ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி -ஸ்ரீ மத் ஆத்தான் திருமாளிகை -வைபவம் –

ஸ்ரீ வைகுண்டேது பரேலோகே ஸ்ரீஸஹாயோ ஜனார்த்தன: |
உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித : பரமேஸ்வர: ||

ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன், ஸம்ஸாரிகளை உஜ்ஜீவிக்கும் பொருட்டு, இப்பாரத தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான
ஊர்களிலே கோயில் கொண்டுள்ளான். இவற்றில் விசேஷமானவை, ஸ்ரீ ஆழ்வார்களாலே பாடப்பெற்ற திவ்ய தேசிங்களாகும்.
நூற்று எட்டு திருப்பதிகள் எனப்படும் இவற்றில் விசேஷமானவை கோவில், திருமலை, பெருமாள் கோவில் எனப்படும் மூன்றும் ஆகும்.
எல்லாவற்றிலும் ப்ரதானம் “கோவில்” எனப்படும் ஸ்ரீரங்கமே ஆகும்.
ஸ்ரீரங்கம் தான் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் ராஜதானி(தலைநகரம்) ஆகும்.
ஆகையால் தான் “ஸ்ரீமந் ஸ்ரீரங்க ச்ரியம் அநுபத்ராவ மநுதினம் ஸம்வர்த்தய” என்று தினமும் அநுஸந்திக்கிறோம்”.
ஸ்ரீ திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்” என்று அங்கிருந்து கொண்டு தான்
நம் ஆசார்யர்கள் நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்கள்.

ஸ்ரீ சதுஸ் ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள்

ஓராண் வழியாக வந்த குருபரம்பரையின் நடுநாயகரத்னமான ஸ்ரீஉடையவர் (ராமாநுஜர்)
ஒரு ஸமயம் ஸ்ரீ வீரநாராயணபுரம் எழுந்தருளினார்.
அங்குள்ள பெரிய ஏரியின் 74 மதகுகள் வழியாகப் பாயும் நீரானது, சுற்றியுள்ள அத்தனை ப்ரதேசங்களையும்
வளங்கொழிக்கச் செய்வதை பார்த்தார்.
“நம் ஸம்ப்ரதாயமும் இதே போல் செழித்தோங்கிப் பெருகி ஜனங்களை வாழ்விக்க வேணும்” என்று திருவுள்ளம் பற்றினார்.
ஆயிரக்கணக்கான தம் சிஷ்யர்களிலே 74 பேரைத் தேர்ந்தெடுத்தருளி
“பாருலகில் ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும்” என்று உலகோர்க்குப் பஞ்ச ஸம்ஸ்கார பூர்வகமாக
ஹிதத்தை உபதேசிக்கும்படி நியமித்தருளினார். இவர்களே சதுஸ் ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள் எனப்படுவர்.
இந்த ஆசார்யர்களின் திரு வம்சத்தவர்களே “ஸ்ரீ ஆசார்ய புருஷர்கள்” என்று அழைக்கப் படுகின்றனர்.

ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ காஞ்சிபுரத்துகருகில் ஸ்ரீ முடும்பை என்னும் அக்ரஹாரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ வரதாசாரியர் என்பவர்.
இவர் பால்யத்திலிருந்தே மஹா ஞானியாகவும், ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் ஆழ்ந்த ஞானமும் ஈடுபாடும் உடையவராகவும்,
ப்ரஸித்தமான பண்டிதராகவும், உதாரராகவும், வாத்ஸல்ய பரிபூர்ணராயும், தோஷமற்றவராகவும் இருந்தார்.
அத்தோடு அவர் ஸ்ரீ ராமாநுஜரின் பஹ்னீபதியும்(ஸஹோதரியின் பர்த்தா) ஆவார்.
தேஹ ஸம்பந்தத்தோடு, மட்டுமல்லாது ஆத்ம ஸம்பந்தமும் வேணுமென்று ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்.
ஸ்ரீ யதிராஜரின் திருவடித் தாமரைகளிலேயே சுற்றி வரும் வண்டு போன்றவர்.
ஸ்ரீ கூரத்தாழ்வானின் ப்ரியத்துக்குப் பாத்ரமானவர். கெளரவம் தோற்ற “ ஸ்ரீ முடும்பை நம்பி” என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
இவற்றை

“ஸ்ரீ ராமாநுஜ ஸம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீவத்ஸ சிஹ்ன ப்ரியம்,
ஸேவேஹம் வரதார்ய நாம கமமும் ஸூக்த்யா ப்ரஸித்தம் முதா |
பால்யாத் பரிபூர்ண போத சடஜித் காதாநுரா கோஜ்வலம்,
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆச்ரித நிதிம் வாத்ஸல்ய ரத்னாகரம் ||

ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம் |
ஸ்ரீ முடும்பை பூர்ணமநகம் வந்தே வரத ஸம்க்ஞகம் ||”–என்று இவரது தனியன்களிலிருந்து அறியலாம்.

74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஸ்ரீ முடும்பை நம்பியும் ஒருவராவார்.
இவர் குமாரர் ஸ்ரீ ராமாநுஜ நம்பி.
ஸ்ரீ முதலியாண்டான் போலே ஸ்ரீ எம்பெருமானார்க்கு ஸ்ரீ ராமாநுஜ நம்பியும் பாகிநேயர் (மருமான்) ஆவார். இவர் தனியன்

“பாஷ்யக்ருத் பாகிநேயோசஸெள பவசந்தாப சாந்தயே |
வரதார்யாத் மஜோஸ்மாகம் பூயாத் ராமாநுஜாஹ்வய: ||”

இவர் குமாரர் ஸ்ரீ முடும்பையாண்டான் (தாசரதி). இவர் முடும்பையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்குக் குடி பெயர்ந்தருளினார்
என்பதை “ஸ்ரீரங்க வாஸ ப்ரியம்” என்ற இவர் தனியனிலிருந்து அறியலாம்.
இவர் குமாரர் ஸ்ரீ தேவப்பெருமள் என்னும் ஸ்ரீ வரதார்யர்.
இவர் குமாரர் ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லக்ஷ்மணாசாரியார்.

ஸ்ரீ இளையாழ்வாரின் குமாரர்களில் ஒருவர் ஸ்ரீ க்ருஷ்ணபாத குரு. இவர் ஸ்ரீ நம்பிள்ளையின் கால க்ஷேப கோஷ்டியில்
ப்ரதம ச்ரோதாக்களாயிருந்த இரு ஸ்ரீ க்ருஷ்ணமாசாரியர்களில் ஒருவர். “ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை” என்றே ப்ரஸித்தர்.
“இந்த நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்த” ஸ்ரீ ஈடு முப்பதாறாயிரப்படியை ப்ரஸாதித்தவர்.
ஸ்ரீ திருவாய்மொழியைக் காத்த குணவாளர். “ஸ்ரீ ஆசார்ய ஸம்மதி” என்ற க்ரந்தமும் அருளிச் செய்தார்.
இவரது குமாரர்கள் இருவர் ஜ்யேஷ்டர் ஸ்ரீ பிள்ளை லோகாசாரியார்.
ஸுப்ரஸித்தி பெற்ற அஷ்டாதச ரஹஸ்யங்களை அருளிச் செய்து ப்ரமாணங்களைக் காத்ததோடு,
துருஷ்கக் கலாபத்தில் ஸ்ரீ நம்பெருமாளை ஸ்ரீரங்கத்தினின்றும் எழுந்தருளப் பண்ணி, ப்ரமேயத்தையும் காத்தருளினவர்.
அவர் திருத் தம்பியார் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். திருப்பாவை ஆறாயிரப்படி, திருவிருத்தம் ஆறாயிரப்படி,
திருப்பல்லாண்டு வ்யாக்யாந்ங்கள், ஆசார்யஹ்ருதயம், அருளிச் செய்தவர்.
இவ்விருவரும் நைஷ்டிக ப்ரம்மசாரிகளாயிருந்து விட்டனர்.

ஸ்ரீ இளையாழ்வாரின் மற்றொரு குமாரர் ஸ்ரீ வரதாசாரியார்.
இவர் குமாரர் ஸ்ரீ ராமாநுஜகுரு.
இவர் குமாரர் ஸ்ரீ அழகப்பங்கார்.
இவர் குமாரர் பேரருளாள ஸ்வாமி (ஸ்ரீ தேவராஜ குரு).
இவர் குமாரர் ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை.

ஸ்ரீ மணவாளமாமுனி ஸம்பந்தம்

ஸ்ரீ நம்பெருமாள் நியமனப்படி கோயில் ஸ்ரீ பெரிய திரு மண்டபத்திலே, ஸ்ரீ நம்பெருமாள் திருமுன்பே
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி காலஷேபம் செய்து “ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர்” என்ற அபிதானத்தையும்,
“ஸ்ரீசைலேசதயாபாத்ரம்” தனியனையும் அடைந்த ஸ்ரீமந்மணவாள மாமுனிகளின் காலஷேப கோஷ்டி மிகவும் ப்ரஸித்தமாக இருந்தது.
விசதவாக் சிகாமணியான அவருடைய கோஷ்டியில் அந்வயித்த முதலிகளில் ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளையும் ஒருவர்.
ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளையும், ஸ்ரீ மா முனிக்குப் பாத ரேகை ஸ்தானத்தராயிருந்த ஸ்ரீ ராமாநுஜ ஜீயரும்(ஸ்ரீ வானமாமலை)
ஒருவருக்கு ஒருவர் அத்யந்த ப்ரியதமரா யிருந்தனர்.
“நமக்குண்டான அதிசயங்கள் எல்லாம் இவர்க்கும்(ஸ்ரீ வானமாமலை ஜீயருக்கும்) உண்டாக வேணும்” என்ற
ஸ்ரீ மாமுனிகள் நியமனத்தை “வேலேவ ஸாகரம்” போலே அதிக்ரமியாது ஸ்ரீ வானமாமலை ஜீயருக்கு ப்ரிய ஸுஹ்ருத்தாக
ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை இருந்தார். அவரிடம் பகவத் விஷய காலஷேபமும் பண்ணினார்.

ஸ்ரீ பெரிய ஜீயர் பரமபதம் அடைதல்

ஸ்ரீ பெரிய ஜீயருக்கு வார்த்திகத்தோடு நோயும் வந்து அநுவர்த்திக்க,
“நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்றிவையொழியக் கூயேகொள் அடியேனை” என்று
“அந்தோ! எதிராசா நோய்களால் என்னை நலுக்காமல், சதிராக நிந் திருத் தாள் தா” என்று தமதார்த்தியெல்லாம் தோற்றக்
கூப்பிட்டு சரிராவஸநாஸமயம் வந்தவாறே தம்மை ஆச்ரயித்திருந்த முதலிகள் பலரையும் ஓரோர் திவ்ய தேசங்களுக்கு சென்று
ஸ்ரீ எம்பெருமான் கைங்கர்யங்களை நடத்தி வரும்படி நியமித்தருளினார்.
ஸ்வ தேசமான ஸ்ரீ திருநகரியில் ஸ்வாமி ஆழ்வார் திருவடிகளிலே திருவுள்ளம் குடிபோய்
“ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யங்களைக் குறைவின்றிச் செய்யவல்லார் ஆர்” என ஆராய்ந்து,
ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளையும் அவர் குமாரர் ஆத்தானை (ஸ்ரீ வரதாசாரியாரை)யும் அழைத்து தாம் ஆதரத்துடன் ஆராதனம் செய்து
போந்த ஸ்ரீ பேரருளாளனையும், அருளி, “நீங்கள் திருநகரி சென்று ஸ்ரீ ஆதிப்பிரானையும் ஸ்ரீசடகோபரையும் நமக்காகத்
துஞ்சும் போதும் விடாது அநுவர்த்தித்துத் திருவாய்மொழியையும் வளர்த்துக் கொண்டு போருங்கோள்” என்று நியமித்தார்.
ஸ்ரீ ஜீயர் திருநாடலங்கரித் தருளினவாறே முதலிகளெல்லோரும் ஸ்ரீ சூர்ண பரிபாலநந் தொடங்கி
இயல் சாத்து வரை எல்லாக் கைங்கர்யங்களையும் ஸம்ப்ரமமாக நடத்தினார்கள்.

ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை திருநகரி எழுந்தருள்தல்

ஸ்ரீ பெரிய ஜீயரின் பரமபத ப்ராப்தியாலும், வானமாமலை ஜீயரும் (பத்ரிகாச்ரம யாத்திரை) அருகிலில்லாமையாலும்,
போர க்லேசத்தோடே எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளைக்கு ஓரிரவில் ஸ்ரீ ஸ்வாமி ஆழ்வார்
“உடனே திருநகரி யேற வந்து சேரும்படி” ஸ்வப்ன முகேந நியமித்தருளினார்.
ஸ்ரீ மாமுனிகள் நியமனமும், மகிழ் மாறன் நியமனமும் பிள்ளையைத் தெளிவிக்கத் தெளிந்து ஹ்ருஷ்டராய்,
ஸ்ரீ நம்பெருமாளிடம் விடை கொண்டு, ஸ்ரீ கோயிலிலுள்ள தம் ஸகல ஐஸ்வர்யங்களையும் அங்கேயே விட்டு,
“ஸ புத்ர பெளத்ரஸ் ஸ கண:” என்றபடி குடும்பத்துடனும் சிஷ்யர்களுடனும் திருநகரி நோக்கி விடை கொண்டார்.
இதறிந்த வழியிலுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் பலரும், “லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:” என்றாற்போலே
ஸ்ரீ ஆழ்வார் கைங்கரிய ஸ்ரீயோடு எழுந்தருளும் உத்தமமாம் முடும்பைக் குலம் உதித்த பிரானை
ஆதரித்தும் ஸேவித்தும் சிஷ்யர்களாகியும் பின் தொடர்ந்தனர். இப்படி மஹா வைபவத்தோடே திருநகரியை அடைந்து
திருப் பொருநலில் திருச் சங்கணித் துறையில் நீராடி, ஸ்வாமி ஆழ்வாரும் போரத் திருவுள்ளமுகந்து,
தமது சத்ர, சாமர. தண்ட, தீப மேள தாள வாத்ய ந்ருத்யங்களான ஸகல வரிசைகலோடு, பரிவட்டம், மாலை, தீர்த்தம்,
சுருள், சந்தனம், அபயஹஸ்தம், திருத்துழாய், புஷ்ப ப்ரஸாதங்கள் அனுப்பி எதிர் கொண்டழைத்துக் கொண்டார்.
பிள்ளையும், ஆதிப் பிரானையும், திருப்புளியின் அடியில் உறையும் ஞான தேசிகனையும் ஸேவித்து அளப்பரிய ஆனந்தமடைந்தார்.
ஸ்வாமி ஆழ்வாரையும் போர வுகந்தருளி, அர்ச்சக முகேந “ஸ்ரீ சடகோபாசாரியார்” என்று அருளிப் பாடிட்டு
“நம் கோவில் பரிகரமனைத்துக் கொத்தும் நிர்வஹித்து வாரும்” என்று நியமித்தருளி நித்யம் ஸாய ரக்ஷை
நித்யாநுஸந்தான காலத்தில் (ஸ்வாமி ஆழ்வார்) தாம் அமுது செய்தருளுகிற ப்ரஸாதம், நெய், கீரையமுது,
உப்புச் சாற்றமுது ஆகிய தளிகை ப்ரஸாதத்தையும் பிள்ளைக்கு பஹுமானமாகத் தந்தருளினார்.
அது முதல் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளையும் “ஸ்ரீ சடகோபாசாரியார்” என்ற தன்னேற்ற அருளிப் பாட்டையும்
“ஸ்ரீ கோவில் பரிகரமனைத்துக் கொத்தும்” என்ற கொத்தருளிப் பாட்டையும் பெற்றார்.

ஸ்ரீ திருநகரியில் நித்ய வாஸம்

“ஸ்ரீநகர்யாம் மஹா புர்யாம் தாம்ப்ரபர்ண் யுத்தரே தடே” என்கிறபடியே திருநகரியில் திருத் தாம்ப்ர பர்ணியின்
ச்லாக்யமான(சிறந்த, உயர்ந்த) கரையாகிய தெங்கரையிலே, வடக்குத் திருவீதிப் பிள்ளையின் வம்சத்தவராகையாலே
ஸ்வாமி ஆழ்வாரின் வடக்குத் திருவீதியிலே தமக்குத் திருமாளிகை அமைத்துக் கொண்டு
தம் திருவாராதனப் பெருமாள்களை ஆராதித்துக் கொண்டு வரவரமுனி திவ்யாக்ஞைப்படி
ஆதிநாதர், ஆழ்வாரின் நித்ய, பக்ஷ, மாஸ, அயந, ஸம்வத்ஸ ரோத்ஸவங்களெல்லாம் ஒன்றால் ஒன்றும் குறைவின்றி,
ஸ்ரீ கோயில் பரிகரமனைத்துக் கொத்தும் நிர்வஹித்து நடத்திவந்தார்.
ஸ்ரீ ஆழ்வார் கைங்கர்யத்தோடு, அவர் திருவுள்ளம்(மேலும்) உகக்கும்படி அவராலே தந்தை, தாயாக அடையப்பட்ட
ஸ்ரீ திருத் தொலை வில்லி மங்கலத்து எம்பெருமான்கள், திருக்குளந்தை, திருக்கோளுர் எம்பெருமான்கள்
“ஆழ்வாரை யன்றி தேவு மற்றறியாத” ஸ்ரீ மதுரகவியாழ்வார் கைங்கர்யங்களையும் நிர்வஹித்து நடத்தி வந்தார்.

ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தவை

ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை ஸ்ரீ கந்தாடை நாயனுக்கு ஸாதிக்க, ஸ்ரீ கந்தாடை நாயனும் ஸ்ரீ திருவாய்மொழிக்கு
ஸம்ஸ்க்ருத அரும்பதம் அருளிச்செய்தார். பகவத்விஷய அரும்பதத்தில் “பிள்ளை நிர்வாஹம்” என்று
சில இடங்களில் ராமாநுஜம் பிள்ளையின் நிர்வாஹங்கள் காட்டப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஆத்தான் ஸ்வாமி

ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளையின் திருக் குமாரர் ஸ்ரீ வரதாசாரியார்.
இவர் பால்யத்தில் திருத் தகப்பனாரோடு ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ மாமுனி கோஷ்டியில் அந்வயித்தவர்.
ஸ்ரீ வானமாமலை ஜீயரின் அத்யந்தப்ரிய பாத்ரராயும், அவர் திருவடிகளில் ஆரா அன்புடையவராயும் இருந்தார்.
ஜ்ஞாநாநுஷ்டாநங்களில் மிக்கும், அருளிச் செயல்களில் ஆழ்ந்த ஞானத்தோடு ஈடுபாடும் உடையவராய்,
அதி மேதாவியாய் இருந்தார். ஸ்ரீ திருநகரிக்கெழுந் தருளிய சில வருஷங்களிலேயே
ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை பரமபதித்து விட்டார்.

“ஆத்தான்” என்றே ப்ரஸித்தராயிருந்த ஸ்ரீ வரதாசாரியார், ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யதுரந்தரராய்,
ஸ்ரீ கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தும் நிர்வஹித்து, நித்ய நைமித்திக் கோத்ஸவங்களைக் குறைவின்றி நடத்தி வந்தார்.
ஸ்ரீ ஆதி நாதருக்குப் பங்குனி உத்திரத் திருக்கல்யாணோத் ஸவத்தையும் ஏற்படுத்தி பங்குனித் திருத்தேரையும் செய்து
ஸமர்ப்பித்து நடத்தி வைத்தார்.
ஸ்ரீ ஆழ்வாருக்கு நிரவதிகமான ஸம்பத் சேகரித்தும், திருப்பீதாம்பரங்கள், திருவாபரணங்கள்,
திருப்பல்லக்குகள் முதலானவை செய்து ஸமர்ப்பித்து நடத்தி வந்தார்.

ஆத்தாநிதீஹ விதிதோ வரதார்ய சர்மா |
காரீந்த்ரஸுநு க்ருதி ஸாகர பூர்ண சந்த்ர : ||–என்கிறபடியே ஸ்ரீ வரதகுருவும் “ஸ்ரீ ஆத்தான்” என்றே ப்ரஸித்தராய்,
அருளிச் செயல்களுக்கு ப்ரவசந க்ரமத்தில் அத்யந்தம் அபிவ்ருத்திகரராய் “ஸ்ரீ பகவத்விஷயம் வரதாசாரியார்” என்றே
ப்ரஸித்தராய், தர்சந நிர்வாஹமும், ஸ்ரீ ஆழ்வார் கைங்கர்ய நிர்வாஹமும் செய்து கொண்டு
மஹா ப்ரபாவத்தோடே எழுந்தருளியிருந்தார்.

இவர் அருளிச் செய்தவை

“பகவத் விஷயம் வரதாசாரியார்” என்றே நிரூபகமாம் படியிறே, பகவத் விஷயத்தில் அவகாஹநம் இருந்தபடி,
திருநகரியில் திருப்புளி யாழ்வாரடியில் ஸ்ரீ மணவாள மாமுனி திருவடிக் கீழ் பகவத் விஷயம் ஸாதித்தருளினார்.
ஸ்ரீ குன்றத்தூர் அப்பனுக்கு பகவத் விஷயம் ஸாதிக்க, அவரும் ஸ்ரீ திருவாய்மொழிக்கு, அரும் பதம் அருளிச் செய்தார்.
இவர் திருவடிகளில் ஆச்ரயித்த வேதாந்தி ஸ்ரீ ராமாநுஜ ஜீயரும் “திவ்ய ஸூரி ப்ரபாவ தீபிகை” முதலானது அருளிச் செய்தார்.

ஸ்ரீ ஞானத்ருஷ்டி அழகப்பங்கார் ஸ்வாமி

ஸ்ரீ வாநசைல முனிராஜ பதாப்ஜ ஸங்காத்
ராமாநுஜார்ய தநயஸ் ஸுதராம்பபாஸே என்றும்
“தஸ்யாபூத் தநயோ லோகவிச்ருதஸ் ஸுந்தராஹ்வய:
யதாத்மநாவதீர்ணோத்ர வாநசைலேச ஸுந்தர: ||” என்கிற படியே
ஸ்ரீ வரதார்யரிடத்திலே(ஸ்ரீ ஆத்தான் ஸ்வாமி) வானமாமலைப் பெருமாள் போர வுகந்தருளி,
அவருக்குத் தாமே திருக் குமாரராய் அவதரித்தருளினார். ஸ்ரீ ஸுந்தராசாரியார் என்ற திருநாமமுடைய இவர்
திகந்த விச்ராந்த ப்ரஸித்தி பெற்று வாழ்ந்தருளினார். இவர் ப்ரஸித்தி இருந்தபடி என் என்னில்
“யச் சிஷ்ய பாவமநவாப்ய சடாரி வேத பாவம் ப்ரபோத்துமநலம் பஹு சாஸ்த்ர வித்பி||
ஸோயம்ஹி ஸுந்தர குருர் விஜய த்வஜோ பூத் ஸித்தாந்த ஸீம்னி யதிராஜ குரோர் மஹாத்மா||

ஸகலசாஸ்த்ர நிபுணர்களான மஹாவித்வான்களும் கூட இவர் ஸம்பந்தம் பெற்றாலொழிய
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செயல் வ்யாக்யாநபோத முண்டாவது அரிது என்று நினைக்கும் படியாயும்,
ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தத்தின் எல்லைக்கு விஜய த்வஜ பூதராயும், “ஸ்ரீ ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார்” என்றே
ஸகலரும் கொண்டாடும்படி மஹா ப்ரபாவமுடையவராயு மிருந்தார்.

இவர் அருளிச் செய்தவை

ஸாரார்த்த மாலை, ஈட்டுக்குப் பாட்டுத் தோறும் உபந்யாஸம், நூறு திருவாய்மொழிக்கும் உபந்யாஸம்,
பத்து பத்துக்கும் உபந்யாஸம், உபோத்கா தோபந்யாஸம், நிகமந உபந்யாஸம், ஈட்டு ப்ரமாணத் திரட்டுக்கு உரை,
திருப்பாவை தாத்பர்யம், திருப்பாவை கருத்து, திருமந்த்ர யோஜனை, த்வய யோஜனை உபந்யாஸம்,
மூவாயிரத்துக்கும் ப்ரமாணத் திரட்டு, ரஹஸ்ய த்ரய, ஸ்ரீவசந பூஷண, ஆசார்ய ஹ்ருதய ப்ரமாணத்திரட்டு
முதலானதுகள் அருளிச் செய்தார்.

இவர் அருளிச் செய்யக் கேட்டு, கேட்டபடியே அப்பு முதலானோர் அரும் பதம் அருளிச்செய்தார்.
அப்பு அரும்பதம், பிள்ளை அரும்பதம், அய்யங்கார் அரும்பதம், ராமாநுஜய்யங்கார் அரும்பதம், தொட்டை யரும்பதம்
போன்ற அரும்பதங்களும் உண்டாயின.
அப்புவும், பிள்ளையும் மூவாயிரத்துக்கும் அரும்பதங்களும்,
தத்வத்ரய, ரஹஸ்யத்ரய, ஸ்ரீவசநபூஷண, ஆசார்யஹ்ருதய அரும்பதங்களும்,
உபந்யாஸங்களும், பரந்த படிக்கும் கடின வாக்யார்த்தம், தீப ப்ரகாசிகை யரும்பதமும் அருளிச் செய்தனர்.
ஆக இப்படி ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் காலம் “அரும்பதகாலம்” என்னலாம் படியிறே நடத்தி வந்தார்.

ஸ்ரீ ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் குமாரர்( ஸ்ரீ பெரிய) சடகோபாசாரியார்.
இவர், திருத்தகப்பனாரிடம் கால க்ஷேபங்கள் கேட்டு அருளிச் செயல்களின் ஆழ் பொருள்களைத் தேர்ந்துரைத்தும்,
“ஸ்ரீ ஈடு ப்ராஸங்கிக ப்ரமாணத் திரட்டும்” அருளிச் செய்தார்.
ஸ்ரீ பேரருளாளரிடம் பேசும் படியான ஏற்றம் பெற்ற ஸ்ரீ திருக்கச்சி நம்பியிடம் அபார ஈடுபாடுடையவராய்
“ஸ்ரீ திருக்கச்சிநம்பி சரிதம்” முதலானது அருளிச் செய்தார்.
“ஸ்ரீ ராமாநுஜமுநேர் மான்யம்” என்று உடையவராலே மிகவும் போற்றப்பட்ட ஸ்ரீ திருக்கச்சிநம்பிக்கு திருநகரியிலே
ஸ்ரீ உடையவரின் “ஸ்ரீ ராமாநுஜ சதுர்வேதி மங்கலத்திலே” ஸந்நிதி வீதியிலே ஒரு ஸந்நிதியும் கட்டி ப்ரதிஷ்டிப்பித்து,
உடையவரை ஆனந்திப்பித்தார். அப்போதிலிருந்து ஸ்ரீ திருக்கச்சி நம்பிக்கு ஸ்வாமி ஆழ்வார் மங்களாசாஸனமும் ஏற்பட்டு நடந்து வருகின்றது.

இவர் குமாரர் ஸ்ரீ குமார சாடகோபாசாரியாருக்கு ஐந்து குமாரர்கள்.
ஜ்யேஷ்டர் ஸ்ரீ அழகப் பிரானார்க்கு ஸந்ததியில்லை.
அவர் காலத்துக்குப் பின்பு, தம்பிகள் நால்வரும்
“உலகமேத்தும் தென்னானாய், வடவானாய், குடபாலானாய், குணபாலமதயானாய்” என்றாற்போலே
நான்கு திரு மாளிகைகள் ஏற்படுத்திக் கொண்டு ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யம் மற்றும் எம்பெருமான்கள்
கைங்கர்யங்களையும் முறை வைத்து நிர்வஹித்துக் கொண்டு இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமத் ஆத்தான் கீழத்திருமாளிகை ஸ்தாபிதம்

ஸ்ரீ குமார சடகோபாசாரியாருக்கு 5 குமாரர்கள்

1-அழகப்பிரானார் – ஸந்ததியில்லை
2-சடகோபாசாரியார் – கீழத் திருமாளிகை ஸ்தாபகர்
3-ஸுந்தராசாரியார் – மேலத் திருமாளிகை ஸ்தாபகர்
4-கெளஸ்துபாசாரியார் (எ) ராமாநுஜம் பிள்ளை – வடக்குத் திருமாளிகை ஸ்தாபகர்
5-அப்பு வாசாரியார் – தெற்குத் திருமாளிகை ஸ்தாபகர்

தெற்குத் திருமாளிகை தற்போது ஸந்ததியின்றிப் போயிற்று.
மீதி மூன்றில் கீழத் திருமாளிகை. நால்வரில் ஜ்யேஷ்டராயிருந்த த் சடகோபாசாரியார் ஸ்வாமி ப்ராசீனமான(ஆதி)
கீழத் திருமாளிகையில் எழுந்தருளியிருந்தார்.
ஒன்றான ராமாநுஜம் பிள்ளை இவ்வூருக்கு எழுந்தருளி அமைத்துக் கொண்டது இத்திருமாளிகை.
ஸ்ரீ பேரருளாளப் பெருமாள் இங்கு தான் எழுந்தருளி யிருந்து நித்ய ததீயாராதநா திசயங்கள் அனைத்தழகும் கண்டருளுகிறார்.

ஸ்ரீ சடகோபாசாரியார் ஞானாநுஷ்டானங்களில் மிக்கு, ஸ்வாமி ஆழ்வாரின் மறு அவதாரமோ என்னலாம்படி
“வ்ருஷமாஸி விசாகாயாம் அவதீர்ணம் குணோஜ்வலம்” என்று வைகாசி விசாகத்திலே வந்தவதரித்து
ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யங்களைக் குறைவின்றி நடத்தி வந்தார்.
இவர் குமாரர் ராகவாசாரியார்……. என்று வம்ச பரம்பரை தொடர்ந்து வருகின்றது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: