ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

இப்படித் தாம் அடைவு கெட்டபடியை அனுசந்தித்து -நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே
அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் –
பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் –

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51-

நினைத்து உஜ்ஜீவி –தேவர்களுடைய புன்மையில் போகாது ஒழிகை -அவனையே நினை-
ஆஸ்ரித அபேஷிதம் ஒரு தலையானால் தன் படுக்கை என்றும் பாராதே அங்கு நின்றும் எழுந்து நின்று கார்யம் செய்த படி
பிரயோஜனாந்த பரருக்கு கடல் கடைந்து கொடுத்த படி-அர்த்திப்பாரைப் பெற்றவாறே படுக்கையைக் கடைந்து கொடுத்தான்
ஒரு கருங்கடல் வெண் கடலை நின்று கலக்கினாப் போலே -கடலைக் கடைந்த அழகு யுடையவனை புத்தி பண்ணு கிடாய் –
கிடந்த கடலை நின்ற கடல் கடைந்தாப் போலே -சமுத்ரத்தில் நீர் நிறம் போலே இருந்துள்ள நிறத்தை யுடையவன் –

———

திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும்
பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்-

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52-

அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன்-
ஆர் அது அறிவார் –அந்த ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –
ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –
அவன் பிராட்டியை அபஹரித்தான் -இவன் பூமியை அபஹரித்தான்-
அவனைப் போலே தலை அறுத்துப் பொகடாதே வைத்தமைக்கு அடி ஔ தார்யம் என்று ஒரு குணலேசம் கிடக்கையாலே –
மேல் இந்திர பதம் செலுத்துவானாக வைத்தவனுடைய ஆன்ரு சம்ச்யத்தை அறிவார் யார் –

————–

இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி
தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

இவ் வுடம்பைப் பொகட்டு லோகாந்தரத்தே வேறு ஒரு யுடம்பு கொண்டு அனுபவிக்க நினைக்க –
ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள்
திருமலையே பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-நான் இவ் யுடம்பால் யுள்ள பிரயோஜனம் இங்கே கொள்ளப் பெற்றேன் –

——————

இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக
நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே
பண்ணினானாய் இருக்கிறது –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின –பாலாலயமான திருப் பாற் கடலை க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-
உன் உகப்பைப் பற்றவும் -பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

—————-

இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் –
அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார்
உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் –
இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக் கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்
ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-உன்னுடைய ஆனந்த சமுத்ரத்தையும்
நீ எனக்கு அருளவும் வேணும் –-கண்டால் பிறக்கும் ஸூகத்தையும் பண்ணித் தந்து அருள வேணும்
அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ

——–

சேஷியை இப்படி நிர்பந்திக்கக் கடவதோ என்னில் -அது வைதமான படி இறே –
ஆசை மிக்கால் செய்யலாவது உண்டோ என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே அவளைக் கண்டால் இ றே அவ்வடிவு தோற்றுவது-
பிராட்டி சந்நிதி யுண்டாக அயோக்யன் என்று அகலவும் விரகு இல்லை -சாபராதன் என்று மீளவும் போகாது –
முறையில் நிற்கவும் ஒண்ணாது –
பிரபல புருஷ காரம் உண்டான பின்பு -முறைக்குச் சேராது பதறுகை -என்று லஜ்ஜித்து ஆறி இருக்கப் போமோ –

———————-

இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடி கோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்-

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

நாங்கள் அவனுடைய பேரை சேஷபூதர் என்னும் ப்ராப்தியாலே ஏத்தினோம் -முறை யறிந்த நாம் முறை தப்பாமே ஏத்தினோம் –
விபீஷண லஷ்மணாதிகளைப் போலே –சூர்பணகை போலே முறை கெட அல்ல –

————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –
பொன்னாழி பாடு என்று –வேப்பங்குடி நீர் இருக்கிறபடி-
நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வா பாவமாக உடையவனானவன் பண்ணின பிரசாதம்- நாம் பெற்ற நன்மைக்கு அடி என்கிறார் –

————–

இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்-

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

உன்னுடைய கமலம் போன்றுள்ள திருவடிகளை நினைத்தேன் –
உன் திருவடிகளை நமக்கு பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தேன் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினேன் -அநந்தரம் –
ஓர்ந்து – நிரூபித்துப் பரதந்த்ரமாய் என்னோடு எனக்கு அடைவில்லாமையையும் அவனுக்கேயாய் இருக்கிறபடியையும்
ஆராய்ந்து -ஆருடையத்தை ஆருடையதாகத் தான் நாம் பிரதிபத்தி பண்ணி இருந்தோம் என்று அனுதபித்து –
என்னையும் அங்கு ஓக்கினேன் –அத்திருவடிகளிலே என்னையும் நிஷேபித்தேன் -உபாயமும் அவனே யாக அத்யவசித்தேன் –
இத்தால் கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –

————-

இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர் யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் –
தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூ லபனான படியைச் சொல்லுகிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60–

உயர்வற உயர்நலம் உடையவனாய் இருக்கை யல்ல ஸ்வரூபம் -எளிவரும் இயல்வினனாகை-
ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
பிறக்கப் பிறக்க ஸூ த்த சத்வ மயமாகக் கொண்டு நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திருமேனி-
ஜகத் காரணாமாய்-எல்லார்க்கும் சத்தை அவன்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-
முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார்-
அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: