ஸ்ரீ ரெங்க மஹிமை -ஸ்ரீ முரளீ பட்டர்-

ஸ்ரீ ரங்க விமானத்தின் மேல் மண்மூடி காடாய் போன-ஒரு கிளி ஒன்று விடாமல்

“காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக: !!”

ஸ்ரீ வைகுந்தத்தில் ஓடுகின்ற விரஜை நதிதான் காவேரீ! ஸ்ரீ ரங்கவிமானமே வைகுந்தமாம்!
ஸ்ரீ வாஸுதேவனே ஸ்ரீ அரங்கன்! ப்ரணவமே விமாநம்! விமானத்தின் நான்கு கலசங்கள் நான்கு வேதங்கள்!
உள்ளே கண்வளரும் ஸ்ரீ அரங்கனே ப்ரணவத்தினால் விவரிக்கப்படும் பரம்பொருள்

என்று சொன்னதையே எப்போதும் சொல்லிக் கொண்டிருந்ததாம். அப்போது அரசாண்ட சோழ மன்னன் கவனத்திற்கு இது வந்து,
அதே சமயம் ஸ்ரீ அரங்கன் தான் இங்கு பள்ளி கொண்டிருப்பதை அவனுக்கு உணர்த்த, ஸ்ரீரங்கம் மீண்டும் மகோன்னதமானது.
கிளியினால் இது உணர்த்தப் பெற்றமையினால் இன்றும் அரங்கன் திருமுற்றத்தில் ஒரு மண்டபத்திற்கு “கிளி மண்டபம்” என்றே பெயர்.

—————

திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.

1. திருப் பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர் போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.

2. கமலப் பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய
திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.

3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்த லோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக் கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள்.
இது ஸ்ரீரெங்கநாதனுடையது!

———

‘பஸூர் மநுஷ்யா பக்ஷீவாயேச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா:
தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்”

”நாற்கால் விலங்காயினும் மனிதனாயினும் பறவையாயினும் இவை ஒரு வைஷ்ணவனைச் சார்ந்தனவாயின்
அந்த வைஷ்ணவ சம்பந்தத்தாலே அந்த விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகின்றன” என்கிறது பாரத்வாஜ ஸ்மிருதி.

”யம்யம் ஸ்ப்ருஸதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சக்ஷூஷா
ஸ்தாவராண்யபி முச்யதே கிம்புநா பாந்தவாஜநா:”

”பாகவதன் தனது கரங்களால் எதை எதைத் தொடுகின்றானோ, எதை எதைக் கண்களால் பார்க்கின்றானோ,
அவைகள் நிலையியற்பொருள்கள் ஆயினும் மோக்ஷத்தையடைகின்றன. அப்படியிருக்க,
அவனுக்கு உற்றாரைப்பற்றி கூறவும் வேண்டுமோ?” என்கிறது பராசரஸ்மிருதி.

————

தினசரி சாயங்காலம் க்ஷீரான்னத்தின் போது அரங்கன் 108 சரமாலைகள் சாற்றிக்கொள்வான்.
அதற்கும் மேல் வெள்ளை மாலை அதற்கும் மேல் வர்ணமாலை. இதற்கு ‘தர்பார் ஸேவை’ என்று பெயர்.
எதனால் இந்த பெயர்? தர்பார் என்றால் பல முக்யமான பேர்கள் கூடும் சபை.
இந்த க்ஷீரான்னத்தின் போது 108 திவ்யதேச பெருமாள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் வந்து அரங்கனுடன் ஐக்யமாகி விடுவார்களாம்.
இந்த நேரத்தில் அரங்கனை ஸேவி்ப்பது 108 பெருமாளையும் ஸேவித்த பலன்!.

————–

ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெரியாழ்வாருடனும், சகல பரிஜனங்களுடன் வந்துறங்கிய இடம் இன்றும்
மேல அடையவளைஞ்சான் தெருவில் ‘வெளி ஆண்டாள்’ ஸந்நிதியாகயுள்ளது.
இங்கு ஆண்டாள் மூலவர் விக்ரஹம் கம்பீரமாக அமர்ந்த கோலம்.
இவள் வரப்பிரஸாதி. அரங்கனும் சரி ஆண்டாளும் சரி! இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பு அலாதியானது.
ஸ்ரீரெங்கநாயகித் தாயாருடனும் உறையூர் கமலவல்லியிடனும் அவரவர் சேர்த்தி தினத்தில் வருடத்திற்கொரு முறைதான்
மாலை மாற்றிக் கொள்கிறார்.. ஆனால் ஆண்டாளுடன் அவள் ஸந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக் கொள்கின்றார்

—————

தும்மினாலும், இருமினாலும், கேவினாலும், வழுக்கினாலும், தடுக்கினாலும், கொட்டாவி வந்தாலும்
‘ரங்கம், ரங்கம்” என்றே கூறுவர். அந்தளவுக்கு இவன் எல்லாருக்கும் ‘அந்தரங்க’னாகின்றான்.

” ரங்கம் ரங்கம் இதி ப்ரூயாத் க்ஷுதப்ரஸ்கலநாதிஷு
விஷ்ணு லோகம் அவாப்நோதி ஸத்ய: பாபக்ஷயாந்தர:”

தும்மல் வந்தாலும், இருமல் வந்தாலும், தடுக்கினாலும், அழுதாலும், கேவினாலும், கொட்டாவி வந்தாலும்
“ரங்கம், ரங்கம்” என்றே கூறவேண்டும். இவ்விதம் கூறினால், பாவங்கள் அழிவதுடன், அதனால் விஷ்ணுலோகம் கிட்டுகிறது.

——————

ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு இடத்தில் அரங்கன் மிக மிக ஸர்ந்நித்யத்துடன் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
அர்ச்சுன மண்டபம் கூட அர்ச்சுனால் ஸ்தாபிதம் செய்யப்பட்டதாகக் கூறுவர்.

ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 10: அத்யாயம் 79: ச்லோகம் 14)

காமகோஷ்ணீம் புரீம் காஞ்சீம் காவேரீம் ச ஸரித்வராம்
ஸ்ரீரங்காக்யம் மஹாபுண்யம் யத்ர ஸந்நிஹிகோ ஹரி:

(பலராமன்) காமகோடி எனப்படும் புண்ணிய நகரான காஞ்சீபுரத்தையும், நதிகளில் சிறந்த காவேரியையும்,
எங்கு ஸ்ரீஹரி மிகவும் ஸாந்நித்யமாக உள்ளானோ அந்த மஹாபுண்ய க்ஷேத்ரமான ஸ்ரீரங்கத்தையும் அடைந்தார்.

————-

குருரேவ பரம ப்ரஹ்ம குருரேவ பரம் தனம்
குருரேவ பர:காமோ குருரேவ பராயணம்
குருரேவ பராவித்யா குருரேவ பரா கதி:
யஸ்மாத் தது தேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு:

குருவே மேலான ப்ரஹ்மம். குருவே மேலான தனம். குருவே மேலான காமம். குருவே மேலான ப்ராப்யம்.
குருவே மேலான கல்வி. குருவே மேலான ப்ராவகம். அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

ஆச்சார்யஸ்வ ஹரி சாக்ஷாத் சர ரூபி ந ஸம்ஸய:
ஆச்சார்யனே நேரே நடமாடும் பரமபுருஷன். இதில் ஐயமில்லை.

—————-

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்பதம்
யத் கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்
(செல்வம் நிறைந்ததாய், மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கம் ஒப்பற்ற க்ஷேத்ரமாகும்.
அதையடைந்த மனிதன் நரகத்தையும் தாழ்ந்த கதிகளையும் அடைவதில்லை)

———–

ஸ்ரீரங்கத்திலிருந்து இளையாழ்வாரை வைணவத் தலைமைப் பொறுப்பேற்று நடத்துமளவுக்கு தகுதியுள்ளவராக்கி
அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரவேண்டும் என்கிற ஒரு ஆவலோடு பெரியநம்பியும் அவரது மனைவியும் கச்சி நோக்கி புறப்படுகின்றனர்.

இவர்கள் இருவரும் மதுராந்தகத்தில் ராமர் ஸந்நிதியில் தரிசனத்திற்காக சென்றபோது சந்திக்கின்றனர். பேரானந்தப்படுகின்றனர்.
இளையாழ்வார் பெரியநம்பிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து தன்னை அவரது சீடராக்கி ப
ஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கும்படி பிரார்த்திக்கின்றார். பெரியநம்பிகள் ஆளவந்தாரையே குருவாக தியானிக்கும்படியும்,
தாம் ஒரு கருவியே என்றும், ஆளவந்தாரை தியானித்தபடியே மதுராந்தகத்திலேயே இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடக்கின்றது.
இளையாழ்வாருக்கு அப்போது வயது 27. தாரண ஆண்டு ஆவணி வளர்பிறை பஞ்சமி.
இந்நாளை கொண்;டாடும் வகையில் இன்றும் த்வயம் விளைந்த பூமியான மதுராந்தகத்தில் ‘பஞ்சசம்ஸ்கார உற்சவம்’ நடந்து கொண்டிருக்கின்றது.

————

இருள்தருமாஞாலத்திலே கலியும் கெடும் கண்டுகொள்மின் என்கின்றபடியே கலியிருள் நீங்கி பேரொளி பெருகும் வண்ணம்,
ஆதி சேஷனின் அம்சமாக ஒரு தெய்வீகக் குழந்தை கலியுகம் 4119 பிங்கள சித்திரை 12ம் நாள் வளர்பிறை பஞ்சமி
வியாழக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தன்று (04.04.1017) ஆஸூரி கேசவப்பெருமாளுக்கு தேசமெல்லாம் உகந்திடவே
ஒரு திருமகன் அவதரித்தார். பெரிய திருமலை நம்பிகள் குழந்தையை உச்சி முகர்ந்து குளிர கடாக்ஷிக்கின்றார்.
காந்தியுடன் கூடிய அந்த தேஜோமயத்தினைப் பார்க்கின்றார்.

‘உலகெல்லாம் துதிக்கும் கருணைக்கடலோ! ஓங்கும் ஆனந்த மாக்கடலோ !
அலகிலா இன்ப அமுதமாக் கடலோ? ஆசறு கமையருள் கடலோ?
மலமிலா நிலைசேர் போதவான் கடலோ? என்றென்று மதலையைக் கண்டார்
பலபல பகரப் பாலனாய் கிடந்தான் பங்கயக் கண்ணனுக்கு இளையான்” -வடிவழகிய நம்பிதாஸர் ஸ்ரீராமானுஜ வைபவம் – 272-

பெரியதிருமலைநம்பியின் இளைய சகோதரி பெரியபிராட்டியாருக்கும் கமலநயனபட்டருக்கும்
குரோதன வருஷம் தைமாஸம் பெளர்ணமி திங்கட்கிழமை புனர்வசு நட்சத்திரத்தில் ஒரு குழந்தை
மலர்ந்த தாமரை போன்ற அழகுடன், தேஜஸூடன் பிறந்தான். அக்குழந்தைக்கு ‘கோவிந்தன்’ என்று திருநாமமிட்டு மகிழ்ந்தார்.

————-

வடுகநம்பி, நம் பாவங்கள் தொலைய, மோட்சமாகிய பேரின்பத்தினைப் பெற ஒரு எளிய உபாயத்தினைக் கூறுகின்றார்.

ஆசிலாசாரிய பதந்தான் தனியே ஒன்றாம் ஆங்கதுதான்
தேகப் பொலிந்த எதிராசர்க்கன்றி எவர்க்கும் சேராதால்
நேசத்துடனத் திறமறிந்து நின்று கடந்து கிடந்திருந்து
பேசப்படுநும் உரையெல்லாம் இராமாநுசர்பேர் பிதற்றுதரேல் -ஸ்ரீஇராமானுஜ வைபவம்: வடிவழகிய தாஸர்-

குற்றமற்ற ஆச்சார்யனது திருவடிதான் ஒப்பற்ற ஒன்றாகும். அங்கே அதுவும்தான்
ஒளி பொருந்திய எதிராசர்க்கு அல்லாமல் வேறு எவருக்கும் பொருந்ததாகும். பக்தியுடன் அத்தன்மையையறிந்து
நிற்கும் போதும், நடக்கும் போதும், படுக்கும் போதும், உட்காரும் போதும், பேசப்படுகின்ற உங்கள் வார்த்தையெல்லாம்
இராமானுசர் பெயரையே சொல்லவேண்டும்!.

————–

அர்ச்சைத் திருமேனி ‘தானுகந்த திருமேனி’ என்ற புகழ்பெற்றது. கி.பி.1136 நள ஆண்டு தைமாதம்
புஷ்ய நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.
(இந்த பிரதிஷ்டைச் செய்யப்பட்டவுடனேயே உடையவருக்கு திருமேனியில் தளர்ச்சி ஏற்பட்டது என்று சிலர் கூறுவர்).

————-

”பரத்வம் நாமே! பேதமே தர்ஸநம்! உபாயமும் ப்ரபத்தியே! அந்திம ஸ்ம்ருதியும் வேண்டா!
சரீராவஸாநத்திலே மோக்ஷம்! பெரியநம்பி திருவடிகளிலே ஆஸ்ரயிப்பது!”

1. நாமே பரம்பொருள்
2. ஜீவாத்மா வேறு. பரமாத்மா வேறு.
3. என்னை சரணடைவதே முக்திக்கு வழி
4. என்னை சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்க தேவையில்லை.
5. என் அடியார்களுக்கு சரீர முடிவில் மோக்ஷம் கொடுப்பேன்
6. மஹா பூரணராம் பெரியநம்பிகளைக குருவாகக் கொள்.–என்று கூறினார்.

”செப்புகின்ற பரத்துவமும் யாமேயென்ன செப்புதி வேறு
ஒப்பிலாதாய்! தரிசனமும் பேதம் என்றே உரைத்திடுக!
தப்பிலாத உபாயமதும் பிரபத்தியென்றே சாற்றிடுக!
அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா! அந்திமத்தில்
இந்த சரீர அவதானம் தன்னிலிசையும் மோக்கமது!
அந்தமில்லாக் குணத்தினனுக்கு ஆசார்யனும் பெரியநம்பி!
சிந்தையுள்ளே இவையெல்லாம் தெளிந்து நோக்கி இளையாழ்வான்
முந்த நினைத்தான் இவை இவையே மொழிந்து வருக போயென்றான்” -வடிவழகிய தாஸர்-ஸ்ரீராமானுஜ வைபவம்-

————

‘ஆராமஞ்சூழ் ரங்கர்தமை மலர்மாமகளையடியிறைஞ்சித்
தாரீர் சரணந்தனையென்னத் தந்தோமெனலு மெதிராசன்,
பாரோர் பரவும் பாகவதர் பிரிவால் பரிவில் படர்கூரச்,
சீரார் திருநாடடைந்திருந்த சீடனுடனே சேர்ந்தனனால்”–என்றபடியே

ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸூகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூலஸூக்ஷமரூபாம் விஸ்ருஜ்ய”
ஸ்தூலசரீரமாகவும் சூக்கும ஸரீரமாகவுமிருக்கும் ப்ரகிருதியை – பழைய வஸ்திரத்தினைக் கழிக்குமாபோலே சிரமமில்லாமல் விட்டு
என்றபடியே ஒருவித சிரமமும் படாமல் தமது திருமேனியிலிருந்து தம் உயிரினை மண்ணுலம் வருந்த, விண்ணுலகம் மகிழ, பிரிக்கின்றார்

தமது 120வது வயதில் (கி.பி. 1137) தாம் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் மாசி மாதம் வளர்பிறை தசமிதிதியில்,
திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகலில், பகவத் சாயுஜ்யம் அடைகிறார் உடையவர்.

—————

நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.
வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார்.
ஆதிசேஷனின் சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.

சுந்தர பாண்டியனால் வேயப்பட்ட தங்க விமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளை யடிக்கப் பட்டிருந்தன.
இந்த சமயத்தில் உத்தம நம்பி வம்சத்தரான கிருஷ்ணராய உத்தம நம்பி செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது.
மகத்தானது. இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று
ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
கம்பண்ண உடையாருடன் அவரது மனைவி கங்காதேவியும் உடன் வந்துள்ளாள்.
இவள் வடமொழியில் சிறந்த பாண்டித்யம் உடையவள். தாம் கண்ட நிலைமையனைத்தையும் ‘மதுரா விஜயம்’ என்று தொகுத்துள்ளாள்.
இதிலிருந்து அன்றைய ஸ்ரீரங்கத்தின் நிலைமையை நாம் தெளிவாக அறிய முடிகின்றது. அதில் அவள் குறிப்பிடுகின்றாள்.

கோயில் மண்டபங்களில் செடிகள் முளைத்து மரக்கதவுகளைக் கரையான் தின்கின்றன.
இனிமையான மிருதங்க ஒலி கேட்டவிடமெல்லாம் ஊளையிடும் நரிகள் உலா வருகின்றது.
அணைகளும் கரைகளும் உடைந்து ஊரே வெள்ளக்காடாகயுள்ளது.
அக்ரஹாரங்களில் உள்ள யாக குண்டங்களில் முகமதியர்களால் மாமிசம் சுட்டெரிக்கப்பட்டு அதனுடைய துர்கந்தம் வீசுகின்றது.
தென்னைஞ்சோலைகள் மறைந்து கழுமரங்கள் கட்டப்பட்டு அதில் மனிதர்களை கொன்று மனிதர்களின் மாமிசம்
அக்கழுமரங்களில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் காணப்படுகின்றது.
இவ்வாறு பலவற்றைக் குறிப்பிடுகின்றாள்.

கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து
திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு
ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.
சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள்
சீராக நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து
அன்போடு அழைத்து, அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் பிரம்மோற்சவம் ஒன்றை கொண்டாடுகின்றார்.
கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி
உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தான்யங்கள் குவிந்தன.
அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.
இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்

————

அரங்கன் 1371ம் ஆண்டு வைகாசி மாதம் 17ம் தேதி (ஜூன் மாதம்) ஏறத்தாழ 59-1/2 ஆண்டுகளுக்குப் பிறகு
திருவரங்கத் திருப்பதியினில் மீண்டும் கால் பதிக்கின்றார்.

அழகிய மணவாளன் கோயிலிலிருந்து வெளிச்சென்று ஏறத்தாழ 60 வருடங்களானபடியாலும், இந்த
காலக் கட்டத்தில் நம்பெருமாளோடு நெருக்கமாயிருந்த அனைவருமே பரமபதித்த படியாலும், அரங்கனது
அர்ச்சாத் திருமேனியை ஸேவித்து அறியாதவர்களே ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்.

அரங்கனின் ஈரவாடை தீர்த்தம் வண்ணானுக்கு அருளப்பட்டது.

பல வருடங்களாய் சுவைத்து, நடுவில் 60 வருடங்களாய் இத் தெய்வீகச் சுவை விடுபட்டு, ஏங்கியிருந்த
அவன் நாவு இந்த அமிர்தத்தை யுணர்ந்தது!
நாவின் உணர்வு நரம்புகள், உடலில் மின்சாரம் போன்று பாய்ந்தது!
உணர்வு பிழம்பானான் வண்ணான். ஆர்ப்பரித்தான்!

‘இவரே நம் பெருமாள்! இவரே நம்பெருமாள்” என்று கதறியழுதான்!.
கண்களில் கண்ணீர் பெருக்க மூர்ச்சையானான். தெளிந்தான்! மீண்டும் அழுதான்! மீண்டும் மயக்கமடைந்தான்!

கொடவரும் உணர்வுகள் கொந்தளிக்க, ‘ரங்கா! ரங்கா!’ என்று கதறியழுதார்.
அழகிய மணவாளன் வண்ணானால் ‘நம்பெருமாள்” ஆனான்!.

நம்பெருமாள் என்ற பெயர் – அந்த வண்ணான் வைத்தப் பெயர் தான், இன்றும், அவனுக்கும் நமக்கும் உகப்பாகயிருக்கின்றது!.
அவன் நம்மோடு கலந்தவன்! நம்மோடு நம்பக்கம் இருப்பவன்!. நம்மை உகப்பவன்!. நம்மை காப்பவன்!.
நம் நலம் விரும்புபவன்!. நம் வீட்டுப் பிள்ளை!. நம் குழந்தை!. நம் ஜீவன்!. நம்மை ஆள்பவன்!.

இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகுற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்! உன்னை – இனியறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ – நற்கிரிசை
நாரணன் நீ நன்கறிந்தேன் நான்.—நான்முகன் திருவந்தாதி-96-

அரங்கன், தனியொருவராக தம்மை ஆராதித்து பாதுகாத்த வ்ருத்தரான அந்த கொடவரை அருகில் அழைக்கின்றான்.
அவரை ‘திருத் தாழ்வாரை தாஸர்” என்று அருளப்பாடிட்டு உகக்கின்றான்.
வண்ணானுக்கு ‘ஈரங்கொல்லி” என்று அருளப்பாடிட்டு அழைத்து, மன்னன் மூலமாக பஹூமானங்கள் பல செய்து கௌரவிக்கின்றான்!
அரையருக்கு ‘இசையறியும் பெருமாள் கூட்டத்தார்” என்று அருளப்பாடிட்டு கௌரவிக்கின்றான்

ஸ்ரீரங்கத்திலிருந்து சுல்தான் தளபதியை கண்ணனூருக்கு அழைத்துச் சென்று, ஸ்ரீரங்கத்திற்கு மேலும் சேதம் வராமல்
தம் கற்பைக் கொடுத்துக் காப்பாற்றிய தாஸியினை அழைக்கின்றார்.
போர உகந்தருளி ”உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று திருவாய் மலர்கின்றார்.

தாஸி ஒரு வரம் கேட்கின்றாள். ‘தம்முடைய வர்க்கத்தார்களில் யாரேனும் திருநாடு அலங்கரிப்பாராகில் (இறப்பார் ஆகில்)
நம் கோவில் திருமடைப் பள்ளியிலிருந்து தாங்களை தகனம் செய்வதற்கு நெருப்பும், திருக்கொட்டாரத்திலிருந்து வாய்க்கரிசியும்,
அரங்கனது திருமாலையும், எந்த காலத்திலும் சாதிக்க வேண்டும்” என்று தனக்காக ஏதும் வேண்டாது,
தன்னலம் கருதாது தம் வர்க்கத்தார்களின் நலத்திற்காக அரங்கனிடத்து யாசித்தாள்.
அரங்கன் உளம் குளிர்ந்து ‘அப்படியே ஆகட்டும்” என்று ஆசீர்வதிக்கின்றான்.

(இந்த வரத்தால் 1953ம் ஆண்டு தாஸிகள் ஒழிப்புச் சட்டம் அமுல் படுத்திய நாள் வரை, திருவரங்கத்து தாஸிகள்
யாரும் பரமபதிப்பார்களாகில், இந்த மரியாதைகள் செவ்வனே நடைபெற்று வந்தது)

அரங்கன் அன்றிரவு சோழ மன்னனின் கனவில் தோன்றி, நடந்த வ்ருத்தாந்தங்களை சாதித்தருளினான்.

—————–

உன்னிகிருஷ்ணன் பணிக்கர் பிரஸன்னம் சொல்லும் போது, ”இந்த கோவிலிலும் நவக்கிரஹங்கள் இரண்டு இடத்தில் உள்ளன” என்றார்.
எங்களுக்குப் புரியவில்லை.
ஆர்யபடாள் வாசலில் நிலைப்படிக்குக் கீழேயும், நாழிகேட்டான் வாசல் நிலைப்படிக்குக் கீழேயும் 12 இராசிகள் பொறிக்கப்பட்டிருந்தன.
”இதைத்தான் அந்தந்த இராசிக்கு சொந்தமான கிரஹங்கள் சூக்குமாக இந்த சின்னங்கள் மூலமாய் குடி கொண்டுள்ளன” என்றார்.
எதற்காக…..? என்று வினவியபோது
‘அவைகள் அனைத்தும் தம் பாவங்களைத் தொலைத்துக் கொள்ள பரம ஸ்ரீவைணவர்களின் ஸ்ரீபாததுளிகள்
தம் தலை மேல் விழுவதற்காக வணங்கி காத்திருக்கின்றன’ என்றார்.
உண்மைதான். ஸ்ரீவைணவரின் பாதத்துளி எல்லாவற்றையும் ஸ்ரேஷ்டமானதுதான்!.

———

காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ:
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் -ஸ்ரீராமாயண பாராயணக்ரமம்-

திருக்காவேரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும். வேண்டிய காலங்களில்
இந்திரன் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றிபெற்று வாழட்டும். திருவரங்கச் செல்வம் வளரட்டும்!

————–

ஸவஸ்தி ஹஸ்திகிரி மஸ்தஸேகரஸ் ஸந்தநோது மயி ஸந்ததம் ஹரி: !
நிஸ்ஸமாப்யதிகமப்யதத்தயம் தேவமௌபநிஷதீ ஸரஸ்வதீ !!–வரதராஜஸ்தவம

உபநிஷத் வாக்கானது எந்த தேவனை ஒக்காரும் மிக்காரும் இல்லாதவனாக ஓதுகின்றதோ,
அத்திகிரியின் சிகரத்திற்கு ஆபரணமான அந்த ப்ரணதார்த்திஹர வரதன் அடியேனுக்கு எப்போதும் நன்மையை மிகுதியாக அருளுவானாக!.

நீலமேகநிபமஞ்ஜநபுஞ்ஜ ஸ்யாம குந்தலமநந்தஸயம் த்வாம் !
அப்ஜபாணிபதமம்புஜ நேத்ரம் நேத்ரஸாத்குரு கரீஸ ஸதாமே!!

அத்திகிரியப்பனே! கருமுகில் போன்றவனாய், மைவண்ண நறுங்குஞ்சிக்குழலையுடையவனாய்,
திருவனந்தாழ்வான் மீது சயனிப்பவனாய், தாமரைப் போன்ற திருக்கைகளையும், திருவடிகளையும் உடையவனாய்,
தாமரைப்போன்ற திருக்கண்களையுடையவனான உன்னை எப்போதும் என் கண்ணுக்கு இலக்காக்குவாயாக!.

————-

‘நான் பெற்ற பெருஞ்செல்வம் நாலூரான் பெறும் வரம் வேண்டும்
ஊன் பெற்றுக் கிடைத்த பலம் அடியேனுக்குறுதி நின்னைத்
தான் பெற்றேன் இனிப் பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே!
என்று அழகாய் வர்ணிக்கின்றார் ஸ்ரீராமானுஜ வைத்தில் ஸ்ரீவடிவழகிய நம்பி தாஸர்.

————-

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை!
தம் ஹ தேவமாத்ம புத்திப்ரகாசம்
முமுக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே !!
(எவன் ப்ரம்மனை முன் படைத்தானோ, எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ, அப்படிப்பட்ட தேவனும்,
தன் விஷயமான ஞானத்தினைப் பிரகாசிப்பிப்பவனுமான பரம புருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் சரணமடைகின்றேன்.)

தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹூ:
ஆகையால் ந்யாஸத்தை(சரணாகதியை) இந்த தபஸ்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்

—————

ஆனைமலைத் தொடரின் கிழக்கு அடிவாரத்திலுள்ள ஏகாந்தமான ஒருவிடத்தில் அரங்கன்,
ஸ்ரீரங்கத்திலுள்ள அகண்ட திருமண்டபங்களையெல்லாம் மறந்து, ஒரு சிறு குகையினுள் தங்குகின்றான்
பிள்ளைலோகாச்சாரியார் திருமலையாழ்வாரின் திருத்தாயாரை அழைத்து “நம்பெருமாளுக்கு வியர்க்கும் விசிறி கொண்டு விசிறி விடு” என்கிறார்.
திருமலையாழ்வாரின் தாயார் விசிறி கொண்டு அருகில் சென்ற போது, அரங்கனின் அருள்முகத்தில்
அரும்பரும்பாய் வியர்வைத்துளிகள். அதிர்ந்தாள் அவ்வம்மை.
”ஸ்வாமி! திவ்யமான திருமேனியும் புழுங்குமோ?” என்று வினவுகின்றார்.
பிள்ளைலோகாச்சாரியார், ஆழ்வார் திருமகளாம் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியை (12-6)
”வேர்த்து பசித்து வயிறசைந்து” எனும் பாசுரத்தினை மேற்கோள் காட்டி,
அம்மையே புழுங்கும் காண் – ஆண்டாளும் ஓதினாள் காண்” என்றருளுகின்றார்.
திருமலையாழ்வாரின் திருத்தாயார் சற்றே விசிறியவுடன் நம்பெருமாளின் வியர்வையும் அடங்கியது.
இதனைக் கண்ட அவ்வம்மையார் பரவசமடைந்து பலமணி நேரம் தன்னிலை மறந்தாள்.

———–

ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரம்படி, 32000படி, என்கின்றோமே, இந்த ‘படி’ என்றால் என்ன?

படி என்றால் அளவு. உயிர்மை எழுத்து உயிரெழுத்து ஆகிய இரண்டும் சேர்த்து 32 அட்சரம் கொண்டது ஒரு க்ரந்தம்.
ஒரு க்ரந்தம் என்பது தமிழில் ஒரு படி.
6000 க்ரந்தம் கொண்டது விஷ்ணு புராணம்.
குருபரம்பரை ஆறாயிரப்படியும், விஷ்ணுபுராணமும் ஏட்டில் சம அளவில் இருந்தமையால் ‘குருபரம்பரை ஆறாயிரப்படி ‘ என்றழைக்கப்பெற்றது.
இதே போன்று இராமாயணம் 24000 க்ரந்தம். இதுவும் பெரியவாச்சான் பிள்ளை 24000 படியும் சம அளவில்
இருந்ததால் பெரியவாச்சன் பிள்ளை 24000படி என்றழைக்கப்பெற்றது.
சுதப்பிரகாசிகை 36000 க்ரந்தம். இதுவும் ஸ்ரீபாஷ்யமும் ஒரே அளவில் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யம் ஈடு 36000படி என்றழைக்கப்பெற்றது.

—————

இனி ஸ்ரீரங்கத்தில் நாம் நிம்மதியாக வாழமுடியாது என்றெண்ணிய மீதமுள்ள வைணவக் குடும்பங்கள்
ஸ்ரீரங்கத்தினை விட்டு, தோழப்பர் என்ற ஒரு ஆச்சார்யனைத் தலைமையாகக் கொண்டு அருகிலுள்ள
கிராமங்களான பாச்சூர், கோவர்த்தனக்குடி (தற்போது கோவத்தக்குடி என்றழைக்கப்படுகின்றது),
திருவரங்கப்பட்டி, கோபுரப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கலாயினர்.
இவர்களால் பெரியபெருமாளையும், நம்பெருமாளையும் விட்டு பிரிந்து வாழ முடியவில்லை.
அருகிலுள்ள கண்ணனூர் எனும் சமயபுரத்தில் ஹொய்சாள சிற்ப கலைஞர்கள் நிறைய வாழ்ந்து வந்தனர்.
உலுக்கானின் படையெடுப்பு இவர்களையும் பாதித்தது. இவர்களும் தப்பிப்பிழைத்து இந்த கிராமங்களில் குடியேறினர்.

இவ்விரு குழுவினரும் சேர்ந்து ஒரு அழகான ரங்கநாதர் கோவிலைக் கோபுரப்பட்டியில் கி.பி 1323ம் ஆண்டு கட்டத்தொடங்கினர்.
கோபுரப்பட்டியும் ஒரு புறம் பெருவள வாய்க்கால், மறுபுறம் கம்பலாறு ஆகிய இரு நீரோட்டத்திற்கு நடுவே
ஸ்ரீரங்கத்தினை நினைவுப்படுத்துவது போலிருந்தது சற்றே இவர்களுக்கு ஆறுதலையளித்தது.
இருக்கின்ற குறைந்தபட்ச நிதிஆதாரங்களினால் இந்த கோவில் அஸ்திவாரமே அமைக்கப்படாமல் கட்டப்பட்டது.
(இது தற்சமயம் இக்கோவிலில் புனருத்தாரணம் செய்து வருவதால் தெரியவருகின்றது).
இக்கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு இக்கோவிலை ‘புதுக்கிடக்கை‘ என்று குறிப்பிடுகின்றது.
இதன்மூலம் பழைய கிடக்கை ஸ்ரீரங்கம் என்பதனை அறிவிக்கின்றனர். ஹொய்சாள சிற்பக் கலைஞரின்
அற்புத கைவண்ணத்தினால் சிறப்புறக் கட்டப்பெற்று வழிப்பட்டு வந்தனர்.
இங்குள்ள பெரியபெருமாளின் மூலவிக்ரஹம் ஹொய்சாளர்களின் சிற்பக்கலையின் உன்னதமாகும்.
இங்குள்ள அனைத்து வைணவர்களும் ஸ்ரீரங்கத்தில் இறந்த 12000 பேர்களுக்கும் திதி, தர்ப்பணம் முதலானவைகளை
பெருவளவாய்கால் கரையில் செய்துள்ளனர். ஆடி அமாவாசை வழிபாடு சிறப்புற நடந்திருக்கின்றது.
இதனை இந்த கோவிலின் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
கி.பி 1342ம் ஆண்டு ஒரு முறையும், கி.பி1498ல் இலங்கைஉலகன் என்று அறியப்பட்ட தோழப்பன் என்பவரால்
மறுமுறையும் திருப்பணி நடந்து குடமுழுக்கு நடைபெற்றதையும் விவரிக்கின்றது இக்கோவிலுள்ள கல்வெட்டுகள்.

———–

ஐந்து ஆயுதங்களும், ஓளபகாயணர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஞ்சாயனர் என்று
ஐந்து ரிஷிகளாக அவதரித்து ஐந்து ராத்ரிகளில் ரங்கநாதனை ஆராதிக்கும் முறையினை பகவானாலேயே
உபதேசிக்கப் பெற்று ‘பாஞ்சராத்ரம்” என்னும் ஆகம முறையினைத் தோற்றுவித்தனர்.

பின்னர் இந்த ஐந்து ஆயுதங்களும் ஆழ்வார்களாகவும் அவதரிக்கப் பெற்று பெருமாளின் புகழைப் போற்றிப் பரவினர்.

———-

ஜயதுயஸஸாதுங்கம்ரங்கம் ஜகத்த்ரயமங்களம்
ஜயதுஸூசிரம் தஸ்மிந்பூமா ரமாமணி பூஷணம்
வரதகுருணார்த்தம் தஸ்மை ஸூபாந்யபிவர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந்ராமானுஜோ ஜயதுக்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்.
அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீகௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாகவுடையனான எம்பெருமான்
பல்லாண்டாக விளங்கவேணும். அவ்வெம்பெருமானின் பொருட்டு வரதகுருவுடன் மங்களங்களை
மேலும் மேலும் உண்டாக்குபவரான ஸ்ரீராமானுஜர் அவதாரமான மணவாளமாமுனிகள் இப்புவியில் விளங்கவேணும்.

————

வரவரமுநி: பதிர்மே தத்பதயுகமேவ சரணமநுரூபம்
தஸ்யைவ சரணயுகளே பரிசரணம் ப்ராப்யமிதி நநுப்பராப்தம்

மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி.
அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக்கநுருபமான உபாயம்.
அவருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமே மேலான உபேயம்.
-எறும்பியப்பா.

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே!
இன்னுமொரு நூற்றாண்டிரும்!.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்.

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: