ஸ்ரீ கம்ப ராமாயணம்-ஸ்ரீ ஸூந்தர காண்டம்-மிகைப் பாடல்கள்–

1. கடல் தாவு படலம்

383.
சென்றனன்,இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி-
திண் தோள்
வன் திறல்அனுமன்-வாரி கடக்குமாறு உளத்தின்
எண்ணி,
பொன் திணிசிகர கோடி மயேந்திரப் பொருப்பின்
ஏறி,
நின்றிடும்தன்மை எம்மால் நிகழ்த்தலாம்
தகைமைத்து ஆமோ ?

அனுமன்இராமபிரானின் திருவடியை மனத்திலே தியானித்து கடலைக்
கடக்க எண்ணி மகேந்திர மலையில் நிற்கும் தன்மை எம்மால் கூறும் தன்மை
உடையதோ.

384.
இமையவர்ஏத்த வாழும் இராவணன் என்னும்
மேலோன்
அமை திரு நகரைச்சூழ்ந்த அளக்கரைக் கடக்க,
வீரன்,
சுமை பெறு சிகரகோடித் தொல் மயேந்திரத்தின்,
வெள்ளிச்
சிமையமேல்நின்ற தேவன் தன்மையின், சிறந்து
நின்றான்.

மகேந்திர மலையில்நிற்கும் அனுமன் கயிலை மலையில் நிற்கும்
சிவபெருமான் போன்றான். அளக்கர் – கடல் வெள்ளிச்சிமயம் – கயி்லை.
இவ்விரண்டு பாடல்கள் இப்படலத்தின் முன்னர் உள்ளன. இவற்றொடு
கிட்கிந்தா காண்டம் மயேந்திரப்படல இறுதி நான்கு பாடல்களும்
வரிசைமுறைமாறிக் கலந்துள்ளன.

385.
பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி
அரக்கர் யாரும்
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட
மிதித்தலோடும்
அருஞ் சினம்அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி,
அங்கம்
நெரிஞ்சுற,கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம்
நுங்க

அனுமன் திருவடி ஊன்றநிலை குலைந்த அரக்கர் தம்மாதரைத்
தழுவிக்கடலில் விழுந்தனர். பொதுத்திட – துளை உண்டாக. நுங்க – உண்ண.
நெரிஞ்சுற – சிதைவுற. (7-1)

386.
விண்ணோர்அது கண்டனர், உள்ளம் வியந்து
மேல்மேல்
கண் ஓடியநெஞ்சினர், காதல் கவற்றலாலே,
எண்ணோடு இயைந்துதுணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறைஇன்னன பெற்றி
உணர்த்தினாரால்.

தேவர்கள்,அனுமன் செல்வதைக் கண்டனர். சுரசையைப் பார்த்து
கூறினர். கண் ஓடிய – இரக்கமுற்ற. (64-1)

387.
பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல்,
பறையின்
விரவுக் குரல்,சுருதிக் குரல், விசயக் குரல், விரவா,
அரவக் குலம்உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு
போர்
உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால்.

பல ஒலிகள்உண்டாகின்றன. பணிலம் – சங்கு. பணை – முரசம்,
அசனி- இடி. உயிர்த்தல் – ஒலித்தல். (74-1)

388.
வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ,
ஏனோரும் நின்று,‘சயம் உண்டு’ என இயம்ப,
தான் ஓர் பெருங்கருடன் என்ன, எதிர் தாவிப்
போனான்,விரைந்து, கடிதே போகும் எல்லை.

பசுந்தரு -கற்பகம். (74-2)

389.
என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந்
தோள் வீரன்
நின்றனன், நெடியவெற்பின்; நினைப்ப அரும்
இலங்கை மூதூர்

ஒன்றிய வடிவம்கண்டு, ஆங்கு, உளத்திடைப்
பொறுக்கல் ஆற்றான்;
குன்று உறழ்புயத்து மேலோன் பின்னரும்
குறிக்கலுற்றான்.

எறுழ் – மிக்க. வீரன்- அனுமன், வெற்பு – மகேந்திரமலை (94-1)

2. ஊர் தேடு படலம்

390.
‘ஊறு மிகவேஉறினும், யானும் அமர் தேரேன்,
தேறல் இல்அரக்கர் புரி தீமை அது தீர்வுற்று,
ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,
மாறும் மதி வேறுபிறிது இல்’ என மதித்தான்.

கடல் தாவு படலம் 88ஆம்பாடலின் (கம்ப. 4828) மறுபதிப்பு.
(73-1)

391.
‘கண்டவனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,
கொண்டல்செறிப்பான், வானரம் என்றும் கொளல்
அன்றே;
அண்டம்அனைத்தும் பூரணன் ஆகும் அவன்
ஆகும்;
சண்டைகொடுத்தும் கொள்வன்’ எனத் தான் சலம்
உற்றாள்.

அனுமனை இறைவனாகஇலங்கைமாதேவி கருதுதல். சலம் – கோபம்.
(86-1)

392.
ஆயவன்அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள்,
‘முன் நாள்
மாய மா நகரம்தன்னை வகுத்து, அயன் என்னும்
மேலாம்
தூயவன் என்னைநோக்கி, “சுந்தரி ! காப்பாய்”
என்று, ஆங்கு,
ஏயினன், இதற்குநாமம் இலங்கை என்று எவரும்
போற்ற.

அந்தரி -இலங்கைமாதேவி (93-1)

393.
இத் திறம்அனந்த கோடி இராக்கதக் குழுவின்
உள்ளார்
தத்தம செய்கைஎல்லாம் தனித் தனி நோக்கி,
தாங்காது,
‘எத் திறம்இவர்தம் சீரை எண்ணுவது ?’ எனவே,
அண்ணல்
உத்தமன்தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான்.

இராக்கதரை எண்ணல்அரிது என்ற அனுமன் நினைவு. (120-1)

394.
கிடந்தனன்,வடவரை கிடந்தபோல்; இரு
தடம் புயம்திசைகளை அளக்கத் தாங்கிய
உடம்பு உறுமுயற்சியின் உறங்கினான், கடை
இடம் பெறுதீவினை யாவும் ஏத்தவே.

வடவரை – மேருமலை. (123-1)

395.
குடம் தரும்செவிகளும், குன்றம் நாணுறத்
தடந் தருகரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர்இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன்,அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான்.

கும்பகர்ணனைக் கிடந்தஇருள் என்றார். (130-1)

3. காட்சிப்படலம்

396.
எயிலின்உட்படு நகரின் யோசனை எழு-நூறும்
அயிலினின் படர்இலங்கை மற்று அடங்கலும்
அணுகி,
மயல் அறத் தனிதேடிய மாருதி, வனசக்
குயில் இருந்தஅச் சோலை கண்டு, இதயத்தில்
குறித்தான்.

எயில் – மதில்.மயல் – மயக்கம். வனசக் குயில் – தாமரைக் குயில்
சீதையைக் குறித்தது. (1-1)

397.
அஞ்சனத்துஒளிர் அமலனை மாயையின் அகற்றி,
வஞ்சகத்தொழில் இராவணன் வவ்வினன்
கொடுவந்து,
இஞ்சி உட்படும்இலங்கையின் சிறையில் வைத்திட,
ஓர்
தஞ்சம் மற்றுஇலை; தான் ஒரு தனி இருந்து
அயர்வாள்.

இஞ்சி- மதில். தஞ்சம் – ஆதரவு. (2-1)

398.
கண்ணின்நீர்ப் பெருந் தாரைகள் முலைத் தடம்
கடந்து
மண்ணின்மீதிடைப் புனல் என வழிந்து அவை ஓட,
விண்ணைநோக்குறும்; இரு கரம் குவிக்கும்; வெய்து
உயிர்க்கும்;
எண்ணும் மாறுஇலாப் பிணியினால் இவை இவை
இயம்பும்

சீதையின் அவலம்கூறப்பெறுகிறது. (10-1)

399.
‘மாய மானின்பின் தொடர்ந்த நாள், “மாண்டனன்”
என்று
வாயினால் எடுத்துஉரைத்தது வாய்மை கொள்
இளையோன்
போய், அவன்செயல் கண்டு, உடல் பொன்றினன்
ஆகும்;
ஆயது இன்னது என்றுஅறிந்திலேன்’ என்று என்றும்
அயர்வாள்.

மாயமானின் பின்போய் இருவரும் இறந்தனரோ என்ற ஐயம் சீதைக்கு
எழுகிறது. (16-1)

400.
இன்னஎண்ணி, இடர் உறுவாள் மருங்கு,
உன் ஓர் ஆயிரகோடி அரக்கியர்
துன்னு காவலுள், தூய திரிசடை
என்னும் மங்கைதுணைஇன்றி, வேறுஇலாள்.

உன் – நினைக்கப்படும். (29-1)

401.
தரும நீதிதழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன்தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக்கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனதுஆவி பெற்று உய்ந்துளாள்.

வீடணன் மகள் திரிசடைதேற்றப்பிராட்டி உய்ந்தாள். (29-2)

402.
அன்னள் ஆயஅருந்ததிக் கற்பினாள்
மன்னு சோலையில்மாருதியும் வர,
தன் இடம் துடித்துஎய்துற, சானகி
என்னும் மங்கை,இனிது இருந்தாள் அரோ.

அனுமன்வர சானகிக்குஇடம்துடித்தது. (29-3)

403.
‘தாட்சிஇன்று’ என, திரிசடையும், ‘சாலவும்
மாட்சியின்அமைந்தது, மலர் உளாள் தொழும்
காட்சியாய் !இக் குறி கருதும் காலையில்,
ஆட்சியே கடன்என அறிந்து நல்குவாய்.

மலர் உளாள் -இலக்குமி. இக்குறி – நிமித்தம். (32-1)

404.
மீட்டும்,அத் திரிசடை என்னும் மென் சொலாள்,
‘தோள் தடம்பொரு குழைத் தொண்டைத்
தூய்மொழி
கேட்டி; வெங் கடுஎனாக் கிளர் உற்பாதம்ஆய்,
நாட்டினை;யாவரும் நடுக்கம் காண்டுமால்.

தொண்டை -தொண்டைக்கனி போன்ற வாய். கடு – விடம். உற்பாதம்
-துர்நிமித்தம். (53-1)

405.
சிரம் ஒருமூன்றினார்; திருக்கு மூன்றினார்;
கரம் ஒருமூன்றினார்; காலும் மூன்றினார்;
உரம் உறு வனமுலை வெரிநின் மூன்று உளார்;
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார்.

திருக்கு – கண்கள்.வெரிந் – முதுகு. (55-1)

406.
என்னவாழ்த்திய மாருதி, ‘ஈது நாம்
இன்னும்காண்டும்’ என, மறைந்து எய்தினான்;
சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும்
அன்னை வைகுறும்அவ் இடத்து ஆயினான்.

அரக்கன் -இராவணன். (101-1)

407.
‘இன்று நாளைஅருளும் திருவருள்
என்று கொண்டு,இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனைகூடுதியோ ? குழை
தின்று உறங்கிமறம் தவாச் செல்வியே !

காட்சிப்படலம்102ஆம்பாட்டை (கம்ப. 5171) தழுவியது. (103-1)

408.
என்றனன்,எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி
நி….லத் தாவிநிலன் ஒளி கலனில் தோய,
மின்தனை மின்சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ,
மெல்லச்
சென்று,அவன்தன்னைச் சார்ந்தாள், மயன் அருள்
திலகம் அன்னாள்.

மயன் அருள் திலகம் -மண்டோதரி. (149-1)

409.
பொருக்கெனஅவனி…க…கொடி முறுவல் பூப்ப,
அரக்கர்கோமகனை நோக்கி, ‘ஆண்மை அன்று;
அழகும் அன்றால்
செருக்கு உறுதவத்தை, கற்பின் தெய்வத்தை,
திருவை இன்னே
வெருக் கொளச்செய்வது ! ஐயா !’ என, இவை
விளம்பலுற்றாள்;

அரக்கர் கோமகனை -இராவணனை. இங்கே ஐந்து பாடல்கள் 408
முதல் 412 வரை. மண்டோதரி இராவணனை நோக்கிப் பேசியதாகவருவன. இத்ததைய குறிப்பு கம்பர் வேறெங்கும்
அமைத்ததாக இல்லை. (149-2)

410.
‘செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம்
அன்னார்,
வெம்மை உற்றுஉன்மேல் வீழ்வார், வெள்கியே நகை
செய்து ஓத,
தம் மனத்து ஆசைவேறோர் தலைமகற்கு உடையாள்
தன்னை
அம்மலற்றுஇறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது
அன்றே.

நகை செய்து -இகழ்ந்து. இறைஞ்சும் வேட்கைதான் உள்ளதே அன்றி
வேறு பயன் இல்லை என்பதாம். (149-3)

411.
புலத்தியன்மரபின் வந்து புண்ணியம் புரிந்த
மேன்மைக்
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ ?
என்றும் கொள்ளாய் !
வலத்து இயல்ஆண்மைக்கு ஈது மாசு’ மதிப்பி…….
…………………………………………………………………………….

வலத்து இயல் ஆண்மை -சென்ற போர் தொறும் வென்றியே
புனையும்வல்லமையாம். (149-4)

412.
வாச மென்குழலினாரால், மண்ணினில், வானில்,
யார்க்கும்
நாசம் வந்துஏன்று… மறைகளே நவிலும் மாற்றம்
பூசல் வண்டுஉறையும் தாராய் ! அறிந்தும் நீ,
புகழால், பொற்பால்,
தேசுடையவளோ, என்னின், சீதையும் ?……….

புகழ் பொற்பு தேசுஆகியவற்றில் யானும் சீதையும் ஒன்றே என்பது
மண்டோதரி வார்த்தை. (149-5)

413.
என்றார்;இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம்
மாறக்
கன்றாநின்றார்,காலும் எயிற்றார், கனல் கண்ணார்;
ஒன்றோ ?மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா !
பொன்றா வஞ்சம்கொண்டவர் இன்னும்
புகல்கின்றார்;

அரக்கியர் சீதையைமனங்கொளத் தேற்ற வெருட்டி உரப்பியவாறு
சொல்லப் பெறுகிறது. (156-2)

414.
தீயோர்செய்கைதானும், இராமன் ஒரு தேவித்
தாயாள் துன்பும்,மாருதி கண்டே தளர்வு எய்தி,
மாயாது ஒன்றேஅன்றி, மனத்தே மலி துன்பத்து
ஓயாது உன்னிச்சோர்பவன் ஒன்று அங்கு
உணர்வுற்றான்.

தாயாள் – சீதை.மனத்தே மிக்க துன்பத்தால், சலியாது கருதிச்
சோர்பவன் ஆயினன் அனுமன். (159-1)

4. உருக் காட்டுபடலம்

415.
சுற்றிய கொடி ஒன்றைத் துணிந்து, தூயள், ஓர்
பொன் தடங்கொம்பினில் பூட்டி, ‘பூமியே !
நல் தவம்உடையள் யான்ஆகின், நாயகன்
வெற்றி சேர்திருவடி மேவுவேன்’ என்றாள்.

ஒரு கொடியை வெட்டிக்கொம்பில் பூட்டித் தற்கொலைக்கு
முயற்சித்தாள் பிராட்டி. (21-1)

416.
என்றுஅருந்ததி, மனத்து, எம்மை ஆளுடைத்
துன்ற அருங் கற்பினாள், சுருதி நாயகன்
பொன் தரு மலர்ப் பதம் வழுத்தி, பூங் கொடி
தன் தனிக்கழுத்திடைத் தரிக்கும் ஏல்வையின்.

சுருதி நாயகன் -இராமன், ஏல்வை – பொழுது. (21-2)

417.
எய்தினள்,பின்னம் எண்ணாத எண்ணி, ‘ஈங்கு
உய் திறம்இல்லை !’ என்று ஒருப்பட்டு, ஆங்கு ஒரு
கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும்ஏல்வையில், தவத்தின் பெற்றியால்.

மேற்பாட்டு போன்றதே இதுவும். (21-3)

418.
தோன்றினன், தனது உருக் காண; தூயவள்
மூன்றுஉலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர்
தேன் திகழ்திருவடி சென்னியால் தொழுது
ஆன்ற பேர் அன்புகொண்டு, அறைதல்மேயினான்;

அனுமன் சீதையைக் கண்டுதிருவடி தொழுதல். (22-1)

419.
நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர்
நீக்கினர்துயிலினை; நின்னைக் காணுதற்கு
ஆக்கிய காலம்பார்த்து, அயல் மறைந்து, பின்
தாக்கு அணங்குஅவர் துயில் கண்டு, சார்ந்துளேன்.

நுனிப்பு – கணக்கு.தாக்கு அணங்கு அவர் – தீண்டி வருத்தும்
தெய்வம்போன்றலர் அரக்கியர். (23-1)

420.
‘நிலை பெற,அயன் இருந்து, இயற்று நீலத்தின்
சிலை மணிவள்ளமும் உவமை சேர்கல;
“அலவன், அது” என்பரால், அறிவு இலோர்; அவர்
உலைவு அறு திருமுழங்காலுக்கு ஒப்பு உண்டோ ?

இராமன் முழங்காலுக்குஒப்பு பிரமன் செய்த நீலமணியால் ஆகிய
வள்ளம். நண்டு என்பன பொருத்தமற்றன என்பது இப்பாடல் கருத்து. (43-1)

421.
‘எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில்
இணை உர ஆய்
தள்ளப்படாத தகைஆகி, சார் கத்திரிகை வகை
ஒழுகா,
அள்ளற் பள்ளத்துஅகன் புனல் சூழ் அகன்ற
வாவிக்குள் நின்ற
வள்ளைத் தண்டின்வனப்பு அழித்த, மகரம்
செறியாக்குழை’ என்றான்

குண்டலம்அணியாச் செவிகளின் உவமை – கத்திரிக்கோலின் காது,
வள்ளைத் தண்டு. (49-1)

422.
தவம் தந்தநெஞ்சின் தனது ஆர் உயிர்த்
தம்பியோடும்
நவம் தந்தகுன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி,
கவந்தன்தனது ஆவிகவர்ந்து, ஒரு காலும் நீங்காச்
சிவம் தந்து,மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான்.

கவந்தனுக்கு சிவம்தந்தான் – சிவம் – மங்கலம். தீர்ந்து வந்தான் –
முடிபாகி வந்தான் என்று சாம்யப் பொருள் உரைக்கலாம். (88-1)

423.
‘சென்றேன்அடியேன், உனது இன்னல் சிறிதே
உணர்த்தும் அத்துணையும்
அன்றே, அரக்கர்வருக்கம் உடன் அடைவது;
அல்லாது, அரியின் கை
மன்றே கமழும்தொடை அன்றே, நிருதர் குழுவும்
மாநகரும்
என்றே இறைஞ்சி,பின்னரும், ஒன்று இசைப்பான்
உணர்ந்தான் ஈறு இல்லான்.

அனுமன், நான்இராமன்பால் சென்று தெரிவிக்கும் அளவுதான்
தாழ்த்தது. தெரிவித்தவுடன் அரக்கரும் இலங்கையும் ‘குரங்கின் கைப் பூமாலை
போல்’ ஆகிவிடும் என்று பிராட்டியை வணங்கி, பிறகும் ஒன்று சொல்ல
மனத்தில் உணர்ந்தான் ஈறு இல்லான் – அனுமன். சிரஞ்சீவி என்னும் பொருள்.
(117-1)

5. சூடாமணிப்படலம்

424.
‘சேண் தவாநெறி செல் பகல் தீங்கு அற,
மீண்டு,தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர்அன்பினோருடன் போதியால் !
ஈண்டு யான் வரம்வேண்டினென், ஈறு இலாய் !’

ஈறு இலாய் – முடிவுஇல்லாத அனுமனே ! ஊர் -அயோத்தி. (31-1)

425.
என்றுஉரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால்,
வென்றி வெஞ்சிலையினான் மனம் விழைந்திடாது;
அன்றியே, மறைநெறிக்கு அருகன் அல்லனால்;
பொன் திணிமௌலியும் புனைதல் இல்லையால்.

இராமனோடு நான்அயோத்தி வந்தாலும் மறைநெறி இயற்றும் தகுதியும்,
முடிபுனையும் தகுதியும் எனக்கு இல்லை என்று தன்மனம் நொந்து பிராட்டி
கூறினாள். (38-1)

426.
“கொற்றவன்சரத்தினால் குலைகுலைந்து உக,
இற்றது இவ்இலங்கை” என்று, இரங்கி ஏங்கவே,
மற்று ஒரு மயன்மகள் வயிறு அலைத்து உக,
பொற்றொடி ! நீயும் கண்டு, இரங்கப் போதியால்

அனுமன் சீதையைத்தேற்றியது, கொற்றவன் – இராமன். பொற்றொடி –
சீதை. மண்டோதரி வயிற்றில் அடித்து அழ அதுகண்டு சீதை வருந்துவாள்
என்பதாம். (65-1)

427.
அங்கு, அதுஅஞ்சி நடுங்கி, அயன் பதி அண்மி,
“இங்கு நின் வரவுஎன்னை” எனக் கனல்வு எய்த,
மங்கை பங்கனொடுஎண் திசையும் செல, மற்றோர்
தங்கள் தங்கள்இடங்கள் மறுத்தமை தைப்பாய்.

அது – சயந்தன் ஆகியகாகம். மங்கைபங்கன் -சிவபிரான்.,

இதுமுதல் 5 பாடல்கள்5421 எண்ணுள்ள பாடலிற்கண்ட கதையின்
விரிவாகும். (77-1)

428.
‘இந்திரன்தரும் மைந்தன் உறும் துயர் யாவும்
அந்தரத்தினில்நின்றவர் கண்டு, “இனி, அந்தோ !
எந்தைதன் சரண்அன்றி, ஓர் தஞ்சமும் இன்றால்;
வந்து அவன் சரண்வீழ்க !” என உற்றதும்
வைப்பாய்.

மைந்தன் – சயந்தன்.எந்தை – இராமபிரான். (77-2)

429.
“ஐய நின்சரணம் சரண் !” என்று, அவன் அஞ்சி,
வையம் வந்துவணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே,
வெய்யவன் கண்இரண்டொடு போக !” என, விட்ட
தெய்வ வெம் படைஉற்றுள தன்மை தெரிப்பாய்.

அவன் – சயந்தன்.வள்ளல் – இராமன் “கண் இரண்டொடு போக”
சயந்தன் ஆகிய காகத்துக்கு இரண்டு கண்களை மட்டும் போக்கியது, ஆகும்.
தெய்வ வெம் படை – “அயல் கல் எழு புல்லால் வேக வெம்படை” என்று
(5421) முன்பு கூறப்பட்டது. (77-3)

430.
“எந்தை,நின் சரணம் சரண் !” என்ற இதன்னால்,
முந்தை உன்குறையும் பொறை தந்தனம்; முந்து உன்
சந்தம் ஒன்றுகொடித் திரள் கண்கள்தமக்கே
வந்து ஓர் நன்மணி நிற்க !” என, வைத்ததும்
வைப்பாய்.

காகம்எல்லாவற்றிற்கும் இரண்டு கண்களுக்கும் ஒரு மணி (ஒரு
பார்வை) நிற்க என வைத்து கூறப்பெறுகிறது. (77-4)

431.
‘வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில்
போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு
பொழிந்தார்;
நாக நம்பன்இளங் கிளை நன்கு உணராத,
பாகு தங்கியவென்றியின், இன் சொல் பணிப்பாய்.

இளம் கிளை -இலக்குவன். உணராத என்னாது ‘நன்கு உணராத’ என்ற
சொல்லாட்சி கருதுக. இதனைப் ‘பாகு தங்கிய வென்றி’ என்றது தன்னால்
மட்டுமே நுகர்ந்து இன்புறும் வெற்றியாதலின். தனக்காகத் தன் நாயகன்
மேற்கொண்ட செயல் ஆதலின் சீதை நினைந்து இன்புறற்கு ஏதுலாயிற்று.(77-5)

6. பொழில்இறுத்த படலம்

432.
எனப் பதம்வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை
கேளா,
கனக் குரல் உருமுவீழ, கனமலை சிதற, தேவர்
மனத்து அறிவுஅழிந்து சோர, மாக் கடல் இரைப்புத்
தீர,
சினத்து வாய்மடித்து, தீயோன், நகைத்து, இவை
செப்பலுற்றான்.

அனுமனால் சோலைஅழிந்தது கேட்ட இராவணன் சீறிய படி இதில்
சொல்லப் பெறுகிறது. தீயோன் -இராவணன். (57-1)

7. கிங்கரர்வதைப் படலம்

433.
ஓசையின்இடிப்பும் கேட்டு, ஆங்கு உருத்து எழு
சினத்தன் ஆகி,
‘ஈசன் மால் எனினும் ஒவ்வாது, ஈது ஒரு குரங்கு
போலாம் !
கூசிடாது இலங்கைபுக்கு, இக் குல மலர்ச்
சோலையோடு
மாசு அறு நகரைமாய்க்கும் வலிமை நன்று ! என்ன
நக்கான்.

இராவணன் நக்கான்என்க. (1-1)

434.
என்றலும்,இரு கை கூப்பி, இரு நிலம் நுதலில்
தோய,
சென்று அடிபணிந்து, ‘மண்ணும் தேவரும் திசையும்
உட்க,
வென்றி அன்றுஎனினும், வல்லே விரைந்து நாம்
போகி, வீரக்
குன்று அனகுரங்கைப் பற்றிக் கொணர்தும்’ என்று
இசைத்துப் போனார்.

‘வென்றி அன்று’ என்றதுகுரங்கினை வெல்வது ஒரு வெற்றியாகக்
கருதப்படாது என்றதாம். (2-1)

435.
அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை
பலவும் எறிந்தார்;
கதிகொடு சிலவர்தொடர்ந்தார்; கணை பலர்
சிலைகள் பொழிந்தார்;
குதிகொடு சிலவர்எழுந்தே குறுகினர்; கதைகொடு
அறைந்தார்;
மதியொடு சிலவர்வளைந்தார்; மழு, அயில், சிலவர்
எறிந்தார்.

கதி – வேகச்செலவு. கதை – தண்டு. (24-1)

436.
அனுமனும்,அவர் விடு படையால், அவர் உடல்
குருதிகள் எழவே,
சின அனல் எழ,ஒரு திணி மா மரம்அதில் உடல்
சிதறிடவும்
தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல
பொடிபடவும்
தினவு உறு புயம்ஒடிபடவும், திசைதிசை ஒரு தனி
திரிவான்.

அவர் படையால் அவர்உடல் குருதி எழச் செய்தான். (24-2)

437.
உரைத்தஎண்பதினாயிர கோடி கிங்கரரோடு
இரைத்த வந்தமாப் பெரும் படை அரக்கர்
எண்ணிலரைத்
தரைத்தலத்தின்இட்டு அரைத்து, ஒரு தமியன்
நின்றது கண்டு,
உருத்து அவ்எண்பதினாயிர கோடியர் உடன்றார்.

எண்பதாயிரம் கோடிகிங்கரரோடு வந்த அரக்கர் மடிந்தனர். (39-1)

438.
சினந்துமற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி,
கனம் துவன்றியதுஎன, கரு மலை என, கடல் போல்
அனந்தனும் தலைதுளக்குற, அமரர்கள் அரவின்
மனம் துளக்குற,வளைத்தனர்,-எண் திசை மருங்கும்.

கனம் துவன்றியது -மேகம் நெருங்கியது. அனந்தன் – ஆதிசேடன்.
(39-2)

439.
எடுத்துஎறிந்தனர் எழு மழுச் சிலர்; சிலர் நெருக்கித்
தொடுத்துஎறிந்தனர் சூலங்கள்; சுடு கதைப்
படையால்
அடித்து நின்றனர்சிலர்; சிலர் அருஞ் சிலைப் பகழி
விடுத்துநின்றனர்-வெய்யவர் விளைந்த வெஞ்
செருவே.

கதை -தண்டு. (39-3)

440.
ஒழிந்திடும்கடை உகத்தினில் உற்ற கார்இனங்கள்
வளைந்து பொன்கிரிமேல் விழும் இடி என,
மறவோர்
பொழிந்த பல்படை யாவையும் புயத்திடைப்
பொடிபட்டு
அழுந்த,மற்றவரோடும் வந்து அடுத்தனன், அனுமன்.

பொன் மலை மேல்விழும் இடி – அனுமன் புயத் திடைப்பட்ட
படைகள். அனுமன் – பொன்மலை. (39-4)

441.
‘கட்டும்’ என்றனர்; ‘குரங்கு இது கடிய கைப்
படையால்
வெட்டும்’என்றனர்; விழி வழி நெருப்பு உக,
விறலோர்
கிட்டி நின்றுஅமர் விளைத்தனர்; மாருதி கிளர் வான்
முட்டும் மா மரம்ஒன்று கொண்டு, அவருடன்
முனைந்தான்.

கிட்டி நின்று -நெருங்கி. வான்முட்டும் மாமரம் – மாமரம் என்றும்
பெரிய மரம் என்றும் கூறலாம். (39-5)

442.
தலைஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின்
நிலை ஒடிந்திடஅடித்தனன்; சிலர்தமை; நெருக்கிச்
சிலை ஒடிந்திடஅடித்தனன், சிலர் தமை; வயப்
போர்க்
கலை ஒடிந்திடஅடித்தனன், அரக்கர்கள் கலங்க.

போர்க்கலை ஒடிந்திட- எதிர்ந்தார் கற்று வைத்திருந்த போர்த்திற
அறிவு இல்லையாம்படி. (40-1)

443.
என்றலும்அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன
நோக்கி
கன்றிய பவழச்செவ் வாய் எயிறு புக்கு அழுந்தக்
கவ்வி,
ஒன்றுஉரையாடற்கு இல்லான், உடலமும் விழியும்
சேப்ப,
நின்ற வாள்அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை.

வாய் எயிறு புக்குஅழுந்தக்கவ்வலும், உடலமும் விழியும் சிவத்தலும்
இராவணன் சினத்தின் மெய்பாடுகள். (61-1)

8. சம்பு மாலிவதைப் படலம்

444.
அது கண்டுஅரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி
அறுநூறு
முதிரும் வயப்போர் மாருதிதன் புயத்தில் மூழ்க
விடுவித்தான்;
புதையுண்டு உருவிப்புறம் போக, புழுங்கி அனுமன்
பொடி எழும்பக்
குதிகொண்டு,அவன் தேர் விடும் பாகன் தலையில்
சிதறக் குதித்தனனால்

அரக்கன் – சம்புமாலி.600 அம்புகளும் அனுமன் புயத்தில் புதைந்து
உருவிப் புறம் போயது. (45-1)

9. பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்

445.
என்று அவர்ஏவு சரங்கள் இறுத்தே,
‘பொன்றுவிர்நீர், இது போது’ என, அங்கு ஓர்
குன்று இரு கைக்கொடு எறிந்து, அவர் கொற்றம்
இன்று முடிந்ததுஎனத் தனி ஆர்த்தான்.

பொன்றுவிர் -அழிவீர். கொற்றம் – வெற்றி. (57-1)

446.
அப்பொழுதுஅங்கு அவர் ஆயிர கோடி
வெப்பு அடை வெஞ்சரம் வீசினர்; வீசி,
துப்புறுவெற்புஅதனைத் துகள் செய்தே;
மெய்ப்படுமாருதிமேல் சரம் விட்டார்.

வெப்பு அடை – வெம்மைபொருந்திய. துப்பு – வலிமை. (57-2)

447.
விட்டசரத்தை விலக்கி, அ(வ்) வீரன்,
வட்ட விசும்புறுமா மரம் வாங்கித்
தொட்டுஎறிதற்கு மு(ன்)னே, துகளாகப்
பட்டிட,வெய்யவர் பாணம் விடுத்தார்.

பாணம் -அம்பு. (57-3)

10.அக்ககுமாரன்வதைப் படலம்

448.
தடுவையின்மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனதுஎல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது
என்ன;
அடு புலி அனையவீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை
நெடு மணிமுழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது
அன்றே.

இப்பாடலை 5737 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (12-1)

449.
பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள்
சுற்ற,
முத்தினில்கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப,
மத்த வெங்கரிகள் யாவும் மழை என இருண்டு
தோன்ற
தத்திய பரிகள்தன்னின் சாமரை தழைப்ப,-போனான்.

இப்பாடலை 5729 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (15-1)

450.
தீய வல்அரக்கர்தம்மில் சிலர் சிலர் செம் பொற்
சின்னம்
வாயின் வைத்துஊத, வீரர் வழி இடம் பெறாது
செல்ல,
காயும் வெங்களிறு, காலாள் கடும் பரி, கடுகிச்
செல்ல
நாயகன்தூதன்தானும் நோக்கினன்; நகையும்
கொண்டான்

இப்பாடலை, 5731 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (16-1)

451.
புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி,
தேர், பொங்க.
கலித்தார்கள்உம்பர் ஓட, கடையுகத்து எறியும்
காலின்
ஒலித்து, ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை
முட்ட
வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின
சரத்தின் மாரி.

இப்பாடலை. 5736ஆம் பாடலோடு ஒப்பிடுக. (23-1)

452.
எடுத்தனன்எழு ஒன்று; அங்கை எடுத்து இகல்
அரக்கர் சிந்தப்
பொடித்தனன்;இரதம், வாசி, பொரு களிறு, இதனை
எல்லாம்
முடித்தனன்,நொடிப்பில்; பின்னும், மூசு போர்
அரக்கர் வெள்ளம்
அடுத்து அமர்கோல, மேன்மேல் அடு படை தூவி
ஆத்தார்.

வாசி -குதிரை. (24-1)

453.
செறி நாண்உரும் ஒலி கொண்டான்; ஒருபது
திசைவாய்கிழிபட அழல்கின்றான்;
‘இறுவாய், இதுபொழுது’ என்றான்; எரி கணை
எழு கார்மழை பொழிவது போல,
பொறிவாய் திசைதொறும் மின் தாரையின் நிலை
பொலியச்சினமொடு பொழிகின்றான்;
உறு மாருதி உடல்உக வெங் குருதிகள்
ஒழியாது,அவனொடு மலைவுற்றான்.

ஒருபது திசை -எண்திசையோடு மேல், கீழ் சேர்ந்து பத்து எனல்
வழக்கு. (32-1)

454.
மலைபோல்உறு புய வலி மாருதி சினம்
வந்துஏறிட, எந்திரமும் தேர்த்
தொலையாது அவன்விடு சர மாரிகள் பல
துண்டப்படும் வகை மிண்டி, தன்
வலி சேர்கரம்அதில் எழுவால் முழுவதையும்
மண்டித்துகள் பட மடிவித்தான்;

புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல்
பொங்கிப்பொரு சிலை விளைவித்தான்.

மிண்டி – நெருங்கி.நிருதன் – அக்ககுமாரன். (32-2)

455.
‘மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும்
உடையான்மகன்’ என வானோர் கண்டு,
ஓய்ந்தார்இலர்,குதி கொண்டார்; உவகையின்
ஒழியா நறுமலர் சொரிகின்றார்;
சாய்ந்தார்நிருதர்கள் உள்ளார் தமர் உடல்
இடறித்திரைமிசை விழ ஓடித்
தேய்ந்தார்சிலர்; சிலர் பிடரியில் குதியடி
பட ஓடினர்;சிலர் செயல் அற்றார்.

அகிலமும் உடையான் -இராவணன். அவன் மகன் அக்ககுமாரன்.
பிடரியில் குதிபடல் – ஓட்டத்தின் விரைவைக் குறிக்கும் வழக்குச்சொல். (38-1)

456.
இன்னனநிகழ்வுழி, இராக்கதக் குழாம்
மன்னியசோதியும், அரக்கன் மைந்தனும்,
தன் நிகர்அனுமனால் இறந்த தன்மையை
முன்னினர் சொல,அவன் முன்பு கேட்டனன்.

மன்னிய சோதி -படைத்திரள் குறிக்கும் சொல் போலும். (47-1)

457.
அவ் வகைகண்டவர் அமரர் யாவரும்,
‘உய்வகை அரிது’என ஓடி, மன்னவன்
செவ்அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்,
எவ் வகைப்பெரும் படை யாவும் மாய்ந்ததே.

மன்னவன் – இராவணன் -அமரர் – பருவத்தேர். (47-2)

458.
ஈது மற்றுஇசைவுற, இது கண்டு ஏங்கியே
மா துயரத்தொடுமறுகு நெஞ்சுடைத்
தூதர் உற்றுஓடினர்; தொழுது, மன்னனுக்கு
ஓதினர்; ஓதல்கேட்டு, உளம் துளங்கினான்.

தூதர் – பருவத்தேவர்.மன்னன் – இராவணன். (47-3)

459.
நாடினார்;நாடியே, நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர்தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ்வயின், வெருவி விண்ணவர்கள்தாம்
ஓடினார்;அரசன்மாட்டு அணுகி நின்று உரை
செய்வார்;

விண்ணவர் -பருவத்தேவர் நனைவரும் கொம்பு – அரும்பு தளிர்க்கும்
கொம்பை ஒத்தவர் (47-4)

.460.
“மைந்தனைமடித்தது குரங்கு” என்று ஓதவும்
வந்தது போலும்,நம் வாழ்வு நன்று !’ எனா,
சிந்தையின்அழன்று, எரி விழித்து, ‘சென்று, நீர்
இந்திரன்பகைஞனைக் கொணருவீர்’ என்றான்.

மைந்தன் -அக்ககுமாரன். இந்திரன் பகைஞன் – இந்திரசித்து. (49-1)

461.
என்றலும்,ஏவலுக்கு உரியர் ஓடியே
சென்று, மற்றுஅவன் அடி பணிந்து, தீமை வந்து
ஒன்றியதிறங்களும் உரைத்து, ‘நுந்தையும்
இன்று உனைக்கூவினன்’ எனவும் சொல்லினார்.

ஏவலர் -இந்திரசித்தை அழைத்தபடி. (49-2)

11.பாசப்படலம்

462.
என்றே,‘இவன் இப்பொழுது என்கையினால்
மடிந்தால்
நன்றே மலர்மேல்உறை நான்முகன் ஆதி தேவர்,
“பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர்
போற்றுதற்கு
நின்றே துயர்தீர நிறுத்தினன்” என்ப மன்னோ.’

இவன் -இந்திரசித்து. ‘என்கையால் மடிந்தால் பிரமன் முதலிய
தேவர்கள் நம்துன்பம் நீங்கச் செய்தான் என்று சொல்வர்’ என்று அனுமன்
நினைத்ததாம். (50-1)

463.
எழுந்தான்;எழுந்த பொழுது, அங்கு அரக்கரும்
எண்இல் கோடி
பொழிந்தார்படைகள்; அவை யாவையும் பொடிந்து
சிந்திக்
கழிந்து ஓடிட,தன் கை மராமரம் கொண்டு வீசி,
செழுந் தார்ப்புயத்து அண்ணல் செறுத்து, உடன்
மோதலுற்றான்.

செழுந்தார்ப்புயத்துஅண்ணல் – அனுமன். பெயராய் நின்றது. (53-1)

464.
செறுத்துஎழுந்திடும் அரக்கர்கள் திசை திசை
நெருக்கி,
மறித்து வெஞ்சமர் மலைதலும், மாருதிக் கடவுள்
கறுத்து வஞ்சகர்சிரத்தொடு கரம் புயம் சிதறிப்
பொறித்தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை
மரத்தால்.

பொறி தெறித்திட -நெருப்புப் பொறி பறக்க. (59-1)

465.
புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப்
பொறியின்
தகைந்து, மற்றுஅவர் உடல்களைத் தலைகளைச்
சிதறி,
மிகும் திறல்கரி, பரி, மணித் தேர், இவை விளிய,
புகுந்துஅடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார்.

பொறியின் தகைந்து -கலை வன்மையால் தடுத்து. (59-2)

466.
எடுத்து நாண்ஒலி எழுப்பினன்; எண் திசைக்
கரியும்
படித் தலங்களும்வெடி பட, பகிரண்டம் உடைய,
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம்
கொண்டு
அடுத்து, அம்மாருதி அயர்ந்திட, அடு சரம்
துரந்தான்

இந்திரசித்துவின்செயல் (71-1)

12. பிணி வீட்டுபடலம்

467.
இனையனபற்பலர் இசைப்ப, வெந் திறல்
அனுமனை அமர்க்களம்நின்று, வஞ்சகர்
புனை திருநகரிடைக் கொண்டு போதலை
நினையினர்,நெடிதுற நெருக்கி நேர்ந்துளார்.

வஞ்சகர் அனுமனைப்பிணித்து நகர்க்குக் கொண்டு செல்லுதலை
நினைந்து நெருக்குகிறார்கள். (17-1)

468.
என்னக்கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத்
தன் ஓர்ஆற்றலின் மாருதி சாற்றுவான்;
‘என் ஓர்நாயகன் ஏவலின், வாரிதி-
தன்னைத் தாண்டிவந்தேன், உனைக் காணவே.’

வாரிதி – கடல்.உனை – இங்கு இராவணனை. (108-1)

469.
தன் உறைக்குஉறுகண் வெய்யோர்தாம் இயற்றலும்
கேட்டு, ‘இன்னே,
அன்னவர்க்குஇறுதி ஆக, அணி நகர் அழிப்பல்’
என்னா,
செந் நிறச்சிகைய வெம் போர் மழு, பின்னர்ச்
சேறல் ஓக்கும்-
அல் நிறத்துஅண்ணல் தூதன் அனல் கெழு
கொற்ற நீள் வால்.

தன் இறை – இராமன்.உறுகண் – துன்பம். அனுமன் வால். மழு
பின்னால் செல்வது போன்றது. மழு – நெருப்புப்படை. அனுமன் வாலில்
நெருப்பு வைத்தபடியால் அது திருமாலின் மழு போன்றதாயிற்று. (135-1)

470.
உகக் கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன்
நாட்டம்
சிகைக் கொழுங்கனலை வீசும் செயல் முனம்
பயில்வான் போல,
மிகைத்து எழுதீயர் ஆயோர் விரி நகர் வீய; போர்
வால்-
தகைத்தல் இல்நோன்மை சாலும் தனி வீரன்-
சேணில் உய்த்தான்.

உகக்கடை – ஊழிமுடிவு.உணங்குற – காய. தனிலீரன் – அனுமன்.
(136-1)

13. இலங்கைஎரியூட்டு படலம்

471.
தெய்வநாயகி கற்பு எனும் செந் தழல்
பெய்து மாருதிவாலிடைப் பேணியே,
பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம்
வெய்தின் உண்டதகைமை விளம்புவாம்.

சீதையின் கற்பு எனும்நெருப்பு மாருதி வாலிடைப் பாதுகாக்கப்பட்டு
வஞ்சகப் புல்லர் நகரை அழித்தது என்றார்.

(முதற்செய்யுள்)

472.
தேர்எரிந்தன; எரிந்தன திரள் பரி எவையும்;
தார் எரிந்தன;எரிந்தன தருக்கு உறு மதமா;
நீர் எரிந்தன;எரிந்தன நிதிக் குவை; இலங்கை
ஊர் எரிந்தன;எரிந்தன அரக்கர்தம் உடலம்.

தார் – மாலை. நீர்எரிதல் தீயின் மிகுதியால். (37-1)

473.
எரிந்தமாளிகை; எரிந்தன இலங்கு ஒளிப் பூண்கள்
எரிந்த பூந்துகில்; எரிந்தது முரசுஇனம் முதலாய்;
எரிந்த மாமணிப்பந்தர்கள்; எரிந்தது கடிகா;
எரிந்த சாமரை;எரிந்தது வெண்குடைத் தொகுதி.

கடி கா – காப்பமைந்த சோலை. (37-2)

474.
ஆடு அரங்குகள் எரிந்தன; அரக்கியர் சிறுவ-
ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த;
தேடு அரும் மணிச்சிவிகையோடு அருந் திறல்
அரக்கர்
வீடு எரிந்தன;எரிந்திடாது இருந்தது என், வினவில் ?

சிவிகை – பல்லக்கு.உலப்பு இல் – வற்றுதலற்ற. (37-3)

475.
இனையகாலையில் மயனும் முன் அமைத்தற்கு
இரட்டி
புனைய, மாருதிநோக்கின், இன்னன புகல்வான்;
‘வனையும் என்உருத் துவசம் நீ பெறுக’ என,
மகிழ்வோடு
அனையன்நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான்.

மயன் – தெய்வத்தச்சன். மயனுக்கு மிகுதி கூறியதாகிய செய்தி
புலப்படவில்லை. அனலி – தீ. (37-4)

476.
‘தா இல்மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின்,
தமக்கே
மேவும், அத்துயர்’ எனும் பொருள் மெய்யுற,
மேல்நாள்
தேவர்தம்பதிக்கு இராவணன் இட்ட செந்
தழல்போல்,
ஓவிலாது எரித்துஉண்டமை உரைப்பதற்கு எளிதோ ?

அழகான கருத்து.‘மேலோர்க்குத் துன்பம் செய்தால் அத்துயர் தமக்கே
வரும்’ என்பதற் கிணங்க. அமராவதிக்கு இராவணன் இந்திரசித்து மூலமாக
இட்ட நெருப்பு இலங்கையை எரி்த்தது என்பதாம். (43-1)

477.
மற்று ஒருகோடியர் வந்தார்;
உற்று எதிர் ஓடிஉடன்றார்;
கற்று உறு மாருதிகாய்ந்தே,
சுற்றினன்வால்கொடு, தூங்க.

உடன்றார் -சீறினார். (58-1)

478.
உற்றவர் யாரும் உலந்தார்;
மற்றுஅதுபோதினில் வானோர்
வெற்றி கொள்மாருதிமீதே
பொன் தரு மா மலர் போர்த்தார்.

உலந்தார் -வற்றினார். பொன்தரு – கற்பகம். (60-1)

479.
வன் திறல்மாருதி கேண்மோ !
நின்றிடின், நீபழுது; இன்றே
சென்றிடுவாய் !’என, தேவர்
ஒன்றிய வானில்உரைத்தார்.

தேவர் அனுமனைச்செல்லப் பணித்தனர். (60-2)

480.
விண்ணவர்ஓதிய மெய்ம்மை
எண்ணி, ‘இராமனைஇன்றே
கண்ணுறலே கடன்’என்று, ஆங்கு
அண்ணலும் அவ்வயின் மீண்டான்,

கண்ணுறல் -சந்தித்தல். (60-3)

481.
வாலிதின்ஞான வலத்தால்,
மாலுறும் ஐம் பகைமாய்த்தே,
மேல் கதிமேவுறும் மேலோர்
போல், வயமாருதி போனான்.

வாலிதின் -தூய்மையான. ஐம்பகை – ஐம்பொறிகளாய பகை. மேல்கதி
செல்லும் மேலோர் போல் அனுமன் வானவழியில் இலங்கையினின்று
சென்றான். (63-1)

14. திருவடி தொழுதபடலம்

482.
போயினர்களிப்பினோடும், புங்கவன் சிலையின்
நின்றும்
ஏயின பகழி என்னஎழுந்து, விண் படர்ந்து, தாவி,
காய் கதிர்க்கடவுள், வானத்து உச்சியில் கலந்த
காலை,
ஆயின வீரரும்போய், மதுவனம் அதில் இறுத்தார்.
வானரர் இராமன்அம்பு போல் சென்றனர்; நன்பகலில் மதுவனம்
சேர்ந்தார். (11-1)

483.
“ஏத நாள்இறந்த சால” என்பது ஓர் வருத்தம்
நெஞ்சத்து
ஆதலான், உணர்வுதீர்ந்து வருந்தினம், அளியம்;
எம்மைச்
சாதல் தீர்த்துஅளித்த வீர ! தந்தருள் உணவும்’
என்ன,
‘போதும் நாம்,வாலி சேய்பால்’ என்று, உடன்
எழுந்து போனார்.

இப்பாடலை 6018ஆம்பாடலுடன் ஒப்பிடுக. வீர ! – அனுமனே. வாலி
சேய் – அங்கதன். (11-2)

484.

அங்கதன்தன்னை அண்மி, அனுமனும் இரு கை
கூப்பி
‘கொங்கு தங்குஅலங்கல் மார்ப ! நின்னுடைக்
குரக்குச் சேனை,
வெங் கதம்ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;
இங்கு, இதற்குஅளித்தல் வேண்டும், இறால் உமிழ்
பிரசம்’ என்றான்.

கதம் – கோபம்.இங்கே வேகம் எழுச்சி எனலாம். வேடை களைப்பு.
(11-3)

485.
‘நன்று’ என,அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க
ஆர்த்து,
சென்று, உறுபிரசம் தூங்கும் செழு வனம்
அதனினூடே,
ஒன்றின் முன்ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென்
பிரசம் எல்லாம்
தின்றுதின்றுஉவகைகூரும்-தேன் நுகர் அளியின்
மொய்த்தே.

நரலை – கடல். மதுவனம்அழித்தல். (11-4)

486.
ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு
ஒழிவர்; உண்ண
ஒருவர் கைக்கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு
ஓடிப் போவர்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி
ஒருவர்மேல்ஒருவர் தாவி ஒல்லென உவகை
கூர்வார்.

மதுவனத்தில்குரங்குகளின் கூத்தாட்டம். (11-5)

487.
இன்னனநிகழும்காலை, எரி விழித்து, எழுந்து சீறி,
அந் நெடு்ஞ்சோலை காக்கும் வானரர் அவரை
நோக்கி,
‘மன் நெடுங்கதிரோன் மைந்தன் ஆணையை
மறுத்து, நீயிர்,
என் நினைத்துஎன்ன செய்தீர் ? நும் உயிர்க்கு
இறுதி’என்ன.

மதுவனக் காவலர்அச்சுறுத்தல் (11-6)

488.
‘முனியுமால் எம்மை, எம் கோன்’ என்று, அவர்
மொழிந்து போந்து,
‘கனியும் மாமதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,
நனி தரு கவியின்தானை, நண்ணலார் செய்கை
நாண;
இனி எம்மால்செயல் இன்று’ என்னா, ததிமுகற்கு
இயம்பினாரே.

ததிமுகன் – மதுவனக்காவல் தலைவன்; இவன் சுக்கிரீவன் ஏவலால்
மதுவனம் காக்கும் வானரன். (11-7)

489.
கேட்டவன்,‘யாவரே அம் மதுவனம் கேடு
சூழ்ந்தார் ?
காட்டிர்’ என்றுஎழுந்தான்; அன்னார்,‘வாலி சேய்
முதல கற்றோர்
ஈட்டம் வந்துஇறுத்தது ஆக, அங்கதன் ஏவல்
தன்னால்,
மாட்டின,கவியின் தானை, மது வளர் உல வை
ஈட்டம்.

மதுவளர் உலவை -தேன்கூடு. (11-8)

490.
‘உரம் கிளர் மதுகையான்தன் ஆணையால், உறுதி
கொண்டே,
குரங்கு இனம்தம்மை எல்லாம் விலக்கினம்;
கொடுமை கூறி;
கரங்களால் எற்றநொந்தேம்; காலலோய் !’
என்னலோடும்,
‘தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தநயன்
போலும்.’

தாதை – வாலி – தநயன்- அங்கதன். (11-9)

491.
என உரைத்து,அசனி என்ன எழுந்து, இரைத்து,
இரண்டுகோடி
கனை குரல்கவியின் சேனை ‘கல்’ எனக் கலந்து
புல்ல,
புனை மதுச் சோலைபுக்கான்; மது நுகர் புனிதச்
சேனை,
அனகனைவாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.

அசனி – இடி. அனகன் -இராமன். (11-10)

492.
‘இந்திரன்வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின்
கானம்;
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை
தன்னைச்
சிந்தினை;கதிரோன் மைந்தன் திறலினை அறிதி
அன்றே ?
மந்தரம் அனையதோளாய் ! இற்றது உன் வாழ்க்கை
இன்றே.

ததிமுகன்அங்கதனை நோக்கிக் கூறியது. (11-11)

493.
‘மதுவனம்தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ’
என்னா,
கதுமென வாலிசேய்மேல் எறிந்தனன், கருங் கற்
பாறை;
அதுதனைப்புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,
ததிமுகன்தன்னைப்பற்றிக் குத்தினன், தடக்
கைதன்னால்.

ததிமுகன் அங்கதன் போர். (11-12)

494.
குத்தினன்என்னலோடும், குலைந்திடும் மெய்யன்
ஆகி,
மற்று ஒருகுன்றம்தன்னை வாங்கினன்,
மதுவனத்தைச்
செற்றனன்மேலேஏவிச் சிரித்தனன், ததிமுகன்தான்;
‘இற்றனன், வாலிசேய்’ என்று இமையவர் இயம்பும்
காலை,

செற்றனன் -அங்கதன். (11-13)

495.
ஏற்று ஒருகையால் குன்றை இருந் துகள் ஆக்கி,
மைந்தன்
மாற்று ஒருகையால் மார்பில் அடித்தலும்,
மாண்டான் என்ன,
கூற்றின் வாய்உற்றான் என்ன, உம்பர் கால்
குலையப் பானு
மேல் திசைஉற்றான் என்ன, விளங்கினன், மேரு
ஒப்பான்.

பானு- சூரியன் (11-14)

496.
வாய் வழிக்குருதி சோர, மணிக் கையால் மலங்க
மோதி,
‘போய் மொழி, கதிரோன்மைந்தற்கு’ என்று, அவன்
தன்னைப்போக்கி,
தீ எழும் வெகுளிபொங்க, ‘மற்று அவன்
சேனைதன்னை,
காய் கனல்பொழியும் கையால் குத்துதிர், கட்டி’
என்றான்.

ததிமுகனை அடித்துசுக்கிரீவன் பால் சென்று சொல்க என்று அங்கதன்அனுப்புதல். (11-15)

497.
பிடித்தனர்;கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும்
முன்னும்
இடித்தனர், அசனிஅஞ்ச, எறுழ் வலிக் கரங்கள்
ஓச்சி;
துடித்தனர்,உடலம் சோர்ந்தார்; ‘சொல்லும் போய்
நீரும்’ என்னா,
விடுத்தனன்,வாலி மைந்தன்; விரைவினால் போன
வேலை,

ததிமுகன்சேனையினரை அங்கதன் சேனையைச் சேர்ந்தவர்
செய்தபடியைக் கூறியது. (11-16)

498.
அலை புனல் குடையுமாபோல், மதுக் குடைந்து ஆடி,
தம்தம்
தலைவர்கட்குஇனிய தேனும் கனிகளும் பிறவும்
தந்தே,
உலைவுறு வருத்தம்தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்;
இப்பால்
சிலை வளைத்துஉலவும் தேரோன் தெறும் வெயில்
தணிவு பார்த்தே.

மாலை நேரம் வருவதுபார்த்து மதுவுண்டு தேன், கனி, பிறவற்றைத்
தலைவர்களுக்குத் தந்து அங்கதன் சேனையினர் இருந்தபடி. 11-1 (482) முதல்
11-16 (498) வரை உள்ளபதினேழு பாடல்கள் வானரவீரர்கள் மதுவனம்
அழித்தமை கூறியது. (11-17)

499.
‘சேற்று இளமரை மலர்த் திருவைத் தேர்க !’ எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,
நாற்றிசைமருங்கினும் ஏவி, நாயகன்-
தேற்றினன்இருந்தனன்-கதிரின் செம்மலே.

மரை – தாமரை;முதற்குறை, கதிரின் செம்மல் – சுக்ரீவன். (12-1)

500.
நோக்கின்தென் திசை அல்லது நோக்குறான்,
ஏக்குற்றுஏக்குற்று இரவி குலத்து உளான்,
‘வாக்கில் தூயஅனுமன் வரும்’ எனா,
போக்கிப்போக்கி, உயிர்க்கும் பொருமலான்.

இராமன் அனுமனை ஏவிஎதிர்பார்த்து இருந்தவாறு கூறியது. (14-1)

501.
என்றுஉரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின்
வன் திறல்ததிமுகன் வானரேசன் முன்,
தன் தலைபொழிதரு குருதிதன்னொடும்,
குன்று எனப்பணிந்தனன், இரு கை கூப்பியே.

மதுவனக் காவலன்ததிமுகன் சுக்ரீவனைக் காணல். இது முதல் இருபது
பாடல்கள் ததிமுகன் வருகையால் வானரர் சீதையைக் கண்டு இனிது திரும்பிய
படியைக் குறிப்பால் அறிந்தது கூறப்பெறுகிறது. (19-1)

502.
எழுந்துநின்று, “ஐய ! கேள், இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம்அடைய’ என்றலும்,
வழிந்திடுகுருதியின் வதனம் நோக்கியே,
‘மொழிந்திடு,அங்கு யார் அது முடித்துளோர் ?’ என,

ததி முகன்கூற்று. (19-2)

503.
‘நீலனும், குமுதனும், நெடிய குன்றமே
போல் உயர்சாம்பனும், புணரி போர்த்தென
மேல் எழுசேனையும், விரைவின் வந்து உறா,
சால்புடைமதுவனம்தனை அழிப்பவே.

நீலன், குமுதன்,சாம்பன், வானர சேனைகள் மதுவனம் அழித்தார்
என்று ததிமுகன் கூறல். (19-3)

504.
தகைந்த அச்சேனையைத் தள்ளி, நின்னையும்,
இகழ்ந்துஉரைத்து, இயைந்தனன் வாலி சேய்;
மனக்கு
உகந்தன புகன்றஅவ் உரை பொறாமையே,
புகைந்து, ஒருபாறையின் புணர்ப்பு நீக்கியே,

அங்கதன் செயல்கூறியது (19-4)

505.
‘இமைத்தல்முன், “வாலி சேய், எழில் கொள்
யாக்கையைச்
சமைத்தி” என்றுஎறிதர, புறங்கையால் தகைந்து,
அமைத்தரு கனல்என அழன்று, எற் பற்றியே
குமைத்து, உயிர்பதைப்ப, “நீ கூறு போய்” என்றான்.

அங்கதன் என்னை அடித்து‘நீ போய் கூறு’ என அனுப்பினான் என்று
ததிமுகன் கூறல். (19-5)

506.
‘இன்று நான்இட்ட பாடு இயம்ப முற்றுமோ ?’
என்று உடல்நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,
அன்று அவன்உரைத்தல் கேட்டு, அருக்கன்
மைந்தனும்
ஒன்றியசிந்தையில் உணர்ந்திட்டான் அரோ.

ததிமுகன்கூற்றால் சுக்ரீவன் உணர்தல். (19-6)

507.
ஏம்பலோடுஎழுந்து நின்று, இரவி கான்முளை,
பாம்பு அணைஅமலனை வணங்கி, “பைந் தொடி
மேம்படுகற்பினள்” என்னும் மெய்ம்மையைத்
தாம்புகன்றிட்டது, இச் சலம்’ என்று ஓதினான்.

ததிமுகனுக்கும் வானரவீரர்க்கும் நிகழ்ந்த இச்சண்டை ‘பிராட்டி
மேம்படு கற்பினள்’ என்பதை நமக்குத் தெரிவிக்கிறது என்று சுக்ரீவன்
இராமனிடம் கூறல். (19-7)

508.
‘பண் தரு கிளவியாள்தன்னைப் பாங்குறக்
கண்டனர்; அன்னதுஓர் களிப்பினால், அவர்
வண்டு உறைமதுவனம் அழித்து மாந்தியது;
அண்டர் நாயக !இனி அவலம் தீர்க’ என்றான்.

சீதையைக் கண்டமகிழ்ச்சியால் வானரர் ‘மதுவனம் அழித்து மாந்தியது’
என்று சுக்ரீவன் உணர்த்துதல். (19-8)

509.
‘வந்தனர்தென் திசை வாவினார்’ என,
புந்தி நொந்து,‘என்னைகொல் புகலற் பாலர் ?’ என்று
எந்தையும்இருந்தனன்; இரவி கான்முளை,
நொந்த அத்ததிமுகன்தன்னை நோக்கியே.

சுக்ரீவன் ததிமுகனை வினாவுதல். (19-9)

510.
‘யார் அவண்இறுத்தவர், இயம்புவாய் ?’ என,
‘மாருதி, வாலிசேய், மயிந்தன், சாம்பவன்,
சோர்வு அறுபதினெழுவோர்கள் துன்னினார்,
ஆர்கலி நாணவந்து ஆர்க்கும் சேனையார்.’

ததிமுகன்பதில் (19-10)

511.
என்று,அவன் உரைத்த போது, இரவி காதலன்,
வன் திறல்ததிமுகன் வதனம் நோக்கியே,
‘ஒன்று உனக்குஉணர்த்துவது உளது; வாலி சேய்,
புன் தொழில்செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.

அங்கதன்நல்லவனே என்று ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல்.
(19-11)

512.
‘கொற்றவன்பணி தலைக்கொண்டு, தெண் திரை
சுற்றிய திசைஎலாம் துருவி, தோகையைப்
பற்றியபகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து
உற்றனர்; அவரையாம் உரைப்பது என்னையோ ?

அரசுப்பணி மேற்கொண்டு திரும்பியவர்களைக் கடிதல் ஒல்லாது என
சுக்ரீவன் உணர்த்தல். (19-12)

513.
‘அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின்,
பின்றுதல்தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய் !
ஒன்றும் நீஉணரலை; உறுதி வேண்டுமேல்,
சென்று,அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு’
என்றான்.

அங்கதன் இளவரசன்ஆகவே அவனையே சரணமாக அடை என்று
ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல். (19-13)

514.
என்ற அத்ததிமுகன் தன்னை, ஏனைய
வன் திறல் அரசுஇளங் குரிசில் மைந்தனைப்
பின்றுதல் அவனைஎன் பேசற் பாற்று நீ;
இன்று போய்,அவன் அடி ஏத்துவாய்’ என்றான்.

இதுவும்அது. (19-14)

515.
வணங்கியசென்னியன்; மறைத்த வாயினன்;
உணங்கியசிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;
கணங்களோடு ஏகி,அக் கானம் நண்ணினான்-
மணம் கிளர்தாரினான் மறித்தும் வந்துஅரோ.

மீண்டும் ததிமுகன்மதுவனம் வருதல். (19-15)

516.
கண்டனன்வாலி சேய்; கறுவு கைம்மிக,
‘விண்டவன், நம்எதிர் மீண்டுளான்எனின்,
உண்டிடுகுதும்உயிர்’ என்ன, உன்னினான்;
‘தொண்டு’ என,ததிமுகன், தொழுது தோன்றினான்.

அங்கதன் கோபிக்கவும்ததிமுகன் அவன் அடி பணிதலும். (19-16)

517.
‘போழ்ந்தனயான் செய்த குறை பொறுக்க !’ எனா,
வீழ்ந்தனன்அடிமிசை; வீழ, வாலி சேய்,
தாழ்ந்து, கைப்பற்றி, மெய் தழீஇக்கொண்டு,
‘உம்மை யான்
சூழ்ந்ததும்பொறுக்க !’ எனா, முகமன் சொல்லினான்.

ததிமுகனும் அங்கதனும்ஒருவர்க்கொருவர் மன்னி்ப்புக் கேட்டு
சமாதானம் அடைதல். (19-17)
‘யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற, துயர்துடைத்து, அளித்த ஏற்றம்போல்,
தாமரைக்கண்ணவன் துயரம் தள்ள, நீர்
போம்’ என,தொழுது, முன் அனுமன் போயினான்.

அனுமனை முன்னர்இராமனிடம் அனுப்பல். (19-18)

519.
‘வன் திறல்குரிசிலும் முனிவு மாறினான்;
வென்று கொள்கதிரும் தன் வெம்மை ஆறினான்’
என்றுகொண்டு,யாவரும், ‘எழுந்து போதலே
நன்று’ என,ஏகினார், நவைக்கண் நீங்கினார்.

அனைவரும் மாலையில்மதுவனத்திருந்து புறப்படுதல். (19-19)

520.
இப்புறத்துஇராமனும், இரவி சேயினை
ஒப்புற நோக்கி,‘வந்துற்ற தானையர்;
தப்பு அறக்கண்டனம் என்பரோ ? தகாது
அப்புறத்துஎன்பரோ ? அறைதியால் !’ என்றான்.

இராமன் சுக்ரீவனைப்பார்த்து வினாவுதல். இதுவரை மதுவன
நிகழ்ச்சிக்குப் பின் நடந்தவை கூறப்பெற்றன. (19-20)

521.
வனை கருங்குழலியைப் பிரிந்த மாத் துயர்
அனகனுக்கு அவள்எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்தபேர் உவகை மாட்சி கண்டு,
அனுமனும்அண்ணலுக்கு அறியக் கூறுவான்;

இராமன் மகிழ்ச்சியும்அனுமன் கூற்றும். (23-1)

522.
மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால்
வைத்த
சேண் பிறந்துஅமைந்த காதல், கண்களின் தெவிட்டி,
தீராக்
காண்பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம்
தன்னுள்,
ஆண் பிறந்துஅமைந்த செல்வம் உண்டனையாதி
அன்றோ ?

‘கற்பிற் சிறந்த ஒருபெண்ணின் உயரிய காதலை அப்பெண் தன்
கண்களில் திரட்டி வைத்துக் கொண்டு உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
செல்வம் பெற்ற நீயே உலகில் ஆடவராய்ப் பிறந்தவர் பெற வேண்டிய
செல்வத்தை முழுதும் பெற்றவனாக ஆனாய்’ என்று அனுமன் இராமனைப்
பாராட்டிய இப்பாடல் உயர்ந்த கருத்துடையதாகும். (35-1)

523.
‘அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர்
எனினும், ஐய !-
எயில் புனைஇலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு
ஏற்ற
மயில் புரைஇயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே
உயிர்ப்பொடும்,உயிரினோடும், ஊசல் நின்று
ஆடுவாரும்.’

இலங்கையில் ஆடவரும்மகளிரும் நுகர்ந்து நிற்கும் தன்மை கூறியது.
(35-9)

524.
ஆயிடை,கவிகளோடும், அங்கதன் முதலினாயோர்
மேயினர்,வணங்கிப் புக்கார், வீரனை, கவியின்
வேந்தை;
போயின கருமம்முற்றிப் புகுந்தது ஓர் பொம்மல்
தன்னால்,
சேயிரு மதியம்என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார்.

அங்கதன் முதலியோர் வருகை. (47-1)

525.
நீலனை நெடிதுநோக்கி, நேமியான் பணிப்பான்;
‘நம்தம்-
பால் வரும்சேனைதன்னைப் பகைஞர் வந்து அடரா
வண்ணம்,
சால்புறமுன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி,
மால் தரு களிறுபோலும் படைஞர் பின் மருங்கு
சூழ.’

இராமன் நீலனைநோக்கிச் சேனைகளை அழைத்துக் கொண்டு நேர்
வழியை ஆராய்ந்து செல்க எனப் பணித்தல். (49-1)

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை
கூப்பி,
‘புன் தொழில்குரங்கு எனாது என் தோளிடைப்
புகுது’ என்னா,
தன் தலை படியில்தாழ்ந்தான்; அண்ணலும், சரணம்
வைத்தான்;
வன் திறல் வாலிசேயும் இளவலை வணங்கிச்
சொன்னான்;

இராமன் அனுமன் மேல்வீற்றிருத்தல். (49-2)

527.
‘நீ இனிஎன்தன் தோள்மேல் ஏறுதி, நிமல !’ என்ன,
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை
நோக்கி,
நாயகற்கு இளையகோவும். ‘நன்று’ என அவன்தன்
தோள்மேல்,
பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது
அன்றே.

இலக்குவன்அங்கதன் தோள் மேல் ஏறுதல். (49-3)

528.
கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப,
காலின்
அருள் தரு குமரன்தோள்மேல், அங்கதன் அலங்கல்
தோள்மேல்,
பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில்
தங்கும்
தெருள் தகு புலவர்வாழ்த்திச் சிந்தினர், தெய்வப்
பொற் பூ.

திருமாலும்,சிவபெருமானும் போல இராமலக்குவர்; கருடனும், விடையும்
போல அனும அங்கதர் தோள் மேல் ஏறிப் புறப்படுதல். (49-4)

529.
‘வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்,வய வெஞ்
சேனை
எய்திடின்’என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,
பெய் கனி,கிழங்கு, தேன் என்று இனையன
பெறுதற்கு ஒத்த
செய்ய மால்வரையே ஆறாச் சென்றது, தகைப்பு
இல் சேனை.

நாடுவழியாகச்சென்றால் மக்கள் மயங்கி வருந்துவர் என்று கருதிய
இராமன் ஏவ, வானர சேனை கனி, கிழங்கு, தேன் பெறுவதற்கு ஒத்த மலை
வழியாகத் தெற்கு நோக்கிச் சேறல். (49-5)

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: