ஸ்ரீ கம்ப ராமாயணம் -ஸ்ரீ ஸூந்தர காண்டம்-6–பொழில் இறுத்த படலம்-

விடைபெற்ற அனுமனின் உள்ள நிலை
நெறிக் கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்,
பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான்,
‘சிறுத் தொழில் முடித்து அகல்தல் தீது’ எனல், தெரிந்தான்;
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான். 1

‘ஈனம் உறு பற்றலரை எற்றி, எயில் மூதூர்
மீன நிலையத்தின் உக வீசி, விழி மானை
மானவன் மலர்க் கழலில் வைத்தும்இலென் என்றால்,
ஆனபொழுது, எப் பரிசின், நான் அடியன் ஆவேன்? 2

‘வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே,
வெஞ் சிறையில் வைத்தும்இலென்; வென்றும்இலென்; என்றால்,
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ? 3

‘கண்ட நிருதக் கடல் கலக்கினென், வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள் மலர்க் குழல் பிடித்து,
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ? 4–மண்டவுதரத்தவள்–மண்டோதரி

மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது அன்று
ஒட்டி இவ்வரக்கரை யுலைத்து உரிமை எல்லாம்
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாது கொல் என்று முயல்கின்றான் –5-

இப் பொழிலினைக் கடிது இறுக்குவென் இறுத்தால்
அப் பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர்த்து மேல் வருவர் வந்தால்
துப்புறு முருக்கி யுயிர் உண்பல் இது சூது ஆல்–6-

வந்தவர்கள் வந்தவர்கள் மீளகிலர் மடிந்தால்
வெந்திறல் அரக்கனும் விலக்கு அரு வலத்தால்
முந்தும் எனின் அன்னவன் முடித்தலை இடித்து என்
சிந்தையுறு கோபமும் அவித்து இனிது செல்வேன் -7-

அசோக வனத்தை அனுமன் அழித்தல்
என்று நினையா, இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்;
அன்று, உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்;
துன்று கடி காவினை, அடிக்கொடு துகைத்தான். 8

முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த;
இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;
ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த. 9

வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில்
காரொடு செறிந்த சில; காலினொடு வேலைத்
தூரொடு பறிந்த சில; தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில; உக்க, சில நெக்க; 10

சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர்
ஆனன நுகரக் குளரும் ஆன; அடி பற்றா
மேல் நிமிர விட்டன, விசும்பின் வழி மீப் போய்,
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த. 11

அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக விடிந்தன குலக் கிரிகளோடு
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து
உலைந்து விழு மீனினொடு வெண் மலர் உதிர்ந்த –12-

முடக்கும் நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும் வகை வீசின களித்த திசை யானை
மடப் பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன எயிற்றினிடை ஞால்வ –13-

விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும்
துஞ்சல் இல் வானவர் துரக்க நகர்த்தும்
பஞ்சவடி வஞ்சியர் கண் மொய்த்தனர் பறித்தார்
நஞ்சம் அனையானுடைய சோலையில் நறும் பூ –14-

பொன் திணி மணி பரு மரம் திசைகள் போவ
மின் திரிய ஒத்தன வெயில் கதிரும் ஒத்த
ஒன்றினொடும் ஒன்றிடை புடைத்து உதிர ஊழில்
தம் திரள் ஒடுக்கி விழு தாரகையும் ஒத்த – 15-

புள்ளினொடு வண்டும் மிஞ்றும் கடி கொள் பூவும்
கள்ளும் முகையும் தளிர்களோடு இனிய காயும்
வெள்ளம் நெடு வேலையிடை மீன் இனம் விழுங்கித
துள்ளின மரம் பட நெரிந்தன துடித்த –16-

தூவிய மலர்த் தொகை சுமந்து திசை தோறும்
பூவின மணம் நாறுவ புலால் கமழ்கிலாத
தேவியர்களோடு உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனில் ஆய திரை ஆர் கலிகள் அம்மா –17-

இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும்
தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூரக்
கடந்து செலவு என்பது கடந்த இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் —18-

வேனில் விளையாடு சுடரோன் ஓளி விம்மும்
வானினிடை வீசிய வரும் பணை மரத்தால்
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடியாய
வானம் இடியால் ஓடியும் மால் வரைகள் மான –19-

எண்ணில் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே
தண்ணம் மழை போல் இடை தழைத்தது சலத்தால்
அண்ணல் அனுமன் அடல் இராவணனது அந்நாள்
விண்ணின் ஒரு சோலை யுளதாம் என விதித்தான் –20-

தேனுறை துளிப்ப நிறை புள் பல சிலம்பப்
பூ நிறை மணித்தரு விசும்பினிடை போய்
மேல் முறை நெருக்க ஓளி வாளோடு வில் வீச
வானிடை நடாய நெடு மானம் எனலான–21-

சாகம் நெடு பணை தழைத்தன தனிப்போர்
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வன நாநா
மாகம் நெடு வானிடை இழிந்து புனல் வாரும்
மேகம் எனலாய நெடு மா கடலின் வீழ்வ –22-

ஊனம் அற்றிட மண்ணின் உதித்தவர்
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என
தானம் கற்பக தண் தரு விண் தலம்
போன புக்கன முன் உறை பொன்னகர் –23-

இராவணன் கொண்டு வந்தவ கற்பகம் மீண்டும் ஸ்வர்க்கம் போனதாம் –
அஷ்ட வசுக்கள் பீஷ்மர் போலே பிறந்து போனமை போலே

மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம்
துணி படுத்தி அயல் வாவிகள் துர்த்து ஒளிர்
திணி சுவர்த்தலம் சிந்தி செயற்கு அரும்
பணி படுத்து உயர் குன்றம் படுத்தரோ -24-குட்டிமம் -திண்ணை –

வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராயப்
பாங்கர் செண்பக பத்தி பறித்து அயன்
மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே — 25-

சந்தநங்கள் தகர்ந்தன தாள் பட
இந்தனங்கள் வெந்து எரி சிந்திட
முன்பு அநங்கன் வசந்தம் முகம் கெட
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே –26-

காமரம் களி வண்டு கலங்கிட
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு
தாமரங்க அரங்கு தகர்ந்து உகப்
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே–27-

குழையும் கொம்பும் கொடியும் குயில் குலம்
விழையும் தண் தளிர் சூழலும் மென் மலர்ப்
புழையும் வாசப் புதும்பும் புலன் கொள் தேன்
மழையும் வேண்டும் மயிலும் மடிந்தவே – 28-

பவள மாக் கொடி வீசின பல் மழை
துவளும் மின் எனச் சுற்றிடச் சூழ் வரை
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன
கவளம் யானையின் ஓடையின் காந்தவே –29-

பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம்
இற எடுத்த இடி குரல் ஓசையும்
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின்
புற நிலத்தினும் கைமிகப் போயிதே-30-அறவன் -திருவடி

பாடலம் படர் கோங்கோடும் பன்னிசைப்
பாடல் அம் பனி வண்டொடு பல் திரைப்
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன
பாடு அலம் பெறப் புள்ளினம் பாறவே-31-பாடலம்–பாதிரி மரங்கள்

வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன
விண்டு அலம் புக நீங்கிய வெண் புனல்
விண் தலம் புக நீள் மரம் வீழ்ந்தவே -32-விண்டு -விஷ்ணு

தாமரைத் தடம் பொய்கை செம் சந்தனம்
தாம் அரைத்தன ஒத்த துகைத்தலின்
காமரம் களி வண்டொடும் கள்ளோடும்
கா மரக் கடல் பூக்கடல் கண்டவே -33-

சிந்துவாரம் திசை தொறும் சென்றன
சிந்து வரா அம் புரை திரை சேர்ந்தன
தம் துவாரம் புதவோடு தாள் அறத்
தந்து ஆரம் துகள் படச் சாய்ந்தவே –34

சிந்துவாராம் -நொச்சி மரங்கள் –
துவாரம் புதவோடு தாள் அறத் தந்து ஆரம் துகள் படச் சாய்ந்தவே-வாசல்கள் கதவும் தாழ்பாள்களும்
முறிந்து போம்படி சந்தன மரங்கள் தூக்கி எறியப்பட்டு துகளாகும் படி விழுந்தன –

நந்த வானத்து நாள் மலர் நாறின
நந்த வானத்து நாள்மலர் நாறின
சிந்து அவ்வானம் திரிந்து உகச் செம்மணி
சிந்த வால் நந்து இரிந்த திரைக்கடல் -35-
நந்த வானத்து நாள் மலர் நாறின -நறுமணம் மிக்க நந்தவனத்து அன்று அலர்ந்த பூக்கள் திருவடி வீசியதால்
நந்த–மிகுதியாக
வானத்து நாள்மலர் நாறின -ஆகாசத்தில் நக்ஷத்ரங்கள் போல் விளங்கின
சிந்து -புளிய மரங்கள்
அவ்வானம் திரிந்து உகச் –ஆகாசத்தில் சுழன்று சமுத்ரத்தில் விழ
திரைக்கடல் செம்மணி -அலைகளை உடைய கடலிலே கர்ப்பத்தில் உள்ள அழகிய முத்துக்களை
சிந்த வால் நந்து -வெண் நிறம் உள்ள சங்கங்கள்
இரிந்த -நிலை கெட்டு ஓடின

புல்லும் பொன் பணை பண் மணிப் பொன் மரம்
கொள்ளும் இப்பொழுதே என்னும் கொள்கையால்
எல்லி இட்டு விளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன விண்ணுற வீசின 36-

மயக்கு இல் பொன் குலம் வல்லிகள் வாரி நேர்
இயக்குற திசை தொறும் எறிந்தன
வெயில் கதிர் கற்றை அற்று உற வீழ்ந்தன
புயல் கடல்தலை புக்கன போல்வன –37-

ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும்
பானைத் தானமும் பாய் பரி பந்தியும்
ஏனைத் தார் அணித் தேரோடும் இற்றன
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே –38-

பெரிய மா மரமும், பெருங் குன்றமும்,
விரிய வீசலின், மின் நெடும் பொன் மதில்
நெரிய, மாடம் நெருப்பு எழ, நீறு எழ,
இரியல் போன, இலங்கையும் எங்கணும். 39

‘”தொண்டை அம் கனி வாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய்;
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய்” என்று, காணுமேல், அரக்கன் காய்தல்
உண்டு’ என வெருவினான்போல், ஒளித்தனன், உடுவின் கோமான். 40

காசு அறு மணியும், பொன்னும், காந்தமும், கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள் ஆகக் குயிற்றிய மதனச் சோலை,
ஆசைகள்தோறும், ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய, விளக்கலாலே, விளங்கின உலகம் எல்லாம். 41

கதறின வெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு; கண்கள்
குதறின பறவை, வேலை குளித்தன; குளித்திலாத
பதறின; பதைத்த; வானில் பறந்தன; பறந்து பார் வீழ்ந்து
உதறின, சிறையை; மீள ஒடுக்கின உலந்து போன. 42

தோட்டோடும் துதைந்த தெய்வ மரம் தொறும் தொடுத்த புள் அம்
கூட்டோடும் துறக்கும் புக்க குன்று எனக் குலவும் திண் தோள்
சேடு அகல் பரிதி மார்பன் சீறி தீண்டல் தன்னால்
மீட்டவன் கருணை செய்தால் பெரும் பதம் விளம்பலாமோ –43

சீதை சிறை இருந்த மரம் மட்டும் அழியாது திகழ்தல்
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை,
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும்,
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை, ஐயன் வைகும் ஆல் என, நின்றது அம்மா! 44

கதிரவன் தோன்றுதல்
உறு சுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறியாக விட்டாள்; ஆதலான், வறியள் அந்தோ!
செறி குழல் சீதைக்கு அன்று, ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி,
எறி கடல் ஈவது என்ன, எழுந்தனன், இரவி என்பான். 45

வனத்தின் பொழில் அழித்து நின்ற அனுமனின் நிலை
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து, ஒரு தமியன் நின்றான்,
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்;
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான்;
ஊழியின் இறுதிக் காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான். 46-

அனுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர் வினாவும், சீதையின் மறுமொழியும்
இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கி,
பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புகன்று நோக்கி,
‘அன்னை! ஈது என்னை மேனி? யார்கொல்?’ என்று, அச்சம் உற்றார்,
நன்னுதல் தன்னை நோக்கி, ‘அறிதியோ நங்கை?’ என்றார். 47

‘தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்,
தூயவர் துணிதல் உண்டோ , நும்முடைச் சூழல் எல்லாம்?
ஆய மான் எய்த, அம்மான், இளையவன், “அரக்கர் செய்த
மாயம்” என்று உரைக்கவேயும், மெய்என மையல் கொண்டேன். 48-

அனுமன் வேள்வி மண்டபத்தை அழித்தல்
என்றனள்; அரக்கிமார்கள் வயிறு அலைத்து, இரியல்போகி,
குன்றமும், உலகும், வானும், கடல்களும், குலையப் போனார்;
நின்றது ஓர் சயித்தம் கண்டான்; ‘நீக்குவன் இதனை’ என்னா,
தன் தடக் கைகள் நீட்டிப் பற்றினன், தாதை ஒப்பான். 49-

கண் கொள அரிது மீது கால் கொள அரிது திண் கால்
எண் கொள் அரிது இராவும் இருள் கொள் அரிது மாகம்
விண் கொள் நிவந்த மேரு வெள்குற வெதும்பி
புண் கொள வுயர்ந்தது இப்பார் பொறை கொள அரிது போல் ஆம் –50-

பொங்கு ஓளி நெடு நாள் ஈட்டிப் புதிய பால் பொழிவது ஒக்கும்
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன
அம் கை பத்து இரட்டியான் தன் ஆணையால் அழகு மாளப்
பங்கயத்து ஒருவன் தானே பசும் பொன்னால் படைத்தது அம்மா –51-

தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் ஸ்வர்ணம்
பேணல் ஆம் மணியின் பத்தி பிடரி எல்லாம் ஒளிகள் விம்மச்
சேண் எலாம் விரியும் காற்றைச் சேய் ஓளிச் செல்வதற்கேயும்
பூணல் ஆம் எம்மனோரால் புகழலாம் புதுமைத் தன்றே –52-

வெள்ளி யம் கிரியைப் பண்டு வெந்தொழில் அரக்கன் வேரொடு
அள்ளினன் என்னக் கேட்டான் அத் தொழிற்கு இழிவு தோன்றப்
புள்ளி மா மேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல்
வள்ளுகிர்த் தடக்கை தன்னால் மண்நின்றும் வாங்கினான் அண்ணல் -53-

விட்டனன், இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த மாடம்
பட்டன, பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற;
சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர், அரக்கர்தாமும்;
கெட்டனர் வீரர், அம்மா!-பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்? 54

சோலை காக்கும் பருவத் தேவர் இராவணனிடம் செய்தி தெரிவித்தல்
நீர் இடு துகிலர்; அச்ச நெருப்பு இடு நெஞ்சர்; நெக்குப்
பீரிடும் உருவர்; தெற்றிப் பிணங்கிடு தாளர்; பேழ் வாய்,
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர்; ஓடி உற்றார்;-
பார் இடு பழுவச் சோலை பாலிக்கும் பருவத் தேவர். 55

அரி படு சீற்றத்தான் அருகு சென்று அடியில் வீழ்ந்தார்
கரி படு திசையில் நீண்ட காவலர் காவல் ஆற்றோம்
கிரி படு குலவத் திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச
எரி படு துகிலின் எய்தின் இற்றது கடி கா என்றார் — 56-

சொல்லிட எளியது என்றால் சோலையைக் காலால் கையால்
புல்லோடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப் பொன்னால்
வில்லிடு நேரம் தன்னை வேரொடு வாங்கி வீசச்
சில் இடம் ஒழியச் செல்வ இலங்கையும் சிதைந்தது என்றார் –57-

இராவணன் இகழ்ந்து நகுதலும், காவலர் அனுமன் செய்லை வியந்து கூறலும்
‘ஆடகத் தருவின் சோலை பொடி படுத்து, அரக்கர் காக்கும்
தேட அரு வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா!
கோடரம் ஒன்றே! நன்று இது! இராக்கதர் கொற்றம்! சொற்றல்
மூடரும் மொழியார்’ என்ன மன்னனும் முறுவல் செய்தான். 58

தேவர்கள், பின்னும், ‘மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப்
பூவலயத்தை அன்றோ புகழ்வது! புலவர் போற்றும்
மூவரின் ஒருவன் என்று புகல்கினும், முடிவு இலாத
ஏவம், அக் குரங்கை, ஐய! காணுதி இன்னே’ என்றார். 59

அனுமனின் ஆரவாரம்
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட,
எண் திசை சுமந்த மாவும், தேவரும் இரியல்போக,
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர,
‘அண்டமும் பிளந்து விண்டது ஆம்’ என, அனுமன் ஆர்த்தான். 60

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: