ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

கீழே சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து
என்று கொண்டாடினார் –விஷயத்தைப் பார்த்தவாறே முதலடி இட்டிலராய் இருந்தார் –
அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
இவனை இம்மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார்
இத்தால் தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –
அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

ஓர் உழக்கைக் கொண்டு கடலை யளக்கப் போகாது இறே –அப்படியே
ஷூத்ரமான மனசைக் கொண்டு அபரிச்சேத்யனானவனை பரிச்சேதிக்க ஒண்ணாது இறே
நாம் ஒருக்கால் நினைத்தால் ருணம் ப்ரவ்ருத்தம் -என்று ஒருக்காலும் மறவான் –
நிரந்தரம் நினைத்தாலும் நினையாதாரையோ நினைப்பது –
அவனை நினையாதே மண்ணை முக்கப் பார்க்கிறதோ

———

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் – அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய்
நிரதிசய போக்யனுமான பின்பு இனியவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

இணர் -பூங்கொத்து-

இவன் தான் காணும் அன்று காண வரிதாய் அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும்
இழந்து ஆறி இருக்க ஒண்ணாது போக்யதையும் ஸ்வாமித்வமும் –
லௌகிகர் படியிலும் காண விரகற்று அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு
இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன்-கிட்ட மாட்டேன் –

————

அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே
இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச் சொன்ன அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –

———–

வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை அல்லது
ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான விக்ரஹத்தை யுடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை
தமக்குக் காட்டின வடிவு ஆர் தான் காணப் பெற்றார்களோ –

———

ஒருத்தரால் அறியப் போகாதாகில் வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில்
எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று
புக்கால் பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

அவனுடைய மணக் கோலத்தையும் ருஷபங்களை யடர்த்த ஒரு செயலையும் வடிவு அழகையும்
சொல்லப் போமோ –அவனுடைய ஒரு அபதானம் எல்லை காணப் போகாது –
இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ-

————-

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது – உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –
எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும்
அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு – அதாகிறது அவன் வடிவுக்கு போலியான
பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் –

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

கலந்து காட்டும் –சேர்ந்து காட்டும் –கேவலம் மேகம் காட்டுகிறதும் அன்று -கேவலம் ஆகாசம் காட்டுகிறதும் அன்று
இப்படி மின்னி முழங்கி வில்லிட்டுக் கொண்டு தோற்றுவது-சஜாதீயமாய் இருப்பதொரு மேகம் யுண்டானால்
அப்போது அத்தை யுடைத்தான ஆகாசம் சர்வேஸ்வரன் உடைய திருமேனிக்குத் தகுதியாய்க் கொண்டு தோற்றுவது

———–

பின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் –
எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் –
ஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் –

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம் ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம்
ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே – ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற
உன்னுடைய திரு மேனியை ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு
ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –
திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்தி வான் காட்டும் –
இவை போலி காட்டும்

———–

இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை ஆராய்ந்து
சம்சயியாதே சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சம்சயம் இல்லாத விஷயம்-மது மாறாதே இருப்பதுமாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை
யுடைத்தான மார்வை யுடையவன் –சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய் ஸ்ப்ருஹநீயமாய்
அழகிதான திருவடிகளை தொழப் பாருங்கோள் –தொழுகைக்கு விரோதியான அநாதி கால சஞ்சிதமான பாபங்கள்
நீங்கள் தொழுவதாக் ஸ்மரிப்பதற்கு முன்பே நசிந்து ஓடிப் போம் –

———-

அனுபவிக்கலாவது திருமலையிலே கிடீர் -என்கிறார் –திருமலையில்
குறவரோடு மூங்கிலோடு திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை

————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன் உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –
திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –
இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் –

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

அளக்கைக்கு இடம் போராத படியாய் இருக்க இவன் அளந்து கொண்டானபடி எங்கனயோ என்று
ஆச்சர்யப் படுகிறார் –நின்று அளக்கைக்கு இடம் போராது-என்ன ஆச்சர்யமோ –
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: