ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை –218—-
இப்படி பத்து தோறும் உள்ள அர்த்தங்களை பர உபதேசத்துக்கு உறுப்பாக ஒருங்க விட்டு –
விஸ்தரேண மேல் -யோஜிப்பதாக திரு உள்ளம் பற்றி –
பரத்வாதி குண விசிஷ்டனான ஸ்ரீ சர்வேஸ்வரன் தமக்கு பிறப்பித்த தசா விசேஷங்களை
பத்து தோறும் வெளி இடுகிறார் என்று ஸங்க்ரஹேண வாக்கியம் அருளிச் செய்கிறார் மேல் ..
பரத்வ
காரணத்வ
வ்யாபகத்வ
நியந்த்ருத்வ
காருணிகத்வ
சரண்யத்வ
சக்தத்வ
சத்ய காமத்வ
ஆபத் சகத்வ
ஆர்த்தி ஹரத்வ
விசிஷ்டன்
மயர்வை அறுக்க
தத்வ வேதன
மறப்பற்று
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர
நிஷ்கரிஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
ப்ரேமே பல உபாயத்தே புகுந்து
சாதன பல உபகார கைம்மாறு இன்றி
க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி
க்ருதமானத்தை உணர்ந்து
ஆத்ம தர்சன பல ப்ராப்தி
மரணா வதியாகப் பெற்று
காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின
தம் பேற்றை பிறர் அறிய
பத்து தோறும் வெளி இடுகிறார் ..
( ராகவாயா மஹாத்மனே ஸுலப்யம் பரத்வம் -சர்வ லோக சரண்யன் –
இங்கு பரத்வம் முதல் நான்கு பத்துக்கள்- ஸுலப்யம் ஐந்தாம் பத்து – சர்வலோக சரண்யன் ஆறாம் பத்து-
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு அரண் -அவ்யபதேச மகன் வாக்கு–
அந்தராத்மா –ஆத்மாவுக்குள் இருக்கும் பரமாத்மா –ஆகாசம் கைக்குள்ளே
அந்தர அசேதனம் -ஆகாசம் வியாபகம்
அந்தர்யாமி- அடக்கி ஆளும் சக்தி -சரீரத்துக்குள் உள்ள ஆத்மா அந்தர்யாமி எப்பொழுதும் இல்லையே –
ஆத்மாவுக்குள் உள்ள பரமாத்மா தானே அந்தர்யாமி சர்வ நியாந்தா –
உள்ளே இருக்கும் சேதனன் வியாபகன் பரமாத்மாவே தான் -)
அதாவது
1-சர்வ ஸ்மாத் பரனாய்-
2-அந்த பரத்வ பிரகாசகாம் படி சர்வ காரண பூதனாய் —
3-லோகத்தில் காரிய காரணங்கள் போல் அன்றிக்கே -உபாதான காரணமும் தானே ஆகையாலே –
கார்ய பூத சமஸ்த வஸ்துக்களுக்கும் வ்யாபகனாய் –
4-அந்த வியாப்தி தானே ஆகாச வ்யாப்தி போல் அன்றிக்கே அந்தர் ஆத்மா ஆகையாலே -சர்வ நியந்தாவாய் –
5-அந்த பரத்வாதிகளைக் கண்டு வெருவ வேண்டாதபடி பரம காருணிகனாய் –
6-இப்படி க்ருபாவான் ஆகையாலே சர்வ சரண்யனாய்–
7-சரண்ய க்ருத்யமான -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பிராப்தி கரணதுக்கு ஈடாகும் படி –சர்வ சக்தி யுக்தனாய் –
8-அந்த சக்தியாலே நித்யமாக கல்பித்த பத்நீ பரிஜனாதிகளை உடைய வான் ஆகையாலே-சத்ய காமனாய் –
9-அந்த போகங்களில் அந்ய பரனாய் இருந்து விடாதே -பிரளயாத்ய ஆபத்துகளில் உதவி –
லீலா விபூதியை ரஷிக்கையாலே -ஆபத் சகனாய் –
10-இப்படி ஆபத் சகன் ஆகையாலே சம்சார தாபத்தரான ஆஸ்ரிதர்க்கு ஆர்த்தி கரனாய் –
இப்படி பத்து பத்தாலும் பிரதிபாதகமான பத்து குணத்தோடு கூடி இருக்கிற சர்வேஸ்வரன்-
மயர்வை அறுக்க
1-தத்வ வேதன மறப்பற்று-
அதாவது-
மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்கிறபடியே
பக்தி ரூபாபன்ன ஞான பிரதான முகேன அஜ்ஞ்ஞானத்தை ஸ வாசனமாக போக்க-
அதனால் தத் விஷய ஞானம் ஆகிற தத்வ ( பகவத் விஷய ) வேதனத்தில் –
மறப்பேனோ இனி யான் என் மணியை -1-10-10-– என்கிறபடியே -விஸ்ம்ருதி அற்று –
2-ஜ்ஞப்தி ( தத்வ வேதன – பர்யாய சொல் ) பல முக்தி தலை சேர நிஷ்கரிஷித்து-
அதாவது –
அந்த ஞான பலமான மோஷத்தை –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர்த்து -2-9-1- -என்று -ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து –
3-மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து-
அதாவது-
அந்த மோஷத்துக்கு பலமான கைங்கர்ய ரூப வ்ருத்தியை-
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1–என்று அர்தித்து –
4-புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து-
அதாவது–
அந்த புருஷார்தத்துக்கு பலம் அந்ய ருசி நிவ்ருத்தி ஆகையாலே தத் பலமாக –
ஐம் கருவி கண்ட இன்பம் -சிற்றின்பம் ஒழிந்தேன் -4-9-10–என்று அந்ய புருஷார்தங்களில்
ருசியைத் தவிர்ந்து –
5-விரக்தி பல ராகம் கழிய மிக்கு-
அதாவது–
அந்த இதர விஷய விரக்திக்கு பலமான பகவத் விஷய ராகம் –
கழிய மிக்கதோர் காதல்-5-5-10- -என்னும் படி அதிசயித்து –
6-ப்ரேமே பல உபாயத்தே புகுந்து-
அதாவது–
அந்த நிரதிசய பிரேம பலமான விளம்ப அஷமத்வத்தால் வந்த த்வரையாலே –
அலர்மேல் மங்கை உறை மார்பா -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10–என்று
உபாய வரணம் பண்ணி –
7-சாதன பல உபகார கைம்மாறு இன்றி-
அதாவது-
அந்த சாதன பலமான உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக –
உதவி கைம்மாறு என் ஆர் உயிர் -7-9-10–என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணத் தேடி –
அவ் வாத்ம வஸ்து ததீயம் என்று அறிகையாலே –
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -எதுவும் ஓன்று இல்லை செய்வது இங்கும் அங்கும் –7-9-10-
என்று பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறி –
8-க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி க்ருத மானத்தை உணர்ந்து-
அதாவது-
அந்த க்ருதக்ஜைக்கு பலமான பிரத்யுபகாரமாக –
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10- -என்ற ப்ரீதியாலே கலங்கி
சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவை –
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -8-8-4–என்று தேகாதிகளில் விலஷணமாய்
அவனுக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு -அனந்யார்ஹமாய் இருக்கும் என்று அறிந்து –
( இந்த ப்ரகாரதயா சேஷம் என்கிற அறிவே உணர்வே பிரதியுபகாரம் இந்த உணர்வே ஆத்ம தர்சனம் )
9-ஆத்ம தர்சன பல ப்ராப்தி மரணா வதியாகப் பெற்று-
அதாவது-
ஆத்ம தர்சன பலமான -பகவத் பிராப்தியை –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் 9-10-5–என்கிறபடி சரீர அவசானத்திலே பண்ணித் தருகிறோம் என்று
அவன் நாள் இட்டு கொடுக்கப் பெற்று –
( பக்தி உபாசனனனுக்கு கர்ம அவதி -ப்ரபன்னனனுக்கு மரண அவதி தானே
மரணாமானால் கால ஆஸக்தி பர்யாயம் )
10-காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின தம் பேற்றை
அதாவது-
இப்படி பிராப்தி காலம் அணித்தானதுக்கு பலம்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போவதாகையாலே -அவ் வர்சிராதிகதிக்கு –
காள மேகத்தை இன்றி மற்று ஓன்று இல் அம் கதி 10-1-1–என்றும் ,
ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரணே 10-1-6–என்று பரம ஆப்தன் ஆனவன் தன்னையே
துணையாகக் கூட்டின தம்முடைய பேற்றினை
பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார் ..
அதாவது-
பிறர் அறிந்து வாழும் படி –அறிந்து -( உணர்ந்து வாழ வேண்டுமே -எனவே இந்த வியாக்யானம் )
முதல் பத்தே தொடங்கி பத்துப் பத்தாலும் பிரகாசிப்பித்தது அருளுகிறார் என்றபடி ..
இத்தால் பரத்வாதி குண விசிஷ்டனான ஈஸ்வரன் தமக்கு பண்ணிக் கொடுத்த பேறுகளை
பலரும் அறிந்து வாழ வேண்டும் என்று
பத்து பத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் என்று பத்து நிகமனத்துக்கு
வாக்யார்த்தம் சொல்லப் பட்டதாய்த்து –
ஞப்தி
முக்தி
விருத்தி
விரக்தி
பக்தி
பிரபத்தி
சக்தி
பிராப்தி
பூர்த்தி
ஆர்த்தி ஹரத்வம்
ஆகிய பத்துக்களும் பத்தின் அர்த்தம் –
—————–
ஸ்ரீ திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், ஸ்ரீ பகவான் ஸ்ரீ ஆழ்வாருக்குக் காட்டி அருளும் குணநலன்கள் —
1-அவன் மிக உயர்ந்தவன்,
2-அவனே எல்லாவற்றுக்கும் காரணம்,
3-நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான்,
4-அவனே எல்லாற்றையும் நடத்திக் கொடுக்கிறான்,
5-மிகவும் கருணை உடையவன்,
6-நம் எல்லோருக்கும் சரணாகதி அளிக்க வல்லவன்,
7-சக்தி உடையவன்,
8-நாம் விரும்பியவைகளை அடையச் செய்பவன்,
9-நம் இடர்களில் இருந்து காப்பாற்றுபவன்,
10-நம் கவலைகளை தீர்க்க வல்லவன்.
முதல் பத்து – பரத்துவம், அவன் பெரியவன், மிகவும் மேன்மையானவன்,
அவனைவிட மேன்மையானவனோ, மேன்மையான பொருளோ எதுவும் கிடையாது.
உயர்வற உயர்நலம் உடையவன் (1.1.1).
இரண்டாம் பத்து – காரணத்துவம் – இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற
எல்லா ஜீவராசிகளுக்கும் அவனே காரணம்.
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி (2.1.11)
மூன்றாம் பத்து – வியாபகத்துவம் – எங்கும் உளன் கண்ணன் –
பரமாத்மா எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்து உள்ளான்.
“வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுது இயன்றாய்” (3.1.5) என்றும்
“இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ கண்ணனைக் கூவுமாறே” (3.4.1) என்றும் சொல்வது .
நான்காம் பத்து – நியந்த்ருத்துவம் – அவனன்றி ஓர் அணுவும் அசையாது –
பரமாத்மாவே இந்த அண்டகடாகத்தில், அனைத்து நிகழ்வுகளையும் நிகழ்த்திவைப்பவன்.
“வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர், ஆற்றல் மிக்கு ஆளும்” (4.5.1)
ஐந்தாம் பத்து – காருணிகத்துவம் அல்லது சௌலப்பியம் – மிகவும் எளிமையானாவான் –
அவனை அணுகுவது மிகவும் எளிது. அவனுடைய அளவற்ற கருணையினாலேயே
“பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி, மெய்யே பெற்றொழிந்தேன்” (5.1.1) என்கிறார், ஆழ்வார்.
ஆறாம் பத்து – சரண்யத்துவம் – பெருமையும், எளிமையும் ஒரே இடத்தில இருக்கிறபடியால், நாம் எல்லோரும்
சரண் அடைய மிகவும் தகுதியானவன். ஐந்தாம் பத்திலேயே, ஆழ்வார் நான்கு சரணாகதிகளை கேட்டுள்ளார். அவையாவன,
சிரீவரமங்கலநகர் அல்லது வானமாமலை (நோற்ற நோன்பு 5.7),
திருக்குடந்தை அல்லது கும்பகோணம் (ஆராவமுதே 5.8),
திருவல்லவாழ் (மானை நோக்கு 5.9),
விபவாவதாரத்து கண்ணனிடம் (பிறந்தவாறும், 5.10).
ஆனால், ஆறாம் பத்தில், திருவேங்கடமுடையானிடம், பிராட்டியை முன்னிட்டு கேட்டுக்கொண்ட சரணாகதியே பலித்தது.
“உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” (6.10.10).
ஏழாம் பத்து – சக்தத்துவம் (சக்தி உள்ளவன்) – நம் எல்லோருக்கும் சரணாகதி கொடுத்து காப்பாற்றும் சக்தி படைத்தவன்.
இதனை பெருமாள், ஆழ்வாருக்கு “ஆழியெழ, சங்கும் வில்லும் எழ” (7.4) என்ற பதிகத்தில்,
தன்னுடைய வீர தீர பராக்கிரமங்களை காட்டுகிறார்.
எட்டாம் பத்து – சத்யகாமத்துவம் – விரும்பத்தக்க குணங்கள் எல்லாம் படைத்தவன் அவன்.
அவன் ஆசைப்பட்டு அடையவேண்டியது எதுவும் இல்லை, எல்லாவற்றையும் அடைந்தவன்.
தேவிமார்களோடு அவன் இருக்கின்றபடியாலும்,
தேவிமார்கள் அனைத்து ஜீவாத்மாக்களையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து நமக்காக அவனிடம் சிபாரிசு செய்வதாலும்,
அவன் நமக்கு வேண்டிய கருணையை காட்டி நாம் விரும்பியதை அடைய செய்பவன்;
“நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்“, (8.6.1)
ஒன்பதாம் பத்து – ஆபத்சகத்துவம் – எல்லா இடர்களில் இருந்தும் நம் எல்லோரையும் காப்பாற்றும் வல்லமை பெற்றவன் ;
“காய்சின வேந்தே கதிர்முடியானே, கலிவயல் திருப்புளிங்குடியாய்
காய்சின ஆழி, சங்கு, வாள், வில், தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே” (9.2.6) என்று புளிங்குடி பெருமானிடம் ஆழ்வார்
சொன்னது போல், எல்லா இடங்களில் இருந்தும் காப்பாற்றுபவன் அவனே.
அதேபோல், “அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே” (9.3.3) சொன்னதிலும்
ஹரியை நோய்கள் அறுக்கும் மருந்து என்று ஞானிகள் கண்டுகொண்டனர்.
பத்தாம் பத்து – ஆர்த்திஹரத்துவம் – நம்முடைய கவலைகளை எதிர்பார்ப்புகளை, துடிப்புகளை, தீர்க்கவல்லவன்.
வழித்துணை இல்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையும் என்பது
“மற்று இலன் அரண் ” (10.1.7) என்ற திருமோகூர் பதிகத்தில் உள்ள பாசுரத்தின் வழியும்,
“தீரும் நோய் வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச் சொன்னோம்” (10.2.3) என்ற திருவனந்தபுரம் பதிகத்தில் உள்ள பாசுரத்தின் வழியும்,
“சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே” (10.10.10) என்று தன்னை ஆட்க்கொண்டதை சொன்னதில் இருந்தும்,
இந்த இறுதி பத்து நம் கவலைகளை தீர்க்க வல்லது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பத்திலும் பத்து வகையான குணநலன்கள்.
ஒவ்வொரு பதிகத்திலும் பல வகையான குண நலன்கள்.
1102 பாசுரங்களில் ஆயிரம் ஆயிரம் குணநலன்கள் என திருவாய்மொழி முழுவதும் அவனின் குணநலன்களே.
அந்த குண நலன்களை ஆழ்வாருக்குக் காட்டியவனும் அவனே.
இன்னொரு வகையில் பத்து பத்துகள் ஆழ்வாரிடத்தில் ஏற்பட்ட நிலையின் மாற்றங்களைக்கொண்டு,
கீழ்கண்ட வகையில் பத்து பத்துக்களையும் பார்க்கலாம் என்று நம் ஆச்சாரியார்கள் சொல்வார்கள்.
1-முதலில் தனக்கு, பரமாத்மா பற்றிய அறிவை அளித்தான் என்கிறார்.
2-அதனால் தான் அடையவேண்டியது முக்தி அல்லது மோக்ஷம் என்று உணர்கிறார்.
3-அதற்காக பெருமாளுக்கு மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைகிறார்.
4-பரமாத்மா தவிர மற்ற விஷயங்களில் உள்ள ஆசைகளை குறைக்கிறார்.
5-பெருமாளின் மேல் உள்ள பக்தியை மேலும் வளர்க்கிறார்.
6-பக்தியால் அவனை அடைவது கடினம் என்று அவன் மூலமே அவனை அடைய அவனிடம் சரணாகதி கேட்டு அதனையும் பெற்றார்.
7-அதற்கு பிரதி உபகாரமாக தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகிறார்.
8-ஜீவாத்மாக்கள், பெருமாளுக்கு சேவை செய்து அடிமையாக இருப்பதே உகந்தது என்பதை உணர்கிறார்.
9-ஆழ்வார் தான் எப்போது முக்தி அடைவது என்று கவலை அடைந்ததற்கு, பெருமாள் அருளியதையும்,
10-தன்னுடைய கவலைகள் நீங்கி கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை சொல்லி முடிக்கிறார்.
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் இருந்தும்,
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாளப்பெருமாள் ஜீயர் எழுதிய ஸ்ரீ த்ரவிடோபநிஷத் சங்கதி மற்றும்
வேதாந்த தேசிகர் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்ரீ த்ரவிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, என்ற இரண்டு நூல்களில் இருந்தும்
இவைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
1-ஞப்தி – ஞப்தி என்றால் பகவத் ஞானம். முதல் பத்து,
முதல் பதிகத்திலேயே பகவத் ஞானம் அடைந்ததை (மயர்வற மதி நலன் அருளினன் 1.1.1) என்பதாலும்,
மற்ற பதிகங்களால் அதனை மறவாமல் இருந்தார் என்பதையும் அறியலாம்.
2-முக்தி – ஞானம் அடைந்ததால், அடையவேண்டியது எது என்பதை ஆழ்வார் உணர்ந்தார்.
அடைய வேண்டியது மோக்ஷம் அல்லது முக்தி என்பதை “நின் செம்மா பாதபற்புத் தலை சேர்த்து” (2.9.1) என்பதன்
மூலம் அவர் உணர்ந்ததை, நமக்கு கூறுகிறார்.
3-விருத்தி – முக்திக்கு பலன், மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைதல்.
“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்” என்று (3.3.1) பாசுரத்தில்
கூறுவதில் தொடங்கி, விருத்தி பற்றி அந்த பதிகம் முழுவதும் ஆழ்வார் நமக்கு உரைக்கிறார்.
4-விரக்தி – மேலும் மேலும் பகவானுக்கு கைங்கர்யம் செய்ய விரும்புவதால், மற்ற விஷயங்களில் ஈடுபாடு குறைதல்.
இதை அந்நிய ருசி ஒழிதல் என்று கொள்ளலாம். இது நாலாம் பத்து முழுவதிலும் சொல்லப்படுகிறது.
“ஒருநாயகமாய் ஓட, உலகுடன் ஆண்டவர்” (4.1.1) என்று தொடங்கும் நாலாம் பத்தில்,
மற்ற அனைத்து ஆசைகளும் ஒழிந்து விட வேண்டும் என்ற கருத்து மேலூங்குகிறது.
5-பக்தி (காதல் வளர்தல்) – மூன்றாம் பத்தில் பரமாத்மாவுக்கு செய்ய விழையும் கைங்கர்யம் விருத்தி அடைவதின் மூலமும்
நான்காம் பத்தில் மற்ற விஷயங்களில் விரக்தி அடைவதின் மூலமும்,
ஐந்தாம் பத்தில் பெருமாள் மேல் உள்ள பக்தி மேலும் மேலும் வளர்கிறது.
இது மாசறு சோதி, ஊரெல்லாம் துஞ்சி, எங்ஙனேயோ அன்னை மீர்காள், (5.3, 5.4, 5.5) என்கின்ற பதிகங்களின் வழியே
காலம் போகப் போக காதல் மிகுவது தெரிகிறது.
6-பிரபத்தி – இரண்டாம் பத்தால் முக்தி அடைவது என்று உணர்ந்த பின், பெருமாளின் மேல் உள்ள பக்தியை
அடுத்தடுத்த பத்துக்களில் வளர்த்து, அவனை அடைய வழி கண்டு கொள்வதே ஆறாம் பத்தில் ஆழ்வார் உணர்வது.
பக்தி மார்க்கத்தை விட, அவனைக் கொண்டே அவனை அடைவது என்பதே சாத்தியம் என்பதைப்
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு திருவேங்கடமுடையானிடம் சரணாகதி
(புகலொன்றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே, 6.10.10) கேட்டு ப்ரார்த்திபதின் மூலம்,
ஆழ்வார் நமக்கு முக்திக்கு வழி அவன் திருவடிகளை அடைவதே என்று காட்டுகிறார்.
7-சக்தி – பெருமாள் தன்னுடைய சக்தியை, “ஆழியெழ, சங்கும் வில்லும் எழ” (7.4) என்ற பதிகத்தில் ஆழ்வாருக்குக் காட்டினார்.
தன்னையே உபாயமாக கொடுத்து சரணாகதி அருளிய பெருமாளுக்கு தான் ஏதாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆழ்வார் நினைத்த போது,
‘உதவிக்கு கைம்மாறு தனது உயிர் என்று கருதிய உடனே அதுவும் அவனதே, ஆகவே கைம்மாறு ஒன்றுமேயில்லை’
என்று உணர்ந்ததே ஏழாம் பத்தின் சாராம்சம்.
இன்கவி பாடிய அப்பனுக்கு, எதுவுமொன்றுமில்லை செய்வது இங்கும் அங்குமே , 7.9.10).
8-பிராப்தி – இந்த பத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு ஜீவாத்மாவைப் பற்றி விளக்குகிறார்.
ஜீவாத்மஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறார். பரமாத்மாவிடம் அடிமைத்தனம் செய்வதே ஜீவாதாமாவிற்கு உகந்தது என்று
“கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து“, (8.8),
கருமாணிக்க (8.9)
நெடுமாற்கு அடிமை, (8.10) என்ற பதிகங்களின் மூலம் ஆத்மா எப்படிப்பட்டது என்று பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டுகிறார்.
9-பூர்த்தி – ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை முழுமையாக உணர்ந்தபின், சுவாமி நம்மாழ்வார், தான் எப்போது அவனிடம் சென்று
அவனுக்கு கைங்கர்யம் செய்வது என்று மிகவும் துடித்து ஒன்பதாம் பத்தில் பாசுரங்கள் பாடினார்.
பதினான்கு வருஷம் என்று பரதனுக்கு சொன்னது,
சீதைக்கு பத்து மாதம் என்பது போல் ,
ஒரு நாள் என்று ஆயர் பெண்களுக்கு வாக்கு கொடுத்தது,
பத்து வருஷம் என்று யசோதைக்கு சொன்னது போல்,
தனக்கும் ஒரு நேரம் அல்லது காலம் கொடுக்க வேண்டும் என்று பெருமானை ஆழ்வார் கேட்டதற்கு,
“சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் ” (9.10.5) என்று
பெருமான் தனது சரண்ய முகுந்தத்தை ஆழ்வாருக்குக் காட்டினான்.
10-ஆர்த்திஹரத்துவம் – ஸ்ரீ ஆழ்வார் தன் வாழ்நாள் முடியம் போது தனக்கு வழித்துணையாக வருவதற்கு
ஸ்ரீ திருமோகூர் ஆப்தனை பற்றுகிறார் (10.1).
பின்னர் ஸ்ரீ திருமாலிரின்சோலை அழகன், “கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே” (10.7.2), என்று
தன்னை முழுவதும் உண்டான் என்கிறார்.
இறுதியாக, ஸ்ரீ திருப்பேர் நகர் பெருமானை அப்பகூடத்தான் , “இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்” (10.8.6) என்று
கூறி தனது கோரிக்கையை ஸ்ரீ பெருமான் நிறைவேற்றியதை கூறுகிறார்.
இப்படியாக ஒவ்வொரு பத்திலும் ஆழ்வாருக்கு ஏற்பட்ட மாற்றங்களை அவரது பாசுரங்களை துணையாகக்கொண்டே நமக்கு காட்டியுள்ளார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள பாசுரங்கள் ஒரு உதாரணத்திற்காக சொல்லப் பட்டவையே தவிர,
அந்தந்த பதிகங்களில், பத்துக்களில், தொடர்புள்ள கருத்துக்கள் நிறையவே காணலாம்.
———————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply