ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

கூரிதான அறிவை  உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார்
அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் –

நன்கோது நால் வேதத் துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற் கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11-

அந்த நீர் உறுத்தாத படி திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின் படி
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய்-தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து –
தரிசித்து –லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
ஸூஷ்ம அர்த்த அவகாஹியான விலக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து

————-

ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில் நான் சொல்லுகிற வழியாலே
காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் – இப்பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி ——12-

உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷதாபத்தி -இவ்வளவாக நன்கு உணர்ந்தவர்கள் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி நாள் தோறும் காண்பார்கள் –

—————

கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –
இதில் அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் –
அன்றிக்கே
இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

இத்தால் இவன் வளரக் கோலித்தது இவ்வளவு அன்று இடம் போராமை நின்றான் இத்தனை என்று தோற்ற நின்றது ஆய்த்து-
வடிவில் பெருமை –பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

————

எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி–அவன் பிச்சுக் கண்டு பிச்சேறி –
அல்ப மாதரம் அவன் பக்கலிலே நெஞ்சை வைக்க அந்த ஆஸ்ரயம் தான் எளிதாம்-
சகல வேதத்துக்கும் சார பூதமான திரு மந்த்ரத்தை அனுசந்திக்கவே சால எளிதாம் –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து நிற்கிறவன் –நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹநீயன் ஆனவன்
நித்ய ஸூரிகள் வந்து ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடான திருவடிகளை யுடையவன் தாழ நின்ற இடத்திலும் மேன்மை குறைவற்று இருக்கிறபடி
அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் –
ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம்

——–

இப்படிப் பெரியனான சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார்
அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத்துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது –
இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி-

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பரியவும் அறியாதே –படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே -இருக்க வந்து என் மனசிலே தங்கா நின்றான் –
பரிவாரைக் கை விட்டுப் பரிய வறியா விடிலும் -முறை யுணர்ந்தாரை தானே வந்து உகக்கும் –
அங்கு வகுத்தது என்று கிடக்கும் இங்கு உகந்து கிடக்கும்-எங்கே தங்குமவன் எங்கே வந்து தங்குகிறான்
கிடைக்கைக்கு ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே தானே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு வந்து உகக்கும்-

————

திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –
மனம் தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–

கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை
அவன் புருஷோத்தமன் ஆனாப் போலே இவள் நாரீணாம் உத்தமை –
மலர்மகள் விரும்புகையாலே சர்வாதிகத்வம் ஆகை-
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்-
ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்-

————-

இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற எல்லாம்
ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் அவளோடே கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டில்லை –
இனி என்னுடைய வாக்கானது அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக என்கிறது
எம்பெருமான் படி இதுவான பின்பு நாம் க்ருதக்ஞராய் இருக்கும் அத்தனை வேண்டும் –என்கிறார்
இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு
கழிந்த நாள்களும் இப்பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு
மேல் வரக் கடவ எல்லா நாள்களும் அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
இத்தை அசையிடும் நாள் இறே –

———–

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் –
உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் –
மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

சர்வேஸ்வரனே உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ-என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று அருளிச் செய்ய வேணும்-
இந்த்ரன் அபேஷிதம் செய்து தலைக் கட்டினாப் போலே நானும் இதொன்றும் பெறும்படி பண்ணி யருள வேணும்
ஒரு ஔஷதத்தை சேவித்தான் ஒருத்தன் பயம் இன்றிக்கே சர்ப்பத்தின் வாயிலே கையைக் கொடா நின்றான் இறே
அவனுடைய அருள் பெற்றவன்று சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே –

—————

அஞ்சாது இருக்க அருள் என்றார்
அநந்தரம்- திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்
அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –
அன்றிக்கே –
அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்-
யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்
நீ பயப்பட வேண்டா என்கிறார் –

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

அவனுக்கு அருள ஒண்ணாதது இல்லை -அஞ்சாது இருக்க அருள் -என்று அபேஷிக்கவும் அறியாதார்க்கும்
அருளுமவன் நமக்கு அருளானோ-
தம்தாமுக்கு என்ன ஒரு கைம்முதல் உடையார் பக்கல் காணும் அவன் தாழ்ப்பது –
யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன் அக்கடிகடனா சாமர்த்தியத்தால் அருளும் –
நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மாஸூச -என்று தேறி அருளுகிறார்-

————-

அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் –
சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –
உன் படியை நீயே சொல்ல வேணும் என்று எம்பெருமானைக் கேட்கிறார் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

இப்படி உனக்கு இஷ்ட சேஷ்டா விஷயமாய்ப் பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வந்த லோகம்
தன்னையே பின்பொரு நாளிலே மூன்றடியை இரந்து அளந்து கொண்ட விது பெரியதொரு செயலாகச் செய்தாயோ
அவனுக்கு மறுக்க மாட்டாத வ்யாமோஹம் இறே
இந்திரன் பல் காட்டின்து பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இறே –
என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –
இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ–சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: