ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே -அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்-

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளால் அறம் அருளும் அன்றே –அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை –41-

பிராமணர்க்கு புறச் சேரி யருகு வழி போகாதாப் போலே-நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை
உடையவன் திருவடிகளையே நெஞ்சே நீ மறவாதே கொள்-நீ உனக்க அடைத்த விஷயத்தை விஸ்மரியாதே கொள்-

————

இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே
ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

தாயையும் தமப்பனையும் சேர நினைப்பாரைப் போலே –தேசாந்தரம் போன பிரஜை நினைக்குமா போலே –
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே இருவரும் கூட இருந்தாப் போலே நினையா நின்றேன் –
திரு இடை கழியிலே கண்டாப் போலே -அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோளைக் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று –இத்தை எல்லாம் த்யஜித்தவர்கள் இறே – அத் தோள்கள் தொழுவார் ஆகிறார் –
இப்படி நினைக்குமவர்கள் -இவ்வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-

———————–

நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய
விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் –
எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

ராஷசனாக அமையும் -குரங்குகளாக அமையும் -ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் -பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது -ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய பரம உத்தேச்யமாக
பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-
தன்னை அல்லது அறியாத வனான பரதனை அல்லது அறியாதவன் போல-

————

பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –
கீழே பாகவதர்களை விரும்பினார் -இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது -அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று
வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –

இத்தை ஒற்றியே –
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே-பெரிய திருமொழி -11-7-9- -என்கிறார் –
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் –
தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் -பாகவத சேஷத்வத்தை இந்த பதிகத்தில் வைத்தார்
கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்து கொண்டு இருப்பவர் அருளுகிறார் –
கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய் பாகவத சேஷத்வத்தை காட்டி கொண்டு
எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

————–

இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும்
சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள் அர்த்தத்தின் யுடைய
லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்-

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத் ஆன -1-4- என்று சஞ்சிதமான தனம் யுண்டு
என்று செப்பேட்டிலே கண்டு போகாமே
அந்நிதி வெளிப்பட்ட இடம் ப்ராமாணிகர்க்குப் பரம நிதிகள் ஆகிறன-உகந்து அருளின திருப்பதிகள் –
விண்ணோர் முடித்தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளதென்று இறுமாவார்-
இப்படிப் பட்ட உள்ளவனுடைய திருவடிகளைக் கிட்டின இவர்களுக்கு வேறு ஒன்றை நினைக்க அவசரம் யுண்டோ –
சம்சாரத்தில் சம்சாரியைக் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி அன்றோ –
இத்தை அன்றோ-உண்ணும் சோற்றில் முற் கூறும்-துவளில் மா மணியும் சொல்லுகிறது –
முன்ன நோற்ற விதி கொலோ-முகில் வண்ணன் மாயம் கொலோ –
நான் பண்ணின ஸூ க்ருதமோ -இடைவீடு இன்றிக்கே அவன் தன்னுடைய கிருபையோ –
என்னும் படிகளாலே பிரிவும் உத்தேச்யம் –
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளது என்று இறுமாவார் –

————–

இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் –
இப்பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது –
சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி –
அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் –
இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டா இறே –
இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று -அவன் பட்டது என்கிறது
ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

சிரகாலம் வர்த்திக்கிறதும் திருமலையிலே -முந்துற பொற்கால் பொலிய விட்ட தேசம் –
சர்வேஸ்வரன் –தன்னை சம்சாரிகளுக்குக் கொடுக்கையால் வந்த ஔதார்யமும் சௌலப்யமும்-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-1-
விட்டிலங்கு செஞ்சோதி-திருவாய் -2-7-5-
மால்-சர்வாதிகன் -பிச்சன்
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே -இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –

———

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47–

ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –
நினைத்த வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும் பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-
அண்ணலை –இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை -சேதனர்க்கு அனுபாவ்யமான
குணங்களை உடைய சேஷியை-கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் -அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –

————-

நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன
தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் -கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி –
எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

வேதங்களையும் யுண்டாக்கினாய்- அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே-அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும்
எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வேத பிரதிபாத்யத்வமும் ஸ்ரீ யபதித்வத்தோ பாதி –
வேத ப்ரதிபாத்யனாகில் பரம பதத்திலே இறே ஓலைப் புறத்திலே கண்டுப்போம் விஷயத்தை
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி கண்ணுக்கு விஷயமாக்கி திரு மலையை விரும்பினாய்
மாலே-திருமலையில் வந்து சந்நிஹிதன் ஆகைக்கு அடியான வ்யாமோஹத்தைச் சொல்லிற்று-

—————–

நெஞ்சே அவன் இப்படித் திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா –
ஆன பின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் –

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

நம்முடைய பிரதிபந்தகங்களை நினைத்து அஞ்சாதே கூப்பிடு-அது செய்யும் இடத்தில் ஜகம் அதிரும்படி கூப்பிடு –
பிரதிபந்தகங்களைச் செய்வது என் என்னில் -அப் பூதனை பட்டது படும் அத்தனை –
பேய்க்கும் தீண்டலாய் இருக்கிற விஷயம்-

————–

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

அழைப்பன் திருமாலை-ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை-
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-
ஆயவனே யாதவனே என்று அவனை –
கிருஷ்ணனே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனே என்று இரண்டும் சொல்லிக் கூப்பிடுவார்கள் போலே காணும் அவர்கள் —
இடைத்தனத்தோபாதி ஸ்ரீவஸூ தேவர் மகனானதுவும் ஆகர்ஷகமான படி –
இரண்டு அவதாரத்துக்கும் பிரயோஜனம் ருக்மிணீ நீளைகளை ப்ராபிக்கை –
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: