ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்
——————-
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –ஸ்ரீ பெரியாழ்வார்–
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7 8-
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்–2-9-11-
தென்னரங்கம் மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்–3-3-2-
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8 1-
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த உறைப்பனூர்
மறைப்பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உரு மகத்து வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8-3-
கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே – 4-9 3-
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-
ஆமையாய் கங்கையாய் ஆழ கடலாய் அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4 9-5 –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய திரு முக மண்டலத்தைப் பார்த்து –
ஆச்சர்யராகா நின்றீர த்யேனராகா நின்றீர் -என்று மகரிஷி சொன்ன அளவிலே
ஸ்ரீ நாரத பகவானுக்கு தன் வைபவத்தை பிரகாசிப்பித்த ஸ்ரீ சர்வேஸ்வரன் -அவன் பக்கலிலே
ஸ்தோத்ரம் பண்ணி வணங்க -கண் வளர்ந்த தேசம் இது என்கிறார்-
இப்படி ஸ்ரீ நாரத பகவான் சேவிக்கும் படியாகவும் –
ருசி உடையார்க்கு எல்லாம் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கைகும் அனுபவிகைக்கும் உடலாகவும்
கிடந்தோர் கிடக்கை -என்கிறபடியே கிடை அழகால் வந்த மினுக்கம் தோற்றும்படியாக-
கண் வளர்ந்து அருளுகிறவனுடைய தேசம்
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 6-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-
நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4-10-9 –
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-
——
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு–ஸ்ரீ ஆண்டாள்
கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-
————
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு-ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-
தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-
பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-
உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4-
தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5-
————–
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு-ஸ்ரீ திரு மழிசைப் பிரான்
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-
பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-
மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே –53-
மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-
————–
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு-ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே-9-
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –29-
மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36-
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே
———–
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு-ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார்
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–
————-
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு–ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்
பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே -1-8-2-
கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே—5-4-6-
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ் சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7-
மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-
பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-5-
தாதாடு வன மாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே–5-5-6-
வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள் இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே—5-5-7-
ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-
தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசை யுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-
ஆ மருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
கா மரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தா மருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10-
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே —5-7-2-
ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-8-
பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-9-
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-
ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே —5-8-7-
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-8-
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படை மன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —-6-6-9-
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4-
தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே —8-2-7-
மன்னு மரங்கத்து எம் மா மணியை – வல்லவாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை –பெரிய திருமடல் – 118
————-
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு-ஸ்ரீ நம்மாழ்வார்
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-
வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-
‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-
‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-
‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
——————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply