ஸ்ரீ கம்ப ராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/மிகைப் பாடல்கள்-

2. அனுமப் படலம்

312. அன்ன ஆம் என வெருவி,
அங்கண் நில்லாது, அருகு
துன்னு வானரர்களொடு தோம்
இலா மேரு நிகர்
என்னும் மாமலை முழையில்
எய்தினார்; எய்தியபின்,
நல் நலம் தெரி மனதின்
நாடி மாருதி மொழியும்:
முழை -குகை 2-1

313. தாரன், நீலனை, மருவு
தாம மாருதியை, முதல்
வீரரோடு, இரவிசுதன், மேரு
மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு
பாகம் ஓடுதல் புரிய,
ஆர மார்பரும், அதனின்
ஆகுமாறு உறல் கருதி,
இரவி சுதன் -சூரியன் மகனாகிய சுக்கிரீவன் 2-2

314. மானை நாடுதல் புரிஞர் –
‘வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு’ என மறுகி, ஆவி
சோர் நிலையர், தொடர்
ஏனைவானரர் சிலரும் ஏக,
மா முழையில், முழு
ஞான நாதரை, அறிவின்
நாடி, மாருதி மொழியும்:
மான் – மான்போல்வாளாகிய சீதை; நாடுதல் புரிஞர் – தேடுதலாகிய
பணியைச் செய்வோர். 2-3

315. உலகு தங்கிய பல தொல்
உயிர்கள் உயர்ந்திடு பரிசில்
இலகும் இங்கிதம் உடையர்;
இசையின் இன்புறு சுருதி
அலகு இல் விஞ்சைகள் உடையர்;
அகிலமும் தொழு கழலர்;
விலகு திண் கொடு வினைகள்
வெகுளிகொண்டு அடு விறலர்.
இங்கிதம் – குறிப்பு; விஞ்சைகள் – வித்தைகள் 8-1

316. சிவனும் அம்புய மலரில்
அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி
எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு
தொடரு செங்கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன்
உலகில் வந்ததுகொல் என.
அம்புய மலர் – தாமரை மலர்; இந்திரை – திருமகள்; கொழுநன் –
கணவன். 8-2

317. ‘மற்றும் இவ் உலகத்து உள்ள
முனிவர், வானவர்கள், ஆர், இச்
சொல் திறம் உடையார்? மற்று
எச் சுருதியின் தொகுதி யாவும்
முற்று அறிதரும் இம் மாணி
மொழிக்கு எதிர், முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும், பேர்
ஆற்றல் அரிது மன்னோ.’
சுருதி – வேதம் (கேட்கப்படுவது); மாணி – பிரமசாரி 19-1

318. இருக்கண் மா மைந்தரான
வாலியும், இளவல்தானும்,
செருக்கினோடு இருக்கும்காலை, செறுநரின்
சீறி வாலி
நெருக்குற, வெருவி, இந்த நெடுங்
குவட்டு இறுத்தான் தன்பால் –
மருக் குலாம் தாரீர்! – வந்தது
அவன் செய் மா தவத்தின் அன்றோ?
இருக்கண் – பிரமன்; நெடுங்குவடு – பெரிய மலை. 21-1

3. நட்புக் கோட் படலம்

319. ‘பிரிவு இல் கான்
அதுதனில், பெரிய சூர்ப்பணகைதன்
கரிய மா நகிலொடும்,
காதொடும், நாசியை
அரியினார்; அவள்
சொல, திரிசிராஅவனொடும்,
கரனொடும், அவுணரும், காலன்
வாய் ஆயினார்.
அரியினார் – அறுத்தனர 10-1

320. கடுத்து எழு தமத்தைச் சீறும்
கதிர்ச் சுடர்க் கடவுள் ஆய்ந்து
வடித்த நூல் முழுதும் தான்
ஓர்வைகலின், வரம்பு தோன்றப்
படித்தவன் வணங்கி, வாழ்த்தி,
பருமணிக் கனகத் தோள் மேல்
எடுத்தனன், இரண்டுபாலும்
இருவரை; ஏகலுற்றான்.
நமம் – இருள். 29-1

321. ‘இவன், உலைந்து உலைந்து,
எழு கடல் புறத்து
அவனியும் கடந்து,
எயில் அடைந்தனன்;
கவனம் ஒன்று இலான்,
கால் கடாயென,
அவனி வேலை ஏழ்,
அரியின் வாவினான்.
உலைந்து – தோற்று; எயில் – மதில் (இங்கே புற அண்டத்து
எல்லையிலுள்ள மதில்); கவனம் – கலக்கம்; கால் – காற்று; வாவினான் –
தாவினான். 64-1

322. ‘என்று கால்மகன்
இயம்ப, ஈசனும்,
”நன்று நன்று” எனா,
நனி தொடர்ந்து பின்
சென்ற வாலிமுன்
சென்ற செம்மல்தான்
அன்று வாவுதற்கு
அறிந்தனன்கொலாம்?’
கால்மகன் – வாயு தேவனின் மகன் (அனுமன்); ஈசன் – (இங்கே)
இராமபிரான். 64-2

323. இனையவா வியந்து
இளவல் தன்னொடும்,
வனையும் வார் கழல்
கருணை வள்ளல், பின்பு,
‘இனைய வீரர் செய்தமை
இயம்பு’ என,
புனையும் வாகையான்
புகறல் மேயினான்:
இனையவா(று) – இவ்வாறு 64-3

324. ‘நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள்,
செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச்
சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப்
பக்கம் உற்று, அவன் கடிது பற்றினான்.
நக்கரம் – முதலை. 64-4

325. ‘திறத்து மா மறை அயனொடு
ஐம்முகன், பிறர், தேடிப்
புறத்து அகத்து உணர் அரிய
தன் பொலன் அடிக் கமலம்
உறச் சிவப்ப இத் தரைமிசை
உறல், அறம் ஆக்கல்,
மறத்தை வீட்டுதல், அன்றியே,
பிறிது மற்று உண்டோ?’
ஐம்முகன் – சிவபிரான். 70-1

326. ‘நீலகண்டனும், நேமியும்,
குலிசனும், மலரின்-
மேல் உளானும், வந்து, அவன்
உயிர்க்கு உதவினும், வீட்டி
ஆலும் உன் அரசு
உரிமையோடு அளிக்குவென்; அனலோன்
சாலும், இன்று எனது உரைக்கு
அருஞ்சான்று’ எனச் சமைந்தான்.
நீலகண்டன் – சிவபிரான்; நேமி – திருமால்; குலிசன் – (வச்சிரப்
படையான்)இந்திரன். 71-1

327. ‘மண்ணுள் ஓர் அரா முதுகிடை
முளைத்த மா மரங்கள்
எண்ணில் ஏழ் உள; அவற்றில்
ஒன்று உருவ எய்திடுவோன்,
விண்ணுள் வாலிதன் ஆர் உயிர்
விடுக்கும்’ என்ற உலகின்-
மண் உளோர்கள்தாம் கழறிடும்
கட்டுரை உளதால்.
அரா – பாம்பு (ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் கணையால்
துளைப்பவனால் வாலி இறப்பான் என்று உலகில் ஒரு பேச்சு உண்டு என்கிறது
செய்யுள்).

5. துந்துபிப் படலம்

328. புயலும் வானகமும், அப்
புணரியும், புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால்
அறிவு அருந்தகையவாம்
மயனின் மாமகனும் வாலியும்
மறத்து உடலினார்.
இயலும் மா மதியம் ஈர்
ஆறும் வந்து எய்தவே.’
புயல் – மேகம்; புணரி – கடல். 9-1

7. வாலி வதைப் படலம்

329. பேர்வுற வலிக்கவும் மிடுக்கு
இல் பெற்றியார்
நோவுற உலந்தனர்; அதனை
நோக்கி, யான்
ஆர்கலிதனைக் கடைந்து,
அமுது கொண்டனென்;
போர் வலி அழிந்து போய்,
புறம் தந்து ஓடலேன்.
பேர்வுற – அசைந்திட; வலிக்க – இழுக்க; மிடுக்கு – வலிமை;
ஆர்கலி – கடல். 27-1

330. ஆற்றலன் வாலிக்கு ஆகி, அருங்
கதிர்ப் புதல்வன் மீண்டும்
ஏற்றிய சிலை இராமன் இணை
அடி இறைஞ்சி வீழ்ந்து,
‘தோற்றுமுன், ஆவி கொண்டு, இத்தொல்
உறை இருந்தேன்; உந்தன்
மாற்றமேவலி ஆய்ச் சென்றேன்;
உடல்வலி மாய்ந்தது’ என்றான்.
வாலிக்கு ஆற்றலன் ஆகி – வாலியின் வலிமைக்கு எதிரே
தாங்கமுடியாதவனாகி; கதிர்ப்புதல்வன் – கதிரவன் மகன் (சுக்கிரீவன்).61-1

331. என்றலும், இராமன், ‘நீங்கள்
இருவரும் எதிர்ந்த போரில்,
ஒன்றிடும் உடலினாலே உருத்தெரிவு
அரியது ஆகி,
கொன்றிடு பாணம் ஏவக்
குறித்தலேன்; குறியால் செய்த
மன்றலர் மாலை சூட்டி
ஏவுதும், மறித்தும்’ என்றான்.
61-2

332. இராமன் அஃது உரைப்பக் கேட்டே,
இரவி சேய் ஏழது ஆகும்
தராதலத்து அதிர ஆர்த்து, தம்
முனோன் முன்னர்ச் செல்ல,
பராபரம் ஆய மேருப்
பருப்பதம் தோற்றிற்று என்ன
கராதலம் மடித்து வாலி கனல்-
துகள் சிவந்து காட்ட.
பருப்பதம் – மலை (பர்வதம்); கராதலம் – கை. 61-3

333. சிவந்த கண்ணுடை வாலியும்,
செங்கதிர்ச் சேயும்,
வெவந்தபோது, அவர் இருவரும்
நோக்கின்ற வேலை,
கவந்த தம்பியைக் கையினால்
எடுத்து, அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர்
உயிர் அந்தகற்கு அளிப்போன்.
வெவந்தபோது – பகை வெம்மையால் மோதிய போது; அந்தகன் –
இயமன். 62-1

334. வெற்றி வீரனது அடு கணை,
அவன் மிடல் உரத்தூடு
உற்றது; அப்புறத்து உறாதமுன்,
உறு வலிக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும்
பிணித்து, அகப்படுத்தான்;
கொற்ற வெங் கொடு
மறலியும், சிரதலம் குலைந்தான்.
மிடல் உரம் – வலிமையான மார்பு; உறு வலி – மிகுந்த வலிமை.
66-1

335. ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை;
உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை;
வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றம் இல்லை;
வீணே பிடித்து; என்தன்மேல் அம்பு விட்டாய்;

தன்தாதை மாதா உடன் கூடி உண்ணத்
தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்,
நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்;
நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே!
செற்றம் – பகைமை; தாதை – தந்தை. 89-1

336. மா வலச் சூலியார்
வாழ்த்துநர்க்கு உயர் வரம்
ஓவல் அற்று உதவல், நின்
ஒரு தனி்ப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்;
அப் பொருளை ஆம்
தேவ! நிற் கண்ட எற்கு
அரிது எனோ, தேரினே?
ஆவலிப்பு -பெருமிதம். 128-1

337. இடைக்கலம் அல்லன்; ஏவியது
ஓர் பணி
கிடைத்த போது, அது
செய்யும் இக் கேண்மையன்;
படைக்கலக் கைப்பழம் பேர்
அருளே! நினது
அடைக்கலம் – அடியேன்
பெற்ற ஐயனே.
இடைக்கலம் -இடையே வந்தவன். 158-1

8. அரசியற் படலம்

338. வள்ளலும், அவண் நின்று ஏகி,
மதங்கனது இருக்கை ஆன
வெள்ள வான் குடுமிக் குன்றத்து
ஒருசிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி,
அன்பினால் அமைக்கப்பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி,
இனிதினின் இருந்த காலை,
வெள்ள வான் குடுமி -நீர்வளம் மிகுந்ததும் உயர்ந்ததுமான சிகரம்;
ஒரு சிறை -ஒருபக்கம்

10. கிட்கிந்தைப் படலம்

339. சென்று மாருதிதன்னிடம் சேர்ந்து, அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்,
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
ஒன்றுவான் அவன்தன்னை உசாவினான்.
வென்றி வீரன் -வெற்றி கொள்ளும் வீரன்; இங்கே (அனுமன்); மேல்
வினை -இனிமேல் செய்ய வேண்டிய செயல்கள்; அவன் தன்னை –
அவனை (அங்கதனை). 25-1

340. நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,
ஊழி காலத்து ஒருமுதல் ஆகிய
ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம்
மீளிதான் வரும் வேகத்துக்க அஞ்சியே.
ஆழிநாதன் -சக்கரப் படை ஏந்திய தலைவன், திருமால் (இங்கே
இராமபிரான்);மீளி -வலிமையுடையவன். 32-1

341. மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு
ஓவு இலா மனத்து உன்னினன் -எங்கள்பால்
பாவியார்கள்தம் பற்று இதுவோ எனாத்
தேவரானும் சினத்தொடு நோக்கியே.
சேமித்த மென்மை -அடைந்து வைத்த சிறுமை;தேவரான் –
தேவனாகிய இலக்குவன். 34-1

342. அன்னை போன பின், அங்கதக் காளையை,
தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,
‘இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு’ என,
மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான்.
அன்னை -தாயாகிய தாரை;மாசு இலான் -குற்றம் இல்லாத
அங்கதன். 77-1

343. சேய்உயர் கீர்த்தியான்,
‘கதிரின் செம்மல்பால்
போயதும் அவ் வயின்
புகுந்த யாவையும்,
‘ஓய்வுறாது உணர்த்து’ என,
உணர்த்தினான் அரோ,
வாய்மையா – உணர்வுறு
வலி கொள் மொய்ம்பினோன்.

சேய் உயர் கீர்த்தியான் -நெடிதுயர்ந்த புகழ் கொண்ட இலக்குவன்.
137-1

11. தானை காண் படலம்

344. அன்று அவண் வானரச் சேனை யாவையும்,
வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,
குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,
வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே.
எண்கின் வீரர் -கரடி வீரர்கள். 1-1

345. இன்னது ஆகிய திறத்து அவர்
இருக்க, முன் போகச்
சொன்ன ஆயிர கோடியில்
தூதம் தம் திறத்தால்,
பன்ன ஆறு – இரு வெள்ளம் ஆம்
கவிப் படை பயில, –
பொன்னின் வார் கழல் இடபன் –
அக் கிட்கிந்தை புகுந்தான்.
அவர் இருக்க -இராம இலக்குவர்கள் காத்திருக்க;ஆறு இரு
வெள்ளம் -பன்னிரண்டு வெள்ளம்; கவிப் படை -குரங்குப் படை. 1-2

346. ‘தாமரை பெருந் தவிசு
உறை சதுமுகக் கடவுள்
ஓம அடஙகியில் உதித்தன,
உலப்பு இல கோடி
ஆம்’ எனப் புகல் வானரத்
தானை அங்கு அணித்தா, –
மா வயப் புயத்து எறுழ் வலி
மயிந்தன் – வந்து அடைந்தான்.
தவிசு -இருக்கை (ஆசனம்); சதுமுகக் கடவுள் -நான்கு முகங்
கொண்ட பிரமதேவன்;ஓம அங்கி -வேள்வித் தீ;தனை -சேனை. 1-3

347. கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய
முன் வாலி
பொங்கும் ஆணையின் எண்திசைப்
பொருப்பினும் பொலியத்
தங்கி வாழ் கவித் தானை
அங்கு ஆறு-ஐந்து கோடி
வங்க வேலையின் பரந்திட, –
வசந்தன் – வந்து அடைந்தான்.
கங்கை சூடி -சிவபெருமான்; வங்க வேலை -கப்பல்கள் இயங்கும்
கடல். 1-4

348. வட்ட விண்ணையும் மண்ணையும்
எடுக்குறும் வலிய,
நெட்டு அராவினைச் சினத்தொடு
பிடுங்குவ நிமிர்வ,
அட்ட திக்கையும் மறைப்பன,
ஆயிரம் கோடி
துட்ட எண்கு வெம்
படையொடு தூமிரன் வந்தான்.
நெட்டு அரா -நீண்ட பாம்பு (ஆதிசேடன்). 19-1

349. ஓங்கு மேருவை வேருடன்
பறித்து, ஒரு கையால்
வாங்கும் எண் அருங் கோடி
மேல் மந்தியின் சேனை
பாங்கு சூழ்தர, பரவை அது
ஆம் எனப் படியில்
ஆங்கு உயர்ந்திடு கபாடனும்
அக் கணத்து உற்றான்.
பரவை -கடல்;படி – உலகம். 19-2

350. வீரை ஏழையும் கலக்குறு
மிடுக்கினர், விரிந்த
பாரை வேரொடும் பறித்திட
வேண்டினும் பறிப்பர்,
ஈர் – ஐஞ்ஞூற்று எழு கோடி
வானரப் படை ஈண்ட,
தாரையைத் தந்த ததிமுகன்
நொடியினில் சார்ந்தான்.
வீரை -கடல்;தாரையைத் தந்த ததிமுகன் -தாரையின்
தந்தையாகியததிமுகன் 19-3

12. நாட விட்ட படலம்

351. சாரும் வீரர் சதவலி தம்மொடும்
கூரும் வீரர்கள் யாவரும் கூடியே,
நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப்
பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால்.
சதவலி சாரும் வீரர் தம்மொடும் -சதவலி என்ற தலைவனைச்
சார்ந்துள்ள வீரர்களோடும்;கூரும் -(வலிமையால்) மிகும். 9-1

352. குட திசைப் படு பூமி, குபேரன் வாழ்
வட திரைப் படு மா நிலம் ஆறும் ஏற்று,
இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி
தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால்.
ஓர் மதி தொடர -ஒருமைப்பட்ட அறிவு உடன் தொழிற்பட 10-1

353. குடதிசைக் கண்
இடபன் குணதிசைக்
கடலின் மிக்க
பனசன் சதவலி
வடதிசைக்கண் அன்று ஏவினன் –
மான மாப்
படையின் வெள்ளத்துடன்
செலப் பான்மையால்.
மான மாப் படை -தன்னிலையில் தாழாத பெரும்படை 10-2

354. என்று கூறி, ஆங்கு ஏவினன்; யாவரும்
நின்று வாழ்த்தி விடை கொடு நீங்கினார்
அன்று மாருதிஆம் முதல் வீரர்க்குத்
துன்று செங்கதிரோன் மகன் சொல்லுவான்:
கதிரோன் மகன் -சுக்கிரீவன் 10-3

13. பிலம் புக்கு நீங்கு படலம்

355. ‘இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ?’ என
அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது;
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது;
அயிர்க்கலாவது -ஐயப்படுதற்கு உரியது;அயிர்த்தல் -சந்தேகித்தல்.
12-1

356. வச்சிரமுடைக் குரிசில் வாள்
அமரின் மேல் நாள்,
மெச்சு அவுணர்
யாவரும் விளிந்தனர்களாக,
அச்சம் உறு தானவர்கள்
கம்மியனும் அஞ்சி,
வைச்ச பிலமூடிதன் மறைந்து
அயல் இருந்தான்.
வச்சிரமுடைக் குரிசில் -இந்திரன்;தானவர் தச்சன் -அசுரத்
தச்சனானமயன். 57-1

357. மாதுஅவள் உயிர்த்த மகவோர்
இருவர்; வாசப்
போது உறை நறைக் குழல் ஒருத்தி; –
புகழ் மேலோய்! –
ஏதம் உறு மைந்தர் தவம்
எய்த அயல் போனார்;
சீதள முலைச் சிறுமி
தாதையொடு சென்றாள்.
மாது -சுயம்பிரபையுடன் இருந்த தேவ மாது;போது -விரியும்
பக்குவத்திலுள்ள பூ;நறைக் குழல் -மணமுள்ள கூந்தல். 61-1

358. மத்த நெடு மா களிறு
வைத்த குலிசி வன் தாள்
சித்தமொடு மான்முகன் வணங்கி,
அயல் சென்றான்;
வித்தகனும், ஆயிர
விலோசனனும், மேன்மேல்,
முத்த நகையாளை நனி
நோக்கினன், முனிந்தான்.
களிறு -யானை (இங்கே இந்திரனின் ஐராவதம்);குலிசி –
வச்சிராயுதமுடைய இந்திரன்;ஆயிர விலோசனன் -இந்திரன். 61-2

359. மேருசவ் வருணி எனும்
மென்சொலினள், விஞ்சும்
ஏர் உறு மடந்தை, யுகம்
எண்ண அரு தவத்தாள்,
சீர் உறு சுயம்பிரபை,
ஏமை செறிவு எய்தும்
தாருவளர் பொற்றலமிசைக்
கடிது சார்ந்தாள்.
ஏர் -அழகு. 71-1

360. மேரு வரை மா முலையள்,
மென்சொலினள், – விஞ்சு
மாருதியினைப் பல உவந்து,
மகிழ்வுற்றே, –
ஏர் உறு சுயம்பிரபை,
ஏமை நெறி எய்த,
தாரு வளர் பொன் – தலனிடைக்
கடிது சார்ந்தாள்.
‘மேரு சவ்வருணி’ என்று தொடங்கும் முந்தைய பாடலும் இப்பாடலும்
ஒரே செய்தியைச் சொல்லும் மிகைப்பாடல்கள். சொற்களிலே சில மாற்றம்.
72-2

14. ஆறு செல் படலம்

361. இருவரும் கதம் எய்தி அங்கையில்
செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
பரு மராமரம் பறித்து வீசினான்.
இருவரும் -அங்கதனும் அசுரனும்;நிருதன் -அசுரன்;கதுவ –
சேர்ந்திட 7-1

362. வீசு மா மரம் சிந்த, வென்றி சேர்
ஆசு இல் அங்கதன் அங்கையால் மலைந்து,
ஓசை கொண்டு உறக் குத்தினான் உடல்;
கூசுறாத வன் குன்று ஒன்று ஏந்தினான்.
ஆசு இல் -குற்றம் இல்லாத 7-2

363. குன்று கையிடைக் கொண்டு எழுந்த, முன்
நின்ற அங்கதன், நெடு மராமரம்
ஒன்று வாங்கி மற்றவன் ஒடிந்திடச்
சென்று தாக்கினான், தேவர் வாழ்த்தவே.

364. ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும்
ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம்
சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி,
சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார்.
ஓகை -உவகை;சேகு -திண்மை (இங்கே வலிய நிலம்) 45-1

365. இனைய தண்டக நாட்டினுள் எய்தினார்;
அனைய நாட்டின் அருந் தவர் யாவரும்
நனி விரும்பி நயந்தனர், நான்மறைப்
புனிதர் என்று கொண்டு உள்ளுறும் புந்தியார்.
புந்தியார் -அறிவுடையார் 45-2

366. ‘செல்வர்’ என்றும், ‘வடகலை,
தென் தமிழ்ச்
சொல், வரம்பினர்’
என்றும், ‘சுமடரைக்
கொல்வர்’ என்றும், ‘கொடுப்பவர்’
என்றும், – அவ்
இல் வரம்பினர்க்கு ஈ
தேனும் ஈட்டதே.
சுமடர் -கீழ்மக்கள் 45-3

15. சம்பாதிப் படலம்

367. யாவரும் அவ் வயின்நின்றும், ‘மன் இயல்
பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத்
தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்;
மேவினம்’ என்பது விளம்பினார்அரோ.
பூவரும் -தாமரை மலரின் வைகும்;அருந்ததி பொருவும் –
அருந்ததியைப் போன்ற 3-1

368. அன்னதோர் அளவையின் அங்க
நாடு ஒரீஇ,
தென் மலைநாட்டினைத் தேடிச்
சென்று, உடன்
இன் இசைத் தலைவரோடு
இரண்டு வெள்ளமும்
மன்று மா மயேந்திரத்
தலத்து வந்ததால்.
இசை -புகழ் 3-2

369. தாழந்த மா தவத்து
உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென்; சிறைகள் தீய,
வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற,
உயிர்ப்பொறை போற்றகில்லாது,
ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந்
தவன் எதிர்ந்து தேற்றி;
போழ்ந்தன துன்பம் -பிளப்பனவாகிய துன்பம்; உயிர்ப்பொறை –
உயிர்ச்சுமை. 56-1

370. ‘ ”கற்றிலார் போல உள்ளக்
களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிடக் கருதி, மீப் போய்,
ஆதபத்து உனது மேனி முற்று
அழல் முருங்க, மண்ணை முயங்கினை;
இனி என்? சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது
இகழ்வது மாலைத்து அன்றால்.
மீ -மேலே;ஆதபம் -வெயில்;முருங்க -எரிய;மாலைத்து
அன்று-இயல்பு அன்று 56-2

371. ”களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக்
கபடன் வவ்வி, அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற
வானரர், இராம நாமம்
விளித்திட, சிறை வந்து ஓங்கும்;
வெவ்வுயிர்த்து அயரல்” என்று,
அளித்தனன்; அதனால் ஆவி
ஆற்றினேன் – ஆற்றல் மொய்ம்பீர்!
அயரல் -தளராதே;அளித்தனன் -அருளினான். 56-3

372. ‘அன்றியும், அலருள் வைகும்
அயனைநேர் முனிவர், வாய்மை
நன்றிகொள் ஈசற் காண்பான்
நணுகலும், வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது
யோகத்தின் உணர்ச்சி பேணி,
”பொன்றுதல் ஒழிமின்; யானே
புகல்வது கேண்மின்” என்றான்.
அயனை நேர் முனிவன் -நான்முகனை ஒத்த உலோக சாரங்க
முனிவன் 56-4

373. ‘ ”தசரத ராமன் தேவர் தவத்தினால்,
தாய் சொல் தாங்கி,
கச ரத துரகம் இன்றிக்
கானிடை இறுத்த காலை,
வசை தரும் இலங்கை வேந்தன்
வவ்விய திருவை நாடித்
திசை திரி கவிகள் உற்றால்,
சிறகு பெற்று எழுதி” என்ன,
கச, ரத, துரகம் -யானை, தேர், குதிரை;கவிகள் -குரங்குகள் 56-5

374. ‘எனக்கு உணவு இயற்றும் காதல்
என் மகன் சுபார்சுபன் பேர்
சினக் கொலை அரக்கன்
மூதூர் வடதிசைநின்று செல்வான்,
நினைக்கு முன் திருவோடு அந்த
நீசனை நோக்கி, ”எந்தை –
மனககு இரை எய்திற்று” என்னா,
சிறகினால் தகைந்து கொண்டான்.
தகைந்து -மோதி 58-1

375. காமத்தால் நலியப்பட்டு,
கனங்குழைதன்னைக் கொண்டு
போம்மத்தா! போகல்; எந்தை புன்
பசிக்கு அமைந்தாய்” என்று,
தாமத் தார் மௌலி மைந்தன்
தடுத்து இடை விலக்க, நீசன்

நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி
மீண்டு, எனக்குச் சொன்னான்.’
மத்தா -உன்மத்தனே;போகல் -போகாதே;நாமத்தால் –
அச்சத்தால் 58-2

376. முன்னர் அந் நிசாகர
முனி மொழிந்ததும்,
பின்னர் அச் சுபார்சுபன்
பெலத்து இராவணன் –
தன்னொடும் அமர் பொரச்
சமைந்து நின்றதும்,
கொன் இயல் சனகியைக்
கொண்டு போனதும்,
பெலத்து -வலிமையுடைய (பலம்);கொன் இயல் -பெருமைப் பண்பு
58-3

377. நினைந்து சம்பாதியும், நீதி யாவையும்
இனைந்தனன், வானரர் எவரும் கேட்கவே;
நினைந்து, கண்ணீர் விழ, நெடிது உயிர்த்தனர்;
வினைந்தனர், புரண்டனர்; விதியை நொந்தனர்.
இனைந்தனன் -வருந்தினான் 58-4

16. மயேந்திரப் படலம்

378. புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி
விண் போந்த பின்னர்,
தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு
அது சாம்பன் சிந்தித்து,
உள்ளவர் தன்னில் வல்லார் யார்
என உன்னி, யாண்டும்
தள்ளரும் புகழோன் வாயுத்
தனையனை நோக்கிச் செப்பும்:
புள்ளரசு -பறவைகளுக்கு அரசனான சம்பாதி;வாயுத் தனையன் –
வாயுவின் மகனாகிய அனுமன்.

379. ஆயவன் அங்குப் போகிய
பின்னர், அகமீதே
நோய் உறு தன்மைத்து
ஆகிய வீரர்தமை நோக்கி,
தூய மனத்தன் ஆகிய
வாலி தரு தொன்மைச்
சேயும் அவர்க்கே செப்பினன்,
நாடும் செயல் ஓர்வான்.
சேய் -மகன் (இங்கே அங்கதன்) (இப் படலத்தின் முதற் பாடலாக ஓர்
ஏட்டில் ‘புள்ளரசு’ எனத் தொடங்கும் பாடலும், பிறிதோர் ஏட்டில் ‘ஆயவன்’
எனத் தொடங்கும் பாடலும் காணப்பட்டது.)

380. ‘ஆரியன் மின்னி்ன் பேர்
எழில்கூறும் அமைவாலும்,
”காரியம் உன்னால் முற்றும்”
எனச் சொல் கடனாலும்,
மாருதி ஒப்பார் வேறு இலை
என்னா, மனம் எண்ணி,
சீரியன் மல் தோள் ஆண்மை
உரைத்தால் செயும், என்றே’
மின்னின் -மின்னல் போல்வளாகிய சீதை. 8-1

381. நாலு மறைக்கும் வேலியும்
ஆகி, நடு நிற்கும்
சீலம் மிகுந்தீர்! திங்கள்
மிலைச்சித் திகழ் வேணி,
ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்!
அது போதில்
காலின் நிறைக்கோ காலனும்
ஆகக் கடிது உற்றீர்.
திங்கள் மிலைச்சி -சந்திரன் சூடி;வேணி – சடை;
ஆலமிடற்றான் -நஞ்சினைக் கழுத்திலே கொண்ட சிவபிரான் 18-1

382. ஆதியர் இப் புத்தேள்
அடிப்பாரித்து அணவு ஆதற்கு
ஓது கருத்தில் சால
நினைத்திட்டு, ஒழிவு இல்லாப்
போது தளத்தில் புக்கிய
செய்கைத் திறனாலே
சாதல் கெடுத்துத் தான்
அழியாதீர் அதனாலே.
பாரித்து -விரும்பி;அணவு ஆதற்கு -அணுகுவதற்கு 18-2

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: