யார் ஸ்ரீ நப்பின்னை ? December 2, 2009 By ஸ்ரீ ஜெயஸ்ரீ சாரநாதன்

சிலப்பதிகாரத்தில் பின்னை

கோவலன் பழியில் சிக்கிய வேளையில், ஆயர் சேரியில் துர்நிமித்தங்கள் தெரிந்தன.
கன்று கறவைகள் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அத்தகைய வேளையில், முன்பு கோகுலத்தில் கண்ணன்
தன் முன்னவனுடனும், பின்னையுடனும் ஆடிய பால சரிதத்தை தாமும் ஆடினால்,
துயர் நீங்கும் என்று ஆய மகள் மாதரி கூறுகிறாள்.

“ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண்
பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குகவெனவே;”–என்று மகளையும் மற்றவர்களையும் அழைக்கிறாள்.
நடன அமைப்பு பற்றி சிலம்பு கூறுவதை, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் நன்கு விளங்கும் வண்ணம் எழுதியுள்ளார்.

அதன் படி, ஏழு பெண்கள் ஏழு ஸ்வரங்களாக இருப்பார்.
‘ச’ முதல் ஆரம்பிக்கும் ஏழிசையும், தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று வழங்கப்படும்.
இவை பற்றிய குறிப்புகளை திவாகர நூற்பாக்களில் காணலாம்.
இவை முறையே ச முதல் (ஷட்ஜம்) நி வரை (நிஷாதம்) உள்ள ஸ்வரங்கள்.
இவை ஒவ்வொன்றுக்கும் மாத்திரை அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் குரலும் (ஷட்ஜம்), இளியும் (பஞ்சமமும்) ஆதாரமானவை. ரிஷபம் எனப்படும்,
இரண்டாவதான துத்தம், குரலைத் தொக்கியே – அதாவது ஷட்ஜத்தை ஒட்டியே இருக்கும்.

இந்த ஏழு ஸ்வரங்களும் பலவிதமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து ராகம் – அதாவது தமிழில் ‘பண்’ என்று
சொல்லப்படும் பல வகைப் பண்கள் எழுந்துள்ளன. ஆய்ச்சியர் குரவையில் வருவது, ஆய்ப் பாலைப் பண்.
இது பாலைப் பண்களில் ஒரு வகை.

குரவை என்று நடனம் ஆடும் பொழுது, இந்தப் பண் வகையில், ஸ்வரங்கள் எவ்வாறு சேருகின்றனவோ,
அந்த வகையில், நடனமாடும் ஏழு பெண்களும் சேர்ந்து, சேர்ந்து பண் வகையைக் காட்டி ஆடுகின்றனர்.
இதில், ஷட்ஜம் என்னும் குரல் வகையை மாயோன் என்னும் கண்ணனாக உருவகப்படுத்தியுள்ளனர்.
அடுத்த முக்கிய ஸ்வரமான பஞ்சமம் என்னும் இளியை, பலராமனாக உருவகப்படுத்தி ஆடுகின்றனர்.
இந்த இருவரை (இரு ஸ்வரங்களை) ஒட்டியே மற்ற ஸ்வரங்களும் (பெண்களும்) சேர்ந்து,
பிரிந்து ராகம் என்னும் பண்ணைப் பலவிதமாகக் காட்டுகின்றனர்.
இதில், ரிஷபமான துத்தம், ஷட்ஜத்தை (குரல் என்னும் கண்ணன்) ஒட்டியே வரும்.
அந்த துத்தம் நப்பின்னை! இதுவே சிலம்பு விவரிக்கும் ஆய்ச்சியர் குரவை!

கண்ணனும், பலராமனும் எப்பொழுதும் ஒன்று கூடியே ஆடுவர் – குரல், இளி என்று.
துத்தம் (நப்பின்னை) ஷட்ஜத்தை ஒட்டியே வருமாதலால், அவள் கண்ணனுக்கும் பலராமனுக்கும் இடையே எப்பொழுதும் ஆடுவாள்.

இதை குறிக்கையில் சிலம்பு இவ்வாறு சொல்கிறது.

“மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர”

மாயவன் தன் முன்னினோடும் – கண்ணன் தன் முன்னவனான, அதாவது அண்ணனான பாலராமனோடும்.
வரிவளைக்கைப் பின்னையொடும் – வளையல் அணிந்த கைகளை உடைய பின்னவளோடும், அதாவது
தன் தங்கையான சுபத்திரையோடும் – என்றுதான் இங்கே பொருள் காண முடிகிறது.

மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை;”

ஆனால், ஆட்டத்தின் போது தங்கையாகிய பின்னையையும், அவள் அழகினைக் காணும் போது,
நம்-பின்னை என்னும் தாரத்தையும், மாதரி குறிக்கிறாளோ என்றும் தோன்றுகிறது.

கண்ணனுக்கு இடப்பக்கமும் பலராமனுக்கு வலப்பக்கமுமாக நடுவில், பின்னை ஆடுவதாகப் பல இடங்களில் கூறினாலும் ,
ஆரம்பத்தில், பின்னையாக நடிப்பவளைப் பார்த்து, மயங்கி, மாதரி கூறுவது, நப்பின்னை என்னும் தாரத்தைப் பற்றியதாக இருக்கிறது.

“வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;”

‘வந்துழாய் மாலையை மாயவன் மேலே சாற்றி, குரவை ஆடத் துவங்கும் அந்தப் பெண்,
மாயவன் தன் மார்பில் இருக்கும் திருமகளை நோக்காமல் இருந்ததற்குக் காரணமாகிய நப்பின்னைதானோ,
ஐ ? ‘ – என்று தன் மகள் ஐயிடம் மாதரி வியந்து கூறுகிறாள். இந்த ஆட்டத்தில், தங்கையாக ஆடும் பெண்,
மாயவனை மயக்கிய நப்பின்னை போல இருக்கிறாள் என்றும் பொருள் கொள்ளும் வண்ணம் இருக்கிறது.
ஏனைய இடங்களில், தங்கை என்றே பொருள் கொள்ளும்படி இருக்கிறது.

ஒவ்வொரு ஆயர் மகளும், கண்ணனே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பினாள் என்று,
கலித் தொகைப் பாடல்களில் தெரிகிறது. ஆயர் குல மங்கை ஒருத்தியை, அதிலும் தமிழ் பேசும் ஆயர் குல மகள் ஒருத்தியை,
கண்ணன் கைப் பிடித்திருந்தால்தான், இந்த அளவு, பிரேமை – ‘நப்பின்னை கல்ட்’ என்று சொல்லும் வண்ணம்
தமிழ் வழி முறைகளில் வளர்ந்திருக்க முடியும்.

ஆய்ச்சியர் குரவையில் வரும் பின்னை, தங்கையாக இருக்கலாம் என்று பல இடங்களிலும்,
மேற் சொன்னவாறு காட்டினாலும், நப்பின்னை என்னும் ஆயர் குலப் பெண்ணை கண்ணன் மணம் செய்துள்ளான்
என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

சீவக சிந்தாமணியில் பின்னை

சீவக சிந்தாமணியில், கோவிந்தையார் இலம்பகத்தில் ஆநிரை மீட்டுத் தருபவருக்குத் தன் மகள் கோவிந்தையை
திருமணம் செய்து தருவதாக, நந்தகோன் முரசு அறைவிக்கிறார். சீவகன் ஆநிரை மீட்டுத் தருகிறான்.
சீவகனை நம்பி என்று விளித்துப் பேசும் நந்தகோன், தன் மகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கையில்,
முருகன் எவ்வாறு வள்ளியை மணந்தானோ, மாயவன் எவ்வாறு நப்பின்னையை மணந்தானோ அவ்வாறு
தன் மகள் கோவிந்தையை சீவகன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே. (482)

இந்த வரிகள், இவ்விரு திருமணங்களும் களவொழுக்கப் படி அமைந்தனவோ என்று என்னும் வண்ணம் இருக்கிறது.
வேட்டுவக் குலம் என்று குல வித்தியாசம் நினையாது வள்ளியை இணைந்தான் முருகன்.
அது போல நில மகளுக்கே கணவனான மாயவன், ஆநிரைக் கூட்டத்தை உடைய நப்பின்னையின்,
இலவம் பூ போன்ற இதழ் அமிர்தம் நுகர்ந்தான் என்று சொல்லி, நந்தகோன் சீவகனை இணங்க முயற்சிக்கிறார்.
சீவகனும் எண்ணிப் பார்க்கிறான்.

கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே. (483)

குல வேறுபாடு இருந்தாலும், ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட காதலால் அவளை மணப்பது என்பது மாந்தர்க்கு
முறைமை தான் என்று எண்ணி, பதுமகனுக்கு அவளை மணம் புரிவிக்கின்றான் சீவகன். வள்ளி, நப்பின்னை குறித்த
இந்த பேச்சு, நப்பின்னை என்னும் ஒரு பெண்ணை , குலமோ, அல்லது வேறு வகையிலோ வேறுபாடு உடைய ஒருத்தியை,
கண்ணன் காதல் மணம் புரிந்திருக்கின்றான் என்று தெரிவிக்கிறது.

நப்பின்னை ஆயர் குலத்தில் உதித்தவள் ஆனாலும், கண்ணன் துவரைக் கோமகன். அரசன்.
கண்ணன் என்னும் என்னும் கரும் தெய்வம் அவன். அந்த விதத்தில் வேறுபாடு இருந்திருக்கின்றது.
முருகக் கடவுள், வள்ளியை விரும்பியது போல, நில மகள் கேள்வனான திருமால் என்னும் கடவுள்,
நப்பின்னையை விரும்பியிருக்கிறான் என்பதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது

சீவகனை வேண்டும் போது, சீர் வரிசையாக “செம் பொன் பாவை ஏழுடன் தருவல்” –
பொன்னால் ஆன ஏழு பாவை தருவேன் என்கிறார் நந்தகோன். திருமணத்தை விவரிக்கும் போதும்,
“நன்பொன் இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன்.” என்று சீவக சிந்தாமணி கூறுகிறது.

“மென் தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே” என்று நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் (48) கூறுவது,
நப்பின்னையின் மேல் உள்ள காதலால், ஆயர் குல வழக்கப்படி, கண்ணன் ஏறு தழுவி அவளை மணந்தனன் என்று காட்டுகிறது.
ஆய மகள் தோள் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுமா?
கொல்லேறு தழுவினால்தான் ஆய மகள் தோள் தழவ முடியும் என்று பல இடங்களில்
நல்லுருத்திரனார் முல்லைக் கலியில் கூறியுள்ளார்.

ஏழு என்னும் எண் ஆயர் குலத்திற்கு முக்கியமானது போலும். திருமணச் சீராக, செம்பொன் பாவை
ஏழு கொடுப்பதாக சீவக சிந்தாமணி கூறுகிறது.. கண்ணனைப் போன்ற பெரும் தெய்வம், பெறப் போகும் பாவையுடன்,
திருமணச் சீராக ஏழு செம்பாவைக்கும் ஏற்றாற்போல் ஏழு எருது தழுவியிருப்பான்.
அவனை மிஞ்சி, ஒருவரும் ஏறு தழுவியதில்லை. எவரேனும் ஏழு ஏறு தழுவியதாக எந்தக் குறிப்பும்,
கலித் தொகையில் காணப் படவில்லை. இதன் காரணமாகவும் ஆயர் மகளிர் கண்ணனைப் போல்
ஒருவன் ஏறு தழுவி தன்னைக் கைப் பிடிக்க மாட்டானோ என்று ஏங்கியிருக்கலாம்.
(“இன்னன் கொல், மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு ” (கலித்தொகை 103))

ராமாயணத்தில், சீதையை தாரை வார்த்துக் கொடுத்தது போலவே,
கையில் நீர் ஊற்றி தன் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கிறார் நந்தகோன்.

நேமிநாதர் கூற்று:

திருவள்ளுவமாலை என்னும் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து
பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில்,
நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு),
உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.)
அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

இந்தக் கருத்தையே நேமிநாதர் “நாலே திணையே” என்னும் செய்யுள் உரையில்
“உபகேசியானவள் நப்பின்னைப் பிராட்டியார்” என்று கூறுகிறார்.

(மேற்சொன்ன செய்யுளில் திருவள்ளுவர் பற்றிய முக்கிய செய்திகள் இரண்டு வருகின்றன.
(1) மணமுடித்த உபகேசி பற்றிக் கூறுவதால், மூன்றாவது அடியை, மாதானுபங்கி என்னும் பெண்ணை மணந்தவர்
என்றும் பொருள் கொள்ளலாம். மாதானுபங்கி என்பது பெண்பால் சொல். அது திருவள்ளுவரின் இயற் பெயர் ஆகாது.
(2) திருவள்ளுவர் தென் மதுரைக்கு அச்சு என்றதன் மூலம், அவர் தென் மதுரையைச் சேர்ந்தவர் என்றும்,
அல்லது முதல் சங்கம் நடந்த தென் மதுரையில் தான் அவரது குறள் அரங்கேறியது என்றும் கொள்ளலாம்.
இதன் படி, திருவள்ளுவர் கி.மு. 31 -இல் தோன்றினவர் என்பதும், அதன அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு
என்று கொண்டு வந்ததும் தவறு எனத் தெரிகிறது.
திருவள்ளுவர் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டவர் என்று இந்த செய்யுள் தெரிவிக்கிறது.)

உபகேசி என்பது, நப்பின்னையின் இயற் பெயர். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. உபகேசி, என்பது தமிழ் பெயரா?
அவள் வடபுலத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாமே? என்று. இதற்கு விடை தேடுவோம்.

சீவக சிந்தாமணி 482 செய்யுள் உரையில், நச்சினார்க்கினியர் “நப்பின்னை அவள் பெயர்’ என்று
தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார். அவள் தமிழ் பேசும் தென் புலத்தில் இருந்திருந்தால் தான்,
நல்கூர் வேள்வியாரும் தன் செய்யுளில் அப்படி ஒப்புமை காட்டிக் கூறியிருப்பார்.
மேலும் கேசி என்பது ஆயர் குலத்தில் சரளமான ஒன்றோ என்றும் தோன்றுகிறது.

கேசி என்றால் கேசம் (கூந்தல் அல்லது தலை முடி) என்று பொருள்.
ஆயர் மகளிருக்கு கூந்தல் பற்றிய முக்கியத்துவம் உண்டு.

முல்லைக் கலிப் பாக்களிலும். சீவக சிந்தாமணியில் வரும் வர்ணனைகளிலும், ஆயர் மகளிர் கூந்தல் அழகிகள் என்று தெரிகிறது.
கூந்தலில் வரும் மணத்தை வைத்தே, மகள் யாரிடமேனும் காதல் வசப் பட்டிருக்கிராளா என்று தாய் கண்டு பிடிக்கும் செய்தி
முல்லைக் கலியில் வருகிறது. மேலும் கேசி என்னும் குதிரையைக் குறிப்பிடும் போது,
“கூந்தல் குதிரை” என்று கலித் தொகை 103 – தெரிவிக்கிறது.

நப்பின்னை வாழ்த்த காலத்தில், அத்தகைய பெயர்கள் சர்வ சாதாரணமானவை.
மாதானுபங்கி என்னும் சொல்லே வடசொல் சார்ந்ததுதான்.
ஆனால், இயல் தமிழில் தமிழ் சொற்களையே பயன்படுத்தி இருக்கின்றனர்.
எனவே தான் பின்னை, நம்-பின்னை, நப்பின்னை, நம்பி போன்ற சொற்களை செய்யுள்களில் அதிகம் காண முடிகிறது.

ஆயர் குலம் தொல்லிசைக் குலம். தென்னவன் தேசத்தைக் கடல் கொண்டு விட்டதனால்,
அவனோடு இடம் பெயர்ந்த தொல்லிசை நட்ட குடி, ஆயர் குடி என்று கலித் தொகை கூறிகிறது.
இதனை கலி 104 -இல் காணலாம்.

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி மேல் சென்று, மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர்.

கடல் கொள்ளும் முன்பு 2 -ஆம் தமிழ் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தில், துவரைக் கோமான் கலந்து கொண்டார்
என்று இறையனார் உரை தெரிவிக்கின்றது. துவரைக்குக் கோமான் ஒருவனே. அவன் மாயவன் எனப்படும் கண்ணன்.
அவனே துவராபதியை நிர்மாணித்தான். அவன் காலம் சென்றபின், துவராபதியைக் கடல் கொண்டு விட்டது.
எனவே துவரைக் கோமான் என்றது கண்ணனையே.
அவன், கடல் பின்பு கொண்ட தென்னவன் தேசம் வந்த பொது, அங்கே ஆயர் குடி என்னும் தொல்குடி இருந்தது
என்பதை கலித் தொகை மூலம் அறிகிறோம். முருகன் வள்ளியைக் கண்டு விரும்பியது போல,
கண்ணனும் ஆங்கிருந்த நப்பின்னையைக் கண்டு விரும்பியிருக்க வேண்டும்.
அவள் கைப் பற்ற வேண்டி, குல வழக்கப்படி ஏறு தழுவியிருக்க வேண்டும்.

“எளியவோ ஆய் மகள் தோள்?
விலை வேண்டார் , எம் -இனத்து ஆயர் மகளிர் –
கொலை ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
மார்பின் முலை இடைப் போலப் புகின்,
ஆங்கு குரவை தழீ யாம் , மரபுளி பாடி ” (கலித் தொகை 103 )

என்று ஏறு தழுவினால் தான் , ஆயர் மகள் முலை தழுவ முடியும் என்பது மரபு என்று இருந்திருக்கின்றது.

பின்னை மணாளனை ….என்னையும் ,
எங்கள் குடி முழுதும் ஆட் கொண்ட ”(பெரியாழ்வார் திருமொழி -162)
என்று பெரியாழ்வாரும் இந்த திருமணத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அந்த ஆயர் மரபின் படியே – அவர்கள் சொல்லாட்சியின் படியே,
திருப்பாவையிலும் நப்பின்னை பற்றிய செய்திகள் வருகின்றன.

“செப்பென்ன மென் முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!”

“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா”

போன்ற இவை ஆயர் மரபின் படி , அகப் பொருள்பாற்பட்ட ,
ஆய மகளிரால் சர்வ சாதாரணமாக கையாளப் பட்ட சொற்களே.

நப்பின்னை – மாயவன் திருமணம் கடல் கொள்ளப் பட்டதற்கு முன், மிகவும் பேசப் பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
செய்யுளாகப் பாடப் பட்ட ஒரு செய்தியாகவும் இருந்திருக்க வேண்டும்.

கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும்
மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால்,
அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.

வைணவத்தில் நப்பின்னை:

மாயோன் என்னும் தெய்வத்தையே மணந்தவலாதளால், அவள் யார் என்பது
திருமால் அடியார்களும் பேசும் ஒரு முக்கிய செய்தியாகும்.
திருமால் அவதரித்த போது, அவள் நப்பின்னை. மற்ற நேரத்தில் அவள் யார்? இந்தக் கேள்வியை எடுத்துக் கொள்வோம்.
தன் இட மார்பில் உள்ள திருமகளையும் நோக்காமல், தன்னையே நோக்கச் செய்த நப்பின்னையைப் பற்றி
சிலப்பதிகாரம் கூறுமிடத்தே, திருமகளாம் ஸ்ரீதேவியை ஒப்புமை காட்டுகிறது.

சீவக சிந்தாமணியிலோ, நில மகள் கேள்வன் என்று, பூதேவியை ஒப்புமை காட்டுகிறது.
இதில் மீதம் இருப்பது, நீளா தேவிதான்.

நீளா தேவி யார் என்பதையோ, அல்லது நீளா தேவியையோ மாயவன் தன் அவதாரங்களில் இனம் காட்ட வேண்டும்.
அந்த வகையில், கிருஷ்ணாவதாரத்தில், நீளா தேவி, நப்பின்னையாக அவதரித்துள்ளாள் என்று ஆதாரம் காட்டலாம்.

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் (2-3-5 ) இதைக் காட்டுகிறார்.

“இன் துணை பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன்
நற் புவி தனக்கு இறைவன் ,
தன் துணை ஆயர் பாவை
நப்பின்னை தனக்கு இறை ,
மற்றையோற்கெல்லாம் வன் துணை ..”

திருமாலுக்கு மூன்று துணைவியார் உண்டு.
திருமகள், புவி மகள் – இவர்களுடன், மறைவாக உள்ள நீளா தேவி.
வேதத்தில் இம்மூவரைப் பற்றியும் சூக்தங்கள் உள்ளன.
நீளா தேவியை பற்றிய சூக்தம், ஆயர் குல சாயலை வெளிப்படுத்துகின்றது.

நீளா தேவி நெய்யும், பாலும் நிரம்பப் பெற்றவள். பூவுலகுக்கும், விண்ணுலகுக்கும் ஏற்படும்
தொல்லைகளைப் போக்குபவள் என்பதே அதன் முக்கியக் கருத்து.

வேதாந்த வகையில் இதைப் பெரிதும் விளக்க முடியும். ஆனால் சாதாரண மானுட அளவில்,
நெய்யும், பாலும் அள்ளித் தரும் ஆயர் மகளாக அவளை அடையாளம் காட்டலாம்.

கடவுளைப் பார்க்கவும், உணரவும் முடியுமா என்றால், முடியும் என்று,
ப்ரத்யக்ஷ கடவுளாக சூரியனை காயத்ரி மந்திரம் மூலம் அடையாளம் காட்டினார் விஸ்வாமித்திரர்.
அந்தக் கடவுளே காக்கும் தெய்வமான திருமால் அல்லது சூர்ய நாராயணன்.
அந்தத் திருமாலின் துணைவியார் மூவர்.
நாம் நிற்கும், இந்த நிலம் ஒரு துணைவி.
இந்த நிலத்தைச் சார்ந்து கிடைக்கும், பொன் , பொருள், வளி, நீர் போன்ற பலவற்றின் மூலமாக
நமக்குக் கிடைக்கும் செல்வமே திருமகள் என்னும் லக்ஷ்மி. அவள் ஒரு துணைவி.
இந்த இருவருக்கும் வரக் கூடிய ஆபத்துகளில் இருந்து காப்பவள் நீளா ஆதலால்,
அவள் இந்த பூமியைச் சுற்றி பாதுகாத்து வரும் காந்த சக்தி எனலாம்.

ஆய மகள் முலை போல் அவளுக்கும் இரு துருவங்களிலும் இரு முலைகள்.
’நீளா துங்க ஸ்தன கிரி’ என்று மலை போன்ற முலைகள் என்று வைணவ இலக்கியங்களில் கூறுவது
ஒரு அர்த்தத்துடன்தான் இருக்க வேண்டும்.

”கொலை ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
மார்பின் முலை இடைப் போலப் புகின்”

என்று கலித் தொகை சொல்வது போல மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு
இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக் ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும்,
பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.
நீளா என்னும் துருவக் காந்தம், பூமி உண்டானதற்குப் பின்னால் உண்டானது. எனவே அவள் பின்னை ஆகிறாள்.
அவள் இரவில் துருவப் பகுதியில் ஒளி வீசி வயப்படுத்திகிறாள், இரவில் நப்பின்னையுடன் கருநீலக் கண்ணன் துய்ப்பது போல.

நப்பின்னையைப் பார்த்தவர் யாரும் இல்லை. நம்மாலும், இந்த நீளா தேவியை காந்த சக்தியாக
கண்ணனையே ஈர்த்தவளைப் பார்க்க முடியாது.

ஏறு தழுவி, ஆயர் மகள் முலை போன்ற அதன் முதுகினை அணைத்தவாறே
(நப்பின்னை கொங்கை கை வைத்துக் கிடந்த மலர் மார்பன் – ஆண்டாள் கூற்று),
வேகமாக ஓடும் எருத்தின் போக்கிலேயே, மாயவனும் அதன் மேல் பயணிக்கிறான்.

வாரம் ஏழு நாட்களும் மாயவன் பூமியை அணைத்து, காந்தத் துருவத்தோடு பயணிக்கும் அந்த காஸ்மிக் கோலமே,
அவன் ஏழு ஏறு அடக்கி, நப்பின்னையை மணந்த செயலாக அவதாரத்தில் காட்டினானோ!

அந்த காஸ்மிக் காட்சியை நாமும் மனக் கண்ணால் கண்டால், துன்பமும், பயங்களும், துர் நிமித்தங்களும் பறந்து விடுமோ!

ஆயர் சேரியில் ஆடினார் போல் நாமும் குரவை பாடி கோலாகலம் பெறவேதான் இந்த நப்பின்னை அவதரித்தனளோ!

திட, திரவ, வாயு என்று மூன்று நிலைகள் போல,
பூ.(bhoo) புவர் (Bhuvar), சுவர் (swar) (physical, vital and mental level ) என்று மூன்று நிலைகளில்
இந்த உலகில் எல்லாப் பொருட்களும் இருக்கின்றன.

நம் உடலை எடுத்துக் கொண்டால், எலும்பு, கடின உரு இவை பூ- தத்துவம் (physical )
நம் உடலில் ஓடும் திரவப் பொருட்கள் (ரத்தம் முதலியன) புவர் (vital )
உருவமாகப் பார்க்க இயலாத மனம் மற்றும் எண்ணம் சுவர் ( mental )

இந்த உலகை எடுத்துக் கொண்டால், கடினமான நிலப் பகுதி, பூ
கடல், நீர், காற்று ( திரவத் தன்மை உடையதால்) ஆகிய இவை புவர்
ஆகாயம் சுவர்.

இந்த வகையில்தான், காக்கும் கடவுளான மாயவனும், மூன்று தேவியரைக் கொண்டுள்ளார்.
ஸ்ரீதேவி, பூ தேவி, நீளா தேவி.

இவர்களுள், பூதேவி, பூ தத்துவமான திடப் பொருளால் ஆனவள்.

ஸ்ரீ தேவி, மனத்தால் அனுபவிக்கப்படும் இன்பத்தைத் தரும் செல்வத்தைத் தரும் செல்வி.
எனவே அவள் சுவர் தத்துவம்.

இதில் நீளா தேவிதான் புவர் தத்துவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஓட்டமும், அலை பாயிதலும் இருக்க வேண்டும். அதே நேரம், ரத்தம் எப்படி ஜீவ சக்தியைக் காப்பாற்றுகிறதோ,
அவ்வாறே உலகின் உயிர் ஓட்டத்தைக் காப்பாற்ற வேண்டும்,
அப்படி இருக்கும் சக்தி என்ன என்று ஆராய்ந்தால் அது காந்த மண்டலம் என்று புலனாகிறது.

இதனுடன், நீளா சூக்ததையும் சேர்த்து ஆராய்ந்தேன்.

நீளா சூக்தம் எனப்படும் நீளா தேவியைப் பற்றிய எட்டு வரிகள் தைத்திரிய சம்ஹிதையிலும்,
யஜூர் வேதத்திலும் காணப்படுகின்றன.
வடமொழி இலக்கியங்களிலோ, கதை வழியாகவோ இவளைப் பற்றி ஒரு குறிப்பும் கிடையாது.
ஆனால் தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது,
தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது

கீரந்தையார்.

நித்தில மதாணி அத்தகு மதி மறுச்
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று

(அகலம் – மார்பு, களிறு – பன்றி ஆகிய வராஹம்.)

அது எவ்வாறு சிறந்த உரை அல்ல என்பது குறித்து அந்நாளில் விவாதங்கள் நடந்திருக்க வேண்டும்.
அந்த விவாதங்கள் இப்பாடலில் இடம் பெறவில்லை. ஆனால், மறை பொருளாக புலவர் இரு செய்திகளைக் காட்டியுள்ளார்.

(1) திருமால் அகலம் (மார்பு) வான் மதியைப் போல மாசு பட்டது அல்ல.
செய்யோள் என்னும் திருமகள் வீற்றிருக்கும் இடம் களங்கமில்லாதது. எனவே அவள் ஒருத்தி தான் திருமாலின் துணைவி!

(2) புள்ளி அளவு நிலமும் வெள்ளத்தால் வருந்தியதில்லை. எனவே தான் புவி மகள் திருமால் துணைவி ஆவார்
என்று சொல்லப்படுவது சிறந்த உரை அல்ல.

இவற்றை ஆராய்கையில், பூமகளும் திருமாலின் தேவிஆவார் என்ற வேதக் கருத்தும் மெய்ப்பட வேண்டும்.
அதே நேரம், திருமால் அவளைச் சேரவே திருமகளுக்குப் போட்டி என்றோ, சக்களத்தி என்றோ இருக்கக் கூடாது.
வேறு துணை ஒருத்தியைக் கொண்டவன் என்னும் அவப்பெயரும், களங்கமும் திருமாலுக்கு வரக் கூடாது.
இந்த வகையில் ஆராய்ந்து, ஒரே வார்த்தையாக ‘சிறந்தன்று’ – இந்த உரை என்று கீரந்தையார் கூறி விட்டார்!

அது எப்படி ‘சிறந்தன்று’ என்று ஆராயப் புகுமுன், திருமாலின் மற்றொரு துணை எனப்படும்
நீளா தேவி குறித்த தமிழ்ப் பாடலையும் பாப்போம்.

“வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதான்”

என்னும் ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் (சிலப்பதிகாரம்), வையம் அளந்த பெருமாளாகிய திருமால்,
தன் மார்பின் கண் உள்ள திருமகளை நோக்காமல், நப்பின்னையை நோக்கினான் என்று வருகிறது.
இங்கும் திருமகளை ஒதுக்கிவிட்டு, நப்பின்னையை நோக்கினான் என்று சொல்லப்படுகிறது.
இந்த நப்பின்னை பூ மகள் அல்லள். எனவே இவள் மற்றொரு தேவியான நீளா தேவி என்பது உள் பொருளாகக் காட்டப்படுகிறது.
வேறு எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாமல், தமிழ் இலக்கியத்தில் மட்டுமே இங்ஙனம் நீளா தேவியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளாள்.

ஒருவருக்கு மூன்று பேர் துணைவியர் என்றால் அது களங்கம் ஆகாதா என்றால், ஆகாது என்று
மறை பொருள் அறிந்த நம்மாழ்வார் காட்டுகின்றார்.
“குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்”-( திருவிருத்தம் – 3 ) என்கிறார்.
இங்கு கோவலர் மடப் பாவை என்று நப்பின்னையை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்) காட்டுவதால்,
அவள் நீளா தேவி என்பதும் புலனாகிறது.
இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே ஒருவர்தான் என்றும் காட்டுகிறது.
நிழல் ஒன்று தான் இருக்க முடியும்.
அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும் தெரிகிறது.

இந்தக் கருத்தை, நாம் முன்பு சொன்ன வாதங்களில் வைத்துப் பார்ப்போம்.
முதலில், கோவிலில் திருமால் ஸ்ரீ தேவி பூ தேவியருடன் எழுந்தருளி இருப்பதும்,
வீதி வலம் செல்லும் போதெல்லாம், அவர்களுடனே செல்வதும், நிழலை விட்டுப் பிரியாதிருப்பதைக் காட்டுகிறது.
நம்மால் பார்க்க முடிந்த இவ்விரு நிழல்களுடன், கண்ணுக்குத் தெரியாத நீளா தேவியும் அவருடன் இருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.

பரிபாடல் விவாதத்தின்படி, மண் மகளை மணந்தாலும், அது களங்கமல்ல.
மண் மகளை அவன் மணந்தான் என்பது உலகோருக்கு. என்றுமே மண் மகள், திருமகளைப் போல
அவர் மார்பைச் சார்ந்தே இருக்கிறாள் என்பதே உண்மை. மண்மகளும் திருமகளே.
அதுபோலவே நப்பின்னை என்னும் நீளா தேவியும் அவருடனேயே இருக்கின்றாள் என்பதும் உண்மை என்று ஆகிறது.
“நப்பின்னை நங்காய் திருவே’ என்று ஆண்டாள் கூறுவதும், நீளா தேவி திருமகள்தான் என்று தெளிவிக்கிறது.

இந்த வேதக் கருத்தையே இராமானுசர் ‘சரணாகதி கத்யம்’ என்னும் பாவினில் திருமாலை விட்டுப் பிரியாதவளாக
திருமகள் இருக்கின்றாள் என்று முதல் சூர்ணையில் சொல்லி, பின் 7 -ஆம் சூர்ணையில், அத்தகு திருவுக்குத் திருவான,
திருவின் மணாளனே, ஸ்ரீ வல்லபனே என்று சொல்லி,
மேலும் ‘நீ ஒருவனே பூமி, நீளா நாயகனும் ஆவாய்’ என்று ”ஏவம் பூத பூமி நீளா நாயக’ என்கிறார்.
இதன் மூலம் இம்மூன்று நாயகியருமே சமம். வேறுபாடு இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு திருக்கோவிலிலும், அந்தந்த இடத்தில், தன் துணைவியான திருமகளின் அம்சமான தேவியைத் திருமணம் கண்டு,
அவளும் தனி சந்நிதி கண்டு ஆண்டு வந்தாலும், நிழல் போன்ற இம்முத் தேவியர் திருமாலை இணை பிரியாது இருப்பார்.

எதற்கு மூன்று தேவியர்? திருமகள் என்னும் இலக்குமி ஒருத்தியுடனேயே மாயங்கள் செய்ய முடியாதவனா இந்தத் திருமால்?
முடியும்.
இலக்குமி என்னும் தமிழ்ச் சொல்லும், லக்ஷ்மி என்னும் வடமொழிச் சொல்லும்
‘ இலக்கு இவனே’ என்று திருமாலையே நம் இலக்காக, இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று தான் காட்டுகின்றன.
ஆனால் கர்ம வினையில் அகப்பட்டு சுழலும் நமக்கு திருமாலா இலக்கு? வேறு இலக்குகள் இல்லையா?
முக்கியமான மூன்று இலக்குகள் இல்லையா? மண், பொன், பெண் என்னும் மூன்று இலக்குகளைச் சுற்றியே
நம் வாழ்க்கை இயங்குகிறது அல்லவா?

மக்களை மயக்கும் மண், பொன், பெண் என்னும் மூன்று சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டால் தான்
வீடு பேறு கிடைக்கும், எனவே தான் இந்த சக்திகளுக்கு மூலமாக மூன்று தேவியரை திருமால் ஆட்கொண்டுள்ளார் என்று கூறலாம்.
இதில் மண் என்பது பூமகள் என்பதும், பொன் என்பது திருமகள் என்பதும் வெளிப்படை.
ஆனால் பெண் என்பவள் எவ்வாறு நீளா மகள் என்னும் ஆயர் பாவை ஆகிறாள்?

இதற்கு விடையை, நம் தமிழ் முன்னோர் தராமலா போயிருப்பார்? இதோ இருக்கிறது விடை,
காஞ்சிக்கு அருகில் உள்ள தூப்புல் என்னும் ஊரில் அவதரித்த தேசிகர் இயற்றிய ‘தயா சதகம்’ என்னும் பாவினில்.
திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமானின் தேவியராக இம்மூவரையும் போற்றுகையில்,
நாம் செய்யும் அநேக பாபங்களையும், தோஷங்களையும் அவன் காணாதவாறு, அவனை மயக்குபவள் என்று நீளா தேவியைக் குறிப்பிடுகிறார்.

மைத் தடங்கண்ணியான நப்பின்னை, எத்தனை போலும் அவன் துயிலேழவொட்டாள் காண்.
அவனைத் துயில் எழுப்ப மாட்டாள். அவள் துயில் எழுப்பினால் தான், அவன் எழுந்திருப்பான்.
அவள் மயக்கத்தில் அவன் ஆழ்ந்திருக்கவே, அந்த மயக்க நிலையிலேயே அவள் நம்மைப் பற்றி நாலு வார்த்தை நல்லதாகச் சொன்னால்,
நம்மிடம் உள்ள குற்றம் குறைகள் எதுவாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் அவன் நமக்கு அருள் பாலித்துவிடுவான்.

நப்பின்னையை நம்மில் ஒருத்தியாய், நம் தங்கையாய், நம் பின்னையாய்க் காட்டி, அவளிடம் கொண்ட மயக்கத்தில்
அவன் நம் குறைகளைப் பொருட்படுத்தமாட்டாமையைக் காட்டவே அவள் (நீளா தேவி) ஜீவத் தொகுதிகளின்
உருவகம் என்றும் நினைக்க ஏதுவாகிறது.ஜீவர்களிடம் அவன் மயங்கி உள்ளான்.

திருமாலுக்கோ காக்கும் வேலை.
யாரைக் காக்க வேண்டும்?
நம்மை, நம் போன்ற உயிரினங்களை.
எவ்விடத்தில் காக்க வேண்டும்?
இந்தப் புவியுலகில்.
அவன் தன் தொழில் செய்ய நாமும் வேண்டும்,
நாம் இருக்கும் இந்தப் புவியும் வேண்டும்.
மார்பில் திருமகளைத் தாங்கிக் கொண்டு,
இந்த இருவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது அவன் வேலை.
இதில் நாம் என்ன அட்டூழியம் செய்தாலும், அவன் பொறுத்து, பொறுத்து, நம்மைத் திருத்தப் பார்க்கிறான்.
அவன் கண்டிப்பாக நடந்து கொள்ளலாம். மாறாகத் தண்டித்தால் நாம் அவனை வெறுத்து விடுவோமே!
நம்மிடம் உள்ள பொறுப்பினால், மயக்கத்தால், அவன் நம் குறைகளைப் பெரிதுபடுத்துவதில்லை.

இதையே நம் தமிழ்க் குடியைச் சார்ந்த பிள்ளை உலகாசிரியர் என்னும் பெருமான், ஸ்ரீவசன பூஷணம் என்னும்
நூலில் அழகாகச் சொல்லியுள்ளார். நம்மிடம் பல தோஷங்கள் உள்ளன. நாம் செய்யும் தவறுகளுக்கோ அளவில்லை.
ஆயினும், நாம் செய்யும் செயல்களில் ஏதேனும் நல்லது இருக்காதா என்று பார்ப்பவன் அவன்.
( நீளா தேவி என்னும் உயிர்த் தொகுதிகளின் பிரதிநிதியின் பொருட்டு ).

பொற்கொல்லனிடம், பொன்னைக் கொடுத்து சோதித்துத் தருமாறு கேட்டால், அவன் அதை உரை கல்லில் தேய்த்துப் பார்ப்பான்.
நம் கண்ணுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் மிக மிகக் குறைந்த அளவில் பொன் துகள் கல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அதை மெழுகில் ஒற்றி எடுத்து வைத்திருப்பான். இப்படியே பலரிடமிருந்தும் வந்த பொன்னை சோதனை செய்கிறேன் பேர்வழி
என்று கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அப்படி எடுத்த பொன், நாளடைவில் கால் பொன்னாயிற்று, கழஞ்சு பொன்னாயிற்று என்று திரட்டி விடுவான்.

அந்தப் பொற்கொல்லனைப் போன்றவன்தான் திருமாலும்.
‘இவன் என் பேரைச் சொன்னான்’, இவன் என் ஊரைச் சொன்னான்’, இவன் அவனுக்குத் தண்ணீர் கொடுத்தான்’,
இவன் தங்க நிழல் கொடுத்தான்’ என்று எப்படியோ கணக்கு பண்ணி நம் குறைகளைக் கண்டு கொள்ளாமல்
நமக்கு நல்லதே நடக்கும்படி செய்து விடுவான் என்கிறார் பிள்ளை உலகாசிரியர்.

நாம் தற்சமயம் பார்க்காததா என்ன ? –
‘இவர் உன்னைத் துவேஷிக்கவில்லையா?
நீ நாட்டிய மதத்தை ஏசவில்லையா?
சாது முதல் சேது வரை அனைத்தையும் அலட்சியப் படுத்தவில்லையா?’ என்று நாம் கேட்டால்,
இவன் சரியான பதில் வைத்திருப்பான்.
‘என் அடியாரைத் துவேஷித்தாலும், மஞ்சள் துண்டு போட்டிருக்கிறானே,
அதன் மகிமை அவனுக்குத் தெரிந்திருக்கிறதே’ என்பான்!
‘ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோ அடிகளை சப்போட்டுக்குக் கூப்பிட்டுக் கொண்டாலும், செய்வது என்னவோ
சூரிய நமஸ்காரம்தானே,
அதுவும் தேவர்கள் விரும்பும் அதிகாலையில் செய்கிறானே’.
என்று கணக்கு போட்டு கண்டு கொள்ளாமல் போவதைத்தானே பார்க்கிறோம்!

இது நியாயமா?
அவனைப் போற்றும் நமக்குப் பல கஷ்டங்கள்.
அவனைத் தூற்றுவோர்க்கு என்றும் வெற்றிதானா என்றால், அது அப்படியல்ல.
பாதையை விட்டு விலகுவோரை முதலில், பாதைக்குத் திருப்ப வேண்டும். பாதையில் நடப்போருக்கு இலக்கு எது என்று காட்ட வேண்டும்.
மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி
அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும்.
தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற
நீளா தேவியின் கருணை – கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.

பாதையில் நாம் நடக்க ஆரம்பித்த பிறகு, நமது இலக்கு என்ன என்று வழிபடுத்துகிறான்.
அப்படிப் போகையில் துன்பங்களும், அவற்றிலிருந்து பிறக்கும் பாடங்களும் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன.
மண், பொன், பெண் என்று நாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி, சுற்றி வராமல்,
எது நம் இலக்கு என்று அறிந்து கொள்ள நம் தமிழ் ஆன்றோர் சொல்லாமல் இல்லை.

முன் கூறிய பரிபாடலிலேயே, கீரந்தையார் நம் இலக்கைச் சுட்டியுள்ளார்.
திருமால் கொடுத்த செல்வத்தில் மிகச் சிறந்தது அவன் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியது.
அதனால் அவர்களுக்கு சாவாமை, மூவாமை (மூப்பு இல்லாமை) , அழிவில்லா ஆற்றல் கிடைத்தது.
இந்த மூன்றையும் நாமும் பெற்று, கொடும்பாடு அறியாமல், மெய்யுணர்வு பெற வேண்டும் என்று
அவன் அருள் புரிய வேண்டும் என்று பாடலை முடிக்கிறார்.

“வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
… … … மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே”

இப்படி விழையும் நிலைக்கு நாம் வருவதற்கு, அவன் மூன்று தேவியருடன் வலம் வர வேண்டியிருக்கிறது.
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால்,
இந்த முத்தேவியரும் கோவிலில் எழுந்தருளி அருள் பாலிப்பது,
நம் தமிழக மரபில் கட்டப் படும் கோவில்களில் மட்டும்தான்.
அதிலும், நீளா தேவி சமேதராக திருமால் காட்சி தருவது,
தமிழ்ப் பகுதியான திருத்தங்கல் என்னும் ஊரில்தான்.
அன்ன நாயகி என்னும் பெயருடன், ஸ்ரீதேவியும்,
அனந்த நாயகி என்னும் பெயருடன் நீளா தேவியும்
திருமாலுக்கு வலப்புறம் இருக்க,
அமிர்த நாயகி என்னும் பூதேவி,
ஜாம்பவதி என்னும் – இந்த சம்புத்தீவு எனப்படும் நாவலம் தீவினை உருவகப்படுத்தும் ஜாம்பவதி தேவி இடப்புறம் இருக்க,
நடுவில் இருக்கும் திருமாலின் திருபெயரோ ‘நின்ற நாராயணன்!’

நாராயணன் நின்றிருந்த காட்சி ஒன்று உண்டு. அது, பாரதப் போர் முடிந்தபின், அம்புப் படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்க,
கிருஷ்ணன், யுதிஷ்டிரர் உள்ளிட்ட அனைவரும், சூழ்ந்திருந்து நின்றிருந்த நேரம்.
திருமாலின் ஆயிரம் திருப் பெயர்களையும் ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’ என பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே,
யுதிஷ்டிரரின் கேள்விக்குப் பதிலாகச் சொல்கையில், அந்த ஆயிரம் நாமங்களுக்கு உரியவனான திருமால்,
கிருஷ்ணனாக, நின்று கொண்டுதான் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த நின்ற நாராயணனின் பேரும், பெருமையும் சொல்கையில், அவன் முத்தேவியர் உள்ளிட்ட
அனைத்து பரிவாரங்களும் அவனுடம் இருப்பர். ஏனென்றால், அவர்கள் உள்ளடக்கி ,
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் குறித்தே அவன் லீலைகள், அவதாரங்கள், அவன் சிறப்புகள் எல்லாம்
சஹஸ்ரநாமத்தில் சொல்லப்படுகின்றன. அவன் நின்ற நாராயணனாக திருத்தங்கலில் நிற்கையில்,
மூன்று தேவியருமே உடன் இருப்பதாக வடித்தது, நம் தமிழ் முன்னோர்,
அந்த வேதப் பொருளின் முழு உண்மையை அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்று.

மேலும் நீளா தேவியை அனந்த நாயகி என்பதிலும் ஒரு உட்பொருள் புலனாகிறது. அனந்தன் என்பது ஆதி சேஷனின் பெயர்.
இறைவன் சேஷி எனப்படுபவன்.
அவனைத் தவிர்த்த மற்றெல்லாப் பொருட்களும் –
உயிருள்ளவை, உயிரில்லாதவை என அனைத்து பொருட்களும் –
சேஷன் எனபப்டுவர்.
இவர்களின் பிரதிநிதி ஆதிசேஷன் ஆவார்.

ஆதிசேஷன் இல்லாமல் திருமால் இல்லை. அவனுக்காக, அவன் பொருட்டு, அவனோடு, அவனில் என்று
திருமாலுக்கு ஆதிசேஷனோடு என்றும் தொடர்புண்டு.
அந்த ஆதிசேஷனே முக்குணங்களின் தொகுதியாக மூன்று வரிசை அரவணையாகவும்,
ஐம்பூதங்களின் தொகுதியாக ஐந்து தலைகளுடனும்,
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளான்.
இப்படிப்பட்ட ஆதிசேஷனை ஆள்பவனாகத் திருமாலும்,
வைகுந்தத்தில் அவன் மேல் அமர்ந்து,
மன்வந்திரங்களுக்கும், கல்பத்திற்கும் இடைப்பட்ட பிரளய காலத்தில் பாற்கடலில் அவன் மீது பள்ளி கொண்டு,
நின்றால் அவன் மீதே நின்று (திருவல்லிக்கேணியில்),
நடந்தால், கூடவே அவன் குடையாகப் பின்தொடர என்று –
பிரியாது இருக்கும் உறவில், ஸ்ரீதேவி, பூதேவி என்று காட்சி தரும் போது, எங்கே போனான் அந்த சேஷன்?

அவன்தான் அவளோ?
அனந்த நாயகி என்று நீளா தேவி திருத்தங்கலில் காட்சி தருவது,
நிழலாகப் பின் தொடரும் சேஷனே என்று காட்டவோ?
ஜீவக் கூட்டங்களின் தொகுதியாக உள்ள அவனில் திருமால் மயங்கியமையால் தான்,
ஓயாது குற்றங்கள் பல நாம் செய்கினும், நம் தோஷங்களைக் காணாமல் நம்மைக் கை தூக்கிவிடப் பார்க்கிறானோ?

நீளா தேவி என்ற பெயரைப் பாருங்கள்.
வடமொழியில் நீலா என்றுதான் எழுதப் படுகிறது.

ஆனால் உச்சரிக்கையில், அவள் நீளா ஆகிறாள்.
இதற்குத் தமிழில்தான் சிறந்த அர்த்தங்கள் உள்ளன.
அவள் நீளா. அதனால் நீளாது, குறுகியே, அவனில் ஐக்கியமானவளோ?
நீளாமையால் அவனுக்கும் (திருமால்) அவளுக்கும் உள்ள உறவு, பின்னிப் பிணைந்த ஒன்றோ?
மற்ற இரு தேவியருடன் அல்லாமல், நப்பின்னையுடன் மட்டுமே மனையியல் இன்பத்தில் திருமால் ஈடுப்பட்டுள்ளதாகக் காட்டியுள்ளது,
இந்த ஜீவக்கூட்டங்களைத்தான் அவன் முயக்குகிறான், மயக்குகிறான் – விரைவில் இவர்கள் தன் நிலை அடைய வேண்டும்
என்பதற்காக என்று நமக்கு அறிவிக்கவோ?

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: