ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூ லபமான திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற
திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து நிற்கிறவன் வந்து வர்த்திக்கிற தேசம் –
அந்த ஆனையினுடைய மௌக்த்யம் போலே இருப்பது ஓன்று ஆய்த்து இவனுடைய மௌக்த்யமும்-
திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகமாமோ என்னில் அக்னீஷோமீய ஹிம்சை போலே இருப்பது
ஓன்று இறே அவற்றிற்கு –

———–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது திருமலையிலே கிடீர் -என்கிறார் –

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

ராம பக்தியாலே திருவடி பரம பதத்தை விட்டு சம்சாரத்தைப் பற்றினான் –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராகையாலே நித்ய ஸூரிகள் சம்சாரத்தை விட்டு பரம பதத்தைப் பற்றினார்கள்
குற மகளிர் அவ்விரண்டையும் விட்டுத் திருமலையைப் பற்றி இருப்பார்கள் –
திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் இருப்பார்கள் –
பரம பதத்தில் தன்னோடு ஒக்க எல்லோரும் பஞ்ச விம்சதி வார்ஷ்கராய் இறே இருப்பது
அவர்களுக்கு சேஷியானவன் வர்த்திக்கிற தேசம் –

————-

இவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம்
என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடக் கூத்தாடின இளைப்பாலே திருமலையிலே வந்து நின்றான்
குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை நாவால் படைக்கும் சம்பத்து
நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

——————-

அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –
நமக்கு எம்பெருமான் பக்கலிலே வலியமூட்ட வேண்டி இருக்கும் –
இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

அறிவில் காட்டிலும் பிரேமமானது சால வலிதாய் இருக்கும் ஆகாதே –
ஸ்த்ரீத்வ பிரயிக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே –
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார்-

————–

இப்படி விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக விரும்பி இருக்கும் திருமலை
விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

கிருஷ்ணன் என்னது என்று அபிமானிக்கும் நிலமாய் ஜாதி உசிதமான வேங்கையின் பரிமளத்தை யுடைத்தான திருமலை –
காட்டு வேங்கையின் பரிமளமே யான திரு மலை –ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய்
ஆயன் – காடும் மலையும் உகக்குமவன் – காட்டிலே வர்த்திக்கும் இடையருக்குக் காட்டில்
மரங்களுடைய நாற்றம் சாலப் ப்ரியம் இறே-

———–

உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப்
பிழைத்துப் போம் இத்தனை -போக்கி தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் –
புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு என்கிறார் –
சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

வெக்காவே சேர்ந்தானை –இருவர் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ –
பாபங்கள் ஆனவை நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அறிந்து தப்பாவே பின்பு அவை நிற்கை
என்று ஓன்று உண்டோ –தானே ஆராய்ந்து நமக்கு இவ்விடம் அன்று என்று ஓடிப் போம் –

————–

கீழே சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் –
இதில் அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே தங்களை முடியச்
சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு நோக்குவான் அவனே -என்கிறார் –
அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –
இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–77-

அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ ஆகிஞ்சன்யராய் அநந்ய பிரயோஜனரான நமக்கும் அரண் –
முஃயத்தாலே-மூன்று ஏழு என்று அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி
ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் நமக்கு ரக்ஷை –

———–

நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் –
அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்–அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –
எது ஞானம் எது வ்ருத்தம் எது ஜன்மம் என்று இவை ஒன்றும் பாராதே ரஷகனாம் –
கதியாக ஸ்ரீ யபதியான அவன் திருவடிகளை அனுசந்தித்துச் சொல்லு –

————

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் –
அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் –
நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் –

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

இது கிடீர் நான் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
பச்சை நிறத்தையும் மிக்க பரிமளத்தையும் யுடைத்தான திருத் துழாய் மாலையையும்
தேங்கின கடல் போலே தர்ச நீயமான வடிவு அழகையும் யுடையவன் –
அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம்

———–

இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது –என்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

இவனே சரண்யன் என்னும் இடமும் அல்லாதார் வ்யர்த்தர் என்னும் இடமும் சொல்லுகிறது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: