சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது
சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும்.
எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று.
நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும்.
மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.
அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம்
என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம் என்று மூவகைப்பட்டிருக்கும்.
கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு
அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.
ஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6 –
தாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8 –
ஸாத்விக தியாகம் வேண்டும் 9-12 –
கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16 –
ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 –
முக்குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40 –
நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48 –
கர்ம யோகமே கர்மஸந்யாஸமாகிறது 49-57 –
அஹங்காரம் கொடியது 58-60 –
எல்லாம் ஈசன் செயல் 61-62 –
உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63 –
சரணாகதி தத்துவம் 64-66 –
கீதைக்கு அதிகாரி யார்? 67-71 –
ஞானோதயம் 72-73 –
ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.
அர்ஜுந உவாச
1. ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஸ ப்ருதக்கேஸிநிஷூதந
அர்ஜுந உவாச மஹாபாஹோ-அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய்,
ஹ்ருஷீகேஸ-ஹ்ருஷீகேசா,
கேஸிநிஷூதந-கேசியைக் கொன்றவனே,
ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம்-சந்நியாசத்தின் இயல்பையும்,
த்யாகஸ்ய ச-தியாகத்தின் இயல்பையும்,
ப்ருதக் வேதிதும் இச்சாமி-பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின்
இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
ஏற்கனவே இயம்பியுள்ள முக்கியமான கோட்பாடுகள் முடிவுரையில் மீண்டும் ஒருமுறை விமர்சனம் செய்யப்படுகின்றன.
ஆக, இந்த அத்தியாயத்தின் முதற்பகுதியானது யோகங்களையெல்லாம் தொகுத்து சமரசப்படுத்தும் பாங்கில் அமைகிறது.
ஒரே கோட்பாட்டை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் விளக்கலாம்.
புதிய வடிவம் பெறுமிடத்து அது புதிய கோட்பாடாகவே தென்படும்.
சந்தர்ப்ப பேதத்தை முன்னிட்டும் பழைய கோட்பாடு புதிய போதனை போன்று தென்படுவது இயல்பு.
யானையின் அவயவம் ஒவ்வொன்றுக்கும் தன்னளவில் அழகு இருக்கிறது.
அவைகளையெல்லாம் தொகுத்து யானை வடிவத்தில் பார்க்குங்கால் அவைகளின் அழகு பன்மடங்கு அதிகரிக்கிறது.
பதினெட்டு அத்தியாயங்களும் பதினெட்டு யோகங்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.
அவைகள் அனைத்துக்கும் பொதுவாக யோக சாஸ்திரம் என்னும் பெயர் இந்த அத்தியாயத்தில் பூர்த்தி பெறுகிறது.
கேசி என்ற அசுரன் குதிரை வடிவெடுத்துக் கிருஷ்ணனை விழுங்க வாயைத் திறந்துகொண்டு வந்தான்.
கண்ணனோ தன் கையை அதன் வாயினுள் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டான்.
ஆதலால் அவனுக்கு கேசி நிஷூதனன் என்ற பெயர் வந்தது.
கை வலிவை இங்குக் காட்டியதால் அவன் மகாபாகு என்றும் அழைக்கப்படுகிறான்.
இச் செயல்களுக்கிடையில் அவன் இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனா யிருந்தமையால் ஹிருஷீகேசனாகிறான்.
அத் 5-சுலோ 13, அத் 9-சுலோ 28 இவைபோன்ற இடங்களில் பகவான் சந்நியாசத்தைப் பற்றிப் பகர்ந்தார்.
அத் 4-சுலோ 20, அத் 12-சுலோ 11 இவைபோன்ற இடங்களில் தியாகத்தைப்பற்றிச் சொன்னார்.
இவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன வென்பது கேள்வி.
வாழ்க்கையைப்பற்றிய கோட்பாடுகளில் சந்நியாசமும் தியாகமும் மிகச் சீரியவைகளாகும்.
அவைகளை வெறும் சாஸ்திரத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியாது. தீப்பற்றி எரிவது போன்று படம் வரையலாம்.
ஓவியத்தில் தீட்டிய தீயானது உணவு சமைக்க உதவாது. உண்மையாக எரிந்துகொண்டிருக்கும் தீ ஒன்றே அச்செயலுக்கு உதவும்.
எரிகின்ற தீ போன்றவை தியாகமும் சந்நியாசமும். யார் ஒருவர் சந்நியாசியோ அல்லது தியாக மூர்த்தியோ அவர்தான்
அவ் உயர் நிலையை மற்றவர்க்கு வழங்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணன் அச் செயலைச் செய்யத் தகுந்தவரா என்ற கேள்வி எழுகிறது.
அர்ஜுனனால் அவர் ஹிருஷீகேசன் என்றும் மஹாபாகு என்றும் கேசிநிஷூதனன் என்றும் அழைக்கப்பட்டார்.
சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்துப் பரிபூரணன் ஆகும் வரையில் உள்ள படித்தரங்கள் எல்லாம் இம் மூன்று சொற்களில் அடங்கியிருக்கின்றன.
அசுரனைக் கொல்லுதல் தீமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுதற்கு அறிகுறியாகும்.
எல்லா உயிர்களும் தீமையை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வோர் உயிருக்கும் அதனதன் நிலையில் எதிர்ப்பும், பகையும், தீமையும் உண்டு.
இயற்கையில் யாண்டும் இக்காட்சியைக் காணலாம். தீமையை வெல்லுதலில் மற்ற உயிர்கள் ஏகதேசம் வெற்றி பெறுகின்றன;
மனிதனோ பெரும் வெற்றி பெறுதற்கு அடையாளமாகக் கிருஷ்ணன் பெருந் தோள்வலிவு பெற்றவன் (மகாபாகு) ஆகிறார்.
உடல் அமைப்பில் பரிபூரணநிலை அவரிடத்திருக்கிறது. மனத்தகத்து உள்ள கேடுகள் இந்திரியங்கள் மூலம் வெளியாகின்றன.
கிருஷ்ணனோ இந்திரியங்களையும் மனதையும் முற்றிலும் வென்றவர். ஆதலால் அவருக்கு ஹிருஷீகேசன் என்ற பெயர் வந்தது.
ஜன்மம் எடுத்தவனது பரிபூரண நிலைக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீ கிருஷ்ணன்.
யோகேசனாகிய அவரே சந்நியாசத்தையும் தியாகத்தையும் விளக்கவல்லவர்.
அத்தகையவரிடம் அர்ஜுனன் இக்கேள்வி கேட்டது முற்றிலும் பொருத்தமானதாம்.
ஸ்ரீபகவாநுவாச
2. காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது:
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம்-விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது,
ஸந்ந்யாஸம் கவய: விது:-சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்,
ஸர்வகர்மபல த்யாகம்-எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல்,
த்யாகம் விசக்ஷணா: ப்ராஹு-தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்.
எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
காமிய கர்மம் என்பது இம்மையில் தனக்குப் பட்டம், புகழ், பேர், புத்திர பாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம்
முதலியன அமையவேண்டுமென்று ஆசைப்படுவதும், மறுமையில் சுவர்க்காதி பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம்.
இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சந்நியாசம். இது சில ஞானியர்கள் கருத்து.
வேறு சில ஞானிகள் நித்திய, நைமித்திய, காமியமாகிய எல்லாக் கர்மங்களின் பயனை விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர்.
சந்நியாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒரே கருத்தைத்தான் விளக்குகின்றன. அற்றது பற்று எனில் உற்றது வீடு.
இது விஷயத்தில் பேரறிஞர்களுக்கிடையில் அபிப்பிராய வித்தியாசமில்லை.
தனது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா யிருப்பவைகளை யெல்லாம் துறந்துவிட வேண்டும்.
காமிய கர்மங்கள் புதிய பந்தங்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளை நிறைவேற்றுதற்குப் புதிய பிறவிகள் எடுத்தாகவேண்டும்.
பிறவிப்பிணி வேண்டாமென்கிற விவேகிகள் அதற்குப் புதிய வித்துக்களை விதைக்கலாகாது.
ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்துக்கு ஒப்பான இவ்வுடல் வாழ்க்கை தானாகப் பட்டுப்போம்
பரியந்தம் அதைத் தன் போக்கில் விட்டுவிடுவது முறை என்பது சில ஞானிகளின் கோட்பாடு.
வேறு சிலர் புதிய மரத்துக்கு விதையும் நடவேண்டாம், பழைய மரத்தை விட்டும் வைக்கவேண்டாம் என்கின்றனர்.
அனைத்தையும் வேரறக் களைதல் வேண்டும் என்பது அவர்களது கோட்பாடு. கர்மத்தை அறவே ஒழித்துவிடவேண்டுமாம்.
சத்வகுணமுள்ளவர்களுக்குக் கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள் தாமாகவே அவர்களைவிட்டு விலகிவிடுகின்றன.
வலிய முயன்றாலும் அவர்களால் கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்ய விடமாட்டார்.
கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுவிக்கப்படுகிறாள்!
குழந்தை பிறந்த பிறகு அவள் முழுக் கவனத்தையும் குழந்தையைப் பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள்.
அதே போல, சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும் பகவான் அகற்றிவிடுகின்றார்.
ஆனால் சத்வகுணம் வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உலகக் கடமைகளையும் கவனிக்க வேண்டும்.
ஒரு பணக்காரனுடைய வேலையாள்போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு, வீட்டு அலுவல்களையெல்லாம் கவனிக்க வேண்டும்.
இதுவே கர்மயோகமெனப்படும். இவ்வித பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு,
பகவந் நாமத்தை உச்சரித்து அவனை தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம் அடங்கும்.
3. த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே
ஏகே மநீஷிண:-சில அறிஞர்,
கர்ம தோஷவத்-கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி,
த்யாஜ்யம் இதி ப்ராஹு-விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்,
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை,
ந த்யாஜ்யம் இதி ச அபரே-விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்.
சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்.
வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.
கர்மங்கள் அனைத்திலும் காரணம், காரியம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. காரணம் இருக்கும் வரையில் காரியமும் உண்டு.
மழை பெய்கிறது; அது காரணம். பூமி நனைகிறது; புதிதாகக் கட்டுகிற வீடும் நனைகிறது.
இவ்விரண்டும் காரியங்கள். பூமி நனைதல் என்னும் காரியம் கிருஷிகனுக்கு நல்லது.
புதிதாகக் கட்டுகிற வீடு நனைதல் என்பது கட்டுகிறவனுக்குக் கெட்டது.
ஆக, மழைபெய்தல் என்னும் கர்மத்தில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. தீபம் எரிகிறது. அது பகவத்கீதை வாசிக்க உதவுகிறது.
அச்செயலை நலம் எனலாம். தீபத்தில் பூச்சிகள் பறந்து வந்து வீழ்ந்து சாகின்றன. அச்செயலோ கொடியது.
ஆக, தீபம் எரிதலில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. உயிர் வாழ்ந்திருக்க சுவாசிக்கிறோம்.
உயிர் வாழ்க்கை தேவாராதனைக்கென்றே பயன்படுத்தப்படுகிறது. அது சீரிய செயல்.
சுவாசிக்கும் மனிதன் காற்றிலுள்ள எண்ணிறந்த சிற்றுயிர்களைக் காற்றுடன் உறிஞ்சி ஒழிக்கிறான். அது கொடிய செயல்.
இங்ஙனம் எல்லாச் செயல்களிலும் நலமும் கேடும் நிறைந்திருக்கின்றன. கர்மத்திலுள்ள கேடுகளையெல்லாம் கருத்தில்
வாங்கும் மனிதர் கர்மம் துறத்தற்குரியதென்று பகர்கின்றனர்.
வேள்வி, தானம், தபசு ஆகிய வினைகளில் கேடு இருந்தாலும் அவைகளை விடலாகாது.
மக்கள் அவைகளைச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டும் சிலரது கருத்து. ஏனென்றால் வாழ்க்கையிலேயே கேடு இருக்கிறது.
அதை முன்னிட்டு வாழ்க்கையை யாரும் அழித்துவிடுவதில்லை. ரோஜாச் செடியில் முள் உண்டு. முள்செடி என்று எண்ணி
அதைப் பயிர் செய்யாவிட்டால் மணமும் அழகும் நிறைந்த மலர் நமக்குக் கிடைக்காது. விஷம் கொடியது.
உடலினுள் சென்றால் அது உயிரை வாங்கிவிடும். பின்பு அதே விஷத்தை ஒளஷதமாக மாற்றியமைத்தால்,
அதை உடலினுள் செலுத்தலாம்; உயிரையும் அது காப்பாற்றவல்லது. கர்மம் அத்தகையது.
மனிதனை அது பந்தப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் அதே கர்மத்தை யாகமாகவோ, தபசாகவோ, தானமாகவோ செய்தால்
தோஷம் நீங்கப்பெற்று நலன் உண்டாகும். ஆக, இத்தகைய ஸத் கர்மங்களை நீத்தலாகாது என்பது அவ் அறிஞரது கோட்பாடு.
அப்படியானால் இவைகளைப் பற்றிப் பகவானது கோட்பாடு யாது? விடை வருகிறது :
4. நிஸ்சயம் ஸ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:
பரதஸத்தம-பாரதரில் சிறந்தவனே,
புருஷவ்யாக்ர-புருஷப் புலியே,
தத்ர த்யாகே மே நிஸ்ச, யம் ஸ்ருணு-தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள்,
ஹி த்யாக: த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:-தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்;
கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
சந்நியாசமும் தியாகமும் ஒன்றே என்பது பகவானுடைய கோட்பாடு. தியாகமே வாழ்க்கைக்குப் பற்றுக்கோடு ஆகிறது.
பார்க்குமிடமெங்கும் இயற்கை இக்கோட்பாட்டை விளக்கிக் கொண்டிருக்கிறது. தன்னிடத்துள்ள வெப்பத்தை சூரியன்
ஓயாது தியாகம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதனால் கோளங்களில் உள்ள உயிர்கள் வாழ்ந்திருக்க முடிகிறது.
மரத்தைப் பற்றிப் பிடித்திருக்கிற காயானது கனிந்ததும் தனக்குப் பற்றுக்கோடாயிருந்த மரத்தைத் தியாகம் செய்கிறது.
அப்படி அது மரத்தை விடுதலில் பண்பும் பயனும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன.
தாய் ஒருத்தி தன் சொரூபமாகக் கர்ப்பத்தில் சிசுவை வைத்திருக்கிறாள். பத்து மாசம் ஆனதும் அதை அவள்
தன் உடலினின்று தியாகம் செய்யாவிட்டால் அவளுக்கும் கெடுதல், அக்குழவிக்கும் கெடுதல்.
பழுதுபட்ட சரீரத்தை ஜீவன் தியாகம் செய்கிறான். சுகம் பெறுதற்கு தியாகம் ஒன்றே உற்ற உபாயம்.
மனிதனுக்குப் பாடம் புகட்டுதற்கென்றிருக்கிறது கர்மம். தனக்குப் பயன்படுகிற பள்ளிக்கூடத்தை மாணாக்கன்
ஒருநாள் தியாகம் பண்ணியாகவேண்டும். ஆயுளெல்லாம் அப்பள்ளிக்கூடத்தில் கட்டுண்டு இருப்பது அவனுடைய குறிக்கோள் அன்று.
கர்மத்தை மனிதன் முடிவில் துறந்து அதற்கு அதீதத்தில் போக வேண்டும்.
கர்மத்தை விடுதற்கு முன்பு கர்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதாவது :
5. யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்
யஜ்ஞோ தாநம் தபஸ்சைவ பாவநாநி மநீஷிணாம்
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை,
ந த்யாஜ்யம்-விடக் கூடாது,
தத் கார்யமேவ-செய்யவே வேண்டும்,
யஜ்ஞ: தாநம் ச தப ஏவ-வேள்வியும் தானமும், தவமும்,
மநீஷிணாம் பாவநாநி-அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும்.
வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
பட்டுப்புழு தனக்கென்று கூடு கட்டுகிறது. கட்டிய கூட்டுனுள் பிறகு அது அடைபட்டுப் போகிறது.
சிறைவாசம் செய்வது போன்று நெடுநாள் அதனுள் கிடக்கிறது. தன்னைப் பந்தப்படுத்தும் செயலை அது தனக்குத்தானே செய்துகொள்கிறது.
அப்படித் தன்னை அடைத்து வைப்பதில் பயன் ஒன்று உண்டு. புழுவாக இருந்தது, அழகிய பட்டுப்பூச்சியாக மாறுகிறது.
இனி வெளிச்சத்தையும், காற்றையும், வெட்ட வெளியையும் காண அது வெளியே வந்தாக வேண்டும்.
அதற்காகத் தான் கட்டிய கூட்டை அது தானே உடைத்துத் தள்ளுகிறது. முதலில் கூட்டைக் கட்டுவது எவ்வளவு அவசியமோ
அவ்வளவு அவசியம் பின்பு கூட்டை உடைப்பதில் இருக்கிறது. மனிதனுக்குக் காமிய கர்மங்ளெல்லாம் கூடு கட்டுதற்கு ஒப்பானவை.
காமிய கர்மத்தின் வாயிலாக உலக வாழ்வின் தரத்தை மனிதன் கற்றுக்கொள்கிறான். அவனைப் பக்குவப்படுத்துதற்கு அது பயன்படுகிறது.
பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது;
அதாவது பற்று நீங்குகிறது. இவ்வுலக வாழ்வைக் கடந்து பரத்தினைச் சார வேண்டுமென்ற எண்ணம் உதிக்கிறது.
அதன் பிறகு செய்கிற செயல்கள் யக்ஞமாகவும், தானமாகவும், தபசாகவும் மாறியமைகின்றன.
பட்டுப்பூச்சி கூட்டை உடைத்தல் என்கிற செயலைச் செய்கிறது.
ஆத்ம சாதகனிடத்து அதற்கு நிகரான செயல் யக்ஞம், தானம், தபசு ஆகியவைகளில் அடங்கியிருக்கிறது.
ஆகையால் வேள்வி, தானம், தபசு ஆகியவைகளை எல்லா மனிதர்களும் செய்யவேண்டும்.
அவைகளைச் செய்கின்றவளவு உலகுக்கு நன்மை உண்டாகிறது. இப்பூவுலக வாழ்க்கை அதனால் மேன்மையடைகிறது.
அதற்குமேல் மற்றொரு பிரயோஜனமும் உண்டு. அவைகளைக் கையாளும் வகை தெரிந்துள்ள அறிஞர்களை அவைகள் புனிதப்படுத்துகின்றன.
அறிஞர் யார்? விடை வருகிறது :
6. ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச
கர்தவ்யாநீதி மே பார்த நிஸ்சிதம் மதமுத்தமம்
து பார்த-ஆனால் பார்த்தா,
ஏதாநி கர்மாணி ஸங்கம் த்யக்த்வா-இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்,
பலாநி ச-பயன்களை வேண்டாமலும்,
கர்தவ்யாநி இதி-செய்ய வேண்டும் என்பது,
மே உத்தமம் நிஸ்சிதம் மதம்-என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.
ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும்
என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.
தாய் ஒருத்தி தன் உடலினின்று பாலை உண்டுபண்ணித் தன் குழந்தைக்கு ஊட்டுகிறாள்.
குழந்தையின் பொருட்டுத் தான் பத்தியம் இருக்கிறாள்; ஊண் உறக்கத்தை ஒழிக்கிறாள்.
பசு ஒன்று தன் கன்றுக்கும் உலகுக்கும் பாலைத் தன் உடலிலிருந்து உண்டுபண்ணிக் கொடுக்கிறது.
இவ்விரண்டும் சுயநலம் கருதாத கர்மத்துக்கு நல்ல சான்றுகளாகின்றன. தியாகத்தின் உச்ச நிலையை ஆங்குக் காணலாம்.
தவத்துக்கு விளக்கமும் அச்செயல்களில் அடங்கியிருக்கிறது. பின்பு அதற்கு நிகரான தானத்தை வேறு எங்கும் காணமுடியாது.
இடையறா யக்ஞம் இவ்வுயிர்களிடத்து ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பற்றற்ற செயலின் பண்பை இங்குக் காண்கிறோம்.
கொடுக்கின்றவர், ஏற்கின்றவர் ஆகிய இரு தரத்தாரும் புனிதமடைகின்றனர்.
பற்றுதலையும் பயனையும் ஒழித்தவர்களே மேன்மைக்கு இருப்பிடமாகின்றனர். ஆசையை வென்ற மேலோர்
இவ்வுலகக் கிருத்தியங்களை யக்ஞமாகச் செய்வார்களானால் இவ்வுலகமே பரலோகமாகக் காட்சி கொடுக்கும்.
உலகம் மேன்மையடைதற்கு ஏற்ற கோட்பாடு இதுவாதலால் இது பகவானுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை யெனப்படுகிறது.
ஈசுவரனை அடைய விரும்புவோரும் ஸாதன மார்க்கத்தில் அபி விருத்தியைக் கோருவோரும் ஆசையாகிய
வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்களாகார்.
7. நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:
து நியதஸ்ய கர்மண:-ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை,
ஸந்ந்யாஸ: ந உபபத்யதே-துறத்தல் தகாது,
மோஹாத் தஸ்ய பரித்யாக-மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல்,
தாமஸ: பரிகீர்தித:-தமோ குணத்தால் நேர்வதென்பர்.
நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
பருவத்தில் பழுத்த பழங்களை உதிர்த்து உலகுக்கு ஊட்டுவது பழம் உதிர் சோலையின் தியாகமாகும்.
அதற்காகப் பூத்துக் காய்த்துக் கனியாக்குவது அச்சோலையின் நித்திய கர்மமாகும். சோலையின் தியாகத்தை
விரைவில் பயன்படுத்தவேண்டுமென்று எண்ணிய அறிவிலி காய்களை மரங்களினின்று பிடுங்குகின்றான்.
அது பலவந்தத்தில் செய்த தியாகமாகும். அங்ஙனம் பறித்த காய்கள் கனிதற்குப் பதிலாக வெம்பிப்போம்.
சுவையற்ற கனியும் முளைக்கப்போடத் தகுதியற்ற விதையும் அதன் பயனாகும். அறியாமையினால் செய்வித்த கர்மத் தியாகத்தின் விளைவு அது.
மனிதனுடைய பரிபாகத்துக்கு ஏற்றவாறு நித்திய கர்மம் உயர்கிறது. உண்பதும் உறங்குவதும் அறிவிலிக்கு
நித்திய கர்மமாயிருப்பது போன்று விவேகிக்கு யக்ஞம், தானம், தபசு முதலியன நித்திய கர்மமாகின்றன.
உடல் இருக்கும் பரியந்தம் நித்திய கர்மம் நடைபெறவேண்டும். ஏனென்றால் உடல் வாழ்வும் நித்திய கர்மமும் இணைபிரியாதவைகள்.
மேலோனை அது மேலும் மேலும் பரிசுத்தப்படுத்திக்கொண்டே வருகிறது. அவிவேகத்தால் அதை விடுவதால் கேடு விளையும்.
அக்ஞான இருள் இன்னும் அதிகரிக்கும். பணக்காரனைப் போன்று தானும் சுகஜீவனம் செய்ய வேண்டுமென்று
கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோகுணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் அது போன்றது.
மனம் சச்சிதானந்தத்தில் லயமாகிற வரையில் ஒருவன் பகவந் நாமத்தை உச்சரிப்பதும்,
உலகக் காரியங்களைக் கவனிப்பதும் ஆகிய இரண்டையும் செய்து வரவேண்டும்.
8. து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஸபயாத்த்யஜேத்
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்
யத் கர்ம-எது செய்ய வேண்டிய கருமமோ,
து:கம் ஏவ இதி-துன்பமாகக் கருதி,
காய க்லேஸ பயாத்-உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால்,
த்யஜேத்-செய்யாமல் விடுவானேயானால்,
ஸ:-அவன்.
ராஜஸம் த்யாகம் க்ருத்வா-அவன் ராஜஸ தியாகம் செய்து,
த்யாக பலம் ந லபேத் ஏவ-தியாகப் பயனை அடையமாட்டான்.
உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன்
புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப்பயனை அடையமாட்டான்.
மெய் வருத்தமில்லாத மண்ணுலக வாழ்க்கையில்லை. உலகக் கடமைகளைச் செய்து வருத்தப்பட வேண்டாமென்றும்,
சந்நியாச ஆஸ்ரமம் எடுத்துக்கொண்டு பிறர் செய்யும் உபகாரத்தைப் பெற்று நிம்மதியாக சுகஜீவனம் செய்யலாமென்றும்
தியாகம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போவது சிரமமென்றெண்ணிச் சிறுவன்
ஒருவன் பள்ளிக்கூட வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவானாகில், அங்குப் படித்து முடித்தவன் அடைகிற பயனை அவன் அடையமாட்டான்.
அதாவது அவனுக்கு நல்லறிவும் மேலாம் படிப்பும் உண்டாகமாட்டா. பரிபூரணமடைந்தவன் செய்கிற கர்மத்தியாகம் மோக்ஷமாகிறது.
ஆகையால் அதுவே தியாகபலன் எனப்படுகிறது. உழைப்புக்கு அஞ்சுபவனுக்கு அது கிட்டாது.
போர்க்களத்துக்கு யுத்த சன்னத்தனாக வந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று தியாகபுத்தி வருகிறது.
உற்றாரைக் கொன்று துன்பமடைதல் வேண்டாமென்கிற மனப்பான்மை வருகிறது.
வலிய வந்துள்ள அறப்போர் புரிவது அவனுடைய நித்திய கர்மமாகிறது. நெறிவழுவாத வேந்தனுக்கு உறவினரைவிட அறம் பெரியது.
அறப்போரை அவன் புறக்கணிக்க எண்ணியது ரஜோ குணத்தினின்று உதித்த தியாகம். ஆகவே பகவான் அதற்குச் சம்மதம் கொடுக்கவில்லை.
9. கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:
அர்ஜுந நியதம் யத் கர்ம-அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை,
கார்யம் இதி ஏவ-இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால்,
ஸங்கம் பலம் ச த்யக்த்வா – ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து,
க்ரியதே-செய்தால்,
ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக: மத:-அதுவே சாத்விக தியாகம் எனப்படும்.
நியமத்துக் கிணங்கிய செய்கையை, இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால் செய்து,
அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.
தாமஸத் தியாகத்திலும் ராஜஸத் தியாகத்திலும் கர்மமே செய்யாது விட்டொழிக்கப்படுகிறது.
சாத்விக தியாகத்திலோ கர்மம் நின்றுபோவதில்லை. கர்மம் முறையாக நடைபெறுகிறது.
நித்திய கர்மம் உட்பட எல்லாக் கர்மங்களுக்கும் கர்மபலன் உண்டு. சாத்விக சாதகனோ கர்மத்துக்குத் தான்
கர்த்தா என்று அபிமானிக்காது, கர்மத்தில் பற்றுவைக்காது, வினைப்பயனை விரும்பாது தன் கடமையென அதைச் செய்து வருகிறான்.
அத்தகைய மனநிலையே அமைதியையும் அந்தக்கரண சுத்தியையும் உண்டுபண்ணுகிறது.
மருத்துவ சாலையில் சிகிச்சை பெறுகிற நோயாளி மருத்துவ சாலையிலேயே இருக்கவேண்டும் என்ற பற்றுதல் உடையவன் அல்லன்;
சிகிச்சை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வினைப்பயனை விரும்புபவனும் அல்லன்.
ஆயினும் அங்குத் தங்கியிருந்து தன் கடமையாகிய சிகிச்சை பெறுதல் என்ற கர்மத்தை அவன் முறையாகச் செய்கிறான்.
அவனே உண்மையில் நோயைத் தியாகம் பண்ணியவன் ஆகிறான். கர்மபலத் தியாகம் சாத்விக சாதகனுக்கு அத்தகையதாகிறது.
ஆனால் நோயினிடத்து நோயாளிக்குக் கசப்பு ஏற்படுகிறது. தனது நித்திய கர்மத்தை சாத்விக குணமுடைய
தியாகி மேலான பாங்கில் கருதுகிறான். சுவாசிப்பது உயிர் வாழ்பவைகளுக்கு நித்திய கர்மமாகிறது.
அவ் உயிர் வகைகளுள் ஆரோக்கியமுடைய மனிதன் முறையாக ஆழ்ந்து சுவாசிக்கிறான்.
ஆயினும் சுவாசிப்பதற்குத் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனிடத்தில்லை. உண்மையில் உடல் உணர்ச்சியின்றி
உடல் வாழ்க்கை வாழ்பவனே நோயற்ற நிலையில் இருப்பவன் ஆகிறான். கடவுள் வழிபாடு.
சமூக சேவை. தியானம் முதலியன நல்ல ஆத்மசாதகனது நித்திய கர்மங்களாகின்றன. அவைகளை அவன் ஒழுங்காகச் செய்கிறான்.
அப்படி வினையாற்றுதற்கிடையில் அவன் கர்மத்தைப்பற்றிய உணர்ச்சியில்லாதிருக்கிறான்.
ஆத்ம போதத்தில் அவன் நிலைத்திருக்கிறான். அந்த மனநிலையே சாத்விகத் தியாகமாகிறது.
அவன் பற்றற்றவன் என்பதை எத்தகைய மனப்பான்மை விளக்குகிறது? விடை வருகிறது :
10. ந த்வேஷ்ட்யகுஸலம் கர்ம குஸலே நாநுஷஜ்ஜதே
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஸய:
ஸத்த்வஸமாவிஷ்ட: மேதாவீ-சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்,
சிந்நஸம்ஸய: த்யாகீ =ஐயங்களையறுத்த தியாகி,
அகுஸலம் கர்ம-இன்பமற்ற செய்கையை,
ந த்வேஷ்டி-வெறுப்பதில்லை,
குஸலே ந அநுஷஜ்ஜதே-இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை.
சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை.
இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.
சத்வ குணத்திலேயே உறுதியாக நிற்பவன் தெளிந்த மனமுடையவனாகிறான். தூயதும் தெளிந்ததுமாகிய உள்ளத்தில்
ஞானம் உருவெடுக்கிறது. ஆத்ம சொரூபத்தையும் பிரகிருதி சொரூபத்தையும் அவன் உள்ளபடி உணர்கிறான்.
அக்காரணத்தை முன்னிட்டு அவன் மேதாவியென்று அல்லது பேரறிஞனென்று அழைக்கப்படுகிறான்.
அத்தகையவனுக்குக் கர்மமும் அகர்மமும் நன்கு விளங்குகின்றன. நிலைக்கண்ணாடி போன்றது அகர்மமாகிய ஆத்ம சொரூபம்.
பிம்பங்களைக் காட்டும்பொழுதும் காட்டாதிருக்கும்பொழுதும் கண்ணாடி தன்மயமாயிருக்கிறது.
கர்மம் நடைபெறும் பொழுதும் நடைபெறாத பொழுதும் ஆத்ம சைதன்யம் தன்மயமாயிருக்கிறது.
அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமை யொன்றும் வருவதில்லை.
கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை.
பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பிப்பதற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது.
ஆத்ம சாக்ஷியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப்
பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.
அர்ஜுனனது ஸ்வதர்மம் அறப்போர் புரிவதாம். உழைத்துப் பாடுபடுவது எல்லார்க்கும் ஏற்பட்டுள்ள தர்மம்.
இச்செயல்களைத் துன்பம் நிறைந்தவைகளாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்த பேரறிஞருக்கு அவைகளைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை.
அவைகளை வெறுக்காது, மனதை நடுநிலையில் நிறுத்தித் தம் கடமையை அவர்கள் முறையாகச் செய்கின்றனர்.
உண்டு, உடுத்துக் களித்திருப்பது பாமரர்களுக்கு இன்ப வினைகளாகின்றன. அவர்கள் அவைகளைப் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆனால் சத்வம் நிறைந்த விவேகி அவைகளில் மகிழ்வுறுவது கிடையாது.
இன்ப துன்ப வினைகளைச் சமனாக அவன் நினைக்கின்றான். அதுவே அவனது பற்றற்ற நிலைக்கு அறிகுறியாகும்.
பற்றற்றுக் கர்மம் செய்தற்குப் பதிலாகக் கர்மத்தை ஏன் அடியோடு விட்டு விடலாகாது? விடை வருகிறது :
11. ந ஹி தேஹப்ருதா ஸக்யம் த்யக்தும் கர்மாண்யஸேஷத:
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே
ஹி தேஹப்ருதா-மேலும் உடம்பெடுத்தவனால்,
அஸேஷத: கர்மாணி-முழுதுமே செய்கைகளை,
த்யக்தும் ந ஸக்யம்-விட்டுவிட முடியாது,
ய கர்ம பலத்யாகீ-எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ,
ஸ: து த்யாகீ இதி அபிதீயதே-அவனே தியாகி யெனப்படுவான்.
(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின்
பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.
ஒருவன் ஆகாய விமானத்தில் ஊர்ந்து செல்லுகிறான். அதனுள் அமர்ந்திருக்கும் பரியந்தம் அவனுக்குப் பிரயாணி என்று பெயர்.
அவ் விமானம் அழகான சமவெளிக்கு மேலே பறக்கிறது; ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்துக்கு மேலே பறக்கிறது;
மேகப் படலங்களைப் பொத்துக்கொண்டு போகிறது; மழையில் நனைகிறது; வெயிலில் காய்கிறது;
கடலுக்கு மேலே வானத்தில் நீந்துகிறது; ஆங்கு மேலும் கீழும் ஆக இரண்டு இடங்களிலும் ஆபத்து உண்டு.
விமானத்தின் உள்ளே இருக்கும் பிரயாணி இத்தனைவிதச் செயல்களுக்கும் உட்பட்டாக வேண்டும்.
அவனுக்கு விருப்பமில்லாத இடத்துக்கும் அவன் அஞ்சுகிற இடத்துக்கும் விமானம் செல்லாது இருக்கமுடியாது.
பயணத்தின் திட்டப்படி அது போயாகவேண்டும். விமானத்தின் போக்கில் நிகழ்வனவற்றைப் பற்றிக் கவலையற்றவனாகப்
பிரயாணி தன் அலுவலைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். தொல்லையை ஒழிப்பதற்கு அது ஒன்றே உற்ற உபாயம்.
உடல் வாழ்வு என்ற பயணத்தில் ஆத்மா அங்ஙனம் இருந்து பழகவேண்டும்.
தேகம் இருக்கும் வரையில் கர்மமும் உண்டு. மூச்சு விடுவதே கர்மம். சுவாசிக்காது யார் வாழ முடியும்?
உண்பது கர்மம்; உறங்குவது கர்மம். ஆக, உடல் எடுத்தவனுக்குக் கர்மத்தை விடுதல் என்பது வெறும் பேச்சு.
கர்மத்தை விடமுயலுபவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். மற்று, கர்மத்தைப் பற்றற்றுச் செய்யவேண்டும்.
விவேகி ஒருவனது விவேகத்துக்கு ஏற்றவாறு பற்றற்றுக் கர்மம் செய்தல் அமைகிறது. உடலில் பட்ட காயத்தை நாம் நன்கு கவனிக்கிறோம்.
அதை ஜாக்கிரதையாகக் கட்டி வைக்கிறோம். அதன் பொருட்டுப் பணச் செலவு செய்து மருந்து முதலியன போடுகிறோம்.
அப்படியெல்லாம் செய்வது அக்காயம் நிலைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல;
காயத்தை ஒழித்தல் பொருட்டே அவ்வளவு கவனம் செலுத்துகிறோம். அதில் பற்றற்றிருந்து அதைப் பாங்கு படுத்துகிறோம்.
அவரவர் கர்மத்தை அங்ஙனம் பற்றற்றுச் செய்ய வேண்டும். கர்மத்தை மனிதன் நீத்துவிட முடியாது;
கர்மத்துக்குத் தான் கர்த்தா என்னும் எண்ணத்தை நீத்துவிடவேண்டும். அப்படிச் செய்கின்றவனே தியாகி யாகின்றான்.
பற்றற்றவனுக்கு வினைப்பயன் இல்லை.
பின்பு பற்றுடையவனுக்கோ? விடை வருகிறது :
12. அநிஷ்டமிஷ்டம் மிஸ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித்
அநிஷ்டம் இஷ்டம் மிஸ்ரம் ச-வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என,
த்ரிவிதம் கர்மண: பலம்-மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள்,
அத்யாகிநாம் ப்ரேத்ய பவதி-தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது,
ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந -சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத்
தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
நரகப் பிராப்தியும் விலங்கு இனமாகப் பிறப்பதும் இன்னாதது அல்லது அனிஷ்ட கர்மபலனாகிறது.
சுவர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இஷ்ட கர்மத்தின் பலன். பூவுலகப் பிராப்தியும்,
மக்களாகப் பிறத்தலும் கலப்புக் கர்மத்தின் பயனாகும். இனியது, இன்னாதது ஆகிய இரண்டும் சேர்ந்தது கலப்புக் கர்மம்.
கர்ம பலத்தில் பற்று வைக்கிறவர்களுக்குப் பிறவிகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன.
அவைகள் வாயிலாக சுகதுக்கங்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டும்.
கர்மபலனில் பற்று வைக்காதவர்களுக்குப் பிரபஞ்ச சம்பந்தமான இன்பமுமில்லை, துன்பமுமில்லை;
பிறப்பும் இறப்பும் உண்டாவதில்லை. அவர்கள் முக்தியடைகிறார்கள்.
எடுத்த பிறவிகளுள் இது கடைசி ஜன்மம்; இத்துடன் பிறவியை ஒழித்துவிட்டு முக்தியடையும் நிலையில்
இருப்பவர்களைச் சில அறிகுறிகளால் கண்டுகொள்ளலாம். அத்தகைய ஜீவன் முக்தர்கள் எப்பொழுதும் ஆத்ம திருப்தர்களாக இருக்கிறார்கள்.
நிழல் போன்று உடல் அவர்களைச் சார்ந்திருக்கிறது. அவ்வுடலின் மூலம் ஒழுங்காகக் கர்மம் நடைபெறுகிறது.
ஆனால் அதை ஜீவன் முக்தர்கள் கருத்தில் வாங்கிக்கொள்ளார்கள்.
தியாகியல்லாதவர்கள் இனி எடுக்கப்போம் பிறவி எத்தகையது என்பதையும் இப்பொழுது இவ்வுலகிலேயே யூகித்துத் தெரிந்துகொள்ளலாம்.
தூங்கி எழுந்திருப்பது போன்றவை ஜனன மரணம். தூங்குகிற மனிதன் அதே சரீரத்தில் எழுந்திருக்கிறான்.
செத்தவன் புதிய சரீரத்தில் புதிய இடத்தில் எழுந்திருக்கிறான். படுக்கப்போம்பொழுது கெட்டவனாயிருந்தவன்
தூங்கியெழுந்திருக்கும்போதும் கெட்டவனே. நல்லவனுடைய நிலைமையும் அத்தகையது.
இங்கு இவ்வுலகில் இருக்கும் போதே நரகத்தில் இடர்ப்படுபவர் உண்டு; விலங்கு போன்று வாழ்பவர் உண்டு.
சுவர்க்க வாழ்வை இங்கேயே காண்பவர் உண்டு. இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள மனுஷ நிலையில் இருப்பாரும் உளர்.
இதே அமைப்பு சரீரத்தை மாற்றும்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆக, இயல்புக்கு ஏற்ற உடல் அமைப்பு உண்டாகிறது.
கர்மத்துக்குத் தன்னைக் கர்த்தாவென்று நினைக்கிறவனுக்குக் கர்ம பலன் உண்டாகிறது.
அவன் சுக துக்கங்களுக்கு ஆளாகிறான் உண்மையில் மனிதன் கர்மத்துக்குக் கர்த்தாவா? இக் கேள்விக்கு விடை வருகிறது :
13. பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்
மஹாபாஹோ-பெருந்தோளாய்,
க்ருதாந்தே ஸாங்க்யே-கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில்,
ஸர்வகர்மணாம் ஸித்தயே-எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு,
ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி-ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன,
மே நிபோத-(அவற்றை) என்னிடம் கேட்டுணர்.
எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன.
அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.
சாங்க்ய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். கபில முனிவர் இயற்றியுள்ள சாங்கியம் வேறு.
ஆறு சாஸ்திரங்களில் அது நான்காவது ஸ்தானம் பெறுகிறது. பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றிய கோட்பாடுகளை அது விளக்குகிறது.
வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி கர்மம் செய்வதெல்லாம் விரைவில் ஒழுங்காகக் கர்மத்தை முடித்துக்கொண்டு
கர்மாதீதத்தில் போவதற்கே யாம். கர்மசொரூபமாயுள்ள இயற்கையானது ஜீவாத்மாவுக்கு ஒரு பள்ளிக்கூடம் போன்று இருக்கிறது.
அறிவு வேண்டுமென்கிற ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும். அங்கு வீண்காலம் கழிக்கலாகாது.
ஒழுங்காகப் பயிற்சி பெறவேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும். கற்றபின் பள்ளிக் கூடத்தைவிட்டு
வெளியில் வருவதுதான் மாணாக்கனது குறிக்கோள். பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே அவ்வுண்மையை
அவன் தெரிந்துகொள்கிறான். மனிதன் கர்ம மயமான உலகில் இருக்கும்போதே கர்மத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எது எவ்விதத்தில் கர்மத்துக்குக் காரணமாகிறது என்பது இனிப் பகரப்படுகிறது :
14. அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்
அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும்,
கர்தா ச-செயலை செய்பவன்,
ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள்,
விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்,
தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).
பொருள் : அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.
ஒரு மோட்டார் வண்டி ஓடுகிறது. அதன் இயக்கத்துக்கு முகாமையாயிருப்பவைகள் எவை என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
அத்தகைய வண்டி ஒன்றைப் பூட்டுதற்கு முன்பு கணக்கற்ற ஆணிகள், வில்லைகள், தகடுகள், சக்கரங்கள்.
இரும்புச் சட்டங்கள் குவியல் குவியலாகத் தொழிற்சாலையில் வைத்திருப்பதைக் காணலாம்.
மரத்தில் ரப்பர் பால் இருக்கிறது. மண்ணினுள் பெட்ரோல் என்னும் எண்ணெய் இருக்கிறது. மண்ணின்மேல் நீர் இருக்கிறது.
விண்ணில் காற்று இருக்கிறது. இனி, இவைகளை முறையாகப் பொருத்தியமைக்குமிடத்தே வண்டி யுண்டாகிறது.
தொழிற்சாலை அதற்கு அதிஷ்டானம் அல்லது இருப்பிடம். தொழிற்சாலைக்குச் சொந்தக்காரன் அதற்குக் கர்த்தாவாகிறான்.
சக்கரங்கள், ஓட்டும் கருவி, நிறுத்தும் கருவி முதலியன அதன் இந்திரியங்கள் ஆகின்றன.
அதற்கு விசைகொடுக்கும் பெட்ரோல் எண்ணெய் அதன் பிராணன் ஆகிறது. பலப்பல காரியங்களுக்கு அவ்வண்டியைப் பயன்படுத்தலாம்.
அதை ஓட்டும் சாரதி அதற்கு அதிஷ்டான தெய்வமாகிறான். இதே முறையில் தான் உடல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.
விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம், ஞானம் முதலியவைகளை விளக்குதற்கு இருப்பிடமாயிருப்பது உடல்.
ஆகையால் அது அதிஷ்டானம் எனப்படுகிறது. இன்ப துன்பங்களாகிய உபாதிகளை ஏற்றுக்கொண்டு
அவைகளை அனுபவிக்கும் அகங்காரமே கர்த்தா எனப்படுகிறது.
ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இவைகள் வெவ்வேறு இந்திரியங்களெனப்படுகின்றன.
பிராணன், அபானன் முதலியவைகளின் பலவகைப்பட்ட செயல்கள் அதன்பின் குறிக்கப்படுகின்றன.
பிராணனுடைய துணையின்றி ஒரு செயலும் நடைபெறாது.
அந்த ராத்மாவாகிய தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு அதிஷ்டான தெய்வமாகிச் செயல்புரிகிறது.
15. ஸரீரவாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ:
நர: ஸரீர வாக் மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்,
யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும்,
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.
மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.
வெவ்வேறு காரணங்களைக் கொண்டு அமைத்துள்ள மோட்டார் வண்டியைக் கொலை, களவின் பொருட்டு
ஒரு சாரார் எடுத்துச் செல்லலாம். ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னொரு சாரார்
அவ்வண்டியைச் செலுத்தலாம். நோயாளிக்கு விரைவில் சிகிச்சை செய்வதற்கு அது உதவுகிறது.
களியாட்டத்தில் வீண்பொழுது போக்குதற்கும் அது பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று
அறிவைப் பெருக்குதற்கும் அதே வாகனம் உதவுகிறது.
கிட்டத்தட்ட அதே முறையில் உடலை நாம் பயன்படுத்துகிறோம். தர்ம÷க்ஷத்திரம் என்று இவ்வுடல் இயம்பப்படுகிறது.
செய்கின்ற ஸத்கர்மங்கள் அனைத்துக்கும் ஐந்து ஹேதுக்களாலாகிய உடல் வாழ்வு பயன்படுகிறது.
இதே உடலத்தைத் தேவாலயமாகப் பாராட்டிப் பயன்படுத்துபவரும் உளர். இத்தகைய செயல்களெல்லாம் தர்மத்துக்கு உடன்பாடானவைகள்.
ஆகவே அவைகள் நியாயமானவைகள். அதர்மமே வடிவெடுத்து வந்து அடாத செயலைச் செய்தற்கும் இவை காரணங்களாகின்றன.
இவ் ஐந்தின் துணையின்றி நலம் கேடு ஆகிய எச்செயலும் நடைபெறுவதில்லை.
உடலின் மூலம் நிகழ்கின்ற செயல்களைச் சாதாரண வாழ்க்கை முறையில் திரிகரணங்களைக்கொண்டு செய்தவைகள் என்கிறோம்.
மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் கரணங்களாகின்றன. எண்ணுவதும், பேசுவதும், செய்வதும் ஒவ்வொன்றும்
தன்னளவில் கர்மமாகிறது. எண்ணத்தால் நிகழும் கர்மங்கள் எண்ணிறந்தவை.
இனிக் கர்ம நடைமுறைக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :
16. தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:
பஸ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஸ்யதி துர்மதி:
து ஏவம் ஸதி-இங்ஙனமிருக்கையில்,
ய: அக்ருதபுத்தித்வாத்-எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை,
தத்ர கேவலம் ஆத்மாநம்-அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய, ஆத்மாவை,
கர்தாரம் பஸ்யதி-கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ,
ஸ துர்மதி: ந பஸ்யதி-அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக்
குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
இக்கோட்பாட்டை அறிதற்கும் மோட்டார் வண்டி ஒன்றை அமைப்பதையே மீண்டும் உபமானமாக எடுத்துக்கொள்ளலாம்.
மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களும் அவ்வண்டியமைப்புக்கு இன்றியமையாதவைகளாகின்றன.
வண்டிக்குத் தேவையானவைகளெல்லாம் பூமியினின்று வந்தவைகள். அவைகளை யெல்லாம் கொடுத்து உதவியது பூமி.
பிறகு வண்டி ஓடுதற்கு நிலைக்களமாயிருப்பதும் பூமி. ஆனால், மோட்டார் வண்டியின் செயல் ஒன்றிலும் பூமி சம்பந்தப்பட்டதல்ல.
அது எப்பொழுதும் தன்மயமாயிருக்கிறது. வண்டி ஓடும் விஷயத்தில் பூமியைக் கர்த்தாவென்று கருதுவது பொருந்தாது.
எது கர்மம் செய்கிறதோ அது கர்த்தா. பிரகிருதியின் கூறுபாடுகள் கர்மம் செய்கின்றன.
மேலே சொன்ன ஐந்தும் பிரகிருதியினுடைய கூறுபாடுகள். ஐந்து காரணங்களில் ஒன்றாகிய அந்தராத்மா அல்லது
தெய்வம் பிரகிருதியோடு சேர்ந்ததா அல்லது ஆத்ம சொரூபமா என்ற கேள்வி எழுகிறது.
எங்கும் வியாபகமாகிய ஆகாசத்துக்கு அடுத்தபடியில் இருப்பது வாயு. அது கிட்டத்தட்ட ஆகாசம் போன்றது என்றாலும் அது ஆகாசம் ஆகாது.
ஆகாசம் அசைவற்றது. வாயு அசையும் தன்மையது. இங்குத் தெய்வம் என்று சொல்லுவது சித் ஆபாசனாகிய ஜீவாத்மா.
அது சேதனம் போன்று தோன்றுகிறது. உண்மையில் அது ஜடமாகிய பிரகிருதியே.
ஆத்மாவின் சன்னிதான விசேஷத்தால் பிரகிருதி வேலை செய்கிறது. சித் ஆகாசத்தில் அது தோன்றி, நின்று பிறகு நீங்குகிறது.
ஆத்மாவோ செயலற்றது. அது சுத்த சைதன்யம். மாயாசக்தியாகிய பிரகிருதி அதை ஆரோபித்து அதன்மீது தோன்றிக்கொண்டிருக்கிறது.
அதனால் ஆத்ம சொரூபத்துக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. கர்மத்துக்கு அப்பாற்பட்டுள்ள சுத்த சைதன்யம் அல்லது
பேரறிவு மனிதனது எதார்த்த சொரூபம். புத்தி தெளிவடையாதவனுக்கு இது விளங்குவதில்லை.
ஆகையால் அவன் உண்மையைக் காண்கிறானில்லை.
17. யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே
யஸ்ய அஹங்க்ருதோ பாவ ந-எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ,
யஸ்ய புத்தி ந லிப்யதே-பற்றுதல்கள் அற்று மதியுடையவன்,
ஸ: இமாந் லோகாந்-அவன் இந்த உலகங்கள் அனைத்தையும்,
ஹத்வா அபி ந ஹந்தி ந நிபத்யதே-கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்.
நான் எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன்
இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.
தன்னைக் கர்த்தாவென்று கருதுவதிலும், அகங்காரம் கொள்ளுதலிலும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் காட்டுகிறான்.
நாடக மேடையில் ஒருவன் கொலை புரிபவன் போன்று நடிக்கிறான். மற்றொருவன் கொலையுண்பவனாக நடிக்கிறான்.
மற்று, இதே செயல் உலகில் உண்மையாக நிகழ்கிறது.
பாசாங்காகச் செய்த கர்மம் அகங்காரத்தையோ கர்த்ருத்வத்தையோ உண்டு பண்ணவில்லை.
வாஸ்தவத்தில் நிகழ்ந்த கொலைச் செயலானது அதில் சம்பந்தப்பட்டவர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தது.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று கூடியது ஞானியின் செயல். போர்க்களத்தில் அர்ஜுனன் தன் பாட்டனாராகிய பீஷ்மரைக் கொன்றான்.
ஆயினும் கொன்றவனாக அவன் தன்னைக் கருதவில்லை. ஏனென்றால் அகங்காரமும் பற்றுதலும் அவனுடைய மனதைவிட்டு அகன்றுவிட்டன.
பீஷ்மர் கொல்லப்பட்டவராகத் தம்மைக் கருதவில்லை. அணிந்திருந்த சட்டையைப் பலவந்தமாகக் கிழித்து
எறிந்ததற்கு ஒப்பாயிற்று அவர் உடலைக் களைந்த செயல்.
கண்ணாடியில் ஒருவனுடைய பிம்பம் தோன்றி ஆடுகிறது. அத்தோற்றத்துக்கும் ஆட்டத்துக்கும் கர்த்தா கண்ணாடியல்ல.
இனி, அந்தப் பிம்பம் கண்ணாடியில் பதிந்திருப்பதும் இல்லை. பிம்பத்தை விளக்குதற்கிடையில் கண்ணாடி பற்றற்றிருக்கிறது.
ஆத்ம சைதன்யத்தின்மீது பிரகிருதியின் செயல்களெல்லாம் தோன்றுகின்றன. அதனால் ஆத்மா ஒரு செயலும் செய்வதன்று.
அப்பேரறிவு பிரகிருதியை விளக்கியதால் அது பிரகிருதியில் பந்தப்பட்டதுமல்ல. தனது நிஜசொரூபமாகிய சைதன்யத்தில்
உறுதிபெற்றிருப்பவன் உடலும் இந்திரியங்களும் செய்கின்ற செயலிலே கட்டுண்டு போவதில்லை.
கொல்லுதல் முதலியன பிரகிருதியின் வியவகாரங்களேயாம்.
புருஷன் யாதொரு காரியத்தையும் செய்யாது சலனமற்றுக் கிடக்கிறான் என்றும், பிரகிருதியே சகலத்தையும்
செய்து வருகின்ற தென்றும், புருஷன் வெறும் சாக்ஷி மாத்திரமாகத் தானிருக்கிறானென்றும் சாங்கிய தர்சனம் கூறுகின்றது.
மேலும், பிரகிருதியும் புருஷனில்லாது எதனையும் செய்யவியலாது என்றும் அது கூறுகின்றது.
18. ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ:
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா-அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்,
த்ரிவிதா கர்மசோதநா-இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன,
கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித:-கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும்,
கர்மஸங்க்ரஹ:-கர்மத்தின் அமைப்பு ஆகும்.
அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.
கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.
அறிவு அல்லது ஞானம் என்பது இவ்வுலக சம்பந்தமான ஞானம். அறியப்படுபொருள் அல்லது ஞேயம் என்பது
பொதுவாயுள்ள உலகப் பொருள்கள். அறிபவன் அல்லது பரிக்ஞாதா என்பவன் உபாதிகளோடு கூடியுள்ள ஜீவன்.
இம்மூன்றும் சேர்ந்து திரிபுடி எனப்படுகிறது. ஒன்று உள்ள இடத்தில் மற்ற இரண்டும் இருக்கும்.
அதாவது அறிபவன் ஒருவன் இருந்தால் அறிவு என்னும் இயல்பு அவனுக்குரியதாகிறது.
அத்தகையவன் எதை அறிகிறான் என்ற கேள்வி வருகிறது. முக்கோணம் ஒன்றோடொன்று இணைந்திருப்பது போன்று
திரிபுடியும் இணைந்திருக்கிறது. இம்மூன்றினுடைய சேர்க்கையால் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் கர்மம் நடைபெறுகிறது.
கர்மத்தில் இனியது எது, இன்னாதது எது என்ற பாகுபாடு திரிபுடியால் ஏற்படுகிறது.
கருவியில் அகக்கருவி, புறக்கருவி என இருவகை உண்டு. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய இவை
அந்தக்கரணம் அல்லது அகக்கருவி. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்தும் புறக்கருவிகளாம்.
இவைகள் ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆகப் பரிணமிக்கின்றன.
கர்மம் செய்பவனாகிய ஜீவனே கர்த்தாவாகிறான். இங்ஙனம் ஞானமும் கர்மமும் ஜீவனிடத்து இணைபிரியாது அமைந்திருக்கின்றன.
ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துதற்கு ஞானமும் கர்மமும் இன்றியமையாதவைகள்.
படிப்பும் விளையாட்டும் சேர்ந்திருந்தால்தான் சிறுவன் ஒருவன் முன்னேற்றமடைய முடியும்.
அவனது உடலும் உள்ளமும் சேர்ந்தே வளரவேண்டும்.
ஜீவாத்மாவோ ஞான அனுபவம் இருக்கிறவளவு கர்மத்தைச் செவ்வையாகச் செய்கிறான்.
முயன்று வினையாற்றும்பொழுது அது ஞான அனுபவத்தை உண்டுபண்ணுகிறது.
ஆக, ஞான திரிபுடியும் கர்ம திரிபுடியும் அவனுக்குத் தேவை.
ஜீவன் பெறுகிற ஞானத்திலும், செய்கின்ற கர்மத்திலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாட்டைக் காண்கிறோம்.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம் யாது? விடை வருகிறது :
19. ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குணபேதத:
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி
குணஸங்க்யாநே-குணங்களை யெண்ணுமிடத்தே,
ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச-ஞானம், கர்மம், கர்த்தா, குணபேதத:-இவை குண பேதங்களால்,
த்ரிதா ஏவ-மும்மூன்று வகைப்படும் என்று,
ப்ரோச்யதே-சொல்லப் படுகின்றன,
தாநி அபி யதாவத் ச்ருணு-அவற்றையும் உள்ளபடி கேள்.
குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும் மூன்று வகைப்படும்.
அவற்றையும் உள்ளபடி கேள்.
ஆறு சாஸ்திரங்களுள் சாங்க்ய சாஸ்திரம் நான்காவது ஸ்தானம் பெறுகிறது. இது கபில முனிவர் இயற்றியது.
பிரகிருதி தத்துவங்களை விளக்குதற்கு இது முடிவான பிரமாணம். ஆகையால் குணங்களின் பாகுபாடுகளை
இந்நூலினின்றே தெரிந்துகொள்ளவேண்டும். பல புருஷர்கள் இருப்பதாக சாங்க்ய சாஸ்திரம் சொல்லுகிறது.
அவைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை சாங்க்ய சாஸ்திரம் சொல்லுவதில்லை.
பரபிரம்மத்தை அறிதற்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமல்ல. அதற்கு வேதாந்த சாஸ்திரமே பிரமாணமாகிறது.
முக்குணமயமாயுள்ள இயற்கைத் தத்துவங்களுக்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமாகிறது.
அவைகளை உள்ளபடி கேள் என்று பகவான் பகர்வது யுக்திக்கும் அனுபவத்துக்கும் அவைகள் ஒவ்வும் என்பதாம்.
அதிகாரி பேதம் என்பது முக்கியமானதொரு கோட்பாடாகும்.
உத்தமம், மத்திமம், அதமம் என்று அதிகாரியின் பேதம் பிரித்தெடுக்கப்படுகிறது.
தலைமாணாக்கன், இடைமாணாக்கன், கடைமாணாக்கன் என்பது இதுவே.
உத்தம அதிகாரிக்குச் சிறிது புகட்டினாலும் உண்மை விளங்குகிறது.
அவனுக்கு மௌனோப தேசம் ஒப்பற்ற உபதேசமாகிறது. கீழ்நிலைக்குப் போகப் போக உபதேசம் வெவ்வேறு
வடிவெடுத்தாகவேண்டும். பின்பு, புகட்டுகின்றவனிடத்து வல்லமையிருந்தால் மிக மந்த அதிகாரிக்கும்
ஓரளவு உண்மையைப் புகட்டலாம்.
20. ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்
ஏந விபக்தேஷு-எந்த ஞானத்தினால் தனித்தனியான,
ஸர்வபூதேஷு-உயிர்கள் அனைத்திலும்,
அவிபக்தம் அவ்யயம் ஏகம் பாவம்-பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை,
ஈக்ஷதே – காணுகிறானோ,
தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்தி-அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி.
பிரிவு பட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.
பிரகிருதியின் கூறுகள் வேறுவேறாய்ப் பிரிந்துள்ளன. சராசரங்களனைத்தும், ஜட சேதனங்களனைத்தும் மாயா காரியங்களே.
அவைகளுக்கெல்லாம் ஆதாரமாயிருப்பது பரமாத்மா. அது ஏக வஸ்து. ஆகாசத்தைப் போன்று அது பிளவுபடாதது.
ஜகத் அதனிடத்திருந்து தோன்றி வருவதால் அது குறைவுபடுகிறதில்லை. ஏனென்றால் அது அகண்ட வஸ்து;
கூடுதல் குறைதல் என்பது அதற்கு இல்லை. ஆகையால் அது அழியாதது. ஆகாசமானது பாண்டங்களில் பிளவு படுவதில்லை.
அங்ஙனம் வெவ்வேறு பூதத்திடத்து ஆத்மா வெவ்வேறு ஆத்மாவாக வடிவெடுக்கவில்லை.
துவைதமல்லாத இந்த ஆத்மாவை உள்ளபடி அறிவது சாத்விக ஞானமாம்.
காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும்கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை.
பரம் பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.
21. ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்
து யத் ஜ்ஞாநம்-ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக,
ஸர்வேஷு பூதேஷு-உயிர்களனைத்திலும்,
ப்ருதக்விதாந் நாநாபாவாந்-வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள்,
ப்ருதக்த்வேந வேத்தி-பிரித்துக் காணும்,
தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்தி-அந்த ஞானம் ராஜசம் என்றுணர்.
உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.
ஒவ்வொரு தேகத்திலும் ஒரு தனி ஆத்மா இருக்கிறதென்றும், அதற்கு அலாதி லக்ஷணங்கள் இருக்கின்றன
வென்றும் அறிவது ராஜஸ அறிவு. பொன் தாதுவைப் பூமியில் வெவ்வேறு பிரதேசங்களில் வெட்டி யெடுக்கலாம்.
தாதுவில் படிந்துள்ள அழுக்கு தேசத்துக்கு ஒருவிதமாயிருக்கலாம். அவ் அழுக்குகளை யெல்லாம் நீக்குதல் முறை.
அழுக்கு நீங்கப்பெற்ற பின் தூய தங்கம் ஒரே பாங்குடையது. இது இன்ன தேசத்துத் தங்கம் என்ற வேற்றுமை போய்விடுகிறது.
உபாதி பேதத்தால் ஆத்மாக்கள் பலவாகத் தென்படுகின்றன. உபாதிகளுக்கு முதன்மை கொடுப்பது ரஜோகுண அறிவின் இயல்பு.
உபாதிகள் என்ற அழுக்கை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கிற சுத்த சைதன்யம் அல்லது ஆத்ம சொரூபம் யாண்டும்
ஒன்றே என்பது விளங்கும். கனவு இல்லாத ஆழ்ந்த உறக்கத்துக்கு சுழுத்தி என்று பெயர். ஆங்கு வெவ்வேறு பிரக்ஞைகள் இல்லை.
வேற்றுமையைக் கடந்துள்ள அந்நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒற்றுமையை உணர அது உதவும்.
22. யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம்
து யத் ஏகஸ்மிந் கார்யே-ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை,
க்ருத்ஸ்நவத் ஸக்தம்-அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்,
தத் அஹைதுகம்-யுக்திக்கு பொருந்தாததும்,
அதத்த்வார்தவத்-உண்மையில் அறியாததும்,
அல்பம் ச-அற்பத் தன்மை உடையதும்,
தாமஸம் உதாஹ்ருதம்-தாமசமென்று கூறப்படும்.
காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்,
உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.
பஞ்ச பூதங்களால் ஆகிய தேகத்தை ஆத்மாவென்று கருதுபவர் இருக்கின்றனர். கடவுள் வழிபாட்டுக்கு விக்கிரகம் துணைபுரிகிறது.
கல்லால் அல்லது மரத்தால் செய்த விக்கிரகத்தையே கடவுளாக நினைப்பவர் உளர்.
அந்த விக்கிரகம் சிதைவுபட்டுப் போனால் கடவுள் அழிந்துபோய்விட்டார் என்பது அத்தகையவர் நம்பிக்கையாகும்.
ஒரு காரியத்தை முழுதுமென்று பற்றிக் கொள்ளுதற்கு இது சான்று ஆகும். தான் தேகத்தைவிட மேலானவன் என்பதையும்,
கடவுள் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் மந்த புத்தியுள்ள அம்மனிதன் அறியான்.
விக்கிரகமானது கடவுளுடைய சொரூபத்துக்கு வெறும் புறச் சின்னமாகிறது. கடவுள் அவ்வடிவத்தில் அடங்கியவர் அல்லர்.
புல்லறிவாளர்க்கு இது விளங்குகிறதில்லை. தமோ குணத்தில் உதித்துள்ள அவ்வறிவை ஆராய்ந்து பார்த்தால்
அது யுக்திக்குப் பொருந்தாதது என்பது விளங்கும். யுக்திக்கு அது முற்றிலும் முரண்பட்டது.
உண்மைக்கும் அப்புல்லறிவுக்கும் வெகுதூரம். நன்மை ஒன்றும் அவ்வறிவினின்று விளைவதில்லை.
ஆக, அது அற்பமானதென்று இயம்பப்படுகிறது.
23. நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே
யத் கர்ம-எந்த செய்கை,
நியதம் ஸங்கரஹிதம்-விதிப்படி பற்றுதல் இன்றி,
அபலப்ரேப்ஸுநா-பயனைக் கருதாமல்,
அராகத்வேஷத:-விருப்பு வெறுப்பின்றி,
க்ருதம்-செய்யப் படுகிறதோ,
தத் ஸாத்த்விகம் உச்யதே-அது சாத்விக மெனப்படும்.
பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை,
சாத்விக மெனப்படும்.
சுவாசிப்பது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கர்மமாகிறது. ஆயினும் அது விருப்பு வெறுப்பு அற்றுச் செய்யப்படுகிறது.
ஒருவனுக்கு நியமிக்கப்பட்டுள்ள கர்மமே அவனுடைய நித்திய கர்மமாகிறது. நித்திய கர்மம் மனபரிபாகத்துக்கு ஏற்றபடி மாறுகிறது.
கணிதத்தில் கூட்டல் கழித்தல் போடுவது புதிதாகப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கும் சிறுவன் ஒருவனுக்கு நித்திய கர்மமாகும்.
உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கனுக்கு அத்தகைய கணக்குப்போடுவது நித்திய கர்மமாகாது.
அவனது வகுப்புக்கேற்ற மேலான கணக்குகளை அவன் போடவேண்டும். அதுபோன்று அவரவர் பரிபாகத்துக்கு ஏற்றபடி
சமுதாயத்தில் எல்லார்க்கும் கடமையுண்டு. அறப்போர் புரிந்து தீமையைக் களைந்து நலத்தைக் காப்பாற்றுவது
அர்ஜுனனுக்கு நியமிக்கப்பட்ட கர்மமாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகைய மேலான கடமையுண்டு.
அதை முறையாகச் செய்யவேண்டும்; சுவாசிப்பது போன்று இடைவிடாது செய்யவேண்டும்.
பின்பு, அதில் பற்றுவைக்காது செய்யவேண்டும். பற்று அற்றவன் தன்னை எக்கர்மத்துக்கும்
கர்த்தாவென்று எண்ணுவதில்லை; வெறும் கருவியென உணர்கிறான். அது சாத்விகமான கர்மமாகும்.
சாத்விக இயல்புடையவன் செய்யும் ஆத்ம சாதனங்களை ஆடம்பரமாக மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதில்லை.
கூடிய வரையில் தனியாக அவன் அவைகளைச் செய்து முடிக்கிறான்.
இரவில் மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கொசு வலைக்குள் உட்கார்ந்துகொண்டு அமைதியாகத் தியானம் செய்கிறான்.
24. யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந:
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்
து யத் கர்ம-ஆனால் எந்த செயல்,
புந: காமேப்ஸுநா-விருப்பங்களுக்கு வசப்பட்டவனால்,
வா ஸாஹங்காரேண-அல்லது அகங்காரமுடையவனால்,
பஹுலாயாஸம்-செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை,
தத் ராஜஸம் உதாஹ்ருதம்-அது ராஜசம் எனப்படும்.
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த
ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.
ஆசையில் இரண்டுவிதமுண்டு. ஒன்று மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துணைபுரிவது.
அருள் தாகம், சீலத்தில் விருப்பம், பரோபகாரச் சிந்தனை முதலியன வேண்டப்படும் ஆசைகளாகின்றன.
ஆனால் மனிதனை உலக பந்தத்தில் மேலும் ஆழ்த்தும் கீழான ஆசைகளை அகற்றவேண்டும்.
முறையாக, அளவாகப் பணம் சம்பாதிப்பதும் செலவிடுவதும் திரவிய யக்ஞமாகும்.
ஆனால் பொருந்தாத வழிகளில் மனிதன் பணம் சம்பாதிக்கும் யந்திரமாய் மாறிவிடலாகாது.
அப்பேராசையானது அவனிடத்திருக்கும் மனுஷத்தன்மைகளையெல்லாம் பாழாக்குகிறது.
சரீரம் உடைத்திருப்பதே ஒருவித அகங்காரம். அதை சுகபோகத்துக்கென்றே வைத்திருப்பது, அதை அலங்கரிப்பது,
கொழுக்கச் செய்வது முதலியன கொடிய அகங்காரமாகும். கிடைப்பதற்கு அரிய மானுடப் பிறவி அதனால் அனர்த்தமாய்ப் போகிறது.
தனக்கு நிகரானவர் யார் இருக்கிறார் என்ற எண்ணத்துடன் உடலை வளர்ப்பவருடைய தடித்த அகங்காரம் ரஜோகுணத்திலிருந்து உண்டானது.
சரீரம் ஈசனுடைய ஆலயம் என்ற எண்ணத்தால் அதை வெல்லவேண்டும்.
துஷ்ட அகங்காரம் என்பது யாது? என்னைத் தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது;
என்னிலும் மேம்பட்டவர் யார்? என்று சொல்லுகிற அகங்காரந்தான்.
25. அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே
யத் கர்ம அநுபந்தம்-எந்தச் செய்கையின் பின்விளைவையும்,
க்ஷயம்-அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்,
ஹிம்ஸாம்-துன்பத்தையும்,
பௌருஷம் ச-செய்வானது திறமையையும்,
அநவேக்ஷ்ய-கருதாமல்,
மோஹாத் ஆரப்யதே-அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ,
தத் தாமஸம் உச்யதே -தாமச மெனப்படும்.
செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும்,
செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.
தமோகுணம் நிறைந்த மனிதனுக்குத் தான் தொடுத்த கர்மத்தினின்று விளைவது நன்மையா, கேடா என்று
எண்ணிப் பார்க்கும் நல்லறிவு இல்லை. உடலின்கண் உள்ள வலிவு நஷ்டமும், பொருள் நஷ்டமும், ஆயுள் நஷ்டமும்
சேர்ந்து உண்டாகும் என்பது அறிவின்மையில் ஆழ்ந்திருப்பவனுக்கு விளங்காது. அவனுடைய முயற்சி தனக்கு மட்டுமல்ல,
மற்றவர்களுக்கும் துன்பத்தை உண்டு பண்ணும் தன்மையது. தான் படைத்துள்ள திறமையானது தான்
எடுத்துக் கொண்டுள்ள கர்மத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான்.
விவேகமின்மையே அதற்குக் காரணமாகும்.
மிகுந்த தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள்.
கள்ளங் கபடமற்ற மனதையுடையவராயிருந்தால் கடவுள் காட்சி கிடைக்கும்.
அவ்வித எளிய மனதை யுடையவர்க்கே கடவுள் தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது வழக்கம்.
ஆனால் எளிமை, உண்மை இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக் கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும் உண்டு.
பக்தனாக இருக்கவேண்டும்; ஆனால் அதன்பேரில் மூடனாக இருக்கக்கூடாது.
எப்பொழுதும் மெய்ப்பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்தியத்திலிருந்து அநித்தியத்தையும் அகற்றுவதற்காக
மனதிலே விசாரணை செய்து பார்க்கவேண்டும். பிறகு அநித்தியத்தை அகற்றிவிட்டு நித்திய வஸ்துவின்மீது மனதை நிறுத்த வேண்டும்.
ஞானத்தையும் கர்மத்தையும் பாகுபடுத்தியான பிறகு பகவான் இனி கர்த்தாவைப் பாகுபடுத்துகிறார்.
26. முக்தஸங்கோऽநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே
முக்தஸங்கோ-பற்றற்றவனாகவும்,
அநஹம்வாதீ-நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும்,
த்ருத்யுத்ஸாஹஸமந்வித:-உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும்,
ஸித்தி அஸித்த்யோ நிர்விகார:-வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும்,
கர்தா ஸாத்த்விக உச்யதே-உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.
நசைக ளற்றான், நானென்ப தற்றான், உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.
எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான்.
எனவே அவன் பற்று நீங்கியவன் ஆகிறான். உடல் தன்னுடையது என்பது அல்லாது அது ஈசனுடைய ஆலயமென்று சாதகன் கருதுகிறான்.
அவ்வுடலின் மூலம் நிகழ்கின்ற கர்மங்களுக்குத் தான் பொறுப்பாளன் அல்லன்;
அது ஈசன் செயல் என்று அவன் உறுதியாக உணர்கிறான். ஆதலால் அவனிடத்து அகங்காரமில்லை.
தன்னை பகவானுடைய தொண்டன் என்று கருதுகிறபடியால் தொடுத்த கர்மங்களில் அவனுக்கு உறுதியும் ஊக்கமும் உண்டாகின்றன.
பற்றுடையார் வெற்றியில் மகிழுறவும், தோல்வியில் துன்புறவும் செய்கின்றனர். கடவுளுடைய செயல் என்று
எண்ணுபவன் கர்மத்துக்குக் கர்த்தாவாகத் தோன்றுகிறானெனினும், மனத்தினுள் எல்லாம் ஈசன் செயல் என்ற
திடநம்பிக்கையிருப்பதால் அவன் நிர்விகாரியாக, மனதின்கண் வேறுபாடு அடையாதவனாக இருக்கிறேன்.
கள்ளங் கபடமற்ற மனமிருந்தால் ஈசுவரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட
மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல,
கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன.
27. ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோऽஸுசி:
ஹர்ஷஸோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:
ராகீ-வேட்கையுடையோன்,
கர்மபலப்ரேப்ஸு-செய்கைப் பயன்களை விரும்புவோன்,
லுப்த:-லோபி (பேராசை உள்ளவன்),
ஹிம்ஸாத்மக:-இடர் செய்வோன்,
அஸுசி:-தூய்மை யற்றோன்,
ஹர்ஷஸோகாந்வித:-இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன்,
கர்தா ராஜஸ: பரிகீர்தித:-இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்
வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன்,
களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.
ஏதேனும் ஒருவிதத்தில் பிறர் பொருளைத் தன்னுடையதாக்கிக் கொள்ள முயலுபவன் உலுத்தன் அல்லது உலோபியாகிறான்.
அதன் பொருட்டு மற்றவர்களைத் துன்புறுத்தவும் அவன் ஆயத்தமாயிருக்கிறான். அத்தகையவன் எண்ணுவதிலும்,
பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக்கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை.
விரும்பியது வந்தமையுங்கால் அவன் விரைவில் மகிழ்வடைகிறான்.
வேண்டாதது வந்தமையுங்கால் அவன் விரைவில் சோகித்துத் துன்பப்படுகிறான்.
ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்வம் (கர்த்தா என்று உணரும் பான்மை) இத்தகையதாம்.
வீண் கர்வம் பிடித்தவனாகயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென
அது நினைத்துக்கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச்
சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும்
மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.
28. அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஸடோ நைஷ்க்ருதிகோऽலஸ:
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே
அயுக்த:-கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன்,
ப்ராக்ருத:-அறிவு முதிர்ச்சி அடையதவன்,
ஸ்தப்த:-கர்வமுடையவன்,
ஸட:-வஞ்சகம் உடையவன்,
நைஷ்க்ருதிக:-பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்,
விஷாதீ-கவலை கொண்டவன்,
அலஸ:-சோம்பேறியும்,
தீர்கஸூத்ரீ ச-காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்,
கர்தா தாமஸ உச்யதே – இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்
யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி,
ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்,
இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.
அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் உடைய மனது யோகத்துக்கு உரியது. அத்தகைய நல்லியல்பு ஒன்றும் இல்லாத
மனது ஈண்டு உரைக்கப்படுகிறது. புத்தி வளர்ச்சியடையாது பாமரனாகவும் பாலன் போன்றும் இருப்பவன் பிராகிருதன்.
வணங்க வேண்டிய இடத்தில் வணங்காதிருப்பவன் முரடனாகிறான். வேலை செய்தற்கு விருப்பமில்லாது
தன் வல்லமையை யெல்லாம் மறைத்து வைத்துக்கொள்பவன் வஞ்சகனாகிறான்.
பிறருக்கிடையில் வேண்டுமென்ற பகைமையை உண்டுபண்ணுபவன் பழிகாரனாகிறான்.
செய்ய வேண்டியதை ஒன்றும் செய்யாதிருப்பவன் சோம்பேறி. மனம் தளர்ந்து யாண்டும் துன்பம் துய்க்கும்
தன்மையன் ஒருவன் அரும்பெரும் செயலுக்கு அருகன் ஆகான். துன்பப்படுபவனிடத்திருந்து
பேராற்றல்களெல்லாம் மறைந்துபட்டுப் போகின்றன. தற்காலிகமாகத் துன்பத்தின் வசப்பட்டிருந்த அர்ஜுனனைத் தட்டி
யெழுப்புதற்கே கீதா உபதேசம் நிகழ்வதாயிற்று. ஒரே நாளில் முடிக்கவேண்டிய வேலையை ஒரு மாதத்துக்கு
நீட்டிக்கொண்டு போகிறவன் காலத்தை வீணே கடத்துபவன் ஆகிறான். அதனால் அவனது வாழ்க்கைப் பயன் குன்றுகிறது.
ஒரு செம்படவன் ஆற்றில் வலையை வீசி அநேக மீன்களைப் பிடித்தான். சில மீன்கள் வலைக்குள் அசைவற்றிருந்து
வெளியே போகக் கொஞ்சமேனும் பிரயத்தனப்படாமலிருந்தன. வேறு சில மீன்கள் பிரயத்தனப்பட்டுத் துள்ளிக் குதித்தன.
ஆனால் வெளியே போக முடியவில்லை. இன்னும் சில மீன்கள் எப்படியோ வலையை விட்டுத் தப்பித்துக் கொண்டு போய்விட்டன.
உலகத்திலுள்ள மனிதர்களும் இவ்வாறு மூவகையினராக இருக்கின்றனர்.
1. முக்தியடையப் பிரயத்தனப்படாது பந்தப்பட்டிருப்பவர்கள் 2. பிரயத்தனப்படும் முமுக்ஷúக்கள் 3. விடுதலையடைந்த முக்தர்கள்.
அறிவும் உறுதியும் பெறுகிற படித்தரங்கள் இனி விளக்கப்படுகின்றன:
29. புத்தேர்பேதம் த்ருதேஸ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஸ்ருணு
ப்ரோச்யமாநமஸேஷேண ப்ருதக்த்வேந தநஞ்ஜய
தநஞ்ஜய-தனஞ்ஜயா,
குணத: ஏவ-குண வகையால்,
புத்தே: த்ருதே: ச-புத்திக்கும் மன உறுதிக்கும்,
த்ரிவிதம் பேதம்-மூன்று விதமான வேறுபாட்டை,
அஸேஷேண ப்ருதக்த்வேந-முழுமையாகவும் பகுத்தும்,
ப்ரோச்யமாநம் ஸ்ருணு-உரைக்கிறேன், கேள்.
குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்;
தனஞ்ஜயா, கேள்.
திக்விஜயம் செய்தபொழுது அர்ஜுனன் தேவலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தனத்தையெல்லாம் ஜயித்தானாதலால்
அவன் தனஞ்ஜயன் என்ற பெயர் பெற்றான். யாருக்கும் பயன் படாது ஓர் இடத்தில் அடைபட்டுக் கிடக்கும்
செல்வத்தைப் பயன்படுகிற இடத்துக்கு மீட்டெடுத்துக்கொண்டு வருவது அரசனுடைய கடமையாகும்.
செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டுந் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் பகரப்படுகிறது.
அத்தகைய புத்தியினிடத்து மூன்றுவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன. செய்யவேண்டிய காரியத்தைத் தளர்வுறாது
திட்பத்துடன் செய்வது உறுதி அல்லது திருதி என்று பெயர் பெறுகிறது.
அது போன்ற மனவலிவின்கண் மூன்று படித்தரங்கள் அமைந்திருக்கின்றன.
உப்பினாலும் துணியினாலும் கல்லாலும் செய்யப்பட்ட மூன்று வகைப் பதுமைகள் இருக்கின்றன.
அவைகளைத் தண்ணீரில் அமிழ்த்தினால் முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும்.
இரண்டாவது தன் உருவத்துடனிருந்தே நிறையத் தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக்கொள்ளும்.
மூன்றாவதில் தண்ணீரே நுழையாது.
முதல் பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு ஒன்றி ஐக்கியமாய்விடும் மனிதனைக் குறிக்கும். அவன் முக்த புருஷன்.
இரண்டாவது பதுமை திவ்யானந்தத்தையும் திவ்ய ஞானத்தையுமுடைய வாஸ்தவமான பக்தனைக் குறிக்கும்.
மூன்றாவதோ, ஞானமானது கொஞ்சமேனும் நுழையாத ஹிருதயத்தையுடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.
அவ் அறிவுக்கும் உறுதிக்கும் இனி விளக்கம் வருகிறது :
30. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ
பார்த-அர்ஜுனா,
யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச-எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம்,
கார்யாகார்யே பயாபயே ச-செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது,
பந்தம் மோக்ஷம் ச வேத்தி-பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும்,
ஸா புத்தி: ஸாத்த்விகீ-அந்த புத்தியே சாத்விக புத்தியாம்.
தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது,
விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.
பிரபஞ்சத்தில் ஜீவனைப் பந்தப்படுத்திப் பிறப்பு இறப்பைப் பெருக்கிக்கொண்டுபோகும் கர்மம் பிரவிருத்தி எனப்படுகிறது.
மற்று, மோக்ஷத்துக்கு ஏதுவான கர்மம் நிவிருத்தி என்று சொல்லப்படுகிறது. இதையே அகர்மம் என்றும் சந்நியாசம் என்றும் சொல்லலாம்.
ஏனென்றால் கர்மத்தைக் கடப்பதற்கு அது உறுதுணையாகிறது. கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து எதைச் செய்தால்
மனிதனுக்கு நலன் வருகிறதோ அது செய்யத் தகுந்த கர்மம். எதைச் செய்தால் கேடு உண்டாகுமோ அது தகாத கர்மமாகிறது.
தகாத கர்மத்தைச் செய்ய மனிதன் பயப்படவேண்டும். பெயரளவில் அது பயமெனப்படுகிறது. உண்மையில் அது வீரத்தின் தோற்றமாம்.
விஷப் பாம்பு, புலி முதலியவைகளுடன் பழகப் பயப்படவேண்டும். அதாவது மடத்தனமாகப் பாதுகாப்பின்றி அவைகளின் அருகில் செல்லலாகாது.
தானாக வந்தமைகிற மரணத்துக்குப் பயப்படலாகாது. பிசாசு, பூதகணங்கள் முதலியவைகளைப்பற்றிப் பயப்படுவதில் பொருளில்லை.
அவைகளைப்பற்றிய பயமெல்லாம் அக்ஞானத்தால் வருவது. இல்லாததை இருப்பதாகக் கோழைநெஞ்சம் கற்பித்துக் கொண்டு அஞ்சுகிறது.
பிரவிருத்தியும், தகாத கர்மமும், பயமும் பந்தத்தை உண்டுபண்ணுகின்றன. நிவிருத்தியும், தக்க கர்மமும், அபயமும் மோக்ஷத்தைத் தருகின்றன.
அக்ஞானத்தால் பந்தம் ஏற்படுகிறது. ஞானத்தால் மோக்ஷம் விளைகிறது. சாத்விக புத்தி இவைகளையெல்லாம் நன்கு ஓர்கிறது.
இவ்வுலகம் அநித்தியமா? நீ ஈசுவரனை அறியாமலிருக்கும் வரையில் அது அநித்தியந்தான். ஏனெனின், நீ ஒவ்வொரு
பொருளிலுமுள்ள ஈசுவரனைக் காண்பதில்லை. ஆகவே, நான், எனது என்ற மனோபாவம் உன்னிடம் ஆழ்ந்துகிடக்க,
நீ உலக வசத்தவனாகிறாய். இவ்விதம் அக்ஞானத்தினால் மதிமயங்கிய நீ, விஷயப்பொருள்களையே கருதுபவனாகி,
மாயையாகிய சமுத்திரத்தில் மேலும் மேலும் ஆழமாக மூழ்கிக்கொண்டேயிருக்கிறாய். வழி நேராக இருப்பினும்,
ஸம்ஸாரத்தினின்று கரையேற வொண்ணாதபடி மாயையானது மனிதர்களுடைய கண்களை முற்றிலும் குருடாக்கி வருகின்றது.
ஸம்ஸாரம் எவ்வளவு அநித்தியமென்பது உனக்கே தெரியும். நாம் வசிக்கிற வீட்டைப் பற்றிச் சற்று யோசனை செய்வோம்.
எத்தனை பேர்கள் அதில் பிறந்து இறந்து போயிருக்கின்றனர்! உலகப் பொருள்கள் ஒரு நிமிஷத்தில் நம் முன்னர் தோன்றி,
அடுத்த நிமிஷத்தில் மறைந்து போகின்றன. பந்துக்கள் என யாரை நீ கருதுகிறாயோ அவர்கள் நீ கண்மூடிய பிறகு
உனக்குப் பந்துக்கள் ஆகிறதில்லை. அப்படியிருந்தும் லௌகிகனுடைய பற்று எவ்வளவு பலமானது !
குடும்பத்தில் அவனுடைய பராமரிப்பை எதிர்பார்ப்பவர் ஒருவருமில்லாத காலத்தில் கூட அவனுக்குக் காசிக்குப்
போய்வரச் சந்தர்ப்பப்படுவதில்லை. பக்தி சாதனம் செய்ய அவனுக்கு அவகாசம் கிடைப்பதில்லை.
பேரன் ஹரீசன் என்ன செய்வான்? என்ற விசாரம் அவனை உலகத்தோடு பிணிக்கின்றது.
மீன்பறியின் வாய் எப்போதும் திறந்திருக்கிறது; என்றாலும் மீன்கள் வெளியே ஓடிப் போவதில்லை.
வண்ணாத்திப்புழு தான் இழைத்த கூண்டிலேயே கிடந்து சாகின்றது. அப்படிப்பட்ட ஸம்ஸாரம் அநித்தியமென்றும்
அழிந்து போகக்கூடியதென்றும் ஏற்படவில்லையா?
31. யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ
பார்த-பார்த்தா.
யயா தர்மம் அதர்மம் ச-எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும்,
கார்யம் அகார்யம் ஏவ ச-செய்யத் தக்கது, தகாதது,
அயதாவத் ப்ரஜாநாதி-உள்ளபடி அறியாத,
ஸா புத்தி: ராஜஸீ-புத்தி ராஜச மெனப்படும்.
தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.
அசைகின்ற நீரில் பிம்பம் உள்ளபடி தெரிகிறதில்லை. அங்ஙனம் ராஜஸ புத்தியில் சாஸ்திரோக்தமான
தர்மமும் காரியமும் உள்ளபடி தென்படமாட்டா; திரிவுபட்டே தென்படுகின்றன. சூதாடுதலாகிய தகாத காரியத்தைத்
தகுந்த காரியமாக துரியோதனன் எண்ணி தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான்.
தனக்கு உரியதல்லாத ராஜ்யத்தை உரியதென்று பற்றிக்கொண்டு பாண்டவரைப் போரில் தூண்டியது அதர்மச் செயல்.
ஆயினும் அவன் அதை தர்மமென்று எண்ணினான்.
ரஜோகுணத்தினின்று உதித்த புத்தியுடையவனிடத்துப் பெருமிதமான உழைப்பு இருக்கிறது.
ஆனால் அந்த உழைப்பில் நேர்மையைக் காணமுடியாது.
அயலார் இருவர் கிருஷியோ, வர்த்தகமோ, கைத்தொழிலோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்களுள் ரஜோகுண விருத்தியுடையவன் தனது ஆற்றலையும் அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான்.
ஆனால் அம்முயற்சி ஆக்கத்துறையில் இராது. அயலான் சம்பாதித்ததைத் தான் அபகரித்துக்கொள்ள அவன் எத்தனிப்பான்;
அல்லது அயலானுக்கு நலம் செய்வது போன்று வெளிப்படையில் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனைக் கெடுக்க எத்தனிப்பான்;
வெளிப்படையாக அவனோடு போட்டி போட்டும் அவனை அழிப்பான்.
தன்னருகில் அமைதியாக வாழ்ந்திருக்க அவன் யாரையும் விடமாட்டான்;
ஏதேனும் ஒரு விதத்தில் அயலானை அல்லல்படும்படி செய்துவைப்பான்.
வழக்குக் தொடுப்பதில் ரஜோகுணத்தானுக்கு நிகரானவனைக் காணமுடியாது.
காலமெல்லாம் நீதி மன்றங்களில் வியாச்சியங்களும் வில்லங்கங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும்.
மெய்யைப் பொய்யாக்குதலிலும் பொய்யை மெய்யாக்குதலிலும் அவன் வல்லவன்.
முறை தவறிய முயற்சியிலேயே அவன் பெருமகிழ்வடைவான். நேர்மையாக நடந்துகொள்பவர்களை ஒன்றுக்கும்
உதவாத அப்பாவிகளென்று அவன் ஏளனம் பண்ணுவான். நல்லார் அருகில் அவன் ஒருநாளும் செல்லான்.
பாரமார்த்திக வாழ்வு சம்பந்தமான பேச்சு அவனுக்குக் கசப்பாக இருக்கும்.
பிழைக்கத் தெரியாதவர்களது போக்கு அத்தகையது என்று அவன் அனுதாபம் காட்டுவான் அல்லது பராமுகமாய் இருப்பான்.
கெட்ட வழியில் சம்பாதிக்கும் அவன் செல்வம் கெட்ட காரியத்துக்கே ஓயாது போய்க்கொண்டிருக்கும்.
நல்ல காரியத்துக்குச் செல்வத்தைச் சிறிதேனும் அவன் ஈயான்.
ரஜோ குணத்தில் உதித்த அறிவு செய்யும் செயல்கள் இவை போன்றவைகளாம்.
32. அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா
ஸர்வார்தாந்விபரீதாம்ஸ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ
பார்த-பார்த்தா,
யா தமஸா ஆவ்ருதா-எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய்,
அதர்மம் தர்மம் இதி ச-அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும்,
ஸர்வார்தாந் விபரீதாந் ச-எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக,
மந்யதே-நினைக்கிறதோ,
ஸா புத்தி: தாமஸீ-அது புத்தி தாமச புத்தியாம்.
பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும்
நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.
நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. நோயாளி ஒருவன் மருந்தை அருந்தமாட்டேன்
என்று நோயை வளர்க்கிற உணவை உண்டால் என்னாகுமோ அதுவே தாமஸபுத்தியின் விளைவு.
அறிவிலியாகிய சிறுவன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை;
துஷ்டப் பிள்ளைகளுடன் கூடிக்கொண்டு வீண்காலம் போக்குகிறான். அவனுக்குப் பள்ளிக்கூடம் போவது கெட்டதாகத் தோன்றுகிறது.
கூடாநட்புக் கொள்வதை நலமென நினைக்கிறான். முதியவர்களில் பலர் உழைத்துப்பாடுபடுவதில்லை;
சோம்பலே வடிவெடுத்திருக்கின்றனர். உழைப்பவர், சுகஜீவனம் பண்ணத் தெரியாதர்கள் என்று அன்னவர் நினைக்கின்றனர்.
கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி ஆகியவைகளில் அவர்களுக்குக் கசப்பு ஏற்படுகிறது.
வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை என்பது அவர்களது கருத்து.
விருத்தாப்பியத்தில் அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர்.
ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும்,
குற்றத்தைக் குணமாகவும் ஓர்தலில் தமோகுண விருத்தியுடையவர்க்குப் பெருமகிழ்வு உண்டாகிறது.
ஆண்மை தரக்கூடிய நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாடமாட்டார்கள்.
சூதாடுவது போன்ற விளையாட்டுகளில் அவர்கள் வீண் காலம் கழித்துக்கொண்டிருப்பார்கள்.
இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள்.
இனி, திருதி விளக்கப்படுகிறது :
33. த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ
பார்த-பார்த்தா,
யயா அவ்யபிசாரிண்யா த்ருத்யா:-எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால்,
யோகேந-யோகத்தின் மூலம்,
மந: ப்ராண இந்த்ரியக்ரியா:-மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை,
தாரயதே-நிலை நிறுத்துகிறானோ,
ஸா த்ருதி: ஸாத்த்விகீ-அந்த உறுதியே சாத்வீகமாவது.
மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன்
தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.
திருதி என்னும் சொல்லை உறுதி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். மனத்தகத்து அமையும் திட்டம் என்பதும் அதுவே.
நல் வாழ்க்கையில் நிலைத்துள்ள மனதுக்கு அது உண்டாகிறது. சூரிய வெளிச்சம் கிரணங்களாகச் சிதறடைந்து போகிறது.
அக்கிரணங்களைத் திரும்பவும் ஒருமுகப்படுத்தினால் பேரொளி உண்டாகிறது.
அப்பேரொளியை எப்பொருளின்மீது திருப்பினாலும் அப்பொருளை அது நன்கு விளக்கிக் காட்டவல்லது.
அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரண நிலை திருதி என்பதாகிறது. திருதி படைத்துள்ள யோகியின் மனதும்,
பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன.
இந்தச் செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன.
அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும்,
கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் தத்தம் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம்
விதவிதமான ஈசுவர வழிபாடுகளாகின்றன. வஸ்திரத்தில் அமைந்துள்ள நூலானது பல இழைகளைக் கொண்டது.
அங்ஙனம் திருதி என்பது மனம், பிராணன், இந்திரியங்கள் ஆகியவைகளின் உயர்ந்த செயல்களைக் கொண்டது.
நூலானது ஊசியின் காதிலே நுழைதற்கு இழைகள் பிளவுபடாதிருக்க வேண்டும்.
இழைகள் குவிந்து இருந்தால் ஊசியின் காதில் எளிதில் செல்லும்.
ஆனால் ஊசியின் காது அடைபட்டிருந்தால் குவிந்த நூலும் வளைந்துபோய்விடும். உள்ளே நுழையாது.
ஏனென்றால் நூலில் உறுதியில்லை. யோகி ஒருவனுடைய திருதியோ குவிந்த நூல்முனை போன்றும்,
கூரிய உறுதியான ஊசிமுனை போன்றும் இருக்கும். அத்தகைய பண்பட்ட திருதியானது பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
வேறு எப்பொருளுக்கும் அது பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதன்று. காந்த ஊசி யாண்டும் வடதிசையையே நோக்கி
நிற்பது போன்று யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது.
அந்த உறுதிப்பாடு சாத்விகமானது. அது மனிதனை மேலோன் ஆக்குகிறது.
34. யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேऽர்ஜுந
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ
து பார்த-ஆனால் பார்த்தா,
அர்ஜுந-அர்ஜுனா,
பலாகாங்க்ஷீ-பயன்களை விரும்புவோன்,
யயா த்ருத்யா-எந்த உறுதியினால்,
ப்ரஸங்கேந-மிகுந்த பற்றோடு,
தர்மகாமார்தாந் தாரயதே-அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ,
ஸா த்ருதி: ராஜஸீ-அந்த உறுதி ராஜசம் ஆகும்.
பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப்
பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.
புருஷார்த்தம் அல்லது உறுதிப்பொருள் நான்கு, தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அல்லது
அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம் அவை. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது.
தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும்
சுவர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. உலகப்பற்றைப் பொதுவாக இரண்டாகப் பிரித்து வைக்கலாம்.
காசு ஆசை அல்லது பொருளில் பற்றுதல்;
இது எவ்வளவு உறுதியாக மனதைப் பற்றிப் பிடித்திருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாது.
உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்துவிட்டு மனிதன் அல்லும் பகலும் உழைக்கிறான்.
அதன் பயனாக இன்னும் கொஞ்சம் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை அவனை அச்செயலில் தூண்டுகிறது.
சொந்த ஊரையும் உற்றாரையும் உறவினரையும் பிரிந்து தூர தேசத்துக்கு ஒருவன் போகிறான்.
அதிகம் திரவியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனை ஆங்கு இழுத்துச் செல்லுகிறது.
இனி, உடலின் தேவைகளையும் சுருக்கிக்கொண்டு ஒருவன் பாடுபடுகிறான்.
மேலும் செல்வம் சேரவேண்டும் என்ற நோக்கம் அவனை அப்படித் தூண்டுகிறது.
அடுத்தபடியாக இருப்பது இன்பத்தில் வைத்துள்ள பற்றுதல். எல்லா உயிர்களும் இன்பத்தை நாடுகின்றன.
இன்பம் கிடைப்பதாலேயே அவைகள் இவ்வுலக வாழ்க்கையை விரும்புகின்றன.
அவைகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளெல்லாம் காமத்தை நிறைவேற்றுதற்பொருட்டேயாம்.
சலிப்படையாது, தளர்வுறாது எல்லா உயிர்களும் உழைக்கின்றன. இன்பத்தின் பொருட்டே அவைகள் அங்ஙனம் செய்கின்றன.
வெவ்வேறு உயிர்கள் வெவ்வேறு விதங்களில் இன்பத்தைப் பெறலாம். ஏதேனும் ஒருவிதத்தில் அது அகப்பட்டால் போதுமானது.
உயிரைக் கொடுத்து இன்பத்தைப் பெற அவைகள் எத்தனிக்கின்றனவென்றால் அது மிகையாகாது.
நல்லறம் பயிலுதல் பொருளையும் இன்பத்தையும் பெற்று வைத்திருத்தல் பொருட்டேயாம்.
பொருளோடும் இன்பத்தோடும் கூடிய அறம் இவ்வுலக சம்பந்தமானது. இம்மைக்கு ஏதுவாகிய
அறம் பொருள் இன்பங்களில் பெரும் பற்றுதல் வைப்பது ரஜோகுணத்தின் இயல்பு.
ஆகையால் இம்மூன்றைக் கடைப்படிக்கும் உறுதி ராஜஸமானது. அது மனிதனை உலக பந்தத்திலேயே ஆழ்த்தி வைக்கிறது.
தாபஜுரத்தினால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும்
வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா?
அது போல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றன்பங்களில் ஆசை வைத்த உலகப்பற்றுள்ளவன்
ரூப லாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால்
அவனால் ஆசையை அடக்க முடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம்.
35. யயா ஸ்வப்நம் பயம் ஸோகம் விஷாதம் மதமேவ ச
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ
யயா-எந்த (மன உறுதியினால்),
ஸ்வப்நம் பயம் ஸோகம்-உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும்,
விஷாதம்-ஏக்கத்தையும்,
மதம்-செருக்கையும்,
ந விமுஞ்சதி-விடமுடியவில்லையோ,
பார்த த்ருதி: ஸா தாமஸீ-பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத்
திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
தமோகுணமும் அக்ஞான இருளும் ஒன்றோடொன்று சேர்ந்தவைகளாகின்றன. தூங்குகின்ற நிலை ஜட அவஸ்தைக்கு ஒப்பானது.
கனவு காணும் இயல்பும் அதில் அடங்கியிருக்கிறது. பகற் கனவு காணும் தமோகுண முடையவனை உலகில் காணலாம்.
அத்தகையவன் விழித்திருந்து வியவகாரம் செய்வது தூக்கத்தில் சொப்பனம் காண்பது போன்று உறுதியற்றது.
அவன் புரியும் செயல்கள் உலகுக்குப் பயன்படாதவைகளாகும்.
தமோகுண உறுதிக்குத் தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே குருடன்.
தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இன்மைக்கு அவன் அந்தகனாயிருந்தது புறச் சின்னமாகும்.
துரியோதனன் முதலாயினோர் அவனுக்குப் புதல்வர்களாயிருந்ததும் பொருத்தமானது.
ஏனென்றால் அக்ஞானத்தினின்றே கேடுகள் அனைத்தும் உதிக்கின்றன. குருட்டு அரசனுக்கு ராஜ்யத்தில் பெரும் பற்றுதல் இருந்தது.
தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று.
அவர்கள் புரிந்த அடாத செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை யடைந்தான்.
ஆனால் புதல்வர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.
தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான்.
ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன் போன்றவர்களது புத்திமதியைக் கேட்க அவன் ஆயத்தமாயில்லை.
எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது.
விவேகமில்லாத அவ்வேந்தன் விடாது பிடித்த திருதியானது தமோகுணத்தினின்று உதித்ததாம்.
திருதராஷ்டிரன் போன்ற மக்கள் பலரை இன்று நாம் சமூகத்தில் காணலாம். முன்னோர்கள் தேடி வைத்த செல்வம்
அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஆனால் நல்லறிவும் முயற்சியும் அவர்களிடத்து இல்லை.
அந்த அளவில் அவர்கள் குருடரேயாவர். உண்பதும் உறங்குவதுமே அவர்களுக்கு முக்கியமான தொழில்களாகும்.
செல்வத்தை முறையாகக் காக்கவும் வளர்க்கவும் அவர்களுக்குத் தெரியாது.
எனவே அது கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கும்.
செல்வத்தில் சில பகுதி விரயமான பிறகே அவர்களுக்கு விஷயம் விளங்குகிறது.
பின்பு அதைக் குறித்து அவர்கள் துன்பத்தில் அழுந்துவார்கள்.
மனக்கலக்கத்துக்கு இங்கு மூலத்தில் விஷாதம் என்னும் சொல் அமைந்திருக்கிறது.
கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாதம் என்பதாம். அதாவது தற்காலிகமாக அவனுக்கு மனம் கலங்கிற்று.
தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவருக்கோ ஓயாத மனக்கலக்கமாம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்வு
துர்மேதை என்னும் சேற்றில் கட்டிய வீடு போன்றது. ஓயாது அது இடிந்துவிழுந்துகொண்டே இருக்கும்.
இத்தனைவிதக் கேடுகளுக்கிடையில் தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவர்களை விட்டு அகலுவதில்லை.
இது தமோகுணத்தினின்று உதித்த உறுதியாம்
36. ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஸ்ருணு மே பரதர்ஷப
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி
பரதர்ஷப-பாரதக் காளையே!
இதாநீம் த்ரிவிதம் ஸுகம்-இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை,
மே ஸ்ருணு-என்னிடமிருந்து கேள்,
யத்ர அப்யாஸாத் ரமதே-எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ,
து:காந்தம் ச நிகச்சதி-எதனில் துக்க நாச மெய்துவானோ.
பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள்.
எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,
உயிர் வாழ்க்கைக்கு உற்சாகம் தருவது சுகப்பிராப்தி. சுகம் வேண்டாத உயிர் எவ்வுலகிலும் இல்லை.
அதன் பொருட்டு ஜீவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு ஓரளவில்லை. ஆயினும் அதை அடைதலில் தார தம்மியமுண்டு.
மின்னல்போன்று சிலருக்கு அது தோன்றுகிறது. இதோ, சுகம் கிட்டிவிட்டது என்று உணருதற்கு முன்பு அது மாயமாய் மறைந்து போகிறது.
மீண்டுமொரு நீண்ட முயற்சி. இங்ஙனம் பெருமுயற்சிக்கிடையில் இன்பப்பேறு மின்னல் போன்று இடையீடு உடையதாகிறது.
இன்னும் சிலர்க்கு அது ஓட்டைப் பாத்திரத்தில் கொட்டும் ஜலம் போன்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறது.
அது எங்கிருந்து வருகிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. பிறகு எங்கே போய் மறைகிறது.
ஏன் போகிறது என்பதும் பிடிபடுவதில்லை. பூரணகும்பம் போன்று ஒரு நாளைக்கு இன்பம் நிறைநிலையடையும் என்று நம்பியிருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையே வாழ்க்கைக்குத் தூண்டுகோலாகிறது. ஏதோ ஒரு சிலர்க்கு வளர்பிறை போன்று சுகம் ஓங்குகிறது.
அது இடர்ப்படுவதில்லை. இன்பம் துய்ப்பதில் வாய்க்கும் இத்தகைய ஏற்றத் தாழ்வுக்குக் காரணம்
ஏதாவது உண்டா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அப்பியாசம் அல்லது பயிற்சியானது வாழ்க்கையை வேண்டியவாறு மாற்றியமைக்க வல்லது. உடலுக்கு ஏற்ற பயிற்சி யுண்டு.
அதே பாங்கில் உள்ளத்துக்கு ஏற்ற பயிற்சிகளும் உண்டு. ஜன்மாந்தரத்தின் வாசனைகள் என்று சொல்லுவது எல்லாம்
பயிற்சியினின்று வந்தவைகள். பயிற்சியை மாற்றினால் வாசனையை மாற்றலாம்.
அப்பியாசத்தின் மூலம் சுபாவத்தையே மாற்றியமைக்கலாம். விலங்கினிடத்து ஒழுங்குப்பாட்டை உண்டு பண்ணுதற்கும் பயிற்சி பயன்படுகிறது.
அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்குக் கையாளுவது போதாது. இடையறாப் பழக்கமாக அது வடிவெடுக்க வேண்டும்.
துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் இன்பத்தைப் பெறுதற்கும் அப்பியாசம் சிறந்ததொரு உபாயமாகிறது.
37. யத்ததக்ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம்
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்
யத் அக்ரே விஷம் இவ-எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய்,
தத் பரிணாமே அம்ருதோபமம்-அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ,
தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம்-அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது,
தத் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்-அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது.
எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ,
அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.
வைராக்கியமும் தியானமும் கூடிய பாரமார்த்திக வாழ்க்கை துவக்கத்தில் துன்பம் நிறைந்ததாகத் தென்படுகிறது.
பிறகு மனத்தெளிவினின்று விளையும் சித் சுகோதயம் ஒப்பு உயர்வு அற்றது.
அது ஒன்றே பிறவிப் பெரும்பயன் என்பது அப்பொழுது விளங்குகிறது.
பாரமார்த்திக வாழ்வினின்று வரும் பேரின்பம் சாதாரண சாதகர்களுக்குப் பிடிபடாது போகலாம்.
ஆனால் நல்லொழுக்கத்தின் பயனை எல்லாரும் எளிதில் காணலாம். விஷயங்களில் விரைந்து செல்லும்
இந்திரியங்களைத் தடுத்து ஆளுதல் ஆரம்பத்தில் கஷ்டமாயிருக்கும். அதில் வெற்றிபெற்றான பிறகு வரும்
நிலைத்த இன்பமானது நிலையற்ற விஷய சுகத்தைவிட மேலானது என்பது விளங்கும்.
யோகிகளுடைய வாழ்க்கையையும் போகிகளுடைய வாழ்க்கையையும் சீர்தூக்கிப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும்.
முற்காலத்தில், ஜயபுரியிலிருக்கும் கோவிந்தஜீயின் கோவிலிலிருந்த அர்ச்சகர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதில்லை
ஆகவே அவர்கள் ஆத்ம சக்தியால் வெகு பலம் படைத்தவர்களாக இருந்தனர்.
ஒரு சமயம் அவ்வூர் அரசன் அவர்களைத் தன்னிடம் வரும் படி சொல்லியனுப்பினான்.
அவர்கள் போகாமல், அரசனைத்தான் எங்களிடம் வரச் சொல்லுங்கள், என்று பதில் அனுப்பினர்.
அப்பால், அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டனர். அதன்பின் அர்ச்சகர்களை அரண்மனைக்கு வரவழைக்க
வேண்டிய அவசியம் அரசனுக்கு இல்லாது போயிற்று. ஏனெனில், அவர்கள் தாமாகவே அரசனிடம் வந்து,
மகராஜ்! நாங்கள் ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கிறோம். சுவாமிக்குச் சாத்திய புஷ்பங்களைக் கொணர்ந்திருக்கிறோம்.
அங்கீகரிக்கவேண்டும், என்று சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட அவசியம் நேர்ந்துவிட்டது பாவம்!
அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்! ஒரு நாளைக்கு வீடுகட்டவேண்டியிருந்தது.
இன்னொரு நாள் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யவேண்டியிருந்தது.
வேறொரு நாள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டியிருந்தது.
இப்படியாக அவர்களுக்கு இடைவிடாத பணமுட்டுப்பாடு உண்டாயிற்று. அதனால் ராஜசபைக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தது.
பிறர்க்கு அடிமையாக வேலை செய்வதன் பயனை நீங்களே நன்கு உணர்வீர்கள்.
ஆங்கிலமும் மேனாட்டுப் பயிற்சியும் பெற்ற வாலிபர்களில் அநேகர் பிறர்க்கு அடிமைவேலை செய்து
தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் உதைகளை வாய்பேசாது பெற்று அனுபவிக்கின்றார்கள்.
ஏன் அவ்வளவு அவமதிப்புக்கெல்லாம் அவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா?
அவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பொதுப்பட பெண்ணாசையே யாகும்.
இந்திரிய நிக்கிரகம் அல்லது புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம்.
அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்படான். உலப்பில்லா ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.
38. விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத் ததக்ரேऽம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்
யத் விஷயேந்த்ரிய ஸம்யோகாத்-எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால்,
அக்ரே அம்ருதோபமம்-தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து,
பரிணாமே விஷமிவ – விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ,
தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த இன்பம் ராஜசம் எனப்படும்.
விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து
விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.
இந்திரியங்களைக் கொண்டு இந்திரியார்த்தங்களை அணைந்து பெறும் இன்பம் நஞ்சு ஆகிறது. அதனால் பலம் குறைகிறது.
வீரியத்துக்கு விரயம் உண்டாகிறது. அதாவது ஆண்மையோடு செயலாற்ற இயலாது. ரூபம் அல்லது சுந்தர வடிவம் குலைகிறது.
வயோதிகம் விரைவில் வருகிறது. நிறம் மங்குகிறது. இயல்பாக மேதாவியாக வேண்டியவன் விஷய சுகத்தால்
புல்லறிவாளனாகித் தாழ்வுறுகிறான். இறைவனைப்பற்றிய ஞாபகசக்தி ஒழிந்து போகிறது.
செல்வமும் கையைவிட்டுச் சென்று அழிகிறது. ஊக்கத்தோடு வினையாற்றும் வல்லமை வருவதில்லை.
அதர்மமே மேலும் மேலும் தலையெடுக்கிறது. அதனால் வாழ்க்கையே நரகவேதனையாய்க் கழிகிறது.
ஓட்டைப் பாத்திரத்தில் வார்க்கும் ஜலம் போன்று இன்பம் தோன்றவும் மறையவும் செய்கிறது.
வாழ்வு என்னும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற
உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வண்டி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தம் போன்று இன்பம் கொடுத்தன.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் என்பது உண்டு. யாரும் அதைத் தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச் செயல் மரணம்.
அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் என்னும் விஷம் வந்தது.
அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள்.
எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை.
முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவி
வேந்தனாகிய சங்கர மகாதேவனிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த
உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும்.
இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெறவேண்டும்.
39. யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்
யத் ஸுகம் அக்ரே ச அநுபந்தே ச-எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும்,
ஆத்மந: மோஹநம்-ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,
நித்ரா ஆலஸ்ய ப்ரமாத: உத்தம் – உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும்,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அது தாமசமென்று கருதப்படும்,
தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும்
தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.
ஏதேனும் ஒருவிதத்தில் தனக்கு இன்பம்கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான்.
சுகத்தை அவன் அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுதே அது மயக்கத்தைக் கொடுத்துத் துன்பமாக மாறியமைகிறது.
கள் குடித்தல் அல்லது மதுபானத்தை அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வெறியில் விவேகம் போய்விடுகிறது.
மற்றவர் ஏளனம் செய்வது குடிகாரனுக்குப் புலப்படுவதில்லை. மிகைபட்ட துக்கத்தை அது உண்டுபண்ணுகிறது.
வெறி அடங்கியதும் தளர்வுற்ற மனதும் வலிவற்ற உடலும் மேலும் துன்பத்தை விளைவிக்கின்றன.
அவன் சோம்பலே வடிவெடுத்தவன் ஆகிறான். இங்ஙனம் துவக்கத்திலும் இடைவேளையிலும் இறுதியிலும்
தமோகுணப் பிரவிருத்தி துன்பத்தையே வளர்க்கிறது. மின்னல் போன்று இடையிடையே இன்பம் தோன்றி உடனுக்குடனே மறைந்தது தான் மிச்சம்.
ஒட்டகம் முட்செடியைப் பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள் தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டினாலும்
அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.
40. ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:
ப்ரக்ருதிஜை:-இயற்கையில் தோன்றும்,
ஏபி: த்ரிபி: குணை:-இம்மூன்று குணங்களினின்றும்,
முக்தம்-விடுபட்ட,
யத் ஸத்த்வம் ஸ்யாத்-எந்த உயிர் இருக்குமோ,
தத் ப்ருதிவ்யாம் வா-அது மண்ணுலகத்திலோ,
திவி தேவேஷு வா-வானுலகத்தில் தேவருள்ளேயொ,
புந: ந அஸ்தி-வேறு இடங்களிலோ இல்லை.
இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை;
வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.
புல்முதல் பிரம்மா ஈறாக எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரகிருதியில் கட்டுண்ட ஆத்மாக்களாவார்கள்.
அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி, முக்குணங்களைக் கடக்கும் வரையில்
அவர்கள் எல்லாரும் பத்தாத்மாக்களேயாம். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.
குணபேதத்துக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைவதும் இயல்பு.
ஜீவர்கள் எல்லாரிலும் மிகப்பெரியவர் பிரம்மா. அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயொழிய முக்தியல்ல.
அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாது படைப்புத் தொழில் நிகழாது.
பிரகிருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள ஒரு பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போன்று
பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் பிரம்மாவானவர் கிரமமுக்தியடைகிறார்.
அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார்.
ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும்
ஸமாதி நிலையை அடையும் போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் ஸமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம்.
முக் குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை.
அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.
இனி, மோக்ஷத்துக்கு ஏதுவான மார்க்கங்கள் விளக்கப்படுகின்றன :
41. ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:
பரந்தப-எதிரிகளை வாட்டுபவனே,
ப்ராஹ்மண க்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச-பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய,
கர்மாணி-தொழில்கள்,
ஸ்வபாவ ப்ரபவை: குணை:-அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி,
ப்ரவிபக்தாநி-வகுப்புற்றனவாம்.
பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில்
விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.
ஸ்வபாவம் என்பது ஈசுவரனுடைய பிரகிருதி அல்லது மாயை. அது முக்குணமயமாயுள்ளது.
குணத்துக்குத் தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்தினின்று பெறுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்ப சுபாவம் மாறுகிறது.
அதாவது கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். சுபாவம் எப்படியோ அப்படி வருணம் மாறுகிறது.
ஆக, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்தினின்றும் கர்மத்தினின்றும் தெரிந்து கொள்ளலாம்.
சுபாவமோ மிக சூக்ஷ்மமானது. எளிதில் அதைத் தெரிந்துகொள்ள முடியாது.
ஞானிகளுக்கு மட்டும் அது கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ள வஸ்துபோன்று நன்கு விளங்கும்.
பின்பு, கர்மமோ ஸ்தூலமானது. ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய வருணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
வர்ணபேதத்தை பகவான் சிருஷ்டிக்கலாமா, உயர்வு தாழ்வை அவர் உண்டுபண்ணலாமா என்ற கேள்விகள் பிறப்பதுண்டு.
இந்தியாவில் வர்ணபேதமும், மேலோன் கீழோன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையில் அந்நாடு சிறந்த நாடு ஆகாது என்று கருதுவாரும் உளர்.
சிருஷ்டி என்பதன் பொருளே பேதத்தை உண்டுபண்ணுவது என்பதாகும். எல்லாம் ஒரே இயல்பை யடைவதும் சம்ஹாரம் ஆவதும் ஒன்று.
ஆக, பேதம் இருந்தாகவேண்டும். உடலில் அவயவ பேதம் உண்டு. வயதில் குழந்தை, யுவன், விருத்தன் என்ற பேதம் உண்டு.
பாலில் ஆண்பால் பெண்பால் என்ற பேதம் உண்டு. மனபரிபாகத்திலும் புரிகின்ற செயலிலும் உள்ள பேதம்
வர்ணபேதம் என்று சொல்லப்படுகிறது. இது சிருஷ்டி முழுதிலும் அமைந்திருக்கிறது.
அப்படி அமைக்காது சிருஷ்டி செய்யவும் முடியாது. வர்ணபேதம் இயற்கையின் அமைப்பு.
அது இந்தியாவில் பாங்கை உள்ளபடி அறிந்துகொள்ளவில்லை.
ஆக, வர்ணபேதத்தை அங்கீகரிப்பதைத் தவிர மனிதன் வேறு ஒன்றும் செய்யமுடியாது.
உலகில் எங்கும் வர்ணபேதம் இருக்கிறது. ஆனால் மேல் நிலைக்கு வந்திருப்பவன் கீழ் நிலையில் இருப்பவனை
அலட்சியப்படுத்தலாகாது. அப்படி அலட்சியப்படுத்தும் சமூகம் விரைவில் கீழ்நிலைக்கு வந்து சேரும்.
இக்கோட்பாடு எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.
வருணத்துக்குரிய கர்மத்தின் பிரிவினை வருமாறு :
42. ஸமோ தமஸ்தப: ஸௌசம் ஷாந்திரார்ஜவமேவ ச
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்
ஸமோ தம: தப:-மன அடக்கமும், புலனடக்கமும், தவமும்,
ஸௌசம்-தூய்மை,
ஷாந்தி-பொறுமை,
ஆர்ஜவம்-நேர்மை,
ஆஸ்திக்யம்-ஆத்திகம்,
ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ – ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும்,
ஸ்வபாவஜம் ப்ரஹ்ம கர்ம-இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம்,
கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
ஒருவன் பிறந்த குடியை முன்னிட்டு ஒருவனை பிராம்மணன் என்கிறது லௌகிகம்.
மனபரிபாகத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்து ஒருவனை பிராம்மணனென்கிறது வேதாந்தம்.
எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராம்மணன் தோன்றலாம்.
ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது.
வேதாந்தம் விளக்குகிறபடி பிராம்மண இயல்பை அடையப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது.
ஆனால் அந்நிலையை அடைய மனிதன் முயலவேண்டும்.
கட்டுப்பாடான வாழ்க்கையே வடிவெடுத்தவன் அந்தணன். மனவடக்கமும் பொறிகளின் அடக்கமும் இயல்பாக
அவனிடத்து அமைந்திருக்கின்றன. பரத்தை நாடித் தவம் புரிதல் ஒன்றே அவன் தொழில்.
தவத்தால் அவனது மனம் மொழி மெய் ஆகிய திரிகரணங்களும் தூய்மையடைகின்றன.
புறவுலகினின்று அவனுக்கு ஏற்படும் இடுக்கண்களிடத்து பிராம்மணன் பொறுமையே வடிவெடுத்தவனாகிறான்.
துன்புறுத்துவார் யாரையும் அவன் நொந்துகொள்வான். தனது சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும்
அவன் நேர்மையே வடிவெடுத்தவனாகிறான். சாஸ்திர ஞானத்துக்கும் சுவானுபவ ஞானத்துக்கும் அவன் களஞ்சியமாகிறான்.
சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான்.
ஆஸ்திக்யம் அல்லது ஈசுவர நம்பிக்கையென்பது கடவுளைச் சார்ந்திருப்பது கடவுளுக்கென்றே உயிர் வாழ்தலாம்.
அந்தணன் அருளுக்கே உரியவன் ஆகிறான். பொருளை அவன் ஒருபொழுதும் தேடான்.
எளிய வாழ்க்கையே வடிவெடுத்தவன் அவன். உடலை அலங்கரிப்பது அந்தணன் செயலன்று.
எல்லா உயிர்களிடத்தும் அவன் அருளைச் சொரிந்து செந்தண்மை பூண்டொழுகுகிறான்.
ஸ்ரீராமகிருஷ்ணரது ஜீவிதம் அந்தணன் ஒருவனுடைய பாரமார்த்திக வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இத்தகைய வாழ்வுடையவனே பிராம்மணன். இங்ஙனம் பண்பாடு அடைந்துள்ள பிராம்மணன் தொகை
அதிகரிக்கின்றவளவு உலகத்துக்கு ÷க்ஷமம் உண்டாகிறது.
43. ஸௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்
தாநமீஸ்வரபாவஸ்ச க்ஷõத்ரம் கர்ம ஸ்வபாவஜம்
ஸௌர்யம்-சூரத் தன்மை,
தேஜ:-ஒளி,
த்ருதி:-உறுதி,
தாக்ஷ்யம் ச-திறமை,
யுத்தே அபி அபலாயநம்-போரில் புறங்காட்டாமை,
தாநம் ஈஸ்வரபாவ: ச-ஈகை, இறைமை (ஆளும் தன்மை),
ஸ்வபாவஜம் க்ஷத்ரம் கர்ம-இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.
சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை
இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.
அறம் அல்லது தர்மமே வடிவெடுத்திருப்பவன் க்ஷத்திரியன் ஆகிறான். சமூகத்தினுடைய இகலோக வாழ்க்கையை
ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமையாகும். க்ஷத்திரியன் என்பதன் பொருள் உடலில் காயம் பட்டவன் என்பதாகிறது.
நலத்தை நிலைநாட்டுதற்காக உடல் வாழ்க்கையை அவன் ஒப்படைத்திருக்கிறான்.
அப்பெரு முயற்சியின் விளைவாக உடல் அடிக்கடி புண்பட்டாலும் அல்லது சிதைக்கப்பட்டாலும் அதை அவன் பொருள்படுத்தான்.
பீஷ்மர் வதைக்கப்பட்டது போன்று க்ஷத்திரியன் ஒருவனுடைய தேகம் வதைக்கப்படுமானால்,
அதற்கிடையில் அவர் படைத்திருந்த உயர்ந்த மனப்பான்மையை அவன் கொண்டிருப்பானானால் அவ்வரசன் நன்கு வாழ்ந்தவன் ஆவான்.
இனி, எல்லாரும் அரசன் ஆகமுடியுமா என்ற கேள்வி எழலாம். நாடு ஆளும் முறையில் எல்லாரும் அரசர் ஆகவேண்டியதில்லை.
சமூகத்தில் மேலாம் பொறுப்பை நிறைவேற்றும் பாங்கில் பலபேர் அரசர் ஆகலாம்.
கேடும், கேடுடைய மனிதனும் ஒன்றே. நல்லான் ஒருவன் கேடுடைய மனிதனை யாண்டும் எதிர்க்கக் கடமைப் பட்டிருக்கிறான்.
பயிர்களுக்கிடையில் உள்ள களைகளைக் களையக் கிருஷிகன் கடமைப்பட்டிருப்பது போன்று சமூகத்தில்
அறம் பிறழ்பவர்களை அடக்கவும், ஒடுக்கவும், வெல்லவும், ஒழிக்கவும் அறவாளன் கடமைப்பட்டிருக்கிறான்.
எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்கவல்லவன் சூரத்தன்மை யுடையவனாகிறான்.
அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. எவ்வளவு ஏராளமாக உழைத்தாலும் களைப்பை
அறியாத மனநிலை திருதி அல்லது உறுதி எனப்படுகிறது. காலதேச வர்த்தமானம் அறிந்து எதிரியை வல்லமையோடு
தாக்கக் கூடிய நிலைக்குச் சாதுரியம் என்று பெயர். திடீரென்று எதிரி வந்து தாக்குவானாகிலும்
மனம் தளராது நொடிப் பொழுதில் தூக்கி வினைசெய்வது சாதுரியமாகிறது.
சில வேளைகளில் பின்னோக்கிச் சென்று எதிரியைப் பின்பு வளைத்து அடிப்பதும் சாதுரியமாம்.
ஆனால் பகைவனுக்குப் பயந்து போர்க்களத்தினின்று புறங்காட்டி யோடிப் பிழைக்க நினைப்பவன் க்ஷத்திரியனாகான்.
பகைவனுக்கு அடிமைப்படுவதைவிட வீரத்துடன் எதிர்த்து நின்று அடிபட்டுச் சாவது மேல்.
குடிகளை முறையாக ஓம்புதலே தானமென்று சொல்லப்படுகிறது. வள்ளலாக இருந்து அவர்களுக்கு அரசன்
யாண்டும் பொருளை வழங்கவேண்டும். மக்கள் நேர் கோடாவண்ணம் அவர்களை ஆளுதல் இறைமையாகிறது.
இதற்கு ஈச்வர பாவம் என்பது மூலம். தலைவனாயிருத்தல் என்றும் இச்சொல் பொருள்படும்.
இரண்டு அல்லது மூன்று பேர்களுடன் சேர்ந்து வாழும் பொழுதும் ஒன்றும் தலைவனாகத் திகழலாம்.
எப்பொழுதும் தலைவன் ஆவது தகைமையினாலேயாம். சுயநலம் கருதாது காரியத்தை நிர்வகிப்பவனும்
அதை வெற்றிகரமாகக்கொண்டு சாதிப்பவனும் தலைவன் ஆகிறான். தாய் ஒருத்தி வீட்டுக்குத் தலைவியாகிறாள்.
ஏனென்றால் அன்புடன் பணிவிடை செய்யும் திறமையும், காரியங்களை நன்கு நிர்வகிக்கும் திறமையும் அவளிடத்து உண்டு.
இறைமை வாய்க்கப்பெற்ற மக்கள் மேன்மக்கள் ஆகின்றனர். பகைவரிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் நாட்டு மக்களிடத்து
நடந்துகொள்ளுகிற முறையும் சேர்ந்து ஈண்டு விளக்கப்பட்டுள்ளன. அந்தணனுடைய அருளையும் வைசியனுடைய
பொருளையும் அரசன் இனிய முறையில் சேகரிக்கிறான். அவைகளுடன் தனது ஆண்மையை அவன் உவந்து கலக்கிறான்.
பின்பு, இவையாவும் அவன் உலக நன்மைக்கு எடுத்து வழங்குகிறான்.
பாரமார்த்திகத் துறையிலே விவேகானந்த சுவாமிகள் இச்செயலைச் செய்திருக்கிறார்; அவர் ஒரு ராஜரிஷி.
44. க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்
க்ருஷி கௌரக்ஷ்ய வாணிஜ்யம்-உழவு, பசுக்காத்தல், வணிகம்,
வைஸ்யகர்ம ஸ்வபாவஜம் – இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்,
பரிசர்யாத்மகம் கர்ம-மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல்,
ஸூத்ரஸ்ய அபி-சூத்திரனுக்கு, ஸ்வபாவஜம்-அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்.
தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
பயிர்த்தொழில் புரிவது, ஆடுமாடுகளை வளர்த்தல், வியாபாரம் பண்ணுதல், தொழிற்சாலைகளை நிறுவுதல்
ஆகிய இவையாவும் செல்வத்தை உண்டுபண்ணும் தொழில்களாம். சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தைப்
பெருக்குபவர்களெல்லாம் வைசியர்கள்.
இக்காலத்தில் புதியதாகத் தோன்றியுள்ள வக்கீல்களும் டாக்டர்களும் இடை அல்லது கடைத்தரமான வைசியர்கள்.
இவர்கள் சமூகத்துக்குச் செல்வத்தை உண்டுபண்ணுபவர்களல்லர்; செல்வத்தை ஏற்பவர்களாம்.
இகலோக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன தானியங்களை விருத்தி பண்ணுவதும், மூலப்பொருள்களைச் சேகரிப்பதும்,
அவைகளைப் பண்படுத்திப் பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பதும், வாணிகத்தின் மூலம்
பொருள்களை நாலா பக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசிய தர்மமாகும்.
கஞ்சா, அபினி, மதுபானம் போன்றவை மக்களுடைய நல்வாழ்வைக் கெடுக்கின்றன.
அத்தகைய பொருள்களை உண்டு பண்ணுவதும், அவைகளில் வர்த்தகம் பண்ணுவதும் வைசிய தர்மமாகாது.
பிறரிடத்து வேலைக்காரனாயிருந்து இட்டவேலையைச் செய்து சம்பளம் ஏற்று ஜீவிப்பவன் சூத்திரனாகிறான்.
இக்காலத்துக் குமாஸ்தாக்களெல்லாரும் சூத்திரர்களாம். நல்ல மனப்பான்மையுடன் ஆசிரிய வேலை செய்கிறவர்கள்
பிராம்மண கர்மம் செய்கிறார்கள். அரசாங்கத்தில் முறையாக ஆட்சி முறையைச் செலுத்துபவர்கள் க்ஷத்திரிய கர்மம் இயற்றுகிறார்கள்.
அவர்கள் சம்பளம் ஏற்பதில் குறையில்லை. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவென்று அத் தொழில்களை
நாடுவார்களானால் அவர்கள் சூத்திரர்களாகிறார்கள். கைக்கூலி அல்லது லஞ்சமேற்கிற எல்லாரும் சூத்திர்களேயாம்.
உடல் வாழ்க்கை ஒன்றில் மட்டும் கருத்து வைத்திருப்பவன் சூத்திரன். அதற்கு மேல் மேலான சிந்தையும் செயலும்
உடையவன் செய் தொழிலுக்கு ஏற்ப வைசியன், க்ஷத்திரியன் அல்லது பிராம்மணன் ஆகிறான்.
இந்த நான்கு வர்ணங்களும் மனபரிபாகத்தைப் பொறுத்தவைகள். உலகெங்கும் உள்ள ஜன சமூகங்களில் இவைகள்
இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதரர்க்கிடையில்
ஒவ்வொருவனும் ஒவ்வொரு வர்ணத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாம். ஒரு சமுதாயத்தில் உள்ள மக்களுள்
பெரும் பான்மையோர் ஏதேனும் ஒரு வர்ணத்தின் சுபாவத்தை உடைத்திருக்கலாம்.
பள்ளிக்கூடம் ஒன்றில் கீழ் வகுப்பும் மேல் வகுப்பும் இருப்பதுபோன்று சமுதாயத்தில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள்.
மேல் வகுப்பில் இருப்பவனுக்குக் கீழ் வகுப்பின் படாமும் தெரியும். அங்ஙனம் நான்கு வர்ணங்களின் கர்மங்களையும்
நன்கு செய்யத் தெரிந்தவன் அந்தணன். மூன்று வர்ணங்களின் கர்மங்களை நன்கு செய்யத் தெரிந்தவன் க்ஷத்திரியன்.
இங்ஙனம் வினையாற்றும் திறமை கீழே இறங்கி வருகிறது.
கர்மயோகத்துக்கு ஒப்பானது சூத்திரனுடைய தர்மம். ராஜயோகத்துக்கு ஒப்பாகிறது வைசியனுடைய தர்மம்.
ராஜயோகி தன் சொரூபத்தில் உள்ள சக்தியைச் சேகரிக்கிறான். வைசியன் புறவுலகில்
சக்திக்குச் சின்னமாயிருக்கும் பொருளைச் சேகரிக்கிறான். பக்தியோகத்தின் வடிவினன் ஆகிறான் க்ஷத்திரியன்.
சமூகத்தினிடத்து அன்பு கொண்டிருந்தால்தான் அதனிடத்து நல் வாழ்க்கையை அவன் வழங்க முடியும்.
சமூகத்துக்குப் பெருங்கேடு செய்பவன் கொடுங்கோல் வேந்தன். ஞானயோகத்துக்கு எடுத்துக்காட்டாவான் பிராம்மணன்.
சிருஷ்டி முழுதையும் பிரம்ம சொரூபமாக அவன் காண்கிறான். நான்கு யோகமும் ஒரு மனிதனிடத்து ஒழுங்காக அமைந்திருந்தால்
அவன் நிறைமனிதன் ஆகிறான். பின்பு நான்கு வர்ண தர்மங்களையும் ஒருங்கே ஆற்ற வல்லவனே நிறைமனிதன் ஆகிறான்.
நான்கு வர்ணங்களும் ஒரு சமூகத்தில் நன்கு அமைந்திருந்தால் அது தலை சிறந்த சமூகமாகும்.
நல்ல சமூகம் ஒன்றில் உள்ள பாடசாலைகளில் படிப்பைக் கட்டாயப்படுத்தி எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளுக்கும்
நான்கு வர்ணங்களுக்குரிய பயிற்சிகளைக் கொடுத்து அவரவர் பாங்குக்கு ஏற்ப மேலே வரத் தூண்டுதல் செய்தால்
இரண்டு மூன்று தலை முறைகளுக்குள் அந்தச் சமுதாயத்தைத் தலையாயதாக்கலாம்.
45. ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு
ஸ்வே ஸ்வே கர்மணி-தனக்குத் தானே உரிய கர்மத்தில்,
அபிரத: நர:-மகிழ்ச்சியுறும் மனிதன்,
ஸம்ஸித்திம் லபதே-ஈடேற்றம் பெறுகிறான்,
ஸ்வகர்மநிரத:-தனக்குரிய தொழிலில் இன்புறுவோன்,
யதா ஸித்திம் விந்ததி-எங்ஙனம் சித்தியடைகிறான் என்று,
தத் ஸ்ருணு-அதைக் கேள்.
தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரியதொழிலில்
இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.
பயிற்சியால் எந்தக் கர்மத்துக்குத் தகுதியுடையவனாக மனிதன் தன்னைச் செய்துகொள்கிறானோ அது
அவனுடைய ஸ்வகர்மமாகிறது. ஸ்வதர்மம் என்பதும் அதுவே.
ஸ்வகர்மத்தை மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் செய்பவன் நல்ல ஆத்ம சாதகன் ஆகிறான்.
அர்ஜுனனுக்குத் தன் ஸ்வதர்மத்தில் வெறுப்பு ஏற்பட்டது சீரிய மனப்பான்மையின் விளைவு அன்று.
தற்காலிகமாகத் தோன்றிய மனக் குழப்பமே அதற்குக் காரணமாயிற்று. பள்ளியில் படிக்கும் மாணாக்கன் ஒருவன்
தனது வகுப்பிலும் பாடத்திலும் மகிழ்வு கொள்ளுதல் வேண்டும். தன் கர்மத்தில் களிப்புறுபவனே முன்னேற்றமடைகிறான்.
படிப்புப் பூர்த்தி யாவதற்குப் பள்ளிப் பிள்ளை மேல் வகுப்புக்குப் போவது அவசியம். மற்று, ஆத்ம சாதகன் பரிபக்குவம்
அடைதற்கு ஸ்வகர்மத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை. தோட்டி வேலை செய்கிற ஒருவன் அவ்வேலையில் மகிழ்வுறுதல் வேண்டும்.
வேலையில் மேலானது என்பதும் கீழானது என்பதும் கிடையாது. மனத்தகத்து உள்ள மாசு ஆனது கர்மத்தில் மாசு படிந்திருப்பது
போன்று காட்சி கொடுக்கிறது. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மன நிலையுடன் அதைச் செய்தால்
மனபரிபாகமடையலாம். அதன் விவரம் வருமாறு:
46. யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:
யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ,
யேந இதம் ஸர்வம் ததம் – எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ,
தம்-அந்த பரமாத்மாவை,
ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்,
மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.
உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய
கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.
இப்பிரபஞ்சத்தை முறையாக இயக்குவது ஈசனுடைய செயல். இதில் பயன்படாத உயிர் என்பது ஒன்றுமில்லை.
ஒவ்வொரு ஜீவனும் அவனவன் தொழிலை முறையாகச் செய்தவன் மூலம் பிரகிருதியின் நடைமுறைக்கு நன்கு துணைபுரிகிறான்.
ஆகையால் அறிவுடைய மனிதன் தான் எக் கர்மத்தை நன்கு செய்ய முடியுமோ அதை ஈசுவர ஆராதனையாகச் செய்யவேண்டும்.
அதன் மூலம் அவன் மனபரிபாகம் அடைகிறான். ஞானத்தைப் பெறுதற்கும் ஈசுவரனை அடைதற்கும் அக்கர்மம் சாதனமாகிறது.
ஈசுவர ஆராதனை வேறு, அவரவர் தொழில் புரிவது வேறு என்று பலர் எண்ணியிருக்கின்றனர்.
கடவுள் வழிபாட்டின் தத்துவம் அறியாதவரே அத்தகைய எண்ணம் கொள்ளுவர்.
செய்கிற ஒவ்வொரு வேலையும் தேகத்துக்கு வலிவு கொடுக்கிறது என்பதை நாம் காண்கிறோம்.
தேகப்பயிற்சியையும் பொருள் சம்பாத்தியத்தையும் ஒரே தொழிலில் அடக்குவது சாத்தியம்.
இனி, அதே தொழிலை தேவாராதனையாகச் செய்யவும் முடியும். வியாதன் ஒருவன் கசாப்புக்கடை வைத்து ஜீவனம் பண்ணினான்.
அதே தொழில் அவனுக்கு சமுதாய சேவையும் ஆயிற்று; தேவாராதனையும் ஆயிற்று. அவன் பரமஞானியானான்.
அவன் ஒரு துறவிக்குச் செய்த உபதேசம் வியாதகீதை என்னும் பெயர் பெற்றுள்ளது.
வயிற்றுப் பிழைப்புக்கு என்பதை அடியோடு மறந்துவிட்டு ஈசுவர ஆராதனை யென்றே கருதி ஒருவன் தன் தொழில் புரியலாம்.
அத்தகைய உணர்ச்சியின் வாயிலாக அவனது தொழில் அதிவிரைவில் அவனை ஈசனிடம் அழைத்துச் செல்கிறது.
உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் வழிபாடாக வடிவெடுக்கிறது.
தென்னை நெற்று ஒன்றில் தேங்காய், ஓடு, மட்டை முதலியன இருக்கின்றன.
தேங்காயை உண்ண மட்டையை உரித்து ஓட்டை உடைக்கவேண்டும். ஸ்வகர்மத்தை தேவாராதனையாகச் செய்வது
மட்டையை உரித்து ஓட்டை உடைப்பதற்கு ஒப்பாகும். அதனால் தெய்வம் என்னும் தேங்காய் நமக்குரியதாகிறது.
47. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்
ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும்,
விகுண: ஸ்வதர்ம: ஸ்ரேயாந்-தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று,
ஸ்வபாவ நியதம் குர்வந்-இயற்கையி லேற்பட்ட தொழிலை,
கில்பிஷம் ந ஆப்நோதி-பாவமடைய மாட்டான்.
பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று.
இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.
சுபாவத்திலமைந்த கர்மமே ஸ்வதர்மம் அல்லது தனக்கு உகந்த தொழில் எனப்படுகிறது.
அர்ஜுனனுக்கு நன்றாகப் போர்புரிய முடியாவிட்டாலும் யுத்த நெருக்கடியில் அவன் போர் புரிவதே உசிதம்.
துஷ்டர்கள் சமூகத்துக்குக் கேடு செய்து கொண்டிருக்கையில் தான் வனத்துக்குச் சென்று நன்கு தவம் புரிவது அவனுக்கு ஒவ்வாது.
போக்கிரிகளை எதிர்த்துப்போராடி மாய்வது மேல்.
வைத்தியத்தில் பயிற்சிபெற்ற ஒருவன் தனக்கு வாக்குவன்மையிருக்கிறதென்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது.
விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தன் தொழிலை மாற்றலாகாது.
அதனால் காலமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றன. குறைந்த முயற்சியில் பரந்த காரியத்தைச் சாதிப்பவன் நல்ல யோகியாகிறான்.
உலக வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதும் ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவதும் யோகிக்குக் குறிக்கோள்.
எந்த நகையை வேண்டுமானாலும் பொன்னாக மாற்றலாம். பொன்னாக்கும் விஷயத்தில் பாதி வேலையை
ஒரு நகையிலும் மற்றப் பகுதியை இன்னொரு நகையிலும் செய்யலாகாது;
பொருள் நஷ்டம், அறிவின்மை ஆகிய இரண்டும் ஆங்குப் புலப்படும். எக்கர்மத்தை முறையாகச் செய்தாலும் அது கடவுள் வழிபாடாகிறது.
தனக்கு வாய்த்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரபுத்தியில்லாதவன் யோகியாக முடியாது.
அப்படியானால் பொல்லாங்கு நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை ஆயத்தப்படுத்தியவன் அதை வேண்டாமென்று
விலக்கிவிட்டுத் தூய்மை திகழும் தவச் செயலில் துணியலாகாதா என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது.
48. ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:
கௌந்தேய-குந்தி மகனே,
ஸஹஜம் கர்ம ஸதோஷம் அபி-இயல்பான தொழில் குறையுடையதாயினும்,
ந த்யஜேத்-கைவிடலாகாது,
தூமேந அக்நி: இவ-ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல,
ஸர்வாரம்பா-எல்லா தொழில்களிலும்,
தோஷேண ஆவ்ருதா:-சூழ்ந்தே நிற்கின்றன.
குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது.
எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.
விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நின்று ஆராய்பவனுக்கு இப்பேருண்மை விளங்கும்.
அதாவது கேடு இல்லாத கர்மம் இப்பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம்;
அதனால் காற்றிலுள்ள அணுப்போன்ற உயிர்கள் மடிகின்றன. உண்கிறோம்;
மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாது போகிறது; கருவி கரணங்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம்.
பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை.
அப்படியானால் நல்வினை தீவினை யென்று பிறகு ஏன் பாகுபடுத்துகிறோம் ?
தீவினையகற்றி நல்வினையை நன்கு இயற்றுக, என்று சான்றோர் சாற்றியிருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.
விறகுக்கட்டை எரிகிறது. எந்த விறகில் அதிகம் புகையிருக்கிறதோ அது கெட்ட விறகு.
எதில் புகை குறைந்திருக்கிறதோ அது நல்ல விறகு. ஒரு சந்தர்ப்பத்தில் அதிக நலத்தையும் குறைந்த கேட்டையும்
உண்டு பண்ணும் ஒரு வினையானது மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகையான கேட்டையும் குறைந்த நலத்தையும் விளைவிக்கலாம்.
காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு ஒருவினையில் அமைந்துள்ள நலமோ, கேடோ மாறுபாடு அடைகிறது.
வினைப்பயனை விரும்புவர் இவைகளையெல்லாம் தூக்கி வினைசெய்கிறார்கள். யோகியின் இயல்பு மிக உயர்ந்தது.
தனக்கு அமைந்த கடமையை அவன் தேவ ஆராதனையாகச் செய்கிறான். வழிப்போக்கன் ஒருவன் ஒரு சத்திரத்தில்
கிடைத்த விறகைக்கொண்டு சமைத்துப் புசித்துவிட்டுப் புறப்படுகிறான். நல்ல விறகு கிடைக்கவில்லையென்று
ஆங்கு அவன் காத்திருக்க மாட்டான். யோகி ஒருவன் எடுத்த உடல் எக் கர்மத்துக்குத் தகுதியானதோ அக்கர்மத்தை
தேவ ஆராதனையாகச் செய்து முடிக்கிறான். தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும்.
ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதோ அதைச் செய்வது முறை.
தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது :
49. அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதிகச்சதி
அஸக்தபுத்தி:-பற்றற்ற மதியுடன்,
விகதஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந-விருப்பம் தவிர்த்தவனாக,
ஜிதாத்மா-தன்னை வென்றவன்,
ஸர்வத்ர-எங்கும்,
பரமாம் நைஷ்கர்ம்ய ஸித்திம்-செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி),
அதிகச்சதி-அடைகிறான்.
யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப்
பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.
கர்மயோகி ஒருவன் ஓயாது வினையாற்றுகிறான். ஓய்வு ஒழிவை அவன் அறிந்தவன் அல்லன்.
அவனைப் பார்ப்பவர் கண்ணுக்கு அவன் இத்தகைய காட்சி கொடுக்கிறான்.
மற்று மனதினுள் அவனுடைய இயல்பு எத்தகையது என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தையாவது தேசத்தையாவது
தனக்குச் சொந்தமானதென்று அவன் அபிமானிப்பதில்லை. ஊரெல்லாம் அவனுக்குச் சொந்தமெனலாம்;
அல்லது ஓர் ஊரும் இல்லான் எனலாம். பொருள்கள் பல அவனால் கையாளப்படுகின்றன.
அவைகள் வந்ததும் போனதும் அவனுடைய மனதில் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணவில்லை.
பாலத்தில் ஒருபுறம் நீர் வருகிறது; மற்றொருபுறம் அது வடிகிறது; நீரில் பற்றற்றுப் பாலம் இருக்கிறது.
பொருளில் யோகியின் மனது அங்ஙனம் பற்றற்று இருக்கிறது. மக்களுள் எத்தனைபேர் தன்னைச் சார்ந்திருக்கின்றனர்,
உதாசீனராயிருப்பவர் யார், பகை கொள்பவர் யார் என்றெல்லாம் அவன் எண்ணுவதில்லை. பற்றற்ற புத்தியின் பாங்கு இதுவாம்.
கடலில் அலைகள் தோன்றுவது போன்று சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம்.
யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது. சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பவன் என்று அவனை இயம்பவேண்டும்.
போகத்துக்கு உரிய பொருள்களை ஏராளமாகச் சிறு குழந்தையின் முன்னிலையில் கொண்டுவரலாம்.
அவைகளைப் போகவஸ்து என்று குழந்தை பொருள்படுத்துவதில்லை. யோகியின் மனநிலையும் அப்படிப்பட்டது.
ஏனென்றால் அவன் ஆசையற்றவன். நிராசையின் நேர்மை அத்தகையது. அதுபோன்ற மன நிலையுடையவன் சந்யாசி யாகிறான்.
ஏனென்றால் கர்மாதீதத்திலுள்ள பிரம்மத்தில் அவன் நிலைபெற்றவனாகிறான்.
நைஷ்கர்ம சித்தி அல்லது வினையொழிந்த பெருநிலையென்பதும் பரப்பிரம்மம் என்பதும் ஒன்றேயாம்.
50. ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா
ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா-ஞானத்தினுடைய உயர்ந்த நிலை,
யா-எதுவோ, ஸித்திம் ப்ராப்த:-(அந்த) நிலையை அடைந்த மனிதன்,
யதா ப்ரஹ்ம ஆப்நோதி-எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ,
ததா-அந்த நிலையை,
ஸமாஸேந ஏவ-சுருக்கமாக,
மே நிபோத – என்னிடமிருந்து தெரிந்து கொள்,
கௌந்தேய-குந்தி மைந்தனே!
சித்தி யடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை
யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.
சித்தியடைதல் என்பது பக்குவப்படுதல் என்று பொருள்படுகிறது. பக்குவப்படுத்துதல் இயற்கையின் இடையறாத் தொழில் ஆகிறது.
சேதனம் அசேதனம் ஆகிய எல்லாப் பொருள்களும் ஓயாது பண்பட்டுக்கொண்டு வருகின்றன.
பூமியிலே ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அடுப்புக்கரியானது நாளடைவில் வைரமாக மாறுகிறது.
பளபளப்புடைய ஆபரணமாகி அது காதை அலங்கரித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு களிக்கிறோம்.
அத்தகைய பரிபாகம் அடைதற்கு அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.
சுவை நிறைந்த ஆப்பிள் கனியொன்றை உண்டு மகிழ்வடைகிறோம். அது அடைந்துள்ள சித்தியானது நமக்கு ஆனந்தத்தை ஊட்டுகிறது.
மகிழ்வடையும் நாம் சித்தியின் பொருட்டு ஆப்பிள் செடி எடுத்துக்கொண்ட முயற்சியை எண்ணிப்பார்ப்பதில்லை.
வெயிலும், மழையும், பனியும், நீரும், நிலமும், காற்றும் அதன் பண்பாட்டுக்குத் துணைபுரிந்திருக்கின்றன.
ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் சித்தியடைய முயன்று வருகிறது.
எல்லா உயிர்களின் முயற்சிகளுக்கிடையில் மனிதனது முயற்சி மிக மேலானது.
மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவத்தில் அமைகிறது. ஸ்தூல வடிவத்தோடு அழிந்தும் போகிறது.
மனிதனுடைய பரிபாகம் மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனைப்போன்று இன்னொரு மனிதன் இருப்பதில்லை.
எத்தனை மனிதரோ அத்தனைவித மனபரிபாகம் உண்டு எனலாம். பல ஜன்மாந்தரங்களில் அது வந்து அமைகிறது.
யோக சாதனங்கள் எல்லாம் மனதை ஒழுங்குபடுத்துதற்கென்றே அமைந்துள்ளன. திண்ணிய மனதையுடையவனே சித்தன்.
பிறகு அம்மனிதன் பரஞானத்தைப் பெறுதலும் பரத்தை அடைதலும் எளிதில் கைகூடுகின்றன.
ஆகையால் அதை விஸ்தரித்து விளக்க வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால் போதுமானது.
51. புத்த்யா விஸுத்த்யா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச
ஸப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச
விஸுத்த்யா புத்த்யா யுக்த:-தூய்மை பெற்ற புத்தியுடையோனாய்,
த்ருத்யா ஆத்மாநம் நியம்ய ச-உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி,
ஸப்தாதீந் விஷயாந் த்யக்த்வா-ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து,
ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச-விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு.
தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து,
விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,
சுத்தியடைந்துள்ள ஒரு பொருளில் அதற்கு அன்னியமானது ஒன்றும் இருக்கலாகாது. சுத்த ஜலம் என்று சொல்லுமிடத்து
அது ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து உண்டானது. வேறு எப்பொருளுக்கும் அதில் கலந்திருக்க இடமில்லை.
பரிசுத்தமான புத்தி எது என்பது கேள்வி. தூய கண்ணாடி போன்றது அது. நீலக்கண்ணாடியில் மஞ்சள் வஸ்துவைப் பார்த்தால்
அது பச்சை நிறமுடையது போன்று தென்படும். நிறமில்லாத தூய கண்ணாடியில் பார்த்தால் மஞ்சள் மஞ்சளாகவே தோன்றும்.
புத்தியின்கண் உள்ள கலக்கம் அதை அழுக்குப்படுத்துகிறது. கோணலான புத்தியில் காணப்படு பொருளும் குற்றமுடையதாகத் தென்படும்.
சுத்தியடைந்த புத்தியானது ஐயமும் திரிவும் நீங்கப் பெற்றுள்ளது. இறைவனைப்பற்றிய நினைவு அதனிடத்து இடையறாது நிலைத்திருக்கும்.
உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளுபவன் மேலோன் ஆகிறான்.
மிகைப்பட்ட பொருள்களை ஆத்ம சாதகன் தனக்கென்று வைத்துக் கொள்வதில்லை.
உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள், உடை முதலியவைகளைத் தவிர வேறு ஆடம்பரமான
பொருள்களை அவனிடத்துக் காண முடியாது. அப்பொருள்களிடத்தும் அவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக இருக்கிறான்.
அடக்கமும் எளிய வாழ்வும் வடிவெடுத்தவன் ஆகிறான் அவன். மேலும் :
52. விவிக்தஸேவீ லக்வாஸீ யதவாக்காயமாநஸ:
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித:
விவிக்தஸேவீ-தனி இடங்களை நாடுவோனாய்,
லக்வாஸீ-எளிய உணவு உண்பவனாக,
யதவாக்காயமாநஸ:-வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி,
நித்யம் த்யாநயோகபர:-தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து,
வைராக்யம் ஸமுபாஸ்ரித:-பற்றின்மையை நன்கு பற்றியவனாய்.
தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று,
தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,
விஷயப் பற்றுடன் கூடிய லௌகிக புத்தியுடைய ஒருவன் பலபேருடன் சேர்ந்திருந்து காலங்கழிக்க விரும்புகிறான்.
பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போன்று அவன் ஆகிறான்.
யோகிக்கோ தனித்திருக்குமளவு பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு
மனதைப் பரிசீலனை பண்ண இயலுகிறது. உணவு உடலைப் பேணுவதுபோன்று ஏகாந்தம் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது.
சாதனத்தில் முதிர்ந்தவன் தனித்திருக்கும்போது ஆத்ம போதத்தில் திளைத்திருக்கிறான்.
மிகைபட்ட உணவு உடலுக்குச் சுமையாகிறது; சோம்பலையும் உண்டுபண்ணுகிறது.
குறைபட்ட உணவு பலவீனத்தில் கொண்டுசேர்க்கும். அளவுடன் உண்பவன் யோகியாகிறான்.
மனதில் தெளிவும் உடலில் ஊக்கமும் அதனால் உண்டாகின்றன. யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே
அவனுடைய உள்ளத்தில் உண்டாகின்றன. மனது அடங்கியிருப்பதற்கு அது அறிகுறியாகும்.
அவன் மிகைபடப் பேசான். பயன் படாத புன்மொழிகள் அவன் வாயினின்று வரமாட்டா.
மொழியை அடக்கியதன் பயன் அதுவாம். நல்ல சாதகனது உடல் யாண்டும் அசைவற்றிருக்கும்.
அனாவசியமாக அது இயங்காது. ஆத்ம சொரூபத்தில் மனது மகிழ்ந்து குவிந்திருப்பது தியானமாகிறது.
உலக வியவகாரம் பண்ணுவது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ
அவ்வளவு இயல்பானது அவனுக்குத் தியானம் பண்ணுவது.
வைராக்கியம் என்பது பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில்
பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம்.
53. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்-அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல்,
விமுச்ய-விடுத்து,
நிர்மம: ஸாந்த:-மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்,
ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மமாகத் தகுவான்.
அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி
சாந்த நிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.
மனிதன் வேறு, அவன் அணிந்திருக்கும் உடை வேறு. உடையைத் தன் சொரூபமாக எண்ணி
இன்பமும் துன்பமும் அடைவார் உண்டு. அது ஒருவிதமான அகங்காரம். ஜன்மாந்தரங்களில் தனக்கு வந்தமையும்
எண்ணிறந்த தேகங்களைத் தான் என்று அபிமானித்தல் பிறவிக்கு ஏதுவான அகங்காரமாகும்.
ஆத்ம போதத்தில் வளரும் வன்மை அல்லது பலம் வேண்டப்படுகிறது. அத்தகைய சீரிய பலமில்லாதவன் ஆத்மாவை அடையமாட்டான்.
பின்பு ஆசைக்கு ஒருவிதமான பலம் உண்டு. அதை ஆசையின் வேகம் என்று சொல்லுகிறோம்.
ஆசையின் வேகம் கெட வேண்டும். காமங்களை நிறைவேற்றுதற்கு வருவிக்கப்படும் பலம் வேண்டப்படுவதன்று.
தனக்கு உடல் வலிவு மிகவும் அமைந்திருக்கிறதென்று மகிழ்ந்து ஒருவன் அதர்மத்தில் ஈடுபடுவதுண்டு.
அத்தகைய இயல்பு செருக்கு என்னும் பெயர் பெறுகிறது. குற்றங்கள் பல செய்வதற்குச் சிலர்க்கு உடல் வலிவே முதற்காரணமாகிறது.
இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்குக் காமம் என்று பெயர்.
காமத்துக்கு இடைஞ்சல் பண்ணுகிறவனிடத்து சினம் வருகிறது. குரோதம் என்பது இதுவே.
உடல் வாழ்க்கைக்குப் பொருள் தேவை. ஆனால் நான் பொருள் படைத்தவன் என்ற எண்ணம் உதவாது.
ஆத்ம சாதனத்துக்கும் தர்மானுஷ்டானத்துக்கும் அது இடைஞ்சலாகிறது.
பொருள் படைத்தவன் என்ற உணர்வு பரிக்கிரஹமெனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில்
அகப்படுவதுமாகிய பொருளை யோகி ஒருவன் உடைத்திருக்க வேண்டும்.
பின்பு, அதைத் தன்னுடையதென்று அவன் கருதலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரமெனப்படுகிறது.
இந்தக் கோட்பாடுகளெல்லாம் யாரிடத்து அமைந்திருக்கின்றனவோ அம்மனிதன் சாந்தியடைகிறான்.
அவனுக்கு மனத்தெளிவு இயல்பாக உண்டாகிறது. அதனால் அவன் பிரம்மத்தையடையத் தகுந்தவனாகிறான். அது எப்படியெனில் :
54. ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்
ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும்
சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
ஞானம் பெரியதா, பக்தி பெரியதா என்னும் கேள்வி பலர் உள்ளத்தில் எழுகிறது. சிலர் ஞானம் பெரியது என்பர்;
இன்னும் சிலர் பக்தி பெரியது என்பர். அப்படி யெல்லாம் பகர்வது அவரவர் மனப்பான்மையை விளக்குகிறது.
முதிர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் ஒன்றே. குழந்தை ஒன்றுக்குத் தாயினிடத்து அன்பு பெருக்கெடுத்திருக்கிறது.
தாயும் தன் குழந்தையினிடத்து ஆழ்ந்து அன்பு காட்டுகிறாள். பக்தியின் தோற்றத்தை இருவரிடத்திலும் காண்கிறோம்.
இதில் ஞானம் எங்கே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். குழந்தை தாய்க்குரியது;
தாயே அக்குழந்தையாக வடிவெடுத்திருக்கிறாள் என்ற ஞானம் அதில் மறைமுகமாயிருக்கிறது.
ஒரு பணக்காரனிடம் எத்தனையோ யாசகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களை யார் என்று கவனியாது
அம்மனிதன் தானம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் தோன்றிய வயிராகிகள் கூட்டத்தில் இருந்த
பதினைந்து வயது இளைஞன் அப்பணக்காரனுடைய மனதைச் சிறிது கவர்ந்தான்.
அவ் இளைஞனது இடக் கன்னத்தில் இருந்த தழும்பும் முகச்சாயலும் ஆராய்ச்சிக்கு உரியவைகளாயின.
பிரக்ஞைகெட்டு ஆற்றங்கரையில் கிடந்த குழந்தையைத் தாங்கள் எடுத்து வளர்த்ததாக வயிராகிகள் சொன்னார்கள்.
பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு படகு விபத்து ஒன்றில் தான் இழந்துவிட்ட குழந்தை இப்பொழுது அகப்பட்டான் !
விசாரித்து உண்மையைத் தெரிந்தவுடன் தந்தையின் மனதில் அன்பு சுரந்தது. ஞானத்தினின்று அன்பு தோன்றுவதற்கு இது சான்று ஆகும்.
ஆக ஞானமுள்ள இடத்தில் பக்தியிருப்பதும், பக்தியுள்ள இடத்தில் ஞானம் இருப்பதும் இயல்பு.
பிரம்ம ஞானத்தில் உறுதி பெறுகின்றவனுக்கு ஈசுவர பக்தி மேலிடுகிறது. தன்னையும் மன்னுயிர்கள் எல்லாவற்றையும்
ஒரே பாங்குடன் அவன் காண்கிறான். ஏனென்றால் எல்லா உயிர்களும் ஈசுவரனுடைய பல்வேறு தோற்றங்கள் என்பது
அவனுக்கு நன்கு விளங்குகிறது. தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென்று அவன் துயரப்படுவதுமில்லை;
தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதுமில்லை.
ஏழாம் அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தில் பகர்ந்த மேலாம் பக்தி ஈண்டுக் குறிப்பிடப்படுகிறது.
55. பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்
மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு.
டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில்,
அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும்.
அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.
பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது.
ஞானத்தோடுகூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது.
உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான்.
இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.
ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும்.
ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம்.
வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து
தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை.
நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும்.
இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால்
இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி
கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே.
ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.
56. ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்
மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன்,
ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும்,
ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை,
அவாப்நோதி-எய்துகிறான்.
எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.
முடிந்த நிலையில் எப்படி ஞானமும் பக்தியும் ஒன்றோ அதை விதத்தில் முடிந்த நிலையில் ஞானமும் கர்மமும் ஒன்றாகின்றன.
சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தைத் தியாகம் பண்ணுவதில்லை; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்ற
எண்ணத்தைத் தியாகம் செய்கிறான். தான் கர்த்தா என்ற எண்ணம் போய்விடும்பொழுது அத்துடன் ஜீவபோதமும் போயொழிகிறது.
தன்னைக் கர்த்தாவென்று எண்ணிக்கொள்ளாது ஏராளமாகக் கர்மம் செய்பவனுக்கு ஆயாசம் வருவதில்லை.
தன்னைக் கர்த்தா வென்று எண்ணிக்கொள்பவனுக்கோ விரைவில் ஆயாசம் வருகிறது.
அவன் சிறிது வினையாற்றினாலும் அது ஏராளமானதாகத் தோன்றும். மனநிலையே அதற்குக் காரணம்.
ஈசுவரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈசுவரனை நினைக்கிறான். தன்னை நினைப்பதில்லை.
ஈசுவர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான்.
கடலைச் சென்று அடையும் வரையில் நதிக்குச் சொந்த வியக்தியிருக்கிறது; சொந்தச் செயலும் இருக்கிறது.
கடலினுள் நுழைந்த பிறகு நதி என்று பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்து கொள்ளலாம்;
நதியினுடையதன்று. ஈசுவரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனது பாங்கு அத்தகையது. சரீரம் என்ற வடிவம் இருக்கிறது எனினும்
அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் பரபோதமாம். அச்சரீரத்தில் நிகழ்கின்ற கிருத்தியங்கள் எல்லாம் ஈசன் செயலேயாம்.
அங்ஙனம் வித விதமான செயல்கள் நிகழலாம். போர் புரிவது போன்ற பயங்கரமான செயல் நடைபெறலாம்.
அக்கர்மங்களைச் சொந்தம் பாராட்டுதற்கு ஜீவபோதம் மிச்சமில்லை. நிலைத்த நித்தியமான பரபோதம் ஜீவனால் அடையப்பெற்றதாகிறது.
கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின்
முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள் கொள்ளவேண்டாம்.
ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.
ஆகையால் நீ வாழவேண்டிய விதமாவது :
57. சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ
ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம்,
சேதஸா-அறிவினால்,
மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு,
புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று,
மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு,
ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
ஒரு மனிதனை ஓர் அரசாங்க உத்தியோகத்தில் வைத்தால் அந்த அரசாங்கத்துக்குரிய ஆதிக்கம்
அவனிடத்துச் சிறிது வருகிறது. தன் கடமையை முறையாகச் செய்துகொண்டுபோனால் இன்னும் அதிகமான
பொறுப்பும் ஆதிக்கமும் அவனுக்கு வரும். அந்த உத்தியோகஸ்தன் சமூகத்தில் ஆணை செலுத்துதற்கிடையில்
அப்பதவியில் தனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லையென்றும் எல்லாம் அரசாங்கத்தினுடைய தென்றும் அறிவானாகில்
அவன் தனது பதவியைப்பற்றிய புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். அதைத் தனது என்று சொந்தம் பாராட்டுவானாகில்
அவன் விவேகத்தைப் பெற்றவன் ஆகான். அதே முறையில் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் வியக்தியைப்பற்றிய உண்மையை
ஜீவன் அறிவானானால் அவன் புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். தான் என்பதற்கு இலக்காகத் தன்னிடத்து இருப்பது
யாது என்று அவன் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தனது என்பதற்கு இலக்காக இருப்பது எது என்று அடுத்தபடியாக
விசாரித்துப் பார்க்க வேண்டும். கர்மத்தையும் அதே விதத்தில் துருவிப் பார்ப்பது அவசியம்.
தான் என்பதும், தனது என்பதும், தன் செயல் என்பதும் உண்மையில் இல்லை.
புத்தியோகத்தைச் சார்ந்திருப்பவன் இங்கு பகவான் இடுகின்ற ஆணைகளை யெல்லாம் அப்படியே நிறைவேற்றி வைப்பான்.
காயத்தால் அவன் கர்மங்களை விட்டொழிக்க மாட்டான். விவேகத்தின் துணைகொண்டு கர்மத்தில் வைத்த பற்றுதலையே ஒழித்து விடுவான்.
சர்வேசுவரனுடைய கிருத்தியமே யாண்டும் நிகழ்கிறது.
எந்த ஜீவன் அதற்குக் கருவியாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் செயல் நின்றுவிடாது.
ஈசுவரன் செயலை ஈசுவரனுக்காகச் செய்வது சந்நியாசமாகிறது. பரம்பொருளில் ஒடுங்குவதைத் தவிர
ஜீவாத்மாவுக்கு வேறு ஒரு அலுவலும் கிடையாது. அதற்காகத் தனது முழு மனதையும் பரம்பொருளிடத்து நாட்டி வைத்தல் வேண்டும்.
பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள்,
குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா?
இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் நமக்கு உண்மையாகத் தோன்றும்.
ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும்.
ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால்
மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம்
பகவான் என்பதை அவ் அன்பினின்று நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.
புத்தியோகத்தால் விளையும் நலன் எது வெனின்:
58. மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி
அத சேத்த்வமஹங்காராந்ந ஸ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி
மத் சித்த:-என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய்,
ஸர்வதுர்காணி-எல்லாத் தடைகளையும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
தரிஷ்யஸி-கடந்து செல்வாய்,
அத அஹங்காராத் த்வம் ந ஸ்ரோஷ்யஸி சேத்-அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்,
விநங்க்ஷ்யஸி-அழிந்து போவாய்.
என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய்.
அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.
உலக வைபவத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம்; மற்றது அகவுலகம். விக்கினங்களும்
இடைஞ்சல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகமாகிய மனதிலும் உண்டு. வெளியுலகைத் திருத்தியமைக்கின்றோம்.
நோய் வரக் கூடிய இடத்தை நோயற்ற இடமாக்கலாம். நீர் இல்லாத இடத்துக்கு நீர் கொண்டு வரலாம்.
வெப்பம் நிறைந்த இடத்தில் வெப்பத்தைக் குறைக்கலாம். இப்படியெல்லாம் செய்வது புறவுலகில் உள்ள விக்கினங்களை அகற்றுவதாகும்.
நவீன பௌதிக சாஸ்திரத்தின் துணைகொண்டு அச்செயல் ஏராளமாகச் செய்யப்படுகிறது.
ஆனால் அதனாலேயே உலகுக்கு இன்பம் வந்தமையாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட முக்கியமானது
அகவுலகமாகிய மனதைத் திருத்தியமைப்பது மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு
நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு கெட்டதாயிருந்தாலும் மனதைத்
திருத்தி யமைத்துக் கொண்டவனுக்கு அது கேடு செய்யாது.
இடைஞ்சல்களும் விக்கினங்களும் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மன நிலையில்தான் இருக்கின்றன.
மனதை ஈசன் பால் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடைஞ்சல்களும் ஈசன் செயலாகவே தோன்றும்.
அதற்குச் சிறந்த சான்று அப்பரது வாழ்க்கையில் நிகழ்கிறது. வந்த விக்கினங்களைக் குறித்து அவர் பகர்ந்ததாவது :
நாமார்க்குங் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலையில்லோம்;
ஏமாப்போம், பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பமில்லை;
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்
சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
ஆனால் துன்பங்கள் எல்லாம் அஹங்காரத்தினின்றே வருகின்றன.
என்னதான் முயன்றாலும் ஈசுவரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது.
நீ ஈசுவரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்து விடும் என்று நம்பாதே.
உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். நான் கர்த்தா என்ற எண்ணம்
உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈசுவரனைக் காணமாட்டாய். நானே கர்த்தா வென்று
எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈசுவரன் ஒரு போதும் தோன்றுவதில்லை.
அஹங்காரத்தில் விளையும் கேடு யாது? விடை வருகிறது :
59. யதஹங்காரமாஸ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி
யத் அஹங்காரம் ஆஸ்ரித்ய-எந்த அகங்காரத்தின் வசப்பட்டு,
ந யோத்ஸ்யே இதி மந்யஸே-நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ,
தே ஏஷ: வ்யவஸாய: மித்யா-இந்தத் தீர்மானம் பொய்யானது,
ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி-(ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்.
நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம்.
இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.
கைக்குழந்தை ஒன்றின் முன்னிலையில் கொலையும், களவும், சூதும் நிகழ்கின்றன. கொலை புரிவதைப் பார்த்துக்
குழந்தை சிரித்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதனிடத்து இன்னும் அஹங்காரம் தோற்றத்துக்கு வரவில்லை.
பெரியவனாக வளர்ந்த பின் வியாபகத்துக்கு வரக்கூடிய அவனுடைய சுபாவமும் இப்பொழுது குழந்தைப் பருவத்தில்
தோன்றா நிலையில் இருக்கிறது. கொலையையும், களவையும், சூதையும் குழந்தை ஏன் எதிர்த்துப் போராடவில்லை
என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது. அஹங்காரம் அடையப்பெறாத குழந்தையின் காட்சியில் அக்கொடிய செயல்கள் இல்லை.
ஆனால் கொடுமையை உலகில் காண்பவர்களின் கடமை வேறு. குழந்தை போன்று தாங்கள் ஆயிருப்பதாக
அவர்கள் பாசாங்கு செய்யலாகாது. அர்ஜுனனுக்கு பகவான் பகர்வதாவது :
இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்திரிய சுபாவத்துக்கு ஒத்தது.
தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவன் நீ. தீமை தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு நீ சும்மாவிருக்க முடியுமா?
தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக்கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது.
அங்ஙனம் உன் சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாகத் தீர்மானிப்பது உன் ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும்.
எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்குக் கேடு வேறு ஒன்றுமில்லை.
தீமையைப் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது.
ஆயினும் காயத்தால் செயல் புரிய மாட்டேன் என்று உன் இயல்பைக் கரக்கின்றாய்.
ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அகங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணாகத் தீர்மானிக்காதே.
அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா. மேலும் :
60. ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோऽபி தத்
கௌந்தேய-குந்தியின் மகனே!
யத் மோஹாத் கர்தும் ந இச்சஸி-எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்,
தத் அபி ஸ்வேந ஸ்வபாவஜேந கர்மணா-அதையும் நீ, உன்னுடைய இயல்பான கர்ம வினையால்,
நிபத்த:-கட்டப் பட்டு,
அவஸ: கரிஷ்யஸி-தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.
இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்,
தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.
ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது இயல்பு அல்லது சுபாவம் உள்ளுற உறைந்து கிடக்கிறது.
அதன் வேகம் எத்தகையது என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு கொடிய நோயைப் போக்குதற்கு
ஒருவன் மருந்து உண்ண வேண்டியது அவசியமாயிற்று. மருத்துவனும் அதற்கேற்ற மருத்தைக் கொடுத்தான்.
பிறகு அதற்குப் பத்தியம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது.
நோயாளி மருந்து உண்ணும்போது குரங்கைப்பற்றி நினைக்கலாகாது என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதுதான் பத்தியம் !
அது மிக எளியது என்று நோயாளி எண்ணிக்கொண்டு பத்தியத்துக்கு உட்பட இசைந்தான்.
காலையில் மருந்து ஜாடியைக் கையில் எடுத்த பொழுதெல்லாம் குரங்கைப்பற்றிய எண்ணம் முன் வந்து நின்றது.
பத்திய நிபந்தனையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை! எணணத்துக்கு எவ்வளவு வலிவோ அதைவிட
அதிகம் வலிவுண்டு இயல்பில் பிறந்த வினைக்கு.
மற்றொரு சான்றும் இங்குத் தேவையாகிறது. பிறரைத் தாக்கித் துன்புறுத்தும் ஒருவன் தானே அடியுண்ண விரும்புவதில்லை.
அத்தகையவன் பிறரால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டான். கனவில் அவனுடைய நிலைமை அனுதாபத்துக்கு உரியதாயிருக்கிறது.
உண்மையில் பிறர் யாரும் வந்து அவனைப் புடைக்கவில்லை. அவனது சுபாவத்தினின்று உதித்த சித்த விருத்தி
அச்செயலை வரவழைத்துக்கொண்டது. கனவில் அடிபடுவதினின்று தப்பித்துக்கொள்ள அவனுக்குச் சுதந்தரம் இல்லை.
தன் இயல்பில் பிறந்த வினையின் வன்மை அத்தகையது. சுவர்க்கத்துக்குச் சென்றாலும் நரகத்துக்குச் சென்றாலும்
மனிதன் தன் இயல்பைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறான். தன் நிழல் எப்படித் தன்னைவிட்டுப் பிரிவதில்லையோ,
தன் சுபாவமும் அப்படியே தன்னைவிட்டுப் பிரிவதில்லை. அதிலிருந்து உதிக்கும் கர்மத்தை அவன் செய்தே ஆகவேண்டும்.
மற்று அதன் வேகத்தை முறையாகக் கையாளுதலே அதை ஒடுக்குதற்கு உற்ற உபாயமாகும்.
வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும்
அது நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகுபிடிவாதமுள்ள அக்ஞானம்.
எவ்வளவுதான் சிரமப்பட்டபோதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.
வினையின் வேகத்தை முறையாகக் கையாளுதல் என்பதன் பொருள் யாது? விடை வருகிறது:
61. ஈஸ்வர: ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந திஷ்டதி
ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா
அர்ஜுந-அர்ஜுனா,
யந்த்ராரூடாநி ஸர்வபூதாநி-உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்,
ஈஸ்வர:-ஈசுவரன்,
மாயயா ப்ராமயந்-மாயையினால் சுழற்றிக் கொண்டு,
ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸே-எல்லா உயிர்களின் உள்ளத்தில்,
திஷ்டதி-நிற்கிறான்.
அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா
உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் போர்க்களத்துக்கு வந்த கோலமே இக்கோட்பாட்டை விளக்குகிறது.
ரதத்தின் மீது அர்ஜுனன் ஏறியிருந்தான். அந்த ரதம் உடலுக்குச் சமானம்; அவன் ஜீவாத்மாவாகிறான். ரதமும் இயங்கியது.
பார்த்தனும் போர் புரிந்தான். இயங்கியதைப் பற்றிய உணர்ச்சி ரதத்துக்கு இல்லை.
சண்டை செய்ததைப் பற்றிய உணர்ச்சி அர்ஜுனனுக்கு இருந்தது. நிகழ்ந்தது தன் செயல் என்று எண்ணியிருந்த
அப்போர்வீரன் அது உண்மையில் ஈசன் செயல் என்று அறிந்து கொள்ளக் கடமைப்பட்டிருந்தான்.
கிருஷ்ணன் தேர் ஓட்டினான்; ஆனால் ஆயுதம் எடுத்துப் போர்புரியவில்லை.
அங்ஙனம் எல்லாருடைய ஹிருதய கமலத்திலும் அவன் சாக்ஷியாக வீற்றிருக்கிறான்.
அர்ஜுனன் என்பது வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்படுகிறது.
தூய மனமுள்ளவன் உண்மையைத் தெரிந்துகொள்ள வல்லவனாகிறான். ஹிருதயத்தில் வீற்றிருக்கின்ற
சர்வேசுவரனின் சன்னிதான விசேஷத்தால் மாயை இயங்குகிறது. இயங்குகின்ற மாயை அதன்
வசப்பட்டிருக்கிறவர்களையெல்லாம் இயக்குகிறது. சக்கரங்களில் கட்டுண்ட பொம்மைகள் போன்று அவர்கள் அசைகிறார்கள்.
அசைவைத் தங்கள் சொந்தக் கர்மமென்று அவிவேகிகள் எண்ணிக் கொண்டு அதைச் செய்வேன் என்றும்,
இதைச் செய்ய மாட்டேனென்றும் இச்சா சுதந்தரம் பாராட்டுகிறார்கள். அதனால் மாயையில் அவர்கள் அதிகம் கட்டுண்கின்றனர்.
ஈசா, நீ ஆட்டுவிக்கும் விதத்தில் நான் ஆடுகிறேன் என்ற மன நிலை வேண்டும். விதவிதமான ஜீவர்களைக் கருவிகளாகக்
கொண்டு ஈசன் தன் செயலைச் செய்து கொள்கிறான் என்ற எண்ணத்துடன் கர்மம் செய்தலே அதை முறையாகக் கையாளுவதாகும்.
பாம்புக்குப் பல்லில் விஷமிருந்தபோதிலும் அவ்விஷத்தால் அது தீமையை அடைவதில்லை.
ஆனால் அது பிறரைக் கடித்தால் அவ்விஷம் கடியுண்டவனுக்கு மரணத்தைத் தரும். இதைப்போல
ஈசுவரனிடத்திலும் மாயை உள்ளது. ஆனால் அது அவரைப் பந்தப்படுத்தாது.
ஜகத் முழுதையும் அவர் தனக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.
கடவுள் ஆட்டுவிக்கிறார் என்ற கருத்தில் வரும் பயன் இனி விளக்கப்படுகிறது :
62. தமேவ ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்
பாரத-பாரதா,
ஸர்வபாவேந-எல்லா வடிவங்களிலும்,
தம் ஏவ ஸரணம் கச்ச-அவனையே சரணெய்து!
தத்ப்ரஸாதாத்-அவனருளால்,
பராம் ஸாந்திம் ஸாஸ்வதம் ஸ்தாநம்-பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை,
ப்ராப்ஸ்யஸி-அடைவாய்.
அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய
நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.
எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடைதல் ஜீவாத்மாவினது செயற்கரிய செயலாகும்.
உடலைத் தன்னுடையது என்று கருதுதல், தன் செயலுக்குத் தான் கர்த்தாவென்று நினைத்தல்,
உலக நடைமுறையில் தனக்குத் தனியந்தஸ்து ஒன்று உண்டு என்று எண்ணுதல் இவையாவும் ஜீவபோதத்தை வளர்க்கின்றன.
அது தஞ்சமாகாது. கடலில் அலை இருப்பதுபோன்று ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருக்கின்றன.
அலைக்குச் சொந்தமான நீர் கிடையாது. ஜீவனுக்குச் சொந்தமான சரீரம் கிடையாது.
அலைக்கிருக்கின்ற வடிவம் வேளைக்கு ஒன்று. தேகத்துக்கு இருக்கிற வடிவமும் அத்தகையது.
அலையின் செயலோ உண்மையில் கடலின் செயல். கடலுக்கு அன்னியமாக அலை இருக்கமுடியாது.
ஜீவனுடைய செயல்களெல்லாம் உண்மையில் ஈசனுடைய செயல்கள். ஈசனுக்கு அன்னியமாக ஜீவர்கள் இல்லை.
இப்பேருணர்ச்சியில் நிலைபெற்றிருப்பது தஞ்சமாகும்.
பாண்டவர், விதுரர், திரௌபதி, குசேலர் முதலாயினோர் கிருஷ்ணனைத் தஞ்சமடைந்திருந்தனர்.
உடன் பிறந்த சகோதரர்கள் தசரத ராமனைத் தஞ்சமடைந்திருந்தனர்.
குகன், சுக்ரீவன், விபீஷணன் முதலாயினோர் அவனைத் தஞ்சமடைந்தனர்.
அங்ஙனம் அடைக்கலம் புகுந்தவர்க்கு மன அமைதி உடனே உண்டாயிற்று.
கைகேயி, வாலி, ராவணன் முதலியவர்கள் அடைக்கலம் புகவில்லை; அவர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர்.
ஈசனுடைய அருள் என்னும் காற்று சதா வீசிக்கொண்டிருக்கிறது. தங்களை முற்றும் ஈசனிடம் ஒப்படைத்தவர்கள்
அக்காற்றைப் பயன்படுத்தும் மாலுமிகளுக்குச் சமமானவர்கள்.
காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குக் கஷ்டமில்லை.
அருளைப் பயன்படுத்தும் அன்பனுக்கு அல்லல் இல்லை. அவன் கர்மம் செய்வதற்கிடையில் கர்ம பந்தம் கலைகிறது.
சாந்தியும் முக்தியும் அவனுக்கு வாய்க்கின்றன.
ஸ்ரீ ராதை தன் கற்பு நிலையை நிரூபிப்பதற்கு ஆயிரம் துவாரங்கள் உள்ள ஒரு பாத்திரத்தில் ஜலங்கொண்டு
வரும்படி கட்டளையிடப்பட்டாள். ஒரு துளி ஜலங்கூடக் கீழே விழாமல் அவள் கொண்டுவந்தவுடன்,
அங்கிருந்தவர்கள் எல்லாரும் இவளைப் போல் கற்புடைய ஸ்திரீ ஒருத்தி இதுவரையில் இருந்ததுமில்லை,
இனி இருக்கப்போவது மில்லை என்று வெகுவாகச் சிலாகித்தனர். அப்போது ராதை ஏன் என்னை சிலாகிக்கிறீர்கள்?
கீர்த்தியெல்லாம் கிருஷ்ணனுடையதே என்று சொல்லுங்கள். நான் கேவலம் அவனுடைய பணிப்பெண் என்றாள்.
63. இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா
விம்ருஸ்யைததஸேஷேண யதேச்சஸி ததா குரு
இதி குஹ்யாத் குஹ்யதரம் ஜ்ஞாநம்-இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை,
மயா தே ஆக்யாதம்-என்னால் உனக்கு கூறப்பட்டது,
ஏதத் அஸேஷேண விம்ருஸ்ய-இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து,
யதா இச்சஸி ததா குரு-எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன்.
இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
விளங்காத ஒன்றை இரகசியம் என்றும் மறைபொருள் என்றும் பகர்கிறோம். இயற்கையின் உட்பொருள் முழுதும்
நமக்கு விளங்குகிறதில்லை. அது ரகசியமாய் மறைந்து கிடக்கிறது. இயற்கையைப்பற்றி இக்காலத்தில் நாம்
அறிந்துள்ள பல மர்மங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்தன. உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்வோம்.
மின் சக்தியை உண்டு பண்ணும் முறை இப்பொழுது நமக்குத் தெரிந்திருக்கிறது. இயற்கையில் இதுகாறும் மறைந்து
கிடந்த விசையானது இப்பொழுது வெளிப்படையாயிற்று. அந்த விசையின் தன்மை எத்தகையதென்றும்,
அதை எப்படி உண்டுபண்ணுவது என்றும், அதை எங்ஙனம் உபயோகப்படுத்தலாம் என்றும் புகட்டுவது சாஸ்திரம்.
விளங்காததை விளக்குவது சாஸ்திரம். இயற்கையைப் பற்றி அப்படி எண்ணிறந்த சாஸ்திரங்கள் இருக்கின்றன.
மானுட வாழ்க்கையைப் பற்றிய சாஸ்திரம் இருக்கிறது. அது பிரம்ம வித்தையென்றும்
யோக சாஸ்திரம் என்றும் பெயர் பெற்று உள்ளது. அனுஷ்டான முறையில் சாஸ்திரம் நமக்கு அளிக்கப்படும்பொழுது
அது உடன்பாட்டு முறையென்றும் எதிர்மறை முறையென்றும் இரண்டுவித வடிவெடுக்கிறது.
இன்னதைச் செய் என்று ஆக்ஞாபிக்கும்பொழுது அது உடன்பாட்டு முறை.
இன்னதைச் செய்யாதே என்று ஆக்ஞாபிக்கும் பொழுது அது எதிர்மறை முறை.
ஏன் ஒரு விதத்தில் ஒழுகவேண்டும், ஏன் மற்றொரு விதத்தில் ஒழுகலாகாது என்பதற்குத் தக்க காரணங்களையும்
அது எடுத்துப் போதிக்கிறது. யுக்தி பூர்வமாகக் புகட்டுவது சாஸ்திரம். குருட்டு நம்பிக்கையை சாஸ்திரம் ஆமோதிப்பதில்லை.
குருட்டு நம்பிக்கையை விரைவில் கலைத்துவிடலாம். ஆனால் யுக்திக்கும் அனுபவத்துக்கும்
ஒத்திருக்கும் கோட்பாட்டை யாரும் அசைக்க முடியாது.
மிக ஆழ்ந்தவைகளான வாழ்க்கைத் தத்துவங்களைக் கருணை கூர்ந்து கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு எடுத்து வழங்கினார்.
அவர் புகட்டியவைகளை வேண்டியவாறு ஆராய்ச்சி செய்வதற்கான இச்சா சுதந்தரத்தையும் அவனுக்கு அவர் அன்புடன் அளித்தார்.
உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல.
உண்மை தனக்குத் தானே சான்று ஆகிறது. உண்மையை நன்றாக அலசி ஆராய்ந்து நீ விரும்பியதைச் செய் என்கிறார் பகவான்.
உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந்தரம் முற்றிலும் அவசியமானது.
அடிமைத் தனத்தில் அடக்கி வைக்கப்பட்ட உயிர் ஓங்கி வளராது. புகட்ட வேண்டிய யாவையும் சொல்லியான பிறகு,
அவைகளுள் விரும்பியதைச் செய் என்று கிருஷ்ணன் அனுமதி கொடுக்கிறார்.
சான்றோர் புகட்டும் செந்நெறியின் சிறப்பு இதுவேயாம்.
மனிதனுடைய முயற்சிகளெல்லாம் எதில் முற்றுப் பெறுகின்றன என்ற முடிவான உண்மையை இனி
மூன்று சுலோகங்களில் பகவான் பகர்கின்றார்.
64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்
ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய,
மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை,
பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள்,
மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன்,
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.
மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள்.
நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.
நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும்.
இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது.
சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான்.
அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது-
பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம்.
வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது.
ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.
புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது.
எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன்.
உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்
அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத்
தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய
தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன்
கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டு பண்ணும் கானமோ
மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது.
பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான்.
இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.
உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல,
பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.
பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :
65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே
மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.
உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.
சத்தியம் சொல்லுகிறேன் என்று சத்தியப் பொருளாகிய பகவான் பகர்கிறார்.
சூரியனிடத்திருந்து கிளம்பி வருவதெல்லாம் அக்கினி சொரூபம். வெப்பத்தைத் தவிர வேறு ஒன்றும் ஆங்கில்லை.
பரமாத்மா உடல் தாங்கி வந்து உரைப்பது சத்தியமே. அதைப் பின்பற்றுகின்ற சான்றோரது ஜீவிதம்
அதை சத்தியமென்றே நிரூபிக்கிறது. நீ எனக்குப் பிரியமானவன் என்பது மகாவாக்கியம்.
ஜீவர்கள் எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குதற்கான பரிபாகம்
வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம் பகரப்படுகிறது. துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம்
ஆகிய மூன்று நிலைகளும் பிரியத்தைப் படிப்படியாய் உறுதிப்படுத்திக்கொண்டு போகின்றன.
அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும் தாழ்? நானே நீ, நீயே நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை.
இது வெறும் பேச்சில் நிரூபிக்கப்படுவதன்று ; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாம்.
வண்டியில் ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்லுவது நெறி. ஊரை அடைவது குறி.
கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே. அவனைத் துணையாகக்கொண்டு அவனை அடைகிறோம்.
அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளால் அவனை அடைகிறோம்.
அவன் யாண்டும் துணைபுரிந்தும், அவன் துணையை ஏற்க நம்மில் பலர் மறுக்கிறோம்.
இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நிற்பது நமது பண்படாத மனது.
அந்த மனது பல ஜன்மாந்தரங்களில் வேறு பல காரியங்களுக்கு உதவிவந்தது.
விழலுக்கு நீர் இறைத்தவாறு அது அநித்தியப் பொருள்களை நாடிநின்றது.
ஆனால் அது கடவுளை அடைதற்கே கருவியாக அமைவது அவசியமாகிறது.
உள்ளம் அவனுக்கே இடமாக வைக்கப்படவேண்டும். மனிதன் செய்யவேண்டிய செயல் அதுவேயாம்.
அவன் மீது பக்தி பண்ணுமளவு மனது மிக உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான்.
பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன் ஊறியிருப்பதால்
செயல்கள் அனைத்தின் வாயிலாக இறைவனுக்கு அவன் இடையறா நமஸ்காரம் செய்கிறான்.
கடலை அணுகிய நதியானது கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அங்ஙனம் இத்தகைய பான்மையைப்
பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம் செய்கிறார்.
உறுதிமொழி கூறுகிறார்.
ஒன்பதாவது அத்தியாயம் முப்பத்தொன்றாவது சுலோகத்தில் பக்தன் அழிந்துபட்டுப் போவதில்லை என்பதைப்
பிரகடனம் பண்ணும்படி அர்ஜுனனைத் தூண்டினார். இறுதியில் அப் பேருரையைப் பகர பகவான் தாமே முன் வந்துள்ளார்.
தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுவதற்கு மிகவும் தவிப்பதைப் போல, ஈசுவரனைக் காண்பதற்கு
முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.
பகவான் கூறும் அந்த உறுதிமொழிதான் யாது? விடை வருகிறது :
66. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.
எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.
ஜீவன் செய்கிற செயல்களிலெல்லாம் கடைசியான செயல் ஈசனிடத்து அடைக்கலம் புகுதலாம்.
அடைக்கலம் புகுதல் என்பதன் பொருள், தன் முயற்சி போதவில்லை அல்லது பலிதமாக வில்லை;
ஆகையால் தெய்வத்தினிடம் தஞ்சமடைந்து அவர் துணையையும் கொஞ்சம் தேடிக்கொள்ளலாம் என்பதல்ல.
சிற்றோடை பெரிய நதியில் கலந்து பிறகு சமுத்திரத்தில் சங்கமமாவது போன்றது சரணாகதி.
ஜீவனுடைய இச்சா சுதந்தரமெல்லாம் ஈசுவர சங்கற்பத்தில் சேர்ந்துவிடுகிறது.
தனக்கெனத் தனிச் செயல் ஒன்றுமில்லை. ஈசன் செயல் கடலின் செயல் போன்றது. ஜீவன் செயல் அலையின் செயல் போன்றது.
அலையானது கடலுக்கு அன்னியமானதல்ல. ஜீவன் செயலெல்லாம் உண்மையில் ஈசுவரன் செயல்.
கர்மயோகம் ஜீவனை முடிந்த இந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.
பக்தன் எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக்கிறான். தனக்கு வரும் நன்மை கேடுகளெல்லாம் கடவுளது ஆணை.
ஆகையால் ஒரு செயலை நன்கு என்றும் மற்றொரு செயலைக் கேடு என்றும் பக்தன் பொருள் படுத்துவதில்லை.
தர்மம் அதர்மம் ஆகிய இரண்டும் ஈசன் செயல் என்ற புனித நிலையை அடைவனவாகின்றன.
அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!
பக்தர்கள் எல்லாரும் அடைக்கலம் என்னும் பெருநிலையை அடைந்திருக்கிறார்கள். இறைவனது பேரன்பில் அவர்கள்
தங்களை மறந்துவிட்டார்கள். ஞாபகக் குறைவில் ஒருவன் நடுவீதியில் நடப்பானாகில் அவன் ஓடும் வண்டிகளால்
ஆபத்துக்கு உள்ளாவான். பக்தனோ அன்பில் தன்னை மறந்தவன் என்றாலும் ஒரு சிறு செயலிலும் சொப்பனத்திலும்
அவன் பிழைபோவதில்லை. ஒழுங்குப்பாடே வடிவெடுத்ததாக அவனது வாழ்க்கை நடை பெறுகிறது.
தாயின் மார்பில் அணைக்கப்பெற்ற சேய்போன்று அவன் சரணாகதியில் இன்பம் துய்க்கிறான்.
இனி ஞானியின் ஞானோதயமும் சரணாகதி எனப்படுகிறது. கண்ணாடியில் நல்லது கெட்டது ஆகிய இரண்டின் பிம்பங்கள் தோன்றலாம்.
எனினும் கண்ணாடியின் சொரூபம் மாறுவதில்லை. தர்மம் அதர்மம் என்று சொல்லப்படும் கர்மங்களெல்லாம் பிரகிருதியினுடையவைகள்.
அந்தராத்மாவாயிருக்கும் சித் சொரூபம் என்னும் பரவெளியை அவைகள் பாதிக்கமாட்டா.
சுத்த சைதன்யமாகிய தன்னில் தானாயிருப்பவன் உபாதிகளையெல்லாம் தியஜித்து பரவெளியில் ஒன்றாய்விடுகிறான்.
பேரறிவு அல்லது பேருணர்வு ஒன்றே பாக்கியிருக்கிறது. உள்ளும் புறமும் என்கிற பாகுபாடுகள் அப்பரவெளிக்கில்லை.
ஞானியடையும் சரணாகதி இதுவே.
யோகி, பக்தன், ஞானி ஆகிய மூவரும் அடையும் சரணாகதி ஒன்றேயாம். அது மூன்று விதமாக விளக்கப்படுகிறது.
சத் சொரூபத்தில் யோகி லயமாகிறான்; சித் சொரூபத்தில் ஞானி லயமாகிறான்; ஆனந்த சொரூபத்தில் பக்தன் லயமாகிறான்.
சிறு குழந்தையொன்று தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறது. அதனிடத்து மற்றவர்கள் காட்டும் அன்பை
அங்கீகரிக்கும் பரிசு அதற்கு வந்திருக்கிறது. ஆனால் அதனுடைய மனது இன்னும் விகாரப்படவில்லை.
எந்த நாட்டுக்கு உரிய குழந்தை எந்த மொழி பேசும் குழந்தை, எத்தகைய பழக்க வழக்கங்களையுடையது
ஆகிய பேதங்களையும் பாகுபாடுகளையும் அது இன்னும் அறியவில்லை. பூர்வ ஜன்மத்திலிருந்து அது கொண்டு
வந்திருக்கும் இயல்புகளும் இன்னும் அவ்யக்தமாக மறைந்து கிடக்கின்றன. அதாவது அதன் மனத்தகத்து இருக்கும்
மனோதர்மங்களெல்லாம் இன்னும் வடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் குழந்தையானது ஞானிக்கு ஒப்பானது.
அதன்பால் உள்ள அபேத நிலை உயிரனைத்தையும் தனக்குரிய தாக்குகிறது. குழந்தையின் தூய அன்புக்கு வசப்படாத உயிர் இல்லை.
தான் அடைந்துள்ள மன பரிபாகத்தால் ஞானி குழந்தை போன்று ஆகிறான். அந்தக்கரண மடங்கத் துறப்பதுவே
எந்தத் துறவினும் நன்று என்பது கோட்பாடு. ஞானியாவதற்கு முன்பு விதவிதமான இயல்புகள் மனதைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
அவரவர் ஸ்வதர்மம் என்பது அதுவே. ஸ்வதர்மத்தைக் கையாளுதலே ஸ்வதர்மத்தை விட்டொழிப்பதற்கு உற்ற உபாயம்.
நோய் வந்தால் அது தன் வேலையைச் செய்ய இடங் கொடுப்பதே அதை ஒழிப்பதற்கு உபாயமாகிறது.
நோயை அடக்கினால் வேறு ஒரு நோயாக அது வடிவெடுக்கும். வந்துள்ள நோய் உடலில் வேலை செய்தால்
அந்நோய் ஓய்ந்து அறவே அகன்றுபோம். நாம் எடுத்துக்கொண்ட ஸ்வதர்மம் அத்தகையது.
ஸ்வ தர்மத்தைக் கையாண்டு அதன் வேகத்தை ஒழித்து விடுவது நம் குறிக்கோள். மழைபெய்து மேகம் ஒழிந்து போனால்
எஞ்சியிருப்பது வெட்டவெளி. பற்றற்று தர்மம் செய்து தர்மத்தை ஒழித்துவிட்டால் எஞ்சியிருப்பது சுத்த சைதன்யமாகிய ஆத்ம சொரூபம்.
தனக்கு அன்னியமானதெல்லாம் தன்னை வந்து சாரும் பொழுது அது அழுக்கு அல்லது பாபம் ஆகிறது.
ஜீவபோதம் பெற்றிருப்பது பாபம்; அது தனது நிஜ சொரூபமல்ல. கடலுக்குள் வந்த நதியின் நதித்தன்மையை
நீக்கி விட்டுக் கடலின் தன்மையைப் பெறும்படி அது செய்துவைக்கிறது. பரமாத்மாவை சரணடைந்த ஜீவனிடத்திருந்து
ஜீவ போதம் என்ற பாபத்தை அகற்றிவிட்டு பரபோதத்தை அது வழங்குகிறது. ஜீவபோதத்திலிருந்து விடுதலை யடைவதே மோக்ஷமாம்.
பரமாத்மா அமிர்த சொரூபம்; அதனுள் அழிவு என்பதில்லை. அது பரமானந்தம்.
ஆக, அதனுள் துன்பமில்லை. அது பரஞானச்சுடர் ; ஆக, அதனுள் அக்ஞான இருள் இல்லை.
சத்தியம், ஞானம், ஆனந்தம் பிரம்மம். அந்தக்கரணம் அகன்றபின் ஜீவன் பிரம்மமே.
கோழைத்தனத்தை அகற்று ; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய் என்ற கருத்துடன்
கீதா ஆசாரியன் கீதையைத் துவக்கினான். உன் கடமைகளை யெல்லாம் நீத்து விட்டு எனது அகண்ட
சத் சித் ஆனந்த சொரூபத்தில் திளைத்திருப்பாயாக என்று கீதாசாரியன் முடிவு கூறினான்.
இடையில் பகர்ந்துள்ள யாவும் கர்மத்தைக் கடப்பதற்கு உற்ற உபாயங்களாம். அவனைச் சரணடைந்து,
அவன் அருளை நாடி நிற்பவர்க்கு அவனருளால் அவனுடைய போதனையும் நன்கு விளங்கும்.
பிறகு ஜீவபோதத்தைக் கலைத்துவிட்டு அவனுடைய அகண்ட ஸத் சித் ஆனந்த சொரூபத்தில் இரண்டறக் கலத்தலும் எளிதாகின்றது.
பரிபூரண சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன், அன்றைய வேலையை முடித்த பிறகு
தலையணையின் மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய் ஆனந்த நிலையைப் போன்றது அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.
இத்துடன் கீதா உபதேசம் முற்றுப் பெறுகிறது. இந்தக் கீதா சாஸ்திரத்தைப் படித்தும் அனுஷ்டித்தும்
பயன் அடைய வல்ல அதிகாரி யார் என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :
67. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்யஸூயதி
தே இதம் கதாசந-உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும்,
அதபஸ்காய-தவமிலாதோனுக்கும்,
அபக்தாய ச-பக்தியில்லாதோனுக்கும்,
அஸுஸ்ரூஷவே-கேட்க விரும்பாதோனுக்கும்,
ய: மாம் அப்யஸூயதி-என்பால் பொறாமையுடையோனுக்கும்,
ந வாச்யம்-சொல்லாதே.
இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால்
பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.
வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் அடங்கப் பெற்றது பகவத்கீதை. அதை முறையாக எல்லார்க்கும் எடுத்து
வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தியமையும்.
ஆனால் இதை யாருக்குப் புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான் பண்ணுகிறார்.
கண்ணில்லாதவர்க்குச் சித்திரம் பயன்படாதது போன்று தவம் அல்லது நெறியான வாழ்க்கை யில்லாதவர்களுக்குக்
கீதோபதேசம் பெரும் பயன் அளிக்காது. வெறும் தவம் மட்டும் போதாது. அது பக்தியோடு கூடியதாயிருக்க வேண்டும்.
பக்தியே தவத்தைத் தூயதாக்குகிறது. பிறகு பக்தியின் அறிகுறியாக சேவை வந்தமைகிறது.
ஈசனிடத்தும் உயிர்களிடத்தும் விருப்பமிருக்குமளவே தொண்டுபுரிய ஒருவன் துணிகிறான்.
தோன்றாத் துணையாயுள்ள ஈசுவர பக்தி பண்ணுகிறவர்களுள் தோற்றத்தில் வந்துள்ள கிருஷ்ணனைச் சாமான்ய மனிதன்
என்று இகழ்பவர் உண்டு. பலவிதச் செருக்கும் தேகாத்ம புத்தியும் உடையவர்கள் அக்காலத்தில் இருந்தது போன்று
எக்காலத்திலும் இருக்கிறார்கள். அப்படி அகங்கரிக்கிறவர்கள் கீதையின் உட்கருத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
அத்தகையவர்களுக்கு அதைப் புகட்டுவது பயன்படாது. அசுச்ரூஷவே என்பது கேட்க விருப்பமில்லாதவனுக்கு என்றும் பொருள்படுகிறது.
தன்னைப்பற்றிய பெரிதாக நினைத்துக்கொண்டோ அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டோ இதை
ஊக்கத்தோடு கேட்க மனமில்லாதவனுக்கு இதை உபதேசிக்கலாகாது.
மழைத் தண்ணீர் மேட்டுநிலத்தில் தங்கிநிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்துவிடுகிறது.
அது போல ஈசுவர கிருபையானது தற்பெருமையும், கர்வமுமுள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கிநிற்பதில்லை.
பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் அது தங்கிநிற்கும்.
ஈசுவர கைங்கரியமாக கீதா பிரசாரம் செய்பவன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது:
68. ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:
ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி,
இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை),
மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ,
மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான்,
அஸம்ஸய:-ஐயமில்லை.
இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி
என்னையே எய்துவான். ஐயமில்லை.
மனிதன் பிறர்க்கு எதை எடுத்து மனமுவந்து வழங்குகிறானோ அது அவனுக்குச் சொந்தமாகிறது.
தனக்கென்று எதைப் பிடித்து வைக்கிறானோ அது சொந்தமாவதில்லை. உடலுக்கு இன்றியமையாத ஒன்றை
முதல் சான்றாக எடுத்துக்கொள்வோம். உணவு இல்லாது யாரும் உயிர்வாழ முடியாது.
உணவைத் தனக்கென்று தேடிவைத்துக் கொள்ளுதல் உயிர்களிடத்து அமைந்துள்ள இயல்பு.
ஒருவன் பிறர்க்கு உணவு வழங்கிப் பிறகு தான் உண்கிறான். மற்றொருவன் பிறரைப்பற்றி ஒன்றும் நினையாது
தனக்கென்றே தேடிவைத்து உண்கிறான். இவ் இருவருள் பிறரைப்பற்றி நினைப்பவன் அடைகிற உடல் நலனை மற்றவன் அடையமாட்டான்.
இதை ஒவ்வொருவனும் தன் சொந்த அனுபவத்தில் காணலாம்.
அடுத்தபடியாக அறிவுக்கு உரியது கல்வி. கற்பவர்களுள் நன்கு கற்பவன் யார் என்ற கேள்வி எழுகிறது.
தனக்கு என்று கற்பவனைவிடப் பிறர்க்குப் பயன்படுமாறு புகட்டுதற்குக் கற்பவன் நன்கு கற்கிறான்.
பிறர்க்குப் புகட்டும்பொழுதெல்லாம் தனது அறிவு தெளிவடைகிறது. பிறர்க்கு ஒரு விஷயத்தை விளங்கச் செய்யுமளவு
தனக்கே அது நன்கு விளங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்குமளவு நீர் ஊறுவதுபோன்று கல்வியைப் புகட்டுமளவு ஒருவனிடத்துக் கல்வி வளர்கிறது.
பகவத் விஷயங்களைப் பக்தர்களிடத்து பக்தி விசுவாசத்தோடு எடுத்தோதுவதே பகவத் சேவையாகிறது.
தன்னை ஓர் ஆசாரியன் என்று அத்தகையவன் அகங்கரிப்பதில்லை. அகங்காரம் கொள்கிறவனுக்கு பக்தி பெருகுவதில்லை.
பகவத் மகிமையானது நல்லார்க்கிடையில் பேசப்பெறுகிறது என்று இன்புறுபவனுக்கு அன்பும் அறிவும் வளர்கின்றன.
அத்தகைய பேச்சாளன் பணிவுடன் செய்யும் பகவத் கைங்கரியமாக அது கருதப்படுகிறது. கடவுளை அடைதலே அதில் விளையும் பயனாகும்.
பகவான், பாகவதம் (சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.
சாஸ்திரங்களின் உட்கருத்தை நல்லாரிடம் பரப்புபவனைக் கடவுள் எப்படிப் பொள்படுத்துகிறார்? விடை வருகிறது:
69. ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரியக்ருத்தம:
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி
தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம-அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன்,
மநுஷ்யேஷு கஸ்சித் ச ந-மானிடருள்ளே வேறில்லை,
புவி தஸ்மாத் மே-உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு,
ப்ரியதர: அந்ய:-எனக்கு உகந்தவன் வேறு எவனும்,
ந பவிதா-ஆக மாட்டான்.
மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை.
உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.
எல்லாச் செயல்களும் இறைவனுடைய செயல்களே. இயற்கை விளக்குவதெல்லாம் இறைவனுடைய மகிமையையேயாம்.
அவ்விளக்கங்கள் அனைத்திலும் பகவத் கீதையின் விளக்கம் தனிப்பெருமை பெற்றுள்ளது.
இயற்கையின் சிறப்பை அது விளக்குகிறது. வாழ்க்கைத் தத்துவத்தை அது விவரித்துச் சொல்லுகிறது.
அனைத்துக்கம் மூலப்பொருள் எது என்பதை அது இயம்புகிறது. பரவித்தை அபரவித்தை ஆகிய இரண்டும் கீதையில் அடங்கியிருக்கின்றன.
அதாவது கடவுளை அடைதற்கான வழியும் இவ்வுலக வாழ்க்கையை நன்கு நடாத்துதற்கான வழியும் கீதையினால் புகட்டப்படுகின்றன.
அதன் போதனையைக் கேட்டு அதன்படி நடப்பவன் விரைவில் நல்லான் ஆவது திண்ணம்.
ஆகவே தக்கார்க்கிடையிலே கீதா தத்துவத்தைப் புகட்டுதற்கொப்பான செயல் வேறு எதுவுமில்லை.
அப்படிப் புகட்டுபவனைப் போன்று கடவுளுக்குச் சொந்தமானவனும் வேறு யாருமில்லை.
கடவுளின் மகிமை அவன் மூலம் நன்கு வெளியாவதே அதற்குக் காரணமாகிறது.
வீட்டுக் கூரையின் மேலிருந்து விழும் மழை ஜலம் புலித்தலை போன்ற குழாயின் மூலமாகக் கீழே தரையில் விழும்போது,
பார்வைக்குப் புலித்தலையினின்றும் விழுவதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது ஆகாயத்திலிருந்து விழுகிறது.
அதுபோல, தெய்விகம் வாய்ந்த மனிதர்கள் கூறும் உபதேச மொழிகள் பார்வைக்குக் கேவலம்
மனிதர்களிடமிருந்து வருவனவாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் ஈசுவர ஸன்னிதியினின்றே வருகின்றன.
பிறர்க்கு எடுத்துப் புகட்ட இயலாதவர்க்கும் கீதையின்பால் ஒரு கடமையுண்டு. அது யாதெனின் விடை வருகிறது :
70. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:
இமம் ஆவயோ: தர்ம்யம் ஸம்வாதம்-நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை,
ய: அத்யேஷ்யதே-எவன் கற்றறிகிறானோ,
தேந ச அஹம்-அவனாலும் நான்,
ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம்-ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன்,
இதி மே மதி:-இஃதென் கொள்கை.
நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால்
நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.
கேள்வியால் கீதையை அறிந்துகொள்வது போன்று சொந்த ஆராய்ச்சியாலும் கீதையை அறிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.
கீதையை ஓதி அறிவது பகவத் விஷயத்தை அறிவதாகிறது. பகவத் விஷயத்தை நன்கு அறிந்தவனே பகவானை வழுத்த வல்லவனாகிறான்.
உண்மையை அறிந்து அதற்கேற்ற பிரகாரம் வாழுதல் சிறந்த பிரசாரமாகிறது.
வாழ்க்கையைப்பற்றிய மேலாம் தத்துவத்தை உபதேசிப்பவன் ஒருவன் இருக்கிறான்.
அக்கோட்பாட்டின்படி வாழ்பவன் மற்றொருவன் இருக்கிறான். இவ்விருவருள் நல்வாழ்வு வாழ்பவனே நல்ல பிரசாரம் செய்கிறான்.
நல்ல பேச்சைவிடச் சிறந்தது நல்ல பழக்கம். பேசுபவர் ஏராளமாயிருக்கின்றனர்; நல்வாழ்வு வாழ்பவர் மிகச் சிலரே.
கீதையை ஓதும் அவர்களது நல்வாழ்வு மற்றவர்களை நல்வழியில் தூண்டுகிறது.
ஆக, அது ஞான யக்ஞ ஆராதனை என்னும் பெயர் பெறுகிறது.
தனக்குத் தானே கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு இயலவில்லை.
அப்பொழுது அவன் என் செய்வது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :
71. ஸ்ரத்தாவாநநஸூயஸ்ச ஸ்ருணுயாதபி யோ நர:
ஸோऽபி முக்த: ஸுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்
ய: நர:-எந்த மனிதன், ஸ்ரத்தாவாந்-நம்பிக்கை உடையவனாக,
அநஸூய: ச-பொறாமை போக்கியவனாக,
ஸ்ருணுயாத் அபி-கேட்பது மட்டுமே செய்வானெனினும்,
ஸ: அபி முக்த:-அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு,
புண்யகர்மணாம் ஸுபாந் லோகாந்-புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை,
ப்ராப்நுயாத்-எய்துவான்.
நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான்,
அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.
உணவை அலட்சியப்படுத்துபவன் தனது உடல் வாழ்வை அலட்சியப்படுத்துகிறான். உணவுப் பொருளின் தத்தவத்தை
அறிந்து ஒருவன் உணவு உண்கிறான். மற்றொருவன் அதன் தத்துவம் தெரியாது விருப்புடன் அதைப் புசிக்கிறான்.
அறிந்தவன் அறியாதவன் ஆகிய இருவரும் உணவினின்று பெறும் நன்மை ஒன்றேயாம்.
அதே விதத்தில் கீதா சாஸ்திரத்தைச் சிரத்தையோடு கேட்டுத் தெரிந்துகொள்பவன் எல்லா நன்மைகளையும் அடைகிறான்.
பிறர்க்கு எடுத்துப் புகட்டுவதால் அது ஒருவன் மனிதன் நன்கு பதிகிறது.
பக்தி விசுவாசத்துடன் கேட்பதால் இன்னொருவன் மனதில் அது பதிகிறது.
இருவரும் கீதா தத்துவத்தை அறிந்துகொண்டவர் ஆகின்றனர். மனதுக்கு ஊட்டும் நல்லெண்ணங்களுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர்.
பகவத் விஷயங்களைக் கேட்பது சம்ஸ்காரங்களுள் சிறந்த சம்ஸ்காரமாகிறது.
பக்தி சிரத்தையுடன் கேட்பவன் கீழ்மையினின்று விடுதலையடைந்து முன்னேற்றமடைவது உறுதி.
மாணாக்கனுக்கு எல்லாம் பிடிபட்டு விட்டதாவென்று ஓர்வது ஆசிரியரின் இயல்பு.
அக்கோட்பாட்டுக்கு இணங்க பகவான் இப்பொழுது கேட்பதாவது:
72. கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய
பார்த-பார்த்தா,
ஏதத் த்வயா ஏகாக்ரேண சேதஸா-உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு,
கச்சித் ஸ்ருதம்-கேட்கப் பட்டதா?
தநஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ:-தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம்,
கச்சித் ப்ரநஷ்ட:-அழிந்து விட்டதா?
பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?
ஞானோபதேசம் புகட்டுபவர் புகட்டப் பெறுபவனிடத்து எதை எதிர்பார்க்கிறார் என்பது ஈண்டு விளங்குகிறது.
ஒருமை மனது உண்மையைத் தெரிந்துகொள்ளுதற்கு முற்றிலும் அவசியமானது. எவ்வளவு தான் புகட்டினாலும்
சிதறடைந்த மனது போதனையின் உட்பொருளைத் தெரிந்துகொள்ளாது. கொஞ்சம் எடுத்துப் புகட்டினாலும் குவிந்த
மனது புகட்டப்பெறும் கோட்பாட்டை உள்ளபடி வாங்கிக்கொள்கிறது.
புகட்டப்பெறுபவன் அத்தகைய நலன் அடையவேண்டும் என்பதே புகட்டுபவரது எண்ணம்.
குவிந்த மனது ஞானத்துக்கு உரியதாகிறது. சூரியகிரணங்கள் குவிந்து வருமளவு அவை பேரொளி பெறுகின்றன.
ஒளிப்பிழம்பு மற்றப் பொருள்களையும் விளக்க வல்லது; தன்னையும் அது சர்வகாலமும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
அங்ஙனம் குவிந்த மனது ÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரக்ஞனாகிய பொருள்களை உள்ளபடி தெரிந்துகொள்கிறது.
ஞான வெளிச்சமும் அக்ஞான இருளும் ஒன்று சேர்ந்து இருக்கமாட்டா. ஞானவெளிச்சத்தில் பொருள் உள்ளபடி தென்படுகிறது.
அக்ஞான இருளில் அதே பொருள் வெவ்வேறு வடிவெடுத்துத் தென்படுகிறது. இருளில் தென்பட்ட ஒரு வடிவத்தைத்
திருடன் போலீஸ்காரன் என்று நினைத்தான். அதே வடிவத்தைப் போலீஸ்காரன் திருடன் என்று எண்ணினான்.
அச்சம் கொண்ட ஒருவன் அவ்வடிவத்தைப் பிசாசு என்று பொருள்படுத்தினான்.
வெளிச்சத்தில் அதை ஏற்கனவே பார்த்திருந்த ஒரு விவேகி அத்தகைய மயக்கம் ஒன்றும் கொள்ளவில்லை.
அதை ஒரு மரக்கட்டை என்று உள்ளபடி ஓர்ந்தான். ஞானோதயம் பிறந்திருக்குமிடத்து அக்ஞான ஸம்மோஹம்
தானே அகன்றுபோகிறது. அத்தகைய தெளிந்த நிலை அர்ஜுனனுக்கு வந்துவிட்டதாவென்று பகவான் வினவுகிறார்.
நல்லாசிரியரை அடையும் தலைமாணாக்கன் அடையப்பெறும் தகைமையானது அர்ஜுனனுடைய விடையிலிருந்து வெளியாகிறது :
அர்ஜுந உவாச
73. நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ
அர்ஜுந உவாச அச்யுத!-அர்ஜுனன் சொல்லுகிறான்,
அச்சுதா, த்வத்ப்ரஸாதாத் மோஹ: நஷ்ட:-நின்னருளாலே மயக்கம் அழிந்தது,
மயா ஸ்ம்ருதி: லப்தா-நான் நினைவு அடைந்தேன்,
கதஸந்தேஹ: ஸ்தித: அஸ்மி-ஐயம் விலகி நிற்கிறேன்,
தவ வசநம் கரிஷ்யே-நீ செய்யச் சொல்வது செய்வேன்.
அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்;
ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.
போர் புரியமாட்டேன் என்று சொல்லித் தேர்த் தட்டின் மீது அர்ஜுனன் சும்மா இருந்துவிட்டான்.
அப்படிச் சும்மா இருந்தவன் உபதேசம் கேட்ட பிறகு ஒரு சிறந்த செயலைச் செய்தான்.
மிச்சமின்றித் தன்னை மாதவனிடம் ஒப்படைக்கலாயினான். விறகுக்கட்டையானது பச்சையாயிருந்தாலும்
உலர்ந்திருந்தாலும் தன்னைத் தீயினிடம் ஒப்படைத்தால் அது தானே அக்கினி சொரூபத்தை யடைகிறது.
அங்ஙனம் அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு சிஷ்யன் ஆனான். பிரபத்தியும் பண்ணலானான்.
அதாவது மேலும் நிகழ்வது எதுவானாலும் தான் கண்ணனிடமிருந்து பின் வாங்குவதில்லை;
அதைப்பற்றி நினைப்பதும் இல்லையென்று முடிவு கட்டினான். தீயில் குதிக்கின்ற விட்டில் பூச்சி
அதன் விளைவைப்பற்றி நினைப்பதில்லை. பகவானிடம் பிரபத்தி பண்ணுபவன் மனநிலை அத்தகையது.
செயற்கரிய அச்செயலை தனஞ்ஜயன் செய்தான்.
அத்தகையவனுக்கு கீதோபதேசம் நிகழ்ந்தது. அது நல்லார் அனைவருக்கும் நலம் தரும் அருள் விருந்து.
எக்காலத்துக்கும் உதவுகிற இன்னமுது என்று அதை இயம்பவேண்டும். பெரு வாழ்வுக்கு அதுவே உற்றதுணை.
பிறவிப்பிணியைப் போக்கவல்ல அருமருந்து அது. ஆனால் உலகில் ஒருவர்க்காக ஆயத்தப்படுத்தும் அரிய பொருள்
ஒன்று வேறு யாருக்கோ உதவுவதாக முடிந்துவிடுவதுண்டு. ஓர் இடத்தில் மேகம் கூடி மற்றோர் இடத்தில் போய்
அது பொழிவது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்து போவதைக் காண்கிறோம். கீதா சாஸ்திரம் அப்படிப் போய்விடவில்லை.
ஒருவன் பொருட்டு உதித்த அந்த அருள் வெள்ளம் உலகனைத்துக்கும் யாண்டும் அருட்பேறு ஆயிற்று.
யாருக்காக அந்த ஆரமுது உதயமாயிற்றோ அவன் அதை வாய்மடுத்து உண்டு பெரும் பேறு பெறலானான்.
அதன் விளைவை இங்குக் காண்கிறோம். இதுவரையில் அக்ஞானத்திலிருந்த அர்ஜுனன் பெரியதொரு வாக்குமூலம் பண்ணுகிறான்.
அவன் பெற்றபேறு எது என்பதை அந்த வாக்குமூலமே நிரூபிக்கிறது.
அவன் வாயினின்று வந்த ஒவ்வொரு சொல்லிலும் பொருள் ஏராளமாகப் புதைந்து கிடக்கிறது :
அச்யுதா என்று தன்னை ஆட்கொண்டவனை அவன் அழைக்கிறான்.
அச்யுதன் என்பது பெருநிலையினின்று பிறழாதவன் எனப் பொருள்படுகிறது.
தீயில் குதித்த வீட்டில் பூச்சி தீயின் செயலுக்கு இரையாகிறது. அச்யுதனிடம் அடைக்கலம் புகுபவன் தானும்
பிறவி என்னம் படுகுழியில் வீழாத பெருநிலையடைவனன்றோ! அர்ஜுனன் பெற்ற பேறு அதுவே.
மோஹ: நஷ்ட :- மோகம் அழிந்து ஒழிந்தது, அல்லது மயக்கம் போய்விட்டது என்பது முதல் வாக்குமூலம்.
மயக்கம் வரும்பொழுது நடுப்பகலில் விண்ணில் நக்ஷத்திரம் தென்படும். வாமனன் போன்ற சிறிய ஆள் ஈரடியாலே
மூவுலகளக்கும் பெரிய ஆள்போன்று அவனுக்குத் தென்படுவான். அத்தகைய மயக்கம் அர்ஜுனனைப் பிடித்திருந்தது.
இவ்வுலக வாழ்வு அவனுக்கு ஒரு பெரிய தலைச்சுமையாகத் தோன்றியது. அதைக் கீழே இறக்கிவைக்கவும் முடியவில்லை;
தூக்கிக்கொண்டு நடக்கவும் இயலவில்லை. இப்படித் தனக்குத்தானே அவன் கற்பித்துக்கொண்டிருந்த மயக்கம் ஒழிந்தது.
ஸ்ம்ருதி: மயா லப்தா – ஞாபகம் என்னால் அடையப் பெற்றுள்ளது என்பது இரண்டாவது வாக்குமூலம்.
மயங்கியிருப்பவனுக்கு, தான் எங்கு, எக்காரணத்தால், எந்நிலையில் இருக்கிறான் என்பது விளங்காது.
மயக்கம் தெளிந்த பிறகே உண்மையான ஞாபகம் வருகிறது. தான் ஏன் மண்ணில் கிடந்தான் என்பதைப் பிறகு சிந்திக்கிறான்;
எதைப் பிதற்றினான் என்று விசாரிக்கிறான். பின்பு அதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தன் எதார்த்த நிலையைப் பற்றி நினைவு கூர்கிறான்.
தனது பேரியல்பைப்பற்றிய ஞாபகம் இப்பொழுது அர்ஜுனனுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஜீவனும் மயக்கத்தால்
ஜனன மரணங்களுக்கு ஆளாயினான். சித்த சுத்தியடைந்த பிறகு உறுதியான ஞாபகம் வருகிறது.
அது தனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இணக்கத்தைப்பற்றிய ஞாபகமாம்.
ஜீவன் எத்தகைய பெருநிலைக்குரியவன் என்பதை அந்த ஞாபகம் விளக்குகிறது.
த்வத் ப்ரஸாதாத் – உமது பிரசாதத்தால் அல்லது உமது அருளால் என்பது மூன்றாவது வாக்குமூலம்.
மயங்கிக் கிடந்த ஒருவனை மற்றொருவன் கிருபைகூர்ந்து, நீர் தெளித்து, விசிறி வீசிப் பிரக்ஞைக்குக் கொண்டு வருகிறான்
என்று வைத்துக் கொள்வோம். அச்செயல் சாமானியமானதன்று. அது பாராட்டுதற்குரிய பெருஞ்செயலாம்.
ஈண்டு அர்ஜுனனுக்கு மயக்கம் தெளிந்ததும், தனது மேலாம் சொரூப ஞாபகம் வந்ததும் தன் சுயப் பிரயத்தனத்தாலன்று.
அது சுயப்பிரயத்தனம் என்று எண்ணி அவன் செருக்குறலாகாது. அது கண்ணனது காருண்யத்தால் விளைந்தது.
குந்தியின் மகன் அதற்குக் கடப்பாடு உடையவன் ஆனான். முழுமனதோடு அதை எடுத்து அவன் மொழிந்துகொள்கிறான்.
ஜீவாத்மா பரபோதம் பெறும்போது அது பரம்பொருளின் பேரருள் என்று இயம்புகிறான்.
தன் முயற்சியின் சிறுமையும், அவனருளின் பெருமையும் அப்பொழுது உள்ளபடி அவனுக்கு விளங்குகிறது.
ஸ்தித: அஸ்மி- உறுதியாய் இருக்கிறேன் என்பது இதன் பொருள். இது நான்காவது வாக்குமூலம்.
புயல் காற்றும் பெருமழையும் சேர்ந்து வந்தமையுங்கால் மரம், செடி, கொடியெல்லாம் அசைகின்றன,
ஒடிகின்றன வேருடன் பெயர்த்து எடுக்கப்படுகின்றன. அந்நிலைமையில் அவைகளுள் உறுதி பெற்றிருப்பது ஒன்றுமில்லை.
பூமியில் உள்ள மண்ணும் பறித்தெடுக்கப்படுகிறது. ஆனால் மலையொன்றோ இதற்கெல்லாம் அசைவதில்லை.
அது உறுதியாக நிற்கிறது. ஞானம் அங்ஙனம் உறுதி பெற வேண்டும். அத்தகைய ஞானம் அடையப்பெற்றவன்
ஸ்திதப் பிரக்ஞன் எனப்படுகிறான். அர்ஜுனன் இப்பொழுது ஸ்திதப் பிரக்ஞன் ஆய் உள்ளான்.
தன் சொரூபத்தைப்பற்றி இப்பொழுது அவன் கொண்டுள்ள பேரறிவை யாரும் கலைத்துவிடமுடியாது.
பரஞானம் அடையப்பெற்றபின் அது மறைந்துவிட்டுப் போவதில்லை.
கத ஸந்தேஹ : – சந்தேகங்கள் போய்விட்டன. இது ஐந்தாவது வாக்குமூலம். ஆத்ம சொரூபத்தை அனுபூதி
வாயிலாக சாக்ஷõத்கரித்தவனுக்கு அதைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. இன்னும் உயிரோடிருக்கும் ஒருவனுக்குத்
தன் உயிர் வாழ்க்கையைப் பற்றி எப்படிச் சந்தேகம் உண்டாவதில்லையோ அப்படி அனுபூதி
பெற்றவனுக்கு ஆத்ம சொரூபத்தைப்பற்றிச் சந்தேகம் வருவதில்லை.
தவ வசனம் கரிஷ்யே என்பது உமது சொற்படி செய்வேன் என்று பொருள்படுகிறது. இது கடைசி வாக்குமூலம்.
அவன் எதைச் செய்ய ஆரம்பத்தில் மறுத்தானோ, அதைச் செய்ய இப்பொழுது துணிந்தான்.
செய்வது இன்னதென்று இப்பொழுது விளங்கிற்று. மெய்ஞ்ஞானம் பெற்றதே அதற்குக் காரணமாயிற்று.
சாஸ்திரம் புகட்டுவதும், குரு கிருபை புரிவதும், சாதகன் அனுபவ பூர்வமாகப் பெறுவதும் முடிந்த நிலையில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
தவளைக்குஞ்சினுடைய வால் விழுந்ததும் அது தண்ணீரிலும் தரையிலும் வாழக்கூடும். அக்ஞானமாகிய வால் மனிதனிடமிருந்து
விழுந்துவிட்டால் அவனுக்க முக்தியுண்டாகிறது. அப்போது அவன் கடவுளிடத்தும்,
அதுபோலவே உலகத்தினிடத்தும் நன்கு வாழக்கூடியவனாகிறான்.
ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதம் இத்துடன் முடிவடைகிறது.
இனி, இது மற்ற சம்பவங்களுடன் தொடர்வு பெறுவது மேலும் சில சுலோகங்களில் விளக்கப்படுகிறது :
ஸஞ்ஜய உவாச
74. இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:
ஸம்வாதமிமமஸ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான்,
இதி அஹம்-இப்படி நான்,
வாஸுதேவஸ்ய மஹாத்மந: பார்தஸ்ய ச-வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும்,
இமம் அத்புதம் ரோமஹர்ஷணம்-இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும்,
ஸம்வாதம் அஸ்ரௌஷம்-உரையாடலைக் கேட்டேன்.
சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த
அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.
உள்ளத்தில் பேருணர்ச்சி உண்டானால் மயிர்க்கூச்செடுக்கிறது. நல்லது கெட்டது இரண்டும் உடலில் மயிர் சிலிர்க்கச் செய்யும்.
பொதுவாக நல்ல விஷயந்தான் நல்லவர்களுக்கு இப்படிப் புளகாங்கிதம் உண்டாகும்படி செய்யும். பேசுபவனாகிய கிருஷ்ணன்,
பேசப்படுபவனாகிய அர்ஜுனன், பேசும் விஷயமாகிய கீதா தத்துவம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்து ஸஞ்ஜயன்பால்
புளகாங்கிதம் உண்டாக்கியதில் வியப்பொன்றுமில்லை.
திருதராஷ்டிரனுக்கு அது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதற்குச் சரித்திரமே சான்றாயிருக்கிறது.
அர்ஜுனனை மகாத்மாவென்று மொழிவதன் மூலம் அவன் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக
நடந்து கொள்ளுபவர்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
தொலைவில் போர்க்களத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பாஷணையைக் கேட்க
ஸஞ்ஜயனுக்கு எப்படி முடிந்தது என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :
75. வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்
யோகம் யோகேஸ்வராத்க்ருஷ்ணாத்ஸாஷாத்கதயத: ஸ்வயம்
யோகேஸ்வராத் க்ருஷ்ணாத்-யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து,
பரம் குஹ்யம்-பரம ரகசியமான,
ஏதத் யோகம் ஸ்வயம்-இந்த யோகத்தை தான்,
ஸாஷாத் கதயத:-நேராகவே சொல்லும்போது,
அஹம் வ்யாஸப்ரஸாதாத்-நான் வியாசனருளால்,
ஸ்ருதவாந்-கேட்டேன்.
யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது
நான் அதை வியாசனருளால் கேட்டேன்.
ஸஞ்ஜயனுக்கு ஞானக் கண்ணை வழங்கியவர் வியாசர். ஆகையால் கிருஷ்ணனுடைய திவ்விய தர்சனத்தைப் பெறவும்
விச்வரூப தர்சனத்தைப் பெறவும் அவர் பகர்ந்ததை யெல்லாம் அப்படியே கேட்கவும் அவனுக்கு இயன்றது.
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன் படுவதுபோன்று தான் பெற்ற பேறு யாது,
அது யாருடைய அனுக்கிரகத்தால் ஆயிற்று என்பதை சஞ்ஜயன் தெரிவிக்கிறான்.
அது பெரும்பேறு என்பதற்கு அத்தாட்சி மேலும் வருகிறது :
76. ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்
கேஸவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:
ராஜந்-அரசனே,
கேஸவார்ஜுநயோ:-கேசவ அர்ஜுனரின்,
அத்புதம் புண்யம் ச இமம் ஸம்வாதம்-வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை,
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து,
முஹுர்முஹு:-மீண்டும் மீண்டும்,
ஹ்ருஷ்யாமி-மகிழ்கிறேன்.
அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான்,
மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.
ஸஞ்ஜயன் அடைந்த மகிழ்வு சாஸ்திரத்தின் மகிமையைக் குறிக்கிறது. நலத்தை அடையப்பெற்ற நல்லார்
அந்த நலத்தினின்று உலப்பிலா ஆனந்தத்தை அடைவது இயல்பு.
77. தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந:
ராஜந்-அரசனே!
ஹரே: அதி அத்புதம்-ஹரியின் மிகவும் அற்புதமான,
தத் ரூபம் ச-அந்த ரூபத்தை,
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து,
மே மஹாந் விஸ்மய:-எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது,
ச புந: புந: ஹ்ருஷ்யாமி-மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.
அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து
எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.
பல யோகிகளுக்கும் பக்தர்களுக்கும் காண்பதற்கரிய விசுவரூப தரிசனத்தைத் தற்செயலாய் ஸஞ்ஜயன் கண்டான்.
சூழ்நிலையால் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் இது மிகப்பெரியது. விசுவரூப தரிசனத்தின் ஒரு சிறு
பகுதியைக் காணாத ஜீவன் ஜகத்தில் இல்லை. வியப்புக்குரியதும் மனதை மேல் நிலைக்குக் கொண்டு
போகக் கூடியதும் எதுவானாலும் அது இறைவனுடைய மகிமையேயாம். ஒவ்வொரு மனிதனுக்கும்
அத்தகைய காட்சிகள் கிடைக்கின்றன. பெரும்பாலார்க்கு அவைகளைப் பயன்படுத்தும் வழி தெரிகிறதில்லை.
திரும்பத் திரும்ப அக்காட்சிகளைப் பற்றி நினைப்பது ஒருவித தியானமாகும். மனது அதனால் நன்கு பண்படுகிறது.
தனது மனதை உயிர்நிலைக்குக் கொண்டுபோன காட்சி எதுவென்று சாதகன் ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிறகு அதை பக்தியுடன் ஞாபகத்துக்குக் கொண்டு வரவேண்டும்.
78. யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம
யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ண:-எங்கு யோகக் கடவுள் கண்ணனும்,
யத்ர தநுர்தர: பார்த:-எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ,
தத்ர ஸ்ரீ: விஜய: பூதி:-அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும்,
த்ருவா நீதி-நிலை தவறாத நீதியும் (இருக்கும்),
மம மதி:-என் உறுதியான கருத்து (இது).
கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்?
அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.
இது ஸஞ்ஜயனுடைய சொந்த அபிப்பிராயம் என்றாலும் சிறந்த கீதை தத்துவங்களில் இதுவும் ஒன்றாகும்.
கண்ணன் யோகேசுவரனாதலால் புருஷார்த்தங்களெல்லாம் அவன் மூலம் நிறைவேறுகின்றன.
தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில் ஜீவாத்மாவுக்கு எது வாய்க்கப்பெற்றாலும் அது யோகமாகிறது.
அவைகளுள் சிறப்பாயுள்ள மோக்ஷத்தைக் கிருபைகூர்ந்து வழங்க வல்லவன் கிருஷ்ணன்.
முதல் அத்தியாயத்தில் தனுசைத் தூர எறிந்து விட்டவனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான்.
முயற்சியற்ற அல்லது முயற்சி குன்றிய வாழ்க்கையை அது எடுத்துக் காட்டுவதாகும்.
இப்பொழுது காண்டீவம் என்னும் வில்லை ஏந்திய அர்ஜுனன் காட்சி கொடுக்கிறான்.
கிருஷ்ணனுடைய யோக வல்லமையும் பார்த்தனுடைய பராக்கிரமமும் சேர்ந்து ஆகாத காரியத்தை ஆக்குவிக்கும்.
இதைக் கேட்ட பிறகாவது திருதராஷ்டிரனுக்கு மனது மாறியிருக்கவேண்டும் ! அதாவது தன் பிள்ளைகளுக்கு வெற்றியுண்டாகாது;
உயிர் நஷ்டமும், பொருள் நஷ்டமும் ஏற்படுவது உறுதி. அதைத் தடுக்க ஒருவிதத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம்
என்ற எண்ணம் வந்திருக்கவேண்டும். ஆனால் அவிவேகமே வடிவெடுத்திருப்பவனுக்கு அது ஒன்றும் விளங்காது.
கடவுளே அருகிலிருந்து கொண்டு செய்கிற செயலும் அவனுக்குப் புலப்படாது.
தெய்வத்தின் சகாயமும் மனிதனுடைய நேர்மையான முயற்சியும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும்.
மனிதனுக்கு ஆகவேண்டியதை யெல்லாம் தெய்வம் செய்துவைக்கும் என்று நினைத்துக் கொண்டு
தன் முயற்சியை நிறுத்திவிடலாகாது. பிறகு துர்யோதனன் கூட்டம் செய்தது போன்று
ஈசுவரனது திட்டத்தைப் புறக்கணித்துவிட்டுத் தனது சொந்த முயற்சியால் எல்லாம் ஆய்விடும் என்று கருதி வினையாற்றலாகாது.
யாண்டும் கடவுளைச் சார்ந்திருந்து தன் கடமையைக் கடவுள் பொருட்டு முழுமனதுடன் செய்யவேண்டும்.
கார் இருளில் கண் தெரியாது. பேர் ஒளியிலும் கண் தெரியாது. கண்தெரியாமையை முன்னிட்டுக்
கார் இருளையும் பேர் ஒளியையும் ஒன்றாகக் கருதலாகாது. தமோ குணத்தில் புதைந்து கிடப்பவன் வினையாற்ற மாட்டான்.
சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் வினையாற்றுவதில்லை. அதை முன்னிட்டு அவர்கள் இருவரும் ஒப்பாகமாட்டார்கள்.
தேகம் எடுத்திருப்பவன் தேகம் இருக்கும் வரையில் நல்வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வினையை ஈசுவர ஆராதனையாகச் செய்ய வேண்டும். அதனால் ஞான முதிர்ச்சி தானே வந்தமைகிறது.
இகம் பரம் ஆகிய இரண்டிலும் வாழ்க்கையின் குறிக்கோள் இனிது நிறைவேறுகிறது.
பாரமார்த்திக வாழ்வின் பெயரால் சோம்பித் திரிபவனும், சமுதாயத்துக்கு வெறும் சுமையாக வாழ்ந்திருப்பவனும்
கீதா தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகார். தூக்கி வினையாற்றுபவனே வேதாந்தம் அறிந்தவனாகிறான்.
ஸ்ரீ என்பது இங்கு ராஜ்யலக்ஷ்மி. எடுத்துக்கொண்ட காரியங்களெல்லாம் ஈசுவர சங்கற்பத்துக்கு உட்பட்டவைகளாக இருக்கவேண்டும்.
அப்பொழுது விஜயம் அல்லது வெற்றி நிச்சயமாக வந்தமையும். அதற்குமேல் நல்ல முயற்சியுடையவனுக்குச் செல்வமும் சீரும் சிறப்பும் வளரும்.
வெற்றியையும் ஆக்கத்தையும் முன்னிட்டுக் கடவுளை நம்பியிருப்பவன் முறைதவறி நடந்து கொள்ளமாட்டான்.
நேர்மையையும், நிலைத்த நீதியையும், தெளிந்த ராஜ தர்மத்தையும் அவனிடத்துக் காணலாம்.
ஈசுவர கிருபையும் ஜீவப்பிரயத்தனமும் ஒன்று சேருமானால் இகபரமிரண்டுக்கும் அவை நல்ல சாதனமாகின்றன.
அவைகளின் சேர்க்கையே சிறந்த யோகமாகிறது. மற்ற யோகங்களெல்லாம் அதினின்று உருவெடுக்கின்றன.
ஈசுவர கிருபை சந்ததமும் நம் பொருட்டுக் காத்துக்கொண்டிருக்கிறது.
அதைப் பயன்படுத்தி நாம் நேர்மையாக முயற்சி செய்வது ஒன்றே பாக்கி. இப்பொழுதே முயலுவது முறை.
சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் வீழ்கிறது; ஆனால் ஜலம், கண்ணாடி, மெருகிட்ட உலோகம் இவைபோன்ற
வஸ்துக்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் தெய்விக ஒளியும்.
அது எல்லாரிடத்தும் சமமாயும் பாரபக்ஷமின்றியும் வருகின்றது. என்றாலும் ந்லலாருடைய தூய மனமும்,
ஸாதுக்களுடைய இருதயமுமே அவ்வொளியை நன்றாய்ப் பிரதிபலிக்கச் செய்கின்றன.
பகவத் பக்திகொண்ட பரிசுத்த பக்தர்களுக்காகவே பகவான் உலகத்தில் அவதாரம் செய்கின்றார்.
அவதார புருஷரோடு வருபவர்கள் நித்திய முக்தர்களாவார்கள்; அல்லது கடைசி ஜன்மம் எடுத்தவர்களாவார்கள்.
ஸ்ரீ வியாசர் இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய ஸ்ரீ மஹாபாரதத்தில், பீஷ்மபருவத்தில், ஸ்ரீ பிரம்ம வித்தையைப் புகட்டுவதும்,
யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய ஸ்ரீ பகவத்கீதை என்னும்
உபநிஷதத்தின்கண் மோக்ஷ ஸந்யாஸ யோகம் என்ற பதினெட்டாம் அத்தியாயம்.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply