ஸ்ரீ மதே ரம்ய ஜா மாத்ரு முநயே விததே நம
யஸ் சுருதி ஸ்ம்ருதிஸ் சர்வ சித்தீ நாம் அந்தராய நிவாரணி –
ஸ்ரீ சைல தயா பாத்திரம் என்று தொடங்கி அருளிச் செய்த சேனை முதலியார் நாயனார்
ஜீயருடைய கல்யாண குணங்களில் தோற்று அடிமை புக்க படியை பிரகாசிப்பிக்கிறாராய் நின்றார் –
அவர் தம் அடியரான இவரும்-அக்குணங்களுக்கும் ஸுவ்ந்தர்யாதி களுக்கும் ஆஸ்ரயமான
திவ்ய மங்கள விக்ரகத்தில் ஈடுபட்டு பாதாதி கேசாந்தமாக அனுபவித்து தம்முடைய பரிவின் மிகுதியால்
மங்களா சாசனம் பண்ணின படியை அடைவே அருளிச் செய்கிறார் இதில்
செய்ய தாமரை பாடின சீர் அண்ணன் என்று இறே இவருக்கு நிரூபகம்
இப்படி மங்களா சாசனம் பண்ணுகிறவர் தம்முடைய சேஷத்வ அனுகுணமாக
உன் பொன்னடி வாழ்க என்னுமா போலே
பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு முந்துற மங்களா சாசனம் பண்ணுகையில் ப்ரவ்ருத்தர் ஆகிறார்
செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே —
பாதாதி கேசம் பரிவுடன் மங்களாசாசனம் செய்து அருளுகிறார் செய்ய தாமரை பாடிய சீர் அண்ணன்
செய்ய தாமரை தாளிணை வாழியே
பொன்னடியாம் செங்கமலப் போதுகள் அன்றோ இவர் திருவடி இணை –
பிரஜை முலையிலே வாய் வைக்கும்
நாண் மலராம் அடித் தாமரை
இவை யாய்த்து-உன் இணைத் தாமரை கட்கு அன்புருகி நிற்குமது -என்கிறபடி இதுவும் ஸ்வரூபமாய் இருக்கும்
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்துகை இறே நிலை நின்ற ஸ்வரூபம்
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -ஏத்துவதே நிலை நின்ற ஸ்வரூபம்
செய்ய தாமரை தாளிணை வாழியே
இவர் அடியைத் தொடரும் படி இவருக்கு -ராக மௌமனஸ்ய-பத ஸுவ் ப்ராத்ரங்கள் உண்டாயிற்று
அழகும் நிறமும் கொண்டு ஸேவ்யமாய் போக்யமாய் உபாய பூர்த்தியை உடைய திருவடிகள் அன்றோ
ராகம் -சிகப்பு
பதம் -திருவடிகள்
ஸுவ் ப்ராத்ரம் –அவற்றின் சேர்த்தி –
அதாவது
அழகியதாய்ச் சிவந்த செவ்வித் தாமரைப் பூ போலே தர்ச நீயமாய் போக்யமுமாய்த் தாமரைப் பூவை நிறைத்து
வைத்தால் போலே சேர்த்தி அழகையும் உடைத்தாய் உபாய பூர்த்தியையும் உடைத்தாய் யாய்த்து திருவடிகள் இருப்பது
இணை அடிகளின் இணை இல்லா அழகுக்கு ஏற்ற அன்பு கூர்ந்த மங்களா சாசனம்
உந் மீலத் பத்ம கர்பேத் யாதி
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த சீதக் கமலத்தை நீரேறவோட்டி -என்றும்
சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே என்றும் இறே அடி அறிவார் வார்த்தை
இப்படி இதனுடைய ஸுவ்ந்தர்யத்தையும் போக்யதா பிரகர்ஷத்தையும் அனுபவித்த இவர் மங்களா சாசனம்
பண்ணி அல்லது நிற்க மாட்டாரே -உன் சேவடி செவ்வி திருக்காப்பு -என்னுமா போலே
அன்றியே
செய்ய -என்கிற இத்தால் திருவடிகளுடைய செவ்வியைச் சொல்லிற்றாய் ஆஸ்ரிதர் அளவும் வந்து
செல்லுகிற வாத்சல்யத்தை உடைத்து என்கை –
இது அந்நாராய சக்கரவர்த்திக்கு ப்ரத்யக்ஷம் -முதல் அடியிலே இறே எழுந்து ரஷித்து அருளிற்று
வந்து அருளி என்னை எடுத்த மலர்த் தாள்கள் வாழியே என்கிறபடி தம்மையும் முந்துற வந்து விஷயீ கரித்து திருவடிகள் யாயிற்று
திருக்கமல பாதம் வந்து
அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி -என்னக் கடவது இறே
இவர் இப்படி தம்மை விஷயீ கரித்த செய்ய தாமரைத் தாள்களைக் கொண்டு சென்னித் தரிக்குமது அளவாக இருக்கிற
பொற் காலானது நம் சென்னித் திடரிலே ஏறும்படி வைத்து அருளுவதே என்று அவற்றினுடைய
பாவனத்வத்தையும் போக்யத்வங்களையும் அனுபவித்தகு அவற்றுக்கு தம்மோடு உள்ள சம்பந்தத்தால் ஒரு அவத்யமும் வாராது
ஒழிய வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் ஆகவுமாம்
ஆகையால் இவருக்கு ப்ராப்ய பிராப்பகங்கள் இரண்டும் அடி தானேயாய் இருக்கை-
———-
இனித் திருவடிகளுக்கு இவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையால் மேலே திரு வரையோடே சேர்த்து சிவந்து நிற்பதான
திருப்பரிவட்டத்தில் அழகில் சென்று அச்சேர்த்திக்கு மங்களா சாசனம் -மங்களத்தை ஆசாசிக்கிறார் -சேலை வாழி என்று –
கால் வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே
சேலை வாழி திரு நாபி வாழியே
திருவரையில் பாங்காக ஆஜங்கம்-முழங்கால்-தழைத்து உடுத்த திருப்பரிவட்டத்தில் அழகில் திரு உள்ளம் சென்று
மங்களா சாசனம்
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி என்று திருவரையில் உடை அழகும் பரபாகமாய் இறே இருப்பது –
சந்திரனைச் சூழ்ந்த பரிவேஷம் போலே யாயிற்றுத் திருவரைக்கு திருப்பரியட்டத்தோடே சேர்த்தி
ஸூதா நிதி மிவஸ்வைர ஸ்வீ க்ருதோதக்ர விக்ரஹம் -என்னக் கடவது இறே–
சந்திரனைச் சுற்றி ஓளி வட்டம் போலே சுற்றும் ஓளி வட்டம் சூழ்ந்து ஜோதி எங்கும் பரந்து உள்ளது
ஈனமில்லாத இள நாயிறாரும் எழிலும் செக்கர் வானமும் ஒத்த துவராடையும் -என்றும்
ஆதாம்ர விமல அம்பரம் -என்றும் அத்யாச்சர்யமாய் இறே இருப்பது
இத்தால் பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்தமை தோற்றுகிறது
அதுக்கு மேலே கண்டவர்களைக் கால் தாழப் பண்ண வற்றான திரு நாபி அழகிலே போந்து
அவ்வழகுக்கு போற்றி என்கிறார் -திரு நாபி -வாழியே என்று
திருப் பரியட்டத்தோடே சேர்ந்து இறே திரு நாபி இருப்பது
அந்தி போல் நிறத்தாடை என்ற அநந்தரம் உந்தி மேலதன்றோ-என்று
ஸ்ரீ ஆழ்வார் ஈடுபட்டது போலே ஸுவ்ந்தர்ய சாகரம் இட்டளப் பட்டு சுழித்தால் போலே இருக்கிற
திரு நாபியின் வைலக்ஷண்யத்தைக் கண்டு சேலை வாழி திரு நாபி வாழியே என்கிறார்
அது தான் அல்லாத அவயவங்கள் காட்டில் அழகியதாய் -அழகு ஆற்றில் திகழ் சுழி போலே இறே உந்திச் சுழி இருப்பது
ஸுவ்ந்தர்ய சாகரம் இட்டளப்பட்டு சுழித்தால் போலே இருக்கிற இதனுடைய வை லக்ஷண்யம் கண்ட இவருக்கு
வாழ்த்தி அல்லது நிற்கப் போகாதே -இது தான்
மடவார்களின் உந்திச் சூழலில் சுழலும் மனசை மீட்டு தன்னிடத்தில் ஆழங்கால் படுத்த வல்ல வற்றாயும் இருக்குமே-
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
திரு நாபிக்கு மேலாய் விசாலமாய் விமலமாய் ஸூந்தரமாய் இருக்கும் திரு மார்பையும்
அத்துடன் சேர்ந்த திரு யஜ்ஜோபவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார் –
திரு மார்புக்குத் தூய்மை யாவது –
ஹ்ருத்யேந உத்வஹத் ஹரீம்-என்று-நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமானைக் கொண்டு இருப்பது –
அத்தாலே ஹ்ருதயம் ஸுவ்ம்ய ரூபமாய் இருக்குமே
அவ்வளவும் அன்றியிலே-
இவர் திரு உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு
அரவிந்தப் பாவையும் தானும் சேர்த்தியுடனே யாய்த்து அவன் எழுந்து அருளி இருப்பது
விசேஷித்து வக்ஷஸ்தலசம் மாதவ ஸ்தானம் ஆகையால்
உள்ளொடு புறம்போடே வாசியற மாதவன் உறையும் இடமாய்த்து
கேசவாதி பன்னிரு திரு நாமங்களில் மாதவன் இடம் அன்றோ திரு மார்பு
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி என்றபடி
திருவுக்கு இடமாய்த்து பெருமானின் திரு மார்பு
திருமாலுக்கு இடமாய்த்து ஆச்சார்யரின் திரு மார்பு
மங்களம் மாதாவாராம் மனஸ் பத்மாய மங்களம்
ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மாநச வாசிந ஸ்ரீ நிவாஸாய -என்றும் சொல்லக் கடவது இறே
ஆஸ்ரிதர்களின் உஜ்ஜீவனத்தையே நினைக்கும் திரு மார்பு –
அவன் தான் அநந்ய ப்ரயோஜனருடைய ஹ்ருதயங்களிலும் ஆச்சார்ய பரதந்திரருடைய ஹ்ருதயங்களிலுமாயிற்று
அத்யாதரத்துடனே எழுந்து அருளி இருப்பது –
விண்ணாட்டில் சால விரும்பும் வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு
தன்னாரியன் பொருட்டாச் சங்கல்பம் செய்பவர் நெஞ்சு எந்நாளும் மாலுக்கு இடம் -என்னக் கடவது இறே
அந்த அநந்ய ப்ரயோஜனத்தையும் ஆச்சார்ய பாரதந்தர்யத்தையும் யாய்த்து இங்குத் தூய்மையாக சொல்லுகிறது –
அதுக்கும் மேலே
அழகாரும் எதிராசர்க்கு அன்பு உடையான் என்னும்படி
இவர் திரு உள்ளம் யதீந்த்ர ப்ராவண்யத்தை யுடைத்தாய் இருக்கையாலே
இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே -என்கிறபடி
பரம ஹம்சரான எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கிற மானஸ பத்மாசனத்தையும் உடைத்தாய் இருக்கும் –
ராகாதி தூஷிதமான சித்தத்தில் அவன் அநாஸ் பதியாய் இருக்குமா போலே அங்க ராக ரஞ்சிதமான இவருடைய
ஹ்ருதயத்திலும் ஆஸ் பதியாய் அன்று இரான் ஆய்த்து
இப்படிபை இவன் எழுந்து அருளி இருக்கையாலே ஸுவ்ம்ய ஜாமாத்ரு முனியுடைய ஹ்ருதயம்
அத்யந்த ஸுவ்ம்ய ரூபமாய் இருக்கும் என்கை
ஆகையால் -நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்கிறபடி இருவருமான சேர்த்திக்கு
இருப்பிடமான திரு மார்பை துய்ய மார்பும் புரி நூலும் வாழி என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் ஆகவுமாம்
இவர் மானஸ வாசியாய் இருக்கிறவனும்
புலம் புரி நூலவன் இறே
அலர் மேல் மங்கை உறை மார்பன் ஆகையால் அம் மா ஒருத்திக்கு இடமுடைத்தாய்த்து அம்மார்பு
இம்மார்பு இருவருக்கும் இடமுடைத்தாய்த்து இருக்கும்
திரு மாற்கு அரவு –இத்யாதி
மங்களம் பன்னகேந்த்ராயா –
அநந்தனாம் அவரே மணவாள மா முனி -என்னக் கடவது இறே
அதவா
துய்ய மார்வும்
ஸூபேந மநசாத் யாதம்-என்கிறபடியே ஆஸ்ரிதர்களுடைய அபராதங்களைப் பொறுத்து அவர்களுக்கு
எப்போதும் ஓக்க நன்மையைச் சிந்திக்கிற ஸுவ்ஹார்யத்தை யுடைத்தாகை-
உரசா தாரயாமாச -என்றும்
நல் நெஞ்சம் அன்னம்-என்றும் சொல்லுகிறபடியே இவை இரண்டும் தானேயாய் இருக்கை
துய்ய மார்வும்
ஏராரும் செய்ய வடிவு என்னுமா போலே இங்கும் யாவத் போகத்தைப் பற்றிச் சொல்லவுமாம்
மந்தர கிரி மதித்த மஹார்ணவ உத்கீர்ண பேந பிண்ட பண்டார ஸூந்தர ஸூகுமார திவ்ய விக்ரஹ என்று இறே இருப்பது
ஆக இவற்றால் சொல்லிற்று யாய்த்து
பாஹ்ய அப்யந்தர ஸூஸி-என்கை
இனித் திரு மார்போடு சேர்ந்து இறே திரு யஜ்ஜோபவீதம் இருப்பது
தாமரைத் தார் இடம் கொண்ட மார்வும் வண் புரி நூலும்
அப்படி யோடே சேர்ந்த திரு யஜ்ஜோபவீதம்–படி -விக்ரஹம்
துய்ய மார்வும் புரி நூலும்
துஷார கரகர நிகர விசத தர விமல உபவீத பரி சோபித விசால வக்ஷஸ்தல -என்கிறபடியே
சந்திரனுக்கு கிரணங்கள் தேஜஸ் கரமானால் போலே யாய்த்து திரு மார்புக்கு திரு யஜ்ஜோபவீதம் இருப்பது
சோபிதம் யஜ்ஜ ஸூத்ரேண -என்னக் கடவது இறே —
முந்நூல் மெய் நூல் -திரு மார்புடன் உள்ள சேர்த்தி அழகுக்கு பல்லாண்டு
அன்றிக்கே
இம் முந் நூலான மெய் நூலால் இறே பொய் நூல்களையும் கள்ள நூல்களையும் கருமம் அன்று என்று கழிப்பது –
வகுளதர தவள மாலா வஷஸ்தலம் வேத பாஹ்ய ப்ரவர சமய வாதச் சேதநம் –என்னக் கடவது இறே
தம்முடைய ப்ரஹ்ம ஸூத் ரத்தாலே இறே இவனுடைய காம ஸூத் ரங்களைக் கழிப்பது
ராஜேந்திர சோழனிலே பாஹ்யருடைய சங்கத்தால் சிகா யஜ்ஜோபவீதங்களைக் கழித்த ப்ராஹ்மண புத்ரன்
ஆழ்வானைக் கண்டு மீண்டும் அவற்றைத் தரித்து வர அவன் பிதாவானவன்
ஆழ்வானைக் கண்டாய் ஆகாதே என்றான் இறே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
இனி திரு மார்போடு சேர்ந்த திருத் தோள்களுக்கு அரண் செய்கிறார்
திருத் தோளிணை வாழியே –
மல்லாண்ட திண் தோளுக்கு பல்லாண்டு என்னுமா போலே -ஸூந்தர தோளிணை
புஜ த்வய வித்ருத விசத தர சங்க சக்ர லாஞ்சனங்களை உடைத்தாய் யாய்த்து திருத் தோள்கள் இருப்பது
தோளார் சுடர்த் திகிரி சங்குடைய ஸூந்தரன் இறே
சிங்கார மாலைத் திரு தோள்களும் அதிலே திகழும் சங்கு ஆழியும்-என்று அநு பாவ்யமாய் இறே இருப்பது
தோளிணை
எப்போதும் கை கழலா நேமியான்–என்கிறபடியே இவருக்கு திருத் தோள்களானவை எப்பொழுதும்
சங்கு ஆழி இலங்கு புயமாய் இருக்கையாலே வலத்து உறையும் சுடர் ஆழியும் பாஞ்ச சன்னியமும்
இங்கும் உண்டாய் இருக்கை –
அன்றிக்கே
திருத் தோள்கள் தான் பகவல் லாஞ்சனத்தில் ப்ரமாணமுமாய்
அபவித்ரரை ஸூப வித்ரர் ஆக்கியும்
துர் விருத்தரை விருத்தவான்கள் ஆக்கியும் போருமதாய் இருக்கும்
மந்தரம் நாட்டி மதுரக் கொழுஞ்சாறு கொண்ட ஸூந்தர தோளுடையான்-என்று
ஆண்டாள் அழகரின் திருத் தோள்களில் ஈடுபாடு
மறைப்பால் கடைந்து மெய்ப்பொருள் உணர்த்தி தத்வப் பொருள் காட்டும் மா முனிகள்
தோளிணையில் இவர் ஈடுபாடு-
தோள் கண்டார் தோளே கண்டார் என்னும்படி கண்டவர் தம் மனம் கவரும்
காண் தகு தோள் அண்ணல் அன்றோ மா முனிகள்
அநந்தரம் திருத் தோள்களில் ஏக தேசமான திருக் கையையும் –
அதிலே தரித்த த்ரி தண்டத்தையும் கண்டு அதுக்குத் தாம் கடகாக நிற்கிறார்
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
அவ்வோ காலங்களில் ஸாஸ்த்ர ப்ரமாணங்களால் உபய விபூதி நாயகனான சர்வ ரக்ஷகனையும்
ரஷிக்கும் திருத் தோள்கள் –
வெறும் கை தானே போருமாய்த்து ஆகர்ஷிக்கைக்கு -அதிலே த்ரி தண்டமுமானால் அழகு இரட்டிக்கச் சொல்ல வேண்டாமே –
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் என்னுமா போலே
காரும் சுரபியும் போலே விளங்கு கைத் தாமரையில் சேர்ந்து இருந்த தண்டும்-என்று இறே சேர்த்தி இருப்பது
இக்கை கண்ட இவரை கை விட்டு இருக்க மாட்டாரே
அன்றிக்கே
முந்தை மறை தமிழ் விளக்கும் முத்திரக் கை வாழியே என்கிறபடி தனது தொண்டைக் குலம் சூழ இருக்க
அவர்களுக்கு தமிழ் வேதமான திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை ஹஸ்த முத்திரையால்
உபதேசித்து அருளுவதும் அநு பாவ்யமாய் இறே இருக்கும் இவருக்கு –
உந் நித்ர பத்ம ஸூபகாம் உபதேச முத்ராம் என்ற உபதேச முத்திரையுடன் கூடிய திருக்கையும்
பாஷண்டிகளுக்கு வஜ்ர தண்டமாயும்–வேதாந்த சார ஸூக தரிசன தீப தண்டமாயும் இருக்கும்
தத்வ த்ரயத்தை விளக்கும் திரி தண்டம் திருக்கையில் ஏந்தி அருளும் அழகுக்கு பல்லாண்டு –
எழில் ஞான முத்திரை வாழியே -என்று சொல்லக் கடவது இறே
ஏந்திய
பூ ஏந்தினால் போலே இருக்கை
கையில் ஏந்திய முக்கோலும் வாழியே
நின் கையில் வேல் போற்றி என்னுமா போலே
அன்றிக்கே
கமல கரதல வித்ருத த்ரிதண்ட தர்சன த்ருத ஸமஸ்த பாஷண்ட ஸூ தூர பரி ஹ்ருத நிஜா வசத-என்று
ஒருக் கோலார் தொடக்கமானவரை எல்லாம் ஓட்டுமதாய் இருக்கும் –
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
கண் காணக் கை விட்டார்-
கார் போலும் செங்கை யுறை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே -என்று திருக் கைக்கு அனந்த பாவியாய்ப்
பேசுவது திருக் கண்களை இறே
திருக் கைகளால் ஸ்பரிசித்து அருளின பின்பு இறே திருக் கண்களால் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளுவது
கருணை பொங்கிய கண்ணினை
கருணைக் கடலான இவருடைய கிருபை பெருகும் ஆனைத் தாள்கள் இருக்கிற படி
நிரந்தர கருணை அம்ருத தரங்கிணி பிரார்த்ரிதா பாங்கைர் அநு கூலம் அபி ஷிஞ்ச-என்றார் இறே
இவரைப் போன்ற கண் உடையார் ஒருவரும் இல்லையே
இவருடைய கண் இறே எல்லாருக்கும் களை கண்
கண் அருளால் இறே எல்லாரையும் ரஷித்து அருளுவது
கண்ணிணை
கருணை பொழியும் திருக்கண்கள் –
அலர்ந்த தாமரைப் பூவில் இரண்டு வண்டுகள் அமர்ந்து இருப்பது போல்
திருக் கண்களானவை திரு முக மண்டலத்துக்கும் கண் காட்டிகளாய் இருக்கிற படி –
புன் முறுவலோடு கூடின தாமரை போன்ற முகத்தில் திரு உள்ளத்தில் பொங்கும்
கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள் –
இதற்கு தோற்று ஜிதந்தே புண்டரீகாஷா -என்கிறார்-
நேத்ரேன ஞானேனா -ஸ்வரூப வை லக்ஷண்யமும் ஞான வைலக்ஷண்யமும் சொல்லிற்று ஆயிற்று
ஸ்மயமாந முகாம் போஜாம் தயா மாந த்ருகஞ்சலம்–என்கிறபடி இறே சேர்த்தி இருப்பது
திருக் கண்களை அருளிச் செய்தது உத்தம அங்கத்திலே அழகுக்கு எல்லாம் உப லக்ஷணம்
வாழி செவ்வாய் -என்றும்
வார் காதும் திரு நாம மணி நுதலும் வாழியே என்றும் அவற்றையும் திரு நாமாந்தரங்களிலே காணலாய் இருக்கும்
அத்தாலே அவை இரண்டையும் மங்களா சாசனம் பண்ணி அருளினார்
இவர் ஜீயர் திருக் கண் மலரில் யாய்த்து ஜிதம் என்று தம்மை எழுதிக் கொடுத்தது –
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே
இவ்வளவும் ஸூ ரூப வை லக்ஷண்யம் அனுபவித்து மங்களா சாசனம் பண்ணின இவர்
இனி ஸ்வரூப குணமான ஞான வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து மங்களா சாசனம்
பண்ணுபவராக அதிலே இழிகிறார்
கட் கண் என்றும் உட் கண் என்றும்
நேத்ரேண ஞாநேந -என்றும் ஞான சஷுஸ் ஸூக் கள் இரண்டுக்கும் தர்சனத்தவம் ஒத்து இருக்கையாலே
ஒரு சேர்த்தி உண்டு இறே
அத்தாலே
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி–என்று ஞானத்தைப் பேசுகிறார்
புலன் -புந்தி -ஞானம்
பொய்யிலாத
இவர் விஷயத்தில் சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் யதார்த்தமாக உண்டு என்கை –
இனிச் சொல்ல மாட்டாதார் குறையே உள்ளது –
அன்றிக்கே
ஆஸ்ரிதரானவர்களுக்கு அசைத்தவாதி தோஷங்கள் வாராமல் நோக்கிப் போருமவர் என்றுமாம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிநாதாம்–கடாஷத்தாலே தோஷங்களைப் போக்கி அருளுபவர்
செறிந்தவர் தமேதத்தை மாற்றுபவராய் இருப்பாரே-
மணவாள மா முனி
ரக்ஷகர் இன்றிக்கே ஒழிந்தாலும் வடிவில் போக்யதையும் திரு நாம வைலஷண்யமும் விட ஒண்ணாததாய் இருக்கை
பொய்யிலாமை புந்திக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது ராமானுஜன் மெய் மதிக் கடல் –என்கிறபடி
அதி விலக்ஷண ஞானம் -உண்மை நன் ஞானமான யதார்த்த ஞானத்தை உடையவர் என்கை –
அதாவது
மெய் ஞானமும் இன்றியே -வினையியல் பிறப்பு அழுந்தி என்கிறபடி
சம்சார ஆர்னவ மக்நரானவர்களை ஞானக் கையால் யுத்தரித்துப் போருமவர் என்கை –
சேதனர் படும் ஆபத்தைக் கண்டால் கையாளும் காலாலும் இறே இவர் எடுத்து ரக்ஷிப்பது-
ஞானக்கை தந்து வந்து அருளி எடுத்த புந்தி வாழியே
ஞான பிரதானர்களாய் இறே இவர்கள் இருப்பது
தீ பக்த்யாதி குண ஆர்ணவம் என்றும்
புந்தி வாழி -என்றும் அருளிச் செய்து போருகையாலே
ஞானம் சார பூத குணமாகையாலே அத்தை பிரதானமாகச் சொல்லக் கடவது
தத்ர சத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகம் –என்கிறபடியே சுத்த சத்வமயமான விக்ரஹ மாகையாலே
உள்ளில் பிரகாஸித்வம் என்ன-உள்ளில் உள்ளவற்றை பிரகாசிப்பிக்கக் கடவது இறே
புந்தி என்று ஞான மாத்ரத்தைச் சொன்னது பக்தியாதிகளுக்கும் உப லக்ஷணம்
மங்களம் நிர்மல ஞான பக்தி வைராக்ய ராசியே -என்னக் கடவது இறே
வாழி –
மங்களா சாசனம் பண்ணி அருளினார்
ஞான பக்த்யாதிகள் இறே ஆத்ம அலங்காரம் என்பது
ஞான பக்த்யாதி பூஷிதம்-என்பது போலே
அன்றிக்கே
ஆச்சார்யனுக்கு அடையாளம் அறிவும் அனுஷ்டானம் என்றும்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையவனான குரு -என்றும் இறே
ஆச்சார்ய லக்ஷணம் அருளிச் செய்வது
ஆகையால் ஆஸ்ரிதருடைய அஞ்ஞானத்தைப் போக்கி சம்பந்த ஞானத்தை விளைவித்து
கைங்கர்ய பர்யந்தமாக நடத்திக் கொண்டு போவது எல்லாம் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே-என்கை –
மணவாள மா முனி புந்தி -என்கையாலே
இவருடைய ஞானம் அல்லாதாருடைய ஞானத்தைக் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய்
தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ர்யம்-அலகு அலகாய் காண வல்லதாய்- ஆழ்ந்த பொருள்களை உபதேசித்து அருளியவர்
நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -தாமரையாள் கேள்வன் ஒருவனையே-ஸ்ரீ யபதியை விஷயமாக உடைத்தாய் உடைய ஞானம்
அது தான் ததீய சேஷத்வம் ஆகிற சரம அவதியான எல்லை நிலத்தில் நிலை நின்று போவதாய் இருக்குமே
தத்வ த்ரயங்களோடு ஸ்ரீ வசன பூஷணம் கண்ட சகல ஸாஸ்த்ர ஆச்சார்யர் என்னக் கடவது இறே
நித்ய ஸ்ரீ நித்ய மங்களமாகச் செல்ல மங்களா சாசனம்
ஆக
இவை எல்லாவற்றாலும்
ஸ்ரீ கீதையை அருளிச் செய்த கண்ணன் என்னும்படி நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனுடன் விகல்பிக்கலாம் படி ஞான நீதியாய் இருக்கும் இவருடைய ஞானமானது
கலி தோஷம் தட்டாமல் நித்ய மங்களமாய்ச் செல்ல வேண்டும் என்று வாழ்த்தி அருளினார் -என்கை
கலி தோஷத்தால் இறே சேதனருடைய ஞானம் அல்பீ பவித்துப் போவது-
இவர் பல்லவ ராயருக்கே கலி கண்டித்த திறல் வாழியே என்னக் கடவது இறே
கலி கன்றியான் அருளால் உயர்ந்தவர் இறே இவர் தான் –
இனி இவர் இப்படித் தம் ஞான அனுஷ்டானங்களால் ஞான விபாகமற சகல சேதனர்களையும்
ரஷித்துக் கொண்டு போவதால் வந்த புகழைச் சொல்கிறது
ஞாலம் உண்ட புகழ் போல் இருபத்தொரு புகழாய்த்து இது
தன் புகழ் நயவாருடைய புகழ் போற்றி இருக்கிற படி
அதாவது
ஞான வைபவத்த்தாலே வந்த புகழானது -தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்ததே -என்கிறபடியே –
நிரவதிக தேஜோ ரூபமாய் அப்ரதிஹதமாய் வாழ வேணும் என்கை –
புகழ் வாழி -என்ற அநந்தரம் -வாழி –
என்று இரட்டிப்பாய் இருப்பதற்கு பிரயோஜனம் பல்லாண்டு பல்லாண்டு என்கிறார் ஆகவுமாம்
அன்றிக்கே
நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே–என்று கீழ்ச் சொன்ன யசஸ்ஸூக்கு ஆதாரமாய்
அநுக்தமான ஆத்ம குண வைலக்ஷண்யமும் அனவ்ரத பாவியாய்ச் செல்ல வேணும் என்று ஆசாசிக்கிறார் ஆகவுமாம்
அடியே தொடங்கி இதுவே இறே இவருக்கு யாத்திரை
இத்தால்
சரம பர்வமான ஜீயர் விஷயத்தில் மங்களா சாசனம் அநு கூலரானவர்க்கு அனவ்ரத கர்தவ்யம் என்று
அருளிச் செய்து தலைக்கட்டி அருளினார் ஆயிற்று
வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ் வாழி
முந்நூல் உறை மார்பு முக்கோல் அங்கை வாழி
திண் தோள் வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாமம் மருவு நுதல் வாழி
பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே
மணவாள மா முனிகள் திருவடிகள் வாழியே
துவராடை வாழியே
இடை வாழியே
திரு நாபி வாழியே
யஜ்ஜோபவீதம் விளங்கும் திரு மார்பு வாழியே
முக்கோல் ஏந்திய திருக்கைகள் வாழியே
திருத்தோள்கள் வாழியே
பவளச் செவ்வாய் வாழியே
திருக்கண்கள் வாழியே
ராமானுஜ திவ்ய ஊர்த்வ புண்ட்ரம் வாழியே
திரு நெற்றி வாழியே
பொன் அரங்கின் மணவாள மா முனி வாழியே
—————————
ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்த்து
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply