ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் –

ஸ்ரீ ஆழ்வார்
1-அடியார்
2-அடியார்
3-அடியார்
4-தம் அடியார்
5-தமக்கு அடியார்
6-அடியார்
7-தம் அடிகளே
என 7வது திருவடி சம்பந்தத்தை விசேஷித்து கொண்டாடியுள்ளார்.

இப்பொழுது ஸ்ரீ கண்ணபிரான் திருவடியான ஸ்ரீ சடகோபரிடம் இருந்து
1-ஸ்ரீ மதுரகவிகள்
2-ஸ்ரீ நாதமுனிகள்
3-ஸ்ரீ உய்யக்கொண்டார்
4-ஸ்ரீ மணக்கால் நம்பி
5-ஸ்ரீ ஆளவந்தார்
6-ஸ்ரீ பெரிய நம்பி
7-ஸ்ரீ உடையவர்
என ஸ்ரீ உடையவர் 7வது சம்பந்தத்தால் ஏற்றம் பெற்று
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனாப் போலே,

ஸ்ரீ இராமானுசன் தாளான
1-ஸ்ரீ எம்பார்
2-ஸ்ரீ பட்டர்
3-ஸ்ரீ நஞ்சீயர்
4-ஸ்ரீ நம்பிள்ளை
5-ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை/ பிள்ளை லோகாச்சாரியர்
6-ஸ்ரீ திருவாய்மொழி பிள்ளை
7-ஸ்ரீ மணவாள மாமுனிகள்
இந்த விசேஷ சம்பந்தம் இருப்பதினால் தான், நமது ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயதவர்கள் அனைவரும்
“ஸ்ரீ இராமானுச தாசன்” என சொல்லி கொண்டாலும்,
ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஒருவர் மட்டுமே ஸ்ரீ யதீந்திர ப்ரவணர் என போற்றப்படுகிறார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திரு அவதார நோக்கமானது ஸ்ரீ எம்பெருமானரை போற்றுவதே ஆகும்.
மற்றும் அவரது பெருமைகளை உலகோர்க்கு பறை சாற்றி, ஸ்ரீ எம்பெருமானாரே நமக்கெல்லாம்
ப்ராப்ய பிராபக பூதராய் விளங்குகிறார் என்பதையும் நன்கு விளங்கச்செய்வதே ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகளின்
திரு அவதாரத்தின் சீரிய நோக்கம் ஆகும்.

ஸ்ரீ ஸ்வாமி திருவவதாரம் செய்தது ஸ்ரீ ஆழ்வார் திருநகரியிலே.
ஸ்ரீ உடையவருக்கு பிராண பூதரான ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த இடம் என்பதினாலும்,
ஸ்ரீ சடகோப தாசர் என்னும் ஸ்ரீசைலரான ஸ்ரீ திருவாய்மொழி பிள்ளையை ஆஸ்ரயிப்பதாலும்,
ஸ்வாமி ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளையை ஆஸ்ரயித்திருந்த காலத்தே, பவிஷ்யதாசார்யன் சந்நிதியிலே
ஸ்ரீ உடையவருக்கு நித்ய திருவாராதனாதிகள் நடத்தினார் என்பதாலும்,
ஸ்ரீ ரகஸ்ய த்ரயத்தினாலும் அறுதியிடப்படும் பொருள் ஆசார்யனே – உடையவரையே என்பதை
விளக்கும் பொருட்டு 20 ச்லோகங்களினால் ஸ்ரீ யதிராஜ விம்சதி அருளியது!!
(ரகஸ்யங்களினுடைய பத எண்ணிக்கை 20- திருமந்தரம் – 3; த்வயம் – 6 சரம ஸ்லோகம் – 11)
ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் எனும் அற்புத கிரந்தம் அருளிச்செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகம்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளே என நிலை நாட்டியது,
(ரகஸ்யங்களினுடைய அக்ஷரங்கள் எண்ணிக்கை 60- திருமந்தரம் – 8; த்வயம் – சரம ஸ்லோகம் – )

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் –
வாழி என வாழ்த்துவார் வாழி என
வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை.

ஸ்ரீ எம்பெருமானார் நியமனமான 74 சிம்மாசனாதிபதிகள் குறிக்கும் பொருட்டு 74 வெண்பாக்களால்
ஸ்ரீ உபதேச ரத்தினமாலை அருளியது,
(ஸ்ரீ ஸ்வாமியின் இந்த சங்கல்பம் தெரிந்து இதில் ஸ்வாமியின் பிரச்தாவம் இல்லாது இருக்க கூடாது என விரும்பிய
ஸ்ரீ எறும்பி அப்பா, ஸ்ரீ நம்பெருமாளை 73 வெண்பாக்களுடன் இந்த பிரபந்தம் முடியும் படி பிரார்த்தித்து, 74 வது பாசுரமாக
மன்னுயிர்காள் இங்கே…. சேர்த்தருளினார்),
ஸ்ரீ ஸ்வாமி தனது ஆர்த்தி பிரபந்தத்தில், ஸ்ரீரெங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ உடையவர் திருமேனியின் மீது
தமது ஆதராதிசதியத்தை வெளியிட்டருளியது ஆகியவை கொண்டு இவர்த்தம் அறுதியிடலாம்.

இவை எல்லாம் தாண்டி, ஸ்ரீரங்கத்திலும், ஸ்ரீ ஆழ்வார் திருநகரியிலும் ஸ்ரீ ஸ்வாமியின் திருமேனியை சேவிக்கும் கால்,
ஒரு விஷேஷ பரமானந்தம் ஏற்படுகின்றது. இவ்விரு திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ ஸ்வாமி உற்சவ காலங்களில்
வாஹன புறப்பாடு கண்டருளுவது இல்லை, மற்றும் திருஅத்யயன உற்சவத்திற்கு எழுந்து அருளுவதும் இல்லை
(ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ ஸ்வாமி சாற்றுமுறை அன்று மட்டும் எழுந்தருளுகிறார்).
இவ்விரு திவ்ய தேசங்களிலும் அனைத்து பெருமைகளும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கும், ஸ்ரீ உடையவருக்குமே
உண்டாகவேண்டும் என ஸ்ரீ ஸ்வாமி தமது திருமேனியை ஸ்ரீ வாமனன் போல் சுருக்கி கொண்டார்!

ஆகையால் அன்றோ, ஸ்ரீ எம்பார், ஸ்ரீ பட்டர், ஸ்ரீ வடுக நம்பி, ஸ்ரீ நம்பிள்ளை என பல மகாசார்யர்கள் இருந்தும்,
ஸ்ரீ மணவாள மாமுனிகள் “ஸ்ரீ யதீந்திர ப்ரவணம் வந்தே” என ஸ்ரீ நம்பெருமாளால் கொண்டாடப் பட்டார்.
அதனால் அன்றோ ஸ்ரீ நம்பெருமாள் இவருக்கு ஆச்சார்ய ஸ்தானத்தையும் கொடுத்து,
ஸ்ரீ ஆதி சேஷ பர்யங்கத்தையும் கொடுத்தான்!

ஸ்ரீ ஸ்வாமி அதனைக் கீழ்க்கண்டவாறு வளர்த்தருளினார்.
1-பல பிரதிகள் ஏட்டில் அருளுவது.
2-ஈட்டிற்கு பிரமாணத் திரட்டு அருளிச் செய்தது.
3-ஈடு அர்த்தமாகும்படி கூட்டி பிரதிகள் ஏறி அருள நியமித்தருளியது.
4-ஈட்டிற்கு அரும்பதம் எழுதும் படி நியமித்தருளியது
5-ஈடு சிம்மாசனத்தில் ஸ்ரீ கந்தாடை அண்ணனை அபிஷேகித்தருளியது.
6-ஸ்ரீ நம்பெருமாளுக்கே ஈடு உபன்யசித்தது
ஸ்ரீ ஸ்வாமிக்கு ஈட்டின் மீது உள்ள இத்தகைய அசாத்ய உற்றத்தை பற்றியே,
ஸ்ரீ ஸ்வாமிக்கு உபய பாஷா ப்ராவண்யம் இருக்கச் செய்தேயும்,
“வாழி அவன் மாறன் திருவாய்மொழிப்பொருளை மாநிலத்தோர் தேறும்படி உரைக்கும் சீர்” என
வாழி திருநாமம் ஏற்பட்டுள்ளது.

————-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி வைபவத்துக்கு சில துளிகள் –

“வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கை தனை புள்ளினங்காள் செப்புமென – கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின்”

இங்கு ஸ்ரீ இராமன் என்பது உயிரான வார்த்தை ஆகும்.
ஸ்ரீ திருவண்வண்டூரில் சேவை சாதிக்கும் பெருமான் ஸ்ரீ இராமபிரான் அல்லவே!
இங்கு ஸ்ரீ இராமபிரானைக் குறித்து தூது விடுவது பொருந்துமோ என்னில்,
ஸ்ரீ ஈட்டில் இந்த திருவாய்மொழி பதிகத்திற்கு தூது விஷயம் ஸ்ரீ இராமபிரான் (விபவம்) என நிர்ணயிக்கப் பட்டு உள்ளது .
ஸ்ரீ ஆழ்வாரும், இந்த பதிகத்தில் “மாறில் போரரக்கன் மதிள் நீறெழ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு ” என்றோ தெரிவித்துள்ளார்.
இதற்க்கு வியாக்யானம் செய்த ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரும்,
“இரண்டாம் தூதுக்கு விஷயம் விபவமிறே” என்றோ வ்யாக்யானித்துள்ளர்!

ஸ்ரீ ஈட்டின் அர்த்த விசேஷங்கள் ஸ்வாமியின் திருஉள்ளத்தில் அலை எடுத்ததாலன்றோ
இத்தகைய ஸ்ரீ ஸூக்தி வெளிப்பட்டது!
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் – பின்னோர்ந்து தாம் அதனை பேசுவதற்கு” இது ஒரு சிறிய உதாரணம்.

———

“வேய் மரு தோளிந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால்* தன்னை இன்னம் – பூமியிலே
வைக்குமென சிந்தித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறனெங்கள் சார்வு ”

இங்கு ஆய்ச்சிகளை பற்றிய ப்ரஸ்தாவமோ, குறிப்போ ஈஷத்தும் கிடையாது.
இதுவும் ஸ்ரீ ஈட்டை அடியொற்றியே சாதித்ததாகும். இங்கு ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி அவதாரிகை –
“அநாதியாய் வருகிற அசித் சம்சர்கத்தை அனுசந்தித்து அஞ்சின அத்தாலும்,
ஈஸ்வர ஸ்வாதந்தரியத்தை அனுசந்தித்து அஞ்சின படியாலும் – அதாவது
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்து ஸ்ரீ பரதாழ்வானுக்கு மறுத்து போன ஸ்வாதந்தரியமிறே……”

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார், ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழியினை வெளியிட்டருளியதை
குறிக்குமிடத்து, “நீர் பால் நெய் அமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமா போலே” என அருளியுள்ளார்.
(ஏரியில் நீர் நிரம்பினால் தன்னடையே மதகுகள் வழியே வெளியேறுமா போலே,
ஸ்ரீ ஆழ்வார் திருஉள்ளத்தில் தேங்கி உள்ள பகவத் அனுபவமாவது திருவாய்மொழியாக வெளிப்பட்டது!).
இதே போன்று ஸ்ரீ ஸ்வாமியின் ஸ்ரீ ஈடு அனுபவமே ஸ்ரீ திருவாய்மொழி நூற்றந்தாதியாக வெளிப்பட்டது!

இதைக் கருத்தில் கொண்டு அன்றோ, இவ்வருளிச் செயலுக்கு தனியனிட்ட ஆச்சார்யர்களும்
“சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான்” என உரைத்தனர்!
ஆனது பற்றியே இது “அல்லும் பகலும்” அனுபவிக்க வேண்டியதாயிற்று!

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர், யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில், ஸ்ரீ மணவாள மாமுனிகளை பற்றி குறிப்பிடும் பொழுது
“ஈடு முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்” என அடைமொழி இட்டு அழைக்கிறார்.

—————

ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்வதற்கு
செல்லும் முன்பு நடந்தவைகளாக ஸ்ரீ யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் இருந்து அறியப்படுபவை –
“அக்காலத்திலே கோயிலதிபதியாய் இருந்த ஸ்ரீ திருமாலை தந்த பெருமாள் பட்டருடைய அனுமதிக்காக
அவர் திருமாளிகையிலே எழுந்தருள, அவரும் அப்ப்யுத்தான பிரணாமாதிகள் தொடக்கமான உபசாரங்களை பண்ணி
ஆசனத்திலே எழுந்தருளி வைத்து “தேவரீரை சேவிக்கப் பெற்றோமே”” என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து
“திருவாய்மொழி ஒரு பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும்” என்ன,
ஸ்ரீ நாயனாரும் ஆழ்வாருடைய வைபவத்தை இதிஹ்யமாக பாட்டை எடுத்து உபன்யசித்தருள
ஸ்ரீ பட்டரும் போர வித்தராய் , “இவர் ஈடு முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்” என்று மிகவும் உபலாளித்து …..””

மேலும் ஸ்ரீ ஜீயர் கிடாம்பி நாயனார் பக்கலிலே ஸ்ரீ பாஷ்யம் அதிகரிக்க எழுந்து அருளியதை விவரிக்குமிடத்து,
“இப்படி ஸ்ரீ ஜீயர் உருத்தொரும் ஈடு முப்பத்தாறாயிரப்படியை சொல்லிக் கொண்டு போகிறதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு,
ஒருவரும் அறியாமல் ஏகாந்தத்திலே சென்று “முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்” என்று உமக்கு திருநாமம் சாத்தினது வெறுமனன்று …..”
என பொறித்து வைத்துள்ளார்.

ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகள் தமது ஆசார்யரிடம் செய்த பிரதிஞ்ஞை காரணமாக
ஸ்ரீ திருவாய்மொழியின் மீதும் ஸ்ரீ ஈட்டின் மீதும் இத்தகைய அசாதாரணமான பக்தி கொண்டிருந்தார் என்பது,
அவரது ஸ்ரீ ஸூக்திகளில் இது நன்கு புலப்பட்டிருக்க வேண்டும்.

———–

ஸ்ரீ அரங்கன். அவதரிக்கச் செய்தவன்
அவதரித்தது ஸ்ரீ ஆதிசேஷன்.
உறங்குவான் போல் யோகு செய்த அரங்கன் ஜகத்ரக்ஷண சிந்தையையுடையவனாய்
ஸ்ரீ உடையவரைப் போன்று லோகமெங்கும் உஜ்ஜீவிக்கும்படி, தம் பிரபாவத்தினை உலகறிய,
ஒரு விஷயத்தினை உண்டாக்கிட தீர்மானித்தவன், ஸ்ரீ திருவநந்தாழ்வானேயே மீண்டும் கடாக்ஷிக்கின்றான்.
ஸ்ரீ அனந்தன் நம்மை உஜ்ஜீவிக்க அவதரிக்கின்றான்.

யஸ்மிந்ஸ்வபாதபத்மேந பஸ்பாஸ ப்ருதிவீமிமாம்
கலிஸ்ச தத்க்ஷணேநைவ துத்ருவே தூரஸ்தராம்
(எப்போது அவர் தமது திருவடித் தாமரைகளால் இந்த பூமியைத் தொட்டாரோ
அப்போதே கலி புருஷனும் வெகுதூரம் ஓடி விட்டான்.)

இவரது கால் கண்ட கலியின் கொடுமை பறந்தோடியது.
ஸ்ரீ திருவரங்கத்தினை பீடித்த பீடையும் ஒழிந்தது.

திகழ்கிடந்தான் திருநாவீறுடையபிரான் தாதரண்ணன் தம்முடைய குமாரருக்கு பத்து நாளும் கடந்த
இரண்டாம் நாள் திருவிலச்சினையை பிரஸாதித்து,

(முன் காலத்தில் குழந்தை பிறந்து புண்யாஹம் ஆனவுடன்
”புஷ்ப ஸமாஸ்ரயணம்” என்ற ஸம்ஸ்காரத்தினைச் செய்து வந்தார்கள்.
சக்ர முத்ரையினையும், சங்கு முத்திரையினையும் அக்னி சம்மந்தம்
இல்லாமல் திருமண் ஸ்ரீ சூர்ணத்தினைக் குழைத்து இவ்விரு முத்ரைகளையும் அதில் நினைத்து
குழந்தையின் இரு தோள்களிலும் ஒத்துவது அனுஷ்டானம் )

அழகிய மணவாளன் என்று திருநாமத்தினை தம் குமாரருக்குச் சாற்றி மகிழ்ந்தார்.
தம்முடைய தாய்வழி ஊரான சிக்கில் கிடாரத்தில் அழகியமணவாளன் வளர்ந்தார்.

பரபக்தி: பரஜ்ஞாநம் பரமாபக்திரித்யபி
வபுஷாவர்த்தமாநேந தத்தஸ்ய வவ்ருதேத்ரயம்
(அந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருடைய வளரும் தேஹத்துடனே
பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி என்னும்படியான மூன்றும் வளர்ச்சியடைந்தன. )

——–

மணவாள மாமுனிகள் ‘நமக்கெல்லாம் நற்சீவனமான நம்பெருமாளை
சேவித்து மங்களாஸாசனம் பண்ணிக்கொண்டு இவ்வுயிர் நிலைத்திருக்கும் வரை அங்கே யிருக்கை யன்றோ
நமக்குப் ப்ராப்தம்” என்று ஒரு உறுதியான எண்ணம் கொண்டார். ஆச்சார்யனின் கட்டளையும் இதுவே யானதால்,
திருநகரியிலே ஆழ்வாரின் திரு முன்பே சென்று சேவித்து,
”நண்ணாவகரர் நலிவெய்த நல்லவரமரர் பொலிவெய்த,
எண்ணாதனகளென்ணும் நன்முனிவரின்பம் தலை சிறப்ப,
பண்ணார் நம்பெருமாளுடைய ப்ரதிபக்ஷங்களெல்லாம் நிரஸ்தமாய்,–என்று பாடி வேண்டுகின்றார்.

”தேவரீர் மங்களாஸாசனம் செய்தருளுகையாலே பண்டு போல அனைத்தழகும் கண்டருளுகின்றார்.
அடியேன் பெருமாளை சேவிக்க விடை பெறுகின்றேன்” என்று விண்ணப்பம் செய்கின்றார்.

ஆழ்வாரும் மணவாளமாமுனியினை ஆசீர்வதித்து விடை கொடுக்கின்றார்.

இந்த மண்ணுய்ய மணவாளமாமுனிகள் மாதவம் செய்த காவிரியின்
படுகை அரங்கம் நோக்கி தொழுது பயணிக்கின்றார்.

முதலில் ஆழ்வார் திருநகரியிலிருந்து,

தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதாமுபாஸதத்
யந் மௌலி மாலிகா மேவ ஸ்வீகரோதி ஸ்வயம் ப்ரபு:
எந்த ஆண்டாளுடைய திருக்குழலில் சாத்தினை திருமாலையையே
ஸ்வாமியான அழகிய மணவாளன் அன்போடு ஏற்று சாத்திக் கொள்கிறானோ,
அந்த அழகிய மணவாளனுடைய திவ்யமஹிஷியான கோதையை நமஸ்கரிக்கின்றேன்.
என்கிறபடி சூடிக் கொடுத்த சுடர் கொடியின் தாள் பணிகின்றார்.
அங்கிருந்து திருமாலிருஞ்சோலை யடைந்து கருணைக் கடலான அழகனிடத்து பிரார்த்திக்கின்றார்.

விஞ்ஞாபநம் வநகிரிஸ்வரா! ஸத்ய ரூபா மங்கீகுருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் !
ஸ்ரீரங்கதாமநி யதாபுரமேஷஸோஹம் ராமானுஜார்யவஸக: பரிவர்த்திஷீய !!
கருணைக்கடலான திருமாலிருஞ்சோலையழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை திருவுள்ளம் பற்றியருள வேணும்.
அது ஏதெனில், அடியேன் முன்பு போலத் திருவரங்கம் பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து
வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.

அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கத்தின் காவிரிக் கரையினை அடைகின்றார்

——–

அழகிய மணவாளன் தம் தந்தை பரமபதித்தவுடன், சிக்கில் கிடாரத்திலிருந்து கிளம்பி
ஆழ்வார் திருநகரியினை யடைகின்றார். அங்கு ஸ்ரீவைஷ்ணவ தர்ஸந ப்ரவர்த்தகராயிருந்த திருமலையாழ்வார்
என்கிற திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளிலே ஆஸ்ரயிக்கின்றார்.

திருவாய்மொழிப்பிள்ளை தமது சீடரான அழகிய மணவாளனை மிகவும் உகந்து திவ்யபிரபந்தங்களின் தாத்பர்யங்களையும்,
ஸம்ஸாரத்தை யறுப்பதான எல்லா அருளிச் செயல்களின் தாத்பர்யங்களையும் உபதேசிக்கின்றார்.

அழகிய மணவாளன் இவ்வருளிச் செயல்களில் ஆழ்கின்றார்.
உடையவரின் திருவடிகளை இறுக்கப் பற்றுகின்றார்.
உடையவருக்கு தமது ஆச்சார்யனின் பரிபூர்ண கிருபையினாலும், தயவினாலும் ஒரு தனிக்கோவில் ஸ்தாபித்து,
இராமானுஜ சதுர்வேதி மங்கலம் என்கிற திருவீதிகளையும் உண்டாக்கி,
யதிராஜ விம்சதி என்னும் அற்புத பாமாலையையும் சமர்ப்பிக்கின்றார் அழகிய மணவாளன்.

அழகிய மணவாளனின் இராமானுஜ பக்தியை மெச்சிய திருவாய்மொழிப்பிள்ளை ஒரு அற்புத அரிய இராமானுஜரின்
திருமேனியை அவருக்கு அருளுகின்றார். இந்த இராமானுஜ திருமேனி மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் கட்டளைப்படி
தாமிரபரணி நீரை காய்ச்சிய போது முதலில் அவதரித்த திருமேனியாகும்.
ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரின் திருமேனி, உலுக்கான் படையெடுப்பின் போது, வலசையாக எழுந்தருளியபோது,
இதனை அங்கிருந்த திருப்புளிஆழ்வார் மரத்தினடியில் புதைத்து வைத்து பின்னர் திருவாய்மொழிப் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டதாகும்.

அளவிலா ஆனந்தம் அழகிய மணவாளனுக்கு!. எம்பெருமானாரையே பரதெய்வமாக நித்யமாய் ஆழ்வாருக்கும்,
எம்பெருமானாருக்கும் கைங்கர்யமே புருஷார்த்தமாகக் கொண்டு திருநகரியிலே கைங்கர்யஸ்ரீயுடன் வாழ்ந்தருளினார்.

உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரையில்லா
வித்தகனே! நல்ல வேதியனே! தண்முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர் நற்றுணையே! சுத்த சத்துவனே!
எத்தனை காலமிருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே?

என்று பிள்ளைலோகாச்சாரியாரிடத்து திருமேனியோட்டை அறுதியிட்டு, திருவாய்மொழிப்பிள்ளை, தமக்கு விமோசனத்தினை வேண்டுகின்றார்.

அந்த சமயம் திருவாய்மொழிப்பிள்ளை தம் அந்திம காலம் நெருங்குவதையறிந்து அழகிய மணவாளனை அழைக்கின்றார்.
”காலம் கலிகாலமாகையாலே ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளான அருளிச்செயலிலே ருசியும், விசுவாசமும் கொண்டு
இத்தை வளர்த்துப்போவார் யார்?” என்று மிகவும் க்லேசமுடையவராய் கேட்கின்றார்.
அழகிய மணவாளனுக்கு உள்ளுணர்வு உணர்த்துகின்றது. தம்மை மனதில் வைத்துதான் பிள்ளைக் கேட்கின்றார் என்று.
திருவடி பணிந்து ‘அடியேன் அப்படியே செய்கிறேன்” என்கின்றார் குரு உகக்கும் வண்ணம்.
பிள்ளை ”கேவலம் வார்த்தை போராது” என்கிறார்.
குருவின் திருவடிகளைப் பிடித்து சபதம் செய்கின்றார்.
குருவும் இந்த தீவிரமான சிந்தையைதானே எதிர்பார்த்திருந்தார்!
அந்த தாக்கத்தினை ஏற்படுத்திய மகிழ்வோடு அழகிய மணவாளனுக்குச் சில கட்டளையிடுகின்றார்.

” ஸ்ரீபாஷ்யத்தினைக் கற்று ஒரு முறை அனைவருக்கும் காலக்ஷேபம் செய்யவும்.

ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே பல காலும் கண் வையாமல், நமக்கும் எம்பெருமானாருக்கும் ப்ரியமான
திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே அநவரதமும் பரிசீலனைச் செய்து, அனைவருக்கும் அதன் உட்பொருளை பிரஸாதிக்கவும்.
பூர்வர்களைப் போல மங்களாசாஸன பரராய் ஸ்ரீரங்கத்தில் நித்ய வாஸம் செய்து, கைங்கர்யங்களை செய்து வரவும்.”
என்று நியமிக்கின்றார்.
அங்கு கூடியிருந்தோர் அனைவரிடத்தும் இவரிடத்துக் காட்டிக் கொடுத்தருளி,
”இவரை சாதாரணமாக நினைக்காதீர்கள். இவர் ஒரு அவதார விசேஷம். ஆதரித்து போருங்கள்” என்று அருளுகின்றார்.

வைணவ தர்ஸனத்திற்கு ஒரு அவதார புருஷர் கிடைத்ததை யெண்ணி பெருமிதத்துடன், நிறைவுடனே எந்த கவலையுமின்றி,
‘மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனமேகமென்னும்” என்கிறபடியே தம் ஆச்சார்யன் பிள்ளைலோகாச்சாரியாரின்
திருவடிகளைக் கண்மூடி தியானிக்கின்றார்.

————

தனது 74 வது வயதில் 1444ம் ஆண்டு ருத்ரோத்காரி என்ற தமிழ் வருஷத்தில்,
மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய கிருஷ்ணபக்ஷ த்வாதசி அன்று திருநாடு எய்தினார்.

மாசில்லாத மணவாள மாமுனிகள் மாசி கிருஷ்ணபக்ஷம் துவாதசியன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

அவர் வசித்துவந்த திருமலையாழ்வார் கூடம் நிரம்பி வழிந்தது. உத்திர வீதிகளெங்கும் நெற்றியில் பளீரென
திருமண், திருச்சூர்ணம் துலங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் அலைப் பொங்கியது.

ஜீயர் நாயனார் மன்னுலகு சிறக்க வந்த மாமுனிகளின் சரம கைங்கர்யத்திற்கு பொறுப்பேற்கின்றார்.

சீடர்கள் குழாமுடன் திருக்காவேரி எழுந்தருளி நீராடி பெரிய திருமஞ்சனக் குடத்தில் கங்கையிற் புனிதமான
காவிரியின் நன்னீர் சேந்தி சகலவிதமான மங்கள வாத்யங்கள் முழங்க, அலங்காரமாக திருமஞ்சன குடத்தினைக் கொண்டு வருகின்றனர்.

ஜீயரின் விமல சரம திருமேனியினை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

நான்கு உத்திரவீதிகளிலும் அலைப்போன்று ஆர்ப்பரித்து நின்ற ஸ்ரீவைணவர்கள் புருஷசூக்தத்தினை
தழுதழுத்தக் குரலுடன் பாராயணம் செய்கின்றனர்.

அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப வானம் மூட்டமிட்டு கதிரவன் சற்றே மறைந்து மெல்லிதாக பூமாரி பொழிகின்றது.

திருமஞ்சனம் முடிந்து திருவொற்றுவாடையினால் திருமேனியை ஒரு குழந்தை குளித்து முடித்தபின்பு
துவட்டுவது போன்று கவனமாக ஒத்தி ஒத்தி துவட்டுகின்றனர்.

திருப்பரிவட்டம் சாற்றுகின்றனர்.

த்வாதசோர்த்வ புண்டரங்களை திருமேனியில் சாற்றுகின்றனர். காந்தி வீசும் விசாலமான நெற்றியில்
விசாலமான அத்திருமண்காப்பும். ஸ்ரீசூர்ணமும் தேஜஸ்ஸோடு விளங்கியது.

ஜீயரை திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்தருளப் பண்ணுகின்றனர். அனைத்து ஸ்ரீவைணவர்களும்
‘எம்பெருமானாரை சேவியாத குறையெல்லாம் இவரையடைந்து தீர்ந்தோம் நாம்! இப்போது இவ்வவதாரமும் தீர்த்தம் பிரஸாதித்துப் போவதே!”
என்று மிகவும் துக்கித்து கண்ணீர் மல்க கதறுகின்றனர்.

ஒவ்வொருவராக அவர்தம் திருவடியினை தம் தம் சிரஸ்ஸிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொள்கின்றனர்.

‘அத்தன் மணவாள யோகி அடியிணையைச் சித்தப் பெருங்கோயில் கொண்டருளி” என்றபடி
அவரது திவ்யமங்கள சொரூபத்தினை தம் தம் திருவுள்ளங்களில் கடைசிமுறையாக தேக்கிக் கொண்டு
வைத்தக் கண் வாங்கதே விமல சரம விக்ரஹ அனுபவத்திலே விக்கித்தவாறு இருக்கின்றனர்.

உத்தமநம்பி மூலமாக அரங்கன், ‘தாம் அரைச்சிவக்கச் சாற்றிக் கழித்த பீதகவாடையான சிகப்புப் பட்டினையும்,
அவன் திருமார்பணிந்த வனமாலையையும்’ ஒரு பொற் தட்டிலே வைத்து கோயில் மரியாதையுடனே,
சகல வாத்ய கோஷங்களுடனே, சகல பரிகரர்களையும் உடன் அனுப்பி, மடத்து வாசலுக்கு அனுப்பி,
கோயிலின் மூலஸ்தானத்தில் தான் மட்டும் தனித்திருந்து துக்கித்து அதனால் அவனது திருமேனி கறுத்து வாடியபடியிருக்கின்றான்.

மாமுனிகளின் மடத்து வாசலில் ஜீயர் நாயனார் உட்பட அனைத்து முதலிகளும் அரங்கனிடமிருந்து வந்த
கோயில் மரியாதையினை எதிர்கொண்டு, சாஷ்டாங்கமாக வீழ்ந்துசேவித்து அங்கீகரித்து
‘உடுத்து களைந்த பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டரான
ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரிக்கின்றனர்.

கோயிலார்கள் அனைவருமே சோகார்த்தராய் ஜீயரை சேவிக்கின்றனர்.

திருச்சூர்ண பரிபாலனம் நடக்கின்றது.

பின்பு எண்ணெய் சுண்ணங்கொண்டாடுகின்றனர். (சிறிது எண்ணெய் அவரது சிரஸ்ஸில் தேய்த்து, தேய்த்த கையிலுள்ள
மீதமுள்ள நல்லெண்ணையை கொப்பரையிலுள்ள எண்ணெயோடு கலந்து அனைவருக்கும் பிரஸாதிப்பது)

நறுமணம் வீசும் அனைத்து ஜாதி புஷ்பங்களினாலும் பல்லக்கை அலங்கரித்து அதனில் அவரது திருமேனி ஏறியருளப் பண்ணுகின்றனர்.
அரங்கனது ஸ்ரீமாந்தாங்குவோர் அனைவரும் காவிவண்ண ப்ரபன்னபாகையுடன் கவனமுடன் பல்லக்கினை எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

சத்ர, சாமர, தாள வ்ருந்தாதிகள் பணிமாற, மத்தளங்கள், சங்க, காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்களும் ஒரு சேர முழங்க,

பொய்யில்லாத பெரிய ஜீயர் – கர்வம் அறியாத கர்மவீரன் – சாத்வீகமே உருவெடுத்த சத்தியன் –
அரங்கனே அடியவனாய் வந்தும் அகங்காரம் சற்றும் கொள்ளாத அழகிய மணவாளன் – கைங்கர்யத்திற்காகவென்ற
சம்ஸாரம் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட ஸௌம்ய ஜாமாத்ரு முனி, பூவுலகு நீங்கி புறப்படுகின்றார்.
அவரது விமல சரம திருமேனி வருகையையொட்டி உத்திர வீதி, சித்திரை வீதியெங்கும் கொடிகள் அழகாக
ஒரு சீரான க்ரமத்தில் நாட்டப்பட்டு நடுநடுவே மகரதோரணம் போன்று தோரணங்கள் கட்டப்பட்டு, வீதியெங்கும் நீர் தெளித்து,
சுத்தமாக மொழுகி, கோலமிடப்பட்டு, நடுநடுவே புஷ்பங்களை சொரிந்து, அங்காங்கு கமுகு, குலையுடன் கூடிய வாழைமரங்கள் நட்டு,
மஹாஞானியின் கடைசி வருகைக்காகக் காத்திருந்தது.

அடியார்கள் சூழ அரங்கநகரே பிரிவாற்றமையினால் அழுதது. மாமுனிகளின் புஷ்பகவிமானம் ஊர்ந்தது.

பின்னால் ஸ்ரீவைணவர்கள் அனைவரும் கையில் கரும்புடன் இராமானுஜ நூற்றந்தாதி முதலாக அனுசந்திக்கின்றனர்.
ஜீயரின் திருமேனி முன் பொரியும் புஷ்பமும் சிதறுகின்றது. ‘தர்ஸநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;”
என்று ஒற்றை திருச்சின்னம் பணிமாற, ஸூமங்கலிகள் அனைவரும் கையில் மங்கள தீபமேந்தி நிற்க,
எட்டு திருவீதிகளிலும் மாமுனிகள் கடைசியாக அனைவருக்கும் ஸேவை தந்து வலம் வருகின்றார்.

வடக்கு வாசல் வழியே தவராசன் படுகையிலே ‘மகிழாதிகேசவன் தன்னடிக் கீழாக” என்கிறபடியே
அங்குள்ள ஆதிகேசவ பெருமாளின் திருவடிக் கீழாக தென்பாலில், ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோருக்கு
செய்த கிரமம் போன்று யதி ஸம்ஸ்கார விதி யடங்க திருப்பள்ளிப்படுத்துகின்றனர்.

பூமிதேவியானவள் ஜனகனின் திருமகளான சீதையை தம் மடியிலே வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற்போன்று,
மாமுனிகளான இவரையும் தம் மண்ணால் மூடி தம் மடி மீது கிடத்தி அணைக்கின்றாள்.

சீயரெழுந்தருளி விட்டார் செகமுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினைநைய வெம்புலனா வீடழிந்து மாய்வோ
ரனைவார்க்குமேதோ வரண்?

என்று சிஷ்யர்கள் அனைவரும் மிகவும் துக்கித்து, தங்களுடைய திருமுடியினை விளக்குவித்துக் (தலைச்சவரம்) கொண்டு,
வடதிருக்காவிரியில் நீராடி மீண்டும் மடத்துக்கு எழுந்தருளுகின்றனர்.

நம்மாழ்வார் மோட்சம் முடிந்து நம்பெருமாள் ஆஸ்தானம் அடைந்த பின் வெறிச்சோடும் திருமாமணி மண்டபம் போன்று,
ஜீயரின்றி வெறித்துப் போய் கிடந்த திருமலையாழ்வார் கூடம் கண்டு மீண்டும் அழுகின்றனர்.

நானெதென்னும் நரகத்திடையழுந்திப்
போனவிந்த காலமெல்லாம் போதாதோ? – கானமலர்
மாலையணிதிண்டோன் மணவாள மாமுனியே
சால நைந்தேன் உன் பாதம் தா!–என்றும்

புண்ணாராக்கை தன்னுள் புக்குழலும் தீவினையேன்
தண்ணாருமென் கமலத்தாளணைவதென்று கொலோ
பண்ணரு நால்வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மாமுனியே–என்றும்
மண்ணுலகம் சிறக்க வந்த மாமுனிகளை நினைத்து நினைத்து திருமிடறு தழுதழுப்ப விண்ணப்பஞ்செய்து,
தமக்குத் தானே ஒருவாறு தேறி ஜீயரின் திருவத்யனன கைங்கர்யத்தினைப் பெருக்கச் செய்கின்றனர்.
தீர்த்த பிரஸாதங்களை ஸ்வீகரித்து ஜீயர் அவரவர்க்கிட்ட பணி செய்ய திரும்புகின்றனர் அனைவரும்.

பெரியபெருமாள், ஜீயர் நாயனாருக்கு தீர்த்தம் பிரஸாதம் திருப்பரிவட்டம் ஸ்ரீசடகோபம் எல்லாம் சாதித்து,
ஜீயர் நாயனாரை ”ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நோக்கிக்கொண்டு போரும்” என்று நியமிக்கின்றார்.

இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாந அந்தர்பூதரெல்லோரும் சற்றே ஆறுதலடைந்தவர்களாய், ஜீயர் நாயனாரை
பெரிய ஜீயரைக் கண்டாற் போல கண்டு அநுவர்த்தித்து, ஆஸ்ரயித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.

———————-

ஜயது யஶஸாதுங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம்
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம்
வரத குருணா ஸார்த்தம் தஸ்மை ஶுபாந்யபி வர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயதுக்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான ஸ்ரீ திருவரங்கமானது பெருமையுற்று விளங்க வேணும்;
அத்திருப்பதியிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய ஸ்ரீ எம்பெருமான்
பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்;
அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான
ஸ்ரீ ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.

“சேற்றுக் கமல வயல் சூழரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப் பூதலத்தே
மாற்றற்ற செம் பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே ”

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண்தமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மனனுலகம் வாழ மணவாள மா முனியே !
இன்னுமொரு நூற்றாண்டிரும்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: