ஸ்ரீ திரு விருத்தம் -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

களவிலே புணர்ந்து நீங்கின தலைமகன் -இவள் ஆற்றாமையை பரிகரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில்
தன் நிறத்தோடு போலியான பழங்களை சிலர் விற்பர்களாக பண்ணி – இவளும் அத்தைக் கண்டு தரிக்க –
அத்தை தாயார் நிஷேதிக்கிறாள் -தாயார் சொல்லுகிற மிகையை தலைமகள் தோழி மாருக்கு சொல்லுகிறாள்-
செவிலி வெறுத்தலைத் தலைவி தோழியர்க்கு உரைத்தல் —

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71 –எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

சூழ்கின்ற -முத்துலை இட்டுக் கொண்டு இவள் நலியா நின்றாள்=
முத்துலை இட்டு -நீர் ஏற்ற ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு அதிலே ஏற்றி மீண்டும் ஒரு குழி கல்லி
ஏற்றம் இட்டு ஏற்றுவாரை போலே -ஒன்றை சொல்லி அதுக்கு மேலே ஒன்றை கற்ப்பிக்கிறாள் –
மனைப் பாம்பு கடியா விட்டாலும் பயங்கரமாய் இருக்குமா போலே இவள் சொன்னது செய்யா விட்டாலும்-
பயங்கரமாய் இருக்கும் என்றபடி
முத்துலை ஒன்றுக்கு மூன்று சொல்லுகை
கடியன் கொடியன் -அப்படிப்பட்டவன் பிரளய காலத்திலேயே வந்து உதவினான் -என்று
வ்ருத்த கீர்த்தன முகேன உபகாரத்தை ஸ்த்ரீகரிக்கைக்காக-

ஸத்ருச வஸ்துக்களை ஆகிலும் கண்டால் ஒழிய ஜீவிக்கக் கூடாமையாகிய ப்ராவண்ய அதிசயத்தைக் கண்ட சில அன்பர்
சாதனாந்தர பரராக பிரமித்து இவரது ப்ராவண்யத்தை நிஷேதிக்க தம்முடைய அபிப்ராயத்தை மற்றும் சில
ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து அவர்களைக் கொண்டு இவர்கள் பிராந்தியைப் போக்கினை பாசுரத்தை
நாயகனுடன் ஒத்த பாதார்த்தங்களைக் கண்டு தரிக்க நினைத்த விரஹிணியான நாயகியை நிஷேதித்த தாயமார்க்கு
சகிகளைக் கொண்டு தன் அபிப்ராயத்தை அறிவித்து தெரிவித்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்வா பதேசம் –
இத்தால் அவனோடு போலியாய் இருப்பது ஓன்று அல்லது தரியாதபடியையும் – பகவத் விஷயத்தில் உண்டான
பிராவண்ய அதிசயம் ஒருவராலும் மீட்க ஒண்ணாதபடி இருக்கிறதையும் சொல்லுகிறது –

——–

போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே -ராத்திரி வந்து இருளாலே நலிய –
இத்தால் வந்த நலிவைப் போக்கி நம்மை ரஷிப்பார் யாரோ -என்று இருக்கிற அளவில் சந்தரன் வந்து தோன்றினான் –
இவ்விடத்தே பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் -ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே
போனானாய்-ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி நம்மை ரஷிப்பார் யார் -என்று
இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப் பசுவையும் கொன்று -அதனுடைய ரத்த பானத்தை பண்ணி –
இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் -அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரணம் பண்ணி போகல் ஆயிற்று –
இனி இத்தைத் தப்பி நம் சத்தையை நோக்குகை என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று அது போலே இறே இதுக்கும் –
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – – – 72 –சீலமில்லாச் சிறியன் -4-7-

அவன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை பெற வேணும் என்று ஆசைப்பட்டு -அதிலே கால் தாழ்ந்து கிடக்கிற நெஞ்சை உடைய –
துழாய் மலர்க்கே தாழ்கின்ற -அதில் அருமை ஒன்றையும் புத்தி பண்ணாதே -ஒரு தமியாட்டியேன் -ஸ்ரீ ஜனக ராஜனின் திரு மகளும்
ஒப்பன்று காணும் இவளுடைய தனிமைக்கு -இருளுக்கும் நிலவுக்கும் நொந்து தனிமைப் பட்டாள் இவள் இறே –
ஒரு -என்கிற இத்தால் உபமான ராஹித்யம் சொல்லுகிறது –
இவள் ஹிருதயம் பத்ம கோசம் -போன்றது ஆகையாலே ஆதித்யனுக்கே அலரக் கடவது
ஆகையாலே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –இருளுக்கும் சந்த்ரனுக்கும் மலராமையாலே
ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யதே -பிரிந்த பத்து மாசங்களிலே ராத்ரியும் உண்டு இறே –

ஸ்வாபதேசம் –
இத்தால் -இருளன்ன மா மேனி -என்கிறபடியே -திரு நிறத்துக்கு போலியான இருள் -அதுக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியையும் –
அதுக்கு மேலே சந்திரனும் -திரு முகத்துக்கு ஆதல்-திருக் கையில் திரு பாஞ்ச ஜன்யத்துக்கு ஆதல் –
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து -என்கிறபடியே திரு முகத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியால் இவற்றைச் சொல்லுகிறது –
பால சந்தரன் ஆகையாலே இருளானது சந்திரனையும் கை தொட்டு நலியா நின்று-கொண்டு தன்னையும் நலிகிறது என்றபடி –
புலிக்கு பசுவும் பிராமணனும் எதிரி போல் –

—————

நிலவு போய் முடிய நின்று பாதகமாய் —போய் என்றது மிகுதியாய் – அத்தாலே இவளும் நோவு பட்டு -மோஹித்து கிடக்க –
இத்தைக் கண்ட திருத் தாயார் -தர்ம ஹானி கிடீர் -என்று கூப்பிடுகிறாள் –
பிறை யுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சிக்குப் பாங்கி இரங்கல்-

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-வேய் மரு தோள் இணை -10 -3 –

அவனை ஒழிந்தார் அடங்கலும் கழுத்துக் கட்டி அவன் ஒருவனுமே துணை என்று இறே இவள் இருப்பது-
க்ரம ப்ராப்தி அமையும் என்று ஹிதம்-சொல்லுவார் பாதகராம் இத்தனை இறே –
தமியாட்டி -தமி -தனியாய் -அத்வதீயை —தனி -யாய் ஒருத்தி என்னுதல்–இப் பிரளயம் -இவளுடைய விரகம்-

ஸ்வா பதேசம் –
இத்தால் இவருடைய தசா விபாகத்தை கண்டார்க்கு அவனுடைய
ரஷகத்வத்தையும் அதி சங்கை பண்ண வேண்டும்படியான நிலையை சொல்லுகிறது-

————

ஒரு தென்றல் வந்து உலாவிற்றாய் -தென்றல் வந்தது -அவன் வரக் கண்டிலோம் -என்று தலைமகள் தளர -அத்தைக் கண்ட
தோழி யானவள் -இத்தை வெறும் தென்றல் என்று இருந்தாயோ –
மாளிகை சாந்து நாறா நின்றால்-ராஜ புத்திரன் -வரவணித்து – என்று இருக்க வேண்டாவோ –
இது அவன் வரவுக்கு ஸூ சகம் காண் -நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள்-ஆக இருக்கிறது –
தலைவனது தார் மணம் கொண்டு வரும் தென்றலைத் தலைவி மகிழ்ந்து உரைத்தல் —

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –செய்ய தாமரை -3 -6 –

இவன் திரு அபிஷேகத்தில் சாத்தின-திருத் துழாயிலே புக்கு உழறி-அதிலே வாசனையைப் பண்ணி -நடுவிலே ஒன்றிலும் தங்காதே-
கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலாவுகிறது -இனி உனக்கு சோகிக்க அவகாசம் உண்டோ –
அவன் முடி சூடு துழாய் என்று அமைந்து இருக்ககீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்கு கருத்து என் என்னில் –
அவன் ஆஸ்ரித அர்த்தமாக வ்யாபரித்த-இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை-

ஸ்வாபதேசம்
இத்தால் -அவன் ஆஸ்ரித அர்த்தமாக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியும் –
பிரளய ஆபத்தில் ஜகத்தை வயற்றில் வைத்து நோக்கின இம் மகா குணமும் -கோவர்த்தனம்-உத்தரணம் பண்ணின படியும் –
ஆகிற அக்குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வசிப்பிக்கிற படியை சொல்லுகிறது –
குண ஜ்ஞானத்தாலே ஜீவித்த படியை சொல்லுகிறது –

———–

கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒரு வகை யாதல் – அன்றிக்கே இயற்கையிலே ஐயமாதல் –
ஒரு நாள் சம்ஸ்லேஷித்து -விஸ்லேஷித்து -பின்னையும் வந்து சம்ஸ்லேஷித்த நாயகன் நாயகி உடைய வைபவம் உபய விபூதியிலும்
அடங்காது என்று கொண்டாடுகிறான் என்னுதல் -அன்றிக்கே -யாத்ருசிகமாக பிரதமத்தில் சம்ஸ்லேஷித்து பரிச்சேதிக்க
மாட்டாதே சம்சயிக்கிறான் என்னுதல்- மதி யுடம்படுக்கலுற்ற தலைவன் தலைவிப் பற்றி தோழியரை வினாதல் —

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –சன்மம் பல பல -3 -10 –

நித்ய விபூதியிலே போது போக்கி ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே -தன் சந்நிதானத்தாலே கிளர்ந்து வருகிற
திருப்பாற் கடலிலே புகுந்து குடில் கட்டி நோக்கிக் கிடப்பாரைப்-போலே -இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து
அருளுகிற -இந் நீர்மைக்கு-தோற்று இருக்கிற நித்ய சூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டாமோ
மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் -காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ
பிள்ளை திரு நறையூர் அரையர் -அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –
லீலா விபூதியை தானே ஆளுகின்றான் -சம்சாரிகள் கையில் கொடாத படி -அரையர் ஸ்ரீ ஸூக்தி –

ஸ்வாபதேசம்
இத்தால் ஆழ்வார் இருக்கிற இருப்பைக் கண்டாருக்கு -உபய விபூதியிலும் இவர் படிக்கு ஒப்பு இல்லை -என்று சொல்லும்படி
இருக்கிற படியை சொல்லுகிறது -அங்கு உள்ளார் நிரந்தர-பகவத் அனுபவமே யாய் இருப்பார்கள் –
இங்குள்ளார் இதர விஷயங்களின் உடைய வ்யாபாரங்களே யாய்-இருப்பார்கள் -இப்படி இவர் உபய வ்யாவ்ருத்தராய் இறே இருப்பது –
நிரந்தரமான பகவத் அனுபவமும் இன்றிக்கே -அன்ன பாநாதிகளால் தரித்து இருக்குமது அன்றிக்கே இறே இருக்கிறது –
இரண்டு-விபூதியிலும் கைக்கு அடங்காதபடி யாய் இருக்கிற இருப்பைச் சொல்லிற்று –
இங்கன் அன்றாகில்-இரண்டு இடத்திலும் அமையக் கூடாது இறே –

—————

சந்த்ரோதயத்தில் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து -சந்த்ரனுக்கு இங்கனே எளிய
செயல்கள் செய்கை ஸ்வ பாவம் காண்-நீ இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள் –
மாலை பெறாது வருந்தும் தலைவி மதிக்கு வருந்தி நெஞ்சோடு கூறுதல் —

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே – -76 –ஓராயிரமாய் -9 -3-

தம்தாமுக்கு பிராப்தியாய் உள்ள இடங்களிலே நலிகை முறை இறே –
தானும் வெண் திங்களாய் -இதுவும் வெள் வளை யாகையாலே -நிறத்திலே சாம்யம் கொண்டு -நலியலாம் இறே –

ஸ்வா பதேசம்
இத்தால் -திரு உலகு அளந்து அருளின போது -சாத்தின அச் செவ்வி மாலையை இப்போது பெற வேணும் என்று
ஆசைப்பட்டு பெறாமையாலே அனுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமாய் இருக்கிறபடியை சொல்லுகிறது –

——————

சந்த்யையில் நோவு படுகிறாள் ஒரு தலை மகள் வார்த்தையாய் இருக்கிறது –
தலைவி மாலைப் பொழுது கண்டு வருந்துதல் –

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-தாள தாமரை -10-1-

ராவணன் பட்ட களத்திலே மண்டோதரி கூப்பிட்டாப் போலேயும் வாலி பட்ட களத்திலே தாரை அங்கத பெருமாளையும்
கொண்டு கூப்பிட்டாப் போலேயும் ஆயிற்று-இவ் ஆதித்யனை இழந்த சந்த்யையும் அப் பிரதேசத்தை பற்றி நின்று ஈடுபடுகிற படி –
இத்தால் வாயும் திரை யுகிளில் படியே -கண்டது அடங்க தம்மோடு சம துக்கிகளாய் தோற்றுகிறபடி –
பகல் கண்டேன் -என்கிற ஆதித்யனை இழந்து இறே இவள் நோவு படுகிறது –
தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே – நம்மை நலிக்கைக்கு கூப்பிடுகிறதாய் இருந்தது இறே

ஸ்வா பதேசம்
கீழ் திரு உலகு அளந்து அருளின போது இட்ட மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டு பெறாமையாலே
நோவு பட்ட படி சொல்லிற்று –இதில் ராவண வத அநந்தரம்-இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று
ஆசைப் பட்டு வந்து கிடையாமையாலே-நோவு பட்ட படி சொல்லுகிறது –

—————–

இதில் கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தை பெற வேண்டும் என்று ஆசைப் பட்டாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது
பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலைக் கருதி நெஞ்சு அழிந்து இரங்கல் —

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – – 78- –இன்பம் பயக்க-7-10-

நமக்கு சாத்மிக்கும் விஷயம் சாத்மியாத விஷயம் என்று ஆராயாதே
ஆசைப்பட்ட நம் நெஞ்சு தந்து போன ஐஸ்வர்யம் இறே இது எல்லாம் என்கிறார் –
அவர் சாத்தின அழகிய திருத் துழாய் மலர்க்கே சாத்மிக்கும் விஷயத்தில் ஆசைப்பட்டு கிடையா விட்டால் படும் அதைப்
பட்டு கிடையாது என்று இருந்தாலும் -பற்றிற்று விடாதே நிற்கிற நம் நெஞ்சு தந்து போன கிலேசம் இறே இது எல்லாம் –

————

பாவியேன் -பகவத் விஷயம் என்றால் தளராதே நின்று அனுபவிக்குமவர்களும் சிலரே -என்கிறார் –
தலைவனை பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல் –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –மெய்ம்மாம் பூம் பொழில் –3 –5–

குறைவற்றார் சிலர் கொண்டாட இருந்தோம் என்று மேன்மை பார்த்து இராதே -குறைவாளரான சம்சாரிகளை பிரளயம்
நலியாதபடி வயிற்றிலே-எடுத்து வையா நின்றால் -நீ இது செய்யக் கடவ இல்லை -என்று சிலரால் சொல்ல ஒண்ணாது
இருக்கிறவனை -அநாதனை -ஆத்மேஸ்வரம் -என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் ––
புழுக் குறித்த தெழுத் தாமா போலே -ஒருகால் ரஷித்து விடுகை அன்றிக்கே –
ஜகத்தை அடைய வளைந்து கொண்ட திருவடிகளை உடையவனை –
இதில் பகவத் அனுபவத்தில் தம்மைப் போல் தளராமல் திருட ஸித்தராய் இருந்து அவனை அனுபவிக்கும்
பாகவதரைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார்

————-

ஆதித்யனும் போய் அஸ்தமித்து -இருளும் வந்து பாதகமாக நோவு படுகிறாள் ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது –
பிரிவாற்றாத தலைவி மாலைப் பொழுது கண்டு இரங்கல்-

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 – முடிச் சோதியாய் -3–1-

பார் அளந்த பேர் அரசே -இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது -மகா பலி-கையிலே அகப்பட்ட
பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –
அளந்த -பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –
இருளார் வினை கெட இறே செங்கோல் நடத்துகிறது –
பேரரசே -எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே -செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –
எம் விசும்பரசே -பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –
பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –
எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே -உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி-என்னை அகற்றி-முடிக்கைக்கும்
தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –
என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன் என்று வைத்து பிரித்து -இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் –
என்று இருக்கிறவன் ஆயிற்று –என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி இல்லையே -என்று
இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்

இருள் வந்து ஸ்பர்சிக்க புகா நின்றது -அதுக்கு முன்னே -இருளன்ன மா மேனியை-கொண்டு வந்து
இடை இட்டுக் கலக்க வேணும் என்கிறாள் –

ஸ்வாபதேசம் –
இத்தால் சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேலிடும்படியாய் இருக்கையாலே கடுக இவ்விருப்பை
கழித்து தர வேணும் என்று அருளிச் செய்கிறார் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: