ஸ்ரீ ஆண்டாள் வைபவம் –மாலை கட்டிய மாலை– ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் ஸ்ரீ துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை
கலியுகத்தின்-98- ஒரு நள வருஷத்தில் ஸ்ரீ ஆடி மாதம் சுக்ல செவ்வாய் கிழமை கூடிய ஸ்ரீ பூர நட்சத்திரத்தில்
சதுர்த்தசி-அவர் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது அல்லது 886 டிசம்பர் 24.

கர்க்கடே பூர்வ பல்குந் யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்ட் யே விஸ்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்

ஸ்ரீ ஆண்டாள் அவதார காலம் அவள் இயற்றிய திருப்பாவையில் வரும் ”புள்ளின் வாய் கீண்டானை“ என்று
தொடங்கும் பாடலில் வரும் ”வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று“ என்று சொற்றொடரை
ஆராய்ச்சி செய்து அறுதியிடப் பட்டுள்ளது.
(ஆழ்வார்கள் கால நிலை பக் 123-128 ஆரய்ச்சிப் பேரறிஞர் ஸ்ரீ திரு.மு.இராகவைய்யங்கார்)

இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில்
பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.
”நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது.
அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள் தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள்.
‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால்
இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது.
அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று ஸ்ரீ இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

————

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் இடக்கையில் கிளி இருக்கிறது.
இது தினமும் புதியதாக இன்றளவும் செய்யப்படுகிறது. இந்த கிளியைச் செய்வதற்கு தோராயமாக நான்கிலிருந்து
நாலரை மணி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இக் கிளியைச் செய்வதற்கு, மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின்
அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும்,
வாழை மரத்தின் இலைகள் மற்றும் நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

———–

ஸ்ரீ வில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஸ்ரீ கவுசிக ஏகாதசியை முன்னிட்டு
ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ தேவி மற்றும் ஸ்ரீ ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவை
அணிவிக்கும் வைபவம் விடிய, விடிய நடந்து- மேள தாளங்கள் முழங்க ஸ்ரீ பெரிய பெருமாள் சன்னதி பகல் பத்து மண்டபத்திற்கு
கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து- நள்ளிரவு 12 மணி முதல் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்க மன்னார் உள்ளிட்ட
தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கும் வைபவம் துவங்கி அதிகாலை வரை நடக்கிறது –

—————-

ஸ்ரீ ஆண்டாள் தநுர் மாச பிறப்பு அன்று திருப்பாவை புடவை சாத்தி சேவை –
ஒரே புடவையில் முப்பது பாசுர முதல் அடிகளை வைத்து பக்தர் ஒருவர் ஐம்பது வருஷங்கள் முன்பு சமர்ப்பிக்க
வருஷம் தோறும் இத்தை சாத்தி சேவை சாதித்து அருளுகிறாள் –

—-

பகல் பத்து முதல் நாளான அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்
பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னாருடன் மூல ஸ்தானத்திலிருந்து
ஸ்ரீ பெரியாழ்வாரின் வம்சா வழியை சேர்ந்த ஸ்ரீ வேத பிரான் பட்டர் திருமாளிகைக்கு சென்று அங்கு பரப்பி வைக்கப்பட்ட
காய்கறிகளை சந்தோஷமாக பார்க்கும் வைபவமே பச்சை பரப்புதல் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும்

———–

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன் –

நீளா துங்கஸ்தன கிரி தடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்தயம் ஸ்வம் ச்ருதி சக சிரஸ் ஸித்தம் அத்யாப யந்தீ
ஸ்வேர்ச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாவாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இத மிதம் பூய ஏவாஸ்து பூய:

ஸ்ரீ நப்பின்னையினுடைய உயர்ந்த மலை போன்ற முலைகளின் தடத்திலே தலை சாய்த்து உறங்கினவனான
ஸ்ரீ கண்ணனை எழுப்பி அடிமை செய்யும் விஷயத்தில் தனக்குள்ள ஆவலை அறிவித்துத்
தன்னால் சூடிக் களையபெற்ற பூமாலையிலே விலங்கிடப்பட்ட அவனை அனுபவித்த ஸ்ரீ ஆண்டாளைத் திருவடி தொழுகின்றேன்

ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்த தனியன் –

அன்ன வயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

அன்னங்கள் உலவுகின்ற வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஸ்ரீ ஆண்டாள்.
ஸ்ரீ அரங்கனுக்கு பல (முப்பது) பாசுரங்களை ஆராய்ந்தருளிய ஸ்ரீ திருப்பாவையை இனிய இசையோடு கூட்டி
நல்ல பாமாலையாக (பாட்டுக்கலான மாலையாக), பாடிக் கொடுத்தவளும்,
பூக்களாலான மாலையைத், தான் சூடிக் களைந்து கொடுத்தவளுமான ஸ்ரீ ஆண்டாளின் புகழைச் சொல்லு!

சூடிக் கொடுத்த சுடர்க் கொடுயே தொல் பாவை
பாடி யருள வல்ல பல் வளையாய்! – நாடி நீ
“வேங்டவற்கு என்னை விதி” யென்ற இம் மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

பூமாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியே பழமையான பாவை நோன்பை (ஸ்ரீ திருப்பாவை மூலமாக) பாடி
எல்லோருக்கும் அருளவல்ல பல வளையல்களை அணிந்திருப்பவளே. நீ மன்மதனை நாடி
“காமதேவா திருவேங்கட பெருமானுக்கு வாழ்க்கைப் படுத்த வேணும்” என்று (காமனைக் குறித்து) சொன்ன
இவ் வார்த்தையை, நாங்களும் தப்பாமல் பின்பற்றும்படி அருள் புரிவாயாக.
(* …வேங்கடவற் கென்ன விதிக்கிற்றியே., நாச்சியார் திருமொழி 504 (1:1) )

————

1.நாராயணனே நமக்கே– பாரோர் புகழ்மாலை
2.வையத்து வாழ்வீர்காள்- உஜ்ஜீவன மாலை
3.ஓங்கி உலகளந்த- நீங்காத நிறைந்த செல்வ மாலை
4.ஆழிமழைக்கண்ணா- மார்கழி நீராட்ட மாலை
5.மாயனை மன்னு வட- பாபநாச மாலை
6.புள்ளும் சிலம்பின காண்- உள்ளங்குளிர் மாலை
7.கீசுகீ சென்றெங்கும்- தேஜோ மாலை
8.கீழ்வானம் வெள்ளென்- ஆராய்ச்சியருள் மாலை
9.தூமணி மாடத்து- ஸஹஸ்ர நாம மாலை
10.நோற்றுச் சுவர்கம்- தேற்ற மாலை
11.கற்றுக் கறவை- பொருள் மாலை
12.கனைத்திளங் கற்றெருமை- மான மாலை
13.புள்ளின் வாய் கீண்டானை- கள்ளம் தவிர் மாலை
14.உங்கள் புழக்கடை- பங்கயக் கண்ணான் மாலை
15.எல்லே இளங்கிளியே- மாயன் மாலை
16.நாயகனாய் நின்ற- நேய மாலை
17.அம்பரமே தண்ணீரே- உறங்கா மாலை
18.உந்து மதகளிற்றன்- திறப்பு மாலை
19.குத்து விளக்கெரிய- தகவு மாலை
20.முப்பத்து மூவர்- விளம்பாஸஹத்வ மாலை
21.ஏற்ற கலங்கள்- போற்றும் மாலை
22.அங்கன் மா ஞாலத்து- கடாக்ஷ மாலை
23.மாரி மலைமுழஞ்சில்- பகவந் நியமன மாலை
24.அன்றிவ்வுலகம்- பகவத் க்ருபா மாலை
25.ஒருத்தி மகனாய்ப் பிறந்து- துக்க நிவாரண மாலை
26.மாலே மணிவண்ணா- பகவதநுக்ரஹ மாலை
27.கூடாரை வெல்லும்- பகவத்ஸம்ச்லேஷ மாலை
28.கறவைகள்- புருஷார்த்த மாலை
29.சிற்றம் சிறுகாலே- பாரமைகாந்த்ய மாலை
30.வங்கக் கடல் கடைந்த- ப்ரம்மானந்த மாலை

————-

மாலை கட்டிய மாலை–
ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள் உபன்யாச சுருக்கம் –
தொகுத்து அருளியவர் –ஸ்ரீ உ வே -தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன்.

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள், பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் அவதரித்து, அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்
ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் வளரப்பெற்றாள்.
வட பெரும் கோயிலுடையானோடே தழுவி முழுசி பரிமாறவும் பாரித்தாள். அர்ச்சா சமாதியில் இருந்த அவன்
முகம் காட்டாதே ஒழிய, இன்னாப்படைந்தவளாய், அவனோடு கலந்து பரிமாறின திருவாய்ப்பாடிப் பெண்கள்
விருத்தாந்தம் கேட்டு தானும் அநுகரித்து தரிக்கப் பெற்றாள் என்கிறதான அவளுடைய சரித்திரத்தை பலரும் அறிவர் .
மடலெடுக்காதே, அவள் நோன்பிலே கை வைத்தது கிருஷ்ணனுடைய உபாயாந்தர அஸஹிஷ்ணுத்வத்தை கருத்திலே கொண்டு என்பர்.

பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டிருந்தார். ஆண்டாளோ பாகவத ஸம்ருத்தியை ஆசைபட்டாள்.
ஆண்டாள் பாடிய திருப்பாவை இதுக்கு ப்ரதீகம். பெரியாழ்வார் பிரதம பர்வத்திலே நிற்க,
இவளோ சரம பர்வத்திலே ஊன்றினளாய்- சத்ருக்நாழ்வான் படியிலே நிற்கப்பெற்றாள்.
”விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேலது காண்டும்”என்கிற
நாச்சியார் திருமொழி பாசுரம் (10-10) இதுக்கு விஷயம்.

அந்த வகையிலே அவள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு புஷ்ப குஞ்ஜா (ஹாரம்) என்று சொல்லலாம்.
பாசுரங்களின் ஈற்றடியிலே வருகிற சொற்றொடர் களைக் கொண்டே அந்தந்த மாலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது இங்கு.
இதற்கு முன்னால் இப்படி மாலை மலையால் கட்டியவர்கள் உண்டோ என்னில், ஆம் ! உண்டு என்றே சொல்லலாம் .

இலங்கைக்குத் தூது சென்ற திருவடி பிராட்டியைக் கண்டு சக்ரவர்த்தித் திருமகன் கூறியதாக சில அடையளங்களை
பெரியாழ்வார் ”நெறிந்த கருங்குழல் மடவாய்…” (3-10-1) என்கிற பதிகத்திலே
‘எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோர் இடவகையில் மல்லிகை மாமாலை கொண்டு அங்கார்த்தும் ஓரடையாளம் ‘
என்று பாசுரம் இட்டருளினார். அதன்படி சீதாபிராட்டி ராமனை மல்லிகை மாலையால் விளையாட்டாக கட்டியது ராமாயண பிரசித்தம்.
பெரியழ்வாரோ நந்தவனம் அமைத்து மாலை கட்டி சமர்ப்பித்த தோடு ஆண்டாளை ரங்கமன்னாருக்கு மணாட்டியாய்க் கட்டிக் கொடுத்து
மாமனாராகவும் ஆனார். ஆக, ‘மாலை மாலையால் கட்டிய மாலை’ என்றே ஆண்டாள் பற்றி ஒரு வழக்கு உண்டு.
அதாவது – திருமாலை பாமாலை கொண்டு கட்டிய கோதையாகிற மாலை – என்பதே அதன் பொருள்.

1. பாரோர் புகழ் மாலை :

அதாவது முதல் பாட்டின் ஈற்றடியில் ’பாரோர் புகழ படிந்து ஏலோரெம் பாவாய்’ என்று வருவதால்
இந்த பாசுரம் ’பாரோர் புகழ் மாலை’ ஆகிறது. அநந்யப் பிரயோஜன பரர்க்கு, புகழ்சி புருஷார்த்தமாகக் கூடுமா?
கியாதி, லாப, பூஜையில் கண்வைத்து பாசுரம் பாடலாமா? என்னில் ஸ்வவிஷயத்தில் அல்லாமல் பரார்த்தமான கியாதி உத்தேஸ்யமே.

மகிழ்சி ஒருவர் புகழ்தல் காரணமாக வருமது. ஆக காரணத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் கார்யத்தைச் சொன்னதாகப்
பார்க்கில், ’பாரோர் மகிழ படிந்து ஏலோரெம்பாவாய்’ என்று கொள்ள இடமுண்டு.
ஸ்வயம் பிரயோஜனமாகாதே பாரோர் மகிழ்வதைத்தான் ஆண்டாள் இங்கே பேசுகிறாள்.
’படிந்து’ என்பதில் உள்ள ஸ்வாரஸ்யம் ’விதேயனாய்’ இருந்து நாரயணன் நமக்கு கிருபை செய்வான்
என்பதை விசேஷித்து நோக்கத்தக்கது.
’நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான்’ என்று அன்வயித்துக் கொள்ள வேண்டும்.

கிருபை செய்யுமிடத்து எம்பெருமான் ஆஸ்ருத பரதந்திரனாய் இருந்து கார்யம் செய்யும் என்பதை ஆழ்வார்
’அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்,
அது நமது விதிவகையே’ (திருவா.10-7-1) என்று முன்மொழிந்ததை, வழிமொழிகிறாள் ஆண்டாள்.
அதாவது, பிராப்ய-பிராபக விவேக ஞானம் உடைய பிரபன்னாதிகரிகள் விஷயத்தில்
எம்பெருமான் இப்படி கார்யம் செய்யும் என்பதிலே நோக்கு.
இப்படி பர ஸமிர்த்தியால் இவர்களுக்கு வந்த புகழ் என்பதால் இது ஏற்புடைத்து அல்லவே?

————–

2. இரண்டாம் பாட்டு -’உய்வு மாலை’ :

இப்பாட்டின் ஈற்றடி ’உய்யுமாறெண்ணி உகந்து’ என்பது. நோன்பில் ஒருப்பட்ட ஆண்டாள்
தத்விஷயமாய் விடவேண்டியவை இன்னது, அநுஷ்ட்டிக்க வேண்டியவை இன்னது என்கிற
கிருத்யாகிருத்ய விவேகம் பண்ணி யருளுகிறாள்.
அந்த வகையில் ஆண்டாள் சாதித்த ஆறு நியமங்களும்,
காஞ்சி தேவப்பெருமள் ஆறு வார்தைகளும்,
ஆழ்வார்கள் ஆறு வார்த்தைகளும் போல
நமக்கு உஜ்ஜீவன ஹேது என்றால் மிகையாகாது.

தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளாவன :
௧. அஹமேவ பரம் தத்வம்;
௨. தர்சனம் பேதயேவச;
௩. உபாயேஷு பிரபத்திஸ்யாத்;
௪. அந்திம ஸ்மிருதி வர்ஜனம்;
௫. தேஹாவஸாநே மோக்ஷம்ச
௬. பூர்ணாசார்யம் (பெரிய நம்பி) ஸ்மாஸ்ரயேத் – என எம்பெருமானாரோடு மிக்குள்ள நம்மையும்
விஷயீகரிக்க திருக்கச்சி நம்பிகள் மூலம் அருளிச் செய்த வார்த்தைகளாகும்.

ஆழ்வாரகள் ஆறு வார்த்தைகளாவன :
௧. வதுவை வார்த்தை(திருவா.௫-௧0-௨);
௨. நெய்யூண் வார்த்தை(திருவா.௫-௧0-௩);
௩. வெண்ணை வார்த்தை(திருவா.௬-௨-௧௧);
௪. நடந்த நல்வார்த்தை(-“-௭-0௫-௯);
௫. மெய்மைப் பெருவார்த்தை (நாச்.௧௧-௧0);
௬. விடுத்ததோர் வார்த்தை (பெரி.௨-௮-௬).

1-வதுவை வார்த்தையாவது – எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு நப்பின்னையை மணமுடிப்போம் என்கிற வார்த்தை.
அது பிறந்தவளவிலே ஏறுகள் ஏழின்மேல் விழுந்து கண்ணன் கொன்ற விருத்தாந்தமும் ,

2-நெய்யூண் வார்த்தையாவது – நெய்களவு கண்டான் என்னும் வார்த்தை பிரஸ்துதமாக, தாய் யசோதை கையில்
கோல்கொள்ளவும் தன் தாமரைப்பூ போன்ற கண்களில் அச்சத்தோடே நீர்மல்க நின்ற கண்ணனின் எளிவரவும் ,

3-வெண்ணை வார்த்தையாவது – வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே ’கண்ணனே களவு செய்தான்’ என
தாயார் வைக்கோல் கொண்டு புடைத்தாளாக, கண்ணும் கண்ணீருமாய் நிற்கிற அவன் நிலை எதைப்போன்றது என்றால் –
ஒரு சத்திரத்தில் வழிப்போக்காக தங்க வந்த யாத்ரிகர்களிலே ஒருவர், மடம் இவ்வளவு பெரியதாக உள்ளதே,
இதனை மெழுகி கோலமிடுவார் யாரே? (அதி சிரமமான காரியமாகவிருக்கும் என்கிற அர்த்தத்தில்) வினவ,
யாரோ ஒரு அஸ்ரோத்ரியன் என்று இன்னொருவர் பதில் இறுத்தார்.
’இவ்வளவு பெரிய மடத்தை தன்னாலே மெழுகப்போகாது’ என்றானாம் அவர்களிலே ஒருத்தன்.
இப்படி அவன் தன்னை அஸ்ரோத்திரியன் என்று வெளிப்படுத்தினாப் போலே, வெண்ணை களவு போயிற்று
என்கிற வார்த்தையிலே தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று கண்ணன் அழத் தொடங்கினது, என்னே அவன் மௌடியம்.

4-நடந்த நல் வார்த்தையாவது – கண்ணனெம்பெருமான் தன்மேன்மையை அழித்துக் கொண்டு தாழவிட்ட நீர்மை
குணத்தை உணரலாகா தண்ணிய பூமியினின்றும் விடைப்பெற்று தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளிய போது
திரௌபதி விஷயமாய் ’தன்னைக் கடன்பட்டவனாக’ அதிருப்தியோடே மொழிந்த சீரிய வார்த்தைகள்.

5-மெய்மைப் பெரு வார்த்தையாவது – மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதா-சரம ஸ்லோகத்தின்
செழும்பொருளை விட்டுசித்தர் கேட்டு அதன்படி இருப்பர் என்கிற ஆண்டாள் நாச்சியாரின் பெருமிதமான வார்த்தை.

6-விடுத்ததோர் வார்த்தையாவது – கஞ்சன் வஞ்சிப்பதற்கு விடுத்த வார்த்தைகளாகும். அஸரீரி வாக்கியம் கேட்டவன்று
தொடங்கி, தீயபுத்தி கஞ்சன் இருள்தான் ஒருவடிவு கொண்டாப்போலே கறுத்த நிறத்தையும், அக்நிஜ்வாலை போலே
சிவந்த தலைமயிரையும் உடையளான பேய்சியை, நேர்கொடு நேர்சென்றால் சாதிக்கலாகாது, வஞ்சத்தால் சாதிப்பாய் என்று
ஏவிவிட்ட வார்த்தை, கண்ணன் பிறந்தபோதே உண்டு என்ற இப்பெரியாழ்வார் வார்த்தையும் நமக்கு ஸ்மாரகம்.

எம்பெருமானார் ஆறு வார்த்தை :
1-பிரஸ்தான திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
2-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
3-அருளிச் செயல்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
4-ரஹஸ்ய திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
5-இவை அறிந்த ஸ்ரீவைஷ்ணவனோடே சகவாசம் பண்ணுகை, மாட்டிற்றாகில்
6-திருநாராயண புரத்திலே ஒரு குடில் கட்டி நித்யவாஸம் செய்வது.

”அநந்யசாத்யா சாபீஷ்டா… ” என்ற பிரமாண வசனத்தின்படி சரணாகதிக்கு நம்பக்கல் இருக்க வேண்டிய
ஆறும் உத்கிருஷ்ட உஜ்ஜீவனோபாயம் என்பதில் விசம்வாதம் உண்டோ? இல்லை.

௧. பரமனடி பாடுகை,
௨. (நோன்புக் கனுகுணமாக) நெய், பால் உண்ணாமை, மை தீட்டல், மலர் சூடுகை இவை தாமாக செய்து கொள்ளாமை,
௩. (மேலையார்) செயாதவைகளை தவிர்கை,
௪. தீகுறளை (பகவத், ஆசார்ய சன்னிதியில்) விண்ணப்பிக்காமை,
௫. ஐயம் (சாஸ்திர விஹித) தானங்களையும்,
௬. பிச்சை (ஆஸ்ரம விஹித) தானங்களையும்,
ஆம்தனையும் அநுஷ்டித்துப் போருகை, ஆண்டாள் நமக்கிட்ட கட்டளை களாகும்.

’அது, இது, வுது என்னலாது, ”உன்செய்கை” என்னை நைவிக்கும்’ என்கிறபடியே பகவானால்,
பகவானுக்காக, பவானை குறித்து சொல்லப்பட்ட இவை அனத்துமே நமக்கு உஜ்ஜீவன ஹேது.

————–

7. ஏழாம் பாட்டு – தேச மாலை :

’தேசுடையாய் திற’ என்பது ஈற்றடி. இங்கு தேசு என்பது தேஜஸ் என்ற பொருளிலும், தேசம் என்ற பொருளிலும் வந்துள்ளது.
அதாவது, பிரஹ்ம ஞானமாகிற தேஜஸால் வந்த புகரை உடையவள் இந்த பெண்பிள்ளை என்பது.

’பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு (திருவாய்.௯-௨-௧) என்று ஆழ்வார்
தமக்கு எல்லா உறவின் காரியமும் குறைவில்லாமல் அருளப் பிரார்த்திதுப் பெற்ற சேஷத்வமே இங்கு தேஜஸ்.
அத்தையே இவர்களும் கண்ணனுக்கே உற்றோமாய் இருப்பதை ’பறை’ என்று இலை மறைவு காய் மறைவாய் வெளியிட்டார்களிறே.

எம்பெருமானார் மாறனேர்நம்பி போல்வார் ஹஸ்த ஸ்பர்சம் கொண்டு காவிரியில் ஸ்நானம் முடித்து கரைக்கு மீண்டவராய்
ஸன்னதி ஏற புறப்படுவார் என்றால் அது ஐஸ்வர்ய, ஆபிஜாத்யத்தால் வந்த அங்கீகாரம் அன்றி, ஆசார்ய பிரதிபத்தியால் வந்ததொன்று.

தேசம் என்ற பொருளில், பகவத் சன்னதி, இவள் இட்ட வழ்க்காய் கண்ணன் ஆக்கி இருக்கிறபடி.
எம்பெருமானார் ’உபய விபூதி’ ஸம்பன்னராய் இருந்தாப்போலே ஒரு பெண்பிள்ளை இவள் எனலாம்.

’பொன்னுலகு ஆளீரோ? புவனமுழுதாளீரோ? (திருவா.௬-௮-௧) என்று எம்பெருமானுக்கே சொந்தமான
பரமபதத்தை ஆழ்வார் பக்ஷிகளுக்கு அளிப்பதும் இவருக்கு விதேயமாய் அதனை பகவான் ஆக்கிவைத்த படியாலே.

நம்பிள்ளை காலக்ஷேப கூடம் விரியடைய வேண்டி, அருகிருந்த மனையும் கேட்டுப் பெற அதுக்கு ஈடாக
பரமபத்ததுக்கு சீட்டு எழுதிப் பெற்றாள், மனைக்குறிய ஒரு பெண்பிள்ளை என்பதிலே இது த்ருடீக்ருதமாகிறது அல்லவா?

———

8. எட்டாம் பாட்டு – அருள் மாலை :

ஆவா வென்றருள்! என்பது ஹ! ஹ!! என்கிற சந்தோஷ சூசகம் அன்றி வருத்தக் குறியும் ஆகக்கூடும்.
ஸந்தோஷமாக பேசினதுக்கு இடம் திருப்பாணாழ்வாரின் ’நீலமேனி ஐயோ! என்னை சிந்தை கவர்ந்ததுவே’ என்பதனைக் காட்டலாம்.
’தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆவவென்று ஆராய்ந்து அருள்’ என்று முடிகிறது பாசுரம்.
கண்ணன் தான்சென்று அருள வேண்டி இருக்க, இவர்கள் நம் திருமாளிகை தேடி வந்ததோடு பிரார்த்திக்கும்படியும்
ஆனதே என்று வருத்தம் இரட்டிப்பாக, ஆ! ஆ!! என்று ஆவர்த்தி சொல்லிற்று.

சபரி, குகன், வீடணன் இவர்கள் விஷயத்தில் பரகதமான பகவத் ஸ்வீகாரம் தானும் இவர்கள் விஷயத்தில்,
ஸ்வகதமாகக் கடவதே? என்கிற வருத்தம் அவனது.

ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம்போல், ரத்னதுக்கு பலகரையும் பகவத் கிருபைக்கு பிரபத்தி அஸதுர்சம். அல்ப்பம்.
அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்பம். அவத்யக்ரம், என்று ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் திருவாக்கு.

மர்கட கிஷோரம் போல் ஸ்வகத ஸ்வீகாரம். மார்ஜால கிஷோரம் போல் பரகத ஸ்வீகாரம்.

அருள் பெறுகை அடியார்க்கு லக்ஷணம். அவர்களுக்கு விதேயனாய் இருந்து அத்தை பண்ணுவிக்கை,
’ஆராதனைக்கு எளியவன்’ என்கிற அவனுடைய ஸௌலப்யம் பிழைக்கவும் ஒரே வழி பரகத ஸ்வீகாரத்தாலேயே அன்றோ?.

———–

9. ஒன்பதாம் பாட்டு – திருமாம மாலை :

மாயா வயூனம் ஞானம் என்கிற நிகண்டு படி, எம்பெருமான் தன் இச்சா சக்தி-சங்கல்ப ஞானத்தைக் கொண்டு
பிறக்கிறான் என்பதை தானே கீதா ஶாஸ்திரத்தில் – பிரக்ருதி ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா என்றானிறே.
அத்தை ஆழ்வாரும் ”ஆதியம் சோதி” உருவை அங்கு வைத்து இங்கு பிறப்பதாக பேசியருளினார்.
தைவீக்யேஷா குணமயி மம மாயா துரத்யயா என்று ஆத்மாக்களை பந்திப்பதும்,
மாமேவ ஏதாம் தரந்திதே என்று விடுவிப்பதும் தானே என்றும் பேசினபடியை நோக்கலாம்.
இது தவிற அவனுடைய ஆஸ்சர்யகரமான சேஷ்டிதங்கள், மநுஷ்யத்வே பரத்வத்துக்கு விவக்ஷிதங்கள் என்றால் மிகையாகாது.

மாதவன் : என்றால் பெரிய பிராட்டிக்குத் தவன் – கேள்வன் என்றும்,
”மற்றவரை சார்த்தி இருப்பார் தவம்” என்கிற நான்முகன் திருவந்தாதி (௧௮) பாசுர கணக்கில்,
தவமாவது சேதன லாபத்துக்காக அவன் உத்யோகிக்குமது தொடக்கமானவை.
அன்றிலே.
தவமாவது ஈஶ்வரனை ஆஶ்ரயிப்பது. மாதவமாவது அவன் அடியார்களை ஆஶ்ரயிப்பது என்று கொண்டால்
அவர்களுக்கு பரதந்ரனாய் கார்யம் செய்து தலைக்கட்டுவது, அவன் மாதவனாக இருந்தமைக்குப் பிரயோஜனம் எனலாம்.

வைகுந்தன் : ’வேர் முதல் வித்து’ என்று தன் பரத்வே பரத்வம் தோற்ற பரமபதத்தில் இருக்கும் இருப்பு.

பகவத் விஷயத்தில் சொன்ன இவை தமயே ஆசார்ய பரமாக பார்ப்போமாகில் –

மாமாயன் என்பதை ”பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப, இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு,
புன்மையினோரிடைத்தான் புகுந்து தீர்த்தான் இருவினையும் தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான்,
இவை எம்பி இராமாநுசன் செய்யும் அற்புதமே” (௫௨) என்கிற இராமானுச நூற்றந்தாதிப் பாசுரத்தைக் கொண்டு பார்க்கில்,
எம்பெருமானைப் போலவே, எம்பெருமானாரும் புற மதத்தவர்களை ஒருபாடு நடுங்கச்செய்தது;
ஆஶ்ரயித்திருக்கு மவர்களை தன்னைப் போலவே ஆத்ம குண ஸ்ம்பன்நர்களாக்கி பாபங்களையும் கட்டோடு கழித்து,
நம்பெருமாள் திருவடிகளுக்காக்கும் இவர் செயல்களும் ஆச்சரிய்மானவையே அன்றோ?

மாதவன்: என்பது ஸ்வாத்யாய நிரதம். இதுவும் ஒருவகையில் தபஶுதான்.
பரபக்ஷ நிரஸனுத்துக்காக வேத, வேதாந்தங்களிலே அந்வயித்தவராய்,
அருளிச்செயல்களே பொழுது போக்காய் தலை நின்றவர் எம்பெருமானார்.

வைகுந்தன்: என்பது இவர் விஷயத்தில் வைகுண்ட பிரதத்வமாகிற ”உபாய” கிருத்யமாகும்.
’வைகுண்ட மணிமண்டப மார்கதாயி’ என்று இவர் ஸம்பந்தம் உண்டாமால் மோக்ஷம் என்பது ஸம்பிரதாயம்.

ஆக, எம்பெருமான் விஷயமாகவும், ஆசார்ய விஷயமாகவும் பல நாமங்களைச் சொன்னோம் –
நாமம் பலவும் நவின்று – என்று பூங்கண்ணி புநைதமையைப் பேசினாள் ஆண்டாள்.
இதுவே அவள் கட்டிய ”திரு நாம மாலை”.

———

10. பத்தாம் பாட்டு – தேற்ற மாலை :

தேற்றமாய் வந்து திற. நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பது பொருள்.

தேற்றம் தெளிவு. அதாவது, ஞானத்தில் தெளிவு.
திருநெடுந்தாண்டகப் பாசுரம் (௨௧) ’இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்’ என்றவிடத்தில் வியாகியானம்
இருவராம்படி வந்தார் என்று காட்டியுள்ள படியால், தேற்றமாய் வந்து என்ற இந்த இடத்திலேயும்
தெளிவு ஏற்படும் படி என்கிற அர்த்தத்தை தருவித்துக் கொண்டால், இந்த பாசுரத்தில் எழுப்பப் படும் பெண்பிள்ளை
இவள் வாயைத் திறக்க, கலங்கிய பிறர் புத்தி தெளியும் என்றபடி.

பகவத் விஷயத்தில் பேற்றுக்கு உபாயமாக ஒன்றை செய்ய முற்படுகை கலக்கம்.
’மாம் ஏகம் சரணம் விரஜ’ என்ற கீதாசாரியன், உபாயாந்தர்ங்களை விட்டே தன்னைப் பற்ற வேண்டும் என்றருளிச் செய்தான்.
திருவேங்கட மலையிலே அத்தை அபிநயித்து காட்டியும் நிற்கிறான்.
இதையே, பகவத் பிரவ்ருத்திக்குத் தடையான ஸ்வப்பிரவ்ருத்தி நிவிர்த்தி சரணாகதி என்பர் .
’சித்த வேண்டா, சிந்திப்பே அமையும்’என்று பேசினார் ஆழ்வாரும்.

சாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே சாஸ்த்ர விஹிதமான கர்மாக்களையும், எம்பெருமான் ஆகிய இரண்டையும் பற்றி
பிறவிக் கடல் நீந்துவர். ஸாரக்ஞர்கள் விட்டத்தில் இருப்பாரைப் போலே இருகையும் விட்டு கரைகுறுகும் காலம் பார்த்திருப்பர்.
இப்படி செய்த வேள்வியராய் பர ஸமர்பணம் செய்து விஸ்வசித்து இருக்க, மார்பிலே கைவைத்து உறங்கலாம்.

கலக்கமும், அதன் பரிஹாரமும் :

தேஹாத்மபுத்தி கழிய வேண்டுவது மகார வாச்யனான ஆத்மா ஞாநானத்தால் தேஹ வியதிரிக்தன் என்கிற அறிவு.

ஸ்வாதந்ரிய புத்தி கழிய வேன்டுவது பகவத் சேஷ வஸ்து ஜீவாத்மா என்கிற அறிவு.
அகாரத்திலே ஏறிக்கழிந்த லுப்த சதுர்த்தி இதைத் தெளிவிக்கும்.

அன்ய சேஷத்வ புத்தி கழிவது உகாரத்தால். ஏவ என்ற பொருளில், பகவானுக்கே சேஷப்பட்டவன் ஜீவாத்மா என்ற இத்தால்.

ஸ்வ ரக்ஷணே ஸ்வான்வய புத்தி கழிவதும் நம: பதத்தாலே. ம: ந என்று, பகவதேக ரக்ஷணத்வம் காட்டப்பட்டது இதிலே.

ஆபாச பந்துக்கள் பக்கல் புத்தி விலகுவதும் நாரயணனே ஸர்வவித பந்து என்று விஸ்வசித்த போது.

விஷய சபல புத்தி கழிகையும், ஆய என்கிற வியக்த சதுர்தி அநந்யப் ப்ரயோஜனதையை விளைவித்து.

பிராப்திக்கு வேண்டுவது ருசியும் விலக்காமையும். திரௌபதியும், கஜேந்திர ஆழ்வானும், ஸ்வயத்னத்தை விட்டவளவிலே –
நம: பதார்த்தம் தெரிந்து அநுஷ்டான பர்யந்தம் ஆனவளவிலே – ரக்ஷணம் பிறந்தது.
’சசால சாபஞ்ச விமோச வீர: என்று ரக்ஷணதுக்காக பிடித்திருந்த வில் விலகின அளவிலே,
’இன்றுபோய் போர்க்கு நாளை வா’ என்கிற வார்த்தை பிறந்தது. தலை வணக்கி அப்போதே வாழ்ந்து போயிருக்கலாம்.
அதற்கு அவகாசம் கொடாதே, தாக சாந்திக்காக உண்டான தடாகத்திலே கழுத்திலே கல்லைக் கட்டி விழுந்து
சாவாரைப்போலே, மாண்டு போனான் ராவணன்.

நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பதிலே உண்டான தெளிவு இவையே.

———-

11. பதினோறாம் பாட்டு – பொருள் மாலை :

நீ எற்றுக்குறங்கும் பொருள் ஏல் என பிரச்னம் இடுகிறாள் ஆண்டாள். இதுபோன்ற பிரச்னங்கள்தாம்
ஞாத பிரிச்னம் என்றும், அஞாத பிரச்னம் என்று இரண்டு வகை.
தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவே பிரச்னங்கள் எழுகின்றன.

பொருள் = அர்த்தம், பிரயோஜனம் ஏது என்று வினவுகிறாள் ஆண்டாள்.

எம்பெருமான், ஒரு ’வெள்ள வெள்ளத்தின் மேல் யோக நித்திரை’ செய்வது வைதிக உறக்கமாகும்.
நம்மவர்கள் உறக்கம் தமோ குண கார்யம். பகவான் கிருஷ்ணன் கீதை ௨-௬௬ ஸ்லோகத்தில்,
’யா நிஷா ஸர்வ பூதாநாம்’, ’யஸ்யாம் ஜாக்ருதி பூதாநி’ எது என்று விளக்க மளிக்கிறான்.
இதர விஷயங்களில் வைராக்யம் உறக்கம். பகவத் விஷயத்தில் ஈடுபாடு உணர்த்தி என்று பொருள் படும் இதற்கு.

’ஸுப்ரபாதாஸ்ச மே நிஷா’ என்று அக்ரூரரும்
’அன்று நான் பிறந்திலேன், பிறந்தபின் மறந்திலேன்’ என்று திருமழிசை ஆழ்வாரும்
பகவானின் முகத்தில் விழித்தலையே விடியலாக, ஸத்தா பிரயுக்தமாக நோக்க, மற்றது அதற்கு எதிர் தட்டான,
இரவு (அ) அசத்கல்பம் என்னவும் வேண்டுமோ?

——-

12. பன்னிரண்டாம் பாட்டு – அறிவு மாலை :

அனைத்தில்லத்தாரும் அறிந்து ஏலோரெம்பாவாய்.
அதாவது இவள் ஸகாசத்திலே எல்லோருக்கும் உணர்த்தி ஏற்பட்டது என்கிறாள்.
எம்பெருமானார் பிறந்தாற் போலே ஆயித்து, இவள் சேர்த்தியிலே எல்லோரும் பகவத் விஷயமறிந்தது.

ஓராண் வழியாச் சென்ற உபதேசம் தான் ’ஆசையுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள்! கூறுமின்’ என்று
பேசி வரம்பறுத்தார் எம்பெருமானார்.

’போதுவீர் போதுமினோ’ என்று இச்சையே அதிகார மாக்கினதும் இவளைக் கூடினபோதிறே.
எல்லோரும் அறிய வேண்டும் என்கிற விசாலமான திருவுள்ளம் படைத்த எம்பெருமானார் போல்வாள் ஒருத்தி யல்லளோ இவள்?

’மனத்துக் கினியான்’ என்று திருவாய்ப் பாடியிலே கண்ணனைத் தவிற வேறு ஒருத்தரைப் பாடுவதா?
ராமன் மனத்துக்கு இனியான் ஆகில், கண்ணன் இன்னாப்புக்கு விஷயமா என சில பெண்கள் கிளர்சி செய்ய,
இவள் ஒருத்தி ’இருவரும் ஒரே வியக்திதான்’ என்று சமாதனப் படுத்தி, எல்லோரும் அத்தை உணரும்படிச் செய்தாள்.
அதுக்குச் சேர, கிருஷ்ண விருத்தாந்தமும், ராம விருத்தாந்தமும் மாறி மாறி பேசும்படியான
’புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை’ பாசுரம் பிறந்தது அடுத்தது என்று அந்வயம்.

————–

13. கள்ளம் தவிர் மாலை :

போதரிக் கண்ணினாய் :
போது = போதம் என்பது போது என்று ஆகியுள்ளது.
அரிதலாவது அந்த ஞானத்தை சேகரிப்பதாகும்.
ஆசாரியனானவன் எப்போதும் ஞானத்தை சேகரிப்பதிலே கண்ணும், கருத்தாய் இருப்பர்.
பாவாய் : ஸ்த்ரீத்வம் அல்லது பாரதந்த்ரியத்துக்கு உடல்.
பரதாழ்வானைப் போலே வைத்த இடத்தில் இருக்கும் இருப்பு. இங்கே ஒரு ஐதிஹ்யம் காணலாம்.

ஒரு சமயம் பாஹ்யர்களால் ஸ்ரீரங்கத்துக்கு ஆபத்து வர, பெரிய நம்பிகள் எம்பெருமானாரிடத்தில் வந்து விண்ணப்பித்தார்.
பகவத் விஷயத்தில் ஆபத்தை போக்க அவனிடத்திலேயே பிரார்த்திக்க வேணுமாய்
”சூழ வலம் செய்ய கடுவினை களையலாமே” என்கிறபடி திருவரங்க வீதிகளிலே பிரதக்ஷணமாய் வர ஆபத்து விலகும்,
அதற்கு பெரிய நம்பிகள் தன்பின்னே நிழல் போல் வருவாரைப் பிரார்த்தித்து வேண்ட,
உடையவரும் கூரத்தாழ்வானை அனுப்பி வைத்தார் என்பது குருபரம்பரை சரித்திரம்.
முக்குறும்பு அறுத்தவரான ஆழ்வானும் ப்ராசாரியரின் பின்னே செல்ல தயங்குவாரோ?
ஆனபோது எம்பெருமானாருக்கு பரதந்திரராய் மாற்றுப் பேச்சு உண்டோதான்?

ஸ்ரீமத் ராமானுஜ சரனௌ சரணம் பிரபத்யே |
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம: ||
என்ற ஜகதாசாரியர் விஷயமான துவய மஹா மந்திரத்தில் ”மதுப்பு” பிரத்யாத்தல் பகவத் விஷயமான
துவயத்தில் பிராட்டிகீடாக இங்கே பேசப் படுமவர் கூரத்தாழ்வான் என்றால் அவருக்குண்டான
ஸ்த்ரீத்வ பூர்த்தி யோடேயான ஆசாரியனைச் சொல்லுகிறது இங்கு.

கள்ளம் தவிர்கையாவது ”ஓராண் வழியாய்ப்” மற்றையோர்க்கு ஒளித்துப் போந்ததை
”ஆசை உடையோர்க்கு” எல்லாம் ஆக்கின கிருபாமாத்ர பிரசன்னா சாரியர் இருந்தபடி.

ஸ்வயம் பாகத்திலே வயிறு வளர்க்காமல் ”சாது கோஷ்டியில் உட்கொள்ளப் படுவாரே” என்கிறபடி
எம்மையும் அங்கீகரித்து அனுபவத்தை பகுமுகமாக்கப் பிரார்த்தனை.

——————–

14. பதினாலாம் பாட்டு – பாடல் மாலை :

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு.

’ராமம் மாநுஷம் மந்யே’ என்று ராமன் தன்னை மநுஷ்யனாகவே காட்டிக்கொள்ள ஆசைப்பட்டான்.
அதற்காகவே, சதுர் புஜங்களை மறைத்து, த்விபுஜனாகவே அவதாரத்தை நடத்தி முடித்தான். என்றாலும்
ஹநூமான், மண்டோதரி போல்வாருக்கு தன் நான்கு தோள்களை காட்டினான் என்பதை ருஷி வெளியிட்டுள்ளார்.

மண்டோதரி வியக்தமாக கண்டதுபோல் ஹநூமான் காணவில்லை ஆனாலும், ’ஆயதாஸ்ச, ஸுவ்ருதாஸ்ச’ என்கிற
பகு வசன சப்தங்களால் இதனை ஊகிக்கமுடிகிறது. ராம லக்ஷ்மணர்களைச் சேர்த்து பகுவசனப் ப்ரயோகம் என்று
மறுக்க வழியுண்டானாலும், வால்மீகி, த்விவசன இலக்கணம் கொண்டே அதனை ஸ்லோகமாக்கி யிருக்கலாம்.
அப்படியல்லாமல், பகுவசனமாகவே ஸ்லோகம் அமைத்ததுக்குத் தாத்பர்யம், ராமன் ஹனூமானுக்கு
நான்கு தோள்களோடே தன்னைக் காட்ட ஹனுமான் அவனக் கண்டார் என்பது உறுதியாகிறது.

எம்பெருமான் திருக்கண்கள் காதுவரை நீண்டதின் தாத்பர்யத்தை பராசர பட்டர்,
ராஜாக்கள் நாடு பிடிக்கும் ஆசையில் பக்கத்து தேசங்கள்மேல் படை எடுத்து வசமாக்குவது போல்,
அவனுடைய கண்களும் அருகிருந்த காதுவரை நீண்டு பாய்ந்தாக் கிரமித்ததாய் அருளிச் செய்தார்.

உய்ந்த பிள்ளை என்கிற அரையர், பெரியாழ்வார் திருமொழியில் உள்ள, ’அப்பூச்சி’ காட்டும் பிரகரணத்துக்கு
அபிநயம் பண்ணா நிற்க, எம்பார் உள்ளீரோ? என்று கேட்டதான, எம்பெருமானார் விஷயமான ஐதிஹ்யம் இங்கு நோக்கத்தக்கது.

————

15. பதினைந்தாம் பாட்டு – மாயனைப் பாடு ஏலோரெம்பாவாய்.

’நானே தான் ஆயிடுக’ என்று பாகவத விஷயத்தில் இருக்கும் இருப்பு சொல்லப்பட்டது இதிலே.

கந்தாடை தோழப்பர் நம்பிள்ளை விஷயத்திலே இல்லாத குற்றங்களை ஏறிட, அதற்கு பிள்ளயும் இசைந்தித்டார்,
”என்ன உலகாரியனோ?” என்று அவரால் அழைக்கப்பட, அப்பேர் அவருக்கு விலகாமல் வந்து பரந்தது.

செய்யாத குற்றத்தை ஏறிட்டாலும், இசைந்து, அதற்கு க்ஷமாபணம் வேண்டுவது உத்தம ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம்.

இப்படிபட்ட ஆத்ம குணம் உடைய பெண் பிள்ளையை எழுப்புகிறாள் ஆண்டாள்.
எழுந்திருந்து செய்ய வேண்டிய காரியம் தான் என்ன, என்று வினவ, மாயனை பாட வேண்டும் என்கிறாள்.

கண்ணன் மாயங்களாவன வல்லானை கொன்றது, மாற்றார்களை அதாவது சாணூர-முஷ்டிகர்களை அழித்தது இத்யாதி.
தொண்டரடிப் பொடியாழ்வார் ’கவளமால் யானை கொன்ற கண்ணன்’ என்றும்,
நம்மாழ்வார் ’வார்கடா வருவி யானை மாமலையின் மருப்பினைக் குவடிறுதுருட்டி(திருவா. ௮-௪-௧)என்றும் பாடி விஸ்மயித்தனர்.

ராக்ஷசர்களில் ஒருத்தனான ஹிரண்யனனைக் கொன்று, ப்ரஹ்லாதனை ரக்ஷித்தான்.
ராவணனைக் கொன்று, விபீஷணனை ஏற்றான். பக்ஷிகளில் ஒன்றான காகாசுரனை நிக்ரஹித்து ஜடாயுவை வானேற்றினான்.
நாகங்களின் ஒன்றான காளியனை விரட்டி, கருடனின்று காத்து தக்ஷனுக்கு அடைகலம் கொடுத்தான். இதுவல்லவா அவன் மாயம்.

முதல் ’பாடல் மாலைக்கு’, பகவத் அநேக குணங்கள் விஷயம்.
இரண்டாவது ’பாடல் மாலைக்கு’ அவனுடய வீர தீர பிரதாபங்கள் விஷயம்.

————

16. பதினாறாம் பாட்டு – நீ நேய நிலைக் கதவம் நீக்கு என்றபடியாலே இது ஒரு ”நேச மாலை” :

இதிலே உள்ள வெஞ்சார்த்தம், ஸ்வாமி எம்பெருமானார் விஷயமான ஸ்வாபதேசம் எனலாம்.

நந்த கோபன் குமரன் – எதிராஜ சம்பத் குமாரர்க்கு பிதாவான இவர்,
நந்த கோபனுடைய கோயில் – தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்த கோயில் சாவியை
திருவரங்கத்து அமுதனார் கையினின்றும் ஒரு உபாயத்தால் பெற்றார்,
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்போன் – ’கொடியணி நெடுமதில் கோபுரம்’ (திருவா. ௧0-௯-௮)
பரமபதமாகிற விஷ்ணுலோக மணிமண்டப மார்க்க தாயியாகிற நீர்,
மணிக்கதவம் – நவ ரத்னங்கள் போன்ற கிரந்தங்கள் வாயிலாக, வேதாந்த விழுப்பொருள்களை,
தாள் திறவாய் – காலக்ஷேபம் ஸாதித்தருள வேண்டும்.
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் – ’பவிஷ்யத்’ புராணதிலேயும், ஆழ்வருமாக
’பொலிக, பொலிக பொலிக’ பதிகத்திலே இவர் அவதாரத்தை சூசிப்பித்ததோடு
’பவிஷ்யத்’ ஆசார்ய விக்ரகத்தையும் உபகரித்த படியால்,

தூயோமாய் வந்தோம் – உபாய, உபேயங்களில் சுத்தியோடே வந்த எங்கள்,
துயிலெழப் – ’அநாதி மாயயா ஶுப்த’ என்கிற அக்ஞான அந்தகாரத்தை விலக்கக் கடவீர்.
பாடுவம் – ’கலியும் கெடும் கண்டு கொள்மின்’ என்கிற பாட்டு பிரஸ்துதமாகக் கடவது.
நீ நேச நிலைக் கதவம் நீக்கு –

கதவு இரண்டு கபாடங்களாக விருக்கும். நிலைக்கதவம் நிலைத்த ரக்ஷண லாபத்துக்காக நேசத்தோடே
ஒன்றொடு ஒன்று கவ்வி இணந்திருக்கும். அந்த வகையில்
மந்த்ரம், மந்த்ர சேஷம் என்று இரண்டு பாகமாய் இருக்கும் திருமந்த்ரம்;
நிலை நின்ற ரக்ஷண ஆஸ்வாசகர பகவத் வசனமாகிற சரம ஸ்லோகமும்;
பூர்வார்த்தம்-உத்தரார்தம் என்று இரண்டு பகுதியாய்;
அதுபோலே பூர்வ கண்டம், உத்தர கண்டம் என்று இரண்டு கண்டங்களோடே கூடியதுமான துவய மஹ மந்த்ரம் –
நேர்த்தியான பிராட்டி ஸம்பந்தத்தோடே கூடியதாய்,
மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவை கோயில் கதவம் போலே ரக்ஷிகின்றன.
இவைகளின் விசேஷார்த்தங்களை ஸ்வாமி, உம்முடைய நிர்ஹேதுக கிருபை கொண்டு
உபகரிக்க வேண்டும் என்கிறாள் இந்த ’நேச மாலை’ கொண்டு ஆண்டாள்.

————-

17. பதினேழாம் பாட்டு – உறங்கா மாலை :

உம்பியும் நீயும் உறங்கேல் எம்பாவாய்.

இதிலே சொல்லப் பட்ட ஸ்வாபதேசார்த்தம் ஆசாரியன், திருமந்திரம், திருமந்திரார்த்தம் மற்றும்
மந்திர ஸாரம், முறையே நந்தகோபன், யசோதை, கிருஷ்ண, பலராமர் இவர்களைக் கொண்டு சூசிப்பிக்கப் படுகின்றன.

நந்தகோபன் என்கிற பதம் ஆனந்தம் அளிப்பவர், ஶ்ரீசூக்திகளை ஸம்ரக்ஷிபவர் என்கிற
தத் விந்யாசத்தின்படி, ஆசாரியனைக் காட்டும்.
பர்தாவினுடைய படுக்கையும், ப்ரஜையையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் யசோதை,
பிரதம சரம பதங்களை விடாதே பற்றி இருக்கும் மத்யம பதம் (’உ’ காரம்) போலே அமைந்தது, இவர்கள் மூவரின் கிடக்கை

அம்பரம் ஊடறுத்தது ஓங்கி உலகளந்த வியாபாரம் வியாப்திக்கு விஷயமாகையாலே, நாராயண பதார்தமுமாக, திருமந்திரம்,
அடுத்ததான, கிருஷ்ண, பலராமர்களின் ஸ்நிக்த்த பாவம் திருமந்திர சாரத்தையும் உபன்யஸிக் கின்றன..
ஆசாரியன் அம்பரம், தண்ணீர், சோறு என்று அவர் செய்யும், தானம்-உபகாரம்தான், பரமபதம், விரஜை ஸ்நானம்,
மற்றும் அஹமன்னம், அஹமன்னம் என்கிற ஆத்ம ஸமர்பணத்துக்கான வழி.

மந்திர ஸாரமாவது, ’நின் திருவெட்டெழுத்தும் கற்று, உற்றதும் உன் அடியார்க்கடிமை’ என்கிறபடியே
ததீயத்வத்தை ஸ்தாபிப்பது, பலராமனுக்குத் தம்பியாக பிறந்திருக்கிற படியாலே, அவதாரத்துக்குச் சேர
சேஷத்வமும், அண்ணனானாலும் பலராமன் ஸ்வரூபத்துக்க்ச் சேர சேஷத்வம் பாராட்டி உணர்த்தி மறுக்கில் நாம் இழந்தே போம் அத்தனை.

ஆசார்ய ருசிபரிக்ரஹீதமான பகவத் பிரேமம், பகவத் ருசிபரிக்ரஹீதமான ஆசார்ய அபினிவேசம் இவைதானும்,
ஒன்றை மற்றொன்றிலே மூட்ட, ’பெரிய வண்குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரிய கோல திருவுருக் காண்பன் நான்’ என்னக் கடவதிறே. ஆதிநாதன்-தேவபிரான் தண்ணளி பெறுகையும் இதுகொண்டு.

ஆழ்வாருக்கு ’நெடுமாற்கடிமை’ பதிகம் பாட, கீழில் ௮-பத்து வரை செல்ல வேண்டியிருந்தது.
இவ்விடத்தில் ஒரு ஐதிஹ்யம் காட்டப் படுகிறது. ஸ்வந்திரனாய் இருந்து ஒருவன் மீண்டு பகவத் சேஷத்வத்துக்கு இசைந்தவனாய்,
பின் பாகவத சேஷத்வத்துக்கு வரக் காணில், பகவான்தானும் முகம் சுளிக்குமோ? என்று பட்டர் வினவ,
’அல்லிக் கமல கண்ணனாய்’ இருக்கும் என்று அவர் சிஷ்யர் நஞ்சீயர் பதில் அளித்தார் என்று காட்டப் பட்டுள்ளது.
அதாவது ’ஈஸ்வர சேஷம்’ என்று அறிந்த வன்று பிரமித்து மிளலாம். ததீய சேஷத்வ பர்யந்தமாக உணர்ந்தால் மீள வேண்டாவிறே.

————-

18. பதினெட்டாம் பாட்டு – வந்து திறவாய் மகிழ்ந்து – மகிழ் காலை :

நப்பிந்னை நங்காய் என்று ஸ்திரீத்வ பூர்த்தியும், புருஷகர பூர்த்தியும் உடையவள். எங்கனே என்னில்,
ஈஸ்வரனை அழகாலே திருத்துமவள், சேதனனை அருளாலே திருத்தும்.
கிருஷ்ணா வதாரத்திலே புருஷகார பூதை நப்பிந்னை பிராட்டியாதலால், திருவாகிறாள்.

கந்தம் கமழ் குழலி, செந்தாமரைக் கை, சீரார் வளை ஒலி என்று மூக்கு, கண், காது இவை பட்டினி போகாதே
தளிர்க்கும்படி வந்து திறவாய் மகிழ்ந்து, என்பது ஆண்டாள் விண்ணப்பம். ஆசாரியனுக்கும் உபாய வைபவம் உண்டாகையால்,
அவனைக் காட்டுவதாகவும் தொன்யர்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.

பந்து – சிஷ்ய வர்கத்துக்கு உபலக்ஷணம். செந்தாமரைக் கை அவருடைய உபதேச முத்திரைக்கும்,
வளை ஒலிப்ப என்பது பாசுரங்களின் தொன்யர்த்த விளக்கங்களுக்குமாய்,
வந்து திறவாய் மகிழ்ந்து – திருமாளிகை கதவை திறந்து, வாயைத் திறந்து, பட்டினி கிடந்து அறிய வேண்டிய
அர்த்தங்களை ’ஆசையுடையோர்கெல்லாம் ஆரியர்காள் கூறும்’ என்ற வகையிலே,
’கூடு மனமுடையீர்கள் வந்து கூடுமின்’ என்றிவைகளிலே சொன்ன மர்ம சிரத்தை உடைய அதிகாரிகளாகிய எங்களுக்கு,
’நனும் சொன்னேன், நமரும் உரைமின்’ என்று அத்தை ஸர்வாதிகர மாக்கி உபதேசிக்க வேண்டும்.
இத்தால் பயன் எமக்காய், மகிழ்சி உம்மதாக வேண்டும் என்கிறாள். இதுவே ஆண்டாள் காட்டிய ’மகிழ் மாலை’.

————

19. பத்தொன்பதாம் பாட்டு – தத்துவமன்று, தகவன்று ஏலோரெம் பாவாய் – தகவு மாலை :

மைத்தடங் கண்ணி – பக்தி சித்தாஞ்சனம் ஆகிற பகவத் விஷயத்தில் ஈடுபாடு.
நீ, உன் மணாளனை – ஈஸ்வராய நிவேதிதும் என்றும்,
நாரீணாம் உத்தமை என்றும் சிஷ்யனை ஈஸ்வர சேஷமாக்குகை.
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் – ஆத்மாக்கள் எல்லாம் அவனுக்கு மஹிஷி பிராயரே ஆயினும்,
ஆசாரியன் அபிமத மஹிஷியாகிறர். பிராட்டி பரிகரங்களாய் இருக்கிற நம்மை, தன்பரிகரமாக்கி
முந்துர காரியம் செய்ய வேண்டி ஸ்வகதமாக தான் விழைபவன்.

தத்துவ மன்று – ”தது+த்வம்” அன்று.
’தத்வமஶி’ ஸ்வேதகேதோ! என்கிற வேத வாக்யத்துக்கு சொல்லப்பட்ட அத்வைத பரமான அர்த்தம் தவறு என்று காட்டி மீட்காவிடில்,
தகவன்று – உம்முடைய கிருபைக்குச் சேராது. இதுவே ’தகவு மலை’.

—————–

20. இருபதாம் பாட்டு – இப்போதே எம்மை நீராட்டு – நீராட்ட மாலை :

’இஹிபஸ்யதி ஶரீராணி’ என்று தண்டகாரண்ய ருஷிகள் ராமனிடம் காட்டியது போல,
விரஹம் தின்ற தங்கள் உடம்பைக் காட்டி ’எம்மை நீராட்டு’ என்கிறார்கள்.

உன் மணாளனையும் தந்து – விசிரி, கண்ணாடி அத்தோடு உன்மணாளனையும் தர வேண்டும்.
’எம் தமை விற்கவும் படுவார்களே’ என்கிற ரீதியில், அசேதன வஸ்துக்களுக் கீடாக எடுத்தாளும்படி
பகவானும் தன்னை ஆக்கி வைதிருக்கிற ஸௌலப்யம்.

இப்போதே எம்மை நீராட்டு – கைங்கர்யம் கொள்ளாமை அவனுக்கு தாபம் என்றால் அதை இழக்கை எமக்கு வெக்கை.
’க்ரீஷ்மே ஸீதமிவக்ருதம்’ என்கிறபடியும், ’த்வதீக்ஷண ஸுதாஶிந்து வீஶிவிக்ஷேப ஸீகரைஹி’ என்கிறபடியும்
உன் திருக் கண்நோக்காகிற தீர்த்தம் கொண்டு நீராட்டு என்றபடி.

’ஒருபகல் ஓர் ஊழியாலோ’ என்று பேசினபடி பிரியில் தரியாமை யாகிற வாற்றாமை,
விலகும்படியாக இப்போதே எம்மை நீராட்டு என்று த்வரிக்கிறார்கள்.

——————-

21. இருபத்தோராம் பாட்டு – போற்றியாம் வந்தோம் புகழ்ந்து – புகழ் மாலை :

துயிலுணர்ந்தவாறே வந்த வரத்துக்குக் காரணம் போற்றிப் புகழ்தல் என்கிறார்கள்.
குணத்துக்குத் தோற்று வந்தவர்களாதலால், அவைதம்மையே விஷயமாக்கிப் பாடுகிறார்கள்.

ஊற்றமுடையாய் – ’ஶாஸ்த்திர யோனித்வாத்’ என்கிறபடியே, ஶாஸ்த்திர வாக்கியங்களைக் கொண்டே ”ப்ரஹ்மம் ” அறியத்தக்கது .

பெரியாய் – யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஶாஸஹ’ என்கிறபடியே, வேதத்தாலேயே அறியப்படுமவனாகிலும், ’வேதாதிகன்’

உலகினில் தோற்றமாய் நின்ற – வேதாதிக்னாய் இருந்து வைத்தும், ஸகல மனுஜ நயன விஷயமாம்படி பிறந்து, அத்தால்

சுடரே – பிரகாசிக்கிறான். ’ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந:’ என்று பெருமை அடைகிறான்.
இதிலே ’உ’ என்பது ’ஏவ’ என்கிற பொருள்பட, பிறந்தே பெருமை அடைகிறான் என்றும்,
பிறந்து பெருமையே அடைகிறான் என்றும், பிறந்து பெருமை அடைந்தவனாகவே ஆகிறான் என,
புரத: பஶ்சாதபி ஸ்தாந: என்பதாக ஸ்தானத்ரயத்திலும் அந்வயம்.

அன்றியே,
ஊற்றமுடையாய் – ஆஶ்ருதர்களை ரக்ஷிப்பதில் சுதி இல்லாதவன்.
வானர முதலிகள் விபீஷணனை ’கெட்டவன்’ சேர்கக்கூடாது என்ன,
ஹநூமான் ’நல்லவன்’ சேர்த்துக் கொள்ளலாம் என்ன, இருவரையும் ஒப்புவித்து,
’கெட்டவன் அதனால் சேர்த்துக் கொள்ளலாம்’ என்று அங்கீகரிக்கிற விரத்ததை உடையவன்.

பெரியாய் – மறுதலித்த ஸுக்ரீவன் தானும், ராமனை இதற்காக கொண்டாடும் படியாக அமைந்த பிரபாவத்தை உடையவன்.

தோற்றமாய் நின்ற – தன்னுடைய ஆஶ்ருத பக்ஷபாதம் பிரகாசிக்கும் படியாகவும், அத்தை ’தன் பேறாகவும்’ செய்து முடிப்பவன்.
’பீஷ்ம, த்ரோண அதிக்ரம்ய, மாம்ஸ்ச மதுஸூதந. கிமர்த்தம் புக்தம் விருஷட போஜனம்’ என்று கேட்கும்படியாய் அமைந்த பக்ஷபாதம்.

சுடரே – ’ஐவர்க்கு அருள் செய்து, பார்மல்கு சேனை அவித்த, பரம் சுடர்!’ என்றும்,
’இன்னார் தூதன் என நின்றான், எவுள் கிடந்தானே’ என்றும் அவனுடைய, நீர்மை, எளிவரவால் வந்த ஔஜல்யம்.

இப்புடைகளிலே போற்றிப்-புகழ்ந்து வந்தோம் என்பதான ’புகழ் மாலை’.

—————

22. இருபத்திரண்டாம் பாட்டு – எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து – சாப நிவர்த்த மாலை :

நம்முடைய அபராதங்கள் எம்பெருமான் கண்களை செம்பளிக்கப் (மூடப்) பண்ணும்.
அவனுடைய அபராத ஸஹத்வம் (க்ஷமை) திருக்கண்களை அலரப்பண்ணும். கோடை ஓடிய பயிரிலே ஒருபாட்டம்
மழை பெய்தாப் போலே, ஸாத்மிக்க, ஸாத்மிக்க அவனுடைய அருள் நோக்கை வேண்டுகிறாள், இப்பாசுரத்தில் ஆண்டாள்.

’இவையும், அவையும் உவையும்’ (திருவா. ௧-௯-௧) – பதிகத்திலே ஆழ்வாருக்கு பகவான்
தன்னுடைய ’ஸாத்மிய போக பிரதத்வமாகிற’ குணத்தைக் காட்டி கொடுத்தான்.

போக மண்டபமாகிற ஶ்ரீரங்கத்தில், திருமணத் தூண்களைப் பற்றியன்றி பெரிய பெருமாளின்
திருக்கண் நோக்காகிற பிரவாகத்திற்கு எதிர்விழி கொடுக்கப் போகாது.

’அற்றார்க்கு’ சீற்றத்துடனும், மற்றயோர்க்கு அருள் கொண்டும் நோக்க வேண்டி,
திங்களும், ஆதித்யனுமாய் இருக்கிற கண்கள் என்றாள். பின்னை தவறு என்றுணர்ந்து,
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி ”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள்.

இவர்கள் சாபம் விஸ்லேஷ ஜனித விரக தாபமாகும். அதுக்கு வழி, அவன் சன்னதி யேற வந்து
தலைப் பெய்தலாகிற யாதிருச்சிக சங்கதிகளை ஆண்டாள் இயம்புகிறாள். எவை என்னில் –

தேஹாத்மாபிமானத்தை தொலைத்து – ஆசார்ய ஸஹாசத்திலே -; ஈஸ்வர சேஷத்வத்துக்கு இசைந்தனாய் -;
பகவாதேகே உபாயத்தின் மூலம் -; அவர்களின் கைங்கர்யமே பிராப்யம் என்பது வரையிலான
யாதிருச்சிக, ஆநுஷங்கிக, பிராசங்கிக ஸுக்ருதங் களாகும்.

அகல்யை திருவடியாலும், தூர்வாசர் திருகரங்களாலும், நள-கூபர்கள் முழந் தாள்களாலும்,
மது-கைடபர்கள் தொடையினாலும், ருத்ரன் மார்பு வேர்வையினாலும் சாபம் விலகப் பெற்றனர்.
அவனுடைய ஜாயமான கடாக்ஷத்தால் வந்த ஞானம், அவன் திருவடிகளிலே விழப்பண்ணும்.
விழுந்தவனை அஞ்சேல் என்று கைகவித்து ரக்ஷிக்கும்.
ஆக, அவனுடைய, கண், கால், கை மூன்றும் உத்தேஸ்யம் நமக்கு.

பகவத் பிரபாவம் இதுவானால், ஆசாரியனின் ஒருகண் (உட்கண்) நோக்கு -திருஷ்டி யதிசயம்-
முக்கண்ணன், எண்கண்ணன், ஆயிரம் கண்ணர்களாகிற ஹரி, பிரம்மா, சிவன் இவர்கள் யாருக்கும் சமன் செய்யப் போகாது.

ஆளவந்தார், ’ஆமுதல்வன்’ என்று இளையாழ்வாரை கடாக்ஷித்த படியாலேயே அன்றோ
ஸம்பிரதாயத்துக்கும், ஸம்சாரிகளுக்கும் வாழ்சி வானளவாயிற்று?.

————-

23. இருபத்து மூன்றாம் பாட்டு – யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள் – அருள் மாலை(௨) :

’ஆவா வென்றருள்’ என்கிற திருப்பாவை ௮-ஆம் பாட்டில் ஒரு ’அருள் மாலை’ புனையப்பட்டது.
இங்கே ௨௩ ஆம் பாட்டிலும் ஒரு ’அருள் மாலை’ பிரஸ்துதமாகிறது.
அங்கே சொன்னது ’அருள்வான்’ என்று பவிஷ்யத் வசனமாக.
தாங்கள் சொல் பாவினை ’வினவி அருள்’ என்கிற பொருளிலே இங்கே இப்பாட்டு பிரஸ்துதமாகிறது எனலாம்.

அகதிகளாக வந்தோம். ஆற்றாமையால் குண ஜிதர்களாக வந்தோம். மற்றையோர்களுக்கு ஆகாதபடி வந்த
எங்களை பெற்றாலும் பெறு! இழந்தாலும் இழ!! என்று வந்த சிறுமிகள் விண்ணப்பித் தார்களாக,
தன்னைப் பெற்றும் அகதிகள் என்று சொல்லப் போமோ? உங்கள் காரியம் செய்ய சித்தமாய் இருகிற என்னிடம்,
வந்த காரணத்தை சொல்லுங்கோள் என்ன, கண்ணன் கிடந்த கிடக்கையும், ஸுப்ரபதாமும் சேவித்த தங்களுக்கு
நடை அழகும், வீற்றிருந்த கோலமும் காட்டியருள வேண்டும் என்பதாக இப்பாசுரம்.

நடை, கொடை, வடை, முடி என்று கோயில், பெருமாள் கோயில், திருமலை, திருநாராயண புரம் பிரசிதமாய்
நம்பெருமள் நடை அழகு லோகவிஸ்ருதம். சிம்ம கதி, மத்த கதி, வியாகிர கதி, ஸர்ப்பகதி என்று சதுர்கதி பிரசித்தி அவருக்கு.

பெருமாள் நடையழகு காவ்ய பிரசித்தம் என்பதற்கு, சுமித்ரை வசனம் ஓர் எடுத்துக்காட்டு.
’ராமே பிரமாதம் மாகார்ஷி’ என்று லக்ஷ்மணனுக்கு அவள் செய்த உபதேச வார்த்தை இங்கு நினைவு கூறத்தக்கது.

’அக்ருதப் பிரயயௌ ராம, சீதா மத்யே, ஸுமத்யம’ என்கிற வால்மீகி வாக்குப் படி,
சீதை ராகவ சிம்மத்தின் பின் நடந்தது, அவன் நடை அழகை பின் இருந்து காண ஆசைப்பட்டாப் போலே.
யாதவ சிம்மமாகிற கண்ணனெம் பெருமானுடைய நடையழகை அனுபவிக்க ஆசைப்படுகிறாள் ஆண்டாள் இங்கு.

தாங்கள் வேண்டி வந்ததை கொடுக்கும்போது, படுக்கை அறை வார்த்தை ஆகாதபடி, கொலுமண்டபத்தில்
சேர-பாண்டியன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆராய்ந்தருள வேண்டும் என்கிறாள்.
எம்பெருமானார் கத்யம் விண்ணப்பித்த போது, ”அஸ்துதே|| தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே||” என்றருளிச் செய்தாப் போலே
’சீரிய சிங்காசனத் திருந்து’ வாக்தானம் பண்ண பிரார்த்திக்கிறாள்.

’முனிவேழம்’ (இரா.நூ-௬௪) என்றும், ’மறைவாதியராம் புலிமிக்கது’ (இரா.னூ-௮௮) என்கிற அமுதனார்
வாக்குப்படி சடங்கர் வாயடங்க த்ரிவேதியாம் பத்ரவேதியிலே அமர்ந்து ’இரமானுச தர்சனத்தை’ நிர்வகித்தார், எம்பெருமானார்.

த்ரயீ வேத: என்று பொருள் படாமல், பேத ஸ்ருதிகளை நீக்கி அபேத ஸ்ருதிகளையே அவலம்பித்த சங்கரர்,
மற்றும் அபேத ஸ்ருதிகளை விலக்கி, பேத ஸ்ருதிகளையே கணிசித்த ஆநந்த தீர்த்தர் இவர்களைப்போல் அல்லாமல்,
கடக ஸ்ருதியோடு, பேத-அபேத ஸ்ருதிகள் வாசியற வேதம் முழுவதுமாக பிரமாண சித்தமாக்கின மதம்
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் அல்லது இராமானுஜ தர்சனம் என்று இதற்குப் பெயர்.
ஆராய்ந்து அருள் – திருச்செவி சாத்தியருள் என்பதாய் அமைந்த மாலை ’அருள் மாலை’ (௨).

————–

24. இருபத்துநாலாம் பாட்டு – இன்று யாம் வந்தோம் இரங்கு – இரக்க மாலை:

’சேனையோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்சுதா!’ என்ற அர்ஜுணன் வார்த்தைப்டி நடந்த
கண்ணனெம் பெருமான், அவனைவிட அதிக பக்தி யுக்தையளான ஆண்டாள் சொல்ல கேட்க மேட்டானோ?
’மே ரதயம் ஸ்தாபய அச்சுதா’ என்றதை ’மே அச்சுதா’ என்று கொண்டான் கண்ணன்.
அப்படியானால், அனன்ய ப்ரயோஜனை களான இவர்களுக்கு உகந்து கார்யம் செய்யத் தடை என்?

பிரேமத்தால் வந்த கலக்கத்தால், அஸ்தானே பயசங்கிகளாய், ரக்ஷகனான அவனை
ரக்ஷ்ய வஸ்துவாய் நினைப்பிட்டு ’போற்றி’ பாடுகிறார்கள். மங்களாசாசனம் ஸ்வரூப விருத்தமன்றோ? என்று கேட்டுக் கொண்டு,
ஸ்வரூப பிரயுக்தமே என்கிறார் முடிவில் ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர்.
கதே-ஜல சேது பந்தனம் போலே, அதீதகால விருத்தாந்தங் களுக்கு, காலோத்தரத்திலே மங்களாசாசனம் செய்யப் புகுவது இவளுக்கும்,
இவள் தந்தையான பெரியாழ்வாருக்கும் தொழில் எனலாம்.
அன்றிவ்வுலகம் என்று முன் அவதாரங்களில் நடந்தவைக் எல்லாம், கண்ணன் இந்த அவரத்தில் செய்தானக்கக் கொண்டு
’உன்சேவகமே ஏத்திப்பறை கொள்வான் இன்றுயாம் வந்தோம்’ என்கிறார்கள்.
பூர்வாவதார அபதானங்கள் என்றாலும் அத்தை இந்த அவரத்தில், பூர்வாவஸ்தோசித கார்யம் என்றே நினைப்பு இவர்களுக்கு.

கிருபையினால் கிட்டுமவை களுக்கு பிரார்த்திக்கவும் வேண்டுமா? என்னில்,
போஜனத்துக்கு க்ஷுத்துப் போலே இச்சையை ஆவிஷ்கரிக்கை உத்தேஸ்யம். இவன் நினைவு அவன் அறியானோ? என்னில்,
இவன் பாசுரம் கேட்டவாறே அவன் உகக்கும், என்பது ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் திருவாக்கு..

இன்று யாம் வந்தோம் என்பதை ’இன்றியாம்’ வந்தோம் என்பதாக பார்க்குமிடத்து –
கர்ம-ஞான-பக்தி யோகங்கள் லவலேசமும் இல்லாதபடிக்கு – ஆகிஞ்சின்யத்தோடு வந்தமையைச் சொல்கிறது.

அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்-உறங்குமவனை ,நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது
இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள், இந்த ’இரக்க மாலை’யில்.

———————

25. இருபத்தஞ்சாம் பாட்டு – வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து – வருத்தம் தீர் மாலை :

வந்ததும், பல்லாண்டு பாடினதும் ஒன்றை பெற்றுப் போகவோ?
என்னையும் வேண்டி, பறை என்றும் இதில் எதை உத்தேசித்து வந்தீகோள்? என்ன
பிரயோஜனாந்தர பரர்கள் போல் அல்லாமல், உன்னையே அருத்தித்து வந்தோம்.
பரமபதத்தினின்றும் எங்கள் இடம்தேடி வந்த உன்னை நாடி நாங்கள் வருவதில் என்ன குறை?
’துல்ய சீல வயோவிருத்த’ என்றபடி திருவுக்குத் தக்க உன் சீர்மையும், மூவாறு மாசம் மோகிக்கப் பண்ணும்
உன் விக்ரமங்களையும் பாடுவதையே பிரயோஜனமாகக் கொண்டு வந்தோம்.
பறை தருதியாகில் – நோன்பை வியாஜமாக வைத்து வந்தோம். நாட்டாருக்காக பறை என்று சொன்ன எங்கள்
காரியம் செய்ய திருவுள்ளமாகில் இசைந்து செய் என்கிறார்கள் இப்பாட்டில்.

’தம்சேயம் அஶிதேக்ஷணா’ என்று இருவருக்கும் ஸாம்யம் பலபடி இருந்தாலும், கண்ணழகில் வந்தால்,
பிராட்டிக்கே உன்னதி. ’நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதிறே’ என்பது பட்டர் திருவாக்கு.

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி – ’நாரீணாம் உத்தமை’ யினுடைய அவஸ்தை வரக்கடவதான
பரம பத பிராப்தியும், இருவருமான சேர்த்தியிலே செய்கிற கைங்கர்யம் இரண்டையும் பிரார்த்தித்து வந்தோம் என்றுமாகக் கடவது.

வருத்தம் தீர்கையாவது – நித்ய கைங்கர்யத்துக்கு தடையான சரீரம் விலகுகை, சம்ஶாரம் கழிகை
அதன்றியும் மகிழ்வாவது, அவ்விருவரின் ஆனந்தத்தைக் கண்டு இவன் ஆனந்திக்கை.

”ஆத்யந்த துக்கத் துவம்ச: மோக்ஷம்” என்பது கைவல்யர்களுடைய ஸித்தாந்தம். ஶ்ரீவைஷ்ணவ ஸ்ம்பிரதயத்தில்,
ஶ்ரீ வைகுண்டப் பிராப்தியோடு, நித்யசூரிகளோடே கூடி இருந்து பகவத், பாகவத கைங்கர்யத்திலே திளைக்கை,
மோக்ஷம். அத்தை ஆண்டாள் பிரதிபாதிக்கிறள் இந்த ”வருத்தம் தீர்” மாலையில்.

—————

26. இருபத்து ஆறாம் பாட்டு – ஆலின் இலையாய் அருள் – அருள் மாலை (௨) :

ஒருத்தி மகனாய் பிறந்த போது, தன் மேன்மை தோற்ற வந்து ’பிறந்தான்’. தோன்றினான் என்பதைக் காட்டிலும்,
பிறந்தான் என்று சொல்வதிலே அவனுக்கு ஆனந்தம். ஒருத்தி மகனாய் வளர்ந்தபோது,
தன் நீர்மை, எளிமை எல்லாம் பிரகாசிக்கும்படி வளர்ந்தான் என்கிற மர்மம் அறிந்து பேசுகிறாள் ஆண்டாள் இதிலே.

”பிரம்மஸூத்திராதி” களிலே அவன் பிறந்ததாக பிரஸ்தாபமில்லை. பராசர மஹரிஷியும் ’தேவகி பூர்வசந்தியா ஆவிர்பாகம்’
என்று அவன் அலௌகிக கர்பவாசம் செய்த்தாகவேப் பேசினார்.
’ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை’ என்று ஆண்டாளும் கீழில் சொல்லி இருக்க,
அத்தை மாற்றி ’ஒருத்தி மகனாய்ப் பிறந்து’ என்றபோதே கண்ணன் முகம் முகிழ்ந்ததாக வாயித்து.
’பிறந்தவாறும், வளர்ந்த்வாறும்…’ என்று ஆழ்வார் சாதித்தபடி இவளும் பேசலுற்றது அவனுக்கு மகிழ்வே.

ஆனால் கம்சனுக்கு பயந்து நந்தகோபருடைய திருமாளிகைக்கு ’காரிருள் எல்லில் பிழைத்து’ வந்தேனாக சொன்னது தவறு.
உண்மையில் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தது ’ஜாத் யிடயனுக்குத்’ தான், கும்பக் கோனார் தன் பெண்ணான,
நப்பினையை மணம் முடிது வைப்பதாக அறிவித்திருந்தார். முடியுடை யதுகுல பிறப்பால் அது சாத்தியம் அகாதென்பதற்குச் சேர,
குழந்தை அழுது, பால்குடிப்பது போன்ற வியாபாரங்களை திருவாய்ப் பாடிக்கு வந்தபிறகே வைத்துக் கொண்டானானான்.
அன்றி கம்ச பயம் தனுக்கில்லை என விவரித்து பின் நீங்கள் வேண்டி வந்த பறைதான் ஏது என்ன,
நோன்புக்கு வேண்டிய உபகரணங்களை தர பிரார்த்திக்கிறார்கள்.

என்னையே வேண்டி சாதனாந்தரத்திலே கைவைப்பதே? என்று அவன் வினவ, உன் சன்னிதி கிடைக்கும் என்று
இசைந்தோம் அன்றி. இப்படி அனுமதிப்ரதானம் பண்ணினவர் பக்கல் கிருதக்ஞதா ஆசக்தியாலே
அவற்றை தந்தருள வேண்டும் என்கிறார்கள்.

மாலே என்று தொடங்கி, ஆலின் இலை என்று முடித்த படியால், இப்பாட்டுக்கு விஷயம் ’மால்’.
அதாவது, மாலே-விலுள்ள ’மா’ மற்றும் ’ஆல்’-லிலுள்ள ’ல்’ இரண்டுமாக, ’மால்’ எனவாயித்து.
மால் என்பது அவனுக்குண்டான ஆஸ்ருத வியாமோகத்தைச் சொல்லும். தூத-சாரத்தியம் பண்ணின ஸௌலபியம்,
அருச்சுணன் தேர்த்தட்டிலே ’மாம்’ என்று தன்னை தொட்டுக் காட்டின ’ஸர்வசக்தி யோகம் ’ இரண்டும் இதுக்கு விஷயம்.

சரணாகதையளான திரௌபதிக்காக எல்லாம் செய்து, ஒன்றும் செய்யப் பெற்றிலேன் என வியசனிப்பதும்,
இத்தனை எளியனானாலும் ’கொல்லாமாக் கோல் கொண்டு, பாரதத்துள் எல்லா சேனையை அவித்ததும்’
அவனுடைய ’அகடித-கடனா’ சாமர்தியத்தாலே அன்றோ?

பல்லாண்டு பாடுகைக்கு பெரியாழ்வாரையும், மங்கல தீபத்துக்கு நப்பின்னை பிராட்டியயும், கொடிக்கு பெரிய திருவடியும்,
விதானத்துக்கு திருவநந்தாழ்வானையு மாக நித்திய விபூதி பரிகரங்கள் எல்லாரையும் கொடுத்து
ஸ்வரூபம் நிறம்பெற செய்தவனுடைய ’அருள் மாலை’ இதுவாகும்.

————

27. இருபத்து ஏழாம் பாட்டு – கூடியிருந்து குளிர்ந்து – குளிர் மாலை :

கூடமாட்டேன் என்கிறவர்களை சௌரிய பராக்கிரமங்களாலும்,
அபிமுகர்களை சௌசீல்யாதி ஆத்மகுணங்களாலும்,
உதாசீனர்களை சௌந்தர்யாதி சரீரகுணங்களும் கொண்டு ஜெயித்தவனாகிறான் கண்ணனெம் பெருமான்.

ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று முடிவு செய்த தசரதன், அவனை அழைத்துவரக் கூற,
சுமந்திரன் ராமனை திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தான். அந்தப்புர வாயில் வரை வந்த சீதையின்
காலைத் தொட்டு ராமன் அவளை அங்கேயே நிற்கச் சொல்ல, பதிஸந்மாநிதையளான சீதை கறுமுகை மாலைபோல்
தன் இருகண்ணாலே இராகவனுக்கு மாலையிட்டாள். அஶிதேக்ஷணை அல்லவா அவள்.
அப்படியான சன்மானம் தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.

ராவணவதம் ஆனபின்பு, அபிஷிக்தனாய் இருக்குகிற ராமன் கையில், தன் குடியிருப்பை பெற்றுத் தந்த
உபகார ஸ்மிருதியோடே இந்திரன் ஓர்முத்து மாலையை பரிசளிக்க, அதனை அவன் தன் பாமினியான
சீதையின் கையில் கொடுத்தான். அவளும் இங்கிதத்தால் புரிந்து கொண்டு, ஹிருஷ்ட மனத்தளாய் ஹநுமனுக்கு வழங்கினாள்.
அப்படிப்பட்ட பரிசு தங்களுக்கு வேண்டும் என்றும் விண்ணப்பிக்கிறாள் ஆண்டாள்.

அத்தைக் கொடுக்கும்போது, பாரோர்புகழம்படி அவை இருக்க வேண்டும் என்கிறார்கள் மேல்.
சுக-சாரணர்கள் ராமனின் வானர சேனையின் பிரபாவத்தை ராவணனிடம் ஒற்றர் வார்த்தையாக புகழ்ந்து சொன்னது போலேயும்,
தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணனை அண்டைகொண்ட பலத்தால் பாண்டவகளுக்கே ஜெயம் என்பதை
சஞ்சயன், திருதராஷ்டனுக்கு படிந்து சொன்னாப் போலேயும், நாடுபுகழும் பரிசு தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.

’மாறாளன் கவராத மணிமாமைக் குறைவிலமே’ (திருவா.௪-௮-௧) என்று ஆழ்வார் இரந்தது போல,
கண்ணனைப் பிரிந்த காலத்திலே ’மலரிட்டு நாம் முடியோம்’ என்ற ஆண்டாளும்,
அவனை கூடியபோது பெற வேண்டிய பரிசுகள் இன்னவை என்று பட்டியல் இடுகிறாள் அடுத்து.
சூடகம், தோள் வளை, தோடு, செவிப்பூ என்று கண்ணன் பிடித்த கைக்கும், அணைந்த தோளுக்கும்,
குழல் கொண்டு தூது விட்ட காதுக்குமாக அலங்கார அணிகலனும், பால் சோறு, கூறை இவையோடு
கூடி இருந்து குளிர வேண்டும் என்கிறாள்.

இவர்கள் நீராட்டம் கூடி இருந்து குளிர்வதே. அன்றி திருமுக்குளத்தில் சென்று குளிப்பதோ,
பால்சோறு உண்கையோ அல்ல.
”த்வதீக்ஷண ஸுதாஸிந்து வீசிவிக்ஷேப ஶீகரை:| காருண்ய மாருதாநீதை: ஶீதலை ரபிஷிஞமாம்||” என்பதே இவர்கள் நீராட்டம்.
அத்தை ’துணைத் தேட்டமாக’ அமையப் பிரார்த்தித்தாள். க்ஷுத்ர விஷயத்துக்குத் தனித்தேட்டம் போல்,
பகவத் விஷயத்துக்கு துணைத்தேட்டம் உத்தேஸ்யமே.
’அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’(திருவா.௧0-௯-௧௧) போலேயாம் மிது.

———————-

28. இருபத்து எட்டாம் பாட்டு – சித்த சாதன நிஷ்டை (துவய பூர்வ கண்டார்த்தம்) : ’ஸ்வ நிகர்ஷ மாலை’ :

௧. பேற்றுக்கு உபயமக நல்லது ஏதும் எம்மிடம் இல்லை.
௨. அத்தை சம்பாதிப்பதற் கீடான ஞானமும் இல்லை என்கிற உபாயத்தில் சுத்தியுடையோம்.
௩. ஆர்ஜித ஸுக்ருதமில்லை ஆனாலும் அயத்ன-சித்த ஸுக்ருதமான கண்ணனே நீ! உள்ளாய்.
௪. எங்களாலோ, உன்னாலோ அல்லது இருவரும் கூட்டாகவோ ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தமும் உள்ளபடியால்,
௫. பூர்வபராதங்களை, தட்டியில் வார்த்தைகளான நாராயண நாம ஸ்வீகாரத்துக்கும், ஸ்வாராத்யனை துராராத்யனாக
காட்டினமைக்கும் மாகச் சேர்த்து க்ஷாமணம் வேண்டுகிற எங்களுடைய
௬. உபாய கிருத்யத்தை, புருஷகார பூதையான நப்பின்னையின் பேரில் ஏறிடாதே இறைவா! நீ தாராய் பறை என்று அர்த்திக்கிறாள்.

யக்ஞசிஷ்டாசநி என்கிற கர்ம யோகம்,
சாஸ்திர வஸ்யதை என்கிற ஞான யோகம் இரண்டும் இல்லை ஆனாலும்,
பும்ஸாம் நயதீயிதி புண்ய: என்கிற சாக்ஷாத் புண்யம் எங்களிடம் உண்டு.

கர்ம, ஞான யோகங்கள் கார்ய வேளையில் புருஷனையும்,
பல வேளையில் ஈஸ்வரனாகிய உன்னையும் எதிர்பார்த்து இருக்கும்.
நீயோ ஸ்வீகார வேளையில் புருஷனையும், புருஷகார பூதையான பிராட்டியையும் அபேக்ஷித்தாலும்,
கார்ய வேளையில் உபய-நிரபேக்ஷனாய் தானே கார்யம் செய்யக் கடவாய் – என்கிற சித்த சுத்தியும்,
கார்ய சுத்தியும் உடைய எங்கள் கார்யம் செய்துமுடிப்பாய் என்கிற ’ஸ்வநிகர்ஷ மாலை’ இதுவாகும்.

—————-

29. இருபத்து ஒன்பதாம் பாட்டு -கைங்கர்யப் பிரார்த்தனை (துவய உத்தர கண்டார்த்தம்)- பிராப்ய மாலை :

’பறை’, ’பறை’ என்று ஒன்பது முறை சொன்னதின் தாத்பர்யம் இதில் விளக்கப்படுகிறது .

௧. பிராப்ய ருசி இருக்க ஒட்டாதே விடியோரை வந்தோம்.
௨. பிராப்யமான திருவடியை பிராபகமாகவும் கொண்டோம்.
௩. கைங்கர்ய பிரதிசம்பந்தியான உனக்கு அத்யாபகை களானோம்.
௪. எங்கள் கண்ணிலும், முலையிலும், இடையிலும் அன்யபரதையை விலக்கி அதாவது
ஞான, பக்தி, வைராக்கியங்களிலே தப்தனாகாதே, பிரியில் மூச்சடங்கும் படியான
தரதன் போன்ற உறவும், சீதை, லக்ஷ்மணன் போல ’நாங்களும் அக்குளத்தில்’ மீனாக வேண்டும்.
௫. பரமபதத்தில் இருந்து எங்களைத் தேடி வந்த கண்ணனான உனக்கே நாம் ஆட்செய்வோம்.
௬. கைங்கர்யத்தில் களையாகிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியாகிற காமத்தைக் களைந்து
எங்கள் சேஷத்வம் நிறம்பெறச் செய்வாய் என்றும் நியமிக்கிறபடி இதுவாகும்.

உபேயத்தில் சுத்தியாகிற பரார்த்த-கைங்கர்யம் இவர்களுக்கு உத்தேஸ்யம். எம்முடைய ஆனந்தம்,
எமக்கும் உனக்குமான ஆனந்தம் என்றல்லாமல், உனக்கேயான ஆனந்தம் ஏற்படும்படியாக குற்றேவல்லளைக்,
ஏவிட்டு பணிகொள்ள வேணும் என்கிறாள் என்னவுமாம்.

”தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே” என்று ஆழ்வார் ’எம்மாவீட்டில்’ புருஷார்த்த நிஷ்கர்ஷம் பண்ணினபடியும் இதுவாகும்.

அடுத்து :

கோவிந்தா – அகாரம்.
உனக்கே – ஏவகார சப்தத்தால் உகாரம்.
நாம் – மகாரம்.
பொற்றாமரை அடி – உபாய வாச்யமாய் ’நமஸின்’ அர்த்தம்.
உற்றோமேயாவோம், உனக்கே நாமாட்செய்வோம் – நாராயண பதம்.
மற்றைநம் காமங்கள் மாற்று – ஆய பதார்த்தம் என்கிற வின்யாசத்தாலே

பெரிய திருமந்ரார்த்தமும் இதுக்குள்ளே உண்டு என்பர்.

முதற் பாட்டில் ’நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ஸங்க்ரஹேண சொன்ன
’ப்ராப்ய-ப்ராபகங்கள்’ விவரிக்கப் பட்டன இந்த இரண்டு பாடல்களால்.
’தூயோமாய் வந்து நாம்’ என்கற ௫ஆம் பாட்டு உபாயத்தில் சுத்தியும்,
’தூயோமாய் வந்தோம்’ என்கிற ௧௬ஆம் பாட்டு உபேயத்தில் சுத்தியுமாக சொல்லப்பட்டவை,
இங்கு மேலும் விளக்கப் பட்டன என்பதும் நோக்கத்தக்கன.

—————-

30. இனி பலஸ்ருதியான முப்பதாம் பாட்டு ’திருவருள் மாலை’ எனலாம்.

பலம், பிராப்யம் நமக்கு மிதுன சேஷத்வமாகையாலே, பிராட்டி ஸம்பந்தத்தையிட்டே உபஸம்ஹரிகிறாள் ஆண்டாள்.
பட்டர்பிரான் கோதை என்று தன்னை ஆசார்ய சம்பந்தத்தையிட்டும் நிரூபிக்கிறாள்.
ஈஸ்வரன் புருஷகாரமானால் அல்லது காரியம் செய்யான்.
ஆசார்ய சம்பந்தமோ நேரே பிராப்யத்தைப் பெற்றுத் தரும் என்பதற்கு ஆண்டாள் அவதார முடிவே நமக்கு நிதர்சனம்.

’செங்கண் திருமுகம்’ – பகவத் அனுக்ரஹம் தானும் ஸ்வாதந்ரியம் கலசினபடியாலே பயஹேது.
பிராட்டி அனுக்ரஹம் கேவலம் கிருபை மட்டுமே.

செல்வத் திருமால் – திருமந்திரம், சரம ஸ்லோகம் இரண்டிலும் ஶ்ரீசம்மந்தத்தை ஸ்தான விசேஷத்தாலும்,
அர்த்த பலத்தாலும் தருவித்துக் கொள்ள வேண்டும்.
அப்படியல்லாமல் துவய பூர்வ, உத்தர கண்டங்களில் சொன்னபடியே இதில் பிராட்டி ஸம்பந்தம் சுஸ்பஷ்டம்.

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் – பெரிய பிராட்டியாலே பேறாகையாலே-
இவள் புருஷகாரமானால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான், ஆகையால், அவளுடைய வருளாலே
ஸம்சாரதிலும், பரம பதத்திலுமாய் – பகவத் ஸாந்நித்யத்தைப் பெற்று இன்புறுவர் என்கிறாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாமாலையானது –
பூமாலையும் ஆகக்கடவது என்று உபகிரமித்தது அர்த்த புஷ்டியோடே முற்றிற்று.

————-

வேயர் புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிக விளங்க விட்டு சித்தன்
தூய திரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய் மாலை முடி சூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீ யுரைத்த தை யொரு திங்கட் பா மாலை
ஆய புகழ் நூற்று நாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்கு கருள் செய் நீயே–ஸ்ரீ தேசிகன் பிரபந்தம் –

கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றுமூர் – நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.–ஸ்ரீ வேதப் பிரான் பட்டர் அருளியவை

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே -தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே இளையவல்லி பூவராகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: