ஸ்ரீ கம்ப ராமாயணம்-முன்னுரை ஸ்ரீ பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்–

ஸ்ரீ பால காண்டம் கடவுள் வாழ்த்துக்கள்–

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.–1-

——–

பாலகாண்டம் பாயிரம் என்ற பொதுத்தன்மையுடைய பகுதி போக,
ஆற்றுப்படலத்தில் தொடங்கிப் பரசுராமப்படலம் ஈறாக 23 படலங்களாக வகுக்கப்பெற்றுள்ளது.

ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம் என்பன ஒரு தொகுதி.

இதனை அடுத்துத் திரு அவதாரப் படலம், கையடைப் படலம், தாடகை வதைப் படலம்,
வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம் என்பன ஒரு தொகுதி.

இறுதியாக எதிர்கொள் படலம், கோலங்காண் படலம், கடிமணப் படலம், பரசுராமப் படலம் என்பன ஒரு தொகுதி.

இப்படி மூன்று தொகுதிகளாகப் பிரித்த பின்னர் எஞ்சுவன நான்காவதாக உள்ள தொகுதியாகும்.
அது சந்திர சயிலப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், நீர் விளையாட்டுப் படலம்,
உண்டாட்டுப் படலம் ஆகியன.

———

சோழ சாம்ராஜ்யம் நானூறு ஆண்டுகள் வாழ்ந்து ஒருவாறு மடிகின்ற காலத்தில் தோன்றியவர்
(12ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதி) சேக்கிழார் ஆவார்.

ஆக, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தில் கம்பனும், அதன் வீழ்ச்சியில் சேக்கிழாரும்
இரண்டு பெருங்காப்பியங்களை ஆக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கடவுள் இங்கு வந்து பிறந்தான் என்று கூறாமல், கடவுளே இங்குப் பிறக்க விரும்பினான் என்று கூறும்
வகையில் நாட்டு, நகரச் சிறப்பை ஒப்பற்றதாக ஆக்கிக் காட்டுகிறான்.

பிறந்தான், வளர்ந்தான், வசிட்டனிடத்திலே கல்வி கற்றான். அப்படிக் கல்வி கற்கும்போதே அவன்
மேட்டுக்குடி மகனாக – அரச மகனாக வாழவில்லை என்பதையும் பொதுமக்களோடு நெருங்கிய
தொடர்பு உள்ளவனாக வாழ்ந்தான் என்பதையும் ஒரு பாடலில் வைத்துக் காட்டுகிறான்.
தெருவில் வருகின்றவர்களையெல்லாம் சந்தித்து
‘எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக மலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர் கொல்’ எனவே (கம்பன், 311) உசாவுவான்.
இப் பாடலில் பொதுமக்களோடு எப்படி இரண்டறக் கலந்து பழகுகிறான் என்பதைக் கவிச்சக்ரவர்த்தி
வைத்துக் காட்டுவது ஏனைய இலக்கியங்களில் காணாத புதுமையாகும்.

———-

பால காண்டம் 77 சருக்கங்கள், 2355 சுலோகங்கள்-

வான்மீகி நாரதரைப் பார்த்துக் கேட்கும் அறியா வினா சிந்திக்கத்தக்கது.
இந்த உலகத்தில் இப்போது இருப்பவர்களில் நற்பண்புகளை உடையவனாக இருப்பவன் எவன்?
வீரியமுடையவனாகவும்,அறங்களை அறிந்தவானாகவும், நன்றியுள்ளவனாகவும், எப்போதும் உண்மையே பேசுபவனாகவும்,
விரதத்தில் உறுதியுடையவனாகவும் இருப்பவன் எவன்? (1. 1-2)
நல்லொழுக்கமும், எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளமும்,பல்கலை அறிவும், பல்வகையாற்றலும் எப்போதும் அன்பொழுகும்
இன்முகமும் உரையவன் எவன்? (1. 1-3)
தைரியமுடையவனும், கோபத்தைத் தன்வசப்படுத்தினவனும் ஒளியுமிழும், உடலையுடையவனும்,அழுக்காறு அற்றவனும், போரில்
உருத்தெழுந்தபோது தேவர்களாலும் அஞ்சத் தக்கவனும் எவன்? (1.1-4)
இதனை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில்,இத்தகைய ஒருவனை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை
என்னுள்ளே அடங்காது மிகுந்து எழுகிறது. இத்தகைய மானுடனை அறியும் தகுதி தங்களுக்கே உண்டென அறிவேன். (1. 1-5)

வான்மீகியின் ஆசையின் ஆழத்தை உணர்ந்த நாரதர் பெரிதும் மகிழ்ந்து,“முனிவரே உம்மாலே கூறப்பட்ட நற்குணங்கள்
ஒருவரிடத்தேயே கிடைப்பதற்கரியன. ஆலோசிக்குமிடத்து, இக்குவாகு மரபில் தோன்றி ஸ்ரீராமர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் தான்
இவ் எல்லாப் பண்புகளையும் ஒருங்கே உடையவர்” என்று கூறி இராம காதையைச் சுருங்க உரைக்கிறார்.
வான்மீகி தாம் கற்பித்துக் கொண்ட நற்பண்புகளும், நல்லொழுக்கங்களும் உடைய மானுடனாக
இராமன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் இருப்பது அறிந்து, அவன் வாழ்க்கைக் கூறுகளை நாரதர் கூறக்கேட்டு
அவற்றை அடிப்படையாகக் கொண்டு தம் காப்பியத்தை இயற்றினார்.
மானுட வாழ்க்கையில் வான்மீகி காண விரும்பிய குறிக்கோட் பண்புகள்,
அவற்றைத் தாங்கிய ஒருவனை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் வான்மீகியின் ஆழமான ஆசை
இந்த இருவகை அம்சங்களும் கம்பன் காப்பியத்தில் இடையறாது இழையோடக் காண்கிறோம்.

கம்ப ராமாயணத்தில் அவையடக்கமாக ஆறு பாடல்கள் அமைந்துள்ளன.

———–

நான்கு பிள்ளைகளைப் பெற்றான் தசரதன் என்றாலும் இராமனைத் தவிர, ஏனைய மூன்று பிள்ளைகளை அவன்
நினைவில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை. பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான் கம்பன்.
பிள்ளைகளைக் கேட்க வந்த விஸ்வாமித்திரன்.

“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” (324)
என்றுதான் கூறினானே தவிர, ‘இராமன்’ என்று பெயரிட்டுச் சொல்லவில்லை.
‘கரிய செம்மல்’என்றால் பரதனும் கரிய செம்மல்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.அப்படியிருக்க ‘கரிய செம்மல்’என்று
விஸ்வாமித்திரன் கூறியவுடன், இராமனைத் தான் தசரதன் நினைத்தானே தவிர, பரதனைப் பற்றி நினைத்ததாகவே தெரியவில்லை.

“மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்” (1514) என்று அயோத்தியா காண்டத்தில் கம்பன் இதனை நினைவூட்டுவான்.
“போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்”(1898) என்று கம்பன் முடிப்பான்.
இராமன் கானம் போய்விட்டான் என்று சொன்னவுடனேயே தசரதனுடைய ஆவி பிரிந்துவிட்டது என்று பேசுகிறான்.
வசிட்டனை நோக்கி,
“சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் மன்னனே ஆவான் வரும்
அப் பரதன் தனையும் மகன் என்று உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு” (1654)
என்று தசரதன் கூறிவிட்ட காரணத்தால் இறுதியாக நீர்க்கடன் செய்வதற்குக்கூட, பரதனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
தசரதனுக்கு நீர்க்கடன் செய்ய பரதனுக்கு வாய்ப்பில்லை என்றுகூறுவதைக் காட்டிலும்,
பரதன் கையினால் நீர்க்கடன் பெறுகின்ற வாய்ப்பை தசரதன் இழந்துவிட்டான் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாகும்.

பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை பண்டு
ஆக்கிய பொலங் கழல் அரசன், ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்” (1465)

‘ஏன் பரதனைப் பாட்டன் வீட்டிற்கு அனுப்பினான் தசரதன் என்பது எனக்கு இப்போது புரிந்துவிட்டது.
இராமனுடைய பட்டாபிஷேகம் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் பரதன் இங்கிருந்தால் அது பிரச்சனைக்கு இடமாகும்
என்று கருதித்தான் கேகய நாட்டிற்கு அனுப்பினான் என்று சூழ்ச்சிக்காரியாகிய கூனி பேசுகிறாள்.

“அரசரில் பிறந்து,பின் அரசரில் வளர்ந்து அரசரில் புகுந்து, பேர் அரசி” (1467)யாக இருக்கின்ற கைகேயியின்
மனத்தைக் கேவலம் ஒரு பணிப் பெண் மாற்றிவிட்டாள் என்றுசொல்வதை, கம்பனும்கூட ஏற்றுக்கொள்வதாகத்
தெரியவில்லை. ‘மந்தரை துணைக் காரணமாக இருந்தாள்
“அரக்கர் பாவமும்,அல்லவர் இயற்றிய அறமும் துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்.”(1484)என்பதாக

ஆக கைகேயியின் மனம் திரிந்தது என்றால் அது கேவலம் கூனியினுடைய சூழ்ச்சியால் அன்று. அரக்கருடைய பாவமும்,
அல்லவர்களுடைய தவமும் சேர்ந்து கைகேயியின் மனத்தை மாற்றின என்று சொல்லுகின்ற முறையில்
கைகேயினுடைய பாத்திரப் படைப்பை மிக உயர்த்தி விடுகின்றான் கம்பநாடன்.

இராமன் எப்படி ஸ்திரிப்ரக்ஞனாக அமைக்கப் படுகின்றானோ அதுபோல் ஒரு ஸ்திதப்ரக்ஞ மனோ நிலையுடையவளாகக்
கைகேயியும் படைக்கப் பட்டிருக்கின்றாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்துகொண்டாள் கைகேயி.
இந்த மாபெரும் தியாகத்தில் தன்னைச் சூடமாக ஆக்கி எரித்துக் கொண்டு கணவனைக் காப்பாற்றுகின்றாள்
என்று நினைக்கத் தோன்றுகிறது.
“அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது. என்னைக்கொன்று
நீங்கலது. இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்தமா மணி இன்று வாங்க” (10068) என்று சொல்லி, ‘நீ வரத்தைக் கேள்’ என்று சொல்லுகின்றான்.
அப்போது இராமன் கேட்கின்றவரம் வியப்பை உண்டாக்குவதாக அமைகின்றது.
‘ஐயா,”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக” (10079) என்று கேட்கின்றான்.
தெய்வத்தைப் போல, தன்னுடைய நலத்தைக் கருதாமல், பிறருக்காகவே மாபெரும் காரியத்தைச் செய்தவள்
கைகேயி என்பதை இராகவன் உணர்ந்த காரணத்தால் தான் “என் தெய்வம்”-என்று பேசுகின்றான்.

மூல நூலில் அமைந்துள்ள முறையை விட்டுவிட்டுப் புதிய முறையில் கன்யாசுல்கத்தை ஓரளவு மறைத்து, அதே
நேரத்தில் கைகேயியை ஒரு மாபெரும் தியாகியாக, ஸ்த்தப்ரக்ஞையாக, கடமையை நிறைவேற்றுவதற்காகப்
பழி பாவங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு பாத்திரமாக அமைத்து விடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்.

கன்யா சுல்க நிகழ்ச்சியைத் தசரதன், கைகேயி என்ற இருவர் மட்டும் அறிந்ததோடு அல்லாமல் இராகவனும் அறிந்திருந்தான்
என்பதைச் சந்தர்ப்பம் வரும் போது அவன் கூற்றாகவே வைத்துப் பேச வைக்கின்றான்
கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். மூல நூலாகிய வால்மீகத்தில் இந்நிகழ்ச்சி இராமனும் பரதனும் காட்டில் சந்திக்கின்ற காலத்தில்
பரதனிடம் இராமனே கூறுவதாக அமைந்துள்ளது.
பரதன் கூட அதை ஓரளவு அறிந்திருந்தான் என்பதையும் அந்தப் பாடலின் மூலமே தெரிவிக்கின்றான்.

வரன் நில் உந்தை சொல் மரபினால் உடைத் தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் அரசு நின்னதே ஆள்க (கம்பன் 2485) என அந்தப் பாடலில் சொல்கிறான்
இராகவன். ‘நீ பிறந்து விட்டதனாலே இந்த ராஜ்யம் உன்னுடையது ஆகிறது’ என்று இராகவன் பேசுகிறான் என்றால் என்ன பொருள்.?
கன்யா சுல்கக் கதையை வேறு முகமாக, வேறு விதமாக இங்கே புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி.
அதை நன்கு அறிந்திருந்தவனாகிய இராகவன் பேசுகின்றான்.
“பரதா, நீ பிறவாமல் இருந்திருந்தால் இந்த ராஜ்யம் எனக்கு உரியதாக இருந்திருக்கலாம்.ஆனால், கைகேயியின் வயிற்றில்
நீ பிறந்துவிட்ட காரணத்தால் இந்தப் பூமி உனக்குச் சொந்தமாகஆகிவிட்டது. அதனை நீயே ஆள்வாயக’
என்று இராகவன் கூறியதாக மிக அற்புதமான முறையில் அந்தக் கதையை மறுபடியும் நினைவூட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி

இராகவன் சொன்னதை ஏற்றுக்கொள்கிறான் பரதன். அது தான் ஆச்சரியம்.
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றிலும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் என்னது ஆகில் யான்
இன்று தந்தனென் மன்ன! போந்து நீ மகுடம் சூடு (2486). இராகவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு,
“நான் அரசன்தான். இப்போது நான் ஆணையிடுகின்றேன். நீ போய் ராஜ்யத்தை ஆள்வாயாக” என்று பரதன் கூறும்போது
இராமன், பரதன் ஆகிய இருவருமே இந்தக் கன்யா சுல்கக் கதையை ஏற்றுக்கொண்டு அதற்கு வழி செய்கின்றார்கள்
என்பதை அறிய முடிகின்றது.

எனவே,கைகேயி கூறிய கடுஞ்சொற்கள் எல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கடுஞ்சொல்லாக அமைந்தனவே தவிர,
உண்மையில் அவை மாபெரும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தூமொழிகள்’ என்பதை
“தூ மொழி மடமான்” (1484) என்ற சொல்லின் மூலம் பெற வைத்துவிடுகின்றான்.

————

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன்னருள் சுரந்து,
‘மாழை மான் மடநோக்கி உன் தோழி; உம்பி எம்பி’ என்று ஒழிந்திலை உகந்து,
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி, என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட,
ஆழி வண்ண! நின் அடியினை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே! (நாலாயிரம் 1418)
என்ற ஆழ்வாரின் பாசுரத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, பிராட்டியை குகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான் இராகவன் என்ற
ஒரு நிகழ்ச்சியை உண்டாக்கி, படகிலே சென்ற போது சீதையைக் காட்டி
‘இவர் உன் கொழுந்தி’, எனவும், இலக்குவனைக் காட்டி ‘இவன் உன்தம்பி,’ எனவும் இராமன் அறிமுகம் செய்து
வைப்பதாக ஒரு நிகழ்ச்சியைக் கம்பன் படைக்கிறான்.
“இளவல் உன் இளையான் இந் நன்னுதலவள் நின் கேள்” (1994) என்பதாக பிராட்டியை அறிமுகம் செய்து
இந்த நிகழ்ச்சியைப் பின்னர் கேள்விப்பட்டவனாகிய பரதனும் கூட,
“இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,இளையவற்கும், எனக்கும் மூத்தான்” (2367) என்று
குகனைக் கோசலைக்கு அறிமுகம்

தன்னுடைய எல்லையில் நின்று தான் உண்ணுகின்றதை இறைவனுக்குப் படைப்பது போல
அவன் கையிலே கொண்டு வருகின்றான்.
“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்?” (1966) என்று பேசுகின்றான் குகன்.
‘நான் கொண்டு வந்திருக்கிறேன். உன்னுடைய விருப்பம் எதுவோ அதன் படி செய்வாயாக’ என்று
அந்த உரிமையை இராகவனுக்கே கொடுக்கிறான்.ஏனையோர் அதனைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.
இராகவனைப் பொறுத்த மட்டில் அதைமுழு அன்பின் வடிவாக வந்ததாக ஏற்றுக் கொள்கிறான்.
சர்க்கரையால் செய்யப்பட்ட மிளகாய் எப்படி உறைக்காமல் இனிக்குமோ அதுபோல
“நீ கொண்டு வந்த இந்தத் தேனும் மீனும் அன்பு என்ற ஒன்றினாலே முற்றிலும் சமைக்கப்பட்டுவிட்டது.” ஆகவே,
“பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்” (1967)
யாக குண்டத்தில் சொரியப்படுகின்ற அவிஸ் மிக உயர்ந்ததாகும் என்று இராகவன் பேசும் போது
குகனுடைய அன்பை பரிபூரணமாக அறிந்து ஏற்றுக் கொண்டவனாகிறான்.

தன்னைக் காண வருகின்ற பரதனைத் தூரத்தில் இருந்து பார்த்த போது, பரதன் அணிந்திருக்கிறதவக் கோலத்தையும்,
அவன் முகத்தில் தேங்கியிருக்கின்ற துக்கத்தையும் பார்த்த போதே

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல். நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்” (2332)
“எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” (2332) என்று பேசுகின்றான்.
“ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!”(2337)

———-

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன்,அருந்த தவத்தால் அணுகுதலால்,
இப்பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இருவினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.” (2576) என்ற பாடலால் விராதன் விளக்குகிறான்.

எவ்வித நெறிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இழிபிறவி எய்தினும் இறைவனின் இணையடிகளை மறவாத மனம் ஒன்று
மாத்திரம் இருப்பின் அவர்கட்கும் வீடுபேறு உண்டு என்பது இந்நாட்டின் பழைய கொள்கை ஆகும்.
தமிழர் கண்ட பக்தி மார்க்கத்திற்கு எடுத்துக்காட்டுகளாகக் குகனையும், விராதனையும் கவிஞன் எடுத்துக் கூறுகிறான்-

இந்திரன் வேண்டுகிற அதே நேரத்தில் சரபங்கனுடைய ஆசிரமத்தின் வெளியே இராம இலக்குவர்கள் நிற்கின்றனர்.
அதனைத் தன் ஞானத்தால் உணர்ந்து சரபங்கன் “எனக்கு வரவேண்டிய வீடுபேற்றை அளிப்பவன் வெளியே நிற்கின்றான்.
நீ தர வேண்டிய பதங்கள் எனக்குத் தேவையில்லை” என்று பேசுகிறான். அதே நேரத்தில், வீடுபேற்றின்
இலக்கணத்தைக் கீழ்வரும் பாடலில் அற்புதமாக எடுத்து விளக்குகிறான்.

“சில காலை இலா, நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம் வேறுபடா,
உறு கால கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா, நெறி எய்துவென்; – வான் உடையாய்;” (2606)
சரபங்கன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த இந்திரன் இராமனை இன்னான் என்று அறிந்துகொண்டு 2610 முதல் 2617 வரை உள்ள எட்டுப்
பாடல்களில் பரம்பொருளின் தன்மையைப் பேசுகிறான். ஆயிரம் யாகங்கள் செய்து இந்திரப் பெரும் பதத்தில் இருக்கும் அவனும்
விராதனைப் போலவே முரண்பாட்டில் முழுமுதலைக் காண்கிறான். அவ்வெட்டுப் பாடல்களுள் ஈடு இணையற்று விளங்குவது.

“மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;
மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல் இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;
தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால், சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,
காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே; கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?” (2614) என்ற பாடலாகும்.

இவ்விரு படலங்களிலும் நம்மை வியக்க வைக்கும் செய்தியும் உண்டு. அரக்க வடிவிலிருந்து திருவடி சம்பந்தம் பெற்ற விராதன் வீடுபேற்றை
அடைகிறான். முழு ஞானியாகிய சரபங்கனோ வீடு பேற்றின் இலக்கணத்தை மிக அற்புதமாக 2606 ஆம் பாடலில் கூறி இந்திர பதத்தையும் பிரம
லோகத்தையும் உதறி விட்டு இராமனைத் தரிசித்து வீடுபேற்றை அடைகிறான்.
இவர்கள் இருவரை மட்டுமல்லாமல் இந்திரனும் இராமனைத் தரிசிக்கிறான். இவர்களைப் போலவே அவனும் இறை இலக்கணத்தைப் பேசுகிறான்
என்றாலும், தான் பெற்ற இந்திரப் பதத்தை உதறிவிட்டு வீடு பேற்றை அடைய அவன் விரும்பவில்லை.

கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் இந்த இரண்டு படலங்களில் உபநிடதங்களைச் சாறாக பிழிந்து இந்நாட்டுக் கடவுட் கொள்கையையும்
அதனுடன் குழைத்து ஏறத்தாழ 24 பாடல்களில் தந்துவிடுகிறான்.
அம்மட்டோடு இல்லாமல் குற்றமே குணமா வாழ்ந்த விராதன், மாபெரும் ஞானியின் வாழ்க்கை வாழ்ந்த சரபங்கன் ஆகிய இருவரும்
வீடுபேற்றைப் பெரிதென மதித்துப் பெறுதலையும், தேவர்கோன் ஆகிய இந்திரன் இவர்களோடு ஒப்பிடுகையில்
சிறியவனாக ஆகிவிடுதலையும் குறிப்பால் உணர்த்துகிறான்.

“…. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும்அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்- உருள் இணர்க் கடம்பின் ஒளி தாரோயே! (பரிபாடல் 5 77-80)

அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னைத் துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக- தொன்முதிர் மரபின் நின் புகழினும் பலவே! (பரிபாடல் 14 29-32)

செரு வேல் தானைச் செல்வ! நின் அடி உறை,உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்குப்,
பிரியாது இருக்க-எம் சுற்றமொடு உடனே! (பரிபாடல் 18 54-56)

பரிபாடலில் காணப்படும் இவ்வரிகளில் இத்தமிழரின் பக்தி வழியில் பொன், பொருள், போகம், இந்திரப் பெரும்பதம்
ஆகிய எவற்றுக்கும் இடமில்லை என்பது நன்கு வெளிப்படும். இக் கொள்கைகள் நாளாவட்டத்தில் வளர்ந்து,

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டேன்” (நாலா. 678)

“கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (நாலா. 681)

“வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்” (நாலா. 683)

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும் மைத்து ஆய’ (5884)

——–

கிட்கிந்தைப் படலம் பம்பை வாவிப் படலத்தில் தொடங்கி மயேந்திரப் படலம் முடியப் பதினாறு படலங்களைக் கொண்டுள்ளது

அவ் இடத்து, இராமன், நீ அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்துபோர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது’ என்றான்;
தெவ் அடக்கும் வென்றியானும், ‘நன்று இது’ என்று சிந்தியா. (3944)

இப்பாடலில், இரண்டு, மூன்றாம் அடிகளில் வரும் ‘வேறுநின்று ஏ விடத் துணிந்தது என் கருத்து இது’ என்ற பகுதி
வாலி வதையின் அடித்தளத்தை நன்கு விளக்கப் பயன்படும்.
சுக்கிரீவனைப் பார்த்து, ‘வாலியை வலியச் சென்று போருக்கு அழைப்பாயாக’ என்று கூறுகின்ற அதே நேரத்தில், தான்
எவ்வாறு போர் செய்து வாலியைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் (Strategy) இராமன் வகுத்துக் கொண்டான்.
‘மறைந்து நின்று தான் அம்பு எய்யப் போகிறேன் (ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு) நான் கண்ட முடிபாகும் இது’ வென்று பேசுகிறான்.
‘வேறு, நின்று’ என்ற சொற்கள் மறைவாக நின்று என்பதையும்
‘ஏ (அம்பை) விடத் துணிந்தது’ (எய்ய முடிவு செய்து விட்டேன்) என்ற சொற்கள் நீண்ட சிந்தனைக்குப் பிறகு
இராகவன் கொண்ட முடிவு என்பதையும் காட்டும்.
இவ்வழியைத் தவிர வேறு வழியில் வாலியைக் கொல்ல இயலாது. வாலி இறந்தால் ஒழிய இராவண வதம் தடையின்றி
நடைபெற இயலாது. எனவே, இம்முடிவுக்கு இராகவன் வருகிறான்.

வாலியோ இராமனுடைய வரலாற்றை மிக நன்றாக அறிந்திருந்தான். இராகவனுடைய பண்புநலன்களைத்
துல்லியமாக எடை போட்டு அறிந்திருந்தான் என்பதை (3965 முதல் 3969 வரை) ஐந்து பாடல்களில் விரிவாகக் கூறுகிறான்.
அம்பைநிறுத்தி ஓரளவு வெளியே இழுத்து அதில் பொறிக்கப்பட்ட
‘செம்மைசேர்நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்’. ‘கண்களில் கண்டான்’
கண்ணுற்றான் வாலி, நீலக் கார்முகில் கமலம் பூத்து
மண் உற்று, வரிவில் ஏந்தி, வருவதே போலும் (4016)
ஸ்பரிஸ தீட்சை,நயன தீட்சை, திருவடி தீட்சை என்று பலவகை உபதேசம்
ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய் (4063) என்று கூறுகிறான்.
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! –(4063)
மறைகளும் முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், துணி வில் தூக்கி,
அறைகழல் இராமன் ஆகி, அறநெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய். (4073)
ஒவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்,
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான். (4068)
தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும், செய்கை (4020-4)

இராமகாதை முழுவதிலும் இலக்குவன், பரதன், கவந்தன், சவரி, வாலி, அனுமன், வீடணன், சரபங்கன் ஆகிய அனைவரும்
இராமனை யாரென்று அறிந்திருந்ததாகக் கவிஞன் பாடுகிறான்.

அனுமன். இவன் ‘கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை’ (3768) என்றும்
‘உலகுக்கெல்லாம் ஆணி’ (3769) என்றும்,
‘நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது’ (3783) என்றும்
இராமனால் வருணிக்கப்படும் பாத்திரம் ஆவான்.
கோட்படாப்பதம் என்று இராமபிரானால் வருணிக்கப்படுதலின் இப்பாத்திரம் யான், எனது என்று செருக்கறுத்த பாத்திரமேயாவான்.

சிந்தனைக்கு உரிய பொருள் ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3756) –
தருமத்தின் வடிவான இவர்கள் அருமருந்தனைய ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3757)-
சினத்தை வென்றவர்கள் – கருணையில் கடல் அணையர் – இதமான பண்பு உடையவர்கள் இவர் –
இந்திரன் அஞ்சும் வலிமையுடையவர் மன்மதனையும் வெல்லும் அழகுடையவர் (3758) –
புலி முதலிய கொடிய விலங்குகளும் மயில் முதலிய பறவைகளும் இவர்கள்மாட்டு அன்பு செய்து உருகுகின்றன -(3760 – 61)
நெருப்பைக் கக்கும் கற்கள் இவர்கள் பாதம் பட்டவுடன் மலர்கள் போன்று மென்மை அடைகின்றன. (3762) என்றெல்லாம் கணிக்கிறான்.
துன்பினைத் துடைத்து, மாயத் தொல்வினை தன்னை நீக்கி,
தென்புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்-(3763)

‘சங்குசக்கரக் குறி உள, தடக்கையில் , தாளில்;
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை;
செங் கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே; இங்குஉதித்தனன், (3859)

தொண்டன் பரம்பொருளையும் பரம்பொருள் தொண்டனையும் இனங்கண்டுகொள்கிற மாபெரும் நிகழ்ச்சி,

சுந்தர காண்டம்,கடல் தாவு படலத்தில் தொடங்கித் திருவடி தொழுத படலத்தில் முடிகின்றது
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ (10) – பிறவியாகிய ஆழியைக் கடப்பவர் இறைவன் அடி சேர்வர்-
பிறவிக் கடலைத் தாண்டினால் கிடைப்பது திருவடி என்ற கருத்து இங்கே புதைந்துள்ளமை அறி்யப்பெற வேண்டும்.
மயேந்திர மலையில் அனுமன் முதலியோர் ஒன்று கூடிய பொழுது இராம நாமத்தின் மகிமையைச் சம்பாதி கூறினான்.
‘எல்லீரும்அவ் இராம நாமமே சொல்லீர்;சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா நல் ஈரப் பயன் நண்ணும்’ (4695) என்று சம்பாதி கூறவும்.

‘அரவணைத்துயிலின் நீங்கிய தேவனே அவன்; இவள் கமலச் செல்வியே’ (5134)
பிராட்டியிடம் அவன் கண்டிராத ஓர் அழகைத் தொண்டனாகிய அனுமன் காணுகிறான்.
‘தவம் செய்த தவமாம் தையலின் அழகை இராகவன் “காண நோற்றிலன் கமலக் கண்களால்” (5141) என்று அனுமனே பேசுகிறான்.

அனுமன் பிராட்டியின் உயிரைக் காத்தான். இப் பேருபகாரத்தை நினைந்து அவனுக்கு நன்றி பாராட்டும் முறையில் அந்தத் தாய்,
“உயிர் தந்தாய் உத்தம” (5297) என்றும்
“அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே” (5298) என்றும்
“பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே” (5299) என்றும் நன்றி பாராட்டிவிட்டு,
தாய் மகனை ஆசீர்வதிக்கும் முறையில்,
“உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி” (5299) என்று ஆசி வழங்கினாள்.

“அடியேன் தோள்மிசை கடிது ஏறு”(5354)

“அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன் (5362) என்று வீறு தோன்றப் பேசுகிறாள்.

“திருமாலோ,இந்திரனோ, சிவபெருமானோ, நான்முகனோ, ஆதிசேடனோ, இவர்களுள் யார் நீ (5874)
எமனோ, முருகனோ, திக் பாலகரோ யார் நீ (5975)
வேள்வியில் வந்த பூதமோ, நான்முகன் அனுப்பிய தெய்வமோ (5876) யார் நீ?” என்ற வினாக்களை இராவணன்
தொடுப்பதிலிருந்து இராவணண் எந்த அளவுக்கு மாறியுள்ளான் என்பதை அறிய முடிகிறது.
புன்தொழில் குரங்கு என்று எண்ணி நகையாடினவனைக் கிங்கிரர் முதல் அக்ககுமாரன்வரை அழிந்தோர் பட்டியல்
மனமாற்றம் கொள்ளச் செய்தது உண்மை தான்.

இத்தனைவினாக்களுக்கும் விடை கூற வல்ல அனுமன் தான் யார் என்பதை (5878 – 5885) எட்டுப் பாடல்களில் விடை கூறுகிறான்
கடவுள் என்ற தமிழ்ச் சொல்லேகூடத் தம்முள் முரண்பாட்டைக் கொண்டதாகும்.
“கட” என்ற பகுதி வாக்கு. மனோலயம் கடந்தது என்பதைக் குறிக்கும்.
“உள்” என்ற விகுதி இவை அனைத்தின் உள்ளேயும் ஊடுருவி நிற்கும் என்பதைக் குறிக்கும்.
எட்டுப் பாடல்களில் சொல்லிய பாடல்கள் உபநிடத வாக்கியங்கள்போல் மிகச் சுருக்கமாக அமைந்துள்ளன.
இதை விரிவாகப் பாடவே இரணியன் வதைப் படலத்தைத் தானே புதிதாகச் சேர்த்துக் கொண்டான்-
இங்கு அனுமன், இராவணன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல்.
அங்கு இரணியன், பிரகலாதன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல்.

இப் பாடல்கள் இரண்டு வகையில் மெய்ப் பொருளை உணர்த்துகின்றன.
உபநிடதம் நேதி என்று சொல்வது போல,
‘இவனில்லை, இவனில்லை’ என்று எதிர்மறை முகத்தாலும், ‘இவன் தான்’ என்று உடன்பாட்டு முகத்தாலும்
நிறுவ முயல்கிறான் கம்பன். மூலப்பொருளின் இயல்பை எதிர்மறை முகத்தால் கூறப் போகும் அனுமன் கீழ்வருமாறு கூறுகிறான்:

தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்; திக்கின்
காவலர் அல்லன்; ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்;— (5881)
அனுமன், “சொல்லிய அனைவரும் அல்லன் அப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்” (5878) என்று குறிப்பிடுகிறான்.
உடன்பாட்டு முகமாக அமைந்திருத்தல் காண்டற்குரியன.

அனையவன் யார் ? என,அறிதியாதியேல்,
முனைவரும், அமரரும்,மூவர் தேவரும்,
எனையவர் எனையவர் யாவர், யாவையும்,
நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன் (5879)

காரணம் கேட்டி ஆயின், கடை இலா மறையின் கண்ணும்
ஆரணம் காட்ட மாட்டா,அறிவினுக்கு அறிவும், அன்னோன்;
போர் அணங்கு இடங்கர்கவ்வ, பொது நின்று “முதலே” என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான் (5883)
‘இறப்ப உயர்ந்ததாகிய இப் பொருள் சாதாரண விலங்காகிய யானை ஒன்று தன் காலை முதலை
கவ்விக் கொண்ட பொழுது ‘ஆதிமூலமே’ என்று அழைக்கவும் ஓடோடி வந்தது’என்று கூறி முடிக்கிறான்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கணக்கும் நீத்த காரணன் – கை வில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் (5883)

அறம் தலை நிறுத்தி,வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து,உலகம் பூணச் செந் நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உக நூறி,தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப்
பிறந்தனன் தன் பொன்- பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் (5885)

அஞ்சலை அரக்க ! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே
‘அஞ்சனமேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கி, துஞ்சினன்(5888)

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல் தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான் (6028)

இராமன் திருவடிகளைத் தொழ வில்லை என்று பாடலின் இரண்டாவது அடி குறிக்கிறது. இராமன் எதிரே நின்றும்
அவன் திருவடிகளை ஒருவன் தொழ வில்லை என்றால் அது தவறன்றோ என்று நினைக்கத் தோன்றும்.
அந்த நினைப்புத் தேவை யில்லை
புருஷகார பூதை’ என்று போற்றிச்சொல்லப்படும் தாயின் திருவடிகளை அனுமன் வணங்கினான்.எனவே,
இராமன் திருவடிகளை வணங்காததால் பிழை ஒன்றும் இல்லை என்ற விளக்கத்தைத் தருகிறான் கவிஞன்.

மூல நூலாகிய வான்மீகத்தில் சீதையை இராவணன் எடுத்துச் சென்ற முறை வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது.
அது தமிழ் மரபுக்கு ஒத்து வராது என்பதால் பர்ணசாலையோடு எடுத்துச் சென்றான் என்று கம்பன் மாற்றி விட்டான்
இராகவன், அனுமன் வாய் திறந்து பேசாமல் இருக்கும்பொழுது (1) வண்டு உறை ஓதியும் (சீதை) நன்றாக உள்ளாள்.
(2) இவன் அவளை உறுதியாகப்பார்த்துவிட்டான். (3) அவள் கற்பும் நன்று என்றமூன்று செய்திகளைக்
குறிப்பில் குறிப்பு உணரும் இராகவன் புரிந்து கொண்டான்.

அமைதி அடைந்து அசைபோடு்ம் மனநிலையிலுள்ள இராமனுக்கு 6031 முதல் 6051 வரை உள்ள இருபது பாடல்களில் அங்கு நிகழ்ந்தவற்றை
விரிவாகக் கூறுகிறான்

“சோலை அங்கு அதனி்ல் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் (6037),
“மண்ணொடும் கொண்டு போனான் – வான் உயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்” (6036),
தீண்டிலன் என்னும் செய்கை…. வாய்மையால் உணர்தி மன்னோ” (6039).
அனுமன் பிராட்டியின் கூற்றாக வைத்து இராமன் சற்றும் தாமதியாமல் போருக்கு எழ வேண்டுமென்ற கருத்தைப்
புரிந்து கொள்ளுமாறு அவன் கூறும் இருபது பாடல்களில் 20-ஆவது பாடலில் கூறுகின்றான், அனுமன்.
“தி்ங்கள் ஒன்றுஇருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த பின்னை,
மங்குவென் உயிரோடு”என்று, உன் மலரடி சென்னி வைத்தாள்–(6051)

சிறையிருந்தாள் ஏற்றம் கூறியது சுந்தர காண்டம் என்பர். அந்த ஏற்றத்தைப் பிறர் அறியச் செய்தவன் யார்?
அனுமன் இல்லையானால், சிறை இருந்தாள் ஏற்றத்தைப் பரம் பொருளைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாது.
எனவே, அனுமன் பெருமையைக் கூற வந்த கவிஞன்,
செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் –(4966) என்று கூறுவது வெற்றுரை யன்று.
சுந்தர காண்டத்தை முடித்த பிறகு கம்பன் பாடலைச் சற்று மாற்றிச் செவிக்குத் தேன் எனச் சீதையின் புகழைத் திருத்தும்
கவிக்கு நாயகன் என்று சொல்லலாம் போல் இருக்கிறது. சிறை யிருந்தாள் ஏற்றத்தைக் கூறுவதா?
அவ் ஏற்றத்தை நாம் அறியுமாறு செய்த அனுமனைப் புகழ்வதா? தெரியவில்லை. ஆனால் ஒன்று கூறலாம் போல் தோன்றுகிறது.
பரம் பொருளின் துணையாகிய பிராட்டி சிறையிருந்ததிலோ, இராவணன் கொட்டத்தை அடக்கித் தன்னைப்
பன்முறை வீழ்ந்து வணங்குமாறு செய்ததோ வியப்பிற்குரிய தன்று.காரணம்,
அவள் பரம்பொருளின் ஒரு கூறு. தன் பெருமை தான் அறியாப் பரம் பொருளின், பிராட்டியின் பெருமையை எடுத்துக் கூற
ஒரு தொண்டன் வேண்டும்.கல்வி, கேள்வி, ஞானம், எடுத்துச் சொல்லும் ஆற்றல் (சொல்வன்மை) – இவற்றை முற்றிலுமாகப் பெற்ற
ஒருவனே, இராகவன், பிராட்டி இருவர் புகழினையும் திருத்த முடியும்.
திருத்துதல் என்ற சொல்லுக்குப் பக்குவமாகத் தயாரித்து வைப்பது என்பது பொருளாகும்.
“சமையலுக்குக் காய்கறிகளைத் திருத்தியாய் விட்டதா?” என்று இன்றும் வழங்கும் சொற்றொடர் இப்பொருளை விளக்கும்-

கவிஞன் தரும் அடைமொழி வைரம் பதித்த பொன் போல் அப்பாத்திரத்தை விளக்கப் பயன்படுகிறது.
கல்லாத கலையும்வேதக் கடலுமே இல்லை (3768)
வன் திறல்மாருதி (3928)
வன் துணை வயிரத் திண் தோள் மாருதி (4328)
கூற்றும் உட்கவாழ்வா(ன்) (4806)
அரி உருவான ஆண்தகை (5871)
நூற் பெருங்கடல் நுனித்துணர் கேள்வியான் (5040)
செறி பெருங்கேள்வியான் (6447)
நேர் இலாஅறிவன் (6447)
நவை படா ஞானமே,கோட் படாப் பதமே (குரக்கு உரு) (3783)
தருமத்தின் தனிமை தீர்ப்பான் (3181)
அறத்துக்கு ஆங்கொரு துணை யென நின்ற அனுமன் (5803)
செவ்வழி உள்ளத்தான் (3764)
கோது இல்சிந்தை அனுமன் (4294)
அழுங்கா மனத்து அண்ணல் (4791)
நீதி வல்லோன்(4478)
பழி இல்லான்(4923)
மெய்ம்மை தொடர்ந்தோன் (5422)
தொண்டு’என்ற ஒரு சொல்லின் முழு வடிவு ஆக அனுமன் படைக்கப்படுகிறான். தொண்டனிடத்து அகப்பட்டுக்கொள்ளும்
பரம் பொருள் கூட அவனை விட்டு நீங்காதவனாகிறான்.
உலக இலக்கியங்களில் தொண்டு என்ற ஒரு பண்புக்கு இத்தகைய ஒரு மா பெரும் வடிவம் கொடுத்த
கவிஞர்கள் கம்பன் தவிர யாரும் இலர் என்பது கண் கூடு.

——–

கம்பனுடைய இராமகாதைப் பாடல்கள் மிகைப் பாடல்களை நீக்கிப் பார்த்தால்
மொத்தம் உள்ளது, சென்னைக் கம்பன் கழகம் பதிப்பின்படி 10368 ஆகும்.
இதில் முதல் ஐந்து காண்டங்களின் பாடல் தொகை 6058 ஆகும்.
யுத்த காண்டம் மட்டும் 4310 ஆகும் என்றாலும், ஆரண்ய காண்டத்தில் வரும் கரன்வதை 192 பாடல்களும்,
சுந்தர காண்டத்தில் வரும் கிங்கரர்வதை முதல் பாசப் படலம் முடிய உள்ள பாடல்கள் 316 ஆகும்.
இவற்றையும் யுத்த காண்ட எண்ணிக்கையோடு சேர்த்தால், போர் பற்றிக் கூறும் பாடல்கள் மொத்தம்
4310+192+316=4818 பாடல்கள் ஆகும்.

யுத்த காண்டத்தில் கடல் காண் படலம் முதல், விடை கொடுத்த படலம் ஈறாக,39 படலங்கள் உள்ளன.
முடி சூட்டு படலம், விடை கொடுத்த படலம் போக எஞ்சிய 37ம்
போரும், போர்த் தொடர்புடைய செய்திகளும் கொண்டவை ஆகும்-

அங்கதனைத் தூது அனுப்ப வேண்டும் என்று இராமன் சொன்னபொழுது வலுவான காரணங்கள் பலவற்றைக் காட்டி,
அச்செயல் கூடாது என இலக்குவன் மறுக்கிறான். சிறந்தது போரே என்றான் இலக்குவன்;
சேவகன் முறுவல் செய்து விடை கூறுகிறான்:
“அயர்திதிலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத்துறை; அறனும் அஃதே’ என்று இவை சமையச் சொன்னான்” -(6981)-

வடக்கு வாயிலின் வழியே நின்ற இலக்குவன் நாணொலி செய்தான்.
‘ஒரு மனிதன் இப்படி நாண் ஒலி செய்ய முடியுமா?’ என்று வியக்கிறான் இராவணன்.
வீரன் தம்பி கூற்றின் வெம்புருவம் அன்னசிலை நெடுங்குரலும் கேளா,
ஏற்றினன் மகுடம், இவன் ‘என்னே இவன் ! ஒரு மனிசன்’ என்னா–(7159)
இலக்குவன் நாணொலி கேட்டுத் தன் மகுடத்தையே ஒரு முறை தூக்கி வைத்துக் கொண்டான் போலும்.
இது இலக்குவனுக்குச் செய்த வீர வணக்கம் போலும்.
இந்திரசித்தனைக் கொல்வது மிக முக்கியமானது என்றாலும், அதற்காக நான்முகன் படையை ஏவி உலகுக்கு
ஊறு விளைவிக்க இலக்குவன் விரும்பவில்லை என்பதை இந்திர சித்தனே ஒப்புக் கொள்கிறான்.
இதுவே அறப்போர் எனப்படும். இத்துணை நுணுக்கங்களுடன் போரைப் பற்றி 9ம் நூற்றாண்டிலேயே பாடிய
கவிஞன் தீர்க்கதரிசி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

திவ்வியப் பிரபந்தம், உபநிடதங்கள் என்பவற்றில் துளையமாடியவன் கம்பன்,
பிரபந்தங்கள் வளர்த்த பக்தி நெறிக்கு இடம் தராமல், இறைவன், உயிர்கள்,உலகம் என்ற மூன்றையும் வேறுபடுத்திக்
காணாமல், பிரம்மம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் மித்தை என்று கூறும் அத்வைதம் தமிழர்களை ஓரளவு
கவரலாயிற்று. அந்த உபநிடதங்களை வைத்துக்கொண்டே, பக்தி இயக்கத்திற்கு வழிகாண முற்பட்டான் கம்பநாடன்.
‘இது சரியா?’ என்ற வினா எழலாம். முக்கியமான பத்து உபநிடதங்களை வைத்துக் கொண்டு தான் பிரம்மம் ஒன்றே
உண்மை என்று பேசுகிறார் சங்கரர்.
அதே உபநிடதங்களை வைத்துக் கொண்டு தான் முப் பொருள் பற்றிப் பேசுகிறார் இராமானுஜர்.
எனவே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட கொள்கைகளை நிறுவ அதே உபநிடதங்களைப் பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
இந்த நுணுக்கத்தைத்தான் கம்பன் பயன்படுத்துகிறான்.

தான் சொல்லும் இக் கருத்துக்கள், உபநிடதங்களில் காணப்படுபவையே என்பதை,
“அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப் புறத்து உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ (இர.வதை 62)
என்ற அடிகள் மூலம் கவிஞனே பேசுகிறான்.

இரணியன் வதைப் படலத்தில் உள்ள 74,75,76, ஆம் பாடல்கள் சாந்தோக்கியம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சாரமாக –
ஏறத்தாழ அதே உவமைகளை எடுத்துப் பேசுவனவாக அமைந்துள்ளன.
“காலமும் கருவியும்” என்று தொடங்கும் பாடல் “ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்” என்று முடிகிறது
இந்த அடி சாந்தோக்கிய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தின் பன்னிரண்டாவது கண்டத்தில் உள்ள 1,2,3 பாடல்களின் பிழிவாகும்.

முண்டக உபநிடதத்தின் மூன்றாவது முண்டகத்தின்,இரண்டாவது கண்டத்தில் உள்ள எட்டாவது பாடலில் வரும்
கடல், ஆறு நீர் என்பவற்றை எடுத்துக்கொண்டு ஒரு சிறிது மாற்றிக் கம்பன், இப்படலத்தின் 77 வது பாடலில்
“வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான்” என்று பாடுகிறான்.
76வது பாடலில் உள்ள “தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்” என்ற கருத்து முண்டக உபநிடதத்திலும்,
கீதையிலும் சில மாறுபாடுகளுடன் பேசப்படுகிறது.

நாராயணன், எங்கும் யாவற்றிலும் நிறைந்து உள்ள விராட் ஸ்வரூபத்தின் ஒரு பகுதியே ஆகும்.
அதுவே முழுப்பொருள் என்று நினைத்து விடாதே. அவன் இல்லை என்று பேசும் நீயும்,உன்னை அவ்வாறு
பேசச் செய்யும் உன்னுள் இருப்பவனும் அந்த நாராயணனின் ஒரு பகுதியே ஆகும் என்று சொல்லவந்த பிரகலாதன்,
‘நீ சொன்ன சொல்லிலும் உளன்’ என்று கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.
இல்லை என்ற சொல்லிலும், இன்மைப் பொருள் தரும் சொல்லிலும் அவனே உள்ளான் என்ற கருத்து ஆழ்ந்து
சிந்திக்கத் தக்கது. “உளன் எனில் உளன் அவன்” (திவ்வியப்பிரபந்தம் – 2683) என்று தொடங்கும்
நம்மாழ்வார் பாடலின் 2வது அடி ‘இலன் எனின் இலன் அவன்’ எனும் இதே கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

இரணியனுக்கு ஈடு சொல்ல முடியாத ஆணவம் தலை தூக்கி நின்றது என்பதைக் கம்பன் எடுத்துக் காட்டுகிறான்.
இத்தகைய ஓர் ஆணவம் அவனிடை வளர்வதற்கு அவனுடைய கல்வியும் ஒரு காரணமாகும்.
வேதங்களை நன்கு கற்றதனால் இந்த ஆணவம் தலைக்கேறியது. அதன் பயனாக, ‘அனைத்தும் அவன்’
என்ற நினைவு போக, ‘அனைத்தும் நான்’ என்ற அகங்காரம் வலுவடைந்தது.
அவன் கற்ற அதே வேதங்களைக் கற்ற பிரகலாதனுக்கு,’அனைத்தும் அவனே’ என்ற உறுதிப்பாடு வலுப் பெற்றது.
அறிவின் அடித்தளத்தில் பக்தி இருந்தால் ‘அனைத்தும் அவன்’ என்ற எண்ணம் தோன்றுகிறது. பிரகலாதன் நிலை இதுவாகும்.
எனவே, அத்வைதமும், உபநிடதங்களும் பக்தி இயக்கத்தை அழுத்திவிட்டு மேலே வர முயன்ற 9ம் நூற்றாண்டில்,
தமிழர்கள் கண்ட பக்தி இயக்கத்திற்குத் தலைமை இடம் தருவதற்காகவே இரணியன் வதைப் படலத்தைக் கவிஞன்
பொருத்தினான் என்பதனை அறியலாம்.
வான்மீகம் உட்பட எந்த இராமாயணத்திலும் காணப்படாத இப் பகுதியைக் கவிஞன் புகுத்துவதற்கு இதுவே
காரணமாக இருந்தது போலும்.
இவ்வாறு கொள்ளாமல்,தேரழுந்தூரில் உள்ள திருமால் கோவிலில் காணப் பெறும் ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமியே
கம்பன் இதனைப் பாடக் காரணமாயிற்று என்று கூறுவோரும் உளர்.
திவ்வியப் பிரபந்தத்தில் முக் குளித்த கம்பனுக்கு, ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமியே அவதாரம், பிரகலாதன் கதை என்பவை மிக
நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

கரு நிறத்தோர் பால் வெளித்து வைகுதல் அரிது’ என, அவர்
உருமேவி, ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.(4970)
என்று பாடுவதால், வீடணனைப் பொறுத்தவரை, இலங்கையில் வாழ்ந்தாலும், இராவணன் தம்பியாக இருந்தாலும் அவன் வாழ்க்கை
முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது என்பதைக் குறிக்கிறான்.
வெண்ணிறமுடைய தருமம் தன் உண்மையான வடிவுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதால் கரு நிறம் பூண்டு வாழ்ந்தது என்று பேசுவதன்
மூலம் வீடணனுடைய உண்மைச் சொரூபத்தைக் கவிஞன் நமக்குக் காட்டுகிறான்.
நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும்
தந்தன கண்டிலேன், தரும தானமும்
வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து
அந்தணர் மனை எனப் பொலிந்ததாம் அரோ (6461)
அந்தணர் இல்லம் எனப் பொலிகின்ற ஒரு வீட்டில், ஒளிந்து வாழ்கின்ற தருமமாக வீடணன் இருக்கின்றான் என்பதனை அறிய முடிகின்றது.

இலங்கை வாழ்க்கையோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்கின்ற வீடணன் காட்டில் உறைகின்ற தவசிகளைப் போல வாழ்ந்து வருகிறான்.
இங்ஙனம் வாழ்கின்ற ஒருவன் கொழு கொம்பு கிடைக்காமல் காற்றில் அலைப்புண்டு தள்ளாடும் கொடி போன்றவன் ஆவான்.
அக் கொடிக்குப் பக்கத்தில் ஒரு கொழு கொம்பு கிடைக்கும் பொழுது ‘அது எத்தகைய மரம், அதைப் பற்றிப் படருவது
நலமோ’ என்று கொடி சிந்திப்பதில்லை.
அதே போல ஒளிந்து வாழ்கின்ற இந்தத் தருமம் சந்தர்ப்பம் வந்தபொழுது இருந்த இடத்தை விட்டுப் பெயர்ந்து விடுகிறது.
அதுவும் அவனாகப் பெயர வில்லை.
“விழிஎதிர் நிற்றியேல் விளிதி” (6372) என்று இராவணன் கூறிய பிறகே வீடணன் இலங்கை விட்டுப் புறப்பட்டான்.
புறப்பட்டு வானிடை நின்று, மறுபடியும் அண்ணனுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை செய்துவிட்டு,
‘என் பிழை பொறுத்தி’ (6376) என்று கூறிவிட்டுப் பெயர்கிறான்.

தீயனே ஆயினும் இராவணன் பால் அன்பு கொண்ட வீடணன் அந்த இராவணன்’
இந்திரப் பெரும்பதம் இழக்கின்றான்’ (6143) என்றும்,
‘புத்திரர்,குருக்கள், பொருஇல் கேண்மையர், மித்திரர்,
அடைந்துளோர், மெலியர், வன்மையோர் இத்தனை பேரையும் (6375) அழிக்கத் துணிந்தான் என்றும்
நினைந்து எல்லையற்ற வருத்தம் அடைகிறான்

விளைவினை அறியும் மேன்மை வீடணன், என்றும் வீயா
அளவு அறு பெருமைச்செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி’ என்றான்–(6506)–
திருவடி தீட்சை செய்யப் பெற்ற வீடணன் புதுப் பிறவி எடுத்து விட்டான்

கும்பகர்ணன் தொடக்கத்திலேயே “நான்முகன் மரபில் வந்தவனாகிய நீ
தீயினை விரும்பி மடியில் கட்டிக்கொண்டாய். இதன் விளைவு என்னவாகும் என்று சிந்திக்கவில்லை (6118)
மற்றொருவன் வீட்டில் வாழும் தவக் கோலம் கொண்ட பெண் மணியைக் கண்டு,ஒரு சிறிதும் இரக்கம் காட்டாமல்
நீதி நூல்கள் கூறுபவற்றை மறந்து சிறையில் அடைத்தாயோ, எந்த வினாடி இச் செயலைச் செய்தாயோ, அந்த வினாடியே
அரக்கர் புகழ் மாயத் தொடங்கி விட்டது.

மனிதர்,விலங்கு பெண் எவரேனும் ஒருவர் கூட அவனைக் கொல்ல முடியும் என்பதை விளக்கமாக எடுத்துக் காட்டி,
இப்பொழுது அந்த மூன்றுமே ஒன்றாகச் சேர்ந்துள்ளது என்பதையும் கூறுகிறான்.
மனிதரின் பிரதிநிதியாக இராமனும், விலங்கின் பிரதிநிதியாக அனுமனும், பெண்ணின் பிரதிநிதியாகச் சீதையும்
இப்பொழுது ஒன்றாகச் சேர்ந்து அவனை எதிர்ப்பதால் இறுதி நிச்சயம் என்று எடுத்துக் காட்டுகிறான்.
உயிரச்சம் கொண்டவனுக்கு மேலும் அச்சத்தை விளைவிக்கவே இம் முறையைக் கையாளுகின்றான் வீடணன்

சாரமற்ற தன் வாழ்க்கைக்கு மரணமே சிறந்த பரிசு, அதுவும் இராமன் போன்ற ஒருவன் கையால்
இறப்பது புகழுடைய செயலே என்கிறான் கும்பன்.
போர்க்களத்தில் வீடணனைச் சந்தித்த கும்பன், “புலையுறு மரணமெய்தல் எனக்கு அது புகழதேயால்” எனக் கூறிவிடுகிறான்.
அண்ணன் பொருட்டாகத் தன் அழிவை இரு கரம் நீட்டி வரவேற்கத் துணிந்து விட்டான்

இந்திரசித்தன், இலக்குவன் ஆற்றலை மனம் திறந்து பாராட்டுகிறான்.
அந்நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்;அன்றேல்,
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
மன்னர் நம்பதியின் வந்து, வரிசிலை பிடித்த கல்வி
இந்நரன்தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்?’ என்றான்.–8121-

போர்க்களத்தில் உண்மையில் இராமன் யார் என்பதை இராவணன் அறிய முடிகிறது.
“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்: திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகன்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான். –9837-

“யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; நின்றே வென்றி முடிப்பென்; புகழ் பெற்றேன்;
நேரே செல்லும் கொல்லும் எனில் தான் நிமிர்வென்றி,
வேரே நிற்கும்; மீள்கிலேன்’ என்னா, விடலுற்றான்.-9838–ஆணவத்தின் சொரூபமாகக் காட்சி அளிக்கின்றான்.

———-

திருமுடிசூட்டு படலத்தில் முடிசூட்டலைக் கூறும் கவிஞன் பாடியுள்ள அரியணை அனுமன் தாங்க என்ற பாடல்
அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்பாடலின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
முடிசூட்டப்பட்டவன் பெயரைக் குறிக்காமலேயே ‘வசிட்டனே புனைந்தான், மௌலி’ என்று முடிக்கிறான் கவிஞன்.
முடிசூட்டப்பட்டவனைச் சுற்றி நிற்பவர்கள் வரிசையாகக் கூறப் பெறுகிறார்கள்.
அரியணை அனுமன் தாங்கினான்; பரதன் வெண்குடை கவித்தான்; இருவரும் (இலக்குவ, சத்ருக்கனர்) கவரி
வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான்; இவர்களுக்கு இப்பணி வழங்கப்பட்டதன் நுணுக்கத்தைக் காண்டல் வேண்டும்.
அகங்கார, மமகாரங்கள் அறவே செற்று இராம பக்தி சாம்ராஜ்ஜியத்தில் மூழ்கித் தங்களையே இழந்தவர்கள் அனுமன், பரதன் என்ற
இருவருமாவர். அதிலும் பக்தியோடு தொண்டும் கலந்த முழுவடிவம் அனுமன். அவன் அரியணைத் தாங்கினான் என்றால்
இராமன் ஆட்சி என்பது தொண்டு என்ற அடித்தளத்தின் மேல் அமைந்துள்ளது என்று அறிய முடியும்.
தன்னலமற்ற பக்தியில் திளைத்தாலும் ஆயிரம் இராமர்கட்குச் சமமானவன் என்று மற்று ஓர் அன்பே வடிவான குகனால்
சான்றிதழ் தரப்பெற்றவன் பரதன் என்றாலும் தலைவன் பணி தலை நின்றவனாய் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி புரிவது
தன் கடமை என்று அறிந்தவுடன் விருப்பு, வெறுப்பற்ற சமநிலையில் நின்று ஆட்சி புரிந்தவன்
ஆதலால், அன்போடு கூடிய கடமை உணர்ச்சிக்கு பரதன் எடுத்துக்காட்டாவான். எனவே அவன் குடை கவிக்கிறான்
என்றால், இராமராஜ்ஜியம் தொண்டு என்ற அஸ்திவாரத்தில் மேலும் விருப்பு வெறுப்பற்ற கடமை என்ற குடையின் கீழும்
அமைந்திருத்தலைக் கவிஞன் உருவகமாகப் பேசுகிறான்.
இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக அன்போடு கலந்த தொண்டின் வடிவமாகிய இலக்குவன் ஒருபுறம் கவரி வீசுகிறான்.
அன்பின் வடிவான சத்ருக்கனன் மற்றொரு பக்கம் கவரி வீசுகிறான்.
எனவே இராமன் என்ற அறத்தின் மூர்த்தி மேலும்,கீழும்,பக்கங்களிலும் அன்பு, கடமை,தொண்டு என்பவற்றால்
சூழப்பட்டுள்ள ஓர் உருவகத்தை இந்த ஒரு பாடலில் கவிஞன் தந்து விடுகிறான்

———

இராகவன் அனுமனை நோக்கி,
“மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை:பைம்பூண்
போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!’என்றான்.(10351)
இப்பாடலில் உள்ள புதுமையையும், நுணுக்கத்தையும் சிந்திக்க வேண்டும்.
தழுவினவர் ஆளுமை மிக்கவர் என்றும் தழுவப்பட்டவர் ஒருபடி குறைந்தவர் என்றும் கருதுவது இயல்பு.
இராமன் அனுமனைத் தழுவி யிருந்தால் மிகச் சிறப்புடைய செயல் மரபுக்கு ஒத்ததாகும்.
ஆனால், “அனுமனே! நீ என்னைப் பொருந்துறப்புல்லுக!” என்று பேசுகிறான் கோசல நாடுடை வள்ளல்.
தொண்டின் பரிணாமமாக விளங்கும் அனுமனைப் பார்த்து, நீ என்னைப் புல்லுக என்று இராகவன் கூறும்பொழுது,
தன்னைவிடத் தன் நாமத்தையே ஜெபிக்கும் அகங்கார, மமகாரங்களற்ற தொண்டனாகிய அனுமனை ஒருபடி உயர்த்தி விடுகிறான்.
இராகவன் பரம்பொருள் ஆதலின், தொண்டனை, பக்தனை என்னைப் புல்லுக என்று சொல்லும் பொழுது
ஒரு தொண்டனின் பிடியில் பரம்பொருள் அகப்பட்டுக் கொள்ளுகிறான். குறியீட்டு முறையில் சொல்வதானால்,
பக்தனின் இருதயத்துக்குள்,பரம்பொருள் புகுந்துவிட்டான் என்பதையே இது குறிக்கிறது.

—————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: