ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ –பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் சம்சாரத்திலே
உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –
இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில் தம்முடைய திரு உள்ளத்தை மிகவும்
ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு திருப்பாற்கடலையும் விட்டு திருப்பதிகளைப் பற்றி இவை இத்தனையோடும்
தம்முடைய திரு உளத்திலே வந்து புகுந்தான் – இன்று என் துரிதத்தைப் போக்கி-என்னை அல்லது அறிகிறிலன்

————

ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் –
கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாத்ரமோ –பரமபதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

தன் உடைமையை மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தி யானவன் தன்னது மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தியாய் இருக்கிறபடி –
மகா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தி யானால் போலே உகந்து அருளின தேசங்களிலே
அர்த்தித்வம் தொடரும்படி நின்றான் –
அபேஷித்த சமயத்திலே ஒருக்கால் உதவிப் போகை அன்றிக்கே எப்போதும் உதவும்படி வந்து நிற்கப் பெற்றோமே என்று
திரு உள்ளம் மண்டி இருக்கிற இடங்கள் –
ஆஸ்ரிதர் அபேஷித்த போதாக வந்து அவதரிக்க வேண்டாதபடி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –

———————

இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் –
தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் –சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

சிக்குத் தலை என்று அறுவராது ஒழிவதே-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேக பாதியாக நினைத்து
இருப்பதே தாழ் சடையும் –இவை ஒக்க தோன்றா நின்றது –அவனும் சரீர பூதன் இறே-
விசஜாதீயமான வடிவுகளாய் இருக்கச் செய்தேயும் அசாதாராண விக்ரஹம் போலே இரா நின்றதீ –
கெட்டேன் -இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே-என்று ஆச்சர்யப் படுகிறார் –

———-

இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்-

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –
இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –

————

அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும் ஆயாச ஹேதுவான
வியாபாரங்களை யருளிச் செய்கிறார் –

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

பொங்கி –மகா விஷ்ணும் -என்கிறபடியே -கிளர்ந்து கொண்டு புறப்பட்டு
அரி யுருவமாய்ப் – ஜ்வலந்தம் -என்கிறபடியே நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –

————

தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –
உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ
அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-

அப்படுக்கையிலே கிட்டினவர்கள்-ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ப்ராப்தி பெற்றுப் போகா நிற்க
இவர்களுக்கு பிரகிருதி தோஷத்தாலே விநாசமே சித்தித்து விட்டதாய்த்து –
சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதிகோடியுமான விநாசமுமாய் விட்டது –
அதுகேடவர்கு இறுதி யாங்கு —-என்றும் என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம்
ஆவர்களே-பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-

——————

அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய
சேர்த்தியையும் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –
ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகை அனுபவிக்கிறார் –

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து ——67-

சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை
இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும் செய்யக் கடவ கார்யத்தை ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –
திகிரி மொட்டிக்க ஒட்டாது-வெண் சங்கு மலர ஒட்டாது-நடுவே நிற்கும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

————–

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா
திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் –

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

இவற்றின் உடைய மௌக்த்யம் போலே யாய்த்து-அவனுடைய மௌக்த்யம் -இருக்கும்படி –
அசூரா வேசத்தாலே வந்தது என்று அறியாதே அவனும் ஏதேனும் ஒன்றைக் கொண்டு பழம் பெறப் பார்க்கிறான் இறே-
இருவர் செயலும் ஓன்று போலே இருக்கை

—————–

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –
அதாகிறது ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள் –
அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பாடுகை சூடுகை குளிக்கை முதலான லோக யாத்ரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –
ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும் திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய வேறு ஒரு மலை அறியாள் –இக் குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம்
பரோபதேசமாக-திருமலையைப் பாடும் கோள்-அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –
அவன் சாய்ந்த கடலிலே நாடோறும் அவகாஹிக்கப் பாரும் கோள் –
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

——————

ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் –
இனி ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது –
அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

திருமலையில் திரியக்குகளும் தன்னை வணங்கும் ஞானத்தைக் கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது
ஞான கார்யமான சமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ண விருக்கும்
ஓர் ஆனைசென்று ஆஸ்ரயித்தால் போலே யாய்த்து திரு வேங்கடமுடையானை ஆஸ்ரயிக்கலாம் படி –
களிறு –ஆஸ்ரயிப்பாருக்கு ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்கள் அப்ரயோஜகம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: