ஸ்ரீ கம்ப ராமாயணம்-கடவுள் வாழ்த்துக்கள் தொகுப்பு –

ஸ்ரீ பால காண்டம் கடவுள் வாழ்த்துக்கள்–

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.–1-

உலகம் யாவையும்-எல்லா உலகங்களையும்;
தாம் உள ஆக்கலும்-தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும்;
நிலை பெறுத்தலும் -நிலைத்திருக்குமாறு காப்பதையும்;
நீக்கலும்-அழித்தலையும்;
நீங்கலா.அலகு இலா – என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய
விளையாட்டு உரையார் -விளையாட்டாக உடையவராகிய;
அவர் தலைவர் -அவரே தலைவ ராவார்;
அன்னவர்க்கே நாங்கள் சரண் -அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.

மங்கலச் சொல்லொடு தொடங்கவேண்டும் என்பது மரபு;
அம்மரபின்படி ‘உலகம்’ என்ற மங்கலச் சொல் கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில் முதலாக எழுகிறது.
உலகம் என்பது நிலையியற் பொருள். இயங்கியற் பொருள் (சர. அரசம்) எனவும்
உயர்திணை. அஃறிணை எனவும். உயிர்ப்பொருள். உயிரில் பொருள் எனவும் பலவாறு
குறிக்கப்படுகின்ற யாவற்றையும் உள்ளடக்கியது.
தாம் உள ஆக்கல்:தன்னைப் படைப்பர். பிறர் இல்லாப் பரம்பொருள் தன் சங்கற்பத்தால் படைத்தல்.
‘உள ஆக்கல்’; இல்லாததைப் படைத்தல் அன்று;
நுண்பொருளைப் பருப் பொருளாக்குதல் என்று கூறுவர். ‘இல்லது தோன்றாது’ என்பது தத்துவம்.

படைத்தல். காத்தல். அழித்தல் ஆகிய மூவகை அருந்தொழில் பரமனுக்கு மிக மிக எளிது
என்பதை ‘விளையாட்டு’ என்ற சொல்லாட்சி குறிக்கிறது.

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய்
இன்பம்இல் வெம்நாடு ஆக்கி. இனியநல் வான் சுவர்க்கங்களுமாய்.
மன்பல உயிர்களும் ஆகிப் பலபல மாய் மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.(நம்மாழ்வார் 3 -10 -7)

——–

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றனுள்
முற் குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ.–2-

சிற்குணத்தர் – மெய்யறிவினராகிய கடவுளின்;
தெரிவு அரு நல் நிலை-தெரிந்து கொள்ளுதற்கு அரிய நல்ல தன்மை;
எற்கு உணர்த்த அரிது – என்னால் எடுத்துரைத்து உணர்த்தல் அரியதாகும்.
(ஆயினும்);
எண்ணிய மூன்றனுள் – சான்றோர்களால் எண்ணப்பட்ட சத்துவம் இராஜசம் தாமசம் என்ற மூன்று குணங்களில்;
முற்குணத்தவரே முதலோர் -முதலில் சொல்லப்பட்ட சத்துவ குணம் கொண்டவரே மேலோராவார்;
அவர் நற்குணக் கடல் – அம்மேலோரின் நற்குணமாகிய கடலிலே;
ஆடுதல் நன்று – மூழ்கித் திளைத்தல் நல்லது.

பிரகலாதன் அனுமன் வீடணன் போன்ற சத்துவ குணமுடையாரின் பெருமைகள்
இக் காப்பியத்துள் விரித்துரைக்கப்படுகின்றன –
அதாவது அன்னாரின் நற்குணக் கடலில் கவிச்சக்கரவர்த்தி ஆடித் திளைக்கிறார்.
அவ் வழியில் பரம்பொருளின் இயல்பினை அவதாரமாக எழுந்தருளிய பகவானின் இயல்பினை உணர்த்த முயல்கிறார்.
பாகவதர்கள் வழியாக பகவானை உணர்ந்து உணர்த்தும் முயற்சி இது.
எனவே இச் செய்யுளும் கடவுள் வணக்கப் பகுதியில் இடம் பெறுகிறது.

——–

ஆதி. அந்தம். அரிஎன. யாவையும்
ஓதினார். அலகு இல்லன. உள்ளன.
வேதம் என்பன – மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் – பற்று இலார்.–3-

அரியன யாவையும் – அருமைப்பாடு உடையவை என்று சொல்லப்படும் எல்லாத் துறைகளையும்;
ஆதி அந்தம் ஓதினார் -முதலும் முடிவுமாக முற்றக் கற்றவர்களும்;
அலகு இல்லன (அலகு)உள்ளன -(வகைகளால்) அளவு இல்லாதவையும் (சாகைகளால்) அளவு உள்ளனவுமாகிய;
வேதம் என்பன – வேதங்கள் என்று சொல்லப்படுவனவும்;
கோடிப் பழமறைகள்’ என்பதால் வேதங்கள் அலகு இல்லன எனவும்.
நான்கு’ எனப் பகுக்கப்பட்டதால் அலகு உள்ளன என்றும் சொற் கூட்டிப் பொருள்
வேதம் ஓதத் தொடங்கும் போதும் ஓதி முடிக்கும் போதும் ‘அரி’ என ஓதுதல் சுட்டி.
‘ஆதி அந்தம் அரியென’ எனப் பாடங்கொண்டு உரை வகுத்தார் உண்டு.
பற்று இலார் – அகப்பற்றும் புறப்பற்றும் இல்லாதவர்களும்;
மெய்ந் நெறி நன்மையன் – ஞான நெறிக் கனியாகிய இறைவனது;
பாதம் அல்லது பற்றிலர் – ஆதாரமாகப் பிறிது ஒன்றையும் பற்ற மாட்டார்கள்.

———–

முதற் பாடலால் பகவானை நேரிடையாகவும்
இரண்டாம் பாடலால் பாகவதர் துணையால் பகவானை மறைமுகமாகவும்
மூன்றாம் பாடலால் சரணாகதியைச் சுட்டிய வகையில் பகவானை முடிநிலையாகவும்
கவிச் சக்கரவர்த்தி விளக்குகிறார் என இயைபு காண்டலும் ஒன்று.

——–

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென.
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று. இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! –4-

ஒரு பூசை-ஒரு பூனை;
ஓசை பெற்று உயர் பாற்கடல்புக்கு- ஒலி மிகுந்ததும் உயர்ந்ததுமான பாற்கடலை அடைந்து;
முற்றவும் நக்குபு புக்கென – (அந்தப் பாற்கடல்) முழுவதையும் நக்கப் புகுந்தாற் போல;
இக் காசு இல் கொற்றத்து இராமன் கதை – குற்றமில்லாத வெற்றி கொண்ட இராமபிரானது இக்கதையை;
ஆசை பற்றி அறையலுற்றேன்- ஆசை கொண்டமையால் சொல்லத் தொடங்கினேன்.

——–

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்–என்னை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.–5-

வைத வைவின் – (பெரியோர்கள்) சாபமிட்டு வைது சொல்லும் வசவுச் சொல் உடனே பலிப்பது போல;
மராமரம் ஏழ் தொளை எய்த-ஏழு மாமரங்களும் எய்தவுடனேயே தொளைபடும்படி;
எய்வதற்கு எய்திய மாக்கதை-அம்பு எய்தவனுக்கு அமைந்த பெருமை மிகு கதையை;
செய்த செய்தவன்-ஆதிகாவியமாக இயற்றிய தவ முனிவனாகிய வான்மீகியின்;
சொல் நின்ற தேயத்தே-வாக்கு நிலை பெற்றிருக்கின்ற இந்த நாட்டில்;
நொய்தின் நொய்ய சொல்-எளிமையினும் எளிமையான சொற்களால்;
நூற்கலுற்றேன் – இந் நூலை இயற்றத் தொடங்கினேன்;
எனை-என்னே வியப்பு!

——

வையம் என்னை இகழவும். மாசு எனக்கு
எய்தவும். இது இயம்புவது யாது எனின்.-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.

வையம் என்னை இகழவும் – உலகத்துப் பெரியோர் என்னை ஏளனம் செய்யும்படியாகவும்;
மாசு எனக்கு எய்தவும்-அந்த ஏளனம் காரணமாக எனக்குக் குற்றம் நேரிடும்படியாகவும்;
இது இயம்புவது யாது எனின்-இந்தக் காப்பியத்தைப் பாடுதற்குக் காரணம் யாது என்று கேட்டால்;
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்- பொய்ம்மை இல்லாத கேள்வியினால் உண்டாகிய
புலமையாளராகிய வான்மீகி முதலானோர் சொல்லிய;
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே-தெய்வத் தன்மையால் பெருமை கொண்ட கவிகளின்
பெருமையை உலகிற்கு உணர்த்தலே யாகும்.

————-

ஸ்ரீ அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்து

வான் நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல்,உள்ளும் புறத்தும் உளன் என்ப –
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக் கண் தீர்த்த கழல் வேந்தன்.

கூனும் – கூனியாகிய மந்தையும்;
சிறிய கோ தாயும் – இளைய பட்டத்து அரசியும் தாயுமாகிய கைகேயியும்;
கொடுமை இழைப்ப- தனக்குப் பொல்லாங்கு செய்ய ;
கோல் துறந்து – அரசாட்சியை நீத்து;
கானும் கடலும் கடந்து – காட்டையும் கடலையும் தாண்டிச் சென்று ;
இமையோர் இடுக் கண் தீர்த்த – (இராவணனைக் கொன்று) தேவர்களின் துன்பத்தை கிழங்கெடுத்த ;
கழல் வேந்தன் – வீரக் கழலை அணிந்த இராமபிரானே ;
வரம்பு இகந்த – எல்லைகடந்து பரந்த ;
மா பூதத்தின் வைப்பு எங்கும் – பெரிய பூதங்கள் ஐந்தினால் ஆகிய உலகத்தில் உள்ள பொருள்கள் எல்லாவற்றிலும் ;
ஊனும் உயிரும் உணர்வும் போல்- உடலும் உயிரும் போலவும் உடலும் உணர்வும் போலவும் ;
உள்ளும் புறத்தும் உளன் என்ப – அகத்தேயும் புறத்தேயும் நிறைந்திருக்கின்றான் என்று ஞானிகள் கூறுவர்.

இப்பாட்டு இராமாயணச் சுருக்காய் இருப்பது
மூலப் பகுதியிலிருந்தும் தோன்றிய உலகத்தில் உள்ள பொருள்களின் உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருக்கும்
பரம்பொருளே இராமனாக அவதரித்தான் என்பது கருத்து.
வானிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும்,நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியது என்னும்
மறை முடிபினையொட்டி‘வானின்றிழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு’–என்றார்.
உணர்வு -ஆன்மாவின் பண்பாய் வெளிப்பட்டு நிற்கும் அறிவு.
இறைவன் பொருள்களுக்கு உள்ளே உடம்புக்குள் உயிர் இருப்பது போலவும், வெளியே உயிரில் உணர்வு வெளிப்பட்டு
இருப்பது போலவும் இருக்கிறான் என்பார்-‘ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப’என்றார்.
பரம்பொருள் உயிர்களைத் தனக்கு உடம்பாகக் கொண்டு தான் உள்ளேயும், உயிர்களுக்கு உடம்பாக அமைந்து தான்
புறத்தேயும் உள்ளான்-என்பது சமய நூற் கொள்கையாதலின் இவ்வாறு கூறினார் என்க.

———

ஸ்ரீ ஆரணிய காண்டம் கடவுள் வாழ்த்து-

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும் தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன்,முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ

பேதியாது – தன் உயர் நிலையில் தான் வேறு படாமல்;
நிமிர் பேத உருவம் – தன்னிடம் தோன்றி வளரும் பல வகை வடிவங்களிலிருந்தும்;
பிறழ்கிலா – தான் வேறு படாதும்;
ஓதி ஓதி உணரும் தொறும் – பலமுறை கற்று ஆராயும் பொழுதும்,
உணர்ச்சி உதவும் – மெய் யுணர்வை அருளும்,
வேதம் – நான்கு வேதங்களும்,
வேதியர் – அவற்றை ஓதும் அந்தணர்களும்,
விரிஞ்சன் முதலோர் – பிரமன் முதலிய தேவர்களும்,
தெரிகிலா – ஆராய்ந்தறிய முடியாத,
ஆதி தேவர் – முதல் கடவுள்;
அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ – அவரே எம் சிற்றறிவுக்கு அறியும் பொருள்.

பேத உருவம் என்பது-தேவர், விலங்கு, ஊர்வன முதலிய சராசர வடிவங்கள்.
உருவம் பிறழ்கிலாமை என்பது உடல் மாறினும் அவ்வுடலுள் உயிர் போல் உயிருள் உயிராய் இருப்பது.
உயிர்தனைப் படைப்பவனும் வேதியருட் சிறந்தவனுமான பிரமனை முதலாகக் கூறினார்.
மூலப் பரம்பொருள் நுட்பமாகவும் அதிநுட்பமாகவும் ஆதி தேவர் எனச் சுட்டப் பட்டது.

———–

ஸ்ரீ கிட்கிந்தா காண்டம் கடவுள் வாழ்த்து-

மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,
சான்றவர் உணர்வினுக்கு உணர்வும், ஆயினான்.

மூன்று உரு என – மூன்று உருவங்கள் உடைமை போல;
மும்மைக் குணம் ஆம் -மூன்று குணங்களை உடைய;
முதல் -முழு முதற் கடவுள்;
தோன்று உரு எவையும் – தோன்றிய தத்துவங்கள் அனைத்துமாய்;
அம் முதலைச் சொல்லுதற்கு – அந்த முதற்கடவுளை (பெயரும் உருவமும் கொடுத்து)ச் சொல்லும்படி;
ஏன்று உரு அமைந்தவும் – பொருந்தி, வடிவமைந்த உலகங்களாய்;
இடையில் நின்றவும் – அவ் வுலகிடைப் புகுந்து நின்ற உயிர்களாய் (ஆனவன்);
சான்றவர் – சான்றோர் (ஞானிகளின்);
உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – உணரப்படும் பொருளும் ஆனவன்.

‘தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை’ என்பர் நம்மாழ்வார். (திருவாய்மொழி 8-8-4).

யாவையும் எவருமாய் விளங்கும் இறைவன் இயல்பை ”அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ” எனப் பரிபாடலும் (3-68)

‘உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துள்ளான் (திருவாய்மொழி 1-1-7) நம்மாழ்வார்

‘முப்பரம் பொருளுக்கு முதல்வன்’ (314) என்றும்,
‘மூவருந்திருந்திடத் திருத்தும் அத்திறலோன்’ (1349) என்றும் இராமனைப் போற்றும் கம்பர்.
இராமனே மும்மூர்த்தியும் ஒன்றாய் அமைந்த பரம்பொருள் என்றும் உணர்த்துவார்.

‘சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை, ஆலமும்
மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்” (5884) என்பது அனுமன் கூற்றாகும்.

”என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற” (திருவாய்மொழி-8.8.4)

‘சித்து என அருமறைச் சிரத்தின் தேறிய,தத்துவம் அவன், அது தம்மைத் தாம் உணர்வித்தகர் அறிகுவர்” (6249)
என்னும் பிரகலாதன் கூற்று

———-

ஸ்ரீ சுந்தர காண்டம் கடவுள் வாழ்த்து-

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் ?அவர், என்பர்- கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே, மறைகளுக்கு இறுதி யாவார்!

மறைகளுக்கு இறுதியாவார்- வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற ஞானிகள்;
எவரைக் கண்டால் – எவரைத் தரிசித்த உடனே;
விலங்கிய பூதம் ஐந்தும் – ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும்;
வேறுபாடு உற்ற வீக்கம் – வேறு வேறு விதமாக அமைந்த பன்மைத் தோற்றம்;
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை – மாலையில் தோற்றமளித்த பொய்;
அரவு என – பாம்பு போல;
கலங்குவது – இல்லாது போதல் (நிகழுமோ):
அவர் அன்றே – அவர் அல்லவா;
கைவில் ஏந்தி – கரத்திலே கோதண்டத்தைத் தாங்கி;
இலங்கையில் பொருதார் – இலங்கை மாநகரத்தில் போர் செய்தவர்;
என்பர் – என்று கூறுவர்.

‘எல்லாப்பொருளும் இராமபிரான்’ என்று தமிழ் வேதம் பேசும்.
‘ஊனின் மேய ஆவி நீ, உறக்கமோ டுணர்ச்சி நீ. ஆனின் மேய ஐந்தும் நீ, அவற்றுள்
நின்ற தூய்மை நீ, யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே’ என்பது திருச்சந்த விருத்தம். (பிரபந்தம் – 845)
பண்பும் பண்பியும், இவற்றுக்கு மூல காரணமாகிய பூதங்களும் இவற்றுக்கு மூலப் பொருளாகிய இறைவனும்
இராமபிரான் என்பது அப் பாசுரத்தின் உட்கருத்து.

இராமாயணத்துக்குள் சுந்தரத்தைப் பற்றிப் பேசுவதால் அக்காண்டம் சுந்தர காண்டம் எனப் பெயர் பெற்றது.
அதனால் அது உயர்ந்தது என்பர்.
பெருமான் மன்னுயிர் வாழ உலகில் அவதரித்தலைக் கூறும் பால காண்டத்தைவிட,
இளவலுக்கு அரசு தந்து தியாக மூர்த்தியாய்க் காடேகும் அண்ணலைப் பற்றிக் கூறும் அயோத்தியா காண்டத்தை விட,
தேவர் சிறை மீட்பதற்காகப் பிராட்டி சிறை புகுதலைப் பற்றிக் கூறும் ஆரண்ய காண்டத்தைவிட,
அறத்தைக் காக்க வேண்டும் என்னும் ஒரே குறிக்கோளுடன் கீழே இறங்கிய இராகவன் வாலியைக் கொன்று,
காசில் கொற்றத்தைக் காட்டிய கிட்கிந்தா காண்டத்தைவிட,
பெருமான் மணிமுடி சூடியதைக் கூறும் யுத்த காண்டத்தைவிட
சுந்தரகாண்டம் எவ்வகையில் உயர்ந்தது என்னும் ஐயம் தோன்றுவது இயற்கையே. இவ்
ஐயத்தைப் போக்க பலர் முயன்று பலவாறு கூறுகின்றனர்.

சிறையிலிருக்கும்பிராட்டியின்பால் இராமதூதன் பெருமானின் திருமேனி அழகைப் பலபடியாக விவரிக்கின்றான்;
அதனாலும், பெருமானைப் பிரிந்த பிராட்டி மென் மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்து புடமிட்ட
பொன்போல விளங்குவதைக் கூறுவதாலும்,
சுந்தரனாகிய அனுமன் புகழ் ஒன்றே விவரிக்கப்படுவதாலும் இக்காண்டம் சுந்தர காண்டம் எனும் பெயர்
பெற்றது என்று பலர் கூறுகின்றனர்.

இக் காரணங்கள் அனைத்தும் அன்பின் அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் எழுந்தனவே.
ஆயினும், இவற்றினும் மேலான உண்மை ஒன்று உள்ளது.
இராவணன் வரபலத்தாலும், படை பலத்தாலும், தேசத்தார்க்கு இடுக்கண் தந்தான்.
தேவியைச் சிறையில் வைத்தான். மன்னுயிர் புடைத்துத் தின்றான்.
இதனால் அறத்தின்பால் ஈடுபாடு கொண்ட சமுதாயம், இராவணன் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
இராவணன் வீழ்ச்சியடைய மாட்டானா ? அவன் படை அழியாதா ? அவன் நகர் தொலையாதா ? அவன் செல்வங்கள் சிதையாவா ?
செருக்குக் கொண்ட அரக்கர்கள் ஒழியார்களா ? என்று மானுட சமுதாயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த எதிர்பார்ப்பு முழுமையையும் நிறைவேற்றி வைக்கின்றான் இராம தூதனாகிய அனுமன்.
அனுமன் சோலையை அழிக்கின்றான். சேனையைத் துவைக்கின்றான். இராவணன் இதயத்தில் அச்சத்தை விதைக்கின்றான்.
பாவபண்டாரமான இலங்கையை எரிக்கின்றான்.
தருமத்தின் வெற்றியை எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து காய்ந்து கிடந்த புண்ணிய இதயங்கள்,
இராவணன் வீழ்ச்சிக்குக் கால்கோள் விழாவை வழங்கிய இக் காண்டத்தைச் சுந்தரம் என்று பெயரிட்டு
மலரிட்டுப் பூசித்துப் பேரின்பம் பெற்றன.
அறச் சிந்தனையாளர்களின் எண்ணங்களே வால்மீகியின் இதயத்தில் சுந்தர காண்டமாக மலர்ந்தது.

இக்காண்டத்தின் நாயகன் அனுமனே. இராவணன் முதலான அரக்கர்களும் இந்திரசித்தன் முதலான வீரர்களும்
வீடணன் போன்ற சான்றோர்களும் உப பாத்திரங்களே.
பிராட்டியும் கூட அனுமனின் பேருருவுக்கு முன்னே அனுமனின் தியாகத்துக்கு முன்னே, அனுமனின் தொண்டுக்கு
முன்னே உப பாத்திரமாக ஒளி வீசுகிறாள்.
இக் காண்டத்திற்கு ஒரே எழுவாய் உண்டு. அவன் அனுமனே.
மற்றவையெல்லாம் செயப்படுபொருளே.
அனுமன், கடலைக்கடந்து, இலங்கையைத் தேடி, பிராட்டியைக் கண்டு, கணையாழியைத் தந்து, பொழிலைச் சிதைத்து,
அரக்கரை வதைத்து, இராவணன் செருக்கைக் குலைத்து, மீண்டு வந்து வேதமுதல்வன் பாதத்தை
வணங்கி, உயர்வற உயர்நலம் பெறுகிறான். இதுவே சுந்தர காண்டம்.

——————–

ஸ்ரீ யுத்த காண்டம் கடவுள் வாழ்த்து-

‘ஒன்றே’ என்னின், ஒன்றே ஆம்;’பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
‘அன்றே’ என்னின், அன்றே ஆம்;’ஆமே’ என்னின், ஆமே ஆம்;
‘இன்றே’ என்னின், இன்றே ஆம்;’உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை!நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

ஒன்றே என்னின் ஒன்றேயாம் – ஒன்று என்று கூறினால் ஒன்றேயாகும்;
பல என்று உரைக்கின் பலவே ஆம் – பல என்று கூறின் பலவாகும்;
அன்றே என்னின் அன்றே ஆம் – இத் தன்மை உடையதல்ல என்று கூறினால் அவ்வாறே ஆகும் ;
ஆமே என்னின் ஆமே யாம் – இன்ன தன்மை உடையது என்று கூறினால் அந்தத் தன்மை உடையதாயிருக்கும்;
இன்றே என்னின் இன்றே யாம் – இல்லை என்று சொன்னால் இல்லாததாகும்;
உளது என்று உரைக்கில் உளதேயாம் – உள்ளது என்று கூறினால் உள்ளதே ஆகும்;
நன்றே நம்பி குடி வாழ்க்கை – இப்படிப்பட்ட இறைவனது நிலை பெரிதாயுள்ளது;
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா- அற்ப அறிவுடைய சிற்றறிவினராகிய நாம் இவ்வுலகில்
இறை நிலையை அறிந்து உய்வு பெறும் வழி யாது?

‘உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும்
நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடைய பரமன் ஒருவனே
ஆதலின் ‘ஒன்றே என்னின் ஒன்றே யாம்’ என்றார். -அந்த ஒரு பரம் பொருளே,

‘திட விசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவை
மிசைப்படர் பொருள் முழுவதுமாய் அவை அவை தோறும்,
உடல்மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துள்ளதாதலின், “பல
என்று உரைக்கில் பலவே ஆம்” என்றார்.

‘ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன்” என்று திருவாய் மொழி (2110)

“உளனெனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள்” என்ற திருவாய் மொழி

உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வரிது என்ற திருவாய் மொழி-

————–

வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்த்திடுக; நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க;
தேன் வழங்கு அமுத மாலைத் தசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடை விடாது ஒளிர்க, எங்கும்.

—————

எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்,
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி.

———–

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி!

———

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே.

—————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: