ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமி வைபவம் – / ஸ்ரீ திருநாராயணபுரம் ஆய் ஸ்வாமி வைபவம் —

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமி வைபவம்

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நூல்கள்:
ஸ்ரீ ஸூதர்சன சதகம்,
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்,
ஸ்ரீ ஸூக்த பாஷ்யம்,
ஸ்ரீ உபநிஷத் பாஷ்யம்,
ஸ்ரீ நித்ய கிரந்தம்(திருவாராதனம்)

சிஷ்யர்கள்:
ஸ்ரீ சேமம் ஜீயர்,
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் ஜீயர்,
ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்

ஸ்ரீ எம்பாரின் இளைய ஸஹோதரர் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர்
சன்யாசம் பெற்றபின்
ஸ்ரீ கூர நாராயண ஜீயர்,
ஸ்ரீ நலம் திகழ் நாராயண ஜீயர்,
ஸ்ரீ நாராயண முனி,
ஸ்ரீ பெரிய ஜீயர்,
ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “ஸ்ரீ எடுத்தகை அழகிய நாராயணர்” என்றிருந்தார்.
இவர் முதலில் ஸ்ரீ ஸ்ரீ ஆழ்வானிடமும் பின் பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.

இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸந்நிதி, ஸ்ரீ கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார்.
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.

இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த ஸ்ரீ வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத் தெரிகிறது.
ஸ்ரீ ஸ்ரீ வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்ரீ ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும்,
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீ ஸூக்த பாஷ்யத்தையும் ஸ்ரீ நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார்.
இவர் ஸ்ரீ ஆழ்வான் சிஷ்யராதலால் ஸ்ரீ நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும்.
அதனாலேயே, ஸ்ரீ நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க,
ஸ்ரீ வேதாந்தாசார்யார் இவரை ஸ்ரீ பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீ மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார்,
மேலும் ஸ்ரீ மாமுனிகள் இவரை “ஸ்ரீ ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்ரீ ஸூதர்சன உபாசகர். ஒருமுறை ஸ்ரீ ஆழ்வான் இவரிடம்,
”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம்,
ஸ்வ ப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும் நமக்குத் பிற உபாசனைகள் தகா” என்னவும்,
இவர், “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன்,
ஸ்ரீ எம்பெருமானுக்கும் பாகவதருக்கும் மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.

இவரைப் பற்றி ஓரிரு ஐதிஹ்யங்கள் உள,

முன்பு ஸ்ரீ நம்பெருமாள் திருக்காவேரியில் கண்டருளும்போது திடீர் பெள்ளப் பேருக்கு வர,
இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார்.
பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.
ஒருமுறை ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்தி ஸ்ரீ பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட,
ஸ்ரீ ஜீயர் ஸூதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது ஸூதர்சன சதக தனியனில் தெளிவு.

ஸ்ரீ எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது.
இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் ஸ்ரீ கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.

இவரது தனியன்:
ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குண ஸாகரம்
ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான
ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் –

———————–

ஸ்ரீ திருநாராயணபுரம் ஆய் ஸ்வாமி வைபவம்-

ஸ்ரீ திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேலக்கோட்டையில் ஸ்ரீ ஸேனை முதலியார் அவதரித்த
நன்னாளில் திருவவதரித்தார். திருநக்ஷத்ரம் – ஐப்பசி பூராடம்.

மற்ற திருநாமங்கள் –
ஸ்ரீ தேவராஜர்,
ஸ்ரீ தேவப்பெருமாள்,
ஸ்ரீ ஆஸூரி தேவராயர்,
ஸ்ரீ திருத் தாழ்வரை தாஸர்,
ஸ்ரீஸாநுதாசர்,
ஸ்ரீ மாத்ரு குரு,
ஸ்ரீ ஜநந்யாச்சார்யர்,
ஸ்ரீ ஆயி, தேவராஜ முநீந்த்ரர் ஆகியவை ஆகும்.

ஸ்ரீ ஜநந்யாசார்யருக்கு வேதம், திவ்ய ப்ரபந்தம் கற்பித்து, பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தது
அவருடைய திருதகப்பனார் ஸ்ரீலக்ஷ்மணாச்சார்யார் ஆவார்

திருநாடு அலங்கரித்தது ஸ்ரீ திருநாராயண புரத்திலே.

ஸ்ரீ ஈடு பரம்பரையின் ஆசார்யர் ஸ்வாமி ஸ்ரீ நம்பிள்ளை.
அவர் சிஷ்யர் ஸ்ரீ ஈயுண்ணி மாதவர்.
அவர் குமாரர் ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்.
இவர் சிஷ்யர் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை.
இவர் சிஷ்யர் ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை.
இவருடைய சிஷ்யர்கள் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி,
ஸ்ரீ இளம்பிளிசைப் பிள்ளையான திருவாய்மொழி ஆச்சான்,
ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை மற்றும்
ஸ்ரீ ஈயுண்ணி தேவப் பெருமாள் ஆகியோர் ஆவர்.

ஸ்ரீ எம்பெருமானார் தம் திருக்கைகளாலே திருவாராதநம் ஸமர்ப்பித்த ஸ்ரீ திருநாராயணப் பெருமாளுக்கும்,
ஸ்ரீ ராமப்ரியனும் ஸ்ரீ யதிராஜ சம்பத்குமாரனுமான ஸ்ரீ செல்வப்பிள்ளைக்கும் பாலமுதும்,
ஸ்ரீ மாலாகாரர், ஸ்ரீ விஷ்ணுசித்தர் மற்றும் ஸ்ரீ ஆண்டாளைப் போல புஷ்பமும் ஸமர்ப்பித்துக் கொண்டு
கைங்கர்ய நிரதராய் ப்ரசித்தி பெற்றவர் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி ஸ்வாமி.

ஆய் என்ற சொல்லுக்கு தாய் என்று பொருள். இந்த ஸ்வாமி ஸ்ரீ திருநாரணனுக்கு பாலமுது சமர்ப்பிக்கும்
கைங்கர்யத்தை தாயன்போடு செய்து வந்தாராம். ஒரு நாள் பாலமுது சமர்பிப்பதற்கு கொஞ்சம் காலம் தாழ்ந்து போக,
ஸ்ரீ திருநாரணன் அது பொறாமல் நம் ஆய் எங்கே (தாய்) இன்னம் காணோமே? என்று அர்ச்சகர் மூலம்
வினவினபடியாலே அன்று முதல் இவருக்கு ஆய் என்று திருநாமம் உண்டாயிற்று.

ஸ்ரீ மாமுனிகளுக்கும் இவருக்கும் உள்ள சம்பந்தம்:
ஸ்ரீ மணவாளமாமுனிகள் ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் அருளிச் செய்தபோது
“ஜ்ஞான சதுர்த்திகளின் மேலேயிறே ஆநந்தஷஷ்டிகளுக்கு உதயம்” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்
அருளிச் செய்யும் போது சில விளக்கங்கள் தேவைப்பட தமது ஆசார்யரான ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளையின்
ஸஹ அத்யாயியாய்(கூடப் படித்தவர்) எழுந்தருளியிருந்த ஸ்ரீ ஆய் ஸ்வாமியினிடத்திலே கேட்க வேணும் என்று
திருவுள்ளம் கொண்டு ஸ்ரீ திருநாராயணபுரம் நோக்கி புறப்பட்டாராம் ஸ்ரீ மாமுனிகள்.
அதே ஸமயம் ஸ்ரீ திருநாரணன் ஸ்ரீ ஆயி ஸ்வாமியின் ஸ்வப்னத்திலே ஸ்ரீ மாமுனிகள் அவதார ரஹஸ்யத்தை காட்டி யருள
ஸ்ரீ ஆய் ஸ்வாமி ஸ்ரீ மாமுனிகளை சேவிப்பதற்காக ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டார்.
இருவரும் ஸ்ரீ ஆழ்வார் திருநகரி எல்லையில் சந்தித்துக் கொள்ள ஸ்ரீ ஆயியும் தாளும் தடக்கையும் கூப்பி சேவிக்க,
இதனைக் கண்ட ஸ்ரீ பெரிய ஜீயர் ஸ்வாமியின் சிஷ்யர்கள் ஸ்ரீ பெரிய நம்பியும் ஸ்ரீ எம்பெருமானாரும் எதிர்பட்டாப்
போலாயிற்று என்று உகந்தனராம். ஸ்ரீ மாமுனிகளும் ஆசார்ய ஹ்ருதய காலக்ஷேபம் கேட்டு முடித்த பின்பு
ஸ்ரீ ஆய் ஸ்வாமிக்கு ஒரு தனியன் சமர்ப்பிக்க

“ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்ஸிதா:
ஸ்ரீ ஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாஸ்ரயே”

ஸ்ரீ ஆயி ஸ்வாமியும் மாமுனிகள் விஷயமாக ஒரு பாசுரம் அருளிச் செய்தாராம்

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாரு மகிழ்மார்பன் தானிவனோ, தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

பிறகு ஸ்ரீ ஆய் ஸ்வாமி சிலகாலம் அங்கேயே எழுந்தருளி யிருந்த பின்னர் ஸ்ரீ திருநாராயணபுரம் எழுந்தருளினார்.

இவர் அருளிச் செய்தவை
ஸ்ரீ திருப்பாவைக்கு ஸ்ரீ ஈராயிரப்படி மற்றும் ஸ்ரீ நாலாயிரப்படி வ்யாக்யானம்,
ஸ்ரீ வசனபூஷண வ்யாக்யானம்,
ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் ஆகியவை ஆகும்

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருநாராயணபுரம் ஆய் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: