ஸ்ரீ வியாகரண ஸாஸ்த்ரம் —

ஸ்ரீ வேதபுருஷனுக்கு இரண்டாவது அங்கமாக வரும் வ்யாகரணம் முகம். முகம் என்றால் இங்கே வாய்.
வ்யாகரணம் என்பதே இலக்கணம். பாஷையின் ‘லக்ஷண’த்தைச் சொல்வதால் ‘இலக்கணம்’.
லக்ஷ்மணன் என்பது இலக்குமணன் என்றாவது போல, லக்ஷணம் என்பது இலக்கணமாகிறது.
பாஷைக்கு வாய்தானே முக்கியம்? வியாகரணங்கள் பல இருக்கின்றன.
முக்கியமாகப் பிரசாரத்தில் இருப்பது பாணினி மஹரிஷி செய்த வியாகரணம்.
அந்த வியாகரண ஸூத்திரங்களுக்கு ஒரு வார்த்திகம் (விரிவுரை மாதிரியானது) இருக்கிறது.
அதைச் செய்தவர் வரருசி. வியாகரணத்திற்கு பாஷ்யம் செய்தவர் பதஞ்சலி.
இந்த மூன்றும் முக்கியமான வியாகரண சாஸ்திரங்கள்.

மற்ற சாஸ்திரங்களுக்கும் வியாகரணத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
மற்றவைகளில் பாஷ்யத்தைவிட ஸூத்திரங்களுக்குத்தான் கௌரவம் அதிகம். வியாகரணத்தில் அப்படியில்லை.
ஸூத்திரத்தைவிட வார்த்திகத்திற்கு மதிப்பு அதிகம். அதைவிட பாஷ்யத்திற்கு அதிக மதிப்பு.
ஆறு சாஸ்திரங்கள் என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பிரிவில் வியாகரணமும் ஒன்று.
நான்கு சாஸ்திரங்கள் மிக்க பிரஸித்தி உடையவை. அவை தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம், வேதாந்தம் என்பவை.
அவைகளிலும் வியாகரணம் ஒன்றாக இருக்கிறது. பாணினியின் வியாகரணம் ஸூத்திர ரூபமாக இருக்கிறது.
சிறு சிறு வார்த்தைகளால் சுருக்கமாகச் செய்யப்பட்டது ஸூத்ரம்.

வியாகரண பாஷ்யத்தை மட்டும் மஹா பாஷ்யமென்று சொல்வார்கள். அதனாலேயே அதனுடைய பெருமை தெரிய வருகின்றது.
அந்த பாஷ்யம் மஹரிஷி பதஞ்சலியால் இயற்றப்பட்டது.
சிவன் கோயில்களில் “வ்யாகரண தான மண்டபம்”என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருப்பதுண்டு.
“வக்காணிக்கும் மண்டபம்”என்று திரித்துச் சொல்வார்கள்

ந்ருத்தா வஸானே நடராஜ ராஜோ நநாத டக்காம் நவ பஞ்ச வாரம்|
உத்தர்துகாம:ஸனகாதி ஸித்தான் ஏதத் விமர்சே சிவ ஸூத்ர ஜாலம்|| என்று ஒரு ச்லோகம் இருக்கிறது.

பேசாத சிவன் ஆடாமல் அசங்காமலிருப்பார். அவரே ஒரே ஆட்டமாக ஆடுகிற போது தான் பாஷா சாஸ்திரமே பிறந்தது.
இதை மேற்படி ச்லோகம் தெரிவிக்கிறது. நடராஜர் என்பது ஆடும் பரமேசுவரனுடைய பெயர்.
நடன், விடன், காயகன் என்ற உல்லாச கலைக் காரர்களில் நடன் நாட்டியம் செய்பவன்.
அந்த நடர்களுக்கெல்லாம் ராஜா நடராஜா. யாரைக் காட்டிலும் உயர்ந்த நடனம் செய்ய முடியாதோ அவன் தான் நடராஜா.
மஹா நடன் என்று அவன் சொல்லப்படுகிறான்.

” மஹாகாலோ மஹாநட :” என்று ஸம்ஸ்கிருத அகராதியான “அமரகோசம்”சொல்கிறது.
‘ அம்பலக் கூத்தாடுவான் ‘ என்று தமிழில் சொல்லுவார்கள்.

பிருஹதீச்வர ஸ்வாமி கோயிலைக் காட்டிய ராஜராஜ சோழனுடைய புத்ர வம்சம் பௌத்ரர்களோடேயே முடிந்து போய்விட்டது.
அவனுடைய தௌஹித்ரி (பெண் வழிப் பேத்தி) அம்மங்கா தேவி வாழ்க்கைப் பட்டிருந்தது ராஜராஜ நரேந்திரன் என்ற
கீழைச் சாளுக்கிய ராஜாவுக்குத் தான். அவர்களுடைய பிள்ளையான குலோத்துங்கன் தான் அப்புறம் சோழ நாட்டுக்கும் ராஜா ஆனது.
அவன் ஆந்திர தேசத்தில் வேதாத்தியயனம் விருத்தியடைய வேண்டுமென்று எண்ணித்
தமிழ்நாட்டிலிருந்து 500 பிராம்மணர்களைக் கொண்டுபோய் வேங்கிநாட்டில் குடியேற வைத்தான்.
வேங்கிநாடு என்பது, கிருஷ்ணா நதிக்கும் கோதாவரி நதிக்கும் நடுவில் இருப்பது.
ஆந்திரதேசத்தில் உள்ள திராவிடலு என்ற பிரிவினர் இந்த 500 பிராம்மணர்களுடைய வம்சஸ்தர்களே.

ஸித்தாந்த கௌமுதி என்று ஒரு வியாகரண இப்பொழுது அதிகமாக பிரசாரத்தில் இருந்து வருகிறது.

‘குவலயானந்தம்’ என்னும் அலங்கார சாஸ்திரத்தை எழுதினவர்களுமாகிய அப்பைய தீக்ஷிதரவர்களுடைய
சிஷ்யராகிய பட்டோஜி தீஷிதர் என்பவர் அந்த ‘ஸித்தாந்த கௌமுதியை‘ச் செய்தவர்.
அது பாணினியின் ஸூத்ரத்திற்கு வியாக்கியான ரூபமாக உள்ளது.

“அர்த்த மாத்ரா லாகவேன புத்ரோத்ஸவம் மன்யந்தே வையாகரணா:“என்று,
வியாகரணமானது பண்டிதர்களுக்குத் தரும் பரமானந்தத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
“அரை மாத்திரை லாபம் கிடைத்தால், அது வியாகரண சாஸ்திரம் அறிந்தவர்களுக்கு,
நிரம்ப நாள் பிள்ளை யில்லாதவனுக்கு ஒரு புத்திரன் உண்டானது போல ஸந்தோஷத்தைக் கொடுக்கும்” என்பது இதன் அர்த்தம்.
அ’என்பதை ‘ஆ’ என்று நீட்டினால், அப்படி நீட்டினதற்குப் பலன் சொல்ல வேண்டும்.
அதுவே மாத்திரை லாபம். ரத்ன சுருக்கமாகவே ஸூத்ரம் இருப்பதால் அதிலே சிக்கல் கூட ஏற்பட்டு
மாத்திரைகள் பற்றி அபிப்ராய பேதங்களும் உண்டாகும். அப்போது வியாக்யானந்தான் தெளிவு படுத்தித் தந்து,
புத்ரோத்ஸவ ஆனந்தத்தைத் தருவது!

நிருத்தம் முடிகிற ஸமயத்தில், டமருகத்தில் சாப்பு கிடுகிடுவென்று 14 சப்தங்களாக உதிர்ந்தது

அந்தச் சப்தங்களின் கணக்குப் போலவே வித்தைகளின் கணக்கு 14 ஆகத்தான் இருக்கின்றது!
ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தச வித்யா என்கிற 14 என்றால், நடராஜாவின் சாப்பும் பதினாலு சப்தத்தையே கொடுத்தது!

அப்படி எழுந்த சப்தங்கள் சிவ ஸ்வரூபத்தை ஏகபோகமாக அநுபவிப்பதற்கு மார்க்கமாக இருந்தன.
அந்த சப்தங்களை “மாஹேச்வர ஸூத்திரம்” என்று வைத்து, அவைகளுக்கு
நந்திகேச்வரர் ‘காரிகா’ (காரிகை) என்கிற பாஷ்யம் எழுதினார்.
அப்பொழுது அங்கே இருந்தவர்களுல் பாணினி மஹரிஷி என்பவர் ஒருவர்.
அந்தப் பாணினி என்பவருடைய கதை “பிருஹத் கதை”என்ற புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த பிருஹத் கதையானது, ஸம்ஸ்கிருதத்தின் பேச்சு மொழிக் கொச்சைகளான பிராகிருத பாஷைகள்
ஆறில் ஒன்றாகிய பைசாச பாஷையில் குணாட்யர் என்பவரால் செய்யப்பட்டது.

பிருஹத் கதையின் ஸங்கிரஹத்தை (சுருக்கத்தை) க்ஷேமேந்திரர் என்பவர் ஸம்ஸ்கிருதத்தில் எழுதினார்.
அதை அநுசரித்து ஸோமதேவ பட்டர் “கதாஸரித்காரம் -என்று ஒன்று எழுதியிருக்கிறார்.
அரேபிய இரவுக் கதைகள் (Arabian Night Tales) ஈஸாப் கதைகள் (Aesop Fables) , பஞ்ச தந்திரக் கதைகள்
முதலியவைகளுக்கெல்லாம் மூலம் அதில் இருக்கிறது. தமிழிலும் “பெருங்கதை” என்று ஒன்று இருக்கின்றது.
‘ப்ருஹத் கதை’என்ற வார்த்தையின் நேர் தமிழாக்கம் தான் ‘பெரும் கதை’.

‘கதாஸரித்ஸாகர’த்தில் பாணினியின் கதை சொல்லப் பட்டிருக்கிறது.
மகத தேசத்தில், இப்பொழுது பாட்னாவென்று வழங்கும் பாடலி புத்ரத்தில் வர்ஷோபாத்யாயர், உபவர்ஷோபாத்யாயர்
என்ற இருவர் இருந்தார்கள். உபவர்ஷோபாத்தியாயர் இளையவர்.அவர் பெண் உபகோஸலை.
வர்ஷோபாத்தியாயரிடம் வரருசி என்பவரும் பாணினியும் பாடம் கேட்டு வந்தார்கள். பாணினிக்குப் படிப்பு வரவில்லை.
அதனால் அவரை வர்ஷோபாத்தியாயர், “ஹிமாசலத்திற்குப் போய் தவம் பண்ணு” என்று அனுப்பி விட்டார்.
அவர் அப்படியே போய்த் தபஸ் செய்து ஈச்வர கிருபையை அடைந்தார்.
நடராஜாவுடைய தாண்டவத்தைப் பார்க்கும் சக்தியைப் பெற்றார். நடராஜ தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில்
உண்டான 14 சப்தங்களையும் கொண்டு, அவற்றை பதினான்கு ஸூத்திரங்களாக
வியாகரணத்துக்கு மூலமாக வைத்துக் கொண்டு, “அஷ்டாத்யாயி”யை எழுதினார்.
வியாகரண மூலநூல் இதுவே. எட்டு அத்தியாயம் கொண்டதாதலால் “அஷ்டாத்யாயி” எனப்படுகிறது.

அந்த பதினான்கு ஸூத்ரங்களையும் ஆவணியவிட்டம் பண்ணுகிறவர்கள் கேட்டிருப்பார்கள்.
மஹேச்வரனின் டமருவிலிருந்து உண்டானதால், அவை மாஹேச்வர ஸூத்ரம் எனப்படும்.
மநுஷ்யனின் கையால் அடிக்கப்படுகிற, அல்லது மீட்டப்படுகிற, அல்லது ஊதப்படுகிற வாத்யங்களிலிருந்து
அக்ஷரங்கள் இல்லாத வெறும் சப்தந்தான் வருகிறது. நாதப்பிரம்மம் சப்தப் பிரம்மமுமாக இருக்கப்பட்ட
பரமேச்வரனுடைய ஹஸ்த விசேஷத்தால், அந்த டமருகத்தின் சாப்புகளோ பதினாலு விதமான
அட்சரக் கோவகளுக்காகவே ஒலித்தன!அவற்றைத்தான் ஆவணியவிட்டத்தில் கேட்கிறோம்:

1.அ இ உண்:
2.ருலுக்:
3. ஏ ஒங்:
4. ஐ ஒளச்:
5. ஹயவரட்;
6. லண்;
7. ஞம ஙண நம்;
8. ஜ2 ப4ஞ்;
9. க ட த ஷ்
10. ஜ ப க ட த ஸ்2;
11. க ப ச ட த சடதவ்;
12. கபய்;
13. சஷஸர்;
14. ஹல் – இதிமாஹேச்வராணி ஸூத்ராணி.

ஆவணி அவிட்டத்தில் இதைச் சொல்கிற போது வேடிக்கையாகக் சிரித்துக்கொண்டே கேட்டிருப்பீர்கள்.
அது எந்த விஷயத்தைச் சொல்கிறது என்று தெரியாமலே ஒப்பித்திருப்பீர்கள்.
பரமேச்வரன் உடுக்கை அடித்துக்கொண்டு கிர்ர், கிர்ர் என்று சுற்றி ஆடி முடித்தபோது கொடுத்த சாப்புகள் தான் இவை.

இப்படிப் பதினாலு எழுத்துக் கூட்டங்கள் வந்தன. இந்த எழுத்துக்களைப் பாணினி எப்படி உபயோகப் படுத்திக் கொண்டார்
எழுத்துக்களைச் சேர்த்துச் சொல்ல ஒரு சுருக்கமான ஸம்ஜ்ஞையை (சமிக்ஞையை) இந்த ஸூத்ரங்களிலிருந்து
பாணினி ஏற்படுத்திக் கொண்டார். 14 ஸூத்ரங்களில் ஒன்றின் முதலெழுத்தையும் மற்றொன்றின் கடைசி எழுத்தையும்
சேர்த்துச் சொன்னால், நடுவில் இருக்கிற எல்லா எழுத்தையும் அது குறிக்கும் என்று பண்ணிவிட்டார்.
உதாரணமாக,’ஹயவரட்’ என்பதில் முதல் எழுத்தான ஹ-வையும்,
‘ஹல்’ என்பதில் முடிவான ‘ல்’லையும் சேர்த்தால் ‘ஹல்’ என்றாகிறது.
அது இடையிலுள்ள மெய்யெழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும்.
இப்படியே ‘அ இ உண்’ஆரம்பமான ‘அ’-வை ‘ஒளச்’முடிவான ‘ச்’- உடன் சேர்ந்த ‘அச்’என்பது உயிரெழுத்துக்களைக் குறிக்கும்.

பதினாலு கோவைகளுக்கும் முதலெழுத்தாகிய ‘அ-வையும், கடைசி எழுத்தாகிய ‘ல்’ லையும் சேர்த்து,
‘அல்’என்றால் அது அத்தனை எழுத்தையுமே சேர்த்துக் குறிக்கும்.
அலோந்த்யஸ்ய என்பது அஷ்டாத்யாயியில் ஒரு ஸூத்திரம். ‘அல்’ என்றாலே எழுத்து என்று அர்த்தம் வந்துவிட்டது.
எல்லா பாஷைகளுக்குமே அகாரம் ஆதியாயிருக்கிறது.
உருது பாஷையில் ‘அலீப்’என்பது முதலெழுத்து.
கிரீக்கில் ‘ஆல்ஃபா’என்பது முதலெழுத்து.
இந்த இரண்டும் எழுத்துக்களை யெல்லாம் குறிக்கும் ‘அல்’ என்பதிலிருந்து வந்தது தான்.
லோகம் பூராவும் வைதிக மதம் இருந்ததற்கு இதுவும் ஒரு அடையாளம்.

இவ்வாறு வியாகரணத்திற்கு மூலகாரணமாயிருந்தது நடராஜாவிடனுடைய டமருகத்தில் இருந்து உண்டாகிய
மாஹேச்வர ஸூத்திரங்களென்று தெரிகிறது. லோகத்தில் சப்த சாஸ்திரங்களை ஏற்படுத்தியதற்குக் காரணமாக
இருந்தவர் பரமேச்வரராகையினால்தான் சிவன் கோவிலில் வியாகரணதான மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது;

சீர்க்காழிக்கருகில் ஒரு க்ஷேத்திரத்திற்குப் போயிருந்தேன். அங்கே கோயிலில் நடராஜாவுக்குப் பக்கத்தில்
பதஞ்சலி, வியாக்ரபாதர் இவர்களுடைய உருவங்களுக்குக் கீழே அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
எழுதுகிறவன் நன்றாக தெரிந்துக் கொள்ளாமையால் ‘பதஞ்சலி’ என்னும் பெயரைப் ‘பதஞ்சொல்லி’என்று எழுதியிருந்தான்.
அந்தப் பெயரும் அவருக்குப் பொருந்தி-”பதஞ்சொல்லி” என்பது வியாகரணத்திற்கே ஒரு பெயர்.
பத வாக்ய ப்ரமாண என்கிற போது ‘பதம்’ என்பதற்கு வியாகரணம் என்பது தான் அர்த்தம்.
ஆகவே பதஞ்சொல்லி என்பதற்கு வியாகரணம் சொன்னவர் என்று அர்த்தமாகிறது.

பதஞ்ஜலி வியாகரண பாஷ்யம் செய்தவர்
‘பதஞ்சொல்லி’ என்று தப்பாக எழுதினதே பதஞ்ஜலிக்குப் பொருத்தமாயிருப்து போல்
ஸம்ஸ்கிருதத்தில் ‘குணாக்ஷர நியாயம்’ என்று ஒன்று சொல்லுவார்கள்.
‘குணம்’என்றால் செல்லு முதலான பூச்சிக்குப் பெயர். அது மரத்தையோ ஏட்டுச் சுவடியையோ அரித்துக் கொண்டே போயிருக்கும்.
சில சமயங்களில் இப்படி அரித்திருப்பதே எழுத்துக்களைப் பொரித்த மாதிரி இருக்கும்.
பூச்சி பாட்டுக்கு அரித்தது அக்ஷரங்களின் வடிவத்தில் அமைந்துவிடும். செல்லுப் பூச்சி உத்தேசிக்காமலே இப்படி ஏற்பட்டு விடுவதுண்டு.
இம்மாதிரி உத்தேசிக்காமலே ஏதோ ஒன்றைப் பண்ணி அதிலும் ஒரு அர்த்தம் ஏற்பட்டு விடுவதை
‘குணாக்ஷர (குணஅக்ஷர) நியாயம்’என்பார்கள்.
பதஞ்ஜலி பதஞ்சொல்லியானதும் குணாக்ஷர நியாயம் தான்

ஸாஹித்ய ரத்னாகரம் என்ற காவியத்தை யக்ஞ நாராயண தீக்ஷிதர் பெரிய சிவ பக்தர்.
அவர் அதிலே ஒரிடத்தில் சொல்லியுள்ள ஈச்வர ஸ்தோத்திரம் ஒன்றிலும் வியாகரணத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதௌ பாணிநி நாததோ (அ) க்ஷர ஸமாம்னாயோபதேசேனஸ்ய:
சப்தானாம் அநுசாஸநான்யகலய:சாஸ்த்ரேண ஸ¨த்ராத்மனா|
பாஷ்யம் தஸ்ய ச பாதஹம்ஸகரவை: ப்ரௌடாசயம் தம் குரும்
சப்தார்த்த ப்ரதிபத்தி ஹேதும் அநிசம் சந்த்ராவதம்ஸம் பஜே (ஸாஹித்ய ரத்னாகர காவியம்)

இந்த ச்லோகத்தில் வரும் ‘அக்ஷர ஸமாம்னாயம்’ என்பது வ்யாகரணத்திற்குப் பெயர்.
அக்ஷரங்களைக் கூட்டமாகச் சேர்த்து வைத்த இடம் என்று அர்த்தம். ஈச்வரனுடைய மூச்சுக்காற்று வேதம்.
அவருடைய கைக்காற்று அக்ஷர வேதம். அதாவது மாஹேச்வர ஸூத்திரம். “சப்தானுசாஸனம்”என்பதும் அதன் பெயர்.
‘பாணினி நாதத:’என்பதற்குப் “பாணிகளால் (கைகளால்) சப்தம் பண்ணினாய்”என்றும்,
“பாணினிக்குச் சப்தம் ஏற்பட்டது”என்றும் சிலேடையாக இரண்டு அர்த்தங்கள் உண்டாகின்றன.

அதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார்
என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது.
“கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன.
காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது.
மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம்.
இதை நினைத்துத் தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது!
“சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார்.
வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால்,
அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன –

இங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்”என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலை யணியாக,
சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”,”இந்துசேகரன்”என்றாலும் இதே பொருள்தான்.
வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது.
ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால்,
“சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள். ‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்”என்பது.

சிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன.
அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும்
தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன. வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்றும் அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

பர்த்ருஹரியின் “வாக்யபாதீயம்”என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும்.
‘நவ வ்யாகரணம்’என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன.
ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூர்ய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார்.
பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார்.
நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர்.
தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்”இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு
அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

—————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: