறன்பெற்றால்,
அது அப்படி அடக்கி ஆள்பவனுக்கு ஏழு பிறப்பிலும் காப்பாகும் சிறப்புடையது.

`ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.’ (குறள் எண் 398)

ஒரு பிறவியில் தாம் கற்ற கல்வி ஒருவருக்கு அந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் தொடர்ந்து வரும்
அவனது ஏழு பிறவிகளிலும் பாதுகாப்பைத் தரும்.

`புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும், செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.’ (குறள் எண் 538)

சான்றோர் புகழ்ந்து கூறிய கடமைகளைப் போற்றிச் செயல்பட வேண்டும். அவ்விதம் செய்யாது
மறந்தவர்களுக்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாவதில்லை.

`ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.’ (குறள் எண் 835)

ஏழு பிறவிகளிலும் அடையத்தக்க நரகத் துன்பத்தைப் பேதை ஒருவன் இந்த ஒரு பிறவியில்
செய்யும் குற்றங்களாலேயே பெறுவான்.

‘ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள் வைத்துஏங்கு பவர்க்கு.’ (குறள் எண் 1269)

வெகுதூரம் பிரிந்துசென்ற காதலர் திரும்பி வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்
பெண்களுக்கு ஒருநாள் பொழுது என்பது ஏழு நாட்கள் போல மெல்லக் கழியும்.

`நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.’ (குறள் எண் 1278)

`நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார். எனினும் அவர் சென்று ஏழு நாட்கள் கழிந்தன என்பதுபோல்
பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே?’ எனப் பிரிவாற்றாமையால் வருந்துகிறாள் தலைவி.

ஏழு என்ற எண்ணை மையமாக வைத்து வள்ளுவர் சொல்லும் பல்வேறு கருத்துகள் நம்மைச் சிந்தனையில் ஆழ்த்துகின்றன.
நம் மரபில் ஏழு என்ற எண்ணுக்கு விசேஷ மதிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக எதைக் கூறினாலும் ஏழாகவும் அல்லாதுபோனால் ஏழின் மடங்காகவும் நாம் பேசுகிறோம்.

ஸ்ரீ கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமனுக்குப் பதினான்கு ஆண்டு வனவாசம் என்பதை ஸ்ரீ ராமனிடம் அறிவிக்கிறாள் ஸ்ரீ கைகேயி.
ஸ்ரீ கம்பர் அந்த இடத்தில் ஸ்ரீகைகேயி கூறியதாக ஒரு பாடலைப் புனைகிறார்.
அவள் பதினான்கு ஆண்டு வனவாசம் எனக் குறிப்பிடவில்லை. `
இரண்டு ஏழாண்டுகள் வனவாசம்’ என்கிறாள் அவள்!

`ஆழிசூழ் உலக மெல்லாம் பரதனே ஆள நீபோய்த்
தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம்மேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண் டாண்டில் வாவென்று இயம்பினான் அரசன் என்றாள்!’

இயற்கையும் ஏழைத்தான் நம் கண்முன் நிறுத்துகிறது.
ஆகாயத்தில் தோன்றும் வானவில்லின் வண்ணங்கள் மொத்தம் ஏழு.
நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என மழைக் காலத்தில் ஏழு வண்ணங்களால்
ஆகிய வில்லை ஆகாயத்தில் கண்டு மகிழ்கிறோம் நாம்.

கண்ணுக்கு சுகம்தரும் வானவில்லின் நிறங்கள் மட்டுமல்ல,
காதுக்கு சுகம்தரும் சங்கீதத்தின் ஸ்வரங்களும் ஸ ரி க ம ப த நி என ஏழுதான்.

இந்த ஏழுமே விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகளைச் சார்ந்து புனையப்பட்டவை.
மயில் (ஸ), மாடு (ரி), ஆடு (க), புறா (ம), குயில் (ப), குதிரை (த), யானை (நி)
ஆகியவற்றின் இயற்கையான ஒலிகள் இந்த ஸ்வரங்களோடு இணைந்து செல்லக் கூடிய தன்மை படைத்தவை என்கிறார்கள்.
கர்நாடக இசையில் ஸரிகமபதநி என்று சொல்லப்படும் இதே ஸ்வரங்களுக்குப் பழைய தமிழில்
அழகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. `
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்’ என்பவையே அவை.

`குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை
எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே!’ என்கிறது திவாகர நிகண்டு.

திருவிளையாடல் திரைப்படத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கே.பி. சுந்தராம்பாளின்
ஆலய மணிக் குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடலில் `
இறைவன் இசையில் ஏழாய் நிலைத்திருக்கிறான்’ என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

`ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன் நமசிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன் இன்னிசை பதங்களில் ஏழானவன்…’

`அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் வாணி ஜெயராமின்
தேனிசைக் குரலில் ஒலித்த கண்ணதாசன் பாடலை யாரும் மறக்க முடியுமா?

`ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்? – என் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி?
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்? – வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்!’
என்ற அந்தப் பாடல் கேட்பவர் மனத்தில் பற்பல தத்துவச் சிந்தனைகளை எழுப்புகிறது.

நம் மரபில் ஏழு என்ற இலக்கத்தில் அமைந்தவை இன்னும் பல.
உலகங்கள் மொத்தம் ஏழும் ஏழும் பதினான்கு எனச் சொல்லப்படுகிறது.
பூமியும் பூமிக்கு மேலுள்ள உலகங்களும்:
பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம், மஹர்லோகம், ஜனோலோகம், தபோலோகம்,சத்யலோகம்.

பூமிக்குக் கீழ் உள்ள ஏழு உலகங்கள்
அதலம், விதலம், சுதலம், தராதலம், மஹாதலம், ரசாதலம், பாதாளம்.

கடல்கள் ஏழு எனக் கூறப்படுகின்றது.
உவர் நீர், தேன், நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச்சாறு என அவை வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தக் கடல்கள் ஏழைப் பற்றிக் கம்பர் எழுதிய யுத்த காண்டப் பாடல் ஒன்று பேசுகிறது.
ராமன் எய்த அம்பால் இந்த ஏழு கடல்களும் கலங்கி குருதிக் கடலாயிற்று என்கிறார் கம்பர்.

`உப்பு, தேன், மது, ஒண்தயிர், பால், கரும்பு
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப்புனல் சுற்றலால்
தப்பிற்று அவ்வுரை இன்று ஓர் தனுவினால்.’

மலைகள் ஏழு.
இமயம், மந்தர மலை, விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்.

ஏழு மலைகளாவன,
கயிலை, இமயம், மந்தரம், விந்தம்,
நிடதம், ஏமகூடம், கந்தமாதனம் என்பவை.

ஏழு முனிவர்கள் `சப்த ரிஷிகள்’ என ஒரு தொகுப்பாகக் கூறப்படுகின்றனர்.
குதிரைகள் ஏழு வகைப்பட்டவை.
சப்த கன்னியர் எனப் புனித கன்னியர் எழுவர்.
இப்படி வகைப்படுத்தப்படும் அத்தனையும் நடுநடுங்கிய சந்தர்ப்பம் ஒன்று உண்டு என்கிறார் கம்பர் தம் ராமாயணத்தில்.
ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் அம்பால் ராமன் வீழ்த்தக் கூடுமோ என வினவுகிறான் சுக்கிரீவன்.
அப்படி வீழ்த்த முடியுமானால் ராமனால் வாலியை வெல்ல இயலும் என்பது சுக்கிரீவன் கருத்து.

ஆனால் அங்கிருந்த ஏழு மராமரங்களில் ஒன்றையல்ல, ஏழையுமே தன் அம்பால் துளைக்கிறான் ராமன்.
ராமபிரானின் அத்தகைய மாவீரத்தை ஒரு பாடலில் இலக்கிய நயத்தோடு பேசுகிறார் கம்பர்.
ராமன் ஏழு மராமரங்களைத் துளைத்தபோது ராமனின் கணைக்கான இலக்கு ஏழு என்பதாக இருக்குமானால்
ஏழாக இருக்கும் அனைத்தும் வதைக்கப்படுமே என
ஏழின் தொகுப்பாய் அமைந்த அனைத்துப் பொருட்களும் மனிதர்களும் நடுங்கினார்களாம்.

ஏழு கடல்கள், ஏழு உலகங்கள், ஏழு மலைகள் நடுங்கின. சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், ஏழு வகைப்பட்ட புரவிகள்,
சப்த கன்னிகைகளான ஏழு மங்கையர் என நடுங்காத ஏழின் தொகுப்பே இல்லையாம்.

`ஏழு வேலையும் உலகம்மேல் உயர்ந்தன ஏழும்
ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கின என்ப,
ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கம்? என்றெண்ணி…’

இந்தப் பாடலில் நடுங்கியதாகச் சொல்லப்படும் சப்தரிஷிகள் யார்யார் தெரியுமா?
`விஸ்வாமித்திரர், காசியப்பர், பரத்வாஜர், கெளதமர், அகஸ்தியர், அத்ரி, பிருகு’ ஆகியோரே அவர்கள்.
(சில பட்டியல்களில் இந்த வரிசையில் உள்ள ஓரிருவருக்கு பதிலாக வேறு சிலர் இடம்பெறுவதுண்டு.)

தமிழ்நாட்டில் காணப்படும் பச்சையம்மன் கோயில்களில் ஏழு முனி என அழைக்கப்படும் எழுவரின் சிலைகளைக் காணலாம்.
அந்த முனிகள் முறையே `வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, வீரமுனி, கருமுனி, வேதமுனி, சடாமுனி’ ஆகியோராவர்.

சப்த கன்னியர் என ஏழு கன்னியரை நம் புராணங்கள் போற்றுகின்றன.
அவர்கள் முறையே `பிராம்மி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி’ ஆகியோர்.

சும்பன், நிசும்பன் ஆகிய அரக்கர்களை அழிக்க அம்பிகை போர்புரிந்தபோது,
இந்த சப்த கன்னியர் அம்பிகைக்கு உதவியாக உற்பவித்தார்கள் என்று மார்க்கண்டேய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காளிதாசர் எழுதிய குமாரசம்பவம் என்ற காவியத்தில் இந்த சப்த கன்னியர் சிவபெருமானின் பணிப்பெண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்து திருமணத்தில் சப்தபதி என்றொரு சடங்கு உண்டு.
தாலி கட்டினாலும் சப்தபதி சடங்கும் நிறைவேறினால்தான் திருமணம் பூர்த்தியானதாகக் கருதப்படும்.
மணமகன் மணப்பெண்ணின் வலது காலைத் தன் கைகளால் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படிச் செய்யவேண்டும்.
எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு மந்திரம் சொல்லப்படும். `
உணவு குறையின்றிக் கிடைக்கவும், உடல்வலிமை அதிகரிக்கவும், விரதங்களை அனுசரிக்கவும்,
மனச்சாந்தி கிட்டவும், பசுக்கள் முதலிய பிராணிகளிடம் அன்பு பாராட்டவும், எல்லா மங்கலங்களும் கிட்டவும்
சுபகாரியங்கள் ஹோமங்கள் போன்றவை நடைபெறவும் இறைவன் உன்னைப் பின்தொடரட்டும் என்பதே
சப்தபதி சடங்கில் உச்சரிக்கப்படும் மந்திரங்களின் சாரமான பொருள்.’

ஸ்ரீ `ஏழுமலை வாசா வேங்கடேசா’ என ஸ்ரீ திருப்பதிப் பெருமாளைப் போற்றிப் புகழ்கிறோம்.
அவர் ஏழுமலையில் வசிக்கிறார். அதற்கும் ஒரு புராணக் காரணம் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ கண்ணன் துவாபர யுகத்தில் ஏழு நாட்கள் ஸ்ரீ கோவர்த்தனகிரியைத் தாங்கி நின்றான்.
நன்றியுணர்ச்சி கொண்ட அதே ஸ்ரீ கோவர்த்தனகிரி கலியுகத்தில் ஸ்ரீ ஏழுமலையாக நின்று
ஸ்ரீ கண்ணனாகிய ஸ்ரீ வேங்கடேசனைத் தாங்குகிறதாம்.

நம் காலக்கணக்கில் கூட ஏழு இடம் பிடிக்கிறது. ஒரு வாரம் என்பது ஏழு நாட்களை உள்ளடக்கியது.
ஏழு பிறவிகள் உண்டு என்று இந்து மதம் சொல்கிறது.
ஓர் ஆன்மா ஏழு பிறவிகள் எடுத்த பின்தான் இறைவனிடம் நிரந்தரமாகச் சேர்ந்து
மறுபிறவியே இல்லாத நிலையை அடைய முடியும் என்பது நம் நம்பிக்கை.

ஏழு பிறவிகள் என்பதென்ன?
தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பவையே அவை.
ஐந்து பிறவிகளைத் தாண்டி ஆறாம் பிறவியான மனிதப் பிறவியை இப்போது நாம் அடைந்துள்ளோம்.
இதில் பாவச் செயல் புரியாது வாழ்ந்தால் தேவ நிலையையும் பின் இறைநிலையையும் நாம் அடைய இயலும்.
பாவச் செயல் புரிந்தால் மறுபடியும் ஏழு பிறவிச் சுழலில் சிக்க வேண்டும்.
ஏழு பிறவிகளிலும் கண்ணனையே நினைத்திருப்பேன் என்று திருப்பாவையில் கூறுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

`சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!’

திருக்குறளின் ஒவ்வொரு குறளுமே ஏழு என்னும் எண்ணைப் போற்றி எழுதப்பட்டதுதான்.
எப்படி என்கிறீர்களா? திருக்குறளின் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஒவ்வொரு குறட்பாவும்
ஏழு சீர்களைக் கொண்டுதானே திகழ்கின்றன?

சுருங்கச் சொல்லி விளங்கவைக்க எண்ணிய ஸ்ரீ வள்ளுவர், குங்குமச் சிமிழில் கடலை அடைக்கும் முயற்சியைப் போல்
ஏழே சீர்கள் என வகுத்துக்கொண்டு அதனுள்ளே தம் எண்ணற்ற சிந்தனைகளைப் பதிவு செய்துவிட்டார்.
அனைத்து மொழியினரும் நினைத்து நினைத்து வியக்கும் அற்புதம் அல்லவா இது!

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: